கமல தேவி

வேலி- கமல தேவி சிறுகதை

கமல தேவி

காற்றை வடிகட்டும் கண்களுக்குத் தெரியாத அலைகளால் ஆன வலையை சில ஊர்களைச் சுற்றி அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்தார்கள். அப்பொழுது  த்வரிதாவிற்கு பத்து வயதுக்கு மேல்  இருக்கலாம்.

“வீட்லயே இருக்கனும் த்வரிதா…” என்பதை கேட்டுக் கேட்டு சலித்தாள். அவளின் கூட்டாளிகளும் அவ்வாறே வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள்.

விலைமதிப்பில்லாத அந்தத் திட்டம் நகர்களை சமைக்கும் அமைப்பின் சாதனைகளின் சிகரம் என்பதால் அதை வடிகட்டிய காற்றின் அலைகளில் பதிக்கும் பணியும் விரைந்து நடந்து கொண்டிருந்தது.

நவீன வாழ்வின் அத்தனை அம்சங்களும் இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அது மேட்டுநிலப் பகுதி.நீர் நிற்காத நிலம். ஆனால் ஊற்றுகள் எங்கும் இருந்தன. அவர்கள் இயற்கையோடு நின்று பெற்று வாழ்ந்தார்கள். அந்த இயற்கை ஒரு உள்ளங்கை போல விரிந்து தன்னை காண்பித்து ஈர்த்தபடி இருந்தது. அதன் ஆழத்தில் உள்ளதன் சாரமென அது விரிந்திருந்தது.

அன்றாட செயல்களில் இருந்த ஊர்களில், மெதுவாக மெல்லிய அறியாத கெட்ட வாசனை காற்றில் கலப்பதைப் போல புரளிகள் பரவி சூழ்ந்தன. எங்கிருந்தோ ஆபத்து என்று பேசிப் பேசி அது இல்லாமலேயே அதை அருகில் கண்டார்கள். த்வரிதாவின் கண்கள் காணவே ஒரு மாயத்திரை ஓவியத்தை மெல்ல மெல்ல கலைத்து விரித்ததைப் போல சூழல் மாறிக் கொண்டிருந்தது.

“நாளைக்கு என்ன நடக்குமோ என்ற கேள்வி,” இயல்பிலிருந்து எச்சரிக்கைக்கு மாறியது. அது பேரச்சமாக மாறி சூழ்ந்ததும், மனிதர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அதைப் பற்றியே சிந்தித்தார்கள். அந்தத் தருணத்தில் இந்த பாதுகாப்பு வலை மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது. அவர்கள் அந்தவலை போலவே பூமிக்கு அடியில் உருவான இன்னொரு பாதையை அறியவே இல்லை.

ஒவ்வொரு முறையும் வடிகட்டிய காற்றின் புதியஅலை கடந்து செல்கையில் அரசின் சாதனை மென்மையாக காதுகளில் ஒருமுறை ஒலித்துச் செல்வதாக இருந்ததால் த்வரிதா தோள்களை குறுக்கி கண்களை மூடிக் கொண்டு சிரித்தாள்.

என்றைக்கு பக்கத்து நகரத்து அரசு தன் நுண்ணுயிர் ஆயுதத்தை பரப்பும் என்று அறிய தீவிரமாக ஒற்று வேலை நடந்தது. நகரின் மேல் பறந்த நுண் ஒற்றனான செயலி அளித்த கணிப்பு நாளிற்கு முன், வேலைகள் முடியும் களிப்பு அறிஞர்களிடம் இருந்தது.

இரு ஆண்டுகளில் ஊர்கள் இணைந்து மெல்ல மெல்ல ஒரு நகரமாகிக் கொண்டிருந்தது. மனிதர்களும் மாறிக் கொண்டிருந்தார்கள். புது ஆட்கள் குடியேறினார்கள்.

த்வரிதா சுற்றுலா வந்த இடத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதைப் போன்ற மனநிலையில் இருந்தாள். தன் வீடு எங்கோ இருப்பதான ஒரு பிரமை அவளுக்கு எப்போதும் இருந்தது. உறங்கி விழிக்கையில் எங்கிருக்கிறேன் என்ற எண்ணம் அகன்றபின் இதயம் படபடக்கும். ஒருவாறு ‘நம்ம வீடு தான்….நம்ம வீடுதான்,” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்.

பயன் தரும் கால்நடைகளுக்கு மட்டும் நகரின் எல்லையில் வாழிடம் உருவாக்கப்பட்டிருந்தது. தன் வீட்டு பப்பியை நகர்அமைப்பின் ஆட்கள் அழைத்துச் செல்கையில் அவள் கலாட்டா செய்ததால் அவள் மனநலமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

மருத்துவர், “ஏன் இவ்வளவு சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாமல் இருக்கிறாய்,”என்று சர்வைவல் ஆப் பிட்டஸ்ட் பற்றி நிறைய பேசினார்.

“பப்பி யாரையும் எதுவும் செய்யாது,” என்றாள்.

“நம்ம சிட்டிக்கு மைக்ரோ வெப்பன்ஸ்ஸால வார் வரப்போறது தெரியாதா?”

“ம்”

“உன்னோட பப்பி அதோட கேரியரா இருக்க வாய்ப்பிருக்கு,”

“அப்ப நானும் கேரியரா?”

“இவளுக்கு ஆங்சைட்டி லெவல் கூடுதல். கவுன்சிலிங்கோடு மருந்துகள் கொடுக்கனும்,”என்று இன்னொருவரிடம் அனுப்பி வைத்தார்.

வீட்டில் இதனால் அம்மா, அப்பா பயந்திருந்ததாலும், மாத்திரைகளின் தொல்லையாலும் அவள் பப்பியை மனதிற்குள் புதைத்தாள்.

பயனுள்ள கால்நடைகளை குரலி மூலமும், எங்கோ இருந்து கொடுக்கப்படும் தங்களுக்கான ஆணைகளால் செயல்கள் மூலமாகவும் ரோபோக்கள் பராமரித்தன. மனிதர்களும் அவ்வாறு இடம் மாற்றப்பட்டார்கள்.

எங்கோ தொலைவில் விவசாயம் என்னும் தொழில் நட்புநகரத்தில் நடந்து கொண்டிருந்தது. இத்தனை தொழில் நுட்பங்கள் வந்தும் அது எங்கே என்பது தெரியாததாக இருந்தது. அங்கிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப்பொருட்கள் செரிவாக்கப்பட்டு சமைக்கப்பட்டு அங்காடிகளில் கிடைத்தன. நகரின் புறவழிகள் மெல்ல மெல்ல காணாமல் போயின.

மக்கள் நகருக்குள் அன்றாடமும், திரும்பத் திரும்ப ஒன்று போல் ஒரே வேலையை வெவ்வேறாக செய்து கொண்டிருந்தார்கள். மாதம் ஒருமுறை அவர்கள் செய்யும் வேலையின் மகத்துவம் புகழப்பட்டு அவர்களின் பொறுப்புணர்வு பாராட்டப்பட்டது. அனைவரும் ஏதோ ஒரு வேலையில் இருந்தார்கள். ஆனால் தாங்கள் செய்யும் வேலையைப் பற்றி அவர்கள் அறியவில்லை. முழு வேலையின் ஏதோ ஒருப் பகுதியை செய்தார்கள்.

த்வரிதா சமையலறையாக இருந்து, பழைய பொருட்கள் அடைக்கும் இடமாகிப்போன அறையை மாற்ற விரும்பினாள். அம்மாவின் நினைவாக அங்கு எதாவது செய்யலாம் என்று நினைத்திருந்தாள். அவள் கணவன் பிள்ளைகளுக்காக புதிதாக வாங்கியிருந்த ரோபோ விளையாட்டுக் கூடத்தை அங்கு அமைக்கலாம் என வாதிட்டான்.

நுண்ணுயிரி போர் தொடங்கலாம் என யூகிக்கப்பட்டு மூன்று தலைமுறைகள் கடந்திருந்தன. அது இன்று வரலாம் என்பதே நிரந்தர கணிப்பாக இருந்தது. த்வரிதா தன் பேரப்பிள்ளைகளுடன் விரிவு செய்து மாற்றப்பட்ட அதே வீட்டிலிருந்தாள். வீடுகள் அடுக்குகளாக உயர்ந்தன. வானம் பார்த்தல் கூட அரிதாகிப்போன சமூகமாக ஆனார்கள்.

அவளின் சிறுவயதில் சமையலறையாக இருந்த அந்த அறை அவளுக்கு ஒதுக்கப்பட்டது. தரைதளத்தில் வெளியில் சென்று நிற்க வசதியாக இருந்தது. அவள் தன் காலத்திய மொபைல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருப்பதற்காக அனைவராலும் கேலி செய்யப்பட்டாள்.

அவள் தன் அறைக்கு வெளியிலிருந்த சிற்றிடத்தில் நாற்காலி போன்ற காற்று மெத்தையில் அமர்ந்தாள். வாகனங்கள் போவதும் வருவதும் தெளிவற்று கண்களுக்குத் தெரிந்தது. ஒலியில்லாத நகர்வு எப்போதும் அவளை பயப்படுத்தியது. எனவே அவள் அடிக்கடி தன் கேட்கும் தன்மையை சோதித்துக் கொண்டாள். அவளின் நடவடிக்கையை கண்ட மகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

மருத்துவர்கள் , “அம்மாவுக்கு சென்ற தலைமுறை ஆட்களுக்குரிய ஆங்சைட்டி ,” என்றதும் த்வரிதா புன்னகைத்து, “அதனால் எனக்குப் பெரிய பிரச்சனையில்லை,”என்றாள். உள்ளுக்குள் மாத்திரைகளில் இருந்து தப்பித்த நிம்மதி இருந்தது.

த்வரிதா ஒன்றுபோல மாற்றப்பட்டிருந்த சாலைகளில் அதன் கிளைவழிகளில் குழம்பினாள். அவளின் தோழியின் வீட்டின் மல்லிகைச்செடி அகற்றப்பட்டதிலிருந்து அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் மாறிவிடக்கூடாது என்ற எண்ணமே அங்கு செல்வதை நாள்போக்கில் நிறுத்தியது.

த்வரிதா பெயரனுடன் நெருக்கமாக இருந்தாள். அவனுக்கு தினமும் கதைகள் சொன்னாள். அந்தக் கதைகளில், அவள் பால்யத்திலிருந்த இந்தஊரின் கதையும் இருந்தது. அவன் இளைஞனான பின் பலக்கதைகள் சொன்னான். அந்தக் கதைகள் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் த்வரிதா அவனுடனிருப்பதற்காகக் கேட்டாள். படங்களைக் காண்பித்தான். அன்றும் அப்படித்தான் த்வரிதாவிடம் அவளின்  பெயரன், சில புதுவகையான அனிமேசன் படங்களைக் காட்டினான். காற்றில் மிதக்கும் அவற்றைப் பார்க்க சிரமமாக இருந்தாலும் த்வரிதா ஆசையாகப் பார்த்தாள்.

மதிய நேரங்களில் இவளின் அருகில் அமர்ந்து அனிமேஷன் படங்களைப் பார்த்த ஹரீஸ்க்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. எதுவும் அனைத்து மனிதர்களுக்கும் ஒன்று போல அல்ல என்பதே அந்தப்படங்களில் அவனுக்கு வசீகரமானதாக இருந்தது. அவன் நண்பர்களுடன் பகிர்ந்தான்.

சிலர் முன்பே தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அந்தப்படங்களில் வந்த அந்தகாலத்தைக் கனவு கண்டார்கள். அந்தக் கனவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். நாள்போக்கில் கனவென்றில்லாமல் அவர்கள் நினைப்பதையே கனவுபோல சொல்லி மகிழ்ந்தார்கள். விதவிதமான கதைகள் அந்திவானில் பரவும் வண்ணங்கள் என பரவின. அந்த வண்ணங்களில் தங்களின் சிந்தையில் நின்ற வண்ணத்தை எடுத்து தங்கள் கனவில் பரப்பினர்.

இந்த நகரில் வாகனத்தை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதைப் போல பதின் பருவத்தினர் தங்களை உணர, தங்களை புரிந்து கொள்ள பழக்கப் படுத்தப்பட்டார்கள். ஹார்மோன்களின் வேலைகளை புரிந்து கொண்டு தங்களை வழிநடத்திக் கொள்வதன் மூலம் நகரில் வன்முறையை முற்றாக ஒழிப்பது கடமையாக கொள்ளப்பட்டது. அனைத்திற்கும் மேலாக அவர்கள் எதையோ இழந்ததை உணரும் தருணங்களில் பொழுதுபோக்குக் கூடங்களில் கழித்தார்கள்.

அந்தக் கதைகளின் வழியே மேடும் பள்ளமும் இல்லாத அவர்களின் நகரத்தின்  சாலைகளில் செம்புலம் எழுந்துவந்தது. அவர்களின் கனவுகளுக்கு சிறகளித்தது. கனவுகள் மனதை பறக்க உந்தின. ஒரே விதமான வெப்பநிலை பேணப்பட்ட நகரின் கனவுகளில் கோடையும், பனியும், மழையும் மாற்றி மாற்றி உணரப்பட்டன.

அரசு விபரீதத்தை உணர்ந்து சட்டங்களை உருவாக்கி அந்தக் கதைகளை பேச தடை விதித்தது. பழைய பாடல்களில் இருந்து அந்தக் கதைகள் எழுந்து வந்திருக்கலாம் என யூகித்தது. உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்தது. நகருக்கு வெளியே ஒன்றுமில்லை என்று விதவிதமான விளம்பரங்களை வெளியிட்டு அவை எப்போதும் மக்களின் கண்களில் படும்படி பார்த்துக் கொண்டது.

பொதுவெளியிலிருந்து அந்தக்கதைகள் அகற்றப்பட்டன. எனினும் அவர்கள் சந்தித்துக் கொள்கையில் பேசிக்கொண்டார்கள். தங்களின் தனிப்பட்ட எழுதியில் பதிய வைத்தார்கள். வீட்டிற்குள் பேசப்பட்டு கொண்டன. முதிய தலைமுறை, பிள்ளைகள் வெறும் கனவில் ஆழ்ந்து நடைமுறையைத் தொலைத்துவிடக்கூடும் என்றஞ்சி கதைகளை நிறுத்திக் கொண்டார்கள்.

த்வரிதாவிற்கு மனதில் இப்பொழுதெல்லாம் அந்தநிலங்கள், மரங்கள், காலநிலை பற்றிய நினைவுகளும் கனவுகளும் அதிகமாக எழுந்தன. ஹரீஸும், த்வரிதாவும் தங்களுக்குள் அந்தக் கதைகளை பேசிக்கொண்டார்கள்.

அடர்ஆரஞ்சுநிற நிலவெழுந்த அந்தியில் த்வரிதா, “நாம ரெண்டுபேரும் சிட்டியவிட்டு வெளிய போய் பாக்கலாமா?” என்றாள்.

ஹரீஸ், “அங்க என்ன இருக்கும்?” என்று கழுத்தை தேய்த்தபடி வானத்தைப் பார்த்தான்.

“நம்ம கதைகளில் உள்ள இடங்கள் இருக்கலாம்,”என்றபடி கால்விரல்களை மடக்கி மடக்கி நீட்டினாள்.

“அது இமாஜினேசன்,”என்றபடி நடைப்பாதை கம்பியை பிடித்தபடி முன்னும் பின்னும் சாய்ந்து ஆடியபடி சாலையைப் பார்த்தான்.

“இல்ல…எப்பவாவது  இருந்திருக்கும். இந்த நிலாவ நீ பாக்கறதானே?” என்று கண்களை விரித்து சிரித்தாள்.

“ஆமா கிராணி. சரி போய் பாக்கலாம்… நான் என்ன பேக் பண்ணட்டும்?”

“ட்ரஸ், கொஞ்சம் பூட் அண்டு வாட்டர்,” என்றாள்.

அவர்கள் தயாராகி நிறைய நாட்கள் காத்திருந்தார்கள். ஒரு வழியும் புலப்படவில்லை. ஒரு சந்திர கிரகண நாளில் நகரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அலைவலை குழையும் என்றும் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் நகரத்தார் எச்சரிக்கப்பட்டார்கள்.

சந்திரகிரகணத்தன்று த்வரிதா, ஹரீஸ் இருவரும் அனைவரும் உறங்கும் நேரத்தில் கிளம்பி எல்லையை அடைந்தார்கள். எங்கிருந்தோ கண்காணிக்கப்படும் உணர்வு அவர்களை எல்லையிலேயே நிறுத்தியது. பார்வையில் எதையும் எதிரொளிக்காத, எதையும் காட்டாத, தானே இல்லாத ஒருமாயத்திரை முன் விதிர்த்து நின்றார்கள்.

த்வரிதாவிற்கு உடல் நடுக்கம் எடுத்தது. கிரகணம் முடிந்து முழுச்சந்திரன் எழுந்திருந்தான். ஹரீஸ் திரும்பி செல்ல எத்தனித்த நொடியில் த்வரிதா நிலைதடுமாறி எல்லைக்கு வெளியில் விழுந்து சிறிது தூரம் சறுக்கினாள். அனிச்சையாக ஹரீஸ் பின்னால் ஓடினான். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடந்தார்கள். நிலவொளியில் காடும், குன்றுகளும், அப்பால் ஊர்களும் விரிந்தன. மேட்டிலிருந்து இறங்கி நடந்தார்கள்.

ஹரீஸ், “நாம ஏன் அங்கயே இருந்தோம்?”என்றான்.

த்வரிதா பேசாமல் புன்னகைத்தாள்.

அடுத்த நாள் இருவர் நகரைவிட்டு வெளியேறிய செய்தி நகர் முழுவதும் பரவியது. மேலிடம் கட்டுப்பாடுகளை அதிகரித்தது. போர் வருமென எச்சரித்து பயம் காட்டியது. வசதிகளை அதிகப்படுத்தி அனைத்தையும் மாற்றியமைத்தது. ஆனால் நகரிலிருந்து மக்கள் காணாமலாகிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்கள் புதிய கதைகளை சொல்லத் தொடங்கினார்கள்.

சீர் – கமல தேவி சிறுகதை

கமல தேவி

மழை பெயருக்கு பெய்திருந்த முன்மதியம். மண்ணில் விழுந்து காய்ந்த துளிகளின் தடங்களின் மேலிருந்த சில பாதங்களைப் பார்த்தபடி அமுதா வாசல் படியில் அமர்ந்திருந்தாள். எதிர்த்தத் திண்ணையில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாயசாளிப் பாட்டிகளும், அம்மாக்களும், எதிர்வீட்டுஅய்யாவும் அடுத்தத் தெரு மாமாவும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

செல்லத்தின் குரல் கிழக்கே தெரு முடக்கில் தெளிவில்லாமல் கேட்டது. பதறியக் குரலாக இருக்கவும் அமுதா சட்டென எழுந்தாள். அதைப்பார்த்த எதிர்வீட்டய்யா, “என்னம்மா,” என்றார். சரியாகத் தெரியாமல், “ஒன்னுமில்லங்கய்யா,” என்றாள்.

குரல் நெருங்கி வந்ததும், “செல்லத்துக் குரல் கேக்கல,” என்றாள்.

தாயக்கட்டைகளை நிறுத்தி கூர்ந்தப்பின், “ஆமா… என்னன்னு தெரியலயே,”என்று எழுந்து தெருவின் நாற்சந்திப்பில் நின்றார்கள். ஒருப்பக்கம் துப்பட்டா வீதியில் இழுபட  வெள்ளய்யன் தாத்தா வீட்டில் பேசிவிட்டு விடுவிடு என்று வந்தாள்.

“நா என்னத்த செய்ய? எங்காளுக்கிட்ட என்ன பதில் சொல்றது?”என்று அழுதபடி வந்தாள். மேற்கு பக்கம் நின்றவள் நகர்ந்து வடக்குப் பக்கமாக நின்றாள்.

அய்யா கொஞ்சம் முன்னால் வந்து, “என்னாச்சு… பதறாம சொல்லு,” என்றார்.

செல்விஅம்மா, “கன்னுக்குட்டி எங்கடி,” என்றாள். மீண்டும் திரும்பி நின்று தலையைத் தடவிவிட்டுக் கொண்டாள்.

செல்லம் மூச்சு வாங்கியபடி அய்யாவிடம், “மாமா… கன்னுக்குட்டிக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு பாலம் வர வந்துட்டேன். கன்னுக்குட்டி ஆத்துல பூந்துருச்சு,” என்றாள்.

“யாரையாச்சு கூப்பிட வேண்டியது தானே..” என்றபடி அவர் முன்னால் வந்தார்.

“அக்கம் பக்கம் ஆளில்ல மாமா. ஆத்துல எறங்கி பின்னாலயே ஓடுனா, அது ஓட்டத்துக்கு என்னால முடியல. மேல வயல்ல ஏறி மறஞ்சிருச்சி. கள்ளுக்கட முடக்குல ஆளுகளப் பாக்கவும் ஓடியாந்து சொல்லி அவங்க பைக்குல கொஞ்ச தூரம் பாத்துட்டு வந்துட்டாங்க..” என்றபடி இடையில் கைவைத்து குனிந்து வளைந்து நின்றாள்.

“ஜல்லிக்காளையில்ல… என்னப்புள்ள நீ..”

“அவன் அதுக்கு மீறின ஐல்லிக்காள. என்னப் பண்ணப் போறியோ?”

“ஆம்பிளயள போவச் சொல்லாம உனக்கதுக்கு?” என்ற பங்காரு அத்தை குரலை கடுமையாக்கினாள்.

“அதுதான் இன்னிக்கு நாளக்குன்னு பெரும்போக்கா இருக்கவும் நா போனேன்,”என்ற செல்லத்தின் குரல் வெட்டி வெட்டி நின்றது.

“குமாரு எங்க?” என்ற பூஞ்சோலை அம்மா வடக்குப் பாதையைப் பார்த்தாள்.

“அதுக்கு போன் பண்ணி கள்ளுக்கட முடக்குக்கு வந்துருச்சு. தேடிப் போயிருக்கு,”

“அடிச்சானா..” என்று சின்னசாமிமாமா குரலை தாழ்த்திக் கேட்டார்.

“ம். அங்கனயே.. ஆளுங்க வந்து தடுத்துட்டாங்க,” என்படி குனிந்து அழுதாள்.

“பின்ன கொஞ்சுவானா?” என்ற கிழவியின் குரலால் அமைதியானார்கள்.

“இன்னிக்கு அந்தக் கன்னுக்குட்டி என்ன வெலக்கி போகும். பொழப்புல கருத்து வேணாம். என்னத்த எழவு இந்த காலத்துப் பிள்ளங்க வெவரமும் பொழப்பும்,” என்று மணியக்கா சொல்லிக் கொண்டிருக்கையில் கலைந்தார்கள்.

அமுதா, “அது போனதுக்கு நீ என்ன பண்ணுவ… பேசாம இரு. ரெண்டு நாளில வேகம் குறஞ்சிரும். என்னப் பண்றது… நாம நெனச்சா நடக்குது,” என்றாள்.

படியாக போட்டிருந்த அகன்ற கருங்கல்லில் அமர்ந்தாள். ஆளாளுக்கு பேசிவிட்டு விட்ட இடத்திலிருந்து தாயத்தை தொடர்ந்தார்கள். வழியில் வந்தவர்கள் போனவர்கள் என்று அனைவருக்கும் செல்லம் ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு வயிற்றில் பசி எரிந்தது. எந்த நேரத்திலும் யாரும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று சோற்றுக் கிண்ணத்தைப் பார்த்தபடி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கல்லில் அமர்ந்தாள். பக்கவாட்டில் குந்தாணியில் அமர்ந்த காகம் தலையைகுனிந்து எடுத்துத் தின்றது.

மதியம் கடந்து வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்தாள். வரும் வழியில் காலில் கல் குத்திய இடத்தை தடவிவிட்டபடி இருந்தாள்.

“கன்னுக்குட்டி பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதாய்யா…”

“…….”

அலைபேசி நின்றதும் செல்லம் உதட்டை வளைத்தபடி அதை பக்கத்தில் வைத்தாள். மணியைப் பார்த்தாள். பிள்ளைகள் வரும் நேரம். சட்டென்று எழுந்தாள். தகரக்கதவை ஒருக்களித்து வைத்து அப்படியே இருக்க அகல கல்லை பின்னால் முட்டுகொடுத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

உள்கதவை ஒருக்களித்து வெளியில் பார்க்கும்படி நான்று அவசர அவசரமாக வெறும் சோற்றை அள்ளித் தின்றாள். தண்ணீர் குடிக்கையில் வண்டி சத்தம் கேட்கவும் கிண்ணிய மூடி வாயைத் துடைத்தபடி வந்தவள் தாழ்வாரத்திலிருந்த கருங்கல் தொட்டி நீரில் கையை அலசி துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

“என்ன வேலய பண்ணித் தொலச்சிருக்க…” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தவனை உடன்வந்த பயல்கள் பிடித்துக் கொண்டார்கள்.

“உங்கண்ணன் பொங்கலுக்கு சீராக் குடுத்ததுன்னு சீராட்டி வளத்தது இப்படி தர்மத்துக்கு ஓட்டிவிடத்தானா..” என்று கத்தினான்.

செல்லம் அசையாமல் நின்றாள். அவன் கத்திக் கொண்டிருந்தான்.

“நான் என்னப் பண்றது.. ஆள ஒருஇழுப்பு இழுத்து விட்டுட்டு ஓடிருச்சு. தடுமாறி பின்னால ஓடறதுக்குள்ள அது ஆத்துக்குள்ள நிக்குது. பின்னால ஓடி கன்னுக்குட்டியப் பிடிச்சவங்க யாரு?”

குமார், “நல்லா பேசு… இரு ஒனக்கு இருக்கு,” என்றான்.

பப்புலு அண்ணனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

“ம்மா…மாமா ஊர்க்கு போலாமா,” என்று திருந்தாத மொழியில் கேட்டாள்.

“ஆமா…அது ஒன்னுதான் குறச்சல்,”என்று அவள் முதுகில் ஒன்று வைத்தான். அவள் வீல் என்று கத்தவும், அவள் அண்ணனும் சேர்ந்து அழுதான்.

“அந்தட்டம் போவல தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவன்,” என்று அவன் கத்திக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டிலிருந்து அவன் அக்கா வந்து பிள்ளைகளை தூக்கிக்கொண்டு போனாள்.

“த்த ப்பா அடிக்குது,”என்றாள்.

அத்தை, “செவல காணாமப் போச்சுடி,”என்றாள்.

“அது தண்ணிக் குடிக்க வந்துடும்,”என்ற பப்புலு இடையிலிருந்து இறங்கியபடி, “அப்பா அடிக்குதுன்னு அங்க போச்சா,”என்று கையை தூக்கிக் காட்டினாள்.

வெளியில் நடராசு ஆசாரியார், “டேய்…பழகுன கன்னுக்குட்டி காத்தால வந்துடும்,” என்றார்.

“அது என்ன நாய்க்குட்டியா வரதுக்கு,” என்றான். கன்று காணாமல் போன இடத்திலிருந்து முன்னப் பின்ன பக்கத்து ஊர்களில், வயல்காடுகளில் விசாரித்தான். ஒருவரும் கன்றை பார்த்ததாகக்கூட சொல்லவில்லை. வயல்காட்டுக்குள்ளயே போயிருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். “ஒத்தக் கண்ணுலக் கூடவா படல,” என்று உடன்வந்தப் பயல்கள் சொல்லவும் ஆற்றுக்குள் இறங்கி ஆனமட்டும் தேடிவிட்டு வந்தார்கள்.

காலையில் வந்தால் ஆளைத் தேடும் என்று குமார் வயலில் போய் படுத்துக் கொண்டான்.

அதிகாலையில் அமுதா வாசல் தெளித்து கூட்டுவதற்காக தென்னம்மார் துடைப்பத்தை இடது உள்ளங்கையில் தட்டி சரிசெய்தாள். செல்லம் வாசல் தெளித்துவிட்டு கல்லில் உட்கார்ந்தாள். மெலிந்த தேகம் அவளுக்கு. கல்லூரிக்கு போகும் வயதில் பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள். செல்லத்துக்கு ஊரறிந்த காதல் கல்யாணம்.

சொந்தத்தில் கல்யாணத்தில் பார்த்த இவனைத்தான் கட்டிக்குவேன்னு வயசு பதினெட்டாக காத்திருந்து கல்யாணம் செய்து கொண்டதை நினைத்துக் கொண்ட அமுதா, “என்னாச்சு செல்லம்,” என்று கேட்டாள்.

“நேத்து சரியா சோறு திங்கல. நடுராத்திரி வர அந்தாளு பேசிக்கிட்ட இருந்துட்டு வயலுக்கு போயிருக்கு”

“கன்னுக்குட்டி வந்துரும் . மனசப்போட்டு குழப்பிக்காத. உங்கண்ணன் கல்யாணம் நாளக்கு தானே. போகலியா?”

இல்லை என தலையாட்டியபடி செல்லம் பெருமூச்சு விட்டாள். எழுந்து வாசலைக் கூட்டினாள்.

இருவரும் தெருவிளக்குக்கடியில் கூட்டிக்கொண்டு நெருங்கி வருகையில் நிமிர்ந்து நின்றார்கள். தெருவில் யாரும் விழிக்கவில்லை. ராசு தாத்தா மட்டும் டீ க்கடைக்கு போய்க் கொண்டிருந்தார்.

“வறக்காப்பியாச்சும் போட்டுக்குடி செல்லம்”

“பப்புலு ராத்திரி பசிக்குதுன்னு அழுதா. வறக்காப்பி ரெண்டு கிளாஸ் குடிச்சா.. மிச்சம் இருக்கு,” என்றாள்.

“அண்ணன் கல்யாணத்துக்கு போகனுமேன்னு இருக்கா?”என்று தோளில் கைவைத்தாள்.

“நீ வேறக்கா. என்னயவிட நொந்து போவியாட்டுக்கு,”

“இல்ல… அண்ணன் கல்யாணம்ன்னா ஆசதானே,” என்று கையை எடுத்துக்கெண்டாள்.

“கட்டிக்கிட்டு வந்தப்புறம் அண்ணன் கல்யாணம்ன்னாலும் சீரோட போனாதான் எல்லாம்..”

“எதும் வாங்கலியா?”

“எதுவும் வாங்காட்டி பரவாயில்லயே. எங்கண்ணங்கிட்ட வாங்கின கடன கல்யாண செலவுக்குக் கேட்டா, எங்காளு குடுக்காம எகத்தாளம் பேசுது. என்னால கூடப் பொறந்தவன் மூஞ்சியில முழிக்க முடியல. அதான்…”என்றபடி சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள்.

“அதான்.. அநியாயக்காரனுக்கு என்ன நியாயம்ன்னு நேத்து அண்ணன ஆத்துக்குள்ள நிக்க சொல்லி கன்னுக்குட்டிய ஓட்டிவிட்டுட்டேன்”

“ஐய்யோ… யாருக்கும் தெரிஞ்சுட்டா…”

“அண்ணன் ஆத்தோட கொண்டு போய் வித்து காசாக்கிருச்சு,” என்றபோது மேற்கால வீட்டுக்கதவு திறந்தது. செல்லம் குனிந்து கூட்டியபடி நகர்ந்து உள்ளே சென்றாள்.

“கூட்டிட்டு எடுப்பியா.. இந்நேரத்துல சாவகாசமா நின்னுக்கிட்டு. இந்த சந்தில சங்கிலிகருப்பன் ஓட்டம் இருக்குல்ல,” என்று மேற்கால வீட்டு அம்மா அமுதாவை விரட்டினாள்.

வானில் மெல்லிய ஔி பரவிக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்க அரைமணியாகும்  என்று நினைத்தபடி கோலத்தை வரைந்துவிட்டு எழுந்து பெருமூச்சு விட்டபடி செல்லத்து வீட்டைப் பார்த்தாள். கூட்டிப்பெருக்கிய வாசல் சந்தடியின்றி அரையிருளில் தெரிந்தது.

 

 

 

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: கொற்றவை – கமல தேவி

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

பெருங்கனவின் வெளி

நாவல்  :கொற்றவை

எழுத்தாளர் :ஜெயமோகன்

கதைகேட்கத் துவங்கிய கணத்தில் விழித்தலில் கனவு கைகூடும் மாயம் நிகழ்கிறது.இல்லை அதற்கு முன்பே பார்க்காததிருடனை,வராத பூனையை நாம் விரட்டியதைப் பற்றி நாமாக கதைகளை அய்யா,அம்மா விடம் சொல்கிறோம்.சொல்பவருக்கும், கேட்பவருக்கும் ஆனந்தம் தரும் கதைகள்.அது நம் சுயநலத்திற்காக,பிறர் கெடுதலுக்காக மாறுகையிலேயே கதை என்ற பெயர் பொய்யன்றாகிறது.கவிதையில் அதுவே மீண்டும் பேரழகாகிறது.என்றபோதும் மிகஆழத்தில் உண்மையை ஒருசிறு வைரத்துளியென அனைத்துக்கதைகளும் கனிக்குள் சிறுவிதையென பொத்தி வைத்திருக்கின்றன.அந்த விதை விருட்சமாகி காடாவது போல முன்னோர்களின் ஆளுள்ளத்து பேருண்மைகள், அச்சங்கள், நம்பிக்கைகள், மனநிறைவுகள், அவர்கள் மட்டும் உணர்ந்ததென ஒவ்வொருவரும் நினைக்கும் சில கண்டடைதல்கள் இணைந்து பொதுவாகும் ஒரு மனதின் தருணத்தில் காவியங்கள்,காப்பியங்கள் எழுதப்பட்டிருக்கலாம். யாரோ அறிய முற்படக்கூடும் என்ற நினைப்பே அதை சுவையுள்ளதாக மாற்றச்செய்கிறது.

கடல் அனைவருக்கும் அலையாக தெரிகையில் அதை மனதின் புறவடிவாக காணும் மனம் அந்தகணத்தை கடத்த விழைகிறது.அப்படியாக ஒருசமூகப்பண்பாட்டின் சிந்திக்கும் மனம் அல்லது மனங்கள் அல்லது மூளைகள் மேலதிகமாக அழகியல் உணர்வும், காருண்யமும், மொழித்திறனும்,தொடர்ந்த முயற்சியும் மேற்கொள்கையில், அறியும் ஒன்றை கடத்த பெருங்கதையை சொல்கிறது அல்லது எழுதுகிறது.

பயன்பாட்டில் உள்ள மொழியின் தன்மை,முன்னவர்கள் அதுவரைக் கொண்டுவந்து சேர்த்த வெளிப்படுத்தும் தோரணைகள்,முக்கியமாக வெளிப்பாட்டு சாதனங்கள் கதைசொல்லல் முறையை, வடிவத்தை தீர்மானிக் கின்றன.என்றாலும் அதைமீறிய சாதனைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன.எல்லைகளை மீறி,மீறியே இதுவரை வந்திருக் கிறோம்.ஆனால் இலக்கியம் போன்ற காலாதீதமான ஒன்றில் எல்லைமீறல் என்பதை விரிவாக்கம் என்றே கொள்ளப்படுகிறது.அது எப்போதும் கண்காணிக்கப்பட்டும் வருகிறது என்றே நினைக்கிறேன்.இது நாவலின் ஆசிரியரால் நாவல் கோட்பாட்டு என்ற அவரின் நூலில் குறிப்படப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம் என்ற தமிழ்காப்பியமானது தமிழ்நிலத்தின் முக்கியமானக்கூறுகளை ஒட்டுமொத்தமாக சொல்ல எழுதப்பட்ட காப்பியம். அன்றிருந்த செய்யுள் வடிவில் எழுதப்பட்டாலும் கூட மிகவிரிவாக எழுதப்பட்டது.பள்ளியில் எழுத்திற்குப்பிறகு அறிவது திருக்குறள்.அதன்பின் ஒருசொல்லாக அறிமுகமாகும் சிலப்பதிகாரம் கண்ணகியை, மாதவியை, கோவலனை நம் வாழ்வில் இணைத்துவிடுகிறது.இம்மூவரையும் இவ்வளவு தீவிரத்தன்மை கொண்டவர்களாக இல்லையெனினும் இந்தசாயலில் கண்முன்னே கண்டுக்கொள்கிறோம்.

நம் சிறுவயதிலிருந்து ஒவ்வொரு வகுப்பையும்,வயதையும் கடந்து வருகையில் அவர்கள் நிறம்,திடம் கொள்கிறார்கள்.முதலில் கண்ணகி எளிதில் பதிந்துவிடுகிறாள்.மாதவி வரை வருவதற்கு ஒருநீண்ட காலகட்டம் தேவைப்படுகிறது.நம் அமைப்பு ஒரு காரணம். பெண்குழந்தைகள் கடிவாளம்கட்டியவர்களாக இருப்பதும் ஒருகாரணம். இதுக்கூட பிழையாக இருக்கலாம்.இன்றைய பள்ளிக்குழந்தைகள் நேற்றையப் பள்ளிக்குழந்தைகளை விட தெளிவானவர்கள்.மீண்டும் கோவலன் வரை வருவதற்கு வீட்டில்,உறவுகளில், அக்கம்பக்கத்தில் சிலவாழ்க்கைகள்,சங்கஇலக்கியத்தின் அகம் என்று நிறைய தேவைப்படுகிறது.இவ்வாறு நான் சொல்வது என் புரிதலை சார்ந்து மட்டும் .

வாயிலோயே…., என்று நீளும் மதுரைக்காண்டத்தின் வரிகளோடு கல்லூரித்தேர்வு முடிந்தப்பின் சிலப்பதிகாரம் தன் பயணத்தை  நிறுத்திவிடுகிறது.உண்மையில் அந்தவயதிற்கு பிறகுதான் படித்து புரிந்து கொள்ள முடியக்கூடிய நூலாக சிலம்பை  நான் கருதுகிறேன்.

அதன்பின் நான் முயற்சி செய்து உரைநூலை வைத்துக்கொண்டும்,தமிழ் அகராதியை வைத்துக் கொண்டும் போதிய வாசிப்பை அளிக்காமல் முடித்த சிலப்பதிகாரம் மனதில் குற்றஉணர்வை தந்து கொண்டேயிருந்தது.செய்யுள் வாசிப்பை பள்ளியில் எளிமையாக்கியிருந்தால் அல்லது கற்கும் ஆர்வம் இருந்திருந்தால் இந்தவாசிப்பு  நன்றாக இருந்திருக்கும்.ஏறக்குறைய ஆங்கிலமும்,செய்யுளும் தெரியும் ஆனா தெரியாது நிலைதான்.

கொற்றவையை தபாலில் வாங்கிய அன்று அதைப்பற்றி தெரிந்த ஒன்று நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பது மட்டுமே.நாவல் வடிவில் சிலப்பதிகாரம் என்பதே மிக வசீகரமாக இருந்தது.உடனே வாங்கத்தூண்டியது.இதையாவது ‘வாசித்து’ விட வேண்டும் என்ற ஆற்றாமை.முதல் பக்கத்திலேயே நானும் குறைச்சலில்லை என்று புத்தகம் சவால் விட்டது.அப்படியே மூடி வைத்துவிட்டு காடுநாவலை எடுத்துவிட்டேன்.கண்முன் தலைமாட்டிலேயே உறங்கி சலித்தாள் கொற்றவை.

வேறுவழியில்லை தினமும் முடிந்தவரை என்று பாடப்புத்தகமாய் நினைத்து ஒருகருக்கலில் எடுத்தேன்.சாணித்தெளிக்கும் ஓசை,பட்சிகளின் கிச்கிச்,காகங்களின் அட்டகாசங்ளோடு சேவலின் குரல் அறைகூவலாய் ஒலிக்க கொற்றவை எழுந்தாள்.நீரென, நெருப்பன, நிலமென உருகொண்டாள்.மீண்டும் அந்தப் பழைய பள்ளி செல்லும் பெண்ணானேன்.பொன்னியின் செல்வனை விடுமுறை நாட்களில் எழுந்ததும் துவங்கி வீட்டில் லைட்டை அணைக்கச்சொல்லித் திட்டுவது வரை வாசித்து திளைத்த அவள்.மீண்டும் முழுவதுமாக என்னை புத்தகத்திற்கு அளிக்கமுடிந்தது குறித்து எனக்கு வியப்பு.கல்லூரியின் இறுதிநாட்களில் வாசிப்பில் ஒருசலிப்பு விழுந்திருந்தது.நம்மால் வாசிக்க முடியவில்லையா என்ற கோபமும்,பயமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.புத்தகங்கள் எல்லாம் கண்முன்பு ஆற்றில் அடித்துச்சல்லப்படுவது போன்ற கனவுகள் வரும் அளவிற்கு.

யாரோ ஒரு முகம் பெயர் தெரியாதவர், தோழியின் அண்ணனின் நண்பன் தோழிக்கு கொடுத்த எஸ்.ராவின் புத்தகத்திலிருந்து தொடங்கியது இதுவரையான இந்தப்பயணம்.

கொற்றவையின் மொழி கல்கோணா மாதிரி.கல் தான்…கல்அல்ல இனிப்பானது.ஊறவத்து உண்ண வேண்டியது.ஆனால் சப்பிக்கொண்டிருந்தால் சப்பென்று ஆகிவிடும்.கவிதை கவிதை என்று சொல்லிக்  கொண்டிருப்பது வேறு.கவிதையை உணர்வது வேறு.

கொற்றவையின் வரிகள்  கவித்துவமானவை.கொற்றவையின் மொழியே என்னை மிகவும் கவர்ந்தது.சும் மாவே எந்தப்பக்கத்தையாவது எடுத்து வாசித்துக் கொண்டிருக்கலாம்.மழையைப் பார்ப்பதைப் போல.புரிய வேண்டும் என்பது அடுத்தநிலை. ‘எல்லாப் பெயர்களும் பெயரற்றவனின் பெயர்களே’ என்ற வரிக்கும் கொற்றவைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை தானே.

மலையுச்சியேறிய முக்கண்ணனும்,கடலுல் இறங்கிய ஆழிவண்ணனும் தமிழ்சூழலில் எழுந்துவருகிறார்கள்.நம் முன்னோன் பிரபஞ்சத்தை,இயற்கையை எதிர்கொள்ளும் ஆதிமனதின் ஆளுள்ளத்து அச்சங்கள் அதைமீறி எழுந்து அச்சமென்னும் இருளின் மத்தகத்தின் எதிரே நிமிர்ந்து நின்று எதிர்கொள்ளும், அறிதல் போரில் தன்னை இழந்து அறியும் உண்மை.

மனிதமனத்தின் முதல் தத்துவ விதை.மனிதகாலகட்டத்தின் குழந்தைப்பருவம்.அந்தப் பருவத்திற்குரிய மனிதனின் அச்சம்,வியப்பு,விதையென உறங்கும் தனிமை,இட் எனப்படும் விலங்குமனநிலை அதை எதிர்கொள்ளும் ஒருதனித்த உள்ளத்தை கொற்றவை தன்மொழியால் அந்தஆதி உணர்வுகளை உணரச்செய்கிறது.உடன் வரும் தமிழ் அமுதென தெளிந்து எழுகிறது.தன்உணர்வுகளுக்கு ஒலிக்கொடுக்கிறான் அல்லது தன்னைசுற்றியுள்ள ஒலியிலிருந்து தனக்கான ஒலியை தேர்ந்தெடுக்கிறான்.

தமிழ் எறமுடியாத சிகரங்களைக் கடக்கும் ஒற்றைக்கொம்பு கலைமான் என உடன் வந்துகொண்டிருக்கிறது.அனைத்திலிருந்தும் அறிய முற்பட்ட அறிவன் அவன் மனிதன் என்பதை கொற்றவை பழம்பாடல் சொன்னதாக சொல்கிறது.குலக்கதை சொன்னதாக சிறுகுடிகள் இணைந்து குலங்கள் உருவாகியதை, நீரால்,  எரிமலையால் அழிந்ததை சொல்கிறது.மெல்ல மெல்ல நீர் குமரிக்கண்டத்தை உட்கொள்வதன் சித்திரம் வளர்வதன் மூலம் தமிழின் இந்நிலத்தின் மக்களின் பழமையை சொல்கிறது.அன்றிலிருந்து இந்நிலம்  இன்றுவரை குமரியை வடகோட்டை எல்லையாகக் கொண்டு மாறாதிருப்பதன் மாயத்தை சொல்கிறது.

தமிழின், அதன்மக்களின் புனைவுவரலாறாக நாவல் விரிகிறது.விரிந்த நிலத்தின் பின்ணனியில் மொழியையும் மக்களையும் வைக்கிறது.அந்த நிலப்பரப்பு சிதறி மக்கள் தோணியேறி பலதீவுகளில் நிலங்களில் மீண்டும் எழுவதைக் காட்டுகிறது.ஒரு மாயசுழி போலவா, சுழலும் புதிர்க்கட்டம் போலவோ நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது.

மீண்டும் கடல்முனையில் அதே நகரம் அதேமக்கள், அதே செழிப்பு ,வாணிகம், ஏழடுக்கு மாளிகையில் கண்ணகி எழுந்துவருகிறாள்.பூம்புகார் எனும் பெரும்வணிகநகர் அதன் அனைத்து வண்ணங்களுடனும்,ஒலிகளுடனும்,அலைகளின் ஓதத்துடனும் நம்முன்னே தன்னைக் காட்டுகிறது.மீண்டும் வெயில் காயும் நிலத்தில் மதுரை.அதுஉருவாகி எழுந்தப்பின் உருவாகும் அரசியல் சிக்கல்களுடன் மீண்டும் வருகிறது.

வறுமுலைகள் முழங்கால் வரை தொங்க வரையாட்டி மீது  வழிகாட்டும் அந்நிலத்தின் வழிவந்த பெண், மண்மகள் அறியா பொற்பாதங்களுடன் மணவாழ்வில் நுழைகிறாள்.

அனைவரும் அறிந்த கண்ணகி, மாதவி, கோவலன் கதை நாவலுக்குரிய விரிவில்  பலவண்ணங்களில் எழுந்து வரும் சித்திரம் நம்மையும் அந்நிலத்தில் வாழச்செய்கிறது.இதில் மாதவியை கோவலன் பிரியும் தருணம் கோபத்தை ஏற்படுத்துகிறது.சிலப்பதிகாரமாக இருக்கும்போது கோவலன் கண்ணகியிடம் மீளும் தருணம் என்றிருந்தது இந்தவாசிப்பில் கோவலனின் முகம் தெரியும் தருணமாக இருக்கிறது.இது நாவல், காப்பியத்திலிருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று.ஆளற்ற தெருவில், இரவில் தன்இல்லம் நோக்கி நடந்துவரும் கோவலனின் சித்திரம் மனதில் நிற்கிறது.

இந்நாவல் உருவாக்கும் நீலி என்ற வழித்துணை பாத்திரம் குறிப்பிடத்தக்கது.அது கண்ணகியின் பிறிதொரு வடிவம்.புதுவாழ்வு தேடிச் செல்லும் வலுவான தெளிந்தமனதின் புறவடிவம்.அதிகார மோதல்கள் நிகழும் மதுரையின் சித்திரம், புறநகர்பகுதியின் சித்திரம் என நாவலில் பழைய தமிழ்நகரத்தின் பலசித்திரங்கள் நம்மை அழகிய கனவுக்குள் ஆழ்த்துபவை.சங்கமக்களின் நிகழ்த்துக் கலைகள் நாவல் முழுக்க அழகாக எழுகின்றன.

கோவலனின் கொலைக்குப் பின் மனம்தடுமாறிய கண்ணகியின் எழுகை நாவலில் மூலம் போலவே வேறுவகையில் உணர்வு பூர்வமாக எழுந்துவந்து நம்மை ஆட்கொள்கிறது.மீண்டும் மதுரை நெருப்பால் அழிகிறது.மதுரை ஏதோ ஒருவகையில் அழிந்து பின் எழுவதை ஒட்டுமொத்த மேலோட்டமான சித்திரமாக என் மனம் எடுத்துக்கொண்டது.

நாவலில் வாழ்வியல்,மெய்யியல் உண்மைகள் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.ஐவகை நிலங்களில் நாமும் பயணம் செய்கிறோம்.நாவல்முழுவதும் பெண்தெய்வங்கள் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்.இதன் மூலம் இன்றைய சமூகமனம் தூண்டப்படுவது நாவல் வாசிப்பவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தது.

செங்குட்டுவன் அடர்கானகத்தில், நதியில், மலையருவிகளின் பயணம் செய்யும் பகுதி அழகிய ஆர்வமூட்டும் சித்திரம்.இளங்கோவடிகள்,மணிமேகலை கதைகள் நாம் அறிந்தவைகளை மீறி முற்றிலும் வேறுதளத்திற்கு செல்கின்றன.

மீண்டும் கடற்கரையின் கருமையில் அலைகளின் முன்னே,இந்தநூற்றாண்டு மனிதனின் தாயின் நினைவோடு முடிகிறது நாவல்.புத்தகத்தை வாசித்து வைக்கையில நாவல் முழுவதுமே அன்னையைப்பற்றிய பெருங்கனவு தானா? என்று பெருமூச்செழுகிறது.நிலம்,நீர்,காற்று,நெருப்பு என அனைத்திலும் உறைவதும் தாய்மையா என்று மனம் நினைக்கிறது.ஆதன் மலையேறி அறிவது ஆதி என்னும் அன்னையையா? கடலினுள் நுழைந்தவன் ஆழத்தில் அறிந்ததும் அதையேவா? தென்திசையில் ஒற்றைக்காலில் நிற்கும் கன்னி பேரன்னை எனில் பெருந்தாய்மை என்பது கன்னிமையா? என்று மனம் அலைகழிகிறது.எங்கோ ஆழத்தில்,ஏன் என்ற காரணங்களில்லாது,எப்படி என்ற தெளிவில்லாது,வெறும் உணர்தலாக மட்டும் என்னில் தென்முனையில் நிற்பவளை உணர்ந்து கொண்டேன்.வாசிக்கும் பெண்கள் அனைவருக்கும் இப்படித் தோன்றும் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

இந்தநாவலால் தாய்மை என்பது தத்துவமாகும் ரசவாதம் நிகழ்கிறது.இது உணர்த்துகிறது…தாய்மை என்பது நிச்சயம் பெண் சார்ந்தது மட்டுமல்ல.அது ஒரு பிரபஞ்சம் போலொரு பேருண்மை என.கன்னிமனம் என்பது பெருந்தாய்மை.அவள் ஒருமகவுக்கு தாயாகுகையில், தாயாகமட்டுமாகிறாளா என்று நினைக்கையில் கி.ராஜநாராயணின் கன்னிமை என்ற கதை மனதில் எழுகிறது.அதை உணர்ந்த நம் முன்னவர்கள் கன்னியை தென்முனையில் நிற்க வைத்திருக்கிறார்கள்.கன்னி நிலம் தன்னில் விழும்  விதைகளுக்கும் உடல் தரகாத்திருப்பது. அறுவடைக்குப் பின் முற்றிலும் தன்நிலைக்கு மீள்வது எனில் கன்னிமை உலகு உய்வதன் பெரும்சக்தியா? என்று மனம் கேள்விகளை அடுக்குகிறது.

கருமை ஔிகொண்டு நீலமாவதைப் போல இந்தநாவல் வாசிப்பிற்கு பிறகு நம் அறியாமைக்குள் ஒருஔி விரிகிறது.காலாதீதத்தை உணரும் ஒரு தருணம்.இயற்கையின் முன் நாம் கட்டியெழுப்பியவைகள் மீது வியப்பும்,ஆர்த்தமின்மையும் ஒரே நேரத்தில் எழுகிறது. இந்தவயதில் பற்று குறைவது குறித்து சிந்திக்கையில், தமிழ் என்னும் பேருண்மை வந்து அணைத்து இயற்கையை,வாழும் கணம் என்ன என்பதன் பொருளை சொல்லித்தர தொடங்குகிறது.மொழி அன்னையாகும் தருணம்.அவள் தருவது வாழ்வென்னும் அமுதம்.

நாவலை வைத்தப்பின் அதன் மொழி நம்மை முற்றிலும் சூழ்ந்து கொள்கிறது.அதிலிருந்து விடுபட நாட்களாகும்.எழுத்தாளர் என்னும் தந்தையின் கையைப்படித்துக் கொண்டு இறந்தகாலத்திற்குள் அல்லது காலமென்னும் சுழற்சிக்குள் முன்னோர்களின் வெளிக்கு இந்நாவல் மூலம் செல்கிறோம்.அதற்காக அவருக்கு என்னுடைய ப்ரியங்கள்.

இதை எழுதி முடித்தப்பின் நான் உணர்ந்தது இது தராசு பிடிக்க தகுதியான கையல்ல என்பதைத்தான்.தட்டு நாவல் பக்கம் சாய்ந்திருக்கிறது.இந்நாவல் எழுதியவரை வணங்குவதன் மூலம் தென்திசை முன்னவர்களை வணங்கி இந்தநிலத்தின் ஆதிவாழ்வை உணர்ந்து சிலைக்கிறேன்.கண்சிமிட்டி  அன்றாடவாழ்விற்காக எழுகிறேன் என்றாலும் நாவல் வாசிப்புக்கு முன்பு இருந்த நான் அல்ல இந்தநான்.இரண்டாவது வாசிப்பில் இதை எழுதுகிறேன்.அடுத்தவாசிப்பில் புதியவாசல்கள் திறக்கக்கூடும்.மீண்டும் எடுப்பதற்காக வைக்கும் போது  பெருஞ்செல்வத்தை கையில் வைத்திருக்கும் தலைமுறை நாம் என்ற பெருமிதத்தோடு அச்சுஊடகத்தை நன்றியோடு நினைக்கிறேன்.

 

 

உள்புண்

கமல தேவி

பின்புறம் துணி காய வைக்கும் இடத்திலிருந்து அப்பா, “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க, வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவாழ்க,”என்று தன் அடைத்த குரலில் வெட்டிவெட்டி பாடிக்கொண்டிருக்கிறார். கார்த்திகா முற்றத்திலிருந்து எட்டிப் பார்த்தாள்.

முற்றத்தில் பாத்திரங்கள் கழுவிய ஈரம் அவள் கால்களுக்குக் கீழே பிசுபிசுத்தது. “அம்மா… ஒழுங்கா கழுவிவிட மாட்டியா… யாராச்சும் விழப் போறாங்க பாரு,”என்று நைட்டியை தூக்கிப் பிடித்தபடி கத்தினாள்.

“படிக்கறப்பதான் ஒன்பது மணிக்கு எழுந்திருச்ச. இப்போ வேலைக்கு போயும் அதே பொழுது. நான் எந்த வேலயன்னு செய்யறது. இன்னிக்காச்சும் ஒத்தாசையா இருக்கலாம்ல,” என்னும் பொழுதே கடையிலிருந்து, “அக்கா….பொட்டுக்கடலை வேணும்,” என்ற குரல் கேட்டு அம்மா முற்றத்திலிருந்து கடையின் பின்புறம் ஏறினாள்.

“கார்த்திய பாக்க வரவங்க நல்ல பெரிய இடமாமே? இதுக்குன்னுதான் இவ்வளவு நாளாச்சுன்னு நெனச்சி பட்டுன்னு முடிங்க. இவ சித்தப்பன் மவ பிள்ள பெத்து பெரிய மனுசியாயிட்டா,” என்ற குரல் கேட்டது.

‘வீடும் கடையும் ஒரே இடத்தில வச்சுக்கிட்டு எந்நேரமும் நாயா ஓடிக்கிட்டே… எந்த வேலயும் முழுசா செய்யாம… ச்சை’என்று நினைத்தபடி முற்றத்தில் தண்ணீரை அடித்து ஊற்றிவிட்டு முகம்கழுவினாள். நடையின் படியில் அமர்ந்து முற்றத்து வெயிலில் கால்களை நீட்டினாள்.

முற்றத்தில் சுவரைத் தாண்டி கிளை நீட்டியிருந்த சீமைக்கொன்றையின் சிவந்த மலர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது மரம் கொள்ளாமல் காட்டுத்தீ என பூத்துக் கிடக்கையில் அப்பா“சிவசிவ” என்று நெஞ்சில் கை வைத்து பார்த்துக் கொண்டிருப்பார். அவரை அப்படிப் பார்க்க அவளுக்கு ஆசையாய் இருக்கும்.

இத்தனை வயது வரை படிப்பு, வேலை என்று வேறெதையும் பார்க்கவில்லை, பேசவில்லை, நினைக்கவில்லை. மெதுவாத்தான் இந்தக்கடல்ல குதிக்கனும். தள்ளிவிட்டுட்டு போறவங்களுக்கு என்ன? என்று இப்போது போல எப்போதும்நினைத்துக் கொள்வாள்.

எதிர்ப்புறம் மாடிப்படிகளில் இறங்கிய கதிர், “என்ன கார்த்தி… இப்படி ஒக்காந்திருக்க. வர்ற மாப்ள ஓடிப்போயிறப் போறாங்க,”என்றான்.

“ரொம்ப நல்லது.”

அம்மா, “அப்படியே கன்னத்தில ஒன்னு போட்டேனா பாரு. வயசு என்ன? கழுதைக்கு ஆகறாப்ல ஆவுது. ஒரு பயமிருக்கா. ஒன் வயசுல எனக்கு நீங்க ரெண்டு பேருமே பிறந்தாச்சு. போய் குளிடி,” என்றாள்.

“காப்பிம்மா. கால் ரொம்ப வலிக்குது…நேத்து அலைச்சல்,” என்றாள். இரண்டு நாட்களாக மனம் கண்டதை நினைத்துக் கொண்டிருக்கிறது. என்னத்துக்கு இந்த பீடிகை என்று அவளுக்குத் தெரியவில்லை.

அப்பா உள்ளே வந்து சமையலறை முன்னிருந்த நடையில் பாயில் அமர்ந்தார். அம்மா நான்கு இட்லி வைத்து சாம்பார் கிண்ணத்தை அருகில் வைத்தாள். கார்த்திகா காபி குடிப்பதற்குள் சாப்பிட்டு முடித்தவரிடம் அம்மா, “பதினோரு மணிக்கு ஒருக்கா சாப்பிடலாம். எந்திரிங்க,” என்றதும் சுள்ளென்ற முகத்துடன் எழுந்து கடைக்குள் சென்றார்.

“அங்க இங்கன்னு வீடுமுழுக்க ஒக்காந்து எந்திரிக்காம போய் குளிடி,” என்று சமையலறையிலிருந்து அம்மாவின் நாயனக்குரல் கேட்டது. அடியுமல்லாது, மெல்லியதுமல்லாது காற்றில் தட்டி நிறுத்தும் குரல். காபியின் மெல்லிய கசப்பு மட்டும் நாவிலிருந்தது. நடையிலிருந்து இறங்கி பின்பக்கம் குளியலறைக்குச் செல்லும்வரை அந்தக் கசப்பு இருந்து கொண்டேயிருந்தது.

தண்ணீரை அள்ளி வாயில் ஊற்றிக் கொப்பளித்துத் துப்பினாள். அவளுக்கு நித்யாவின் நினைவு வந்தது. அந்தக் கிறுக்கியும் இன்னைக்கு லீவுங்கறதால யாருக்கு முன்னால நிக்கப் போறாளோ? நானாவது பரவாயில்லை. அது இன்னும் செங்குத்துமரம் என்று தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றினாள்.

அவள் வயிற்றில் யாரோ ஊசியால் குத்துவது போன்ற வலி. அது நானேதானா? பனிரெண்டாம் வகுப்பில் குத்தத் தொடங்கி இன்னும் ஓயவில்லை. ஏன் படிப்பை இவ்வளவு சீரியஸா எடுத்துக் கொண்டேன். நான் மட்டுமா? இன்னும் சில கிறுக்கிகளும். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் புத்தகத்திற்குள்ளயே புதைந்தது இந்த வேலைக்கா என்று நினைக்கையில் அப்பா பாடற மாதிரி, “பித்தா…பிறைசூடான்னு போயிடுது” என்று நினைத்தபடி வெளியில் வந்தாள். கொடிக்கயிற்றை உரசிக் கொண்டிருந்த வாழைமரத்தைப் பார்த்தபடி தலை துவட்டினாள்.

கண்ணகி பெரியம்மாவின், சந்திராஅக்காவின், வாழ்க்கையை கண்டுதான் அம்மா சின்னப் பிள்ளையாயிருக்கையிலிருந்து ஆறுமாதம் முன்புவரை, “எப்படியாவது படிக்க வச்சிடறோம். வேலக்கு போயிடனும் கார்த்தி,”என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

தனியார் வேலை, டி.என்.பி.எஸ்.ஸி கிளாஸ் என்று இரண்டுமே சரிவராமல் மூன்று ஆண்டுகள். பின் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வகுப்புகள், தேர்வுகள், இடையில் ஒத்துவராத திருமணப் பேச்சுகள் என்று அவள் மனம் முழித்து பின் விழித்தது.

‘வேலைக்குச் சென்று ஒரு மாதிரி இப்பதான் இயல்பான நிலைக்கு மனதும், புத்தியும் வந்திருக்கு. அடுத்து இந்தக் கல்யாணம் முன்ன பின்ன நடந்திருமா? அதையும், வேலையையும் சமாளிக்கனும். இருபத்தஞ்சு வயசுக்கு மேல நிம்மதியில்லையோ?’ என்று கண்ட கண்ட நினைப்புகள் அவள் மனதில் பேசிக்கொண்டிருந்தன.

காற்றில் அத்தனை வாழை இலைகளும் சீப்பு மாதிரி கிழிந்திருந்தன. புடைக்கன்றின் குட்டி இலைகள் இளம்பச்சையில்சிறிய இலைகளாக நிமிர்ந்திருந்தன. அதில் ஒன்றை தொட்டுத் தடவிப் புன்னகைத்தாள்.

நடைக்குள் நுழைகையில் கதிர் அலைபேசியைக் கொண்டுவந்து கொடுத்தான். நைட்டியில் கையை துடைத்தபடி வாங்கி “யாருங்க..? ஆமா..வீ.ஏ.ஓ கார்த்திகாதான்,” என்றாள்.

“நாளைக்கு பத்து மணிக்கு மேல வாங்க பாக்கலாம்,” என்றபடி சிறு முற்றத்தைக் கடந்து மாடிப்படிகளில் ஏறினாள். படிகளின் வளைவுகளில் திரும்புகையில், படியடியில் ஸ்டார் ரூமை திறந்து கொண்டிருந்த அம்மா, “நல்லதா எடுத்துப் போடு… வீட்டுக்கு மாட்டிக்கறத போட்டுட்டு வந்து நிக்காத,” என்றாள்.

நீண்ட கோரை முடியை சீவும்போது, “ இன்னக்கி முடிக்கு ஹென்னா போடலான்னு இருந்தேன். க்ரே ஹேர் தெரியுது,” என்று அலைபேசியிலிருந்த கதிரிடம் சொல்ல அவன் நிமிர்ந்து,“அவ்வளவா தெரியல..” என்றான். க்ரே கலர் சுடிதாரை எடுத்து அவனிடம் காட்ட அவன் வேண்டாம் என்று உதட்டைப் பிதுக்கி வெளியே சென்றான்.பிங்க்கை எடுத்து மாட்டிக் கொண்டு கீழே வந்து சாப்பிடுகையில் அம்மா ஆறு ஆண்டுகளாகப் பாடும் அதே மந்திரத்தைப் பாடினாள். “பக்குவமா நடந்துக்க”

ஆழத்தில் அந்த அவளென்ற வெகுளி எங்கோ ஔிந்து கொண்டாள். மனுசங்களைப் பார்க்கையில் அவர்களின் பேச்சு போக்குக்கு போக இன்றைய இவளால் முடிகிறது. அந்த வெகுளி எவ்வளவோ பரவாயில்லை. இவர்களின் பேச்சு புரியாமல் நேரடியாக தன் மனதால் அடிப்பவள்.

அப்படி இருக்கக்கூடாது என்று அம்மா மெதுவாகப் புரிய வைப்பதற்குள் அவளின் நிமிர்ந்த தன்மையின் முன் தினமும் மண்டியிட்டிருக்கிறாள். “இப்படி இருக்காத கார்த்தி. மனுசங்கள புரிஞ்சிக்கடி. கெட்டவங்கன்னு சொல்லலடி அறிவு கெட்டவளே. என்னத்தப் படிச்சியோ!” என்பாள்.

அப்பாதான் எதற்கும் தணியாமல் அப்படியே இருப்பதால் அவர் பேச்சுக்கு செவிகளில்லாதவராக தனித்திருக்கிறார். அம்மா அவர்களிடம் சிக்கி தடுமாறிப் போகிறாள். கூட்டுக் குடும்பத்தில் எதையோ தொலைத்ததை உணர்ந்தப் பின்னரே அப்பா அம்மாவிடம் பணிந்திருக்கிறார். “நான் கல்யாணமாகிப் போயிட்டா இவங்களுக்கும் ஒரு வேலை முடியும்,”என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

மாடியில் அமர்ந்து வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டிருக்கையில் கார் சத்தம் கேட்டது. வயிற்றில் கொஞ்சமாய் ஆசிட் சுரந்து நின்றது. எந்த வடிவம் எந்த வாகனத்தில் வந்திருக்கிறதோ? கண் முன்னால் பாடப் புத்தகங்கள் இருந்த இடங்கள் ஒழிந்து கிடக்கின்றன. அவை மட்டுமே இருந்தஇடத்தில் என்னத்தை அடுக்குவது?

கீழே முற்றத்தில் குரல்கள் கேட்டன.

“எப்படி வீட்டக் கண்டுபிடிச்சீங்க?”

“அதான் சாரதாஸ் ஜவுளி மாளிகைன்னு வீட்டுசுவரை அடச்சு எழுதியிருக்கே? அததான் ஜெயா அடையாளமா சொன்னா,” என்று ஒரு ஆண் குரல் சிரித்தது.

“இங்க வந்த நேரத்துக்கு திருச்சியிலிருந்து திருவாரூர் போயிருக்கலாம். பாலகிருஷ்ணம்பட்டின்னு போர்டை பாத்து திரும்பி ஸ்டியரிங்க நாலு ஒடி ஒடிக்கறத்துக்குள்ள ஊரு கடைசிக்கு வந்தாச்சு,” என்றார்.

நடையில் சர்றென்று இரும்பு நாற்காலியை இழுக்கும் சத்தம் காதைக் குடைந்தது. இந்தக் கதிருக்கு எடுத்து போடவே தெரியாது.

“சின்ன கிராமந்தானே,” அம்மாவின் குரலில் சன்னமாக காற்றடித்தது.

நடையில் பாய் விரிக்கும் சத்தம் நீண்டு படுத்தது. ஜன்னல்வழி எட்டிப் பார்த்தாள். அப்பா முற்றத்து நிழலில் கடைக்குப் போகும் வழியில் கைகளை மடியில் வைத்து நடையைப் பார்த்துக் கொண்டிருந்தார். திருநீரு பாதி அழிந்திருந்த நெற்றி பக்கவாட்டில் தெரிந்தது. வேட்டிக்குக் கீழே கணுக்கால் முழி வீங்கியிருப்பது இங்கிருந்தே அவளுக்குத் தெரிகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு சுகரை அதன் போக்கில் விட்டு, இவர் போக்கில் நடக்கவும் போகாமல் இருந்து ஒரு கட்டத்தில் கோயிலில் போய் உட்கார்ந்து கொண்டு அவர் போக்கில்,

“தாயும் இலி, தந்தை இலி;

தான் தனியன்; காணேடி…”

என்று முடித்து, “அடுத்தத சொல்லுடா சிவசாமி” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அவரின் தோழரை அழைத்து பின் இவரே,

“தான்தனியன் ஆயிடினும்

காயில்உலகு அனைத்தும் கற்பொடிகாண்..”

என்றும்

“ஊனாய் உயிராய் உணர்வாய்…”

என்றும் அவர் சிறுவயதில் கற்ற அனைத்தையும் தினமும் கண்மூடி பாடிக் கொண்டிருந்தார். கேட்டவர்கள், “மவளுக்கு கல்யாணம் முடிக்காம… பித்து பிடிச்சுப் போச்சு,” என்றும், “அந்தப் பிள்ள திமிருக்கு இவரு இப்படி ஆயிட்டாரே,” என்றும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கடையைத் தாண்டிச் செல்பவர்களிடம், “ கடன் பாக்கி வரல, வாங்குன காசுக்கு நெல்லு வரல,” என்று நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கில் இருந்தார்.

அம்மா எடுத்த ருத்ர ரூபத்தில் அடங்கி மருத்துவரிடம் மாற்றி மாற்றி காண்பித்து கடைசியில் மூளைக்குச் செல்லும் குழாயில் அடைப்புக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு கொஞ்ச கொஞ்சமாக தன் கணக்கு வழக்கிற்கு வந்தமர்ந்து பேசாமலிருக்கிறார்.

பழைய ‘சிவனே’ என்கிற அவரின் ஓசையில்லாத இருப்பும், அவர் இயல்புக்கு வந்திருக்கிறது. என்றாலும் இடையில் வந்த பித்தன் என்ற பெயர் மாறவில்லை.

“நான் கார்த்திய கூட்டிக்கிட்டு வரேன்,”என்ற குரல் அவளைக் கலைத்தது. ஜெயாஅக்காவின் குரல். எப்போது வந்தாள்?

“சேலக்கட்டக் கூடாது? என்ன பொண்ணோ! கொஞ்சமும் பொருப்பில்லாம. சரி… சரி வா. நல்லாதான் இருக்க. ஆள் மெலிஞ்சிருக்கவும் அப்படியே இருக்க. உன் வயசில நான் ரெண்டு மடங்கு இருந்தேன்,” என்றவளுடன் நடந்தாள். கதிர் அப்பாவுக்கு மிக்ஸர் தட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான். கார்த்திகாவை பார்த்ததும் கூடவே வந்தான்.

அத்தனை கண்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாமல் ஒவ்வொருவராக தாவிக் கொண்டிருந்தாள். ஏழுஆட்கள். அந்த மென்பச்சை சட்டை மாப்பிள்ளை. நிழலிலேயே இருக்கும் மினுமினுப்பு தெரிந்தது. கொஞ்சம் உருளையான சிவந்தவன்.

சட்டென்று வந்த புன்னகையை மறைக்க கைகளைக் கூப்பியதும் அம்மா, “பாயில உட்காரு கார்த்தி,”என்றாள். இப்போது மட்டும் எங்கிருந்து வருமோ இந்தக் குரல். பொத்தி எடுத்து கைகளுக்குள் வைத்துக் கொள்ளும் குரல்.

“என்னம்மா படிச்சிருக்க?”

“எம்.எஸ்.ஸி”

“எங்க வேல”

“வாண்டயார் இருப்பு,/”

“ம் ….” குரலிலேயே தனக்கு வேலையெல்லாம் பெரிய விஷயமல்ல என்பதை அழகாக சொல்லத் தெரிந்திருக்கிறாள்.

“ஊரு எப்படிம்மா….” என்ற ஆண் குரல். பிள்ளையின் அப்பா.

“நல்ல மரியாதயான மனுசங்க…”

“நம்ம இப்படித்தான்னு தெரிய வச்சுட்டா எங்கயும் நல்ல மனுசங்கதான்,”இன்னொரு பெரியவர்.

“இந்த மாதிரிவீடெல்லாம் இப்ப இல்ல.”

அப்பா, “ஆமாங்க… அப்பா காலத்தில சுதந்திரம் கெடச்ச புதுசில கட்டினது,” என்றார். அனைவரும் அப்பாவை ஏற இறங்கப் பார்த்தார்கள்.

அம்மா, “ஆமா அப்பதாங்க…” என்று முடித்தாள்.

பிள்ளையின் அப்பா, “ரெண்டு பசங்க. திருச்சியில ரெண்டு கடை இருக்கு. வெளிய தோப்பு, நிலம் உண்டு. பொண்ணு வேலக்கு போகனுன்னு இல்ல. வீட்லயே சரியாயிருக்கும். மூத்த மருமக இருக்கா. வீட்டுவேலக்கு வேற ஆள் இருக்கு,”என்றார்.

அந்த அம்மா, “இருந்தாலும் விசேசம், போக்குவரத்துன்னு வாரத்தில நாலு நாள் போக வேண்டியிருக்கும்… அதில்லாம வீட்டுக்கு வர்ற பொண்ணு மாகலட்சுமில்லீங்களா? எதுக்கு வெளிய போய்க்கிட்டு,” என்றாள்.

பெரியவர் மணிக்கட்டிலிருந்த கடிகாரத்தைத் திருப்பினார். சந்தன சட்டையில் நல்ல தொப்பையுடன் நாற்காலியில் அசௌகரியமாக அமர்ந்திருப்பது அவரின் அசைவுகளிலேயே தெரிந்தது.

ஜெயா அக்கா அம்மாவைப் பார்த்து, “பையனுக்கு நான் பொறுப்பு சித்தி. பழக்க வழக்கமெல்லாம் தெரியும்,”என்றாள். அங்கு இங்கு தாவி பின் நாட்டு நடைமுறையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இடது பக்கத்திலிருந்தவள், “தம்பி உங்க போட்டாவை சுயம்வர மேளாவில பாத்ததும்… இந்தப் பொண்ணை பாக்கலாமா அண்ணின்னார்,” என்று கார்த்திகாவிடம்கிசுகிசுத்தாள். அவள் என்ன முகபாவம் காண்பிப்பது என்று தெரியாமல் விழித்தாள்.

“வீட்லயே இருக்கனுன்னு நினைக்க வேணாம். நானிருக்கேன்,”என்றாள்.

அந்த அம்மாள், “பெரியவங்க பேசிக்கிட்டு இருக்காங்கல்லம்மா,” என்றாள்.

“சரிங்கத்த,” என்றவளின் முகம் கூம்பியது. நீண்ட மூக்கின் வைரமூக்குத்தியின் ஔியை விட இவள் மெல்லிய எண்ணெய் படர்ந்த முகத்தில் ஔி கூடியிருந்தாள். செப்பு உதடுகள் என்ற பாடல் வரிகளுக்குப் பொருத்தமானவள்.

“நீங்க எங்க படிச்சீங்க,”என்று மிக மெதுவாக அவளின் காதருகில் கார்த்திகா கேட்டாள்.

“சீதாலட்சுமி ராமசாமி. யூ.ஜி முடிக்கறப்ப இதுங்க கண்ணில பட்டுட்டேன்,” என்று உதட்டைப் பிதுக்கினாள்.

“பின்ன என்னங்க ஜாதகம் பொருந்தவும்தான் வந்தோம். ஜாதகத்தாலதான் தம்பிக்கு இத்தன தாமதம்,” என்ற அந்த அம்மாவின் குரலால் நகர்ந்து அமர்ந்தார்கள்.

பிள்ளையின் அப்பா, “பேசிட்டு சொல்லுங்க. எப்படியும் நீங்களும் யோசிச்சிருப்பீங்க. விசாரிச்சிருப்பீங்க. பிள்ளைங்களுக்கு பிடிச்சிருந்தா எவ்வளவு சீக்கிரமா அவ்வளவு நல்லது.முப்பது வயசுக்கு மேல நிக்கிறாங்க,” என்றார்.

“நான் மூணு வருசமா கிளாஸ், எக்ஸாம்ஸ்ன்னு கஷ்டப்பட்டு இப்பதான் ஆறு மாசமாதாங்க வேலக்கு போறேன்,” என்ற கார்த்திகாவின் குரலால் அவர் முகம் மாறியது.

“அதனால என்னம்மா? பணத்துக்காகதானே. ஒரு பாதுகாப்புக்குத்தானே. அதுக்கு நம்ம வீட்ல எந்தக் குறையும் இல்ல.சிவனேன்னு இருக்கலாம். கார்ல போயிட்டு காரில வரலாம்”

“இல்ல…வேலக்கு போறது ஒண்ணும் சிரமமில்ல. மத்ததையும் மேனேஜ் பண்ணிப்பேன். இப்ப ஜூனியர் அஸிஸ்டெண்ட் எக்ஸாம் கிளியர் பண்ணி வெரிபிகேசன் முடிச்சாச்சு. வேணுண்னா ஸ்ரீரங்கம்… திருச்சி பக்கத்தில வர முடியும்,”

அவர்கள் பேசத் துவங்கினார்கள்.

அழைத்த அலைபேசியை தம்பி கொடுத்தான். எழுந்து சமையலறை வாசலில் நின்றாள்.

“சரிங்க. நாளைக்கு ஆபிசுக்கு வாங்க”

“….”

“சொன்னா சொன்னதுதாங்க. அடுத்தவங்க மனசையும் பாருங்க. உங்களமாதிரிதானே அவங்களும் அந்த நிலத்தில ஜம்பது வருஷமா விவசாயம் பண்றாங்க. சரிங்க….நாளைக்கு ஆபிஸ்ல பாக்கலாம்,” என்றாள்.

கார்த்திகாவின் குரலால் சபை அமைதியாகி அவளைப் பார்த்தது. அவளின் மைவழிகள் விரிந்தது மட்டும் மனதில் மறுபடியும் வருகிறது. உருண்ட மிரளும் விழிகள்.

அவர்கள் கிளம்பினார்கள். அம்மா மதிய உணவுக்காக உள்ளே சென்றாள். அப்பா கடைக்கு, இவன் பைக்கை எடுக்கும் சத்தம் கேட்டது. உள்ளிருந்து அம்மாவும்,வெளியிலிருந்து ஜெயாஅக்காவும் பேசினார்கள். அவள் மறுக்கப் போவது அனைவருக்கும் புரிந்திருந்தது.

ஜெயாஅக்கா, “உன்னால மனம் கலங்கிப் போறாரு அப்பா. அப்படி என்னத் திமிர். இவ்வளவு நல்ல மனுசங்க. ஏழு தலமுறைக்கு குந்தித் திங்கலாம்,”என்றாள்.

“எவ்வளவு பிள்ளங்க படிச்சு வீட்ல இருக்காங்க.வீட்ல இருக்கற பிள்ளைகளுக்கா குறச்சல்,” என்றாள்.

“உன்னய பிடிச்சிருக்கு. இத்தன வயசுக்கு மேல இப்படி ஒரு சம்மந்தம்!”

உள்ளிருந்து அம்மா, “கார்த்தி… கிருஷ்ணாவுக்கா கிளம்பற? முன்ன பின்ன இருக்காத. சரியா வந்திருவான்.சாப்பாடு என்ன வேணும்?” என்றாள்.

வெளியே வந்து, “ஜெயா…அவங்ககிட்ட நான் பதில் சொல்றேன்,”என்றாள். அக்கா தலையாட்டியபடி திரும்பி நடந்தாள். அம்மா, “காலையில இருந்து யாரோ போன் பண்ணிக்கிட்டே இருந்தாங்களே,” என்றாள்.

“ம்,” என்றாள். கார்த்திகாவின் உயர்படிப்பால் உடைந்தது கூட்டுக்குடும்பம். அம்மா படிக்க வைக்க ஆசைப்பட குடும்பம் திருமணம் செய்து கடனை முடிக்க காத்திருந்தது. இத்தனை ஆட்கள் இருக்கற வீட்ல ஒரு பிள்ளை படிப்புக்கு இவ்வளவு செலவு தாங்காது என்றதும் அவரவர் வாழ்க்கை என்றானது.

கடையிலிருந்து அப்பாவின், “பித்த னென்றனை உலகவர் பகர்வதோர் காரணம் இது கேளீர்…” குரல் கேட்டது. இந்தப் பாட்டெல்லாம் சிலநேரம் தனக்கென்று அவளுக்குத் தோன்றியது. முற்றத்திலிருந்த கல்தொட்டி நீரை எடுத்து முகத்தைக் கழுவினாள். நேற்று பாலம் விரிசல் கண்டதை பார்க்க சென்றபோது முள்செடி அவள் முகத்தில் பட்ட கீறல் சுள்ளென்று எரிந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“கார்த்தி… கார்த்தி…”கடையிலிருந்து அப்பாவின் குரல். பேரீச்ச பழத்தை எடுத்து வைத்திருப்பார்.

“என்னப்பா..?” என்றதும் பொட்டலத்தைக் கொடுத்தார்.

சங்கர் அண்ணா, “கெளம்பணுமாடா?” என்றார். தலையாட்டினாள்.

“இங்க பாருய்யா… கையில இருப்பில்லாம எதுலயும் முழு முதலையும் போடக் கூடாது.”

சங்கர் அண்ணா, “இல்லப்பா…துணிஞ்சு வாங்கியிருந்தா இப்ப கொள்ள லாபம்,”என்றார்.

“இல்லாத லாபத்துக்கு தவிக்கற. வியாபாரத்தில இன்னும் அடி வாங்கல… அதான். மனசு அப்படித்தான் நீயா நிறுத்தாத வரைக்கும். போய்யா…எங்கயாச்சும் வெளிய போயிட்டு வா”என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.

அவள் முற்றத்தில் இறங்கி மாடிப்படிகளில் ஏறினாள். மேலிருந்து எட்டிப் பார்த்தாள். சங்கர் அண்ணா சைக்கிளை எடுத்தார். அப்பா இவரிடம் மட்டும் நீண்டநேரம் பேசுவதும், அண்ணன் இவரிடம் வருவதும்புதிர்தான். சங்கர் அண்ணா முகத்திலிருந்த புன்னகை கார்த்திகாவிடமும் வந்தது. எடுத்து செல்லவேண்டிய பையில் பொருட்களை அடுக்கத் தொடங்கினாள்.

அவளுக்கு மனம் லேசாகி காற்றில் எழும்பிப் பறப்பது போல இருந்தது. அவளின் உள்மனம் அவனைப் பார்த்தவுடன் சொல்லிவிட்டது. அதை ஏமாற்ற அவளே முயன்றும் முடியவில்லை. தொடுவதற்கு மென்மையாக, அடர் வண்ணத்தில் இருந்த கொன்றைப் பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணா நேரத்துக்கு வந்துவிடுவான் என்ற நினைப்பு வந்ததும் எழுந்து பையைத் தூக்கிக் கொண்டு, அப்பாவின் குரலை எதிர்பார்த்தபடி கீழிறங்கினாள். பசி நேரம் கடந்திருந்ததால் அவளின் வயிற்றில் குத்தலெடுக்கத்தொடங்கியிருந்தது.

 

 

 

 

 

 

 

சொல்பேச்சு கேட்காத கரங்கள் – கமல தேவி சிறுகதை

கமல தேவி

பேருந்திலிருந்து இறங்குகையில் சுரபியின் மனம் முழுக்க சங்கடமாக இருந்தது. அதிகாலையில் திருமணத்திற்கு உற்சாகமாக கிளம்பிய அனைத்தும் அவிந்திருந்தன. கிருஷ்ணாபுரத்தின் நிறுத்தத்தில் ஒரு நடுவயதுக்காரர் ஏற முடியாமல் பேருந்தில் ஏறினார். பேருந்தில் நல்ல கூட்டம். அவள் படிகளுக்கு எதிரேயிருந்த இருக்கையிலிருந்து அவரைப் பார்த்தாள். வேட்டியை மடித்துக் கட்டியிருந்த அவரின் கால்முட்டி வீங்கி பளபளப்பாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தபின் தயங்கி எழுந்த சுரபியை, “கூட்டத்தில் சேலய கட்டிக்கிட்டு நிக்க முடியாது… வேணாம்,” என்ற குரல் தடுக்கையிலேயே கம்பியில் சாய்ந்திருந்த அவரின் தோளை நுனிவிரலால் தொட்டு அமரச் சொன்னதும் அமர்ந்து கொண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மா நிமிர்ந்து பார்த்து புருவம் சுருக்கினார். இவர் கொஞ்சம் தள்ளி நாசூக்காக அமர்ந்து கொண்டார்.

பக்கத்தில் அவளைவிட இளையவன் நின்றிருந்தான். கூட்டம் என்றாலும் தவறான தொடுகையை உடல் அறியக் கற்றிருக்கிறது. அனிச்சையாய் திரும்பி, “தள்ளி நில்லுங்க தம்பி,” என்றாள். நல்லவனாக இருக்கக்கூடும். இல்லையென்றால் “ தனியாக காருல வரலாமில்ல,” என்று எகத்தாளம் பண்ணியிருப்பான். இத்தகைய எகத்தாளமான பதில்களை தினமும் பேருந்தில் பெண்கள்  கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இறங்கியதும் அம்மா பூ வாங்கச் சென்றார். முட்டிவலிக்காரர் அருகில் வந்து,“ரொம்ப நன்றி கண்ணு..கால்ல இன்னதுதான்னு சொல்ல முடியாத வலி,”என்றார். “அதனால என்னங்க? மருந்து தடவுறீங்களா?”என்றாள். “அதுக்குதான் வந்ததே. போயிட்டு வர்றேன் பாப்பா,” என்று ஆட்டோவில் ஏறினார். குத்திய சிறு சிலாம்பை எடுக்காமலிருப்பதைப் போல சுரபியின் மனதில் பேருந்து நிகழ்வு அருவிக் கொண்டிருந்தது.

தை குளிர் இந்தக் காலையில் மெல்லிய படலமாய் உடலைத் தொட்டு கணம் தோரும் ஊடுருவிக் கொண்டிருந்தது.பாலக்கரையில் இறங்கி அம்மாவுடன் நடக்கையில் உறவுகளும் அங்கங்கே இணைந்து கொண்டனர். தெப்பக்குளத்தை சுற்றிக் கடக்கையில் குளத்தின் உள்வெட்டுச் செதுக்குகள் தெரிந்தன. முன்னால் சென்ற ஜீன்ஸ் குழந்தை குளத்தினுள் சுற்றி வெட்டப்பட்டிருந்த கிணறுகளை எண்ணிக் கொண்டிருந்தது. சிறு சந்தைக் கடக்கையில் நேர்க்கோட்டில் அடுத்த தெருவில் தெரிந்த சிவனாலயத்தைப் பார்க்கையில், “இமைப்பொழுதும் என்நெஞ்சை நீங்காதான் தாள்வாழ்க” என்ற ஒலிப்பெருக்கிக் குரல் அவள் காதுகளைத் தொட்டு மனதில் படர்ந்தது.

மேளச்சத்தம் கேட்டதும் சுரபி, “தாலி கட்டியாச்சோ?”என்றாள். “இல்லை அரசக்கால் ஊன்றாங்க” என்றார் சின்ன மாமா. செம்மஞ்சளில் ஔிப்பழமாய் ஆதவன் எதிரே தென்னங்கீற்றுகளின் பின் எழுந்து கொண்டிருந்தான்.பேசிக்கொண்டும், குளிர்ந்த சந்தனத்தைத் தொட்டுக் கொண்டும் மண்டபத்தினுள் நுழைந்தார்கள். சுரபி தன்மனதிற்குள், “மனுசரக் கண்டதும் பொங்கக் கூடாது. தொடாம பேசனும்,” என்று நினைத்துக் கொண்டாள். அவள் ஆழத்தில் வளைந்து நெளிந்து கொண்டிருந்த ஆதங்கம் சட்டென்று  மனதின் மேற்பரப்பில் தலை நீட்டியது.யாரையும் தெரியாமக்கூட தொடக்கூடாது. கல்லூரி முடித்து வந்து கற்றுக் கொண்ட முதல் சமூகப் பாடம். தொடுகைய தவறா நினைக்கற, பார்க்கிற, பயன்படுத்தற ஊர்லதான் எங்கப் பாத்தாலும் கூட்டம் என்று நினைத்துக் கொண்டாள்.

காலை ஆறு மணியென்பதால் நெருங்கிய சொந்தங்களாக கூடியிருந்தார்கள். மெதுவாக சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. அம்மாவின் சொந்தங்கள். பள்ளி விடுமுறை நாட்களின் முகங்கள் என்பதால் கூடுதல் நெருக்கம். பால்யத்தின் வண்ணங்கள் .சிரித்துப் பேசி அமர்ந்திருந்தார்கள். சிவப்புச் சேலையில் மணப்பெண் வணங்கி அமர்ந்தாள். மீண்டும் சடங்குகள். அம்மா உறவுக்கார சித்தப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் சுரபியை அடையாளம் கண்டு புன்னகைத்தார். கூட்டம் திரளத் திரள மனம் எச்சரிக்கையானது. அதை நினைத்து மேலும் புன்னகைத்ததை நீலவண்ணச்சட்டை போட்டவர் தனக்கென நினைத்து தலையாட்டினார்.

தோளில் குழந்தையுடன் வந்த அண்ணன் அவளின் கைப்பற்றி, “எப்ப வந்த,”என்றது .தாம்பூளத் தட்டிலிருந்த மாங்கல்யத்தை வணங்கி மஞ்சலரிசி எடுக்கையில் குழந்தையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டது.

“வாயில போடக்கூடாதுடா… மூக்கருத்துருவேன்,” என்ற சுரபியின் சைகையைப் புரிந்துகொண்டு அடிக்க வந்தான். கன்னங்களை உப்பி, உதடுகளைக் குவித்து சேட்டை காண்பித்தான். இடதுகையால் அண்ணனின் சட்டையை முதுகுப்புறத்தில் பற்றியிருந்தான். அண்ணின்  தோளில் கை வைத்து சுரபி, “சட்டை நல்லாயிருக்கு,” என்றதும் அண்ணன் மலர்ந்து ஏதோ சொல்ல வந்து மாமா அழைக்க எழுந்து சென்றது.

எழுந்து மஞ்சலரிசி தூவி மேலிருந்த அரிசியை தட்டியபடி அமர்கையில் சுற்றம் கலைந்து கொண்டிருந்தது. மண்டபத்திலுள்ள அனைவருமே அரிசியை தட்டிவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவளுக்கு ஏதோ ஒரு கரம் அனைவரையும் வாழ்த்தியது போலிருந்தது. திருமகள் தீபத்தை ஏந்திய சகோதரி முன் செல்ல மணமகளின் சகோதரன் கை பற்றி மணமானவர்கள் அக்னி வலம் வந்தனர்.

இளமஞ்சள் தழல்… பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.காற்று தொட்டெழுப்பி தழலாடும் நடனம். மேலெழுந்து தாவி விரிந்து நின்று நெளிந்தது. இப்படியொரு தழலில்லா மனதுண்டா?… புறச்சூழல் சத்தங்களால் தடுத்தும் சுரபியின் ஆழ்மனம் பின்னோக்கிச் சென்றது. உணவைக் கையிலெடுக்கையிலேயே வயிற்றில் குமட்டும்போது சுரபியின் வயது ஆறு இருக்கலாம். எந்த நேரமும் கோழை நிறைந்த நாசி. துடைத்த நேரம் தவிர மற்ற நேரங்களில் மற்றவரை விலக வைத்திருக்கலாம். அவள் வயதுப் பிள்ளைகளின் வேகத்திற்கு இவள் எப்போதும் பின்தங்கியேயிருந்ததாய் சுரபிக்கு நினைவிருந்தது. இருமலை நிறுத்த இயலாமல் நிறைந்த கண்களுடன் ஊதா நிறச் சீருடை பாவாடையில் முகம் பொத்தியிருந்த வகுப்பறை நாட்களில் அவள் ஓரமாய் எங்கோ இருந்தாள்.

மருத்துவரிடம் சித்தப்பா பேசியது என்னவென்று அவளுக்கு நினைவில்லை. அவள் கண்களை மூடி எக்ஸ்ரே மேசையில் படுக்கையில் உள்ளே விரியும்  இருள் உலகம் அவளை நடுங்கச் செய்யும். அவள் உறங்கும் கட்டிலின் கீழே எப்போதும் ஒரு பெரிய வலை அல்லது தேன்கூடு இருப்பதாக உணர்ந்து கொண்டேயிருந்தாள். அதில் விழுந்துவிடுவோமோ என்ற பயத்தால் எப்போதும் கட்டில் சட்டத்தை பற்றிக் கொண்டிருக்கும் அவளின் கை. வகுப்பறைப் பாடங்கள் நிச்சயம் கனவுக் காட்சிகளே. தினமும் மாத்திரை விழுங்குகையில் கேள்வி ஒன்று சிக்கிக் கொள்ளும்.மூச்சு விடுகையில் ஏற்படும் வலியைப் போலவே பயம் எப்போதும் அவள் உடனிருந்தது. உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல் அதன் கரையிலமர்ந்து வேடிக்கை பார்த்தபடியிருந்தாள்.

சுரபிக்கு குழந்தைக் கால ஏக்கங்கள் இரண்டு இருந்தன. ஒன்று வீட்டின் முன்புறம் இருந்த கிணற்று நீரைத் தொட்டு விளையாடும் சிட்டாக பிறப்பது. அடுத்தது அவள் ஐஸ்காரர் வீட்டில் பிறந்திருக்கலாம் என்பது. தொண்டையிலிருந்து அடிவரை இழுத்துப் பிடித்து இருமல் வரும் காலை வேளைகளில், “பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகுது…. சீக்கிரம் வா குளிக்க,” என்றால், “நானே குளிச்சிக்கிறேன்…” என்பாள்.

சாப்பாடு ஊட்டும்போது, “ஒவ்வொரு பருக்கையா தின்னா… இப்படிதானிருக்கும் ஒடம்பு… இந்த பிள்ளைகள பாரு…” என்றால், “நானே சாப்பிட்டுகிறேன்…,” என்பாள்.

“…..சரி வா…”

“வேணாம்…நானேதான் சாப்பிடுவேன்,”என்று தள்ளிச் சென்றுவிடுவாள்.

“இவ்வளவு புடிவாதம் பொம்பள பிள்ளக்கி ஆவாது…”என்பார் அம்மா.

ரேங்க் கார்டு கொடுக்கும் நாளன்று உடன்பிறந்தவர்கள் அப்பாவிடம் கையெழுத்து வாங்குகையில், ”எந்த கணக்கில் இந்த மார்க்கை விட்ட…. எந்த கேள்விக்கு நேரம் பத்தல…” என்று அவர்களின் விசாரணைகள் முடிந்தபின், சிவப்பு அடிக்கோடுகளிட்ட தன் அட்டையோடும், குனிந்த தலையோடும் தனியே வந்து நிற்கும் சுரபியிடம், ”நல்லா படிக்கனும்,”என்பார்.

“இனிமேல் ஹாஸ்பிட்டலுக்கு வரவேண்டாம். அதவிட ஊசி வேணாம், உவ்வே.. மாத்திரை வேணாம். ஆனா பொட்டுக் கடலையும் வெல்லமும் டெய்லி சாப்பிடனும்,” என்று கன்னத்தைத் தட்டி டாக்டர் சொன்னபோது ஐந்தாம் வகுப்பிலிருந்தாள்.

அம்மாவை தம்பி, தங்கை கட்டிப் பிடித்திருக்கையில் தள்ளி நிற்கும் சுரபியை அம்மா, “உன்னப் போல பிள்ள பெத்துட்டா குறச்சலில்ல… எல்லாத்துக்கும் பிடிவாதம்.. மனுசற கண்டா என்னமா இருக்குமோ…. தொட விடுதா பாரு. சனஞ் சேராதது..”என்று பேசிக்கொண்டே செல்வார்.

திருமண மேடையில் தழல் இறங்கியமைந்து கங்குகளானது. “சாப்பிட போகலயா ?”என்றபடி வந்த அண்ணன் சுரபியின் இடதுகையைப்பிடித்துக் கொண்டு நின்றிருந்தவர்களிடம் பேசத் தொடங்கியது. அண்ணனின் கரம் என்னும் சூட்சுமம் தூலமாகியது. கிணறுகள் வற்றிப் போன கடுங்கோடை விடுமுறையில் தாத்தா, “கிணதுத்துல தெக்குமூலையில் ஒருஊத்துகண்ணு திறந்திருக்கறதாலதான்…குடிக்க தண்ணீ இருக்கு,”என்று வெத்தலப்பெட்டி தாத்தாக்கிட்ட சொல்லிக் கொண்டிருந்தார்.வெத்தலப்பெட்டி தாத்தா, “ஒத்த ஊத்தும் அத்துப் போன கேணிய பாத்ததில்ல. எங்கியாச்சும் கண்ணுக்கு அகப்படாமயாச்சும் இருக்கும். உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்த மழைக்கும் சுரக்காதும்பாங்க,” என்றார்.

கமலையில் போய் நின்றாள் சுரபி. இரு கருங்கற்கள் கிணற்றின் உள்வரை நீண்டிருந்தன. அதில் கால் வைக்கையில் சுரபிக்கு தொடை நடுங்கியது. கவுனை தூக்கிக் கொண்டு அடுத்த அடி வைக்கையில் பெரியம்மாவின்,  “டேய் …சுரபிய பிடி,” என்ற குரல் கேட்டபோது நுனிவரை நடந்திருந்தாள். கால்களை எந்தப் பக்கம் வைத்தாலும் தடுமாறும்நேரம் அண்ணன் கை அவளை இறுகப்ப ற்றியிருந்தது.

“ஊத்து பாக்கனும்… விடு…”

“சரி பாரு….” அண்ணன் கையை விடவில்லை.

காய்ந்து பாசி கருகியிருந்த பாறையில் ஒருநேர்க்கோடாய் நீர் கசிந்தபடியிருந்தது. தேங்கியிருந்த நீரை மேலும் எட்டி நோக்கி “நீ பாக்கறியா? நான் புடிச்சுக்கறேன்,” என்று பின்னால் வந்து பிடித்துக்கொண்டாள்.

மழைக்கால விடுமுறைகளில்  இலவம் ஓட்டில் உனிப்பூ நிறைத்து வாய்க்காலில் படகு விடுகையில் சுரபியின் வலது கை, அண்ணனின் இடது கையிலிருக்கும்.

வரப்பில், வயலில், நாய் வருகையில், மழையில், தூங்குகையில், தொட்டியில் முழுகிக் குளிக்கையில், உடல்நலமில்லா நேரங்களில், கோவில் பிரகாரத்தில், தாத்தாவின் மோசமான உடல்நிலைத் தருணங்களில், அக்காவிற்கு குழந்தை பிறக்கையில், வாழ்வின் முக்கிய தீர்மானத்தை தீர்க்கமாகச் சொன்ன வேளையில் என்று அனைத்து நேரங்களிலும் அந்தக்கரமிருந்தது. பெரும்பாலும் தூலமாக சிலபோது சூட்சுமமாக.

மண்டபத்தில் கூட்டம் குறைந்திருந்தது. உணவிற்காக கை கழுவிவிட்டு வந்த சுரபி, மாமாவின் கரங்களைப் பற்றி “சாப்டீங்களா?” என்றாள்.  “இல்லம்மா… கை கழுவிட்டு வர்றேன்,” என்றவரின் கரங்களின் வயோதிக நடுக்கத்தை தன் கையில் உணர்ந்தாள்.

உணவுண்ண அமர்ந்ததும் பக்கத்திலிருந்த மோனிகா, “ சித்தி சாப்பிட கை கழுவிட்டா எதையும் தொடக்கூடாது,” என்று வாயில் கை வைத்து சிரித்தாள்.

“இல்ல…இப்ப விட்டா சான்ஸ் கிடைக்காம போயிட்டா,”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

உள்ளங்கைகளை நீட்டிப் பார்த்தாள் சுரபி… பால்யத்தின் செப்பு முகங்கள், பள்ளி நாட்களின் எண்ணெய் படர்ந்து ஔிரும் முகங்கள், கல்லூரி நாட்களின் இனிய முகங்கள். எத்தனை கரங்கள்….மெல்லிய, குளிர்ந்த,வெதுவெதுப்பான , சொரசொரப்பான , வலிமையான, தொடுகையே தெரியாத கரங்கள் என எத்தனை.

கரங்களைப் பற்றுகையில் புன்னகை, விதிர்ப்பு, சுள்ளென்று வியப்பு, கனிவு ,ஆர்வம், வசதி, ஆசுவாசம், நடுக்கம், விடுவிக்கக் காத்திருக்கும் நெருடல், அடுத்த முறை பிடிக்கலாகாது என மனம் நினைக்கும் சில… எத்தனை… ஒரு வழியாக பழகிவிட்டது.

மோனி தன்னைவிட உயரமான மேசைக்காக எம்பி கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளின் மெல்லிய இடது கரத்தைப் பிடித்து அருகிலிருந்த பிடிமானத்தில் வைத்தாள். ஏதோ பூனையின் முதுகைத் தடவியது போலிருந்தது.

மண்டபத்திலிருந்து வெளியேறி தெப்பக்குளத்தைச் சுற்றி நடக்கையில் ஓடிவந்து கையைப் பிடித்து நடந்த மோனிகா, “அவன் சொல்றான்…. இங்க பத்து கேணியிருக்குன்னு… குளத்துக்குள்ள கேணியாம்….” என்று சிரித்தாள்.

இரு கேணிகள் அவன் கணக்கில் சேரவில்லை என்று நினைத்தபடி சுரபி, “கேணி இருக்கே,” என்று சொன்னாள்.

உலர்ந்து ஏடுவிரிந்த குளத்தைக் காட்டி, “ தண்ணிகூட உள்ள இருக்கும். ஊத்துப் பாத்து வெட்டியிருப்பாங்க,” என்றார் ராசு பெரியப்பா.

“சரி…மழை பெய்யும்போது தெரியுமா?”என்றாள் மோனி.

“அப்ப முழுகிடும் தெரியாது…”

“அப்ப அது பொய்…”

“இப்ப போய் பக்கத்தில நின்னு எட்டிப் பாத்தா தெரியுமே… வரியா?” என்றாள் சுரபி.

மோனி,“தண்ணியில்லாதப்ப தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, அவ்வளவு தூரம் நடக்கனுமா?” என்றாள்.

இங்கு வந்ததிலிருந்து மோனி குளத்திலிருக்கும் கேணிகளையே கேட்டுக் கொண்டிப்பதை உணர்ந்த சுரபி, “பாக்கனுன்னா போகத்தான் வேணும். பாக்கனுன்னு ஆசையா இருந்தா என் கைய பிடிச்சுக்கிட்டே நீ வந்தா பாத்துட்டு வரலாம்,” என்றாள். மோனி சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.

“இதென்ன ஒரு பைசாக்கு பொறாத வேல… பஸ்ஸ பாத்து போகாம. அதோ பஸ் வந்திடுச்சு” என்ற குரலால் தயங்கி பேருந்திற்கு விரைந்தார்கள்.

பேருந்தில் படிவரை ஆட்கள் நின்றிருந்தார்கள். “அடுத்த பஸ்ஸில போகலாம்,” என்ற சுரபியை பொருட்படுத்தாமல் அனைவரும் ஏறத் தொடங்கியிருந்தார்கள். மோனி ஒரே ஓட்டமாக சந்தில் புகுந்துவிட்டாள்.

பேருந்து நகரத் தொடங்குகையில் சுரபி இரண்டாவது படியில் நின்றிருந்தாள். “உள்ள வாம்மா… படியில நிக்காத,” என்ற நடத்துநரின் குரல் மேலும் கோபத்தைத் தூண்டியது. வழிவிடக்கூட இடமில்லை. உள்ளே நடத்துநர், “நெருங்கி நில்லுங்கம்மா படியில ஆளுக நிக்கறாங்க,”என்றார்.

“அடுத்த வண்டியில ஏற வேண்டியதுதானே,” என்ற குரல் கேட்டது.

“அவங்க ஊரு வண்டிக்கு இன்னும் ஒரு மணியாவும்,” யாரோ தெரிந்தவராக இருப்பார்.

சிவன் கோவில் முடக்கு வரப்போகிறது. சுரபிக்கு அடிவயிற்றில் கலக்கம். சரியான சாய்வான முடக்கு, முன்னால் வேகத்தடை வேறு. அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவளுக்கு வியர்வையால் கை பிடிமானம்  குறைவது நன்றாகத் தெரிந்தது. உடலை முன்னால் உந்தி பின்னால் சாயாமலிருக்க முயன்று பயனில்லை. பேருந்து முடக்கில் சாய்ந்து ஊர்கையில் அவளின் கைப்பிடி தளர்ந்தது. அவ்வளவுதான் என்று நினைத்த நொடியில் முதுகில் பலமாக ஒரு கை உந்தி மேலே அவளைத் தள்ளியது.

“வழி விடுங்க,” என்ற பலமான குரல்.

அந்தக் கையின் விசையில் உள்ளே வந்துவிட்டிருந்தாள். மாய கணம். இன்னும் அவளுக்கு கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. வியர்த்து வழிந்தது. திரும்பிப் பார்த்தாள். யாரென்று தெரியவில்லை. பக்கத்திலிருந்த ஒரு அக்கா, “பயந்துட்டியா?” என்று கம்பியைப் பிடித்திருந்த அவளின் கையைப் பிடித்தாள். மங்கலான கண்களைச் சிமிட்டியபடி சுரபி  தலையாட்டினாள். ஜன்னல்வழி வந்த காற்று தொட்டு கடந்து சென்றது. சுரபி முதுகில் அந்தத் தொடுகை இன்னும் எஞ்சியிருந்தது. மனம் கைகளிடம் இதற்குதான் மனிதர்களின் கரங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்பதில்லையாக்கும் என்றது.