கல்லூரியின் துணிவான செயல் விலாஸ் சாரங்

மொழியாக்கம் – ஆகி

(01)

கல்லூரி போய்விட்டதிலிருந்து ஜட்டு துயருற்றிருந்தான். தன் தாயின் கண்காணிப்பிலிருந்து அவன் நழுவிச் சென்று, சில சமயம் பழத்தைக் குறிவைத்தும் சில சமயம் பறவைகளைக் குறிவைத்தும், மரங்களை நோக்கி கல்லெறிந்துகொண்டு சுற்றித்திரிந்தான். அவன் வயதையொத்த சிறுவர்கள் தமது பெற்றோருக்கு வீட்டுவேலை செய்து வந்தனர். ஜட்டுவின் தாயார் எல்ஹா அவனை அடிக்கடித் திட்டி வேலை வாங்க முயன்றார் எனினும் ஜட்டுவைக் கட்டுப்படுத்த இயலவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு அவனது தந்தை இறந்துபோய்விட்டதால் அவன் கண்டிப்புடன் வளர்க்கப்படவில்லை என்றனர் கிராமத்தினர்.

அவ்வப்போது கிராமத்தின் எல்லை வரை சென்று அங்குள்ள கற்பாறைமீது ஏறிக்கொண்டான் ஜட்டு; தனது முதுகு கிராமத்தை நோக்கியிருக்க அவன் அப்பால் நோக்குவான். அவனின் முன்னால் நிலம் கீழே சரிந்து சென்றது, அதற்கு சற்று தள்ளி புதர்மண்டிய சிறிய குன்று ஒன்றிருந்தது. அதுவே ஒருவர் கிராமத்திலிருந்து போவதற்கானப் பாதையெனினும் அங்கேயொரு ஒற்றையடிப் பாதையிருக்கவில்லை. பாதை எப்படியிருக்கும்? ஒரு வழியில் மக்கள் தொடர்ந்து போக்கும் வரத்துமாக இருக்கையில் பாதைகள் உருவாகின்றன. அரிதாகவன்றி ஒருவர் அக்கிராமத்தை விட்டுச் சென்றதில்லை, நடைமுறையில் ஒருவரும் வந்ததில்லை. வருடமொருமுறை தானியத்திற்காக, பண்டமாற்று உப்பு சர்க்கரை துணி இத்யாதியை பொதியாக கழுதைகள் மீது ஏற்றி வைத்துக்கொண்டு நாடோடி வணிகரொருவர் வருகை தருவார். இரண்டொரு கிராமங்களிலிருந்து வரும் சிலரைத் தவிர்த்து அவரொருவரே வருகையாளர். சுறுங்கக் கூறின் ஜட்டு உற்றுநோக்கிய திசையென்பது கிராமத்திலிருந்து செல்லும் ஒருவருக்கான வழி. குன்றிற்கு அப்பால் வெகுதொலைவிலுள்ளது பேருலகம்: எத்தனை மைல்களுக்கப்பால் எத்தனை நாட்களின் பயணத்தின் முடிவில், அதைப்பற்றி ஜட்டு ஒன்றும் அறிந்திருக்கவில்லை.

கிராமத்திற்கு எதிர்த்திசையில் அடர்ந்த காடுகளால் சூழப்பெற்ற உயர்ந்த மலைத்தொடர் பரந்து விரிந்திருந்தது. அத்திசையில் எவரும் எக்காலத்திலும் சென்றதில்லை. அணுகவியலாத இந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பும் வெளியுலகால் ஆதிப் பிரதேசம்—ஆதியில் தோன்றிய நிலம்—என்றறியப் பெற்றிருந்தது.

கல்லூரி என்றாவது திரும்பி வருவானாவென்று ஜட்டு அவ்வப்போது யோசிப்பான். அவன் போவதற்கு முன் ஜட்டு எந்நேரமும் அவனருகிலேயே இருந்தவண்ணமிருப்பான். கிராமத்தில் வேறெவருமறியாத விடயங்கள் குறித்து கல்லூரி அறிந்திருந்தான். விதவிதமான காட்டுப் பறவைகளின் முட்டைகள் குறித்தும் பற்பல வேர்களின் கிழங்குகளின் பண்புகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் அவன் அறிந்து வைத்திருந்தான். பேய்க்கதைகள் மற்றும் தேவதைக்கதைகளை கல்லூரி கதைக்கையில் வசப்படுத்தப் பட்டாற்போல் ஜட்டு கேட்டுக் கொண்டிருப்பான்.

கல்லூரி ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்றனர் மக்கள். நீங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியபின் வெளியுலகை அடைவது கடினம், சென்றடைந்து விட்டால் நீங்கள் திரும்பி வருவதற்கான சாத்தியப்பாடு மிகவும் குறைவு. ஆனால் ஒரு நாள், ஜட்டு தண்ணீரோடை நோக்கி சென்று கொண்டிருக்கையில், அந்த செய்தியை அவன் கேட்டான்: கல்லூரி வந்து விட்டான். மட்பானையை பாதையின் ஓரத்தில் போட்டு விட்டு கல்லூரியின் குடிசை நோக்கி ஓடினான் ஜட்டு.

ஜட்டுவைக் கண்ணுற்ற கல்லூரி புன்னகைத்தான். அவனுக்கு ஜட்டுவென்றால் விருப்பம். கல்லூரி வழமையாகவே மெலிந்திருப்பான் எனினும் இப்போது அவன் மேலும் மெலிந்திருந்தான். வழமையை விட அவன் கருப்பாகவும் சற்று முதுமையடைந்தவனாகவும் தோற்றமளித்தான். ஆனாலும் அவனது கண்கள் பிரகாசமாகவும் அசைவுகள் வழமையான உயிர்ப்புடனுமிருந்தன. இழுக்கப்படாமலே ஓடும் வண்டிகளையும், புகையைக் கக்கிகொண்டு ஒட்டுமொத்த சங்கிலித்தொடர் வண்டிகளையும் இழுக்கவல்ல அந்த கரிய நம்புதற்கரிய வலிமையுடைய பிசாசையும் அவன் பார்த்திருக்கின்றானா என்றறியும் பொருட்டு ஜட்டு அவனை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தான். சிறிது நேரம் கழித்து கல்லூரி மனம் விட்டு பதிலளிக்கவில்லையென்பதை ஜட்டு தெரிந்துகொண்டான். தனது பயணம் குறித்து அவன் மழுப்புவதாகப் பட்டது. கல்லூரி வழமையாகவே சற்று மர்மமானவன் என்றாலும் முன்னைக்கிப்போது மேலும் மர்மமானவனாக இருந்தான்.

ஒருத்தர் பின் ஒருத்தராக கிராமத்தார் கூடி பேசுவதற்கு அமர்ந்தனர். வெளியுலகிலிருந்து சிற்சில புதுமைகளையே தன்னோடு கல்லூரி கொண்டுவந்திருப்பதை அறிந்துகொண்ட பலர் ஏமாற்றமடைந்தனர். எவ்வாறாயினும் கல்லூரி ஒரு யதார்த்தமான, விவேகமான மனிதனல்ல என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். சற்றைக்கு பின் ஜட்டுவைத் தேடிக்கொண்டு அவன் வழியில் விட்டுவிட்டு வந்த தண்ணீர் பானையை சுமந்து கொண்டு எல்ஹா வந்தார். முகத்தை சுழித்தவண்ணம் ஜட்டு எழுந்தான். அவன் கிளம்பிச் செல்கையில் கல்லூரி அவனிடம் குசுகுசுத்தான்: “காலையில் திரும்ப வந்துவிடு, உன்னிடம் காண்பிக்க என்னிடம் ஒன்றுண்டு.”

அந்த இரவு ஜட்டுவிற்கு தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலையில் கல்லூரி தனக்கு என்ன காண்பிக்கப் போகிறானென்று தொடர் சிந்தனையாயிருந்தான். அதிகாலையில் அவன் கல்லூரியின் குடிசை நோக்கி விரைந்தான்.

கல்லூரி தனது கந்தையான சாக்கை முடிச்சவிழ்த்தான்; பெட்டி போன்றதொரு பொருளை ஜட்டுவின் முன்பு அவன் நீட்டிக் கொண்டிருக்கையில் அவனது பற்கள் பளிச்சிட்டன. மிகக் கவனமாக அந்த கருப்புப் பெட்டியை ஜட்டு தனது கையிலெடுத்து கவனமாக ஆராய்ந்தான். அது சிறியதாக, ஜட்டுவின் விரல்களின் அளவிற்கு நீளமாகவும் அகலத்தில் அதற்கு பாதியளவிற்கும் தோலினால் மூடப்பெற்றதாகத் தோற்றமளித்தது. ஜட்டு அதனைத் தொட்டுணர்ந்து உண்மையில் அது தோலில்லையென்று முடிவு செய்தான். பெட்டியின் பகுதி உறையிடப் பெறாமலிருந்தது, அதை அவன் தட்டிக் கேட்கையில் உள்ளீடற்று ஒலித்தது. உலோகம்போல தோற்றமளித்தாலும் அது உண்மையில் உலோகமல்ல, இல்லையேல் ஒருவேளை அவன் அறிந்திராத உலோக வகையினதாக அது இருக்கலாமென்று ஜட்டுவிற்கு தோன்றியது. பெட்டியின் ஒரு பக்கத்திலிருந்த ஒளிபுகு கண்ணாடித் துணுக்கினை ஜட்டு தட்டிக் கேட்கையிலும் அது கண்ணாடிபோல ஒலிக்கவில்லை. அப்பெட்டி குறித்த அனைத்தும் விசித்திரமானதாகத் தோன்றியது. அந்தத் தோலும் அந்த உலோகமும் அந்தக் கண்ணாடியும் ஜட்டு இதுகாறும் கண்டிறாத வகையினதாக இருந்தது. கண்ணாடித் துணுக்கிற்குப் பின்னே என்னவோ கிறுக்கப் பெற்றிருந்தது. பெட்டியின் ஒரு பக்கத்தில் இரு குமிழ்களை ஜட்டு கண்ணுற்றான், அவை அதனைத் திறப்பதற்காகவென்று நினைத்தான். அவன் திறக்க முயன்றான் ஆனால் இயலாமல் கல்லூரியை வினவினான்.

ஜட்டுவிடமிருந்து பெட்டியை பெற்றுக்கொண்டு “இது திறக்காது” என்றான் கல்லூரி. ஒரு குமிழை அவன் திருகவும் ஜட்டுவின் கூர்மையான கண்ணானது கண்ணாடித் துணுக்கிற்கு பின்னிருந்த செங்குத்தான வெண்பட்டை இடப்புறமாக நகர்வதை அவதானித்தது. பிறகு அப்பெட்டி தனது தொண்டையை செருமுகின்றார்போலொரு சத்தமிட்டு, திடீரென்று மனிதக் குரலில் பேசியது. அக்குமிழிலிருந்து கல்லூரி கையை எடுத்த பிற்பாடும், அவ்வெண்பட்டை நகர்வதை நிறுத்திய பிற்பாடும்கூட அக்குரல் தொடர்ந்து பேசியது. ஜட்டு வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான்.

அப்பெட்டி வேற்றுமொழியில் பேசுவதாக ஜட்டுவிற்கு முதலில் தோன்றியது. ஆனாலும் சில கணங்களில் அவனுக்கு இரண்டொரு வார்த்தைகள் புரிந்தது, சிறிது நேரத்தில் மேலும் சில வார்த்தைகள் பிடிபடுவது அவனுக்கு தெரிந்தது. ஜட்டுவின் மொழியை அப்பெட்டி பேசியது என்றாலும் அது பழக்கப்படாத பாணியிலிருந்தது; ஜட்டு அவ்வளவாக கிரகித்துக் கொள்ளாத பல வார்த்தைகளை அது கையாண்டதாகத் தோன்றியது. தம்மால் புரிந்து கொள்ளவியலாத ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பதில் இருவரும் மூழ்கிப்போயினர்.

சற்றைக்கு பின் திடீரென்று அப்பெட்டி பெண் குரலில் பேசத் துவங்கியதும் ஜட்டு மேலுமொருமுறை வியப்புற்றான். அப்பெட்டியால் எப்படி நொடிப்பொழுதில் தனது குரலை முற்றிலும் மாற்ற முடிந்ததென்று அவனுக்குப் புரியவில்லை. என்றாலும் இதொரு இனிமையான குரல்; கிராமத்துப் பெண்டிரில் அதுபோன்ற குரல் வாய்க்கப்பெற்றவர் எவருமில்லையென்று ஜட்டு எண்ணிக்கொண்டான். சிறிது நேரத்திற்கு அப்பெட்டி பெண் குரலில் பேசியது, பிறகு பாடத் துவங்கியது. ஜட்டு முன்னோக்கி சாய்ந்து உன்னிப்பாகக் கேட்டான். அப்பெட்டி பாட மட்டும் செய்யவில்லை, வாத்தியங்களையும் ஒலித்தது. பாட்டு அருமையாக கிராமத்து விழாக்களில் பாடப்படும் பாடல்களிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருந்தது. இசையும் அற்புதமாக இருந்தது: மேளத்தின் ஒலி ஜட்டுவிற்கு பிடிபட்டது எனினும் பிற வாத்தியங்கள் தெரிந்திருக்கவில்லை.

அந்த நாள் முதல் ஜட்டு தனது பெரும்பாலான நேரத்தை கல்லூரியின் குடிசையில் செலவிட்டான். பேசும் பெட்டி குறித்த செய்தி பரவியதும் கிராமத்திலுள்ள அனைவரும் கல்லூரியைக் காண வந்தனர். சில ஆண்கள் இடையறாது ஒவ்வொரு மாலையிலும் கேட்பதற்கென்று திரும்பி வந்தனர். ஜட்டுவைப் போன்றே பிறருக்கும் வார்த்தைகள் பிடிபடுவது முதலில் கடினமாகத் தோன்றியது எனினும் விரைவில் மேலுமதிகமாகப் புரியத் துவங்கியது.

அப்பெட்டிக்கு இரு வாய்கள் உள்ளதென்று ஜட்டு அறிந்துகொண்டான். கண்ணாடியின் பின்னுள்ள வெண்பட்டை இடப்புறத்தில் ஒரு புள்ளியில் இருக்கையில் அவற்றில் ஒன்று பேசியது, மற்றொன்று அப்பட்டை வலப்புறத்தில் ஒரு புள்ளியில் இருக்கையில் பேசியது. இந்நிகழ்வை சில கிராமத்தாரிடம் ஜட்டு விவாதித்தான். அவர்களின் வியாக்கியானத்திலிருந்து அப்பெட்டி தானாக பேசவில்லையென்றும் வெகு தொலைவிலிருந்து உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் மாயமான முறையில் அப்பெட்டியிலிருந்து வெளிப்படுகின்றன என்றும் ஜட்டு தெரிந்துகொண்டான். அக்குரல்கள் இரு வெவ்வேறு இடங்களிலிருந்து வருகின்றனவா அல்லது ஓரிடத்திலிருந்து வருகின்றனவா என்பதை அம்மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. இரு குரல்களும் அவர்களின் மொழியைப் பேசின எனினும் பட்டை இடப்புறத்தில் இருக்கையில் கேட்கும் பேச்சு அவர்களின் மொழியை அதிகம் ஒத்திருப்பதாக கிராமத்தார் உணர்ந்தனர். மேலும் அப்பக்கத்திலிருந்து வந்த குரல்கள் சத்தமாகவும் தெளிவாகவும் வந்தன, அதே சமயம் பட்டை வலப்புறத்தில் இருக்கையில் அவர்கள் கேட்ட குரல்கள் அடிக்கடி தெளிவற்று ஒலித்தன. ஆகையினால் அம்மனிதர்கள் இடப்புறத்திலிருந்து ஒலிக்கும் குரல்களை கேட்க விரும்பினர்.

ஒரு நாள் முதியவர் எட்டண்ணா—இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளியுலகத்தில் வாழ்ந்திருந்தவர்—கேட்பதற்காக வந்திருந்தார். அந்தக் குரல்கள் வெவ்வேறு நகரங்களிலிருந்து வருபவையென்று அவர் விளக்கமளித்தார். வலப்புறக் குரல் வருமிடம் ஹஸ்திபூர்—அது அவர்களது நாட்டின் தலைநகரென்று அவர்களுக்கு அவர் நினைவூட்டினார்—அதே சமயம் இடப்புறக் குரல் வருமிடம் ஹக்கிமாபாத், ஷூஃபரிஸ்தானின் தலைநகர். உடனடியாக யாரோ ஒருவர் சந்தேகமொன்றை வெளிப்படுத்தினார்: இடப்புறக் குரல் தெளிவாகவும் சத்தமாகவும் ஒலிக்கின்றது மேலும் இதன் மொழிகூட அவர்களுடையதை ஒத்திருக்கின்றது; எவ்வாறிது வேறொரு நாட்டின் தலைநகரிலிருந்து வரமுடியும்? அவர்களின் சொந்த நாட்டின் தலைநகரிலிருந்து வரும் குரல் தெளிவாகவும் அவர்களின் பேச்சுமொழியை ஒத்திருக்கவும் வேண்டும். எட்டண்ணா அதற்கு பதிலளித்தார்: அவர்களது கிராமம் அவர்களின் தந்தையர்நாடான கெளவுரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது; ஷூஃபரிஸ்தானின் ஆட்சிப்பகுதி அவர்களின் கிராமத்திற்கு பின்னாலுள்ள குன்றுகளுக்கு அப்பால் துவங்குகின்றது. ஷூஃபரிஸ்தான் ஒரு சிறிய நாடாகையால் அதன் தலைநகர் கெளவுரதேசத்தின் தலைநகரைக் காட்டிலும் கிராமத்திற்கு அருகிலிருந்தது. ஆதலினால்தான் ஷூஃபரிஸ்தானி பேச்சு அவர்களது பேச்சை ஒத்திருக்கின்றது மேலும் ஹக்கிமாபாதின் குரல் தெளிவாக ஒலிக்கின்றது.

இந்த விளக்கத்தை கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு கிராமத்தார் எவருக்கும் கேள்வியறிவு இருக்கவில்லை. ஷூஃபரிஸ்தான் மற்றும் அதன் தலைநகர் பற்றி பலர் கேள்விப் பட்டிருக்கவில்லை, அது மட்டுமின்றி அவர்களின் சொந்த நாட்டின் தலைநகரையே பலர் அறிந்திருக்கவில்லை. கோம்வா என்ற இளைஞனொருவன் வினவினான்: ”வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு மொழிகள் பேசுமென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்; அது புரிந்துகொள்ளத்தக்கது. நாம் பேசும் மொழியையே ஷூஃபரிஸ்தானும் பேசுகின்றதென்றால் ஏதற்காக நம்மிடையே இரு நாடுகள் இருக்கின்றன? நாமனைவரும் ஒரு நாட்டை சேர்ந்தவராக இருப்பதுதானே சரியானதாக இருக்கும்?” எட்டண்ணா சிரித்துவிட்டு சொன்னார்: ”நீ சொல்வதென்னவோ சரிதான் என்றாலும் வெளியுலகின் விடயங்கள் அவ்வளவு எளிமையானவையல்ல. நம்மைப்போன்ற அறிவிலி மலைவாழ் மக்களால் நாகரிகமடைந்த மனங்களைப் புரிந்துகொள்ள முடியாது.” ஒரு இடை நிறுத்தத்திற்கு பிறகு அவர் தொடர்ந்தார்: ”இதைவிட திகைப்புப்பூட்டும் விடயமொன்றை நானுனக்கு சொல்கிறேன். நீயறிந்திருப்பதுபோல் கெளவுரதேசமும் ஷூஃபரிஸ்தானும் ஒரே மொழியை பேசுபவை. நமது நாட்டில் அது கெளவுரபாஷை என்றழைக்கப்படுகிறது; ஷூஃபரிஸ்தானில் என்றாலோ அதற்கு ரூஃபிடி என்று பெயர். இதை உன்னால் நம்பமுடிகிறதா?” அங்கே சுற்றி அமர்ந்திருந்த மனிதர்கள் நகைத்தனர், மேலும் அவர்கள் நாகரிகத்தின் போக்கினை நினைத்து அதிசயித்தனர்.

(02)

நாட்கள் கடந்து சென்றன மேலும் மக்கள் பேசும் பெட்டிக்கு பழக்கப்பட்டு விட்டனர். ஜட்டு அப்பெட்டியிலிருந்து எச்சமயங்களில் பாடல்கள் வருமென்பதை தெரிந்து வைத்துக்கொண்டு சரியான சமயத்தில் வந்து விடுவான். பிறரும் வெறும் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதில் ஆர்வமின்றி பாடல்களுக்காகக் காத்திருந்தனர். சில சமயங்களில் முதியோர் ஒரு சிலர் மட்டும் தீவிரமும் ஆர்வமுமிக்க முகங்களுடன் அமர்ந்து பேச்சைக் கேட்டனர்.

ஒரு நாள் கல்லூரி பேசும் பெட்டியின் இரகசியமொன்றை ஜட்டுவிற்கு வெளிப்படுத்தினான். பெட்டியின் பின்புறமுள்ள சட்டகத்தின் பகுதியை அவன் அகற்றவும் இரு செந்நிற நீளுருளையான பொருட்கள் வெளியே விழுந்தன. ஜட்டு ஒன்றை எடுத்தான்; அது சிறிதாக ஆனால் கனமாக இருந்தது. பிறகு கல்லூரி நீளுருளைகள் அகற்றப்பெற்ற பெட்டியால் பேசவியலாதிருப்பதை அவனுக்கு காண்பித்தான். கண்ணாடிக்குப் பின்னிருந்த வெண்பட்டையை எவ்வளவுதான் திருகினாலும் ஒரு சத்தமும் வரவில்லை. நீளுருளைகள் திரும்ப உள்ளே வைக்கப்பட்டவுடனே பெட்டி மீண்டும் உயிர்ப்புற்றது. ஜட்டு கிளர்ச்சியுற்றான். ”பெட்டியின் மாயசக்தி இந்த நீளுருளைகளில் உள்ளது” என்றான் கல்லூரி. அவன் தனது விதைப்பைகள் நோக்கி சுட்டிக் காட்டிவிட்டு தொடர்ந்தான்: ”இவற்றில் அடங்கியுள்ளது ஒருவரின் வீரியம் போன்றது. நீளுருளைகளை அகற்றுவதென்பது பெட்டியை விதையடிப்பதற்கு நிகரானது. நாம் சிற்றாற்றங்கரையின் மேலுள்ள உருளைக்கற்களையெடுத்து சாயம் பூசி கடவுளராக்குவோம்; அதைப்போலவே யாரோவொரு மந்திரவாதி இந்நீளுருளைகளுக்கு திறனேற்றியிருக்கிறான். நமது கிராமத்தில் இப்படியொரு பேசும் பெட்டியை உருவாக்கவல்ல சக்திபெற்றிக்கும் ஒருவருமில்லை. இதனை உருவாக்கியவன் ஒரு மகாமந்திரவாதியாக இருக்கவேண்டும்.” கல்லூரி அப்பெட்டியை உற்று நோக்கினான். அவனுக்கே மந்திரம் மற்றும் மயக்கும் ஆற்றல் பற்றிய அறிவு சற்றிருந்தது, சில நோயாளிகளையும் குணப்படுத்தியிருக்கிறான். அவனை அவதானித்த ஜட்டு அம்மாயப் பெட்டியையொத்த அசாதாரண மாயசக்திகளை தான் எப்படி ஈட்டுவதென்கிற ஆழ்ந்த யோசனையில் கல்லூரி இருப்பதாக எண்ணினான்.

வெண்பட்டை இடப்பக்கம் இருக்கையில் சத்தம் சிறப்பாக இருந்தாலும் வலப்பக்கத்தைக் கேட்பதையே ஜட்டு விரும்பினான். இடப்பக்கத்தில் பேச்சு அதிகமாகவும் பாட்டு குறைவாகவுமிருக்க வலப்பக்கத்திலிருந்து பாட்டும் இசையும் அதிக ஒழுங்குடன் வந்தது. பிறகு வேறேதோவொன்றில் கல்லூரி அக்கறை கொள்வதை ஜட்டு அறிந்தான். இடப்பக்கத்தில் புரியும்படியான குரல்கள் கேட்கும் பகுதிக்கு அருகிலுள்ள புள்ளி ஒன்றிலிருந்து விசித்திர ஒலிகள் வந்தன. வழக்கத்திற்கு மாறான அவ்வொலிகள் யாரோ சீழ்க்கையடிப்பது அல்லது பொருத்தமின்றி பிதற்றுகின்றாற் போலிருந்தது. ஜட்டுவிற்கு முதலில் அவை வேடிக்கையாக இருந்தன எனினும் விரைவில் ஆர்வமிழந்துவிட்டான். மாறாய், கல்லூரியோ அவற்றால் மேன்மேலும் ஈர்க்கப்பெற்றதாகத் தோன்றியது. பாடல்களையும் பேச்சையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி அவன் தனியாக அமர்ந்து கட்டுண்டாற்போல் அப்புதிரொலிகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

அவ்வொலிகளின் தோற்றுவாய் குறித்து கல்லூரி குழப்பமுற்றான். அவை மனிதக் குரல்களில்லையென்று அவன் முடிவு செய்தான். அதன்பின் மாந்திரிகன் துரக்கல் சன்னதமாடுகையில் தோற்றுவிக்கும் ஒலிகளை கல்லூரி நினைவுகூர்ந்தான். கிராமத்திற்கு பின்னால் இரு குன்றுகளுக்கு இடையிலுள்ள மயானம்—எங்கு, மந்திரச் சடங்குகள் தொடர்பாக, பெரியதும் அல்லது சிறியதுமான கற்களால் நிரப்பப்பெற்ற மண்மேடுகளின் மத்தியில் பல இருண்ட இரவுகளில் அவன் வலம் வந்துள்ளானோ—அது குறித்தும் அவன் சிந்தித்தான். நடமாடும் ஆவிகளின் விசித்திர பிதற்றலையும் சீழ்க்கையையும் கல்லூரி அங்கும் செவிமடுத்திருக்கின்றான். பேசும் பெட்டியிலிருந்து வரும் ஒலிகளை செவிமடுத்தக் கல்லூரி இவையும் அவ்விடத்திலிருந்து தோன்றுவதாக நம்பினான்: மந்திர சக்தி பெற்ற பெட்டி ஆவியுலகத்துடன் பிணைக்கப்பெற்றிருந்தது. ஒலிகளோ வேற்றுகிரகத்தின் குறிசொல்லும் செய்திகள், கல்லூரியோ பரந்து விரிந்த வெண்ணுடுக்களின் இடைவெளிகளில் எதிர்பாராத் தொடர்புகொள்ள எதிர்பார்ப்புடன் முனையும்மோர் தீர்க்கமான வானியலாளனைப் போலிருந்தான்.

நிதமும் அவ்வொலிகளைக் கேட்பதில் கல்லூரி மணித்தியாலங்கள் செலவிட்டான். அவை மனிதக் குரல்கள் வந்த ஒழுங்குமுறையில் வரவில்லையென்பதை அவன் கண்டறிந்தான். சில சமயத்தில் அவை உரத்தும் உறுதியாகவும், பிற சமயத்தில் துண்டுபட்டும் அரிதாகவே கேட்கத்தக்கதாவும் இருந்தன; அவை ஒட்டுமொத்தமாக காணாமற்போன சமயங்களுமுண்டு. கல்லூரி வியப்புறவில்லை; எப்படியிருந்தாலும் அவை தாம் விருப்பப்படுகையில் பேசும் ஆவிகளின் குரல்கள், மனிதர்களைப்போல நியமிக்கப்பெற்ற நேரங்களில் பேசவேண்டிய கடப்பாடு அவற்றுக்கில்லை. மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரு பக்கங்களிலிருந்து கேட்கும் மனிதக் குரல்கள் நின்று போவதையும் கல்லூரி அவதானித்தான், அதே சமயம் இயல்நிலை கடந்த ஒலிகள் இரவில் ஓயாமலிருந்தன மேலும் உண்மையில் அப்போது அவை இன்னும் வலுவாக இருந்தன. இரவு ஆவிகளின் சமயமாக இருக்கையில் இது இயல்பானது: மனிதர்கள் படுக்கைக்கு சென்ற பிற்பாடு பெட்டியை ஆவிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. அவற்றின் குரல்களைக் கேட்கையில் திரும்பத் திரும்ப கேட்கும் பல ஒலிகளை அவதானித்த கல்லூரி, தமக்கென்று அவற்றுக்கொரு மொழி உள்ளதென்று நம்பத் தலைப்பட்டான். பல்குரல்களின் நிரலொழுங்கையும் அவற்றின் கட்டமைவையும் அவன் உய்த்துணர முடிந்தால், ஆவிகளின் மொழியை அவனால் புரிந்துகொள்ள முடியுமென்று எண்ணினான். அவனுக்கு அது சாத்தியப்பட்டால் என்னதொரு அரும்பொருட் களஞ்சியம் அவனுக்குத் திறந்துவிடப்படும்! அந்த எண்ணம் அவனுக்கு சிலிர்ப்பூட்டியது. அக்குரல்களைக் கேட்பதில் அவன் இப்போது முற்றிலும் மூழ்கிப்போனான். அவை வாராது போயின் அவன் துயருற்றான்.

மாரிக்காலத்தின் துவக்கத்தில் ஆகாயத்தை முகில்கள் சூழ்ந்தன. மின்னல் பளிச்சிடுகையில் ஆவிகளின் குரல்கள் மேலும் உரத்து அதிதீவிரம் பெற்ற்ன. மேலே வாழும் மூதாதையரின் ஆவிகள் முகில்களின் மேலிறங்கி அவர்தம் உற்சாகத்தில் ஆரவாரிப்பதாக கல்லூரி கற்பனை செய்துகொண்டான். முழுக் கவனத்துடன் அவன் செவிமடுத்தான். இவ்வளவு நீண்டகாலமாக குரல்களுக்கு செவிமடுத்திருக்கும் அவன் இப்போது அம்மொழியை அறிந்துணர்தலின் நுழைவாயிலில் தானிருப்பதாக உணர்ந்தான். அதன் சுழற்சிகளுக்கு—அதன் ஏற்ற இறக்கங்களுக்கு—பழக்கப்பட்டுவிட்ட அவன் ஒரு நாள் அனைத்தும் திடீரென ஓரிடத்தில் குழுமி திரை விலகுமென்ற நம்பிக்கையில் உறுதிகொண்டு வந்தான். அவனது அறியாமையின் நிமித்தம் அவனுக்கு புரியாத ஏதோவொன்றை மூர்க்கமாக சொல்லவருகின்றாற்போல் இப்போது அந்த ஆவிகள் கார்முகில்சூழ் ஆகாயத்தில் கூச்சலிட்டன. செவிமடுக்கையில் திக்கற்றவனாக உணர்ந்தான்; அவனது கண்கள் பனித்தன. கையில் பெட்டியோடு தனது குடிசையின் வாயிலினூடாக மழை நிரம்பிய முகில்களை அவன் உற்று நோக்கினான். உரத்தவொரு இடிமுழக்கம் ஒலித்தது, முதற் மழைத்தாரைகள் பொழிந்தன. கனமழையில் குரல்களை தெளிவாகக் கேட்பது சாத்தியப்படவில்லை. குமிழைத் திருகி குரல்களை நிறுத்திய கல்லூரி, பெட்டியை அப்புறம் வைத்துவிட்டு வெளியே சென்றான். அவனது குடிசைக்கு முன்பு தனது வெறுமையான உள்ளங்கைகளை அவன் கொட்டும் மழையில் விரித்துவைத்துக்கொண்டு நின்றான்.

மாரிக்காலம் முற்றிலும் ஆவிகளின் குரல்கள் வலுவாக இருந்தன. மறுபுறத்திலோ இடதிலும் வலதிலும் மனிதக் குரல்கள் தளர்வாகக் கேட்டன. ஆவிகளின் குரல்கள் அவற்றை மேலோங்கிவிட்டதாகத் தோன்றியது. பாடல்களின் ஒலி கேட்கத்தக்கதாக இல்லாததால் ஜட்டுவிற்கு பெட்டியிலிருந்த ஆர்வம் குன்றிப்போனது. கல்லூரியோவென்றால் விசித்திர ஒலிகளைக் கேட்பதில் இப்போது மணித்தியாலங்கள் கணக்கின்றி முற்றிலும் மூழ்கிப்போனான். வேறெதைப்பற்றியும் அவன் கவலைகொள்ளாது ஒரு கனவுலகில் காணாமற் போய்விட்டாற்போல் தோன்றியது. அவன் உண்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டதால் தளர்வுற்று களைப்புற்றிருப்பதாக தோற்றமளிக்கத் துவங்கினான். ஜட்டுவையும் சேர்த்து அரிதாகவே அவன் எவரிடமும் பேசினான். அவனது குடிசைக்கு வரும் ஜட்டுவின் வருகைகள் சிறிது சிறிதாக அருகிவிட்டன.

மாரிக்காலம் முற்றுப் பெற்றதும் குளிர் தொற்றிக்கொண்டது. வருடத்தின் இப்பருவத்தின் வழமைக்கேற்ப மாலையொன்றில் தனது கழுதைகளுடன் தாடிவைத்த வயோதிப வணிகர் கிராமத்திற்கு வருகை தந்தார். உப்பு சர்க்கரை இத்யாதியோடு அவர் வழக்கமாக கிராமத்துப் பெண்டிர் பேராவல் கொள்ளும் வண்ண மணிகளும் கொண்டுவருவார். இம்முறை அவை அவரிடம் இருக்கவில்லை. அவர் சொன்னார்: “ஷூஃபரிஸ்தானிலுள்ள தசாரியாவிலிருந்து நான் அவற்றை வாங்கி வந்து கொண்டிருந்தேன். இந்த கோடைக்காலம் வரையில் நீங்கள் எல்லையை எந்த பிரச்சனையுமின்றி கடக்க முடிந்தது. மக்கள் விரும்பியபோதெல்லாம் போக்கும் வரத்துமாக இருந்தனர். ஆனால் இப்போது எல்லையெங்கும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அரிதாகவே அவர்கள் எவரையும் எல்லையைக் கடந்து ஷூஃபரிஸ்தானிற்குள் விடுகின்றனர். குன்றுகளையும் அவர்கள் கண்காணிப்பதை நான் கண்டிருக்கிறேன்.”

கல்லூரியின் பேசும் பெட்டி குறித்து கேள்விப்பட்ட வணிகர் அதைக் காண வந்தார். மாரிக்காலம் முற்றுப் பெற்றதிலிருந்து ஆவிக் குரல்கள் வலுவிழந்து போய்விட்டிருந்தன. வணிகர் உள்ளே வருகையில் கல்லூரி குமிழ்களைத் திருகி குரல்களை ஒலிக்க வைக்க முடியுமாவென்று முயன்று கொண்டிருந்தான். எனினும் அதற்கு மாற்றாக அவன் வெண்பட்டை இடப்பக்கம் இருக்கையில் வரும் குரல்களை மட்டுமே கேட்டமுடிந்தது.

பெட்டியை கணநேரம் நோக்கிவிட்டு ”இதை அவர்கள் வானொலி என்றழைப்பார்கள்” என்ற வணிகர் தொடர்ந்தார்: ”ஹக்கிமாபாதை நீ கேட்டுக்கொண்டிருப்பதாகப் படுகிறது. உனக்குத் தெரியுமா எமது நாட்டின் மக்கள் இப்போதெல்லாம் இதை கேட்பதைத் தவிர்க்கின்றனர். அரசாங்கம் இதை வெறுக்கின்றது; இதற்கொரு தடையுத்தரவும் இருக்கிறதென்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஐயத்திற்கிடமின்றி ஒதுக்குப்புறமான உங்கள் கிராமத்தில் கவலையுறத் தேவையில்லை.”

வணிகர் சென்று சில நாட்கள் கழிந்த பிறகு திரும்பி வந்த ஜட்டு, கல்லூரி கவலையுற்றிருப்பதைக் கண்ணுற்றான். குமிழ்களை எப்படித் திருகினாலும் குரல்கள் தெளிவாக வராதிருப்பதை கல்லூரி அவனிடம் காண்பித்தான். பெட்டியின் மாயசக்தி அதனை விட்டகன்று கொண்டிருப்பதாகத் தான் அஞ்சுவதாக அவன் கூறினான். பெட்டி இறந்து கொண்டிருந்தது.

நாளுக்கு நாள் பெட்டியின் வலிமை குன்றியது, குரல்கள் ஆற்றலிழந்து வந்தது. கையறுநிலையில் கல்லூரி தன் கண்முன்னே பெட்டி இறந்து கொண்டிருப்பதைக் கண்ணுற்றான். தான் பயன்படுத்திய உடலை ஆன்மா விட்டகல்கின்றாற்போல் ஆவிக் குரல்கள் விரைவில் பெட்டியை விட்டகலப்போவதை அவன் தெளிவாகக் கண்ணுற்றான். ஆற்றாமை உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு தன் குடிசையில் பொலிவற்று அமர்ந்தான்.

(03)

அண்மையில் கல்லூரியின் குடிசைக்கு செல்வதற்கு மாற்றாக சுற்றித்திரியத் துவங்கியிருந்தான் ஜட்டு. அவ்வப்போது கிராமத்தின் எல்லையில் இருக்கும் கற்பாறைமீது சென்றமர்ந்து கொண்டான். ஒரு நாள் தனது உயர்ந்த பரணிலிருந்து அப்பால் உற்று நோக்குகையில் சில மனிதர்கள் நெருங்குவதை ஜட்டு கண்ணுற்றான். அவன் திடுக்கிட்டான். வருகையாளர்கள் என்றால் அது வழக்கத்திற்கு மாறானதொரு நிகழ்வு. தனது கண்களை சுருக்கி, குதிரையின்மீது சவாரி செய்து அயலார் அவனை நோக்கி வருவதைக் கண்ணுற்றான். அவர்களனைவரும் காக்கி உடையணிந்திருந்தனர் மேலும் ஒவ்வொருத்தரும் தமது தோள்மீது நீண்ட பளிச்சிடும் குழல் கொண்ட ஏதோவொன்றை சுமந்திருந்தனர். அவர்கள் குன்றிலிருந்து இறங்கி சரிவின்மேல் முன்னேறி அவன் முன்னால் வருகையில், ஜட்டு கற்பாறையிலிருந்து குதித்து கிராமத்தை நோக்கி ஒடிச் சென்றான்.

தம்மிடம் வருகை தந்திருக்கும் படையினரைக் கண்டு கிராமத்தினர் வியப்புற்றனர், ஏனென்றால் இப்படி ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழ்ந்தது. படையினரின் தலைவன் ஒரு கேள்வி கேட்டான், ஆனாலது எவருக்கும் புரியவில்லையென்று தோன்றியது. படையினரில் ஒருவன் முன் வந்து அதே கேள்வியை வேறுவிதமாகக் கேட்டான், உடனே கிராமத்தார் பேசும் பெட்டியை வைத்திருக்கும் மனிதனை படையினர் காண முனைகின்றனரென்று அனுமானித்தனர். அவ்வருகையாளர்கள் கல்லூரியின் குடிசைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

படையினர் கீழிறங்கினர், கல்லூரி வெளியே அழைக்கப்பட்டான். சின்னப் பையனாகவும், செல்வச் செழிப்பாகவும் தோற்றமளித்த படைத்தலைவன் கல்லூரியின் பேசும் பெட்டியை பரிசோதித்தான். அவன் திரும்பி தனது கூட்டாளி ஒருவனிடம் “இது சீனத் தயாரிப்பு” என்றுவிட்டு தொடந்தான்: “நிச்சயமாக நாம் சீன வானொலிகளை இறக்குமதி செய்வதில்லை. இவன் இதை ஷூஃபரிஸ்தானில் பெற்றிருக்க வேண்டும்.” அதன் பிறகு படைத்தலைவன் கல்லூரியை கேள்வி கேட்கத் துவங்கினான்: கடந்த வருடம் அவன் எங்கே போயிருந்தான்? அங்கே அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? பெட்டியிலுள்ள ஆவிக் குரல்களைக் கேட்டு மகாமந்திர சக்திகளைப் தான் பெற்று வைத்திருப்பதாக அவர்கள் தன்னை சந்தேகிக்கின்றனரென்று அவன் நினைத்தான். தான் குரல்களுக்கு செவிமடுத்திருக்கும் உண்மையை மறைக்க வேண்டுமென்று அவன் எண்ணினான். அவன் ”இல்லையில்லை ஆவிக் குரல்களுக்கு நான் செவிமடுக்கவில்லை” என்றுவிட்டு தொடந்தான்: ”இதோ இங்குள்ள மனிதர்களின் குரல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.” கண்ணாடிக்குப் பின் இடதாக நின்ற வெண்பட்டையை நோக்கி சுட்டிக் காட்டினான். அந்த வானொலி நிலையத்தில் அவன் என்ன கேட்டிருக்கிறானென்று படைத்தலைவன் அவனை வினவினான். கல்லூரி ஆழ்ந்து யோசிக்கையில் படைத்தலைவன் தனது ஆட்கள் சிலரை அணுகி ”கிராமத்திலுள்ள பிறரைக் கேளுங்கள். அவர்கள் வானொலியில் என்ன கேட்டுக் கொண்டிருந்தனரென்று அறிய முயலுங்கள்” என்றான். படையினர் பரவிச் சென்று கிராமத்தாரை விசாரிக்கத் துவங்கினர். சற்றேறக்குறைய அரைமணியில் திரும்பி வந்த அவர்களில் ஒருவன் அறிக்கை கொடுத்தான்: ”அவர்கள் எந்த ஷூஃபரிஸ்தானி பிரச்சாரத்தையும் செவிமடுத்திருப்பதாகத் தோன்றவில்லை. இங்குள்ள மக்கள் முற்றிலும் அறிவிலிகள்; வானொலியில் கேட்கும் எதையும் இவர்கள் புரிந்து கொள்வார்களா என்று சந்தேகிக்கிறேன்.” படைத்தலைவன் அதற்கு “அவர்கள் அறிவிலிகளாக இருக்கலாம் ஆனாலும் நாம் தயாராக இருக்கவேண்டும். ஷூஃபரிஸ்தானி உளவாளிகள் இந்த பிராந்தியத்தில் ஊடுருவி விட்டனர்” என்றான்.

கிராமத்திலுள்ள வயதுவந்த ஆண்கள் அனைவரையும் சுற்றி வளைக்குமாறு படைத்தலைவன் தனது ஆட்களுக்கு கட்டளையிட்டான். ஒரு திறந்த வெளியில் கிராமத்தார் ஒன்றாக திரட்டப்பெற்றனர். குதிரைமீதேறிய படைத்தலைவன் தன் முன் குந்தியிருந்த கூட்டத்திடம் உரையாற்றினான்:

”உருக்கிப்பால் பள்ளத்தாக்கின் மக்களே, நீங்கள் கெளவுரதேசத்தின் குடிமக்கள் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ளுங்கள். நமது பெருமைக்குரிய நாட்டிற்கு எதிராக சொல்லப்பட்ட எதையாவது நீங்கள் இந்த வானொலியில் கேட்டிருந்தால்”—கல்லூரியின் வானொலியை அவன் தூக்கிக் காட்டினான்—”அல்லது எதிர்காலத்தில் வேறொருவர் உங்களுக்கு கொண்டுவரும் வானொலியில் நீங்கள் கேட்டால், நிச்சயமாக அவை பொய்கள் என்றறிக. தற்போது நமக்கெதிராக ஷூஃபரிஸ்தான் ஒரு கொடும் பிரச்சாரப் பரப்புரையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த குன்றுகளுக்குள்”—கிராமத்தின் பின்னாலிருக்கும் குன்றுகளை நோக்கி அவன் கையசைத்தான்—”எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கு இதொரு பெரும் வரம். எதிர்பாராதவிதமாக இதுவரையில் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்த மாவட்டம் விரைவில் வளர்ச்சியடையப் போகிறது; நீங்கள் அனைவரும் புதிய திட்டங்களால் பயனடையப் போகிறீர்கள். கடந்த காலத்தில் ஷூஃபரிஸ்தான் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொந்தரவு தந்திருக்கவில்லை; எனினும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து உங்களது பூர்வகுடி நிலத்திற்கு அவர்கள் துணிந்து உரிமை கோரி வருகின்றனர். தொடர்ந்து ஒலிபரப்பு செய்து ஹக்கிமாபாத் உங்களை மூளைச்சலவை செய்ய முயல்கிறது. அபத்தமாக அவர்கள் உங்களை விடுதலை செய்யப் போகிறோம் என்கிறார்கள். அவர்கள் தம்மை சமூகவுடைமைவாதிகள் என்றும் ஏழைகளின் பாதுகாவலர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்; உண்மையில் அவர்களின் அரசு கொடும் சர்வாதிகாரமன்றி வேறன்று. இப்பள்ளத்தாக்கின் மக்களே, உங்களின் எதிர்கால நலன் கெளவுரதேசத்தில் உள்ளது. கெளவுரதேசம் நீடூடி வாழ்க!”

”கெளவுரதேசம் நீடூடி வாழ்க!” என்று படையினர் கூச்சலிட்டனர், கிராமத்தவரில் சிலரும் அதில் இணைந்து கொள்ள எத்தனித்தனர். அரிதாகவே எவரும் படைத்தலைவனின் பேச்சைப் புரிந்துகொண்டனர் எனினும் ஒருவரும் தமது அறியாமையை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. திரட்டப்பெற்ற ஆண்களை சுற்றி பெண்டிரும் சிறுவரும் ஒரு வட்டம் அமைத்திருந்தனர்; அவர்களோடிருந்த ஜட்டு, குதிரைமீதமர்ந்து பேசிக்கொண்டிருந்த அயலானையும் அவனருகில் நின்றுகொண்டிருந்த கல்லூரியையும் மாறி மாறி மேனோக்கிக் கொண்டிருந்தான்.

அதன் பிறகு படையினர் செல்லத் தயாராயினர். ஒரு குதிரைமீது படையினன் ஒருவனுக்குப் பின்னால் கல்லூரி வைக்கப்பட்டான். படையினருக்குப் பின்னால் பகுதி தூரத்திற்கு சிறுவர்கள் கூச்சலிட்டவாறு சென்றனர். அவர்களில் ஜட்டுவும் இருந்தான். ஒவ்வொருத்தராக சிறுவர்கள் பின்வாங்கினர்; ஜட்டு மட்டுமே திரும்பிச் செல்லும் வருகையாளர்களை தொடர்ந்து சத்தமின்றி பின் தொடர்ந்தான். எப்பொழுதும் அவன் கல்லூரியை பார்த்துக் கொண்டிருந்தான் ஆனாலும் கல்லூரி அவனை நோக்கி ஒருமுறையேனும் திரும்பவில்லை. வெறுமையாக முன்னால் உற்று நோக்கியவண்ணம் கல்லூரி அமர்ந்திருந்தான்.

படையினர் கிராமத்தின் எல்லைக்கு வந்தனர். கல்லூரியின் வானொலியை படைத்தலைவன் தனது மேலங்கிப் பையிலிருந்து எடுத்து, தனது ஆட்கள் ஒருவனிடம் கொடுத்துவிட்டு “உன்னிடம் வைத்துக் கொள், சார்ஜெண்ட்” என்றான். வானொலியை தன்னிடம் எடுத்து வைத்துக்கொண்ட சார்ஜெண்ட் அதனை சோம்பேறித்தனமாக பார்வையிட்டான். குமிழொன்றைத் திருகி அவ்வானொலியை தனது காதினருகில் வைத்துக் கேட்டான். ”மின்கலன்கள் கிட்டத்தட்ட முற்றிலும் ஓடித் தீர்ந்துபோய்விட்டன” என்றான். பிறகு அவன் வானொலியை திறந்து மின்கலன்களை வெளியிலெடுத்தான்; அவற்றை சாதாரணமாக கணநேரம் நோக்கிவிட்டு அவை இரண்டையும் தூக்கியெறிந்தான். அதன்பின் வானொலியை அவன் மூடிவிட்டு அதனைத் தன் கித்தான் பையிலிட்டுக் கொண்டான்.

ஜட்டு தனது நடையை நிறுத்தி குதிரைக்காரர்கள் கடந்து செல்வதைக் கண்ணுற்றான். கற்பாறையை கடந்து சென்று சரிவின் கீழே சவாரி செய்கையில் பார்வையிலிருந்து அவர்கள் மறைந்து போயினர். சற்றைக்கு பின் சிறிதாகிப்போன அவர்களின் உருவங்கள் குன்றில் ஏறுவதைக் காண முடிந்தது. அதன் உச்சியை அடைந்து அவர்கள் மறுபக்கத்தின் மேல் இறங்கத் துவங்கினர். குன்றின் கீழே அவர்களின் தலைகள் மறைந்து போனதும் ஜட்டு விரைந்து முன்னேறினான். பிரகாசமான அவ்விரு செந்நிற மின்கலன்களை எடுத்துக் கொண்ட அவன், அவற்றை தனது கையில் பற்றிக்கொண்டு, வீட்டிற்கு ஓடிச் சென்றான்.

(00)

மொழியாக்கம்: ஆகி

விலாஸ் சாரங் கர்நாடகாவில் பிறந்து மராத்தியில் பயின்று, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று ஈராக் குவைத் மற்றும் மும்பையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். குறிப்பிடத்தக்க நவீனத்துவ எழுத்தாளர் இதழாசிரியர் மற்றும் விமரிசகராக அறியப்பெறும் இருமொழிப் புலமைபெற்ற இவரது சில நூல்களாவன: இக்கதை இடம்பெற்றுள்ள தொகுப்பான The Women in Cages, புதினமான The Dhamma Man மற்றும் கவிதைத் தொகுப்பான Another Life.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.