எழுத்து

ஒலிக் குறிப்போடு இன்னொன்றையும் தூக்கிப் பறந்த பறவை -செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

 

அதைப் பற்றி உங்களிடம் சொல்லவில்லையே
குட்டியூண்டு சைஸ் ரொம்பக் குட்டி
கண்ணாடிச் சன்னலுக்கு வெளியே க்ரில்லில் அமர்ந்தபடி
எப்பொழுதும் கண்ணாடியைக் கொத்தியபடியேயிருக்கும்
வருகின்ற நேரம்தான் வந்துவிடும் இப்பொழுது பார்த்துவிடலாம்
கொஞ்சம் பொறுங்கள் வந்துவிட்டதென நினைக்கிறேன்
ஆம் ஆம் வந்துவிட்டது பிறகு பேசலாம்
எப்பொழுதும் போல தன் குட்டி அலகை வைத்து
தட்தட்தட்தட் தட்தட்தட்தட் என கொத்த ஆரம்பித்தது
பிறகு பேசலாமென சொன்னது இதைப் பற்றிதான்
மறந்த நிலையிலாக ஒருவேளை ஏற்கனவே சொல்லியிருந்தால்
அதுவும் இதுதான்
இப்பொழுது சொல்லிக்கொண்டிருப்பதும் கூட இதுதான்
அதோ அலகை மட்டும் தானே முன்னால் கூப்பி பறந்துகொண்டிருக்கிறது
நீங்கள் சொல்லுகிற எதுவும் அலகில் இல்லையென சொல்கிறீர்களே
அதுவுமே இது தான்
இப்பொழுது இதையுமே தூக்கிப் பறந்து கொண்டிருக்கிறது
வாருங்கள் வந்து பார்த்தால் தெரியும் அது

காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 

காலமும் இலக்கியமும்

எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது ரெண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை ரெயில் நின்றுகொண்டிருக்க்கிறது.

– அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்

காலம் என்பது இயற்பியலுக்கு எந்தளவு தேவையான கருத்தாக இருக்கிறதோ அதேயளவு நெருக்கமான கருத்தாக கலை இலக்கியத்துறைக்கும் இருந்து வந்திருக்கிறது. காலம் நிலத்தடி நீராக ஒவ்வொரு கலைப்படைப்பின் கீழும் இருக்கிறது. செவ்வியல் படைப்புகளில் காலம் ரெட்டை மாட்டு வண்டியைப் போல நிதானமாக ஊர்ந்து செல்லும். சில நேரங்கள் காலம் என்பது நின்றுவிட்ட உணர்வையும் எழுத்தாளர் உருவாக்கிவிடுவார். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டிய நவீன சிறுகதைகளில் அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ முக்கியமான ஒன்றாகும். இங்கு ஒருவன் ரயிலைப் பிடிக்க ஓடுகிறான். இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் ஏற வேண்டிய வண்டி புறப்பட்டுவிடும். வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திலிருந்து வழி நெடுக தடங்கல்கள் பல. ஒவ்வொரு தடங்கலும் அவனைப் பொறுத்தவரை காலத்தை நிறுத்துகிறது, பின்னோக்கி ஓட வைக்கிறது. தடை உருவானதும் சிந்தனை வேறொரு காலத்தில் அந்தத் தடையைப் பிந்தொடர்கிறது. எல்லையற்ற மனோவேகம் வேறொரு காலத்தில். இவன் பெரிய மூட்டையைத் தூக்கிக்கொண்டு அதிலிருக்கும் தம்ளர் விலா எலும்பை நோகும்படி ஓடுகிறான். அவனைச் சுற்றி காலம் வேறொரு வேகத்தில் இருக்கிறது. தெரு ஓரப் பிச்சைக்காரர்கள் தங்களது ஐந்து குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காலத்தை நிறுத்திவிட்டதாக அவன் நினைக்கிறான். போதாத நேரமாக காலமற்ற கடவுள் அவன் எதிரே வந்து தாமதத்துக்கான காரணங்களை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார். அவன் கடவுளை, “அந்தாலே போ,” எனச் சொல்லிவிட்டு ஓடி வரும்போது ரயில் புறப்பட்டு விடுகிறது. ஒரு கணம் திகைத்து நிற்பவன், தன் உளநிலையே காலம் எனும் முடிவுக்கு வரும்போது ரயில் அங்கேயே நிற்பதைப் பார்க்கிறான். நிதானமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறான். தம்ளர் இடித்த விலா எலும்பின் வலியில் குறைவில்லை.

மிக எளிமையான கதையாக இருந்தாலும், காலம் எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கிறது எனும் வகையில் உள்ள ஒரு கதையாக இது இருக்கிறது. ஆனால், கதையில் வரும் காலத்தை எல்லாம் ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும் வகையில் புனைவின் கால வேகம் அமைந்திருக்கிறது. சம்பவங்களைக் கோர்த்துச் செல்லும்போது ஒரு நீண்ட ஜரிகையாக எல்லாமே அமைந்திருக்கின்றன – பலவேறு காலங்களில் நடந்தாலும் கூட.

அறிவியல்பூர்வமாக பார்க்காமல் இதை தத்துவ வழியில் அணுக முடியும். தத்துவமும் இன்று உண்மையான காலத்தையும் அவரவருக்கு சார்புள்ள காலத்தையும் தனித்தனியே ஆராய்ந்து வந்தாலும்கூட, தத்துவம் எப்போதும் தனிமனித காலத்துக்கும் உலகளாவிய காலம் எனும் கருத்துக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முன்வைத்தபடிதான் இருக்கிறது. இதனாலேயே பிரத்யட்ச உண்மைக்கு வலிமை இருந்தாலும், நம் அறிதல்முறை காலத்தைக் கடந்து ‘இன்றைய’ காலத்தில் அல்லாது அனுமானங்களையும் உண்மையாகக் கொள்கிறது.

கார்லோ ரொவேலி இந்தக் கட்டுரையில் சொல்வது போல காலத்தை நாம் ஒரு துறையின் அறிவைக்கொண்டு முழுவதும் அறிந்துகொள்ள முடியாது. இலக்கியம், நரம்பியல் துறை, தத்துவம், உளவியல் என பல துறைகளை முழுமையாக இணைக்கும் அறிதல் முறை நமக்கு அவசியமாகிறது. தனித்தனியாக துறைகள் நிபுணத்துவம் அடைந்து வரும் காலத்தில் Integrated thought systems நாம் அறிந்த அனைத்தையும் ஒன்று சேர்க்க உதவும். அப்படி அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு துறையாக நாம் இலக்கியத்தைப் பார்க்க முடியும்.

இனி நேர்முகம்.

oOo

உங்களுடைய ‘காலத்தின் ஒழுங்கு’ எனும் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள் நேரடியாகவும், உலகளாவிய உண்மையாகவும், இருக்கும் காலத்தைப் பற்றி இத்தனை தீவிரமான அக்கறை அவசியமா என வியக்க மாட்டார்களா? ஒரு இயற்பியலாளருக்கு ஏன் காலம் மீது ஆர்வம் வர வேண்டும்?

உலகத்தின் உண்மை இயல்பு பற்றி யாருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஆனால் நம் அனுபவ அறிவுக்கு முற்றிலும் வேறொரு வகையில் காலம் இயங்குவது உண்மை. இத்தனை சிக்கலில்லாமலும் இயல்பாகவும் இருக்கும் ஒன்று நம் அறிதலுக்கு முற்றிலும் புறம்பானதொரு வகையில் செயல்படுவதை ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்க்க வேண்டியுள்ளது.

காலத்தைப் பற்றிய நமது அடிப்படை புரிதல் தவறு என்கிறீர்களா? அல்லது அது உலகளாவிய ஒன்றாக இருப்பதில்லையா?

நமது அனுபவ எல்லைக்குள் வரும் காலத்தை ஊதிப்பெருக்கி உண்மை ரூபமான காலத்தின் மீது போட்டுப் பார்க்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது. தட்டையான உலகம் எனும் படிமம் அழகான ஒன்று. லண்டனின் பூமி சமதளமானது எனச் சொல்வதில் தவறில்லை. ஒரு கட்டிட வல்லுநர் வீடு கட்டும்போது பூமி சமதளத்தில் இருக்கிறது எனும் முன் அனுமானத்தோடு மட்டுமே அணுக வேண்டும். வீடு விழாது. ஆனால் தூரத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும்போது அது தட்டையாக இல்லை. இந்த முரண் உங்களுக்குத் தெளிவாகப் புரிகிறது. நமது கண்ணோட்டம் தவறல்ல, ஆனால் முழுமையானதாக இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் உலகின் புரிதலைக் கொண்டு அண்டம் முழுவதையும் அறியத் தொடங்குவது தவறாகும்.

சரி, காலத்தை நாம் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்வது? தட்டையான உலகத்துக்கான உங்கள் படிமம் என்ன? வளைந்திருக்கும் உலகத்தைப் பார்க்க நாம் சற்றே விலகிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. அது போல உண்மையான காலத்தைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

நாம் யுத்தம் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளாமல் உலகத்தில் தொடர்ந்து வாழ முடிந்தால், ஒரு நாள் ஒளியைவிட வேகமான பயணம் செய்த ஒருவர் தன் குழந்தைகளைவிடச் சிறுவனாக மாறி திரும்ப முடிவது நம் முன்னே நடப்பதோடு மட்டுமல்லாது அது மிகச் சாதாரண அனுபவமாகவும் இருக்கும்! காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகத்தில் செல்கிறது எனும் உண்மை புரிந்துகொள்ள எளிமையானதாகிவிடும். அப்போது, இறுக்கமான காலத்தின் பிடியில் நமது உடல்கள் சிக்கிக் கொண்டிருக்கிறது எனும் அறிவு உலகம் தழுவிய உண்மையாக இருக்காது.

காலத்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே என்ன தெரியும்? நம் அறிதலின் நிலை என்ன?

ஐன்ஸ்டீனின் பொது சார்பு நிலை கொள்கையில் விவரிப்பதைக் கொண்டு நமக்கு ஏற்கனவே நிறைய தெரியும். குவாண்டம் இயற்பியலின் புரிதலைப் போல, துகள் இயற்பியல் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும். அதாவது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் விரிபார்வையில் மட்டுமே புலப்படும் நிகழ்வு..

காலத்தைப் பற்றி நமக்குத் தெரியாததில் எது எளிமையானது?

கடந்த கால புகைப்படங்கள் இருக்கும்போது எதிர்காலப் படங்கள் ஏன் இல்லை? முட்டாள்தனமான கேள்வியாகத் தோன்றினாலும் இது அத்தனை முட்டாள்தனமானது அல்ல. இயல்பான உலகம் காலத்தால் வரையறுக்கப்படுவது – அதாவது கடந்த காலம் முடிந்தது என்றும், எதிர்காலம் திறந்த ஒன்று என்றும் சொல்லப்படுகிறது. நமக்கு இருக்கும் ஞாபகங்களும், கடந்த காலப் படங்களும் எதிர்காலத்தை அல்ல, நடந்து முடிந்தவற்றை சேகரித்து வைத்திருக்கின்றன. ஆனால் இயற்பியலில் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ரெண்டுக்கும் வித்தியாசங்களைத் தேடத் தொடங்கினால் நாம் குழப்பமான இடத்துக்கு சென்று சேருவோம். கடந்த காலத்தில் உலகம் நூதனமான நிலையில் இருக்கிறது. இயற்பியலாளர்கள் அதை குறைவான குலைதி (Entropy) என்கிறார்கள் (குலைவுறும் தன்மை/நிலைகுலையும் தன்மையின் அளவையியல் என்ற பொருளில் நான் இங்கு பயன்படுத்துகிறேன்). கடந்த கால அண்டத்தில் குலைதி குறைவு என்பதாலேயே இது மட்டுமே எதிர்காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் வித்தியாசமாக இருக்க முடியும். குறைவான குலைதி என்பது ஒழுங்கமைதியுள்ள அமைப்பைச் சுட்டி நிற்பதால் இதுவும் ஒரு குறைபாடுள்ள விளக்கமே.

இயல்பாகவே வஸ்துக்களின் ஒழுங்கமைதி குலைகின்றன என்பது  மட்டுமே எதிர்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் உள்ள வேறுபாடு என்றால் நமக்குப் பல கேள்விகள் தோன்றுகின்றன: கடந்த காலத்தில் ஏன் நிகழ்வுகள் ஒழுங்கமைதி கொண்டிருந்தன? அச்சீரமைப்பை உருவாக்கியவர் யார்? இது இன்றுவரை பதிலில்லாத கேள்வி.

காலத்தைப் பற்றி நமது எதிர்காலப் புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

என்னைப் பொருத்தவரை காலம் ஒரு குழப்பமான கருதுகோள். அது ஒற்றைப் படைத்தன்மை கொண்டதல்ல. அது பல்வேறு கோணங்களில் அணுகக்கூடிய வகையில் பல தளங்கள் கொண்ட அமைப்பு. அதனால்தான் என் புத்தகங்களில் இலக்கியம், நிறைய தத்துவங்கள், உளவியல் மற்றும் சொந்த அனுபவங்களைக் கொண்டு எழுதுகிறேன். நாம் அவற்றின் பல கோணங்களை இணைக்க வேண்டியிருக்கிறது. பல துறைகளும் தேவைக்கு அதிகமாகப் பிரிந்து கிடப்பதே என்னைப் பொருத்தவரை இன்றைய காலத்தின் குறைபாடாக இருக்கிறது. காலம் போன்ற சிக்கலான கருதுகோளைப் புரிந்துகொள்ள நம் நரம்பியல் நிபுணர்கள், தத்துவவாதிகள், இயற்பியலாளர்கள், ஏன் இலக்கியங்கள் கூட ஒன்றுடன் ஒன்று கலந்துரையாடல் நடத்த வேண்டும். என் புத்தகத்தில் நான் ப்ரெளஸ்ட் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.

காலம் என்பதை உணர்வுத்தளத்திலும் நாம் அனுபவிக்கிறோம். உணர்வுரீதியான பாதிப்பை நமக்கு காலம் அளிக்கிறது. காலம் பற்றிய உரையாடல்களில் நாம் காலம் குறித்த உணர்வு ரீதியான பாதிப்பு இல்லாமல் பேச முடியாது. காலம் கடக்கும்போதெல்லாம் நாமும் கடந்து போகிறோம் என்பதும் ஒரு காரணம். ஒரு இயற்பியலாளராகச் சிந்திக்கும்போதுகூட நாம் உணர்வுத்தளத்தை மறந்தோமென்றால் குழம்பிப் போவோம். ஏனென்றால் கடந்து போகும் காலம் குறித்த கவலையற்ற இயற்பியல் துறையில்கூட நாம் உணர்ச்சிரீதியான உரையாடலை எதிர்பார்க்கிறோம். நம் நரம்பு மண்டலத்துடன், நமது உணர்வு ரீதியான வாழ்க்கையுடன் தொடர்புடையது காலம். இது இயற்பியல் அல்ல. காலம் கடக்கும் எனும் உணர்வு நமது மூளையை பாதிக்கிறது. ஆகவே இயற்பியலாளருடையது அல்லாது நரம்பியல் வல்லுனரின் சிக்கலாக மாறுகிறது. இயற்பியல் தளத்தில் காலம் என்பது மிகவும் பலகீனமானது என்பதால் இப்படிப்பட்ட கருதுகோள்களின் மீது தத்துவத்துறை புது வெளிச்சத்தை பாய்ச்சக்கூடும்.

காலத்தின் உணர்வு ரீதியான கட்டமைப்பு உங்கள் சிந்தனையை பாதித்திருக்கிறதா?

ஆமாம். தத்துவவியலாளர்கள் எழுதி இதுவரை வெளியான புத்தகங்களிலேயே மிகச் சிறப்பான புத்தகத்தை எழுதிய ஹான்ஸ் ரெய்ன்பாக் எனும் தத்துவவாதி, காலாதீதமான கருதுகோளைத் தேடுவது காலத்தைக் கண்ட பயத்தினால் விளைந்த தத்துவம் என்கிறார். எல்லையற்ற மாற்றங்களுடனான சமரசமே காலத்தைப் பற்றிய அறிதலின் பயணம் எனத் தோன்றுகிறது. புத்த தத்துவத்தின் நிலையற்ற கருதுகோள் போல அசைவில் அசைவற்ற நிலை. காலத்தை கவனித்து வருபவனாக வாழ்வை கழித்து வரும் நான், எதுவும் நிலையானதல்ல எனும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். இது நான் அறிவியல் படிப்பதால் வந்த மாற்றமா அல்லது வயதானதாலா எனத் தெரியவில்லை.

 எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் இரு கோட்பாடுகள்

நம் அண்டத்தைப் புரிந்துகொள்வதில் நம்மிடையே இருக்கும் சிறப்பான இரு கோட்பாடுகளைப் பற்றிப் பேசலாம். சிறிய துகள்களின் இயங்குவிதிகள் பற்றிய குவாண்டம் இயற்பியல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களின் இயங்குவிதிகளை பற்றிய பொதுச்சார்புக்கொள்கை. இரண்டு கோட்பாடுகளுக்கிடையே பல முரண்பாடுகள் உள்ளன. ரெண்டுமே அதனதன் தளங்களில் உண்மைக்கு நெருக்கமாக உள்ளன. ஆனால் அந்த உண்மைகளுக்கிடையே பல முரண்கள் உண்டு. இரண்டு கோட்பாடுகளையும் இணைக்கும் முயற்சிகள் பல நடந்துள்ளன. லூப் குவாண்டம் ஈர்ப்புக்கோட்பாடும் , இழைக்கொள்கையும் அம்முயற்சியில் இறங்கியுள்ளன. அவற்றைப் பற்றி மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா?

இவ்விரண்டும் பொது சார்புக்கொள்கையையும், குவாண்டம் இயற்பியல் கருதுகோளையும் இணைக்கும் உத்தேசமான கோட்பாடுகளாகவே கருதப்படுகின்றன. நமக்குப் புரிந்தவரை இவ்விரண்டில் ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும். இவ்விரண்டில் இழைக்கொள்கை பெரிய கேள்விகளை நோக்கி பயணம் செய்கிறது. எல்லாவற்றையும் ஒரே சமன்பாட்டில் அடைக்கும் பெரு முயற்சியில் உள்ளது. நமது தூலப்பொருட்களின் அடிப்படைக் கட்டுமான துகள்களான எலெக்ட்ரான், குவார்க் போன்ற அனைத்துமே இழைகளால் அமைந்தவை எனும் ஆதாரக்கொள்கையின் அடிப்படையில் இழைக்கோட்பாடு இயங்குகிறது. ஒரே கோட்பாட்டின் மூலம் அனைத்தையும் இணைக்கும் முயற்சி. லூப் குவாண்டம் ஈர்ப்புக் கொள்கைக்கு பெரிய குறிக்கோள்கள் இல்லை. குவாண்டம் இயற்பியலின் புரிதலைக்கொண்டு பொதுச் சார்புக்கொள்கையை விவரிக்கப் பார்க்கிறது. வெளி மற்றும் காலத்தின் கொள்கைக்கு குவாண்டம் வடிவம் கொடுக்கும் கோட்பாட்டு முயற்சி மட்டுமே. நம்மைச் சுற்றியிருக்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக அல்லாமல் சிறு துணுக்குகளின் தொகையாக (குவாண்டம்) இருப்பதாக கணிக்கும்போது சிறு சிறு குவாண்டம்களாய் உள்ள வெளி, அதாவது, சிறு சிறு துகள்களாலான வெளி, இந்தத் துகள்களும் சின்னஞ்சிறு லூப்களாக உள்ளன என்று அமைத்துக் கொள்ள முடியும். இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளி எனும் வெற்றிடத்தை நிறைக்காமல் இவையே வெளியாக அமைகின்றன – சிறு சிறு பஞ்சு இழைகள் சேர்ந்து நாம் அணியும் சட்டையாவது போல இந்த குவாண்டம் வெளித் துகள்கள் வெளியென்ற ஒன்றாகின்றன.

இழைக்கொள்கைக்குப் பெரிய குறிக்கோள்கள் இருந்தாலும் முற்றிலும் புதிய ஒன்றை அது முன்வைக்கவில்லை. இழைகள் வெளியினில் நகர்வதால் காலத்துக்கும் வெளிக்கும் இடைவெளி இருப்பதை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில், இருக்கும் இடமோ இருக்கும் காலமோ இல்லையாதலால், அனைத்துமே குவாண்டா என்று அழைக்கப்படும் துணுக்குகளாய் தோன்றுகின்றன. அதாவது காலமும் வெளியும் இருவேறு கருதுகோள்கள் அல்ல; ரெண்டுமே ஒன்றிலிருந்து விளைந்தவை எனும் புதுமையை இது முன்வைக்கிறது. இவற்றில் எது சரியானது என நமக்கு இப்போது தெரியாது. ஆனால் விஞ்ஞானம் பலவேறு கோட்பாடுகளுக்கிடையே பெரிய உரையாடல்களை நிகழ்த்தியபடி முன்னகர்ந்துள்ளதால் இதுவும் நல்லதுதான். இந்த சிக்கலைத் தீர்க்காதவரை எந்த ஒரு ஒற்றைக்கொள்கையும் நமது சுதந்திரமான சிந்தனைக்கு இடையூறாக இருப்பதில்லை.

லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டை சரியானது என ஏன் நினைக்கிறீர்கள்? இழைக் கொள்கையின் சிக்கல் என்ன? கறாரான சோதனை முடிவுகளைக் கேட்கவில்லை, உங்கள் உள்ளுணர்வு இதைப் பற்றி என்ன சொல்கிறது?

சோதனை மூலம் வெற்றி கண்ட ஐன்ஸ்டீனின் பொதுச்சார்புக் கொள்கையின்படி காலமும் வெளியும் ஈர்ப்பலையின் வெவ்வேறு வடிவங்களே. என்னைப் பொருத்தவரை என்றென்றும் அழியாத கண்டுபிடிப்பாக இது இருக்கும். அண்டத்தின் மையத்தை நாம் கண்டடைந்தது போன்றது இது. அறிந்து கொண்டதும் நாம் உலகத்தை புதுவிதமாகப் புரிந்துகொள்கிறோம்.

என்னுடைய உள்ளுணர்வைப் பற்றிக் கேட்டீர்கள் – வெளிச்சம் ஒரு மின்னணு அலை மட்டுமல்ல, ஃபோட்டான்களால் உருவானதுமாகும். வெளியும் ஈர்ப்பலையினால் உருவானது மட்டுமல்லாது குவாண்ட்டாக்களாகவும் இருக்கும், வெளிச்சத்தைப் போல. வெளியை குவாண்டாக்களாகப் பிரிக்கும்போது வெளி என்பது வெளித்துகள்களின் வரிசையாகவும் இருக்கும் – இது என்னுடைய ஆழமான உள்ளுணர்வு.

அதாவது நாம் பார்க்கும் வெளி தொடர்ச்சியான ஒன்றாக இல்லாமல் சிறுத் குவாண்டாக்களாலான வெளி என்று அறிவோம் இல்லையா? இதை எப்படி சோதித்துப் பார்க்க முடியும்? எவ்விதமான சோதனை முடிவுகளின் மூலம் காலம், குவாண்டம் ஈர்ப்பு பற்றி சரியான திசையில் ஆய்வுகள் நடத்த முடியும்?

ரெண்டு திசைகளில் இந்த ஆய்வு சுவாரஸ்யமாகச் செல்லக்கூடும். முதலாவது நமது அண்டத்தின் பெருவெடிப்பு. அண்டவியல் வளர்ந்து கொண்டிருக்கும் துறை. கிட்டத்தட்ட 13 அல்லது 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த நூதனமான நிகழ்வான பெருவெடிப்பை நாம் இன்னும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவில்லை. அண்டவியல் தகவல்கள், வானவியல் கண்காணிப்புகள், பெருவெடிப்பில் எஞ்சியவை போன்றவற்றை லூப் குவாண்டம் ஈர்ப்புக் கோட்பாட்டின் கணக்குகள் கொண்டு ஆராய்வது அந்தக் கோட்பாட்டை நிரூபணம் செய்யும் முடிவுகளை அடைவதற்கு நல்ல வழிமுறையாகும்.

மற்றொரு குவாண்டம் ஈர்ப்பு ஆய்வுக்கான தளம் எனக்குத் தனிப்பட்ட வகையில் ஆர்வமூட்டக்கூடியது – கருந்துளை. அண்டம் முழுவதும் கருந்துளை நிரம்பியிருப்பதை நாம் அறிவோம். சிறியதும் பெரியதுமாகப் பல கருந்துளைகள். முப்பது வருடங்களுக்கு முன்னர் அண்டத்தில் இவை இருப்பதை நாம் அறியவில்லை. தற்பொழுது அண்டம் முழுவதும் மிகப்பெரிய கருந்துளைகள் குவாண்டம் கோட்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் சாத்தியங்கள் உள்ளன. அவை வெடித்துச் சிதரும்போதும் ஆவியாக காணாமல் போகும்போதும் சிறு தடயங்களை விட்டுச் செல்லும்.

கருந்துளையிலிருந்து வெண்துளையாக மாறும்போது வெளியாகும் கதிர்களை ஆய்வு செய்யும் வழிமுறையில் என் சகாக்களுடன் ஈடுபட்டு வருகிறேன். இது போன்ற கதிர்களை முன்னரே கவனித்திருந்தாலும் தெளிவான முடிவுகளை எட்ட முடியவில்லை. ஆய்வுகள் முன்னேறியபடி உள்ளன. நாம் இன்னும் சென்று சேரவில்லை என்றாலும் எங்கும் முட்டியும் நிற்கவில்லை .

நான் ஆய்வு மாணவனாக இருந்தபோது தத்துவ நோக்கில்லாததால் பல புதிய தரிசனங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கிறோம் என சந்தேகித்திருக்கிறேன். இன்றைய விஞ்ஞான சொல்லாடல்கள் மிகவும் குறுகிவிட்டதாக நினைக்கிறீர்களா? நாம் சரியான கேள்விகளைக் கேட்கிறோமா?

இதில் நானும் உங்கள் பக்கம்தான். பெரும்பாலான நேரங்களில் முன்னேற்றம் விஞ்ஞான தர்க்கத்தில் இல்லாமல் கோட்பாடு சார்ந்தே இருக்கிறது. குறிப்பாக விஞ்ஞான வளர்ச்சியின் வரலாற்றையும் அங்கு நடந்த பெரிய பாய்ச்சல்களையும் பார்க்கும்போது இந்த எண்ணம் வராமல் இல்லை. நியூட்டன், ஃபாரடே, ஐன்ஸ்டீன், ஏன் மாக்ஸ்வெல் அல்லது ஷ்ரோடிங்கர் அல்லது ஹைசென்பர்க் என யாரை எடுத்துக்கொண்டாலும் சரியான சமன்பாடு கண்டுபிடித்தது மட்டுமே மிகப்பெரிய பாய்ச்சலாக மாறவில்லை. பெருமளவு நேரங்களில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் அணுகுவதால் பிரச்சனையின் அடிப்படை மாறிவிட்டிருந்தது. இதுவே அவர்களது வெற்றி. விஞ்ஞானத்தில் முன்னேற்றம் என்பது நமது மூளைகளை திறந்து வைத்திருப்பதால் மட்டுமே உருவாவதல்லாது துறை அதிநிபுணத்தனத்தால் உருவாவது அல்ல எனும் என் நம்பிக்கை மீண்டும் உறுதியாகி இருக்கிறது.

உங்கள் புத்தகத்தினால் ஆர்வமேற்பட்டு மேற்கொண்டு படிக்க நினைக்கும் இளம் வாசகருக்கு நீங்க பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன?

நான் எல்லாவற்றையும் படிக்கும்படி சொல்லுவேன். தன்னைச் சுற்றிலும் கவனிப்பதுடன் தொடர்ந்து படிப்பது மட்டுமே நம் அறிவைத் திறக்கும். நான் சிறு வயதில் வரையறை இல்லாமல் சகலத்தையும் படிப்பவனாக இருந்தேன். ஒரு இளைய வாசகன் தன்னை மெலிதாகக்கூட ஈர்க்கும் எல்லாவற்றையும் படித்து மூளையில் ஏற்றிவிடவேண்டும். பின்னர் மறந்துவிடும் என்றாலும் உள்ளே மூளைக்குள் எல்லாமே பயன்பாட்டில் இருக்கும், நாம் மறந்தால்கூட. நாம் படித்த அத்தனையையும் மறந்தபின் எஞ்சி இருப்பதுதான் கலாச்சாரம் என யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி: The Spectator

 

 

 

அழகு – வான்மதி செந்தில்வாணன் கவிதை

வான்மதி செந்தில்வாணன்

அன்றைய சூர்யோதயத்தில்
பின்கொசுவப் புடவையை
செக்கச்செவேலென்றிருந்த
தனது முழங்காலுக்குமேல்
தூக்கிச் செருகியபடி ஒயிலாகத்
தலையுலர்த்திக் கொண்டிருந்தாள்:
மழைக்கால மரக்கீற்று
வெளிச்சத்துளிகளை உதிர்ப்பதுபோல்
வெண்சரடுக் கூந்தலிலிருந்து ஈரம்
மணிமணியாய் உதிர்ந்து கொண்டிருந்தது.
சற்றைக்கெல்லாம்,
கிளைத்துப் படர்ந்த
நரைமயிர்களினூடே மெதுமெதுவாய்
ஊடுருவிக் கொண்டிருந்தது
சிறு வெளிச்சக் கீற்று.
ஆஹா,
சூர்யோதயத்தின் கீழ்
தென்னைகள்தான் எவ்வளவு அழகு.

இரு பாதைகள்- ராபர்ட் பிராஸ்ட்டின் ‘தி ரோட் நாட் டேக்கன்’, மந்திரம் தமிழாக்கம்

‘The Road not Taken’, by Robert Frost

தமிழாக்கம் : மந்திரம்

மஞ்சள் சிந்தும் காலை வனத்தில் இரண்டு பாதைகள் பிரிகின்றன,
ஒரு பயணத்தை இரண்டு பாதைகளிலும் நிகழ்த்த சாத்தியமில்லை,
காத்திருக்கும் பயணி போல் நின்று கொண்டே இருக்கிறேன்.
கிடையாய் நீளும் பாதையில், மரங்கள் கோடுகளாகும் தூரம்
முதல் வளைவு வரை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாதங்களின் சுவடுகளை எதிர்நோக்கும் இந்த புல்வெளி பாதை
இயல்பாக ஒன்றை போலவே இருக்கும் மற்றொன்றானாலும்,
என் தேர்வு சிறந்தது என உணர்கிறேன்.
ஆனால் கடந்து செல்லும் வேளையில்
சிறுதடங்கள் பதிந்துள்ள இதுவும் மற்றதை போலன்றி வேறில்லை.

பாதத் தடங்களால் கசங்கியிராத பச்சை இலைகளை
இரு பாதைகளும் அணிய வைத்திருக்கின்றன காலை மரங்கள்.
தவறவிட்ட ஒன்றை இன்னொரு நாள் துவங்கலாம்.
அடுத்து அடுத்துச் செல்லும் இப்பாதை, துவங்கிய புள்ளியை
மீண்டும் அடைவதன் சாத்தியம் நோக்கி நடக்கிறேன்.
அங்கு போவதன் சாத்தியம் சந்தேகமாய் விரிய முன்னகர்கிறேன்.

நாட்களும் நேரங்களும் கடந்து சென்று ஒரு பொழுதில்
தீர்மானமில்லாத என் தேர்வை பற்றி நான் சொல்லுவேன்,
காட்டில் பிரியும் இரு பாதைகளும் நானும் சந்தித்தோம்.
தடங்கள் அதிகம் பதியாத அந்தப் பாதையில் கால் பதித்தேன்,
இவ்வாழ்வின் மாற்றங்கள் அந்தப் புள்ளி உருவாக்கியது.

(1923ஆம் ஆண்டு வரை (அவ்வாண்டு உட்பட) அமெரிக்காவில் முதற்பதிப்பு கண்ட படைப்புகளை 1.1.2019 முதல் சட்டப்படி யாரும் என்னவும் செய்யலாம் (ஆனால் விமரிசகர்களுக்கு எப்போதும் போல் அதன் கலைத்திறன் குறித்து கேள்வி கேட்கும் உரிமை உண்டு), அப்படைப்புகளுக்கான காப்புரிமை பொதுவெளிக்கு வந்து விட்டது. இதைக் கொண்டாடவே, அமெரிக்க கவிதைகளில் மிகச் சிறந்த ஒன்றான ராபர்ட் பிராஸ்டின் இக்கவிதை தமிழுக்கு வந்திருக்கிறது). 

தழலாட்டம்- கமல தேவி சிறுகதை

கமல தேவி

சந்தியா விடியலில் எழும்போது இரவு சரியாக உறங்காத அயர்வு எஞ்சியிருந்தது. தலையின் பின்புறம் குறிப்பிட்ட இடத்தில் மெலிதாக எதோ அடைத்த உணர்வு அவளுக்கு எரிச்சலைத் தந்தது. சில மாதங்களாக அவள் எழும்போதே தலைவலியும் எழுந்து கொள்கிறது. தலை வலிக்கிறது என்ற உணர்வு நாள் முழுவதும் இறக்கி வைக்க முடியாத சுமையாக கனத்துக் கொண்டேயிருக்கிறது.

இந்த சில மாதங்களில் அவள் தலைவலியைவிட, அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது அல்லது யாருக்கும் புரிய வைக்க முடியாது என்று நன்றாக உணர்ந்திருந்தாள். எந்த வலியுமே அவ்வாறுதான் என்று சந்தியா உணர்ந்தபின் மற்றவர்கள் மீதான ஆதங்கமும், வலியை வெளியே சொல்வதும் குறைந்தது.

மார்கழியின் குளிர் அறைக் கதவைத் திறக்கத் தயங்க வைத்தது. தலையில் ஸ்கார்ப்பைக் கட்டிக்கொண்டு கதவைத் திறந்தாள். காத்திருந்த குளிர் சட்டென்று அறைந்து பரவியது. வெளியில் நின்று மேற்கே பார்த்தாள். ஒரு தடயமாகக்கூட கொல்லிமலைத்தொடர் கண்களுக்குத் தெரியவில்லை. வெண்நிற புகையாய் பனி சூழ்ந்து நாடி நரம்புகளை விதிர்க்கச் செய்தது. விறுவிறு என்று தலையில் வலி பரவி பின் மெதுவாகக் குறைந்தது.

சந்தியா கனவில் இருப்பது போன்று கிளம்பி அம்மாவுடன் பேருந்து நிறுத்தத்தை அடையும் நேரத்திலும் குளிர் அப்படியே இருந்தது. மக்கள் மந்திரக்கோலால் ஆளப்படுபவர்கள் போல நின்றிருந்தார்கள். ஆலமரத்து காளைகள்கூட கூலத்தின் மேல் அசையாமல் படுத்திருந்தன.

பக்கத்தில் மணல் மாட்டுவண்டிகளை ஓட்டும் ஒட்ட நாய்க்கர்கள் காளைகள் கழித்துப்போட்ட கூலத்தையும், குச்சிகளையும், பேப்பர்களையும் போட்டுக் கொளுத்தி, தீயைச் சுற்றி அமர்ந்து கைகளை உரசி கன்னங்களிலும், மேல்கைகளிலும் தடவிக் கொண்டிருந்தார்கள். எரிப்பான்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தீயில் போடவும், தீ தாழாமல் எம்பிக் கொண்டிருந்தது. தீயில் மின்னிய அவர்களின் முகங்களில் சூடு தெரிந்தது. தீ எம்புவதும், கீழிறங்குவதும், காற்றில் சரிவதும், கலைவதும், சீறுவதுமாக நிலையில்லாமல் இருந்து கொண்டிருந்தது.

பச்சை தலைப்பாகை கட்டியிருந்தவர் தீயின் விளிம்பில் கைகளை விரித்துக்காட்டி, பழுப்பு தலைப்பாகைக்காரரின் கன்னங்களில் வைக்கப்போக, அவர் முகத்தைத் தள்ளிக்கொண்டு காவிப்பற்கள் தெரிய சிரித்தார். புன்னகைத்தபடி திரும்பிய சந்தியா, ‘அங்கே போய் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு அமர்ந்தால் எப்படியிருக்கும்?’ என்று நினைத்துக் கொண்டாள். அம்மா வேல்பீடத்தில் அமர்ந்து காளங்கன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தாள். அனைத்துமே தீ மாதிரிதானே என்று அவளுக்குத் தோன்றியது.

சந்தியா பையைத் திறந்து பணம், மருத்துவமனையின் அடையாள அட்டையை மீண்டும் சரிபார்த்தாள். தலைவலியால் குளிரிலும் அவளுக்கு வியர்க்கத் தொடங்கியிருந்தது. அவளுக்கு எங்காவது அமர்ந்தால் பரவாயில்லை என்று இருந்தது.

ஏற்கனவே வந்திருந்தவர்கள் கருங்கல் பலகை, வேல்பீடங்களில் அமர்ந்திருந்தார்கள். அருகிலிருந்த வண்டியின் கைப்பிடியை பிடித்தபடி நின்றாள். கால் மாற்றி, கால் மாற்றி சலித்து யாரையாவது தள்ளி அமரக் கேட்டு அமரலாம் என நகர்ந்த வேளையில் இருளில் பேருந்தின் ஒலி கேட்டது. முகத்தைச் சுளித்து மூக்கைத் தடவியபடி திரும்பினாள். தீயில் பாலித்தீன் ஒன்று புகைந்து கொண்டிருந்தது.

கடந்து செல்லும் குன்றுகளையும் வயல்களையும் எந்த நினைப்புமின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுநத்ததைத் தாண்டி காலிமனைகளாகவும், முள்முளைத்த காடுகளாகவும் மாறியிருந்த பெரிய ஏரியின் படுகையில் அரக்கனை துதிக்கையில் சுருட்டி எறியக் காத்திருக்கும் பிள்ளையாரைக் கண்டதும் அவளின் முகம் விரிந்தது.

ஒரு காலை முன் வைத்து பின்காலை ஊன்றி எழுந்து வெளிரிய நீலநிற இடையாடை பறக்க, தூக்கிய துதிக்கை அசுரனோடு காற்றில் நிற்க, கைகள் முன்பின்னாக வீசி நிற்கும் பிள்ளையாரின் வான் நோக்கிய முகத்தின் கண்கள் எப்படியிருக்கும், என்ற கற்பனை தெளிவாக பிள்ளையாரின் கண்களைக் காட்டாது மின்னி மறைந்தது. கிழக்கில் பச்சைமலைக் குன்றுகளில் இருந்து எழுந்த சூரியனைப் பார்த்ததும், ஆதவனும் நிலவென எழும் அழகிய மார்கழி என்று அவளுக்குத் தோன்றியது.

துறையூர் சாலைமாரியம்மன் கோவிலைத் தாண்டும்போதும் மீண்டும் தலைவலி என்று எதுவோ ஒன்று. அவளுக்கே ஐயமாக இருந்தது, நினைத்துக் கொள்ளும்போது வருகிறதா அல்லது அதிகமாகும்போது தெரிகிறதா என்று. பேருந்து நிலையத்தின் சிமெண்ட்  தரையில் ஏதோ ஒரு பேப்பர் அட்டையில் படுத்து கோணியைப் போர்த்தி சுருண்டிருந்த தாடிக்காரரைக் கண்டதும், இவருக்கெல்லாம் தலைவலி இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திருச்சி சாலையில் பயணிக்கையில் மனதில் பதட்டம் வந்து போனது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க எவ்வளவு நேரமாகும்? அதில் என்ன முடிவுகள் தெரியும், என்று மனம் நினைத்து அலைபாய்ந்து கொண்டேயிருந்தது.

அலைபேசியை எடுத்து, ‘யூஸ் ஆஃப் எம்.ஆர்.ஐ,’ என்று எழுதிவிட்டு தேடுதலுக்கு தொடாமல் தயங்கினாள்.  “நெட்ல சர்ச் பண்ணாதீங்க,” என்று மருத்துவர் சொன்னது நினைவுக்கு வந்ததும் பின்வாங்கினாள்.

மணச்சநல்லூர் இரட்டைக் கால்வாய் மெதுவான ஓட்டத்திலிருந்தது. எங்கு பார்த்தாலும் நெல்லறைக்கும் ஆலைகள். குனிந்து பாதை ஓரத்து பாசன வாய்க்கால்களைப் பார்த்தபடி எண்ணத்தில் ஆழ்ந்தாள். குளிர் விட்டு வெயில் தெரியத் தொடங்கிய நேரத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார்கள்.

மாநகரப் பேருந்தில் மாரீஸ் தியேட்டர் தாண்டும்போதே கண்கள் சிக்னலைத் தேடித் தவித்தன.

“ம்மா… அடுத்த ஸ்டாப்…” என்றாள்.

சிக்னலில் இறங்குகையில் அம்மா வேகமாக, “கண்டக்டர் அங்கன்னு சொன்னான்… ஒரு விவரம் தெரியுதா என்ன?” என்று புலம்பியபடி நடந்தாள்.

முன்னால் சந்தியா தெளிவற்று அலைபாய்ந்த கண்களை மூடித் திறந்து சூரிய வெளிச்சத்தை எதிர்கொள்ளாமல், உள்ளே மனம் எச்சரிக்கை எனப் பதற சாலையை குறுக்கக் கடந்து குறுக்குச் சாலையில் நுழைந்தாள். வலது ஓரத்தில் பெயர்ப் பலகைகளையும், கட்டடங்களையும் பார்த்தபடி கடந்தாள்.

“எங்கன்னு ஒழுங்காத் தெரியுமா… இல்ல அவனுக்கு போன் பண்ணட்டுமா?”

“இந்த சந்து தாம்மா… என்ன தொந்தரவு பண்ணாம வாங்க. பயப்படாதீங்க… பாத்துப் போகலாம்.”

“அந்த தள்ளுவண்டிக்காரங்கிட்டக் கேளு”

“சும்மா வாங்கம்மா…”

ஸ்கேன் சென்டரின் முகப்புத் தெரிந்ததும் ஏதோ ஒன்று மெல்லப் பறந்து மறைந்து, வேறு ஏதோ வந்து மனதில் அமர்ந்தது. கண்ணாடிக் கதவில் கை வைக்கும்போது அதன் அசைவு கலைக்க பின்நகர்ந்தாள். சக்கர நாற்காலியில் கைகளை மடக்கி தலை சாய்த்து விழிகள் வெறுமையாய், வயோதிகத்தில் குனிந்த உடலுடன் கடந்து செல்பவரை சந்தியா பார்த்தபடியிருக்க அம்மாவின், “உள்ளப் போ…” என்ற குரல் அவளைக் கலைத்தது.

அந்நேரத்திற்கே கர்ப்பிணிகளும் வயோதிகர்களுமாக கூடம் நிறைந்திருந்தது. வரவேற்பறையில் நின்ற மூன்று பேரும் வேலையில் சுறுசுறுப்பாக இருந்தார்கள்.

அம்மாவை அமர வைத்துவிட்டு சந்தியா அங்கு சென்றாள்.

கொஞ்சம் அழுந்திய மூக்கும், விரிந்த இதழும் கொண்டவள், “யாருக்கு எம்.ஆர்.ஜ?” என்றாள்.

சந்தியா கையிலிருந்த மருத்துவரின் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, “எனக்குத்தான் மேடம்,” என்றாள்.

அவள் புருவத்தை உயர்த்தி, ‘என்ன?’ என்னும் பாவனையில் பார்த்து, “என்ன பிரச்சனை,”என்றபடி எழுதினாள்.

“தலைவலி”

சீட்டை நீட்டியபடி, “எனக்கும்தாங்க… தலைவலி பெரிய பிரச்சனை,”என்று முகத்தை சுருக்கினாள்.

“ம். ஆனா இது வேற மாதிரி…”

“தெரியுங்க. தனியாவா வந்தீங்க…”என்றவளிடம் அம்மாவைக் காட்டினாள்.

பணம் செலுத்தியபின் வந்து அமர்ந்தாள். தண்ணீர் குடித்தபின் சுற்றிலும் பார்த்தாள். ஒரு நாளுக்கு இங்கு மட்டும் இத்தனை மக்களா என்று தோன்ற மீண்டும் ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். தன் முகம் சோர்வாகவோ, வேதனையாகவோ இருக்க வேண்டும் என்று சந்தியாவுக்குத் தோன்றியது. தன்னைப் பார்க்கும் கண்களில், முகங்களில் அது தெரிகிறது என்று நினைத்த அவள் முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். உதடுகளை சப்பிக்கொண்டு கண்களை சிமிட்டி முன்னாலிருந்த கண்ணாடிக் கதவை நோக்கிப் புன்னகைத்தாள்.

சந்தியா பெயர் சொல்லி அழைக்கப்பட அவள் எழுந்து சென்றாள்.

“இன்னிக்கு இனிமே நீங்க ஒரு எம்.ஆர்.ஐதான். இங்கயே இருங்க… எடுத்தறலாம்,” என்றவனிடம் தலையாட்டிவிட்டு அமர்ந்தாள். திரும்பித் திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அலைபசி அழைத்தது.

“இன்னும் இங்க வேல முடியாம ஹாஸ்பிடலுக்கு பேசி என்னப் பண்றது?”

“…”

“நான் சமயம் பாத்து பண்ணிக்கறேன்…” என்ற பின் நிமிர்ந்து கண்ணாடிக் கதவைப் பார்க்கத் தொடங்கினாள்.

அம்மாவின் அலைபேசி அழைத்து முடித்தது.

அம்மா, “அவன்தான் சொல்றானில்ல… போன் பண்ணி டோக்கன் போட்டா என்ன? எதுக்கெடுத்தாலும் பிடிவாதம்…” என்றாள்.

சந்தியா, “இல்லம்மா இன்னும் கொஞ்சம் நேரமாகட்டும். ஒம்பதுமணிக்கு மேலதான் கால் பண்ணனுன்னு போட்டிருக்கு…” என்றாள்.

“போன் பண்ணத் துப்பில்ல… எங்கிட்டநல்லா பேசு”

சந்தியா ஒன்றும்பேசாமல் அலைபேசியை காதில் வைத்தாள்.

“ஹலோ மேடம்… டோக்கன் போடனும்…”

“….”

“சாரி மேடம்… வலியோட பேசறவங்ககிட்ட இப்பிடித்தான் பேசுவீங்களா?”

“…..”

சந்தியா அலைபேசியை வைத்தாள்.

“பேசும்போதே அடிச்சும் பேசனும். பூனமாதிரி பேசினா?”

“சந்தியா… மிஸ். சந்தியா…” என்ற குரல் கேட்டு எழுந்தாள்.

“நீங்கதான் சந்தியாவா?”

“ஆமாம்…”

அவன் பின்னால் நின்ற இன்னொருவனிடம் கண் காட்டி வாய்க்குள் சிரித்தான். சட்டென்று அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“கொஞ்ச நேரம் இருங்க எடுக்கலாம்…”

“இன்னும் சாப்பிடல சார்… போயிட்டு வர்றோம்…”

“இல்லங்க… எடுத்துட்டுதான் போகனும்…”

அவள் பொறுமையிழந்து, “எம்.ஆர்.ஐ வெறும் வயித்தில எடுக்கனுன்னு அவசியமில்ல தானே சார். சாப்பிட்டுட்டு வந்திடறாம்,” என்றாள்.

“ஓ.கே,” என்றபடி நகர்ந்தான். அம்மாவுடன் இறங்கி தெருவில் நடக்கையில் சந்தியாவுக்கு மீண்டும் கண்கள் கூசியது. அந்தஇடத்தில் தெருக்கடை தவிர சாப்பிட ஒன்றுமில்லை. நடந்து அடுத்த மையப்பாதைக்கு வந்து சாலையை குறுக்காக கடக்கும்போது போக்குவரத்து முன்பைவிட அதிகமாக இருந்தது.

“எங்கனுதான் போவானுங்களோ இவ்வளவு வேகமா…” என்று பதறியபடிய அம்மா கூட வந்தாள்.

ஸ்கேன் எடுப்பதற்கு முந்தைய விளக்கங்களை அளித்தபின் அவன்  சிறுதட்டிகளால் ஆன அறையை காண்பித்துவிட்டு உள்ளே சென்றான். துப்பட்டாவை அவிழ்த்து வைக்கும்போது அவன் சிரித்தது நினைவிற்கு வந்தது. தலையை ஆட்டியபடி வெளியே வந்து ஊக்குகள் நகைகளை அம்மாவிடம் கொடுத்துவிட்டு உள்ளே போனாள்.

அவன் மறுபடியும், “எதாவது சின்னதான மெட்டல்கூட இருக்ககூடாது,”என்றபடி தன்வேலையை ஆரம்பித்தான்.

சட்டென்று உள்ளாடையின் சிறிய ஹீக் நினைவிற்கு வந்ததும், “ஒரு நிமிஷம்,” என்றபடி வெளியில் சென்றாள். மீண்டும் உள்ளே வரும்போது அவளுக்கு முகம் கடுகடுத்திருந்தது.

அவன், “இதில் ஏறிப் படுங்க. ஒரு இருபது நிமிஷம் ஆகும். அசையாம படுக்கனும். எச்சில் விழுங்கக்கூடாது. பயப்படாதீங்க… இங்கதான் இருப்போம்,” என்றபோது அவள் உடல் எந்திரத்தினுள் சென்றது.

அவளுக்கு தான் எங்கோ சந்துக்குள் மாட்டிக்கொண்டது போல இருந்தது. நெருக்கிப் பிடிக்கும் கரங்கள் போல… சுருங்கி நெருக்கும் அறை அல்லது சிறுவயதில் கல் தொட்டியில் மாட்டிக் கொண்டது போல என்ற நினைவு வந்தபோது வியர்த்தது. மெல்லிய இசை காதுக்குள் மிக மெல்லக் கேட்டது. கண்களை விரித்து மிக அருகிலிருந்த வெண்மையான பரப்பை பார்க்கத் தொடங்கியதும் பதட்டம் குறைந்தது. நேரம் பற்றிய நினைவு மறந்து அந்த இசை எங்கோ இருக்க, அவள் எங்கோ தனியாக அலைந்தாள்.

வலது காலில் தொடும் உணர்வு வந்ததும் சட்டென்று விழித்தாள்.

“தூங்கிட்டீங்களா?” என்றான். மனித முகத்தைக் கண்டதும் மூச்சை இழுத்துவிட்டாள்.

“மாத்திர போட்டதுனால…” என்றபடி இறங்கினாள்.

வெளியில் காத்திருக்கையில் மனதின் குதிரை கட்டவிழ்ந்து ஓடியது. குனிந்து அமர்ந்திருந்தாள்.

மீண்டும் அழைக்கும் குரல். உள்ளிருந்து வந்தஅவன், “ரைட் சைடுதானேங்க?”

“ம்”

உள்ளிருந்து ஒருவர் கையாட்டினார். உள்ளே சென்றதும் ஸ்கேன் ரிப்போர்ட்டை கொடுத்து, “ஜோஸ் தானே அனுப்பினார்…” என்றார். ஆமாம் என்று தலையாட்டினாள்.

அவர் சந்தியாவின் தோளில் தட்டி, “போய்ப் பாருங்க..”என்றபடி கணினி பக்கம் திரும்பினார். வெளியில் வந்தார்கள். வெளியே நல்ல வெயில். இடதுபுறம் சிறிய பெட்டி போன்ற சிமெண்ட் ஆலயத்தில் அமர்ந்திருந்த பிள்ளையாரின் கண்கள் நன்றாக தெரிந்தன. எட்டு வயது பிள்ளையின் கண்கள் என்று சந்தியா நினைத்துக் கொண்டாள்.

அவள் புன்னகைப்பதைப் பார்த்த அம்மா, “டாக்டருட்ட போகனுன்னுதான் இல்ல. உனக்கு போகப்போறன்னாலே எல்லா வலியும் சரியாப் போயிரும்…”என்று சிரித்தாள். எத்தனையோ முறை பார்த்தவை என்றாலும் இன்று புதியவை என பிள்ளையாரின் கண்களே சந்தியாவினுள் நிறைந்திருந்தன.