நகுல்வசன்

அம்மணமாய் நிற்கும் பெண்- கரோல் ஆன் டஃபி

நகுல்வசன்

கேவலம் துட்டுக்காக இந்த இழவை ஆறு மணிநேரம் செய்ய வேண்டியிருக்கிறது.
தொப்புள் முலை குண்டியெல்லாம் ஜன்னல் வெளிச்சத்தில் காட்ட வைத்து
என் நிறங்களைப் பிழிந்தெடுத்துக் கொள்கிறான். இதில் வலது பக்கம்
தள்ளி நின்று அசையாமல் வேறு இருக்க வேண்டுமாம்.
என் உடம்பை கட்டம் கட்டமாக வரைந்து பிரேம் போட்டு
பெரிய மியூசியத்தில் எல்லாம் தொங்கவிடுவார்கள். பணக்கார்ர்கள்
என் தேவடியாப் படத்தைப் பார்த்து உச்சுக் கொட்டுவார்கள்.
இதறகுப் பேர்தான் கலையாம்.

யார் கண்டது? அவன் தலைவலி அவனுக்கு.
எனக்கோ வயிற்றுப் பிழைப்பு. நான் ஒல்லியாகிக்
கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். என் முலைகள்
சற்றே சரிந்து தொங்கத் தொடங்கிவிட்டன,
இந்த ஸ்டூடியோவோ குளிர்ந்து விறைக்கிறது. எலிசபெத் ராணி
என் உடம்பை உற்றுப் பார்ப்பது போல் ஒரு கனவு.
அற்புதம் என்று முணுமுணுத்தபடி அவள் கடந்து செல்கிறாள்.
சிரிப்பு வருகிறது. அவன் பெயர்

ஜார்ஜெ. அவன் ஒரு மேதையாம்.
ஓவியம் சரிவராத வேளைகளில் தன் இயலாமையை
என்னுடம்பின் கதகதப்பில் கரைத்துவிட ஏங்குகிறான்.
சாயத்தில் தூரிகையைத் தோய்த்துத் தோய்த்துக் கிட்டாண்
சட்டத்திற்குள் என்னை புணர்ந்து கொள்கிறான். பாவம்!
அதற்கெல்லாம் அவனுக்கேது காசு. நாங்கள் இருவருமே
ஏழைகள். எதையெதையோ செய்து எப்படியோ
பிழைத்துக் கொள்கிறோம். ஏன் இதைச் செய்கிறாய்,
என்று கேட்டதற்கு, அப்படித்தான் வேறு வழியில்லை,
வாயை மூடு என்று அடக்கிவிட்டான். என் சிரிப்பு
அவனைக் குழப்புகிறது. இந்த கலைஞர்களுக்கு
எப்போதுமே தாங்கள் ஏதோ பிஸதாக்கள்
என்ற பாவனை. மதுவால் வயிற்றை நிரப்பிக்கொண்டு
நான் இரவில் மதுக்கூடங்களில் ஆட வேண்டும்.
ஓவியத்தை முடிந்தபின் ஜம்பமாய் என்னிடம் காட்டுகிறான்,
சிகரெட்டை பற்றவைத்தபடியே.
சரி, மொத்தம் பன்னிரெண்டு ஃபிராங்க்,
என்று அவனிடம் கணக்களித்துவிட்டு என் மேலாடையை
எடுத்துக் கொள்கிறேன், ஓவியமோ என்போலவே இல்லை.​

௦௦

ஒளிப்பட உதவி – Wikiart

நத்தையின் கனவு

எண்ணற்ற நேர்க்கோடுகள்
எப்போதுமே  குவிகின்றன
பழகிப்போன  அறையின்
மூலையில்.

கனவின் கரையில்
நனவின் நினைவென
நிலைத்து நிற்கிறது
அந்த நத்தை.

கலையின் வலையில்
நத்தையின் நிழலை
அறையின் மூலையில்
நிறுத்த நினைக்கையில்,

நேர்கோட்டு ஏணியில்
விதியின் பழக்கத்தோடு
மூலையிலிருந்து முந்துகிறது
நத்தையின் கனவு:

காலத்தின் கரையில்
மரணத்தின் நனவாய்
நிழலாகி நிற்கிறேன்
நான்.

கரையைக் கடந்து
அலையில் அமிழ்ந்தால்
கனவும் நனவாகும்
வார்த்தைகளின் வானத்தில்,

குளிசங்கின் வளைவுகளில்
மரணத்தை நத்தையாக்கி
மூலைகளில்லா பெருவெளியாய்
விரியுமா என் கவிதை ?

000

ஒளிப்பட உதவி – Lightwave

வழியனுப்புதல்

நகுல்வசன்

ரயில் நிலயத்திற்கு தனியாக வருவது எப்போதும் போல் எனக்கு படபடப்பை அளித்தது. இதற்கான காரணம் இதுவரையில் எனக்குச் சரியாக புலப்படவில்லை. காரணங்களைப் பற்றி சிந்திக்கையில் ஏதேதோ நினைவுகள் கால வரிசையின்றி ஒரே சமயத்தில் கிளர்நதெழும். இது படபடப்பை மேலும் அதிகரிக்கும். வழியனுப்புவதறகு யாராவது கூடவே வந்தால் இம்மாதிரியான சிந்தனைகளை ரயில் கிளம்பும் வரையிலாவது ஒத்திப் போடலாம். ஆனால் இதை எல்லாம் வெளியே சொன்னால் கேலியும் சிரிப்பும்தான் மிஞ்சும். நாற்பது வயதில் ரயிலில் தனியாகப் போக பயம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். (more…)

இருமொழிக் கவிதை- புழக்கடையில் பனி/ Backyard Snow

நகுல்வசன்

புழக்கடையில் பனி:

1

இரவெல்லாம் பனி .
நினைவின் எச்சமாக ஆங்காங்கே,
கிளைகளில் இலைகள்
இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும்
வசந்தத்தின் கனவை அழித்த பெருமிதத்தில்,
குளிர்காலம் எழுப்புகிறது
தன் கண்ணாடி சாம்ராஜ்யத்தை.
அதன் சுவர்களில் காலம் அழகு பார்க்கையில்
பளிங்கு பிரதிபலிக்கிறது
வயோதிகத்தின் வாடிய வதனத்தை.

2

வெளி ஒளிர்கிறது.
இலைகளற்ற கிளைகளின் மீது, தொடர்ச்சியாக,
பௌதிக விதிகளை நினைவுகூர்ந்து,
நேர்த்தியுடன் தன்னை சமன் செய்து கொண்டிருந்தது
பனி.
ஊரில் டீபிராஸ்ட் செய்ய மறந்திட்ட
அப்பாவின் பழைய கெல்வினேடர் குளிர்சாதனப் பெட்டியில்,
இப்படித் தான், நீண்டு உறைந்திருக்கும்,
பனி.
ஓவல்டின்னை ப்ரீசரில் உறைய வைத்து
தங்கையும் நானும் ஐஸ்க்ரீமாக
அலுப்பில்லாமல் அனுபவித்தது
காலத்தின் கண்ணாடியில் ஒரு கணம் மிளிர்கிறது.
தேனீர் கோப்பையின் ஆவி அதை அழிக்க,
ஜன்னல் கண்ணாடியில் பனியின் பின்புலத்துடன்
அப்பாவின் வயதான முகம் தோன்றி மறைகிறது.

ooOoo (more…)