எம். கோபாலகிருஷ்ணனின் ‘வால்வெள்ளி’: தன்னைக் கண்டடைதலும் வாழ்தலின் யதார்த்தமும் -முனைவர் ம இராமச்சந்திரன்

முனைவர் ம இராமச்சந்திரன்

“கொண்டாடுவதற்கே இப்பிறவி என அனைத்தையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு நகரும் ஒரு ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய குறுநாவல் ‘வால்வெள்ளி’. இது சமூக வாழ்க்கையில் மனிதர்களின் நடத்தைமுறையும் காமமும் வினையாற்றும் சூழ்நிலையைக் களமாகக் கொண்டது. தன்னில் தொலைந்துபோன பாதியின் எச்சங்களைத் தேடிய பயணத்தில் கண்டடையப்படும் அனுபவம் நாவலின் மையமாக விளங்குகிறது. எந்தச் சமூக மதிப்பீடுகளும் அவனால் அல்லது அவளால் ஏற்றுக்கொள்ளப்படும்ம்போது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிகின்றன. எளிய நிலையற்ற வாழ்க்கைச் சூழலில் நின்று நிதானித்து எவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் புறந்தள்ளவும் முடிவதில்லை.

மனம் தனது பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டும் செயல்பாடுகளாக நகர்ந்து செல்கிறது கதை. நடுத்தர வயதில் உள்ளுக்குள் இருக்கும் காமம் தன்னை இனம் காணும்போது அனைத்து முறைமைகளும் பொருளற்றுப் போவதே இதன் அடிநாதம். “அன்றைய பகல் நேரத்தில் நான் என்னைக் கண்டு கொண்டேன். அதுவரை நான் அறிந்திராத ரம்மியங்களையும் வலிகளையும் எனக்கு அறிமுகப்படுத்தினாய்.” பெண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு ஆணும் ஆண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு பெண்ணும் வெளிப்படுத்தும்போது ஏற்படும் காந்த ஈர்ப்பு இயற்கையானது என்பதும் அனுபவிக்கப்பட வேண்டியது என்பதும் நாவலால் உணர்த்தப்படுகிறது. யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அனைத்தும் அனைவருக்குமான புரிதலோடு கடந்து செல்கிறது கதை.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பேராசிரியரின் மனைவி தனது கணவனைக் காண வரும் பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளனிடம் தன்னைக் கண்டடையும் பேற்றை நாவலாசிரியர் வாசகனுக்கும் உணர்த்தி விடுகிறார்.

“உன்னை நன்கறிந்த நானும்
என்னை நன்கறிந்த நீயும்
இதற்கு முன்
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை
ஆனால் உன் வாசனை எனக்கு வெகு பரிச்சயம்”

என்ற கவிதை வரிகள் இயற்கையின் உன்னதங்களை உன்னிப்பாகக் காணும் அவனுக்கு அவளின் இருப்பும் இயல்பும் அவனை உணரச் செய்யும் தருணங்களும் வியப்பானவை. அனைத்து அறங்களையும் தாண்டி அவர்கள் செய்யும் களவும் புணர்ச்சியும் அவர்களை நிலை தடுமாற செய்தாலும் அவர்களின் சுய இருத்தலும் சுயத் தேவையும் பூரணமாக அமைவதால் அவர்களின் பிரிதலும் இயல்பாக அமைந்து விடுவதைக் காண முடிகிறது.

பேராசிரியரின் மனைவி, இரு குழந்தைகளுக்குத் தாய், சமூகத்தில் மதிக்கப்படும் நிலை இவற்றையெல்லாம் கடந்து அவளின் உடலும் மனமும் விரும்புவது ஆணின் அன்பான கனிவான புரிதல்கள் சொல்லாடல்கள் மட்டுமே என்பதை உணர்த்தினாலும் சமூக மதிப்பீடுகள் அவளில் வினையாற்றும் வலிமைமிகு உணர்ச்சிகளை நாவலாசிரியர் பதிவு செய்யாமல் இருப்பதில்லை. அவளது மனப்போராட்டங்கள், தவிப்புகள், சுய அறங்கள் அனைத்தையும் தாண்டி அவனது அருகாமை அவளை அவளாக்குகிறது. தன்னை இழந்து அவளைக் கண்டடையும் அதே வேளையில் அவனும் அவளைத் தன்னுள் கண்டடைந்த மாண்பின் ஊடாகக் கடந்து செல்கிறது நாவல்.

பெண்களின் சுதந்திர வெளிகள் பெரும் மதிப்புள்ளவை. ஆனால் பணமதிப்பற்றவை. சிறு பார்வை, சிறு காத்திருப்பு, உதட்டின் வழி சிறு அங்கீகரிப்பு, அவனின் ஊடாக அவளைக் கண்டடைதல் போன்ற எதிர்பார்ப்பு எத்தனை காலம் வாழ்ந்தாலும் இவை நிரப்பப்பட வேண்டிய கோடிட்ட இடங்களாகவே இருக்கின்றன. நிரப்பப்படும் சூழல் ஏற்படும்போது அதனைப் பெறுவதற்கான அனைத்து எத்தனிப்புகளையும் மனம் அவளையும் மீறி வினையாற்றிச் செல்கிறது.

இருவரின் மனம் உடல் சார்ந்த ஏற்புகளுக்குப்பின் எட்டிப்பார்க்கும் மீதி வாழ்க்கை முடிவற்ற பாதையைப் போல நீண்டுள்ளது. கடும் தவயோகியும் தானடைந்த ஆனந்தம் நிமிடங்களில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் அந்த நிமிடங்கள் மீண்டும் வருவதும் நிச்சயமற்ற தனது தவ வாழ்க்கையில் பயணிப்பது போல அவளது வாழ்க்கை பயணப்படுகிறது.

“நம் தொடுகைகளில் அந்நியமில்லை.
நம் தழுவல்களில் தடுமாற்றம் இல்லை.
நம் முத்தங்களில் ஒத்திகைகள் ஏதுமில்லை.
சர்வ நிச்சயமாய்.
சர்வ சுதந்திரமாய்.
ஒருவருக்கொருவர் படையலானோம்.
பரிபூரணமானோம்”.

யாரும் அறிந்திராத ஒவ்வொரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கை அனுபவங்கள் என்றென்றும் அவர்களுடன் சென்று விடுகின்றன. குழந்தைகளோடு உறவாடினாலும் கணவனோடு இரவுகள் இதமானாலும் விழித்திருக்கும் நினைவுகள் அவர்களுக்கானது. உன்னதமானது. இவர்களின் உன்னத உறவு புகைப்படங்களில் பதிந்த சில பதிவுகளுடன் நகர்ந்து செல்கிறது. ஏதோவொரு தேசத்தில் இயற்கையின் அழகை ஆராய்ந்து கொண்டிருக்கும் அவனது இருத்தலும் அனைத்து எதிர்பார்ப்பும் அர்த்தமற்ற பேரன்பு மேலிட இன்றைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள முயலும் அவளின் இருத்தலும் எப்போதும் நேர்ந்து விடுவதில்லை.

“மற்ற படங்களையும் கடிதத்தையும் நான் புடவைகளுக்கு நடுவில் ஒளித்து விட்டேன். எல்லாவற்றையும் அவரிடம் காட்டும் துணிச்சல் இல்லை என்னிடம் அப்போது.” ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அலமாரியில் மறைத்து வைக்க ஏதேனும் சில பொருட்கள் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. கண்ணில் பட்டாலும் அவற்றை திறந்து பார்க்க, அறிந்துகொள்ள மனம் விரும்புவதில்லை. இதனை “உன் படங்கள் வெளியான சஞ்சிகைகளை வேண்டுமென்றே என் கண்ணில் படும்படி போட்டு வைத்தார். கானுயிர் புகைப்படப் போட்டியொன்றில் உனக்குப் பரிசு கிடைத்த செய்தி பிரசுரிக்கப்பட்ட இதழைக் கொண்டு வந்து என்னிடம் காட்டியபோது நான் எரிந்து விழுந்ததில் சற்றே திடுக்கிட்டுப் போனார்,” என்ற வரிகள் இவளின் அந்தரங்கம் அறியப்பட்டுவிட்ட உண்மையாக மாறியதும் இதனை அவளது மனம் ஏற்க மறுப்பதின் வெளிப்பாடாக அவளது கோபம் வெளிப்படுவதுமாகக் கதை நகர்ந்து செல்கிறது. அவரவர் மனம் அவரவர் அந்தரங்கம் அவரவர் வாழ்வியல் பொக்கிஷங்களாகவும் இருக்கலாம். விகாரங்களாகவும் இருக்கலாம். அவரவர் வாழ்க்கை அவர்களுடன் மரணத்தைப் போல எடுத்துக் கொள்ளவோ அல்லது கொடுத்துச் செல்லவோ முடியாது.

தனது வாழ்க்கை, கணவன், குழந்தைகள், குடும்பம் என்ற சூழலில் இயங்குவதை ஏற்றுக்கொண்ட அவளது மனம் அவனுக்கான வாழ்க்கைச் சித்திரத்தைத் தானே கட்டமைக்க எண்ணுகிறது. “என்னிடம் கண்ட பரவசங்களைத் தரும் இன்னொரு பெண்ணை நீ கண்டடைவது ஒன்றும் சிரமமானது அல்ல. விரைவில் அப்படியொருத்தியைக் கண்டடையும்போது நீ செய்யவேண்டியது ஒன்றுதான். அவளுக்கான கனவுகளை அறிந்து கொண்டு முடிந்த மட்டும் அவற்றுக்கு மரியாதை செய்வதுதான். என்னில் கண்ட ஏதோ ஒன்றை அவளிடமும் உன்னால் கண்டடைய முடியும்,” என்பதன் மூலம் அவனுக்கான வாழ்வியல் வெளியைச் சற்று ஏமாற்ற உணர்வோடும் அதேவேளையில் அங்கீகரித்தலோடும் பெண்ணுணர்வு வெளிப்பட்டு நிற்கின்றது. காலை சூரியன் மலர்களை, பறவைகளை, விலங்குகளைப் புதுப்பிப்பது போல ஓடிக் கொண்டிருக்கிறது மனித நதி வால்வெள்ளியாக.

எம்.கோபாலகிருஷ்ணன், வால்வெள்ளி, குறுநாவல், 2018, தமிழினி பதிப்பகம், சென்னை-51.

One comment

  1. வால்வெள்ளி நாவலின் சாரத்தையே சொல்லி வாசிக்கத்தூண்டுகிறது நூலறிமுகம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.