Author: பதாகை

கனவு நகரம் – டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்

அஜய் ஆர்

“MY GOD, MAE thought. It’s heaven” என்ற வரியுடன் டேவ் எக்கர்ஸின் (Dave Eggers) ‘The Circle’ நாவல் ஆரம்பிக்கிறது. சொர்க்கம் என்று மே குறிப்பிடுவது, தான் அன்று வேலையில் சேரப்போகும் சர்க்கிள் (Circle) என்ற தொழில்நுட்ப/ சமூக வலைதள நிறுவனத்தின் வளாகத்தை பார்த்துத்தான். தான் பிறந்த சிறு நகரில், சவால்கள் இல்லாத, தனக்குப் பிடிக்காத வேலையில் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த மே, சர்க்கிளில் உயர் பதவியில் இருக்கும் ஆனி என்ற தோழியின் உதவியில் அங்கு வேலைக்கு சேர வந்துள்ளார். (மேவின் திறமைதான் காரணம் என்றே ஆனி சொல்கிறார்). ஊழியர்களுக்கான விளையாட்டரங்கம், வசதியான ஓய்வறைகள், பலவகை உணவுகள் இலவசமாக கிடைப்பது, இதையெல்லாம் விட சமூகத்தில் மிகப் பெரிய (நல்ல) தாக்கத்தை ஏற்படுத்தும் வேலையைச் செய்ய வாய்ப்பு, இவை மே சொர்க்கமென்று நினைக்கத் தூண்டுகிறது. அப்படி என்ன ‘சர்க்கிள்’ சாதித்து விட்டது? (more…)

சிண்ட்ரெல்லா கொலைவழக்கு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

Cinderella

இன்னும் பத்து நிமிஷத்தில் சில்க்போர்டு பாலம் வந்துவிடும். இந்த நடுஜாமத்தில் மடிவாலா பக்கம் ஏதாவது டீக்கடை திறந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் போது வண்டியோட்டிக் கொண்டிருந்த கம்பார் மைக்கை திருப்புகிறார். சற்று கரகர பின்னணியில் ஒரு குரல் ‘கமின்…. கமின்… கண்ட்ரோல் ரூம் கமின்…. ஹொய்சளா பேட்ரோல் செவண்டீன் ரிப்போர்ட்டிங்… இல்லி கொலை ஆரிட்டிட்டு. காரு உளகே ஒந்து லேடி டெத்…’ என்று செய்தி சொல்கிறது. ஏதோ சாலைவிபத்து பற்றி தகவல் என்று நினைத்தால் கொலை என்ற வார்த்தை, காரில் உள்ள எல்லோரையும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. உங்களுடைய அடுத்த ஒரு மணி நேர அனுபவங்களும், இன்னும் மூன்று மாதத்திற்காகவது ‘சிண்ட்ரெல்லா கொலைக்கேஸ்’ என்று மீடியாக்களில் அதகளபடப்போகிறது பாருங்கள்.

பின் சீட்டில் அரைத்தூக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஏடிஜிபி ராகவேந்திரா முல்குந்த் இன்னும் நான்கு வருடங்களில் சிட்டி கமிஷனராக ஆகிவிடுவார். அவருக்கு தொந்தரவு வேண்டாமே என்று கம்பார் அவசரமாக மைக்கை அணைக்க போக, முழுவதுமாக விழித்துக்கொண்ட ஏடிஜிபி அவர் தோளைத் தொட்டு, அணைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மைக்கில் வந்த செய்தியை உன்னிப்பாக கேட்கிறார்.

பன்னர்கட்டா ரோடில், மீனாட்சி கோவில் பக்கம் அநாமத்தாக சாலையோரத்தில் கார் ஒன்று நிற்கிறதாம். காரை ஓட்டி வந்த பெண், டிரைவர் சீட்டில் இறந்து கிடக்கிறாராம். வழிப்பறிக் கொள்ளையோடு கொலையாக இருக்கலாம் என்கிறார். மைக்கில் பேசுபவரின் மொழி ஹூப்ளி வட்டாரவழக்கு போல் உங்களுக்கு தெரிகிறது. போலிஸ் வேலை என்று வந்துவிட்டால் எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஆனால் ரொம்பவும் மெனக்கெடாதீர்கள். இந்தக்கதையின் முக்கியமான துப்பு துலக்கப் போகும் பாத்திரம் என்றாலும், நீங்கள் யூனிஃபார்ம் போலிஸ் இல்லை. ஏடிஜிபி ஆபிஸ் கிளார்க்தான். ஏடிஜிபியோடு கேம்ப் போய்விட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். (more…)

படோல் பாபு – திரை நட்சத்திரம்

சத்யஜித் ரே – (தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

இந்திய சினிமாவின் நூறாண்டு நிறைவை கொண்டாடும் விதமாக தயாரிக்கப்பட்ட ‘பாம்பே டாக்கிஸ்‘ திரைப்படத்தின் ஒரு பகுதியாக, பிரபல இயக்குநர் திபாங்கர் பானர்ஜி இயக்கிய குறும்படத்தின் மூலக் கதை. சத்யஜித் ரே ‘படோல் பாபு, திரைநட்சத்திரம்‘ என்ற தலைப்பில் எழுதியிருந்தார். திரையில் பார்க்கும்போது ‘புலிக்கலைஞன்‘ நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.


db-star
நிஷிகாந்தா பாபு தெருவிலிருந்து அழைக்கும்போது படோல் பாபு சாமான்கள் நிறைந்த பையை தனது தோளில் மாட்டிக்கொண்டிருந்தார். ‘படோல், இருக்கிறீர்களா?’

‘இதோ, வருகிறேன்.’

நேபாள் பட்டாச்சார்ஜி தெருவில் படோல் பாபுவின் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி நிஷிகாந்த கோஷ் குடியிருந்தான். வெகு கலகலப்பான ஆள்.

சாமான்கள் பையுடன் வெளிப்போந்த படோல் பாபு கேட்டார். ‘என்னாச்சு? சீக்கிரமே எழுந்துவிட்டாயா?’

‘கவனி. நீ எப்போது திரும்புவாய்?’

‘இன்னும் ஒரு மணி நேரத்தில். ஏன்?’

‘நீ திரும்பவும் வெளியே போக மாட்டாய் அல்லவா? எப்படியிருந்தாலும் இன்று தாகூரின் பிறந்தநாள் வேறு. நேற்று நான் என் மனைவியின் தம்பியை நேதாஜி மருந்துக்கடையில் சந்தித்தேன். அவன் திரைப்படங்களில் வேலை செய்கிறான் – நடிகர்களை ஏற்பாடு செய்வது. ஒரு திரைப்பட காட்சிக்கு ஆள் தேவை என்று சொன்னான். அவன் வேண்டுவது என்ன தெரியுமா – ஐம்பது வயதான, குள்ள, வழுக்கைத்தலை – போன்றதொரு ஆசாமியை. உடனே உன்னைப்பற்றித்தான் நினைத்தேன். அதனால் அவனிடம் உன்னைப் பற்றி சொன்னேன். உன்னிடம் நேரடியாக பேசும்படி அவனிடம் சொல்லியிருக்கிறேன். இங்கே பத்துமணி வாக்கில் இருப்பேன் என்று சொன்னான். உனக்கொண்ணும் பிரச்னை இல்லையே? அவர்களுடைய கணக்குக்கு ஏற்றப்படி சம்பளம் தந்துவிடுவதாக சொன்னான்…’

அவ்வளவு அதிகாலையில் அப்படியான ஒரு குறிப்பை படோல் பாபு நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவரைப்போன்ற சாதாரண ஆசாமிக்கு ஐம்பத்திரெண்டு வயதில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்ப்பது கடினம். உண்மையில் நம்பமுடியாதது. (more…)

ஒளியும் இருளும்

சிகந்தர்வாசி

ஆத்திரப்பட்ட தகப்பன் மனம் வருந்தி
தன மகளை அணைக்கும் மென்மையுடன்
சூரியன் மண்ணை அணைக்கும் தருணம்

பூங்காவில் எல்லோர் முகத்திலும் அன்றைய தினத்தைக்
கடந்துவிட்ட மகிழ்ச்சி, இனி இரவின் அமைதியை நோக்கி
புன்சிரிப்புடன் பயணம்

மங்கலான ஒலி எல்லா பொருட்களையும்
அழகாக மிளிரச் செய்கிறது
இறைவன் கடைக்கண்ணால் மிருதுவாக
மனிதனை நோக்குகிறான்

இலைகளில் ஊடுருவி ஓடிவரும் கதிர்கள்
திட்டுத்திட்டாக என் கைமேல் வந்தமர்கின்றன
வாழ்க்கையைப் போல் என் உடல்
ஒளியும் இருளும் கலந்ததாகிறது

விளையாடும் குழந்தைகளின் கூச்சல்கள்
கூட்டிற்கு திரும்பிவிட்ட பறவைகளின் பேச்சு
பூங்காவிற்கு வெளியே வாகனங்கள்
ஒலிகள் சூழ்ந்திருக்கும் மாலைப் பொழுதில்தான்
ஒலிகளற்ற அமைதி கிடைக்கிறது

 

image credit: Todd McKimmey’s Website

தீபாவளி

சிகந்தர்வாசி

பால்கனியில் நின்றுகொண்டு வானம்
வண்ணமயமாவதைப் பார்க்கிறேன்
சீராக ஒளிக்கோடு போட்டுச் செல்லும் ராக்கெட்
வெடித்து பல பாதைகள் தோன்றுகின்றன
கடந்த பாதையின் தடம் அழிகிறது
வண்ணமயமான வரலாறு சில நொடிகளில்
காணாமல் போகிறது
இன்னொரு பாதை தோன்ற, இன்னொரு ராக்கெட் வெடிக்க
வானமெங்கும் சல்ஃபர் பூக்கள்

நாம் விட்டுச்சென்ற தடங்கள் இன்னும் ஒளிர்கின்றனவா?
யார் மனதில்?
விண்மீன்களை மறைத்துப் பூக்கும் இந்த பூக்கள்
நம் கனவுகளா?

இரவை இருள் ஏன் கவ்வுகிறது?
மழைக்கு எதிராக இங்கொன்றும் அங்கொன்றும் என
வெடிகள் குரல் எழுப்புகின்றன
காற்றையும் மழையையும் எதிர்த்துக்கொண்டு
ராக்கெட் ஒன்று புறப்படுகிறது
இருளுக்கு எதிரான புரட்சி வண்ணங்களால்

வெடித்துச் சிதறிய பிறகு மறுபடியும் இருள்
மறுபடியும் வண்ணக்கோலம்
ஆகாயப் பரப்பில் மறையும் ஓவியங்களை
பலர் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்

சீராக வண்ணகளற்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில் அவ்வப்பொழுது தோன்றும்
இருளும் வெளிச்சமும்