கணவாய்ப் பாதை

எஸ். சுரேஷ் 

பின்-பார்வதி கணவாய்ப் பாதை தன்னை அழைப்பது போல் அவளுக்கு தோன்றியது. பௌர்ணமி இரவில் வானெங்கும் நட்சத்திரங்கள் அமைதியான நதி போல் நகர்ந்து கொண்டிருந்தன. பாறை மேல் மோதி மேலெழும் பார்வதி நதியின் நீர்த்திவலைகள் நிலவொளியில் பளபளத்தன. வைர விண்மீன்களுக்கு மத்தியில் முத்துபோல் பௌர்ணமி நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது. குளிர்க்காற்று அவளைத் தழுவி, ஊடுருவிச் சென்றது. இரு பனிச்சிகரங்களுக்கு இடையில் வெண்பனிக் கம்பளம் விரித்தது போல் நீளும் பின்-பார்வதி பாஸ் தெளிவாக புலப்பட்டது. தான் ஒரு மாய உலகத்துக்குள் நுழைந்துவிட்டோம் என்று அவளுக்கு தோன்றியது.

கணவாய் வழியை உற்று நோக்கிக் கொண்டிருந்த அவளைப் பார்த்து அவன் சிரித்தான். நாளை காலை நாம் பாஸை தாண்டியிருப்போம். அவன் பேசும்போது முகத்தையே அபரிதமான அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் மேல் இருந்த காதல் சூழலின் காரணத்தினால் பன்மடங்கு அதிகரித்திருந்தது.

ஜாக்கெட்- யெஸ், ஷூஸ்- யெஸ், வாக்கிங் ஸ்டிக்- யெஸ், காகில்ஸ்- யெஸ், சாக்ஸ்- யெஸ், டார்ச்- யெஸ், பேட்டரி- யெஸ், போஞ்சோ- யெஸ், வாட்டர் பாட்டில்- யெஸ், காப்- யெஸ். அவன் ஒவ்வொன்றாகச் சொல்ல, அவை எல்லாம் வாங்கியாயிற்றா என்று அவள் சரிபார்த்தாள். அதன் பின், மைசூர் ரோட்டில் டெய்கத்தலன் கடையிலிருந்து கிளம்பி ஜயநகர் தர்ட்வேவ் காஃபி ஷாப்பில், மங்கிய ஒளியில் அவளுக்கு அவன் ப்ரபோஸ் செய்தபோது அந்தக் கடையில் யாரும் இல்லை. சந்திப்பொழுது இரவாக மாறும் தருணம். வீடு திரும்பும் பறவைகளில் ஓசை. அதற்கு தோதாக வாகனங்களின் ஒலிக்கு நடுவே மெல்லிய குரலில், “உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ சரி என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.”

அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. இரண்டு வருடங்களாக அவனுடன் பழகுகிறாள். உத்தரகண்ட்டில் வேலி ஒஃப் ஃபிளவர்ஸ் டிரெக் சென்றபோது அவனை முதல் முறையாக சந்தித்தாள். அந்தச் சந்திப்பு பெங்களூரில் நட்பாக மாறியது. இருவரும் ஒன்றாக காலை வேளையில்   எக்ஸ்சர்சைஸ்  செய்ய ஆரம்பித்தனர். ஜயநகர் பஸ் நிலயத்தில் சந்தித்து, கிருஷ்ணா ராவ் பார்க் வழியாக லால் பாக் வெளிச்சுவரைச் சுற்றி ஓடினர். வார தினங்களில் ஐந்து கிலோமீட்டரும், வார இறுதியில் இருபது கிலோமீட்டரும் ஓடினர். தினமும் ஜெயநகரில் ஒரு ஜிம்மில் ஒரு மணி நேரம் கழித்தனர். இருவருக்கும் ஒரே வகையான உடல்வாகு. ஒல்லியான தேகம், முறுக்கேறிய கால்கள், நீள முகம், மாநிறம், உடம்பில் கொழுப்புக்கு இடமில்லை. டிராக் பாண்ட், டீ ஷர்ட்-  அவன் கை வைத்தது, அவள் கை வைக்காதது- நைக்கி ஷூஸ், கையில் ஃபிட் பிட், காதில் ஹெட்போன் என்று சீருடை உடுத்தியது போல் இருவரும் ஓடினர். சில நாட்களில் இரவு சந்தித்து டின்னர் செய்தனர். அவளுக்கு அவன் கேட்ட உடனே, யெஸ் உன்னை நானும் காதலிக்கிறேன், என்று சொல்லிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது. அவள் மனம் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தது, உடம்பெல்லாம் விவரிக்க முடியாத உணர்வு. அவனை உடனே கட்டிக்கொள்ள வேண்டும் என்று மனம் பரபரத்தது. தன்னை வெளியே விடப் போகிறார்கள் என்று கதவை திறந்ததும் அறிந்து கொண்ட நாய் குதிப்பது போல் அவள் மனம் குதித்தது. ஒரு சிறு புன்னகையுடன், “எஸ்” என்று சொன்னாள். நாம் வீட்டில் எப்பொழுது சொல்வது. டிரெக்கிலிருந்து திரும்பி வந்தவுடன் சொல்லிவிடலாம்.

அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை. இப்பொழுது அவளுக்கு ஒரு துணைவன் கிடைத்துவிட்டான். இதுவரையில் இருந்த பயம் இனி தேவையில்லை. இந்த முறை அவள் உச்சத்தை நிச்சயம் தொடுவாள். அவன் என்னுடன் கைகோர்த்து உச்சியில் நிற்பான். உன்னை அலுவலகத்தில் ஃபின்லேண்ட் போகச் சொன்னார்கள். சென்றிருந்தால் இன்று நீயும் பெரிய பதவியில் இருந்திருப்பாய். பிறகு சென்னை சென்று ப்ராஜக்ட் தலைமை பதவி ஏற்கச் சொன்னார்கள். அதையும் உன் பயத்தால் மறுத்தாய். எவ்வளவு நாள்தான் உயரங்களைக் கண்டு அஞ்சுவாய்? நாம் பார்வதி பள்ளத்தாக்கில் இருக்கிறோம். பின்-பார்வதி கணவாய் வழி தாண்டிவிட்டால் நாம் ஸ்பிதியில் உள்ள பின் பள்ளத்தாக்கை அடைவோம். இந்த பக்கம் பார்வதி நதி ஓடுகிறது, அந்த பக்கம் பின் நதி. குலு மாவட்டத்திலிருந்து ஸ்பிதி மாவட்டம் செல்லப் போகிறோம். நாம் நாளைக்கு டிரெக் ஆரம்பிப்போம். எட்டாவது நாள் பின்-பார்வதி பாஸ் கடப்போம். ஒன்பதாவது நாள் முத் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து காஜா செல்வோம். பிறகு நீங்கள் பஸ் பிடித்து குஞ்சும் பாஸ் வழியாக மணாலி செல்வீர்கள். பின்-பார்வதி பாஸ் 17500 அடி உயரத்தில் உள்ளது. அந்த உயரத்தில் ஆக்ஸிஜென் கம்மியாக இருப்பதால் உங்களுக்கு மூச்சிரைக்கும். இது கடினமான டிரெக். இதை மேற்கொள்ள உடம்பில் தெம்பு வேண்டும்.

கைடு டிரெக் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். அவனும் அவளும் முதுகில் இருபத்தைந்து கிலோ கனக்கும் பையை சுமந்துக்கொண்டு இருபது கிலோமீட்டர் ஓட்டப்பயிற்சி எடுத்தது ஞாபகம் வந்தது.

நீங்கள் இருவரும் ஃபிட்டாக இருக்கிறீர்கள். உங்களால் இந்த டிரெக்கை சுலபமாக முடிக்க முடியும்.

அவள் முகத்தில் பெருமிதம் பரவியது.

ஷூஸ்- யெஸ், வாக்கிங் ஸ்டிக்- யெஸ், போஞ்சோ- யெஸ். இந்த முறை கசொல் என்னும் இடத்தில் கைடு இந்த கேள்விகளை கேட்க இருவரும் யெஸ் என்று பதில் சொன்னார்கள். இவர்கள் இருவருடன், ஒரு கைடு மற்றும் இரு போர்டர்கள் நடந்தார்கள். போர்ட்டர்கள் இவர்கள் சாமானையும், வழியில் சமைக்க வேண்டிய அடுப்பு மற்றும் பண்டங்களையும் சுமந்து கொண்டு வந்தார்கள். இவர்கள் கிளம்பும்பொழுது இன்னொரு குழுவும் கிளம்பியது. அதில் இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண். அந்த பெண் சற்று பருமனாக இருப்பது போல் இவளுக்கு தோன்றியது. தினமும் உடற்பயிற்சி செய்பவள் போல் தோன்றவில்லை. அவளைப் பார்த்த கைடு இந்த உடம்பை வைத்துக்கொண்டு இவளால் பின்-பார்வதி பாஸ் கடக்க முடியாது என்றான். அந்த மூவரும் உற்சாகமாக இருந்தார்கள்.

முதல் நாள் பயணம் அதிகம் சிரமமில்லாமல் நிகழ்ந்தது. மாலை பார்வதி நதிக்கரையில் எல்லோரும் சேர்ந்து டெண்ட் போட்டார்கள். இவள் ஒரு டெண்டிலும் அவன் ஒரு டெண்டிலும், இன்னொரு பெரிய டெண்டில் கைடு மற்றும் போர்டர்கள் தங்கினர். முதலில் அந்த பெரிய டெண்டில் டீ போட்டு எல்லோரும் குடித்தார்கள். நாம் சட்டென்று உறங்கப் போகக்கூடாது. சற்று நேரம் உடற் பயிற்சி செய்வோம் என்று கைடு சொன்னான். புளூடூத் ஸ்பீக்கரில் பாடவிட்டு இருவரும் கைடுடன் சேர்ந்து பாட்டின் தாளகதியில் உடற்பயிற்சி செய்தனர். வேறொரு குழுவில் வந்த மூவரும் ஏதோ ஹிந்தி பாட்டுக்கு நடனம் ஆடினர். இரவு சப்பாத்தியும் உருளைக்கிழங்கு பொரியலும் சாப்பிட்டுவிட்டு இருவரும் பாறை மேல் உட்கார்ந்து சூழ்ந்திருந்த மலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில்லென்று குளிர்க்காற்று வீசியது. நதி நிலவொளியில் பளபளத்தது. பூச்சிகளின் குரலோசை, நதியின் சலசலப்பு என்று சப்தங்கள் நிறைந்த இடமாக இருந்தது. வானை நோக்கியபொழுது இந்த சப்தங்களை மீறிய ஏதோ ஒரு அமைதி அவள் மனதில் குடிகொண்டது. யாரும் இல்லாத இந்த பிரதேசத்தில் உலகமே எனக்கு சொந்தம் என்று அவள் நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் வெளிச்சம் வரும் முன்னே எழுந்து காலைக்கடன்களை முடித்தாள். டிரெக் செல்லும்பொழுது நம் இயற்கை உபாதைகளையெல்லாம் திறந்தவெளியில்தான் போக்க வேண்டும். மூன்றாவது டிரெக் என்பதால் அவளுக்கு இது பழகிவிட்டிருந்தது. காலை பிரட் டோஸ்ட் மற்றும் ஜாம் சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணி நேரம் நடந்த பின், முதல் தடையைச் சந்தித்தனர். இருபது அடி உயர பாறை அவர்கள் பாதையை மறித்தது. பாறையின் பக்கவாட்டில் ஏறி, இன்னும் மேலே ஏற வேண்டும். பின்பு மெதுவாக கீழே இறங்க வேண்டும். சாகசம் நிறைந்த செயல் இது. கீழே பார்வதி நதி ஓடிக்கொண்டிருந்தது. கால் தவறி கீழே விழுந்தால், தலை பாறை மேல் மோதும், உடல் உருண்டு சென்று பார்வதி நதியில் விழும். பாறையைக் கடக்க வேண்டாம் என்றால் வேறொரு பாதையில் ஒரு மணி நேரம் அதிகம் நடக்க வேண்டும். இரண்டாவது குழுவில் இருந்தவர்கள் பாறையைக் கடக்க தயாரானார்கள். அந்த குழுவில் இருந்த பெண்ணின் முகத்தில் பயம் தெளிவாக தெரிந்தது. இப்படித்தான் செல்ல வேண்டுமா. ஆம். நாம் இப்படி தான் செல்லப் போகிறோம், நமக்கு ஒன்றும் ஆகாது என்றான், அவளுடன் இருந்த ஆண். அவர்களின் கைடு முன்னே செல்ல, ஒருவரின் கையை மற்றவர் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாக பாறை மேல் நடக்க ஆரம்பித்தனர். ஓரிடத்தில் அந்த பெண்ணின் கால் சற்று சறுக்கியது. ஐய்யோ. கைடு அவள் கையை இறுகப் பற்றியிருந்தான். ஓ மை காட் என்று உரக்க கத்தினாள். அவளுடன் இருந்த ஆண், கூல் டவுன், என்றான். நாங்கள்  உன்னைக் கைவிட மாட்டோம். தைரியமாக வா. மறுபடியும் மெதுவாக நடக்க ஆரம்பித்து பாறையின் பின்னால் மறைந்தனர். அவளுக்கு அந்தப்  பெண்ணின் குரலை கேட்டதும் உடம்பெல்லாம் சில்லிட்டது. முதுகில் வேர்வை துளிகள் உறைவது போல் உணர்ந்தாள். பாறையைப் பார்த்தாள், பிறகு வெகு தூரம் கீழே ஓடும் பார்வதி நதியை பார்த்தாள். பாறையின் மேல் உருண்டால் அதோ கதிதான். அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த அவன் நாம் மேல் வழியாகச் செல்லலாம். நேரம் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்றான். கைடு முகத்தில் ஏமாற்றம். பாறையைத் தவிர்த்து இன்னொரு பாதையில் நடக்க தொடங்கினர். போர்டர்கள் மட்டும் பாறையைக் கடக்க முடிவெடுத்தனர்.

இரண்டு நாள் கழித்து அடுத்த தடை வந்தது. அவர்கள் பார்வதி நதியைக் கடக்க வேண்டும். நதி பாறைகளின் மேல் மோதிச் சுழன்று வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. தெளிவான நீரோட்டம். ஓரிடத்தில் நதியைக் கடக்க மரக்கிளையை குறுக்காக வைத்திருந்தார்கள். அதன் மேல் வெகு பத்திரமாக நடக்க வேண்டும்.அகலம் மிகவும் குறைவாக இருக்கும் கிளை. சரியாக நடக்கவில்லை என்றால் ஓடும் நதியில் விழ வேண்டும். ஆழம் அதிகம் இல்லை என்றாலும், தண்ணீர் சில்லென்று ஐஸ் கட்டி போல் இருக்கும். துணியெல்லாம் ஈரமாகிவிடும். இன்னும் ஒரு கிலோமீட்டர் முன்னால் சென்றால் தண்ணீருக்குள் இறங்கி நதியைக் கடக்க முடியும். அங்கு கணுக்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு குழுவினர் மரக்கிளை மேல் ஏறி நதியைக் கடக்க ஆரம்பித்தனர். அந்தப் பெண் ஆணின் கையை பிடித்துக்கொண்டு ஏதோ அடிப்பிரதக்ஷிணம் செய்வது போல் அடிமேல் அடி வைத்தாள். நதிக்கு நடுவில் இருக்கும் பொழுது அவர்களுடன் இருந்த இன்னொரு ஆண் கால் வழுக்கி நதியில் தொபீர் என்று விழுந்தான். அந்தப் பெண்ணும் ஆணும் சிரிக்க ஆரம்பித்தனர். விழுந்தவன் எழுந்து அவர்களுடன் சிரித்தான். இந்த குளிர் என்னை கொல்கிறது என்று கூறிக்கொண்டே இடுப்பு அளவு தண்ணீரில் நடந்தே நதியைக் கடந்து, கரையில் துணி மாற்ற ஆரம்பித்தான். அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தவளை பார்த்து, நாம் இன்னும் முன்னே சென்று நதியை கடப்போம். ஆம். எனக்கு இப்படி நதியில் விழுவது பிடிக்காது என்று சொல்லிவிட்டு சிரித்தாள். இருவரும் நடக்க தொடங்கினர்.

நாளை நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். காலை நான்கு மணிக்காவது கிளம்ப வேண்டும். சூரியோதயம் ஆகிவிட்டால் பனி உருக ஆரம்பிக்கும். பிறகு ஏறுவது மிக கடினம். நன்றாக தூங்குங்கள். நாளை நாம் 17500 அடியில் இருப்போம். மூச்சுவிட கஷ்டப்படுவீர்கள். அதனால் நன்றாக உறங்கி தெம்பாக கிளம்புங்கள்.

மாலை ஏழு மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். எட்டு மணிக்கு பௌர்ணமி சந்திரன் வானில் பிரகாசித்தான். இரண்டு பனிமலைகளுக்கு நடுவே பின்-பார்வதி பாஸ் தெளிவாக தெரிந்தது. நாளை உச்சியை அடைந்துவிடுவோம். ஆம். நான் முதல் முறையாக இது போன்ற ஒரு உயரமான கணவாய் வழியை தாண்டுகிறேன்..

அவர்கள் கணவாய் வழியை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்குள் அவர்கள் அதை அடைந்து விடுவார்கள். மகிழ்ச்சி அவள் மனதில் பார்வதி நதி போல் துள்ளியோடியது. என்னாலும் சிகரங்களை தொடமுடியும் என்று எனக்கும்  இந்த உலகத்திற்கும் உரக்க சொல்லும் நேரம் அதிக தொலைவில் இல்லை. அவள் அவனை பார்த்து சிரித்தாள். அவனும் புன்னகை புரிந்தான். இருவர் முகத்திலும் சாதனையின் ஒளி பரவியிருந்தது. அப்பொழுது தான் அந்த அசம்பாவிதம்  நிகழ்ந்தது. முதலில் ஒரு சிறு கல் உருண்டு வருவது போல் இருந்தது. அவள் அதைப் பார்த்து சிரித்தாள். கைடைப் பார்த்தப்போது அவன் முகம் வெளிறி இருந்தது. ருக்கோ. எல்லோரும் நின்றார்கள். இந்த முறை பெரிய கல் ஒன்று உருண்டு கொண்டு அவர்களை கடந்து சென்றது. மேடம். இஸ் சைட் ஆவோ. அவள் கைடு இருக்கும் பக்கம் செல்ல நினைத்தபொழுது மலையே கீழிறங்குவது போல் பெரிய பனித் திரள் இவர்களை நோக்கி உருள ஆரம்பித்தது. நஹீஂ. ஓ நோ. பாகோ. லெட் அஸ் ரன். அவளால் நகர முடியவில்லை. பனி தன் கைகளைக் கொண்டு அவள் காலை பிடித்துக் கொண்டது போல் அவள் அங்கேயே சிலை போல் நின்று தன்னை நோக்கி வரும் பனித்திரளை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த திரள் பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தது. விஷ்ணுவின் விஸ்வரூபத்தை அர்ஜுனன் தரிசித்தது போல் அவள் அதை பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் அவள் கையைப் பற்றி இழுத்தபொழுதுதான் அவளுக்குள் திகில் திடீரென்று புகுந்தது. ஐயோ என்று கூக்குரலிட்டாள். பனி அவள் மீது படர்ந்தது. ஐயோ என்ற எதிரொலி இப்பொழுது கேட்டது. வெள்ளைப் பனி அவள் மேல் படர்ந்திருந்தாலும் அவள் இருளுக்குள் தள்ளப்பட்டாள். மூச்சு இரைத்தது. அவள் மேல் பனியின் பாரம் அதிகரித்தது. கையை அசைக்கப் பார்த்தாள். முடியவில்லை. காலை அசைக்கப் பார்த்தாள். முடியவில்லை. மூச்சு திணருவதை நன்றாக உணர்ந்தாள். மெதுவாக ஒரு மெல்லிய ஒளி தூரத்தில் தோன்றியது. பேச்சு சத்தம் கேட்டது. என்னை யாரோ காப்பாற்ற வருகிறார்கள். நான் பிழைத்துவிடுவேன். கண் முழித்துப் பார்த்தாள். அவள் டெண்டில் ஸ்லீபிங்க் பாக்குக்குள் இருந்தாள். கனவு. வெளியில் இன்னொரு குழு மலையேற தயாராகிக் கொண்டிருந்தது. இருட்டு. டார்ச் வெளிச்சம், பேச்சு சத்தம். அவளுக்கு உடம்பு முழுக்க வேர்த்திருந்தது. மூச்சு விடுவது கடினமாக இருப்பதை உணர்ந்தாள். இன்னும் படபடப்பு ஓயவில்லை. தூங்குவதற்கு கண்ணை மூடினாள். ஆனால் தூக்கம் வரவில்லை. வெளியில் பெண்ணின் குரல் கேட்டது. டெண்ட் ஜிப்பை திறந்து வெளியே பார்த்தாள். வேண்டாம். என்னால் மலை ஏற முடியும் என்ற நம்பிக்கை இல்லை. நான் உன்னுடன் இருக்கிறேன். உன்னால் முடியும். சொன்னால் கேள். என்னால் முடியாது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு கைவிடக்கூடாது. ஆண் அந்த பெண்ணின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான். அவளை அணைத்துக்கொண்டு, நான் இருக்கிறேன். பயப்படாதே. அவர்கள் எல்லோரும் நடக்க தொடங்கினர். அவள் மறுபடியும் ஸ்லீபிங்க் பாக் உள்ளே சென்று கண் மூடினாள்.

அவள் விழித்தபொழுது மெல்லிய ஒளி பரவத் தொடங்கியிருந்தது. டெண்ட்டுக்கு வெளியே வந்தாள். குட் மார்னிங். குட் மார்னிங். என்னை ஏன் எழுப்பவில்லை? நீ தூக்கத்தில் பெரிதாக அலறினாய். நானும் கைடும் உன் கூச்சல் கேட்டு எழுந்தோம். நீ மை காட் மை காட் என்று அரற்றிக் கொண்டிருதாய். அதனால் உன்னை எழுப்பவேண்டாம் என்று சொன்னேன். நீ பயந்திருக்கிறாய் என்று எங்களுக்கு தெரிந்தது. அவளைப் பார்த்ததும் கைடு அருகே வந்தான். நாம் இப்பொழுதே கிளம்பினால் பாஸை கடக்க முடியும் ஆனால் வெளிச்சம் வந்துவிட்டதால் ஒரு சிறிய ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. என்ன சொல்கிறீர்கள். இன்று தங்கிவிட்டு நாளை அதிகாலையில் ஏறலாமா? ஏறலாம் ஆனால் நாளை வெதர் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. நாளை ஏற முடியவில்லை என்றால் நம் பாடு திண்டாட்டம் ஆகிவிடும். நம்மிடம் உள்ள சாப்பாட்டை வைத்துக்கொண்டு இன்று திரும்பச்  சென்றால் நாம் கசொல் அடைந்துவிடலாம். அதே போல் பாஸை கடந்துவிட்டால் உணவுக்கு அபாயமில்லை. நாளை முடியாவிட்டால் அபாயம்தான். இப்பொழுதே கடப்பதா இல்லை திரும்பிச் செல்வதா?

அவள் குழப்பத்தில் இருந்தாள். சிகரம் தொடவேண்டும். இந்த கணவாய் வழியைத் தாண்ட வேண்டும். ஆனால் அந்த கனவு அவளை அச்சுறுத்தியது. ஒரு வெள்ளை ஸ்மாசனத்தில் நாம் புதைக்கப்பட வேண்டுமா? யாரும் இல்லாத  ஓரிடத்தில் பனிக்கு அடியில் பிணமாய்க் கிடக்க வேண்டுமா? ஆனால் இடர்களை தகர்த்தெறியத்தானே வந்தாய். உயிரைக்  கொடுத்து அதை தகர்க்க வேண்டாம். இல்லை. நானும் எல்லா தடைகளையும் எதிர் கொள்வேன். உயிர் போனபின் தடையேது? அவனைப்  பார்த்தாள். அவன் அவள் மனதில் இருப்பதையே சொன்னான். அவலாஞ்ச் வந்தால் நம் கல்லறை எது என்று யாருக்கும் தெரியாது. அப்பொழுது கைடு அவனிடம் சொன்னான், நீங்க தான் மேடமுக்கு தைரியம் கொடுத்து ஏற சொல்லணும். கொஞ்ச ரிஸ்க் இருக்கு ஆனா இவ்வளவு தூரம் வந்த பிறகு ஏன் திரும்பிப் போகணும்? அவள் அவன் முகத்தை உற்றுப் பார்தாள். அவன் சரி போகலாம் என்று சொன்னால் கிளம்பிவிடுவாள் போல் பட்டது.

அவன் அவளை பார்த்தான். மறுபடியும் பாஸை பார்த்தான். உன் உடல்நலம் நன்றாக இல்லை. உனக்கு பயத்தால் வேர்க்கிறது. இருவரும் பாஸ் இருக்கும் பக்கம் பார்த்தனர். ஏறிக்கொண்டிருந்த பெண் ஒரு இடத்தில் நின்றிருந்தாள். அவள் மூச்சிறைப்பது இவர்களுக்கும் கேட்பது போல் தோன்றியது. அவள் தலையை இல்லை என்பது போல் ஆட்டிக் கொண்டிருந்தாள். முட்டி மேல் இரு கைகளையும் வைத்துக்கொண்டு குனிந்திருந்தாள். அவர்கள் பாதி தூரத்தை கடந்து விட்டிருந்தார்கள். அவர்கள் நின்ற இடத்திலிருந்து மலை செங்குத்தாக இருந்தது. அவன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னிடம் ஏதாவது கேட்பான் என்று அவள் காத்திருந்தாள். அவன் இருவருக்குமான முடிவை எடுத்துவிட்டிருந்தான். திரும்பிச் செல்லலாம். கைடு முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. இவளுக்கு தன்னுள் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

கசொல் வந்து சேர்ந்தபோது சிக்னல் கிடைத்தது. கைடு இவர்களைப் பார்த்து இன்னொரு குழு பாஸை தாண்டி இன்று காஜாவில் இருக்கிறார்கள். அவர்களின் கைடு எனக்கு இந்த படங்களை அனுப்பினான். அந்த பெண் பின்-பார்வதி பாஸில் கொடி நட்டுக் கொண்டிருந்தாள். அவள் உடம்பு பூரிப்பில் இன்னும் குண்டாகிவிட்டது போல் இருந்தது. குளிர்க் காற்றுக்கு கன்னங்கள் செக்கச்செவேல் என்று இருந்தன. எல்லா பற்களும் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு படத்தில் மூவரும் உயரே குதித்து அங்கேயே நின்றுவிட்டிருந்தார்கள். நீல வானம், வெள்ளை மேகங்கள், சுற்றிலும் பனி. கண்களுக்கு காகில்ஸ். தலையில் குரங்கு குல்லாய். எல்லா படங்களும் பிரமாதமாக இருந்தன. ஒரு சிறு வீடியோ அவளை கவர்ந்தது. அந்த பெண் பாஸ் அடைவதற்கு பத்து அடிகளே இருக்கும்பொழுது நடக்க முடியாமல் கிட்டத்தட்ட கீழே விழ இருக்கிறாள். அவள் கூட வந்த ஆண் அவள் கையைத்தன் தோல் மேல் போட்டுக்கொண்டு அவளை பாஸ் வரை இழுத்து செல்கிறான். அந்த வீடியோவை அவள் பல முறை பார்த்தாள். அன்று இரவு, நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம். ஃபிரண்ட்ஸ்சாகவே இருந்துவிடலாம் என்று உறுதியாகச் சொன்னாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.