Author: பதாகை

இ எல் டாக்டரோவ்- அமெரிக்க இலக்கியத்தின் மாயக் கதவு – மைக்கேல் ஷாபோன்

(The Guardian தளத்தில் EL Doctorow opened a magical new door in American literature என்ற தலைப்பில் Michael Chabon எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.)

சுயமரியாதை உள்ள கார்ட்டூன் ஹீரோ ஒவ்வொருவனுக்கும் இந்த உண்மை தெரியும்- நீ எல்லாப் பக்கமும் சிறைபட்டு நிற்கிறாய் என்ற நிலையிலும், நீ முடிவற்ற இருள்வெளியில் தொலைந்து போய்விட்டாய் என்ற நிலையிலும் உன்னைக் காப்பாற்ற இருக்கவே இருக்கிறது ஒரு பென்சில் முனை. நீ பின்னால் நகர்ந்து நிற்கிறாய். பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொள்கிறாய். அதன்பின் யதார்த்தத்தின் இழைகளில்- உன் யதார்த்தம், உன்னைச் சிறைப்படுத்தும் யதார்த்தம்-, அதில் நிமிர்ந்து நிற்கும் செவ்வகம் ஒன்று நீ வரைகிறாய். அதன் உள்விளிம்பில், பாதி தொலைவில் ஒரு சிறு வட்டம் வரைகிறாய். அடுத்து, நீ இப்போது செய்த இந்தக் கதவுப்பிடியைப் பற்றிக் கொள்கிறாய்; கதவைத் தள்ளுகிறாய்; தப்பித்துப் போகிறாய். இதற்கு முன், சுவர்கள் மட்டுமே இருந்தன; சிறையும் தடையும் நம்பிக்கையின்மையும் இருந்தன; அல்லது, எதுவுமே இல்லை; முடிவற்ற சாத்தியத்தின் வெறுமை மட்டுமே இருந்தது. நீ இருப்பதால், இப்போது ஒரு கதவு இருக்கிறது. (more…)

அம்மாவுக்காக – மஹ்மூத் தார்விஷ்

(ஆங்கில மொழியாக்கம் – ஏ. இசட். ஃபோர்மேன்)

என் அம்மாவின் ரொட்டிக்கு ஏங்குகிறேன்,
அம்மாவின் காப்பிக்கு;
அம்மாவின் தடவிச் செல்லும் ஸ்பரிசத்துக்கு..
ஒவ்வொரு நாளும்,
என்னுள் குழந்தைமை வளர்கிறது.
வாழ்வை அவ்வளவு நேசிக்கிறேன்-
ஏனெனில், நான் இறந்தால்
அம்மாவின் கண்ணீர் என்னை வெட்கச் செய்யும்..

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் இமைகளில் போர்த்துக் கொள். உன் கையால்
என் எலும்புகள் மீது புற்களை வீசு;
புனித மண்போல்
களங்கமற்ற உன் காலடித்தடங்களால் பெயரிடப்பட்டவன்.
ஒரு கற்றை மயிரால் என்னைக் கட்டிக் கொள்,
உன் ஆடையின்பின் ஒரு நூலில் பிணைத்துக் கொள்.
நானும் தெய்வம் தொட முடியும்
என் ஆன்மா தெய்வம் தொட முடியும்
உன் இதயத்தின் சுவாசத்தை நான் தொட முடிந்தால்.

என்றேனும் நான் திரும்ப நேர்ந்தால்,
உன் அடுப்பில் சமைக்க என்னை எரியாக்கு,
கூரையில் துணியுலர்த்தும் கொடியாய் உன் கைகளில் விரித்துக் கொள்.
உன் தினசரி பிரார்த்தனைகளின்றி
என்னால் நிற்கவும் முடியாது..

எனக்கு வயதாகிவிட்டது..
என் குழந்தைமையின் நட்சத்திரங்களைக் கொடு,
வீடு நோக்கிய பாதையில் நான் செல்ல வேண்டும்.
வீடு திரும்பும் பறவைகளோடு
என்னை அழைக்கும் உன் கூட்டுக்கு.

நன்றி – http://poemsintranslation.blogspot.in/2009/12/mahmoud-darwish-to-my-mother-from.html

அமேஸான் காடுகளிலிருந்து: 9- விடுதலை

மித்யா 

“தன் புதல்வியைக் காப்பாற்றியதற்கு பரிசாக எனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்க ராஜா தயாராக இருந்தார். ஆனால், எனக்கு பணத்தில் நாட்டம் இல்லை. வெளி கிரகத்து மனிதர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது. ராஜாவிடம் சிறிது பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் நாடு முழுவதும் அலைந்தேன். காடுகள் இருக்கும் பகுதிகளுக்கெல்லாம் சென்றேன். அங்குள்ளவர்களை தீர விசாரித்தேன். எந்த ஒரு காட்டுப் பகுதியிலும் ஏதும் மர்மமான சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. திரிந்து திரிந்து மிகவும் சோர்ந்து போயிருந்தேன். அப்பொழுதுதான் அலிஸ்சை சந்தித்தேன். என்னை மொழிபெயர்க்க கூப்பிட்டிருந்தார்கள். என்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆங்கில புலமையும் கண்டு இவள் வியந்தாள். அவளை என் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டாள். எனக்கும் ஊர் ஊராகத் திரிந்து ஓய்ந்துவிட்டிருந்தது. ஒரிடத்தில் இருந்தால் நல்லது என்று தோன்றியது. நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

ஒரு நாள் சிலர் உலகில் வேறொரு இடத்தில் உள்ள காட்டைப் பற்றியும் அங்கு சென்ற உலகிலேயே சிறந்த சாகசக்காரர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இருவர் கோர மரணம் அடைந்ததையும், ஒருவன் மட்டும் அந்தக் காட்டுக்குள் சர்வசாதாரணமாக சென்று வருவதாகவும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டேன். ஆலிசை கூப்பிட்டு இதைப் பற்றி தீர விசாரிக்கச் சொன்னேன். எல்லா விவரங்களையும் அறிந்தபின் ஆலிசிடம், நாம் இங்குச் செல்ல வேண்டும், என்று சொன்னேன். அவளுக்கு இந்தப் பின்கதை தெரியாது. ராஜாவிடம் சென்று பணம் வாங்கிக்கொண்டு வந்தேன். மற்ற வேலைகளை ஆலிஸ் கவனித்தாள். அப்படியாக நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று கதையை முடித்தான் இந்தியன். (more…)

ஆவி சொன்ன கதை – சேத் சைமன்ஸ்

(Matchbook என்ற தளத்தில் Seth Simons எழுதிய குறுங்கதை)

நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. அதற்குதான் வருகிறேன் என்று பல பேர் நினைக்கிறார்கள், ஆனால் அப்படியல்ல. இங்கு தரைப்பலகைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீ கவனித்தாயா தெரியவில்லை. நிலவறையில் பல ஆண்டுகளாக பூஞ்சை படிந்து கொண்டிருக்கிறது.. அது நச்சாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. என்னால் இப்போதெல்லாம் வண்ணங்களைப் பார்க்க முடிவதில்லை. நிழல்கள் மட்டும்தான். வெளிச்சம், அல்லது இருள். எனவே, நிலவறைக்குப் போகாதே. சத்தியமாகச் சொல்கிறேன், நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. நீ மேலே கூரையை இன்சுலேட் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அங்கு கடைசியாக கை வைத்தபோது ஆஸ்பெஸ்டாஸ் என்பது வெறும் வார்த்தையாகத்தான் இருந்தது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நிச்சயம் எனக்கு எதுவும் தெரியவில்லை. எப்போதும் அதிகம் தெரிந்து கொண்டிருந்ததும் கிடையாது. உனக்கு நினைவிருக்கிறதா- இல்லை, உனக்கு நினைவிருக்காது, இல்லையா? எனக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் என்னை விட்டுப் போய்விட்டாள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். ஒரு நாய் இருந்தது, ஜாக்சன். தெருவுக்கு ஓடிப் போனது, பிறகு திரும்பவும் ஒடி வந்துவிட்டது. அவன்தான் அதிர்ஷ்டக்காரன். இங்கே எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்கள். என்னைப் போன்றவர்கள். வேறு பல பேரின் புகைப்படங்களை மாட்டி வைத்தார்கள், சட்டம் போட்ட படங்கள். நீயும் அப்படிச் செய்யலாம், உனக்கு விருப்பமிருந்தால். நான் உன்னைத் தடுக்க மாட்டேன். என்னால் தடுக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். இந்தச் சுவர்களை நான்தான் எழுப்பினேன், தெரியுமா? அவள் ஒரு சின்னப்பெண் போலிருந்தாள், அப்போது, வெயிற்கால உடையில் இருந்தாள், தலைமுடியில் ஒரு ரிப்பன் கட்டிக் கொண்டிருந்தாள். அதன் வண்ணங்களை நினைவு வைத்திருக்க இப்போதெல்லாம் முடிவதில்லை. சிவப்பாக இருக்கலாம், அல்லது நீலமாக இருக்கலாம். அவளது பற்கள் வெண்மையாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஓடை வரை அவள் பின்னால் போனேன். அவள் தன் காலணிகளைக் கழட்டினாள். தண்ணீருக்குள் இறங்கினாள். கற்களின்மேல் குதிகால் உயர்த்தி கால் பதித்து நடந்தாள். கூர்மையான கல் ஒன்று அவள் காலின் கட்டை விரலைத் தைத்தது. சிறு கப்பல்கள் கடலில் செல்வது போல் எங்களைச் சுற்றி பருத்தி பறந்தது. புகைபோல் தண்ணீரில் ரத்தம். இப்போது என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். சுவர்களுக்கு இடையே எலிகள் இருக்கின்றன. உடைந்த செஙகற்கள். காட்டில் பல ஆண்டுகளுக்கு முந்தைய பைன் மரச் சருகுகளுக்குக் கீழ் கொடரியின் உடைந்த கைப்பிடியொன்று கிடக்கிறது. வானொளிச் சாளரத்தில் சிலந்தி வலைகள். பார், ஓடிக் கொண்டிருக்கும் காட்டெருமைக் கூட்டத்தினிடையே என் பேரப்பிள்ளைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். என்னால் அவர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை அழைக்கிறார்கள். நான் அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்கிறேன். குழந்தைகள், இப்போது. நாம் எல்லாரும். சுவர்க்காகிதங்களில் நிழல்கள். பழைய தாமிரக் குழாய்கள். வண்டுக்கூடுகள். எலும்புகள். நான். அவள். எல்லாரும். மந்தையாய் மிதித்துச் செல்லும் காட்டெருமைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமவெளிகளில் இடிமுழக்கம். இது எப்போதும் நடக்காத ஒன்று. எப்போதும் நடக்கும் ஒன்று”.

நான் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கொள்கிறேன். வெளியே, இரு பொன்பாடிப் பறவைகள் ஃபீடரின் உள்ளிருக்கும் இறைச்சியைக் கொத்துகின்றன. வேனிற்காலத்து மஞ்சள் ஆடையை ஒன்று ஏற்கனவே இழந்து விட்டது. மற்றொன்று இன்னும் இழந்து கொண்டிருக்கிறது, அதன் சிறகுகளில் திட்டுத்திட்டாகப் பளீரிடும் வண்ணங்கள், அதன் வயிற்றில். கிளென் தன் தோட்டத்தில் இலைகள் கூட்டிக் கொண்டிருக்கிறான். கருவாலி மரங்கள் வளைந்திருப்பதைப் பார்க்கும்போது காற்றடிப்பது தெரிகிறது, தாழ, ஆனால் நிதானமாக வீசும் காற்று. கிட்டத்தட்ட உன் காதில் விழாமலே உன்னைக் கடந்துச் செல்லும் காற்று.

நன்றி – Matchbox

கண்ணுக்குள் காட்சி- சிகந்தர்வாசி

 சிகந்தர்வாசி

இந்த அறை சிறியதாக இருக்கிறது

நான் ஓடி ஆடிய காலத்தில் இவ்வளவு சிறியதாகவா இருந்தது?
சுவர்கள் இவ்வளவு அழுக்காகவா இருந்தன?

என் நினைவில் மின்னும் சுவர்கள் இங்கு இல்லை
விவரிக்க முடியாத ஒளியும் இல்லை
நினைத்துப் பார்த்தபொழுது கிடைத்த சுகம்
அறைக்குள் நிற்கும்பொழுது ஏன் இல்லை?

ஜன்னல் வழியே பார்த்தால் ஒரே புகை
வீதியில் பல வாகனங்கள்
இன்னும் இங்கு கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
இங்கா நாங்கள் விளையாடினோம்?

மறைந்த காலத்தை உயிர்ப்பிக்க
தொலைந்த இடத்தைத் தேடி வருவது போல்
கொடுமை வேறொன்றில்லை.