![]()
1. பிறப்பு
பத்து லட்சம் பேர் இருக்கும் கல்கத்தாவில் புறாக்கள் இருபது லட்சமாவது இருக்கும். இந்துப் பையன்கள் மூன்றில் ஒருவனிடம் காரியர்கள், டம்ப்ளர்கள், ஃபேன்டெயில்கள், பௌடர்கள் என்று ஒரு டஜன் வளர்ப்புப் பறவைகளாவது இருக்கும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறாக்கள் வளர்க்கப்பட்டு வரும் இந்தியாவில், ஃபேன்-டெயிலும் பெளடரும் பறவைகளை நேசிப்பவர்கள் பிரத்யேகமாய் உருவாக்கிய இருவேறு இனப் புறாக்கள். காலங்காலமாக, மாட மாளிகைகளில் அரச குடியினராலும், சின்னஞ் சிறிய வீடுகளில் ஏழைகளாலும் புறக்களின் மீது அன்பும் அக்கறையும் பொழியப்பட்டு வருகிறது. பணக்காரர்களின் தோட்டங்களிலும் குடில்களிலும் நீரூற்றுகளிலும், சாதாரணர்களின் சிறு நந்தவனங்களிலும், பழத்தோட்டங்களிலும், அலங்காரமாகவும் இசையாகவும் பல வண்ணப்புறாக்களும் குனுகும் மரகதக் கண் கொண்ட வெண்புறாக்களும் தானிருக்கும்.
இன்றைக்கும் கூட, எங்கள் பெருநகர்களுக்கு வருகை புரியும் வெளிநாட்டினர், தங்கள் வளர்ப்புப் புறாக்கள் ஈரமற்ற குளிர் காற்றில் உயரப் பறக்க, எண்ணற்ற சிறுவர்கள் சமதளமாய் இருக்கும் வீட்டுக் கூரைகளில் வெள்ளைக்கொடி அசைத்து சமிக்ஞை செய்து கொண்டிருப்பதைக் குளிர்கால காலை வேளைகளில் காண முடியும். நீல வானத்தில், தடித்த மேகங்களாய் புறாக்கூட்டங்கள் பறந்து செல்லும். சிறிய கூட்டங்களாகத் தொடங்கி, தங்கள் எஜமானர்கள் வீட்டுக் கூரைகளின் மேல் இருபது நிமிடங்கள் வட்டமடிக்கும். பின் மெதுவாக மேலேறி, எல்லா சிறிய கூட்டங்களும் ஒரு பெரிய கூட்டமாகி, கண்ணுக்கப்பால் தொலைதூரம் போய்விடும். ரோஸ், மஞ்சள், வயலட், வெள்ளை என்று பல நிறங்களில் இருந்தாலும் எல்லா வீட்டுக் கூரைகளும் ஒரே வடிவில் இருக்கும்போது, ஒவ்வொரு புறாவும் தத்தமது வீடுகளை எப்படி கண்டுபிடித்து வந்து சேர்கிறது என்பது ஆச்சரியம்தான். (more…)
