Author: பதாகை

யாருளர் என்றில்லை

 

ஶ்ரீரஞ்சனி

 

 

 

“கண்மணி நில்லு காரணம் சொல்லு, காதல்கிளியே கோபமா….”

“சந்திரசேகரின் விருப்பமாக இதோ ஊமை விழிகள் திரைப்படப்பாடல்,” அறிவிப்பாளர் பின்புலத்தில் பேசினார். சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள் எல்லாமே அவனுக்குப் பிடித்தவைதான். சேர்ந்துபாடும்படி அவை அவனைத் தூண்டுவதுண்டு. அதுவும் சிவரஞ்சனியில் சுரேந்தரின் குரல் குழைந்து ஒலிக்கும்போது அதற்குத் தனிச்சிறப்பு வந்துவிடுகிறதென அவன் பரவசப்படுவதுண்டு. ஆனால், அந்தப் பாடல் இன்று அவனைக்  கண்கலங்கச் செய்தது. உடனடியாக ரேடியோவை நிறுத்தினான். “ஆம்பிளைப் பிள்ளையடா நீ! ஒரு நாளும் நீ அழக்கூடாது!” அப்படிச் சொல்லிச்சொல்லித்தான் அம்மம்மா அவனை வளர்த்திருந்தார். ஆனால், கையறுநிலையில் இருக்கும்போது அழுவதைத்தவிர என்னதான் செய்யமுடியும் எனத் தனக்காகத் தானே அவன் பரிதாபப்பட்டான்.

‘பிடிகேல்லை, வீட்டை விட்டிட்டுப் போயிடு, எண்டெல்லாம் அவள் இம்சித்தபோது, ஏன் என்னைப் பிடிக்கேல்லை எண்டு சொல்லெண்டுதானே நானும் கேட்டனான். என்ர பிடியிலையிருந்து திமிறிக்கொண்டு போகவெளிக்கிட்டவளைப் பதிலைச் சொல்லிப்போட்டுப் போவெண்டு மறிச்சன். அது கிரிமினல் குற்றமாம். சத்தியமாய் எனக்கு விளங்கேல்லை. ரண்டு வருஷமா ஒண்டாயிருந்திட்டுப் பிடிக்கேல்லைப் போ எண்டால், என்ன காரணத்துக்காண்டி அப்பிடிச் சொல்லுறாள் எண்டு நான் கேட்கக்கூடாதோ?  போயிருக்கவேணுமாம்… அதெப்படிப் போறது? அந்தக் கதாநாயகி அவனில இரங்கி திரும்ப அவனிட்டை வாறாள். இவள் என்னடாவெண்டால் பொலிசைக் கூப்பிடுறாள்.’ அவனின் மனம் மிகவும் வலித்தது.

காரிலிருந்து இறங்கி நடந்தபோது, உடல்நிறை பல மடங்காக அதிகரித்து விட்டதுபோல அவனின் கால்கள் தள்ளாடின. ‘இண்டைக்கு டிசலுசன் செய்யோணும்’ என்ற நினைப்பு வேலையிலிருந்த அவனின் ஆர்வமின்மை மேலும் அதிகரித்தது. டிசலுசன் செய்யும் உபகரணத்துக்குப் போட்டியிருக்கும், நல்ல உபகரணம் ஒன்றை எடுக்கவேண்டுமே என்ற  துடிப்புடன் வழமைபோல் அவனால் ஓடமுடியவில்லை. அவனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளைக்  கோர்ட்டை ஏனோதானோவென எடுத்துக் கொளுவிக்கொண்டு பரிசோதனைச்சாலைக்குள் நுழைந்தான். அவனின் மனமோ நடந்துமுடிந்தவற்றையே சுற்றிச்சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது.

எல்லோரும் மிகவும் மும்மரமாக தங்கள் தங்கள் வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள்.  தன்னுடைய பரிசோதனைக்குரிய செய்முறை ஒழுங்குகளைப் பற்றிக் கூறும் ஆவணத்தை அச்சிலெடுத்தவன் அதனைக் கிரகிப்பதற்கு முயற்சித்தான். ஆனால், அவனின் மனதில் எதுவும் பதிவதாக இல்லை, மீளமீள அவற்றை அவன் வாசிக்க வேண்டியிருந்தது. ‘இந்தச் செய்முறை ஒழுங்குகளைப்போல, உறவுகளை எப்பிடிக் கையாளுறதெண்டும் அறிவுறுத்தல்கள் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்’ ஆற்றாமையில் அவனின் மனம் குமைந்தது.

மெற்போர்மின் குளிசைகள் உடலில் கரையுமளவைப் பரிசோதிப்பதற்காக வயிற்றுக்குள் இருக்கும் கரைசலை ஒத்த கரைசல் ஒன்றைத் தயாரித்து, அந்தக் குளிசைகள் அதில் கரையுமளவைப் பரிசோதிக்கும் பரிசோதனைதான் அது. லதா அவனிடமிருந்து விலகுவதையும், குளிசைகளைச் சிதைத்து அவன் பரிசோதிக்கப் போவதையும் ஏனோ அவனின் மனம் முடிச்சுப்போட்டுப் பார்த்தது. தேவைப்படும் அமிலமோ, காரமோ தண்ணீரில் நன்கு கரைவதற்காகப் பரிசோதனைக் குடுவைகளை அதிரும் உபகரணமொன்றில் வைத்துத் கலக்குபவர்கள், கரைசல்களின் pHகளைச் சரிபார்ப்பவர்கள், கரைசலிலிருக்கும் வாயுக்களை அகற்றுவதற்காக சொனிக்கேசன் செய்பவர்கள் என அந்தப் பரிசோதனைச்சாலை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குத் தேவையான கரைசலை உருவாக்குவதற்காக பெரிய வாளி ஒன்றில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தபோது, “உங்கள் எல்லாரையும் பாக்கேக்கே, கீரிமலைத் தீர்த்தத் திருவிழாதான் எனக்கு ஞாபகம் வருகுது,” என அந்தக் கொம்பனியில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த யமுனா சொல்லிச்சிரித்தாள். அந்த நாட்டிலேயே இருந்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்குமென அவனின் மனம் ஏங்கியது.

பரிசோதனையின்படி அந்தக் குளிசைகள் எவ்வளவு கரைந்துள்ளன என்பதைப் பரீட்சித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். “நான் பேசநினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்,” என அவனுக்குப் பக்கத்திலிருந்த சங்கர் முணுமுணுத்துக் கொண்டிருந்தான். குறிப்பிட்ட கரைதிறனைப் பெறுபேறுகள் காட்டாவிடில் செய்யப்பட்ட பரிசோதனையில் வழுக்கள் இருந்தன என்பதுதான் முடிவாகவிருக்கும். பின்னர், மேற்பார்வையாளரிடமிருந்து அது தொடர்பான எச்சரிக்கை கிடைக்கும், பரிசோதனையை மீளச் செய்யவேண்டியிருக்கும். அந்தப் பொருளில்தான் எதிர்பார்க்கப்படும் பெறுபேறு திரையில் தெரியவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் சங்கர் பகிடியாகப் பாடிக்கொண்டிருந்தான். ‘உறவெண்டால் அப்பிடியெல்லோ இருக்கோணும், வெளிநாட்டுக் கலாசாரத்தில வளந்த அவளோடை உறவுவைச்சதுதான் பிழை’ என எண்ணி அவனை மனம் நோகச் செய்தது அந்தப் பாடல்.

அவனின் பரிசோதனைப் பெறுபேறுகள் இருக்கவேண்டிய வரையறைகளுக்குள் இருக்கவில்லை. ‘என்ன தலையிடி இது, இண்டைக்கு வீட்டுக்கு நேரத்தோடை போகேலாது, பட்ட காலே படும் எண்டு சும்மாவா சொல்லியிருக்கினம்’ – அவனின் மனம் முழுவதும் சலிப்புக் குடிகொண்டது. ஒரே ரென்சனாக இருந்தது. நிகழ்ந்ததைப் பற்றி மேற்பார்வையாளரிடம் கூறிவிட்டு திரும்பவும் அதே பரிசோதனையைச் செய்ய ஆரம்பித்தவனுக்குக் களைப்பாக இருந்தது. கரைசலின் வெப்பநிலை குறித்த நிலையை அடைவதற்கிடையில் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வருவோமென கன்ரீனை நோக்கிவிரைந்தபோது அம்மம்மாவின் அழைப்பு வந்தது. அவவிடம் லதாவைப் பற்றிச் சொல்லி முட்டுத்தீர்க்க வேண்டுமென அவனின் மனம் விழைந்தாலும் அப்படி மனம்திறந்து பேச அவனால் முடியவில்லை.

ஏதோ சாப்பிட வேண்டுமென்பதற்காகச் சாப்பிட்டிட்டுவந்து, திரும்பவும் அந்தப் பரிசோதனையைத் தொடர்ந்தான். அவனின் சேர்ட் பொக்கற்றுக்குள் இருந்த கைத்தொலைபேசி திரும்பத்திரும்ப அதிர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், யார் அழைக்கிறார்கள் என்றோ, ஏன் அழைக்கிறார்கள் என்றோ அக்கறைப்பட அவனால் முடியவில்லை. கடைசியில் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்பட்ட வரையறைக்குள் வந்திருந்தன. வீட்டுக்குப்போய் ஒரு பியர் குடித்துவிட்டுப் படுத்திட வேண்டுமென நினைத்தபடி வேலையிடத்தைவிட்டு அவன் வெளியேறினான்.

அடுத்தநாள் காலையில் எழுந்து தொலைபேசியைப் பார்த்தபோதே அவனுக்காகக் குரலஞ்சல் காத்திருப்பது தெரியவந்தது. நெருங்கி வாழ்பவர்களுடனான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நிகழும் தொலைபேசி மூலமான ஆறுவாரக் கவுன்சலிங் வருகிற புதன் கிழமையிலிருந்து ஆரம்பமாக இருப்பதாக அந்தக் குரலஞ்சல் கூறியது.

X     X     X

மூன்று வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவுக்குப் புலம்பெயர்ந்திருந்தபோது மாமா வீட்டில்தான் அவன் தங்கியிருந்தான். கோடைகாலத்தில் மாகாணத்துக்குச் சொந்தமான பார்க் ஒன்றில் கூடாரமிட்டுத் தங்குவது மாமா வீட்டுக்காரரின் வருடாந்தப் பொழுதுபோக்காக இருந்தது. அந்த வருடம் கனடா தினத்துடன் சேர்ந்துவந்திருந்த நீண்ட வாரவிடுமுறையின்போது, அவர்களுடன் சேர்ந்து அவனும் அங்கு போயிருந்தான். மாமியின் ஊரான அச்சுவேலியைப்   பிறப்பிடமாகக் கொண்ட இருபது குடும்பத்தினர் ஒன்றிணைந்திருந்து களிக்கும் இடம்தான் அது. அவனின் ஊர் கொக்குவில் ஆதலால் மாமா குடும்பத்தவரைவிட அவனுக்கு வேறு எவரையும் அங்கு தெரிந்திருக்கவில்லை. அவன் வயதுக்காரரும் அங்கிருக்கவில்லை. அதனால் மாமாவின் வயதுக்காரருடன் உதைபந்தாட்டம் விளையாடுவதைத்தவிர வேறெதுவும் அவனுக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கவில்லை. பொழுதுசரியும் நேரம் மழை வேறு கொட்டிக்கொண்டிருந்தது, கூடாரத்தில் அது எழுப்பிய ஒலியை ரசித்தபடி, உறங்குவதற்கான பை போன்ற ஒன்றினுள் படுத்திருந்தவன் அப்படியே நித்திரையாகிவிட்டான். அவனின் நீண்ட நித்திரையைச் சூரிய உதயம் பார்க்கவென அவன் வைத்திருந்த அலாரம் குழப்பியது. வேகமாக எழுந்து அந்த ஏரிக்கரைக்குச் சென்றவன், ஏற்கனவே அங்கு ஒரு இளம் பெண் வந்திருப்பதைக் கண்டான். ஆனால், சூரிய உதயத்தை ரசிக்க வந்தவள்போல அவள் இருக்கவில்லை. எங்கோ வெறிச்சுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருட்டுச் சற்று விலக வானத்திலும் ஏரியிலும் வெவ்வேறு நிறங்கள் வர்ணஜாலம் காட்டத் தொடங்கின. அவனுக்கு உற்சாகம் பிறந்தது. அவளுடனும் அது பற்றிப் பேசவேண்டும் போலிருந்தது. “ஓ, மை கோட்! எவ்வளவு அழகாயிருக்கு, என்ன? இதைக் கமெராவுக்குள் அடக்கேலாது,” அவளைப் பார்த்தபடி தன் களிப்பைப் பிரஸ்தாபித்தான்.

“ம்ம்,” பற்றற்ற பதில் அவளிடமிருந்து வந்தது.

“இயற்கையை ரசிக்கிறது உங்களுக்குப் பிடிக்குமா?”

“எனக்கு இதுகளிலை ஈடுபாட்டில்லை.”

“இலங்கையில இருக்கேக்கை இதுகள் ஒண்டும் பெரிசாத் தெரியேல்லை, ஆனா, இப்ப சூரியன் உதிக்கிறதைப் பாக்கிறது, அலையடிக்கிற சத்தத்தைக் கேட்கிறது, நட்சத்திரங்களை எண்ணுறது … எல்லாம் சொர்க்கத்தில இருக்கிறமாதிரிச் சந்தோஷத்தைத் தருது.”

“ம்ம், சொர்க்கம் எப்பிடியிருக்குமெண்டு உங்களுக்குத் தெரியுமோ?”

அவன் சிரித்தான். “நான் என்ன சொல்லுறனெண்டால்…”

“சரி, நான் போகப்போறன்,” அவள் நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்து போவதற்கு அவனுக்கு விருப்பமில்லை என்றபோதும் அவளுடன் சேர்ந்து நடப்பதற்காக, ‘நானும் வருகிறேன்,’ என்றபடி அவளைப் பின்தொடர்ந்தான்.

 

சற்று நேரத்தின்பின், காலைச் சாப்பாட்டுக்கென ஒரு அன்ரி ரொட்டி சுட்டார். அப்போது அங்கிருந்த கதிரையொன்றில் ஒரு புத்தகத்துடன் குந்தியிருந்த அவளைக் கண்டதும் அவளும் தங்களின் குழுவினர்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. பின்னர், கதையோடை கதையாக அவளின் குடும்பம் முதல்நாள் இரவுதான் வந்தது என்றும், அவளின் சினேகிதி அண்மையில் தற்கொலை செய்ததால் அவள் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறாள் என்றும் மாமியிடமிருந்து அறிந்தான். மதியம் ஏரியில் குளித்துவிட்டு வந்தபோதும் அவள் அதேயிடத்தில் இருந்தாள். அவனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு கதிரையை இழுத்துக்கொண்டு போய் அவளருகில் இருந்தவன், “இருக்கலாமோ?” என அவளைக் கேட்டான்.

“இருந்துபோட்டுத்தான் இருக்கலாமோ எண்டு கேட்கிறியள்.”

“அப்ப எழும்பட்டா?” அவன் கதிரையை விட்டெழுந்தான்.

“பரவாயில்லை இருங்கோ. ஆனா, பேச்சுத் துணைக்கு நான் சரிவரமாட்டன்,” என்றாள் அவள் அசட்டையாக. தன்னுடைய நடத்தைக்கு விளக்கம் சொல்வதுபோல, “என்ரை வயசிலை இங்கை ஒருத்தருமில்லை, அதுதான் …” என்றான் அவன்.

“பொதுவா இங்கை இளம் ஆக்கள் வாறேல்லைத்தான், ஒவ்வொருத்தரின்ரை ஆர்வங்களும் வித்தியாசம்தானே.”

“எங்கை வேலை செய்யிறீங்க?”

“அதெப்படி நான் வேலைசெய்யிறன் எண்டு நீங்க அனுமானிச்சியள்?”

“ஓ, சொறி, படிக்கிறீங்களா?”

“ரண்டு கிழமைக்கு முதல்தான் வேலையிலை சேந்திருக்கிறன்.”

“ஓ, வாழ்த்துக்கள், நான் கனடாவுக்கு வந்து எட்டு மாசமாச்சு, பொருத்தமான வேலை ஒண்டும் இன்னும் கிடைக்கேல்லை.”

“என்ன வேலை தேடுறீங்க?”

“சயன்ஸ் டிகிறி இருக்கு, படிச்சதுக்குத் தக்கதா ஏதாவது ஒரு வேலை கிடைச்சால் நல்லதெனப் பாக்கிறன்.”  நீங்க என்ன வேலைசெய்யிறீங்கள் என அவளிடம் கேட்க அவனின் வாய் உந்தியது. ஆனால் அவள் பதில் சொல்வாளோ இல்லையோ என்ற தயக்கம் இருந்ததால் அவன் கேட்கவில்லை.

 

இரவு வானம் முழுவதும் நட்சத்திரங்களால் நிரம்பிவழிந்தது. அண்ணாந்து பார்த்துப் பார்த்து அவனுக்குக் கழுத்து வலித்தது. “நுளம்பு கடிக்கேல்லையா?”  கழிப்பறைக்குப் போட்டுவந்த அவள்தான் கேட்டாள்.

அவள் அப்படித் தானாகக் கதைத்ததில் அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது.

“இந்த நட்சத்திரங்களைப் பாக்கிறதுக்கு எதையும் தாங்கலாமெண்டிருக்கு.” அவன் சிரித்தான். “இதில வெள்ளி எதெண்டு உங்களுக்குத் தெரியுமோ?”

இது வீனஸ், அது சற்ரேர்ன், அதிலை தெரியிறது பிக் டிப்பர் … என ஒவ்வொன்றாக அவள் பெயரிட அவன் அதை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலையில் சூரிய உதயம் பார்க்கசென்றபோது அவள் வரமாட்டாளா என அவனின் மனம் தேடியது. அவள் வராததில் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

பகல் ஏரியில் நீந்தச் சென்றபோது, அவளின் அம்மா அவளைப் பலவந்தமாகக் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். “இரவைக்கும் நட்சத்திரங்களை அடையாளம் காட்டுவீங்களா?” அவன் கேட்டான். அவள் புன்னகைத்தாள். ஆனால், அன்றிரவு மேகக்கூட்டங்கள் அதிகமாக இருந்தமையால் நட்சத்திரங்கள் அதிகம் தெரியவில்லை. நெருப்பைக் கொளுத்திப்போட்டு அந்தக் கதகதப்பில் சுற்றவர இருந்து எல்லோரும் கதைத்துக்கொண்டிருந்தனர். சிறிய குச்சி ஒன்றில் மாஸ்மலோவைக் குத்தியெடுத்துப் பின் அதை நெருப்பில் வாட்டிப்போட்டு அவளிடம் அவன் கொடுத்தான். “நன்றி. ஆனா, நானே செய்யலாம்,” எனக் கூறியபடி அவள் எழுந்து நெருப்பருகே வந்தாள். தலைமயிரை அள்ளி உச்சியில் கொண்டையாகப் போட்டிருந்தவளின் ஒரேயொரு மயிர்க்கற்றை மட்டும் அவளின் நெற்றியில் அழகாக ஊசலாடிக்கொண்டிருந்தது. தீச்சுவாலையில் அவளின் முகம் அப்பழுக்கில்லாமல் ஒளிர்ந்தது, அவனுக்கு அவள் மிக அழகாகத் தெரிந்தாள்.

“என்ரை சினேகிதி ஒருத்தி மருந்துக் குளிசைகள் தயாரிக்கிற கொம்பனி ஒன்றில வேலைசெய்யிறாள். உங்களுக்கு விருப்பமெண்டால் அவளுக்கூடாக உங்கடை ரெசிமியை அங்கை அனுப்பிப்பாக்கலாம்.”

“ஓ, மிக்க நன்றி! அப்படிச் செய்தீங்க எண்டால் மெத்தப் பெரிய உபகாரமாயிருக்கும். உங்கடை போன் நம்பரைத் தருவீங்களோ?”

“என்ரை ஈமெயில் அட்ரஸ் தாறன், அதுக்கு அதை அனுப்பிவிடுங்கோ.”

தன்னுடைய போனில் அவன் அதைக் குறித்துக்கொண்டான். அடுத்த நாள் அங்கிருந்து விலகும்போது மீண்டும் அவளுக்கு அவன் நன்றி சொன்னான்.

அவளின் உதவியால் அவனுக்கு வேலை கிடைத்திருந்தது. ‘அதுக்கு நன்றியாகவேனும் ஒரு கோப்பி வாங்கித் தரலாமா?” என அவளிடம் அவன் ஈமெயிலில் கேட்டிருந்தான். முடிவில் அவர்கள் இருவரும் ரிம் ஹோட்டன் ஒன்றில் சந்தித்தனர். அப்போது அவளின் வேலை, அவனின் வேலை என இயல்பாகப் பேசிக்கொண்டனர். அதன்பின்னர் ஒரு திருமண விழாவில், ஒரு பிறந்தநாள் விழாவில் என அவர்களின் சந்திப்புகள் தொடர்ந்தன. அவளிடம் தான் நெருங்குவதை அவன் உணர்ந்தான்.

ஒரு நாள் தற்செயலாக இருவரும் ஸ்காபோரோ ரவுண் சென்ரறில் சந்தித்துக்கொண்டனர்.  “கோப்பி குடிப்பமா?” அவள்தான் அவனை அழைத்தாள். செக்கண்ட் கப் என்ற அந்தக் கடையில் அவனும் அவளும் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக இருந்து கதைத்தனர்.

“வசந்தியின்ர கதையை அறிஞ்சன். கவலையான விஷயம்,” கொஞ்சம் தயக்கத்துடன் அவன் சொன்னான். அவன் வேலைசெய்கின்ற கொம்பனியில்தான் வசந்தியும் வேலை செய்திருந்தபடியால் வேலையிடத்தில் அதுபற்றி அவன் அறிந்திருந்தான்.

“யா… காதலும் கத்தரிக்காயும்! அநியாயமாகச் செத்துப்போனாள் எண்டு எனக்கு அவளிலை சரியான கோவம். அவன் இல்லையெண்டால் என்ன? சரியான விசரி!” பெருமூச்செறிந்தாள்.

“ம், என்ன செய்யிறது? சிலருக்குக் காதல் பெரிய விஷயமாயிருக்கு. அதில்லை எண்டதைத் தாங்கிறதுக்கான உத்திகளோ வழிமுறைகளோ தெரியிறதில்லை. எல்லாருக்கும் வாழோணும் எண்டுதான் ஆசையிருக்கும், இருந்தாலும் …”

“எதுவும் நடக்காதமாதிரி அவன் நல்லாய்த்தானே இருக்கிறான். வசந்தியின்ரை குடும்பம்தான் அதிலையிருந்து மீளமாட்டாமல் இன்னும் தத்தளிச்சுக் கொண்டிருக்கு. அவனைக் கண்டு நாலு கேள்வி கேட்கோணுமெண்டு எனக்கு ஆசை, இன்னும் சந்தர்ப்பம் வருதில்லை”

கோபத்தில் அவளின் முகம் சிவந்தது. அவனுக்கு அது பிடித்திருந்தது. அப்படியாக மெதுமெதுவாக அவர்கள் இணைந்தனர். ஒருவருட உறவுக்குப் பின் அவளின் அப்பார்ட்மென்ற்க்கு அவன் இடம்மாறினான். கலியாணம் கட்டாமல் என்னெண்டு ஒண்டாயிருக்கிறது எனத் தன்னைத் தானே முதலில் கேட்டுக்கொண்டவன், முடிவில் அவளின் ஆலோசனைக்குச் செவிசாய்க்கும் அளவுக்கு அவளில் பைத்தியமாக இருந்தான்.

அப்படி இடம்மாறுவதன்மூலம், மாமா வீட்டில் இருப்பதன் அசெளரியம் குறையும், அவளைச் சந்திப்பதில் இருக்கின்ற சிக்கல்களும் முடிவுக்கு வருமெனத் தனக்குத் தானே அவன் சமாதானம் சொல்லிக்கொண்டான். ஆனால், ஒன்பதுமாத காலத்துக்குள் இப்படியாகுமென அவன் நினைக்கவேயில்லை.

வேலைமுடிந்து வீட்டுக்குப் போகும்போது அவளுக்குக் கோல் பண்ணுவான். வீட்டுக்குப் போனதும் அவளைக் காணாவிடில் திரும்பக் கோல் பண்ணுவான். அவள் உடனே பதிலளிக்காவிட்டால் பத்து நிமிடம் கழித்துத் திரும்பவும் கோல் பண்ணுவான். அவளுடன் கதைக்கும்வரை அவனால் அமைதியாக இருக்க முடிவதில்லை. அவளுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற தவிப்பு அவனின் மனதில் இருக்கும், அதைவிட அதிகமாக, தன் அழைப்பை உதாசீனம் செய்யுமளவுக்கு அவளுக்கு என்ன முக்கியமான விடயமிருக்கு என்ற கோபம் வரும். அவனின் அந்த நடத்தை அவளுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆறு, ஏழுதரம் அவன் கோல் பண்ணிய பின்னர், சிலவேளைகளில் அவள் அவனைத் திருப்பிக் கோல் பண்ணுவாள். “கோல் பண்ணேக்கே பதிலளிக்காட்டி நான் பிஸி எண்டு உங்களுக்கு விளங்காதே. இப்பிடியெல்லாம் கோல்பண்ணி அலுப்புத்தாறது எனக்குப் பிடிக்காது,” எனச் சினப்பாள். “எங்கை நிக்கிறாய், என்ன செய்கிறாய்?” என அவன் கேட்டால் அவளின் சுதந்திரத்தில் அவன் தலையிடுகிறான் என அவளுக்கு ஆத்திரம் வரும். கோல் பண்ணிச் சாப்பிட்டியா என்று கேட்பதுகூட அவளுக்குப் பிடிப்பதில்லை. தான் ஒரு சின்னப் பிள்ளையில்லை, தனக்குத் தன்னைக் கவனிக்கத்தெரியும் என்பதுதான் அவளின் கருத்தாகவிருந்தது.

அவளுக்குப் பிடிக்கவில்லை என்று அவற்றைச் செய்யாமல்விட அவனால் முடியவில்லை. அவள் வீட்டுக்குப் பிந்தி வரும் நாட்களில் வேண்டுமென்று அவளை எரிச்சலூட்டுவதற்காக சினிமாப் பாட்டை உச்சஸ்தாயில் போட்டுக்கேட்பான் அல்லது அவளுக்குப் பிடிக்காத வேறு ஏதாவது ஒன்றைச் செய்வான்.

கடந்த இரண்டு வாரங்களாக, “எங்கடை உறவு சரிவரும்போல தெரியேல்லை. எங்கடை இயல்புகள் எல்லாம் வேறைவேறையா இருக்கு. இந்த உறவு வேண்டாம், விட்டிடுவம். எங்காவது ஒரு இடம் பாத்துக்கொண்டு நீங்க போறது நல்லம்,” என்ற மாதிரி அவள் அவனிடம் அடிக்கடி சொன்னாள். அவள் கூறிய எதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, சும்மா பேச்சுக்குத்தான் சொல்கிறாள், அவனைப் பிரிகிறதுக்கு அவளுக்கும் விருப்பமிராது. விரைவில் கோபம் ஆறி பழையபடி வந்துவிடுவாள் என்றெல்லாம் தனக்குத் தானே அவன் கற்பனை செய்துகொண்டான்.

அன்று அவள் வேலையால் வந்தபோது அவனுக்கு அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள்.  சிவப்பு நிறச் சட்டையில் அவள் நல்ல செக்சியாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. கதிரையில் இருந்தவன் வேகமாக எழுந்து, அவளின் பின்பக்கமாகக் சென்று அவளைக் கட்டியணைத்து அவளின் கழுத்தில் ஆசையாக முத்தமிட்டான். அவள் அவனிடமிருந்த விலக எத்தனித்த போது, அவளை முன்பக்கமாகத் திருப்பி அவளின் உதட்டைக் கெளவினான். அவனுக்கு அவனின் காமத்தை அடக்க முடியவில்லை. அவளுக்கு கோபம் உச்சிக்கேறியது.

“உங்களுக்கு ஒண்டும் விளங்குதில்லையா? எனக்கு உங்களைப் பிடிக்கேல்லை, தயவுசெய்து என்னைத் தொடாதேயுங்கோ,” எனக் கத்தினாள். “எப்ப வீட்டை விட்டிட்டுப் போகப்போறியள்?” என வெடித்தாள். அவளின் கோபம் அவனுக்கு உண்மையிலேயே புரியவில்லை.

“ஏன் என்னைப் பிடிக்கேல்லை எண்டு சொல்லு, பிறகு நான் போறன். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கேலுமா?”

“என்ன, எல்லாத்தையும் நான் இனி பட்டியல்போட்டுக் காட்டுறதோ? ஒண்டும்தான் பிடிக்கேல்லை!” வெறுப்பை உமிழ்ந்தாள் அவள்.

“அப்ப முந்தி உனக்கு என்னிலை என்ன பிடிச்சது? வீட்டிலை இருக்க வாவெண்டு என்னத்துக்கு கூப்பிட்டனி? ரண்டு வருஷமா இருந்த உறவை சும்மா முறிக்கேலுமோ? மாமாவைக்கும் தெரியும். இதென்ன விளையாட்டு எண்டு நினைச்சியோ? அதோடை நான் வாடகை தாறன். எனக்கு நீ இரண்டு மாத முன்னறிவித்தல் தரவேணும். தெரியுமோ?” பதிலுக்கு அவனும் கத்தினான். அவனிடமிருந்து விலகிச்செல்ல முயன்றவளின் கையைப் பிடித்திழுத்தான்.

அவள் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக்கொண்டாள். ஆத்திரமடைந்த அவன் மேசையிலிருந்த பூச்சாடியை எடுத்தெறிந்தான். வீடு அதிர்ந்தது. அடுத்த அரை மணித்தியாலத்தில் வீட்டுக்குப் பொலிஸ் வந்துநின்றது. அவளின் விருப்பமில்லாமல் அவளைப் பாலியல்ரீதியாகத் தொட்டது, வீட்டை விட்டுப் போகச்சொல்லியும் போகாதது, கையைப் பிடிச்சிழுத்தது எனப் பல குற்றம்சாட்டி அவனை அவர்கள் கைதுசெய்தனர்.

நடந்ததைச் சொல்லிப் பிணையெடுக்கும்படி மாமாவிடம் கேட்டபோது அவனின் உடலும் மனமும் கூனிக் குறுகிப்போயின. அந்த அவமானத்தைப்போல ஒன்றை அவன் வாழ்நாளில் ஒரு நாளும் உணர்ந்திருக்கவில்லை. பிணையில் வெளியே வந்தபோது இதுபற்றி வேலையிடத்துக்குத் தெரியவராதுதானே எனப் பல தடவைகள் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான். அவமானமும், வெட்கமும், கோபமும் அவனைப் பிடுங்கித்தின்றன. “அவளின்ர சினேகிதி இறந்த சோகத்தை ஆற்றுறதுக்கான ஒரு வழியாத்தான் அவள் உன்னைப் பாவிச்சிருக்கிறாள். இனியும் இப்பிடியெல்லாம் ஏமாந்து போகாதை, நல்லதொரு பொம்பிளையாய்ப் பாத்து நாங்கள் கட்டிவைக்கிறம்,” என்றார் மாமி. திரும்பவும் மாமா வீட்டில் போயிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. மாமா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு வீட்டின் அடித்தள அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டான்

X     X     X

கவுன்சிலிங்கின் பன்னிரண்டு அமர்வுகளில் முதல் சில கோபத்திலேயே கழிந்தன. ஒருநாள் அவன் செய்த எந்தச் செயல்கள் அவளுக்கு அவனில் கோபத்தை ஏற்படுத்தின, ஏன் அவை அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தின என அவன் நினைக்கிறான் என்றெல்லாம் எழுதிக்கொண்டு வரும்படி அந்தக் கவுன்சிலர் கேட்டிருந்தார்.

அப்படி அவன் எழுதியவை பற்றி உரையாடியபோது அவளுக்கு அவை ஏன் கோபத்தை ஏற்படுத்தின என்பது தனக்கு விளங்கவில்லை என்றான் அவன். அத்துடன் தான் அப்படிச்  செய்வது தன்னுடைய கரிசனையைத்தான் காட்டுகிறது என விளக்கம் சொன்னான்.

மேலும் இரண்டு வாரங்கள் சென்றன. ஒருவருக்குப் பிடிக்காத போது அவரின் உடலைத் தொடுவது சட்டப்படி தவறு எனக் கனேடியச் சட்டம் இருப்பது தனக்குத் தெரியாது என்றான். இலங்கையில் ஒருவர் கோபித்தால் கையிலை பிடித்து இருத்தித்தான் ஆட்கள் விளக்கம் சொல்வது, விளக்கம் கேட்பது எனக் கலாசார வேறுபாட்டை விளங்கப்படுத்த முயற்சித்தான்.

“உங்கடை ரோல் மொடல் யார்?” என அந்தக் கவுன்சிலர் கேட்டார்.

“நான் சின்ன வயசாயிருக்கேக்கேயே அம்மாவும் அப்பாவும் செல்லடிபட்டு செத்துப் போச்சினம். அம்மம்மாவுடன்தான் நான் வளந்தனான்.”

“ஓ, சொறி. அப்ப ஆண் ரோல் மொடல் எண்டு ஆரைச் சொல்லுவியள்?”

“தெரியேல்லை”

“சரி, உங்கடை அம்மம்மா உயிரோடை இருக்கிறாவா? இந்தச் சம்பவம் பற்றி அவவுக்குச் சொன்னா அவ என்ன சொல்லுவா?”

“அவ இருக்கிறா. ஆனா என்ன சொல்லுவா எண்டு தெரியேல்லை. இதைப்பத்தி அவவுக்கு நான் ஒண்டும் சொல்லேல்லை. தெரிஞ்சால் அவ கவலைப்படுவா.”

“என்னத்தைப் பற்றிக் கவலைப்படுவா எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“இப்பிடிப் பொலிசிலை நான் பிரச்சினைப்பட்டதைப்பத்தித்தான்”

“ஓ, சரி, அவவுக்குச் சொன்னீங்க எண்டால் அவ என்ன சொல்லுவா எண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“அவளுக்குப் பிடிக்கேல்லை எண்டால், விட்டிடவேண்டியதுதானே எண்டு சொல்லக்கூடும்.”

“அது சரி, எங்களை விரும்பச்சொல்லி நாங்க ஒருத்தரையும் வற்புறுத்தேலாது”.

“ஓம், விளங்குது, பறக்கவிடு, அது திரும்பிவந்தால் உன்னுடையது எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறவை.”

“ம்ம், அவ விலகிப்போயிட்டா, நீங்க தனிச்சுப் போயிடுவியள் எண்டு நினைச்சனியளோ?”

“நான் தனியத்தான் வளந்தனான், அம்மா, அப்பா, சகோதரம் எண்டு ஒருத்தருமில்லை. அம்மம்மாவும் இப்ப தூரத்திலை. ரண்டு வருஷ உறவு இது”

“ரண்டு வருஷமா வளத்த உறவை எப்படிப் பிரியிறது எண்டு யோசிச்சியள்.”

“ஆனா, ஒரு ஆளுக்கு விருப்பமில்லை எண்டால் விலகிட வேணுமெண்டு இப்ப நான் படிச்சிட்டன். சும்மா இழுத்துவைச்சுக் கொண்டிருக்க வெளிக்கிட்டுக் கடைசியிலை பொலிஸ் கேஸ் ஆயிட்டுது. முதல்தரமெண்டதாலை நல்லவேளை வேலையிடத்துக்குத் தெரியவரேலை.”

“உங்கடை சுயமேம்பாட்டுக்காக, இப்பிடியான பிரச்சினைகள் இனிமேல் வராமல் தடுக்கிறதுக்காக என்ன செய்யலாமெண்டு நினைக்கிறியள்?”

“நீங்கதான் சொல்லோணும். இப்ப உங்களுக்கு என்னைப்பற்றித் தெரியும், நான் என்ன செய்யவேணுமெண்டு நீங்க நினைக்கிறீங்க?”

“ம், இந்தப் பிரச்சினையள் வராமல் எப்பிடித் தடுத்திருக்கலாமெண்டு நீங்க நினைக்கிறியள்?”

“எனக்குப் பொறுமை இல்லை. பொறுமையை நான் வளத்துக்கொள்ள வேணும்.?

“மிகச் சரி, பொறுமை மிக முக்கியம்.”

“ஒரு பிரச்சினைக்கு உடனடியாத் தீர்வு காணவேணுமெண்டு வெளிக்கிடுறதாலை பிரச்சினை பெரிசாய்ப் போகுது.  அதைக் கொஞ்சம் ஆறப்போட்டால் சிலவேளை வேறைவிதமா நல்ல தீர்வும் வரலாம்.”

“ம்ம், நல்லதொரு எதிர்வினை அது. அதோடை மற்றவை தூரவிலகினால், மனசிலை ஏற்படுற வெறுமைக்கு என்ன செய்யலாமெண்டும் கற்றுக்கொள்ள வேணும்.”

“அதுக்கு நான் என்ன செய்யலாம்?”

“சமூகத்திலை பல விதமான சமூக சேவை நிறுவனங்கள் இருக்கு. நீங்க அவையை அணுகலாம். அவையை அணுகி, கைவிடப்பட்டு இருக்கிறமாரி அல்லது தனிச்சிருக்கிறமாரி உணர்ற நிலையைக் கையாளுறதுக்குக்கான உத்திகளை அறிஞ்சுகொள்ள விரும்புறதாகச்  சொல்லுங்கோ.”

“ஓம், ஓம்”

“உங்கடை அம்மா, அப்பா செத்துப்போனபோது உங்களுக்கு எத்தனை வயசு?”

“ஏழுவயசு.”

“அந்த இழப்புச் சம்பந்தமாக ஏதாவது கவுன்சலிங்குப் போனனீங்களா?”

“இல்லை”

“ஓ. அப்ப உங்களுக்குக் கவுன்சலிங் கட்டாயம் உதவிசெய்யும், பழைய காயங்களையும் ஆற்றுறதுக்கு உதவுமெண்டு நான் நம்புறன்.”

“உங்களுக்கு மிக்க நன்றி, உங்களிட்டை இருந்து நான் நிறையப் படிச்சிட்டன். முதலிலை எனக்குப் பிடிக்கேல்லை, இப்ப எல்லாம் விளங்குது.”

“உங்களுக்கு உதவ முடிஞ்சதிலை எனக்குச் சந்தோஷம். உங்கடை எதிர்கால வாழ்க்கைக்கு என்ரை வாழ்த்துகள்.”

“மீண்டும் நன்றி.”

தொலைபேசியை வைத்தபோது மனதில் ஒருவகை வெறுமையும், அதேவேளையில் அமைதியும் அவனில் குடிகொண்டன. ஆழமாக மூச்செடுத்தான். பின்னர் ரேடியோவைப் போட்டுவிட்டு தேநீர் போடத் தயாரானான்.

மனமே ஓ மனமே நீ மாறிவிடு, மலையோ அது பனியோ நீ மோதி விடு,” சித்திராவின் இனிய குரலில் ஒட்டோகிராப் திரைப்படப் பாடல் ஒலித்தது.

 

 

 

 

 

ஸ்டார்

லட்சுமிஹர்

 

இருள் கொஞ்சம் எட்டி பார்க்கத் தொடங்கியிருந்தது. ஹரிஷும், அருணாவும் பாலுவுக்கு பிறந்தநாள் கேக் வாங்க பேக்கரிக்கு வந்துள்ளனர். அருணா பள்ளி முடிந்து ஹரிஷை வீட்டுக்கு கூட்டி வரும் வழியில் இருக்கும் பேக்கரி பூட்டி இருந்ததால், கொஞ்ச தூரம் நடந்து இங்கு வந்து சேர்ந்தனர். வந்தவுடன் ஹரிஷ் ஓடிப் போய் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டான், அருணா அங்கிருந்தவரிடம் பிறந்தநாள் கேக்கை ஆர்டர் செய்தாள். இதில் எதிலுமே ஹரிஷ் பங்கெடுத்து கொள்ளவில்லை, அது அவனுக்கு பிடிக்கவும் இல்லை. கேக் தயார் ஆகி கொண்டிருக்க அருணா ஹரிஷ் உடன் வந்து சேரில் உட்கார்ந்து கொண்டாள். வரும் வழியில் தான் சர்பத் குடித்தனர், அது அருணாவுக்கு பிடித்த கடை.
ஹரிஷ் கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். இது வரை இந்த சந்தில் அவன் வந்ததே இல்லை. கடை எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிடலாம், இல்லை வேறு ஒன்றாகக் கூட மாறக்கூடும் என்ற தோற்றத்தில் இருந்தாலும், அவ்வளவு அழகாக இருந்தது அழுக்கு படிந்து போய். எல்லாம் எண்ணெய்ப் பிசுக்கு. ஆர்டர் செய்த கேக் வந்தது . அவனுக்கு பிடித்த ரெட் கலர். அதில் அவனுடைய பேரும், அப்பாவுடைய பேரும் சேர்த்தே எழுதி வாங்கினாள் அருணா.

சின்ன வீடுதான் என்றாலும் முன்னால் தோட்டம் இருப்பதால் அழகாக இருந்தது. கேக்கை டேபிள் மேல் வைத்த ஹரிஷ் பெட்ரூமுக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டிருந்தான். அருணா–ஹாலை டெகரேட் செய்தாள். இரவு மணி ஆகிக் கொண்டே இருக்க, அருணா பாலுவிற்கு தொடர்ந்து கால் செய்தாள். பாலு பதில் அளித்த மாதிரி தெரியவில்லை. ஹரிஷ் ஹாலில் டெகரேட் பண்ணியதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தான். அது எதுவும் கடையில் வாங்கி அழகுபடுத்தியது கிடையாது, அருணாவே பேப்பர் , சார்ட் என இருப்பதை வைத்து செய்தது, அவ்வளவு அழகாக இருந்தது.அதில் ஹாப்பி பர்த்டே பாலு என எழுதியிருந்தது.

பாலுவிற்கு ஸ்டூடியோவில் ஷூட்டிங் போய்க் கொண்டிருப்பதால் வரமுடியாது என்றும் கூடவே சாரியும் கேட்டு விட்டார். பாலு பிறந்த நாள் முடிய 3 மணி நேரம் தான் இருந்தது, இப்படி நடக்கும் என்று ஹரிஷிற்கு தெரியும் அதனால் தான் இதில் எதிலும் பங்கு எடுத்து கொள்ளவில்லை. அருணா இரவு சாப்பாடு சமைக்காதலால், பாலு பிறந்தநாளுக்கு வாங்கின கேக்கை வெட்டி கொடுத்தாள். ஹரிஷ் டிவியை ஆன் செய்து பார்க்க தொடங்கினான், கேக்கை தின்று கொண்டே. சேனலை மாற்றும்போது ஒரு சண்டை காட்சி ஓடிக் கொண்டிருந்தது, சட்டென நிறுத்தி விட்டான். ஸ்டண்ட் பாலு. அந்த காட்சியை பார்க்க விருப்பமின்றி ஓடிப்போய் படுத்துக் கொண்டான் முகத்தை பெட்டில் புதைத்தபடி.

போன சண்டே டிவியில் போடப்பட்ட அப்பா அடிவாங்கி இருந்த படத்தை பார்த்து விட்டு கிளாசில் இருந்த கவுதம் ஹரிஷை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான். அதனால் அம்மா, அப்பாவிடம் சண்டை. அவர்களுக்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.

ஒரு நாள் பாலுவை வைத்து கிளாசில் கவுதம் ஒரு ஜோக் சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர்.

‘ silent don’t listen to gautham. Gautham stop that…’

என மேடம் கூற அந்த சிரிப்பு சத்தம் அடங்கிப் போனது. ஹரிஷ் அந்த கிளாசில் தலையை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அதன் பிறகு இன்டெர்வலில் ஹரிஷ் கவுதமை போய் அடிக்க இருவரும் சண்டை போடத் தொடங்கினர், ஹரிஷுக்கே அதில் அடி பலமாக விழுந்தது. அதிலிருந்து ஹரிஷை “ஸ்டண்ட்மேன் “என கூப்பிடத் தொடங்கி விட்டனர், சிரித்து கொண்டே.

ஆட்டோ வை மிஸ் பண்ணியதால், பாலு வந்து ஸ்கூலில் விட நேர்ந்தது, ஸ்கூலில் பாலுவும் ஹரிஷும் நடந்து கொண்டிருக்கையில் நந்தன், “ஸ்டண்ட் மேன் ,” என கத்தி விட்டு சென்றான். ஹரிஷுக்கு கோவம் தாங்க முடியவில்லை, ஆனால் பாலு திரும்பி அவனுக்கு தன்னுடைய ஆர்ம்ஸ் -ஐ மடித்து காட்டி விட்டு போனார். அதை நந்தன் கிளாசில் வந்து, “அவரோட ஆர்ம்ஸ் எவ்வளவு பெருசா இருந்துச்சு தெரியுமா, நம்ம பென் டென் -ல் வரும் ஃபோர் ஆர்ம்ஸ் மாதிரி இருந்தது,” என சொல்ல அவனுக்கு பெருமையாக இருந்தது. ஹரிஷுக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டரும் அது தான். அருகில் இருந்த கவுதம் நடு பெஞ்சில் அமர்ந்திருந்த ஹரிஷ் காதுக்கு விழுகும்படி, “வில்லனுக்கே இவ்வளவு பெரிய ஆர்ம்ஸ் னா அவங்கள அடிக்கிற ஹீரோஸ்க்கு எவ்வளவு பெருசு இருக்கணும்,” என சொல்லவும் சுத்தி இருந்தவர்கள் சிரித்து கொண்டே தலை ஆட்டினர்.

அன்றிரவு ஹரிஷ் அப்பா சாப்பிடுவதற்கு முன் தண்டால் எடுத்து கொண்டிருந்தார், அருணா சாப்பிட எல்லாத்தையும் கூப்பிட பாலு கைக்கு போனது ரிமோட். அதில் கே டிவி யை வைத்தார், அதில் அவர் நடித்திருந்த சண்டைக் காட்சி வர போவதாகவும், அதை எடுக்கையில் எப்படியெல்லாம் இருந்தது, டைரக்டர் சார் குட் னு மைக்குல சொல்ல, யூனிட் முழுக்க கை தட்டுனாங்க, அதுக்கப்புறம் தான் எங்க மாஸ்டரு என்ன கூடவே வச்சுக்கிட்டாரு என சொல்லி கொண்டிருக்கையில், அந்த சண்டைக்காட்சி வந்ததும் பாலு அதோ பாரு என கை காட்ட அதில் ஒருவர் தீப்பற்றி அலறும் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. அதை தான் பாலு சொல்லுகிறார் , ஹரிஷ் தடாலென சாப்பாடை தட்டி விட்டு ரூமுக்குள் போய் விட்டான். அந்த சண்டைக் காட்சியில் பாலுவின் மூஞ்சி கூட தெரியவில்லை. பாலுவிற்கு என்னவென்று புரியவில்லை, அருணா, பாத்து பயந்திருப்பான் என சொல்ல பாலு தலை ஆட்டிக்கொண்டார். இரவு ஏ வி ம் இல் ஷூட்டிங் இருப்பதால் வேகமாகவே கிளம்பிவிட்டார்.அருணாவுக்கு தெரியும் எதனால் ஹரிஷ் அப்படி நடந்து கொண்டான் என்று. என்ன சொல்ல அவனிடம், பாலு சென்றதும் பெட்ரூம் க்கு சென்ற அருணா ஹரிஷ் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து விட்டு அந்த அறை கதவை சத்தம் இல்லாமல் மூடினாள். அந்த படத்தை தொடர மனமில்லாமல் டிவியை அணைத்து விட்டாள்.

“டேய் இந்த கேக்க முழுசா சாப்பாடலையா நீ,” எனக் கேட்டு பக்கத்தில் அமர்ந்தவளுக்கு ஹரிஷ் அழுதது தெரியாமலில்லை. “எதுக்கு இப்போ அழகுற,” என்ற கேள்விக்கு ஹரிஷ் இடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. “என்னாச்சுன்னு சொன்னாதான தெரியும்,” என்றதும் ஹரிஷ் தலையை அருணா தோல் மீது புதைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தவன், “என்ன ஸ்கூல்ல ஸ்டண்ட் மேன், ஸ்டண்ட் மேன் னு கூப்பிட்றாங்க, அசிங்கமா இருக்கு” என்றதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை அருணா.

அழுகையை நிப்பாட்ட அருணா பீரோவில் இருந்து ஏதோ போட்டோ வை எடுத்து தன் பின்னால் மறைத்து கொண்டாள், “சரி, அம்மா சொல்றதுக்கு பதில் சொன்னேனா ஒனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”.

“சர்ப்ரைஸா?” என டல் ஆக கேட்ட ஹரிஷ்ன் தலையை நிமிர்த்தி, “ஆமாம்,” என்றாள் அருணா.

“என்ன கேள்வி?”

“ஹரிஷுக்கு கஷ்டமா கேக்கலாமா இல்ல ஈஸியா கேக்கலாமா?”
“ஈஸியா,” என சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் ஹரிஷ்.

“ஹரிஷுக்கு புடுச்ச ஹீரோ யாரு?

சட்டென, “விஜய்,” என தலை ஆட்டினான்.

“விஜய் தான் புடிக்குமா?”

“ஆமா”

“உண்மையா விஜய்தான?”

“ஆமா 100 வாட்டி ப்ரோமிஸ் விஜய்தான்,” என்று கட்டிலில் குதித்தான்.

அருணா கட்டிலை விட்டு எழுந்த தான் மறைத்து வைத்திருந்த போட்டோவை மெதுவாகக் காட்டினாள் ஹரிஷிடம். அதை ஹரிஷால் நம்ப முடியவில்லை. அது அப்பாவும், விஜயும் சேர்ந்து நிற்கும் போட்டோ, அதில் விஜய் அப்பாவை அடிக்கவில்லை. இருவரும் சிரித்து கொண்டிருக்கும் போட்டோ அது.

அதை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த ஹரிஷ் அம்மாவைப் பார்த்து, “இது உண்மையிலே எடுத்ததா?”

“ஆமா”

“ஏன் கேக்குற?”

“இவ்வளவு நாளா ஏன் என்கிட்ட நீங்க காட்டவே இல்ல?”

உனக்குதான் அப்பாவ பிடிக்கவே இல்லையே,” என சொன்னவுடன் என்ன சொல்லுவது என தெரியாமல் தலையை கீழிறக்கி அந்த போட்டோ வை பார்க்க தொடங்கினான். அதில் நிஜமாகவே விஜயும், அப்பாவும் சிரித்து கொண்டிருந்தனர்.

“அப்போ அப்பா விஜய் கிட்ட அடி வாங்கலயா?”

“அது சும்மா டிஷ்ஷியும் டிஷ்யூம, விஜய் சார் அடிக்கற மாதிரி இவரு அடிவாங்குற மாதிரி நடிப்பாங்க. அதெல்லாம் சும்மா,” என சிரித்து கொண்டே ஹரிஷின் தலையில் முத்தமிட்டாள்.

“அப்பனா நான் இந்த போட்டோவ ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகவா ?”

சரி என்பது போல தலையாட்டினாள் அருணா. ஹரிஷை விட அருணாவே மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். ஆனாலும் பிறந்த நாளான இன்றைக்கும் பாலு வர வில்லை என்பதை மனதில் போட்டு அலைக்கழித்து கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு அந்த ராத்திரிகள் அவ்வளவு எளிதாக கடப்பதில்ல.

காலை எழுந்திருக்கையில் பாலு வீட்டில் தான் இருந்தார். ஹரிஷ் ஸ்கூலுக்கு போகும் முன் பாலுவை கூப்பிட்டு, “நேத்து எங்க போயிருந்தீங்க?” என அதட்டும் தொனியில் கேட்டான்.

பாலு அருணாவை பார்த்து சிரித்து விட்டு, “ஷூட்டிங்… டிஷ்ஷியும் டிஷ்ஷியும் ஷூட்டிங்,” என அவனை அடிப்பது போல செய்து காட்டினான்.

“விஜய் உங்கள அடுச்சாரா?”

“ஆமா”

ஹரிஷ் அழுவது போல அருணாவை பார்த்தான். அருணா ஓடிவந்து ஹரிஷை கட்டி பிடித்துக் கொண்டு பாலுவை கையால் தோளில் தட்டினாள். “அப்பா பொய் சொல்றாரு ஹரிஷ், நீ அழாத. அழக்கூடாது. இன்னொரு தடவ கேள” என கண்ணீரை துடைத்த, பாலுவை பார்த்து முறைத்து கொண்டாள்.

“இப்போ நீ அழுகாம இருந்தா உண்மைய சொல்லுவேன்”

ஹரிஷ் நிமிர்ந்து பாலுவை பார்த்தான்.

பாலு சிரித்துக் கொண்டே கை, கால்களை காட்டி, “இங்க பாரு ஒண்ணுமே இல்ல. அடிவாங்குனேன்ல டிவி ல, அதெல்லாம் சும்மா,” என சொல்லி சிரித்துக் கொண்டார்.

அருணா , “நீ போட்டோ எடுத்துக்கிட்டயா?” என கேட்க, “எடுத்துட்டேன்,” என தலை ஆட்டிக் கொண்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான் ஹரிஷ்.

அவன் எடுத்து வந்த போட்டோவை அனைவரும் ஆச்சரியதுடன் பார்த்து கொண்டிருந்தனர். நந்தன் ஓடி வந்து, “விஜயும் உங்க அப்பாவும் பிரண்ட்ஸா?” என கேட்டதற்கு, “ஆமா,” என சத்தமாக சொன்னான், கவுதம் காதிற்கு விழும் அளவிற்கு.

“அப்போ அடிக்கிறது எல்லா?”

“அது சினிமா, வெறும் டிஷ்ஷியும் டிஷ்ஷியும்தான்,” என பாலு செய்தது போலவே செய்து காட்டினான் ஹரிஷ்.

“அப்டினா விஜய பாப்பயா நீ?”

ஆமா எங்க அப்பா அடுத்தவாரம் கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு நானும் விஜய் கூட நின்னு போட்டோ எடுத்துப்பேன்”

அன்று சாயங்காலம் படுத்து கொண்டிருந்த அப்பாமேல் ஏறி விளையாடி கொண்டிருந்த ஹரிஷ், “அப்பா விஜய பாக்க கூட்டிட்டு போவையா ?” என கேட்டதற்கு, “கண்டிப்பா” என சொல்லி சிரித்துக் கொண்டார் பாலு. ஹரிஷ் சந்தோசத்தில் பாலுவின் நெஞ்சின் மேல் சாய்ந்து கை வைக்கையில், மேல் சட்டையின் அடியில் ஒரு பெரிய தழும்பு கையில்பட்டது, அது முன் பக்கம் கழுத்தில் ஆரம்பித்து இடுப்பு வரை சென்றது.

உன்னைக் கட்டிக் கொண்டு வாழ்வதற்கான காரணங்கள் சொல்லக் கூடியவையல்ல

எஸ். சுரேஷ்

 

ஐந்தடி பத்து அங்குல உயரம், ஸ்வரவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் பதித்த நீல நிற பட்டுச் சேலை. நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையுமாய் தங்களை நோக்கி வந்த வர்ஷாவை விருந்தினர்கள் மேல் பன்னீர் தெளிக்க அமர்த்தப்பட்ட மூன்று பெண்களும், வாயில் காவலனும், மாளிகையை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களும் வாய் திறந்து இமை மூடாமல் பார்த்தார்கள். இவர்கள் யாரையும் கவனிக்காமல் அரவிந்துடன் ஹாலுக்குள் நுழைந்தாள் வர்ஷா. ஹாலின் மறுபுறத்தில் உள்ள கதவை காட்டி,“அந்த கதவ திறந்தா வேற லோகம். அங்கதான் அம்மாவும் இருக்கா”, என்று சொல்லிவிட்டு அரவிந்த் வேறு யாரையோ வரவேற்க சென்றுவிட்டான்.

ஐநூறு பேர் தாராளமாகக் கொள்ளும் ஹால் அலங்கரிக்கப்டுவதை பார்த்தபடியே மறுபக்கம் சென்றுக் கொண்டிருந்த வர்ஷா தன் பெயரை யாரோ கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்த்தாள். அன்னபூர்ணா ஆண்ட்டி வேகமாக அருகில் வந்தது வர்ஷாவை அணைத்துக்கொண்டு, “எவ்வளவு நாள் ஆயிற்று உன்னை பார்த்து. எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள். “நீ இவ்வளவு இறுக்கமாக கட்டிக்கொண்டால் அவள் புடவை கசங்கிவிட போகிறது. கொஞ்சியது போதும். அவளை விடு”, என்று கூறிக்கொண்டு ராவ் அங்கிள் அருகில் வந்தார்.

“உன் புடவை அருமையா இருக்கு. இனிக்கி நீ ரொம்ப அழகா இருக்க. தலைல ஒரு முழம் மல்லிப்பூ வச்சிருந்தா அப்படியே மஹாலக்ஷ்மி மாதிரி இருப்ப”, என்றாள் அன்னபூர்ணா ஆண்ட்டி.

“அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்”, என்றார் ராவ்

“அழகா இருப்பது எப்பவுமே ஃபேஷன்தான்”, என்றாள் அன்னபூர்ணா ஆண்ட்டி

“யெஸ்” என்ற வர்ஷா அன்னபூர்ணா ஆண்ட்டிக்கு ஹை ஃபைவ் கொடுத்தாள்.

வர்ஷாவுக்கு இந்த தம்பதியை பார்த்தபோதெல்லாம் அவள் பால்ய நினைவுகள் மேலோங்கி வந்தது. அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்ததும், வர்ஷாவை தங்கள் குழந்தை போலவே பார்த்துக்கொண்டதும் மனக்கண் முன் தோன்றின. அவர்கள் இன்னும் தன் மேல் அதே அளவு பாசம் வைத்திருப்பதை கண்டு வர்ஷா நெகிழ்ந்தாள். எப்பொழுதும் போல், “இவர்களுக்கு நிஷா எப்படி மகளாக பிறந்தாள்?” என்றால் கேள்வி மனதுக்குள் எழுந்தது.

வர்ஷா கார்டனுக்கு செல்லும் கதவை திறந்தவுடன் ராட்சச ஸ்பீக்கரிலிருந்து அவள் காதுகளை செவிடாக்கும் அளவுக்கு ஒலி கேட்க முகம் சுளித்தாள்.

வர்ஷாவின் கண்ணுக்கு முன் பரந்திருந்த புல்வெளியில் நான்கு வடநாட்டு ஆண்கள் அங்கு கூடியிருந்த பெண்களுக்கு மருதாணி இட்டுக்கொண்டிருப்பதை கண்டாள். வர்ஷாவின் மகள் ஓடி வந்து தன் கைகளை காட்டி, “இந்த பேட்டர்ன் நல்லா இருக்கு இல்ல?” என்று கேட்டாள். “ரொம்ப நல்லா இருக்கு”, என்று சொன்னவுடன் அங்கிருந்து ஓடி அவள் நண்பர்கள் கூட்டத்தில் மறைந்தாள். நாலாபுறமும் பிரகாஷை தேடிய வர்ஷாவின் கண்களுக்கு தூரத்தில் ஒரு செயற்கை அருவியும், மரங்களிலிருந்து வழியும் சீரியல் பல்புகளும், சிறு குளமும் அதில் இரு வாத்துகளும்தான் தென்பட்டன. “வர்ஷா” என்று மறுபடியும் ஒரு குரல் கேட்டது. பிரதீபாவின் குரல். பிரதீபா மணமகளின் தாய். வர்ஷாவுடைய இளவயது தோழி. வர்ஷாவின் இரண்டு ரகமான தோழிகளில் பிரதீபா முதல் ரகத்தை சேர்ந்தவள். வர்ஷாவின் வெற்றிகளை தன் வெற்றியாய் நினைத்து அவளுக்கு தோழியாக இருப்பதை பெருமையாக நினைப்பவள். இன்னொரு ரகம் வர்ஷா எட்டிய உயரங்களை கண்டு பொறாமைப்பட்டவர்கள். அந்த சங்கத்துக்கு நிஷா நியமிக்கப்படாத தலைவியாக இயங்கினாள்.

வர்ஷாவைப் பார்த்தவுடன் பிரதீபா கூறிய முதல் வாக்கியம், “பிரகாஷ் ஒரு மணி நேரமா குடிக்கிறான். எப்பவும் போல நிஷா என்கரேஜ் செய்யறா”. அதற்கு பிறகு தான், “வாவ். புடவை சூப்பர். உன் செலெக்ஷன் எப்பவுமே சூப்பர்தான்” என்று சொன்னாள். பிரகாஷ் எங்கிருக்கிறான் என்று வர்ஷா கேட்பதற்குமுன், பிரதீபாவின் தந்தை வர்ஷாவை கைகாட்டி அழைத்தார்.

வர்ஷா அவர் அருகில் உட்கார்ந்தவுடன், “என்னம்மா வர்ஷா. நீயும் டான்ஸ் ஆடப் போறியா?” என்று கேட்டார்.

பாட்டுச் சத்தம் காதைப்  பிளந்து கொண்டிருந்ததால் அவர் உரக்க பேச வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் வர்ஷாவுக்கு அவர் பேசியது காதில் சரியாக விழவில்லை. அவர் மறுபடியும் அதே கேள்வியை இன்னும் உரக்க கேட்டார்.

“வை நாட்?” என்றார் பிரதீபாவின் தாயார். “காலூரியில் டான்ஸ் போட்டியென்றால் அதில் வர்ஷாதான் ஜெயிப்பாள் என்று பிரதீபா கூறியிருக்கிறாள்.”

“அப்படியென்றால் சரி. இப்பொழுதெல்லாம் டான்ஸ் தெரியவில்லை என்றால் கல்யாண சத்திரத்துக்குள் விடுவதில்லை தெரியுமா?”.

“அப்பா டோன்ட் எக்ஸாஜிரேட்”, என்ற பிரதீபா, “இவர் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். அதுதான் அவர் வேலை. நாம போகலாம் வா”, என்று கூறிவிட்டு வர்ஷாவை அழைத்துக்கொண்டு நூறு மீட்டர் தூரத்தில் இருந்த கண்ணாடி மாளிகையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வளைந்து நெளிந்து சென்ற பாதையின் வலதுபுறத்தில் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்கின.. இடது பக்கம் டிஸ்க் ஜாக்கி ஒருவன் சி‌டிகளை மாற்ற, இளம் பெண் ஒருத்தி மைகில் “பீப்பிள் லெட் மீ சீ சம் எனர்ஜி” என்று கத்த, கூடியிருந்த இளைஞர் கூட்டம் புயலில் சிக்கிய தென்னை மரம்போல் தலையை வேகமாக ஆட்ட, மருதாணி காயாத கைகளை வான் நோக்கி வைத்துக்கொண்டு நடனமாடும் பெண்களை கடந்து வர்ஷாவும் பிரதீபாவும் நடந்தனர்.

“நிஷாவுக்கு உன் மேல இன்னும் அந்த கோவமும் பொறாமையும் போகவே இல்ல. பிரசாத் உன்ன கல்யாணம் செஞ்சதுலேர்ந்து அவ இப்படி ஆயிட்டா. அப்ப கோவப்பட்டா போறாமப்பட்டா சரி. இப்போதான் அவளுக்கு எல்லாம் இருக்கே. இன்னும் ஏன் இந்த கோவமும் பொறாமையும்?” என்று பிரதீபா கேட்டாள்.

“சில பேர மாத்த முடியாது. அவளுக்கு பிரசாத் மேல கோவம் இல்ல. அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு பிரகாஷை காதலிப்பது விட்டுட்டா. ஆனா ஏனோ தெரியல. அவளுக்கு ஏன் மேல கோவமே தீரல”

“நீ நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை அவக்கிட்ட பேசணும். நீ இன்னும் ஸ்கூல் பிரண்ட் மாதிரியே அவள நடத்திட்டிருக்க.” இருவரும் மௌனமாக நான்கு அடிகள் எடுத்து வைத்த பின்னர் பிரதீபா வர்ஷாவை கேட்டாள், “ஏன்டீ, அந்த ஆள இன்னும் ஏன் டிவோர்ஸ் பண்ணாம இருக்க. எவ்வளவு நாளு தான் அவன் தொல்லைய தாங்கிண்டிருப்ப? அவன் வேலைக்குப் போயி இப்போ என்ன பத்து வருஷம் ஆச்சா? அதுக்கு மேல குடிக்காம ஒரு நாளும் அவனால இருக்க முடியாது. பின்ன எதுக்கு அவன கட்டிண்டு அழற” பிரதீபா இதை  ஐம்பதாவது முறை கேட்கிறாள். எப்பொழுதும் போல் வர்ஷா, “பாக்கலாம், பாக்கலாம்” என்றாள்.

ஏதோ பேச ஆரம்பித்த பிரதீபா எதிரில் வந்தவரை நிறுத்தி“இது அமெரிக்காவில் இருக்கும் என் மாமா”, என்று வர்ஷாவுக்கு அறிமுகப்படுத்தினாள். “இவள் என்னுடைய நெருங்கிய தோழி, வர்ஷா. இவள் ஐ‌பி‌எம் இந்தியாவின் தலைமை அதிகாரி. இந்தியாவின் டாப் டென் பவர்ஃபுல் பெண்களில் எட்டாவது இடத்தை பிடித்தவள்.” “ஓ ஐ ஸீ”, என்றாள் வர்ஷா

வர்ஷா ஐ‌பி‌எம் இல் தலமை அதிகாரி என்று கேட்டவுடம் அவர் முகம் மாறியது. இவள் அவர் பதவியை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்ற அவர் தவிப்பு வர்ஷாவுக்கு புரிந்தது. வர்ஷா எதுவும் கேட்பதற்கு முன்னால், “கிவ் மீ எ மினிட்”, என்று சொல்லிவிடு அங்கிருந்து நகர்ந்தார்.

பிரதீபா கேட்ட கேள்வியை வர்ஷா அசை போட்டுக் கொண்டிருந்தாள். தான் ஏன் விவாகரத்து வாங்கவில்லை என்று வர்ஷாவுக்கே விளங்கவில்லை. தனக்கு போட்டியாக வந்த பல ஆண்களை இடது கையால் புறம் தள்ளிவிட்டு முன்னேறிய என்னால் பிரகாஷை ஏன் என் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறிய முடியவில்லை? எல்லா பக்கமும் வைக்கப்பட்டிருந்த ராட்சச லைட் பல்புகளின் ஒளியில் நாலு பக்கமும் தங்கள் நிழல் கூட வ \ர, மௌனமாக கண்ணாடி மாளிகைக்குள் வர்ஷாவும் பிரதீபாவும் நுழைந்தார்கள். நுழைந்தவுடன்  நிஷாவை பார்த்தார்கள். நிஷா அவர்களை பார்த்துவிட்டு கையாட்டினாள். கையில் வைத்திருந்த கோப்பையை உயர்த்தி, “டெகீலா” என்றாள் நிஷா. “உனக்கும் ஒரு கோப்பை சொல்லவா?”

“நீங்க நடத்துங்க. எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லிவிட்டு பிரதீபா அவர்களிடம் விடை பெற்றாள்.

“உனக்கு என்ன லைம் ஜூஸ் தானா?” என்று வர்ஷாவை கேட்டாள் நிஷா

“ஆம்”, என்று சொன்னவுடம் அங்குள்ள ஒரு சர்வரிடம் “ஒரு லைம் ஜூஸ் கொண்டு வா”, என்று நிஷா ஆணையிட்டாள்.

வர்ஷாவின் கண்கள் பிரகாஷை தேடின. “பிரகாஷ் அங்க இருக்கான் பார்”, என்று வலது மூலையை காட்டினாள் நிஷா.

அந்த மூலையில் பார் இருந்தது. மேஜைகளின் மேல் வைன், விஸ்கி, ஸ்காட்ச், ரம், வொட்கா, டெகிலா, ஜின் என்று பலத்தரப்பட்ட உயர்ரக மதுபானங்களும், அதை பருகுவதற்கு பல வடிவங்களில் கண்ணாடி கோப்பைகளும், அதன் அருகில் ஐஸ் க்யூப், சோடா மற்றும் ஸ்ப்ரைட் புட்டிகளும் இருந்தன. கொறிப்பதற்காக வறுத்த வேர்க்கடலையும், முந்திரியும் வைக்கப்பட்டிருந்தன. மேஜைக்கு அருகில் கையில் ஒரு கோப்பையுடம் பிரகாஷ் நின்று கொண்டிருந்தான்.

“நான் பிரகாஷுக்காக இங்கு வரவில்லை”, என்றாள் வர்ஷா.

அதை கேட்காதவள் போல் நிஷா சொன்னாள், “அவன் குடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது”. அவள் உதடுகளில் ஒரு வெற்றிப் புன்னகை இருந்தது.

வர்ஷா பல்லைக் கடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். பிரகாஷை இந்த கல்யாணத்துக்கு வரவேண்டாம் என்று வர்ஷா சொல்லியிருந்தாள். முதலில் சரி என்று சொன்னவன், நிஷாவின் பேச்சை கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டு வர்ஷா வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே இங்கு வந்துவிட்டான்.

“ஒன்று சொல்ல வேண்டும் வர்ஷா. இது போன்ற இடங்களில்தான் பிரகாஷ் மகிழ்ச்சியாக இருக்கிறான். நான் அவனை எப்பொழுது வீட்டில் பார்த்தாலும் டல்லாக இருப்பான். இங்கயாவது அவனை கொஞ்சம் சந்தோஷமாக இருக்க விடு”, என்று கூறிவிட்டு வர்ஷாவின் பதிலுக்கு  காத்திருக்காமல், “நான் இன்னொரு ரவுண்ட் டெகிலா கொண்டு வரேன்”, என்று சொல்லிவீடு அங்கிருந்து நகர்ந்தாள்.

எப்பொழுதும் போல் நிஷாவின் பேச்சு வர்ஷாவை ஆத்திரப்பட வைத்தது. ஆனால் அவளால் நிஷாவை நோக்கி கடும் சொற்கள் வீச முடியவில்லை. கோபத்தில் இருந்த அவள் தோளை யாரோ தட்ட வர்ஷா திரும்பி பார்த்தாள். பிரதீபாவின் கணவன் ராஜேஷ் வர்ஷாவை பார்த்து புன்னகைத்தான். “வெல்கம் வர்ஷா. ஏற்பாடுகள் எப்படி இருக்கு” என்று உரக்க கேட்டான். வெளியில் யாரோ வால்யூம் அதிகமாக்கியிருந்தார்கள். உள்ளே இருப்பவர்கள் பேசுவது கண்ணாடி சுவர்களில் முட்டி எதிரொலித்து வெளியிலிருந்த வந்த ஒலியுடன் கலந்தது. அந்த கண்ணாடி அறை சப்தங்களால் நிறைந்திருந்தது.

“எல்லாமே நல்லா இருக்கு ராஜேஷ். நான் இந்த ரிசார்ட்டுக்கு இதுவரை வந்ததில்ல. நல்ல எடமா இருக்கு”, என்றாள் வர்ஷா

“ஒன் ஆஃப் தி பெஸ்ட். பெங்களூர்ல இதவிட நல்ல ரிசார்ட் உனக்கு கிடைக்காது. சரி, நான் சென்று எல்லாவற்றையும் கவனிக்கிறேன்”, என்று சொல்லி அங்கிருந்து நகர்ச் சென்றவன் வர்ஷவிடன், “பிரகாஷ் மேல ஒரு கண்ணை வைத்திரு. அவனை அதிகம் குடிக்க நிஷா தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

கோப்பையுடன் வந்த நிஷா, “வா. அங்கே போகலாம்” என்று பிரகாஷ் இருந்த இடத்தை காட்டினாள். வேண்டாவெறுப்பாக வர்ஷா நிஷாவுடன் நடக்க ஆரம்பித்தாள்.

வர்ஷா வருவதை பார்த்ததும் பிரகாஷுடன் உரையாடிக்கொண்டிருந்த அனைவரும் மௌனமானார்கள். வர்ஷாவை பார்த்தவுடன் தன் கணவன் ரகு பேச்சை நிறுத்தியதை பார்த்து நிஷாவுக்கு கோபம் வந்தது. அங்கு கூடியிருந்த எல்லோரும் ஐ‌டி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள். இவர்கள் எல்லோரைவிடவும் வர்ஷா உயர்த்த பதவியில் இருந்ததால் அவளை கண்டவுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறார்கள்.

வர்ஷாவின் பார்வை தன் கையிலிருந்த கோப்பை மேல் சென்றவுடன், பிரகாஷ் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே, “இப்போதான் ஆரம்பித்தேன்” என்றான். பிரகாஷ் ஆறடி அழகன். எல்லோரும் சிரிக்கும்படி பேசுவான். அதனால் குடிப்பவர்கள் மத்தியில் அவனுக்கு என்றுமே வரவேற்பு இருந்தது. ஆனால் குடி அதிகமாகிவிட்டால் வாட்ஸாப்பில் வந்த கட்டுக்கதைகளை தானே சொல்வது போல் உளறுவான். இன்னும் அதிகம் போதை ஏறிவிட்டால் சண்டை போட தயாராகிவிடுவான். இவன் எப்படி அடி வாங்காமல் வீடு திரும்பியிருக்கிறான் என்று சில சமயங்களில் வர்ஷா ஆச்சரியப்பட்டதுண்டு.

வர்ஷா கஷ்டப்பட்டு தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டாள். அவன் இப்பொழுது இரண்டாம் கட்ட போதையில் இருந்தான். யாரும் நம்ப முடியாத கதைகளை சொல்வதை பலர் ஏளனமாக பார்த்தனர். வேறு சிலர் வர்ஷாவை பரிதாபமாக பார்த்தனர். அந்த பார்வையை வர்ஷாவால் தாங்கமுடியவில்லை.. வர்ஷாவின் சங்கடத்தை உணர்ந்த நிஷாவின் உதடுகளில் புன்னகை பூத்திருந்தது.. இன்னும் ஒரு பெக் அடித்தால் பிரகாஷ் சண்டை போட ஆரம்பித்துவிடுவான் என்று உணர்ந்த வர்ஷா. “பிரதீபாவின் பெற்றோர்கள் உன்னை பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். நாம் அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் வா”, என்றாள்

“சிறுத்து நேரம் கழித்து செல்லலாம். இப்பொழுதுதான் நான் இங்கு வந்தேன்”, என்றான் பிரகாஷ்

“போய் விட்டு வாங்களேன். வந்து இதை தொடருங்கள்”, என்று பிரகாஷின் பக்கத்தில் நின்றிருந்தவர் கூறினார்.

போதை ஏறியிருந்த பிரகாஷ். “மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று அவரை பார்த்து கத்தினான். அவன் அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு முன் பிரதீபவின் கணவன் மைக்கில் பேச ஆரம்பித்தான். “ஜென்டில்மென் அண்ட் லேடீஸ். இப்பொழுது சங்கீத் ஆரம்பிக்கிறது. எல்லோரும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கீத் முடியும் வரை பார் மூடப்படும். அதற்கு பிறகு மறுபடியும் பார் திறக்கப்படும். எல்லோரும் மெயின் ஹாலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்”

வர்ஷாவுக்கு நின்ற மூச்சு மறுபடியும் வந்தது போல் இருந்தது. “ஷிட்” என்று சொல்லிவிடு பிரகாஷ் கோப்பையில் மிச்சம் இருந்த விஸ்கியை குடித்துவிட்டு கிளம்பினான். எல்லோரும் சங்கீத் நடக்கும் அறைக்குள் நுழைந்தன. வர்ஷா ஹாலை பார்த்து வியப்படைந்தாள். ஒரு மணி நேரம் முன் தான் வர்ஷா இந்த ஹாலை கடந்து சென்றிருக்கிறாள். இப்பொழுது அடையாளம் தெரியாத அளவுக்கு ஹால் பூ மாலைகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் இரண்டு பெரிய ஃபோகஸ் விளக்குகள், மேலே நான்கு ஃபோகஸ்விளக்குகள், படம் பிடிப்பதற்காக ஒரு பெரிய கிரேன், அதை இயக்க ஒரு ஆபரேட்டர், எல்லோரும் பார்ப்பதற்காக அறை யெங்கும் பல பெரிய டி‌வி ஸ்கிரீன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வர்ஷா.

ஒரு இளம் ஆணும் பெண்ணும் எல்லோரையும் வரவேற்றார்கள். பிறகு சங்கீத் ஆரம்பித்தது. முதலில் மணமகளை பற்றியும் மணமகனை பற்றியும் ஒரு படம் திரையிட்டார்கள். பிறகு நடனங்கள் தொடங்கின. மணமகள் தன் தோழிகளுடனும், மணமகன் தன் தோழர்களுடம் ஒரு மாதமாக டான்ஸ் மாஸ்டர் வைத்து பயின்ற நடனத்தை ஆடினார்கள். பிரதீபாவின் தந்தை சொன்னது போல் எல்லோரும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி நடனம் தான். ஒவ்வொரு நடனத்தையும் அறையில் கூடியிருந்த இளைஞர்கள் விசில் அடித்தும், உரக்க கூச்சல் போட்டும் கொண்டாடினார்கள். அவர்களின் உற்சாகம் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு இளைஞன்,  “நாங்கள் நடனமாடி முடித்துவிட்டோம். இப்பொழுது பெரியவர்கள் நடனமாட வேண்டிய தருணம். முதலில் பிரதீபா ஆண்டி மற்றும் ராஜேஷ் அங்கிள் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்”.  பிரதீபா, “நோ நோ நோ,” என்றாள். எல்லோரும் பலத்த கரகோஷம் செய்து “எஸ் எஸ் எஸ்” என்று கத்தினார்கள். ராஜேஷ் அவள் கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றான். இவர்களுக்கு என்று ‘அந்த அரபி கடலோரம்’ தமிழ் பாடலை போட்டார்கள். பிரதீபாவும் ராஜேஷும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடி முடித்தவுடன் விசில் சத்தமும் கரகோஷமும் காதை துளைத்தது.

“அடுத்ததாக நிஷா ஆண்ட்டி மாற்று ரகு அங்கிள்”. ரகு உற்சாகமாக காணப்பட்டான். “கமான். கமான்”, என்று கூறிக்கொண்டே நிஷாவின் கையை பிடித்து அழைத்து சென்றான். “இவனுக்கு டான்ஸ் வருமா?”, என்று பிரதீபா வர்ஷாவை கேட்டாள்.  “அவன் போற வேகத்தை பாத்தா பிரபு தேவா லெவலுக்கு ஆடுவான் போல இருக்கு”. என்று வர்ஷா கூற பிரதீபா உரக்க சிரித்துவிட்டாள்

அவர்களுக்கு ஒரு ஹிந்தி பாட்டை போட்டார்கள். ரகு கை கால்களை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவதை பார்க்க தமாஷாக இருந்தது. பாட்டின் தாளத்துக்கும் அவன் அசைவுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல். ‘சிப்பிக்குள் முத்து” படத்தில் கமலஹாசன் ஆடுவது போல் ரகு ஆடினான். நிஷா இரண்டு ஸ்டெப் போட்டவுடன் அவளை தன் பக்கம் இழுத்து அவள் ஆடும் நடனத்தையும் கெடுத்தபோது கூடி இருந்த இளைஞர்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.  அவன் ஆடி முடித்தவுடன் “ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர்”, என்று எல்லா இளைஞர்களும் கோஷம் போட, உண்மையாகவே தன் நடனத்தை இவர்கள் எல்லாம் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, “ஓகே” என்று ரகு மறுபடியும் ஆடத் துடங்கினான். கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க, வர்ஷாவும் பிரதீபாவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட, நிஷாவின். முகத்திலிருந்து கோபக் கனல் பறந்தது. நடனம் முடிந்து அவள் கீழே இறங்கும்போது ரகுவை கொளுத்திவிடுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்.. “நாளைக்கு ரகுவோட நிலைமையை என்னவோ?” என்று முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு பிரதீபா கேட்டாள். வர்ஷா சிரித்துவிட்டு, “நிஷாவின் கோபம் ரகுவுக்கு புதுசு ஒன்றும் இல்லையே” என்றாள். பிரதீபா மறுபடியும் சிரித்தாள்..

“அடுத்தது நான்”, என்று பிரகாஷின் குரல் உரக்க ஒலித்தது. “ஓ . லெட்  அஸ்  கிவ்  இட் டு பிரகாஷ் அங்கிள்”, எல்லோரும் கை தட்டினார்கள். “அங்கே என் மனைவி நிற்கிறாள். அவளையும் மேடைக்கு வரச் சொல்லுங்கள்”, என்று வர்ஷாவை நோக்கி கை காண்பித்தான் . “வி  வாண்ட் வர்ஷா ஆண்ட்டி” என்று எல்லோரும் கத்த விருப்பமில்லாமல் வர்ஷா மேடையை நோக்கி சென்றாள்.

கல்லூரி நாட்களில் வர்ஷாவும் பிரகாஷும் சேர்ந்து பல மேடைகளில் நடனம் ஆடியிருக்கிறார்கள். நடனம் ஆடி பல வருடங்கள் ஆகிவிட்டதால் வர்ஷாவுக்கு பயமாக இருந்தது. அவள் பிரகாஷை பார்த்தாள். அவனுக்கு போதை இறங்கியிருந்தது. பிரகாஷ் மைக்கை பிடித்துக்கொண்டு, “முதலில் நாங்கள் ஒரு மெலடி பாடலுக்கு ஆடப் போகிறோம். அதற்கு பிறகு ஹை எனர்ஜி பாடலுக்கு ஆடுவோம்” என்று அறிவித்தான். ‘சம்மர் வைன்” எனும் பாட்டு ஸ்பீக்கர்களில் ஒலித்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு மெதுவாக நடனம் ஆடினார்கள். இந்த பாட்டிற்கு பல முறை சேர்ந்து ஆடியிருந்த்தால் எந்த பிசிறும் தட்டாமல் நடனம் அருமையாக வந்தது. ஆடி முடித்தவுடன் பலத்த கை தட்டலை பெற்றார்கள்.

அடுத்து ஒரு ஸ்பானிஷ் பாடல் ஒலித்தது. இதற்கும் அவர்கள் பல முறை சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். இந்த ஸ்பானிஷ் நடனத்தில் பல போஸ்களில் நிற்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு போஸ் கொடுக்கும்பொழுதும் எல்லோரும் கை தட்டினார்கள். பாடல் முடியும் தருணத்தில் மேடையின் ஒரு கோடியில் வர்ஷாவும் இன்னொரு கோடியில் பிரகாஷும் நின்று கொண்டிருந்தார்கள். இசை தீவிரமடைய, வர்ஷா ஐந்து முறை தட்டாமலை சுற்றிவிட்டு சரியாக பிரகாஷ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். பிரகாஷ் தன் வலது கரத்தை நீட்டி கொண்டிருந்தான். வர்ஷா தன் இடது கரத்தை அவனிடம் கொடுக்க, அவன் வர்ஷாவை தன் பக்கம் இழுத்துக்கொள்ள, இன்னொரு முறை சுற்றிவிட்டு  அவன் மார்பில் வர்ஷா தன் பின்மண்டையை சாய்த்து கூட்டத்தை பார்த்தாள். தட்டாமாலை சுற்றி வந்ததால் அவளுக்கு தலை சுற்றியது. முகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொள்ள ஹால் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் வர்ஷாவை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த நிஷாவின் கண்கள் மட்டும் அசையாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தன.

 

 

 

சுவைகள்

கலையரசி

பள்ளிக்கூடம் முடிந்து
வீடு திரும்பும்
குழந்தைப்பருவம்
நினைவுக்கனிகளில்
இன்னமும் சுவைத்திருக்கிறது.

காலம் போட்ட தொரட்டிக்காம்பில்
குறும்புகளைக் கொப்பளித்திருந்தது
கோணப்புளியங்காயின் துவர்ப்பு.

சதைப்பற்றை மென்று துப்பிய
ஒவ்வொரு சீதாப்பழ விதையும்
ஏகாந்தங்களை
மண்ணூன்றி இருந்தது.

நண்பனுக்குத் தெரியாமல்
திருடித்தின்ற நெல்லிக்கனி
அவ்வளவும் கசந்து போனது
அப்பாவியாய்
அவன் தந்த தண்ணீரை
அருந்தியபோது.

தேர்வு நேரங்களில்
புன்னகை துறந்த உதடுகளுக்கு
ஆறுதலாய் முத்தமிட்டிருந்தது
நாவல் பழத்துச் சாயம்.

எளிதாய் ஒடிந்த
வெள்ளரிப்பிஞ்சுகளின் ஓசைகளில்
பிணக்கு நீங்கிய
வெள்ளந்திச் சிரிப்புகள்
எதிரொலித்தன.

உக்கிர வெயிலின் கூர்முனை
உவர்ப்பையும் கார்ப்பையும் தடவி
கீற்றுக்கீற்றாக
மாங்காய்களை நறுக்கித்தந்தது.

படிப்பு முடிந்த காலத்தில்
கனிகளைச் சுவைத்து
வெளியேறிய போது
இலந்தையின் புளிப்பிலும்
இனிப்பிலும்
ஊறிப்போய் இருந்தது
எதிர்காலக் கனவுகள்.

அதன் பின்னர்
எந்தப் பருவமும்
நரம்புக்கிளைகளில்
சுவைக்கவே இல்லை
இன்றுவரை.

 

 

அவள் இவள்

ஜெகதீஷ் குமார்

எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி
இரு கட்டை விரல்களாலும்
ஒத்திக் கொண்டிருக்கிறாள் தொடுதிரையை

தவித்துத் திரியும் தங்கமீன்களைப் போல
இவள் விழித்திரையில்
மின்பிம்பங்கள் நடனமாடுகின்றன

மறுமுனைக் குறுஞ்செய்தியும்
இவள் தரும் எதிர்வினையும் இணைந்து
தொடர்க்கண்ணிகளாலான மாலையாகின்றது

விம்மித் தாழும் நெஞ்சுடன்
துண்டிக்க வழி தெரியாது
வளர்த்தபடியே செல்கிறாள்

எப்போதுமே அவள் தோழர்கள் இவளது
உள்ளங்கைக்குள்தான் இருக்கிறார்கள்
அவள் மிகத் தனியாக இருக்கிறாள்

தன்னுள் துள்ளும் குழந்தையை அடக்கி அழுத்தியபடி
இப்போதுதான் விலக்கிற்கு மெல்ல பழகிக் கொண்டிருக்கிறாள்

நச்சரிக்கும் தோழனின் கோரிக்கையை மனம் நாட
உடல் விதிர்ந்து ஒதுங்குகிறது

எமோடிகான்களால் பதிலளிக்கிறாள்
அவன் கேள்விகளால் தளும்பும்
திரையைப் பார்த்தபடி
அமைதி காக்கிறாள்
தன் இறுதிச் செய்தியை அனுப்பிவிட்டு
அணைக்கிறாள்
திரையையும் உள் உறையும் குழந்தையையும்.