Author: பதாகை

பொருள்மயக்கம்

கமல தேவி 

மலர்முகை தீண்டும் தென்றல்
கருமுகில் தீண்டும் காற்று
மென்தளிர்சுருள் தீண்டும் மழைத்துளி
கைகால் முளைத்த கரு சிசுதீண்டும் முதல் உந்தல்
கருவறை தெய்வத்தைத் தீண்டும் சிறுமலரின்
மென்தொடுகை…
அது அப்படியே
அப்பொருளிலேயே இருக்கட்டும்…

 

சிலந்தி

ப. மதியழகன்

ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது அந்த புனித சேவியர் தேவாலயம். கஜா புயலால் உருக்குலைந்து போன ஆலயத்தை செப்பனிட்டு வந்தார்கள். அங்கு பாதிரியாராக வேலை பார்ப்பவர் செபஸ்டியன். சர்ச் வளாகத்துக்குள் தான் அவர் வீடு. அவர் இந்த தேவாலயத்திற்கு மாற்றலாகி வந்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஆசாரி ஜோசப் தான் சன் சவுண்ட் சர்வீஸ் வச்சிருக்காருன்னு செல்வராசுவை பாதிரியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

செல்வராசு ஐந்தாம் வகுப்புவரை கிறித்தவ மிஷனரி நடத்திய பள்ளியில் தான் படித்தான். அதனால் பாதிரியாரின் வெள்ளை அங்கியைப் பாரத்தவுடன் அவர்மீது தனி மதிப்பும் மரியாதையும் அவனை அறியாமலேயே மனதில் எழுந்தது.

“எத்தனை வருசமா இந்த லைன்ல இருக்கீங்க” என்று கேட்டார் செபஸ்டியன்.

“அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேந்து ஸ்பீக்கரைத் தூக்கிட்டுத் தான் அலையறான்” என்றார் பதிலுக்கு ஆசாரி.

“எங்க வீடு?”

“வீமன் நகர்ல நாலுவீடு தள்ளி ஒரு குடிசை.”

“குழந்தை குட்யெல்லாம்?”

“ஒரு பொண்ணு மூணு வயசு ஆகுது.”

“ஸ்கூல்ல சேத்தாச்சா?”

“இந்த வருஷம்தான் சேக்கணும்.”

“கட்டடத்துல எல்லா மராமரத்து வேலையும் முடிஞ்சிடுச்சி எலக்ட்ரிஷன் வேலைதான் பாக்கி. ஜான் இவரை பிரேயர் ஹாலுக்கு அழைச்சிட்டு போய் காட்டு.”

செல்வராசு வாழ்நாளில் முதல்முறையா பிரார்த்தனைக் கூடத்துக்குள் நுழைந்தான். இருக்கைகளுக்கு எதிரே ஆளுயர சிலுவை மட்டுமே இருந்தது. ஜான் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தான். ஆனால் செல்வாராசுவின் சிந்தனை வேறெங்கோ இருந்தது. ஆனாலும் காதில் வாங்கிக் கொண்டதாக தலையாட்டினான்.

இருவரும் பாதிரியாரிடம் வந்தார்கள். “என்ன செல்வராசு பாத்தாச்சில்ல. இந்த புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை இன்னும் ஒரு வாரத்துல திறக்கப் போறோம். வெல்கம் போர்டு, லைட் செட்டிங், எல்ஈடி-ல் சர்ச் பேரு ஓடுற மாதிரி எல்லாத்தையும் செஞ்சு தந்துடு. எப்ப வேலையை ஆரம்பிக்க போற?”

“அட்வான்ஸ் ஒரு ஐயாயிரம் கொடுங்க. மீதியை எல்லாம் முடிச்சதுக்கப்புறம் வாங்கிக்கிறேன். நாளைக்கு வேலைய ஆரம்பிச்சிடலாம்.”

“ஜான் செல்வராசுகிட்ட ஒரு ஐயாயிரம் கொடுத்துவுடு. வேலை எந்த நிலைமையில இருக்குன்னு டெய்லி என்கிட்ட வந்து சொல்றது உன் வேலை ஜான்.”

“அப்ப நான் வர்றேங்க ஐயா” என விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் செல்வராசு.

செல்வராசு டிவிஎஸ் எக்ஸலில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் பார்த்த சிலுவை அவன் கண்களில் நிழலாடியது. அது காந்தம் போல் அவனை ஈர்த்தது. அங்கு எழுதியிருந்த நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்து போனது. யோசனையிலேயே வீடுவந்து சேர்ந்தான்.

கதவைத் திறந்துவிட்ட செல்லக்கண்ணு “என்ன ஐயா பலமான யோசனையிலேயே இருக்காரு” என்றாள்.

வண்டியை ஸ்டான்டு போட்டு நிறுத்திவிட்டு உள்ளே சென்றான் செல்வராசு. “ஐயாவுக்கு என்ன ஆச்சாம் வாய்க்கா வரப்புத் தகராறுன்னு பஞ்சாயத்து பண்ணப் போனீங்களா?” என்றாள் செல்லக்கண்ணு

“சர்ச்க்கு போயிருந்தேன் செல்லம்!”

“எதுக்கு?”

“ஒரு வேலையா! புயல்ல சேதமடைஞ்ச கட்டடத்தை சீர் பண்ணி இப்பத் திறக்கப்போறாங்க. லைட்டிங்கும், சவுண்ட் சர்வீஸும் நான் தான். ஃபாதர்கிட்ட ஐயாயிரம் அட்வான்ஸ் கூட வாங்கிட்டேன்.” சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்து செல்லக்கண்ணுவிடம் நீட்டினான்.

பணத்தை வாங்கிக் கொண்ட செல்லக்கண்ணு, “அதுக்கும் மூஞ்சி செத்துப்போனதுக்கும் என்ன சம்பந்தம்” என்றாள்.

“அங்க சிலுவை வைச்சிருந்தாங்க. அதைத்தான் கும்பிடறாங்க. ஒரே மாதிரியான இருக்கைதான் ஏழை, பணக்காரன்னு எந்த வித்தியாசமும் இல்லை. சூடத்துகிட்ட நெருப்பைக் கொண்டுபோனா திடீர்ன்னு பத்திக்கும் பாரு அது மாதிரி உள்ளுக்குள்ள ஏதோ எரியறது செல்லம்.”

“கோயில் கோயிலா சுத்துனப்ப பண்ணாதது இப்ப பண்ணுதாக்கும். சோத்த தின்னுட்டு படுங்க. அட்வான்ஸ் பணத்தை சாமிகிட்ட வைக்கிறேன் காலையில எடுத்துக்குங்க.”

வேலை விஷயமாக பேச வேண்டி இருந்ததால் மறுநாள் பாதிரியாரின் வீட்டிற்குச் சென்றான் செல்வராசு. அறையில் கணவனும், மனைவியும் பாதிரியாரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். காத்திருக்கலாம் என்று வெளியே உள்ளே பெஞ்ச்ல் அமர்ந்தான் செல்வராசு. அறைக்குள் அவர்கள் பேசிக் கொண்டிருப்பது நன்றாக அவன் காதில் விழுந்தது.

“ஃபாதர் இந்த உலகத்துல எதுவும் பெருசாத் தெரியலை குழந்தைகளைத் தவிர. வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கறதே குழந்தை தான். என்ன தான் மாளிகையா இருந்தாலும் குழந்தை அழும் சத்தம் கேட்கலைனா அது குடிசை தான், கர்த்தர் எங்களை ஏன் சோதிக்கிறார்” என்றது ஆண்குரல்.

“பெஞ்சமின் ஓரிடத்தில் செல்வம் இருக்கின்றது குழந்தை இல்லை, அதே வேறோரிடத்தில் குழந்தை இருக்கின்றது செல்வமில்லை. இதை கர்த்தரின் சோதனை எனக் கருதினால் அவர் மீது அவநம்பிக்கை கொள்வதற்கு ஒப்பாகும். அதே வேளையில் குழந்தை குழந்தைதான் அது யாருடையதாக இருந்தால் என்ன?” இது ஃபாதரின் குரல்.

“மருத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்துதான் உங்களை நாடி வந்திருக்கிறோம். நீங்கள் தான் எங்கள் பிரார்த்தனையை பரலோக பிதாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றது அப்பெண் குரல்.

ஃபாதர் தொடர்ந்தார் “ஜெபம் செய்கிறேன். உங்கள் கோரிக்கையை நான் நிராகரிக்கவில்லை. அதே வேளையில் பெற்றால்தான் பிள்ளையா இந்த உலகிலுள்ள குழந்தைகள் அனைத்தும் உங்கள் குழந்தைகளாக நீங்கள் உணரவில்லையா? அந்த கடவுட் தன்மை தாய்மை உணர்வு உங்கள் இருவரிடமிருந்தும் பொங்கி எழவில்லையா?”

“நாங்கள் சொத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்வோம். அதற்குரிய வல்லமை எங்களிடம் இருவரிடத்திலும் இருக்கிறது. ஆனால் குழந்தை வரத்திற்கு கடவுளின் அனுக்கிரகம் தேவையாய் இருக்கிறது. இவ்விஷயத்தில் எங்கள் விருப்பத்தைக் கணக்கில் கொள்வது என்னவோ பூஜ்யம் தான்.”

“வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருப்பவரை பிரார்த்திப்போம், வேறென்ன நம்மால் முடியும். குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சொல்வார்கள் பாருங்கள் நிச்சயமாக கர்த்தர் உங்களுக்கு வழி பண்ணுவார். அவருடைய கிருபை உங்கள் இருவர் மீதும் இறங்கட்டும்” என்றார் ஃபாதர்.

“இன்னொன்றையும் முடிவு செய்துகொண்டுதான் இங்கு வந்துள்ளோம். ஒரு குழந்தையை சுவீகாரம் எடுத்து வளர்க்கின்ற போது அதுவே குழந்தை பெறுவதற்கு கர்த்தரின் ஆசிர்வாதமாக அமையும் என்று என் சிநேகிதர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதில் உங்கள் அபிப்ராயம் என்ன ஃபாதர்” என்றது ஆண்குரல்.

“உங்களை ஆறுதல்படுத்துவதற்காக அப்படிச் சொல்லி இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. வசதியற்ற குழந்தைக்கு உணவும், படிப்பும் அளிப்பது பரலோகத்தில் உங்களுக்கான இடத்தை உறுதிப்படுத்தும். உங்களின் சிநேகிதர்கள் வார்த்தைகள் மூலம் கர்த்தர் உங்களை வழிநடத்தி இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் ஃபாதர்.

“எனக்கும் என் கணவருக்கும் பெண் குழந்தைதான் விருப்பம், மூன்று வயதுக்குள் உள்ள குழந்தையென்றால் பரவாயில்லை. உங்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறோம்” என்று பேசியது பெண்குரல்.

“ஃபாதர் கர்த்தரின் விருப்பம் அப்படியானால் அப்படியே நடக்கட்டும் போய்வாருங்கள்” என அந்த தம்பதிகளுக்கு விடை தந்தார்.

அறையை விட்டு வெளியே வந்த பாதிரியார் செல்வராசுவைப் பார்த்து “என்ன செல்வராசு ரொம்ப நேரம் ஆச்சா வந்து” என்றார்.

“அதுயிருக்கட்டும் இப்ப என்ன ஆகிப்போச்சி பரவாயில்லை ஃபாதர். லைட்டிங் சாதா குண்டுபல்பா எல்ஈடியா ன்னு கேட்க வந்தேன் ஃபாதர். எல்ஈடி னா கொஞ்சம் அதிகம் செலவாகும். அப்புறம் எல்ஈடி டிஸ்பிளே ஐந்தடி போதுங்களா” என்றான் செல்வராசு.

“ஐந்தடி போதும், சீரியல் செட் எல்ஈடி யா என்னன்னு ஜான்கிட்ட கேட்டுக்க” என்று சொல்லிவிட்ட ஃபாதர் வீட்டினுள் சென்றார்.

செல்வராசு பைக்கை எடுத்துக் கொண்டு சர்ச் வாயிலை கடக்க முற்பட்ட போது எதிரே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ராஜா ஓடிவந்தான். “தங்கச்சி வயித்துவலின்னு தாங்கமுடியாம மயங்கி விழுந்திடிச்சி பக்கத்துல மலர் ஆஸ்பிடல்ல சேத்துருக்கோம்” என்றான். பதட்டத்துடன் மலர் ஆஸ்பிடல் சென்றான் செல்வராசு.

செல்லக்கண்ணு பெட்டில் படுத்திருந்தாள். மயக்கம் தெளிந்துவிடும் என்று நர்ஸ் சொல்லிச் சென்றாள். ஸ்கேன் ரிப்போட் வந்திருக்கு டாக்டர் உங்களை கூப்பிடுகிறார் என்று நர்ஸ் வந்து சொல்ல செல்வராசு உடன் சென்றான்.

“உங்க மனைவிக்கு கர்ப்பப்பையில கட்டி ஃபாம்ஆகி இருக்கு. கட்டியை மட்டும் ரிமூவ் பண்றது கஷ்டம் அது அவ்வளவு நல்லதுஇல்ல திரும்பவும் ஃபாம் ஆக சான்ஸ் இருக்கு அதனால் கர்ப்பப்பையை ரிமூவ் பண்ணனும் அதுக்கு ரெண்டுலட்சம் ஆகும் உங்களால முடியும்னா இங்க வைச்சி பாக்குறோம் இல்லன்னா ஜிஹெச் க்கு அழைச்சிட்டுப் போங்க. இன்னைக்கு ஈவ்னிங் குள்ள முடிவை சொல்லுங்க. இம்மீடியட்டா இன்னும் டுவெண்டி ஃபோர் ஹவர்ஸக்குள்ள அவங்களுக்கு ஆபரேசன் பண்ணியாகனும்.”

செல்வராசுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. செல்லக்கண்ணு கண்விழித்து வித்யாவைப் பற்றிக் கேட்க பக்கத்துவீட்டில் விட்டு வந்திருப்பதாகச் சொன்னான்.

திரும்பவும் மயக்கமடைந்தாள். நர்ஸ் வந்து பார்த்துவிட்டு இன்னைக்குள்ள பணம் கட்டுங்க ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க என்றாள்.

செல்வராசு ஒரு முடிவுக்கு வந்தவனாய் பக்கத்துவீட்டில் இருந்த வித்யாவை அழைத்துக் கொண்டு பாதிரியாரிடம் சென்றான். அவர் அறையில் இருந்தார்.

“என்ன செல்வராசு?”

“ஐயா ஒரு சேதி!”

“என்ன?”

“இவ எம் பொண்ணு”

“உங்ககிட்ட புருஷன்பொஞ்சாதி ரெண்டுபேர் குழந்தையை தத்து எடுக்கிறதைப் பத்தி பேசிட்டுப் போனாங்கள்ல நானும் அதைக் கேட்டேன். எனக்கு அவசரமா ரெண்டு லட்சம் தேவைப்படுது. இவளை நான் சுவீகாரம் கொடுக்கிறதா இருக்கேன்.”

“அப்படி என்ன அவசரம் செல்வராசு”

“எம் பொஞ்சாதிக்கு கர்ப்பபையில கட்டியிருக்காம் ஆப்ரேஷன் பண்ணனுமாம் ரெண்டு லட்சம் கேட்குறாங்க நான் எங்க போவேன் அவ இல்லாம் நான் இல்ல.”

“சரி நான் அந்த தம்பதிகிட்ட பேசிப் பார்க்குறேன். ஃபாதர் போன் செய்ய உள்ளே சென்றார்.”

சற்று நேரம் கழித்து வெளியே வந்த பாதிரியார். “உன் நிலைமைய பத்தி சொன்னேன். உன்னை அவங்களே அழைச்சிட்டு போவாங்க ரிஜிஸ்டர் ஆபீசில வேலை முடிஞ்சதும் பணம் உன் கைக்கு வந்துடும்” என்றார் பாதிரியார்.

இப்போதுதான் செல்வராசுக்கு உயிர் வந்தது.

வித்யாவை கையோடு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்தை கையோடு வாங்கிக் கொண்டு மலர் வண்டியில் ஹாஸ்பிடல் நோக்கி மின்னலென பறந்து கொண்டிருந்தான் செல்வராசு.

 

 

ஜான் லான்செஸ்டர்: “டிங்-டிங்-டிங் இதோ ஒரு கதை, என்று சொன்னது போலிருந்தது”

அலெக்ஸ் பிரஸ்டன்: இந்தக் கதைகளை ஏன் நீங்கள் இப்போது பதிப்பிக்க முடிவு செய்தீர்கள்? இவற்றில் பல வேறு இடங்களில் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.

லான்செஸ்டர்: “ஏன்?” என்பதற்கு உண்மையான பதில் இதுதான். இவற்றில் முதல் கதையை புத்தாண்டு அன்று எழுதி நண்பர்களுக்கு வாசித்துக் காட்டினேன். அப்போது ஒருவர், இதை நீ ஏதாவது ஒரு பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். நான் நியூ யார்க்கருக்கு அனுப்பினேன். அவர்கள் ஏப்ரல் 2017 ல் அதைப் பதிப்பித்தார்கள். அதுதான் நான் எழுதிய முதல் கதை. நீ ஐம்பது வயதுகளின் மத்தியில் இருக்கும்போது உன்னை கிறுகிறுக்கச் செய்து மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் விஷயங்கள் அதிகம் இருப்பதில்லை. ஆனால் இது அப்படித்தான் இருந்தது. இன்னொரு கதை எழுது என்று என்னை நோக்கி இந்த உலகம் சொல்வது போலிருந்தது.

லாம்பத் கார்டன் அருகில் இருக்கிறது இல்லையா, கார்டன் மியூசியம் என்ற அற்புதமான அருங்காட்சியகம், அதைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு இரண்டாம் கதையை எழுதுவதற்கான தூண்டுதல் கிடைத்தது. அங்குள்ள நிலவறையில் பொருட்களை காட்சிப்படுத்தும்போது சவப்பட்டிகளை நகர்த்துவதுதான் சங்கடமான விஷயம் என்று அதன் கியூரேட்டர் சொல்லிக் கொண்டிருந்தார். நகர்த்தும்போது அவை அடிக்கடி உடைந்து விடுகின்றன, பிணங்கள் திரவமாய் வடிந்து பிணப்பெட்டிச் சாராயம் என்று சொல்லப்படும் வஸ்து உருவாகிறது. அப்போது, டிங்-டிங்-டிங் இதோ ஒரு கதை, என்று சொன்னது போலிருந்தது.

பிரஸ்டன்: சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதிலிருந்து வேறுபட்ட விஷயமா?

லான்செஸ்டர்: நாவலாசியர்கள் பலருக்கும் பதின்பருவத்தில் கவிதை எழுதிய காலகட்டம் இருந்தது என்பது வினோதமான ஒரு குற்றவுணர்வுடன் கூடிய ரகசியம். நிச்சயம் எனக்கு இருந்தது. என் இருபதுகளின் துவக்க ஆண்டுகள் வரை கவிதை எழுதினேன். திகைக்கச் செய்யுமளவு மோசமான கவிதை, எல்லாமே காணாமல் போய் விட்டன. கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். கவிதை எழுதுவதில் ஒரு விந்தையான செயலின்மை இருக்கிறது: நாம் அது வரக் காத்திருக்க வேண்டும். சிறுகதைகள் தாமாய் வந்து சேர்ந்தன.

பிரஸ்டன்: விளக்கத்துக்கு அப்பாற்பட்ட விசித்திரங்களை இந்தக் கதைகள் தொழில்நுட்பத்தில் அடையாளம் காண்கின்றன. நம் இணைய வாழ்வில் குறிப்பாக எதுவும் அது போல் புரிந்து கொள்ள முடியாத அச்சுறுத்தல் தன்மை கொண்டிருக்கிறதா?

லான்செஸ்டர்: இதில் பாதி வேலை முடிந்தபோதுதான் நிலைக்குலையச் செய்யும் தன்மை, இந்தப் பொருட்களின் அமானுடம் (போனை எடுத்துக் காட்டுகிறார்) பொதுக் கருவாய் இருப்பதை உணர்ந்தேன். பழைய காலத்தின் மிகச் சிறந்த பேய்க்கதைகளில்கூட நாம் நினைப்பதை விட அதிகம் புதுமை இருப்பதை நானும்கூட போகிற போக்கில் சொல்லியிருக்கிறேன். பேய்க்கதைகளில் சிறந்தது என்றால் டிக்கன்ஸின் ‘தி சிக்னல்-மேன்’ கதையைச் சொல்லலாம். அதை ஒரு விசித்திரமான கதையாய் நாம் படிக்கிறோம், ஆனால் அது எழுதப்பட்ட காலத்தில் சிக்னல்காரர்கள் புதியவர்கள். இன்னொரு கதை, “ஓ, விசில்,” மற்றொன்று, எம் ஆர் ஜேம்ஸ் எழுதிய “ஐ வில் கம் டு யூ, மை லாட்’. மத்திய காலகட்டத்துக்குரிய அடையாளங்கள் இருந்தாலும் அதில் வருபவன் கோல்ஃப் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் காம்பரிட்ஜ் கல்லூரி ஆசிரியன். இது எல்லாம் மிக நவீன விஷயங்கள். புதிய விஷயங்களில் ஏதோ ஒரு வகை நிலை குலையச் செய்யும் தன்மை இருக்கிறது. அமெரிக்க சோஷியோபயாலஜிஸ்ட் எட்வர்ட் வில்சன் ஒரு சுவாரசியமான விஷயம் சொல்கிறார். நமக்கு பாலியோலித்திக் காலகட்ட மூளை இருப்பதாகச் சொல்கிறார் அவர், ஆனால் நம் நிறுவன அமைப்புகள் மத்திய காலகட்டத்துக்கு உரியவை, தொழில்நுட்பம் இறைத்தன்மை கொண்டது. இவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில்தான் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட விசித்திரங்கள் இருக்கின்றன.

மேலும் வாசிக்க – தி கார்டியன்

எம். கோபாலகிருஷ்ணனின் ‘வால்வெள்ளி’: தன்னைக் கண்டடைதலும் வாழ்தலின் யதார்த்தமும் -முனைவர் ம இராமச்சந்திரன்

முனைவர் ம இராமச்சந்திரன்

“கொண்டாடுவதற்கே இப்பிறவி என அனைத்தையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு நகரும் ஒரு ரசிகன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய குறுநாவல் ‘வால்வெள்ளி’. இது சமூக வாழ்க்கையில் மனிதர்களின் நடத்தைமுறையும் காமமும் வினையாற்றும் சூழ்நிலையைக் களமாகக் கொண்டது. தன்னில் தொலைந்துபோன பாதியின் எச்சங்களைத் தேடிய பயணத்தில் கண்டடையப்படும் அனுபவம் நாவலின் மையமாக விளங்குகிறது. எந்தச் சமூக மதிப்பீடுகளும் அவனால் அல்லது அவளால் ஏற்றுக்கொள்ளப்படும்ம்போது மட்டுமே முக்கியத்துவம் பெறுகிகின்றன. எளிய நிலையற்ற வாழ்க்கைச் சூழலில் நின்று நிதானித்து எவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் புறந்தள்ளவும் முடிவதில்லை.

மனம் தனது பரிமாணங்களை நிகழ்த்திக் காட்டும் செயல்பாடுகளாக நகர்ந்து செல்கிறது கதை. நடுத்தர வயதில் உள்ளுக்குள் இருக்கும் காமம் தன்னை இனம் காணும்போது அனைத்து முறைமைகளும் பொருளற்றுப் போவதே இதன் அடிநாதம். “அன்றைய பகல் நேரத்தில் நான் என்னைக் கண்டு கொண்டேன். அதுவரை நான் அறிந்திராத ரம்மியங்களையும் வலிகளையும் எனக்கு அறிமுகப்படுத்தினாய்.” பெண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு ஆணும் ஆண்மையில் தானிழந்த பகுதிகளை மற்றொரு பெண்ணும் வெளிப்படுத்தும்போது ஏற்படும் காந்த ஈர்ப்பு இயற்கையானது என்பதும் அனுபவிக்கப்பட வேண்டியது என்பதும் நாவலால் உணர்த்தப்படுகிறது. யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அனைத்தும் அனைவருக்குமான புரிதலோடு கடந்து செல்கிறது கதை.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பேராசிரியரின் மனைவி தனது கணவனைக் காண வரும் பட்டாம்பூச்சி ஆராய்ச்சியாளனிடம் தன்னைக் கண்டடையும் பேற்றை நாவலாசிரியர் வாசகனுக்கும் உணர்த்தி விடுகிறார்.

“உன்னை நன்கறிந்த நானும்
என்னை நன்கறிந்த நீயும்
இதற்கு முன்
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை
ஆனால் உன் வாசனை எனக்கு வெகு பரிச்சயம்”

என்ற கவிதை வரிகள் இயற்கையின் உன்னதங்களை உன்னிப்பாகக் காணும் அவனுக்கு அவளின் இருப்பும் இயல்பும் அவனை உணரச் செய்யும் தருணங்களும் வியப்பானவை. அனைத்து அறங்களையும் தாண்டி அவர்கள் செய்யும் களவும் புணர்ச்சியும் அவர்களை நிலை தடுமாற செய்தாலும் அவர்களின் சுய இருத்தலும் சுயத் தேவையும் பூரணமாக அமைவதால் அவர்களின் பிரிதலும் இயல்பாக அமைந்து விடுவதைக் காண முடிகிறது.

பேராசிரியரின் மனைவி, இரு குழந்தைகளுக்குத் தாய், சமூகத்தில் மதிக்கப்படும் நிலை இவற்றையெல்லாம் கடந்து அவளின் உடலும் மனமும் விரும்புவது ஆணின் அன்பான கனிவான புரிதல்கள் சொல்லாடல்கள் மட்டுமே என்பதை உணர்த்தினாலும் சமூக மதிப்பீடுகள் அவளில் வினையாற்றும் வலிமைமிகு உணர்ச்சிகளை நாவலாசிரியர் பதிவு செய்யாமல் இருப்பதில்லை. அவளது மனப்போராட்டங்கள், தவிப்புகள், சுய அறங்கள் அனைத்தையும் தாண்டி அவனது அருகாமை அவளை அவளாக்குகிறது. தன்னை இழந்து அவளைக் கண்டடையும் அதே வேளையில் அவனும் அவளைத் தன்னுள் கண்டடைந்த மாண்பின் ஊடாகக் கடந்து செல்கிறது நாவல்.

பெண்களின் சுதந்திர வெளிகள் பெரும் மதிப்புள்ளவை. ஆனால் பணமதிப்பற்றவை. சிறு பார்வை, சிறு காத்திருப்பு, உதட்டின் வழி சிறு அங்கீகரிப்பு, அவனின் ஊடாக அவளைக் கண்டடைதல் போன்ற எதிர்பார்ப்பு எத்தனை காலம் வாழ்ந்தாலும் இவை நிரப்பப்பட வேண்டிய கோடிட்ட இடங்களாகவே இருக்கின்றன. நிரப்பப்படும் சூழல் ஏற்படும்போது அதனைப் பெறுவதற்கான அனைத்து எத்தனிப்புகளையும் மனம் அவளையும் மீறி வினையாற்றிச் செல்கிறது.

இருவரின் மனம் உடல் சார்ந்த ஏற்புகளுக்குப்பின் எட்டிப்பார்க்கும் மீதி வாழ்க்கை முடிவற்ற பாதையைப் போல நீண்டுள்ளது. கடும் தவயோகியும் தானடைந்த ஆனந்தம் நிமிடங்களில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் அந்த நிமிடங்கள் மீண்டும் வருவதும் நிச்சயமற்ற தனது தவ வாழ்க்கையில் பயணிப்பது போல அவளது வாழ்க்கை பயணப்படுகிறது.

“நம் தொடுகைகளில் அந்நியமில்லை.
நம் தழுவல்களில் தடுமாற்றம் இல்லை.
நம் முத்தங்களில் ஒத்திகைகள் ஏதுமில்லை.
சர்வ நிச்சயமாய்.
சர்வ சுதந்திரமாய்.
ஒருவருக்கொருவர் படையலானோம்.
பரிபூரணமானோம்”.

யாரும் அறிந்திராத ஒவ்வொரு மனிதனின் அந்தரங்க வாழ்க்கை அனுபவங்கள் என்றென்றும் அவர்களுடன் சென்று விடுகின்றன. குழந்தைகளோடு உறவாடினாலும் கணவனோடு இரவுகள் இதமானாலும் விழித்திருக்கும் நினைவுகள் அவர்களுக்கானது. உன்னதமானது. இவர்களின் உன்னத உறவு புகைப்படங்களில் பதிந்த சில பதிவுகளுடன் நகர்ந்து செல்கிறது. ஏதோவொரு தேசத்தில் இயற்கையின் அழகை ஆராய்ந்து கொண்டிருக்கும் அவனது இருத்தலும் அனைத்து எதிர்பார்ப்பும் அர்த்தமற்ற பேரன்பு மேலிட இன்றைய வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள முயலும் அவளின் இருத்தலும் எப்போதும் நேர்ந்து விடுவதில்லை.

“மற்ற படங்களையும் கடிதத்தையும் நான் புடவைகளுக்கு நடுவில் ஒளித்து விட்டேன். எல்லாவற்றையும் அவரிடம் காட்டும் துணிச்சல் இல்லை என்னிடம் அப்போது.” ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அலமாரியில் மறைத்து வைக்க ஏதேனும் சில பொருட்கள் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. கண்ணில் பட்டாலும் அவற்றை திறந்து பார்க்க, அறிந்துகொள்ள மனம் விரும்புவதில்லை. இதனை “உன் படங்கள் வெளியான சஞ்சிகைகளை வேண்டுமென்றே என் கண்ணில் படும்படி போட்டு வைத்தார். கானுயிர் புகைப்படப் போட்டியொன்றில் உனக்குப் பரிசு கிடைத்த செய்தி பிரசுரிக்கப்பட்ட இதழைக் கொண்டு வந்து என்னிடம் காட்டியபோது நான் எரிந்து விழுந்ததில் சற்றே திடுக்கிட்டுப் போனார்,” என்ற வரிகள் இவளின் அந்தரங்கம் அறியப்பட்டுவிட்ட உண்மையாக மாறியதும் இதனை அவளது மனம் ஏற்க மறுப்பதின் வெளிப்பாடாக அவளது கோபம் வெளிப்படுவதுமாகக் கதை நகர்ந்து செல்கிறது. அவரவர் மனம் அவரவர் அந்தரங்கம் அவரவர் வாழ்வியல் பொக்கிஷங்களாகவும் இருக்கலாம். விகாரங்களாகவும் இருக்கலாம். அவரவர் வாழ்க்கை அவர்களுடன் மரணத்தைப் போல எடுத்துக் கொள்ளவோ அல்லது கொடுத்துச் செல்லவோ முடியாது.

தனது வாழ்க்கை, கணவன், குழந்தைகள், குடும்பம் என்ற சூழலில் இயங்குவதை ஏற்றுக்கொண்ட அவளது மனம் அவனுக்கான வாழ்க்கைச் சித்திரத்தைத் தானே கட்டமைக்க எண்ணுகிறது. “என்னிடம் கண்ட பரவசங்களைத் தரும் இன்னொரு பெண்ணை நீ கண்டடைவது ஒன்றும் சிரமமானது அல்ல. விரைவில் அப்படியொருத்தியைக் கண்டடையும்போது நீ செய்யவேண்டியது ஒன்றுதான். அவளுக்கான கனவுகளை அறிந்து கொண்டு முடிந்த மட்டும் அவற்றுக்கு மரியாதை செய்வதுதான். என்னில் கண்ட ஏதோ ஒன்றை அவளிடமும் உன்னால் கண்டடைய முடியும்,” என்பதன் மூலம் அவனுக்கான வாழ்வியல் வெளியைச் சற்று ஏமாற்ற உணர்வோடும் அதேவேளையில் அங்கீகரித்தலோடும் பெண்ணுணர்வு வெளிப்பட்டு நிற்கின்றது. காலை சூரியன் மலர்களை, பறவைகளை, விலங்குகளைப் புதுப்பிப்பது போல ஓடிக் கொண்டிருக்கிறது மனித நதி வால்வெள்ளியாக.

எம்.கோபாலகிருஷ்ணன், வால்வெள்ளி, குறுநாவல், 2018, தமிழினி பதிப்பகம், சென்னை-51.

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ.நஸ்புள்ளாஹ்

சொற்களை ஒரு பறவையாக
கற்பனை செய்து
அதன் றெக்கைகளில் ஏறி அமர்ந்து கொண்டேன்.
மிக வேகமாக பறவை
கடல்
மலைகள்
மற்றும் பாலை நிலம் என
என்னை அழைத்துச் சென்றது
நிலவின் கதவைத் திறந்து
நுள்ளே நுழைந்து
பறவையும் நானும் ஓய்வெடுத்துக் கொண்டோம்
விரிந்து வெற்றிடமாக கிடந்தது வெளி
அங்கே யாராவது வருவதற்கான
சாத்தியம் குறைவாக இருந்தது.
எனவே வெளியேறுவதற்காய் முயற்சித்தோம்.
அப்போது
மேகங்களால் ஆன ஒரு
உருவம் காட்சியளித்தது
ஆம் அது ஏவாள்தான்…
மீதிச் சம்பவத்திற்கு கற்பனையைத் தொடங்குங்கள்.

00

கதை சொல்லி
பிரதிக்கு வெளியே நின்றார்
வாசகன் பிரதிக்குள் நின்றான்
நெடுநாளாய் பிரதிக்குள் இருந்த வாசகன்
ஒரு நாள்
பிரதிக்கு வெளியே நின்றான்
அன்று பார்த்து
கதை சொல்லி பிரதிக்குள் நின்றார்
ஒரு நாள் கதை சொல்லி
கற்பனைக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்த தருணம் பார்த்து
பாதை ஒன்றை உருவாக்கி
கதை சொல்லியை நெருங்கினான் வாசகன்
பின் கதை சொல்லியின் பிரதிகள் மீது
வரிசையாக விமர்னங்களை முன் வைத்தான்
அப்போது கற்பனைக்குள்
நிறுத்தப் பட்ட
மரத்தில் இருந்து சில பறவைகள் வெளியேறின.
கதை சொல்லி
பறவைகள் வெளியேறிய மரத்தைப் பிடித்து உசுப்பினான்
அதிலிருந்து சொற்கள் பறக்கத் துவங்கின.

00

எனது சொற்கள் முதலில்
வெள்ளைத்தாளில் தாவின
இரண்டாம் முறை சொற்கள்
புத்தகம் ஒன்றுக்குள் தாவின
மூன்றாம் முறை சில சொற்கள்
வாசகனின் மேசைமீது தாவின
இன்னும் சில கொற்கள்
நூலகம் ஒற்றின் அலமாரிக்குள் தாவின
வாசகனின் மேசைமீது தாவிய சொற்கள்
பல இலட்சம் மனிதர்களை சந்தித்தன
நூலக அலமாரிக்குள் தாவிய சொற்கள்
தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தன
எனக்கு நினைவெல்லாம் சொற்கள் மீதே இருந்தது
சொற்களை பெயர் சொல்லி அழைத்தேன்
பறந்து வந்து என் நெஞ்சின் மீதமர்ந்து அவை பல நூறு கதைகள்
சொல்ல முற்பட்டன.