Author: பதாகை

பரிசு சிறுகதை : டோக்ரி மொழி [Dogri] மூலம் : பி.பி.சாத்தே [B.P.Sathe] ஆங்கிலம் : சிவ்நாத் [Shivnath] தமிழில் : தி. இரா.மீனா

தி இரா மீனா 

ரஹிம் அண்ணி புதுப் பெண்ணாக கிராமத்திற்கு வந்தபோது எங்கள் வீட்டுப் பெண்கள் அவளைப் பார்க்கப் போனார்கள். புதுப் பெண்ணின் முகத்தைப் பார்க்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பரிசாக எடுத்துப் போக வேண்டும். என் அம்மா அவளுக்கு ஒரு ஜோடி வளையல்களைத் தந்தாள்.என் அத்தை காலுக்குக் கொலுசு கொடுத்தார். என் மூத்த அண்ணி அவளுக்கு சிறிய மெட்டி தந்தார். அவர்கள் வீடு திரும்பிய பிறகு ரஹிம் அண்ணியின் அழகைப் புகழ்ந்து தள்ளினார்கள். சிறியவர்களான எங்களுக்குக் கூட அவளைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை எழுமளவிற்கு.

“என்ன அழகான பெண்! செதுக்கப்பட்ட பளிங்குச் சிலை போல இருக்கிறாள்.” அம்மா சொன்னாள்.

“என்ன கண்கள் ! மின்னிப் பளபளக்கும் கருமையான கண்கள் ! பெண் மிகவும் உயரமும் கூட.” அத்தை சேர்ந்து கொண்டாள்.

“அவள் நிறமாக இருக்கிறாள்; முகம் முழுவதும் புள்ளிகள். அப்படியிருக்கும் போது, ஒரு பெண் உட்கார்ந்திருக்கும் போது அவள் நொண்டியா அல்லது வேறு எதுவும் குறை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும?” என் அண்ணி சிறிது கடுப்பாகச் சொன்னார்.

“அவள் ஊனம் என்று யார் சொன்னது ?வீட்டின் உள்ளேயிருந்து வரும்போது அவள் மிக இயல்பாகத்தான் நடந்து வந்தாள்” அம்மா பதில் சொன்னாள்.

“முகத்திலுள்ள கரும் சிவப்புப்புள்ளிகள் அவளுடைய சிவந்த முகத்திற்கு இன்னும் அழகு தருகிறது.” அத்தை சேர்த்துச் சொன்னாள்.

“அது கிரேக்க அழகு .ஓர் அரண்மனையின் அலங்காரம். யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று எங்கிருந்தோ அந்த இடத்திற்கு வந்த என் மூத்த அண்ணன் அந்த வாக்கியத்தை முடித்தான்.

“அந்த சலவைத் தொழிலாளி தன் புது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். நாங்கள் இலாம்தீனின் மனைவியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். பரிசுகளைக் கொடுக்க நாங்கள் அவர் வீட்டிற்குப் போயிருந்தோம்.விளக்கைப் போல அந்தப் பெண் மிக அழகாக இருக்கிறாள்.” அம்மா விளக்கினாள்.

என் மூத்த அண்ணிக்குக் கண்கள் மிக அழகானவை. ஆனால் அவளுடைய நிறம் சிறிது கருமை கலந்தது. உயரம் குறைவு. தன் வெறுப்பை அடக்கிக் கொண்டு “அவள் ஓர் அந்தணப் பெண்ணோ அல்லது ராஜ்புத் பெண்ணோ இல்லை, ஒரு சாதாரணமான சலவைத் தொழிலாளியின் மனைவி.” என்றாள்.

“ஆமாம்,அவள் சலவைத் தொழிலாளியின் மனைவிதான், ஆனால் சாதாரண குலத்தில் அழகிருக்க முடியாதா ?” என் அத்தை உடனடியாக வெடித்தாள்.

“உங்கள் மகனுக்கு அவள் தங்கையைத் திருமணம் செய்து வையுங்கள்,” உள்ளே போனபடி அண்ணி பதிலடி கொடுத்தாள்.அது என்அண்ணனுக்குக் குறிப்பாகச் சொல்லப்பட்ட வார்த்தைதான். என்றாலும் அவளுக்கு ’ கிரேக்க அழகு” என்பதன் அர்த்தம் புரியவில்லை.

ஹம்தீனின் அம்மாவும் எங்கள் அத்தைதான் ,ஆனால் எங்கள் சொந்த அத்தையிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாங்கள் அவளை ’துணி வெளுக்கும் அத்தை’ என்போம்.சில சமயங்களில் இரண்டு அத்தைகளும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும் போது, நாங்கள் ’அத்தை ’ என்று கூப்பிட இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும் . அதைப் பார்த்து நாங்கள் குதித்துக் கும்மாளமிடுவோம்.

ஜம்முவிலிருந்து திரும்பும் வழியில் என் அப்பா சரினாசாரிலிருந்துமெதப்தீனை அழைத்து வந்தார். அவருக்குத் தங்குமிடம் கிடைப்பதில் சில தொல்லைகள் இருந்ததால் அப்பா அவரை ராம் நகருக்கு வர வைத்தார். அவருக்குக் கொஞ்சம் நிலமும், இருக்க வீடும் கொடுத்தார். துறை முகத்தில் அவருக்கு வேலையும் கிடைத்தது. அவருடைய மகன்களும் சலவை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவர் மூத்த மகன் குலாப்தீனுக்கு அந்த வேலை தரப்பட்டது.இளைய மகன் இலாம்தீன் சலவை செய்யும் வேலையையே செய்தார். குலாப்தீனின் மகன் சாம்சுவுக்கும் ,எனக்கும் ஒரே வயதுதான். இலாம்தீன் சலவை செய்த துணிகளைக் கொண்டு வரும் போது சாம்சு என் துணிகளைத் தூக்கி வருவான். சாம்சுவின் தாத்தா ஓரிடத்தில் சும்மாஉட்கார மாட்டார்; அரிசி,கோதுமை ஆகியவறை விவசாயம் செய்து வந்தார். நானும் , சாம்சுவும் மெதாப்தீன் வயலுக்குள் போய், பட்டாணிபறித்துத் திருட்டுத்தனமாகச் சாப்பிட்டு மகிழ்வோம்.

இரண்டு,மூன்று நாட்கள் புதுப்பெண்ணிற்கு மவுசு இருந்தது.பிறகு அவள் வீட்டு வேலைகளில் சேர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது. சலவை செய்யும் பெண்மணியும்,அத்தையும் தங்கள்மருமகளை நீரிறைக்க ஊர்க் கிணற்றுக்கு அழைத்துப் போனார்கள். மருமகள் தன் கழுத்து வரை முகத்திரையணிந்திருந்தாள். தலையில்ஒரு குடமும், இடுப்பில் ஒன்றும். பச்சை நிறத்தில் வெள்ளி எம்பிராய்டரி நூலால் பின்னப்பட்ட காலணியும் அணிந்திருந்தாள். மாமியாருக்குப் பின்னால் அவள் நடந்த போது மாமியாரை விட ஒன்றரை இன்ச் அதிக உயரமாக இருந்தாள்.

கிணறு எங்கள் வீட்டருகிலிருந்தது. தொலைவிலிருந்தும்,பக்கத்திலிருந்தும் ஜனங்கள் அங்கு வந்து பாத்திரங்களில் நீர் நிரப்பிக்கொண்டு போவார்கள். நீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மாமியார் மருமகளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.என் தாயையும்,அத்தையையும், அண்ணியையும் நமஸ்கரிக்கச் சொன்னார்.எங்கள் வீட்டுப் பெண்கள் அவளை, “உன் கணவரும் நீயும் நீண்ட காலம் வாழ வேண்டும் “ என்று ஆசீர்வதித்தனர். பிறகு அவர்கள் நீர் நிரப்பிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போனார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் எங்கள் வீட்டில் இன்னொரு சலசலப்பு ஏற்படக்காரணமானார்கள்.

“அந்தப் பெண்ணின் நடை மயில் நடனமாடுவது போல இருக்கிறது.”

வயதான அம்மாவும் ,அத்தையும் பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும், கண்டிக்க வேண்டியதைக் கண்டிக்கவும் செய்கிற மனப்பான்மை உடையவர்கள். ஆனால் என் அண்ணி இளமையானவர்,யாரையும் பாராட்டுவதைப் பொறுக்க மாட்டார். “மயில் கருப்பாக இருக்கும்.இவள் வெள்ளையாக இருக்கிறாள். அதனால் வெள்ளைவாத்து நடனமாடியது போல என்று சொல்வது சரியாக இருக்கும்” என்றாள்.

“மயில் வெள்ளையாக இருக்கிறது என்று சொல்வதால் நாம் எதை இழக்கப் போகிறோம்?” என்றாள் அத்தை வெடுக்கென்று.

அண்ணி அமைதியானாள் — உடனடியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது அந்த விவாதத்தை அவள் மேலே வளர்க்க விரும்பவில்லை.

அடுத்த நாள் தண்ணீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மீண்டும் அவர்களிருவரும் எங்கள் வீட்டிற்கு வந்து, சிறிது நேரம் பேசி விட்டுப் போனார்கள். மருமகளின் வீடு சரினாசாரில் எங்கேயிருக்கிறதென்று எங்கள் வீட்டினர் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“இவர்கள்தான் சின்ன அத்தை சாச்சி, இவர் பெரிய அத்தை,தாய், என் மகன்கள் அவர்களை அப்படித்தான் கூப்பிடுவார்கள்; நீயும் அப்படிக் கூப்பிடு. இவர்கள் அண்ணி [பாபி], மூத்த மகனின் மனைவி. அவர்களின் கணவரும், குலாபுதீனும் ஒன்றாகப் பள்ளிக்குப் போனவர்கள். நான் பெயர் சொல்லிதான் அவர்களைக் கூப்பிடுவேன் ஆனால் நீ அண்ணி என்றே கூப்பிட வேண்டும் “ என்று மாமியார் சொன்னாள்.

“நாங்கள் சரினாசாரில் கடைகள் இருக்கும் பகுதிக்குத் தெற்கில் வசிக்கிறோம்” மருமகள் சரினாசாரில் தன் வீடு இருக்குமிடத்தை விளக்கிக் கொண்டிருந்தாள்.

இன்னும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு அவர்கள் போய்விட்டனர். மீண்டும் எங்கள் வீட்டில் விவாதம்.

“எவ்வளவு அழகாகப் பேசுகிறாள், குயில் கூவுவதைப் போல.”

“என்னைப் பற்றியும் இது போலத்தான் முன்பு சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.” அண்ணி சொன்னாள்.

“நீ யாருக்கும் குறைந்தவளில்லை. உன் குரலும் இனிமையானது தான்.”

சரயு அண்ணி மகிழ்ச்சியடைந்தாள், பழைய நாட்களின் வெறுப்பை அவள் மறந்து விட்டாள்.

பிறகு சில நாட்களில் மருமகளோடு வருவதை மாமியார் நிறுத்திக் கொண்டாள். வீட்டின் பிற வேலைகளில் மூழ்கிப் போயிருக்கவேண்டும். ரஹிம் அண்ணி காலையில் இரண்டு தடவையும் ,மாலையில் ஒரு தடவையும் தண்ணீர் எடுக்க வருவாள். பள்ளிக்குப் போகும் வழியில் நாங்கள் அவளைப் பார்ப்போம். ஒரு நாள் மற்ற பையன்கள் சிறிது தூரம் போய் விட நான் நின்றேன். ரஹிம் அண்ணி வரும் வழிக்கு எதிர் பக்கத்தில். வழக்கம் போல அவள் முகம் கழுத்து வரை மூடியிருந்தது.

“ரஹிம் அண்ணி ,உங்கள் முகத்தை எனக்குக் காட்ட வேண்டும், நான் மிகச் சின்ன பையன்தானே ?” சிறிது தயக்கமாக நான் சொன்னேன்.

“பாவ்ஜி, நீங்கள் என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால், எனக்குப் பரிசு தரவேண்டும்.” அவள் நடந்து கொண்டே பேசினாள்.

நாங்கள் எதிரெதிர் திசைகளில் சிறிது இடைவெளியில் நடந்து கொண்டிருந்ததால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அடுத்த நாளும் அது போலவே நான் மற்றவர்களிடமிருந்து பின்தங்கி நின்றேன்; அவள் வந்த போது “ரஹிம் அண்ணி, உங்களுக்குப் பரிசு தானே வேண்டும், நான் அம்மாவிடமிருந்து வாங்கி வருகிறேன்.”என்றேன்.

“இல்லை, இல்லை, அம்மாவிடமிருந்து வேண்டாம். உங்கள்சொந்த சம்பாத்தியத்திலிருந்து எனக்குப் பரிசு கொடுத்தால்தான் என்முகத்தைக் காட்டுவேன். அதுவரை, நான் திரையை விலக்க மாட்டேன்.” என்று பதில் சொன்னாள்.

ரஹிம் அண்ணி அவள் சொன்னதில் உறுதியாக இருந்தாள். பல ஆண்டுகளாக திரை அணிந்திருந்தாள். எட்டாவது வகுப்பு முடித்த பிறகு,மேலே படிக்க நான் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் போய் விட்டேன். அதன் பிறகு ஒன்றரை வருடத்திற்கு நான் கிராமத்திற்குப் போக முடியவில்லை. எனக்கு இப்போது பதினைந்து வயது, நான் ஒன்பதாம்வகுப்பில் பெயிலாகி விட்டேன். விடுமுறையில் நான் கிராமத்திற்குப் போன போது ரஹிம் அண்ணியைப் பார்த்தேன். “பாவ்ஜி, என்ன வகுப்பில் படிக்கிறீர்கள் ?” என்று கேட்டாள்.

“ஒன்பதாம் வகுப்பு.”

“போன வருஷமும் ஒன்பதாவதில் தானே இருந்தீர்கள்?”

எனக்குப் பேச்சே வரவில்லை. அவள் முன்னால் நிற்க முடியாமல் “ஆமாம்,ஆமாம்.” என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.

இரண்டாவது முறையும் ஒன்பதாவதில் பெயிலானதால் அந்த வருடமும் நான் ஊருக்குப் போகவில்லை. பத்தாம் வகுப்பு போன பிறகுதான் வீட்டிற்குப் போனேன். ரஹிம் அண்ணியை அப்போது பார்க்க நேர்ந்த போது “நீங்கள் இப்போது கல்லூரியில் படிக்கிறீர்கள் அல்லவா ?” என்று கேட்டாள்.

“இல்லை, அண்ணி, நான் இப்போது பத்தாவதிலிருக்கிறேன். இந்த தடவை நான் பாஸான பிறகு எனக்கு வேலை கிடைக்கும். என் முதல் சம்பளத்தில் நான் உங்கள் பரிசுக்கு ஏற்பாடு செய்வேன்.”

“இல்லை, பாவ்ஜி, உங்கள் முதல் மாதச் சம்பளத்தை அம்மாவிற்குக் கொடுத்து நமஸ்கரியுங்கள். அவர்கள் தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்வதால், பூஜைக்கு வேண்டிய சாமான்களை வாங்க வேண்டியிருக்கும். நான் என் பரிசிற்காக ஒரு வருடம் காத்திருப்பேன்.”

“ரஹிம் அண்ணி, என் சொந்த அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஇவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குத் தெரியவேயில்லை.”

“பாவ்ஜி, காத்திருந்து ஒன்றைப் பெற நினைக்கும் போது, அந்த விருப்பம் ஆழமாக வளரும். இளமையின் ஆரம்ப நாட்களில் இருக்கும் உங்களுக்கு ஒரு முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு விட்டால் அது மறையாது. விருப்பம் நிறைவேற வேண்டுமெனில், தேடிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இன்னும் மிகச் சிறிய பையன்தான்.இந்த வயதில் பல திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம், பல விருப்பங்கள் நம்மை விட்டும் போகலாம். ஆனால் உங்களுக்கு ஒருவிருப்பம், என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏன் அதை முடித்து விட நினைக்கிறீர்கள்?அது பக்குவப்படட்டும், உறுதியாகட்டும், அப்போது அது உடையாது.”

இந்த நிமிடம் வரை ரஹிம் அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஒரு சின்ன வேடிக்கை, ஒரு வெறும் பொழுதுபோக்கு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அவள் முகத்தைப் பார்ப்பது என்பது வேறு ஒரு வடிவம் எடுத்திருக்கிறது. என் சொந்த சம்பாத்தியத்திலிருந்து பரிசு வாங்கி அவளுக்குக் கொடுப்பதென முடிவு செய்தேன்.

விதியின் தீர்மானம் வேறாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேறியபிறகு கல்லூரியில் சேர்ந்தேன். மூன்றாண்டுகளில் சம்பாதிக்க என்று எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. படிப்பை முடித்தவுடன் குடும்ப நிலங்களை பார்த்துக் கொள்ள வேறு யாருமில்லாததால் கிராமத்திற்குத்திரும்ப வேண்டியதாகி விட்டது. என் அப்பா இறந்து போனார். என்படிப்புச் செலவுகளை மற்றவர்கள் கவனித்துக் கொண்டனர். சிறிது காலத்தில் எனக்குத் திருமணமுமாகி விட்டது. ஆனால் ரஹிம் அண்ணி திரையை விலக்கவேயில்லை. என்னால் அவளுக்கு பரிசு கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் “பாவ்ஜி, பரிசு கிடைக்காமல் நான் என் முகத்திரையை விலக்க மாட்டேன்.” என்று சொன்னாள்.

ரஹிம் அண்ணியின் பேரழகை எல்லோரும் பாராட்டினார்கள்.வெள்ளைக்காரப் பெண் போல நிறம் ,தோற்றமும், வடிவமும் கவர்ச்சி ஆனவை. என் மனைவிக்கு ரஹிம் அண்ணியின் மேல் பொறாமை. அவளுடைய காலணிகள் இன்னமும் வெள்ளி நூல் எம்பிராய்டரி அழகோடு, இருக்கின்றன, ரஹிம் அண்ணியின் காலணியில் அந்த வெள்ளி எம்பிராய்டரி நூல் கிழிந்து போய் விட்டது.அதற்குப் பிறகு அவள் அணிந்தது சிவப்புக்காலணி, இப்போது தோல் காலணி என்று சில வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் அவளது நிறம், முக அழகு ஆகியவை அழகான எம்பிராய்டரி காலணியாய்த் தங்கி விட்டன.

“உங்களிடம் ரஹிமு தன் நீண்ட முகத்திரையை மறைத்துக் கொண்டே பேசுவது ஏன் ? “ என்று என் மனைவி ஒருநாள் கேட்டாள்.

“என்னிடமிருந்து பரிசு கிடைத்த பின்புதான், ரஹிமு அண்ணி தன் திரையை விலக்குவாள். சரயு அண்ணி என்னிடம் எப்படிப் பேசுவாளோ அப்படித்தான் அவளும் என்னிடம் பேசுகிறாள்.”

“சரயு அண்ணி, உங்கள் சொந்த அண்ணி, ஆனால் ரஹிமு இஸ்லாமிய இனத்தவள். அவளுக்கு உங்களோடு என்ன உறவு ?”

“கடவுளர் பெயர் வேறு என்பதாலே சகோதரர்கள் உறவு முறிந்து விடாது. இலாம்தீன் என் சொந்த மூத்த அண்ணனைப் போலத்தான்.”

“நீங்கள் அப்படிச் சொல்லலாம், ஆனால் ஜனங்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.”

“போகட்டும், மற்றவர்கள் சொல்வதை நான் பின்பற்ற மாட்டேன். நான் சொல்வதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவேன்.”

“ஜனங்கள் எதைப் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் உலகம்பின்பற்றும்.”

“ஆனால் ஜனங்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா?” அவளிடம் இதற்கு பதிலில்லை.

ரம்ஜான் மாதம் வந்துவிட்டது. இசுலாமியர் தங்கள் நோன்பைத் தொடங்கி விட்டனர். “ ரஹிம் அண்ணி, நீங்கள் விரதம் இருப்பதில்லையா?” நான் கேட்டேன்.

“என்னால் நீண்ட நாட்கள் விரதமிருக்க முடியாது. நான் ஒரு நாள்தான் விரதமிருப்பேன். எனக்குப் பசி வந்துவிடும். வெறும் ரொட்டி சாப்பிட்டால் கூட எனக்குப் போதும், ஆனால் சாப்பிடாமலிருக்க முடியாது.”

“எந்த நாளில் விரதமிருப்பீர்கள்?”

“நான் என்று நீர் இறைக்க வரவில்லையோ, அன்று விரதம்
இருப்பேன்.”

“விரதத்தை முடிக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்கு இனிப்பு வாங்கி வருகிறேன்.”

“இல்லை,இல்லை, என் விரதத்தை முடிக்க நீங்கள் இனிப்பு வாங்கித் தருவது சரியல்ல. யார் வாங்கி வரவேண்டுமோ அவர்தான் இனிப்பு வாங்கித் தர வேண்டும்.”

“பிறகு நான் என்ன வாங்கித் தந்தால் பொருத்தமாக இருக்கும் ?”

“பரிசு வாங்கித் தருவது தான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். எனக்கு அது கிடைக்கும் போது, நான் பெருவிழா நிலாவைப்பார்ப்பேன்.”

“சரி. நீங்கள் பெருவிழா நிலவைப் பாருங்கள். என்னைப் பொறுத்த வரை ,உங்களின் கிரகணத் திரையால் பௌர்ணமி நிலவு பல ஆண்டுகளாக உறையிடப்பட்டிருக்கிறது. “

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரஹிம் அண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். சாம்சுதான் நீர் இறைக்க வருவான், நான் அவனிடம் அண்ணியின் உடல்நிலை பற்றி விசாரிப்பேன். அவள் உடல்நலம் சீர்கேடு அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். காய்ச்சல் டைபாய்டாகி,பின் நிமோனியா ஆனது. நிலைமை மோசமாகவைத்தியர் கைவிரித்து விட்டார். ஆங்கில மருத்துவரும் நம்பிக்கை இல்லையென்று சொல்லி விட்டார்.

ஒருநாள் காலை சாம்சு எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தான்,”நேற்று இரவிலிருந்து அத்தை நிலை மிக மோசமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் பாவ்ஜியைக் கூப்பிடுமாறு சொல்கிறார். நான் அழைத்து வருகிறேன் என்று புறப்பட்ட போது “ நான் போகிறேன். கடைசித் தடவையாக அவர் வந்து என்னிடம் தன் முகத்தைக் காண்பிக்க வேண்டும்
என்று பாவ்ஜியிடம் சொல்” என்றாள்.

உடனடியாக நான் சாம்சுவுடன் கிளம்பினேன். ரஹிம் அண்ணி கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தாள். முகம் திரையின்றி இருந்தது. அழகான பிரேமில், மிக அழகானமுகம், கருப்பு விழிகள், கன்னங்களில் பரவியிருந்த கரும் சிவப்புப் புள்ளிகள் கிரேக்க சிலைகளில் ஒன்றை நினைவூட்டியது. மெதுவாக அவள் பார்வையை என் மீது திருப்பினாள்.

பிறகு மெல்லிய குரலில் ,”பாவ்ஜி, பரிசு பெறுவதற்காக என் திரையை இன்று விலக்கியிருக்கிறேன். நீங்கள் என் முகத்தைப் பார்க்கலாம், உங்கள் முகத்தைப் பார்ப்பதற்காக மட்டும் என் வாழ்க்கை என் கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் மயானத்திற்கு வர வேண்டும்.உங்கள் பரிசாக ஒரு கைப்பிடியளவு மண்ணை என்முகத்திலிட வேண்டும். இல்லையெனில் ,உங்கள் பரிசை யாசித்து கொண்டே என் புதைகுழிக்குச் செல்வேன்…”
—————————–

நன்றி : Contemporary Indian Short Stories Series III, Sahitya Akademi
Short Story Heading Masahni – B. P .Sathe

 

 

 

 

 

 

 

மலர்ந்த முகம் அல்லது 1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதி

தருணாதித்தன்

“இதுதான்  நீங்கள் தேடும் ஸ்டூடியோவாக இருக்க வேண்டும் “ என்றான் ரகு ராவ்.

அந்தத் தெருவே ஒரு நூற்றாண்டு காலம் பின்னே சென்ற மாதிரி இருந்தது. மேலே துருப் பிடித்த தகரத்தில் வர்ணம் மங்கி “ப்ருந்தாவன் ஸ்டூடியோ”. முகப்பில் மங்கிய அரக்கு நிறத்தில் மடிப்புக் கதவு. மேலிருந்து கீழ் வரை முழுவதும் படங்கள். வித விதமான வடிவங்களில் நிறங்களில் வெள்ளி தங்க இழைகளுடன் ஃப்ரேம்கள். பழையகால கறுப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் இருந்தன. ஆனால் துல்லியமான படங்கள். ராஜ்குமார் ஒரு மாட்டு வண்டியில் கையில் சாட்டையுடன் சிரித்துக் கொண்டிருந்தார். மைசூர் மகாராஜா அம்பாரி யானையுடன் நின்றிருந்தார். ரோஜாப் பூக்கள் வண்ணம் வழிந்து கொண்டு இருந்தன. சரோஜா தேவி பக்க வாட்டில் திரும்பி புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

“ தாத்தா இது தானா, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ?” என்றேன். தாத்தா மேலே போர்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். தாத்தாவுக்கு வயது தொன்னூற்று நான்கு. அவர் ஒல்லியாக உயரமாக  இருந்தார். தலையில் உதிரியாக அறுவடை முடிந்த நிலம். வெண் புருவங்கள் மட்டும் நல்ல அடர்த்தி.  போன வருடம் வாங்கிய சட்டை, அது கூட சற்று தொள தொளப்பாக இருந்தது. டிமென்ஷியா, அதாவது வயதான பிறகு வரும் நினைவுக் கோளாறு. பெரும்பாலான சமயங்களில் நாம் பேசுவது புரிகிறதா என்று தெரியாது, முகத்தில் உணர்ச்சியே இருக்காது. தானாக திடீரென்று காஞ்சீபுரம் கருட சேவைக்கு போன போது என்று ஆரம்பிப்பார். கதை அய்ம்பது வருடங்களுக்கு முன் அப்போது சாப்பிட்ட கோவில் புளியோதரையாக இருக்கலாம் இல்லை கூட்டத்தில் காணாமல் போய் திரும்பக் கிடைத்த என்னுடைய அத்தையாக இருக்கலாம்.

“இதுதான்னு நினைக்கிறேன் “ என்று பக்கத்திலிருந்த ஹோல்சேல் பட்டுப் புடைவைக் கடையைப் பார்த்து பாட்டி சொன்னாள். பாட்டியைப் பார்த்தால் எழுபது என்று சொல்லலாம். உண்மையில் எண்பத்து ஏழு வயது. சற்று பருத்த உடல் வாகு. தாத்தாவுக்கும் சேர்த்து பாட்டி பேசுவாள்.  தாத்தாவையும் பாட்டியையும் ஒன்றாகப் பார்த்தால் லாரல் ஹார்டி நினைவுக்கு வரக் கூடும்.

“நாங்க கல்யாணத்துக்குப் பிறகு முதல்ல வெளியூருக்கு வந்தது இங்கதான். அப்பதான் இங்க வந்து ரெண்டு பேருமா சேர்ந்து படம் எடுத்தோம். கூடவே இங்க ஒரு மைசூர் சில்க் புடைவை வாங்கினோம், மயில் நீலம் மெல்லிசா அரை இன்ச்தான் ஜரிகை, ரொம்ப வருஷம் இருந்தது “

நாங்கள் போன இடம் பெங்களூரின் பழைய வணிக வட்டாரம். தாத்தா பென்ஷன் தொடர்ந்து வாங்குவதற்கு இரண்டு பேருடைய புகைப் படம் எடுத்து அனுப்ப வேண்டும். பாட்டிதான் திடீரென்று இந்தக் கடையைத் தேடி படம் எடுக்க வேண்டும் என்றாள். ரகு ராவுக்கு இந்த வட்டாரம் எல்லாம் தெரியும்.

ஸ்டூடியோவில் முகப்பில் சிறிய அறை இருந்தது. அதையும் தாண்டி படம் எடுக்கும் அறை தெரிந்தது. காலணிகளைக் கழற்றி விட்டு உள்ளே சென்றோம். சிவப்பு நிற ரெட் ஆக்சைடு சிமென்ட் தரை குளிர்ச்சியாக இருந்தது.

அங்கே ஒரு பக்கம் கொக்கி வைத்த ஜன்னலுக்கு அருகில் பழைய தேக்கு மர மேசையில் ஏகப்பட்ட ஓசையுடன் ஒரு கம்ப்யூட்டர். பாதி பிய்ந்து தொங்கிய முனைகளுடன் ஒரு வயர் நாற்காலியில் ஒரு சிவப்புச் சதுர குஷன். அதன் மேல்  ஆழ்ந்து இருந்தவர் ஒரு கணம்  நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் மானிட்டரைப் பார்த்தபடி ஒற்றை விரல்களால் அடிக்க ஆரம்பித்தார். மானிட்டர் பின் புறம் புடைத்து மேசையிலிருந்து வெளியே நீட்டியபடி ஓரத்தில் தொற்றிக் கொண்டிருந்தது. நரைத்த நீண்ட தாடி, அடர்த்தியான மீசை, தடித்த கருப்பு ப்ரேமில் தடித்த கண்ணாடி, முகத்தில் ஒரு செயற்கையான புன்னகைகூட காட்டவில்லை.

ராகு ராவ் “ சார்” என்று நீட்டினான். அவர் திரும்பி பார்த்து இடது கை ஆள்காட்டி விரலை உதட்டில் மேல் வைத்து கண்களைச் சுருக்கினார்.

நாங்கள் சுவற்றில் இருந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். கொண்டை முடியுடன் மை இட்ட தவழும் குழந்தை, நாற்காலியில் கணவன் ,மனைவி அருகில் புடைவைத் தலைப்பைப் போர்த்தி நின்று கொண்டிருக்க அருகில் ஒரு பூந்தொட்டி, விதான் சௌதா மேகங்களுக்குள் சில்லவுட், காலை சூரியோத்தில் பசவங்குடி கோவில் கோபுரம், லால்பாக் பூக் கண்காட்சி வண்ண மயமாக என்று நிறைய  இருந்தன. அவர் சுமார் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு ஏதோ முடித்து விட்டு, ஆனால் திருப்தி இல்லாமல்  ம் ஹூம் என்று தலையை அசைத்து கடைசியாக ஓங்கி கீபோர்டில் தட்டினார். ஒரு பென் ட்ரைவைப் பிடுங்கி எடுத்தார். நாங்கள்தான் நடுவில் வந்து அவர் தவத்தைக் கலைத்து விட்டோமோ இப்போது ஏதாவது சாபம் விடக் கூடும் என்று தோன்றியது.

அவர் மறுபடியும் எங்களைப் பார்த்தபடி “ ம் “ என்றார்.

ரகு ராவ் தாத்தாவையும் பாட்டியையும் காண்பித்து, “ இவங்களுக்கு ஒரு படம் எடுக்க வேண்டுமாம் “ என்றான்.

அவர் நெற்றியைச் சுருக்கினார் “ படம் எடுக்க இங்கே எதற்கு வந்தீர்கள் ? “ என்று வாயால் கேட்கவில்லை.

அதற்குள் நான் “ இவர்கள் கல்யாணம் ஆன புதிதில் இங்கேதான் வந்து முதல் கலர்ப் படம் எடுத்துக் கொண்டார்களாம்” என்றேன். நான் பாட்டியைப் பார்த்து “ அய்ம்பது வருடங்களுக்கு மேலே இருக்குமா பாட்டி ? “ என்றேன். பாட்டி “ சரியாக அறுபத்து ஆறு வருடங்களுக்கு முன்” என்றாள். அப்போது பாட்டிக்கு வயது கணிசமாகக் குறைந்த மாதிரி தோன்றியது.

ஸ்டூடியோ ஆசாமி முகத்தில் புன்னகை எழும்பியது – மேகங்கள் விலகி ஒரு கணம் சூரியன் தெரிவது போல.

“ அப்போது என் அப்பா இருந்திருப்பார் “ முதல் முறையாக அவர் பேசினார். முகம் மலர்ந்தது. அப்போது இந்தப் பேட்டையிலேயே எங்களுடையதுதான் பெரிய ஸ்டூடியோ, நான்கூட விடு முறை நாட்களில் இங்கேதான் இருப்பேன் “

பாட்டி சந்தர்ப்பத்தைப் சரியாக பயன் படுத்திக் கொண்டார் “ ஆமாம் அப்போது நாங்கள் வந்து படம் எடுத்துக் கொண்ட போது, குடை வைத்து லைட்டிங்க் சரி செய்தது ஒரு சின்னப் பையன் தான், அது நீங்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் “ என்றாள்.  இந்த முறை சூரியன் மேகங்களுக்குள் அவசரமாக மறையவில்லை. பாட்டி விடாமல் “ உங்கள் அப்பா கூட அதிகம் பேச மாட்டார் என்று நினைவு- எல்லாம் கண்ணாலேயே குறிப்பு, அதிகம் போனால் ம், ம் ஹூம் தான் “ என்றாள். தாடிக்காரர் இப்போது நாற்காலியிலிருந்து எழுந்தார். உடல் அசைவில் விறுவிறுப்பு.

“என்ன மாதிரி படம் வேண்டும் ?” என்றார்

தாத்தா ஒரு நாய்க்குட்டி படத்தில் கவனமாக இருந்தார்.

“பென்ஷன் வாங்க புதிய போட்டோ கொடுக்க வேண்டுமாம், நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் படம், நான் தான் இங்கே வந்து எடுக்க வேண்டும் ஆசைப் பட்டேன்” என்றாள் பாட்டி.

தாடிக்கார் உற்சாகமாக “ சரி உள்ளே வாருங்கள் என்றார்.

உள் அறையில் இருட்டாக இருந்தது. நிழையும் போதே ஒரு மட்கிய வாசனை. மங்கலான ஒரு லைட் மட்டும் போட்டார். நான் சுற்றிலும் பார்த்தேன். தரையில் வெளுத்துப் போன கார்பெட், அங்கங்கே ஓட்டை.

“படம் எடுக்கும்போது லைட் வரும் “ என்று என்னைப் பார்த்தபடி காமிராவை எடுத்து ஏதோ லென்சைத் திருகிக் கொண்டிருந்தார்.

அந்த அறையில் ஒரு புறம் பாதி ரசம் போன கண்ணாடி ஆள் உயரத்தில் இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாண்ட்ஸ் பவுடர் டப்பா, சிந்திய பவுடர், கூடவே ஒரு நீள சீப்பு, உதிர்ந்த தலை மயிர்கள்.  இன்னொரு புறம் திரை போல கருப்புத்துணி , ஸ்டாண்டில் வெள்ளைக் குடை, ஒரு பக்கம் நைலான் கயிறு கொடி மாதிரி கட்டி இருந்தது, அதில் ஒரு நிறம் வெளுத்த கருப்புக் கோட்டு தொங்கியது.

தாடிக்காரர் ஒரு மர பெஞ்சு இழுத்து வந்தார். அந்த பெஞ்சு உட்கார்ந்து பழசு ஆனதிலேயே வழ வழப்பாக இருந்தது.

“இரண்டு பேரும் இதில் உட்காருங்க” பாட்டி மிக உற்சாகமாக ஆகி விட்டார்.

“இதே பெஞ்சுதான் என்று நினைக்கிறேன், உங்க அப்பா ஒரே நிமித்தில் எடுத்து விட்டார். எங்க வீட்டில ரொம்ப நாள் ப்ரேம் செய்து ஹாலில் மாட்டி இருந்தோம் “

பாட்டி, கையைப் பிடித்து தாத்தாவை உட்கார வைத்தார்.

“நான் இந்தப்பக்கம் தான் உட்கார வேண்டும் இல்லையா ?” தாடிக்கார் இது என்ன கேள்வி என்பது போல முறைத்தார்.

“அவரை இங்க பார்க்கச் சொல்லுங்க “

பாட்டி தாத்தாவிடன் மெதுவாக ஏதோ சொன்னாள். தாத்தா எதையும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

பாட்டியே அவர் முகத்தை காமிராவைப் பார்க்கும்படியாகத் திருப்பினார்.

தாடிக்காரர் இன்னும் நிறைய விளக்குகளைப் போட்டார். அறை வெளிச்சத்தில் மூழ்கியது. சற்று சூடு வாசனை வந்தது.

அவர் காமிராவில் கோணம் பார்த்து, ஃபோகஸ் சரி செய்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்குத் திருப்தி இல்லை. காமிராவை வைத்து விட்டு, பாட்டியிடம் “ அவரை முகத்தில் ஜீவனுடன் பார்க்கச் சொல்லுங்க” என்றார்.

பாட்டி குனிந்து மறுபடியும் தாத்தாவிடம்

“ உங்களுக்கு ஞாபகம் இல்ல ? இங்கதான் நாம வந்து முதல் முதலா படம் எடுத்தோம்”

. தாத்தா முகத்தில் சற்று சலனம். ஆனால் எழுந்து போய் விடுவார் போல இருந்தது,

தாடிக்காரர் “ பாட்டி, இப்படி முகம் இருந்தால் எனக்கு படம் எடுக்க வராது. மனசு முழுக்க மலர்ந்து முகத்தில் வர வேண்டும் “

 

மலர்ந்த முகம்

பாட்டி இப்போது எழுந்தாள். தாத்தாவுக்கு எதிரே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பொய்க் கோபத்துடன் “ என்ன இது இப்படி அடம் பிடிக்கறீங்க ? ஒழுங்கா சிரிச்ச மாதிரி முகத்த வெச்சுக்குங்க,” குரலை மாற்றி நைச்சியமாக “ இல்லா விட்டால் நான் உங்கள் கூட பேச மாட்டேன் “ என்றாள்.

தாத்தாவின் முகம் இளகியது, திடீரென்று

“ அப்படிச் சொல்லாதேடி, உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் ?” என்றார்.

தாடிக்காரர் “தாத்தா அப்படியே கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம், பாட்டி நீங்க போய் அவர் பக்கத்துல உட்காருங்க “ என்றார்

பாட்டி குனிந்து தாத்தா காதில் ஏதோ சொன்னாள். சொல்லும்போதே முகம் வெட்கத்தில் சற்று சிவந்த மாதிரி இருந்தது. தாத்தாவின் காலரை சரி செய்து விட்டு உட்கார்ந்தாள், தாத்தா திரும்பி பாட்டியைப் பார்த்து புன்னகைத்து விட்டு இன்னும் நெருங்கி உட்கார்ந்தார். இரண்டு பேர் முகமும் மலர்ந்தன.

ஃப்ளாஷ் ஒலித்தது. தாடிக்கார் படம் எடுத்தார்.

——

அத்துடன் தாத்தா, பாட்டி, நான், ரகு ராவ், தாடிக்கார் என்று எல்லோரும் மகிழ்ச்சியாக சிரிக்க சுபம் என்று முடிந்திருக்கலாம்.

—–

 

1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதி

 

பாட்டி எழுந்தாள். தாத்தாவுக்கு எதிரே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பொய்க் கோபத்துடன் “ என்ன இது இப்படி அடம் பிடிக்கறீங்க ? ஒழுங்கா சிரிச்ச மாதிரி முகத்த வெச்சுக்குங்க,” குரலை மாற்றி நைச்சியமாக “ இல்லா விட்டால் நான் உங்கள் கூட பேச மாட்டேன் “ என்றாள்

தாத்தாவின் முகம் இன்னும் இறுகியது. உரத்த குரலில்

“போடீ” என்றார்.

இல்லா விட்டால் அவர் எழுந்து போய் விடுவார் போல இருந்தது.

தாடிக்காரர் பார்த்தார் “ பாட்டி நீங்க வெளியில போய் சற்று நேரம் இருங்க, ரெண்டு பேரையும் தனித் தனியாக எடுக்கறேன் “

நான் “ சேர்ந்து எடுக்க வேண்டும் இல்லையா ?” தாடிக்காரர் தேவை இல்லை என்பது போல கை அசைத்தார்.

பாட்டி கோபத்துடன் ஏதோ சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்றாள்.

தாடிக்காரர் “தாத்தா இப்ப நல்லா சிரிங்க “ என்றார்

தாத்தா முகம் மலர்ந்தது.

தாடிக்காரர் என்னிடம் திரும்பி இப்போது பார்த்தாயா என்பது போல பெருமையாக பார்த்தார். “ அவங்களையும் தனியா எடுத்துட்டு, டிஜிடலாக சேர்த்து விடுவேன் “ என்றார்.

தாத்தா தெளிவாக

“ அவசியம் இல்லை, தனித் தனியாக படம் கொடுக்கலாம். இதுக்குத்தான் கவர்ன்மென்ட் சர்குலரில் சி சி எஸ் 1972 – சென்ட்ரல் சிவில் சர்வீஸ் பென்ஷன் விதிகளின் படி தனியாகவும் படம் அனுப்பலாம் என்று ஒரு விளக்கம் அனுப்பினார்கள். அவர்களுக்குத் தெரியாதா இது போல தேவை வரும் என்று ? வாத்வானி அப்படின்னு ஒரு டெபுடி செக்ரெடரி கை எழுத்து போட்டு அனுப்பி இருந்தான் “ என்றார்.

“  நீங்க எடுங்க “ என்று அழகாக போஸ் கொடுத்தார்.

ஃப்ளாஷ் ஒலித்தது. தாடிக்கார் படம் எடுத்தார்.

தாத்தா மறுபடியும் “ஓட்ட வைக்க வேண்டியதில்லை” என்றார்.

 

 

அகிலமும் அண்டையும்

 

ஸிந்துஜா

வண்டி இன்னும் கிளம்பவில்லை. நாலேகால் என்று கைக்கடிகாரம் காண்பித்தது. நாலு மணிக்கு மைசூரை விட்டுக் கிளம்ப வேண்டிய வண்டி கிளம்பாமல் அடமாய் நின்று கொண்டிருந்தது. அந்த முதல் வகுப்பில் நான்கு பேர் என்று சார்ட் சொன்னது.உட்கார்ந்திருந்தோம். மூன்று பேர் என் வயதுக்காரர்கள்தாம். நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வரை. நான்காவது நபருக்கு வயது அறுபத்தி ஆறு

எங்கள் கம்பார்ட்மெண்டில் அடுத்திருந்த அடுக்குகளில் யாரோ கல்யாணப் பார்ட்டி போலிருக்கிறது. பத்திருபது பேர் இருக்கலாம். கச்சாமுச்சாவென்று சிரிப்பும் பேச்சுமாய் ஏதோ ரகளை நடந்து கொண்டிருந்தது.

எனக்கு எதிரே இருந்தவர் உட்கார்ந்த வாக்கிலேயே நல்ல உயரம் என்று தெரிந்தது. அகன்ற நெற்றி. பாந்தமான கண்ணாடி. தீர்க்கமான மூக்கு. முகத்தை இனிமையாகக் காட்டும் புன்னகை எப்போதும் உதட்டை விட்டுப் பிரிய மறுப்பது போல உட்கார்ந்திருந்தது. நான் வண்டிக்குள் வந்த போது அவர் ஒருவர்தான் வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் நட்பைத் தெரிவிக்கும் புன்னகை ஒன்றை எறிந்தார். அதை பிடித்துக் கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தேன்.

“என் பேர்” என்று பெயரைத் தெரிவித்தேன்.

“நான் ஸ்கந்தன்.”

“மாயவரம் போறேளா?”

“இல்லே. தஞ்சாவூர்” என்றார் அவர். “என் மாமனாருக்கு சதாபிஷேகம். ஒய்ஃப் குழந்தைகள் எல்லாரும் போன வாரமே போயிட்டா. நான் இப்ப போறேன். நாள்னிக்கு விசேஷம், நீங்க மாயவரமா?”

“இல்லேல்லே. நான் ஆடுதுறை வரைக்கும் போறேன். நீங்க இறங்கின ஒரு மணி நேரத்திலே நானும் இறங்கிடுவேன்” என்று சிரித்தேன்.

அப்போது மூன்றாமவர் வந்தார். வந்தவர் உட்கார்ந்ததும் அவரது கைபேசி ஒலித்தது. அவர்தான் அறுபத்தி ஆறு என்று நினைத்தேன். கைபேசியை எடுத்து “குட் ஈவ்னிங். ராமநாதன் ஸ்பீக்கிங்” என்றார். சில வினாடிகள் சத்தமில்லாமல் இருந்தன. “கட் ஆயிடுத்து” என்று கைபேசியை அணைத்தார்.

நான்காவது ஆளும் வந்து விட்டார்.. கன்னடக்காரர். இடையில் பஞ்சகச்சமும் மேலே சட்டையும் தலையில் டர்பனும் அணிந்திருந்தார். நெற்றியில் பளிச்சென்று திருமண். தடிமனான கண்ணாடிக்குள் கோலிப் பந்துகளைப் போலக் கண்கள் உருண்டன. புரஃபஸர் மாதிரி தென்பட்டார்.

“நான் ஸ்கந்தன். நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்?” என்று ஸ்கந்தன் அவரிடம் பரிச்சயம் செய்து கொண்டார்.

“என் பேர் செட்லூர் வெங்கடரங்கன் பெங்களூருக்குப் போயிண்டிருக்கேன்” என்றார். “எனக்கும் கொஞ்சம் தமிழ் வரும்” என்று ஸ்பஷ்டமாக வார்த்தைகளை உச்சரித்தார்.

நான் புன்னகை செய்தேன்.

ஸ்கந்தன் அவரிடம் “அசப்பில் நீங்க மாஸ்தி மாதிரி இருக்கேள்” என்றார்.

“அவரெங்கே, நானெங்கே? போட்டுட்டு இருக்கற வேஷம் வேணும்னா அப்பிடி இருக்குன்னு நீங்க சொல்லலாம்” என்று நெற்றியையும் டர்பனையும் தொட்டுக் காட்டினார்.

மறுபடியும் கைபேசி ஒலித்தது. ராமநாதன் முகத்தில் சற்று அலுப்பைக் காட்டி “ஹலோ ராமநாதன் ஸ்பீக்கிங்” என்றார். “ஆமா, அப்போ கட்டாயிடுத்து. சொல்லுங்கோ” என்றார். மறுமுனையில் பேசிய குரல் முடிந்ததும் “ஸ்டேஷனிலேதான் இருக்கு. இன்னும் கிளம்பலே. நான்தான் அடிச்சுப் புரண்டுண்டு ஓடி வந்தேன். ஏ டூ பி லே ஒரு ஸ்ட்ராங் காப்பியானும் குடிச்சிட்டு வந்திருக்கலாம்” என்றார். மறுமுனை மறுபடியும் பேசி முடித்ததும் “ஆடுதுறைலே இறங்கினதும் போன் பண்றேன். வரட்டா” என்று கைபேசியை அணைத்தார்.

ஸ்கந்தன் சிரித்தபடி “இங்க ரெண்டு ஆடுதுறை டிக்கட்டா?” என்றார்.

ராமநாதன் அவரைக் கேள்வி தொங்கும் கண்களுடன் பார்த்தார்.

“நானும் ஆடுதுறைலேதான் இறங்கணும்” என்றேன் ராமநாதனைப் பார்த்து,

“ஓ அப்படியா? இதுக்கு மின்னாலே உங்களை நான் பாத்திருக்கேனோ?” .

“இல்லே. நான் இருக்கறது பாம்பேல. ஒரு வேலையா ஆடுதுறை போறேன். உங்களுக்கு அதான் ஊரா?” என்று கேட்டேன்.

“ஆமா. தலைமுறை தலைமுறையா அங்கதான் இருக்கோம். ஆனா எனக்கு யாதும் ஊரே. யாவரும் கேளிர்னு ஆயிடுத்து லைஃபிலே” என்றபடி சிரித்தார்.

கன்னடக்காரர் “தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே” என்று பாடினார்.

திகைப்புடன் மற்ற மூவரும் அவரைப் பார்த்தோம்.

அவர் மேலும் “அஞ்சாயிரம் வருஷத்துக்கு முன்னாலே லைஃபைப் பத்தி ஒருத்தனுக்கு என்ன தீட்சண்யம்! என்ன வேதாந்த மனசு! மெல்லிசு நூலால யானையைக் கட்டி இழுத்துண்டு போற அசாத்தியம்னா ஆளை அடிக்கிறது! பெரிய மகானாத்தான் இருக்கணும்!” என்று கண்ணாடிக்குள் பளபளக்கும் கண்களுடன் சொன்னார்.

‘நீங்களும் தீட்சண்யம்தான்! ஆளை அடிக்கிற அசாத்தியம்தான்!’ என்று அவரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது எனக்கு.

“உங்களுக்கு எப்படி இவ்ளோ தமிழ்…?” என்று கேட்டார் ராமநாதன். “எங்களை மாதிரி மெட்ராஸ்காராளுக்குக் கூட மொத வரி மட்டுந்தானே தெரியும்!”

செட்லூர் சிரித்தபடி “எங்கம்மா சீரங்கம். சின்ன வயசிலேயே கொழந்தைக்குப் பால் போட்ற மாதிரி தமிழையும் போட்டிட்டா” என்றார்

புகை வண்டியும் மெல்ல அசைந்து நகர ஆரம்பித்தது.

ராமநாதன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு “இருபத்தி அஞ்சு நிமிஷம் லேட்டு. இதோட விட்டானே. ஆனா வழியிலே அட்ஜஸ்ட் பண்ணி மாயவரத்துக்குக் கரெக்ட் டயத்துக்குப் போயிடுவான்” என்றார். “ட்ரெயினை சரியான நேரத்துக்கு கிளப்பி சரியான நேரத்துக்குப் போக வச்சது எனக்குத் தெரிஞ்சு கடைசியா இந்திரா காந்திதான்.”

“எமெர்ஜென்ஸியோட மத்த அக்கரமங்கள்னாலே இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல காரியங்களும் மூலேல போயிடுத்து” என்றார் ஸ்கந்தன்.

“ரொம்ப கரெக்ட்டா சொன்னேள். ஐயோ, இப்பக்கூட அதை நினைச்சாலே படபடங்கறது!” என்றார் ராமநாதன். “அன்னிக்கின்னு பாத்து நான் டெல்லிலே இருந்தேன். துர்க்மான் கேட்டுக்குப் போக வேண்டியிருந்தது. என்ன ஒரு கலவரம் அங்க! கலவரம்னா சொன்னாப் புரியாது, நேர்லே பாத்துருக்கணும். என்ன பயங்கரம்! ஜும்மா மசூதி பக்கத்து சந்து பொந்து எல்லாத்திலேயும் ஜனங்கள். எல்லார் மூஞ்சியும் ஏதோ எமன் வந்து பக்கத்துலே நிக்கற மாதிரி பேயறைஞ்சு கிடக்கு உடம்பெல்லாம் நடுங்கிண்டு பொண்களும் குழந்தைகளும் கத்தி அழறா. அன்னிக்குப் பாத்து நான் ரெண்டு டஜன் சர விளக்கு ரொம்ப சீப்பாவும் நல்லதாவும் கிடைக்குமே, வாங்கலாம்னு சாந்தினி சௌக்லேந்து நடந்து போனேன். மீனா பஜார் போய் அங்கேந்து ஜூம்மா மசூதி வரைக்கும் இருக்கற ரோடுலே சின்னச் சின்னப் பக்கத்து சந்துகள்லே இந்த விளக்குக் கடைகளைக் கொட்டி வச்சிருப்பான்கள், அப்படி ஒரு கடைக்குள் இருந்து பாத்துண்டு இருக்கறச்சேதான் தெருவிலே ஒரு சத்தம். கடைலேர்ந்து எல்லாரும் வெளியே ஓடி வந்து பார்த்தா ஒரே தலைகள்தான். ‘போலீஸ், துப்பாக்கி வச்சு சுடறாங்க, ஒடுங்க’ன்னு ஒரே சத்தம். பயந்து போய் மறுபடியும் கடைக்குள்ளே போய் ஒளிஞ்சுண்டோம். வெளியே ஒடிண்டு இருந்த கொஞ்ச ஜனம் வேறே கடைக்குளே நுழைஞ்சுடுத்து. ஒருத்தர் மேலே ஒருத்தர் மூச்சு விட்டுண்டு நின்னோம். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் அப்படியே இருந்தோம். உயிர் மேல் ஆசைன்னா கஷ்டம் கூடக் கஷ்டமாத் தெரியறதில்லேன்னு அப்பத்தான் தெரிஞ்சது.”

“நீங்க டெல்லிலே வேலை பாத்துண்டு இருக்கேளா?” என்று நான் கேட்டேன்.

“இருந்தேன். நான் ஒரு ஜெயின் க்ரூப்பிலே சேர்ந்து அங்கயும் இங்கயுமா அலைஞ்சு திரிஞ்சு இப்ப ரிட்டையர் ஆயிட்டேன். ஆனா வடக்கு தெற்கு மேற்குன்னு எல்லா இடங்களுக்கும் போகற வேலை” என்றார்.

“யாதும் ஊரேன்னு சரியாத்தானே சொன்னீங்க” என்று செட்லூர் புன்னகை புரிந்தார்.

“உங்களுக்கு மைசூரா?” என்று கேட்டார் ஸ்கந்தன்.

“ஆமா. பொறந்து வளர்ந்தது எல்லாம் மைசூர்தான். மகாராஜா காலேஜ்லே படிச்சேன்.”

“பெரிய தலைகள் எல்லாம் படிச்ச காலேஜுன்னா அது?” என்று இடை
மறித்தார்.ஸ்கந்தன். “ஆர்.கே. நாராயண், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், குவெம்புன்னு பெரிய லிஸ்டே உண்டே!”

“ஆமா. அங்கே இந்தப் பொடித் தலையையும் சேத்துண்டாங்க” என்று சிரித்தார் செட்லுர். “எங்கப்பாவும் ஆர்.கே லட்சுமணனும் கிளாஸ்மேட்ஸ். மகாராஜா காலேஜில் படிச்சிட்டு உன்னை யாராவது மேலே படிக்கிறதுக்கோ இல்லே வேலைக்கோ ரிஜெக்ட் பண்ணினா நீ பெரிய ஆளாயிடுவேன்னு லட்சுமணன் சொல்லுவார்னு எங்கப்பா சொல்லுவார். அவருக்குப் படம் போடற திறமை இல்லேன்னு ஜே ஜே ஆர்ட் ஸ்கூல்லே அட்மிஷன் கொடுக்கலையாம். அவர் அண்ணா ஆர்.கே. நாராயணனை யூனிவர்சிட்டி எண்ட்ரன்ஸ் பரிட்சைல பெயிலாக்கிட்டாங்களாம்” என்று சிரித்தார்.

“உங்களையும் காலேஜிலே….?” என்று சிரித்தார் ராமநாதன்.

“ஆமா. பி.எஸ்சி சேர ஆசைப்பட்டேன். தரலே.பி.காம்லே சேந்து படிச்சேன். ஏ,ஜிஸ் ஆபீசிலே வேலை கிடைச்சது. ஆறு வருஷம் முன்னாலே இந்த ஊர் ஏ.ஜி.யா ரிட்டையரானேன்.”

“ஓ, உங்களை மொதல்லே பாத்ததும் நீங்க யாரோ காலேஜ் புரஃபஸர் மாதிரி எனக்கு இருந்தது! இப்ப நீங்க சொன்னதையெல்லாம் கேட்டா ஏதோ சினிமாலே வர்ற மாதிரி இருக்கு” என்றேன் நான்.

“எனக்கும்தான். நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா ரெண்டு வருஷங் கழிச்சு என் பேரனையும் மகாராஜா காலேஜிலேயே சேத்து விட்டுடறது உத்தமம்னு தோணறது. அவன் ஹாஸ்டல்லே இருந்தாலும் பரவாயில்லே!” என்று சிரித்தார் ராமநாதன். மற்றவர்கள் சிரிப்பில் கலந்து கொண்டோம்.

“உங்க காலேஜுக்குப் பக்கத்திலேதான்… வாணி விலாஸ் ரோடு பக்கத்திலே ஒரு பெரிய ரைட்டர் இருந்தாரே?”என்று ராமநாதன் யோசித்தார்.

“ஆமா. குவெம்பு வீடு அங்கேதான்.”

“அதேதான். அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு சந்துலே டைலர் கடை ஒண்ணு இருந்தது. சையதோ சைமனோ என்னவோ பேர். ஆள் வாட்டசாட்டமா சினிமா ஸ்டார் மாதிரி இருப்பான். கோட்டு தச்சா அவன் தச்சுக் கொடுக்கற மாதிரி இருக்கணும்னு எப்பவும் கல்யாணக் கூட்டம் நிக்கும். நாலாவது மெயினோ அஞ்சாவது மெயினோ சரியா ஞாபகம் இல்லே இப்போ” என்றார்.

“எனக்குக் குவெம்பு வீடு தெரியும். இந்த டைலரை எங்கே நீங்க ஆடுதுறையிலேயும்,டெல்லியிலேயும் இருந்துண்டே கண்டு பிடிச்சீங்க?” என்று செட்லுர் ஆச்சரியப்பட்டார்.

“எனக்குப் பொண்ணு கொடுத்தவா உங்க ஊர்க்காராதான்!” என்றார் ராமநாதன். “ஆனா நான்தான் கோட்டைத் தைக்கக் கொடுத்துட்டு வந்து இந்த இடத்தைப் பத்தி என் மாமனாருக்கு சொன்னேன். அதுவரைக்கும் அவருக்கும் அதை பத்தித் தெரிஞ்சிருக்கலே.”

பேச்சு அரசியல், சினிமா, நாடகம், பத்திரிகை என்று நீண்டு கொண்டே போனது.

அடுத்த அடுக்குகளில் இருந்த கூட்டம் வந்து எழுந்து முன்னே சென்றது. ஏதோ ஸ்டேஷன் வருகிறது போலிருக்கிறது. என்று நினைத்தேன்.

“மத்தூர்” என்றார் ராமநாதன்.

“மத்தூர் வடை ரொம்ப ஃபேமஸ் ஆச்சே” என்றேன் நான்.

“ஒரு காலத்திலே” என்றார் ஸ்கந்தன். “இப்ப யாரெல்லாமோ போட்டுண்டு ட்ரெய்னுக்குள்ளே வந்து மத்தூர் வடைங்கிறான். சகிக்கலை. நூறு வருஷமா போட்டெடுத்து பேர் வாங்கினவனை நூறு நாளைக்கு முன்னாலே வந்தவன் காப்பியடிச்சு சம்பாதிக்கிறான்னா வயத்தெரிச்சலாத்தான் இருக்கு.”

“அவாதான் ஸ்டேஷனிலே இருந்ததை மூடிட்டாளே. போன தடவை கார்லே வந்தப்போ இங்க ஸ்டேஷன்லேந்து முக்கா கிலோ மீட்டர்லே மத்தூர் டிஃபானின்னு ஓட்டல் இருக்கு. அங்க ஒரிஜினல் வடை கிடைக்கிறதுன்னு யாரோ சொன்னா. அங்க போய் வாங்கிண்டு போனேன்” என்றார் ராமநாதன். “ஓட்டல்காரர்தான் அப்போ பழைய கதையை எடுத்துச் சொன்னார். நூறு வருஷத்துக்கு முந்தி பெங்களூருக்குப் நீராவி ரெயில்தானே போயிண்டிருந்தது. அப்ப தண்ணி டேங்கை ரொப்பறதுக்கு மத்தூர்லே வந்து நிக்குமாம். பக்கத்திலே ஷிம்ஷான்னு ஆறு. காவேரியோட போய் கலக்கறது அது. அதுலேர்ந்து தண்ணி பிடிச்சிண்டு வந்து டேங்க்கையெல்லாம் ரொப்புவாளாம். இந்தக் காரியம் நடந்து முடிய அரைமணி முக்கா மணி நேரமாகும். அப்ப ட்ரெய்னலே வரவா கிட்டே ஓட்டல்காரர் இட்லியும் வடையும் விக்க ஆரமிச்சார். கொஞ்ச நாள் கழிச்சு ஸ்டேஷன்லேயே மத்தூர் வடைக் கடையை ஆரமிச்சுட்டார். ஓஹோ ஓஹோன்னுதான் ரொம்ப வருஷம் ஓடிண்டு இருந்தது. ஒரு நா மூடிட்டா. ஏன் தெரியுமா? வர்ற டிரெயின் எல்லாம் ரெண்டு நிமிஷம் மூணு நிமிஷத்துக்கு மேலே நிக்கப்படாதுன்னு ரயில்வேல புதுசா உத்திரவு போட்டா, யாரெல்லாமோ ஒரு வடைத் தட்டைத் தூக்கிண்டு கம்பார்ட்மெண்டுக்குள்ளே நுழைஞ்சு மத்தூர் வடைன்னு விக்க ஆரமிச்சது, வடை விலையை பத்து ரூபான்னு ரயில்வேக்காரா ஃபிக்ஸ் பண்ணினது எல்லாத்தையும் ஓட்டல்காரர் பாத்தாறாம். போறும், ஆளை விடுங்கோன்னு மூடிப்பிட்டார்.”

எனக்கு ராமநாதனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு விஷயத்துக்குப் போனால் கூடவே அதன் உள்ளுக்குள்ளும் போய்ப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளும் அவர் சுபாவம்!

வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

“இன்னும் ரெண்டு மாசம் போச்சுன்னா பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேலே பஸ்ஸெல்லாம் மைசூருக்கு ஒண்ணரை மணி நேரத்திலேயே போய்ச் சேந்துடுமாம். இப்ப மூணு மணி நேரம்னா ஆறது” என்றார் ஸ்கந்தன்.

“எப்பவோ வந்திருக்க வேண்டியது. கோர்ட்டு, கேசுன்னு இழுத்தடிச்சிட்டாங்க” என்றார் செட்லூர்.

“எல்லாம் பணம் செய்யற வேலை” என்றார் ராமநாதன்.

“அப்படியா? ” என்றேன் ஆச்சரியத்துடன்.

“ஆமா. எல்லாம் பாலிட்டிஷியனோட விளையாட்டுதான். எப்போ மொத மொதலா கவர்மெண்டுல இந்த பிராஜெக்ட்டை எடுத்தாங்களோ அவங்களோட அந்த முடிவுக்கு சில மாசங்களுக்கு மின்னயே பெங்களூர்லேந்து மைசூருக்கு ரோடு போற வழியை சுத்தி இருக்கற நிலத்தை யெல்லாம் பார்ட்டி ஆட்கள் வளைச்சிட்டா. ஆனா பிராஜக்ட் வரப்போ நல்ல நஷ்டஈடு கிடைக்கும்ங்கிற அவங்க நினைப்பிலதான் மண்ணு விழுந்துடுத்து. அப்புறம் என்ன, கோர்ட்டுதான், வாய்தாதான்.
எவ்வளவு வருஷம்? எல்லாம் பண ஆசைதான்.”

“பணத்தையும் அதிகாரத்தையும் வச்சுண்டு கடைசியிலே என்ன பண்ணப் போறோம்? செத்தா நாலு பேர் தூக்கிண்டு போய் மண்ணிலேதான் புதைக்கணும். இல்லே எரிச்சு மண்ணோட மண்ணா கரைக்கணும். பணம் இருக்கேன்னு பிளேன்லே போயி வானத்திலே உடம்பை அடக்கம் பண்ணிட முடியுமா?” என்று சிரித்தார் செட்லுர்.

“வாஸ்தவம். மகான்கள் சொல்லியே கேக்காதவா சாதாரண மனுஷா சொல்லியா கேக்கப் போறா?” என்றார் ராமநாதன்.

செட்லூர் எழுந்து மேலே கைப்பைகளையும் பெட்டிகளையும் வைத்திருக்கும் இடத்திலிருந்து ஒரு சிறிய சூட்கேஸை எடுத்து தான் உட்கார்ந்த இடத்தின் அருகில் வைத்துக் கொண்டார்.

“உங்க ஊர் வந்துடுத்து” என்றார் ஸ்கந்தன் சிரித்தபடி.

“பெங்களூரில் எங்க ஜாகை உங்களுக்கு?” என்று ராமநாதன் கேட்டார்.

“மல்லேஸ்வரம். அஞ்சாவது கிராஸ் கிட்டக்க” என்றார் செட்லூர்.

“அங்கதானே இந்த கீதாஞ்சலி தியேட்டர்…?”

“ஆமா. எல்லாப் பெரிய தியேட்டர்களுக்கும் கெடச்ச அந்தஸ்து அதுக்கும் கிடைச்சு மூடிட்டா. இப்போ பெரிய மால் இருக்கு அந்த இடத்திலே” என்றார் செட்லூர்.

“நானும் அங்க வந்துட்டுப் போயி ரொம்ப வருஷம் இருக்கும்” என்றார் ராமநாதன்.

“அதுக்குப் பக்கத்திலே கோகனட் அவெனியுன்னு தேங்கா மரத்தையெல்லாம் வெட்டிப் போட்டுட்டு கட்டிடமா மாத்தி விட்டுட்ட ரோடுலதான் என்னோட வீடு இருக்கு” என்றார் செட்லூர் சிரித்தபடி.

“கோகனட் அவெனியூன்னா சிதானந்தா மடத்துக்குப் பக்கத்திலேயா?” என்று கேட்டார் ராமநாதன்.

“அது எங்க இருக்கு?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் செட்லூர்.

“அஞ்சாவது கிராஸ் டவுனிலே நாலு ரோடு சேர்ற இடம்தானே நீங்க சொல்றது? அங்க ஒரு ராகவேந்திரா பேக்கரி கூட ரொம்ப ஃபேமஸா இருந்தது.”

மறுபடியும் ஆச்சரியத்துடன் செட்லூர் “அந்த பேக்கரிக்குப் ஏழெட்டு வீடு தள்ளித்தான் நானும் இருக்கேன். அந்த பேக்கரியும் தெரு பூரா வாசனை அடிச்சிண்டு இப்பவும் நிக்கறது” என்றார்.

“அந்த பேக்கரிக்குப் பக்கத்தாப்பிலே ஒரு சின்ன சந்து போகும். உள்ளே போனா ஒரு வீடு மாதிரி அந்த மடம் இருக்கு. அது இன்னும் அங்கேதான் இருக்குன்னு எனக்கு எப்படித் தெரியும்னா நான் ஒவ்வொரு வருஷமும் மடத்துக்கு பணம் அனுப்புவேன். அவாகிட்டியிருந்து ரசீது வந்துடும். மடம் உள்ளே அவ்வளவு தெய்வ சாந்நித்யம் ரொம்பி வழியற இடம். பத்துப் பேரை சேந்தாப்பிலே பாக்க முடியாது. அமைதின்னா அப்பிடி ஒரு அமைதி. அரை முழ நூலைக் கீழே போட்டா சத்தம் கேட்கும்” என்றார் உணர்ச்சி வசப்பட்ட குரலில்.

“பாருங்கோ. நான் இவ்வளவு வருஷம் இங்கே இருக்கேன். உங்க மூலமா தெரிஞ்சிண்டேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றார் செட்லூர்.

ஏழரை மணிக்கு வண்டி பெங்களூரை அடைந்தது. செட்லூர் எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். சிறிது நேரம் பேசியபடி இருந்தோம். பிறகு அவரவர் கொண்டு வந்திருந்த இரவு உணவை சாப்பிட்டோம். மற்ற இருவரும் படுக்க ஆயத்தமானார்கள். நான் படுத்தபடி தலைக்கு மேலிருந்த சிறிய மின் விளக்கின் ஒளியில் கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் படிக்கலானேன்.

காலையில் வண்டி தஞ்சாவூரை அடைய கால் மணி இருக்கும் போது ஸ்கந்தன் எழுந்து விட்டார். ராமநாதனும் நானும் அவர் எழுந்த சத்தத்தில் விழித்து விட்டோம். நான் பாத்ரூம் போய் விட்டுத் திரும்பியதும் ராமநாதனும் அங்கே சென்றார். அவர் திரும்பி வந்ததும் எனக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்து விட்டு “சித்த நாழில நாம இறங்க வேண்டிய இடமும் வந்துடும். ஆடுதுறையிலே நீங்க எங்கே தங்கறேள்?” என்று கேட்டார்.

“நான் அங்க ஒரு டாக்டரைப் பாக்கப் போறேன். பாத்துட்டு சாயங்காலம் திருச்சிக்குப் போயிடுவேன்” என்றேன்.

“பாம்பேலேந்து ஆடுதுறைக்கு டாக்டரைத் தேடிண்டு வந்திருக்கேளா?” என்று சிரித்தார். “கேக்கவே ஆச்சரியமா இருக்கே? பேரென்ன?”

“டாக்டர் லயோலான்னு”

“கேட்ட பேராவே இல்லையே. எங்க இருக்கு அவரோட கிளினிக்?” என்று கேட்டார் ராமநாதன்.

நான் அவரிடம் விவரத்தைச் சொன்னேன். அவர் பேசாமலிருந்தார். ‘ஏதோ கத்துக்குட்டி டாக்டர்’ என்ற நினைப்பு அவர் முகத்தில் படர்ந்திருந்த அலட்சியத்தில் தெரிந்தது. “உங்களுக்கு நிச்சயம் தெரியுமா அவர்ஆடுதுறையிலதான் இருக்கார்னு? நானும் இந்த ஊர்க்காரன்தான். ஆனா கேட்ட பேராவோ பாத்த இடமாவோ இல்லையே” என்றார்.

“நான் தேடிப் பாத்துக்கறேன்” என்றேன் நான்.

ரயில் ஆடுதுறையில் நின்ற போது இறங்கினோம். குளிர்ந்த காற்றின் ஸ்பரிசம் பட்டு உடம்பு ஒரு முறை சிலிர்த்தது.

“எவ்வளவு நீள பிளாட்ஃபார்ம் !” என்று வாய் விட்டுச் சொன்னேன். அவ்வளவு சிறிய ஊருக்கு, அதிகம் பேர் பிரயாணம் செய்யாத இடத்திற்கு இவ்வளவு விசாலமாக நீளமாகக் கட்டி விட்டிருந்த புண்ணியவானை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவருடன் நடந்தேன். ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் இரண்டு ரிக் ஷாக்கள் எங்களைத் தேடி வந்தன. அவர் தன்னுடைய பெட்டியை ஒன்றில் வைத்து விட்டு இன்னொரு ரிக் ஷாக்காரனிடம் “சார் போகற இடத்தை விஜாரிச்சுக் கூட்டிண்டு போறியா? என்று கேட்டார். அவன் தலையாட்டினான். அவர் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு ரிக் ஸாவில் ஏறிக் கொண்டார்.

நானும் ரிக் ஷாவில் ஏறிக் கொண்டேன். போக வேண்டிய விலாசத்தைச் சொன்னேன்.

“நம்ம பச்சிலை வைத்தியருங்களா?” என்றான். நான் வியப்புடன் தலையாட்டினேன்.

“சாமி, அது இங்கேர்ந்து நாலு மைலு இருக்கும். ஏதாச்சும் கூட போட்டுக் குடுங்க” என்றான்.

“சரி தரேன். நீ போ” என்றேன்.

அவன் ரிக் ஷாவை மிதித்து ஒட்டிக் கொண்டு சென்றான்.

“நான் சொன்னவுடனேயே நீ அவரான்னு கேட்டுட்டியே. இங்க அவரை எல்லாருக்கும் தெரியுமா?” என்று அவனிடம் கேட்டேன்.

“பின்னே? இந்த ஊர்க்காரங்க வைத்தியத்துக்குஅவருகிட்ட போறதை விடுங்க. தெக்கே தூத்துக்குடி, கன்யாகுமரி, வடக்கே தில்லி காசுமீரு கிழக்கே கல்கத்தான்னு வெளியூருலேந்து எம்புட்டு சனம் வந்து போயிட்டு இருக்கு. போன வருசம் ஒரு சாயபு துபாயிலேந்து குடும்பத்தோட மருந்து வேணும்னு வந்தாங்கன்னா பாத்துக்கோங்க” என்றான் ரிக் ஷாக்காரன்.

அவன் வைத்தியரின் வீட்டுக்கு இருபது நிமிஷத்தில் கொண்டு போய் விட்டு விட்டான். பணத்தை அவனுக்கு கொடுத்த போது எனக்கு ராமநாதனின் நினைவு வந்து போயிற்று.

 

 

 

 

 

 

 

அவ்வளவுதான் மனிதர்கள்

                                        ஆர் சேவியர் ராஜதுரை

 

ஆபிஸ் முடிந்து கேபில் வந்துகொண்டிருக்கும் பொழுதுதான் சரவணனை Gossip எனப் பெயரிடப்பட்ட அந்த புது குழுவில் விஷ்ணு இணைத்திருந்தான். விஷ்ணுவிடமிருந்து மெசேஜ் வந்ததே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த யோசனையிலேயே அந்த குழுவை ஓப்பன் செய்தான். ’வெல்கம் சரவணா’ என விஷ்ணு அனுப்பினான். விஷ்ணு இவன் காலேஜ் சீனியர் என்பதைத்  தாண்டி அவ்வளவாக பழக்கம் கிடையாது.  ரூபனையும் அனன்யாவையும் பார்க்கப் போகும்  பொழுது விஷ்ணுவோடு பேசியிருக்கிறான் அவ்வளவுதான். அவன் எதற்கு தன்னை ஒரு குழுவில் சேர்த்திருக்கிறான் என்ற குழப்பத்திலேயே ‘எதுக்கு dude இந்த  குரூப்’  என அனுப்பினான்.

‘சொல்றேன் சரவணா.  ரூபனுக்கு அடுத்த மாசம் கல்யாணம்.  எனக்கு தெரியும் கண்டிப்பா உனக்கு சொல்லியிருக்கமாட்டான்னு’

ரூபனுக்கு கல்யாணம் என்பதை அறிந்தவுடன் சரவணனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

**************

ரூபன்…

சரவணன் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர்கள் ரூபன் வீட்டில்  தான் வாடகைக்கு குடியிருந்தனர். ரூபன்  சரவணனை விட ஒருவயது மூத்தவன். அதனாலே சரவணனை எங்கே சென்றாலும் ரூபனுடனே அனுப்பினார்கள்.

’ரூபன் அண்ணா விளையாட போனா நீயும் போ, தனியா போகக்கூடாது!’

என அவன் நடக்க  ஆரம்பித்தது முதல் எல்லாவற்றிலும் ரூபன் செய்வதையே செய்ய வைத்தார்கள்.

ரூபன் படித்த பள்ளியிலே சரவணனையும் சேர்த்தார்கள். ரூபன் கூடவே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த சரவணன் பள்ளியிலும் ரூபன் பின்னாலே  செல்ல ஆரம்பித்தான். அவன் வகுப்பில் அவனுக்கு நண்பர்களே இல்லை. வகுப்பு தொடங்கும் வரை ரூபன் வகுப்பறையில் இருப்பான். சாப்பாடும் ரூபனோடே அமர்ந்து சாப்பிடுவான். வீட்டிற்கு வரும்பொழுதும் ரூபனோடே வருவான். ரூபன் உடல்நிலை சரியில்லாமலோ இல்லை வேறு எதாவது காரணத்திற்காக விடுப்பு எடுத்தால் சரவணனும் பள்ளிக்கு போக மாட்டான்.

ரூபனோடு போ என சொன்னவர்கள் ஒரு கட்டத்தில் ‘ஏன்டா எப்ப  பார்த்தாலும் அவன் கூடவே சுத்திட்டு இருக்க!’ என திட்ட  ஆரம்பித்தனர்.

ரூபனோடே இருந்ததால் அவனுக்கு அவன் வயதில் நண்பர்களே இல்லை. ரூபனின் நண்பர்கள் தான் அவனுக்கும் நண்பர்கள். அவர்களை மட்டும் அண்ணா என கூப்பிடுவான். ரூபனை டா சொல்லியே அழைப்பான்.  ’டேய் உன்னவிட ஒரு வயசு பெரியவன்ல அண்ணானு கூப்பிடுறா’ என சரவணன் அப்பா சரவணனை திட்டிய பொழுது ‘பரவால்ல அவன் என்னை அப்படியே கூப்பிடட்டும்.அதான் எனக்கும் பிடிச்சிருக்கு’னு ரூபன் சொல்லிவிட்டான்.

ரூபன் எடுத்த பயாலஜி குரூப்பையே சரவணனும் எடுத்தான். சரவணன் மிகவும் வருத்தப்பட்ட நாட்கள் என்றால் அது அவன் பன்னிரெண்டாம் வகுப்பு  படித்த நாட்கள் தான். ரூபன் அப்போது கல்லூரி சென்றுவிட்டதால் சரவணன் அந்த வருடம் முழுவதும் தனியாகவே சென்றுவந்தான்.

கடைசியாக கல்லூரி முடியும் பொழுது வந்திருந்த சண்டைகூட கல்யாணத்திற்கே சொல்லக்கூட முடியாத அளவிற்கான சண்டையில்லை. உண்மையில் அது சண்டையே இல்லை. சின்ன மனஸ்தாபம்தான். அதோடு சரவணன் குடும்பமும் சொந்தவீடு வாங்கி வேறு இடத்திற்கு சென்றது. ரூபனும் கல்லூரி முடித்து மேற்படிப்பிற்காக சென்னை சென்றான். அதற்குப்பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஒருமுறை ஊரில் தியேட்டரில் இடைவேளையின் போது பார்த்தான். இருவரும் சிரித்துக்கொண்டு நன்றாகவே பேசினார்கள். நேருக்கு நேர் பார்க்கும் பொழுது பேசி சிரித்துக்கொள்ளும் அளவில் அவர்களின் உறவு இருந்தது. வாட்ஸப்பில் தொடர்பிலும் இருக்கிறான் தான். அவன் கல்யாண விஷயம் விஷ்ணு மூலமாக தெரிந்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

”நீ மாறிட்ட சரவணா மாறிட்ட சரவணானே சொல்லிட்டு நீ மாறிட்டியே டா” என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

’மச்சான் பொண்ணு யாருனும் சொல்லுடா!’ என பரணி அனுப்பினான்.

அவனுக்கு குழப்பமாகவே இருந்தது. எதற்காக இப்பொழுது இவர்கள் இதைச் சொல்ல ஒரு குழு ஆரம்பித்திருக்கிறார்கள் என எரிச்சலோடு யோசிக்கும் பொழுதுதான் பரணி இதை அனுப்பியிருந்தான்.

’அனன்யா தாண்டா பொண்ணு’ என விஷ்ணு அனுப்பினான்.

அவனுக்கு தற்பொழுது எல்லாம் புரிந்தது. இந்த குழுவில் அவனை இணைத்ததற்கு காரணம் ரூபன் அல்ல. அனன்யா தான். அனன்யாவும் சரவணனும் இரண்டாடுகள் காதலித்தனர். ரூபனோடு பேச்சுவார்த்தை இல்லாமல் போனதற்கு அனன்யாவும் ஒரு வகையில் காரணம். அனன்யாவுடன் சரவணன் ஒன்றாக சுற்றிய பொழுதுகளில் கூடவே ரூபனுமிருந்தான். பரணி முதலாமாண்டில் ‘அனன்யாவ லவ் பண்றியாடா?’ எனக் கேட்டபொழுது ‘ச்சீ அனன்யா என் ப்ரண்ட் டா, அவகிட்ட அப்படி தோணலடா’ என ரூபன் கூறியதை சொல்லி இப்போ எங்கேயிருந்து வந்திருக்கும் என கிண்டலாக குழுவில் மெசேஜ் போட்டான் பரணி.

‘நம்ம சரவணன் அனன்யாவோட சுத்துனப்ப கூடவே தானடா இருந்தான். அதுவும் நம்ம IV (industrial Visit) போனப்ப அனன்யாவ சரவணனோட தனியா அவன் பைக் குடுத்துலாம் அனுப்பிருக்கானேடா’ என விஷ்ணு சிரித்தான்.

டேய் அதுமட்டுமா, நம்ம சரவணனோட பிரேக் அப் ஆனப்பறம் காலேஜ் முடிஞ்சு நம்ம தருண லவ் பண்ணிட்டிருந்தாடா அவ. அப்பயும் ரூபனோட காண்டாக்ட்ல தான்டா இருந்தா.. என்ன மச்சான் தருணு…

’எனக்கு அப்பவே டவுட் வந்திருச்சு மச்சான். ’என்ன நீ என்னைய தான லவ் பண்ற அவன் கூட எதுக்கு பேசறே’னு கேட்டேன் மச்சான். அவன் என் ப்ரண்ட் தப்பா பேசாத’னு பெரிய பத்தினியாட்டம் பேசுனா மச்சான். என தருண் அனுப்பினான்.

’இப்பயும் ப்ரண்ட்னு தான் சொல்லுவானு நினைக்கிறேன்.’ என விஷ்ணு அனுப்பினான்.

’சரவணன்,தருண் கூட அவ சுத்துனப்பயும் கூடவே தான் இருந்தான் இந்த ரூபனு. எப்படிடா எல்லாம் தெரிஞ்சும் அவள கல்யாணம் பண்ணிக்கறான்!’ என பரணி அனுப்பினான்.

’ஏன் அவ மட்டும் என்னவாம்? அவன் ஆபிஸ்ல ஒரு பொண்ண லவ் பண்ணிட்டிருந்தான். அந்த பொண்ணும் அனன்யாவும் நல்ல க்ளோசா சுத்திட்டிருந்தாங்க. அவங்க ப்ரேக்அப்க்கும் அனன்யா தான் காரணமா இருப்பான்னு நெனைக்கிறேன்.’

’நான் யாருனு உனக்கு தெரியும்; நீ யாருனு எனக்கு தெரியும்; நம்ம ரெண்டு பேர் யாருனு இந்த ஊருக்கே தெரியும்னு அவங்களே ஒரு மியூச்சுவல் அன்டர்ஸ்டேடின்ங்க்கு வந்திருப்பாய்ங்க போல’ என விஷ்ணு கூறினான்.

’அப்பிடி இருக்கவங்க நேர்மையா சொல்லியிருக்கணும்ல…அப்போ நான் கேட்டப்போ என்ன குதி குதிச்சா தெரியுமா இந்த அனன்யா *****’ என கெட்டவார்த்தையில் அனுப்பினான் தருண்.

அதற்கு மேல் அவர்கள் அனன்யாவையும் ரூபனையும் தவறாய்ப் பேசுவதை கேட்க அவனால் முடியவில்லை. குழுவிலிருந்து உடனடியாக வெளியேறினான்.

’என்னடா அவன் வெளிய போயிட்டான்.’ பரணி கேட்டான்.

’டேய் தருண், நீ ஏண்டா கெட்ட வார்த்தையில திட்டுற’ அதான்டா அவன் போயிட்டான்.

’அவன் போனா என்ன வுடறா!’ என தருண் அனுப்பினான்.

அவனுக்கு மனசே சரியில்லை. கேபிலிருந்து இறங்கி ரூமிற்கு வந்து குளித்துவிட்டு சோபாவில் அமர்ந்தான்.

போனை எடுத்து அனன்யா மற்றும் ரூபன் புரொபைல் சென்று பார்த்தான். ’கமிட்டட்’ என இருவரும் பகிர்ந்திருந்தார்கள்.

ரூபனிடம் சரவணனே கேட்டது நினைவுக்கு வந்தது. ‘உனக்கும் அனன்யாக்கும் ஏதாவது…….’

’டேய், நீயுமாடா! உன்ன மாறிதாண்டா அவளும் எனக்கு. ஒருவேளை அவள லவ் பண்ணா உங்கிட்ட சொல்லாம இருப்பேனாடா..’

அன்று ரூபன் சொன்ன வார்த்தைகளை நினைத்து சிரித்தான்.

’அப்போ அனன்யா உன் ப்ரண்ட் தான.. அப்பாடா!’ என நிம்மதியடைந்திருந்தான்.

கல்லூரியில் ரூபன் நெருங்கிப் பழகியது அனன்யாவோடு தான். அதனால் தான் ரூபனிடம் அந்த சந்தேகத்தைக் கேட்டான். அனன்யாவும் சரவணனிடம் நன்றாக பழக ஆரம்பித்தாள். முதலில் ’வாங்க போங்க’ என பேசியவனை ‘ஏய் ச்சீ பேர் சொல்லியே கூப்புடுறா’ என அனன்யாதான் கூறினாள்.

அனன்யாவும் சரவணனை அவள் வட்டத்திற்குள் சேர்த்துக்கொண்டாள். ரூபனின் புத்தகங்கள் அரியருக்கு தேவைப்பட்டதால் அதை அவன் சரவணனுக்கு தரவில்லை. அனன்யாவின் புத்தகங்களையே சரவணன் பயன்படுத்தினான். அனன்யாவின் ரெக்கார்ட் அசைன்மெண்ட் எல்லாமே அடுத்த வருடத்திற்காக வாங்க ஆரம்பித்தான். கடினமான தேர்வுக்கு முந்தைய நாள் சரவணன், அனன்யா வீட்டில்தான் அவளிடம் சந்தேகம் கேட்டு படிப்பான். சில சமயங்களில் அதே தேர்வில் ரூபன் அரியர் வைத்திருந்தால் ரூபனும் அவனோடு படிக்க வருவான்.

அனன்யாவை சரவணனுக்கு பிடித்திருந்தது. அதை சொல்லி அதனால் ரூபனுக்கும் தனக்கும் அனன்யாவுக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என பயந்தான்.

ஒரு நாள் அனன்யா ரூபன், சரவணன் இருவருக்கும் கான்ப்ரன்ஸ் கால் செய்திருந்தாள். அவள் வீட்டில் அனைவரும் ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தனர். நாளுக்கு ஆறுமணிநேரம் டைம் சொல்லி பவர்கட் செய்துகொண்டிருந்த நாட்கள் அது. போர் அடிக்கிறது என இருவரிடமும் பேசிக்கொண்டிருந்தாள். ரூபன் வீட்டில் வேலை சொல்ல காலை கட் செய்துவிட்டு சென்றுவிட்டான்.

’எங்கடா போயிட்டான் அவன்’

அவங்க வீட்ல UPS போடுறாங்க, ஆளு வந்திருக்கு அதான் கட் பண்ணிட்டு போயிட்டான்.

’எங்க வீட்டுலயும் போடணும். மாடியில வேற இருக்கோமா. ஹீட் அப்பிடியே இறங்குது. முடியல’

’ம்ம்ம்’

’உங்க வீட்ல போடலயாடா’

’அதான் அவங்க வீட்ல போடறாங்கல, கரண்ட் இல்லாட்டி இனி அங்க போயிடுவேன். போன் சார்ஜ்க்கும் இனி பிரச்சனையிருக்காது.அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு’

’ம்ம்,இங்க சாயங்காலம் வரை எப்பிடி ஓட்ட போறேனு தெரியலடா! எதாவது இண்ட்ரஸ்டிங்கா இருந்தா சொல்லேன்’

’இண்ட்ரஸ்டிங்காவா!’

’ம்ம்ம் ஆமா.. லைக், ரூபனுக்கு தெரியாத ரகசியம் எதாவது இருக்கா?’

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. என்னைய பத்தி எல்லாம் அவனுக்கு தெரியும் அவனைப் பத்தி எல்லாம் எனக்கு தெரியும்.

’டேய் எல்லாத்தையுமா எல்லார்ட்டையும் சொல்லுவாங்க. அது ரொம்ப சின்ன விஷயமா கூட இருக்கும்.’

’ம்ம்ம். எங்க அத்த பொண்ணு அடிக்கடி எங்க வீட்டுக்கு வரும். அதுக்கு புரோபோஸ் பண்ணியிருக்கான் ரூபன். அது எனக்குத் தெரியும். அந்த புள்ளை இவன் மேல இண்ட்ரஸ்ட் இல்லனு சொல்லிருக்கு. அதுக்கப்பறம் ரெண்டு பேரும் பேசிக்கிறதில்ல. ஆனா இன்னைக்கு வர எங்கிட்ட அதப் பத்தி சொன்னதில்லை. நானும் கேட்டுக்கிட்டதில்ல அனன்யா. ஆனா எங்கிட்ட சொன்னா நான் என்ன நினைக்கப்போறேன் சொல்லு’

’காவ்யாதான’

‘ஆமா அனன்யா, பாத்தியா உங்கிட்டலாம் சொல்லியிருக்கான. ஆனா எங்கிட்ட அதப்பத்தி பேசுனதில்லை!’

’டேய் உன் அத்த பொண்ணு அப்பிடியே மாத்தி உங்கிட்ட பொய் சொல்லிருக்காடா. அவன்கிட்ட அவ தான் ப்ரோபோஸ் பண்ணியிருக்கா. ரூபன் புடிக்கலனு சொல்லிட்டான். அப்பதான் இவ சத்தியம் வாங்கியிருக்காடா, என்னைய புடிக்கலனு சொன்னாலும் பரவால்ல எக்காரணம் கொண்டும் இது உனக்கு தெரியக்கூடாதுனு.’ அதான் அவன் உங்கிட்ட சொல்லல.’

’ஓ! ஆனா நான் அவகிட்ட ஏன் இப்ப எங்க வீட்டுக்குலாம் வரமாட்ற, விசேசத்துக்கு வந்தாலும் முன்னமாறி என்கூடலாம் பேசமாட்டேங்கறனு கேட்டதுக்கு, ’போனதடவ ஊருக்கு வந்தப்ப உன் பிரண்ட் ரூபன் எனக்கு ப்ரோப்போஸ் பண்ணிட்டான். அவன்கூட நான் ப்ரண்ட்லியாதான் பழகுனேன். அவன் தப்பா எடுத்துக்கிட்டான். அவன்கிட்ட முடியாதுனு சொல்லிட்டேன். அவன் இது உனக்கு தெரியக்கூடாதுனு சத்தியம்லாம் வாங்குனான். திரும்ப அங்க வந்தா அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவான்.அவன பாக்கணும். அது ரெண்டு பேருக்குமே கஷ்டம். அதான் வரதில்லை’னு சொன்னா!’

’அடிப்பாவி!’ எப்புடி பொய் சொல்லிருக்கா பாரு. இதப் பத்தி கேக்காம இருந்திருந்தா இதுனால உங்க ரெண்டு பேருக்குள்ளயும் புரிஞ்சுக்காம சண்டை வந்திருந்தாலும் வந்திருக்கும்.’

’இதுனாலலாம் சண்ட வந்துருக்காது அனன்யா. ஏன்னா உண்மையாலுமே அவ சொன்ன மாறி ரூபனே ப்ரோபோஸ் பண்ணியிருந்தாலும் அதுனால என்ன இப்போ?’ அதான் நான் அத பெருசா எடுத்துக்கல.

’இருந்தாலும் எப்பயாவது வார்த்தை வந்துருச்சுனா சரவணா’

’அப்பிடியெல்லாம் நான் பேசமாட்டேன் அனன்யா’

’சரி காவ்யா பொய் சொன்னானு தெரிஞ்சுருச்சுல, அவள என்ன பண்ண போற’

‘அவள என்ன பண்றது! அவளும் பாவம்தான். அவளையும் எங்க வீட்ட தாண்டி எங்கயும் வெளிய விடமாட்டாங்க. அவளை எங்கவீட்டுக்கு விடுறதே அவ என்னைய விட ஒரு வயசு பெரிய பொண்ணுனு தான். அவளும் பாவம்தான். அவன் இதப்பத்தி சொல்லி நான் வீட்டுல சொல்லிடுவேணோனோ இல்ல அவள தப்பா நினைச்சிடுவேணோனு பயந்திருக்கலாம். அவன்கிட்டயும் சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டா. எங்கிட்டயும் இத கேக்ககூடாதுனுட்டா. அப்படியே இருந்தா  பிரச்சனை வராதுனு நினைச்சிருப்பா..

’பார்ரா…அவ்ளோ நல்லவனாடா நீயி!’

’அப்பிடியெல்லாம் இல்ல’

’நீ உண்மையாலுமே ஜெண்டில்மேன்ரா. இதைப் பத்தி அவன்கிட்ட பேசவேயில்லல.

’ஆனா நீ அப்பிடி இல்ல அனன்யா. உன்ன நம்பி சொன்னத நீ காப்பாத்தலல.’

‘டேய்! என்ன அப்புடியே எம்பக்கம் திரும்பற!’

‘ஆமா, அவன் உன்ன நம்பித்தான சொல்லியிருப்பான். நீ அத காப்பாத்தலல’

‘டேய் லூசு, நீ அவன தப்பா புரிஞ்சிட்டு இருக்கவும்தான் சொன்னேன். இன்னோனு இத பத்தி காவ்யா நேர்மையா சொல்லியிருந்தா நான் இதை உங்கிட்ட சொல்லியிருக்கவேமாட்டேன்.’

‘அதெல்லாம் சரி. ஆனா உன்ன நம்பி ஒன்னு சொன்னா அதக் காப்பாத்தணும்ல’

‘காப்பாத்தணும் தான்.ஆனா இத சொல்றதுக்கு முன்னாடி உனக்கு ரூபன் மேல ஒரு வருத்தமிருந்ததுல.’

’ஆமா’

’இனிமே இருக்காதுல!’

‘இருக்காது.’

’அவ்ளோதாண்டா…!’

’ம்ம்’

’சரி, இப்படி உனக்கு அவன்கிட்ட சொல்லமுடியாத ரகசியம் எதாவது இருக்கா?’

’அதான் இப்போ சொன்னேனே’

’டேய் லூசு, இப்போ அவன் உனக்கு தெரியாம ஒரு பொண்ணுக்கு ப்ரோபோஸ் பண்ணானு சொன்னில. அந்த மாறி நீ அவனுக்கு தெரியாம எதாவது பண்ணிருக்கியா!

’நானா!’

’ஆமா!’

’உன்னயை நம்பி எப்பிடி சொல்றது! சொல்லலாமா!’

’டேய் சொல்லுடா!’

’எனக்கு உன்மேல நம்பிக்கையில்லை.’

’அப்போ ஒன்னு இருக்கு.’

’இருக்கு அனன்யா!’

’அப்போ சொல்லுடா…’

’எனக்கு பயமாயிருக்கு. இத சொல்றனால ப்ரண்ட்ஸிப்பே முடிஞ்சிருமோன்னு.’

’என்னடா சொல்ற, அவ்ளோ பெரிய விஷயமா!’

’ஆமா அனன்யா’

’அப்போ சொல்லுடா ப்ளீஸ்!’

’இப்போ நான் சொல்லப்போறத எக்காரணம் கொண்டும் ரூபன்கிட்ட சொல்லிடக்கூடாது. இப்போ நீ சண்டைய தீர்த்து வைக்க பண்றேனு சொன்னியே இந்த மாறி எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. அவனுக்கு மட்டும் தெரிஞ்சா சத்தியமா நான்…… அவனுக்கு தெரியவே கூடாது. (அவன் குரல் ரொம்ப சீரியஸாக இருந்தது.) ப்ராமிஸ் பண்ணிக்குடு.’

’ப்ராமிஸ் டா. என்ன ஆனாலும் சரி இத ரூபன்கிட்ட சொல்லமாட்டேன்.’

’நன்றாக மூச்சை இழுத்து மூச்சு விட்டுவிட்டு கூறினான். ‘நான் உன்னை லவ் பண்றேன் அனன்யா’

’என்ன?’

’எனக்கு உன்னைய பிடிச்சிருக்கு அனன்யா. எனக்கு சொல்லித்தரதுக்காக எக்ஸாம்க்கு முன்னாடி நாள் நைட் முழுக்க நீ என் கூடவே இருப்ப. அதுக்காக வாழ்க்க ஃபுல்லா கஷ்டமான எக்சாம் நாளுக்கு முன்னாடி நாள் நைட்டாவே இருந்தாலும் நல்லாயிருக்கும்னு நான் யோசிச்சிருக்கேன். நீ இப்போவே ஒண்ணும் உன் முடிவ சொல்லவேணாம். பொறுமையா  யோசிச்சு நாளைக்கு சொல்லு அனன்யா… ஓகே சொல்லாட்டியும் பிரச்சனையில்லை அனன்யா. ஆனா இத தயவுசெஞ்சு ரூபன்கிட்ட மட்டும் சொல்லாத. அப்பறம் இதுனால என்மேல கோபமிருந்தாலும் ரூபனுக்கு தெரியுற மாறி காட்டிக்க வேணாம். ஹலோ அனன்யா….கேக்குதா……

’ம்ம்ம் கேக்குது. நீ சொன்னதுக்கு நான் இப்பவே பதில்சொல்றேன்.’

’இல்ல அனன்யா பொறுமையா யோசிச்சு பதில் சொல்லு அனன்யா’..

’டேய்,எப்போ சொன்னாலும் இதேதான் கேளு. You Are Like……… ஒரு சின்ன பையன் டியூசன் அக்காட்ட Propose பண்ற மாறி தான் இருக்கு. Infact நீ சொல்றப்ப எனக்கு சிரிப்புதான் வந்தது. எப்புடி எப்புடி Life Fullஆ Toughஆன Exam இருந்தாலும் நல்லாயிருக்கும்னு நின்னைச்சிருக்கியா… சொல்லிவிட்டு  சிரித்தாள். உனக்கு இன்னும் மெச்சூரிட்டியே இல்ல.

’அனன்யா, போதும் அனன்யா கலாய்க்காத..’

’இவ்ளோ க்யூட்டான ஒரு Propose எனக்கு வந்ததே இல்லடா. ஒரு தம்பி மாறியிருக்கடா நீ. Cute ரா…’

’அனன்யா நீ புடிக்கலனு சொன்னாக்கூட ஓகே. தயவுசெஞ்சு தம்பி மாறினு சொல்லாத’

‘சாரிடா, எனக்கு அப்பிடிதான்டா Feel ஆகுது’ என சிரித்தாள்.

’இப்படியே பேசுனா நான் போன கட் பண்ணிடுவேன் அனன்யா. உனக்கு Propose பண்ணியிருக்கேன் அனன்யா.வழக்கமா பொண்ணுங்க சொல்ற மாறி அண்ணானு சொன்னாக்கூட பரவால்ல தம்பினு சொல்லாத ப்ளீஸ்’

அனன்யா இன்னும் சத்தமாக சிரித்தாள்.

போன் கட்டானது.

அனன்யாவால் அப்பொழுதும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் போன் கட் ஆனதும் கோவித்துக்கொண்டானோ என பயந்தாள். ரொம்ப வருத்தப்பட்டிருப்பானோ என சோகமாக நினைக்கும்பொழுது திரும்ப அவனிடமிருந்து போன் வந்தது.

போனை எடுத்ததும் சாரி சொல்ல வேண்டுமென நினைத்தாள். ஆனால் அவள் சொல்வதற்கு முன்பு சரவணாவே சாரி சொன்னான். ’சாரி அனன்யா போன் அதுவா கட் ஆயிடுச்சு. நான் கட் பண்ணல. தப்பா நினைச்சுக்காத!’ என்றான்.

’நான்கூட என்மேல கோவப்பட்டு கட் பண்ணிட்டியோனு நினைச்சு Guilty    யா Feel பண்ணேன்டா.’

‘என்ன அனன்யா சொல்ற, உன் மேல நான் எப்பிடி கோவப்படுவேன் அனன்யா..’

உண்மையில் அனன்யா பிரேக் அப் பண்ணிக்கலாம் என சொன்னபொழுது கூட அவன் அனன்யா மீது அவன் கோவப்படவில்லை.

அதற்கடுத்த நாள் சரவணன் கல்லூரிக்குச் செல்லவில்லை. அனன்யாவின் பக்கத்து வீட்டுப் பையன் ஒருவன் தன் காதலி காதலுக்கு சம்மதிக்காத சோகத்தில் ஃபினாயிலை குடித்திருந்தான். அவனைப் பார்த்ததும் அவளுக்கு சரவணின் நினைவு வந்தது. சரவணனும் இப்படி ஏதும் செய்துகொள்வானோ என்கிற அச்சத்தில் போன் செய்தாள். போன் எடுக்கவில்லை. காலையிலே அவன் கல்லூரிக்கு வராதது ஒரு சிறு அச்சத்தை அவளுக்கு ஏற்படுத்தியிருந்தாலும் அவன் பாட்டி செத்துட்டாங்க அங்க போயிட்டானென்கிற ரூபனின் தகவல் தான் சற்று நிம்மதியடைய வைத்திருந்தது.

ரூபனுக்கு போன் செய்து சரவணன் வந்துவிட்டானா என்பது பற்றி விசாரித்தாள். ’ம்ம் வந்துட்டான். ஆனா அதுக்கப்பறம் அவன் வெளியே வரல. நான் போன் பண்ணப்பயும் எடுக்கல. ஏன் என்னாச்சுடி’

‘இல்ல ரூபன், நானும் போன் பண்ணேன்.போன் எடுக்கல. திரும்பவும் பண்ணல. அதான் இன்னும் சோகமா இருக்கானோனு நினைச்சேன். சரிடா அவன் பேசுனான்னா சொல்லுடா. பாய்’

’பாய்’.

அனன்யாவிற்கு மனசு கேட்கவில்லை. சரவணனைப் பார்த்தேயாக வேண்டும் போலயிருந்தது. அவள் வீட்டிலிருந்து ஒரு எட்டு கிலோமீட்டர் இருக்கும் அவன் வீடு. தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

போகும்வரை எப்போது போவோம் என பரபரப்பாக போனவள் போனதற்கு பின் தயக்கமாக தெருவிலேயே நின்றுவிட்டாள். எப்படி எட்டுமணி போல அவன் வீட்டிற்கு செல்வது. ரூபனையும் அழைத்து செல்லலாமா! ரூபன் ஏன் கெளம்பறப்ப சொல்லலனு கேட்டா என்ன சொல்றது? என யோசித்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது புது எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

’அனன்யா, நான் சரவணா பேசறேன்’

அப்பொழுதுதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ‘டேய்,ஏன்டா ஃபோன் பண்ண எடுக்கமாட்டியாடா எருமை. நான் பயந்துட்டேன் டா’

’ஃபோன பாட்டி வீட்லே மறந்து வச்சுட்டு வந்துட்டேன். பஸ்ல குடுத்துவுடறேன்னு சொல்லியிருக்காங்க. சாரி’

’அதவிடு. இப்போ வெளிய வரியா, பாக்கலாமா!’

இப்போவா, சரி நான் ரூபன் பைக்க எடுத்துட்டு வரேன். ரூபனயும் கூட்டிட்டு வரவா?’

‘இல்லல.. ரூபன் வீட்டுக்குலாம் போகாத. நீ மட்டும் அப்படியே உங்க தெரு லாஸ்ட்ல இருக்க சூப்பர் மார்க்கெட்கிட்ட வா. அங்கதான் இருக்கேன்’

’எப்போ வந்த அனன்யா?’

’மூடிட்டு வா சொல்றேன்!’

அவன் வந்ததும் இருவரும் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்று டீ குடித்தார்கள்.

அனன்யா அவனைப் பார்க்க வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியாக இரண்டு முறை கேட்டான்.

‘சத்தியமா, என்னைய பாக்கதான் வந்தியா, அதுவும் ரூபனுக்கு தெரியாமா!’

’ஆமா, காலையிலருந்து ஃபோன் பண்ணேன் எடுக்கல. காலேஜுக்கும் வரல. அதான் பயந்துட்டேன். இப்போ உன்னைய பாக்கவும் தான் நிம்மதியா இருக்கு.’

‘பாத்தியா இதுக்குதான் நேத்து உடனே சொல்லவேணாம் யோசிச்சு சொல்லுனு சொன்னேன்’.

‘டேய் லூசு நீ நினைக்குற மாறியிலாம் ஒண்ணுமில்ல!’

’அப்புடியா, அப்பறம் எதுக்கு ரூபனுக்கு தெரியாம இந்த நேரத்துல பாக்க வந்தியாம், எல்லாம் எனக்குத் தெரியும் சும்மா வெக்கப்படாம சொல்லு.’

’த்தூ..’ என எச்சில் அவள் கையில் வைத்திருந்த டீக்கிளாசில் கூட படாத வண்ணம் துப்பிவிட்டு சொன்னாள். ‘எங்க பக்கத்து வீட்ல ஒரு பையன் அவன் லவ் பண்ற பொண்ணு ஓகே சொல்லலனு பினாயில குடிச்சுட்டு ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டான். அவன ஆம்புலன்ஸ்ல ஏத்துறத பாத்ததும் எனக்கு உன் நியாபகம் தான் வந்தது. எங்க நீயும் இப்பிடி பண்ணிடுவியோனு பயந்துட்டு தான் போன் பண்ணேன்.போனும்  எடுக்கலயா அதான் வந்தேன்’

‘அப்போ நீ எனக்கு ப்ரோபஸ் பண்ண வரலியா’

குடித்துக்கொண்டிருந்த டீ புரையேறி துப்பிவிட்டு இருமிக்கொண்டே கண்களில் கண்ணீர்வர சிரித்தாள். சுற்றி நின்ற அனைவரும் அவர்களையே பார்த்தனர். அவள் தலையில் கைவைத்து தட்டிக்கொண்டே ‘அப்போ நீ வந்து நான் இருக்கேனா செத்துட்டேனானு பாக்கதான் வந்துருக்கல,; ம்ம்ம். இருக்கட்டும் இந்த சுமால் விஷயத்துக்குலாம் நான் சாகமாட்டேன்.’நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு.

‘நானும் பயந்துட்டேதான் வந்தேன். அப்பதான் தோணுச்சு ”ச்சே நம்ம சரவணாலாம் அந்த பையன மாறி ஃபினாயில குடிச்சு சாகமாட்டான்.’

டீயைக் குடித்துக்கொண்டே ஆமா என தலையாட்டினான்.

இவன் ப்ரோபோஸ் பண்ணதுக்கு நம்ம வேணா ஃபினாயில் குடிச்சு சாகலாம்னு’ சொல்லிவிட்டு சிரித்தாள்.

அவளை முறைத்துப் பார்த்துவிட்டு ‘குடிச்சிட்டு சாவுபோ’ என்றான்.

அவள் சொன்னது எவ்வளவு தவறான வார்த்தை என அவளுக்கு புரிந்தது. ‘ஹேய் ஹேய் சாரிடா, சும்மா விளையாட்டுக்கு தான்டா சொன்னேன். இனிமே இப்பிடி சொல்லமாட்டேண்டா’ என கொஞ்சினாள்.

அப்பொழுது அவளைப் பார்த்து ‘செம்ம அழகா இருக்க’ என்றான்.

கெஞ்சலை வேண்டி நின்றிருந்த அவள் கண்கள் கோபமாக மாறின.

அவள் கையிலிருந்த காலி க்ளாசை வாங்கிக்கொண்டு போய் கடையில் கொடுத்துவிட்டு காசு கொடுத்தான். அதுவரை அவள் முகம் அப்படியே தான் இருந்தது.

அவள் எதுவும் பேசாமல் சைட்ஸ்டாண்ட் போட்டிருந்த வண்டியில் அமர்ந்திருந்தாள்.

’நீ ஒண்ணும் பயப்படாத அனன்யா, நான் அந்த மாறி முட்டாள்தனமாலாம் செய்யமாட்டேன்.’ ’சாரி, நேத்தும்கூட உங்கிட்ட சொல்ற ஐடியாவே எனக்கில்ல.   நீயா எதாவது இருக்கா சொல்லுனு கேக்கறப்ப அந்த மொமண்ட்ல சொல்லணும்னு தோணுச்சு. அதான் சொல்லிட்டேன்.  நீ நம்பாட்டியும் சரி சத்தியமா நான் இத உங்கிட்ட எப்பயுமே சொல்லக்கூடாதுனு தான் நினைச்சிருந்தேன். ஏன்னா இதுனால எனக்கும் ரூபனுக்கும் ஏன் உனக்கும் எனக்குமே எந்த பிரச்சனையும் வந்துரக்கூடாதுனு நினைச்சேன். எனக்கு நீ ஓகே சொல்லாம இப்படி கலாய்ச்சாலும் எனக்கு பிரச்சனையில்லை. இந்த மாதிரி கடைசிவரை என்கூட பேசிட்டிருந்தாலே போதும் அனன்யா. இதுக்கு மேல நான் இதப்பத்தி பேசமாட்டேன். நீயும் நான் இந்த மாறியெல்லாம் பண்ணிக்குவேனு பயப்பட வேணாம். வழக்கமா பேசுற மாறி பேசு. எனக்கு அதுவே போதும்.’

அதற்குப் பிறகு வழக்கம்போலவே அவர்கள் மூவரும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருந்தனர். அனன்யாவிற்கு அவன் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டது மிகவும் பிடித்துப்போனது. அவன் சொன்னதுபோலவே அதற்குப் பிறகு ஒரு வார்த்தைக் கூட காதலைப் பற்றி பேசவில்லை. அனன்யாவோ ரூபனோ ஒன்றை சொல்லும் பொழுது அவனுக்கான முடிவுகள் இல்லாமல் செய்வான். அதில் ஏதாவது பிரச்சனை வந்தாலும் அவன் அவர்களை குறை சொல்லமாட்டான். அந்த பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பது பற்றிதான் கேட்பான். அதற்கு முன்பு நடந்ததைப் பற்றி பேசவேமாட்டான். சில சமயங்களில் வேண்டுமென்றே தவறாக ஒன்றைச் செய்ய சொன்னாலும் செய்வான். அதற்குப் பிறகு அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதுதான் அவன் கேள்வியாக இருக்கும். ஒருதடவை கூட ’பாரு இது உன்னாலதான்’ என அவன் குறை சொன்னதேயில்லை. இவையெல்லாம் சரவணனிடம் அனன்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது.

M3 தேர்வுக்கு முந்தைய நாள் வழக்கம் போல அனன்யாவும் சரவணனும் அவள் வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். தெய்வாதீனமாக அந்த பேப்பரை ரூபன் Current Semester லியே க்ளியர் செய்திருந்ததால் வரவில்லை.

அந்த பேப்பரை அரியர் வைத்தால் க்ளியரே செய்யமுடியாதென சீனியர்ஸ் (அனன்யா உட்பட) கூறியிருந்தனர். அதனால் எப்பாடுபட்டாவது அந்த பேப்பரை Current Semesterலியே க்ளியர் செய்ய வேண்டுமென தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

’ஏதாவது சந்தேகம்னா கேளு’ என சொல்லிவிட்டு அருகிலேயே அவனைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

ஒரு ப்ராப்ளம் பயங்கரமாக குழப்பவே அனன்யாவைக் கேட்டான்.

அனன்யா அந்த problemஐ பார்க்காமல் அவனைப் பார்த்து சிரித்தாள். நீண்ட நேரமாக அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கவும் கோபமடைந்த சரவணன் ‘அனன்யா இப்பொதான் ரெண்டாவது யூனிட் வரேன். இன்னும் மூனு யூனிட் இருக்கு. எல்லாத்தையும் கவர் பண்ணாதான் ஜஸ்ட்பாஸாச்சும் ஆவேன். எனக்கு இப்பவே பக்கு பக்குனு இருக்கு. கொஞ்சம் புரிஞ்சுகிட்டு சீரியஸா சொல்லிக்கொடு ப்ளீஸ்.

அவனைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்போடு ‘இல்ல நான் கூடயிருந்தா Life Fullஆ Toughஆன Exam day க்கு முன்னாடி நாளாவே இருந்தா நல்லாருக்கும்னு வேண்டுனேனு சொன்ன்னியே’ என புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

’தெரியாம சொல்லிட்டேன்’ என வாயெடுத்து சரவணன் சொல்ல வர

‘நல்லாதான் இருக்குமோ’ என அவனைப் பார்த்து சொல்லிவிட்டு வெட்கத்தோடு சிரித்தாள்.

அந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத சரவணன் மகிழ்ச்சியில் ஒருகணம் அப்படியே அசைவின்றி இருந்தான்.

அனன்யா வேறு பக்கம் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

’ஹேய் இப்போ என்ன சொன்ன!’

‘ஒண்ணுமில்ல பக்குபக்குனு இருக்குன்னு சொன்னில. மூடிட்டு படி’

அதற்குப் பிறகு எளிமையான தேர்விற்கு முந்தைய நாளும் அனன்யா வீட்டிலேயே படிக்க ஆரம்பித்தான்.

அன்னைக்கு என்ன சொன்ன ’உன் மேல அப்படி தோணவே தோணாது. நீ என் தம்பி மாறி..’ சொல்லிக்கொண்டே அவளுக்கு முத்தத்தைத் தந்தான்.

‘அப்போ அப்படித்தாண்டா தோணுச்சு’

’இப்போ’

புன்னகையோடு அவள் ஒரு முத்தத்தை பதிலாகத் தந்தாள்.

 

அவனால் புரிந்துகொள்ள முடியாதா அவனுடைய ரூபனையும் அவனுடைய அனன்யாவையும். தான் எப்படி தம்பியாக இருந்து காதலனாக மாறிப்போனானோ அதேப் போல நண்பர்களாக இருந்த ரூபனும் அனன்யாவும் எதோ ஒரு கணத்தில் தங்கள் காதலை உணர்ந்திருக்கிறார்கள். குரூப்பில் அந்த ஜந்துக்கள் சொன்னதைப் போல அனன்யாவும் ரூபனும் துவக்கம் முதலே காதலர்கள் இல்லை. தருண் அனன்யாவை ரூபனோடு சந்தேகப்பட்டிருந்த தருணத்தில் சத்தியமாக காதலர்களாக இருந்திருக்கமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். அதனால்தான் அவனால் அந்த குழுவில் அதற்குமேல் அவர்கள் பேசுவதை தாங்கமுடியவில்லை.

தனக்கு ஏன் இதை சொல்லவில்லை என நினைத்து வருத்தப்பட்டான்.

அவர்களுடைய கல்யாணத்தேதியை அதற்கடுத்த தினங்களில் பகிர்ந்திருந்தனர். ரூபன் குடும்ப வழக்கப்படி கல்யாணம் சர்ச்சிலே நடக்கவிருக்கிறது. அனன்யா சும்மா பேருக்காக பேரைக் கூட மாற்றாமல் கிறிஸ்டியனாக மாறியிருக்கிறாள். ரூபனே சர்ச்சிற்கு செல்லும் வழக்கமில்லாதவன் தான். அவன் வீட்டை சமாதானம் செய்ய இந்த ஏற்பாடு நடந்திருக்கிறது. வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ரூபனின் வீட்டிலிருந்து பத்திரிக்கை வைத்திருக்கின்றனர். அம்மா போன் செய்து அவனது எரிச்சலைக் கெளப்பினாள்.

‘டேய் ரூபனுக்கு கல்யாணமாம் டா. இன்னைக்கு தான் அவங்க வீட்லருந்து வந்து பத்திரிக்கை வச்சாங்க. அனன்யா தாண்டா பொண்ணு.’

’தெரியும்மா’

‘அதான, உனக்கு சொல்லாம இருப்பானா!’

’சொல்லலேயே மா’ என அம்மாவிடம் கத்தி அழவேண்டும் போல இருந்தது. ஆனால் சொல்ல மனம் வரவில்லை. யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.

‘எனக்கு அப்பவே சந்தேகம் இருந்துச்சுடா, இந்த பொண்ணு சும்மாசும்மா வராளேனு. அப்போ சொன்னா தப்பாயிடும்னு தான் சொல்லல. எனக்கு அப்பவே தெரியும்டா இது இங்கதான் முடியும்னு’

’சும்மா தெரிஞ்சமாறி பேசாத என்ன, அப்போ அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணவேயில்ல.’

‘இவனுக்கு எல்லாம் தெரியும் போடா!’

‘இங்கபாரு நானே பல பிரச்சனையில இருக்கேன். என்னைய டென்சன் ஏத்தாத. எதுக்கு போன் பண்ணுன அத சொல்லு’

‘அவன பத்தி பேசுனா கோவம் பொத்துட்டு வந்துருமே. கல்யாணம் சர்ச்ல முடிஞ்சு சாயங்காலம் ரிசப்சணாம்டா. அன்னைக்கு காவ்யா குழந்தைக்கு காது குத்துறாங்கடா. அங்க நாங்க போறோம். பாவம் கல்யாணத்துக்கு கூட கோச்சுக்கிட்டு போகாம விட்டாச்சு. அதுனால இதுக்கு நீ போறப்ப மொய் ஒரு ஐநூறு வச்சுடு’

’உனக்குத்தான பத்திரிக்கை வச்சாங்க. நீயே போ. நான் போகல. எனக்கு முக்கியமான வேலை இருக்கு.’

‘அவன் கல்யாணத்துக்கு நீ போகமாட்ட. இத நான் நம்பணுமா போடா.’

‘அம்மா சத்தியமா தான் சொல்றேன். என்னால போமுடியாது. நீயே போ. காவ்யா கல்யாணத்துக்கு எத்தன தடவ கூப்பிட்டேன். பெரிய இது மாறி வராம வீம்பு புடிச்ச. எனக்குமிதுக்கும் சம்மந்தமில்லை. ஒழுங்கா ரூபன் கல்யாணத்துக்கு போ. நம்ம வீட்லருந்து கண்டிப்பா போகணும். நான் சத்தியமா போகமாட்டேன்.’

போனை கட் செய்துவிட்டான். திரும்ப அம்மா போன் செய்ய எடுக்கவில்லை.

ரூபனே இதைப்பற்றி இவனுக்கு சொல்லாத போது எப்படி அவனால் போகமுடியும்.

’அனன்யாவ லவ் பண்ணதுலருந்து அவளுக்கு ப்ரோபோஸ் பண்ணதுலருந்து அவள் திரும்ப அக்சப்ட் பண்ணதுனு ஒன்னாவது சொல்லியிருக்கியாடா! அனன்யா தான் எங்கிட்ட சொன்னா. அனன்யா சொன்னப்பறமாவது அதப்பத்தி எங்கிட்ட மரியாதைக்காவது சொன்னியாடா. நானா பேசுனப்ப தான அந்த டாபிக்க பேச ஆரம்பிச்ச. ம்ம்..

’அப்படி இதுவரை நான் உங்கிட்ட எதாவது சொல்லாம இருந்துருக்கேனா. அனன்யாக்கு சொல்றப்ப நீ கூட இருந்தாலும் உங்கிட்டயும் தனியாதான சொல்வேன். அதேமாறி உங்க வீட்டுக்கு எதாவது சொல்ல வந்தாலும் உனக்கும் தனியா சொல்வேன்!

ரூபன் அன்று ஆஸ்பத்திரியில் பேசினபொழுது அவனால் பதிலே பேசமுடியவில்லை. உண்மையில் அன்றிலிருந்தே ரூபனுக்கும் சரவணனுக்குமான நெருக்கம் குறையத் தொடங்கியிருந்தது.

தானும் அனன்யாவும் ஒருவருக்கொருவர் விரும்புவது ரூபனுக்குத் தெரிந்தால் என்னாகுமோ என சரவணன் பயந்தான். ஆனால் அவன் பயந்த அளவில் ஒன்றுமே நடக்கவில்லை.

’டேய் நம்ம லவ் மேட்டர ரூபன்கிட்ட சொல்லிட்டேன்’

‘என்ன சொன்னான்!’

‘ஷாக்கானான், அப்பறம் எனக்கே கொஞ்சம் டவுட் வந்துச்சுனு சொன்னான்’ ’எத்தன நாளானு கேட்டான்’

‘சொன்னேன்.நீ ப்ரோபோஸ் பண்ணதுலருந்து இன்னைக்கு நடந்த வரைக்கும்’

’என்னைய எதாவது சொன்னானா!’

‘நான் யூபிஎஸ் போடப் போன நேரம் கரண்ட் கொடுத்துருக்கானா அவன். இருக்கட்டும் அவன நான் பேசிக்கிறேனு சொன்னான்.’

’போச்சு, பேசாட்டுக்கு இன்னும் கொஞ்ச நாள் சொல்லாம இருந்துருக்கலாமோ’

’அது தப்பாயிடும் டா. நம்மளே சொன்னா அதுவேற. வேற ஆள் சொல்லியோ இல்லை அவனே கண்டுபிடிச்சாலோ அது வேற.’

‘அதுவும் சரிதான் அனன்யா, சரி நான் பேசிக்கிறேன்’

ஆனால் ரூபனிடம் இதைப் பேசத் தயங்கிய சரவணன், அடுத்த நாள் கல்லூரிக்கு வழக்கமாக செல்வது போல ரூபன் வண்டியில் அவனோடு செல்லாமல் பஸ்ஸில் சென்றுவிட்டான்.

கல்லூரியில் அனன்யாவை ரூபனுக்குத் தெரியாமல் தனியாக தன்னைப் பார்க்க வர சொன்னபொழுது அனன்யா அவனை பயங்கரமாகத் திட்டினாள்.

‘இப்போ எதுக்கு நீ ரூபன அவாய்ட் பண்ற! அவன் என்ன தப்பு பண்ணான்.’

‘இல்ல அனன்யா, அவன பாக்க சங்கட்டமாயிருக்கு அதான். ப்ளீஸ் நீ கொஞ்சம் கேண்டீன் கிட்ட வாயேன்’

‘ச்சீ.. ஒன்னால ஒருத்தர நேருக்கு நேர் பாக்க தெம்பில்லனா தப்பு உன்மேல இருக்குனு அர்த்தம். அது யாராயிருந்தாலும் சரி நம்ம அப்படி நடந்துக்ககூடாது. அதேமாறி மத்தவங்களையும் அப்படி ஃபீல் பண்ணவைக்கக் கூடாது. நீ போய் அவன பாத்து பேசு.! சாரி கேளு. கால்ல கூட விழு.  ஆனா அடுத்த தடவ அவங்கள எங்க பாத்தாலும் பயப்படாம பாத்து பேசுறமாறி இருக்கணும். புரியுதா!

’புரியுது.’

’போய்ப் பேசு’

’எங்கிட்ட சொல்றதுக்கு என்னடா பயம் லூசு’

‘இல்ல ரூபன் நம்ம ரெண்டுபேருக்குள்ள சண்டை வந்து பேசாம போயிருவோமோனு நினைச்சுட்டுதான் பர்ஸ்ட் சொல்ல பயந்தேன்.’ என அவன் தோளில் சாய்ந்து அழுதான்.

‘பாரு இப்போ நீதான் பேசாம போன’

’சாரிடா. எனக்கு நீ ரொம்ப முக்கியம். இதுனால நீ என்கிட்ட பேசாம போயிடுவியோனு பயம் வந்துச்சு. அதான் சொல்லல’ என அழுதான்.

’சரிடா, எதாயிருந்தாலும் பேசுனா தான தெரியும்’

‘நீ இப்பிடி எடுத்துக்குவனு தெரிஞ்சிருந்தா பர்ஸ்டே சொல்லியிருப்பேன்டா’

‘அப்போ இத்தன வருசம் என்கூட இருந்து அனன்யா புரிஞ்சுகிட்ட அளவுகூட புரிஞ்சுக்கலல. ‘என்னமோ போடா! நீ சொல்லாமயிருந்தது கஷ்டமாயிருக்குடா’

‘சாரிடா’

‘சரிவுடு அதப்பத்தி பேசவேணாம்.’ இப்போ என்ன கூட பைக்ல வரியா,இல்ல காலையில மாறி பஸ்ல வரியா?’

’பைக்லே வரேன்’

அதற்குப் பிறகு மூவரும் திரும்பவும் ஒன்றாக இருந்தாலும் ரூபனுக்கு சரவணன் மேல் வருத்தமிருந்தது.

அது வடுவாக மாறியது industrial visit போனபொழுதுதான். அதை முதலில் கூறியது அனன்யாதான்.

’நான் IV(industrial visit) போகல. வீட்டுல போற மாதிரி சொல்லிட்டு வந்தறேன். எங்கயாது Long Drive போலாமா’!

அதற்கு சரவணன் மறுப்பு சொல்லியிருந்தால் அவளெதுவும் சொல்லியிருக்கமாட்டாள். அதை சொல்லாதது தான் அவன் செய்த தவறு.

வழக்கம்போல இதைப் பற்றியும் ரூபனிடம் சரவணன் பேச்சை எடுக்கவில்லை. அனன்யாதான் பேசினாள். ரூபன் இந்த விஷயத்தில் உடன்படவில்லை. ஆனால் அனன்யா அவனிடம் கெஞ்சவும் ’உங்க இஷ்டம் எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை’ என கூறிவிட்டான். உங்க வீட்ட,காலேஜ நீ சமாளிச்சுக்க. நான் இதுக்குள்ளாரலாம் வரமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டான்.

லாங் ட்ரைவிற்கு பைக் வேறோரு நண்பன் தருவதாய் வாக்களித்திருந்தான். ஆனால் கடைசி நேரத்தில் அவன் சொதப்பிவிடவே ரூபனிடம் அனுமதி கேட்காமல் அவன் பைக்கை எடுத்து சென்றுவிட்டான்.

ரூபன்கிட்ட சொல்லிடுனு அனன்யா சொல்ல ‘இப்போ அவன் ரெண்டு பேர் மேல செம காண்ட்ல இருக்கான். ஒருவேள இத சொன்னா அவ்ளோதான். அங்கருந்து பாதியிலேயே கிளம்பி வந்தாலும் வந்துருவான். மொத்தமா வந்ததுக்கப்பறம் கேஸ் வாங்கிக்குறேன்’ என்றான்.

அவன் சொன்னதுபோல பாதியிலேயே ரூபன் கிளம்பி வரும் நிலைமை வந்தது. வண்டியில் போய்க்கொண்டிருந்தபொழுது எதிரில் ராங்ரூட்டில் வந்த பைக் தட்டிவிட்டு இருவரும் விழுந்து விபத்தானது.

சரவணனுக்கு கால் எலும்பு முறிந்திருந்தது. அனன்யாவிற்கு கை பிசகியிருந்தது. காலில் சிராய்ப்பு இருந்தது. எதிரில் வந்தவன் நிற்காமல் சென்றுவிட்டான்.

அடிபட்டதை ரூபனுக்கு அனன்யா தான் அவனுக்கு அழுதுகொண்டே போன் செய்து கூறினாள். ரூபன் எதுவும் யோசிக்காமல் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே சரவணனுக்கு தெரியவில்லை. இருவரையும் அருகிலிருந்த மருத்துவமனையில் சுற்றியிருந்தவர்கள் அனுமதித்திருந்தார்கள். ரூபன் போனவுடன் அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அங்குசென்ற பிறகுதான் அவர்கள் விழுந்தது தன் வண்டியில் என்பதையும் அறிந்து கொண்டான்.

இருவரையும் கார் பிடித்து அவர்கள் ஊரிற்கு அவன்தான் கூட்டிவந்தான். வண்டியை அங்கே சர்வீஸ் செய்து அதை பஸ்ஸில் போட்டுவிட சொல்லிவிட்டு வந்துவிட்டான். இருவரையும் வேறு வேறு மருத்துவமனையில் சேர்த்தது முதல் அனன்யா இண்டஸ்டிரியல் விசிட் வந்த மாதிரியே நம்ப வைத்தது, அனன்யா சரவணன் ரூபன் மூவர் வீட்டிற்கும் இருவருக்கு அடிபட்டது என தெரியாமல் ஒருவருக்கு மட்டுமே அடிபட்டதாய் தெரியும் வண்ணம் பார்த்துக்கொண்டது என அந்த மாதம் முழுக்க அந்த பிரச்சனையிலே மூழ்கிப்போனான். கல்லூரியில் இவன் பைக்கில் போய்தான் விழுந்தார்கள் என்பதால் இவன்தான் அனுப்பினான் என அனைவரும் நினைத்தனர்.

அனன்யாவிற்கு ஒரு மாதத்தில் எல்லாம் சரியாகிவிட்டது. சரவணனுக்கு முழுமையாக குணமாக மூன்று மாதமானது. அவன் அசைன்மெண்ட், லீவ், மெடிக்கல் சர்ட்டிபிகட் என எல்லாவற்றையும் ரூபனே பார்த்துக்கொண்டான்.

கிட்டத்தட்ட அவன் வீட்டிற்கு தெரியாமல் நண்பர்களிடம் மட்டும் வாங்கி ஒரு அறுபதாயிரம் வரை இந்த பிரச்சனையில் செலவு செய்திருந்தான்.

முதல் இரண்டு நாட்கள் அவர்களிடம் இதைப் பற்றி பேசாமல் இருந்தான். பின்பு இருவரையும் திட்டித் தீர்த்தான். அவர்களால் என்ன பதில் கூற முடியும்.

’அறிவிருக்கா அனன்யா உனக்கு! அவன நம்பி போற. இது வேணாம்னு எத்தன தடவ சொன்னேன் கேட்டியா நீ. இப்போ பாரு அவனும் மூனு மாசம் அடிபட்டு படுத்துருக்கான். இதுல எனக்கு கோவமெல்லாம் உன்மேலதான். அவன் குழந்தை மாறி அனன்யா. நீ என்ன சொன்னாலும் செய்வான். நான் படிக்கிறேனு தான் இந்த காலேஜே வந்தான். இந்த குரூப்பெடுத்தான். அவன ஏன் இது படிச்சனு கேட்டா சொல்லத் தெரியாது. அவன் நீ என்ன சொன்னாலும் செய்வான். ஒருவேள சுத்தியிருக்கவங்க ஆஸ்பத்திரி தூக்கிட்டு வந்துருக்காட்டி ஆக்ஸிடெண்ட் ஆன இடத்துல அவன் காலுடைஞ்சு அப்படியே இருந்துருப்பான். அவனுக்கு அடுத்து என்ன பண்ணனும்னு கூட தெரியாது. நீதான் இது எல்லாத்துக்கும் ரெஸ்பான்ஸிளிட்டி. அவன் செத்துருந்தா அவன் வீட்டுக்கு யாரு பதில் சொல்லிருப்பா’

’ரூபன் அப்படி பேசாத ப்ளீஸ்’ அழுகையினூடே பேசினாள்.

’வேற எப்படி பேசனும்னு எதிர்பாக்குற நீ, அவன் எப்படினு தெரியாமலா லவ் பண்ற, ஒரு விஷயத்த பண்ணப்போறனு அதுனால வர கான்ப்ளிக்ட்ஸ ஏத்துக்க ரெடியா இருக்கணும். அவனுக்கு அது துளி கூட கிடையாது. அப்போ உனக்கு அது இருக்கணும்.

’சாரி ரூபன், இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கல’

‘நினைக்கணும் அனன்யா, எல்லாத்தையும் நினைச்சு பாக்கணும்.

அனன்யாவைத் திட்டிவிட்டு அங்கிருந்து சரவணனைப் பார்க்கப் போனான். சரவணனிடம் இப்படியெல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது தெரிந்தாலும் அவனைத் திட்டிவிட்டான்.

சரவணன் அவன் அப்பாவிடம் பேசி வண்டிக்கான காசை வாங்கி வைத்திருந்தான். அதை சரவணனிடம் இந்தாடா உன் வண்டிக்கு என பணத்தை நீட்ட அவனுக்கு கோபம் தலைக்கேறி கத்த ஆரம்பித்துவிட்டான்.

’இப்போ என் வண்டிக்கு, இந்த ஆஸ்பத்திரிக்கு காசு குடுத்துட்டு நீங்க ரெண்டுபேரும் சரியாயிட்டா இதெல்லாம் முடிஞ்சிருச்சினு நினைச்சிட்டிருக்கியா! உனக்கு இன்னும் புரியவே இல்லல. காலேஜ் போய் பாரு Staffலருந்து Studentலருந்து எல்லாரும் அசிங்கமா பேசுறாங்க. அனன்யா மானமே போச்சு. எல்லாம் உன்னாலதான். எப்படி அடிபட்டுச்சுனு அனன்யா வீட்டுக்கு தெரியாம, உனக்கு அடிபட்டது அவங்க வீட்டுக்கு தெரியாம, அவளுக்கு அடிபட்டது உங்க வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தெரியாம, ’ஆஸ்பத்திரி போயிட்டு வந்தியே இப்ப பரவால்லயானு!’ கேட்டா எங்க வீட்டுல யார பத்தி சொல்லணும்னே குழம்பி போய் பைத்தியம் புடிச்ச மாறி சுத்திட்டிருக்கேன். என் பைக்க எனக்கே தெரியாம எடுத்துட்டு போய் ’மாமா’னு பேர் வாங்கி கொடுத்துருக்க. இப்போ இந்த காச கொடுத்துட்டா அதெல்லாம் சரியாயிடும்ல. எனக்கே இப்படினா அங்க அனன்யாவ என்னென்ன சொல்றாங்கனு தெரியுமாடா உனக்கு.. அவ வந்தா இத எப்படி ஹேண்டில் பண்ணுவாளோனு யோசிச்சுட்டிருக்கேன். இங்கருந்து சரியாகி வந்துட்டா எல்லாம் முடிஞ்சிருச்சுனு நீ நினைச்சிட்டு இருக்கில! உனக்கு இதெல்லாம் பிரச்சனையில்ல. ஏன்னா நீ அதப்பத்தி கவலைப்படமாட்ட. ஆனா உன்னால இப்போ ஒரு பொண்ணும் கேவலப்பட்டு நிக்குதே! அதைப்பத்தி உனக்கு கவலையே இல்லல. அங்க அடிபட்டப்ப கூட எனக்கு போன் பண்ணியா நீ! அவதான் பண்ணுனா! அவள லவ் பண்ணதுலருந்து என் பைக்க எடுத்துட்டு போனதுலருந்து ஒண்ணயாவது சொன்னியாடா! எல்லாத்துலயும் அசால்ட்டு. அப்பறம் இன்னொரு விஷயம். என் வண்டி சரிபண்ணி வந்துருச்சு. அதுக்கு காசெல்லாம் ஒன்னும் வேணாம். ஆனா இனிமே என்னைய கேக்காம என் வண்டியதொடாத’ இந்த ஒரு வாரமா நிம்மதியே இல்லடா, என் மூளை உங்களைப் பத்தி மட்டுமே யோசிச்சுட்டு இருக்கு. பைத்தியம் புடிச்சாப்புல இருக்கு. நான் கெள்ம்பறேன் என கெளம்பிவிட்டான்.

அதற்கடுத்த ஒரு வாரத்தில் இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிலிருந்தே ட்ரீட்மெண்ட் எடுத்தனர். அனன்யா ஒரு மாதத்திற்குள்ளேயே சரியாகிவிட்டாள். சரவணன் முழுமையாக குணமடைய மூன்று மாதமானது. அந்த சம்பவத்திற்கு பிறகு மூவரும் சேர்ந்து இருந்தாலும் முன்னைப் போல் இல்லை. அனன்யாவும் ரூபனும் பழையபடியே இருந்தனர். ரூபன் சரவணனிடம் முன்பைப் போல இல்லை. அனன்யாவும் சரவணனை டார்ச்சர் செய்தாள். எல்லா பொறுப்புகளையும் அவனிடமே தந்தாள். சின்ன சின்ன வேலைகள் கூட அனன்யா அவனையே செய்யச் சொன்னாள். ஆனால் யாராவது இப்படி செய் என்று சொன்னால்தான் அவன் செய்தான். ஒரு சினிமா டிக்கெட் எடுக்கும் பொழுது கூட ஏதாவது சந்தேகம் கேட்பான், அப்படி எதுவும் கேட்காமல் டிக்கெட் எடுத்திருந்தால் அதில் ஏதாவது பிரச்சனை இருக்கும். ’உனக்கு பொறுப்பே இல்லை அதை வளர்த்துக்க’ என முதலில் பொறுமையாக கூறியவள் அவன் மாறாததைக் கண்டு எரிந்து விழ ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது,வீட்டு கணக்கு, கரண்ட் பில் கட்டுவது, ரேசன் கடைக்கு செல்வது என அவன்  வீட்டில் எல்லாவற்றையும் அவனேயே செய்யசொல்லி அதை போட்டோ எடுத்து அனுப்ப சொன்னாள். அப்பொழுதுதான் அவன் வீட்டிலேயே அவனை நம்பவில்லை என்பது அவனுக்கு தெரிந்தது. அவன் வீட்டில் ஏதாவது மறந்து வந்துவிட்டால் கூட சரி பராவாயில்லை விடு அடுத்த வாட்டி கரெக்டா இரு என பொறுமையாக சொன்னார்கள். ஆனால் அனன்யா திட்டித்தீர்த்தாள். ஒரு சில சமயங்களில் ’உன்னால இண்டிபெண்டண்டா ஆகவே முடியாது. ஒரு வேலைக்கு போயிட்டு சம்பாரிச்சா மட்டும் இண்டிபெண்டண்ட் கிடையாது. வீட்டுல கரண்ட் இல்லனா மோட்டார் எடுக்கலனா என்ன பண்ணனும்னு தெரியனும். நீ சும்மாவே உக்காந்துருப்ப. எதுக்குமே லாயக்கில்லை’ என திட்டினாள்.

முதலில் சுகமாக இருந்த காதல் அவனுக்கு சுமையாகிப் போனது. எப்பொழுது கால் செய்வாள் எனக் காத்திருந்த தருணங்கள் போய் அவள் கால் செய்கிறாளே என பயப்படும் அளவிற்கு வந்திருந்தது. அப்பொழுது கூட அவன் அவள் மீது கோவப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இது சரியாக என்ன பண்ணலாம் என கூட யோசிக்கவில்லை. இதுவும் அவளுக்கு கோவத்தை உண்டு பண்ணியது. இதை பத்தி கூட நீ கேக்கலனு சொல்லும்பொழுது ’சரி கேக்கறேன்! நான் என்ன பண்ணனும் அனன்யா’ என கேட்டான். அதற்கு ஒரு சண்டை நடந்தது.

சில சமயங்களில் அழுவாள். ‘நீ இப்படியே இருக்கமுடியாது சரவணா. கொஞ்சமாவது பொறுப்பாயிரு என அழுகையினூடே சொல்வாள்.

அவனும் அவள் சொல்வதை எல்லாம் செய்வான். அவன் நேரமோ இல்லை எதோ ஒன்று தவறாக வந்துவிடும். அதற்கு அவன் என்ன செய்வான்? சில சமயங்களில் அவன் சரியாக செய்தாலும் வேறு யாருடைய தவறினாலோ முழுமையடையாமல் போகும். அவன் செய்வதற்கு முன்பாகவே அவள் ’எப்படியும் எதாவது தப்பு பண்ணுவ!’ என கிண்டல் செய்ய ஆரம்பித்தாள். அனன்யாவிற்கும் ரூபனிற்கும் அடுத்து என்ன படிக்க வேண்டும்; என்ன வேலைக்குப் போக வேண்டும்; என்பது பற்றி ஒரு திட்டமிருந்தது. அவனுக்கு அது கிடையாது. அனன்யாவோ இல்லை ரூபனோ எடுக்கும் படிப்பை எடுப்பான் என்பதால் இருவரும் முடிவு செய்து அவனிடம் ஒரு சத்தியத்தை வாங்கினார்கள். அவர்கள் எடுக்கும் கல்லூரியை அவன் எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது. அவனாக யோசித்து அவர்கள் போகும் கல்லூரியைத் தவிர வேறு ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார்கள். அப்படி செய்தால் அவனிடம் ஜென்மத்துக்கும் பேசமாட்டேன் என கூறியிருந்தார்கள். அதனால் அவன் அவர்கள் படித்த கல்லூரிக்கு போகவில்லை.

அந்த நேரத்தில் சரவணன் அப்பா சொந்தமாக ஒரு வீட்டை வேறு ஏரியாவில் வாங்கியிருந்தார். அங்கிருந்து மாறியவுடனேயே ரூபனுடனான நெருக்கம் குறைந்தது. பார்க்கும்பொழுது பேசிக்கொள்வது என்றானது.

அனன்யா கடைசி செமஸ்டரில் அவனிடம் ப்ரேக் அப் செய்தாள்.

‘நான் உன்னைய ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன் சரவணா! உன்கிட்ட  எதெல்லாம் புடிச்சுப் போயி ப்ரோபோஸ் பண்ணேனோ இப்போ அதையே புடிக்கலனு குறையா சொல்றேன் சரவணா.  நான் தான் சரவணா மாறிட்டேன். அதுக்காக நீயும் மாறனும்னு எதிர்பாக்கறது எப்படி சரவணா நியாயமாகும். போதும் சரவணா இதுக்கும் மேலயும் உன்னை காயப்படுத்த விரும்பல. சாரி சரவணா உன்ன இவ்வளவு நாள் காயப்படுத்துனதுக்கு’ கண்ணீரை கர்சீப்பால் துடைத்துக்கொண்டே சொன்னாள்.

‘அனன்யா, ப்ளீஸ் அனன்யா நீ சொல்ற மாறி நான் மாறிடறேன். என்னைய விட்டுட்டு போயிடாத அனன்யா’

‘நீ ஏன் மாறனும் சரவணா. நீ மாறனும்னு சொல்ற அளவு இது ஒன்னும் பெரிய தப்பில்லை. இங்க நிறைய பேரு அப்படியேதான் இருக்காங்க. அது தப்பில்லை சரவணா. தப்பெல்லாம் என்மேல மட்டுந்தான் சரவணா. இப்போக்கூட சத்தியமா உன்மேல கோவப்பட்டு சொல்லல. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சரவணா. பழையபடி நீ என் நண்பனாவே இரு. உனக்குப் புடிச்சமாறியே இரு. நம்ம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்.

அதற்குப் பிறகு தருணை விரும்புவதை சொன்னாள். வெறுமனே வாழ்த்துகள் மட்டும் அனுப்பியிருந்தான். அதற்குப் பிறகு விசேசங்களுக்கு வாழ்த்துகள் அனுப்புவதோடு இருந்தது. அவன் என்ன செய்கிறான் என அவளுக்கும் கேட்க தோன்றவில்லை. இவனும் அவளிடம் கேட்கவில்லை. இந்ததூரத்தில் இருவருமே இருவரும் நலமாகயிருக்க வேண்டும் என நினைத்துகொண்டனர். தருணோடு ப்ரேக் அப் ஆனது முகநூல் பார்த்து தெரிந்துகொண்டான். அதேப் போல அவள் கல்யாணத்தையும் வேறோருவர் மூலம் தெரிந்துகொண்டால் அவனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதுவும் ரூபனை திருமணம் செய்துகொள்வதை சொல்லாமலிருந்தால்……..

ரூபனும் அனன்யாவும் தங்கள் கல்யாண அழைப்பிதழை வாட்ஸப் பேஸ்புக் எல்லாவற்றிலும் ஸ்டேடசாக வைத்திருந்தனர். அவனுக்கு மட்டும் இருவரும் சொல்லவில்லை. இவனும் அதை ஏனென்று கேட்கவில்லை. அவன் வீட்டிற்கு பத்திரிக்கை வந்திருக்கிறது. ஸ்டேடஸில் இவனை மறைத்துவிட்டு ஸ்டேடஸ் வைக்கவும் ஒரு நிமிடமாகாது. அதை அவர்கள் செய்யவில்லை. அவனுக்கு சொல்லவில்லை. அதே சமயம் அவனுக்கு தெரியாமலிருக்க மறைக்கவும் முயற்சி செய்யவில்லை. இந்த இரண்டிற்குமான இடைவெளி அவனுக்கு இரண்டு விதமான சந்தேகங்களை எழுப்பியது. ஒன்று அவன் வருகையை விரும்பாமலிருக்கலாம். இல்லையென்றால் அவனிடம் சொல்ல தயங்கியிருக்கலாம். நிச்சயமாக ரூபனும் அனன்யாவும் தன் வருகையை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். அதேபோல தன்னிடம் சொல்ல ஏன் தயங்க வேண்டும்! ரூபன் அனன்யாவும் தன்னைப் புரிந்து வைத்தது இவ்வளவுதானா என்ற வருத்தமிருந்தது.

அப்பா அவனைக் கண்டிப்பாக செல்லவேண்டுமென கூறியிருந்தார். ‘நீ போனவுடனே கூட வந்தர்ரா..சாப்புடகூட வேணாம். ஆனா தலைய மட்டும் காட்டிடுறா. அவங்க அம்மா அப்பாட்ட மட்டும் வந்துட்டேன்னு  காமிச்சுட்டு சாப்பிட கூட வேணாம் கெளம்பிடு. நம்ம குடும்பத்துக்கு நிறைய செஞ்சிருக்காங்கடா’ என கடைசியாக கெஞ்சவே வேறு வழியில்லாமல் சென்றான்.

இதில் அவன் வருத்தப்பட ஒன்றுமேயில்லை. அவர்கள் வீட்டுக்கு பத்திரிக்கை வந்திருக்கிறது. அதனால் போகிறான். ஒருவேளை அனன்யாவோ சரவணனோ ’ஏன் வந்தாய்!’ என கேட்டால் சத்தியமாக  கேட்கமாட்டார்கள்! அப்படிக் கேட்கவேண்டும் என அவனின் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு குரூரம் விரும்பியது. ஒருவேளை அப்படி கேட்டால் உங்களுக்காக வரவில்லை. உங்கள் அம்மா அப்பாவிற்காக வந்தேன் என அந்த குரூர ஆசை நடந்தால் சொல்வதற்கான பதிலையும் தயராக யோசித்தே சென்றான். அவனுக்கு ஸ்டேஜ் ஏறும் எண்ணமேயில்லை. ரூபன் அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம் என்றே தோன்றியது. ஸ்டேஜேறி அவர்கள் இவனைப் பார்த்து வருத்தப்படுமளவு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் நினைத்துக்கொண்டே ரிசப்சனுக்கு சென்றான்.

மேடையில் இருவரும் அவ்வளவு மகிழ்ச்சியாக நின்றிருந்தனர். அனன்யா முன்பை விட தற்போது இளைத்திருக்கிறாள். முன்பை விட அழகாகவும் இருக்கிறாள். ரூபன் முன்பை விட கருத்து போயிருந்தான். கோட்சூட் பட்டுப்புடவையில் மகிழ்ச்சியாக சிரித்துகொண்டு நின்றிருந்தனர்.

’நாங்க படிக்கிற காலேஜ் எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது. நாங்க சொல்றத்தையும் தாண்டி வந்தா நாங்க ஜென்மத்துக்கும் பேசமாட்டோம்’ என அவர்கள் செய்த சத்தியம் நினைவுக்கு வந்தது. எங்கே தன்னிடம் பேசாமலே போய்விடுவார்களோ எனும் அச்சத்தில் தான் வேறு கல்லூரி எடுத்தான். அப்படி எடுத்தும் அவர்கள் கல்யாணத்திற்கு சொல்லவில்லை என்பது வருத்தமாக இருந்தது. அவனுடைய ரூபன் அனன்யாவே அவனை நிராகரித்தால் அவன் யாரிடம்தான் போவான்.

ஓரத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவர்கள் பார்க்காதவாறு ஓரமாக சென்று ரூபன் அம்மா அப்பாவை சந்தித்தான்.

அவனைப் பார்த்ததும் ரூபனின் அம்மாவும் அப்பாவும் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்கள். ‘டேய் சரவணா, முரட்டு ஆளா மாறிட்டியேடா! அம்மா அப்பாலாம் நல்லாருக்காங்களா! அவங்க வரலையா… ம்ம்ச்ச்… அவங்களையும் கூட்டிட்டு வந்துருக்கலாமே!

’இல்லம்மா. அப்பா அம்மா இன்னோரு நாள் வீட்டுக்கு வந்து பாக்கறேனு சொன்னாங்க.’

’சரி,சரி மொத சாப்பிடு’ என பந்திக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அனன்யாவின் அம்மாவைப் பார்த்தான்.

அவராகவே வந்து பேசினார். ‘சரவணா, நல்லாயிருக்கியாப்பா! ஏங்க யாருனு தெரியுதா நம்ம வீட்டுக்கு படிக்க வருவாப்ளயே ஒரு பையன்.’

‘ஏய் சரவணன தெரியாதாடி’ என அவர் அப்பா சொன்னார்.

அவர்களைப் பார்த்தது அவ்வளவு திருப்தியாக இருந்தது. உண்மையில் வந்தது நல்லது என யோசித்துக்கொண்டான். விஷ்ணு அங்கே அமர்ந்திருப்பதை பார்த்தான். இவனைப் பார்த்து வெட்கமேயில்லாமல் சிரித்தான். எப்படித்தான் அவர்கள் திருமணத்தையே கேவலமாக பேசிவிட்டு அங்கே வந்து சாப்பிடுகிறானோ என நினைத்துக்கொண்டே சாப்பிட அமர்ந்தான்.

அவள் அம்மா சாப்பிடும்பொழுது வந்து கேட்டாள்.’பாத்தியாப்பா திடீர்னு இவனக் கட்டிக்கிறேனு ஒத்தக் கால்ல நின்னாப்பா! பையன் நம்ம மதம்னா பரவால்ல. மதம் மாத்திட்டாங்கப்பா. ஒத்தப் புள்ளையாப் போச்சேனு எல்லாத்துக்கும் இறங்கி போறோம்’ என அழுதார்.

இதேபோல அவள் அம்மா , சரவணனைக் அவள் கல்யாணம் செய்யும்பொழுது ரூபனிடம் புலம்புவதாய் ஒரு கனவைக் கண்டதாய்  அவனைக் காதலித்தபொழுது அனன்யா சொல்லியிருக்கிறாள். அதை நினைத்து சிரித்தான்.

சாப்பிட்டுவிட்டு மொய் இரண்டு வீட்டுக்கும் வைத்துவிட்டு அப்படியே அவர்கள் கண்ணில்படாமல் செல்ல நினைக்கும் பொழுது ரூபன் அப்பா பார்த்துவிட்டார்.

’சரவணா போட்டோ எடுக்காம எங்க போற? வா!’ என அவனை அழைத்துக்கொண்டே மேடையருகில் சென்றுவிட்டார்.

அவரோடு இவன் வருவதை பார்த்தவுடன் இருவரின் முகமும் மாறியது. அவன் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த திகைப்பிலும் அச்சத்திலும் தெரிந்தது.

அவர்கள் இருவரின் முகமும் மாறவும் இவனுக்கு மேடை ஏறவே ஒருமாதிரி இருந்தது.

எது நடக்கக்கூடாது என்பதற்காக இந்த கல்யாணத்திற்கே வர யோசித்தானோ, சரி வந்தாலும் இது மட்டும் செய்துவிடக்கூடாது என நினைத்திருந்தானோ அந்த தருணம் வந்துவிட்டது. ரூபன் அப்பா அவன் கையைப் பிடித்து அழைத்துப் போகும்பொழுது கையை உதறிவிட்டு சென்றுவிடலாமோ என்று கூட தோன்றியது. மேடையில் அவர்கள் இருவரின் முகத்தையும் பார்க்கவே முடியவில்லை. அவர்கள் அதிர்ச்சியில் நிற்பது இவனுக்குத் தெரிந்தது.

‘அப்பா!, லேட் ஆகுதுப்பா, போட்டோ வேணாம்ப்பா என அவரிடம் கெஞ்சிக்கொண்டே சென்றான்.

’சார்,ப்ளீஸ் சார் இனிமே பண்ணமாட்டேன் சார் பிரின்சிபால்ட்ட போவேணாம் சார் என ஆசிரியர் இழுத்து செல்லும்பொழுது கெஞ்சிக்கொண்டே வரும் மாணவனைப் போல மேடைக்கு செல்ல பயந்தான்.

’அட ஒரு போட்டோ எடுக்க எவ்வளவு நேரமாகப் போகுது’ என கூட்டிசென்றார்.

‘டேய் நம்ம சரவணாடா பாத்தியா உன் கல்யாணத்துக்கு வந்துட்டு போட்டோ கூட எடுக்காம போக பாத்தாண்டா. கூட்டிட்டு வந்துட்டேன்! என மேடையில் போட்டோ எடுக்க வரிசையில் நின்றவர்களைத் தாண்டி வந்து மேடையில் நிறுத்தினார்.

அவருடன் வேலை பார்க்கும் குடும்பம்தான் அடுத்து போட்டோ எடுக்க வேண்டியது. அவர்களிடம் நம்ம பக்கத்து வீட்டுல இருந்தாங்க. இவனும் என் பையன் மாறிதான். கொஞ்சம் அவசரமா போகணும் அதான் கோச்சுக்காதிங்க’ என்றார்.

’ஐயோ இருக்கட்டும் சார்’ என கூறிவிட்டு சரவணனைப் பார்த்து சிரித்தார்.

’அடுத்து சார் எடுக்கட்டும் என அவரை கைகாண்பித்துவிட்டு கீழே வேறு ஒருவரை பார்க்கவும் ‘அடடே வாங்க சார்’ என அவரை பார்த்து பேசிவிட்டு போட்டோ எடுத்துக்கப்பா வந்தறேன் என அவரை நோக்கி சென்றுவிட்டார்.

ரூபன் அனன்யாவின் முகத்தில் அவ்வளவு நேரமிருந்த மகிழ்ச்சி காணாமல் போனது. இவனைப் பார்த்ததும் இருவரின் முகமும் செத்துவிட்டது. அந்த முகத்தில் ஒரு புன்னகையை கஷ்டப்பட்டு வரவழைத்து அவனைப் பார்த்து சிரித்தனர்.

‘சாரி ரூபன், வந்துட்டு அப்படியே போயிடலாம்னு இருந்தேன். அப்பாதான் ஏத்திவிட்டுட்டாரு. இப்படி நடந்துருமோனு தான் வர பயந்தேன்.’ என சங்கடத்தோடு சரவணன் சொன்னான்.

ரூபன் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. கர்சீப்பால் துடைத்துக்கொண்டே, ’நீ ஏண்டா வருத்தப்படறே! நாங்கதாண்டா வருத்தப்படணும் சாரிடா’ என அவன் தோளைப் பிடித்தான்.

கேமராமேன் போட்டோ எடுக்க நிக்க சொல்ல நின்றுகொண்டே சொன்னான்.

’உண்மையாலுமே நீங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணப்போறிங்கனு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோசப்பட்டேன். உங்களுக்குள்ள எப்பயும் ஒரு அழகான வேவ்லெந்த் இருக்கும். உங்க பிரண்ட்சிப் காதலா மாறுன மொமண்ட் ஒரு கவிதை மாறி இருக்கும்ன்னு நினைச்சேன்’

கேமராமேன் ஓகே என கூற அவர்கள் பக்கம் திரும்பி ‘ஒரே ஒரு வருத்தம் உங்க கல்யாணத்தப் பத்தி கேக்கக்கூடாதவங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு சொல்லியிருக்கலாமென இருவருக்கும் கைகொடுத்தான்.

‘ரூபன் உனக்கு சொல்லலாம்னு சொன்னான். நாந்தான் வேணானு சொல்லிட்டேன். அந்த தருண் எங்க கல்யாணம்னு சொல்லவும் இன்பாக்ஸ்ல வந்து அசிங்கமா பேசுனான். அவன் பேசுனது பிரச்சனையில்லை. நீயும் அவனை மாறியே … மேக்கப் கலையாத வண்ணம் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்தாள்.

‘நான் அப்படி பண்ணுவேனு நினைச்சியா!’

’இல்லை. ஒருவேள நீ சொல்லிட்டனா சத்தியமா நான் தாங்கியிருக்கமாட்டேன் சரவணா’ என மீண்டும் துடைத்தாள்.

‘ச்சீ..நான் எப்படி அனன்யா அப்படி பேசுவேன்னு நினைச்ச, உங்க ரெண்டு பேர எப்படி நான் தப்பா நினைப்பேன்’

அவன் சொன்னவுடன் இருவரும் கண்ணீரைத் துடைத்தனர். இருவரும் அழுகவும் அவர்கள் அம்மா அப்பா வந்து விசாரித்தனர்.

‘ஒண்ணுமில்லமா, நீங்க போங்க தேம்பிக்கொண்டே அனன்யா அனுப்பினாள்.

என்னாச்சுப்பா என சரவணனைக் கேட்டனர்.

இல்ல ஒண்ணுமில்லம்மா என சொல்லவும் அவர்கள் நகர்ந்தனர்.

’அனன்யா, எல்லாரும் பாக்கறாங்க அழாத!’ என சரவணன் சொல்ல ’சாரிடா! உனக்கு நான் சொல்லியிருக்கணும்! ரொம்ப கில்ட்டியா பீல் பண்றேண்டா’ என அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்.

’அனன்யா எல்லாம் தப்பா நினைச்சுக்குவாங்க கைய எடு’

’சரவணனும் அவனை இன்னொரு பக்கம் அணைத்துகொண்டான்.

கேமராமேன் அப்படியே இருங்க என கூறிவிட்டு அதை அழகாக புகைப்படமெடுத்தார்.

’அண்ணா இன்னோனு எடுங்க. அதுல அழுதுருப்பேன்’ என கண்ணீரைத் துடைத்துவிட்டு அனன்யா சொன்னாள். மூவரும் சிரித்துக்கொண்டே அவ்வாறு நின்றனர்.

‘Thanks For Coming.it means a lot’ நீ ஒருவேள வராம இருந்தா வாழ்க்கை முழுசா உன் முகத்துல முழிக்காத மாறி Guilty ஆ Feel பண்ணியிருப்போம். நீ எங்களுக்கு அந்த தண்டனைய கொடுக்கல and நீ மாறிட்ட’

ரூபன் அனன்யாவை மறுக்கும் விதமாய் நீ மாறவேயில்லடா. அன்னைக்கு காவ்யா விஷயத்துல நீ அதப்பத்தி கேக்காம எப்படி ஜெண்டில்மேனா  நடந்துகிட்டியோ அதேமாறி இப்பயும் நடந்துகிட்டடா’

சரவணன் அனன்யா பக்கம் திரும்பி, அடிப்பாவி! அதையும் அவன்கிட்ட சொல்லிட்டியா!

சாரிடா என சிரித்தாள்.

காவ்யா குழந்தைக்கு இன்னைக்கு காது குத்தறாங்க. அதான் அப்பா அம்மா வரல .and நானும் சாரி. ஸ்டேஜ் ஏற வேணாம்னு நினைச்சு எதுவும் வாங்கிட்டு வராம வந்துட்டேன்’.

‘டேய் நீ வந்தது எங்களுக்கு அவ்வளவு சந்தோசம் டா. சத்தியமா எங்க கல்யாணம் இப்பதான் complete ஆன மாறி feeling டா. என்ன அனன்யா.

’100 percet true. நாங்க லவ் பண்ண மொமண்ட்லருந்து மிஸ் பண்ண ஒருத்தன் நீ. ’உன்கிட்ட சொல்லணும்னு ஆசை சொல்லி நீ தருண் மாறி .. அதை விடு. சத்தியமா நான் அவ்ளோ ஹேப்பியா இருக்கேன்.

நானும். And also im very happy for you guys.

அப்பொழுது அனன்யா அம்மா வந்து ரொம்ப பேர் போட்டோ எடுக்க நிக்கிறாங்கடி. அப்பறம் பேசிக்கலாம் என சொல்ல அம்மா ‘நீ போம்மா’ என்றாள்.

’அம்மா சொல்றது கரெக்ட். நான் கெளம்பறேன். ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க’

‘சரி லாஸ்ட்டா ஒரெ ஒரு selfie’ என அனன்யா சொன்னாள்.

ஓகே என நின்றனர். அனன்யா சரவணனின் மொபைலை வாங்கி போட்டோ எடுத்தாள்.

முதலில் அனன்யா நடுவில் சரவணன் ஓரத்தில் ரூபன் நின்றிருந்தனர்.

’சீக்கிரம் எடு அனன்யா, வெய்ட் பண்றாங்க’

அவர்கள் எடுப்பதை கேமராமேனும் போட்டோ எடுத்துக் கொண்டார்.

வாட்ஸப் பண்ணிடறேன் என சொல்லிவிட்டு போகவிருந்தவனை ‘உண்மையாலுமே நீ வந்தது ரொம்ப சந்தோசம்’ என சொல்ல எனக்கும் தான்னு சொல்லிக்கொண்டே கீழே இறங்கினான்.

அவர்கள் மூவரும் அந்த சந்திப்பினால் எல்லையற்ற மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் அடைந்தனர்.

ரூபனும் அனன்யாவும் அவனை கல்யாணத்திற்கு அழைக்கக் கூட யோசித்தனர். அவனும் கல்யாணத்திற்கு போவதற்கே யோசித்தான். அவர்களால் இனி ஒருபொழுதும் அந்த நட்பில் இருக்க முடியாதென மூவருமே உறுதியாக அத்தனை ஆண்டுகளும் நினைத்திருந்தனர். அவன் மேடையேறி நின்றபொழுது மூவரும் ஒரு சொல்லவெண்ணா குற்றவுணர்ச்சியை அடைந்தனர். எல்லாம் அவன் பேசும் வரையில் தான். அவன் பேசியவுடனேயே அவர்களின் அத்தனை ஈகோவும் குற்றவுணர்ச்சியும் காணாமல் போய்விட்டன. அவ்வளவுதான் மனிதர்கள்.

மீண்டும் மூவரும் பழையபடியே நெருங்கிய நண்பர்களாயினர்.

அனன்யா குற்றவுணர்ச்சியில் சரவணனை அணைத்த பொழுது கீழே அமர்ந்திருந்த விஷ்ணு அந்த குழுவில் ‘டேய் அனன்யா, சரவணன கட்டிபுடிச்சிட்டு நிக்கிறாடா’ என அனுப்பினான்.

’அன்னைக்கு பெரிய இவனாட்டம் குரூப்பவிட்டு வெளிய போனான்.இதுக்குதானா! ச்சைக்! என தருண் அனுப்பினான்.

’சரி இவ சரவணன கட்டிப்பிடிச்சுட்டு நின்னா ரூபன் அங்க என்னடா பண்றான்!’ என சிரித்துகொண்டே அனுப்பினான்.

‘அவனும் சேந்து சரவணன கட்டிப்புடிச்சுட்டு நிக்கிறாண்டா’ என விஷ்ணு அனுப்பினான்.

’ச்சீ! என்னடா சுத்த மானங்கெட்டவங்களா இருப்பாங்க போலருக்கு’ என பரணி அனுப்பினான்.

அப்போ நைட் ‘த்ரீசம்’ தான் என தருண் அனுப்பினான்.

‘வேறலெவல் டா’ என விஷ்ணு அனுப்பினான்.

‘அல்டிமேட் டா’ என பரணி அனுப்பினான்.

 

 

 

 

உடலரசியல்

உஷாதீபன் 

                னைத்துப் பணியாளர்களும் வந்து சேரும் முன் கிளம்பி விட வேண்டும் என்று மனம் பரபரத்தது. அன்றைக்கென்று பலரும் சீக்கிரமே வருவது போல் தோன்றியது. மாடி அலுவலகத்திற்குச் செல்பவர்கள் சத்தமாய் படியில் ஏறிச் செல்வது தொந்தரவாக இருந்தது. எங்கு வந்தாலும் அமைதியில்லை. புற உலகின் சப்தங்கள் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கின்றன. அமைதியைக் குலைக்கின்றன. பாதுகாப்பான அமைதியும் தனிமையும் கிடைப்பதில்லை. மனித ரகசியங்கள் சுதந்திரமற்றவை. சிக்கலில் தவிப்பவை. அவைகளால் ஏற்படும் சிடுக்குகள் அநேகம். ச்சே…! நினைக்கும் வழி செயல்படுவதில்தான் எத்தனை சங்கடங்கள்? அமைதியில்லாத, ஆரவாரமான இந்த சர்வீஸே பிடிக்கவில்லை. எங்காவது ஏகாந்தமான இடத்தில் சென்று யார் கண்ணிலும் படாமல் இருந்துவிடமாட்டோமா என்றே மனம் ஏங்குகிறது.

பக்கத்துக் தகரக் கொட்டகை பொறியியல் ஆபீசில் தளவாட சாமான்களை எடுக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. எவர் கண்ணிலும் படும் முன் நழுவி விட வேண்டும். இன்னும் சிறிது நேரம் போனால் அதிகாரியே வந்துவிடக் கூடும். அவர் பார்வையில் படக் கூடாது. பிறகு விடுப்பு எடுத்துக் கிளம்புதல் ஆகாது.

வீட்டு ஞாபகமாகவே இருந்தது. இந்நேரம் வேலையெல்லாம் முடித்திருப்பாள். கிளம்பியிருப்பாள். பஸ்ஸைப் பிடிக்க ஒரு மணி நேரம் முன்னால் போனால்தானே டயத்துக்கு ஆபீஸ் போய்ச் சேர முடியும்? அல்லல் படட்டும். அப்போதுதான் புத்தி வரும்…! அருமை தெரியும்…! பின் எப்படித்தான் மடங்க வைப்பதாம்? புதிய புதிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டியதுதான். நான் இல்லாமல் எதுவும் ஆகாது என்ற நிலைக்குக் கடத்த வேண்டும். தவியாய்த் தவித்து வந்து விழ வேண்டும். எனக்கு அட்ஜஸ்ட் ஆகவில்லையென்றால் பிறகு அவள் எதற்கு? தொட்டதற்கெல்லாம் முறுக்கிக் கொள்ளுதல்….பெரிய இடம் கொள்ளா சொத்து பத்தோடு வந்து இறங்கியவள் மாதிரி? பேரழகி என்ற நினைப்பு. நீயெல்லாம் எனக்கு ஈடா? என்பதான அலட்சியம். படிப் படியா இறக்குறேன் எல்லாத்தையும். கறுவிக் கொண்டான்.

கேஷ் புக்கை எழுதி முடித்துவிடுவோம் என்று கிளம்பி வந்திருந்தான். அதுவே இப்போது தப்பாய்ப் போயிற்று. வரவு செலவுகள் மறந்து போகும். குறித்துக் கொள்ள சோம்பேறித்தனம். நினைவில் நிற்காமலா போய்விடும்? நிற்க மறுக்கிறது இப்போது. சமீபமாய்த்தான் இந்த மறதி வந்திருக்கிறது. கவனம் பூராவும் வேறொன்றில் குவிந்திருக்கிறது. அதில் சுய இன்பம் காண்கிறது. மனிதனுக்கு யதார்த்தத்தை விடக் கற்பனை உலகில் சஞ்சரிப்பதில் தனி இன்பம். அங்கு போட்டிக்கு ஆள் கிடையாது. எதிர்வினை இருப்பதில்லை. தவறாயின் சுட்டிக்காட்ட எதுவுமில்லை. யாருமில்லை. அந்த நினைப்பின் சுழிப்பில்தான் நடப்பு மறந்து போகிறது.

கொடுக்கல் வாங்கல்கள் நினைவில் வரிசை கட்டி நிற்கும்போதே பணப்பதிவேட்டினை எழுதி முடித்து விட வேண்டும். அப்போதுதான் நிம்மதி.  தாமதித்தால் தப்பு வந்து, அடித்தல் திருத்தல் என்று ஆகிவிடும். பணப்பதிவேட்டில் அப்படித் தவறுகள் நிகழ்வது சந்தேகத்தை ஏற்படுத்தும். கண்டனம் தெரிவிக்கப்படும். ஒரு சீனியர் நீங்க…இப்டியா கேஷ் புக் மெய்ன்டெயின் பண்றது? தலை குனிய வேண்டியிருக்கும்.  தேவையில்லாமல் அந்த மனச் சுமை எதற்கு? இதற்குத்தான் சற்றுத் தாமதமானாலும் தேவலை என்று முதல் நாளே  கேஷ் புக்கை எழுதி முடித்து விட்டுக் கிளம்புவது. அது நேற்று நடவாமல் போனது.  போதாக்குறைக்கு கேஷ் செஸ்டைப் பூட்டினோமா என்று வேறு ஒரு விபரீத சந்தேகம். உடம்பும் மனமும் பதற ஓடி வந்திருந்தான். எவனாவது சூறையாடியிருந்தா? அலுவலக வேலைகளைப் பொறுத்தவரை என்றுமே ஒரு நிதானம் உண்டுதான். அதுவும் கூட இப்போது தவற ஆரம்பித்திருக்கிறது. மனசும் எண்ணங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இப்படி அலைய விடக் கூடாது. அதனால் வரும் குழப்பங்கள் அநேகம். எதற்கு இந்தக் குரோதம்? இயலாமையால் எழுந்த வன்மமா?

சமீபத்தில்தான் இந்தத் தவறு அடிக்கடி நிகழ்கிறது. எந்த மனநிலை தன்னை அப்படி ஆட்கொள்ள வைக்கிறது, இதை மறக்க வைக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான். நினைப்பு பூராவும் வேறொன்றில்…லயித்திருக்கிறது. அதுவும் தெரியத்தான் செய்கிறது. ஆனால் அந்த இன்பம் தனி. அதற்கு ஈடே இல்லை. சௌந்தர்ய லோகம். றெக்கை கட்டிப் பறக்கும் லாவண்யம்…! தானாகவே தேடி வந்த சந்தோஷம். கையெட்டும் தூரத்தில். வலிய வந்து உள்ளங்கையில் தவழ்கிறது. மிதக்கிறது. அலை பாய்கிறது.

சார்….நேத்து கேஷ் பாக்ஸைப் பூட்டாமப் போயிட்டீங்க…! – வாட்ச்மேன் சம்புகன் சொன்னபோது…முதலில் அவன் மேல்தான் சந்தேகம். அடப்பாவி… பணத்தைச் சுருட்டிட்டுக் குடிக்கக் கிளம்பிடுவானே….! எனக்கு எதுவும் தெரியாதும்பானே…! – பெட்டியில் இருந்ததையெல்லாம் சரி  பார்க்க ஆரம்பித்தான். கூடவே அவனிடம் கேட்டான்…பவானி வந்திச்சா…கூட்டிப் பெருக்கி, தண்ணி எடுத்து வச்சாச்சா? அது எப்பயோ வந்திட்டுப் போயிடுச்சி சார்…. –சொல்லிவிட்டு விலகி விட்டான்.

அவனும் அதுவும் ஓடிப் பிடித்து விளையாடுவதாக ஒரு செய்தி காதுக்கு வந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும். விபரீதமாகுமுன் தடுத்தாக வேண்டும். இதுக்குத்தான் வயசான ஆளுகளாப் பார்த்து வாட்ச்மேனாப் போடணும்ங்கிறது…! தோணத்தான் செய்கிறது. எந்த மனசு இன்னும் தடுக்காமல் தள்ளிப் போடுகிறது? கண்டிக்கவாவது வேண்டாமா? அட…வயசானவன் சரியா இருப்பான்ங்கிறது என்னய்யா நிச்சயம்? அந்தப் பிள்ளை வேறே பார்க்கிறதுக்கு கொஞ்சம் சோக்காத்தான் இருக்கு…வேலைக்கு வந்தா அத மட்டும் கண்ணும் கருத்துமாப் பார்த்திட்டு நகர வேண்டிதானே? அதென்ன அங்கிட்டும், இங்கிட்டும் திரும்பித் திரும்பிப் பார்வை? அதுவே சரியாத் தெரிலயே…! எதுகளத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல?

பணப் பத்திரங்களெல்லாம் சரியாகவே இருந்தன. வேறு சில பாண்டுகளும் அப்படியே இருந்தன. கணக்கில் வருவது, வராதது என்று இரண்டு கவர்களில் பணம் வைத்திருப்பது வழக்கம். அலுவலகம் வரும் வி.ஐபி.க்களை உபசரிப்பதற்கென்று அதிகாரியால் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் தொகைதான் கணக்கில் வராதது. அதற்குக் கணக்கு எழுத வேண்டும் என்கிற அவசியமில்லை. இருக்கும் வரை செலவு செய்துவிட்டு,  தீர்ந்தது என்று சொன்னால் போதும். மீண்டும் வந்து சேரும். அது தனி அரசியல்.  அதில் எவ்வளவு இருந்தது என்று துல்லியமாய் மனதில் வைத்துக் கொண்டதில்லை. அதனாலேயே இப்போது அது குறைகிறதா என்பதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்குக் கணக்கு வைக்காதிருப்பது யாருக்கும் தெரிய நியாயமில்லை. அதிலிருந்து பைசா தொட்டதுமில்லை. வெறும் காசா இன்பம்? அந்தக் காசை விட்டெறிந்தால்தான் இன்பம்…!

எல்லாம் சரியாயிருக்கில்லை சார்…? என்று வேறு கேட்டுக் கொள்கிறான். ம்….ம்… – என்று முனகியதோடு சரி….அது, உன் மீது எனக்கு முழு நம்பிக்கையில்லை என்பதைச் சொல்லாமல் சொல்வது. பணப்பெட்டியைப் பூட்டாமல் வெறுமே சாத்தியிருந்தாலும் பரவாயில்லை. யாரும் அருகில் வரப்போவதில்லை. அதில் சாவியைத் தொங்கவிட்டுப் போயிருந்தால்? வீட்டிற்குப் போய் சாவியைக் காணவில்லையே என்ற சந்தேகம் கூட எழவில்லையே? ஆபீஸ் பேக்கை திறந்தால்தானே தெரியப் போகிறது? காலையில் பார்த்து அதிர்ந்தபோதுதான்…அடித்துப் பிடித்து ஓடி வரப் பண்ணியது.

எங்க இவ்வளவு பரபரப்பா கிளம்பிட்டீங்க…!? – கோபமும் ஆத்திரமுமாகக் கேட்டாள்.

கேஷ் பாக்சைப் பூட்டாம வந்திட்டேண்டீ….! ஏகப்பட்ட டாக்குமென்ட்ஸ், பணம்லாம் இருக்கு அதுல…தொலைஞ்சேன் நானு…. – பறந்து வந்தாயிற்று. இன்னும் படபடப்பு தீரவில்லை.

எதாச்சும் ஒரு சாக்கு வேணுமே உங்களுக்கு…இன்னைக்கும் நா பஸ்ல போய் சாகணுமா? எல்லாம் என் தலைவிதி….உங்களக் கட்டிட்டு அழறதுக்கு…- அவள் பேசியது மேற்கொண்டு காதில் எதுவும் ஏறவில்லை. உடம்போடு பதறுகிறது. சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது.

ரு தவறினால் மனம்  தொடர்ந்து சிதைகிறது. சிந்தனை சிதறுகிறது. கவனம் பிசகுகிறது. கருத்து தவறுகிறது. ஆனால் அந்தத் தவறைத் தவிர்க்க முடியவில்லை. தவறு என்று தெரிகிறதுதான். ஆசை சப்புக்கொட்டிக் கொள்கிறது. புத்தியை மறைக்கிறது. ஒரே ருசி என்றும் நிலைப்பதில்லை. சுலபமாய்க் கிடைப்பதற்கும் என்றும் மதிப்பில்லைதான்.  எதையோ பழி வாங்கும் உக்ரம். யாரைக் கேவலப்படுத்த இது?  எதுவோ கிடைக்காத கோபத்தில், அல்லது கிடைத்துப் போதாத ஏக்கத்தில், வெறியில் இன்னொன்று சுலபமாகக் கிடைக்கும்போது அதை அனுபவிக்கத் துடிக்கும் வேகம். சுலபமாகக் கிடைப்பது எதுவும் நலம் விளைவிக்காதுதான். கேட்டுக்கு வழி வகுக்கும்தான். ஆனாலும் அதில்தான் ஈர்ப்பு ஏற்படுகிறது மனிதனுக்கு. அதனை நாடித்தான் மனம் தவிக்கிறது. நக்கித் தின்பதில்தான் இன்பம்….!

என்ன ஒரு பாவனை? என்ன ஒரு சிரிப்பு? நெளிந்தும், சுழித்தும், உதட்டைப் பிதுக்கியும், கடித்தும், மடித்தும், கண்களைச் சுருக்கியும், மயக்கியும், ஓரப்பார்வை பார்த்தும்….வீட்டுப் பெண்கள் இதையெல்லாம் செய்ய முடியுமா? ஒரு சினிமா நடிகை இதையெல்லாம் காட்டுகிறாளே என்று மனைவியிடம் கேட்க முடியுமா? அதே சினிமா நடிகை அவளது கணவனிடம் அப்படியிருக்க முடியுமா? தனிமையென்றாலும், அந்தரங்கமேதான் ஆனாலும் அந்த நெளிப்பும், வளைவும், சிமிட்டலும், சுழிப்பும் குடும்பப் பெண்ணுக்கு உகந்ததா? அல்லது இப்படியெல்லாம் செய்யேன்….என்றுதான் கேட்க ஏலுமா? நீங்க என்ன லூசா? என்று பதிலுக்குக் கேட்டால்? சினிமாவுல வர்றமாதிரி அத்தான்னு கூப்பிடச் சொல்வீங்க போல்ருக்கே…? கிறுக்கு…!

அவள நினைச்சிட்டுத்தான் உன்னை அணைக்கனும் போல்ருக்கு…..இப்டி உம்முனு இருந்தீன்னா? கொஞ்சமாச்சும் ஒரு சிணுங்கல், குலுங்கல், சிரிப்பு, சுளிப்பு,  தவிப்பு, பெருமூச்சு, வெட்கம், வேகம்….இதுல எதுவுமே கிடையாதா உன்கிட்டே? ஊடல்னா என்னன்னு தெரியுமா? அது காமத்திற்கு இன்பம்னு சொன்னதை அறிவாயா? வீட்டு வேலை செய்றமாதிரி, எல்லாம் முடிஞ்சு ராத்திரி படுக்கைல விழுந்தவுடனே நீட்டி நிமிர்ந்திற வேண்டிதானா? என்னவோ பண்ணிக்கோன்னு இப்டி மரக்கட்டை  மாதிரிக்  கிடந்தீன்னா?  தமிழ்ல முயங்குதல்னு ஒரு வார்த்தை உண்டு தெரியுமா? முயல் குட்டியான்னு கேட்டுறாத…! அதுக்கு என்ன அர்த்தம்…ம்? ரெண்டு பேரும் சேர்ந்து சொர்க்கத்துக்குப் போறது? அதெல்லாம் நீ என்னத்தக் கண்ட? ஆத்தக் கண்டயா, அழகரச் சேவிச்சியா?  எதாச்சும் இப்டிக் கேட்டா கிலோ என்ன விலைம்பே….அதானே உனக்குத் தெரிஞ்சது? அட…நான் படுத்தறதை ரசிக்கவாச்சும் தெரியுதா உனக்கு? கண்ண மூடிட்டுக் கிடந்தா? தூங்கிட்டியோன்னுல்ல நினைக்க வேண்டிர்க்கு…கொர்ர்ர்ன்னு குறட்டை வேறே…! பெண்களுக்கு மென்மை வேண்டாமா? இப்டியா ஆம்பிளை மாதிரி ஆக்டிவிட்டீஸ்?

.ஜவுளிக்கடை பொம்மையப் பார்க்கத்தான் முடியும்…அனுபவிக்க முடியுமா? அதுபோலதான் நீயும்…! அதாவது அலங்கரிச்சு நிற்கும்.  நீ? எப்பப்பாரு…விடியா மூஞ்சி மாதிரியே இருக்க? அந்த முகத்தக் கொஞ்சம் சோப்புப் போட்டுக் கழுவி, பளிச்சினு இருந்தாத்தான் என்ன? வேறே யாரும் நோக்க வேண்டாம். நா பார்க்க வேண்டாமா? முகர்ந்து பார்க்கைல உன்னோட வியர்வையையா நக்குறது? அதுக்கு ஒரு மணம் இருந்தாலும் பரவால்ல…பீரியட் டைம் மாதிரி வாடை வருது…வாமிட் வருது எனக்கு….உன் வியாதி ஏதும் எனக்கும் தொத்திரும் போல்ருக்கு…என்னா கிரகம்டா சாமி…! இப்டி ஒரு சேர்க்கைய எவன் கண்டு பிடிச்சான்? இயற்கை வகுத்தது இப்டித்தான் இருக்குமா?

 

ஒரு கோடு போட்டு…அதுலயே நடக்கணும்னு சொல்லி அங்க இங்க திரும்பக் கூடாதுன்னு கன்ட்ரோல்டா வளர்த்து ஆளாக்கி என்கிட்டக் கொண்டு வந்து விட்டுட்டாங்க உங்க வீட்ல….இப்ப நா…பட்டுக்கிட்டிருக்கேன்….கல்யாணம் பண்ணியாச்சுன்னா அடுத்தாப்ல குழந்தை பெத்துக்கணும்ங்கிறது வழி வழியா வந்திட்டிருக்கிற நடைமுறை…ஆனா அதுக்கு முன்னாடி கணவன் மனைவி ரெண்டு பேரும் சந்தோஷமாக் கொஞ்ச நாட்களை, ஒரு ரெண்டு வருஷத்தை… விட்டேத்தியா அனுபவிக்கிறதுன்னு ஒண்ணு இருக்கே….அது தெரியுமா? எதுக்காக அப்டிம்பே…! எல்லாம் என் தலையெழுத்து!  அதுக்கும் குழந்தைக்கும் சம்பந்தம் கிடையாதாக்கும்….நா சொல்றது புரியுதா? அப்டிக் கழியுற நாட்கள் கொஞ்சம் அசிங்கமாவும் கூட இருக்கும்…இருக்கத்தான் செய்யும்….ச்சீய்….இப்டியெல்லாமா ன்னு மொகத்தச் சுழிக்கக் கூடாது…எழுந்து ஓடக் கூடாது….தெரிஞ்சிதா? அதுலதான் சிலபேருக்கு சந்தோஷம்…வள்ளுவர் கூட ஒரு குறள்ல சொல்லியிருக்கார்…தெரியுமில்ல…செவ்வி தலைப்படுதல்னு… நீ என்னத்தப்படிச்சே…செவ்வீன்னா என்னன்னு கேட்பே…..படிச்சிட்டு….உவ்வே…..ன்னிருப்பே. அதானே  உங்க வீட்ல சொல்லிக் கொடுத்திருக்கிறது?

படுக்கையில் அவளோடு இப்படித்தான். அதில் ஆர்வம் இருப்பதாகவே தெரியவில்லை. மாதம் மூன்று நாட்கள் ஒதுங்குகிறாளே…! அதையாவது தெளிவாய்ப் புரிந்து கொண்டிருப்பாளா? இன்னிக்குதானே குளிச்சே….இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்குப் பக்கத்துல வரப்படாது…தெரிஞ்சிதா…? நானும் நெருங்க மாட்டேன்… உறீம்….உன்கிட்டப் போய் சொல்றன் பாரு….செகன்ட் வீக்தான் உடம்பு பக்குவமா இருக்கும்….அதான் சரியான டைம்….எல்லாத்துக்குமே ஒரு முறை இருக்குடீ…ஒரு சிஸ்டம் இருக்கு….வகுத்து வச்சிருக்காங்க….எதெதுல சிஸ்டமா இருக்கணுமோ அததுல அப்டித்தான் இருந்தாகணும்…அதுலயும் பிசகுறபோதுதான்…தப்புத்தண்டா ஆயிடுது….நா சொல்றது புரியுதா? புரியலியா? ம்…ம்…ம்னு மண்டைய மண்டைய ஆட்டு….அதுவும் உங்க வீட்ல சொல்லிக் கொடுத்ததுதான்….இல்லன்னா இந்த ஆட்டு ஆட்டுவியா?

மனுஷன் தாங்க முடியாத ஒழுக்கத்துல இருந்தா அசடுன்னு ஆயிடும். இருக்க வேண்டிதான்…அவசியம்தான்…அதுக்காக எங்க எங்க…யார் யார்ட்ட…எப்ப…எப்போன்னு ஒரு கணக்கு இல்லியா? புருஷன்ட்டயே இந்த ஒதுங்கு ஒதுங்கினா? நா தொட்டாலே கூசுதுங்கிறே…அப்புறம் எதுக்குக் கல்யாணம் பண்ணினே? எங்கயும், எதிலயும் கை போட விடமாட்டேங்கிறே? உன் கூச்சத்தப் போக்கணும்னா மொத்தமா உடம்புல துணியில்லாமத்தான் ஆக்கணும்…அது நல்லாயிருக்குமா? குடும்பக் குத்து விளக்கு…! அது கூட ரெண்டு மனசும் சம்மதிச்சு நடக்கறதுதாண்டீ…. உனக்கு எங்க தெரியப் போகுது… அதெல்லாம்..? நீ ஒரு பாஷாண்டி..!..

நாளும் பொழுதும் அப்படியே விடிந்திருக்கின்றன. எப்பொழுது தூங்கினோம் என்று தெரியாமல் கண்ணயர்ந்திருக்கிறான். அவளுக்கு எதுவுமில்லை. பரப்பிரம்மம், ஜெகந்நாதம்….!.

உனக்கும் எனக்கும் ஒண்ணே ஒண்ணுதான் படு பொருத்தம். சொல்லட்டா… நா சங்கரன்…நீ சங்கரி….இது ஒண்ணுதான்….சுந்தரி…சௌந்தரி…நிரந்தரியே…..ன்னு இப்ப நீ ஆகிப் போனே….! விட்டு உதறவா முடியும்? கட்டி இழுத்திட்டுப் போய்த்தான் ஆகணும்…கரை சேருவோமோ இல்ல…கலத்துலயே மிதக்கப் போறாமோ…? யார் கண்டது?

எத்தனையோ நாட்கள் இப்படித்தான் கழிந்திருக்கின்றன. உங்களுக்கு வேறே வேலையே இல்லையா? காலைலர்ந்து வீட்டு வேலை, ஆபீஸ் வேலைன்னு ஓய்ஞ்சு வந்து விழுந்திருக்கேன்…சரசம் பண்ண வர்றீங்களாக்கும்….விண்ணு விண்ணூங்குது உங்களுக்கு…எனக்கானா அசந்து அண்ணாக்கத்து வருது….ஆபீஸ்ங்கிற எடத்துக்குப் போய் வெறுமே பெஞ்சைத் தேய்ச்சிட்டு வந்தா இப்டித்தான் இருக்கும்..என்னடா செய்வோம்னு…..மானேஜர்ங்கிற பேர்ல இருக்கிறவனையெல்லாம் விரட்டிக்கிட்டுத் திரிய வேண்டியது…உங்களுக்குன்னு அல்லாடட் ஒர்க் கிடையாது….பிறகென்ன கேட்கணுமா? உங்க சில்மிஷத்துக்கெல்லா நாந்தான் கிடைச்சனா? பேசாமப் போய்ப் படுங்க….சதா தொந்தரவு பண்ணிக்கிட்டு…..! நீங்க பக்கத்துல வந்தாலே எனக்கு உடம்பெல்லாம் பூரான் ஊர்ற மாதிரி இருக்கு…ஒரே வேர்வை நாத்தம்….!

அடிச் சண்டாளி…! நீ ரொம்ப மணக்கிறியோ..? உன் நாத்தம் பெரிசா…என் நாத்தம் பெரிசா?  உலகமே நாத்தந்தாண்டீ….மலக் குழிதான் இந்த உடம்பே…! சுமந்திட்டுத்தான திரியறோம்?  என்னத்தத் தெரிஞ்சு வச்சிருக்கே நீ…? ராத்திரி ஒரு வாய் அரிசியை வாய்ல  போட்டுட்டுத் தூங்கி எந்திரிச்சு…காலைல துப்பு…அதுல எது வாய் வச்சாலும் செத்துப் போயிரும்…மனுஷனே வெஷந்தான்…எல்லாத்தோடயும்தான் இந்த வாழ்க்கை…அதப் புரிஞ்சிக்கோ….!

என்ன தொந்தரவு செய்தேன் என்று இவள் இப்படிச் சலித்துக் கொள்கிறாள்? கட்டியணைப்பது கூட ஒரு குற்றமா? அது கூட இல்லாமல் எப்படி ஆசையை வெளிப்படுத்துவதாம்?  எப்படி ஆரம்பிப்பதாம்? ஆரம்பமே அதுதானே? அதற்கே இவள் இப்படிச் சலித்துக் கொள்கிறாள்? தாம்பத்ய உறவிலேயே  விருப்பம் இல்லையோ? அவள் வீட்டிலே யாரும் சொல்லிக் கொடுக்கவில்லையோ? இந்த உலகாயத அனுபவங்கள் எதுவும் கற்றுக் கொடுக்கவில்லையோ? ஓட்டை சினிமாவே ஆயிரம் கற்றுத் தருமே…இவளுக்கு அதுகூடவா இல்லாமல் போனது?

எண்ணங்கள் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன. அதனூடேதான் அன்றாட நாட்களும் கழிந்து கொண்டிருக்கின்றன. சண்டையும், சச்சரவுமாய்….ஊடலும் கூடலுமாய் இருக்க வேண்டிய வாழ்க்கை அதற்கு நேர்மாறாய்…..நகை முரண் அல்லாது வேறென்ன?

ணியைப் பார்த்தான். பத்து நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவராய் காம்பவுன்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். இவன் அலுவலகத்திற்கும், மாடி அலுவலகத்திற்கும் என்று சற்றுத் தாமதமாய்த்தான் வருவார்கள். நிர்வாகப் பிரிவு. அங்கே அதுதான் வழக்கமாய் இருந்தது. வருகைப் பதிவேட்டைப் பிரித்து விடுப்பு விண்ணப்பத்தை நுழைத்தான்.

சம்புகன்…லீவு லெட்டர் வச்சிருக்கேன்….இன்னைக்கு ஒரு நாள் நா லீவு…அன்புத்தாய் வந்ததும் சொல்லிடுங்க…உங்க பதிலி சாமியப்பன் வந்த பிறகு , நீங்க கிளம்புங்க…சரியா….? – சொல்லிவிட்டு  இவன் கிளம்பினான். அடுத்த இன்சார்ஜ் அன்புத்தாய். சீனியர் அஸிஸ்டென்ட். அதனிடம்தான் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். அதுவே சந்தேகக் கேஸ்…உடம்பு முடியாதது. என்று லீவு போடும் என்று சொல்லவே முடியாது. இப்படி ஆட்களை வைத்துக் கொண்டுதான் நிர்வாகம் பண்ண வேண்டியிருக்கிறது. ஒரு அவசர ஆத்திரத்திற்குத் தடங்கலின்றி லீவு போட முடிவதில்லை.. அன்புத்தாய் போலானவர்கள் அதைப்பற்றியெல்லாம் நினைப்பதில்லை. நினைச்சா லீவு….நினைச்சா ஆபீஸ்…அவர்கள் வசதிக்குத்தான் அலுவலகம். அலுவலக வசதிக்கு அவர்களில்லை.

மனதில் என்னவெல்லாமோ குரோதமாய்த் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அடுத்தவர்களிடம் என்னடா தப்புக் கிடைக்கும் என்று அலைகிறது..காரணமில்லாமல் குற்றம் கண்டுபிடிக்க முனைகிறது. தான் தப்புச் செய்வதுபோல் மற்றவர்களும்தான் செய்கிறார்கள் என்று உறுதி செய்யத் துடிக்கிறது. தொட்டால் குத்தம்  என்று எதுவும் அகப்படாதா எனத் தேடுகிறது. எல்லோரும் சுதந்திரமாயும், சந்தோஷமாயும் இருப்பதாகவும், தான் மட்டும் எதிலும் தோல்வியையே சந்திப்பதாயும் குமுறுகிறது.

அட…குடும்ப வாழ்க்கையாவது சந்தோஷமாய் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. எளிய, நடுத்தர வர்க்க மனிதர்களுக்குண்டான சின்னச் சின்னச் ஆசைகளும், சந்தோஷமுமே வீட்டில் மனைவியுடனும், குழந்தைகள் இருந்தால் அவைகளோடும் கொஞ்சி விளையாடி தங்கு தடையற்று அனுபவிப்பதுதான். குழந்தைக்கே வழியில்லை இன்னும்…அட…பொண்டாட்டியுடனாவது சந்தோஷமாய் நேரத்தைக் கழிக்கலாம் என்றால் அதற்குமா ஆயிரத்தெட்டு சுணக்கங்கள்? அவளே ஒரு தாங்க முடியாத நோக்காடாய் இருந்தால்? கழிவிரக்கம்…

வன் லீவு போட்டுவிட்டு வரப் போகிறான் என்பது அவளுக்குத் தெரியாது. காலையில் அவன் சீக்கிரமே கிளம்பி ஆபீஸ் வந்து விட்டதால் நிச்சயம் அவள் உறரிபரியாய்க் கிளம்பத்தான் செய்வாள். பஸ்ஸில் போயாக வேண்டுமே? அவள் கிளம்புவதற்கு முன் கண்டிப்பாக நளினி வரப்போவதில்லை. எத்தனை அழகான பெயர். வேலைக்காரிக்குப் பெயர் நளினி…! நளினி என்று பெயர் வைத்து வளர்ந்து பெரியவளாகி விட்டபின்தானே அவள் வேலைக்காரியானாள்…!  அதற்காக அவளிடம் அழகு தங்கக் கூடாதா? நளினம் நடனமாடக் கூடாதா? வேலைக்காரிகளிடம்தானே பெரும்பாலும் அழகு கொட்டிக் கிடக்கிறது? கேட்பாரற்று தன்னிச்சையாய் வளர்ந்து காடு போல…!

கொல்லைப்புற முற்றத்தில் பாத்திரங்கள் கிடக்கும் என்று அந்தப் பெண் சைடு வழியாகப் பின்புறம் வந்து, தேய்த்து அடுக்கிவிட்டுப் போய்விடும். சுள்ளென்ற வெய்யிலில் சில்வர் பாத்திரங்கள் காய்ந்து நெருப்புக் கனிந்ததுபோல் செவேலென்று  பளபளக்கும். மாலை வீடு வந்து அவைகளை எடுத்து உள்ளே அடுக்கும்போது,  எவ்வளவு ஆரோக்கியமா இருக்கு பாருங்க….என்பாள் சங்கரி. சுத்தம் சோறு போடும்…! பெரிய்ய்ய்ய தத்துவம் கிழிகிறது. சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்து என்ன செய்ய? மனசு அழுக்காகத்தானே கிடக்கிறது? எதைக் கொண்டு அதைச் சுத்தம் செய்வது? இந்த உடம்பே அழுக்கு…அழுக்குக்குள்தான் அழகும்…அழகு சிதையும்போது அழுக்கு. அது மறையும்போது அழகு. மீண்டும் அழுக்கு….மாறி…மாறி….சிதைந்து மறைந்து….மறைந்து சிதைந்து….

என்ன ஆரோக்கியமோ? ரொம்பத் தெரிந்த மாதிரி…! பகல் பூராவும் அத்தனை பாத்திரங்களும் வெளிப்பக்கம் கெடக்கு. யார் வர்றா, யார் போறாங்கிறதே தெரியாது. நாம பொழுதடைஞ்சு  வீடு வர்றோம்….எவனாவது ஆள் போக்குவரத்து இல்லைன்னு தெரிஞ்சு பாத்திரங்களை லவுட்டிட்டுப் போயிட்டான்னா? அந்தம்மாவே ஒருத்தனை அனுப்புதுன்னு வச்சிக்குவோம்…. நமக்குத் தெரியவா போகுது? அதுகிட்டக் கேட்க முடியுமா? யாரை எதுக்குன்னு நம்புறது? (என்னையே என்னால நம்ப முடியல்லயே…!)

ஆம்மா….இந்த ஓட்டைப் பாத்திரத்தை எடுத்திட்டுப் போய்த்தான்….கொழிச்சிடப் போறானாக்கும்…நீங்க ஒண்ணு….பஞ்சத்துக்கு அடிபட்டவன் கூடத் தொட மாட்டான்…..இப்பல்லாம் லம்ப்பா அடிக்கிறதுதான்….எத்தனை நியூஸ் பார்க்கிறோம்…?

அதுக்கில்லடீ நா சொல்றது…..ஒரு பொழுது தீர்த்தம் சாப்பிடுறதுக்கு ஆச்சுன்னு தூக்கிட்டுப் போகலாமுல்ல….? தண்ணியடிக்கிறவனுக்கு காசில்லேன்னா புத்தி அப்டித்தான் போகும்….அது தெரியுமா உனக்கு?  இன்னிக்கு அரசாங்கம் இலவசமாக் கொடுக்கிற காசே கூட அந்த வகைலதான போயிட்டிருக்கு…..எவன் ஒழுங்கா வீட்டுல கொண்டு போய்க் கொடுக்கிறான்? ஒரு சர்க்கிள் மாதிரி திரும்ப கவர்ன்மென்ட்கிட்டயே அந்தக் காசு வந்திடுதாக்கும்…..

அப்ப நீங்க இடைல வந்து பாத்திரங்களை உள்ளே எடுத்து வச்சிட்டு, வீட்டைப் பூட்டிட்டு, திரும்ப ஆபீஸ் போங்க….என்னால நடுவுலல்லாம் கிளம்பி வர முடியாது….உங்களுக்குத்தான் வண்டி இருக்குல்ல….

கேட்டால் இப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அவளே வழி சொல்லிக் கொடுத்திருக்கிறாள்.

திகச் சத்தமின்றி வண்டியை வராண்டாவில் ஏற்றி நிறுத்தினான். தான் இடைப்பட்ட நேரத்தில் வந்திருப்பது எவருக்கும் தெரியப் கூடாது. பக்கத்து, எதிர் வீடுகள் உள்பட…யார் எப்போ…வந்தா, போனா இவனுகளுக்கென்ன வந்தது? மெல்ல வீட்டைத் திறந்தான். திரையை இழுத்து விட்டான். எந்தப் பக்கத்துலயிருந்தாவது கண்ணு இந்தப் பக்கம் இருந்தா?அடுத்தவன் என்ன செய்றான்ங்கிறதுதானே இவனுகளுக்கு கவனமாயிருக்கு? உறாலைக் கடந்து அடுப்படியைத் தாண்டி பூட்டியிருந்த கொல்லை இரும்புக் கதவுப் பக்கம் போய்ப் பம்மியபோது, பாத்திரங்கள் தேய்படும் சத்தம் கேட்டது. வந்திருக்கிறாள். வேலை நடக்கிறது……

பூட்டியிருந்த கதவைத் திறந்தான். அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. அடர்ந்த கருங் கூந்தலை இழுத்துக் கட்டி செழிப்பான கொண்டையாய் முடிந்து அதில் வட்டமாய் மல்லிகைச் சரம்.. அகன்ற நெற்றியில் சற்றே பெரிய வட்டமாய்ப் பதிந்திருந்த குங்குமப் பொட்டு, அவள் முகத்திற்கு மிகுந்த சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. பாத்திரம் தேய்க்க வர்றவளுக்கு எதுக்கு இம்புட்டு அலங்காரம்? எனக்காகத்தானா? ஆள வீழ்த்துறதுக்கான அஸ்திரமா? சரிய்ய்யான கைகாரியா இருப்பா போல்ருக்கு? தொடை வரை ஏற்றி விட்டிருந்த புடவையை இறக்காத நிலையிலேயே வெறித்து நோக்குவதைக் கண்டு அவளிடம் புன்னகை மலர்ந்தது. பார்த்தா பார்க்கட்டுமே…! என்ன கெட்டுப் போகுதாம்…!  எவ்வளவு தாராளம்?  காலை வெயிலில் பளபளக்கும் செழுமை. அகன்று பரந்திருக்கும் பிருஷ்டம்…! அப்டியே அலேக்காக உள்ளே தூக்கிட்டுப் போயிடுவமா…? பாவி…அநியாயம் பண்றாளே…?

இதுக்காகத்தான் வந்தீகளாக்கும்……நல்லாத்தான் ப்ளான் பண்றீக…..என்றவாறே தேய்த்துக் கழுவிய பாத்திரங்களை வாளியில் அடுக்கி உள்ளே எடுத்து வந்தாள். அதற்கு மேல் அவளே தாங்க மாட்டாள். எலித் தொல்லை ஜாஸ்தி என்று கவனமாய் எல்லா ஜன்னல்களையும் அடைத்துக் கொக்கி போட்டுப் போயிருந்தாள் சங்கரி. வெளியிலிருந்து எவருக்கும் ஒரு பொட்டுத் தெரியாது. தானாகவே அமைந்து விட்ட பாதுகாப்பான சூழல். வசதியான மறைவு. வாசல் கதவு மட்டும் பூட்ட வேண்டும்…..ஊறீம்….அது கூடாது…பூட்டினால்தான் சந்தேகம் வரும்…ஏதும் சத்தம் வருகிறதா என்பதில் மட்டும் கவனமிருந்தால் போதும்….எந்த மயக்கத்திலும் ஜாக்கிரதை தேவை….எதிலும் மனிதனுக்கு முழுச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாதோ? ஏதேனும் தீய சக்திகள் தடை செய்ய சுற்றிலும் வட்டமிட்டுக் கொண்டேயிருக்குமோ?

கொஞ்சம் பாத்திரங்கள் இன்னும் தேய்ப்பதற்குக் கிடந்தன. அப்படி மீதி வைப்பதுதான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. அந்த சூட்சுமம் அவளுக்குத் தெரியும். வாளியிலுள்ள பாத்திரங்களை மேடையில் அடுக்குவதுபோல் பாவனை செய்தாள். ஒரு மாதிரி மயக்கப் பார்வையோடு-(அந்தக் கண்ணுதான் என்ன வேலையெல்லாம் பண்ணுது?)  வழக்கமான அந்த ஓரத்தில் ஒதுங்கினாள். அவளுக்கும் வேண்டியிருக்கு போலிருக்கு…!. ஒரு புதுவகையான மணம் அவளிடம். அது என்றோ பிடித்துப் போனது. மூக்கிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அதுதான் எப்போ எப்போ என்று துடிக்கிறது. தொட்டு விடத் தொட்டுவிடத் தொடர்கிறது.

நளினீ…..உங்கிட்டத்தான் எவ்வளவு நளினம்….அடியே என் லட்டு…..என்றவாறே அவளை நெருங்கினான் சங்கரன்.

விரல் கூடப் படவில்லை. வாசல் கேட் திறக்கும் சத்தம். விடுவிடுவென்று கொல்லைப் பக்கம் அவள் பாய, இவன் வாயிலை நோக்கி ஓட…….வந்திட்டீங்களா…..எங்க வராமப் போயிடுவீங்களோன்னு வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்னு  சொல்லிட்டு வந்தேன்….எதிர்பார்க்கலேல்ல…? என்றவாறே அவசரமாய் நுழைந்தாள் சங்கரி….! எதையோ நினைத்துக் கொண்டுதான் கிளம்பி வந்திருப்பாளோ? நல்ல வேளை பூட்டவில்லை. பூட்டியிருந்தால் சட்டென்று சந்தேகப்பட்டிருப்பாள்.

லீவு போட்டுட்டியா…..? பலே….. என்றான் சங்கரன். அவன் சந்தோஷம் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. என்றும் வராதவள் வந்தால்…?

அதான் சொல்லிட்டு வந்திருக்கேன்னு சொன்னனே…. எங்கிருந்து லீவு போடுறது…. நீங்கதான் திரும்பக் கொண்டு விடணும்……. நல்லதாப் போச்சு எனக்கு….. மத்தியான வேளைல பஸ்ஸே வராது…..

சொல்லியவாறே வேகமாய்க் கொல்லைப் பக்கம் நோக்கிப் போனவள்…..ஒரு நிமிடம் எதையோ நோக்கினாள். பிறகு கேட்டாள். என்னா கேள்விடா சாமி….!

அவர் வந்தப்புறம் நீ வந்தியா….இல்ல… முன்னமேயே வந்திட்டியா….? என்றாள் நளினியைப் பார்த்து. இதென்ன கேள்வி? எதிராளியை உலுக்குவதில் திறமைசாலி…….

ஏன்க்கா அப்டிக் கேட்குறீங்க…? – தலையைக் குனிந்தவாறே முனகினாள்  நளினி.

இல்ல…கொல்லைக்  கதவைத் திறந்து வச்சிருக்காரேன்னு தோணிச்சி….அதால கேட்டேன்…

அவள் முகம் இறுகிப் போயிற்று.

முன்னமயே வந்திட்டேன்க்கா….. என்றாள்.

உங்கள யாரு கொல்லைக் கதவைத் திறக்கச் சொன்னது? அவபாட்டுக்குத் தேய்ச்சு அடுக்கிட்டுப் போறா…! வெளியேறின பிறகு சாவகாசமா உள்ளே எடுத்து வச்சா ஆகாதா? சைடு வழியா வந்து சைடு வழியாவே போகட்டும்னுதானே கொல்லைல பாத்திரங்களைப் போட்டு வைக்கிறது? அப்படி என்ன அவசரம் உங்களுக்கு? வந்தா அமுக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டீங்களா? அவளென்ன பார்வை வேண்டிருக்கு?

சங்கரியின் சுளீரென்ற அந்தக் கேள்வியின் வித்தியாசமான, கொச்சையான  வார்த்தைப் பிரயோகத்தில் அப்படியே ஆடிப்போய் ஸ்தம்பித்து நின்றான் இவன்.

——————————————————-