Author: பதாகை

எத்தனை எத்தனை மனிதர்கள்

பாவண்ணன்

paavannan

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் சு.வேணுகோபால் எழுதத் தொடங்கியபோது, தமிழ்ச்சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தொட்டுவிட்டிருந்தன. அவற்றின் செழுமையும் வளமும் என்றென்றும் போற்றக்கூடிய தன்மையுடன் இருந்தன. சிறுகதைகள் புதிய தளங்களைக் கடந்து, புதிய எல்லைகளைத் தொட்டிருந்தன. குறிப்பிடத்தக்க ஆளுமைகள் உருவாகி நிலைபெற்றிருந்தார்கள். அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் உருவாக்கிய நட்பற்ற சூழலைக் கடந்து, சீரான இடைவெளிகளில் மிகச்சிறந்த சிறுகதைகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. கரிய ஏளனம் படிந்த குறுநகைகள் தோன்றித்தோன்றி நிராசைக்குள்ளாக்கி வந்த ஒருவித இறுக்கமான சூழலில், மன உறுதியும் தீராத வேட்கையும் கொண்டவர்கள் மட்டுமே படைப்புகளில் தம்மை இடைவிடாமல் வெளிப்படுத்தி வந்தார்கள்.

’நுண்வெளிக் கிரகணங்கள்’ என்னும் நாவல் வழியாக தொடக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சு.வேணுகோபால், அடுத்தடுத்து சிறுகதை முயற்சிகளிலும் ஈடுபட்டார். வசீகரமான மொழியமைப்போடு எதார்த்தப் பின்னணியில் வாழ்வின் அவலங்களை அவருடைய சிறுகதைகள் முன்வைத்தன. அழிந்துகொண்டிருந்த விவசாயம், வாய்ப்புகளற்று கருகிச் சாம்பலாகிப் போகும் திறமைகள், சந்தர்ப்பங்கள் சார்ந்து நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி நிறம்கொண்டு வாழும் தனிமனிதர்கள், எந்தப் பொதுஅறத்துக்கும் உட்படாத அவர்களுடைய மதிப்பீடுகள் என பல்வேறு தளங்களில் மாறிமாறி இயங்கிவந்த அவருடைய சிறுகதையுலகத்தின் நம்பத்தகுந்த தன்மையாலேயே, அக்கதைகள் உடனடியாக வாசகர்களின் கவனிப்பைப் பெற்றன. சிறந்த இளம்படைப்பாளுமைகளை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு பத்தியை தொடர்ந்து நான் அப்போது காலச்சுவடு இதழில் எழுதி வந்தேன். அந்த வரிசையில் நான் குறிப்பிட்டு எழுதிய அனைவருமே இன்று ஆளுமைகளாக மலர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கணிப்பு மெய்யாகியுள்ளது என்பதில் என் மனம் நிறைவடைகிறது. அந்தப் பட்டியலில் ஒரு பெயர் சு.வேணுகோபால்.

சு.வேணுகோபாலின் பெரும்பாலான சிறுகதைகள் இதழ்களில் பிரசுரமாகாமல் நேரடியாக புத்தக உருவத்தில் வெளிவந்தவை. வாழ்க்கை குறித்த ஆழமான பார்வையை அவருடைய படைப்புகள் கொண்டிருக்கின்றன. சம்பிரதாயமான கதைக்களங்களை நிராகரித்து, முற்றிலும் புதிய களங்களை அவர் கட்டியெழுப்பிக்கொள்கிறார். உரையாடல்கள் வழியாக கதையின் மையத்தை நோக்கி அவர் நிகழ்த்தும் பிரயாணம் மிகவும் சுவாரசியமானது. வாழ்க்கையில் மிகமிக இயற்கையாக மனிதர்களின் மேன்மை வெளிப்படும் தருணங்களை அடையாளப்படுத்துவதுபோலவே, மனிதர்களின் கீழ்மை வெளிப்படும் தருணங்களையும் அவருடைய படைப்புகள் முன்வைக்கின்றன. மேன்மைகளையும் கீழ்மைகளையும் எவ்வித சார்புகளும் அற்று மதிப்பிடும் பக்குவமும் முன்வைக்கும் தேர்ச்சியும் அவரிடம் ஒருங்கே காணப்படுகின்றன. அந்தக் குணமே, தமிழில் அவரைச் சிறந்த படைப்பாளியாக அடையாளப்படுத்த உதவும் பண்பாக இருக்கிறது.

எதிர்காலத்தில் சு.வேணுகோபாலின் பெயரை நிலைநிறுத்தப் போகும் சிறுகதைகளில் ஒன்று ’புத்துயிர்ப்பு’ என்னும் சிறுகதை. தல்ஸ்தோய் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு வேறு. சு.வேணுகோபால் அடையாளப்படுத்தும் புத்துயிர்ப்பு முற்றிலும் வேறொரு தளத்தைச் சார்ந்தது. மழைபொய்த்து பூமியே வறண்டுபோன ஒரு கிராமம். ஆறும் காடும் வயல்களும் சூழ்ந்த கிராமமென்றாலும், எங்கும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. ஒரே ஒரு பச்சைப்புல் கூட இல்லை. எங்கெங்கும் வறட்சி. இந்த வறட்சியின் பின்னணியில் இயங்கும் ஓர் விவசாயக்குடி இளைஞன் கோபாலின் இறுதிநாள் வாழ்வைப் படம்பிடிக்கிறது இக்கதை. ஒருபுறம் பிள்ளைத்தாய்ச்சியான மனைவி. இன்னொருபுறம், கன்றீனுவதற்காகக் காத்திருக்கும் வீட்டுப் பசு. பசுவுக்குத் தீவனம் கொடுக்க இயலாத ஊர்க்காரர்கள், வந்த விலைக்கு அதை விற்றுவிடுகிறார்கள். ஆனால், முதல் ஈத்தில் பதினேழு லிட்டர் பால் கறந்த பசு, இரண்டாவது ஈத்தில் அதற்குக் குறையாமல் கறக்கத் தொடங்கிவிட்டால் தான் பட்ட கஷ்டமெல்லாம் கரைந்துபோய்விடும் என்ற எண்ணத்தில் புல்லுக்கும் வைக்கோலுக்கும் அலைவதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறான் கோபால். விலைக்குக்கூட அவனால் வைக்கோலை வாங்கமுடியவில்லை. ஒருநாள் முழுதும் அலைந்து திரிந்தும் வெறும் கையோடு திரும்ப நேர்கிறது. பசியோடு பசு நிலைகொள்ளாமல் தவிப்பதை அவனால் நேருக்குநேர் பார்க்கமுடியவில்லை. ஒரு வேகத்தில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கவுண்டர் தோட்டத்துக்குச் சென்று வைக்கோல் போரில் வைக்கோலைத் திருடி எடுத்துவர முயற்சி செய்தபோது பிடிபட்டு உதைபடுகிறான். அந்த அவமானத்தில் பூச்சிக்கொல்லியை எடுத்துக் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்கிறான். அப்போதுதான் அவன் மனைவிக்குப் பிரசவ வலி வந்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பாசப்போராட்டத்தையும் பசிப்போராட்டத்தையும் மனப்போராட்டத்தையும் ஒரே கோட்டில் கொண்டு வந்து சித்தரித்திருக்கும் விதம் சு.வேணுகோபாலின் திறமைக்குச் சான்றாகும்.

இக்கதையின் இறுதியில், பிறந்த குழந்தையை வெயில் படும்படி சிறிது நேரம் பிடித்திருக்கும் சடங்கையொட்டி நகரும் சில கணங்கள் மிகமுக்கியமானவை. அந்தக் குழந்தையை வெயில் படும்படி பிடித்திருக்கும் ஒருத்தி, சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்து ”கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் மேலே போகிற சூரியனே, இந்தா இந்தக் குழந்தையைப் பாரு” என்று மனவருத்தத்தோடு சொல்கிறாள். அத்தருணத்தில் அக்குழந்தை உடலை வளைத்து கையையும் காலையும் அசைக்கிறது. உதட்டோரம் ஒரு புன்னகை படர்கிறது. அந்தச் சிரிப்பை கடவுளைப் பார்த்து கேலியுடன் குழந்தை சிரிக்கும் சிரிப்பு என்று எழுதுகிறார் வேணுகோபால். அதையொட்டி, ஒரு மன எழுச்சியின் வேகத்தில் “குழந்தை தெய்வத்தின் தெய்வம், அது ஒருபோதும் எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை” என்று ஒரு வாக்கியத்தை எழுதி கதையை முடித்துக்கொள்கிறார். தன்னிச்சையாக வந்து விழுந்திருக்கும் இந்த வரிதான் புத்துயிர்ப்பு கதையின் மையம் அல்லது கதை நிகழ்த்தும் அனுபவம் என்று சொல்லலாம். குழந்தை எந்த அதிர்ச்சியையும் கண்டு பின்வாங்குவதில்லை. ஆனால் மனிதர்கள் பின்வாங்குகிறார்கள். கோபம் கொள்கிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோழைகளாக உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஒருகணம், ஒரே ஒரு கணம் குழந்தை உள்ளத்தோடு அவர்கள் சூழலை எதிர்கொண்டிருந்தால், அவர்கள் பின்வாங்காமால் முன்னோக்கி நகர்ந்திருக்கக்கூடும். எனினும் அகம் கொந்தளிக்கும் மானுடம் என்பதே உலக நியதியாக இருக்கிறது.

வறட்சியின் கொடுமையைச் சித்தரிக்கும் ’உயிர்ச்சுனை’யும் முக்கியமான ஒரு சிறுகதை. மழை இல்லாததால் கிணற்றில் நீர்மட்டம் குறைந்துகுறைந்து ஒருநாள் இல்லாமலாகிவிடுகிறது. இன்னும் சில அடிகள் தோண்டி குழாய்களை இறக்கினால் ஒருவேளை நீர் வரலாம் என்னும் நம்பிக்கை பெரியவரிடம் இருக்கிறது. சொந்த மகளிடமே கடன் வாங்கி, அந்த விஷப்பரீட்சையில் இறங்குகிறார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்துவிடுகிறார். தொடக்கத்தில் நீர் வருவதுபோல சில கணங்கள் இறைத்தாலும் அடுத்த சில கணங்களிலேயே நின்றுவிடுகிறது. தாத்தா துக்கத்தில் உறைந்து உட்கார்ந்துவிடுகிறார். கடன் கொடுத்த மகள் கோபத்தில் வெடிக்கிறாள். திருமணத்துக்குக் காத்திருக்கும் இன்னொரு மகள் அவநம்பிக்கையுடன் மெளனம் கொள்கிறாள். யாரும் கவனிப்பாரற்ற சூழலில் கீழே விழுந்து சிராய்ப்புடன் அழுதபடி எழுந்துவரும் பேரக்குழந்தையை அக்கறையோடு விசாரிக்க யாருமில்லை. யாராவது தன் சிராய்ப்பைப்பற்றி விசாரிக்கக்கூடும் என நினைத்த சிறுவன் ஒவ்வொருவரிடமும் சொல்ல முயன்று, தோல்வியில் துவண்டு, அழுகையுடன் நகர்ந்து அங்கிருந்த நாய்க்குட்டியிடம் சொல்லி அழுகிறான். இறுதியில் சொல்லின் பொருள் புரியாமல் ‘நான் செத்துப்போவப் போறேன்’ என்று அக்குட்டியிடம் சொல்லிவிட்டு நடந்துபோகிறான் அச்சிறுவன்.

புத்துயிர்ப்பு சிறுகதையில் இடம்பெற்றிருந்த குழந்தையின் பாத்திரத்துக்கு இணையாக, இக்கதையில் சிறுவனின் பாத்திரம் இடம்பெற்றிருக்கிறது. பெரியவர்களின் துக்கம் ஒரு முனையிலும் சிறுவனின் துக்கம் மற்றொரு முனையிலும் உள்ளது. பெரியவர்கள் தம் துக்கத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. ஏதோ ஒரு தடை அவர்களைத் தடுக்கிறது. உள்ளுக்குள்ளேயே சுமந்து வருந்துகிறார்கள். பாரம் மென்மேலும் அதிகரிக்க வருத்தத்தில் மூழ்குகிறார்கள். தடை எதுவும் இல்லாத சிறுவன் தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள ஒவ்வொருவரையும் நாடுகிறான். ஆயினும் அதை காதுகொடுத்துக் கேட்க யாரும் தயாராக இல்லை. அதனாலேயே அவன் மனபாரம் இன்னும் அதிகரிக்கிறது. இருவித உயிர்ச்சுனைகளை சிறுகதை அடையாளம் காட்டுகிறது. ஒன்று பூமியின் ஆழத்தில் உள்ள உயிர்ச்சுனை. இன்னொன்று மன ஆழத்தில் உள்ள பரிவென்னும் உயிர்ச்சுனை. ஒன்றைக் காட்டும் விதத்தில் இன்னொன்றையும் உணரவைக்கும் மாயம் இச்சிறுகதையில் நிகழ்கிறது.

இன்னொரு அழகான சிறுகதை ‘வாழும் கலை’. வேலையற்ற கணவனையும் வேலை செய்யும் மனைவியையும் கொண்ட ஒரு குடும்பம். ஒரு காலத்தில் வேலை செய்து சம்பாதித்தவன் அவன். இப்போது வேலை இல்லை. அது ஒன்றே, அவன் மனைவிக்கு அவனை வெறுக்கவும் கண்டபடி பேசவும் போதுமான காரணமாக இருக்கிறது. அவனுடைய பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிற அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்துவிடுகிறது. பணமில்லாதவன் பிணம் என்று அவள் சொன்ன சொல் அவனைச் சுடுகிறது. மனம் வெறுத்த சூழலால், அமைதியான இடம் தேடி வெளியே செல்கிறான் அவன். வாழும் கலையைப்பற்றி ஆழமான கருத்துகளைக் கொண்ட உரையைக் கேட்டறியும் ஆவலோடு கருத்தரங்கக்கூடத்தை அவன் நெருங்கிய சமயத்தில் நுழைவுக்கட்டணம் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே அங்கே அனுமதி உண்டு என்கிற உண்மை உணர்த்தப்பட்டதும் அவமான உணர்ச்சியோடு அங்கிருந்தும் வெளியேறுகிறான். ஏற்கனவே மனைவியால் விளைந்த அவமான உணர்ச்சி. பிறகு அந்தக் கருத்தரங்க அமைப்பினரால் விளைந்த அவமான உணர்ச்சி. மனம் கொந்தளிக்க நடந்துசெல்பவனின் கவனத்தை தெருவோரம் நடைபெறும் கழைக்கூத்தாட்டம் கவர்கிறது. நெருங்கிச் சென்று வேடிக்கை பார்க்கிறான். அங்கே ஆடுகிறவர்களும் பசிக்கொடுமையில் மூழ்கியவர்கள். வாழ்வதற்கான வழியைத் தேடுகிறவர்கள். முடிந்ததைச் சம்பாதிக்க முயற்சி செய்பவர்கள். சம்பாதிப்பதை பங்கிட்டுக்கொள்கிறவர்கள். எக்கருத்தரங்கத்திலும் கேட்டறியாத ஞானத்துடன் இயற்கையான ஞானத்துடன் வாழ்கிறார்கள் அவர்கள். யாருடைய சுட்டுதலும் இல்லாமல், இயற்கையிலேயே அவன் அந்த ஞானத்துடன் கரைந்துவிடுகிறான். தன் கையிலிருக்கும் நாணயத்தை, அக்கூத்தாடிகள் விரித்திருந்த சாக்கில் போட்டுவிட்டு, ஏதோ குடோன் பக்கம் நகர்ந்து வேலை தேடும் முயற்சியைத் தொடங்குகிறான். கதையின் இறுதிப்பகுதியில் சற்றே முற்போக்குக்கதையின் சாயல் படிந்திருப்பதுபோல ஒரு தோற்றம் காணப்பட்டாலும், அது உறுத்தலாக இல்லாத அளவுக்கு உள்ளொடுங்கியே இருக்கிறது. வாழும் கலையை கோட்பாடாகச் சொல்லும் ஒரு கோட்டையும் அதை வாழ்ந்து காட்டும் வாழ்க்கையாக இன்னொரு கோட்டையும் இழுத்து வைத்திருப்பதுதான் கதையின் சிறப்பாகும்.

சு. வேணுகோபாலின் சிறுகதையுலகில் விசித்திர மனிதர்களுக்குப் பஞ்சமே இல்லை. பிறந்த குழந்தையை யாரையும் தொடவிடாமலும் குழந்தையின் பசியை அடக்கத் தெரியாமலும் சாகடித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டது என்னும் உண்மையைக்கூட உணரமுடியாமல் இறந்த குழந்தையுடன் திரிந்தலையும் பேதைத்தாய் ஒரு விசித்திரம். தன் இயலாமையை மதுவின் வழியாக மறைத்துக்கொண்டு வேலையற்றவனாகவும் யாருக்கும் பிடிக்காதவனாகவும் திரியும் கணவனை நெருங்கமுடியாதவள் தன்மீது சுமத்தப்பட்ட மலட்டுப்பட்டம் தீர மாமனாரை நெருங்கி நிற்கும் இளம்மருமகள் பாத்திரம் இன்னொரு விசித்திரம். தங்கைகளை ஒவ்வொருவராக கரையேற்றும் கடமையை உயிரென நினைத்து, அதற்காகவே தன் வாழ்நாளையெல்லாம் கழித்துவிட்டு, தன் பாலுணர்வுக்கு வடிகாலாக சகோதரியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணும் சகோதரன் மற்றொரு விசித்திரமான பாத்திரம். அண்ணன் என்று வாய்நிறைய அழைக்கிற பக்கத்துவிட்டு இளம்பெண்ணை, தன் காமப்பசிக்கு உணவாக அழைக்க நினைக்கும் கணவன் பாத்திரமும் விசித்திரம் நிறைந்தது. அவர்கள் விசித்திரமான பாத்திரங்கள் என்பதற்காக அவர்களைப்பற்றி வேணுகோபால் எழுதவில்லை. அத்தகு விசித்திரங்களோடு அவர்கள் வாழ்ந்தே தீரவேண்டியதொரு துரதிருஷ்டவசமான சூழல்நெருக்கடிகளில் எப்படியெல்லாம் சிக்கி அகப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளும்பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஏறத்தாழ இருபதாண்டுகளாக சு.வேணுகோபால் எழுதி வருகிறார். அவருடைய எழுத்துக்கு உரிய கவனம் கிடைக்காத நிலையிலும் அவர் வற்றாத ஆர்வத்துடன் தொடர்ந்து இயங்கிவருவது ஆறுதலாக உள்ளது. எந்தக் கட்டத்திலும் அவர் மனம் எங்கும் கசப்பையோ பெருமூச்சையோ வெளிப்படுத்தியதில்லை. எழுத்தை உயிராக நினைப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். எழுத்தையொட்டி அவர் மனம் உருவாக்கிவைத்திருக்கும் நம்பிக்கை பாராட்டுக்குரியது. மிக அரிய பண்பு இது. வெற்றியோ தோல்வியோ அந்த நம்பிக்கையை ஒருபோதும் அசைத்துவிடமுடியாது.

சு. வேணுகோபாலின் தனிப்பார்வை

எஸ். சுரேஷ்

koonthappanai

என்னிடமுள்ள “கூந்தப்பனை” தொகுப்பில் சு வேணுகோபாலின் நான்கு குறுநாவல்கள் இருக்கின்றன- “கண்ணிகள்”, இதிலுள்ள முதல் குறுநாவல்.

யாருக்கும் தெரியாமல் கிராமத்திலுள்ள தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று போகும் ஒருவரை நாம் கண்ணிகள் கதையின் துவக்கத்தில் காண்கிறோம்- அவரை யாரோ நன்றாக அடித்திருக்கிறார்கள், அந்த அவமானம் யாருக்கும் தெரியக்கூடாது என்று அவர் நினைக்கிறார். இந்த இடத்தில் துவங்கி, தோல்விகளும் கடன்களும் விழுங்கும் அவரது பின்கதையை விவரிக்கத் துவங்குகிறார் வேணுகோபால். தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் போராடும் அவர் இறுதியில், கந்துவட்டிக்காரர் ஒருவரிடம் சிக்கிக் கொள்கிறார். அவரது இரும்புப்பிடிகளில் இருந்து தப்பும் முயற்சியில்தான் அவர் கந்துவட்டிக்காரரால் தாக்கப்படுகிறார். இப்படி அடி வாங்கியதால் தன் கௌரவம் கெட்டுவிட்டது என்று குமுறலில் அவர் முழுமையாக நிலைகுலைந்து போகிறார். இப்போது அவரது மானத்தைக் காப்பாற்றி உதவும் கரம் ஒன்று நீள்கிறது. மிகுந்த நம்பிக்கையுடன் அதைப் பற்றிக்கொள்கிறார் அவர். ஆனால் நெருங்கிச் செல்லும்போதுதான் அவருக்கு தான் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய விலை என்னவென்று தெரிகிறது. குறுநாவல் என்று சொல்வதைவிட இதைச் சிறுகதை என்று சொல்லலாம், ஆனால் இந்தக் கதை நம் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்த நாவல் “வேதாளம் ஒளிந்திருக்கும்”. இது நுண்மைகள் நிறைந்த, எண்ணவோட்டத்தின் வழி சொல்லப்படும் கதை. இதில் பெரியவராக மதிக்கப்படும் ஒருவர், ஒன்றுக்கும் உதவாதவன் ஒருவனின் சார்பாக அவனைப் பிரிந்து தன் சகோதரன் வீட்டில் வசிக்கும் அவனது மனைவியிடம் பேச போகிறார். எந்த அளவுக்கு அந்த உதவாக்கரை பற்றி பேசுகிறதோ, அதே அளவுக்கு இந்தப் பெரியவர் குறித்து பேசுகிறது குறுநாவல். உதவாக்கரையின் மனைவியைச் சந்திக்கச் செல்லும் பஸ் பிரயாணமே நாவலின் மையமாக இருக்கிறது. சிற்றூர் பேருந்துப் பயணமும் அதனுள் நிகழும் அனுபவங்களும் நாவலில் விவரிக்கப்படுகின்றன. இந்தப் பயணமும் இதன் முடிவில் உதவாக்கரையின் மனைவியைச் சந்திப்பதும், பெரியவருக்குத் தன் வாழ்வைக் குறித்த புரிதலையும் அளிக்கின்றன. முடிவு மட்டும் சற்றே படிப்பினை புகட்டும் தொனியில் அமைந்திருக்கிறது.

“அபாயச் சங்கு” என்ற அடுத்த குறுநாவல், சுரேந்திரன் என்ற இளைஞனின் வாழ்வின் ஒரு பகுதியை விவரிக்கிறது. அவன் வாழ்வின் கொந்தளிப்பான கணங்களை அடுத்தடுத்து நாம் கடந்து செல்கிறோம்: நன்னம்பிக்கைக்கு இடம் அளிக்கும் அவன் வாழ்வின் நற்போதுகளும், அவனது கட்டுப்பாட்டை இழந்து வாழ்க்கை தறிகெட்டுச் செல்லும் வீழ்ச்சிகளும் அவற்றுக்குரிய உணர்வுகளோடு சித்தரிக்கப்படுகின்றன. அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் அவனைவிட வயது முதிர்ந்த ஒரு பெண்ணுடன் அவனுக்கு உறவு ஏற்படுகிறது. முதலில் அதை அவன் வெற்றியாகப் பார்க்கிறான், ஆனால் அந்த உறவு தன் வாழ்வைச் சிதைத்து தன்னை வீழ்த்தியிருப்பதை மெல்ல மெல்லவே உணர்கிறான். தன்னை இருண்மையில் ஆழ்த்தி தன் வாழ்வை நசிக்கும் நச்சுணர்வுகளிலிருந்து விடுபட முடியாத அவன், இறுதியில் அதிர்ச்சி முடிவெடுக்கிறான்.

தொகுப்பிலுள்ள கடைசி குறுநாவல்தான் புத்தகத்தின் பெயராகவும் அமைந்திருக்கிறது, “கூந்தப்பனை”. ஆண்மையில்லாத ஒருவன் பற்றிய சுவாரசியமான இந்தக் கதையில் அவன் தான் விரும்பிய பெண்ணை மணமுடித்த பின்னரே அவளுக்கு உடலுறவில் நிறைவு அளிக்க முடியாதவனாக தானிருப்பதையும், அது அவளுக்கு அளிக்கும் ஏமாற்றத்தையும் உணர்கிறான். அவளது சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவன், அவளது தயக்கங்களை மீறி தன் நண்பனுக்கு அவளை ஏறத்தாழ கட்டாய திருமணம் செய்து வைக்கிறான். இது அவன் வாழ்வை மாற்றிவிடுகிறது. இப்போது அவன் தனது ஆண்மையின்மையை ஏளனம் செய்யும் சமூகத்தை எதிர்கொண்டாக வேண்டும். இறுதியில் அவன் வாழ்க்கையில், கொடுத்தல் என்பது மனிதர்களை வாழ வைத்தல் மட்டுமல்ல என்று உணர்கிறான் இதனால் அவனது உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கி அவன் அமைதி காணக்கூடும்.

நீங்கள் இந்தக் கதைகளை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவதால்தான் கதைச்சுருக்கங்களை மிக எளிய வடிவில் தந்திருக்கிறேன். இந்தக் குறுநாவல்களில் சொல்லப்படும் கதை என்ன என்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு அவை எவ்வாறு சொல்லப்படுகின்றன என்பதும் முக்கியம். கதை என்ன என்பது அல்ல, கதை எப்படிச் சொல்லப்படுகிறது என்பதே அதை சு வேணுகோபால் கதையாக்குகிறது.

வேணுகோபாலை ஒரு ஸ்டைலிஸ்ட் என்று சொல்லலாம், அந்த அளவுக்கு சொற்தேர்வில் ஒரு அழகு தெரிகிறது. அவரது வாக்கியங்கள், கதையின் அப்போதைய உணர்வுகளை பொருத்தமான வகையில் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கதைகள் பலவற்றிலும் அவர் முடிவுக்கு அருகேதான் கதைசொல்லத் துவங்குகிறார், அதன்பின் மெல்ல மெல்ல பின்கதை விரிகிறது. இங்கு நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மர்மக் கொலை பற்றிய குற்றப்புனைவு எழுதுபவரின் உத்தி போன்றதல்ல இது. பெரும்பாலான குற்றப்புனைவுகள் துவக்கத்திலேயே உச்சகட்டத்துக்கு உரிய பரபரப்புடன் துவங்கி நம்மை உள்ளிழுத்துக் கொள்கின்றன. வேணுகோபால் முடிவுக்கு அருகில் துவங்கினாலும் அதில் பரபரப்பாக எதுவும் இல்லை. என்ன நடந்தது என்று கேட்கச் செய்கிறது, அவ்வளவுதான். அதன்பின் மெல்ல மெல்ல நாயகனின் உணர்வுகளுக்குப் பரிவான வகையில் நாமும் வாசிக்கத் துவங்குகிறோம். இத்தகைய கதை சொல்லும் முறையில் வேணுகோபாலின் பலம், பலவீனம் இரண்டுமே வெளிப்படுகின்றன. முதலில் நினைத்துப் பார்ப்பதாகச் செல்லும் கதை, பின்னர் காலத்தில் முன்னும் பின்னும் பயணித்து ஏதோ ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது- இந்த முடிவு சில சமயம் திறந்த தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

நிறைய உழைப்பும் கவனமும் செலவிட்டு ஒவ்வொரு கதையையும் வேணுகோபால் செய்திருக்கிறார், ஆனால் தெளிவான நடையும், வேகமான உணர்வுகளும் கதையை நகர்த்திச் செல்வதால் இதன் பின்னுள்ள சிந்தனை வெளியே தெரிவதில்லை, இயல்பாக, மனதுக்குத் தோன்றியதையெல்லாம் எழுதிய உணர்வு கிடைக்கிறது. கதைகளின் கவனமான கட்டமைப்பில் அவரால் மிக இயல்பான வடிவில் கதை சொல்ல முடிகிறது. நிகழ்வுகளும் அவை குறித்து உள்நோக்கிக் குவியும் எண்ணவோட்டங்களும் கச்சிதமாய் கதைசொல்லலில் கைகூடுகின்றன- வேறொரு எழுத்தாளர், இதே நிகழ்வுகளைக் கொண்டு பரபரப்பான ஒரு கதையாகவோ, அல்லது இதே உணர்வுகளையும் அவை சார்ந்த எண்ணங்களையும் கொண்டு அலுப்பூட்டும் அளவு தொய்வுள்ள புத்திப்பூர்வ கதையோ எழுதியிருக்கக்கூடும், ஆனால் வேணுகோபால் எழுத்தில் சமநிலை குலையாத, நிகழ்வுகளும் உணர்வுகளும் ஒருங்கிணைந்த ஒரு நல்ல குறுநாவலைப் படித்த உணர்வு நமக்குக் கிடைக்கிறது..

சுரேந்திரனின் கனவு போன்ற மனநிலையை விவரிக்கையிலும் அவன் தன்னை வாதிக்கும் நினைவுகளை எதிர்கொள்கையிலும் வேணுகோபாலின் மொழி நுட்பமான வகையில் வேறொரு தொனியில் ஒலிக்கிறது. சுரேந்திரனும் ரத்னம்மாளும் கூடும்போது வேணுகோபால் அளிக்கும் கவித்துவ விவரணைகள் எனக்குச் சற்றே செயற்கையானவையாக ஒலித்தன. பொதுவாக நேரடியாகக் கதை சொல்லும் வேணுகோபால் இது போன்ற இடங்களில் சற்றே வேறுபட்ட உயர்கவித்துவ மொழிக்கு மாறுகிறார். இதை ரசிக்க முடியும் என்றாலும் பொதுவான கதைப்போக்கில் இது போன்ற இடங்கள் தனித்து தம்மை வெளிப்படுத்திக் கொள்வது, கதையின் சீர்மையைக் குலைப்பதாக நினைக்கிறேன்.

வேணுகோபாலின் இந்தக் குறுநாவல்களில் காணப்படும் பாத்திரங்கள் அனைவரும் சாதாரணமானவர்கள். ஏன், இன்னும் ஒருபடி மேலே போய், இவர்கள் எல்லாம் எந்த ஒரு தனித்திறமையும் இல்லாதவர்கள் என்று சொல்லலாம். தம் குறைபட்ட திறமைகளைக் கொண்டு காலம்தள்ளப் பார்ப்பவர்கள். இவர்கள் அனைவரும் தத்தம் சமூகப் பின்புலத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்- இவர்களுக்கு என்று எந்த ஒரு தனிப்பட்ட தேடலோ இருத்தல் குறித்த சிக்கல்களோ இருப்பதாகத் தெரியவில்லை என்ற பொருளில் இதைச் சொல்கிறேன். இவர்கள் தம் தனி ஆளுமையின் சுதந்திரத்தைப் பற்றிக் கொள்வதுமில்லை, அதற்குரிய இருப்பியல் சிக்கல்களை எதிர்கொள்வதுமில்லை. இவர்கள் இருக்கும் சூழலில் எதிர்ப்படும் தடைகளில் முட்டிக் கொண்டு நிற்பவர்கள். அதன் கேள்விகளும் அவற்றுக்கு விடை காண இயலாத போதாமையுமே இக்கதைகளின் முக்கிய சிக்கல்களாகின்றன.

இந்தக் குறுநாவல்களில் உள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும் சமூகச் சுமை அழுத்துகிறது, அதிலிருந்து விடுபடும் வழி தெரியாத இவர்கள் தம்மாலியன்ற சமரசம் செய்து கொள்கின்றனர். எக்காலத்துக்கும் உரிய உண்மை என்பது போன்ற தேடல்கள் எதுவும் இவர்களுக்கு இல்லை. ரத்தமும் சதையுமான இவர்களது மானுடம் உறுதியானது, உடல் மற்றும் உறவுகளையோ அவை சார்ந்த உணர்வுகளையோ கடந்து செல்ல வேண்டும் என்ற ஆன்மீகத்துக்குரிய விடுதலை ஏக்கமோ, தம்மைக் காட்டிலும் உயர்ந்த ஒன்றில் தம்மைக் கரைத்துக் கொள்ளும் லட்சியவாதமோ இவர்களின் தேடலை வெளிச்சமிடுவதில்லை. நம்மைப் போன்ற சாதாரணர்களான இவர்களும் கௌரவமாக வாழ விரும்புகின்றனர், தம் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். முதல் கதையில வரும் விவசாயி ரங்கராஜன் இதற்கு நல்லதொரு உதாரணம். இதிலுள்ள அனைத்து கதைகளிலும் இப்படிதான். உதவாக்கரை விஸ்வநாதனின் மனைவிக்கு அவன் குடித்துவிட்டு வந்து தன்னை அடிப்பது கௌரவக் குறைச்சலாக இருக்கிறது, அதை அவள் இழிவாகக் கருதுகிறாள். கூந்தப்பனை சதீஷ் தன் ஆண்மையின்மை குறித்த செய்தி வெளியில் பரவத் துவங்கும்போது தனக்குரிய மரியாதை குறைவதாக உணர்கிறான். சமூக வெளியில் தலை நிமிர்த்தி நடக்கவே அனைவரும் விரும்புகிறார்கள், ஆனால் வாழ்வின் சுமை அவர்கள் தோள் விட்டு இறங்காத சிலுவையாய் அவர்களை அழுத்துகிறது.

இந்தக் குறுநாவல்களின் களம் சிறுநகரங்கள். அவற்றின் தனித்தன்மையை மிக அருமையாகக் கைப்பற்றி விவரித்திருக்கிறார் வேணுகோபால். ஒவ்வொரு விவரணையிலும் எழுத்தாளரின் வாழ்வனுபவம் புலப்படுகிறது என்பதால் இவர் விவரிக்கும் புறச்சித்திரங்கள் தம்மளவிலேயே நம்பகத்தன்மை கொண்டவையாய் இருக்கின்றன. இவை சிற்றூர்களாய் இருந்து, நகரமயமாக்கத்தின் விசை காரணமாக சிறுநகரங்களாக வளர்ந்து வருபவை. விவசாயம் செய்ய ஆள் பற்றாக்குறை, விவசாயிகளின் கடன்சுமை, வேலையின்மை, மதமாற்றம் என்று சிறுநகரங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இதிலுள்ள குறுநாவல்களில் ஆவணப்படுத்தப்படுகின்றன. இன்னும் சிற்றூர்களுக்குரிய ஒழுக்க நியாயங்களும் பழக்க வழக்கங்களும் மாறவில்லை, அவை இவர்களை இயக்கம் உந்துவிசையாய்ச் செயல்படுவதும் மாறவில்லை. தன் சகோதரனுக்கும் சகோதரிக்கும் தான் ஒரு சுமையாய் இருக்கக்கூடாது என்று விசுவநாதனின் மனைவி திரும்பவே செய்கிறாள்- அவள் எதிர்கொள்ளும் சூழலில் அவளது சமரசம் தவிர்க்கப்பட இயலாதது. உயர்கல்வி படித்த சுரேந்திரனுக்கு குமாஸ்தா வேலை கிடைக்கிறது, பின்னர் அதை இழந்து வேறு வேலையின்றி தவிக்கிறான், நகரங்கள் அளிக்கும் வாய்ப்புகள் சிறுநகரங்களில் இல்லை.- குறிப்பாக, வேணுகோபால் இக்கதையை எழுதிய காலங்களில். சிறுநகரச் சித்தரிப்பு மிகச் சிறப்பாக வெளிப்படுவது பெரியவரும் விசுவநாதனும் மேற்கொள்ளும் பஸ் பிரயாணத்தில்தான். உலர்ந்த நகைச்சுவை விரவியுள்ள இந்தப் பயணமும் பெரியவரும் விசுவநாதனும் பேசிக் கொள்வதும் ஒரு சிறுநகரின் ஆன்மாவை எவ்வளவு அழகாகவும் கச்சிதமாகவும் உணர்த்த முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுக்காட்டுகளாய் அமைகின்றன.

கூர்மையான அவதானிப்பு, தனக்கென்றொரு தனிப்பாணியில் அமைந்த நடை, விலகல் தொனி கதைசொல்லல், பாத்திரங்களின் சராசரித்தன்மை- இவை வேணுகோபாலின் எழுத்தை அசோகமித்திரனுடன் ஒப்பிடச் செய்கின்றன. வட்டார வழக்கில் எழுதுகிறார் என்ற மேம்போக்கான வேறுபாடு தவிர ஆழமான வேறொரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. அசோகமித்திரன் எப்போதும் ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். அவர் நிகழ்வுகளைப் பதிவு செய்வதோடு சரி, அது குறித்த தன் பார்வையை வெளிப்படுத்துவது மிக அரிது. ஆனால் வேணுகோபால் சமூக உறவுகளின் சித்தரிப்பில் ஒரு லட்சியவாதியாய் தெரிகிறார். நான் சொல்வது மிகவும் பொதுமைப்படுத்துவதாக இருக்கலாம்- இதிலுள்ள நான்கு குறுநாவல்களில் இரண்டு துயரில் முடிகின்றன. ஆனால் இந்த நாவல்கள் முழுவதிம் வேணுகோபால் விலகிய தொனியில் விவரணைகளை அளித்தாலும்கூட, அவர் இந்தச் சாதாரணர்கள் தரப்பில் பேசுவதை உணர முடிகிறது. இவர்களுடைய போராட்டங்களை வேணுகோபால் மிக நன்றாக அறிந்திருக்கிறார், புரிந்துணர்வோடு அவற்றைப் பதிவு செய்கிறார்.

எவ்வளவு சாதாரணமானவனாக இருந்தாலும் சரி, அவன் தன் குறைகளை ஏற்றுக்கொள்வதன்வழி அவற்றைக் கடந்து, தான் வாழும் சமூகத்தில் ஒரு சிறு தாக்தையாவது ஏறபடுத்த முடியும் என்று வேணுகோபால் நம்புவதாகத் தோன்றுகிறது. இதனால்தான் கூந்தப்பனை அவ்வளவு அழகிய கதையாகிறது, வேதாளம் காத்திருக்கும் என்ற குறுநாவலின் செய்தி சற்றே துருத்திக் கொண்டு நிற்கிறது. எந்த ஒரு எழுத்தாளனும் தன் கதைகளைக் கொண்டு அவற்றைவிடப் பெரிய செய்தி ஒன்றைச் சொல்ல முயற்சி செய்வதில் இந்த ஆபத்து இருக்கவே செய்கிறது. வேணுகோபாலின் பாத்திரங்கள் அரசியல் சார்பற்றவர்கள், அவரது கதைகளில் அரசியல் இல்லை, ஆனால் அரசியல்படுத்த விரும்புபவர்களுக்கு முதல் கதையில் விஷயம் கிடைக்கலாம். ஆனால் வேணுகோபாலுக்கு ஓர் அரசியல் சாயம் பூச வேண்டியது அவசியம் என்று நீங்கள் நினைத்தால், முதலும் முடிவுமாய் மானுடத்தை நேசிப்பவர் அவர் என்று சொல்வதே சரியாக இருக்கும்- வேறெதையும்விட உயிர் வேட்கையே அவருக்கு முக்கியமாக இருக்கிறது, அவரது கதைகளில் அது உறவுகளின் ஊடாட்டத்தில் வெளிப்படுகிறது.

இத்தனை எழுதுவதும் அவரது நான்கே நாக்கு குறுநாவல்களை படித்துவிட்டுதான். வேறு படைப்புகளைப் படிக்கும்போது இந்த என் கருத்து மாறலாம். ஆனால் அப்போதும்கூட உறவுகளைப் பேசுவதில் அவரது லட்சியவாதமும் சமூகத்தைப் பேசுவதில் அவரது மானுட நேசமும் எப்போதும் மாறாது என்று தோன்றுகிறது. சாதாரணர்கள் தம் குறைகளால் குறைபட்டவர்களாய் நில்லாமல், அவற்றைக் கடந்து தம் சமூகத்துக்கு தம்மாலியன்ற ஒரு சிறு பங்களிப்பு செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் வேணுகோபாலின் லட்சியவாதமும் மானுடநேயமும் இணைகின்றன என்று நினைக்கிறேன்.

இருத்தலியன்

பேயோன்

குறுகிய தெருவில் அகன்ற மனிதன்
மெல்ல வழிமறித்துச் செல்கிறான்
‘ஹலோ!’ எனக் கோபித்து உசுப்பத்
தடுக்கிறதென் உள்ளார்ந்த நாகரிகம்
‘கொஞ்சம் வழி விடு’ எனச் சொல்ல
விடுவதில்லை அறிவுஜீவிக் கையாலாகாத்தனம்
‘அப்படி என்ன அவசரம்?’
என்று அவன் கேட்டுவிட்டால்
என்ன பதில் சொல்லப்போகிறேன்?
யாருடைய அனர்த்தம் பெரிது?
(என எப்படி நிரூபிப்பானேன்?)
பிறகு நான் உணர்கிறேன்:
இதுதான் என் வாழ்க்கை
எது நடக்க வேண்டுமோ
அதுதான் நடந்துகொண்டிருக்கிறது
அவன் உருட்டும் பாறையைவிட
முக்கியமல்ல நானுருட்டுவது.
குறுகிய தெருவின் அகன்ற மனிதனிடம்
மனதிற்குள் சொல்கிறேன்:
நண்பா, நம் பாறைகளின் அளவு
ஒன்றே எனினும் உன்
முக்கியத்துவங்களுக்கு முன்
நான் சுருங்கிப்போகிறேன், வாழ்த்துகள்.

நிறைவின்மையின் வழியே…

ஸ்ரீதர் நாராயணன்

su_venugopalan

தூர்தர்ஷனில் ஒரு காலத்தில் உலகப்புகழ்பெற்ற சிறுகதைகளை தொலைக்காட்சித் தொடராக செய்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். தாகூர், சகி (H H Munroe), செக்காவ், ஓ ஹென்றி, சுந்தர ராமசாமி, முன்ஷி பிரேம்சந்த் என்று பலரின் கதைகளை நேரடியாக திரையில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது. அதிலொரு கதையில் (பெயர் நினைவில்லை) ஓர் ஏழைச்சிறுவன் பிரபல எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் நிறைந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு செல்ல உதவுவான். ‘இந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது’ என்று அந்தச் சிறுவன் கேட்க, அவர் ‘உன்னைப் போன்றவர்களைப் பற்றி நான் எழுதிய புத்தகங்கள்’ என்பார். சிறிய தயக்கத்திற்குப் பின்னர் அவன் ‘அந்தப் புத்தகங்களினால் எங்களுக்கு என்ன பயன்’ என்றுக் கேட்பான். அப்போதுதான் அவர் தான் யாருக்காக எழுதினோமோ அவர்களிடமிருந்து மிகவும் தள்ளிப் பிரிந்து வந்துவிட்டோம் என்பதை உணர்வார். அந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் அவருடைய எழுத்திற்கான கச்சாப்பொருளாக மட்டுமே இருந்திருக்கிறது. எழுதுபவன், வாசகன் என்ற இரு நிலைகளைக் கடந்து, எழுத்தின் பேசுபொருளான சமூகத்திற்கான பயன் என்று ஒரு நிலை உருவாகும்போதுதான் அந்த எழுத்து உயர்நிலையை அடைகிறது. அப்படியானதொன்றுதான் சு வேணுகோபாலின் படைப்புலகம்.

சு வேணுகோபாலின் படைப்புலகம் எனக்கு அறிமுகமானது ‘களவு போகும் புரவிகள்’ சிறுகதை வழியாகத்தான். பிரபல எழுத்தாளர்கள் பலரின் ‘முக்கியமான படைப்புகள்’ பட்டியலில் தவறாமல் இடம்பெற்ற சிறுகதை அதுவென்பதால், தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் உண்டானது. கன்னட தேவாங்க சமூகத்தினரின் வழிபாட்டுத்தலமான சௌடம்மா கோவிலின் புரவி திருவிழாவை பின்புலமாக கொண்ட மாயயதார்த்த கதை. கச்சிதமான வடிவமைப்புடன், புதிர்த்தன்மையோடு சொல்லப்பட்ட கதை. எதிரிநாட்டு ராஜதந்திரி கணக்கில் மாயவித்தை செய்து புரவிகளை களவாடிப் போகும் தொன்ம வரலாற்றை கூத்துக்கலையாக, தற்கால திருவிழா கொண்டாட்டத்தோடு கூடிக் களிக்கிறார்கள் ஊர் மக்கள்.

கதிரைய்யனின் குதிரைகள் களவுபோனதால், ஊருணியில் குளித்துவிட்டு வந்த சௌடம்மா, காலத்திற்கும் இடுப்பிலிருக்கும் தன் உடைவாளோடு (ஜமுதாடு) அப்படியே தெய்வமாகிப் போகிறாள். பாரம்பரியம் என்றால் அப்படியேத்தான் நடக்க வேண்டும் என்று நாடகீய சடங்குகளின் ஒருபகுதியாக ‘பொட்டு கட்டி வம்சாவழி ஆள் வந்தால்தான்’ குடத்தில் குத்தியிருக்கும் ஜமுதாடு நிற்கும் என்று அணைக்கரைப்பட்டிவரை போய் ஆளைக் கூட்டி வரச்செய்கிறார்கள். காலத்திற்கும் தன் பிறப்பால் ஏற்றப்பட்ட கறையை அழிக்க முடியாத வேதனையோடு அவர் வர, ஊராரின் மனநிறைவிற்கேற்ப சாங்கியங்கள் நிகழ்த்தப்படுகின்றன. மாயயதார்த்த புனைவில் சமகால சமுதாய பிரக்ஞையை விட்டுவிடாத இடம்தான் எழுத்தாளனின் ஆன்மாவை நமக்கு புரியவைக்கிறது. பாரம்பரிய கொண்டாட்டங்களை ஆவணப்படுத்துவதாக மட்டுமல்லாமல் அதில் இருக்கும் அவலத்தை சிறு கோடிழுத்துக் காட்டுகிறார். பள்ளத்தை நோக்கிப் பாயும் நதி போல, சமூகத்தின் நிறைவின்மையை, அதன் இருள்பகுதிகளை தொட்டுக் காட்டும் எழுத்து சு வேணுகோபாலுடையது.

மூன்று நாவல்களும், நூற்றுக்கு பக்கமான சிறுகதைகளும் எழுதியிருக்கும் சு வேணுகோபாலின் படைப்பூக்கத்திற்கும் அந்த நிறைவின்மைதான் அடித்தளமாக இருக்கிறது. இன்றைய தமிழ் புனைவிலக்கிய சூழலில் அதிகம் கைக்கொள்ளப்படாத நெடுங்கதைகள் எனப்படும் குறுநாவல்களும் நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய பெரும்பாலான படைப்புகள் நேரடியாக தொகுப்புகளுக்கு என எழுதப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது பெருவணிக பத்திரிகை / ஊடக பாதைகளின் அரசியலிலிருந்து ஒதுங்கி விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை முன்வைத்து எழுதுகிறார் எனத் தெரிகிறது. இதற்கு தோதாக தமிழினி பதிப்பகமும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருவது முக்கியத்துவம் வாய்ந்தது.

‘ஒரே அமர்வில் ஒரு நெடுங்கதையை எழுதி முடித்துவிடுவேன். ‘பால்கனிகள்’ குறுநாவல் இரண்டு இரவு ஒரு பகல் காலத்தில் எழுதப்பட்டது. மனதில் இருப்பதை எழுதி முடிக்காவிட்டால் என்னால் உறக்கம் கொள்ள முடியாது’ என்று ஹிந்து நாளிதழிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார். பெரும் கதைப்பின்னலுடன், வரலாற்று பின்புலத்தில், ஒட்டுமொத்த தரிசனம் (vision) அளிக்கும் நாவல்களை விட, ஒரு முரணை முன்வைத்து நறுக்குத் தெறித்தார்ப்போன்ற வடிவத்தில் எழுதப்படும் சிறுகதைகளை விட, சு வேணுகோபாலின் படைப்பூக்கம் திறனுடன் வெளிப்படுவது நெடுங்கதை வடிவத்தில்தான் எனச் சொல்லலாம்.

தோற்றுப்போன விளையாட்டு வீரனான வடிவேல், சுற்றமும் உறவினரும் வெறுத்து, சமூகத்தால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தன்பால் ஈர்ப்புக் கொண்ட கிஷ்டன், ஆதிக்க சமூகத்தால் ஒடுக்கப்பட்டும் நாவிதன் பழனி, நல்லாசிரியர் விருது பெற்றாலும் தன்னுடைய கீழ்சாதி முத்திரையை தொலைக்க முடியாத பரமன் என்னும் ராமமூர்த்தி என்று அவருடைய கதை மாந்தர்கள் எல்லோரும் ஏதோ ஒரு நிறைவின்மையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஒப்பனையின்மை, பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மை, செறிவான பின்புல சம்பவங்கள், தேய்வழக்கு அல்லாத புதிய கோணங்கள், தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் என்று தனித்துவ குணங்களோடு அவை காணப்படுகின்றன.

கதைப் போக்கில் சொல்லப்படும் சம்பவங்கள் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக அழுத்தம் கூடிப் போய் தொனி மாறிவிடக்கூடாது என்பதில் கட்டுக்கோப்பாக செயல்பட்டிருக்கிறார் கதையாசிரியர். அதற்காக சொல்லப்பட வேண்டியது சொல்லப்படாமலும் போய்விடக் கூடாது. கிஷ்டனின் கதை முழுவதும் திவ்யாவின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவனுடைய ஆண் சொந்தங்களான அண்ணனும், மச்சான்மார்களும் அவனிடமிருந்து விலகி நிற்பதையே முயன்று செய்கிறார்கள். ஊர்த் திருவிழாவில் தன்னை முழுவதுமாக பெண்ணென்று வெளிப்படுத்திக் கொண்டு வந்து நிற்பவனை அடித்துத் துரத்துவதில் குறியாக இருக்கும்போது அவர்களுடைய பழைய அநியாயங்களை போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிறான். ‘நல்லா இருந்த காலத்தில் என்னை நாசமாக்கினவன் நீதானடா’ என்று தன் மாமாவைப் பார்த்து உக்கிரத்தோடு சொல்கிறான். இந்த ஒப்பனையற்ற நடை வழியேத்தான் சு வேணுகோபாலால் ‘உள்ளிருந்து உடற்றும் பசி’ போன்ற புனைவுகளை எழுதிவிட இயலுகிறது.

‘என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் நாளும் சொல்லும் கதைகள் வழியேத்தான் என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது’ என்று தன்னுடைய கிராமத்து வாழ்க்கையைப் பற்றி இந்து நாளிதழுக்கான பேட்டியில் சொல்கிறார். திசையெல்லாம் நெருஞ்சி நெடுங்கதையில் குழந்தை மேல் மாரியாத்தாள் வந்துவிட்டதால் (அம்மை போட்டிருப்பதால்) ஊர்க்காரர்கள் கருணைக் காட்டினாலும், ‘என்னதான் இருந்தாலும் அம்பட்டையன் சம்சாரிய எட்டி உதைக்கலாமா’ என்று சடைத்துக் கொண்டு போட்ட தீர்ப்பை திருப்பி எடுக்க மாட்டார்கள் என்பது பழநி வழியாக மெள்ள மெள்ள படிக்கிறவர்களுக்கு கடத்திக் கொண்டே வருகிறார். இறுதியில் தீவன படைப்பை நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போகும்போது பழநியைச் சுற்றி அத்தனை வாசல்களையும் அடைத்து வைத்திருக்கும் ஆதிக்க சமூகத்தின் மேல் நமக்கும் நம்பிக்கை அற்றுப் போய்விடுகிறது. எவ்வித ரொமாண்டிசசமும் இல்லாத ஒப்பனையற்ற கதை சொல்லும் முறை.

ஆனால் பாத்திரங்களுக்கான படைப்பு நேர்மையை கைவிட்டுவிடுவதில்லை. ஊர் ஒதுக்கி வைக்கும் முன்னர் பழநி கைத்தோரத்துப் பையனாக ஓடிஓடி ஊராருக்கு உதவி செய்திருக்கிறான். அக்காலத்தில் ஆண்டியப்பப் பிள்ளை கிணத்துமேட்டிலிருந்து பூசணி பறித்துத் தந்திருக்கிறார். ராமுத்தேவர் சுரைக்காய் பறித்துக் கொடுத்திருக்கிறார். வீடு வீடாகப் போய் அரிசி, பருப்பு, புளி, நவதானியங்கள் வாங்கி வந்திருக்கிறான். ஆனால் இப்போது அம்மை போட்ட பையனுக்காக ஒரு வாழையிலையை அறுத்துக் கொண்டு போக முடியாதபடி திமிரெடுத்த அம்பட்டப்பயலாக ஆகிவிட்டோமே என்று பழநிக்கு மனது துவண்டு போகிறது. ஊர்க்காரர்கள் அத்தனை பேருக்கும் வெட்டி வாரிப்போட்ட மயிர்குப்பை நிறைந்த அம்பட்டங்குழிப் போலத்தான் அவன் வாழ்க்கையும் ஆகிவிட்டிருந்தது.

‘நமக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் இருந்தும் துரத்தி விட்டுட்டாங்கன்னு மனங்கோணாதப்பா’ என்று பழநிக்கு ஆறுதல் சொல்லும் சம்சாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் நிலையழிந்த மனிதனின் மனம்தான் கொடூரமான ஆயுதம் என்பது போல மல்லையாவின் வன்மம் பழநி திரும்பும் இடமெல்லாம் நெருஞ்சியாக நிறைந்திருக்கிறது. வேறுவழியில்லாமல் அந்த நெருஞ்சிக் காட்டைக் கொளுத்திவிட்டு கிளம்புகிறான் பழநி.

அதே போல ‘இழைகளின்’ பரமன் என்னும் ராமமூர்த்திக்கு, நல்லாசிரியர் விருது கிடைத்தப் பிறகும் கைகொடுத்து வாழ்த்து சொல்லாத சக ஆசிரியர்களின் ‘ஒதுக்குதல்’ நெருஞ்சியாக உறுத்துகிறது. மற்றோர் இழையில் ஜெயசுதாவிற்கு முன்னால் எடுப்பான உடை அணிந்து போக அம்மாவின் கருத்தங்கன்னியை (அம்மா வளர்த்து வரும் ஆட்டின் பெயர்) குட்டிகளோடு விற்றுப்போட்டுவிட அவரே முனைப்பாக இருந்திருக்கிறார். ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டு விடாமல் சுற்றி வருகிறது ஒடுக்கப்பட்டவர்களின் இழைகள்.

நிறைவின்மையால் எப்போதும் துரத்தப்பட்டும் பாத்திரங்களாக இருந்தாலும் ஒவ்வொருவரைச் சுற்றியும் தனி உலகே இயங்கும் அளவுக்கு செறிவான வார்ப்புகளாக உருவாக்கியிருக்கிறார். கர்ப்பத்திற்கான கைமருந்து தயார் செய்யும் பழநியின் ஆத்தாவிற்கு அப்படியொரு கைராசி. பத்து ரூபாய் மருந்தில் கனகத்தின் வயிறு திறந்து இப்போது பேத்தியும் எடுத்துவிட்டாள். ஆனாலும் பழநிக்கு எதிரான ஊர்க் கட்டுப்பாட்டை மீற அவர்களுக்கு அப்படியொரு தயக்கம். மகாலிங்கத்தின் புழுவெட்டிற்கு வைத்தியம், அவர் பையன் மனோகரனுக்கு வியர்த்து ஊற்றும் நோய்க்கான சிகிச்சை, காளியப்பனின் இளம்பிள்ளை வாதம் பாதித்த பையனுக்கான சர்வாங்க சவரம் என்று அந்த ஊரைச் சுற்றிலும் பழநிக்கு அத்தனை இழைகள் படர்ந்திருக்கின்றன. வெந்த முருங்கைக்காயிலிருந்து கூழைச் சுரண்டி, கத்திரிக்காயோடு சேர்த்து கிஷ்டன் தக்காளி சட்னி, வெந்தயக் குழம்பும் ஊத்தப்பமுமாக அதகளப்படுத்துவதை விவரிக்கிறார். பள்ளி ஆசிரியர்களுக்கு டீப் போட்டு அனுப்பும் கடைக்காரர்கள் கூட அவர்களுடைய சாதியை உய்த்தறிந்து அதற்கேற்ப கிளாஸ்களையும் போணிகளையும் குறித்து வைத்து அனுப்பும் நுண்மையை சொல்கிறார்.

மற்றோர் இழையில் தீண்டத்தகாததாக ஒதுக்கிவைக்கப்படும் தன் உடல் ஒரு பெண்ணால் காமுற்று பயனடையும் போது பரமனுக்கு தன் இழிவின் மேல் மாளாத கோபம் எழுகிறது. தன்னுடைய சுயமரியாதைத் தூண்டுதலால் அவர் பேராற்றல் கொண்டு பாறையை பிளந்து வளரும் பெருமரம் போல வளர்கிறார். ஆனால், அவருக்குப் பின்னாலும் அந்தப் பாறை நிலம் அப்படியே பாறையாகவேத்தான் இருக்கிறது. அது போலவேத்தான் பழநியின் வாழ்வாசையும் அவனுடைய மானத்தை தற்காத்துக் கொள்ளுவதிலேயே பெருமளவு செலவழிகிறது. ஊராரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்ற நிலையில், குமரனும் மல்லையாவும் குருவம்மாளைப் பற்றி தூற்றுகின்றனர். ‘நீ எதுக்கு கோவப்படுற, நான் அப்படிப்பட்டவளா’ என்று பழநியை சமாதானப்படுத்தும் குருவம்மாளை மீண்டும் மீண்டும் தொந்தரவுகள் துரத்துகின்றன. எவ்வளவு தூரம் துரத்தினாலும், அந்த ஊர் தரும் பாதுகாப்பை எப்படியும் இருத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் குருவம்மாள் ஆசைப்படுகிறாள். அதுவே பழநியின் ஆசையாகவும் அவ்வப்போது அவனுடைய சிந்தனையின் ஓட்டத்தில் வந்து போகிறது. தன்னை இழிவு செய்யும் ஊர் தலைவர்களிடையே எப்பாடுபட்டாவது மன்னிப்பு வாங்கிவிட வேண்டும் என்றெண்ணுகிறாள்.

‘அவங்களுக்கும் எனக்கும் என்ன பகை? நான் வேணும்னா தனியாப் போய் மன்னிப்பு கேட்டுவிட்டு வரட்டுமா’ என்றுதான் அவள் சிந்தனை ஓடுகிறது. பழநியில்லாத வேளையில் மப்பேற்றிக்கொண்டு வீட்டிற்கு வெளியே கதவைத்தட்டிக் கொண்டு இளித்துக் கொண்டு நிற்கும் ஊர்ப்பெரியவர்களைப் பற்றி குருவம்மாளின் நினைப்பு இந்தளவில்தான் இருக்கிறது. ‘இழைகளின்’ ராமமூர்த்தி ஆசிரியருக்கும், அவருடைய தம்பியின் பையன்கள் படிப்பை தொடரமுடியாமல் போய்விடுவது பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்துவிடுகிறது அவரைத் தொடர்ந்து ஒடுக்கியே வைத்துக் கொண்டிருக்கும் சமூகம்.

நல்லாசிரியர் விருது பெறும் தருணத்தில் ராமமூர்த்தி ஆசிரியரின் நனவோடை பல இழைகளாக விரிந்து பரவுகின்றது என்றால், தண்டோராப் போட்டு ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் தருணத்ததிலிருந்து பழநியின் ஒற்றைப் பிரச்னையை முன்னும் பின்னுமாக சொல்லிச் செல்கின்றது ‘திசையெல்லாம் நெருஞ்சி’. திவ்யாவின் சிறுவயது விளையாட்டுத் தோழனாக இருந்த சிறுவன் கிஷ்டன், திடீரென சுற்றத்தாரின் வக்கரிப்பு ஆளாகி தானொரு சராசரி ஆண் இல்லை என்று உணரும் அந்தரங்க தருணத்தை, அவளும் காண நேரிடகிறது. அந்த தவிப்பில் இருந்து அவன் வெளியேறி சமூகத்தின் தடைகளைத் தாண்டி எதிர்நீச்சல் போட்டு தன்னை ஒரு குடும்ப அமைப்பில் பிணைத்துக் கொண்டு முழுமையடையும் காலத்தில் திவ்யா மீண்டும் சந்திக்கும் தருணத்தில் முடிவடைகிறது ‘பால்கனிகள்’. முன்னது இரண்டு குறுநாவல்களிலும் தகர்த்தெறிய முடியாத சமூகத்தளைகள் ‘பால்கனிகள்’ல் ஓரளவு நெகிழ்ந்து நம்பிக்கைக் கீற்று ஒளிர்கிறது.

சுவேணுகோபாலின் எழுத்திற்கான சுதந்திர வெளியை அமைத்துக் கொடுப்பதில் தமிழினியின் பங்கு அளப்பரியது. இலக்கிய அளவீடுகளை முறையாகக் கொண்டுள்ள வெகுசில பதிப்பகங்களில் தமிழினி முதன்மையானது.

நிறைவின்மையின் வழியே ஓடிச்செல்லும் நதியென சுவேணுகோபாலின் படைப்புகளை தொடர்ந்து இணைய உலகில் முன்னெடுத்தும் செல்லும் இந்த சிறப்பிதழ் வெற்றியடைய வாழ்த்துகள்.

இணையத்தில் சு வேணுகோபால்

– பாஸ்டன் பாலா-

சு வேணுகோபாலைக் குறித்து இணையம் என்ன சொல்கிறது? எந்தப் புத்தகங்களை விமர்சித்து இருக்கிறார்கள்? எந்தச் சிறுகதைகளை சிலாகித்துப் பேசுகிறார்கள்? ஒரு தொகுப்பு.

மேலே சுட்டி மழைக்குள் செல்வதற்கு சில முன்குறிப்புகள்:

அ) இங்கே முழுப் பதிவும் தரவில்லை. சில வரிகள் மட்டுமே மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆ) தொடர்புடைய பதிவுகளை ஒரு சேரக் கொடுத்திருக்கிறேன்; சில இடங்களில் விமர்சகரைக் கொண்டு தொகுத்திருக்கிறேன்.
இ) இது முழுமையானத் தொகுப்பு அல்ல. உங்கள் கண்ணில் பட்டதையும், விடுபட்டதையும் மறுமொழியில் சொல்லவும்.
ஈ) அச்சு ஊடகங்களில் கிடைக்கும் விஷயங்களை, புகைப்படமாகக் கொடுத்தால், தட்டச்சுவேன்.
உ) ஃபேஸ்புக் போன்ற தேட இயலா இடங்களில் கிடைக்கும் மதிப்புரைகளைக் கொடுத்தால் தன்யனாவேன்.

உரல்களில் தொலைவதற்கு முன் உரிமைதுறப்பு:

ஜெயமோகனின் நாவல்களை, முன்னுரை வாசிக்காமல் வாசிக்கத் துவங்க வேண்டும் என்பதை ‘காடு’ முன்னுரை வாசித்தபிறகு அறிந்தே இருந்தேன். இருப்பினும் இணையத்தில், திண்ணையில் சு. வேணுகோபால் எழுதிய ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் மூலமாகவே எனக்கு இவர் அறிமுகம் ஆனார்.

சு.வேணுகோபாலின் படைப்புகள்

குமுதம் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று, இலக்கிய உலகத்தில் நுழைந்திருக்கிறார்.

1. நுண்வெளி கிரகணங்கள் (நாவல்) – 1997
2. பூமிக்குள் ஓடுகிறது நதி (சிறுகதைகள்) – 2000
3. களவு போகும் புரவிகள் (சிறுகதைகள்) – 2001
4. கூந்தப்பனை (சிறுகதைகள்) – 2001
5. வெண்ணிலை (சிறுகதைகள்) – 2006
6. திசையெல்லாம் நெருஞ்சி (குறுநாவல்கள்) – 2006
7. பால்கனிகள்
8. ஆட்டம்
9. நிலம் எனும் நல்லாள்

வலையில் கிடைக்கும் படைப்புகள்

i) தீராக்குறை – புதிய காற்று – பிப்ரவரி 2006
ii) உயிர்ச்சுனை – புதிய காற்று – பிப்ரவரி 2006

க. மோகனரங்கன்

வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதை மாந்தர்கள் இலட்சிய உருவகங்கள் அல்ல. பலவீனங்களும் குறைகளும் பேதங்களும் நிறைந்த சராசரி மனிதர்களே. தங்களுடைய அத்தனை போதாமைகளுக்கு நடுவிலும் ஏதோ ஒரு தருணத்தில், அவர்கள் அடைகிற, அடைய முயலுகிற மேன்மையைப் பற்றியதாகவே வேணுகோபாலின் அக்கறை எப்போதும் இருக்கிறது. தவிரவும், மனிதனின் அகந்தை பூரணமடையாவண்ணம் ஏதோ ஒரு விதத்தில் அவனைக் குறுகச் செய்து வேடிக்கை பார்க்கும் வாழ்வின் புதிர்த்தன்மைகள் பற்றிய ஒருவித முதிர்ந்த அணுகலும் இவரது எழுத்துக்களில் பளிச்சிடக் காண்கிறோம்.

வெண்ணிலை புத்தகம் – சிறுகதைத் தொகுப்பு: பின்னட்டை குறிப்புகளில் இருந்து

சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றை பின்புலமாக கொண்டவை இக்கதைகள். வாழ்க்கையின் கொதிநிலைத் தருணங்களை விரிவான சித்தரிப்புகளுடன் உளவியல் நுட்பத்துடன் விவரிக்கின்றன. பேரிலக்கியவாதிகளிடமிருந்தே மனோதத்துவ அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களுக்கான மூல விதையைப் பெறுகிறார்கள். உளவியல் வகைப்படுத்த இயலாது திகைத்து நி்ற்கும் புதிர்களிலிருந்தே தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்குவதை இயல்பாகக் கொண்டிருக்கிறார் வேணுகோபால்.

அர்ப்பணிப்பு

நவீன இலக்கியம் கற்பித்த எனது ஆசான்
முனைவர் டி. சாமுவேல் சுதானந்தாவிற்கு

மிருணா

சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம் 14 சிறுகதைகளின் தொகுப்பு.

கதைகளின் மொழி நடை மண் வாசனையோடு, இயல்பாக உள்ளது. இறுக்கமாகவும் உள்ளது. தீராக்குறை கதையில் மட்டும் dramatic monologue எனும் ஒருவர் பேச்சில் சூழல் சொல்லப்படும், எதிராளியின் பேச்சு ஊகிக்கப்படும் உத்தி கையாளப் பட்டுள்ளது. கதையின் மனிதர்கள் சூழலின் வெம்மையிலிருந்து தப்பிக்க பெரும்பாலும் நனவுரு கற்பனையில் (fantasy) மூழ்குகிறார்கள். கிடந்த கோலம் கதை கந்தர்வனின் இரண்டாம் ஷிப்ட் கதையை நினைவுறுத்துகிறது தவிர்க்க இயலாமல். கூரு கெட்டவன் கதைப்பிரதியில் தாஸ்தொவ்ஸ்கியின் இடியட் மின்னி மறைகிறான்.

இந்த கதைகள் அனைத்துக்கும் மாறாக அக்குபாரிக் கிழவியின் அட்டகாசங்கள் கதை உள்ளது. அது உடல் குறித்த நனவுணர்வு அற்ற நிலையிலும் முதியவள் ஒருவள் சொத்து விஷயத்தில் மகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காக அவளுக்கே உரிய ரகசியத்தோடு…

சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரியும் கடல்

கும்க்கி

ஒரு துளி துயரம் மற்றும் வெண்ணிலை இரண்டிலும் ஒரே கதைகள் இடம்பெற்றுள்ளன. வெண்ணிலை நவ.2006. யுனைட்டட் ரைட்டர்ஸ்.மொத்தம் 23சிறுகதைகள்.
ஒரு துளி துயரம் மே.2008. மொத்தம் 15 சிறுகதைகள். வெண்ணிலையில் இருப்பதிலிருந்து 13 சிறுகதைகளையும் மேற்கொண்டு 3 சிறுகதைகளையும் தொகுத்து தமிழினி 2008ல் வெளியிட்டுள்ளார்கள்.

கதைகள் வாசிப்பென்பது எப்போதும் உள்ளுக்குள் ஓடும் மவுன காட்சிகளாய் தத்தம் அனுபவம் சார்ந்து மனம் ஒப்பிட்டுக்கொண்டேயிருக்கும். அந்த வகையில் பாசாங்கற்ற எளிய மனிதர்களின் அத்தனை சுகதுக்கங்களும் சு.வேணுகோபாலின் எழுத்துக்களில்… துயரங்கள் நிரம்பிய வாழ்வு தரும் அயற்சி சொல்லி மாளாது போலிருக்கிறது.

ஜூலை 20, 2012

oru_Thuli_Thuyaram_Su_Venugopal

அகநாழிகை பொன். வாசுதேவன்

படைப்பு மனநிலை என்பதே சுயவதைதான். வலியிருக்கிறவர்களால் மட்டுமே ஆகச்சிறந்த படைப்புகளை வெளிக் கொணர முடிகிறது. சந்தோஷத்தை வாசிக்கிறதுக்கும் வலியைப் பற்றி வாசிப்பதுக்குமான மனநிலை வெவ்வேறானது. இதில் வாழ்வின் வலிகளைப் பற்றி வாசிப்பதும், அத்துயரத்தினுள்ளாழ்ந்து போவதுமே எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது. வாழ்க்கையின் குரூரமானப் பக்கங்களை துயர மனநிலையிலான எழுத்துகள்தான் சரியான முறையில் வெளிப்படுத்துகின்றன.

துயரையும் துயர்க்காரணங்களையும் நுட்பமான முறையில் விவரிப்பவை சு.வேணுகோபாலின் படைப்புகள். நிராதரவான நிலை, கையறு தருணம் என நம் அன்றாட வாழ்வின் பல்வேறு கட்டங்களில், உறவுகளிலும், பழகும் மனிதர்களிடமும், பிரியம் கொள்கிறவர்களிடமும் காண நேர்கிற போலித்தனம், சுயநலம் போன்றவற்றை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தைச் சொல்லி நமக்குள்ளாக அதே உணர்வுகளைக் கடத்துகிறார் சு.வேணுகோபால்.

குமுதம் – ஏர் இந்தியா போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘நுண்வெளிக் கிரகணங்கள்‘ நாவலை வாசித்த அதிர்வுகள் அடங்குவதற்கு பல நாட்களாகியது. அப்பொழுதே ‘புதிய பார்வை‘ அலுவலகத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன். தனித்துவமான எழுத்து நடை அவருடையது. ‘கூந்தப்பனை‘ நுட்பமான பாலியல் அகச்சிக்கல்களை துலக்கும்படியான எழுத்துவகை. அவ்வகை எழுத்தில் குறிப்பிடத்தகுந்த படைப்பு.

மே 2013

ஜெயமோகன்

திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் விருதுகள் இவ்வருடம் சிறுகதைக்கு சு.வேணுகோபால் எழுதிய ‘வெண்ணிலை‘ தொகுப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரம் பெறுமானமுள்ள விருது இவை.

‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் மண்ணை இழந்த விவசாயியின் ஆன்மீகமான வீச்சியைச் சொல்வதன் மூலம் பேரிலக்கியத்தகுதி பெறும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

பெப்ரவரி 18, 2009

சு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது

இந்த வருடத்தைய பாரதிய பாஷா பரிஷத் விருது சு.வேணுகோபால் எழுதிய வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

December 22, 2011

ராஜகாந்தன்

தொண்ணூறுகளின் இறுதியில் வெளிவந்த அவருடைய நுண்வெளி கிரகணங்கள் நாவலை வாசித்தபோது நாவல் குறித்த மதிப்புரை அல்லது விமர்சனங்களை சிறுபத்திரிகைகளில் தேடினேன். தி.சு. நடராஜன் நிகழில் எழுதியிருந்ததைத்தவிர வேறு எதையும் குறிப்பிடும்படியாக காணமுடியவில்லை. ஒரு முக்கிய படைப்பாளி போதிய அளவிற்கு கவனப்படுத்தப்படாமல் விடப்பட்டது வருத்தம் அளித்தது.

December 8, 2009

ஜெயமோகன் திறனாய்வு

சு.வேணுகோபாலின் மண்-1

தன் நுட்பம்மிக்க வாழ்க்கைச் சித்தரிப்பு காரணமாகவே வேணுகோபால் சமகால இளம் தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆகிறார்.

அவரது புனைவுலகுக்குள் நுழையும் வாசகன் அவரது அபாரமான யதார்த்த உலகின் விரிவையும் நுட்பங்களையும் கண்டு அதில் ஆழ்ந்து போவான். மனிதர்களின் உயிர்ப்போராட்டத்தின் வேகத்தையும் வலியையும் இத்தனை உக்கிரமாக நேரடியாகச் சொன்ன சமகாலத்துப் படைப்பாளி பிறிதெவரும் இல்லை என்றே சொல்லலாம். உப்பு கசியும் ஊயிர்நிலம்போன்றது அவரது புனைவுவெளி.

இக்கதைகளுக்கு முன்னுதாரணமான கதைகள் என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய கதைகள்தான். அப்பட்டமான யதார்த்தத்தைச் சொன்னபடி காமத்தின் நுண்ணிய அக இயக்கங்களுக்குள் சென்ற படைப்புகள் அவை.

புற உலகம் மீது இந்த அளவுக்கு அபாரமான கவனிப்புள்ள தமிழ்க்கதைசொல்லிகள் மிக அபூர்வம். தமிழில் இவ்விஷயத்தில் சு வேணுகோபாலுக்கு முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க படைப்பாளி என்று அசோகமித்திரனையே குறிப்பிட முடியும்.

நீளமான கதையாகிய புத்துயிர்ப்பு ஒருவகையில் வேணுகோபாலின் கூந்தப்பனை கதைக்கு சமானமானது. உச்சகட்டத்து கவித்துவத்தாலேயே தன்னை நிகழ்த்தும் இக்கதையே வேணுகோபாலின் ஆகச்சிறந்த படைப்பு. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த இருபது கதைகளில் ஒன்றாகவும், புதிய தலைமுறையில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த ஐந்து கதைகளில் ஒன்றாகவும் இதை நான் கூறுவேன். என்னுடைய பரிந்துரையின் பேரில் இக்கதை கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் பகுதி

வேணுகோபாலின் நடை எழுத்தாளனுடையதல்ல. விவசாயியினுடையது. தமிழின் முக்கியமான கலைஞனாக அவரை நிலைநாட்டுவதே இந்த அம்சம்தான். அவர் எப்போதுமே கதைக்களனை வருணிப்பதில்லை, ஒரு விவசாயி அளிக்கும் நேரடி அறிக்கையை அளிக்கிறார். அவர் அளிக்கும் தகவல்கள் எப்போதுமே விவசாயியால் கண்டடையப்படுபவை. ஒருமுறை பேருந்தில்செல்லும்போது ஒரு வரண்ட ஏரியைக் கடந்துசென்றோம். நாந் அந்த ஏரியின் வெடித்த சருமத்தை முதுமையின் சருமம் போல ஒரு மாபெரும் சிலந்தி வலைபோல எண்ணிக்கொண்டேன். அந்த வலைநடுவே ஒரு மாடுமேய்க்கும் பெண் மாட்டிக்கொண்டிருப்பவள் போல அமர்ந்திருந்தாள்.

ஆனால் என்னருகே அமர்ந்திருந்த விவசாயி தனக்குள்ளாக ‘எளவு முள்ளுமுல்லா காஞ்சு போச்சு” என்றார். அப்போதுதான் ஏரிக்கரை அருகே நின்ற கருவேலங்களும் காய்ந்திருப்பதைக் கண்டேன். நான் கண்டதைவிட பெரிய வரட்சியை அவர் கண்டிருக்கிறார் என உணர்ந்தேன். சுமார் நூறடி ஆழத்தில்கூட நீரில்லை என்பதை அந்த மரம் அவருக்குக் காட்டிவிட்டிருந்தது! இதுதான் எழுத்தாளனின் பார்வைக்கும் விவசாயியின் பார்வைக்கும் இடையே உள்ள வேறுபாடு.

ச.முத்துவேல்

மதுரையில் இவ்வாண்டு நடந்த கடவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சு.வேணுகோபால் அவர்களைப் பார்க்கமுடிந்தது.

அவர் கூந்தல்பனை , பனைமரம் தான் என்றும் பார்க்கத் தென்னைமரம்போலிருக்கும் என்றுமட்டும் சொன்னார். மேலும், நானிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி ,ஒரேயொரு கூந்தப்பனை மட்டும் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லியிருந்தார். நானும் சென்று பார்த்தேன். மற்ற பனைமரங்கள் அடிமுதல் முடிவரை ஒல்லிக்குச்சியாக, நிகு நிகுவென நின்றிருக்க இந்த ஒன்றுமட்டும் தடித்ததும், மிக உயரமாகவும், தண்டின் நிறத்தில் சிறிது கருமை நீங்கி சாம்பல் நிறத்திலும், இலைகளிலும் கூடுதல் வனப்பும் கொண்டதாகத் தென்பட்டது.

http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html

கூந்தப்பனை

சு.வேணுகோபால் தன் கதையில் ஆண்மை இல்லாத ஒருவனின் அவலத்தைச் சித்தரிக்கிறார். காமத்தின் இயலாமை என்ற மானுடச் சிக்கலை இத்தனை தீவிரமாக வெளிப்படுத்திய கதைகள் குறைவே.

தன்னை பயனற்றவனாக பொருளற்றவனாக உணர்கிறான்.

அப்பயணத்தில் ஒரு தனித்த மணல்தேரிமீது அவன் ஒரு கூந்தப்பனையை காண்கிறான். அவனுக்கு ஒரு தரிசனம் கிடைத்ததாக தோன்றுகிறது. அந்த மேட்டில் ஓர் ஊற்று சுரப்பதையும் காணநேர்கிறது. கதையின் உச்சம் அது.

ஜெயமோகன்

மு.கஸ்தூரி

மாற்றுவெளி: ஜூன் 2012

சு.வேணுகோபால் மூன்று சிறுகதை தொகுப்புகளில் 58 சிறுகதைகளை எழுதியுள்ளார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான பூமிக்குள் ஓடுகிறது நதியில் 18 சிறுகதைகள் உள்ளன. களவு போகும் புரவிகள் தொகுப்பிலுள்ள 17 சிறுகதைகளில் 9 கதைகள் சிறுபத்திரிக்கைளில் வெளிவந்துள்ளன.

இவருடைய கதைகள் பெரும்பாலும் பெண்களின் வாழ்வியல், ஆண்-பெண் உறவுமுறை, குழந்தை மனங்களின் வெளி, விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.

பூமிக்குள் ஓடுகிறது நதி பள்ளர், தேவர் சமூகத்தில் நிலவும் சாதியக் கலவரங்களை முன்னிறுத்தி நகர்கிறது.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

‘இறகுகள் சிலிர்த்து தலை கொணங்கிய செம்பூத்தைக் கட்டுக்காப்பில் போட்டுவிட்டு வெந்த புல்வரப்பில் நடந்தோம். கையகல நிலத்திலே ஆதி ஜீவன்கள் அழியத் தொடங்கிவிட்ட காலம் தெரிந்தது. ஓடைக்கரையில் ஏறியபடி அதிகம் பேசாத நைனா “ஹிரோசிமாவில் அணுகுண்டை மேலிருந்து போட்டான்னா எல்லா எடத்திலயும் அப்பிடிதான் போடணுமெங்கிறதில்ல. சத்தமில்லாம கீழ இருந்தும் போடலாம். பூமாதேவி செத்துப் போச்சுன்னு தோணுது” என்றார். கருகிய காகித வார்த்தைகளாய் காற்றில் நொறுங்கிப் போனது நைனா சொன்னதும். பாதச்சுவட்டில் நெமுறும் குறுமணல் ஓசையோடு ஓடையில் நடக்கலானோம். கரையில் ஏறி நின்றதும் தொழிற்சாலையின் சங்கு ஆங்காரமாய் ஒலிக்கத் தொடங்கியது.’

என்று முடிக்கும் போது சங்கொலியின் மெய்ப்பாடு அத்தனை வேதனை விரசம் வாழ்வின் தோல்வி, நீரின் கேடு என்று வந்த வேலை முடிந்த எக்காளமாய் நம் சினத்தில் சூல் கொள்கிறது.

நவம்பர் 11, 2014

இலக்கியம் என்பது மனித உள்ளத்தின் அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு, கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத கவனத்தில் கொண்டு வந்து உணர்வில் நிறுத்தி, அதனால், மனித உள்ளத்தைத் தூய்மையுறச் செய்யும் ஒரு மார்க்கம் என்னும் பொருள்பட ‘Catharsis’ என்று அரிஸ்டாடில் கூறும் இயக்கத்தை சு வேணுகோபாலில் முழுமையாகக் காணலாம்.

நவம்பர் 13, 2014

“தங்கம், பொட்ட குட்டிய யாராவது வளப்பாங்களாடா? வீட்டுக்கு வீரமா ஆண் குட்டிய வளக்குறதவிட்டு….”
…………

கிராமங்களில் பொட்டைக் குட்டிகளை புற்றில் விடுவதுண்டு. …
……………………

பின்கதவைத் திறந்தவுடன் காலால் சட்டென எத்திவிட்டான். குட்டி கரணமடித்து விழுந்து வீச்சென கத்தியது. சட்டென எழுந்து வண்டிக்குப் பின்னாக ஓடி வர முயன்றது, பூமிகாவுக்கு செத்துப்போய் விடலாமெனக் குமுறியது மனசு. வரவர பின் தங்கிப் போகும் குட்டியைப் பார்த்துப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதாள். “எங்கயாவது கோயில்ல விடு மாமா. பசிக்கு அது என்ன பண்ணும்? பாவம் மாமா. அதுக்கு யாருமில்ல. பயப்படும் மாமா” உதடுகள் கோணி தழுதழுத்தது.

……………….

பூம்மிகாவை அம்மாவால் சமாதானப்படுத்த முடியவில்லை…..

“அம்மா நான் ஒங்கூடயே இருக்கேம்மா. என்னைய தொலச்சிடாதம்மா”

:”பூமிகா எங் கண்ணுல்ல… நீ அம்மா செல்லந்தான்… என்னாச்சு உனக்கு… அழக்கூடாது” வாரியெடுத்தாள்.

“சொல்லுமா, என்னைய எங்கயாவது தள்ளிவிட்டுறமாட்டயே. சாகுந்தண்டியும் ஒங்கூடவே இருக்கேம்மா. ப்ளீஸ்மா”
நவம்பர் 14, 2014

ஒருவருக்கு உண்மையிலேயே சிறுகதை என்றால் என்ன என்ற வேட்கை ஏற்படுமேயானால் அவர் உதாரணம் ஒன்றின் மூலம் தெரிந்து கொள்வது வசதி என்று கருதினால், அவர் எங்கும் அலைய வேண்டாம். ரவீந்திரநாத தாகூர் எழுதிய ‘ஆசாபங்கம்’ படித்தால் போதும். பாரதியார் மொழிபெயர்த்து இந்தத் தலைப்புதான் கொடுத்திருக்கிறார். சாஹித்ய அகாடமி தமிழ், ரவீந்திரர் கதைத் திரட்டு இல் ’துராசை’ என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு வந்தி்ருக்கிறது. எவ்வளவு ஆழமும், கௌரவமும் மிக்க எழுத்து ரவீந்திரருடையது என்பது படித்தால்தான் தெரியும். இன்றைய சிறுகதை எழுத்தாளர்களில் இவ்வண்ணம் ஆழமும், கௌரவமும் திகழச் சிறுகதைகள் யாத்திருப்பவர் சு வேணுகோபால்

மே 5, 2015

இரு குறுநாவல்கள் – பால்கனிகள், இழைகள், இரண்டும் சேர்ந்த நூல். இரண்டிலும் அவர் எடுத்துக்கொண்டு புதினமாக்கியிருக்கும் பொருள் மிகவும் உருக்கும் சமுதாய அவலங்கள். ட்ரான்ஸ்ஜெண்டர் எனப்படும் மாற்றுப் பாலியல் பிறவியர் குறித்த மிக நுட்பமான துயர வாழ்க்கையைப் பற்றிய கவனத்தை ‘பால்கனிகள்’ என்பதில் தருகிறார்.

ஜூலை 21, 2015

Kunugumam_Su_Venugopal

ராதாகிருஷ்ணன்

இவர் கதையில் வரும் சிறுவர்சிறுமிகளின் உலகம் நம்மையும் அவர்களோடு அலையும் சிறுவர்களாக மாற்றி விடுகிறது. எவ்வளவு அற்புதமான குழந்தைகள், தன் அம்மாவிற்கு தெரியாமல் தன் ஊருக்கு வரும் தாத்தாவிற்கு உணவு கொண்டு வரும் சிறுமி, தன் தந்தை தன் ஹாஸ்டலில் காண வரும் போது அப்பாவின் கசங்கிய சட்டையினை கண்டு நான் வேலைக்கு போனதும் உனக்கு சட்டை வாங்கித்தருகிறேன் என்று சொல்வது …., இந்நூலில் வரும் சிறுவர் சிறுமியரை காணும் போது இவர்களை சுயநலம் உடையவர்களாகவும் வெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றும் நம் சமூகசூழல் மீது கோபம் வருகிறது .

குதிரை மசால் தாத்தா எனும் சிறுகதை ஊர் ஊராக சென்று மாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரு முதியவரை பற்றி பேசும் கதை. இந்த தொகுப்பிலேயே விரிவான சித்திரங்களுடன் மிகுந்த வாஞ்சையோடு படைக்க பட்ட பாத்திரம் இதுதான்.

இன்னொரு கதை நிரூபணம்,இந்த கதை எனக்கு மிக பிடித்த கதைகளில் ஒன்று ,நடைமுறையில் கிருத்துவம் எவ்வளவு தூரம் கிறிஸ்துவிடம் இருந்து விலகிவிட்டதையும், ஒரு சிறுவன் இதையெல்லாம் விட்டு தன் குழந்தை மனதால் தன் செயலால் கிறிஸ்து சொல்லும் குணத்தினை தன் இயைல்பிலேயே பெற்றிருக்கிறான் என்பதையும் சொல்லும் கதை இது

29 ஆகஸ்ட், 2012

பா.சேரலாதன்

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் எனக்குத் தெரியாத பல பேரோடு இவரை ஒப்பிட்டிருந்தார்கள்.

ஒவ்வொரு சிறுகதையும் மனதில் ஒருவித அழுத்தத்தை உருவாக்கி, நம்மை உருக்குலைத்துப் போட்டுவிடுகிறது. சுஜாதாவிடம் நான் கண்ட அதே Climax Punch, இவரிடமும் இருக்கிறது. ஆனால் இருவரின் நடை மற்றும் கதைக்கரு ஆகியவை முற்றிலுமாக வேறுபட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு, “மீதமிருக்கும் கோதும் காற்று” எனும் ஒரு சிறுகதை. 6 பக்கங்களுக்கே நீளும் இந்தக் கதை, “சுகிர்தா” எனும் “சுப்பம்மாள்” என்ற ஒரு விலைமாதுவின் ஓர் இரவை விளக்கி நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இது போன்ற கருக்களை சுஜாதாவிடம் படித்ததாக ஞாபகம் இல்லை.

களவு போகும் புரவிகள்

மு. இளநங்கை

சு.வேணுகோபாலின் சிறுகதைகளின் ஊடாகப் பயணிக்கும்போது எதிர்படும் விடயங்கள் சமூகத்தோடு நேரடி தொடர்பு கொண்டவையாகவும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளின் பதிவுகளாகவும் அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

முனைவர்பட்ட ஆய்வாளர்

சரவணன் – சாரதி

இன்றைய எழுத்தாளர்களில் பலர் பின் நவீனத்துவம், விளிம்புநிலை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அந்த எழுத்துகள் பெரும்பாலும் அதிர்ச்சி மதிப்பீடுகள் சார்ந்தவை. வாசகனை ஒரு அறியா உலகில் நுழைத்து, கேள்விப் படாத சம்பவங்களை (அ) நடக்க சாத்தியமற்ற சம்பவங்களை விளக்கி எழுதப்படும் படைப்புகள்தான் அதிகம். அந்த சம்பவங்கள் படைப்பைவிட்டு வெளியே துருத்தியபடி இருப்பதை உணரலாம். ஆனால் சு.வேணுகோபாலின் இந்த சிறுகதைத் தொகுப்பு விளிம்பு மனிதர்களை/ வாழ்வை அவர்களின் தளத்தில் இருந்தே விளக்குகிறது.

களவு போகும் புரவிகள்

ஜ்யோவ்ராம் சுந்தர்

ஜே பி சாணக்யாவின் ஒரு கதை : ஊரில் இருக்கும் சிறிய உணவுக் கடையில் வேலை செய்வான் ஒருவன் (சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து வேலை செய்து கொண்டிருப்பான்). அந்த ஊரில் வசிக்கும் குழந்தை குட்டிகள் உள்ள ஒரு பெண்மணியோடு அவனுக்குத் தொடுப்பு ஏற்பட்டுவிடும். அவள் கணவன் அந்தப் பெண்மணியைப் போட்டு அடிப்பான். ஆனாலும் உறவு தொடர்ந்து கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் அவன் நெருப்பு வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வான். அவன் வீட்டாருக்குத் தரப் படவேண்டிய இழப்பீட்டு தொகை அது இதுவென்று கதை போகும். (கதையின் தலைப்பு ஞாபகமில்லை, தேடிப் பார்க்கணும்).

ஏன் இது என்கிறீர்களா?

போதனைக் கதைகளிலிருந்து இலக்கியத்திற்கு அல்லது சு வேணுகோபாலிலிருந்து ஜே பி சாணக்யாவுக்கு என்ற தலைப்பில் ஒரு குறிப்பு எழுதலாமென கை பரபரக்கிறது.

ஏப்ரல் 26, 2014

எப்படித் தன் விந்தின்மூலம் ஒரு வாரிசை உருவாக்க முடியாதவன், இயற்கையின் வழி ஒரு சமூகத்தையே மகிழ்விக்கிறான் என்ற கதையாக இந்தப் பிரதியை நான் படித்தேன்.

போதனை இல்லை, வெற்றுப் பிரகடனங்கள் இல்லை, ஆனால் உயிர்ப்பு இருக்கிறது.

ஐ லவ் யூ வேணுகோபால்!

அபாயச் சங்கு குறுநாவலில் ஒவ்வொரு முடிச்சிலும் அவர் எழுதிய வரிகள் பிடித்திருந்தன. ஒட்டுமொத்தமாகப் பிடிக்கவில்லை. முதல் கதையில் இருந்த கிறிஸ்துவ வெறுப்பும் சங்கடமாயிருந்தது.

ஏப்ரல் 29, 2014

அண்ணாகண்ணன்

தமிழில் புத்தக மதிப்புரைகளுக்கான போட்டி என்பது அரிதானது. 02.02.2014 அன்று முகநூலில் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்களின் பக்கத்தில், அவர், டீக்கடை குழுமம் நடத்திய புத்தக விமர்சனப் போட்டியில் மூன்று நடுவர்களில் ஒருவராகப் பங்கேற்றதாகவும் அதன் முடிவுகளையும் அறிவித்திருந்தார்.

இணையத்தில் தேடியபோது, அந்தரவெளிகள் குழுமத்தில் 18.08.2010 அன்று மின்னல் வெளியிட்டஇந்த அறிவிப்பு, தென்பட்டது:

அந்தரவெளிகள் குழுமத்தின் முதலாமாண்டு விமர்சனப் போட்டிக்கான புத்தகமாக இந்த ஆண்டு சு.வேணுகோபாலின், “ஒரு துளி துயரம்” எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில், இந்த ஒரே நூலை மட்டும் விமர்சிக்குமாறு கேட்டுள்ளார்கள். நுழைவுக் கட்டணமாக ரூ.50 பெற்றுள்ளார்கள்.

புத்தக மதிப்புரை போட்டி

பத்மஜா நாராயணன்

கதையின் நாயகன் கடைசில் தனக்குத் தானே உணர்ந்து கொள்வது போல் “ஓடுவதில் இல்லை வெற்றி தோல்வி. ஓடாமல் நிற்பது தான் தோல்வி ” ஆம் ஆட்டம் நிற்கையில் அனைத்தும் நின்று போய் விடுகின்றன. சு. வேணுகோபாலின் பரம வாசகி நான். அவரின் ஆட்டம் படித்து முடித்த பின் கலையும் மேகங்களென இம்சிக்கும் எண்ணங்களை சிறைபிடிக்கும் முயற்சி இது.

மே 9, 2014

உஷாதீபன்

ஒழுங்காப் படிப்பியா? இல்ல ஒன் அப்பனைப் போல ரவுடியா இருக்கப் போறியா? என்று வயிற்றெரிச்சலில் பையனை அப்போதும் மொத்துகிறாள். வேதனையில் கதறுகிறாள். அன்று ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்திற்குப் போகணும் என்கிற அவசரத்தில் கிண்டி வைத்திருந்த தக்காளி சாதத்தை அவன் வாயில் தின்னு தின்னு என்று திணிக்கிறாள்.

கிளம்புகையில் உண்டியலில் போட என்று பத்து ரூபாயை அவன் சட்டைப் பையில் வைக்கிறாள். அடிகளையும், திட்டுகளையும் வாங்கியபடி எபி அம்மா பின்னால் ஓடுகிறான். செல்லும் வழியில் அவன் ஏற்கனவே படித்து, தற்போது மூடப்பட்டுள்ள பள்ளி வருகிறது.

நல்ல ஸ்கூலுதானம்மா இது. இங்க படிச்சா நா ஃபஸ்ட் ராங்க் வாங்குவேன்லம்மா…என்னைய அடிக்க மாட்டேல்லம்மா….முத்தந்தானம்மா கொடுப்பே…. –மழலையாய் கெஞ்சுகிறான் தாயிடம்.

ஆமாண்டா எஞ்செல்லம் என்று தாயும் அவனின் அழகுப் பேச்சில் கரைகிறாள்.

எதிர் சுவரில் சாக்கடை மேட்டில் ஒரு பிச்சைக்காரன். கை ஏந்தியவாறே. இடுப்பிற்குக் கீழ் ஆடையின்றி, உறுப்புக்கள் விகாரமாகத் தெரிய, அழுக்கேறி வற்றிப்போய்க் கிடக்கிறான். அவனையே குனிந்து நின்றமேனிக்கு அப்படியே பார்த்துக் கொண்யடிருக்கிறான் எபி. இந்தத் தாத்தாவுக்கு யாரேனும் உதவி செய்வார்களா? என்று அவன் மனம் எண்ணுகிறது. தூரத்திலேயே பலரும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்கள்.

அந்தத் தாத்தாவப் பார்த்தா பாவமா இருக்கும்மா… என்கிறான் அம்மாவிடம்.

அட, எழவெடுத்தவனே பேசாம வா…என்கிறாள் தாய். தேவாலயத்தில் குழுப்பாடல் கேட்கிறது. உள்ளே நுழைந்து கண்மூடி மண்டியிட்டு ஜெபிப்பதில் ஈடுபடுகிறாள். எபி ஓட்டமாய் ஓடி அந்தப் பிச்சைக்காரன் இருக்குமிடத்தை அடைகிறான். நின்று வேதனையோடு பார்க்கிறான். அவன் மனதை என்னவோ செய்கிறது காணும் காட்சி. கடைக்கு ஓடி பிஸ்கட் வாங்குகிறான். திரும்பி வந்து அதை அந்தப் பிச்சைக்காரனிடம் கொடுக்கிறான்.

பிச்சைக்காரன் Jesus Christ never fails to feed his followers…என்கிறான் ஆங்கிலத்தில்.. He lives with children என்று அவன் வாய் முனகுகிறது. எபிக்குப் புரியவில்லை. அம்மா ஜெபத்தை முடித்துத் தேடினால்? என்று திரும்புகையில் கோயில் உண்டியலில் காசு போட்டாயிற்று என்று சொல்லிவிடலாமா என்ற யோசனை வருகிறது எபிக்கு.

15 ஜனவரி 2012

யாழிசை லேகா

அபாய சங்கு“, தோல்வியின் பிடியில் தொடர்ந்து உழலும் நாயகனின் குழப்ப நிறைந்த மனவோட்டங்களை நேர்த்தியாகவும் வெகு அழுத்தமாகவும் பகிர்கின்றது இக்கதை.காதல்,காமம்,வேலையில்லா தாழ்வுணர்ச்சி,ஏமாற்றங்கள் என மொத்தமாய் தலைமீதேரும் சங்கடங்கள் நெருக்கடியாய் மாறி விபரீத முடிவிற்கு நாயகனை தள்ளுகின்றன.வேலை தேடும் பொழுதுகளின் தனிமை துயரம் கொடூரமானது என்பதை உணர்த்தும் வண்ணதாசனின் “பறப்பதற்கு முன்பு கொஞ்சம் புழுக்களாக” என்னும் சிறுகதையை நினைவூட்டியது

பெப்ரவரி 16, 2010

மல்லிகார்ஜுனன்

உயிர்ச்சுனை: கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுக்கு நீர் ஆதாரம் மிக அவசியமானது. வறட்சியான காலத்தில் மிதமிஞ்சிய உறிஞ்சுதலின் காரணம் கிணறுகள் வற்றி விட போர் போட்டுக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள், பள்ளி ஆசிரியை. அவளுக்கு திருமணமாகி நிதின் என்றொரு மகன். இளையவளுக்கு திருமண செய்ய வேண்டித்தான் போர் போட முடிவெடுக்கிறார் பெரியவர். மூத்தவளிடம் காசு வாங்கி போர் போடுகிறார். காசும் வீணாகி, தண்ணீரும் வராமல் வீட்டிற்கு பெருங்கஷ்டம் ஏற்படுகிறது. அந்த சோகம் நம்மையும் தாக்குகிறது.

இந்தக் கதையில் முக்கியமான அம்சமே பேரன் நிதினை முக்கியமான பாத்திரமாக சித்தரிப்பது

26 நவம்பர் 2012

கமலி பன்னீர்செல்வம் சுவாமிநாதன்

சதீஷ் தங்கி இருக்கும் விடுதியில் அவனுடன் பேசி கொண்டு இருக்கும் அந்த கிழவன் கேரக்டர் செம. சந்தோசம் பற்றி அவர் கேரக்டர் வாயிலாக ஆசிரியர் சொல்லும் அத்தனையும் படு யதார்த்தம்.

“சாவு என்பது பேரமைதி” இறந்தகால இயக்கத்திற்கும் எதிர்கால இயக்கத்திற்கும் இடையில் கிடக்கும் ஓய்வே சாவு விழிக்காதிருந்தால் நினைவுகளின் சாவு, நான் இறந்தபின்னும் உலகம் இயங்குகிறது என்ற வரிகள் அழகு.

’அவரவர் நிலையில் நிற்கும்போது வாழ்க்கை வைத்திருக்கும் சிக்கல்கள் உண்மையாக இருக்கின்றன. அந்த சிக்கல்களில் பயமும் சுயகௌரவங்களும் உள்ளுக்குள் கண் விழித்திருக்கின்றன.’

26 நவம்பர் 2014

ராஜ சுந்தர ராஜன்

“ஆட்டம்” நாவலில் ஒரு அக்கா கதை வருகிறது.

கதைசொல்லலில் ஆனால் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நினைப்புகளுக்குமாக ஒரு கபடி ஆட்டம் இருக்கும்.

இடையே, ||செங்குன்றம் ஏற இந்த நதி வழி போன கண்ணகி…|| என்று தொடங்கி, ||… நெருப்புள் தீமை தங்காது. கபடம் தப்பி விடாது. உண்மையே சுடர். உண்மையே சுடரும். தெய்வத்தின் சன்னதியில் எவளும் கண்ணகிதான். சரி தவறு, நிறை குறை, கற்பு கறை எதுவும் பெண்ணிற்கில்லை. அவள் தாய். அவ்வளவுதான். தாயிடம் பிறந்து தாயாகியவள்.|| என்று முடியும் ஒரு பத்தி உண்டு. (பக். 97)

பெப்ரவரி 20, 2014

சு. வேணுகோபால் பேச்சு

“காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது குறித்து சிறு சர்ச்சை எழுந்துள்ளது. படைப்பாளியைவிட, அவர் படைத்துள்ள படைப்பையும், அவருடைய 10 ஆண்டு கால உழைப்பையும்தான் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபோன்று சர்ச்சைகளை எழுப்புவர்கள், தாங்கள் கூறும் நூலுடன் இந்த நாவலை ஒப்பிட்டு ஆரோக்கியமான விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். அவ்வாறு விவாதத்துக்கு வருபவர் வெற்றி பெற்றுவிட்டால், இந்த விருது மூலம் சு. வெங்கடேசனுக்கு கிடைக்கும் பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் உடனடியாக அவரிடமிருந்து பெற்றுத் தரப்படும் என்றார்.

ஜனவரி 5, 2012

பசி பற்றிய படைப்புகள்தான் நாஞ்சில் நாடனின் பெரும்பாலான படைப்புகளின் கருவாக இருக்கும். எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி இருக்கும் செறிவுதான் அவரது படைப்புகளை நகர்த்திச் செல்கின்றன. கண்ணீர்க் குரலும், வேதனைக் குரலும் நாவல்களில் மிகுந்திருக்கின்றன. எல்லாவற்றையும் பயணம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை நாஞ்சில் நாடனிடம் இருந்து புரிந்து கொள்ளலாம். மரபைச் சரியாகக் கைக்கொள்ளும் திறனும் அவரிடம்தான் வாய்த்திருக்கிறது என்றார் அவர்.

மார்ச் 14, 2011

கண்மணி குணசேகரன்

சு. வேணுகோபால் எழுதிய ‘நிலமெனும் நல்லாள்’ நாவலைச் சமீபத்தில் படித்தேன். நிலத்தை, பயிர்ப் பச்சைகளை, குடும்ப உறவுகளை விட்டுவிட்டு, மனைவியின் வீட்டில் வாழ நேரும் ஒருவனின் கதையே இந்த நாவல். அந்தக் குடும்பத்தோடு அவனால் இணைந்து வாழ முடியாத மன உளைச்சல்கள், தோல்விகள், போராட்டங்களென அவனது அவல வாழ்வைச் சொல்லும் இந்த நாவல் என்னைக் கலங்கடித்தது.

ஏப்ரல் 11, 2015

செல்வேந்திரன்

ஆட்டம்: இச்சைகளின் பெரும் கபடி: விளையாட்டிற்குத்தான் விதிகள் உண்டு. மானுட இச்சைகளுக்கு இல்லை. காலை வாறி விட கைகோர்த்து காத்திருக்கும் காமத்தின் மாய அரணைத் தாண்டி உப்புக்கோட்டைத் தொட்டுத் திரும்புவது சாமான்யம் அல்ல.

எந்த கதாபாத்திரத்தின் மீதும் கோபம் கொள்ள முடியாத கையறு நிலைதான் வாசகனுக்கு. வாழ்வின் விசித்திரங்களுக்குக் காரணமே கிடையாது. எல்லோரும் சூழலின் கைதிகளே.

நாவலெங்கும் ஒரு நாய் தன் குட்டிகளைத் தேடி காடு மேடேங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது. அப்போதுதான் ஈன்ற குட்டிகளை யாரோ ஒரு குட்டி கூட விடாமல் தூக்கிச் சென்றிருப்பர். நாவலெங்கும் கிளைபரப்பியிருக்கிற தாய்மையின் பரிதவிப்பை இந்த நாய் ஊமைவலியாக வாசகனுக்குக் கடத்துகிறது.

“அவரவருக்குத் தெரிந்த விதத்தில் ஆடுகின்றனர்; தெரியாமல் ஆடித் தெரிந்தும் கொள்கின்றனர். ஆடாதவர்களுக்கு வாழ்க்கையில்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே ஆட்டம். மானுட ஆட்டம்!” எனும் வரிகளோடு அந்த அத்தியாயம் முடிகிறது.

மே 9, 2014

அரசன் சே

“திசையெல்லாம் நெருஞ்சி”. தலைப்பே கவிதை பேசியமையால் தான் இந்நூலை வாங்கினேன். சமீபத்தில் நான் வாங்கியப் புத்தகங்களில் சிறந்தது என்று இந்நூலைச் சொல்வேன். இந்நூலை வாசிக்க ஐந்து மணிநேரம் போதுமென்று நினைக்கிறேன், நான் ஒரே இரவில் வாசித்து முடித்தேன். இந்நூலில் மூன்று கதைகள் அடங்கியிருக்கிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை தாங்கியிருக்கின்றன. கொஞ்சம் பிசகி இருந்தாலும் “இரட்சணியம்” கதை பிட்டுக் கதைகள் வரிசையில் அடங்கிவிடும் அபாயமிருந்தும் நேர்த்தியாக எழுதியிருப்பது.

டிசம்பர் 4, 2014

ஆட்டம்: தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும் சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர்.

சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது, இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!

ஜூலை 2015

su_venugopal

குங்குமம்

மலையும், மலைசூழ் நிலமுமான தேனிக்கு அருகில், சில்ல மரத்துப்பட்டி என்ற பசுங்கிராமத்தில் தலையில் முண்டாசும், கைகளில் காங்கேயம் காளைகளுமாக உலவித் திரிகிறார் வேணுகோபால். பேச்சில் தேனிக்கே உரித்தான வெள்ளந்தித்தனம்.

‘‘எல்லாம் அப்பா சுருள்வேலோட சம்பாத்தியம். ராப்பகல் பார்க்காத உழைப்பால 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்தினவர். அவருக்கு இளைப்புத் தொல்லை இருந்துச்சு. ‘நல்ல சீமைச்சரக்கா வாங்கி தினமும் ரெண்டு கிளாஸ் அடிச்சின்னா சரியாயிரும்’னு யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்காரு. கிளாஸைத் தொட்டவரு, சாராயம் அவரைக் குடிக்கிற வரைக்கும் விடலே. இன்னைக்கு இலக்கிய சந்திப்புகள்ல தண்ணி அடிக்க நிர்ப்பந்திக்கிறவங்ககிட்ட, ‘எனக்கும் சேத்து எங்க அப்பாவே குடிச்சிட்டார்’னு சொல்லி நான் தவிர்க்கிறதுண்டு.

ரொம்ப சீக்கிரமே அப்பா எங்களை விட்டுப் போயிட்டார். அப்புறம் எல்லாம் அம்மா பொன்னுத்தாயிதான். சிறந்த நிர்வாகி. படிச்சதென்னவோ அஞ்சாவதுதான். பண்ணையில வேலை செய்யிற 50 பேரோட கணக்கு வழக்கை மனனமா போட்டுச் சொல்லும். மொத்தம் நாங்க 5 புள்ளைங்க. நான் கடைக்குட்டி.

மாடு இல்லைன்னா விவசாயம் இல்லை. விவசாயத்துக்கு உகந்தது காங்கேயம் காளைகள்தான். இப்போதானே மின்சார மோட்டார் எல்லாம். அந்தக்காலத்துல கமலையிலதான் மாடு கட்டி தண்ணி இறைக்கணும். ஒரு கொழுவுல 500 லிட்டர் தண்ணி எடுக்கலாம். அப்படி கிணத்துல இருந்து எடுக்கிறதுக்கு ஓங்குதாங்கான மாடுக வேணும். உழும்போது கலப்பைக்கு மேல ஒரு கல்லை வச்சு, அதுக்கு மேல ரெண்டு பேரை நிக்க வச்சு உழுவாங்க. ஆழ உழுதாத்தான் விளைச்சல் பிடிக்கும். அதுக்கெல்லாம் காங்கேயம் காளைதான் சரிப்பட்டு வரும். விவசாயத்துக்காக வாங்குனாலும் அப்பாவுக்கு மாடுகமேல பிள்ளைப்பாசம். வதைச்சு வேலைவாங்க மாட்டாரு. மாட்டோட மொழியும் கூட அவருக்கு அத்துப்படி.

அப்பாவைப் பாத்துத்தான் விவசாயத்து மேலயும், மாடுக மேலயும் எனக்கு ஆசை வந்துச்சு. காலையில 6 மணிக்கு எழுந்திரிச்சு, ஆடு, மாட்டை ஓட்டிக்கிட்டு மேய்ச்சலுக்குக் கிளம்பிருவேன். 8 மணி வரைக்கும் மேய்ச்சுட்டு வந்து பள்ளிக்கூடம் போவேன். அதுக்கு ‘பனிமேய்ச்சல்’னு பேரு. சாயந்திரம் வந்ததும் கொட்டத்துக்குத்தான் போவேன். ஆடு, மாட்டை மேய விட்டுட்டு, வரப்புல உக்காந்து படிப்பேன். முப்பதுக்கும் மேல பண்ணையாட்கள் இருந்தாலும், அவங்களோட சேந்து நானும் களை வெட்டுவேன். தண்ணி வெட்டி விடுவேன். தாட்டு சுமப்பேன். நிலக் கடலை, பருத்தி, கோவில்பட்டி சோளம், மஞ்சள்னு எக்காலமும் காடு பச்சைமேனியாக் கிடக்கும்.

பள்ளிக்காலங்கள்லயே கண்ணதாசன் பாடல்கள் மேல மோகம் வந்திருச்சு. எப்படி இந்த மனுஷனால இவ்வளவு பாடல்கள் எழுதமுடியுதுன்னு வியந்துபோவேன். பாடல்களோட பொருள் புரியத் தொடங்கினபிறகு, ரகசியமா எனக்குள்ள ஒரு ஆசை அரும்புச்சு. ‘நானும் கண்ணதாசனாகணும்’..!

கல்லூரிக்குப் போனதும் தமிழ் இலக்கியம்தான் படிப்பேன்னு அடம்புடிச்சு சேந்துட்டேன். என் தேடலுக்குத் தகுந்த களமா கல்லூரி இருந்துச்சு. ஒரு லட்சம் புத்தகங்கள் அடங்கின மிகப்பெரிய நூலகம் அமெரிக்கன் கல்லூரியில இருக்கு. கண்ணதாசன் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிச்சேன். ஒருமுறை கல்லூரி இலக்கிய விழாவுக்கு ஜெயகாந்தன் வந்தார். அவரைக் கேள்விகளால திணறடிக்கணுங்கிற ஆர்வத்துல நூலகமே கதியாக் கிடந்து படிச்சேன். நிகழ்ச்சி நாள் வந்துச்சு. கம்பீரமா, ஒரு மத யானை மாதிரி வந்து உக்காந்தார் ஜெயகாந்தன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேள்வி கேக்குறாங்க. எல்லா கேள்விகளையும் எதிர்கொண்டு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்றார். ‘புதுசா என்ன எழுதப்போறீங்க’ன்னு ஒரு பெண் கேள்வி கேட்டுச்சு. ‘இதுவரைக்கும் நான் எழுதுன எல்லாத்தையும் படிச்சிட்டியா..?’ன்னு எதிர்க்கேள்வி கேட்டார். அந்த மிரட்சியில, தொண்டையோட என் கேள்விகள் நின்னுபோச்சு. ஆனா அப்போ இன்னொரு ரகசிய ஆசை உருவாச்சு. ‘நாம ஜெயகாந்தனா ஆகணும்’..!

எம்.ஃபில் முடிச்சேன். என் நண்பர்கள்ல சில பேர் சினிமாவுக்குப் போனாங்க. சில பேர் கல்லூரி வேலைக்குப் போனாங்க. நான் விவசாயம் செய்யப் போயிட்டேன். என் அப்பா 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்துனார்; 45 ஏக்கரா மாத்தணும்ங்கிறது என் திட்டம். கோவணத்தைக் கட்டிக்கிட்டு வயக்காட்டுல இறங்கிட்டேன். காங்கேயம் காளைகளோட வாழத் தொடங்குனேன். ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டுன்னு வாழ்க்கை சுவாரஸ்யமா ஓடுச்சு.

வெ.நீலகண்டன்

Writer_Su_Venu_Gopal

பின் குறிப்பு

இந்தத் தேடலின் போது பல பதிவுகளை படித்து முடித்தவுடன் தோன்றியவை:

1. பலர் அப்பட்டமாக காப்பி அடிக்கிறார்கள். குறிப்பாக திண்ணை, கீற்று போன்ற இணைய சஞ்சிகைகளில் வெளியான சில – ஒரே பிரதியை மீண்டும் பிரதி எடுத்தவை. சில பத்திகள் ஜெயமோகனிடம் இருந்து, சில பத்திகள் வெட்டி ஒட்டியவை என்று முழுக்க முழுக்க சுட்டவை. இந்த மாதிரி கட்டுரைகள் எம்.ஃபில்., முனைவர் பட்டம் பெற உதவுகின்றன. எத்தனை இடங்களில் உங்கள் கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதை நிரூபிக்கவும், கனமான இதழ்களில் தங்களுடைய ஆய்வு வெளியாகி இருக்கிறது என்பதற்காகவும் இந்த இதழ்கள் பயன்படுகின்றன.

2. பல விமர்சனங்களில் கதை சுருக்கத்தைச் சொல்லி, முடிவைச் சொல்லி தங்கள் விமர்சனத்தை, புத்தக அறிமுகத்தை முன்வைத்தார்கள்.

3. கால ஓட்டத்தில் சு வேணுகோபாலின் இடம் என்ன? தமிழகத்தின் எந்த நிலப்பரப்பை, எந்த காலகட்டத்தை, எவ்விதச் சூழலை அவருடைய படைப்புகள் அடையாளம் காட்டுகின்றன? அவருடைய படைப்புகளை காலவரிசைப் படி படித்தால், நிகழும் புனைவாக்க மாற்றங்கள் என்ன? இது போன்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகளை நான் வாசிக்கவில்லை.
பாலா
பாஸ்டன்
—-