Author: பதாகை

சு.வேணுகோபால் எழுத்தின் எல்கை

ராஜ சுந்தரராஜன்

raja sundararajan

டால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளரா, அல்லது தொஸ்தொயேவ்ஸ்கியா? இப்படி ஒரு கணிப்புச்சிக்கல் உலகில் உண்டு.

தொஸ்தொயேவ்ஸ்கியின் எழுத்தில் ஒரு தெருமரல் (thriller) இயல்பு உண்டு; டால்ஸ்டாயில் அப்படியல்லாத ஓர் ஒழுங்கமைதி. அதனால், டால்ஸ்டாயே சிறந்த எழுத்தாளர் என்பது ஒரு கணிப்பு.

நான் ஆனால் தொஸ்தொயேவ்ஸ்கியின் ஆள். முதன்மையாக அவருடைய குணவார்ப்புகளின் மனச்சிடுக்குகளே காரணம் என்றாலும் அதற்கும் அப்பால் அவருடைய சொல்முறையால் ஈர்க்கப்பட்டவன். இன்றைக்கு நாமெல்லாம் எழுதுகிறோமே, வாசிக்கிறோமே, விளைவை முன்சொல்லி வினையைப் பின்சொல்லும் – அதாவது ‘the effect first and the cause thereafter’ பாணி – அதை உலகுக்கே முதன்முதலில் உருவாக்கித் தந்தவர் தொஸ்தொயேவ்ஸ்கி என்பது வரலாறு. நிகழ்ச்சி வர்ணனைகள் மட்டுமல்ல, அவரது வாக்கியங்கள் ஓரொன்றுமே அப்படியானதொரு கட்டுமானத்தில் அமைந்தவை. (மொழிபெயர்ப்பில் அதை இழந்திருப்போம்). அத்தகையதோர் எழுத்துநடை காரணமாகவே, அவரது எழுத்தில் அந்த நாடகவழக்கு.

மொழிவிளையாட்டில் ஈர்ப்புள்ள நான், அப்படி, தொஸ்தொயேவ்ஸ்கியின் ரசிகனாக இருந்ததில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் அது சு.வேணுகோபாலை வாசிக்கிற வரைக்கும்தான்.

சு.வே. ஒன்றும் எழுத்தில் சிலம்பாடுகிறவர் அல்லர். மிகச் சாதாரணமான எழுத்துநடை அவருடையது. ஆனால் அவரை வாசிக்கவாசிக்க, டால்ஸ்டாயின் சிறப்பு என்ன என்பது அதுவாகவே புலர்ந்து விடிந்தது. படித்தவற்றில் இருந்தல்லாமல் பட்டவற்றில் இருந்து எழுதுகிறாரே அதுவா என்றால், ‘ரஷ்யன் மாஸ்ட்டர்ஸ்’ எல்லாருமே அப்படித்தானே? இது வேறு விசயம்.

சு.வே.யின் எழுத்துநடை மிகச் சாதாரணமானது என்றேனா? என்றால் அது சற்று எளிமைப்படுத்தல்தான். துல்லியத்தை விவரணையில் அணுகும் ஜெயமோகனுடைய, அல்லது குட்டையைக் குழப்பி அகத்துள்ளதை புறப்பரப்பில் வாய்பிளக்க எழுப்பும் கோணங்கியினுடைய எழுத்துநடை போன்றதோ அல்ல சு.வே.யினுடையது என்றுதான் சொல்லவந்தேன்.

இந்த இடத்தில், சு.வே.யின் “சாபநினைவுகள்” கதை நினைவுக்கு வருகிறது. ”பீம்பீடகா பாறையில் உருகிவரும் நீர்முள்ளிச்சாறு பாறைக் கத்தியில் பட்டுப் பளபளக்கப் பாயும் கல்குதிரை வீரனின் பிதுங்கும் கண்களில் பீறிடும் ஒளியென தலைமுடியில் புகுந்து நரைக்கிறது…” என்றிப்படிப் புறத்துவரும் அந்தக் கதைநாயகியின் கூற்றுகள், ஒரு பகடி போன்று, யாரைச் சுட்டுகின்றன என்பதை யூகிக்க முடியும். ஆனால் அவை பகடி அல்ல; ஒரு மேதை, போதாமை மிக்க இச் சமூகச் சூழலில், எப்படி அந்நியப் பட நேர்கிறது என்பதான இதயத்தின் ரத்தக்கசிவுகள்.

அதேதான், சு.வே.யின் எழுத்துகள் எதுவுமே ஒற்றைப் பரிமாணத்திலானது இல்லை. “வட்டத்திற்குள்ளே”, அதன் நாயகி ‘வயர் கூடை’ பின்ன முடியாததைப் பற்றிய கதையன்று, அது உலக வாழ்க்கைக்கு வாக்கப்பட்ட ஒரு கலைஞனின் தோல்வி பற்றியது. அப்படி வாசித்தால்தான் அதில் வரும் கருக்கலைப்புகள் இரண்டும் கூடுதல் அர்த்தம் பெறும். அப்படி வாசிக்கத் தெரியாத வாசகர்களுக்கு சில கதைகள் மொட்டையாய் முடிவன போலவும் தோற்றம்தரக் கூடும்.

ஆக, சு.வே.யின் எழுத்துகள் மேலோட்டமாகத்தான் சாதாரணமானவை; உட்கிடையில் மிக ஆழமானவை.

அப்புறம், சு.வே. வேளாண் தொழில்சார்ந்த எழுத்துகளில் வல்லவர் என்றொரு படிமம் உருவாக்கித் தரப்படுகிறது. ஒரு கோணத்தில் அது உண்மை என்றாலும், அவர் வேளாண்மைச் சூழலை எதற்கான கருப்பொருளாகப் பயன்படுத்துகிறார் என்று புரிந்துகொள்ளும் ‘ஐவேசு’ உள்ளவர்களால் மட்டுமே அதன் ஆழத்துக்குள் போக முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு தோட்டத்தில் மிளகாய்ச் செடிகள் இலைகறுத்துச் செழித்து நிற்கின்றன. ஒரு தாய் அவற்றைப் பார்க்கிறாள். தன் முலைகளைக் கட்டவிழ்த்து, நீரோடிப் பாயும் வாய்க்காலில் பால் பீய்ச்சி விடுகிறாள். அக்கணமே தோட்டத்தின் அத்தனை செடிகளும், வான்நிறைந்த தாரகைகள் என, பூத்துப் பொலிகின்றன. இது மேஜிக்கல் ரியலிசம். மார்க்குவெஸை மேற்கோள் காட்டுவதன்றி வேறொன்றும் சாதிக்க முடியாதவர்கள் வெட்கப்படத்தக்க ‘ஒரிஜினல் இந்தியன் மேஜிக்கல் ரியலிசம்’. ஆனால் சு.வே. அப்படி ஓர் இலக்கியக் கொள்கைக்காக வலிந்து இதை எழுதவில்லை என்பது விசயம் அறிந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். (1) மிளகாய்ச்செடி பூக்காமல் இலைகறுத்துச் செழித்துக்கொண்டே போனால் அதன் விளைச்சல் பற்றிய கவலை எந்த ஒரு தோட்டக்காரனையும் தொற்றிவிடும். (2) போலவே, உடல்செழித்தும் பூப்பெய்தாத பெண்கள் பற்றிய கவலையும்.

ஆக, சு.வேணுகோபாலின் அக்கறையும் பொருள்முடிபும் வேறு.

காந்தாலட்சுமி அம்மையாரின் பெண்ணியத்தை ஆதரித்துப் பேசும் “சப்பைக்கட்டு” கதை நாயகன், தன் நண்பரின் மகன் அந்த அம்மையாரின் மகளைப் பெண்பார்க்க வந்து நிற்கையில், “பொம்பள ராஜ்ஜியம் பிடிச்ச குடும்பம்டா. ஆணாதிக்கம் அது இதும்பாளுக… வேற நல்ல எடமா பார்க்கலாம்.” என்று வெட்டி விடுகிற அந்த இடத்தில் கதை முடிகிறதில்லை. ‘திடீரென நேற்றைய கனவு நினைவுக்கு வந்தது,’ என்று இன்னொரு மட்டத்துக்கு நகர்ந்து முடியும்போது, மனித மனத்தின் கீழ்மைகளைப் பற்றி எழுதுவதில் இவர்க்கு இணை இவரேதான் என்று நமக்குத் தோன்றிவிடும்.

ஒரு சக்கிலியக்குடி மாணவன் தன்னோடு படிக்கும் ஜெயசுதாவின் முன் நல்ல உடுப்பு உடுத்தி அசத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறான். (எவ்வளவு இயல்பான ஆசை பாருங்கள்!) ஆனால் அதற்காக தன் அம்மா ஆசையாக வளர்க்கும் ஆடு குட்டிகளை விற்கும் அளவுக்கு படிப்புக்குப் பணம் வேண்டும் என்று பொய்க்காரணம் சொல்கிறான். அந்த ஆடு, குட்டிகள் பற்றிய வர்ணனைக் காட்சிகளைப் பாருங்கள்:

||குட்டிகள் தெருவில் ஏறி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக் கத்தின. ஓட்டமும் நடையுமாகக் குட்டிகளைப் பார்த்துக் கத்திக்கொண்டே நிறைந்த வயிற்றைத் தூக்கி நாலுகாலில் தடக்தடக்கென தாண்டித்தாண்டி ஓட்டத்தில் வந்தது தாயாடு. பனங்காய் போன்ற கனத்த மடியும் புடைத்த காம்புகளும் தொடையில் இடித்து இடித்து வேகத்தைத் தடுத்தன. ஓடிவந்த ஆடு அடித்தொண்டையிலிருந்து வந்துவிட்டேன் வந்துவிட்டேன் என்ற குரலை எழுப்பியது. தவ்வாளமிட்டுச் சென்ற குட்டிகள், நடுத்தெருவில், தாய்மடியில் முட்டி மண்டியிட்டன. கால்களை முட்டுக்கு ஏற்ற விதத்தில் அகட்டி வைத்த ஆடு, குட்டிகளின் ஆடுகின்ற வாலை முகர்ந்து நக்கியது. குட்டிகள் மண்டியிட்டு காம்புகளை உறிஞ்சின.||

||”என் படிப்பே போச்சு. ஆடு ஆடுன்னு சாவுறே. நான் நாசமாப் போறேன்,” என்று சண்டையிட்டான்.||

||750 ரூபாய்க்கு தாயோடு குட்டிகளை சேர்த்து விற்று, கயிறு மாற்றி, “நல்லா இருக்கணும்; பல்கிப் பெருகணும்!” என்று வாங்கியவருக்கு வாழ்த்துச் சொல்லித் தந்தாள். அம்மாவின் உதடுகள் கோணிக்கொண்டன. வாங்கியவன் இழுக்க இழுக்க அவன் பின்னால் செல்லாமல் அம்மாவைப் பார்த்துக் கழுத்தை இழுத்துக் கத்தியது கருங்கண்ணி. தொடைப்பக்கம் பிடிகயிற்றை போட்டு இழுத்துச் செல்ல பின்னங்கால்களைத் தேக்கிக்கொண்டே முகத்தை மட்டும் அம்மா பக்கம் திருப்பி, பா பா என்று கத்திக்கொண்டு போனது.||

||அம்மாவின் அடிவயிறு வெட்டிவெட்டித் துடித்தது. பற்களிடையே எச்சில் நூல் பிணைய மெல்ல வாய்திறந்து அழுது பரிதவித்தாள். ஒரு பைசா தொடாமல், “நைனா, பார்த்துச் செலவு பண்ணுடா! தம்பி தங்கச்சி எல்லாம் ஒன்ன நம்பி இருக்கு நைனா! நல்லாப் படிக்கணும் நைனா!” என்று தந்தாள்.||

இதை, “இழைகள்” குறுநாவலிலிருந்து, இடைப்பகுதிகளை வெட்டிவெட்டித்தான் ஒட்டியிருக்கிறேன். அப்படியும் கண்ணில் நீர்சோரத்தான் தட்டச்சி முடித்தேன்.

இதே போல “ஆட்டம்” நாவலில், ஒரே தாய்க்கு இன்னொரு தந்தையில் பிறந்தவள் என்றாலும் அக்கா என்றொரு உறவு வருகிறது. வாசிக்கையில் தவித்துப் போவோம். ஆனால், ஓர் ஆண் எழுத்தாளர்க்கு அம்மா அல்லது அக்கா பற்றி எழுதுவதும் ஒரு பெண் எழுத்தாளர்க்கு அப்பா (“பழையன கழிதலும்” நாவலின் அப்பா குணவார்ப்புக்காக சிவகாமியைப் பாராட்டுகிறேன்) அல்லது அண்ணன் பற்றி எழுதுவதும் பெரிய சாதனை ஆகாது என்றுதான் கருதுகிறேன்.

இந்த எல்லை விளிம்பில்தான் சு.வேணுகோபால் ஒரு நெடுந்தாவல் தாவுகிறார். “ஆட்டம்” நாவலில் குறவர்கூட்டம் பற்றிய வர்ணனைகள், மேலும் ஒரொரு கதைகளிலும் பெண்களின் பிரச்சனைகளுக்குள் உள்ளிறங்குவது; மாதவிடாய், பேறுகாலம், கருக்கலைப்பு, பால்கட்டிக்கொள்ளுதல் இன்ன சிக்கல்கள் மட்டுமல்ல, கத்திமேல் நடப்பது போன்ற ஆகும் ஆகாத் ‘தொடுப்பு’களுக்குள் விழுந்து நம்மை அலைக்கழிப்பதின் வழியாக இந்த சமூக அமைப்பின் சிக்கலான இருட்டு மூலைகளையும் சுட்டிக் காட்டுகிறார். “நிலம் என்னும் நல்லாள்” காட்டும் மனைவிதான் இன்றைக்கு நடைமுறை உண்மை. ஆனால் நம்மைப் பழைமைக்குள் வற்புறுத்தாமல், பழைமை தொட்டு, நிகழ்காலத்துக்குள் ஆற்றுப்படுத்துகிறார் பாருங்கள், அங்குதான் சு.வேணுகோபால் இன்றியமையாமை என்னும் நிலையை எட்டுகிறார்.

புதுமைப்பித்தன் போன்ற மேதைகள் கதை எழுதிய மொழி இது. தொன்றுதொட்டு வந்த தமிழ்க்குடிகளில் பிறந்து வந்தவர்கள் மட்டுமன்று, வந்தேறிய பிறகு இதனைத் தம் மொழியாக வரித்தவர்களும் எழுதிவருகிறார்கள். “நிலம் என்னும் நல்லாள்”, அப்படி, தெலுங்கர்களைப் பற்றிய கதை. ஆனால் அந்தக் கதைமாந்தர்களுடைய நிலப்பற்று, வேட்கையைப் பாருங்கள்!

சு. வேணுகோபாலின் தாய்மொழி இன்னதென்று அறியேன். ஆனால் இன்றுவரை எழுதிய தமிழ் எழுத்தாளர்களில் இவருக்கு இணை என்று சொல்ல எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம், வேறொருவரும் இவரைப்போல் எதிர்பாலினரை ஊடறுத்துக் காட்டும் நுணுக்கம் பெற்றிலர். கு.அழகிரிசாமி ஓரளவுக்குத் தேறுகிறார்; தி.ஜானகிராமன் தன் வேட்கைகளை எதிர்பாலில் ஏற்றியவர் அவ்வளவே.

தொஸ்தொயேவ்ஸ்கியின் குருஷெங்க்கா தேருகிறாள்; மற்றொரு பெண்ணும் என் நினைவில் இல்லை. ஆனால் டால்ஸ்டாயின் அன்னா, கிட்டி, மர்யா, நடாஷா, ஸோன்யா இப்படி…

இப்படித்தான் டால்ஸ்டாய் சிறந்த எழுத்தாளர் என்னும் முடிவுக்கு வந்தேன்.

-oOo-

நிலமும் நினைவும்- சு. வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நாவலை முன்வைத்து

– நரோபா

DSC_0186

சு வேணுகோபால்

“யசோதா அக்கா சூடச்சுடர் முன் மண்டியிட்டு வணங்கினாள். சேலையையும் நாடாவையும் தளர்த்தி இறக்கினாள். தொய்வில்லாமல் வயிறு புடைத்திருக்கிறது. இரு கைகளிலும் செம்மண்ணை அள்ளி ஈசான மூலை வேம்பாண்டசாமி கோயிலை நோக்கி வணங்கினாள். அந்த மண்ணைத் தன் வயிற்றில் மெல்லத் தடவ சேலையிலும் நிலத்திலும் உதிர்ந்து விழுந்தது. உதிராத மண்ணோடு சேலையை ஏற்றிக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.“
-நிலம் எனும் நல்லாள், சு.வேணுகோபால்.

சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாளில் வரும் இச்சித்தரிப்பு என்னுள் பல நினைவுகளை, கேள்விகளைக் கிளர்த்தியது. சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் முருகையாவை பார்ப்பேன். வழக்கமாகச் செல்லும் உறவினர் வீட்டு அடுக்குமாடி கட்டிடத்தின் வாட்ச்மேன் அவர். எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கூடுதல் பிரியம். பதினெட்டு ஏக்கர் நஞ்சை, தென்னந்தோப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆறாயிரம் சம்பளத்திற்காக பட்டணம் வந்து வாயில் காத்துக் கொண்டிருக்கிறார். ஊர் திரும்புவதைப் பற்றியும் மீண்டும் விவசாயம் செய்வதைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். கடந்தகாலத்து நினைவுகளும் என்றேனும் ஒருநாள் ஊர் திரும்பி விவசாயம் செய்து விட முடியும் எனும் எதிர்காலத்து கனவும் நிகழ்காலத்து அவமானங்களை அசவுகரியங்களைப் பொறுத்துக்கொள்ளச் செய்கிறது.

சென்றமுறை சென்னைக்குச் சென்றபோது முருகையா அங்கில்லை. வேறு எவரோ ஒரு கிழவர் பெரிய மீசையுடன் நின்றிருந்தார். முதுகுளத்தூரோ சிங்கம்புணரியோ தெரியவில்லை. கேட்கவேண்டும். முருகையா ஒருவேளை ஊர் திரும்பியிருப்பாரோ என மகிழ்ந்து விசாரித்தேன். அந்த பில்டர் கட்டும் புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு நம்பகமான காவலாள் தேவை என அழைத்துச் சென்றதாக சொன்னார்கள். புதைகுழியென நகரம் தன்னுள் எல்லோரையும் இழுத்துக் கொள்கிறது. இந்தக் காட்சி இந்த ஒட்டுமொத்த கதையின் சாரத்தையும் தன்னுள் திரட்டி வைத்திருப்பதாகக்கூட தோன்றுகிறது.

சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நவீன இந்திய சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளான இடப்பெயர்வை, நகரமயமாதலை பழனிகுமார் எனும் தனிமனிதனை அலகாகக் கொண்டு விரிவாகப் பேசுகிறது. நிலம், நினைவுகள், குடும்பம், பொருளியல் தேவை என பல்வேறு விசைகளால் அவன் இழுபடுகிறான். அண்ணன் தம்பியென தேனிக்கு அருகே கிராமத்தில் விவசாயம் செய்து வாழும் பெரும் குடும்பம் அவனுடையது. படித்து கிராமத்தை விட்டு வெளியேறி ஏதோ ஒரு அலுவலக வேலைக்காக மதுரைக்கு வருகிறான். வேலைபார்க்கும் மனைவியும் குழந்தைகளும் கோவைக்கருகே வசிக்கிறார்கள். விடுமுறையில் ஊரிலிருக்கும் அம்மாவையும் தம்பி குழந்தைகளையும் காண வேண்டும் என விரும்புபவன் மனைவி பிள்ளைகளைக் காணச் செல்வதோடு துவங்குகிறது கதை.

அன்னை நினைவுகளோடும் சேர்ந்து வளர்ந்த நிலத்தோடும் இணை வைக்கப்படுகிறாள். மனைவி நிகழ் வாழ்க்கையோடும் புதிய நிலத்தோடும். கதையின் துவக்கமே நேரடியாக அதன் மைய சிடுக்குக்குள் நம்மை இழுத்துவிடுகிறது. இருவேறு விசைகள் வெவ்வேறு திசைகளில் அவனை இழுக்கின்றன. ஒருவகையில் அவைகளுக்கு இடையிலான சமரச புள்ளியை கண்டடைவது தான் கதை எனலாம். பழனியின் தரப்பைப் பேசத் துவங்கும் கதை அவன் மனைவி ராதாவை முதலில் இகழ்கிறது. மெல்ல ராதாவின் தரப்பை நோக்கி நகர்ந்து அதை புரிந்துகொள்ளும் முயற்சியில் பழனியின் மனம் திறந்துகொள்வதோடு கதை முடிகிறது. புதிய நிலத்தில் வேர் துளிர்க்கிறது.

பெண்ணையும் நிலத்தையும் ஒப்பும சொல்வது நம் மரபின் வழக்கம். பூதேவி எனும் அன்னையின் வடிவமாக நம் புவியை வணங்குகிறோம். எல்லா வளத்தையும் தன்னில் புதைத்துக் கொள்பவள். வேணு இந்த உருவகத்தையே நவீன கதையாடலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். புதிய நிலத்தில் பழனி அன்னியமாகும் இடங்களை நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். பேருந்துகளில் கூட அவனுக்கு எவரும் இடமளிப்பதில்லை. பழனி தன்னை பயன்மதிப்பற்று உணர்கிறான். அவன் அங்கு எவருக்கும் தேவைப்படவில்லை. தன் பிள்ளைகள்கூட மனைவி வழி உறவையே அறிந்து வளர்கின்றன. அவனிடம்கூட ஒட்டுவதில்லை. அவர்களாவது தன்னிடம் ஒட்டவேண்டும் என ராதாவிற்கு தெரியாமல் ஆற்றுக்கு அழைத்துச் செல்கிறான். வேண்டியதை வாங்கித் தருகிறான். ஊரில் தன் சுற்றம் சூழ வாழ்ந்த போது தன் சொல்லிற்கு இருந்த மதிப்பை எண்ணி வருந்துகிறான். கதையின் கடைசியில் ஆட்டுக்குட்டியின் வயிற்றிலிருந்து சிதைந்த குட்டிகளை எடுத்து ஆட்டைக் காப்பாற்றுவதன் வழியாக தனக்கான பயன் மதிப்பை உணர்ந்து கொள்கிறான்.

கதைக்குள் கர்ணபரம்பரை கதையாக சொல்லப்படும் நாகலாதேவி கதை முக்கியமானது. நாகலாபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க பழனியின் தாத்தாவின் தாத்தா ஆறு மைல் அப்பாலுள்ள காளனூருக்கு வந்தார்கள். ‘நாகலாபுரத்தான்’ என்றே பழனியின் தாத்தா அவருடைய கூட்டுக்காரர்களால் அழைக்கப்படுவாராம். பழனியின் அப்பா காளனூரை தன் உயிராக எண்ணுபவர். பழனியின் மகன் அவன் வளர்ந்த கொங்கு மண்ணை இயல்பாக அப்படித்தான் எண்ணுவான் அல்லவா? முன் எப்போதோ இஸ்லாமிய படையெடுப்பின் விளைவாக (இதற்காக அவர் மீது இந்துத்துவ முத்திரை குத்தப்பட்டது என்றெண்ணுகிறேன்) ஆந்திரத்தில் இருந்து பெயர்ந்து தான் நாகலாபுரம் வந்தார்கள். அவர்களுடைய குலதெய்வம் நாகலாதேவி வாக்களிப்பதாக வரும் பாடலில்

‘தெற்கு நோக்கி நடங்கள்..

திருவிளக்கு நானாவேன்…

வெறியாட்டம் அடக்க..

வீரமெல்லாம் திரட்டி வருவேன்…

விட்டு வந்த மண்ணிலே..

பட்டுருள பிஞ்சுகள் வரும்.

.பட்டழிந்த காயமெல்லாம்..

செம்புழுதி மேவி ஆத்தும்…

வீரமெல்லாம் திரட்டிவர..

வேகமாக நடங்கள்.’

என்று முடியும் அப்பாடலின் இறுதியில் ‘தெற்கே வந்த நாகலாதேவி திரும்பாமலே உறங்குகின்றாள்’ என்றெழுதுகிறார் வேணு. இடப்பெயர்வு என்பது தவிர்க்கமுடியாதது என்பதை சொல்கிறது. அன்னை நிலம் பற்றிய கனவு மனிதர்களை இயக்குகிறது. ஒரு கோணத்தில் இந்த கதை நிலபிரபுத்துவத்திலிருந்து நவீன காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தலைமுறையின் அலைகழிப்பை பேசுகிறது. நவீன சமூகம் இத்தகைய பிடிப்புகளை பொருட்படுத்துவதில்லை. நிலத்தினுடனான உணர்வுரீதியான பிணைப்பை துண்டிப்பதன் வழியாகவே அது முன்னகர்கிறது.

வேணுவின் மிக முக்கியமான பலம் என்பது பாத்திரங்களை உருவாக்கி நிலைநிறுத்தும் அவருடைய முறை. நுண் விவரணைகள், மானுட இயல்புகளைப் பற்றிய கூரிய அவதானிப்புகள் மிகச் சரளமாக அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றன. பழனிகுமாருக்கும் ராதாவிற்கும் இடையிலான உரையாடல்களில் வன்மம் தெறிக்கிறது. பாத்திரங்களின் அக விவரிப்புகள் மிக நுட்பமானவை. ஆட்டம் குறுநாவலில் மத்திய வயதிலும் தனது மிடுக்கை நிரூபிக்கத் துடிக்கும் வடிவேலும், நிலம் எனும் நல்லாளில் இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் ஊடாடி புதிய நிலத்தில் வேர்விட முடியாமல் தவிக்கும் பழனிகுமாரும் அத்தனை கச்சிதமாக அவர்களுடைய கீழ்மைகளுடனும் உன்னதங்களுடனும் உருவாகி இருக்கிறார்கள்.

‘அடுத்தவனோடு தொடுப்பிருந்த’ காரணத்திற்காக புருஷனால் இடது கை வெட்டப்பட்ட மீனாட்சிபுரத்துகாரி, பொலிகாளையாக மாறி பொதபொதவென ஆன முன்னாள் கபடி வீரன் (ஆட்டம் குறுநாவல்) என முதன்மை பாத்திரங்களைத் தவிர்த்து உதிரி பாத்திரங்கள் கூட சொற்ப சொற்களில் உயிர்பெறுகிறார்கள். நினைவுகளின் வழியாக துலங்கிவரும் பழனிகுமாரின் தம்பி குமரனின் பாத்திரம் முக்கியமானது. குமரன் பள்ளி படிப்பில் ஆர்வமற்றவன். அனுபவத்தின் வழியாக விவசாய நுட்பங்களில் தேர்ந்தவன். வலிப்பு நோய்க்காரன் என்பதால் ஆசைப்பட்ட பெண்ணை அடைய முடியாதவன். குமரன் நிலத்தை தொழுதவன், அதன் ரகசியங்களை அறிந்தவன். பிற விவசாயிகள் தோல்வியடைந்த காலங்களிலும் கூட விடாப்பிடியாக விவசாயத்தை கைக்கொண்டு லாபம் பார்க்கிறான். குமரன் அவன் நம்பிய நிலத்திலேயே நிராதரவாக மூச்சடங்குகிறான். ‘எவ்வளவோ முயன்றும் மண் அவனை எழவிடாமல் வீழ்த்திக்கொண்டே இருந்தது’. நிலத்தின் மீதிருந்த இறுதி பிடிமானமும் அற்றுப் போய்விடுகிறது. பழனியால் ஒருபோதும் அவன் நிலத்திற்கு திரும்ப முடியாது.

நிலம் எனும் நல்லாள் நாவலின் இறுதியில் மாதவன் பழனியின் சிக்கலை துல்லியமாக சொல்கிறான். “நீ வாழ்ந்த்த நெனச்சுகிட்டே இருக்க. வாழப்போறதப் பத்தி நெனை. நெனைக்காதது தான் புதுசா வரும். அதுதானே வாழ்க்கை. அதுல முழுசா மூழ்கத்தான் வேணும். நீ ஒதுங்கியே நிக்கிறடா. இது இன்னொரு பயணம். நீ குதிச்சுதான் ஆகணும். தெரிஞ்சுக்கோ” என்கிறான். இப்புள்ளியில் கதை நினைவுகளுக்கும் நிகழ்காலத்திற்குமான ஊசலாட்டமாக தென்படுகிறது. வாழ்ந்த நிலமும் அன்னையும் கூட நினைவுகள் தானே. யானைக் கூட்டத்திலிருந்து விலகிய ஒற்றைக் கொம்பன் யானையை புதிய கூட்டம் ஏற்க மறுப்பதாக கனவு காண்கிறான் பழனி. பழனியால் உடலளவில் கிராமத்தை உதறிவிட முடிந்தாலும். மனதளவில் அவனால் கூட்டத்திலிருந்து தனித்து வந்துவிட முடியவில்லை. மிருகங்களால் நினைவுகளை உதறிவிட முடிகிறது மனிதர்களால் முடிவதில்லை என அங்கலாய்க்கிறான். அவை ‘நினைவுகள் குறைய குறைய தன் கடமைகள் குறைந்து நிம்மதியடைகின்றன.’ ஆனால் நாகலாதேவியை பற்றி எண்ணும் போது “உருமாறியபடியே இரு என நிர்பந்தித்தபடியே இருக்கிறது நவீனகாலம். அதனுடைய தாரக மந்திரமே அதுதானா. நினைவுகளை இழப்பது பெரும் துன்பம் தான். நவீனகாலம் மனிதர்களின் துன்பத்தைப்பற்றி நினைப்பதே இல்லை.” என்பதையும் உணர்கிறான்.

வேணுவின் மற்றொரு மிகப்பெரிய பலம் அவர் கட்டமைக்கும் புற உலகத்தில் உள்ள நம்பகத்தன்மை. அதுவே கதையில் நம்மை மனம் விலகாமல் ஒன்றச் செய்கிறது. பள்ளியளவில் சாதாரணமாக கபடியாடியிருக்கிறார் என்றறிகிறேன். கபடி களத்தை, அவர்களுடைய அசைவுகளைத் துல்லியமாக படம்பிடித்து காட்ட முடிகிறது. நிலம் எனும் நல்லாள் குறுநாவலிலும் வேளாண்மை சார்ந்த தகவல்களை செறிவுடன் அடுக்குகிறார். அது சார்ந்த நுண் தகவல்களை நுட்பங்களை விவரிக்கிறார். பல எளிய நாட்டுமருத்துவக் குறிப்புகளை அளிக்கிறார். (உண்மையில் பல வேளாண்சார் வட்டார சொற்களுக்கு குத்துமதிப்பாகத்தான் பொருள் கொண்டேன்). அன்றாட விவரணைகளில் இருந்து கவித்துவ எல்லைக்குள் அவர் தாவிச் செல்லும் இடங்கள் மன எழுச்சி அளிக்கின்றன. தன் நிலத்தில் வளரும் சூரியகாந்தி மலர்களை குமரன் காணும்போது எண்ணுவதை ஒரு உதாரணமாக கொள்ளலாம்

“சூரியன் எழும் கணத்திலிருந்து மறையும் கணம் வரை மஞ்சள் முகம் காட்டி முத்தமிடத் துரத்தியபடியே இருக்கும் பரிசுத்தம். கோடானுகோடி நட்சத்திரங்கள் ஒளிவீசி அழைத்தாலும் ஏறிட்டுபார்க்காத தியானம். இரவெல்லாம் கனவுகளைத் திரட்டி திரட்டி விடிந்ததும் தலைதூக்கி சூரியனில் விழிக்கும் மனதிடம். வேரில் பசியிருந்தாலும் முகத்திலே வாடாத மஞ்சள் பொலிவுடன் அண்ணாந்து பார்க்கும் காதல். வாட்டத்தில் தலைபாரம் தாங்காது கழுத்து வளைந்தாலும் முகத்தை தூக்க முடியாமல் தொக்கி ஓரக்கண்ணால் போகும் சூரியனைப் புன்னகையுடன் பார்க்கும் உயிர்கோலம். எவ்வளவு பெரிய சூரியன். எவ்வளவு சிறிய மஞ்சள் பூமுகம். நேருக்குநேர் யாரால் பகலெல்லாம் இப்படி முத்தமிட முடியும். ஒளிமழையில் நனைந்து கருவுறும், தாய்மையடையும்.”

மொழி, உரையாடல், நம்பகத்தன்மை, புற – அக சித்தரிப்பு, கூர்மையான அவதானிப்புகள் ஆகியவை சு.வேணுகோபாலின் படைப்புகளில் கச்சிதமாக கைகூடி வருகின்றன. எனினும் ஒரு குறுநாவல் அளிக்கும் ஒட்டுமொத்த தரிசனம் என்ன? எனும் கேள்வி முக்கியமானதே. அது புதிய திறப்பை அளிக்கிறதா அல்லது புதிய கோணங்களை முன்வைக்கிறதா? எல்லா ஆக்கங்களும் புதிய தரிசனத்தை அளித்துதான் ஆக வேண்டும் என்பதல்ல. வேணு மனிதர்களை நம்புகிறார். அவனுடைய அத்தனை சிடுக்குகளை மீறி அவன் இயல்பாக வாழ்ந்துவிட முடியும் எனும் நன்னம்பிக்கை அவருடைய படைப்புகளில் தென்படுகிறது. அந்த நன்னம்பிக்கை முன்முடிவின் அளவிற்கு செல்கிறதா? நிலம் எனும் நல்லாளை எடுத்துக் கொண்டாலும் சரி ஆட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி அவை முன்வைக்கும் இறுதி தரிசனத்தை இயல்பாக அடையவில்லையோ எனும் ஐயம் எழுகிறது.

ஆட்டம் குறுநாவலில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வடிவேல் எண்ணிப் பார்க்கிறான். நெடுங்காலமாக குறுஞ்செய்திகளில் புழங்கி வரும் ஒரு செய்தி தான். அதை நாவலின் தரிசனமாக காண்பதில் தவறேதும் இல்லை தான். ஆட்டம் என்பதே இனிமை. இழப்பதற்கு ஏதுமில்லை. இலக்குகளை அடைவதைப்பற்றி கவலையின்றி ஆட வேண்டும். ஆட்டத்தை நிறுத்திவிடவும் கூடாது எனும் தரிசனத்தை வடிவேல் அடைகிறான். ஆட்டத்தில் வெல்ல வேண்டும் எனும் வெறியடங்கி ஆட்டத்தை புரிந்துகொள்ள முயல்கிறான். ‘நிலம் எனும் நல்லாளை’ பொறுத்தவரை மாதவன் என்றொரு நண்பன் எப்போதோ கூறியதை திடிரென்று கதை முடிவதற்கு கொஞ்சம் முன் எண்ணி பார்க்கிறான் பழனிகுமார். “நீ எத்தன வருசம்டா இந்த உலகத்தில இருந்திட போற. போறப்ப எத தூக்கிட்டு போகப் போற. இருக்கிற எடத்துல நல்லத மொதல்ல பாருடா. நீ வாழ்ந்த வாழ்க்கைய உன் பிள்ளைக வாழணும்னு நெனைக்கிற..அது எப்பிடிடா?” என்றும் இன்னும் பல கேள்விகளை கேட்கிறான், ஆலோசனைகளை சொல்கிறான். வேணுவின் படைப்புகளில் பிரசார தோனி எழுகிறது என விமர்சகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இத்தகைய முடிவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. மையப் பாத்திரத்தின் நகர்வு இயல்பாகவும் அழுத்தமாகவும் அந்த பார்வையை அடையவில்லை என்பதே நிலம் எனும் நல்லாள் மற்றும் ஆட்டம் ஆகிய படைப்புகளின் பலவீனம். ஒருவேளை இன்னும் விரித்து எழுதி இருந்தால் இது நிரடாமல் இருந்திருக்கும்.

வேணு ஆணாதிக்க எழுத்தாளர் என்றொரு விமர்சனமும் வைக்கபடுவதுண்டு. ஆனால் அது ஏற்புடையதல்ல. நிலப்பிரபுத்துவ மனநிலையை பிரதிநிதிப்படுத்தும் ஆண் கதையின் பிரதான பாத்திரமாகிறான். அவனுடைய தரப்புகளும் சிந்தனைகளும் எப்படி இருக்குமோ அதைத்தான் அவர் எழுதியிருக்கிறார். பிற பாத்திரங்கள் வழியாக அதைக் கேள்விகுட்படுத்தவும் செய்கிறார். பழனிக்கு எப்படி தன்னுடைய நிலத்தைப் பற்றிய கனவு இருக்கிறதோ அப்படி ராதாவிற்கு தனது நிலத்தை பற்றிய பெருமிதமும் பிடிப்பும் இருப்பது இயல்பே என்பதையும் பதிவு செய்கிறார். விவசாயம் நிலம் என கனவு கண்டுகொண்டிருக்கும் பழனியிடம் இத்தனை இருந்தும் நீ ஏன் கிராமத்தை விட்டு வெளியேறினாய்? எனும் கேள்வியை மாதவன் நேரடியாக பழனியிடம் கேட்கிறான்.

வேணுவிற்கு மனப்பிறழ்வு கொண்டவர்கள் மீது ஒருவித ஈர்ப்பிருக்கிறது. அவர்களின் களங்கமின்மை கடவுளுக்கு நிகராக எண்ணச் செய்கிறது. ஆட்டத்தில் வரும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஓட்டப்பந்தயத்தை போலவே நிலம் எனும் நல்லாளிலும் மாசாணி எனும் பதின்மூன்று வயது சிறுமி வருகிறாள். புதிய ஊரில் பழனி நெகிழும் முதல் நட்பு. அந்த மண்ணின் மீது அவனுக்கு ஒரு பிடிப்பு பிறக்கிறது.

தொலை நிலங்களில் வாழ்பவர்கள் எப்போதும் தங்கள் நிலத்திற்கு திரும்புவதைப் பற்றிய கனவுகளைச் சுமந்து அலைகிறார்கள். நிலம் வெறும் இடம் அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறையின் பிரதிநிதி. நினைவுகள் பின்னிக் கிடக்கும் அடர் கானகம். அதுவும் பெரும்பான்மை வேளாண் சமூகமாக இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் நிலம் ஆன்மாவிற்கு அணுக்கமானது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய சமூகம் அதிவேகமாக நிறம் மாறி வருகிறது. நான் வாழும் பகுதியில் வேளாண்மையைக் கைவிட்டவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்குச் செல்வதை பார்க்கிறேன். சேற்றைக் காட்டிலும் சிமிண்டு கறை படிந்த கால்களையே அதிகமும் காண முடிகிறது. ஒரு மிகப்பெரிய உளவியல் மாற்றத்தின் குறியீடாக இதைக் காண்கிறேன். இயற்கையின் தயவில் இருந்த வாழ்வாதாரத்தைக் கைவிட்டு இயற்கைக்கு எதிராக வீம்புடன் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களை நம்பத் துவங்கிவிட்டார்கள். நிலம் மனிதர்களைக் கைவிடுகிறதா? அல்லது மனிதர்கள் நிலத்தைக் கைவிடுகிறார்களா? எனும் கேள்விக்கு அத்தனை எளிதாக விடையளித்துவிட முடியாது.

இறுதியில் பழனி எந்த நிலமும் எவரையும் வஞ்சிப்பதில்லை எனும் இடத்திற்கு வந்து சேர்கிறான். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் வந்தடைந்த அதே இடத்திற்க- “யாதும் ஊரே ..யாவரும் கேளீர்”

பிறவிப் பெருங்கடலும் சிற்றின்ப நதிக்கரையும்…

– குமரன் கிருஷ்ணன்

venu

சு வேணுகோபால்

பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதை மெய்ஞானப் புலம்பல் என்பார் மேலோர்…நீந்திக் கடப்பது கிடக்கட்டும். நினைத்த போது கரையில் அமர்ந்து களித்து, அலையில் கால் நனைத்து, பின் “வீடு” திரும்ப, பிறவிப் பெருங்கடல் ஒன்றும் மெரீனா பீச் அல்ல என்ற அறிவு நமக்கு எட்டுவதற்குள்ளாகவே ஆயுளில் பாதி பூமியில் புதையுண்டு விடுகிறதே! பெருங்கடலில் கலக்கும் சிற்றின்ப நதிகளின் வழியே கழிமுகத் துவாரங்களை தேடியபடி பருவத்தின் படகில் சஞ்சலத் துடுப்பு போட்டுத் திரிவதுதானே நம்மில் பலருக்கு சாத்தியப்படுகிறது!

இந்நதிகளில் பெரும்பாலும் ஒரு கரை “பெண்” எனலாம். “பெண்மை” என்று எழுத மனது விழைந்தாலும், முன்னர் ஒருபொருட் பன்மொழி போல் தெரிந்த “பெண்”ணும் “பெண்மை”யும் இப்போது காலம் போகும் போக்கில் இரட்டுற மொழிதல் ஆகி விட்டதோ என்ற ஐயம் இருப்பதால் “பெண்” என்று எழுத வேண்டியாயிற்று. ஆனால் வேணுகோபால் தனது “ஆட்டத்தில்”, “உள்ளுக்குள் கனலாய் பொங்கி எரியும் அணங்கு. நெருப்புக்குள் தீமை தங்காது. உண்மையே சுடர். சரி தவறு, நிறை குறை, கற்பு கறை எதுவும் பெண்ணிற்கில்லை. அவள் தாய். பெண்மை என்றாலே தாய்மைதான்” என்று இந்த ஐயத்திற்கு ஒரு தெளிவும் மேன்மையுறு வடிவும் கொடுக்கிறார். இதை வாசிக்கும்பொழுதே “பெண்” என்பதை “பெண்மை” என்று எழுத வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?

இப்படி ஒரு கரை பெண்ணாகி (பெண்மையாகி) விட்டபோது மறுகரை மட்டுமே பிறவிப் பெருங்கடல் பயணத்தில் அனுபவ மாறுபாடுகளை உருவாக்குகிறது. இந்த “மறு கரை”யின் பண்பு மற்றும் வாழ்வியல் வடிவங்கள் ஆகியவற்றின் சாரம் பெரும்பாலும் மண் சார்ந்து இருக்கிறது. இப்படி பெண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சுழலும், சிற்றின்பச் சுழலில் உழலும் உள்ளத்தின் ஊசலாட்டங்களை நம்முன் நிறுத்துவதே வேணுகோபாலின் படைப்புகள்.

சு வேணுகோபாலின் சிறுகதை மற்றும் நாவல் கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபட்ட அடிப்படை கோணங்களை நாம் கண்டடைய முடியும்…அவரின் சிறுகதைகள், பெண்களின் பார்வையில், அவர்களையே மையமாக்கி கதை சொல்கிறது. அவரின் குறுநாவல்களோ ஆணின் மனக்கண்ணாடி வழியே, பெண்ணைப் பேசுகிறது. ஆனால் அவரின் அனைத்து படைப்புகளுமே, மேற்சொன்ன கழிமுகங்களே கதியென்று நகரும் கதை நாயகன் நாயகிகளை அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தி முதிர்ச்சியின் முகவரி காட்டி பெருங்கடலின் பொருள் புரிபடத் துவங்கும் பூரிப்பை முன்னிறுத்தியே முடிகின்றன.

ஒவ்வொரு படைப்பிலும், நம்மை வெவ்வேறு அனுபவ பரிசலில் அமர்த்தி வைத்து “இரு கரைகள்” ஊடே சலனத்தின் வழி “பெருங்கடல்” நோக்கி நம் முதிர்ச்சியின்மையை செலுத்துவதே வேணுகோபாலின் கதைசொல்லும் பாங்கு. அத்தகைய பாங்கு, சாமானிய மனித மனங்களுக்குள்ளும் பிரத்யேக அனுபவங்களைக் கண்டடையும் சாத்தியங்களை படைப்புகளின் அடியில் தாங்கி நிற்பதோடு, படைப்புக்கும் நமக்கும் ஒரு “தொடுகை” ஏற்படுத்தும் ஊக்கியாகவும் உருவெடுக்கிறது. அந்தத் தொடுகைக்கான நொடியை காலம் எங்கே பதுக்கி வைத்திருக்கிறது என்பது எப்போதும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.

கல்லூரி சேர்ந்த புதிதில் நண்பர்கள் குழாமுடன் அவ்வப்போது அழகர் கோயில் செல்வதுண்டு. அருகில் சாலையோர மரங்களின் அடியில் கவிந்திருக்கும் நிழல்களில் சைக்கிளில் இளநீரும் நுங்கும் விற்போர் நிறைய தென்படுவார்கள். அத்தகைய ஒரு பயணத்தில், எங்கள் குழு, ஒரு முதியவரிடம் நுங்கு வாங்க நின்றது. என் நண்பன் எங்கள் அறியாமையை வெளிப்படுத்தும் வண்ணம் “நிறைய வரும்படி வெட்டுங்க” என்றான். “எந்த காயை சீவினாலும் மூணுதான் தம்பி இருக்கும்” என்ற முதியவர் ஏதோ தோன்றியது போல், சற்று நேரம் கழித்து, அங்க பாருங்க என்று தொலைதூரம் கைகாட்டினார். எங்களுக்கும் தொலைவில் தெரிந்த யானைமலைக்கும் இடையே, கூட்டத்தில் இருப்பது போல் தோன்றினாலும் பனை மரங்கள் ஆங்காங்கே ஒன்றுக்கொன்று பகை கொண்டது போல் தனித்திருந்தன.

பனைமரங்கள் பார்க்கும்பொழுதெல்லாம் ஏன் அவை சந்தோஷத்தின் சாயல் கொண்டவையாக இருப்பதேயில்லை என்ற எண்ணம் எனக்குத் தோன்றுவதுண்டு. தனிமை, வெறுமை இவற்றின் உணர்வுகளை ஊட்டுவதாகவே பனை இருக்கிறது. ஆங்கு தெரிந்த பனைகளில் ஒன்றைச் சுட்டி, “அதுக்கு பேரு கூந்தப்பனை, காய்க்காது” என்றார். முதல் பார்வைக்கு வித்தியாசம் தெரியாவிடினும், கூர்ந்து நோக்கின் பனைத் தோகைகள் தலைகீழாய் கவிழ்த்து வைத்தது போலிருந்தன. சுமார் பத்து வருடங்கள் கழிந்திருக்கும். சென்னையில் புத்தகக் கடை ஒன்றில் “கூந்தப்பனை” என்னும் புத்தக அட்டை பார்வையில் பட்டபொழுது அழகர் கோயில் செல்லும் சாலையும் அன்று முதியவர் காட்டிய பனை, அதன் பொருள்தனை நினைவில் நிறுவிச் சென்றது. வேணுகோபாலின் படைப்புகளுக்கும் எனக்கும் “தொடுகை” நேர்ந்த நொடி அது.

அன்புக்குரியவர்களோ அல்லது அன்புக்குரியவர்கள் என்று தப்பிதமாக நாம் புரிந்து கொண்டவர்களின் மகிழ்ச்சியின் பொருட்டு என்ற நம் நினைப்பின் பிழையால் நிகழ்ந்து விடும் விட்டுக்கொடுத்தல்களிலும் விட்டுவிடுதல்களிலும் அக்கணத்தின் மகிழ்ச்சி மறைந்தபின் மனம் எதிர்கொள்ளும் அலைகழிப்புகளின் பரிமாணங்களே வேணுகோபாலின் பல படைப்புகளின் அடிநாதம். கூந்தப்பனையும் அத்தகை ஒரு கதையே. மண் சார்ந்த உள்ளுறை உவமங்களின் மூலம் கதையின் கருவை உள்ளீடு செய்யும் வேணுகோபாலின் நேர்த்திக்கு இக்கதையின் அறிமுகப் பத்தியே சான்று. “சாகும் தறுவாயை உதறிய சில மரங்களின் குருத்து ஓலைகள் இளம் பச்சையை நீட்டிக் கிடந்தாலும் ஓரங்கீற்று நுனிகள் ஏற்கெனவே காய்ந்து கிடந்தன. துளிர்த்திருக்கின்ற கீற்று அவனுக்கு நிம்மதியைத் தந்தது” என்னும் வரிகளின் வழியே மொத்தக் கதையையும், கதை நாயகனின் மனம் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தையும் சொல்லி விடுகிறார். மண், இயற்கை இவற்றையே இடுபொருளாய் வைத்து அவர் மிக எளிதாய் ஆழமான தத்துவ விசாரங்களை அடுக்கிக் கொண்டே போவதை பல கதைகளில் பல இடங்களில் காணலாம்…கூந்தப்பனையில்கூட, காமத்தின் பிடியில் நகரும் கதையை இவ்வாறே அவர் ஞானத்தின் நிழலுக்குத் தள்ளுகிறார். அற்புதமான‌ அந்தப் பத்தியை படித்துப் பாருங்கள்: “மரம் அழகைச் சொரிகிறது. பூக்களையும் இலைகளையும் உதிர்க்கிற இலையுதிர்காலம் மரத்திற்கு அழகற்றதா? ஜீவன்களின் பரிதவிப்பில் அழகு துடிப்பதாகத் தோன்றுகிறதே… …அழகு கிழண்டு போகுமா? அழகிலிருந்து அழகு விடைபெறுமானால் அழகின் உயிர் எப்படிப்பட்டது? தங்கியிருந்த இடத்தின் பொருள் என்ன? உயிர்ப்பு எது? அழகு புறம் என்றால் அதன் கரு?…” இம்முதிர்ச்சியின் வழியே, பெண்ணிலிருந்து துவங்கும் மனதின் அலைக்கழிப்பு, மண் சார்ந்த மனதின் தழுவலில் ஒரு மகானுக்குரிய மேன்மை அடைகிறது. கதை முடிகிறது.

“அபாயச் சங்கு” கதையில், “அகத்திமர இலைகள் தூங்க ஆரம்பித்து விட்டன. கீரைக்குன்னாலும் ஆட்டுக்குன்னாலும் ஆறு மணிக்கு முன்னாடி பிடுங்கணும்” என்று எளிதாய் ஏதோ சொல்வது போல் சொல்லி, “ஆனால் களவு போவது என்னமோ ராத்திரியில் தான்” என்று ஒரு பொடி வைத்து, “எதை சொல்லி வைக்கிறோமோ அதற்கெதிரான துருவம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் சொல்லி வைப்பதையே பிரதானப்படுத்துகிறார்கள். மீறலில் விளைந்த நிறமாலை” என்று அதனடியில் பரவும் தத்துவ மணத்தை நாம் நுகரத் தருகிறார்! மெதுவாக இறங்கும் தத்துவம் மட்டுமில்லை, நம் அனுபவ எல்லைகளை மீறி கால் வைக்கையில் நம்மை பிளக்கும் கண்ணி வெடிகளும் உண்டு! உதாரணமாக:

“மனக்கடலின் மீனுக்குக் கரையில்லை…”

“புகை மூட்டத்துக்குள் தூங்கும் கங்கு…”,

“கருங்கூந்தல் அதுவாக வெண்மையைத் தழுவிக் கொள்வதுபோல் ஆனந்தம் சோகத்தைத் தழுவத் தன்னையறியாமல் பயணம் மேற்கொண்டிருந்தது…”

என அவரின் வரிகளுக்கிடையில் நம் நொடிகள் தேங்கிக் கிடப்பதுண்டு.

வேணுகோபாலின் பிரதான கதைமாந்தர்கள் அனைவருமே “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற எண்ணத்தை அடியொற்றிருப்போராகவே இருக்கின்றனர். அதன் குறியீடு போன்றே, கதைக்களத்தில் உணர்வுத்தறியின் ஊடுபாவு போல மண் செடி கொடி மரங்கள் ஒன்றி வலம் வருகின்றன. எனவேதான், தங்கள் வாழ்வில் பெருத்த அவலத்தில் தவிக்கும்பொழுதும் “திராட்சைக் கொடியை பிஞ்சில் வெட்டுவது பாவமில்லையா” என்று அறுபது கடந்த முதியவரால் யோசிக்க முடிகிறது [“கண்ணிகள்”]

மோட்டார் போடு தாத்தா தென்னை மரம் பாவம்” என்று ஐந்து வயது சிறுவனாலும் யாசிக்க முடிகிறது [“உயிர்ச்சுனை”]. கொடுக்காப்புளி மரத்தை விவரித்துக் கொண்டே போய் “வீட்டையே உயிர்ப்பித்து விடும் மரம்” என்று முடிக்க முடிகிறது [“புற்று”]…ஒரு தொட்டிச் செடி கூட வைத்துக் கொள்ள இடமின்றி, அதனுடன் ஒட்டிக் கொள்ள நேரமின்றி ஓடும் நம் வாழ்வின் வறட்சியை உணர்ந்து ஏக்கம் கொள்ள வைக்க முடிகிறது…தன் வாழ்க்கை ஞாபகங்கள் முழுவதையும் தோட்டத்தின் பொழுதுகளாய், அத்தோட்டத்தின் நினைவுகளையெல்லாம் தன் பிள்ளைகள் வளர்ந்த காலத்துக்குள் அடைக்க முயல்கிறது [“தாய்மை”]…தன்னை கண்டதும் தீவனம் கொண்டு வந்திருக்கிறானோ என்று பசு எழுந்து நிற்பதாக எண்ண வைக்கிறது…வைக்கோலை திருட வைக்கிறது [“புத்துயிர்ப்பு”]…ஒவ்வொரு கதையிலும், ஒரு முறையேனும் விவசாயம் சீரழிந்து போன விசனத்தை விபரமாக தன் எழுத்தில் வித்திட முடிகிறது… வேணுகோபாலால்…

வேணுகோபாலின் சிறுகதை சாளரத்தில் வழி தெரியும் பெண்மையின் விசாலங்களும் வேதனைகளும்தான் எத்தனை எத்தனை! “இளவெயிலில் உலகமே ஒரு குழந்தை” என எண்ண வைக்கும் “பேதை”…, ஒரு நாய்க்குட்டி, பெண் என்பதாலேயே அதனை தெருவில் விடச்சொல்லும் அம்மாவிடம் சிறுமி, “அம்மா நான் உங்கூடயே இருக்கேம்மா என்னை தொலைச்சிடாதம்மா” எனக் கெஞ்சும் “புற்று”…, கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ரணங்களை ஒற்றைச் சிரிப்பைக் கொண்டே மருந்து போட்டுக்கொள்ளும் “கிடந்த கோலம்”…,”அவளின்” நடுங்கும் கரங்களை வைத்தே நம் மனசாட்சியை நடுங்க வைக்கும் “வெண்ணிலை”…,வாழ்ந்து கெட்ட “காரைவீட்டுக்காரி”யின், ஊருக்கு செழிப்பு வேண்டும் என்ற வரம் கேட்கும் “தாய்மை”…, நாள்தோறும் சாலையில் நம்மை கடக்கும் கணக்கற்ற பெண்களின் அடியில் உறங்கும் “உள்ளிருந்து உடற்றும் பசி”…

தன் எழுத்து ஒவ்வொன்றையும் இழைத்து, மனிதத்தின் கூறுகளை அதன்வழி நுழைத்து, நமக்குள் அகம் பற்றிய சிந்தனை ஆர்த்து அவர்பால் நம்மை ஈர்த்து விடும் வேணுகோபாலின் ஒவ்வொரு படைப்பை படித்து முடிக்கையிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றாமைகளும் ஆதங்கங்களும், தீதும் சூதும் சற்று நேரமேனும் கழன்று நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தின் உயிர்ப்பின் மீதும் பெருங்கருணைப் பார்வை விரிந்து அன்பு நெகிழ்ந்த மனதின் மணம் உள்ளிருந்து உவகையாய் ஊற்றெடுப்பதை உணர முடியும்.

மனித வாழ்வின் அகவல் – ‘ஆட்டம்’ குறுநாவல்

ரா கிரிதரன்

venu

சு வேணுகோபால்

சு.வேணுகோபால் எழுதிய “ஆட்டம்” குறுநாவல் மேலோட்டமாகப் பார்க்கையில் பிரிவைப் பற்றிய கதை என்றாலும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளின் போது தனி மனித மனம் கொள்ளும் ஊசலாட்டங்களைப் பேசும் படைப்பாகவும் அமைந்திருக்கிறது. பிரிவின் துயரை ஏற்க மறுக்கும்போதும், அதை உண்டாக்கியவர்கள் மீது அதீத வெறுப்பும், கோபமும் உண்டாக்கும் மனதின் அனத்தல்கள் மீது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. பலதரப்பட்ட படைப்புகளில் கையாளப்பட்ட கருவாக இருந்தாலும் சு.வேணுகோபால் பயணம் செய்யும் வழிகளும், அடையும் முடிவுகளும் அவருக்குரிய முறையில் தனித்துவமாக இருக்கின்றன.

பிரிவின் துயர் பற்றிய பேசுபொருள் தமிழுக்குப் புதிய கதைக்களன் அல்ல. நம் காவியங்களிலும் பிரிவு மிக விரிவாகக் கையாளப்பட்டுள்ளது. நெய்தன் நிலப்பறவையான அன்றிலின் பிரிவு, தென் அமெரிக்கப் பறவையான Candor அனுபவிக்கும் பிரிவு என மனிதன் உட்பட ஒவ்வோர் விலங்கும் பிரிவின் வேதனையை வெவ்வேறு விதத்தில் ஏற்றுக்கொள்கின்றன. சங்கம் முதல் காப்பியங்கள், சிலம்பு, நவீன ஆக்கங்கள் வரை பிரிவின் துயர் பற்றிப் பல பெருங்கதைகள் உள்ளன. ராமன் தற்கொலைக்கு முயல்கிறான், சாமானியளான கண்ணகி அரசவை நுழைகிறாள் – ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் பிரிவின் துயரை எதிர்கொள்கிறார்கள். பல கதைகளில் பிரிவு என்பது பெருநிகழ்வுக்கான முகாந்திரமாக இருக்கிறது. கொந்தளிப்பான சமூக நிகழ்வாகவும், அறமீறலின் எதிர்ப்பைக் காட்டவேண்டிய அவசியத்தை பிரிவுகள் உணர்த்துகின்றன. இவ்வகையில் “ஆட்டம்” குறுநாவல் பிரிவின் விசாரணையை பல தளங்களில் மேற்கொள்கிறது.

“ஆட்டம்” எனும் குறுநாவலின் கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வீரபாண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். முல்லையாற்றின் நிலப்பகுதி. ஊரெங்கும் சோளக்குருத்துகளும் வாகை மற்றும் பூவரச மரங்களும் நிரம்பியிருக்கும் செழிப்பான பூமி. மழைக்குப் பஞ்சமில்லாததால் விளைநிலங்களுக்கும் குறைவில்லை. வீரபாண்டியில் பிரதானமான விளையாட்டு கபடி ஆட்டம். குஞ்சு குளுவான்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை ஆட்டம் என்றால் கபடிதான். தேனிப்பகுதியைச் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பல கபடி குழுக்கள் வீரபாண்டியில் சந்தித்து போட்டிபோடும். அவர்களுக்கு அது பெருமை தரும் விஷயம். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் கபடி போட்டியில் வீரபாண்டிக்கு இருக்கும் அதிகாரம் தேனி பகுதியில் வேறு ஊருக்கு இல்லை.

அப்பேற்பட்ட வீரபாண்டியில் வடிவேல் கபடி விளையாட்டில் தெய்வமென மதிக்கப்பட்டவன். வடிவேல் ஆடுகிறான் என்றால் ஐந்து வயது குழந்தை முதல் பல் போன கிழவர்கள் வரை கோமாரியம்மன் திடலில் கூடிவிடுவார்கள். பதினெட்டு வயது முதல் கபடி வீரனாகத் திகழ்ந்த வடிவேலுவின் கதையைச் சுற்றிப் பின்னப்பட்டது இந்த குறுநாவல். பதினெட்டு வயது முதல் இருபத்து நான்கு வயது வரை கபடி மட்டுமே அவனது நினைப்பாக இருந்தது. வைரமணி, பிரேம்குமார், காளையன் எனும் நண்பர்களோடு நான்கு கட்டங்களில் நடத்தும் சாகஸங்கள் தேனி மாவட்டம் முழுவதும் மிகப் பிரபலம்.

நான்கு திசைகளில் சென்றுவிட்ட நண்பர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் வலிகளையும் பேசத்தொடங்கும் கதை நெடுக அவர்களது ஆட்டத்தின் திண்மையும் வெளிப்படுகிறது. வடிவேல் காதலில் விழுகிறான்; ஆனால் தோற்பதில்லை. திருமணத்தில் முடியும் காதல் ஒரு கட்டத்தில் கைநழுவுகிறது. நான்கு கட்டத்துக்குள் தனது சாகஸ ஆட்டத்தை நிகழ்த்தி வெற்றி வீரனாக வந்தவன் வாழ்க்கையின் போராட்டங்களை திருமணம் முடிந்த பின் சந்திக்கிறான். காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டு முறைமாமனை தாக்கிவிட்டு இருபத்து நான்கு வயதில் ஜெயிலுக்குச் செல்கிறான். சில வருடங்களில் வெளியே வந்தவன் தன் மனைவியின் காதல் கழன்றுவிட்டதை உணர்கிறான். பிள்ளைகள் ரெண்டான பின்னும் அவனது மனைவி கனகத்துக்கு வேறொருவனுடன் தொடர்பிருப்பதைக் கண்டு பதறுகிறான். அவன் வாழ்க்கையிலிருந்து ஆட்டத்தையும், ஆட்டத்திலிருந்து வாழ்க்கையையும் பற்றிவிடமுடியும் எனும் எண்ணத்தோடு தனது முப்பத்து ஐந்தாவது வயதில் மீண்டும் கபடிப்பயிற்சி செய்யத் தொடங்குகிறான்.

நிகழ்காலமும் பழைய நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்து வளரும் கதையில் வடிவேலுவின் சமூக உறவு தத்ரூபமாக வெளிப்பட்டிருக்கிறது. இளவயதில் கபடி ஆடும்போது அவனுடைய நண்பர்களான காளையன், பிரேம்குமார், சுருளி போன்றோர் காதலுக்கும் அவனுடைய விளையாட்டுக்கும் மிக்க உறுதுணையாக இருக்கிறார்கள். அவனுடைய ஒவ்வொரு நினைப்பும் விளையாட்டில் தனது உடலின் பெளதிக இருப்பைக் கடந்து சாகஸங்கள் நடத்தும் கனவில் திளைக்கிறது. உடலைக் கட்டுமஸ்தாக மாற்றுவது ஒரு பயிற்சி என்றாலும் மனதின் அமைதியும் ஆட்டத்துக்கு இன்றியமையாத ஒன்றுதான். உடலும் மனமும் ஒருமுகத்தோடு இயங்கும்போது அவனால் பெளதிக இருப்புகளைக் கடக்க முடிகிறது. லயத்துடன் கூடிய சீர்மை அவனுக்குள் மட்டுமல்ல அவனைச் சுற்றியிருக்கும் சமூக உறவுகளிலும் பிரதிபலிக்கிறது. நண்பர்களுடனான உறவின் இனிமையிலும், அவர்களது சுகதுக்கங்களில் ஒருங்கிணைய முடியும் இயல்பும் வடிவேலின் ஆதார குணங்களாக வெளிப்படுகின்றன.

ரயில் தண்டவாளத்தில் நடக்கும் சைக்கிள் போட்டியில் திறமைவாய்ந்த பிரேம்குமார் ரயில் ஓட்டத்தில் சிக்கி இறப்பதும், உடல் உறுதியை சித்தியினுடனான உறவில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வாழ்க்கையைத் தொலைத்த காளையனின் இழப்பு, தாயைக் காணாது வீட்டிற்கும் ரோட்டிற்கும் திரியும் வடிவேலின் நாயின் அலைக்கழிப்பு என ஒவ்வொருவரின் வாழ்க்கைப் போராட்டமும் கதையில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. உடலை போகப்பொருளின் உச்சகட்டமாக நினைத்து அதை மட்டுமே போஷித்து சிற்றின்பங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குள் சீர்மையற்ற மன ஆட்டத்தை வாழ்வின் ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள். நடக்க முடியாமல் உடல் வீங்கிப் போகும் காளையன், ரெண்டாம் முயற்சியாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கும் வடிவேல், முதல் உறவின் வழியே ஒரு பெண்ணைப் பெற்ற வடிவேலுவின் தாய் போன்றோர் நடுவயதில் வாழ்வின் அலைகழிப்புகளுக்கு ஆளாகிறார்கள். உடலின் ஆசைகளை நெடுகப்பற்றி வாழ்வு மீதான நம்பிக்கை மீது கவனத்தை கூட்டாது சிதறவிட்ட தருணங்கள் நாவலில் நிறைய உண்டு.

நாவலில் பொருந்தாத சித்திரம் வடிவேலு காமத்தைப் பற்றி அனத்தும் பகுதிகள் எனத் தோன்றியது. சித்தி நாகமணிக்கும் காளையனுக்கும் இருந்த உறவு தகாத காமத்தின் பயனாகத் தொடங்கிய ஒன்று. காளையனின் இளமையை கடைசி சொட்டு வரை உறிந்து ஐம்பது வயதிலும் தனது உடலைக் கட்டுக்கோப்பு குலையாது வைத்திருக்கும் நாகமணி கொன்று உண்ணும் யட்சி போன்றவள். காமத்தில் பிறந்து நிராகரிப்பிலும் நம்பிக்கை துரோகத்திலும் முதிர்ந்த இந்த உறவு நாவலில் மிக உயிர்ப்பானப் பகுதி. அதே நேரத்தில், காதலில் பிறந்து காதலைத் தக்கவைக்கப் போராடும் வடிவேலு – கனகம் உறவில் காமத்தின் ஏக்கம் ஆசிரியரை மீறி ஒட்டவைத்த ஒன்றாகவே தோன்றியது. வயதான பின்னர் ஆட்டத்தில் தோற்பதும், கனகுவின் கள்ளக்காதல் தன் மூக்குக்குக் கீழே நடப்பதை கண்டும் தடுக்க முடியாமல் தவிப்பதும் தனது செயலின்மையால் என நினைத்தாலும் உடலுறவில் அவள் மீதான ஆதிக்க நினைப்புக்கு கதையில் எந்த முகாந்திரமும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஒரு விதத்தில் நடுத்தர வயதில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் வடிவேலு தனது வாழ்க்கையையும் கனகுவையும் மீட்டு விடலாம் என எண்ணுகிறான். நேரடியாக இல்லாவிட்டாலும் அவனது முயற்சியில் இளமையை மீட்ட நினைக்கும் சாத்தியங்கள் காதலின் தேவையை உணர்வதால் மட்டுமே எனத் தோன்றுகிறது. நாகமணி மீதான காம இச்சை கூட இக்காதல் கைகூடாத இயல்பினால் விளைந்த எரிச்சல் தான்.

கோமாரியம்மன் திருவிழா சமயங்களில் பக்கத்து ஊரில் வசிக்கும் தனது அக்காவின் ஆசிர்வாதத்தை வாங்கும் வடிவேலு இம்முறையும் அதற்காகக் காத்திருக்கிறான். முதல் உறவில் பிறந்தவளை அவனது தாயும் ஒவ்வொரு வருடமும் திருவிழாவின்போதுதான் சந்திக்கிறாள். குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக இது இருந்தாலும், அக்காவின் ஆசிர்வாதம் நம்பிக்கையை கூட்டும் என வடிவேலு நினைக்கிறான். கனகம் தனது கள்ளக்காதலனுடன் பெங்களூரில் வாழ்வதாகத் தெரிந்துகொண்டவன் அவளை சந்திக்க ஊருக்குப் போகலாமா என நினைக்கிறான். கோமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அக்காவிடம் இதைப் பற்றி கேட்கத் தயாராகும்போது அவள் வரவேயில்லை. வடிவேலுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியாகும் நிலையில் மனசஞ்சலத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான். ஒவ்வொரு வருடமும் தீச்சட்டி தூக்கி பிள்ளை வரம் கேட்டு வரும் அக்கா அந்த வருடம் ஏன் வரவில்லை? தாயன்பை எதிர்பார்த்து வருடாவருடம் வரும் அவளை சந்திக்கும்போதெல்லாம் வடிவேலுவின் தாய் பரிமளம் தன்னியல்பை மறந்திருப்பாள். சந்திக்க முடியாமல் போகும்போது அவள் இத்தனை காலமாகத் தேடி வந்ததன் அர்த்தம் புரியாமல் குழம்புகிறான்.

நாவலின் ஆழமானப் பகுதிகளில் ஒன்றாக இந்த அக்கா, அம்மா, வடிவேலு உறவு இருக்கிறது.கனகம், அம்மா, அக்கா எனத் தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களிலெல்லாம் எதைத் தேடுகிறான் வடிவேலு? நிச்சயம் காமம் அல்ல. காமத்தின் பல அலகுகளையும் அதன் தாக்கங்களையும் நண்பர்களின் வாழ்விலிருந்து அறிந்துகொண்டுவிட்டிருந்தான் வடிவேலு. கனகம் திரும்ப வந்தாலும் அவளோடு தினமும் கூடியிருந்து தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க நினைக்கிறான். அந்த நினைப்பு கூட அவனது நிறைவேறாத காமத்தினால்லாமல் அவள் மீதிருக்கும் கோபத்தால் விளைந்த ஒன்றுதான்.

திருவிழாவின்போது அக்கினிப்பெண்கள் ஏந்தி வரும் தழல்களைச் சுற்றி ஊர் திரண்டிருக்கும் காட்சி வடிவேலுவுக்கும் பெண்களுக்குமான உறவை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. அப்பெண்களில் சாமி ஏறுவதை ஊரே திரண்டு பயபக்தியோடு பார்க்கிறது. அவர்களது உதடுகள் ஊடறுத்து வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது. உறுமியும் கொட்டும் முழங்க அந்த ஏழைப் பெண்கள் நெருப்பேந்திச் செல்கிறார்கள். பொதுவாகவே யாரும் மதிக்காத குழுவினர். கூட்டத்தில் வடிவேலு அவர்களைப் பார்த்தபடி நிற்கிறான். அவன் முன்னால் தழலேந்தி வரும் அக்கா சட்டென கண்கள் விரிய நிற்கிறாள். அவன் தடுமாறுகிறான். சாமி நம்பிக்கை இல்லாதவனாகக் காட்டப்பட்டவன் தடுமாறுகிறான். ஆனால் தப்பி ஓடவில்லை, “கண்ணைத் திற” என்றாள் அக்கா. அவன் நிலைகுலைந்து பார்க்கிறான். அங்கு வேறு யாருமில்லை என்பது போல அவர்கள் இருவரும் அத்தனை சத்தத்துக்கு இடையே நிற்கிறார்கள். “இந்த ஆத்தா இருக்காடா உனக்கு”, தன் மார்பில் அறைந்து சொன்னபடி அவள் விலகுகிறாள்.

இங்கிருந்து கதை வேறு திசையில் பரவத் தொடங்குகிறது. கதையின் மிகத் தீவிரமானப் பகுதியும் இதுதான் என்றாலும் இதுகாறும் வளர்த்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றிவிடுகிறது. அதுமட்டுமல்லாது, ஆசிரியரின் குரலிலும் வடிவேலுவின் சிக்கலுக்கான தீர்வை அளிக்கும் நோக்கமும் வெளிப்பட்டுவிடுகிறது. குறத்தி ஒருத்தி குழந்தையைச் சுமந்தபடி தூளியை வேடிக்கை பார்க்கிறாள். தீ ஏந்தி வரும் பெண் அவள் முன்னே தடுமாறி விழப்போகும்போது, குறத்தி “எந்திரி சாமி, நட நான் கொண்டு விடறேன்”, என சாமியை வழிநடத்திச் செல்கிறாள். குறத்தி முதுகில் சாய்ந்திருந்த குழந்தை தாயின் பிடி இல்லாது அவளை இறுகப்பற்றிக்கொள்கிறது. அவர்களோடு வடிவேலுவும் நடந்து செல்கிறான். சாமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத குறத்தியின் சுமையை தன்னால் சுமக்க இயலும் எனச் சொல்கிறான். அவள் விடாப்பிடியாகக் குழந்தையையும் தீ ஏந்தி வந்த சாமியையும் கைத்தாங்கலாக கோயிலுக்கு வெளியே கொண்டு விடுகிறாள். வெளியே அக்கா தென்படாதிருந்தாலும் உள்ளே செல்லாமல் குறத்தியோடு நின்று விடுகிறான் வடிவேலு.

ஒவ்வொரு சித்தரிப்பாக இல்லாமல் முன்னும் பின்னுமாக ஆடும் நாவலில் இப்பகுதி மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. முல்லை ஆற்றை சுற்றி இருக்கும் கோயிலில் நடக்கும் திருவிழா. கோமாரித் திருவிழா. நோய் நொடி வரும்போது கோமாரியின் காலடியில் மண்டிக்கிடக்கும் ஊர். மதுரைக்குப் போன கண்ணகியும் இந்த நதியைக் கடந்து கோமாரியை வணங்கியிருப்பாள் எனும் வரி நாவலில் பொருந்தாதது போல இருந்தாலும், கற்பிழந்ததாக வரும் பாத்திரங்கள் சூழ்ந்திருக்கும் நாவலில் இச்சித்திரம் சட்டெனப் பொருந்திப்போகிறது. பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பை சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.

தகாத உறவுகளின் வலையில் சிக்கி வாழ்க்கையை இழந்திருக்கும் வடிவேலு தன் உடல் சக்தியின் பெளதிகச் சாத்தியங்களைக் கடப்பதன் வழி அவன் காதலித்துத் திருமணம் செய்த கனகத்தை மீண்டும் அடைய நினைக்கிறான். ஆனால் உடலின் சாத்தியங்களுக்கு எல்லை உண்டு எனும் உண்மையை இளைஞர்களோடு விளையாடும் போட்டியில் உணர்ந்துகொண்டாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. எப்படியும் பயிற்சி மூலம் போட்டியையும், வெற்றியின் வழி கனகத்தையும் அடைந்துவிடலாம் எனும் எண்ணம் கோமாரியம்மன் திருவிழாவில் தவிடுபொடியாகிறது. கருவறைக்கு வந்தாலும், நிறை குறையற்ற கற்பு அமைந்தாலும் எல்லா பெண்களும் தாய் வடிவமே, அவர்கள் அனைவரும் சாமி பிம்பங்களே என உணர்ந்ததும் “சிறிய அளவில் சோள வியாபாரத்தைத் தொடங்கலாம்..தாய்ப்பறவை. குஞ்சுகள் பசியோடு காத்திருக்கும்”, எனத் தன் குழந்தைகளுக்கு ஒரு எதிர்காலத்தை அளிக்கவேண்டி வேறொரு ஆட்டத்தைத் ஆடத் தயாராகிறான். இந்த ஆட்டத்தில் தவறிழக்காமல் ஆடி ஜெயிப்பான் என்பது நிச்சயமல்ல, ஆனாலும் “தோற்றாலும் ஓட வேண்டும். ஓடாமல் நிற்பதில்தான் தோல்வி”, எனும் அறிதலின் விதை அவனுள் முளைத்துவிட்டபின் ஆடும் ஆட்டம் இது. மனதில் வேட்கைக்கும் உடலின் சாத்தியங்களுக்கும் இடையே முளைத்த போராட்டத்தின் விதியை தீர்மானிக்கும் ஆட்டம்.

நிர்க்கதியின் நிழலில்

அரவிந்த் கருணாகரன்

arvindk

அதிவேக சமூக மாற்றம் தனிமனிதனுள் ஏற்படுத்தும் சிக்கல்கள், திரிபுகள் குறித்து பல இலக்கியப் படைப்புகள் வந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற்புரட்சியால் விவசாய சமூகங்கள், தொழிற்துறை-மைய சமூகங்களாக வேகமாக மாற்றம் அடைந்தபோது ஏற்பட்ட தனிமனித விளைவுகள் நவீனத்துவ ஆக்கங்களின் மையப் பேசுபொருளாக இருந்தன. இந்திய இலக்கியத்திலும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் தாக்கம் அதிகம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை விவசாயத்தில் இருந்து தொழிற்துறை, பிறகு அங்கு மையம் கொள்ளாமல் உடனேயே சேவைத்துறை என அடுத்தடுத்து மாற்றம். ஆகவே தொடர்ந்து ஒரு பெயர்ச்சிக் காலகட்டத்திலேயே [transition period] நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இது இன்னும் நுண்ணிய சிக்கல்களை தனிமனிதனிலும், நம் குடும்பச் சூழலிலும் ஏற்படுத்தியது. குறிப்பாக விவசாயிகள் மற்றம் வேளாண்மை செய்யும் குடும்பங்களில் பிறந்தவர்கள் சந்திந்த அவலமும், உயிர்ப்போராட்டமும் நம் முற்போக்கு எழுத்திலும், நவீனத்துவ ஆக்கங்களிலும் முக்கியமான பேசுபொருட்கள் ஆகின.

இருந்தும் ஐரோப்பிய நவீனத்துவ எழுத்திற்கும், இந்திய நவீனத்துவ எழுத்திற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு என்பதை எனக்கு உணர்த்திய இரண்டு முக்கியமான ஆக்கங்கள் நாஞ்சில் நாடனின் ‘சதுரங்கக் குதிரை’ நாவலும், சு.வேணுகோபாலில் ‘வெண்ணிலை’ சிறுகதை தொகுப்புமே ஆகும். இந்த இரண்டு ஆக்கங்கள் காட்டும் உலகமும் சிக்கல்களும் நவீனத்துவத்திற்கு மிக நெருக்கமானவை. இவற்றிலும் இருண்மை, அர்த்தமிழப்பு, தனிமையாலும் காமத்தாலும் அலைகழிக்கப்படும் மனிதர்கள், சமூக விதிகளின் குலைவு, அதனால் மனித உறவுகளில் ஏற்படும் இறுக்கங்கள் எல்லாம் உண்டு. ஆனாலும் இவை அளிக்கும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறொரு தளத்தில் இருக்கின்றன.

நாஞ்சிலின் சதுரங்கக் குதிரை நாவலை எடுத்துக் கொண்டால் அதில் வரும் நாராயணனும் குட்டினோவும் தங்கள் சொந்த ஊரில் வாழ வழியின்றி பம்பாய்க்கு இடம்பெயர்ந்து, பிறகு அந்த பெருநகர் உருவாக்கும் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும், அடையாள இழப்பிற்கும் ஆளாகிறார்கள். அடிப்படையில் பார்த்தால் இவர்களின் பிரச்சனை ஒரு வில்லி லோமன் [ஒரு விற்பனை பிரதிநிதியின் மரணம் – ஆர்தர் மில்லர்] அல்லதொரு கிரிகர் சாம்சா [உருமாற்றம் – ஃபிரான்ஸ் காஃப்கா] எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து வேறுபட்டதல்ல. தங்கள் அலுவலக வேலையிலிருந்து முழுக்க அந்நியமாகிப்போதல், மிதவைகளைப் போல் வாழ்க்கையிலொரு பிடிப்பின்றி அலைதல் என பல ஒற்றுமைகள். இருந்தும் இவர்கள் இந்த அடையாளமின்மையை, அர்த்தமிழப்பை எதிர்கொள்ளும் விதம் தனித்துவமானது. எப்பேர்ப்பட்ட அக-புற நெருக்கடிகளிலும் இவர்கள் அராஜகவாதிகளாகவோ, எதிர்மறை ஆளுமைகளாகவோ மாறுவதில்லை. ஒட்டுமொத்த பிறழ்வை நோக்கியோ, வன்முறை நோக்கியோ இவர்கள் செல்வதில்லை. ஏன் அப்படி எதுவும் ஆகவில்லை எனக் கொஞ்சம் குதர்க்கமாக யோசித்தால், அது நாராயணனுக்கும், குட்டினோவுக்கும் சுவையின் மீதுள்ள பிடிப்பால் எனத் தோன்றுகிறது. எந்நிலையிலும் உணவை, அது தரும் சுவையை அவர்கள் இழக்கவில்லை. நாவல் ஆரம்பித்த சில பக்கங்களிலேயே உணவு குறித்த, சமையல் குறித்த சித்தரிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாவல் முழுக்க நாராயணனும் குட்டினோவும் சாப்பிட கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். தனிமையும், அடையாளமின்மையும், சுரண்டலும், சுயநலமுள்ள இந்த உலகத்தில் இருந்து அவர்களை பன்பாவும், பட்டாடா வடாவும், ஈரானியன் சாயும், நண்டுபொரியலும், பொரித்த மீனும் தான் காப்பாற்றியது என நினைக்கத் தூண்டுகிறது. ஆனால் இந்தச் சுவை என்பது வெறும் நாவின் சுவை மட்டுமல்ல. மன ஆழத்தில் இருந்து ஊற்றெடுக்கும் சுவை. இந்த பொருண்மை உலகத்தில் அதன் ஒவ்வொரு துளியின் மீதும் பொதிந்திருக்கும் சுவை. அதுவே அவர்களை எதிர்மறை ஆளுமைகளாக ஆக்காமல் மீட்டது, இப்பூமியின் மீதும், மானுத்தின் மீதும் நம்பிக்கை இழக்காமல் கால் ஊன்றி நடக்கச் செய்தது எனத் தோன்றுகிறது.

நாஞ்சிலின் கதாபாத்திரங்களுக்கு உணவும் அது தரும் தீராச் சுவையும் என்றால், சு.வேணுகோபாலின் கதைமாந்தர்களுக்கு மண்ணும் உழவும் எனலாம். மண் மீது அவர்களுக்குள்ள பிடிப்பால், வெறும் நிலமும் நிலக்காட்சிகளும் அவர்களுள் உருவாக்கும் தாக்கத்தால் தாங்கள் சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகளை, இருளை தாண்டிச் செல்கிறார்கள் (அல்லது குறைந்தபட்சம் அவற்றை முழு உயிராற்றலோடு விடாமல் எதிர்கொள்கிறார்கள்). நாஞ்சிலின் நாவல்களில் உணவு சார்ந்த வர்ணனைகள் வந்துகொண்டே இருப்பது போல், சு.வேணுகோபாலின் ஆக்கங்களில் நிலம்சார்ந்த விவரிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவை பச்சைபசலென வீற்றிருக்கும் அழகிய நிலக்காட்சிகள் அல்ல, வறண்டு தகிக்கும் நிலத்தின் விவரிப்புகள். மைல் கணக்காக வெடித்து நீளும் வரப்புகளின் காட்சிகள். இருந்தும் அவை திரும்பத் திரும்ப அதன் அத்தனை நுட்பங்களோடும் வந்து கொண்டே இருக்கின்றன. நிலம் எதுவாக இருந்தாலும் அது மனிதனில் உருவாக்கும் உயிரிச்சையும், தாக்கமும் அடிப்படையில் ஒன்றுதான் என அவர் உணர்த்த விரும்புவது போல் கூட சில சமயம் தோன்றும்.

குறிப்பாக அவரது வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பில் உள்ள பல கதைகள் மண்ணுக்கும் மனிதருக்கும் உள்ள உறவை பேசவே முற்படுகின்றன. அவற்றிலும் பெரும்பாலான கதைகள் மானுட இருண்மையை நோக்கியே குவிகின்றன. மானுட மனநிழலில் படர்ந்திருக்கும் கருமையை வெகு இலகுவாக வேணுகோபால் இனம்கண்டு கொள்கிறார். ஆனால்  ஐரோப்பிய நவீனத்துவம் பேசும் இருண்மைக்கும், வேணுகோபால் பேசும் இருண்மைக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. காலத்தின் பிரம்மாண்டத்தின் முன் மிரண்டு நிற்கும் தனியனாக, இச்சைகளின் அலைக்கழிப்புகளால் கைவிடப்பட்ட மிருகமாக அவர் தனது கதைமாந்தர்களை காட்டவில்லை. மாறாக, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மரநிழலில் சேர்த்திவிடத் துடிக்கும், அதற்காக சலிப்பேயில்லாமல் தினசரி ஓடும் ஒருவனில், புதிர்தன்மையுடன் “எப்படியோ” குடிகொள்ளும் கூறுகளைச் சுட்டிக் காட்டவே விரும்புகிறார். அர்த்தமிழப்பாலும் அதனால் ஏற்படும் செயலின்மையாலும் ஒருவன் உணரும் இருண்மையுணர்வை அவர் பேச விழையவில்லை. மாறாக செயலூக்கத் தளத்தில் ஒருவன் உணரும் இருண்மையை, அவன் திடீரென எதிர்கொள்ளும் நிர்க்கதியை, அதை மீறிச் செல்ல துடிக்கும் போது அடையும் எழுச்சியையும் சரிவையும் சொல்லவே முற்படுகிறார்.

ஒரு சிறந்த இலக்கியப்படைப்பு என்றுமே வலிந்து முன்வைக்கப்படும் மன விகாரங்களாலோ பிறழ்வுகளாலோ ஆனது அல்ல. அதே சமயம், அது வாழ்வின் முடிவற்றுச் செல்லும் இருளை, கீழ்மைகளை,  அவமானங்களை,  சரிவுகளை பூசி மெழுகாது. நிதர்சனத்தைக் கண்டு அஞ்சி ஓடவும் ஓடாது. அவ்வகையில் எவ்வித உத்திகளும் இன்றி, சித்தரிப்பின் உக்கிரத்தால் மட்டுமே தனித்து நிற்கிறது சு.வேணுகோபாலின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. வேர்வையும், லௌகீகக் கனவுகளுமாக உலா வரும் மனிதர்களின் வாழ்க்கையை போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் வேணுகோபால். அப்படி சொல்லிச் சொல்லியே வாழ்வுக் கணங்களின் அசாதாரணமான சிடுக்குகளை, முரண்பாடுகளை நம் கண்முன்னே நிறுத்துகிறார். கதை நெடுக்க வந்து கொண்டே இருக்கும் முகங்கள். விவசாயிகள். முதியவர்கள். ஸ்கூல் டீச்சர்கள். இல்லத்தரசிகள். பொறுக்கிகள். பித்தர்கள். ஆனால் இவர்களை லட்சிய உருவகங்களாக ஆக்க வேணுகோபால் முயல்வதில்லை. இவர்களின் துயரங்களை, மேன்மைகளை, சறுக்கல்களை எந்த ஒரு தத்துவச் சட்டகத்திற்க்குள் அடைக்கவும் அவர் முனைவதில்லை. உக்கிரமான கணங்களை சாதாரணமாகச் விவரிக்கிறார். அவை வாசகனுள் ஏற்படுத்தும் தத்தளிப்பும், மனஎழுச்சியுமே இந்தக் கதைகளின் வெற்றி எனச் சொல்லலாம்.

இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளின் பேசுதளம் கைவிடப்படுதலும், அதனால் ஏற்படும் நிர்க்கதி நிலையுமே ஆகும். ஈரம் முழுக்க உறியப்பட்டு கைவிடப்பட்ட நிலம். நிலத்தால் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்கள். மிச்சமிருக்கும் ஈரத்தையும் துளைபோட்டு கோர்த்துறிஞ்சி இந்நாளை கடந்துவிடத் துடிக்கும் ஆட்கள். இவர்களின் சூதறியா செய்கைகளால் கைவிடப்படப்போகும் நிலையில் உள்ள நாளைய தலைமுறை. கணவனின் பொறுப்பின்மையால், மகன்களின் மூர்க்கமான சுயநலத்தால் கதியற்றுப்போன பெண்கள், முதியவர்கள். குறிப்பாக இந்த தொகுப்பில் உள்ள “புத்துயிர்ப்பு” என்னும் கதை. இதன் பேசுபொருளும் கைவிடப்படுதலே ஆகும். ஆனால் ஜெயமோகன் உட்பட சில விமர்சகர்கள் முன்னரே குறிப்பிட்டுருப்பது போல், தொகுப்பில் உள்ள மற்ற கதைகளில் இருந்து இக்கதை அதன் கவித்துவத்தால், எழுச்சியால் தனித்து நிற்கிறது.

வேறு யாரோ ஒருவரின் தோட்டத்தில் இருந்து சோளத் தட்டையையோ, மாட்டுத்தீவனத்தையோ திருடி பிடிபட்டு எல்லோர் முன்னிலையிலும் கூனிக் குறுகி நிற்கும் சிலரை நாம் எங்கோ எப்போதோ பார்த்திருப்போம். அப்படி பிடிபட்ட ஒரு விவசாயியின் சரிவை நுட்பத்துடன் நம் கண்முன் நிறுத்தும் ஆக்கமே “புத்துயிர்ப்பு”. தனது மாட்டுக்கு ஒருபிடி புல்லுக்காக நாள் முழுக்க வெக்கையில் அலையும் ஒருவனின் வாழ்க்கையை “போகிறபோக்கில்” சொல்கிறார் வேணுகோபால். வரண்டு தகித்து எரியும் நிலம். பஞ்சப்பரப்பின் கோரத்தோற்றம். ஒரு தனிப்புல்லைக் கூட கோபாலால் எங்குமே காணமுடிவதில்லை. சுற்றிச் சுற்றிக் களைத்துப் போய், கண்களில் காய்ச்சல் முட்ட வீடு திரும்புகிறான். வீட்டில் நாக்குலர்ந்து படுத்திருக்கும் நிறைசினைப்பசு. கருவுற்றிருக்கும் மனைவி சாந்தா. தகதகக்கும் காரை. மனைவி மீது எரிந்தெரிந்து விழுகிறான். ஒரு பிடி புல்லுக்காக பொட்டலில் நாளெல்லாம் அலையும் அவனைக் கண்ட மனவேதனையில் மாட்டை விற்றுவிடும்படி சாந்தா கூற, குச்சியை எடுத்துக் கொண்டு அவளை அடிக்க ஓடுகிறான். பின்னர் சமாதானமாகி, அவளது நகையை பேங்கில் வைத்து இரண்டு வண்டிப் புல் வாங்கி வரச் செல்கிறான். பேங்கில் பணத்தை வாங்கிக் கொண்டு அனல் தகிக்கும் மதிய வெயிலில் புல் வாங்க அலைகிறான். எங்கெங்கோ அலைந்து பார்க்கிறான். எங்குமே ஒருகட்டு புல் கூட கிடைக்கவில்லை. நாலு மடங்கு விலைக்கு மொத்த புல்லையும் பக்கத்து பெருஊர்களில் இருந்து லாரியில் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் என அறிகிறான்.

பின்னர் மிகுந்த மனச்சோர்வுடன் வீடு திரும்பி மாட்டைக் கட்டிக் கொண்டு உடைந்தழுகிறான். சாந்தா அவனை தேற்ற முயற்சிக்கிறாள். ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு படுக்கும்படி கூறுகிறாள். அவள் தூங்கியவுடன் சொந்தத்தில் ஒருவரின் சோளத் தோட்டத்திற்குள் புகுந்து கொஞ்சம் தீவனத்தை திருட முயற்சிக்கும்போது பிடிபடுகிறான். “என்னைய ஒண்ணும் மாமான்னு நொட்ட வேணாம்…… மாட வளக்க முடியலைன்னா எங்கிட்டாவது ஊம்பப் போடா” என்று கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறான். நடுஜாமத்தில் எழுந்த சத்தத்தைக் கேட்ட கிராமத்துப் பெரியவர் ஒருவர் அங்கு வருகிறார். அடி வாங்கி நிற்கும் கோபாலைப் பார்த்து “ஏண்டா நாயே.. இது ஒரு பொளப்பாடா” என்று ஏசி, அவர் பங்குக்கு அவனை இரண்டு தட்டு தட்டுகிறார். பின்னர் காலையில் பஞ்சாயத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். விடிகாலையில் கோபால் பாலிடாலும் வாந்தியுமாக நுரை தள்ளிக் கிடக்கிறான். ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு ஒடுகிறார்கள். ”எம் பாவா…. இப்பிடிப் பண்ணிட்டியே பாவா..” என அவனது மனைவி கல்லீரல் அதிர கதறுகிறாள். அங்கேயே மயங்கி, குடம் உடைந்து, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். சுருங்கிய பிஞ்சுத்தோலும், பிசுபிசுப்புமாக குறைமாதம் பிறக்கும் அந்தக் குழந்தையை வெயிலில் காட்ட மருத்துவச்சி தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

எது அந்த ஊர் மக்களையெல்லாம் நிர்க்கதியின் முனை நோக்கித் தள்ளியதோ அதுவே இக்குழந்தையின் மீதும் பட்டுத் தெறித்து மின்னுகிறது. அனைவரையும் அலைக்கழிக்கும் கோர வெயிலை தன் மூடிய பிஞ்சு விரல்களால் அள்ளிப் துளாவிப் பருகத் துடிக்கும் குழந்தை! நிர்க்கதியின் மடியில் கைக் கால்களை உதைத்துக் கொண்டு துடிக்கும் உயிரின் பேராற்றலை “வான் பொழிய மண் செழிக்க வாழையடி வாழையென வந்ததடி குழந்தை’ என குலவையிட்டு பாடி முடிக்கிறது இந்தச் சிறுகதை. வாழ்வியக்கத்தின் முடிவில்லா புதிர்த்தன்மையை கலையமைதியோடு நகம்மு உண்ர்த்துவதாலேயே இக்கதை பெரும் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இக்கதையிலும் வேணுகோபால சொல்லிச் சொல்லி சென்றபடி இருக்கிறார். எவ்வித படிமங்களும் இல்லாத நேரடியான விவரணை. கோபால் மீது சாந்தா கொண்டுள்ள பெரும் காதலை பற்றி சில வரிகளே வந்தாலும் வாசகன் முன்னே உயிர்ப்புள்ள ஒரு வாழ்க்கை விரிந்து எழுகிறது. கட்டைக் குரலில் கோபால் பாடும் ”பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து” என்ற பாடலின் ஒவ்வொரு ஏற்ற இறக்கத்தையும் நாமும் கேட்டு உருகுகிறோம். நெகிழ்ந்து நிற்கும் சாந்தாவின் உணர்வலைகளை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். ஆத்மார்த்தமான ஒரு கதைசொல்லியாலேயே வாசகனுள் இத்தகைய ஒரு நெருக்கத்தை உருவாக்க முடியும். கொஞ்சம் சறுக்கினால் கூட எல்லாம் செயற்கையாகப் போய்விடும். ஆனால் சு.வேணுகோபால் இவ்வகை நெருக்கத்தை மிக இயல்பாக வாசகனுள் உருவாக்குகிறார்.

இப்படி மண்ணில் ஊறித் திளைக்கும் ஒருவனை ரத்தமும், சதையுமாக நம் கண்முன்னே நிறுத்துகிறார் வேணுகோபால். கதையின் ஒருபகுதி முழுக்க உயிர்ப்புடன் விரிகிறது கோபாலின் ஆளுமைச்சித்திரம். நுரை தள்ளிக் கிடந்த கோபாலை ஆஸ்பத்திரியில் சேர்த்த நண்பர்கள் அவனை நினைவுகூரும்  இடத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அதே போல் தீவனம் கிடைக்காது போன துக்கத்தையும் மீறி, துண்டுச் சாக்கை ரெண்டாக மடித்து மாட்டை பளபளவென கோபால் துடைக்கும் இடத்தையும் கூறலாம். “தேய்க்கத் தேய்க்க பளபளவென மின்னியது… பசியிலும் சொகமாக நின்று கண்களை மூடியது” போன்ற ஓரிரு வரிகளிலேயே கோபாலுக்கும், மாட்டுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை உணர்த்துகிறார். முன்னிரவில் புல்கட்டு எதுவும் கிடைக்காமல் சோர்ந்து போய் திருப்பும் கோபாலை, அவனது சைக்கிள் சத்தத்தை வைத்து கண்டுபிடித்து தன் முழுகனத்தையும் தாங்கி திடுதிப்பென எழுந்து நிற்கும் நிறைசினைப்பசுவின் சித்திரமும், அதைக் கண்டு கோபால் கரைந்தழுவதும் நம்முள் ஒரு பெரும் தத்தளிப்பை உருவாக்குகிறது.

பிறகு கடைசியில் அவன் பாலிடால் குடித்து தரையில் நுரைதள்ளிக் கிடக்கும் காட்சிகள் வழியாக கோபாலின் சரிவை விவரிக்கிறார். இவ்வாறு மண்மீது அவன் கொண்டுள்ள உயிர்ப்புள்ள பிடிப்பையும், சுழித்தோடும் வாழ்வுக்கணங்களில் அவன் திமிறி எழுந்து, பின்னர் சறுக்கி, மீண்டும் எழுந்து, பிறகு மீண்டும் வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்படும் சித்திரத்தையும் நம் மனக்கண் முன் வரைந்தபடியே செல்கிறார். அதனாலேயே இக்கதை “ஒருவன் அடையும் சரிவு” எனும் தளத்தைத் தாண்டி “மானுட சரிவு” என்ற தளத்திற்குள்ளும், “சரிவு என்றால் என்ன?” என்னும் கேள்விக்குள்ளும் சென்று, ஒரு செவ்வியல் ஆக்கமாக முழுமை கொள்கிறது

ஒரு விவசாயியின் உலகத்திற்குள் செல்லும் வேணுகோபால், அதே அளவு நுட்பத்துடன் நடுத்தர-கீழ்நடுத்தர இளைஞர்களின் உலகத்திற்குள்ளும், இல்லத்தரசியின் உலகத்திற்குள்ளும் செல்கிறார். கே.டிவியை மாற்றி கார்ட்டூன் நெட்வொர்க் போடும் தன் குட்டி மகனை குண்டியில் ஒரு தட்டி தட்டி, உதைபடப்போற என மிரட்டும் இல்லத்தரசி ஒரு நல்ல உதாரணம். அதே போல் இளைஞர்களின் உலகத்தையும் மிகுந்த சமகாலத்தன்மையுடன் துல்லியமாக பதிவு செய்த வெகு சில தமிழ் படைப்பாளிகளில் சு.வேணுகோபாலும் ஒருவர். முன்முடியில் வெண்கலநிற டை, பட்டை பெல்ட், பிறைச்சந்திரவடிவ கிருதா என பஸ்ஸில் ”ரவுசு” விடும் இளைஞன் தமிழில் அதிகம் எழுதப்படாத ஒரு சமகால யதார்த்தம். தமிழ் சினிமா கதாப்பாத்திரமாக தன்னைத் தானே நிஜவாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஜீவன். அவன் உதிர்க்கும் ஒவ்வொரு வாசகத்திலும், உடலசைவிலும் ஏதோவொரு விதமாக தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கும். அவர்கள் உலகத்திலுள்ள அலட்டல்களை, கலாய்ப்புகளையெல்லாம் மிக இயல்பாக வேணுகோபால் கொண்டுவருகிறார். இவற்றையெல்லாம் தாண்டி அந்த இளைஞர்களிடையே நீளும் ஆழமான நட்பை ஒரு கொண்டாட்டத்தன்மையோடு விவரிக்கிறார். வாட்டர் பாக்கெட், மிக்சர், அவித்த கடலை புடைசூழ அவர்கள் தண்ணி அடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும், ஒரு முழு ஆம்லெட் உள்ளே போன குஷியில் ஆடிகுதிப்பதுமாக வரும் இடம் ஒரு நல்ல உதாரணம்.

ஆனால் இவர்களை அப்பட்டமான பொறுக்கிகளாகவோ அல்லது வீராவேசம் பொங்கி வழியும் நாயகர்களாகவோ வேணுகோபால் காட்ட முயலவில்லை. இவர்களின் எல்லா குறைகளோடும், இளமைக்கே உரிய பலவீனங்களோடுமே காட்டுகிறார். இருந்தும் வேணுகோபாலின் கவனம் அவர்கள் அடையும், அடைய முயலும் மேன்மையைச் சுற்றியே குவிகிறது. இது அற்புதமாக வெளிப்படுவது ”வெண்ணிலை” என்னும் கதையிலே.

மெயின் ரோட்டில், பிளக்கும் உச்சி வெயிலில், உடலதிர உறுமி பீதியைக் கிளப்பிச் செல்லும் அந்த “யமகா” பைக்கை தமிழகத்தில் நாம் அத்தனைபேருமே எங்கேனும் பார்த்திருப்போம். கிளச்சை முறிக்கிப் பிடித்துக் கொண்டு வளைந்து வளைந்து செல்லும் அந்தக் கர்சீப் கட்டிய இளைஞர்கள் போகும் வழியை திரும்பிப் பார்த்து, மனதார அவர்களை வசை பாடியபடி,  உடன் நடந்து வரும் நம் குழந்தையின் கையை இறுக்கப் பற்றியபடி நாமும் சென்றிருப்போம். அப்படி பைக்கில் விரட்டிப் பிடித்து “நியூ” தமிழ்ப்படத்தை தியேட்டரில் அது ஆரம்பிப்பதற்குள் பார்க்கச் செல்லத் துடிக்கும் இரு இளைஞர்களில் தொடங்குகிறது இந்தக் கதை. அப்போது சிக்னல் அருகே ஒரு பெண் தனித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள். எங்கோ பார்த்த முகம். இவர்கள் சாலையை கடக்கும் போதும் அவள் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாள். கல்லூரி அருகே உள்ளே ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண் அவள் என ஒருத்தன் நினைவுகூர்கிறான். பின் அவனுக்கு ஞாபகம் வருகிறது – மிகுந்த உயிர்த்துடிப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் குறித்த அவனது நினைவுகள் எழுகின்றன. அவளுடையது எளிய குடும்பம். வறுமை. ஆனால் வாழ்வின் மீது அவள் கொண்டுள்ள பிடிப்பும், அதே சமயம் துளியும் ஆக்ரோஷமற்ற அவளது வேகமும் நேர்நிலைத்தன்மையும் அவனை அறியாமலேயே அப்போது ஆழ பதிந்துவிடுகின்றன. மிகச் சில காலமே அவளை அறிந்திருந்தாலும் இனிய நினைவுகளே அவனுள் அப்போது எழுகின்றன. ஆனால் அவள் இப்படி தெருவில் யாருமற்று நிற்பதை பார்க்கும் போது அவன் குழம்புகிறான்.

போய் என்னவென்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவளது தந்தை இறந்துவிட்டார். அடக்கம் செய்ய பணமில்லை. உதவிக்கும் வேறு யாருமில்லை. “எதையோ” நம்பி அங்கு சாலையில் வந்து நின்றிருக்கிறாள். இவர்கள் எப்படியோ பணத்தை தேத்தி சடலத்தை அடக்கம் செய்ய உதவுகிறார்கள். வெண்ணிலையா இவளை இப்படி விட்டுட்டு போயிட்டீங்களே என அவளது தாய் சடலத்தை பார்த்து கதறி அழுகிறாள்.

வெண்ணிலை. தாங்கிக்கொள்ளவே முடியாத தனிமை. பரிபூர்ணமான நிர்க்கதி. எந்த தைரியத்தில் அவள் அங்கு சாலையில் வந்து நின்றாள், அவன் மட்டும் அங்கு வரவில்லை, வந்து விசாரிக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என அந்த இளைஞன் கேட்க நினைத்து பிறகு கடைசியில் விட்டுவிடுகிறான். ஆனால் கதை முடிந்தபிறகு அந்தக் கேள்வி உண்மையில் அவனை நோக்கி திரும்புவதை நாம் உணரலாம். அவன் பாட்டுக்கு படம் பார்க்க அடித்துப்பிடித்து பைக்கில் போய்க்கொண்டிருந்தவன், எதற்காக உதவினான்? எங்கோ எப்போதோ பார்த்தவள் தெருவில் நின்றுக் கொண்டிருந்தபோது எதற்காக திரும்பப் போய் விசாரித்தான்? இதற்கு விடை தேட எளிய முற்போக்கு விளக்கங்களுக்குள்ளோ அல்லது ஃபிராய்டிய கோட்பாட்டிற்குள்ளோ இந்தக் கதை செல்லவில்லை. உண்மையில் எந்த விடையுமே அளிக்காமல், மானுட இயக்கத்தின் புரிந்து கொள்ளவே முடியாத புதிர்த்தன்மையை வாசகனுக்கு உணர்த்தியபடி முடிவடைகிறது இந்தச் சிறுகதை.

வெண்ணிலா தன்னந்தனிமையானது. ஆனால் அதன் நிர்க்கதியில் இருந்து எழுவது வெக்கையும் குளிரும் மட்டுமல்ல, நிழலும் கூடத்தான். சு.வேணுகோபாலின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நிர்க்கதியின் குரூரத்தையும், நிழலையும் நாம் தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கிறோம். அப்படி அந்த நிர்க்கதியின் நிழலில் மனிதர்கள் கொள்ளும் சரிவையும் எழுச்சியையும் ஒருசேர சொல்வதாலேயே வெண்ணிலை சிறுகதை தொகுப்பு மற்ற நவீனத்துவ எழுத்துகளில் இருந்து மாறுபடுகிறது. அந்தத் தனித்தன்மையாலேயே தமிழிலக்கியத்திலும் இந்தத் தொகுப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.