Author: பதாகை

ஆங்க்ஸ்ட்

அபிநந்தன்

பூரிப்பாக இருப்பதாகச் சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் திடீரென்று வெயிட் ஏறுவதை அவனுடைய பாண்ட்டின் தொடைப்பகுதியின் பக்கவாட்டில் தையல்விட ஆரம்பித்தபோதுதான் புரிந்து கொண்டான்.

வழக்கம் போல் ஒரு முறை யூ-டர்ன் எடுத்து துரைசாமி சப்வேக்குள் இறங்க ஆரம்பித்தபோது அவனுக்கு வலப்பக்கம் இருந்த பைக்கோட்டி, “ஸார், பாண்ட் கிழிஞ்சிருக்கு,” என்று சுட்டிக்க்காட்டியபோதுதான் இந்த விஷயம் முதல் முறையாக தெரிய வந்தது- வலப்பக்கம், தொடைப்பகுதியின் பக்கவாட்டில் துணி வாய் பிளந்து கொண்டு நின்றது, திரைச்சீலையின் விலகலில் வானம் வெளிப்படுவதுபோல் அவனது தொடைப்பகுதி கொஞ்சம் தாராளமாகவே தெரிந்தது. அவசர அவசரமாக சட்டையை இழுத்து விட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டான்.

“சோம்பேறியா நாள் முழுக்க டிவி முன்னால உக்காந்து கிடந்தா உடம்பு பெருக்காம என்ன பண்ணும்?” என்று கேட்டுக்கொண்டே அவன் மனைவி அவன் தைத்துக் கொடுக்கச் சொன்ன பேண்ட்டை விசிறியடித்தாள். அவன் தன் தொப்பையைத் தடவிப் பார்த்து, “இடுப்பு சைஸ் எல்லாம் சரியாதானே இருக்கு, அங்கே பட்டன் கிட்டன் உடையலையே,” என்று லாஜிக்காக கேட்டான்.

“இப்படி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு நிக்கறதுக்கு ஒரு மணி நேரம் நடந்துட்டு வாங்க”.

அவனுக்கு நடக்கும் உத்தேசம் இல்லை.

அப்புறம் அவனது ஒவ்வொரு பேண்ட்டாக தொடைப்ப்குதியின் பக்கவாட்டில் கிழியக் கிழியத்தான் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. செல்போனை பேண்ட் பாக்கெட்டில் போடுவதால்தான் கிழிகிறது என்று அதைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். மாடியேறும்போது ஒவ்வொரு காலாக மடக்கி நீட்டும்போது தொடைப் பகுதியில் உள்ள துணி சுருங்கி விரிவதில்லை என்பதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாடி ஏறுவதைக் குறைத்துக் கொண்டு லிப்ட் பயன்படுத்தினான். எப்போதும் சட்டையை இழுத்து இழுத்து விட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது பெரிய பிரச்சினையாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக புது பேண்ட் வாங்கினால் அது எத்தனை நாளோ என்ற கேள்வியை எதிர்கொண்டு, கிழிசல்விடும் இடங்களை உடனுக்குடன் அவனே தைத்துப் பயன்படுத்திக் கொண்டான்.

அப்புறம் ஒரு நாள் காலையில் அவன் சாப்பிடும்போது குமட்டிக் கொண்டு வந்தது, ஒவ்வொரு கவளம் சாப்பிடும்போதும் நெஞ்கில் எரிச்சல். கவனமாக உருளைக்கிழங்கு காரக்கறியைத தவிர்த்து கொஞ்சம் போல சாதம் சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் குப்பையில் கொட்டினான். மதியம் சாப்பிடும்போதும் அதே பிரச்சினை. நாலு வாய் சாப்பிட்டுவிட்டு, போதும் என்று எழுந்து விட்டான். அப்புறம் அவனும் அவன் நண்பனும் வழக்கம் போல காலாற ஒரு ரவுண்ட் நடந்து செல்லும்போது எப்போதும் அருந்தும் மோர் வழக்கத்தைவிட வயிற்றை நிறைத்தது திருப்தியாக இருந்தது. “இனி நீராகாரம்தான் நமக்குச் சரிப்படும் போலிருக்கிறது,” என்று சொல்லிக் கொண்டே சட்டையைக் கீழே இழுத்து விட்டுக் கொண்டான்.

அப்புறம் வீடு திரும்பும்போது மறக்காமல் மாம்பலம் கிரேஸ் ஸ்டோர்ஸ் போய், “ப்ரியா லைம் பிக்கிள்” ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டான். அவனுக்கு எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும் என்பது மட்டுமல்ல, சாதத்தைக் கரைத்துச் சாப்பிடும்போது தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷனாகவும் இருக்கும்.

“எங்க க்ரோம்பேட் சித்தி மோருஞ்சாதம் மட்டும் போட்டு சித்தப்பாவைக் கொல்றான்னு திட்டிட்டிருந்தோம். இப்பதான் தெரியுது சித்தப்பா எவ்வளவு நெஞ்சழுத்தக்காரர்ன்னு, ஏதும் பேசாத போட்டதை மரியாதையா சாப்பிட்டுட்டு போங்க,” என்று கறாராகச் சொல்லி இன்னும் ஒரு கரண்டி பீன்ஸ் உசிலியைத் தட்டில் வைத்தாள் மனைவி. “வத்தக்கொழம்புச் சாத்துக்குத் தொட்டுக்கிட்டு சாப்பிடக் கசக்குதா என்ன?”

“ஆமாம், எனக்கு நெஞ்செல்லாம் விஷம்,” என்று சொல்லவில்லை, நினைத்துக் கொண்டு, போட்டதைச் சாப்பிடும்போது முதல் கவளம் உள்ளே போகும்போதே காரமாய் ஏதோ ஒன்று நெஞ்சிலிருந்து தொண்டைப் பகுதி வரை எழுந்து வந்து அவன் கண்களை நீரால் நிறைத்தது.

கபாடபுரம்- இணையத்தில் ஒரு புதிய இலக்கிய இதழ்

நல்வரவாகுக.

கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் துவங்கியிருக்கிறது, கபாடபுரம், சமூக – இலக்கிய இணையதளம். புதுமைப்பித்தனின் சாகச வாக்கியங்களை முகப்பில் தாங்கி வந்திருக்கிறது, அதன் முதல் இதழ்.

“வாக்கியத்துக்கு உயிருண்டு. அது பல தசைகளும், நரம்புகளும், அவயவங்களும் கொண்ட சிருஷ்டி. அதை நாம் உம்மைத் தொகுதிகளால் பிணிக்கப்பட்ட வெறும் வார்த்தைச் சங்கிலிகளாக மதித்துவிடக் கூடாது. வாக்கியத்தின் கட்டுக்கோப்பு (Architectonics) மிகவும் முக்கியமானது. ஒரு வாக்கியத்தில் வார்த்தையின் ‘அமைப்பு’ நயமான அர்த்த விசேஷங்களைத் தந்துவிடும். வாக்கியங்களின் (Prose-rhythm) ஓசை இன்பம் – கவிதையைப் போல் வசனத்திலும் இருக்கிறது; ஆனால் அதைவிட சூக்ஷ்மமானது – வார்த்தை நயங்களையும், வாக்கியத்தின் ‘அமைப்பு’ வசீகரத்தையும் பொறுத்தே இருக்கிறது. இதைப் பற்றி எழுத முடியாது; பயிற்சியினாலும், மேதாவிகளின் நூல்களைப் படித்துப் படித்து அனுபவிப்பதினாலும் வரும். தமிழில் இதற்கு இலக்ஷிய கர்த்தாக்கள் அவ்வளவாக இல்லை. வெளியிலிருந்து தான் ஆகர்ஷிக்க வேண்டும். சிலர் மோனைகளையும் பிராசங்களையும் வசனத்தில் உபயோகிப்பது ஓசை இன்பம் என்று நினைக்கிறார்கள். என்னமோ, அசுணப் பறவையையும் பறை முழக்கத்தையும் பற்றி கம்பன் சொன்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. அப்படி எழுதுவது ஆபாசம்; பேசுவது பைத்தியக்காரத்தனம்.”-

பன்கின் – டான் எஸ் டேவிஸ்

Literary Orphans என்ற தளத்தில் Dawn S. Davies எழுதியுள்ள Pankin என்ற சிறுகதையின் தமிழாக்கம்- 

முதலில் எதுவுமில்லை. திட்டங்கள் இல்லை, செயல் இல்லை. சிந்தனை இல்லை. அப்புறம் ஒரு நாள் ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. அது அடங்கிய தொனியில் இருக்கிறது, அது சலசலக்கிறது. வாழ்க்கை திடீரென்று வெம்மையாகவும் எளிமையாகவுமாகிறது. நீ வெளியே போகிறாய். உன் நுரையீரல்கள் கிழிந்து திறந்து கொள்கின்றன. உனக்கு வலிக்கிறது. நீ அலறுகிறாய். நீ தனித்திருக்கும் பெருவெளி உன்னை அச்சுறுத்துகிறது. வெளிச்சம் சுடுகிறது. உன் அம்மா உன்னைத் தன் கைகளில் ஏந்துகிறாள், உன்னை கதகதப்பாக வைத்துக் கொள்கிறாள். நீ அமைதியடைந்து மௌனமாகும்போது உன் அப்பா உன்னைப் பெற்றுக் கொள்கிறார். உன் கண்களைப் பார்த்து, உன்னைத் தன் பன்கின் என்று அழைக்கிறார். அவர்கள் உன்னைப் போர்த்துகிறார்கள், உனக்கு உணவு அளிக்கிறார்கள், உன்னை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறார்கள். ஒரு மரப்பெட்டியில் உன் தொப்புள் கொடியின் தண்டுப்பகுதியைப் பத்திரப்படுத்துகிறார்கள். நீ அவர்களின் செல்வம். நீ தூங்கி எழுந்திருக்கிறாய். மீண்டும் தூங்குகிறாய். பின்னர் மீண்டும் எழுந்திருக்கிறாய். அங்கேயே கிடக்கிறாய், பாருக்குப் பின்னால், தரையில், நீ நெளிந்து கொண்டிருக்கிறாய். நீ தள்ளுக்கிறாய், பாடுபடுகிறாய். ஆனால் உன் கண்களில் படுவதெல்லாம் தரையில் விழும் சூரியக் கோலம்தான், அல்லது இறுக்கிப் பிடிக்கும் உன் கைவிரல்கள். நீ ஊளையிடுகிறாய். தரையை அழுத்தி எழுந்து நிற்கிறாய். தடுமாறி விழும் உன்னை உன் அம்மா வெளியே அழைத்துச் செல்கிறாள். உன் முதல் காலடிகள் வெம்மையான கோடைக்காலச் சேற்றில், சாணத்தின் இனிய மணம் வீசும் கொட்டகைக்கு. அங்கு நீ மங்கலான வெளிச்சத்தில் உன் அப்பா குனிந்திருப்பதைப் பார்க்கிறாய். அவர் தன் மாடுகளை நோக்கிக் காதல் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார். அம்மாவை இடித்துக் கொண்டு தோட்டத்தை நோக்கிக் கடந்து செல்லும்போது அவள் புட்டத்தில் மெல்லத் தட்டுகிறார். உன் சிரிப்பொலி கேட்டதும் உன் அம்மா தன் கையை எடுத்துக் கொள்கிறாள். நீ சாப்பிடுகிறாய், வளர்கிறாய், விளையாடுகிறாய். மரங்கள் உன் தேவதைகள்; மண் உனக்குக் களி, கோழிக்குஞ்சுகள் உன் சகோதரிகள். நீ ஓடுகிறாய், தாவுகிறாய். நீ காற்றில் சுழல்கிறாய். நீ சிரிக்கிறாய். நீ சோகத்தில் அழுகிறாய். நீ ரத்தம் சிந்துகிறாய். உன் அம்மாவின் எடை கூடுகிறது, அவள் மெத்தென்று இருக்கிறாள், முட்டாள் போலிருக்கிறாள். உன் அப்பாவின் பற்கள் ஒழுங்கற்று இருக்கின்றன. அதைச் சொல்ல நீ முயற்சி செய்கிறாய். பன்கின் என்ற வார்த்தையைக் கேட்கும்போதே உன் வாய் கோணிக் கொள்கிறது. கோழிக்குஞ்சுகள் நாற்றமடிக்க ஆர்மபிக்கின்ர்ண. நகரின் இருண்ட, சோகை விளக்குகம் உன் பெயரைச் சொல்லி அழைக்கின்றன. எனவே உன் அப்பாவின் பழைய பையில் உன் துணிகளை எடுத்துக் கொண்டு இருட்டு வேளையில் வெளியேறுகிறாய். சேறு உன் காலணிகளைப் பின்னோக்கி இழுக்கிறது, காலையின் உன் பெற்றோர் பார்ப்பதற்கான வழித்தடத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆடம்பரமான ஏதாவது வேண்டும் என்று ஏங்குகிறாய், பகட்டான, பளபளக்கும் ஏதாவது வேண்டும். அதை நீ புதிய ஒரு மந்தையின் மத்தியில் காண்கிறாய். ஒரு துடிப்பை உணர்கிறே, ஆசையின் ஒரு வலிப்பையும் உணர்கிறாய், அதனால் உன் தொண்டை இறுகுகிறது. இருட்டில் ஆடும் கும்பலில் நுழைகிறாய், இப்போது நீ யாருடைய பன்கினும் அல்ல. நீ காட், அல்லது கிட், அல்லது ஜோ-ஜோ அல்லது பிராங்கி ஆகிறாய். கவனமாக உன் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாய். புதிய கோழிக்குஞ்சுக் கூட்டத்துக்கு உன் களங்கமற்ற, தெளிவான சருமத்தைத் திறந்து கொடுக்கிறாய். அவை உன் முகங்களைக் கொத்துகின்றன, உன் கண்களை, உன் மார்களை. ஆனால் அவை உன்னை ஏற்றுக்கொள்கின்றன, தம் கூட்டத்தின் உன்னையும் சேர்த்துக் கொள்கின்றன. நீ தூங்கி எழுந்திருக்கிராய். மீண்டும் தூங்குகிறாய். முதல்முறை நீ ஒரு அந்நியனுடன் எழுந்திருக்கும்போது நீ விட்டுச் சென்றதில் ஒரு நற்றண்மை இருப்பதை உணரத் துவங்குகிறாய். உனக்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் நீ மறுபடியும் அதைச் செய்கிறாய். அப்புறம் மறுபடியும். காலம் போகிறது, ஆனால் உன்னால் நிறுத்த முடியவில்லை. உன் நிலை முன்னைவிட மோசம், இது உனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்போதும், உன்னில் ஒரு பகுதி வீடு திரும்ப விரும்பும்போதும் நீ திரும்பிப் போவதில்லை. எப்படிப் போவது என்பதை நீ மறந்து விட்டாய். அது எங்கிருக்கிறது என்பதுகூட உனக்குத் தெரியாது.

ஒரு சிறு அறிவிப்பு

https://twitter.com/mjseidlinger/status/627527310648815618

அண்மையில் வாசித்த டிவிட் இது- ஏறத்தாழ பதாகையும் இப்படி ஒரு கோரிக்கை விடுக்கும் நிலையில்தான் உள்ளது.

இலக்கியச் செயல்பாடு என்பது பண்பாட்டுப் பங்களிப்பு- இதில் ஓரிருவரோ ஒரு சிறு குழுவோ தொடர்ந்து செயல்படுவது என்பது மிகக் கடினம். ஓரளவாவது கணிசமான எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் பங்கேற்பது அவசியப்படுகிறது. அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எனவே இதுவரை பிரதிவாரம் திங்கட்கிழமை வலையேறிய பதாகை, இனி வாசிப்புக்கும் விமரிசனத்துக்கும் முன்வைக்கப்படும் தகுதி கொண்ட இரு கவிதைகள், இரு புனைவுகள், இரு கட்டுரைகள் எப்போது தொகுக்கப்படுகிறதோ அப்போது இடுகையிடப்படும்.

இந்நிலை தற்காலிகமானது என்று நினைக்க விரும்புகிறோம், விரைவில் பிரதி வாரம் திங்கட்கிழமை பதிப்பைத் தொடர முடியும் என்று நம்புகிறோம்.

அதுவரை வாசகர்கள் பொறுமை காக்கவும், எழுத்தாளர்கள் editor@padhaakai.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்பவும்.

பதாகை சிறுகதைப் போட்டி – 2015 இறுதி நாள் நெருங்குகிறது தங்கள் படைப்புகளை இந்த முகவரிக்கு அனுப்பத் தவறாதீர்கள்.. இரண்டாயிரம் சொற்களுக்கு உட்பட்ட சிறுகதைகளை அனுப்பலாம். ஒருவர் அதிகபட்சம் இரு சிறுகதைகளை அனுப்பலாம், இந்தப் போட்டி உலகளாவிய ஒன்று, எங்கு வாழ்பவராயினும் பங்கேற்கலாம். சிறுகதைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

விரைவில் சு. வேணுகோபால் படைப்புலகம் குறித்த சிறப்பிதழும் வரவிருக்கிறது- பேட்டி உட்பட சில சிறப்பான கட்டுரைகளைக் கொண்ட பதாகை காலாண்டிதழ், போதுமான உள்ளடக்கம் சேர்ந்ததும் வெளிவரும், இம்மாத இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சு. வேணுகோபால் படைப்புகளை வாசித்திருந்தால் நீங்களும் எழுதலாம்.

தொடர்புக்கு-

← Back

Thank you for your response. ✨

சொற்களாலான மண் – பாலஸ்தீன எழுத்தாளர்கள், ஒரு அறிமுகம்

A Land Made of Words என்ற தலைப்பில் Asymptote தளத்தில் Fakhri Saleh எழுதியுள்ள ஒரு கட்டுரை 

(மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) நினைவில்)

பாலஸ்தீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்துலகின் மையத்தில் பாலஸ்தீனப் பேரழிவு உள்ளது. ஏதிலிகளாக்கப்பட்ட, குடிபெயர்ந்த, ஊனமாக்கப்பட்ட மக்களின் வாழ்வில் விழும் துயரப் பெருநிழலை பல்வகைப்பட்ட இலக்கிய வடிவங்களையும் புனைவு வகைமைகளையும் கையாண்டு உலகின்முன் சித்தரிக்க இவர்கள் முயற்சி செய்திருக்கின்றனர். குறிப்பாக, கவிஞர் (மஹ்மூத் தார்விஷ் (Mahmoud Darwish) (1941-2008), நாவலாசிரியர்கள் கஸ்ஸான் கனாபானி (Ghassan Kanafani) (1936-1972),  ஜப்ரா இப்ராஹிம் ஜப்ரா (Jabra Ibrahim Jabra) (1920-1994), மற்றும் எமில் ஹபீபி (Emile Habiby) (1921-1996), இவர்களில் தனித்து நிற்கின்றனர். இவர்களது தனித்துவம் கொண்ட, புதுவித இலக்கிய நடை தம் மண்ணை இழந்த மக்களின் துயர்மிகுர்ந்த பாலஸ்தீன நக்பாவை (பேரழவு) எழுத்தில் கைப்பற்றுகிறது.,

பாலஸ்தீனத்துக்கு என்று செறிவான இலக்கிய மரபு உண்டு- மிக நுட்பமான இலக்கண வரம்புக்கு உட்படுத்தப்பட்ட கவிதை வடிவங்கள், நாடகங்கள், நாவல்கள் இங்குண்டு. ஆனால் 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தோற்றம் பெற்றபோது அதன் இலக்கிய வாழ்வு திடீரென்று துண்டிக்கப்பட்டது. மிகச் சில அச்சுநூல்களும் கைப்பிரதிகளும் மட்டுமே காப்பாற்றப்பட்டன. அதன்பின், பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் நிலவிய செறிவான இலக்கியம் குறித்த சித்திரத்தை மீளுருவாக்கம் செய்வது வரலாற்று ஆய்வாளர்களின் பணியாயிற்று. இதன் காரணமாகவே, 1948ஆம் ஆண்டுக்குப்பின் படைக்கப்பட்ட பாலஸ்தீன இலக்கியம் புலம்பெயர் இலக்கியமானது. பாலஸ்தீனர்கள் தம் தாய்மண்ணை விட்டு வன்முறையால் விரட்டப்பட்டவர்கள். முதலில் 1948ல் இஸ்ரேலியர்கள் பல பத்தாயிரம் பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்து நூறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றியபோது இது நிகழ்ந்தது. இரண்டாம் முறை 1947ஆம் ஆண்டு வெஸ்ட் பாங்க் மற்றும் காஸா ஸ்ட்ரிப் மீது இஸ்ரேல் படையெடுத்தபோது இது நிகழ்ந்தது. அங்கு அதுவரை பெரும்பாலும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் தம் தாய் மண்ணை விட்டு மீண்டுமொரு முறை அகதிகளாய் வெளியற வேண்டியதாயிற்று.  இன்றும் பாலஸ்தீனிய வெளியேற்றம் தொடர்கிறது. நாடு கடத்தல் மட்டுமல்ல, காஸா ஸ்ட்ரிப் மற்றும் வெஸ்ட் பாங்க்கில் சீரழிந்து வரும் சமூக, அரசியல், பொருளாதார நிலையின் காரணமாக சுயவிருப்பத்தின் பேரிலும் மக்கள் வெளியேறுகின்றனர். இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனியர்களும் வெளியேறியபடி உள்ளனர். (more…)