– Matthew Jakubowski –
(This story is translated with the kind permission of Matthew Jakubowski for non-commercial publication specifically at Padhakai.com. No other use may be made of this material without prior permission of the author.)

ஜெப் காலமாகிய பின் இந்த ஏழு ஆண்டுகளாக சில மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் பெயர் சூட்டுவதும் பின் அதை மாற்றி வேறு பெயர் சூட்டுவதுமாய் இருக்கிறாள் கரேன். அமைதியான இடம், காலி கலவி மாளிகை, பதுக்கல்காரனின் களிப்பு, குப்பை ஆட்டுக் கொட்டடி, ஆனந்த நிலவறை. இருபத்து- மூன்று ஆண்டுகள் இருவரும் ஒன்றாய் இருந்தது குறித்த அவளது நினைவுகளின் இறுகும் ஆடியில் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் அவனைத் திருப்தி செய்வதற்கான விளையாட்டாய் துவங்கியது.
காலையில் தனியாய் முட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதும், இரவில் தாமதமாய் கதவைத் திறந்து உள்ளே வரும்போதும், அவளது நினைவுகளின் இல்லத்துக்குரிய ஒரு புதுப்பெயர் தோன்றும். அந்தப் புதுப்பெயரை அவள் மீண்டும் மீண்டும் மெல்லத் தனக்குள் சொல்லிக் கொள்ளும்போது, கண்கள் விரிந்து அவளது முகத் தோற்றம் ஒரு நீர்வீழ்ச்சியைக் கடந்து வந்தது போல் உயிர்த்தெழும்.
புதுப்பெயர் சிறிது காலம் அவளைக் காக்கும். முன்னளவு கண்ணீர் இல்லை, ஈரமற்ற தேம்பல். ஆதன் ஆற்றல் குறைவதன் துவக்கத்தை அவள் பெரும்பாலும் இரவில்தான் உணர்வாள், வெளியே பலமான காற்றோ குளிரோ இல்லாதபோதும் தரையும் சுவர்களும் அசையத் துவங்கும்; அவனை அவள் மறக்கவில்லை என்பதை அவன் அறிந்தாக வேண்டும் என்று பாவனை செய்து கொள்வதற்கேனும் ஒரு புதுப்பெயர் தேவைப்படுகிறது என்பதை அவள் அறிந்து கொள்வாள்.
அவள் அவனை அவ்வளவு நேசித்தாளா? காதல் நிகழ்காலத்தில் உள்ளதல்ல. அது கடந்த காலமும் எதிர் காலமும் உயிர்நாட்டதைப் பற்றுதலின் இறுக்கம், உன்னில் ஒரு பகுதியை வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பது, நீ மங்கி மறைவதைக் கண்டதும் உன்னை உயிர்ப்பிக்க அவர்களைப் பாடச் செய்வது. உண்மையைச் சொல்வதானால், அவனது இல்லாமையை நேசிப்பது இதமாக இருந்ததால் அவள் பாடிக் கொண்டேயிருந்தாள். அவ்வளவு நேசித்தாளா என்ற கேள்விக்கு, இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டாள். இப்போதும் அவன் அறியப்பட்டவன்தான், ஆறுதலளிக்கும் இல்லாமையின் இருப்பு.
வெறுமை தன் வடிவம் இழந்தபோது, மேலும் மேலும் அவனைப் போல் இல்லாது போனபோது, தனது நினைவுகளையும் சந்தேகங்களையும் எந்த நிலைக்குக் கொண்டு சென்றாலும் சரி என்று ஏற்றுக்கொண்டு தன் துயரம் அதைச் சரி செய்யவும், அதன் மீது மோதிக் கொள்ளவும் இடம் கொடுத்தாள்.
அவன் துன்பப்படுகிறானா? இப்போது அவன் போய் விட்ட நிலையில் அவளது துயரம் குறித்து அவனுக்கு அக்கறை இருக்குமா?
“நீ தேறி வருவதை நீயே கெடுத்துக் கொள்கிறாய், அது உனக்கும் தெரியும்,” என்று அவளது நெருங்கிய தோழி லியாண்ட்ரா அழுதுவிடுவது போல் கூறினாள், கரேன் வீட்டுக்கு எவ்வளவு முறை புதுப்பெயர் தந்திருப்பாளோ அவ்வளவு முறை விசுவாசமாய் அவள் மீண்டும் மீண்டும் பாடும் பல்லவி. “நீ உன்னை எவ்வளவு கஷ்டப்படுத்திக் கொள்கிறாய் என்பது அபத்தமாக இருக்கிறது. உனக்கு பணமும் நேரமும் இருக்கிறது என்பதால் மட்டும் நீ அவனுக்கு கடமைப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தமில்லை. அப்புறம், எதுவும் சொல்லாதே…”
“… ஹனி, நான் உன் மீதும் அன்பு வைத்திருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.” வழக்கமாய் வரும் பதில்தான், அதில் அன்பைவிட குரூரம்தான் இருந்தது, பிறரைப் போலவே லியாண்ட்ராவும் தனது கலையை மதிக்க மாட்டாள் என்ற அச்சத்தால் நம்பிக்கையின்மை வெளிப்படையாகவே தெரிந்தது.
அவளது நண்பர்களும் பலரை இழந்திருக்கிறார்கள். புற்றுநோயைவிட கொடூரமான விஷயங்களுக்காக. அவளுக்குத் தெரியும்.
அவர்கள் அறிய மாட்டார்கள். ஏனென்றால், அந்த வீட்டைப் பற்றி என்ன ஏது எப்படி என்று எதுவும் அவள் சொன்னதில்லை, அதன் சுவர்களுக்குள் துக்கத்தை ஒரு நிகழ்த்துகலையாகவும் போர்க்கலையாகவும் பயிலும் அவளது வழக்கங்கள் பற்றியும் அவள் சொன்னதில்லை.
அது இப்போதும் எவ்வாறு திரள்கிறது, அந்த உணர்வுதான், அவனது இல்லாமையை இவ்வுலகினுள் அது சுவாசிக்கும்போதே அவளும் அவனது உயிரை அதனுள் சுவாசிக்கிறாள், இவ்வாறு பிணைந்திருத்தலில் தன் வாழ்வுக்கு ஒரு பொருள் இருப்பதாய் கற்பனை செய்து கொள்வதன் அமானுட சஞ்சாரமும் சஞ்சரித்தலும். சாதாரணமாய் வாழ்தலைத் தனக்குரியதாய் ஆக்கிக்கொள்ள அவளால் இயலும், அது சோபையிழக்கும் என்றாலும்; அதன் பின் ஒரு நாள் அவள் பிணையற்ற பறவையாவாள். இந்தச் சிலேடை அவளை எப்போதும் சிரிக்க வைத்ததில்லை.
வெறுமைக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட உலகுகளுக்கு இடையில் வீடு பெருமூச்செறிவதைக் கேட்டபடி படுக்கையின் தனிமையில் அவளது உடல் போர்வைகளுக்கு இடையில் மண்ணின் கீழ் ஆழத்தில் கிடப்பது போல் இருந்தாள், அதன் உயிருள்ள சருமம் எங்கும் இறந்தவர்களைச் செவித்தபடி. தொல்காலத்தில் இருந்தவர்கள் சொன்னது போல், புதிய உடலொன்று தரிக்கக்கூடிய உடலின் உறக்கத்தில்.
அவன் போய்ச் சேர வேண்டும் என்று சில சமயம் நீ எவ்வளவு விரும்பினாய் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்களோ இல்லையோ, நீ பைத்தியமாய் பாசம் வைத்திருக்கிறாய் என்று சொல்கிறார்கள். அவள் அறிவதற்கு வெகு காலம் முன்னரே இழப்பின் முழு உருவத்தையும் அறிந்து விட்ட அவர்கள்- உண்மையில் நோய்மையே தீது, என்று அறிந்திருந்திருந்தார்கள். துன்பப்படுதலே உண்மையில் அஞ்சுதற்குரிய முடிவின்மை. முகமற்ற வலி குரூர, குறுகிய வாழ்வில் நித்தியங்களை வளர்த்தெடுக்கிறது.
தம்பதியர் “பாசத்துடன்” “போராடும்” இரட்டைப் போராளிகள் ஆகின்றனர். என்ன ஒரு கதை! ஆனால் இது ஒரு நாயகக் கதையா இல்லை பேய்க் கதையா? சுண்டிவிடப்பட்ட நாணயத்தின் இரு முகங்கள் என்பதை கரேன் அறிந்திருந்தாள். அது எங்காவது விழுந்தாக வேண்டும். விளைவுகளை கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க முடியாது. அவள் அதைச் செய்யவில்லை. அதன் ஒவ்வொரு சுழற்சியையும் அவள் கவனித்திருந்தாள், நாணயம் நிலைக்கு வந்ததும், மரணத்தின் முகத்தை உற்று நோக்கினாள்.
அவள் பிரச்சினை என்ன என்பதைப் பிறரிடம் சொல்ல முயற்சி செய்வது வெளிப்படையாய் பேசுவது என்று சொல்கிறார்களே, அதற்கும், சாதாரண விஷயத்துக்கான புகழ்ச்சிக்கும்தான் கொண்டு செல்லும். முட்டாள்தனமான வாக்குவாதத்தில் வெற்றி பெறவோ, மீட்கப்பட வேண்டுமென்றோ அவள் விரும்பவில்லை. இன்னும் விரிவான, நிரந்தர அந்தரங்க வட்டத்தைப் பிறர் மதித்தால் போதும், என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆனால் மரணத்தைச் சில சமயம் மன்னிக்க முடியாது என்பதைத்தான் அவள் லியாண்ட்ராவிடமும் பிறரிடமும் சொல்ல அஞ்சியிருக்கலாம். நிச்சயம் இது போல் நடந்து விடுகின்றது. ஆனால் அவற்றை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. எண்ணற்ற புதுப்பெயர்களே நமக்குப் போதுமானவையாய் இருக்கலாம், மரணத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளின்மீது உணர்ச்சிகளற்ற ஒரு புரிதலை அவை நிலைநாட்டக்கூடும். போதாமை மிகுந்த ஜீவன்களில் நாம் தொடர்ந்து பெயர் சூட்டி உயிர் நிறைக்கும்போது இந்தச் சக்திகள் எதிர்வினையாற்றாமல் போகலாம், இவ்வுலகுக்குப் பொருந்தாத தம் இருப்பு விரிசலடைவதை அவையும் உணரத் துவங்கலாம். திறந்த, துடிக்கும் இதயத்தைப் பொசுக்கும் வெண்-சூட்டுத் தீக்கோல் போன்ற காதலால் நாம் நம்முடன் இறுக்கி அணைத்துக் கொண்டவர்களைப் போல் தாமும் மரணிக்கக்கூடியவைதான் என்பதை அவை கணப்போது உணரலாம். அப்படியும் இருக்கலாம். உயிர்க் குருதிக்குள் துளைக்கும் உலோகத்தின் வெப்பம், புதிய பெயர்களை அழைக்கும் ஓலம். அப்படியும் இருக்கலாம், ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் என்றாலும், அவளது உயிரும் பிரியும் வரை.
நன்றி : (b)OINK
oOo
About the author:
Matthew Jakubowski is an American fiction writer and literary critic. A former editor for the translation journal Asymptote, his writing appears regularly in publications worldwide, such as The Paris Review Daily, The National, 3:AM Magazine, The Brooklyn Rail and Kirkus Reviews. He lives in Philadelphia, Pennsylvania, and maintains a litblog called truce. (Blog URL: http://mattjakubowski.com )
Like this:
Like Loading...