அன்னை – தன்ராஜ் மணி சிறுகதை

தன்ராஜ் மணி

“உன்ன அனுப்புறதா இல்ல, அந்த கெழவிக்கு இதே வேலையாப் போச்சி, எப்ப பாரு ட்ராமா போட்டுக்கிட்டு,” பால் பாத்திரத்தை நங்கென்று அடுப்பின் மேல் வைத்தாள் கெளசல்யா.

சாந்தாவிற்கு சத்தத்தில் பல் கூசியது, பல்லை நாவால் தேய்த்துக் கொண்டார்.

“எல்லாம் நீ குடுக்குற எடம்,” என்றாள் சீறலாய். “கொழந்த பொறந்தா அவ அவ அம்மா வருஷக்கணக்கா வந்து இருந்து பாத்துக்குராங்க, எனக்குப் பாரு கொடுப்பினைய, எடுத்ததே ஆறு மாச விசாதான் அதுல ரெண்டு மாசம் கூட முழுசா முடியல, அதுக்குல்ல போறேனு நிக்கற.” கெளசல்யாவின் தோள்கள் குலுங்க, கேவல் ஒலி எழுந்தது.

“பொறந்து ரெண்டு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள, மகதி எம்மூஞ்ச பாத்து பாத்து சிரிக்குது, எனக்கு மட்டும் அத உட்டுட்டு போகனும்னு ஆசயா கெளசி? ஆறு மாசம் அதுகூட இருந்துட்டு உனக்கும் ஒத்தாசயா இருக்கனும்னுதான் ஆச. உடம்பு முடியலனு சொன்னா என்ன பண்ண முடியும்?”

“இதெல்லாம் உன்ன அங்க வர வைக்க அந்த கெழவி போடுற நாடகம். அத்தனை பேரு அங்க இருக்காங்க, அது போதாதா அதுக்கு. காய்காரம்மா பாக்யத்துக்கு பணங்குடுத்து டெய்லி வந்து பேசிட்டு இருக்கச் சொல்லிட்டுதானே வந்திருக்க? அது பத்தாதுனு ஒரு நாடகம் கூட மிஸ் பண்ணாம பாக்கனும்னு அதோட ரூம்ல புது டிவி வாங்கி வெச்சிருக்க, மணியண்ணன்கிட்ட தெனம் அதுக்கு புடிச்ச அயிட்டம் ஒன்னாவுது பண்ணிருனு சொல்லியிருக்க, அப்பாவையும் அருணையும் வேற, அது எது சொன்னாலும், கத்தினாலும் வாயே தொறக்ககூடாதுனு மெரட்டி வெச்சிட்டு வந்திருக்க, இதெல்லாம் எனக்கு தெரியாதுனு நெனச்சியா?. ஒரு ஆறு மாசம் அந்த கெழவி நீ இல்லாம இருக்காதா? உடம்பெல்லாம் விஷம்,” என்றாள், அழுகையை நிறுத்தாமல்.

“அங்க இல்லாதப்போ ஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா…”

“அடேயப்பா! அப்படியே பொட்டுனு போயிரும் உங்கொம்மா. எல்லார் உசுரயும் எடுத்துட்டுதான் அது போகும்,” கண்ணைத் துடைத்துக் கொண்டே பாலை அடுப்பு பாத்திரத்தில் இருந்து டம்பளரில் ஊற்றினாள். காபித்தூள், சர்க்கரை போட்டு கலக்கி எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறினாள்.

சற்று நேரத்தில் குழந்தையுடன் கீழே வந்தாள். குழந்தையை ராக்கரில் போட்டுவிட்டு சமையலறைக்கு வந்தாள். சாந்தம்மா உணவு மேஜையில் அமர்ந்த்து அழுது கொண்டிருந்தார்.

மகளைப் பார்த்தவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, “கிளம்பும்போதே இப்பிடி உட்டுட்டு போகாதன்னு புலம்பிகிட்டே இருந்துச்சு, ஏதாவுது ஆயிருமோனு பயமா இருக்கு, நான் போறண்டி”

“போ, அப்புறம் உனக்கு மக இருக்கானு மறந்திரு”

“ஏண்டி இப்படி பேசற”

“முப்பது வருஷமா மருமகன் வீட்டில ஒக்காந்துகிட்டு எல்லாத்தையும் ஆட்டி வெச்சிக்கிட்டு இருக்கு, அது சொல்ற ஆட்டத்தை எல்லாம் நீயும் ஆடிக்கிட்டு இருக்க. நிஜமாத்தான் சொல்றேன், பொண்ணு வேணுமா அம்மா வேணுமானு நீயே முடிவு பண்ணிக்கோ”

“எல்லாருக்கும் வயசாகும் கெளசி”

“சாபம் உடுறியா உடு. உன்ன மாமியார் இருந்தாக்கூட வேலை வாங்காத அளவுக்கு வேல வாங்கிட்டு இருக்கு அது. தெனம் இதப்பண்ணு அதப்பண்ணு, அதை அங்க வெக்காத இங்க வை, டிவியை போடு சீக்கிரம்னு விரட்டிகிட்டே இருக்க மகராசிக்கு தான் உன்கிட்ட எப்பவும் பவசு.”

கெளசி காய்கறிகளை ப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெட்டத் தொடங்கினாள். சாந்தம்மா, “இங்க குடு நான் வெட்றேன்,” என்றார்.

“ஒன்னும் வேணாம் நானே பண்ணிக்கிறேன், போய்டியினா நான் தானே பண்ணனும்.”

ரகு படியிறங்கும் ஓசை கேட்டது.

எடுத்து வந்த காலி காபி கோப்பையை சமையலறை சிங்கில் போட்டான். அவனை பார்க்காமலே, “மெதுவா இறங்க மாட்டிங்களா, கொழந்த தூங்குதில்ல,” என்றாள் கெளசி.

ரகு சிரித்துக் கொண்டே “என்ன காலங்காத்தால அம்மா பொண்ணு சண்டையா?” என்றான். பேசிக்கொண்டே சாந்தம்மா அமர்ந்திர்ந்த உணவு மேஜையைக் கடந்து சென்று தோட்டக் கதவின் திரைச்சீலைகளை விலக்கினான் . கண்ணாடியால் ஆன இரட்டைக் கதவுகள் வழியாக தோட்டத்தில் இருந்து சூரிய ஒளி உள்ளிறங்கியது.

சாந்தம்மா தணிந்த குரலில் ” காலையில ஊர்ல இருந்து போன் வந்தது, கெளசி பாட்டிக்கு ஒடம்பு செரியில்லனு”

“என்னாச்சு?”

“ப்ரஷர் ரொம்ப கம்மியா இருக்காம், எந்திரிக்கவே முடியலயாம். சாப்ட்டே ரெண்டு நாள் ஆச்சாம், பால்தான் ஸ்பூன்ல…” சொல்லி முடிக்கும் முன்னே அழ ஆரம்பித்துவிட்டார்.

“ஆஸ்பிடல் கூட்டிடு போலயா அத்த?”

“ஒண்ணும் பெருசா பண்ண முடியாது வீட்லேயே வெச்சுப் பாருங்கனு சொல்லிட்டாங்களாம்”

“சாப்புடாம தர்ணா பண்ணா ப்ரஷர் எறங்கதாம் செய்யும்,” சீறலாய்ச் சொன்னாள் கெளசி.

” சாப்பிட முடியலயாம்டி” என்றார் சாந்தம்மா.

ரகு போனை எடுத்து டயல் செய்தான்.

“மாமா, ரகு. ஹாங் நல்லா இருக்கேன். பாட்டிக்கு எப்படி இருக்கு?”

“…”

“ம்”

“…”

“ம்”

“…”

“ம்”

“சரி நீங்க பாருங்க, நான் மத்தியானத்துக்கு மேல போன் பண்ணிச் சொல்றேன்”, போனை வைத்தான்.

“என்ன, அனுப்பி வைங்கனு சொல்றாரா, குடுங்க போனை,” என்று ரகுவை நோக்கி வந்தாள் கெளசி.

” கெளசி,” என்றான் ரகு சற்று குரலை உயர்த்தி.

“ஆமா என்ன மெரட்டி அடக்குங்க,” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள்.

“சீரியஸாதான் இருக்கு கெளசி, கொழந்த மாதிரி பண்ணிட்டு இருக்காத. அத்த, உங்க டிக்கெட் ப்ரிண்ட் அவுட் குடுக்கிறிங்களா, இப்பவே போன் பண்றேன்,” என்றான் ரகு

சாந்தம்மா முந்தானையில் கண்ணைத் துடைத்துக் கொண்டு டிக்கெட் எடுக்க மாடிப்படி ஏறினார்.

சாந்தம்மா லண்டன் வந்து ஒரு வாரம் வரைக்கும் பாட்டி நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகுதான் சரியாக சாப்பிட முடியவில்லை, இரவெல்லாம் தூங்காமல் கத்துவது என்று ஒன்றொன்றாக ஆரம்பித்தது. இரண்டு நாளாக படுத்த படுக்கை.

சாந்தம்மாவிற்கு குற்றவுணர்ச்சி வாட்டியது. எப்படியாவது அங்கு போய் சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். ரகு அன்று மதியமே கிளம்பும் படி பயணச்சீட்டை மாற்றிக் கொடுத்தான். கெளசி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அது வேறு சாந்தம்மா மனதை சங்கடப்படுத்தியது.

பெட்டியில் அனைத்தையும் எடுத்து அடுக்கிவிட்டு கீழே வந்தார். அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. குழந்தையை ஸ்ட்ராலரில் போட்டு எடுத்துக் கொண்டு ஒரு நடை போக கிளம்பினார்.தினமும் செய்வதுதான். கெளசி கதவை மூட வரும்போது ஏதோ சொல்ல வந்து எதுவும் சொல்லாமல் மூடிவிட்டுச் சென்றாள்.

கோடைக்கால லண்டன் தெரு வண்ணமயமாய் இருந்தது. தெருவின் இரு மருங்கிலும் பிங்க் செர்ரி ப்ளாசம்களும், தங்கச் சங்கிலி மரம் எனப்படும் கொத்து கொத்தாக மஞ்சள் நிற பூக்கள் பூத்துக் குலுங்கும் லேபர்னம் மரங்களும் நின்றன. பூத்து நிற்கும் இம்மரங்களுக்கு நடுவில் நடப்பது அந்த சோகமான மனநிலையிலும் சாந்தம்மாவிற்கு இதமாக இருந்தது. குழந்தையை தள்ளிக் கொண்டு வழக்கமாக செல்லும் பூங்காவிற்கு சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தார்.

அவர் முன்னால் பழமையான ஓக் மரம் பெரிய புல்வெளியை பார்த்து நின்றுக் கொண்டிருந்தது, அதைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பூத்த ரோஜா பாத்திகள். சுற்றியிருந்த இயற்கையின் வண்ணங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு நிறமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

எப்போதும் போல பூங்காவில் நாய் எஜமானர்கள் தங்கள் நாய் மலம் கழிக்கும் வரை நின்று அதை பாலிதீன் பையில் அள்ளி கையில் வைத்துக் கொண்டு குப்பைத் தொட்டியை கண்ணால் தேடியபடி நடந்தனர். வயதான பாட்டிகள் சக்கரம் வைத்த பைகளைத் தள்ளிக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டே கடந்து சென்றனர். இவர்களுக்கெல்லாம் கெளசியின் பாட்டியைவிட பத்திருபது வயது அதிகமாகவே இருக்கும். இந்த ஊரில் வயதானவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதில்லை, தனியாகத்தான் வாழ்கின்றனர் என்று கெளசி சொல்லியிருக்கிறாள். இங்கு வரும் வரை குழந்தைகள் ஆதரவில்லாமல் தனியாக இருப்பதால் இங்கிலாந்தில் வயதானவர்கள் எல்லோரும் சோகமாக வானத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள் என்றே சாந்தம்மா நினைத்திருந்தார். சிரித்துக் கொண்டு, உற்சாகமாய் சுற்றித் திரியும் இந்த பாட்டிகளை பார்த்தால் எப்போழுதுமே அவருக்கு ஆச்சரியம். ஆனால் இப்போது இவர்களைப் பார்த்தவுடன் அம்மாவின் ஞாபகம் அதிகமாக, கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.

எழுந்து குழந்தையை உருட்டிக் கொண்டு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார். டி.வி.யில் ஹிந்தி நாடகம் ஓடிக்கொண்டிருந்தது, கெளசி அதைப் பார்க்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். யாரிடமோ சொல்வது போல போனில் இருந்து கண்ணை தூக்காமலே, “ஒரு மணி நேரத்துல ஏர்போர்ட் கெளம்பணும், டாக்சி வந்துரும்,” என்றாள்.

“நீயும் வரியா ஏர்போர்டுக்கு?” என்று கேட்டார் சாந்தம்மா. கெளசி எதுவும் சொல்லவில்லை.

சாந்தம்மாவிற்கு மெலிதாய் சிரிப்பு வந்தது, ரகு அலுவலகம் விட்டு வரும் வரை நைட்டியில் உலாத்திக் கொண்டிருப்பவள், டாப்பும் ஜீனும் போட்டு தயாராக உட்கார்ந்திருந்தாள்.

அம்மாவை ஏர்போர்டிற்கு அழைத்துச் சென்று, செக்கின் செய்து, செக்யூரிட்டி கேட் வாசலில் வைத்து, “போய் சேந்ததும் போன் பண்ணு “என்றதை தவிர கெளசி எதுவுமே பேசவில்லை.

தனியாக விமானத்தில் அமர்ந்தவுடன் சாந்தம்மாவிற்கு அம்மாவின் ஞாபகம் அதிகமானது. ஊர் போய் சேருவதற்குள் அம்மா போய் விடுவாளோ என்ற நினைப்பு வந்து கண்ணில் நீர் முட்டிக் கொண்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறு வயது ஞாபகம். சாமிநாதபுரத்தில் குடியிருந்த அந்த ஒண்டிக் குடித்தன வீடு, எந்நேரமும் உடனிருக்கும் விளையாட்டுத் தோழிகள், சாப்பாட்டிற்கே இல்லாவிட்டாலும் சந்தோஷமான நாட்கள் அவை. அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நூல் தோண்டி, தறி நெய்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வேட்டி நெய்ய முடியும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு அதில் கிடைக்கும் கூலியில்தான் சாப்பாடு. பல நாட்கள் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டம். அவர்களுக்கு இருக்கிறதோ இல்லயோ சாந்தம்மாவிற்கு ஒரு வேளை சாப்பாட்டிற்காவது அம்மா வழி செய்து விடுவார். அப்பொழுதே அம்மா எல்லோரிடமும் அதிகார தோரணையில்தான் பேசுவார், அது அவர் சுபாவம்.அப்பாவும் சாந்தம்மாவும் நேரதிர், வாயே திறக்க மாட்டார்கள்.

பத்தாவதில் அவர் பள்ளியிலேயே முதலாவதாக சாந்தம்மா தேறியிருந்தார். அம்மாவிடம் தாயார் மடத்தில் இலவச தையல் கிளாஸ்ஸில் சேர்த்துவிட்டால் அவர்களே கற்றுக் கொடுத்து, ஒரு தையல் மிஷினும் கொடுப்பதாக யாரோ சொல்ல, மேற்கொண்டு படிக்க வேண்டாம் நீ தையல் கற்றுக் கொள்ள போ, என்று சொல்லிவிட்டார். க்ரேஸி மிஸ் வீட்டிற்கே வந்து, பெண்ணைப் படிக்க வையுங்கள், என்று எவ்வளவோ கேட்டுப் பார்த்தார், அம்மா பிடிவாதமாக மறுத்து விட்டார்.

தையல் கிளாசில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே கெளசியின் அப்பா வீட்டுக்காரர்கள் பெண் கேட்டு வர, கல்யாணமும் அந்த வயதிலேயே முடிந்து விட்டது. திருமணமான ஓரிரு வருடத்திலேயே அப்பா இறந்துவிட்டார், அப்பொழுதிருந்து அம்மா சாந்தம்மா வீட்டில்தான் இருக்கிறார். நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது சாந்தம்மாவிற்கு, அம்மா சொன்னதை இது நாள் வரை ஒரு முறை கூட மறுத்துப் பேசியதேயில்லை. விமானத்தில் இருந்த பத்து மணி நேரமும் தூக்கமும் இல்லாமல், கொடுத்த எதையும் சாப்பிடவும் முடியாமல் இந்நினைவுகளுடன் சங்கடமாக நெளிந்து கொண்டே இருந்தார்.

அழைத்துச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த அருண், பார்த்தவுடன், “அதுக்கு ஒன்னும் இல்லமா, உன்ன பாத்தா சரி ஆயிடும் வா,” என்றவன் காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவனாகவே “ நைட்லாம் ஐயோ ஐயோனு கத்துது, எனக்கே பயமா இருக்கு, யாருக்குமே தூக்கம் இல்ல,” என்றான்.

காரை வழியில் எங்குமே நிறுத்த விடவில்லை சாந்தம்மா. சேலம் வந்து சேர்ந்தவுடன், வீட்டு பக்கத்தில் இருக்கும் ரோஷன் பேக்கரியில் நிறுத்தி தேங்காய் பன் வாங்கி வர சொன்னார். சாந்தம்மாவின் சிறுவயது தோழி அனிதாவின் குடும்ப கடை அது. “ஒன்னுமே சாப்புடறதில்லமா,” என்றவனிடம் “என் மனசு திருப்திக்கிடா, போ வாங்கிட்டு வா,” என்றார்.

தேங்காய் பன்னுடனும், நீண்ட பயணத்தின் களைப்புடனும் சாந்தம்மா வீட்டிற்குள் நுழைந்தார்.

அம்மாவை, அவருடைய அறையில் இல்லாமல், வீட்டு ஹாலிலேயே ஒரு ஓரமாய் ஒரு புதிய நைலான் நாடா கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். தலை மொட்டை அடித்திருந்தது. வாய் எதையோ அனத்திக் கொண்டிருந்தது.

“அம்மா, பாரு சாந்தா வந்திருக்கேன்,” என்று சில முறை சொன்னார்.

“தூங்கிட்டிருக்கு, கொஞ்ச நேரத்துல எந்திரிச்சிரும்,” என்றார் கெளசியின் அப்பா.

“என்னங்க மொட்டை எல்லாம் அடிச்சிருக்கிங்க?”

கெளசியின் அப்பா, “ நீ போன ரெண்டு வாரத்துலயே தலை ரொம்ப அரிக்கிதுனு சொன்னுச்சு. டாக்டர் பாத்திட்டு சொரிஞ்சு சொரிஞ்சு ரொம்ப புண்ணா இருக்கு முடி எடுத்தா தான் மருந்து போட முடியும்னு சொன்னாரு, அதான்.. இதையெல்லாம் சொன்னா அங்க வருத்தப்பட்டிகிட்டு இருப்பனு சொல்லல, போ துணியாவுது மாத்திகிட்டு வா, பத்து நிமிஷத்துல திரும்பி எந்திருச்சிரும்,“ என்றார்.

அம்மாவின் உடல் பாதியாகி இருந்தது, கன்னங்கள் இருக்கும் இடமே தெரியாமல், பற்கள் மிக பெரிதாக தெரிந்தது. அம்மாவின் கைகளை தடவிக் கொண்டும் முகத்தையே பார்த்துக் கொண்டும் அருகில் உட்கார்ந்திருந்தார் சாந்தம்மா. திடீரென்று ஐயோ என்று சத்தமாக, ஆங்காரமாய் ஒரு ஓலம் அம்மாவிடம் இருந்து வந்தது. அவ்வளவு நொய்மையான உடலில் இருந்து வரும் குரலே அல்ல அது. சாந்தம்மாவிற்கு அதிர்ச்சியில் உடல் குலுங்கியது, பற்கள் தாங்கவே முடியாத அளவிற்கு கூசியது. “ஐயோ… ஐயோ… ஐயோ…” வென உக்கிரமான ஜெபம் போல கத்திக் கொண்டே இருந்தார்.

சாந்தம்மா சற்று சுதாரித்து கொண்டு, அம்மாவின் மோவாயை பிடித்து ஆட்டி, சத்தமாக “அம்மா, சாந்தாமா, சாந்தா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார். கத்தல் மெதுவாக நின்றது. அம்மாவின் வழக்கமான குரல் “வந்துட்டியா..” என்று ஈனஸ்வரத்தில் கேட்டது.

“வந்துட்டேமா, தொட்டுப் பாரு இங்கதான் இருக்கேன்,” சொல்லிக் கொண்டே அவர் கைகளை எடுத்து தன் முகத்தின் மேல் வைத்தார். அம்மாவின் கைகள் சாந்தாவின் முகத்தில் அளைந்தது. அதே ஈனஸ்வரத்தில், “போவாத, உட்டுட்டுப் போவாத,” என்று அனத்தல் எழுந்தது.

“எங்கயும் போவல, உம் பக்கத்துலதான் இருக்கேன், கவலப்படாத, தேங்கா பன்னு சாப்புடிரியா, அனிதா கடைல வாங்கிட்டு வந்தேன்.”

“உம்” என்றார் அம்மா. அம்மாவை தூக்கி சாய்ந்தவாக்கில் உட்கார்த்தி வைத்தார். தேங்காய் பன்னை சிறிதாகப் பிய்த்து, மெது மெதுப்பு வரும் வரை பாலில் சில முறை முக்கி, அம்மாவின் வாயில் வைத்தார். உடனே விழுங்கி விட்டு அடுத்த வாய்க்கு வாயைத் திறந்தது.

“பாரு, நாலு நாளா யாரு எது குடுத்தாலும் வாயே தொறக்கல, நீ ஊட்டுனா கப்பு கப்புனு முழுங்குது,” என்றான் அருண் எரிச்சலாக.

“சும்மா இருடா கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்சம் பால் கொண்டு வா, போ,” என்றார் சாந்தா.

ஒரு மணி நேரத்தில் பாலில் தொய்த்துக் கொடுத்த முழு பன்னையும் அம்மா சாப்பிட்டு முடித்தார். “சாப்புடலனா உடம்பு என்னத்துக்கு ஆறதும்மா, சாப்புட வேண்டியதுதான,” என்றார் சாந்தா.

“சாப்புட புடிக்கல” என்றார் அம்மா அதே ஈனஸ்வரத்தில்.

“சரி, படுத்துக்கோ. நைட்டு நானே சமைக்கிறேன், என்ன வேணும் உனக்கு?”

“பொங்கலு,” என்றார் அம்மா.

சாந்தம்மா முகத்தில் புன்னகை அரும்பியது. “சரி, பண்ணி தரேன், இப்போ கொஞ்ச நேரம் தூங்கு, நான் தான் வந்துட்டேன்ல, எல்லாம் சரி ஆயிடும்.”

அருண் பாட்டியை முறைத்து பார்த்துவிட்டு எழுந்து போனான்.

சாந்தம்மா வந்திறங்கிய மூன்று நாளில் எழுந்து சற்று நடமாடும் அளவுக்கு உடல் தேறி வந்தது பாட்டிக்கு. தினமும் சாந்தா அவருக்கு அருகிலேயே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார், கேட்டதை சமைத்து போட்டார், அனத்தலும் அலறலும் மூன்று நாளில் சுத்தமாக நின்று போனது. நான்காம் நாள் அதிகாலையில் சாந்தம்மா அசந்து தூங்கி கொண்டிருந்தார்.

“சாந்தா, சாந்தா ஏய் சாந்தா,” பிசிரற்ற அம்மாவின் குரல் கூவி அழைக்க திடுக்கிட்டு எழுந்து ஹாலுக்கு ஓடினார். அம்மாவின் முகம் மிகத் தெளிவாக இருந்தது, ஊருக்குப் போவதற்கு முன்னால் இருந்ததை விட நன்றாக இருப்பதாக சாந்தம்மாவிற்கு தோன்றியது. “என்னம்மா,” என்றார்.

“இன்னும் என்ன தூங்கிட்டு இருக்க, வூட்டு வாசல்ல கோலம் போட்டு எத்தன நாள் ஆவுது, நீ போனதுல இருந்து உம் மருமவ கீழ தல காட்றதே இல்ல, போயி கோலத்த போடு.“

“ம்” என்று விட்டு கொல்லைப்புறம் நோக்கி நகர்ந்தார்.

“சாந்தா, அந்த சுப்பரபாதம் டி.வி போட்டுட்டு போ”

ரிமோட் எடுத்து TTD சானலை போட்டு விட்டு, கொல்லைப்புறம் சென்றார். கோல மாவை எடுத்துக் கொண்டு வரும் வழியில் ஊருக்குப் போவதற்கு சில மாதங்களுக்கு முன் நட்ட குட்டை ரக பப்பாளி முதல் காய் போட்டிருப்பதைப் பார்த்து அதை மெதுவாக தடவி கொடுத்தார். அருகில் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து அதை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அடி வயிற்றில் இருந்து ஒரு கேவல் எழுந்தது. கைகளால் வாயைப் பொத்தியபடி குரல் அடக்கி அழ ஆரம்பித்தார்.

2 comments

  1. பாவம் சாந்தம்மா. கிழவியின் பிடிவாதம் அதிகம்! 😦 எல்லோருக்கும் உணர்வுகள் உண்டே!

  2. கொஞ்ச நேரமே வந்தாலும் கௌசியின் பார்வையில் பார்க்கத் தோன்றுவதற்கு காரணம் எனக்கு இப்படி இன்னொரு கௌசியைத் தெரியும் என்பது! ஏமாளி சாந்தம்மாக்கள்!

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.