ஒரு பார்வையற்றவனின் திருப்தி – மலையாளம் மூலம் : தகழி சிவசங்கரம் பிள்ளை ஆங்கிலம் வி. அப்துல்லா தமிழில் தி. இரா. மீனா

தி. இரா. மீனா

பார்கவியை தன் மனைவியாக பப்பு நாயர் ஏற்றுக் கொண்டான். பிறவியிலிருந்தே அவனுக்கு பார்வையில்லை. அவளுக்கு அந்த கிராமத்தில் அவ்வளவு நல்ல பெயரில்லை. அவளுடைய வீட்டிற்கு போவது பற்றி யாரும் அவனிடம் கேள்வி கேட்கவில்லை. அவன் பார்வையற்றவன் அல்லவா?

மத சம்பந்தமான பழங்கதைகள் கேட்பது பார்கவியின் தாய்க்கு மிகவும் பிடிக்கும். பப்பு நாயர் தனக்குத் தெரிந்த எல்லாக் கதைகளையும் அவளுக்குச் சொல்வான். அவன் அங்கு போவதை தடை செய்ய அவன் அம்மா இரண்டு தடவை முயற்சி செய்தாள்.கடைசியில் பார்கவி கர்ப்பிணியானாள். பப்புநாயர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

தன் வீட்டிற்குள் அவனை அனுமதிக்க முடியாது என்று பப்புநாயரின் அம்மா சொன்னாள். அவனுக்கு ஒரு பதிலிருந்தது: “எல்லா நேரமும் என் தம்பி என்னை கவனித்துக் கொள்ள மாட்டான். என்னைப் பார்த்துக் கொள்ள யாராவது ஒருவர் வேண்டும்.”

“அவளை எப்படி நீ காப்பாற்றுவாய்?”அம்மா கேட்டாள்.

“அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டாம் . வீடுகள் சுத்தம் செய்து அல்லது மாவரைத்து அவள் பிழைத்துக் கொள்வாள்.”

“நீ என்ன செய்வாய்?”

“அவள் என்னைப் பார்த்துக் கொள்வாள்.”

“அவளுக்கு மூன்று தடவை கரு கலைந்திருக்கிறது.”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ! உலகத்தில் அவளுக்கு வேறு யாருமில்லை.” இப்படித்தான் பப்பு நாயரின் நிரந்தரமான வெளியேற்றம் அவன் வீட்டிலிருந்து நிகழ்ந்தது.

பார்கவி ஓர் அந்தணர் குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வந்தாள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு , மாதத்திற்கு ஐந்துபடி அரிசி அவள் கூலி. இது தவிர இரண்டு வீடுகளில் மாவரைத்து தரும் வேலையும் அவளுக்கு நிரந்தரமாக இருந்தது. அவள் பப்புநாயரை நன்றாக கவனித்துக் கொண்டாள். அவனுக்கு கெட்டியான அரிசி கஞ்சி வைத்துக் கொடுத்து விட்டு நீராக உள்ளதை தான் குடித்து பசி தீர்த்துக் கொள்வாள். பணிவாக இருப்பாள். அவள் பேசுவது மிகக் குறைவு. வறுமை அவள் முகத்திலிருந்த உற்சாகத்தையெல்லாம் சுரண்டியிருந்தது. இருபது வயதிலேயே உள்ளடங்கிப் போயிருந்த கன்னம், பள்ளமான கண்கள், ஆகியவை பத்து வயதை அதிகரித்துக் காட்டின. அவள் உறுப்புகளில் எப்போதும் ஒருவித சோக நிழல் இருந்தது.மனம் விட்டு ஒருபோதும் மகிழ்ச்சியாக அவள் சிரித்ததில்லை. தன் அதிர்ஷ்டவசமான தோழிகளைப் பார்க்கிற போது மிக அபூர்வமாக ஒரு கேலியான புன்னகை அவள் காய்ந்த உதடுகளில் வெளிப்படும்.

எப்போதும் தன் இடுப்பைச் சுற்றி ஒரு மெல்லிய ஆடை அணிந்திருப்பாள். மாற்று உடைகள் வேறு எதுவும் அவளிடமில்லை.ஆனால் ஒரு போதும் தன் அரை நிர்வாண ஆடை குறித்து அவள் வெட்கப்பட்டதில்லை.

“பார்கவி வயிற்றில் ஓர் ஆண்குழந்தையைச் சுமந்திருக்கிறாள்.அவன் வளர்ந்த பிறகு ராமாயணம் படிப்பான்.” என்று பப்புநாயர் சொல்வான். “எனக்கு பெண்குழந்தைதான் வேண்டும்.”என்று அவள் பதில் சொல்வாள்.

பார்கவிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. நாயரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது. அவன் அறையை விட்டு வெளியே போகவே மாட்டான். வீட்டுக்கு வரும் பெண்களிடமெல்லாம் “பார்கவி பெண் குழந்தைதான் வேண்டுமென்றாள். என் ஆசைப்படிதான் நடந்தது.” என்று சொல்வான். எல்லா நேரமும் குழந்தையைத் தன் மடியிலேயே போட்டு கொஞ்ச வேண்டுமென்று விரும்பினான். “குட்டிப் பையா, நீ பெரியவனான பிறகு உன் அப்பாவிற்கு ராமாயணம் படித்துக் காட்டுவாயா?’ என்று குழந்தையிடம் கேட்பான்.

அவன் முகம் சந்தோஷத்தில் மின்னும்.”பார்கவி,நீ குழந்தைக்கு முத்தம் கொடுப்பதில்லையா?” என்று அடிக்கடி கேட்பான்.

“ஒரு நிமிடம் கூட நீ பேசாமலிருக்க மாட்டாயா?” என்று அவள் பதில் சொல்வாள்.

“பெண்ணே , நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. என்க்கு வேறு என்ன வேண்டும்? இவன் என்னை காசி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அழைத்துப் போவான்.செய்வாய் தானே மகனே?” குழந்தைக்கு அழுத்தமாக முத்தம் கொடுப்பான். ’அஸ்வதி, மகம், மூலம், கேதுவிற்கு ஏழாவது ’ என்று ஜாதகத்தை கணக்கிடத் தொடங்குவான்.’இளம்பருவத்திலேயே இவன் சுக்கிரனின் ஆளுமை உள்ளவனாக இருக்கிறான். இவன் மிக அதிர்ஷ்டக்காரன். கோபிகா ரமணன் என்று இவனுக்குப் பெயர் வைக்க வேண்டும் பார்கவி. ஓமன திங்கள் கிடாவோ என்ற பழைய தாலாட்டை நீ கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னான்.

அவள் குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்தாள். “ஏன் நீ அவனுக்கு கோபிகா ரமணன் என்று பெயர் வைக்கவில்லை ?’ என்று கேட்டான்.

“ஓ, பிச்சை எடுக்கப் பிறந்த ஓர் ஆண் குழந்தை..” என்றாள்.

“அப்படிச் சொல்லாதே பெண்ணே. அவன் ஜாதகம் ஒரு தலைவனுடையது.” அவள் அந்த தாலாட்டுப் பாடலையும் கற்றுக் கொள்ளவில்லை.

பப்புவின் மடியிலிருக்கும் குழந்தை வீறிட்டு அலறும். பப்பு உற்சாகம் அடைந்து பார்கவியை கூப்பிடுவான். ’அலறுவதற்காக பிறந்த பேய்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கத்துவாள். பார்கவி குழந்தையை அடிப்பாள். பப்புநாயர் அதிர்ந்து போவான். வேலைக்குப் போய்விட்டு சாயந்திரம்தான் வருவாள். குழந்தையின் தொண்டை வரண்டு போய் விட்டதாக தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு அமைதியை இழந்தவனாக தவிப்பான். அவனது அன்பு மனதை நெகிழ்விக்கக் கூடியது.

’என் மகனுக்கு நல்ல எதிர்காலமிருக்கிறது. அவனுடைய இடது மார்பில் தாமரையைப் போல இருக்கும் ஒரு மச்சம் தெய்வீக தன்மையைக் காட்டுவதாகும்.’

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பெண்களிடம், ”அவன் என்னைப் போல இருக்கிறானா ?” என்று கேட்பான். அந்தப் பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வரும். தன்னை விழுங்கியிருக்கும் இருளில் ஒரு துளை இருப்பதை அவன் கவனித்திருந்தான். குழந்தை தன்னைப் போலவே இருக்கிறதென்று நினைத்தான். ”உன்னால் பார்க்க முடியுமா ?” என்று ஒரு பெண் அவனிடம் ஒரு நாள் கேட்டாள்.

“என் மகனை என்னால் பார்க்க முடியும்.”என்று பதில் சொன்னான். மகனைப் பார்த்துக் கொண்டேயிருப்பான். குழந்தையை முத்தமிடும்போது ’ குட்டி பயலே, உன் சிரிப்பு!’ என்று சில சமயங்களில்
சொல்வான். அந்த அமைதியான சிரிப்பைக் கூட அவன் பார்த்தான்.

’அவள் மிக மோசமான பெண். குழந்தை அவனைப் போல இருக்கிறதா?’ என்று கிராமத்துப் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

ராமனுக்கு முதன்முதலாக அன்னம் கொடுக்கும் சமயம். அந்த மங்கலமான செயலை தன் கையால் தானே செய்ய வேண்டுமென பப்பு நாயர் ஆசைப் பட்டான். ஆனால் பார்கவி அவனை அனுமதிக்கவில்லை. அவன் பெருந்தீனிக்காரன் என்று அவள் தன் அம்மாவிடம் சொன்னாள். ’அப்படியெனில் வேறு யாரையாவது வைத்து அன்னம் ஊட்டலாம். குழந்தை பெருந்தீனி தின்பவனாகி, தொப்பையன் ஆகிவிடக் கூடாது’ என்று அவள் அம்மா சொல்லிவிட்டாள். ’நான் அவ்வளவு சோறு சாப்பிடுபவனில்லை’ என்று அந்த நகைச்சுவைக்கு உண்மையாக சிரித்துக் கொண்டே பதில்
சொன்னான் பப்பு நாயர்.

குழந்தை வளர்ந்தான். அந்தக் குடும்பச் சூழ்நிலை மோசமானது. வேலை செய்த இடத்தில் திருடி விட்டதாக குற்றம் சாட்டி பார்கவியை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

“குழந்தையை பட்டினி போடாதே. என் பங்கை அவனுக்கு கொடுத்து விடு.” நாயர் மனைவியிடம் சொல்வான்.

அது வரட்சியான கார்த்திகை மாதம். அந்த வீட்டில் அரிசி கஞ்சி சமைத்து மூன்று நாட்களாகி விட்டன. ஒரு நாள் பீன்ஸ் இலைகளை சாப்பிட்டு சமாளித்தனர். இரண்டாம் நாள் அரிசி நொய். மூன்றாம் நாள் பக்கத்து வீட்டு கேசவன் நாயர் பத்து பைசா கொடுத்தார். சிறிது அரிசி வாங்கி கஞ்சி வைத்து பார்கவி, அவள் அம்மா, அவள் மகன் மூவரும் சாப்பிட்டனர். வராந்தாவில் உட்கார்ந்திருந்த பப்பு நாயருக்கு பக்கத்து வீட்டுக்காரர் ராமாயணம் வாசித்துக் கொண்டிருந்தார். அடுக்களையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று நாயருக்குத் தெரியாது.

அன்று இரவு அவன் குசேல விருத்தத்திலிருந்து சில எளிமையான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தான். நள்ளிரவிற்குப் பிறகும் பசி அவனைத் தூங்க விடவில்லை. அவன் பாடுவது அக்கம் பக்கத்தினருக்கு மிகத் தெளிவாக கேட்டது. ”இது என்ன பைத்தியக்காரத்தனம்?” பார்கவி கோபத்துடன் கேட்டாள். ‘நான் கடவுளைப் பற்றித்தானே பாடிக் கொண்டிருக்கிறேன்’பாடுவதை நிறுத்தி விட்டு மௌனமாக பிரார்த்தனை செய்தான்.

பார்கவி மீண்டும் கருவுற்றாள். இந்தத் தடவை அவளுக்கு பெண்குழந்தைபிறக்குமென்று நாயர் சொன்னான். மூத்த குழந்தை இப்போது சிறிது பேசத் தொடங்கியிருந்தான். தாயை அம்மா என்றும், பாட்டியை அம்மும்மா என்றும் அழைத்தான். ஆனால் அப்பா என்ற வார்த்தைக்கான அடிப்படை ஒலி அவனிடமிருந்து வரவேயில்லை.

’சின்னப் பயலே, ஏன் அப்பா என்று கூப்பிட மாட்டாயா ?’ அப்பா என்ற வார்த்தை உச்சரிப்பதற்கு கடினமானது என்று நாயர் தனக்குள் சமாதானம் செய்து கொண்டான்.

இந்த முறை கருவுற்றலின் போது பல தடவை பார்கவி நோய்வாய்ப்பட்டாள். இந்த கஷ்டங்கள் எல்லாம் போய்விடும் என்று பப்புநாயர் சொல்லிக் கொண்டேயிருந்தான். ராமன் அம்மாவை விட்டு அகல
மாட்டான். பப்பு நாயரின் அருகே அவன் மறந்தும் போவதில்லை. அவனுக்கு ஒரு தங்கை பிறக்கப் போவதாகவும், அந்தக் குழந்தை எங்கேயிருக்கிறதென்று அம்மாவிடம் கேட்டு அவன் முத்தமிட
வேண்டுமென்றும் மகனிடம் சொல்வான்.

பார்கவி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். குழந்தையின் ஜாதகத்தை கணித்த நாயர் அவளுக்கு பதினான்காம் வயதில் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக இருப்பாளென்றான். ’என் மகள் அவள் தாயைப் போல இருக்கிறாள், இல்லையா அக்கா?’என்று பக்கத்து வீட்டு குட்டியம்மாவிடம் கேட்டான். அவள் பெரிதாகச் சிரித்தாள். முகத்தில் கேலி பரவியது.

“ஆமாம்,அப்படித்தான் நினைக்கிறேன்.”

அக்கம்பக்கத்தவர்கள் அந்தப் பெண் குழந்தையின் அப்பாவாக உத்தேசமாக யாரைச் சொல்ல முடியும் என்று விவாதித்து முடிவுக்கு வந்தனர். இப்போது இரண்டு குழந்தைகள். குடும்பத்தை வறுமை பிய்த்துத் தின்றது.பார்கவியின் உடல்நிலையும் சீர்கெட்டது. அவளால் எந்த வேலையும்செய்ய முடியவில்லை.

அவர்கள் குடும்ப நிலை சீக்கிரம் சரியாகி விடும் என்று பார்கவிக்கு நாயர் ஆறுதல் சொன்னான். இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவள் நினைத்தாள். குழந்தைகள் அனாதையாகி விடுமெனவும், அது முட்டாள்தனமான முடிவென்றும் அவன் விவாதித்தான். ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவள் கண்களிலிருந்து வரவில்லை. பல்லைக் கடித்து தன் இயலாமையைக் காட்டுவாள். ஒரு சில கணங்கள் அந்த கண்களிலிருந்து ஒளி எழுந்து, பின் அடங்கி ஆற்றாமையை காட்டும். “நீ ஏன் பிச்சை எடுக்கக் கூடாது?’ என்று ஒரு நாள் அவனிடம் கேட்டாள். ’பெண்ணே, நீ சொல்வது சரிதான். புத்தியோடு பேசுகிறாய். ஆனால் ‘நான் இந்த கிராமத்தை விட்டு போக வேண்டுமே. குழந்தைகளை விட்டு எப்படிப் போவேன் என்று தெரியவில்லையே.’

பார்வதி மீண்டும் கருவுற்றாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. பல நாட்கள் அடுப்பே பற்ற வைக்கப்படவில்லை. நாயர் மகனை தினமும் மதியம் பக்கத்திலுள்ள அந்தணர் வீட்டிற்கு அனுப்பி விடுவான். அவர்கள் கொடுக்கும் அரிசிக் கஞ்சியை அம்மாவும் ,பிள்ளைகளும் சாப்பிட்டு விடுவார்கள். அதில் ஏதாவது மிச்சமிருந்தால் நாயர் சாப்பிடுவான்.

“நான் ராமாயணத்தைக் கேட்கும் போது எனக்கு பசியோ, தாகமோ எதுவுமில்லை ”என்று பப்புநாயர் சொல்வான். அவனுக்காக யாரோ படிக்கிற ராமாயணத்தைக் கேட்டபடியே அவன் தன் பகல் பொழுதைக் கழித்து விடுவான். ராத்திரியில் தனக்கு நினைவில் வருகிற வரிகளைச் சொல்லிக் கொண்டு படுத்திருப்பான்.

குழந்தைகள் பசியில் அழுவார்கள்.பார்கவி ஒன்றும் பேசாமல் படுத்திருப்பாள். ’சீக்கிரம் எல்லாம் சரியாகி விடும்’ என்று நாயர் சொல்வான். கவனிப்பாரற்ற நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டன. ராமனை பகல் முழுவதும் பார்க்க முடியாது. வீடு வீடாய் பிச்சை எடுப்பான். பெண் குழந்தை நோய்வாய்ப்பட்டது. யாரிடமோ அரிசியைக் கடன் வாங்கி வந்து கஞ்சி செய்து தரச்சொல்லி அவளுக்குக் கொடுப்பான். ராமன் அந்தியில் தான் வீட்டிற்கு வருவான். கடவுளைப் பற்றிப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். அதற்கு காசு தர மாட்டார்கள். பப்புநாயர் அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு சாமி கதைகள் எல்லாம் சொல்வான். நாயர் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் எழுந்து போய் விடுவான். அடுப்படியில் இருந்து அவன் குரல் கேட்கும் போதுதான் ராமன் அங்கில்லாதது நாயருக்குத் தெரியும்.

பார்கவிக்கு பிறந்த ஆண்குழந்தை நான்காம் நாளில் இறந்துபோனது. அது ஒரு வகையில் வரம்தான். அவர்கள் எப்படிக் காப்பாற்றுவார்கள்? நாயர் இப்படிச் சொல்லி தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். குழந்தைகளை காப்பாற்றுவது என் பொறுப்பு. இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. நமக்கு இனி வேறு குழந்தைகள் வேண்டாம்,’ என்று பார்கவியிடம் சொன்னான்.

ராமனுக்கு இப்போது ஆறு வயது. அவனுக்கு எழுத, படிக்க கற்றுத் தர வேண்டும் என்று நாயர் முடிவு செய்து பள்ளியில் சேர்த்தான்.

பார்கவிக்கு அந்தணர் வீட்டில் இழந்த வேலை திரும்பவும் கிடைத்தது. அது இறந்து போன குழந்தையால் கிடைத்த அதிர்ஷ்டம் என்று பப்பு நாயர் சொன்னான். அந்த வேலையின் வழியாக குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு கிடைத்தது. ஆனால் நாயருக்கு அதனால் எந்த பிரயோஜனமுமில்லை. அவன் பட்டினி தொடரவே செய்தது. மதியமும், இரவும் அந்தணர் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாப்பாட்டை அம்மாவும், குழந்தைகளும் சாப்பிட்டார்கள். நாயர் ராமாயணப் பாடல் பாடிக் கொண்டோ கேட்டுக் கொண்டோ வராந்தாவில் உட்கார்ந்திருப்பான். அபூர்வமாக, அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள். அவன் எப்போதும் சாப்பாடு கேட்டதில்லை. எது கி்டைத்ததோ அதைச் சாப்பிட்டான்.

ராமன் பள்ளிக்குப் போகவில்லை. தன்னிடம் வரவேண்டாம் என்று நாயரின் அம்மா சொல்லி விட்டாள். தன்னால் செலவை சமாளிக்க முடியாதென்று சொன்னாள். அவள் சொல்வது நியாயமானதே என்று அவனுக்குப் பட்டது. அவன் குழந்தைகள் எழுதப் ,படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மகனுக்கு ஆறு வயதுதான் ஆகிறது. இன்னும் ஒரு வருடம் காத்திருக்கலாம்.

குழந்தைகள்? இன்று வரை அவர்கள் அவனை அப்பா என்று கூப்பிட்டதில்லை. அவன் அங்குமிங்கும் தடுமாறி நடப்பதைப் பார்த்துச் சிரிப்பார்கள். “கண்ணே, இங்கே வா ’ என்று கூப்பிட்டு கையை நீட்டுவான். அந்தக் குழந்தை அவனருகில் வரவே வராது. தூரத்தில் நின்று கொண்டு அவனைப் பார்த்து முகம் சுளிக்கும். ’ராமா,கொஞ்சம் வெற்றிலை பாக்கு கொண்டு வா’ என்று ஒரு முறை மகனிடம் சொன்னான். ராமன் வெற்றிலையில் மிக தாராளமாக சுண்ணாம்பைத் தடவி, பாக்கு என்று சொல்லி சில கற்களை வைத்துக் கொடுத்து விட்டான் .பப்புநாயர்வாய் வெந்து கத்திய போது கைகொட்டி சத்தமாகச் சிரித்தான். அந்த கேலியை நினைத்து நாயரும் சிரித்தான்.

ஒரு நாள் பப்பு நாயர் குச்சியின் உதவியோடு வீட்டின் முன் வராந்தாவில் இறங்கினான். அடுப்படியில் அம்மாவோடு சண்டை போட்டுக் கொண்டு வெளியே வேகமாக ஓடி வந்த ராமன் குச்சி மேல் விழுந்தான். பப்பு நாயர் அவன் முகத்தின் மேல் விழுந்தான். இந்த நிகழ்வை வழிப்போக்கர்களிடம் சொல்லி மகனின் வேகத்தைப் பாராட்டுவான். இப்படியாக இரண்டு வருடங்கள் கழிந்தன. ராமனை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லை. சில தடவை பார்கவியிடம் இதைப் பற்றி நாயர் சொல்லிப் பார்த்தான் ’உன் உளறுவாயால் நீ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவாய்’என்று சொல்லிவிட்டாள்.

’நான் பேசும் விஷயம் சரிதானே?’

அவள் பதில் எதுவும் சொல்ல மாட்டாள். பேசாமல் வேலைக்கு கிளம்பி விடுவாள். ராமன் சின்னச் சின்ன திருட்டுவேலைகளில் ஈடுபட்டான்.’ நீ செய்வது சரியா?’ என்று நாயர் கேட்டான்.

’நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பது பதிலாக இருந்தது. அவன் சின்னப் பையன்தான். பெரியவனாகி விட்டால் சரியாகிவிடுவான் என்று நாயர் தன்னைச் சமாதானம் செய்து கொண்டான்.

பார்கவி மீண்டும் கருவுற்றாள். அது நாயருக்கு சிறிது ஆச்சர்யமாக இருந்தது. ’பார்கவி, இது எப்படியானது?’ என்று கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. இந்த சமயத்தில் அவள் ராமனை வீட்டு வேலைக்கு அனுப்பினாள்.’படிக்க வேண்டிய இந்த சமயத்தில் அவனை வேலைக்கு அனுப்பலாமா?’என்று பக்கத்து வீட்டு குட்டியம்மாவிடம் புகாராகச் சொன்னான்.

’ஆமாம்..’என்றாள் அவள். பார்கவி என்ன செய்கிறாள் என்பதெல்லாம் குட்டியம்மாவிற்குத் தெரியும். பப்புநாயரை பார்கவி அவமதிப்பதைப் பார்க்கும் போது அவளுக்கு நாயர் மேல் இரக்கம் ஏற்படும். நாயர் பட்டினி கிடக்கும் போது பார்கவி தன் வயிற்றை நிரப்பிக் கொள்வதை அவள் பார்த்திருக்கிறாள். அவளுக்கு அழுகை கூட வந்திருக்கிறது. இப்போது அவள் நாயரின் அம்மாவிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறாள்.

அங்கு நடக்கும் நிகழ்வுகளை அக்கம் பக்கத்தினர் பேசத் தொடங்கி இருந்தனர்.ஆனால் பரிதாபப்பட்டு யாரும் அவனிடம் இந்த மாதிரியான விஷயங்களை நேரடியாகப் பேசுவதில்லை. அதனால் வாழ்வின் தீய நிலை அவன் இருட்டான உலகில் ஒளிந்து இருந்தது. ஒரு வேளை அவன் வாழ்கின்ற நரகம் பற்றி அவனுக்கு தெரிய வந்தால் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அக்கம்பக்கத்தினர் பயந்தனர். பார்கவியின் மேல் அவன் வைத்திருக்கும் எல்லையற்ற காதல் எல்லோரும் உணர்ந்ததாக இருந்தது. அதே நேரத்தில் அவனது அசைக்க முடியாத நம்பிக்கை அதிசயமானதாகவுமிருந்தது. அவனுடைய நேர்மைக்கும் ,தியாகத்திற்கும் உலகமே தலை வணங்கும். அவன் பார்கவியிடம் ஒரு வார்த்தை கூட கோபமாகப் பேசியதில்லை. கொடுமையான யதார்த்தத்தை அவனால் எப்படி எதிர்கொள்ள முடியும்?

குட்டியம்மாவால் எதையும் சொல்ல முடியவில்லை.’என் மகன் மிக புத்திசாலி. அவன் ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கிறான்.’ என்று நாயர் அவளிடம் சொன்னான்.

’பப்பு நாயரே,அவன் உங்கள் மகனில்லை’.

’இல்லை,அவன் கடவுளின் குழந்தை.இந்த உலகமே கடவுளால் படைக்கப்பட்ட மாயைதானே?’

குட்டியம்மா அதற்கு பதிலெதுவும் சொல்லவில்லை. அவளுக்கு அதைச் சொல்ல தைரியமில்லை.

பார்கவிக்கு இந்த முறை ஓர் ஆண்குழந்தை பிறந்தது. வீட்டின் புதிய வருகை நாயருக்கு மகிழ்ச்சி அளித்தது. அந்தக் குழந்தை தனக்கு தோழமையாயிருக்குமென்று அவன் சொன்னான். இன்னொரு நாள், மீண்டும் குட்டியம்மா வந்தாள். ’எதையும் பார்க்க முடியாத அதிர்ஷ்டக்காரன் நீ. இந்த உலகத்தின் அவலங்களையெல்லாம் நீ பார்க்க வேண்டியதில்லை’ என்றாள்.

“இந்த உலகில் தீயது என்பதேயில்லை. உண்மைதான்,வறுமை இருக்கிறது ஆனால் அது முடிவுக்கு வந்துவிடும். சோகமிருக்கும் போது சந்தோஷமும் இருக்கும் அக்கா .”

“இல்லை.. அப்படி..”

“நான் வருத்தமாக இல்லை; எந்த வருத்தத்தோடும் கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைக்கவில்லை. என் குழந்தைகளைப் பற்றிய வருத்தம் எனக்கிருக்கிறது என்பது உண்மைதான். ராமன் எனக்கு ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.’

’குழந்தைகளை நீ பார்த்திருந்தால் இந்த மாதிரி நீ வருத்தப்படமாட்டாய்.’

’நான் என் குழந்தைகளைப் பார்க்கிறேன்.’

’அப்படியெனில் ,நீதான் அவர்களுக்கு அப்பாவா?’ குட்டியம்மாவின் இதயம் ஒரு கணம் துடிப்பை மறந்தது. தன்னையறியாமலே அவள் உண்மையை உளறிவிட்டாள். பப்புநாயர் பதிலுக்காக் தயங்கி, தடுமாறினான். அடுத்த கணம் ’அவர்கள் குழந்தைகள்.’ என்றான்.

’உனக்கு என்ன தெரியும் நாயர் ?’

’நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் அக்கா. இப்போது பிறந்த இந்தக் குழந்தை – நான் முட்டாளில்லை. பார்வையற்றவர்களுக்கு ஓர் அதீத புத்தி கூர்மையுண்டு. எனக்கு பல விஷயங்கள் தெரியும். ஒரிரவு நான் வீட்டிற்குள்ளிருந்து நாணயங்களின் ஒலி வருவதைக் கேட்டேன் .

”நீ வராந்தாவில் உட்கார்ந்திருக்கிறாய். அவள் ஒரு பிசாசு.’ பப்புநாயர் உடனடியாக பதில் சொல்லவில்லை.

’அதனாலென்ன? குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்று உலகம் சொல்லாதில்லையா?’

’அவர்கள் உன்னை ’அப்பா’என்று கூப்பிடுகிறார்களா?’

’இல்லை. ஆனால் நான் அவர்களை நேசிக்கிறேன். ராமனும், தேவிகாவும் எனக்கு முன்னால் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு அழகானவர்கள்! என் கண்மணிகள்! அவர்கள் என் குழந்தைகள்தான். அவர்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டாமா?’

’அவள் உன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.’

’அவள் பரிதாபத்திற்குரியவள். பசியில் எவ்வளவு தவித்திருக்கிறாள்! ஒரு வேளை இதுதான் அவளுடைய வாழ்வாதாரத்திற்கான ஒரே வழி போலும். அந்த அளவிற்காவது அவளுக்கு நான் உதவிக் கொண்டிருக்கிறேன்.’

குட்டியம்மாவிற்கு அவனிடம் பேச எதுவுமேயில்லை.அவன் மனம் மிக விசாலமானது, இந்த உலகத்தைப் போல. அவன் இருட்டில் தடுமாறுகிற ஒருவனில்லை. அவன் மனம் நிரந்தர உள்வெளிச்சம் கொண்டிருக்கிற ஓர் ஒளிரும் படிகம். தனக்குள் பலப் பல உலகங்களை அடக்கிக் கொண்டிருக்கிற மேதமை.

குட்டியம்மா அமைதியாக வெளியேறினாள் ; அந்த இரவிலும் அக்கம்பக்கத்தினர் அவன் பாடும் குசேல விருத்தத்தை கேட்டனர்.

————————————————-

நன்றி : The Penguin Book of Modern Indian Short Stories

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.