Author: பதாகை

அம்மா

மாலதி சிவராமகிருஷ்ணன்

அம்மா தன்னுடைய ஐம்பத்திரண்டாம் வயதில் முதன்முதலாக பங்களூருக்கு வந்தாள். அம்மாவுக்கு கன்னடத்தில் தெரிந்த ஒரே வார்த்தை ‘சொப்பு’. கீரையைக் குறிக்கும் சொல் அது. அதைத் தானே எப்படி சாமர்த்தியமாக கண்டு பிடித்தாள் என்பதை அம்மா பெருமிதத்தோடு சொல்லுவாள். பல நாட்களாக சொப்பு சொப்பு என்று கூவிக்கொண்டு போகிறவள் என்னதான் விற்கிறாள் என்ற ஆவலாதி ஒரு நாள் யதேச்சையாக பக்கத்து வீட்டு மாமி சொப்பு விற்கிறவளை அழைத்து வாங்கும் பொழுது அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது, அம்மாவுக்கு பரம சந்தோஷம்.

தனக்குத் தெரிந்த ஒரே கன்னட வார்த்தையை உபயோகப்படுத்துகிற குஷிக்காகவே அம்மா அடிக்கடி என்னிடம் “சொப்பு வாங்கலாமாடி?” என்பாள்.

கையைத் தட்டி “ சொப்பு !” என்று அழைத்துவிட்டு இங்க வா என்பதாக சைகை செய்வாள்.

அவள் வந்தவுடன் “ சொப்பு என்ன விலை? தண்டு நன்னா இளசா இருக்கா?” என்று அம்மா செந்தமிழில் ஆரம்பிக்க அவள் தன் சோழிப் பற்களைக்காட்டிச் சிரித்தபடி “நீவே நோடி தொகள்ரி அம்மா” என்று சொல்ல அம்மா க்ளீன் போல்ட்..

” என்னடி சொல்றா இவ?”

அப்படிப்பட்ட அம்மா நாங்கள் இருந்த மாடி போர்ஷனின் குறுகிய வராந்தாவில் நின்றுகொண்டு எதையோ கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள்.

நான் “என்ன அம்மா?” என்றதும் வாயில் விரலை வைத்துப் பேசாதே என்று சமிக்ஞை கொடுத்து எதிர் திசையில் பார் என்பதாக கை காட்டினாள்.

அங்கே எதிரே இருந்த காலி மனையில் பங்களூரின் ஜுலை மாதத்து காலையின் இதமான இள வெயிலில் பக்கத்துப் பள்ளிக்கூடத்தின் பிள்ளைகள் காலை வணக்கத்திற்குக் குழுமியிருந்தனர். கர்னாடக மாநில கீதத்தை அந்தக் குழந்தைகள் அனைவரும் பாடிக்கொண்டிருந்தனர்.

“ஜய பாரத ஜனனீய தனுஜாதே,
ஜயஹே கர்னாடக மாதே”

ரொம்ப அற்புதமான பாட்டு. அருமையான ராகத்தில் அமைந்திருந்தது.

பாரத அன்னையின் மகளாகிய கர்னாடகத்தின் பெருமையைப் பேசுகிற பாடல். கபிலர் ,பதஞ்சலி முதலானவர்களால் புகழப்பட்ட, கர்னாடகம்.சங்கரர், ராமானுஜர், வித்யாரண்யர், பசவேஸ்வரர், மத்வர் முதலானவர்கள் வசித்த காடுகளை உடைய கர்னாடகம், ஹொய்சல , தைலபர்களால் ஆளப்பட்ட கர்னாடகம் என்பதாக அந்தப் பாடல் போய்க்கொண்டிருக்கும்.

அம்மாவுக்கு அந்தப் பாடல் ஒரு வரி கூடப் புரியவில்லை. ஆனால் கண்கள் மின்ன அந்தப் பாடல் முடியும் வரை ரசித்துக்கேட்டவள்“எவ்வளவு நல்ல பாட்டு இல்ல! ரொம்ப நன்னா இருக்கு” என்றாள். கிட்டத்தட்ட முன்னூறு குழந்தைகள் ஒரே குரலாக அந்தப்பாடலை அந்த இளங்காலை வேளையில் பாடும் போது உள்ளுக்குள் ஏதோ ஓரிடத்தை அது மென்மையாக தொட்டுப் புல்லரிக்க வைத்தது.
அன்றிலிருந்து என் வீட்டில் இருந்த நாட்கள் வரைக்கும் அம்மா அந்தப் பாடலை ஒரு நாள் கூடத் தவற விட்டதில்லை.

அம்மா தன்னுடைய சின்ன வயதில் தன்னுடைய தாத்தா வீட்டில் , நாகப்பட்டினத்தில் தன் அத்தைகளுடன் வளர்ந்தாள்.அம்மா வசித்த குக்கிராமத்தை விட நாகப்பட்டினம் அந்த நாட்களிலேயே கொஞ்சம் டவுன் என்று கருதும்படியாக இருந்தது. டவுனில் கிடைக்கக்கூடிய கல்வி மற்றும் கலைக்கான வசதி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு அம்மா அங்கு இருந்தாள் என்று நினைக்கிறேன். தவிர அம்மாவின் கடைசி இரண்டு அத்தைகள் அம்மாவைக்காட்டிலும் நாலைந்து வருடங்களே மூத்தவர்கள் என்பதால் தனிக்குழந்தையாக இருந்த அம்மாவுக்கு சஹோதரிகளாவும் , தனிமையைப் போக்குகிறவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் ஊகிக்கிறேன் .

தன் நாகப்பட்டின நாட்களைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது அம்மா முக்கியமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவாள். அது அம்மாவின் சங்கீதப் பயிற்சி. சங்கீதத்திற்கும் சமையலுக்கும் பேர்போன அந்த காலத்து தஞ்சாவூர் ஜில்லாவாயிற்றே! எனவே அந்த வழக்கப்படி அம்மாவுக்கும் அவள் அத்தைகளுக்கும் சங்கீதம் கற்றுத் தந்தார்கள். அந்த காலத்தில் வானொலியில் சங்கீத கச்சேரிகள் அடிக்கடி வைப்பார்கள்.ரேடியோவைச் சுற்றிக் குழுமி இருந்து குடும்பத்தினர் கச்சேரிகளைக் கேட்பது ஒரு சடங்கு போலத் தவறாது நடை பெறும்.

பாடகர் பாட்டை ஆரம்பித்ததும் தாத்தா தன் வெண்கலக் குரலில் தன் பெண்களிடம் என்ன ராகம் என்று கேட்பது வழக்கம். தாத்தா அந்தக் காலத்தில் நாகப் பட்டினத்தில் பெரிய வக்கீலாக இருந்தவர். வீட்டிலும் அந்த கெத்து இருந்தது. குரலும் கொஞ்சம் அதட்டுகிற தோரணையிலேயே இருக்கும். அவர் வீட்டில் இருக்கிறார் என்றாலே எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பாள் அம்மா.
அவர் எந்த கேள்வி கேட்டாலும் பயமாகவே இருக்கிற குழந்தைகளுக்கு சங்கீதத்தைப் பற்றிக் கேட்டதும் கொஞ்சம் ஜுரம் அடிக்கறது போலவே இருக்கும். குரலே எழும்பாது. திக்கித் திணறி ஒருத்தியை ஒருத்தி இடித்து நீ சொல்லு நீ சொல்லு என்ற பாவனையில் திண்டாட அவர் “ம்….” என்று உறுமுவார். முக்காலே மூணு வீசம் தடவை குழந்தைகள் தரும் பதில் தப்பாக இருக்கும். அதுவும் அவர் யாரைக்கேட்கிறாரோ அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.. கடைசியில் அம்மாவைக் கேட்பார். ஒரு முறை கூடத் தவறாமல் அம்மாவின் விடை சரியாகவே இருக்கும். அதற்கு போனஸ் மாதிரி அடுத்த முறை பாடகர் ஆலாபனையை ஆரம்பித்த உடனேயே கேட்பார். அம்மாவின் விடை அடுத்த நொடியே! அம்மாவின் தாத்தா சொல்லுவாராம், “உங்களுக்கெல்லாம் பாட்டு சொல்லிக் கொடுத்து என்ன பிரயோஜனம் ? அவளைப் பாரு, ஆலாபனை ஆரமிச்ச உடனே டக் டக்னு கரெக்டா சொல்றா, நீங்களும் இருக்கேளே “

அனேகமாக அம்மாவுக்குக் கிடைத்த மிக சொற்பமான பாராட்டுதல்களில் அது முக்கியமானது, அதுவும் கண்டிப்பும் கறாருமான தாத்தாவிடமிருந்து என்பதால் அம்மா அதை வெகு நாட்கள் வரை, பெட்டியில் பாதுகாத்து வைத்திருக்கிற அபூர்வமான பட்டுப் புடவையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்வது போல, பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருந்தாள்.

அம்மாவைப் பெண் பார்க்க அப்பா தன் உறவினர் பட்டாளம் சகிதம் வந்த பொழுது, அப்பா பக்கத்து உறவினர் பெண்மணி ஒருவர் “பொண்ணுக்குப் பாடத் தெரியுமா? தெரிஞ்சா ஒரு பாட்டு சொல்லு குழந்தை!” என்றாளாம்.

உடனே கோரஸாக பல குரல்கள் “பரவாயில்லை! பரவாயில்லை!, அதெல்லாம் சிரமப் படுத்த வேண்டாம் “ ஏக காலத்தில் பாடச் சொன்ன மாமியைப் பார்த்து பல கண் உருட்டல்களும் , முறைத்தல்களும். அம்மாவின் பெரிய அத்தை அதைக் கவனித்துவிட்டு அவர்கள் போன பிறகு சொல்லி இடி இடியென்று சிரித்தாளாம்.

அம்மா அப்பாவைப் பார்த்துக்கொண்டே விளையாட்டாக சொல்லுவாள், “அப்பவே நா முழிச்சுண்டிருக்கணும், தப்பு பண்ணிட்டேன்”

ஆனால் அப்பா ஒன்றும் ஔரங்கசீப் அல்ல. அவருக்கு எம். கே. தியாகராஜபாகவதர் , டி. ஆர். மஹாலிங்கம் பாடல்களென்றால் உயிர். ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே, மன்மத லீலையை வென்றார் உண்டோ, இந்தப் பாடல்களை கண்ணை மூடிக்கொண்டு ரசித்துப் பாடுவார். ஓரளவு நன்றாகவே பாடுவார்.

அதுவும் ,’ மன்மத லீலையை…….’ பாட்டின் இடையில் வரும் “ரம்பா” என்கிற அழைப்பை எம்.கே.டி குரலில் காதலாக, “ஸ்வாமி!” என்கிற பதிலை டி. ஆர்.ராஜகுமாரி குரலில் குழைவாக சொல்லுவார்.
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு என்னும் இடத்தில் அந்த ணகரத்தை ழ் என்கிற ஒலி வருகிற மாதிரி ‘கழ்ண்டு’ என்று எம்.கே.டி பாடியிருப்பார், அது போலவே அப்பாவும் பாடுவார். அப்புறம் டி. ஆர். மஹாலிங்கத்தின் ”சம்போ மஹாதே….. வா, சாம்ப சதா …. ஆ சிவா…” பாடலைப் பாடும் பொழுது மஹாலிங்கத்தின் தொண்டையில் “மஹா. தே……..வா” என்கிற இடத்தில் உருண்ட ரவையில் அப்பாவின் தொண்டையில் நிச்சயம் பாதியாவது உருளும். ஆனால் அப்பாவுடைய ஆல் டைம் ஃபேவரைட் மஹாலிங்கத்தின் “காயாத கானகத்தே…” பாடல்தான்.

அப்படி இருந்தும் அவரோ அவர் வீட்டினர் யாருமோ அம்மாவின் பாடலை அவ்வளவாக ஏன் ஊக்குவிக்கவில்லை என சில சமயம் யோசிப்பேன்.

அப்புறம் கேட்டேன் “நீ பொண்ணு பாக்கும் போது பாடினயாம்மா? என்ன பாட்டு?”
“ம்.. பாடினேன்!”

“என்ன பாட்டு?”

“சீதம்ம மாயம்ம… பாட்டு பாடினேன்”

“ஏன் அந்த பாட்டு செலக்ட் பண்ணினே?”

“அது வசந்தா ராக பாட்டு! அதான்” என்றாள்.

அம்மா பெயர் வசந்தா. அதை அப்பா வீட்டுப் பேர் யாரும் கவனிக்கவில்லை என்பது எனக்கு ரொம்ப நாளைக்கு வருத்தமாக இருந்தது.

வி.சி. பி என்று அழைக்கப்பட்ட வீடியோ காசட் ப்ளேயர் புதிதாக வந்திருந்த காலகட்டம் அது. வீடியோ காசட் என்பது ஒரு தடிமனான புஸ்தக சைஸில் பெரிதாக இருக்கும்.( அதைப் பார்த்திராத தலைமுறைக்காக இந்த விளக்கம்) எங்கள் வீட்டுக்கு அருகில் அந்த காசட்டுகளை வாடகைக்கு கொடுக்கிற ஒரு காசட் லைப்ரரி இருந்தது. அந்த கடையை அப்படித்தான் அந்த காலத்தில் அழைத்தார்கள். என்னுடைய பத்து வயது பையன் போய் அந்த காசட்டுகளை எடுத்து வருவான். அந்த கடைக்காரர், அவனுக்கு உதவும் முகமாக, தான் நல்ல படங்கள் என்று கருதுகிற படங்களைத் தானே தேர்ந்தெடுத்துத் தருவார்.

அவர் தேர்ந்தெடுத்து தந்த பட வரிசையைக் கேட்டால் யாராயிருந்தாலும் அசந்து போய்விடுவார்கள். தேன் நிலவு, நீலகிரி எஃஸ்பிரஸ், குலேபகாவலி, வா அருகில் வா, சீறும் சிங்கங்கள், அமிதாப் பச்சன் நடித்த அஜூபா, ஹிட்ச்காக்கின் சைகோ……. அப்புறம் எஸ்.வி சேகரின் வண்ணக் கோலங்கள்……… இப்படி எந்த விதத்திலும் ஒருங்கிணைக்க முடியாத வினோதமான கலந்துகட்டியாக படங்களை அவர் தேர்ந்தெடுத்துத் தருவார். தன் கடைக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களின் ரசனையின் மீப்பெரு பொதுக் காரணியை வைத்து இந்தத் தேர்வை அவர் செய்தார் என்று நினைக்கிறேன்.

ஒருமுறை என் பையன் “ இந்த தடவை அவர் ஆட்டுக்கல்லுனு ஒரு படம் தந்தார்மா” என்றான்.

“என்ன? ஆட்டுக்கல்லுன்னு ஒரு படமா?, வினோதமா இருக்கே , கேள்விப்பட்டதில்லையே “ என்றேன்.

வண்ணதாசனின் ஒரு கதை நினைவுக்கு வந்தது. வாழ்க்கையில் ஏழ்மை தசையில் இருக்கிற ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையில் அந்த வீட்டுப் பெண் ஓட்டல்களுக்கு இட்லி, தோசை ,வடை இவற்றை அரைத்து தருகிற வேலை செய்வாள். அவர்கள் வீட்டில் காலையிலிருந்து இரவு வரை ஆட்டுக்கல் அரைக்கற கட கட சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். வண்ணதாசன் எழுதுவார்,”அந்த பெண்ணை கண்ணுக்குத் தெரியாத சங்கிலி ஒன்றால் அந்த ஆட்டுக்கல்லோடு கட்டியிருக்கிறார்களோ என்று தோன்றும்” என்று.

அந்த மாதிரியான கதையாக இருக்குமோ என்று யோசித்துக்கொண்டிருக்கையில், “இல்லம்மா! தப்பா சொல்லிட்டேன். அது பேரு ‘அந்த ஏழு ஆட்டுக்கல்லு’. ரொம்ப நல்லா இருக்கும்னு அந்த கடைக்கார அங்கிள் சொன்னார்மா” என்றான்.

ஏழு பெண்கள் வரிசையாக உட்கார்ந்து ஆட்டுக்கல்லில் அரைக்கிற சித்திரம் கொஞ்சம் விசித்ரமாகத் தோன்றியது.
பையில் இருந்து எடுத்தான் . அது ஒய்.ஜி. மஹேந்திரனின் “அந்த ஏழு ஆட்கள்” என்கிற மேடை நாடகத்தின் ஒளிப்பதிவு. கன்னடக் காரரான அந்தக் கடைக்காரர், ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தலைப்பை அப்படிப் படித்திருக்கிறார்.

அம்மாவும் இந்தப் படங்களில் சாமி படங்களை மட்டும் எங்களோடு உட்கார்ந்து பார்ப்பாள். அம்மா ஊருக்குப் போவதற்கு முதல் வாரம் . என் பையன் இரண்டு படங்கள் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.
த்ரிதேவ் என்ற படம். நஸ்ருதீன் ஷா வணிகப் பட ஹீரோவாக தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சித்த படம். அப்பறம் “ஹம் தோனோ” என்கிற தேவ் ஆனந்த் நடித்த படம் .

பக்கத்து அறையில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா “ஹம் தோனோ” படப் பாடல்களின் போது மட்டும் சட்டென்று எழுந்து ஹாலுக்கு வந்தாள்.

“இந்த படத்தோட பாட்டெல்லாம் ரொம்ப நன்னா இருக்கே! இந்த பாட்டை இன்னொரு தடவைப் போட முடியுமா?”என்றாள். அந்த பாடல் “மே ஜிந்தகி கா சாத் நிபாதா.. சலா கயா” அதுவும் “மனானா ஃபுஸூலுகா.. என்கிற வரியை மூன்று முறை இழைந்து இழைந்து பாடியதை மிகவும் ரசித்துக்
கேட்டாள்.

அந்தப் பாடலும் காட்சியும் உண்மையிலேயே அவ்வளவு அழகாக இருக்கும். இளங்குருத்து முகத்தில் இளமை பாலாக வழிகிற தேவ் ஆனந்த், உதட்டின் நுனியில் மிக லேசாகத் தொற்றிக்கொண்டிருக்கிற சிகரெட்டும்,இளமைக்கே உரிய, உல்லாசமும், சுதந்திரமும், அக்கறையின்மையும் கலந்த ஒரு நடையுமாக. அந்தப் பாடல் முழுக்க ஓர் இனிய இளமையான அசைவு அவர் உடலில் தொடந்துகொண்டே இருக்கும்.

கர்னாடக சங்கீதம் மட்டுமே கேட்டு வளர்ந்த அம்மாவுக்கு அந்தப் பாடல் பிடித்தது எனக்கு ஆச்சரியமென்றால்,. த்ரிதேவ் படப் பாடலான “கஸர்னே கியா ஹை இஷாரா”. பாடல் அம்மாவுக்குப் பிடித்தது என்பது என்னுடைய விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது . ஏனென்றால் ஹம் தோனோ பாடலில் முகமது ரஃபியின் குரலின் இனிமையும் , பட்டுப்போன்ற மென்மையும், அதன் நெஞ்சைத் தொட்டு அசைக்கிற ராகமும் அம்மாவை இளக்கியதையாவது புரிந்துகொள்ள முடிந்தது. “கஸர்னே கியா ஹை இஷாரா”. பாடல் மூன்று கதாநாயகிகளும் வில்லன்களின் கொட்டாரத்தில் ஆடிப்பாடுகிற மாதிரியான கொஞ்சம் களேபரமான பாடல் அது. அவர்களின் உடையும் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.

அதெல்லாவற்றையும் தாண்டி அந்தப் பாடலில் இருக்கிற இசையின் கூறை அம்மாவினால் உணர முடிந்தது, ரசிக்க முடிந்தது என்பதை நினைக்க நினைக்க ஏதோ ஒன்று புரிபடுகிற மாதிரியும் , விடுபடுகிற மாதிரியும் இருந்தது. ஏதோ ஒரு சின்ன கிராமத்தில்கட்டுபெட்டியான குடும்ப சூழலில் வளர்ந்து, அவ்வளவாக வெளியுலகையே பார்க்காத அம்மாவிடம் இருந்த ஒரு திறந்த மனப்பான்மையுடன் விஷயங்களை அணுகக்கூடிய அசாதாரணத் தன்மையை அப்பா மட்டுமல்ல, நாங்களும் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைக்க துக்கமாக இருந்தது.

அம்மா ஊருக்குப்போனவுடன் இன்னொன்றும் தோன்றியது,”அடடா! அம்மாவைப் பாடச் சொல்லிக் கேட்க வேண்டுமென்று எனக்கு எப்பவுமே ஒரு முறை கூடத் தோன்றவில்லையே”. அதற்கான சந்தர்ப்பம் , அப்புறம் வாய்க்கவில்லை.

 

 

போர்ஹெஸ்ஸின் நிலைக்கண்ணாடி

காலத்துகள்

போர்ஹெஸ் போல் நிலைக் கண்ணாடிகள் சாட்சியிருக்க என் வயது அதிகரிக்கவில்லை. பதின் பருவத்தில் ஆரம்பித்து, முப்பதுகளின் மத்தி வரை கண்ணாடி முன் எல்லோரையும் போல் நேரம் செலவழித்ததுண்டு, அவ்வளவே. செங்கல்பட்டில் வாழ்ந்த இருபது வருடங்களும் வீட்டிற்கே பொதுவாக இருந்த ஒரு கண்ணாடிதான். பின் கிழக்கு தாம்பரத்திற்கு வந்த போது என் அறைக்கு என்று தனியாக புதிய கண்ணாடி வாங்கி அதையே புதுச்சேரிக்கு குடி பெயர்ந்த பின்னும் உபயோகித்து வருகிறேன். ஆக, கிட்டத்தட்ட நாற்பது வருடங்களில் இரு கண்ணாடிகள்.

சவரம் செய்தபின், தலையிலும் முகத்திலும் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கும் வெண்மை குறித்து யோசிக்க ஆரம்பித்தவன், முப்பதுகளிலேயே  ஏன் கண்ணாடி முன் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்தேன் என்று யோசிக்க ஆரம்பித்து, பின் நாற்பதுக்கு பதில், முப்பத்தியந்திலேயே ‘ஒப்பனைகள் கலைந்து’, ‘அன்பின் பதட்டம்’ என் மேல் இறங்கி விட்டதோ என்று பயணித்து, போர்ஹெஸின் கண்ணாடிகள் குறித்து விசாரத்தில் இறங்கினேன்.    ஏன் இத்தகைய இலக்கிய/ இருத்தலியல்/ வாழ்வியல் விசாரத்தில் இறங்கினேன், என்று மற்றொரு விசாரத்தில் அடுத்து இறங்க முற்பட …..

‘ரீஸன்ட்டா போர்ஹெஸ் வாசிச்சியா’. முற்றுப்புள்ளியின்  அறைக்குள் நுழைந்த என்னிடம் அவர் கேட்டார். இரண்டு நாட்களாக இதற்கு மேல் தொடர முடியாமல், பெரியவர் முற்றுப்புள்ளியிடம் இது குறித்து பேசலாம் என்று எப்போதும் போல் முடிவு செய்து, அவருக்கு நான் எழுதியவரை அனுப்பி, சந்திக்க வருகிறேன் என்று கூறியிருந்தேன்.

‘எப்படி ஸார்..’

‘பர்ஸ்ட் வர்ட்டே அவர் பேர். ஸோ அவரை திருப்பி படிச்சிட்டிருக்கேன்னு கெஸ் பண்ண முடியாதான்ன, இதுக்கு ஷெர்லாக் வரணுமா’ என்றவர் தொடர்ந்து

‘உனக்கு இந்த பெடிஷ் ரொம்ப அதிகமா இருக்கு’ என்று கூறினார்.

‘எத ஸார் சொல்றீங்க’

‘யார படிச்சாலும், அவங்க பெயரை உன் ரைட்டிங்ல இன்க்லூட் பண்ண வேண்டியது. பொருந்துதா இல்லையானு யோசிக்கறதே கிடையாது’

‘இங்க பிட் ஆகுதே ஸார். போர்ஹெஸ் மெட்டா-பிக்க்ஷன் நிறைய எழுதினார், இந்த கதையும் அதே மாதிரி ..’

‘ஸோ, இந்த ரெண்டு பாராக்ராப்பை நீ பிக்க்ஷன்னு நம்பற’

‘ஆரம்பம் தான ஸார்.’

‘ஒண்ணுமே இல்லையேயா. ஷேவ் பண்றான், வழக்கம் போல செங்கல்பட்டு புராணம், நரைச்ச முடி, தேவதச்சன் கவிதையை வேற உள்ள கொண்டு வந்திருக்க. வாட் ஆர் யூ ட்ரையிங்?’

‘மிர்ரர்ஸ் வெச்சு கதை ஸார். டைட்டில், கண்ணாடிக்குள் இருப்பவன். மிர்ரர்லேந்து வேற முகம் கதைசொல்லியை எட்டிப் பார்க்குது, பேசுது,  அப்பறம் இந்த கதைசொல்லி, கண்ணாடிக்குள்ள  போயிடறான்,  அந்த முகம் வெளிய வருது. கதைசொல்லிக்கு கண்ணாடிக்குள் கிடைக்கும் அனுபவங்கள், இப்படி கதையை கொண்டு போகலாம்னு நினைக்கறேன் ஸார். பட் சரியா வருமான்னு தெரியல’

‘..’

‘ஸார்’

தலையசைத்தார்.

‘..’

‘நீ ஒரு டிபிகல், ‘பேசும் போது நல்லா பேசு, எழுதும் போது கோட்டை விட்டுடு’ கேஸ்யா. உன் ஐடியா ஓரளவுக்கு ஒகே, பட் உன்னால அதை எழுத்துல கொண்டு வர முடியும்னு எனக்கு தோணலை’

‘ஏன் ஸார்’

‘கண்ணாடிக்குள்ள போயிட்டான்னா, அதை வெச்சு பிலாசபி, மெட்டா-பிஸிக்ஸ் எல்லாம் கதைல வரலாம். ஸ்டோரிக்கு டெப்த், இன்டன்ஸிடி கிடைக்கும், அதே நேரம் மூளையையும், மனசையும் ஸ்டிமுலேட் பண்ணவும் முடியும். பட், போர்ஹெஸ் ஏற்கனவே எழுதியதை மாதிரியே இருக்கவும் கூடாது, உன்னுடைய தனித்துவம் தெரியணும். கேன் யூ டூ இட்’?

‘..’

மீண்டுமொருமுறை நான் எழுதியிருந்ததை படித்த முற்றுப்புள்ளி, ‘பர்ஸ்ட் டைம்மே தோணிச்சு, அதான் இப்ப திருப்பி படிச்சேன். இதே கதையை வேறெங்கேயோ நீயே எழுதியிருக்கல’ என்று கேட்டார்.

கிழத்திற்கு அசாத்திய ஞாபக சக்தி. ஆறேழே வருடங்களுக்கு முன் நான் எழுத ஆரம்பித்த போது செய்த குறுங்கதை முயற்சி தான் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் புனைவு.  நல்ல கரு, அதை இன்னும் விரிவாக எழுதலாம் என்ற எண்ணம். பெரியவர் அந்தச் சிறிய புனைவை ஞாபகம் வைத்திருக்க மாட்டார் என்று எண்ணியது தவறு.

‘ஆமா ஸார். நண்பர் தன் சைட்ல வெளியிட்டார்’

‘இப்ப எதுக்கு பழைய குப்பையை கிளர்ற’

கிழத்துக்கு நக்கல் அதிகம்.

‘எழுத ஆரம்பிச்ச டைம்ல வந்த ஐடியா ஸார், அப்ப ப்ளாஷ்  பிக்க்ஷன் மாதிரி தான் எழுத முடிஞ்சுது. வேஸ்ட் பண்ணிட்டேன்னு தோணுது, அதான் இப்ப அதை இன்னும்  நல்லா ..’

‘ஸோ, எழுத ஆரம்பிச்சதிலேந்து இப்ப நீ இம்ப்ரூவ் ஆயிட்டேன்னு நினைக்கற’

‘..’

‘ஒகே, தப்பித் தவறி இது பப்ளிஷ் ஆகுதுன்னு வெச்சுப்போம், உன் ப்ரெண்ட் தப்பா எடுத்துக்க மாட்டாரா’

‘இல்ல ஸார். அவர் எப்பவுமே என்னை ஊக்கப் படுத்துவார், ப்ளஸ் இந்த முறை மாற்றி எழுதப் போறேனே. தலைப்பையும் மாத்திட்டேன்’

மீண்டும் கிழத்தின் தலையசைப்பு.

‘ஆனா லிட்ரரி எதிக்ஸ் பிரச்சனை வருமோன்னு ..’

‘நிறுத்துயா…அந்தக் கதையை இங்க கொண்டு வந்துடாத.. இம்சையா உன்னோட, நாய் எலும்புத்துண்ட கடிச்சிட்டே இருக்கற மாதிரி, ஒரே கதைய திருப்பி திருப்பி…’

‘..’

‘அந்த ப்ரெண்ட்ட சொல்லணும். அன்னிக்கு இந்த குறுங்கதைய வெளியிடாம இருந்திருந்தா நீ நாவல், தொகுப்புனு போயிருக்க மாட்ட..’

பெரியவர் முணுமுணுத்தது என் காதில் விழுந்ததாக நான்  காட்டிக் கொள்ளவில்லை. விமர்சனங்களை, அவை தனி மனித தாக்குதலாக இருந்தாலும், கோபப்படாமல் எதிர்கொள்வதே இலக்கியவாதியின் பண்பு என்பது என் எண்ணம். தவிர கிழத்திடம் எனக்கு இந்த புனைவின் பொருட்டு ஒரு காரியம் ஆகவேண்டும்.

‘வேற எப்படி ஸார் இதை கொண்டுட்டுப் போகலாம், அத பத்தி உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் வந்தேன்’

‘உனக்கு சிறுகதைலாம் வராத விஷயம், இனிமே உனக்கு அந்த சூட்சமம் புரிய வாய்ப்பில்லை. பேசாம எப்பவும் போல கதை எழுதிய கதை பாணில குறுங்கதையா மாத்திடலாம். அது தான் உனக்கு சரி வரும்’

‘அதை எப்படி ..’

‘ஒரு பாராக்ராப் இருந்தா கூட இந்தக் கதையை முடிச்சுடலாம்’

‘..’

‘ஏதாவது சஜெஸ்ஷென்ஸ் தர முடியுமா ஸார்’

‘…’

எத்தனை நேரம் முற்றுப்புள்ளி அமைதியாக இருந்தார் என்று என்னால் சொல்ல முடியாது. ‘சில நிமிடங்கள் அமைதி’ என்று புனைவுகளில் வருவது எனக்கு நம்ப இயலாத ஒன்றாக உள்ளது, இருவர் மட்டுமே உள்ள இடத்தில், சில, பல நிமிடங்கள் பேசாமல் இருப்பார்களா என்ன? ‘சில நொடிகள் மௌனம்’ என்று சொல்வது மிகவும் குறைவான காலகட்டமாக தோன்றுகிறது. ஒரு நிமிடத்திற்கு குறைவாக, முற்றுப்புள்ளி சிந்தித்திருப்பார் என்று மட்டும் என்னால் கூற முடியும். தன் கை விரல்களை பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்து

‘ஓகே, இப்படி பினிஷ் பண்ணிடலாம்’ என்று கூறினார்.

சும்மா சும்மா நீ அப்பப்ப காத்து வாக்குல கேட்ட வார்த்தைகளை யூஸ் பண்ணாத, அப்பறம் போர்ஹெஸ்ஸோட புலியை ஏவி விட்டுடுவேன். ஒரு வேளை அது சிறுத்தையோ?- சரி ஏதோ ஒரு மிருகம், அதை விடு. உன்ன பத்தியே நினைச்சுக்கிட்டு இவ்வளவு புலம்பறியே, உன் மூஞ்சியையே இத்தன வருஷம் பாத்திட்டிருக்கற என் நிலைமையை பத்தி ஒரு செகண்ட்டாவது யோசிச்சிருக்கியா? செல்பிஷ் ஃபெல்லோ உன்னைப் பாத்துப் பாத்தே என் ரசம் எல்லாம் தீர்ந்து போய், கிழடு தட்டிடுச்சு  என்று பழிப்பு காட்டிவிட்டு நிலைக் கண்ணாடி முகத்தை திருப்பிக் கொண்டது.

குறிப்பு:

முற்றுப்புள்ளிக்கும் எனக்கும் இடையேயுள்ள உள்ள நட்பைக் குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

உள்ளுணர்வு- மலையாள மூலம் எம். டி. வாசுதேவன் நாயர் – தமிழாக்கம் தி. இரா. மீனா

மூலம் : எம்.டி.வாசுதேவன் நாயர்
ஆங்கிலம் : வி .அப்துல்லா
தமிழில் : தி.இரா.மீனா

அந்தச் செய்தி அங்கு வந்திருக்காது என்று நம்பியது தவறுதான். கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு அடிக்கடி தனியாக வரும் பழக்கம் உள்ளவள் அவள். இதில் யாரும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு வராந்தாவில் வந்து உட்கார்ந்தாள். எவ்வித முன்னறிவிப்புமின்றி, “சுதா குட்டி, நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா?” என்று அம்மா நேரடியாகவே கேட்டு விட்டாள்.

’நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள்?’ தன்னைச் சுற்றி வார்த்தைகளாலான சுவரை எப்படி அமைப்பது என்ற எண்ணத்தோடு அம்மாவை கோபமாகப் பார்த்தாள்.

கண்ணை மூடிக் கொண்டே அம்மா மென்மையாகச் சொன்னாள்: ’நீயும், பிரபாகரனும் பிரிகிறீர்கள்..’ ஏதாவது சங்கடமான விஷயங்கள் பேசும்போது கண்களை மூடிக் கொள்வது அம்மாவின் பழக்கம். நேரடியான பதிலைச் சொல்வதற்கு பதிலாக கடுமையாக இருப்பது சரியாக இருக்குமென்று அவள் முடிவு செய்தாள்.

“இந்த மாதிரியான செய்திகளை தந்தி பாணியில் உனக்குச் சொல்வது யார்?”

“நேற்று முன்தினம் நாராயணன் வீட்டிற்கு ஸ்ரீதேவி வந்திருந்தாளாம். தேவுவின் கணவன் சென்னையில்தான் இருக்கிறான், இல்லையா?”

முகப்பிலுள்ள படிக்கட்டில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த அம்மா பதிலளித்தாள். அவளுடைய தங்கையின் மாமியார்தான் இப்படி துண்டு துண்டுகளாக விஷயத்தை உறவினர்களிடம் சொல்லியிருக்கிறாள்.

’இந்தச் செய்தி விசாலத்திடமிருந்து வந்த நேற்றைய கடிதத்திலும் இருந்தது’

அக்காவிடமிருந்து சந்திரிக்கு செய்தி கிடைத்திருக்க வேண்டும், அவள் அதை அம்மாவிற்கு எழுதியிருக்க வேண்டும்.

சுதா முற்றத்தில் காலெடுத்து வைத்தாள். காலை பத்து மணியென்றாலும் வெயில் அனலாயிருந்தது. சுவற்றை ஒட்டியிருந்த நிழல் பகுதியில் நடந்தாள். வேகமாக நடந்த போது ரப்பர் செருப்புகள் பாதத்தில் தட்டி ஒலியெழுப்பின.

நிம்மதியாக இருக்க விரும்பி அம்மா அந்தப் பழைய வீட்டில் தனியாக இருக்கிறாள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு சுதா அடிக்கடி இங்கு வந்து விடுவாள். அவளைத் தொந்தரவு செய்ய அங்கு தொலைபேசி இல்லை. விருந்தினர்களை மகிழ்ச்சிப்படுத்த என்று அவள்தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தேவையில்லை. நடு இரவில் விடை பெறும் பிரபாகரனின் அலுவலக நண்பர்கள் போகும் வரை விழித்திருக்க வேண்டியதில்லை. அவர்களின் நகைச்சுவையை ரசிப்பது போல செயற்கையாக சிரிக்க வேண்டியதில்லை. ஆனால் இங்கு வருவதற்கு அவளுக்கு எப்போதாவதுதான் அனுமதி கிடைக்கும். அதுவும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டும்தான்.

எப்போதும் அம்மா கேட்கும் முதல் கேள்வி :’எப்போது நீ திரும்பிப் போக வேண்டும்?’ இந்த தடவை, அவள் கேட்கவில்லை.“பலரும் பல விதமாகப் பேசுகிறார்கள். உண்மையில் என்னதான் நடந்தது?” வராந்தாவில் திரும்பி நடந்தபடி கேட்டாள்.

சுதா பதில் சொல்லவில்லை.

’எனக்குத் தெரிந்த வரையில்…’ அம்மா நிறுத்தினாள்.

“அது உண்மைதான் அம்மா. நாங்கள் பிரிவதுதான் நல்லது.”தலையைக் குனிந்து, அம்மா படியை வெறித்தாள். சமையலறையில் உதவிக்கு இருக்கும் பெண் வந்து ஏதோ கேட்க அம்மா உள்ளே போய் விட்டாள்.

சுதா வங்கியில் பதினைந்து நாள் விடுப்பு எடுத்திருந்தாள். வங்கியிலிருக்கும் ஒரு சிலருக்கு என்ன நடக்கிறதென்பது லேசாகத் தெரிந்திருந்தது. காஷியர் நிர்மலா சீதாராமனிடம் மட்டும் அவள் வெளிப்படையாகப் பேசினாள். ஒய்.எம்.சி.ஏவில் அவளுக்கு ஒரு ரூம் பார்த்துக் கொடுத்தது நிர்மலாதான்.

அம்மா தனியாக வாழ விரும்புகிறாள் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். உறவினர்களோ அல்லது நண்பர்களோ தன்னை வந்து பார்ப்பதை அம்மா ஊக்குவிக்கவில்லை. குழந்தைகள் தன்னை வந்து பார்க்காவிட்டாலும் அது பற்றி அவள் குறைப்பட்டுக் கொண்டதேயில்லை. பதில் வந்தாலும், வராவிட்டாலும் தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் மாதத்திற்கு ஒரு தடவை கடிதமெழுதி விடுவாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருக்கும் யாராவது ஓர் இளம்பெண் அவளுக்கு உதவிக்கு கிடைப்பாள். கடந்த ஆண்டு சுதா வந்திருந்த போது தனக்கு உதவி செய்துவரும் பெண்ணுக்குத் திருமணமெனவும், அவளுக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தரப் போவதாகவும் சொன்னாள்.

“நீங்கள் மூன்று பேரும் உங்களால் முடிந்த பணத்தை குட்டி ராமனுக்கோ அல்லது எனக்கோ மணியார்டர் செய்து விடுங்கள்.”

விசாலமும், சந்திரியும் தலா முந்நூறு அனுப்ப, சுதா நானூறு தந்தாள். இருவரும் சம்பாதிப்பதாலும், அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததாலும் அவள் அதிகம் தரவேண்டியிருந்தது. அந்தப் பெண் போன பிறகு சமையலுக்கு உதவி செய்ய அவள் தங்கை வந்தாள்.

அம்மா தனியாக இருப்பது விசாலம் அக்காவிற்கு கவலையாக இருந்தது. திருவனந்தபுரத்தில் அவள் பெரிய வீட்டில் வேலைக்கார்களோடு இருந்தாள். அவர்கள் அனைவரும் கூடியிருந்த ஒரு சமயத்தில், “அம்மாவிற்கு உடல் நலமில்லையென்றாலும், பார்ப்பதற்கு பக்கத்தில் டாக்டர் யாருமில்லை” என்றாள்.

“எனக்கு எதுவும் வராது,” என்றாள் அம்மா.

சுவற்றிலிருந்த ஒரு பெரிய ஓட்டை வழியாக வாழைக் கொல்லையிலிருந்து ஒரு கருப்புக் கோழி தன் குஞ்சுகளோடு முற்றத்திற்கு வந்தது. முற்றத்தின் பக்கவாட்டிலுள்ள குப்பையைக் கிளறியபடி அவை நகர்ந்தன.

“காட்டுக் கோழி ,தினமும் இந்த நேரத்தில் வருகிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.” அம்மா சொல்வது கேட்டது.

சுதா அவற்றை வேடிக்கையாகப் பார்த்தாள். வீட்டிலுள்ள மனிதர்களைப் பார்த்ததும், அந்தத் தாய்க் கோழி பயப்பட்டது. நெருக்கமாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக சுதா அவற்றினருகே மெதுவாகப் போனாள்.

தாய்க்கோழி எச்சரிக்கையாக கொக்கரித்து விட்டு, குஞ்சுகள் பின்தொடர தோட்டத்திற்குள் போய்விட்டது.

அவர்கள் சாப்பிடும் போது அம்மா ஒன்றும் சொல்லவில்லை .

சாயங்காலம் தங்கை கணவனின் சகோதரர் ஸ்ரீதரன் அண்ணன் வந்தார். அந்தக் கிராமத்து பள்ளியின் தலைமையாசிரியர், முக்கியமான மனிதர். அவர் கேள்விப்பட்டிருந்த வதந்திகளின் அடிப்படையிலான குறுக்கு விசாரணைக்கு சுதா தன்னை தயார் படுத்திக் கொண்டாள். எதுவுமே நடக்காதது போல அவர் குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். கோடையின் உஷ்ணம் பற்றி புகார் செய்தாள்.

“எத்தனை நாட்கள் விடுமுறை சுதா குட்டி?”

“ஒரு வாரம்.”

“உனக்கு டீ போட்டுத்தர பால் இல்லை ஸ்ரீதரா” அம்மா குறுக்கிட்டாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்.”

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது சுதா சிறிதுநேரம் தன்னை மறந்திருந்தாள். ஆனால் ஸ்ரீ தரன் சென்னையின் கடும் வெயில்,ஜெயலலிதாவின் சொத்து,கருணாநிதியின் அதிகாரம் என்று பேச ஆரம்பித்தார்.

அவள் மௌனமாக இருந்நாள். அந்தப் பேச்சு முடிந்த பிறகு அவர் கிளம்பி விட்டார். அவள் திருமணப் பேச்சு வந்த போது இவருடைய ஜாதகமும் அதில் இருந்தாக கேள்விப் பட்டிருந்தாள்.

மாலையில் தட்டான் கூட்டம் ரீங்காரத்துடன் சுற்றி சுற்றி வந்தன. மண்ணிற்கு மேலாக அவை சுற்றிப் பறந்தால் அது மழைக்கான அறிகுறி என்று குழந்தையாயிருந்த காலத்தில், அவள் கேள்விப்பட்டிருந்தாள். மழை வர வேண்டுமென்று விரும்பினாள். சென்னையின் வைகாசி கோடைக்கு சிறிதும் குறைந்ததல்ல மீனம் மாதம். யார பணம் தருவது என்பது குறித்து இன்னமும் விவாதித்துக் கொண்டிருப்பதால் வீட்டில் மின்விசிறிகளே இல்லை.

“தெற்கறையில் படுத்துக் கொள்.அங்கு லேசாகவாவது காற்று வரும்.” இரவுச் சாப்பாட்டின் போது அம்மா சொன்னாள்.

“எங்கு வேண்டுமானாலும் என்னால் தூங்க முடியும்.”

அப்பா சில வருடங்களுக்கு முன்னால் வாங்கி வந்திருந்த ஒரு பழைய டேபிள் ஃபான் அம்மாவின் அறையிலிருந்தது. படிப்பதற்கு என்று எதுவும் சுதா தான் வரும்போது கொண்டு வரவில்லை. அம்மாவின் அறையில் அப்பாவின் புத்தகங்கள் பெரும் குவியலாக இருந்தன. அம்மா இரவில் சிறிதுநேரம் படிப்பாள். எந்தப் புதிய புத்தகங்களும் இல்லை. திறந்தபடியிருந்த ஹிமா கிரி வரதாவின் ’உலகின் வரலாறு’ என்ற புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தாள்.

அறையில் படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. உடை மாற்றிக் கொண்டு மணி பார்த்தாள். எட்டு நாற்பத்தி ஐந்து. பிரபாகரன் ரம்மி விளையாடிவிட்டு, பியர் குடித்து விட்டு வீட்டிற்குப் போய்க் கொண்டிருப்பான்.

“வேண்டுமென்றால் அந்த ஃபானை இங்கு கொண்டு வந்து வைத்துக் கொள். கொஞ்சம் சப்தம் வரும், ஆனாலும் வேலை செய்யும்.” சொல்லிக் கொண்டே அம்மா உள்ளே வந்தாள்

“இல்லை, வேண்டாம்.”

அம்மா சீக்கிரம் போக வேண்டும் என்ற பாவனையைக் காட்டி, தான் படுக்கப் போவது போல படுக்கையில் உட்கார்ந்தாள்.

“இன்னமும்..” அம்மா பேச விரும்பினாள்.

“சொல்.”

“ஐந்தாண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகு பிரிவதென்பது..”

அவள் எதுவும் பேசவில்லை.

“ஜனங்களுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?”

அம்மாவின் முகத்தை பார்க்க முடியாதபடி, அவள் லேசாகத் திரும்பிக் கொண்டாள்.

“யாருடனாவது போனில் பேச வேண்டுமென்றால் இங்கிருந்து எப்படிப் பேசமுடியும்?” பேசுவதற்கு வேறு விஷயம் கிடைத்ததைப் போல அவள் கேட்டாள்.

“பார்மசியின் அருகே இப்போது ஒரு புதிய பூத் வந்திருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் பேச முடியும்.”

மீண்டும் அவளுக்குள் வார்த்தை தடுமாற்றம்.

“நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?”

“நான் அதுபற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“நான் வேண்டுமானால் பிரபாகரனிடம் பேசட்டுமா?”

“வேண்டாம்,வேண்டாம்,” சுதா அவசரமாகச் சொன்னாள்.

அம்மா இரக்கமாகப் பார்த்தாள். “சமாதானமாகப் பேசத் தேவையில்லை அம்மா “ என்று சுதா சொன்னாள்.

அம்மா போய் விட்டாள்.

அம்மா இதுபற்றி மீண்டும் பேசமாட்டாள் என்று சுதாவிற்குத் தெரியும். மௌனமாக ஒப்புதல் தெரிவித்தல் அம்மாவினுடைய இயற்கை என்று அவளுக்குத் தெரியும். பாரிச வாயுவால் தாக்கப்பட்ட அப்பா ஒன்றரை ஆண்டுகள் படுத்த படுக்கையாகவே இருந்தார். அந்த நேரத்தில் தான் பட்ட கஷ்டத்தை அம்மா ஒரு போதும் யாரிடமும் சொல்லிக் கொண்டதில்லை. அப்பாவினுடைய மொத்த வருமானத்தையும் அவருடைய சித்தியின் மகள் பறித்துக் கொண்டதை மற்றவர்கள் விவாதித்த போதும், அம்மா அதுபற்றிப் பேசியதேயில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

“பெரியம்மா உன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாள் ” அடுத்த நாள் காலையில் அம்மா சொன்னாள்.

சுதா தயங்கினாள்.

’பால்காரி ஜானு பெரியம்மாவின் பக்கத்து வீட்டுக்காரி, செய்தியை அவள்தான் சொல்லியிருக்கிறாள்.’

“சரி, நான் போய்ப் பார்க்கிறேன்.”

“போன தடவையே போகிறேன் என்று சொன்னாய்,ஆனால் போகவில்லை.”

“சரி, நான் போகிறேன்.”

“அவளுக்கு எண்பத்தி நான்கு வயதாகி விட்டது.எவ்வளவு நாள் இருப்பாள் என்று யாருக்குத் தெரியும். பார்வை குறையும் வந்துவிட்டது. ஆனால் வேறு ஒரு பிரச்னையுமில்லை.” பெரியம்மா தன் தங்கையைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவாள். விசாலம் அக்காவின் தலைமுடியை விதவிதமாக அலங்கரிப்பாள். அந்தியில் மூன்று குழந்தைகளையும் சத்தமாக சுலோகங்கள் சொல்ல வைப்பாள். பெரியம்மாவிற்குத் தன் படுக்கையைக் கொடுத்து விட்டு பாட்டி தான் தரையில் படுத்துக் கொள்வாள். குழந்தைகளுக்கு கதை சொல்ல பெரியம்மாவிற்குப் பிடிக்கும். விசாலம் அக்கா தவிர்க்கப் பார்ப்பாள். சந்திரி தூங்கி விடுவாள். பெரியம்மா சுதா குட்டியை பிடித்துக் கொண்டு விடுவாள். பாட்டி அரைத் தூக்கத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பதாக சுதா நினைப்பாள்.

குளத்தில் குளிக்கும் போது சித்தி கோமனின் நீண்ட முடியைப் பிடித்து இழுத்த கதை, கோவலன் கண்ணகி கதை என்று எல்லாமும் சொல்வாள். அவள் மதுரைக்குப் போயிருந்த போது பெரியம்மா சொன்ன கதையை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.கண்ணகி எப்படித் தன் மார்பைத் திருகி எறிந்து நகரத்திற்கு தீ வைத்தாள் என்பதைத் தான் நேரில் நின்று கவனித்ததைப் போல விளக்குவாள். பெரியம்மாவிற்கு அவள் ஏதாவது பரிசு வாங்கித் தர விரும்பினாள். கடைக்குக் கிளம்பும்போது பிரபாகரனுடன் சண்டை வர, ரயிலுக்கு வரும் நேரம் வரை கோபமாகப் படுக்கையிலேயே கிடந்தாள்.

அவள் பெரியம்மாவை கடைசியாகப் பார்த்தது தன் கல்யாணத்திற்கு முதல் நாள் ஆசீர்வாதம் வாங்கப் போன போதுதான். அது நடந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. பாட்டி உயிரோடிருந்த நாளிலும் அவளுக்கு பெரியம்மாவைத்தான் பிடிக்கும். அந்த ஐந்தாண்டுகளில் ஏழு தடவை அவள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். ஆமாம்.ஏழு. இரண்டு முறை அவளோடு பிரபாகரன் இருந்திருக்கிறான். பெரியம்மா ஒவ்வொரு முறையும் அவளைப் பற்றிக் கேட்பாள், இரண்டு, மூன்று பர்லாங் தூரத்தில்தான் பெரியம்மா இருந்தாளென்றாலும், ஒவ்வொரு முறையும் அவளால் ஏதாவது ஒரு காரணத்திற்காக போக முடியாமல் போனது.

அன்றும் காட்டுக் கோழி தன் குஞ்சுகளோடு வந்தது. முதல் நாள் பயப்பட்டது போல அது பயப்படுவதாகத் தெரியவில்லை. அவள் சிறிது நெருக்கமாகப் போனாள். ஆமாம், தாயும் , குஞ்சுகளும் நன்றாக இருந்தன. சூரியனின் கதிர்கள், அவற்றின் சிறகுகளில் பட்டு, மண்ணில் பரவுவதை கவனித்தாள்.

“யாரோ வந்திருக்கிறார்கள்..” குரலைக் கேட்டவுடன் குஞ்சுகள் கலைந்தன.

ஸ்ரீதேவி அம்மாவும்,அவளுடைய தங்கையும் முற்றத்தில் நின்றிருந்தனர். அவர்களை உட்காரச் சொல்லி விட்டு அம்மா, ஜானுவிடம் டீ தயாரிக்கச் சொன்னாள். அம்மா சுதாவை சிறிது விசனமாகப் பார்த்து விட்டு உள்ளே போனாள். ’நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறாய் ’என்பதாக அந்தப் பார்வை சொன்னது.

“உட்கார்ந்து கொள் சுதா. நான் வெளிப்படையாகப் பேசினால் ,அதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.”

“சொல்லுங்கள்.”

“ஏன் சுற்றி வளைக்க வேண்டும்?நான் கேள்விப்பட்டது உண்மையென்றால், விஷயம் மோசமாகி விட்டது என்றுதான் அர்த்தம்.”

“மோசமாகி விட்டதுதான், ஆனால் வேறு வழியில்லை” சுதா சிரிக்க முயற்சித்தபடி அமைதியாகச் சொன்னாள்.

ஸ்ரீதேவி அம்மாவின் முகம் கருமையானது தன் தங்கையை அர்த்தத்துடன் பார்க்க,அவள் அக்குறிப்பைப் புரிந்து கொண்டவளாக “நாராயணன் குட்டி எழுதியிருந்தது சரிதான். குடும்பத்திற்கு அவமானம் தரும் விஷயம்.”

சுதா அமைதியாக நின்றாள்.

“ஐந்தாண்டுகள் வாழ்ந்து விட்டு ,முடிவு கட்டுவதென்பது…”

மேலும் பேசு என்பது போல தேவி அம்மா தங்கையைப் பார்த்தாள்.

“கண்டிப்பாக அவன் பக்கத்தில் தவறுகள் இருக்கின்றன.ஆனால் அவற்றை நீ பொறுத்துப் போக வேண்டும். திருமணத்தின் அர்த்தம் அதுதான். உன் அம்மா சகித்துக் கொண்ட விஷயங்கள்.”

சுதா சிரிக்க முயற்சித்தாள். அவள் முதலில் சொல்ல விரும்பியது : “தவறு என்னுடையதுதான் அம்மா, பிரபாகரனுடையதல்ல.” ஆனால் எதையும் சொல்ல வேண்டாமென்று அவள் முடிவு செய்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தனர். தனக்கு விருப்பமில்லாதவற்றை கேட்க விரும்பாத போது தன் காதுகளை அடைத்துக் கொள்ளும் கலை அவளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாகவே வந்திருந்தது. நாவல்களில் மறந்து போன பெயர்கள்,பாத்திரங்கள்,இடங்கள் என்று ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொள்ளத் தொடங்கும் போது, குரல்கள் தொலைவில் கேட்பதாகிவிடும்.

“நான் சொன்னதெல்லாம் பிரயோஜனமில்லாதது என்று நினைக்கிறாயா?” என்று புறப்படும் போது தேவி அம்மா கேட்டார்.

“இல்லை.”அவள் சிரித்தாள்.

“நான் சொன்னதில் சிறிது உண்மை இருக்கிறது என்று தெரிகிறதல்லவா?”

“ஆமாம்.”

அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.”நீ என்ன முடிவு செய்திருக்கிறாய்?”

“நான் யோசிக்க வேண்டும்.” சிரித்தபடி சொன்னாள்.

தான் எடுத்துக் கொண்ட வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டதென்ற திருப்தியில் தேவி அம்மா அகலமாக வாயைத் திறந்து, சிரித்தபடி புறப்பட்டுப் போனாள்.

“பெரியம்மாவைப் பார்க்க எப்போது போகப் போகிறாய்?” அம்மா கேட்டாள்.

“நான் போகிறேன்.”

தன் பங்கு அறிவுரையைச் சொல்ல பெரியம்மாவும் தயாராக இருப்பாள். அவளோடு பள்ளியில் படித்த சுமதி தன் மூன்று வயது பெண்ணோடு மதியம் வந்தாள். தச்சர்கள் காலனியில் இடத்தில் அவள் தினமும் சுதாவுக்காக காத்திருப்பாள். அவள் மூக்கிலிருந்த மச்சம் இப்போது பெரிதாகி விட்டிருந்தது. பத்தாவது முடிக்கும் முன்பே அவளுக்கு திருமணமாகி விட்டது.

“எப்படியிருக்கிறாய் சுமதி?”

“உம்.போய்க் கொண்டிருக்கிறது.”

வயலட்டும், சிவப்பும் கலந்த நவீன சரிகை புடவை அணிந்திருந்தாள். துபாயில் வேலை பார்க்கும் அவள் கணவன் வாங்கி வந்திருக்க வேண்டும். இரண்டு வருடங்களுகொரு முறை இரண்டு மாத விடு
முறையில் வருவான். சுமதியின் கழுத்திலும்,கைகளிலும் தங்கம் குவிந்து கிடந்தது.

“நீ வந்திருப்பதாக கேள்விப்பட்டேன்.கொஞ்ச நாட்களிருப்பாயா?”

“ஆமாம்.சில நாட்கள்.”

“அடுத்த திங்களன்று வீடு கிரகப்பிரவேசம் இருக்கிறது. நீ கட்டாயம் வரவேண்டும் சுதா குட்டி.”

அந்தக் குழந்தை தாயின் புடவையிலுள்ள பூக்களைத் தடவிக் கொண்டு இருந்தது. அதன் தலையை நீவியபடி“ இவளுடைய பெயரை மறந்து விட்டேன்,” என்றாள் சுதா.

“கார்த்திகா.”

குழந்தையின் கையைப் பிடித்தபடி சுதா அதை தன்னருகே அழைக்க, அது தாயின் புடவையோடு ஒட்டிக் கொண்டது.

“ஏதோ நடந்ததென்று கேள்விப்பட்டேன்.”சுமதி நேரடியாகப் பேசினாள்.

“ஓ, நீயும் கேள்விப்பட்டாயா…”

“சங்கரன் அண்ணனின் மனைவி சொன்னாள.நான் நம்பவில்லை. அது உண்மையா சுதா குட்டி?”

“ஆமாம்,ஒரு வகையில்.”

சுமதியின் கண்கள் விரிந்தன. ”என்னை விட அதிகம் படித்த, அறிவான பெண்ணுக்கு நான் அறிவுரை சொல்கிறேன் என்று நினைக்காதே. எந்த வகையில் பார்த்தாலும் சேர்ந்து வாழ்வதுதான் சரியாக இருக்கும்.”

சுதாவின் மிக அருகே வந்து மெதுவாகச் சொன்னாள்.

“சரி.யோசிக்கிறேன்.”

“இப்போது குழந்தை வேண்டாம் என்று யோசித்தது தவறு.ஆணோ, பெண்ணோ எதவாக இருந்தாலும் சரி, இந்த மாதிரியான கெட்ட சிந்தனைகள் வந்திருக்காது.”

சுதா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள். கெட்ட சிந்தனைகள்’ மனதில் குறித்துக் கொண்டாள். சுமதி போய்விட்டாள்.

பால் கொண்டு வந்த ஜானு, பெரியம்மா மீண்டும் சுதாவை விசாரித்ததாகச் சொன்னாள்.

“நீ போய் பார்த்து வருவது நல்லது.”அம்மா சொன்னாள்.

“நாளை போகிறேன்.”

“அவளுக்குப் பணம் தேவைப்படாது. ஆனால் ஏதாவது கொடு.விசாலம் போன போது ஐம்பது ரூபாய் கொடுத்தாள்.அதை போகிறவர்கள் வருகிறவர்களிடமெல்லாம் பத்து நாள் சொல்லிக் கொண்டிருந்தாளாம்.”

அம்மா சிரித்தாள். அவள் வந்ததிலிருந்து அம்மா முதல் முறையாக இப்போதுதான் சிரித்தாள். முகத்தில் அந்த இருள் விலகியிருந்தது. விசாலம் அக்காவுடன் தனக்குப் போட்டியில்லை என்று அவள் சொன்னால் என்ன ஆகும்?

திங்களன்று புறப்பட்டு விட முடிவு செய்தாள். இரண்டு வாரம் முடியும் வரை அவள் காத்திருக்கப் போவதில்லை. இந்த மூன்று நாட்களிலேயே அவள் போதுமான மனத்துன்பத்தை அடைந்து விட்டாள். ஹைதராபாத்தை அழைக்க வேண்டுமா. தொலைபேசி எண்ணை நோட்டில் குறித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அலுவலக எண் மனதில் இருந்தது.

அவளுக்கு டிக்கெட் எடுக்க யாருமில்லை. பெண்கள் வண்டியில் அவள் ஏறிக் கொள்ளலாம். அது ஒரு ராத்திரிப் பயணம்தான்.

கிராமத்திலிருந்து கூட அழைக்கலாம் என்று அவன் சொல்லியிருந்தான். ‘முடிந்தால்’ என்பதையும் சேர்த்துச் சொன்னான்.

காலை உணவிற்குப் பிறகு “பெரியம்மாவைப் பார்த்து விட்டு வருகிறேன்.” சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

“ஜானுவையும் அழைத்துக் கொண்டு போ.”

“இல்லை.வேண்டாம்.”

அவள் முதலில் தச்சர் காலனியின் புது வீட்டிற்குப் போனாள். சுமதி மகிழ்ச்சியில் என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றாள்.இரண்டு பேர் ஜன்னல்களுக்கு வார்னிஷ் அடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.

“இரண்டு படுக்கை அறைகளிலுமே இணைப்புக் குளியலறைகள் உண்டு.” சுமதி பெருமையாகச் சொன்னாள். ஏதாவது குடிக்கச் சொல்லி வற்புறுத்தியபோது சுதா மறுத்தாள்.

“ஜூலையில் வருவதாக அவர் எழுதியிருக்கிறார்.”

“உன்னையும் துபாய்க்கு கூட்டிக் கொண்டு போகச் சொல். நீயும் அந்த இடத்தைப் பார்க்கலாம்.”

“அது நடக்காது.பெரிய சம்பாத்தியம் உள்ளவர்களுக்குதான் அது சாத்தியபபடும் என்று சொல்கிறார்.” மொத்தத்தில் சுமதி மகிழ்ச்சியாக இருந்தாள்.

“நான் கிளம்ப வேண்டும் சுமதி. பெரியம்மாவைப் பார்க்க வேண்டும்.”

“நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்.”

“நிச்சயமாக.” விடை பெற்றுக் கொண்டாள்.

மூங்கில் காட்டைக் கடந்த போது, ஒடை வற்றிப் போயிருந்ததைப் பார்த்தாள்.இரண்டு பக்கத்திலும் முட்புதர் மண்டிக் கிடந்தது. வருடம் முழுவதும் தாராளமாக தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் பகுதி அது. மழைக் காலத்தில், தண்ணீர் மிக அதிகமாகி கால்வாய்க்குக் கீழே ஒரு சிறு ஆறு போல இருக்கும்.

அந்த வீடு பாட்டனாரின் காலத்தில் கட்டப்பட்டது. கேட் ஹவுசிற்கு பதிலாக இப்போது மூங்கில் தடுப்பு வாசல் இருக்கிறது.சுதா முன் முற்றத்திற்குப் போனாள். அங்கு யாருமில்லை. மூங்கில் பாயில் மிளகு காய வைக்கப்பட்டிருந்தது.சிறிது நேரம் அங்கு தயக்கமாக நின்றாள். தங்கம் அக்கா வராந்தா பக்கம் வந்தாள்.

“யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள்! இன்று காலைதான் பாட்டியைப் பார்க்காமலே நீங்கள் ஊருக்குப் போய் விடுவீர்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.”

அங்கிருந்த நாற்காலியில் அவளை உட்காரச் சொல்லி விட்டு தன் குடும்பக் கதையைச் சொன்னாள். அவளுடைய இரண்டு மகன்களும், தேர்விற்காக கடந்த வாரம் தான் விடுதிக்குப் போனார்கள் என்றும்,
மகள் ஒன்பதாம் வகுப்பு படிப்பதாகவும், தாயின் மரணத்திற்குப் பின்பு தங்கைகள் சொத்தைப் பிரித்து கிராமத்தில் தங்களுக்கு வீடுகள் கட்டிக் கொண்டு தங்கி விட்டதாகவும் கதை நீண்டது.

“இந்தச் சிதைந்த வீட்டை என்னிடம் தள்ளி விட்டார்கள்.எனக்கென்று பேச யாருமில்லை.” தன் கணவனின் இறப்பைப் பற்றிப் பேசிய போது குரல் நடுங்கியது. கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“பெரியம்மா எங்கே?”

“வடக்கறையில் இருக்கிறார்கள். பார்வை குறைந்து விட்டது. யார் கையையும் பிடித்துக் கொண்டு நடப்பது பிடிக்கவில்லை. எப்போது எங்கே விழுவார்களோ யாருக்குத் தெரியும்.”

“எனக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம்.”பெரியம்மாவின் குரல் கதவருகே கேட்டது.

பெரியம்மா தன் இரண்டு கைகளையும் கதவுச் சட்டத்தில் வைத்து, கால்களை மிகச் சரியாக வராந்தாவில் வைத்தாள். சுதா மிக வேகமாக அவளருகில் போனாள். பெரியம்மா நிமிர்ந்து நின்றாள். அவளுடைய கஞ்சிப் பதமான ஆடைகள் வெண்ணிறமாக ஒளிர்ந்தன. இளம்பருவத்தில் அவள் பார்த்த அந்த பிரகாசம் சிறிதும் குறையாமல் அப்படியே இருந்தது. கூந்தல் முடிச்சு இன்னமும் கனமான முடிச்சாகவே இருந்தது. சித்தியின் கதையை அவள் எப்போது கேட்டாலும், பெரியம்மா தன் விரிந்த கூந்தலுக்குள் கொமப்பனை ஒளித்து வைத்திருந்ததாக கற்பனை செய்து கொள்வாள்.

தங்கம் அக்கா நாற்காலியை இழுக்க முயன்ற போது, “இல்லை, நான் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன். உட்கார் சுதா குட்டி.”என்றாள்.

பெரியம்மாவின் கைகள் அவள் கரத்தை நோக்கி நீண்டிருந்தன. அவள் பெரியம்மாவின் அருகிலுள்ள மரக்கட்டையில் உட்கார்ந்தாள்.

“நீ குண்டாகியிருக்கிறாய் சுதா குட்டி!”

சுதா தன் தோள்பட்டையைப் பார்த்துக் கொண்டாள்.ஆமாம்,அவள் பருத்து இருக்கிறாள்.

“என்னை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்கும் போது லேசாக மூச்சுத் திணறினாய். உன்னைப் பார்க்காமலே உன் சுவாசத்தை வைத்தே என்னால் அனுமானிக்க முடியும்.”

பெரியம்மா சிரித்தாள்.அவள் கண்களில் உயிரில்லையெனினும் முகத்தில் சுருக்கமேயில்லை. கழுத்தில் மட்டும் வயது தெரிந்தது.

“தங்கம்,கொஞ்சம் டீ போடு. பலாச் சக்கை இருந்தால் சிறிது வறுத்து வை.”

“இல்லை.எனக்கு எதுவும் வேண்டாம். அரை கப் டீ போதும்.”

தங்கம் சமையலறைக்குப் போகும் வரை பெரியம்மா காத்திருந்தாள்.

“என்ன முடிவு செய்திருக்கிறாய் பெண்ணே?” பெரியம்மாவின் கேள்வி திடீரென வந்தது. சுதா குழம்பினாள்.

“கவலைப்படாதே. உன்னை கோபிக்கவோ,குற்றம் சொல்லவோ நான் வரச் சொல்லவில்லை.நாம் சந்தித்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டன, இல்லையா?”

சுதா நிம்மதியாக உணர்ந்தாள்.

“நான் எதைப் பார்க்கிறேனோ அதைப் பற்றிப் பேசும் போது இவர்கள் எல்லாம் சிரிக்கிறார்கள். இரண்டு கண்களிலும் காட்ராக்ட் பாதித்திருக்கிறவளுக்கு என்ன தெரியும் என்று நினைக்கிறார்கள். நான் பார்க்குமளவிற்குஅவர்களால் பார்க்க முடியுமா?” தங்கம் கேட்டுக் கொள்ளட்டும் என்பது போல சிறிது சத்தமாகப் பேசினாள்.

“என்ன முடிவு செய்திருக்கிறாய்?” குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.

சுதாவிற்கு சோர்வேற்பட்டது. மூச்சு வேகமானது.

“அவனோடு உனக்குப் போதுமென்று தோன்றி விட்டால் அதற்கு முடிவு கட்டி விடவேண்டும். திருமணம் என்பது அந்தரங்கமான விஷயம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைச் சமாதானப்படுத்துவதற்காக தேரை இழுப்பது போல நடிப்பதில் அர்த்தமில்லை.”

சுதா பெருமூச்சு விட்டு,கால்களை நகர்த்தி உட்கார்ந்தாள். பெரியம்மாவின் தலை அவளருகே வந்தது.

“எனது முதல் கணவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க முடியாது.”

“அம்மா பார்த்திருக்கிறாள்.அவர் பாட்டு வாத்தியார்,இல்லையா,பாகவதர் ?”

“அதுதான் சிக்கல்.அவர் பாட்டு வகுப்புகள் நடந்த இடம் பிஸாரதியின் வீடு. எங்கள் வீட்டில் சாப்பாடு. அவர் நல்ல பாடகர். காதில் சிவப்பு கடுக்கன்களும், நெற்றியில் சந்தனப் பொட்டும் வைத்திருப்பார்.எனக்கு அவை மிகவும் பிடித்திருந்தன.”

பெரியம்மா அவள் தலையைக் கோதினாள்.

“ஒரு வருடமாகுமுன்பே அவர் பிரிந்து போய்விட்டார்.”

“ஆமாம், அம்மா சொல்லியிருக்கிறாள்.”

“அவர் விருப்ப்பட்டு போகவில்லை .நான்தான் போகச் சொன்னேன்.”

பெரியம்மா முணுமுணுத்தாள். அவள் சிரித்த போதும் கண்கள் தொலைவை வெறித்திருந்தன.

“எனக்குத் தருவதற்கென்று அவரிடம் எதுவுமில்லை. நான் அதைக் கடந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு பெண்ணைப் போலப் பேசுவார். ஆண் என்றால் உயிரோட்டமாகவும், துடிப்பாகவும் இருக்க வேண்டாமா? நம் உறவை முறித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டேன்.”

பெரியம்மாவின் முதல் கல்யாணம் பற்றி சுதா கேள்விப்பட்டிருந்தாலும், அத்தனை விவரங்கள் தெரியாது.

பிறகுதான் தாத்தா வந்தார்.அவர் உப்பு துறையில் வேலை பார்த்தவர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவரும்,மூன்று குழந்தைகளும் இறந்து போய் விட்டார்கள்.பெரியம்மா தான் இன்னும் இருக்கிறாள்.

“நீ பெரியப்பாவைப் பார்த்திருக்கிறாயல்லவா?அவர் அழகானவரில்லை.”

“நான் குழந்தையாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.”

“இந்தப் பகுதியில் யாரும் அவரைப் போல இல்லை. விழாக்கால ஊர்வலங்களின் போது முதல் ஆளாய் நிற்பார். யானைக்கு மதம் பிடித்தால் ,மாதவன் நாயர் வேண்டும். பதினெட்டு வகையான வண்ண
பட்டாசு வகைகளை அவரால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும்!”

தங்கம் அக்கா டீ கொண்டு வந்தாள். அவள் அங்கிருக்கும் வரை பெரியம்மா கடுமையான பாவனையோடிருந்தாள். அவள் போன பிறகு சிரித்தாள்.

“வெளிப்பார்வையில் அவர் பார்ப்பவர்களுக்கு கடுமையான பாம்பாகத் தெரிவார் .பொறுமையிழந்து, சண்டை போட்டு கோபித்துக் கொள்வார். எவ்வளவு மென்மையானவர் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். குளிர் என்று நான் சொல்லி விட்டால் போதும் தவித்து விடுவார்.”

பெரியம்மாவின் சிரிப்புச் சத்தம் அதிகமானது.

தன் பிரச்னைகளை ஒதுக்கி வைத்து விட சுதா முயன்றாள். சிறு வயதில் தங்களுக்குக் கதைகள் சொல்லும்போது எப்படி மகிழ்ச்சியாகப் பேசுவாளோ ,அப்படியே இப்போதும் பேசினாள்.

“கவலைகள் இல்லாமலிருந்தாலும் கஷ்டம்தான். குட்டிராயனோடு…”

“என்ன ?”

“கிளர்ச்சி… ஆணைத் தேடும் தவிப்பு. உன்னை அடக்கிக் கொள் என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் ,எந்தப் பயனுமில்லை, உனக்குப் புரிகிறதா?”

அந்த வாக்கியத்தை முடிக்காமலே பெரியம்மா வாயை அகலமாக்கிக் கொண்டு சிரித்தாள். அவள் பற்கள் முழுவதும் சீராக இருந்ததை சுதாவால் உணர முடிந்தது.

“எனக்கு அப்போது உன் வயதுதான்”

“அவர் இன்னமும் உயிரோடிருக்கிறாரா பெரியம்மா?”

பெரியம்மாவின் முகம் இருண்டது.

“இல்லை.எல்லோரும் போய் விட்டார்கள். நான் மட்டும் தான் இருக்கிறேன். அழைப்பு வரும் வரை நான் காத்திருக்க வேண்டும். யாரும் யாரையும் சாகடித்து விட முடியாது…”

பெரியம்மா எதையோ விட்டுவிட வேண்டுமென்பது போல தலையை ஆட்டினாள். சுவற்றில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

“யார் அந்த மனிதர். சுதா குட்டி?”

“என்ன ?”சுதா மிரண்டு போனாள்.

“நீ யாரையோ விரும்புகிறாய். அவனோடுதான் வாழ விரும்புகிறாய். முடிவும் எடுத்துவிட்டாய். இதுதான் நடந்தது இல்லையா?”

“உங்களிடம் யார் சொன்னது?”

“யாரும் என்னிடம் சொல்ல வேண்டாம்.யார் அது பெண்ணே?’

தனது சங்கடத்தை மறைத்துக் கொள்ள அவள் முயன்றாள்.

“உன்னுடன் வேலை பார்ப்பவரா?”

“இல்லை.”

பெரியம்மாவிடம் அவளால் விளக்கமாகச் சொல்ல முடியாது. மானேஜர் ஜனார்தன்ராவுக்கு தரப்பட்ட விடைபெறு விழாவில் அவனைச் சந்தித்தாள். ராவ் கஸல் பாடகர். விழாவிற்கு வந்த அனைவரும் குடித்திருந்தனர். அறையின் ஒரு பகுதியில் கையில் ஆரஞ்சு ஜூஸ் கிளாசை வைத்துக் கொண்டு அவன் தனியாக நின்றிருந்தான். அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் மெதுவாக அவளை நோக்கி வந்தான். ”கடவுளே, இந்தக் காலடிகள் நேரடியாக என் மனதிற்குள் செல்லுகின்றன” என்று பயத்தோடு தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஒவ்வொரு மாதமும் பத்து நாட்கள் மெட்ராசில் கழிப்பேன் என்று அவன் சொன்னதைக் கேட்டு சந்தோஷப்பட்டாள். மனிதர்கள் தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் ”நான் உங்களை தொலைபேசியில் அழைக்கிறேன்” என்று சொன்னான்.

அவள் தலையாட்டினாள். ஏன் அவளை அழைக்க விரும்புகிறான் என்று அவளால் கேட்க முடியவில்லை.

“அவனுக்குத் திருமணமாகி விட்டதா?” பெரியம்மா கேட்டாள்.

“இல்லை.”

“பிரபாகரனுக்குத் தெரியுமா ?’

ஒரு கண யோசனைக்குப் பின்பு சொன்னாள்.“கொஞ்சம் தெரியும்.”

“அப்படியெனில் நீ பிரிந்து விடவேண்டும்?அவன் இன்னொரு பெண்ணைப் பார்ப்பான். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ பிரிந்து விடவேண்டும்.”

சுதாவுக்கு வேடிக்கையாக இருந்தது.

“பிரிவதென்பது பழைய நாட்களில் இருந்ததைப் போல சுலபமல்ல பெரியம்மா.”

“ஒருவருகொருவர் வேண்டாமெனில் அதுதான் முடிவு. இல்லையா?”

சங்கடமின்றி இதை விளக்க முடியாத நிலை அவளுக்கு.

“அது அப்படியில்லை. தம்பதியர் இணைந்து மனு செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஜட்ஜ் அழைத்து அவர்கள் இன்னமும் பிரிய வேண்டுமென்ற எண்ணத்தில் இருக்கிறார்களா என்று விசாரிப்பார். ஆமாம் என்று அவர்கள் சொன்னால் இன்னொரு ஆறு மாதம் காத்திருக்க வேண்டும்.”

பெரியம்மாவின் முகத்தில் கோபம் படர்வதைப் பார்த்தாள்.

“காதலிக்கும் இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், ஜட்ஜ் சம்மதம் தர வேண்டுமா?”

“அதுதான் சட்டம் பெரியம்மா.”

பெரியம்மாவிற்கு திருப்தியில்லை.

“போதுமே சட்டம். என் வாயைக் கிளறாதே. அப்புறம் ஏதாவது பேசி விடுவேன்.”

தங்கம் அக்கா காலியான டம்ளர்களை எடுக்க வந்தாள்.பெரியம்மா தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். “கடந்த வருடம் வரை எங்கள் நிழலை வைத்தே யார் என்பதை பாட்டி கண்டுபிடித்து
விடுவார்கள். இப்போது அவர்களால் அது முடிவதில்லை.” தங்கம் அக்கா சொன்னாள்.

“அறுவை சிகிச்சை செய்தால் பார்வை வந்துவிடும். உங்கள் வயதில் உள்ளவர்கள் செய்து கொள்கிறார்கள். வேண்டுமென்றால் நான் உங்களை மதராசுக்கு அழைத்துச் செல்கிறேன்.”

பெரியம்மா வேதனையாகச் சிரித்தாள்.

“வேண்டாம்,வேண்டாம்.எதற்கு எனக்கு பார்வை வேண்டும்? நிறையப் பார்த்தாகி விட்டது பெண்ணே!”

சுதா எழுந்தாள்.

“இங்கேயே மதியச் சாப்பாடு சாப்பிடலாமே” தங்கம் அக்கா சொன்னாள்.

“இல்லை,வேண்டாம்.அம்மா சமைத்திருப்பாள்.”

“அடுத்த முறை கண்டிப்பாக வாருங்கள்.”

தங்கம் அக்கா உள்ளே போய் விட்டாள்.பதினான்கு வயதுச் சிறுமி மூங்கில் படல் வழியாக உள்ளே வந்தாள். பெரியம்மாவின் பார்வை முகப்பிற்குப் போனது. சிறுமி வராந்தாவில் காலணிகளை கழற்றி வைத்து விட்டு, சுதாவைப் பார்த்து சிரித்து விட்டு சப்தமின்றி உள்ளே போனாள். அவள் கதவருகே போன போது “நீ எங்கே போயிருந்தாய்?” பெரியம்மா கேட்டாள்.

“சாரதாவிடம் புத்தகம் வாங்கப் போயிருந்தேன்” நடுக்கத்தோடு சிறுமி பதில் சொன்னாள்.

“பட்டுப் பாவாடையில் தான் அங்கு போக வேண்டுமா?”

சிறுமிக்கு’முகம் வியர்த்தது.

“அவள் கையில் புத்தகம் இல்லை.சரிதானே ?” பெரியம்மா சுதா பக்கம் திரும்பிக் கேட்டாள்.

“இல்லை,அவளிடமில்லை.”

“சலசலப்பு கேட்டவுடனே எனக்குத் தெரிந்து அது பட்டுப் பாவாடை தானென்று.”

“அவள் சின்னக் குழந்தைதானே?’

வயதுக்கு மீறிய வளர்ச்சி அவளுக்கு.என்னால் பார்க்க முடிகிறது..”

“நான் கிளம்புகிறேன்.”

பெரியம்மா எழுந்தாள்.

அம்மா சொன்னது நினைவுக்கு வர, மெதுவாக கையிலுள்ள பர்ஸைத் திறந்தாள்.

“நீ எனக்கு கொஞ்சம் பணம் தரப் போகிறாய். வேண்டாம். பெரியம்மாவிற்கு என்ன தேவை இருக்கிறது?’

சுதா பர்ஸை மூடினாள்.

“நீ வரும்போது… அடுத்த முறை வரும்போது..” பெரியம்மாவின் குரல் உடைந்தது. “நான் உயிரோடிருந்தால் என்னை வந்து பார்க்க வேண்டும். அதுதான் நான் கேட்க விரும்புவது.”

பெரியம்மாவின் கண்கள் நிரம்பியிருந்தன. அவள் கண்களிலும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருகியது.

குனிந்து பெரியம்மாவை வணங்கினாள். ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி செய்தது ஞாபகத்திற்கு வந்தது.

சுதாவின் வணங்கிய தலையை மென்மையாகத் தொட்டாள்.

“இந்த முறையாவது நன்றாக இருக்கட்டும்.”

அவள் வெளியே வந்தாள். மார்க்கெட் அருகே வந்தபோது தொலைவில் எஸ்.டி.டி. பூத் பலகை கண்ணில் பட்டது.

இரண்டு தொலைபேசி எண்களையும் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அழைப்பதற்கு முன்னால் அவள் தன் நோட் புத்தகத்தில் உள்ள அந்த மொபைல் எண்ணைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த அழைப்பிற்குப் பிறகு, அவள் சீக்கிரம் வீட்டிற்குப் போனால் முற்றத்திற்கு வருகிற அந்த காட்டுக் கோழியையும்,அதன் குஞ்சுகளையும் தவறாமல் பார்க்க முடியும். அவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
—————————————-
நன்றி : : KUTTIEDATHI AND OTHER STORIES, ORIENT BLACK SWAN PVT LTD

(மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயர் சிறுகதை,நாவல்,பயண இலக்கியம், இலக்கியத் திறனாய்வு,குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் பங்களிப்புச் செய்தவர்.திரைப்படத் துறையிலும் சாதனை நிகழ்த்தியவர். மஞ்சு,காலம்,ரண்டாம் மொழம் ஆகியவை சிறந்த நாவல் வரிசையிலும் வானப்பிரஸ்தம், ஓளவும் தீர்வும், பந்தனம், குட்டியேடத்தி உள்ளிட்டவை சிறுகதை வரிசையிலும் சிறப்பானவையாக மதிப்பிடப்படுகின்றன. வயலார், வள்ளத்தோள், எழுத்தச்சன் விருதுகள், மற்றும் சாகித்ய அகாதெமி, ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.)

 

 

 

ஒரு விடுமுறை தின விபரீதம்

சோ. சுப்புராஜ்

 

 

சுந்தரத்திற்கு திடுமெனெ விழிப்பு வந்தபோது, நேரம் காலை ஆறு மணிதான் ஆகியிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தவன் தன்னையே நொந்து கொண்டான். ஞாயிற்றுக் கிழமை கூட ஒழுங்காய் உறங்காமல், பழக்க தோஷத்தில் பாழும் இந்த உடம்புக்கு ஏன் விழிப்பு வந்து தொலைக்கிறது? மரிய புஷ்பத்தைப் பார்த்தான். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

கைகளை உதறி சோம்பல் முறித்து, மல்லாந்து படுத்து சுற்றுகிற பேனை வெறித்தபடி யோசித்தான். இரவே இந்த ஞாயிற்றுக்கிழமையை எப்படி உற்சாகமாகக் கழிப்பது என்று புருஷனும் மனைவியும் பேசி வைத்திருந்தார்கள்.

அதன்படி எட்டு அல்லது எட்டரை மணிக்கு மேல் நிதானமாய் எழும்பி, பால் மட்டும் காய்ச்சி காஃபி போட்டுக் குடித்து விட்டு, ஹோட்டலில் இருந்து டிபன் வரவழைத்து காலை ஆகாரத்தை முடித்துக் கொள்வது; மத்தியானத்திற்கு நான் – வெஜ் ஏதாவது வாங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு, வெயில் தாழவும் வெளியில் கிளம்பிப் போவது. கோல்டன் பீச்சிற்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டு, வருகிற வழியிலேயே ஏதாவது உயர்தரமான ஹோட்டலில் இரவுச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு, வீட்டிற்கு வந்து தூங்கி விட வேண்டியது. இதுதான் அவர்களின் திட்டம்.

கல்யாணமாகி ஆறேழு மாதங்கள் முடிந்து விட்டது. இருவரும் சேர்ந்தாற் போல் வெளியில் எங்கும் கிளம்பிப் போக முடிந்ததில்லை. பக்கத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றிரண்டு சினிமா பார்த்ததோடு சரி. சுந்தரம் காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டுக்  கிளம்பினால், எப்படியும் வீட்டிற்குத் திரும்ப, இரவு எட்டரை ஒன்பது மணிக்கு மேலாகி விடும். சமயங்களில் பத்து மணியைத் தாண்டியும் வருவதுண்டு.

அந்த மாதிரி தினங்களில் கதவைத் திறப்பதற்கு மனைவியை எழுப்பினால் அவளின் தூக்கம் கெடும் என்று சுந்தரம் வராண்டாவிலேயே படுத்துத் தூங்கி விடுவதும் உண்டு. கொசுக்கடியும் குளிரும் பாடாய்ப் படுத்துவதில் பெரும்பாலும் தூங்காமல் புரண்டு கொண்டிருந்துவிட்டு அடுத்த நாளும் ஏழுமணிக்கு எழும்பி வேலைக்கு ஓடி இருக்கிறான்.

அதற்கப்புறம் தான் தலைவாசல் கதவின் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளக் கூடாது என்றும் பூட்டை மட்டும் சாவியால் பூட்டிக் கொள்வதென்றும் புருஷனும் பொண்டாட்டியும் முடிவு செய்து கொண்டார்கள். அந்தப் பூட்டை உள்ளிருந்தும் பூட்டித் திறக்கலாம். வெளியிலிருந்தும் முடியும்.

சுந்தரம் ஒரு சிவில் இன்ஜினியர். அவன் தனியார் கட்டுமானக் கம்பெனி ஒன்றில் உதவி பிராஜெக்ட் மேனேஜராக இருக்கிறான். அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலையை  புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

மாலை 5 மணிக்கு டூயூட்டி முடிந்ததும், துண்டை உதறித் தோளில் போட்டு கிளம்பி விடுகிற மாதிரியான வேலை இல்லை அது.  வேலைகள்  தினசரி தொடத்தொட அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே இருக்கும். மரியபுஷ்பத்திற்கு வீட்டிற்கு பக்கத்தில் தான் – வீட்டிலிருந்து 15 நிமிட நடை தூரம் தான் – அவள் பணியாற்றும் பள்ளி இருக்கிறது.

திருமணம் முடித்து சுந்தரம் மரியபுஷ்பத்தை சென்னைக்கு அழைத்து வந்து குடித்தனம் தொடங்கி இரண்டு மூன்று மாதங்களுக்கு அவள் வேலைக்கெல்லாம் போகாமல் வீட்டில் தான் இருந்தாள். வேலை முடிந்து வீட்டிற்கு அகாலத்தில் திரும்புகிற சுந்தரத்திடம் தினசரி பொழுதே போகவில்லை என்று அழுது புலம்பவே, “நீ தான் பி எட் படிச்சிருக்கையில்ல; ஏதாவது ஸ்கூலுக்கு அப்ளை பண்ணி டீச்சர் வேலைக்குப் போ. நேரமும் போகும். செலவுக்குக் காசும் கிடைக்கும்….” என்று ஆலோசணை சொன்னான்.

அவளும் அடுத்த சில நாட்களில் பக்கத்தில் இருக்கிற மெட்ரிக்குலேசன் பள்ளிக்குப் போய் அப்ளிகேஷன் கொடுத்துவிட்டு வந்தாள். அடுத்தநாளே பள்ளியிலிருந்து ஒருத்தர் சைக்கிளில் வந்து, ‘உங்களை பிரின்சிபால் அம்மா மத்தியானத்துக்கு அப்புறம் இண்டர்வியூக்கு வரச் சொல்லி இருக்கிறாங்க…’ என்று சொல்லிவிட்டுப் போனார். இவளும் வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் என்று பள்ளிக்குப் போய்ப்பார்த்தாள்.

அடுத்த நாளிலிருந்தே வேலைக்கு வரச் சொல்லி விட்டாள் பிரின்சிபால்.

சுந்தரம் ஞாயிற்றுக் கிழமையை எதிர் நோக்கியே வார நாட்களைக் கழிப்பதால் சோர்வும் அசதியும் போட்டு அமுக்க, ஞாயிற்றுக் கிழமை முழுவதும் அக்கடா என்று ஓய்வாய் இருப்பதையே பெரிதும் விரும்பினான். வெளியில் கிளம்பிப் போய் அலைந்து திரிந்து அதனால் மேலும் சோர்வாகி திங்கட்கிழமைக்குள் நுழைவதை அவன் விரும்புவதில்லை.

முழுமையாய தூக்கம் கலைந்து எழுந்த சுந்தரம், பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட நினைத்து, வேண்டாம்; தூக்கம் கலைந்து விடுமென்று அமைதியாக இருந்து விட்டான். அவளும் ஒருவகையில் பாவம் தான். திருமணமாகி சென்னைக்கு வந்து இருநூறு நாட்களைக் கடந்தும் பள்ளி வீடென்று பார்த்த முகங்களையே பார்த்து சலித்துப் போயிருப்பாள்.

”எங்க அண்ணனைச் சொல்லனும். தேடித்தேடி உங்களைப் போயி புடிச்சிட்டு வந்தாரே…!  இன்ஜினியர் மாப்பிள்ளை தான் வேணுமின்னு பிடிவாதம் பிடிச்சு உங்களக் கல்யாணம் பண்ணி செக்குமாட்டு வாழ்க்கையில வந்து மாட்டிக்கிட்டேன். புதுப் பொண்டாட்டிகூட கைகோர்த்துக்கிட்டு வெளியில போயிட்டு வரணும்னு கூட ஆசைப்படாத ஜடமா இருக்கீங்களே…! உங்களுக்கோ என்னைக்குத் தோணுதோ அன்னைக்கு என்னை வெளியில கூட்டிக்கிட்டுப் போங்க. அதுவரைக்கும் நான் உங்கள ஒன்னும் கேட்க மாட்டேன்….” என்று விரக்தியின் விளிம்பில் நின்று வெடித்தாள் மரியபுஷ்பம்.

”இல்லடா கண்ணு; இன்னும் ஒரு நாலஞ்சு மாதம் பொறுத்துக்கோ. இப்ப நடந்துக்கிட்டு இருக்கிற பிராஜெக்ட் ஒரு ஃபினிசிங் ஸ்டேஜுக்கு வந்துடும். அப்புறம் நாம ஜாலியா இருக்கலாம்….”

”இப்படித்தான் நமக்குக் கல்யாணமாகி சென்னைக்கு வந்த நாள்ளருந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. உங்க புராஜெக்ட் முடியறதுக்குள்ள அநேகமா நாம கெழடுகளா ஆயிடுவோம். அப்புறம் ஆளுக்கொரு கம்ப ஊனிக்கிட்டு ஊரு சுத்திப் பார்க்கலாம். புராஜெக்ட் முடிஞ்சப்புறம் தான் சேர்ந்து வெளியில போக முடியுமின்னா அவசரப்பட்டு எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. பிராஜெக்ட் முடிச்சிட்டு நிதானமா கல்யாணம் பண்ணி இருக்கலாமே…!”

”நீ படிச்ச பொண்ணு, புரிஞ்சுக்குவேன்னு பார்த்தா நீயும் இப்படி சண்டைக்கு நிற்குறியேம்மா…!” எல்லாச் சண்டையிலும் சுந்தரம் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரம். பெரும்பாலும் மரியபுஷ்பமும் அமைதியாகி விடுவாள்.

நேற்றைக்குத் தான் சுந்தரம் என்றைக்கு மில்லாமல் சீக்கிரமே வீட்டுக்கு வந்தான். “ஏற்கெனவே எங்க பார்த்தாலும் வெள்ளம், புயல்னு ஊரே ஒரே தண்ணிக்காடாக் கெடக்கு. இதுல நீங்கவேற இப்படி எல்லாம் சீக்கிரம் வந்தா வானம் மறுபடியும் பிய்ச்சுக்கப் போகுது. அப்புறம் அதை சென்னை தாங்காதுப்பா….” மரியபுஷ்பம் கேலி பேசினாள்.

”நீ என்ன வெணுமின்னாலும் கிண்டல் பண்ணிக்கோ; ஐயாவுக்கு இன்னைக்கு ரெஸ்ட். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை முழுக்க ஊர் சுற்றல் தான்….” சுந்தரம் அவனுடைய நீண்ட திட்டத்தை விவரித்துக் கொண்டு போக, மரியபுஷ்பம் சந்தோஷமாக ஓடிவந்து சுந்தரத்தைக் கட்டிக் கொண்டு அவன் கேட்காமலேயே முத்தமழை பொழிந்தாள்.

மரியபுஷ்பத்தை எழுப்பலாம் என்று நினைத்த சுந்தரத்திற்கு அவளைக் கொஞ்சம் சீண்ட வேண்டுமென்று தோன்றியது. ஆவின் பால்பாக்கெட்டை எடுத்து வந்து ஜாக்கெட் ஹூக் பிரிந்து வெளீரென்று தெரியும் மார்பின் மீது வைத்தால் சிலீரென்ற குளிர்ச்சியில் அவள் பதறிப்போய் விழிப்பதைப் பார்த்து ரசிக்க நினைத்தான். அதனால் அலுங்காமல் எழும்பிப் போனான் சுந்தரம்.

வாசற்கேட்டில் தொங்கிய பையிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து நிமிரவும், சைக்கிளில் வந்திறங்கிய ஒருவன் சுந்தரத்திற்கு வணக்கம் சொன்னான். பார்த்த முகமாய்த் தான் இருந்தது. ஆனால் பரிச்சயமான முகமாய்த் தெரியவில்லை.

”ஸார், நான் பிராஜெக்ட் சைட்டிலருந்து வர்றேன். சுரேந்திரன் ஸார் உங்களை சைட்டுக்கு வரச் சொன்னார்…..” என்று சொல்லி ஒரு கடித்த்தைக் கொடுத்தான். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. – போர்டு பைல் முடியும் தருவாயில் இருக்கிறது. இன்றைக்கே கான்கிரீட் போட வேண்டி இருக்கும். உடனேயே புறப்பட்டு வரவும் – சுரேந்திரன் தான் எழுதி இருந்தான்.

சைக்கிளில் வந்தவனை அனுப்பிவிட்டு சுந்தரம் வீட்டிற்குள் போனபோது, மரியபுஷ்பம் எழுந்து உட்கார்ந்திருந்தாள். “என்ன கம்பெனியிலருந்து ஓலை வந்தாச்சா? உங்களுக்கெல்லாம் வீடு, பொண்டாட்டி எல்லாம் எதுக்கு? பேசாம சைட்டிலேயே  ஒரு குடிசை போட்டுத் தங்கிக்க வேண்டியது தானே….” என்றவள், “உடம்பு சுகத்துக்கு ஒருத்தி வேணுமில்ல; அதுக்குத் தான் அப்பப்ப வீட்டுக்கு வந்து போறீங்களோ….?” அவளின் கண்களில் கண்ணீர் விளிம்புகட்டி நின்று கொண்டிருந்தது.

”ப்ளீஸ்; புரிஞ்சுக்கம்மா. போர்டு பைல்ங்குறது தரைக்குக் கீழ வட்டமா அறுபது எழுபது அடி ஆழத்துக்கு போர் போடுறது மாதிரி குழி தோண்டி அந்தக் குழிக்குள்ள கம்பியெல்லாம் இறக்கி கான்கிரீட் போடுறது. போர் பண்ணி முடிச்சதும் உடனேயே கான்கிரீட் போட்டுடனும். கான்கிரீட் போடாம விட்டுவச்சா, குழிக்குள்ள மண் சரிஞ்சு தூர்ந்து போயிடும். பத்துப்பதினைஞ்சு பேரோட இருபது மணிநேர உழைப்பு வீணாயிடும்.     கோல்டன் பீச் எங்கயும் ஓடிப் போயிடாது. நாம அடுத்தவாரம் போய்க்கலாம்…..”

”நான் உங்ககிட்ட விளக்கம் கேட்டனா? உங்களோட டெக்னிக்கல் சமாச்சாரமெல்லாம் எனக்கெதுக்கு? அதை நான் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறேன். நீங்க தாராளமாப் போயி வேலையப் பார்த்துட்டு வாங்க சாமி. அந்தக் கம்பெனியே உங்க தலையில தான் ஓடுது. வருஷக் கடைசியில தலையில கிரீடம் வைப்பாங்க. பெருமையா வாங்கீட்டு வாங்க….”

சுந்தரத்திற்கு கோபம் எகிறியது. இது குத்திக் காட்டுதல். எவ்வளவு கடினமாக உழைத்த போதும் சுந்தரத்திற்கு அவனுடைய கம்பெனியில் அத்தனை நல்ல பெயரில்லை. கம்பெனிக்குள் நிறைய பாலிடிக்ஸ். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்களை விடவும் உயரதிகாரிகளுக்கு சோப்புப் போடுகிறவர்களுக்கும் காக்காய் பிடிக்கிறவர்களுக்கும் தான் மதிப்பும் மரியாதையும் அதிகமிருந்தது.

வருஷக் கடைசியில் உயரதிகாரிகளின் மதிப்பீடுகளில் இவனுக்கு குறைவான மதிப்பெண்களே போடப்பட்டு குறைவான சம்பள உயர்வும், தள்ளிப் போகிற பதவி உயர்வுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனசு ஆற்றாமல் மனைவியிடம் சுந்தரம் சொல்லிப் புலம்பியதை சரியான நேரம் பார்த்து சுட்டிக் காட்டுகிறாள்.

”அது எனக்கும் எங்க கம்பெனிக்கும் உள்ள பிரச்னை. அதைப்பத்தி நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. என்னை மதிப்பீடு செய்ய அங்க இருக்கிற எவனுக்கும் தகுதி இல்ல. நான் வேலை செய்றது சம்பள உயர்வுக்கும் பதவி உயர்வுக்கும் இல்ல. கம்பெனியோட வளர்ச்சிக்காகத் தான். கண்டிப்பா கடின உழைப்பும் திறமையும் என்றாவது ஒருநாள் கௌரவிக்கப்படும்னு நான் நம்புறேன்.  நீ மூடிக்கிட்டுப் போ….”

இருவருக்கும் வாக்குவாதம் வலுக்க வழக்கம் போல் மரியபுஷ்பம் கோபித்துக் கொண்டு படுக்கையில் போய் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

போரிங் முடிந்து கான்கிரீட் வேலைதானே மிச்சமிருக்கிறது என்று சுரேந்திரன் எழுதி இருக்கிறான். நான்கைந்து மணி நேரங்களில் வேலை முடிந்து விடும். அப்படி முடிந்து விட்டால் சீக்கிரம் கிளம்பி வந்து மனைவியை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்றும் முடிந்தால் சாயங்காலம் மெரினா பீச்சிற்கு அவளை அழைத்துக் கொண்டுபோய் வரலாம் என்றும் நினைத்தபடி அவசரமாய் கிளம்பிப் போனான்.

சைட்டிற்குப் போனபோது பைல் போரிங் முடிந்து பைப்புகளை ஒவ்வொன்றாகக் கழட்டிக் கொண்டிருந்தார்கள். சுரேந்திரன் சுந்தரத்திற்கு வணக்கம் வைத்து சிநேகமாய் சிரித்தான்.

”ஸாரி ஸார். உங்களோட ஞாயித்துக்கிழமை சந்தோஷத்தை கெடுத்து இங்க வரவழைச்சுட்டேன். நான் வேணுமின்னா ரூமுக்குப் போயிக் குளிச்சு ரெடியாகி திரும்பவும் வந்துடுறேன். நீங்க வீட்டுக்குப் போய்க்கிறீங்களா?”

”அதெல்லாம் தேவையில்ல. நீ கெளம்புப்பா. நான் பார்த்துக்கிறேன். இராத்திரியெல்லாம் கொட்டக் கொட்ட முழிச்சிருந்துருப்ப. ரூமுக்குப் போய் நல்லாத் தூங்கு….”

சுரேந்திரன் கிளம்பிப் போகவும், சுந்தரம் வேலை ஆட்களைப் பார்த்தான். எல்லோருடைய முகங்களிலும் களைப்பும், சோர்வும், தூக்கமும் வழிந்தது. நேற்றைக்கு இரவு எட்டு மணிக்கு பணிக்கு வந்தவர்கள், பைல் இன்னும் முடியாததால்  தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

கான்கிரீட் முடிந்து கிளம்ப இன்னும் குறைந்தது நான்கைந்து மணி நேரமாவது ஆகும். சப் காண்ட்ராக்டர் கல்கத்தாக்காரர். அங்கிருந்தே ஆட்களைக் கொண்டு வந்து விட்டார். இவர்களுக்கெல்லாம் ஞாயிற்றுக் கிழமை சுகம் எப்போது கிடைக்கும்?

சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த கோர விபத்து நிகழ்ந்தது. போரிங் பைப்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பக்கத்தில் அடுக்கி, கடைசியாக சிசல் (Chiesel) இணைக்கப்பட்ட பைப்பை வெளியே இழுத்துத் தள்ளி முடிந்த அந்த கடைசிப் புள்ளியில் கால்வழுக்கி சடாரென்று போரிங் குழிக்குள் அவன் விழுந்து விட்டான்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது நேர்ந்துவிட்ட விபத்து அங்கிருந்தவர்களுக்கு உறைக்கவே சில வினாடிகள் ஆனது. அப்புறம் தான் அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் குய்யோ முறையோ என்று கதறத் தொடங்கினார்கள்.

சுந்தாத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு நிமிஷம் அப்படியே திக் பிரமை பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்தான். அப்புறம் தான் உணர்வு வந்து வேகமாய் ஓடிப்போய் ஃபயர் சர்வீசுக்கும் ஆம்புலென்சுக்கும் போன் பண்ணி வரச் சொன்னான். அவனுடைய உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தான்.

வெறும் இரண்டடி அகலமுள்ள எழுபது அடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டவனை எப்படி மீட்பது?  உள்ளே தவறி விழுந்தவன் போர்குழியின் அடி ஆழத்திற்குப் போயிருப்பானா? அல்லது நடுவில் எங்காவது தொங்கிக் கொண்டிருப்பானா? உள்ளே அவனால் சுவாசிக்க முடியுமா? சேறும் பெண்ட்டோனைட் கெமிக்கலும் நிறைந்திருக்கும் குழிக்குள் விழுந்தவனின் வாய்க்குள் இதெல்லாம் போய்விடாதா?

கொஞ்ச நேரத்தில் வேலைத்தளமே அல்லோலப்பட்டது. கம்பெனியின் உயரதிகாரிகள் பலரும் வந்து விட்டார்கள். தமிழும் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து ஒலிக்கும் கூக்குரல்களால் வேலைத்தளம் அதகளப்பட்டது. ஆளாளுக்கு கத்திக் கொண்டும் அபிப்ராயங்கள் சொல்லிக் கொண்டும் இருந்தார்கள்.

ஒருவழியாய் போர்குழிக்குள் விழுந்தவனை மீட்கும் போது அவன் சுத்தமாய் செத்துப் போயிருந்தான். வயிறு உப்பி மிகவும் கோரமாயிருந்தான். முப்பது வயதிற்குள் தான் இருக்கும் அவனுக்கு. கல்கத்தாவிலிருந்து வயிற்றுப் பிழைப்பிற்காக இங்கு வந்தவனுக்கு இந்த ஞாயிற்றுக் கிழமை இவ்வளவு குரூரமாய் விடிந்திருக்கிறது.

விபத்திற்கான காரணம் ஆராயப்பட்ட்து. விதி என்றார்கள். குழிக்குள் விழுந்து இறந்து போனவனின் கவனக் குறைவு என்றார்கள். இதற்கெல்லாம் பொறுப்பு என்று விபத்து நடந்தபோது பொறுப்பில் இருந்த சுந்தரம் தான் என்றார்கள். இவன் நாளைக்கு கைது செய்யப்படலாம். அல்லது சப்காண்ட்ராக்டரை கைது பண்ணச்சொல்லி கம்பெனி சுந்தரத்தைக் காப்பாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து இறந்து போனவனின் உடலை பொட்டலம் கட்டிக் கொடுத்து மயானத்தில் கொண்டுபோய் சடங்கு சம்பிரதாயங்களுடன் அவனைப் புதைத்துவிட்டு சுந்தரம் வீட்டிற்குப் போனபோது இரவு பனிரெண்டு மணிக்கும் மேலாகி இருந்தது.

சுந்தரம் அவனிடமிருந்த சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே போனபோது மரியபுஷ்பமும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய கண்களில் தூக்கத்தையும் மீறிக் கொண்டு கோபம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது.

விபத்து பற்றி மனைவியிடம் சொல்லலாமா என்று யோசித்த சுந்தரம், வேண்டாமென்று விட்டு விட்டான். அவளின் ஞாயிற்றுக் கிழமையாவது சிதிலப்படாமல் இருக்கட்டுமே.

”நாளையிலர்ந்து பத்து நாட்களுக்கு லீவு போடப் போறேன் மரியம். நாம வெளியூருக்கு டூர் போயிட்டு வரலாம்…..”

”நீங்க சொல்றதை எல்லாம் ஓடுற தண்ணியிலதான் எழுதி வைக்கனும்…” என்று சிரித்தபடி சொன்ன மரிய புஷ்பம் விளக்கணைத்து படுக்கையில் விழுந்து உறங்கத் தொடங்கினாள்.

மனைவியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் தன்னையும் அறியாமல் மனசு உடைந்து கதறி அழத் தொடங்கினான் சத்தமே வராமல்.

காலச்சக்கரம்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

அலையலையாய் ஆயிரம் கனவுகள் அந்தரக்கடலிலே
காலத்தின் படகில்
பயம் எதுவுமின்றி நின்று
வெவ்வேறு வீரிய விசையுடன் வீசப்படுகிறது
நீளும் கையில் நிகழும் தகவுகள் தக்கையைப் போலே.

வாழ்வெனும் பரந்து விரிந்த வலைக்குள் வட்டமடித்து உழன்றபடியே சுழலும் எண்ணற்ற சித்திர மீன்களில்
அன்பின் வலையில் அகப்பட்டு பிடிபடுதல் ஓர் சுகம்
தத்தளித்து விலகி விடுபட்டு தப்பித்தலோ ஒரு சாபம்.

இதோ அங்கே பிடிபடாமல் விடுபட்ட உதவாத ஒரு ஒளிரும் சுடர் நட்சத்திரமீன் உங்களின் விழிகளுக்கும்
மிக எளிதாகப் புலப்படுகிறது தானே
பரிதவிக்கும் பகிரப்படாத ஒரு நேசத்தின் திவலையாக.

மீப்பெருநம்பிக்கையுடன் இருப்பாய் ஒளிர் மனமே
இங்கே யாவும் ஒன்றல்லவே.
கனிவுடன்
காத்திரமாக இருப்பாய் கலை மனமே
தனித்து தெரிதலொன்றும் தவறில்லையே
காட்சிகள் மாறும்
ஆகவே கவலைப்பட ஏதுமில்லை