எழுத்து

​புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா

நரோபா

ஜீவா படைப்புலகம் வெளியிட்டுள்ள விஷால் ராஜாவின் முதல் சிறுகதை தொகுப்பு ‘எனும்போது உனக்கு நன்றி’ ஒன்பது கதைகளை கொண்டது. தொன்னூறுகளில் பிறந்து தமிழில் புனைவுகள் எழுதும் ஒரு தலைமுறை உருவாகியுள்ளது உவகையும் சற்றே பொறாமையும் அளிக்கிறது. தாராளமயமாக்கலுக்குப் பின்பான தலைமுறை எத்தகைய சிடுக்குகளை புனைவுகளில் கையாள்கிறது? தொழில்நுட்பம் புனைவில் ஏற்படுத்தும் விளைவுகள் என்னவாக இருக்கும்?  கிருஷ்ணமூர்த்தி, லூசிபர் ஜெ வயலட், விஷால் ராஜா, நாகபிரகாஷ், பாரதி என ஒரு வரிசை உருவாகி வருகிறது. விஷால் ராஜாவின் சிறுகதைகள் இறுக்கமான, செறிவான மொழியில் எழுதப்பட்டுள்ளன. கதைசொல்லி அல்லது மையப்பாத்திரம் உள்ளொடுங்கியவனாக, அதிகமும் பிறருடன் உரையாடாமல் தனக்குள் உரக்கச் சிந்திக்கும்/ விவாதிக்கும் தன்மையுடையவனாக இருக்கிறான். வேகத்தைக் கண்டு மிரட்சியடைகிறான். கதைமாந்தர்கள் பொருளின்மையால் மீள மீள சூழப்படுகிறார்கள். அச்சமும் தயக்கமும் கூச்சமும் நுண்ணுணர்வும் கொண்டவர்களால் நிரம்பியது அவருடைய கதையுலகம். பெரும் பிரியத்தை உள்ளத்தில் ரகசியமாக சுமந்தலைகிறார்கள். அவ்வகையில் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். ஒருவகையில் ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்து, நவீன தமிழிலக்கிய மையப் பாத்திரங்கள் உள்ளொடுங்கியவர்களின் குரலாகவே இருந்திருக்கிறது. சமூகத்தில் ஓங்கி ஒலிக்காத குரல்களே இலக்கியத்தில் ஆளுகையுடன் திகழ்கின்றன. அவர்கள் அலைக்கழிபவர்கள், கையறு நிலையில் முடிவெடுக்கத் திணறுபவர்கள், பொதுப் போக்கில் ஒழுக முடியாதவர்கள், பல வகைகளில் தாஸ்தாவெஸ்கி நாயகர்களை ஒத்தவர்கள்.

தொகுப்பின் முதல் கதை ‘கசப்பேறிய கோப்பைகள்’. நாகராஜ் எனும் கடைநிலை ஊழியன் மற்றும் கல்யாணி எனும் திருநங்கையை பாத்திரங்களாக கொண்டு பின்னப்பட்டுள்ளது. முதல் வாசிப்பில் எனக்கு அசோகமித்திரனின் ‘காந்தி’யை நினைவுறுத்தியது. ஏறத்தாழ அதே பேசுபொருள்தான்- காரணமற்ற வெறுப்பு, கசப்பு நம்முள் எப்படியோ தங்கி விடுகிறது. அன்பைப் போல் வெறுப்பும் தொற்றி பரவக்கூடியது. ஒரு கசப்பின் சுழற்சியை சொல்லிச் செல்கிறது கதை. நாகராஜிற்கு இருக்கும் திடத்தன்மை கல்யாணிக்கு இல்லை என வாசிக்கும்போது தோன்றியது. கல்யாணி அனுதாப உணர்விலிருந்து வார்க்கப்பட்டிருக்கிறாரோ எனும் ஐயம் எழுந்தது. கல்யாணி எனும் பாத்திரத்தின் வலுவின்மையின் காரணமாக இக்கதை எனக்கு நிறைவளிக்கவில்லை.

தொகுப்பில் உள்ள ‘நீர்க்கோடுகள்’ இதே போன்ற நிறைவின்மையை அளித்தது. அறக்குழப்பங்களும், ஊசலாட்டங்களும் கொண்ட ஆசிரியர் ஹென்றியின் பாத்திரம் வலுவாக உருவாகி இருந்தாலும்கூட, ‘மகள் வயதை ஒத்தவர் மீதான ஈர்ப்பு’ எனும் பழக்கப்பட்ட கதைக்களம் என்பதால் ஆர்வம் குன்றியது. ‘ஞாபகங்களின் கல்லறை’ லயம் கூடிய கவிதைக்கு அருகிலான நடையில் எழுத பட்டிருக்கிறது. ஆனால் கதையாகாத உதிரி துண்டுகளாகவே எஞ்சி நிற்கிறது.

கதாபாத்திரங்களின் பிரதேசம்’ ஜெயமோகன் தளத்தில் வெளியானபோதே வாசித்த நினைவிருக்கிறது. கற்பனையின் வலுவை நம்பி எழுதப்பட்ட கதை. எடுத்துக்கொண்ட கருவிற்கு நியாயம் செய்திருக்கிறது. வெவ்வேறு கதைகூறல் முறைகளை முயன்றிருக்கிறார் என்ற வகையில் சுவராசியமான வாசிப்பை அளிக்கிறது. ‘எனும் போது உனக்கு நன்றி’ வெவ்வேறு காதல் கதைகளின் ஊடுபாவு. ஒரு திரைக்கதைக்கான எல்லா வடிவ சாத்தியங்களும் கொண்டது. கதையே ஒரு காமிரா கோணத்தில் திரையில் காண்பிப்பது போல் வெட்டி வெட்டிச் சொல்லப்படுகிறது. நவீன கதைசொல்லிகள் பலரும் இந்த உத்தியைக் கையாள்கிறார்கள். தவறென்றோ இழிவேன்றோ அல்ல, எனினும் காட்சி ஊடகம் புனைவெழுத்தில் செலுத்தும் தாக்கம் என இதைக் கூறலாம். இக்கதை ஒரு மொட்டை மாடி குடியரட்டையில் கதைமாந்தர்களின் வெவ்வேறு வகையான காதலின் நினைவுகளைச் சொல்கிறது. ஆச்சரியமாக அவர்களின் காதல் கதைகளில் வன்முறை எட்டிப் பார்க்கவில்லை.

உடல்’ இத்தொகுதியில் உள்ள மற்றுமொரு நல்ல கதை. பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி நவீன தமிழிலக்கியம் மரணத்தை பற்றியும், அதன் அப்பட்டமான அர்த்தமின்மை பற்றியும் மீள மீள பேசுகிறது. வேறெவரையும் காட்டிலும் எழுத்தாளன் மரணத்தைப் பற்றி அதிகமும் எண்ணுகிறான், அஞ்சுகிறான். ‘கதாபாத்திரங்களின் பிரதேசம்’ மரணத்தின் வன்மத்தை நேரடியாக சித்தரிக்கிறது. ‘உடல்’ பரகாய பிரவேசம் போல் ஒன்று நிகழ்ந்து கதைசொல்லி அவன் விரும்பும், அவனை நேசிக்காத பெண்ணுடைய காதலனின் உடலுள் எழுந்துவிடுகிறான். நடைமுறை சாத்தியமற்ற தளத்தில் வைத்து ஒரு மெய்யியல் கேள்வியை விசாரணை செய்கிறார் விஷால். எது நான்? உடலா உயிரா? கதை அங்கிருந்து இந்தச் சலுகையை அனுபவிக்கலாமா எனும் அறக் கேள்விக்கு செல்கிறது. இக்கேள்விகளுக்கு எந்த தீர்மானமான விடையையும் அளிக்காமல், அல்லது எதிர்கொள்ள இயலாமல் தப்பித்துச் செல்கிறான் கதைசொல்லி. எளிய தீர்வுகளை நோக்கிச் செல்லாததே இக்கதைக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. விஷால் ராஜாவின் கதைகளில் ஒரு பொதுப்போக்காக இதைக் குறிப்பிடலாம். எனினும் இக்கேள்விகள் எரியும் தீவிரத்துடன், தத்தளிப்புடன் கதையில் பதிவாகிறது.

தொகுப்பின் இறுதி கதையான ‘விலகி செல்லும் தூரம்’ கொஞ்சம் அலைவுற்றாலும்கூட ஒரு நல்ல கதை. ஜேக்கப்பின் கதையாக துவங்கி ஹர்ஷத்தின் கதையாக சடாரென மாறிவிடுகிறது. நவீன வாழ்வின் சிதைவுகளிலிருந்து மீட்க நமக்கோர் மீட்பர் வரமாட்டாரா எனும் ஏக்கத்தின் வெளிப்பாடாக இக்கதையைச் சொல்லலாம். நெரிசலான சாலையில், குழப்பமான மனதுடன் நிற்கும் ஒருவனிடம், ‘உன்னை எங்கே கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்கிறேன் வா’ என ஜேக்கப் அவருடைய ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறார். இக்கதையின் மீட்பர் பெரிய மாயங்களை நிகழ்த்திக் காட்டவில்லை, ஆனால் நன்கறிந்த பாதைகளில் விளைவுகளின் மீதான அச்சத்தால் இருக்கும் துணிவின்மையை, வினாக்களை எதிர்கொள்ளும் தயக்கத்தை உடைத்து அவற்றை எதிர்கொள்ள உந்திச் செலுத்துகிறார். ஜேக்கப்பும் கூட முகம் வெளிறி தனிமையில் உழலும் சலிப்படைந்த ஒரு மீட்பர்.

இத்தொகுப்பின் சிறந்த கதைகள் என தயங்காமல் ‘குளிர்’, ‘மகிழ்ச்சிக்கான இரத்தப் புரட்சி’ ஆகிய கதைகளைச் சொல்வேன். குளிர்ந்து தோல் மரத்து போகும் அதிகாலையில் கதைசொல்லி தன்னைச் சுற்றி நிகழ்பவனவற்றை கதையாக்குகிறான். குளிர் என்பது இக்கதையில் indifferent coldness எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. நுண்ணுணர்வு கொண்ட ஒருவன் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தின் குரூரத்தை முதன்முறையாக உணர்ந்து அதிர்வதே கதை. வேண்டுமென்றே தெறிக்கும் வன்மம் அல்ல அந்தக் குரூரம், உண்மையில் அது ஒருவிதமான விட்டேத்தி மனோபாவம். ஆங்கிலேயர்கள் காலத்து தாது வருட பஞ்சங்களின்போது நிகழ்ந்த உயிரிழப்புகளைப் பற்றிக் கூறும்போது,. பிரித்தானிய அரசு கொன்றொழிக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு செய்ததல்லை, ஆனால் முடியரசின் குளிர்ந்த விட்டேதிதி மனோபாவத்தின் காரணமாக உயிரிழந்தவர்கள் இரண்டாம் உலகப் போரில் மரித்தவர்களை காட்டிலும் அதிகம் என்றொரு செய்தி உண்டு. ஆயுதமேந்த வேண்டும் என்றில்லை, கண்டுகொள்ளாமல் இருந்தாலே குத்திக் கொன்றுவிடலாம். ஈழ படுகொலை சார்ந்த ஒரு குற்ற உணர்வை எனக்கு இக்கதை சட்டென எழுப்பியது. முடிந்தவரை குளிரைப் பொறுத்துப் பார்த்த கதைசொல்லி, இறுதியில் தன்னைக் குளிரிலிருந்து பாதுகாக்க பையிலிருக்கும் சால்வையைத் துழாவுவதோடு கதை நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக சூழலே குளிர்ந்திருக்கும்போது, நாம் என்னதான் செய்துவிட முடியும்? குறைந்த பட்சம் குளிரில் நாம் விறைத்து மரத்து போகாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதையே கதைசொல்லியும் தேர்கிறான். ஏதுமற்றவனின் படைக்கலம் என சால்வை அவனை சூழ்கிறது. இக்கதை துல்லியமான சூழல் மற்றும் பாத்திரச் சித்தரிப்புகளால் முக்கியத்துவம் பெறுகிறது.

விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள். ‘எனும் போது உனக்கு நன்றி’ விஷ்வா, அதே கதையில் வரும் மோகன் என இப்பாத்திரங்களில் ஒரு தொடர்ச்சி திகழ்கிறது. ஹென்றியும் கூட அவருடைய மாணவி மீரா அவளாக வேறொருவனை காதலிப்பதைப் பற்றி சொன்னவுடன் ஆசுவாசம் அடைகிறார்.

காதல் விஷாலின் பெரும்பாலான கதைகளின் பேசுபொருளாக வந்திருக்கிறது. போர்ன் வெகு சகஜமாக புழங்கும் ஒரு தலைமுறையிலிருந்து எழுத வந்ததாலும், நவீன தொழில்நுட்பம் உணர்வு ரீதியான பிளவை நிகழ்த்துவதாக இருப்பதாலும் காமத்தை எழுதுதல் பின்னுக்குச் சென்று மீண்டும் காதலை எழுதுதலை இத்தலைமுறை கைக்கொள்ளும் என தோன்றுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்து மனிதர்கள் அன்னியமாதல், கேளிக்கைகளுக்கு அடியில் உள்ள வெறுமை, அதன் உள்ளுறையும் வன்முறை, பரபரப்பான துய்தல் வழியாக மகிழ்ச்சியை அடைய முனைவது என நவீன வாழ்வின் எல்லா சிக்கல்களையும் பேசும் இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’. செய்தி மொழி, உரையாடல், மனவோட்ட விவரணை என மொழி பல்வேறு வகையில் கற்பனையின் பாய்ச்சலுக்கு ஈடாக பிசிறின்றி வெளிப்படுகிறது. மென்பொருள் துறை பணிச் சூழலை பின்புலமாக கொண்ட இக்கதை பணிச்சூழல் சார்ந்து அன்றாட வாழ்வின் வெறுமை, அழுத்தம், அன்பிற்கான ஏக்கம் என பலவற்றை தொட்டு செல்கிறது. ஒரு தொழில்நுட்ப பூங்காவின் ஊழியர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைப் படையாக மாற்றப்படுகிறார்கள். துண்டு நிகழ்வுகளாக ஊழியர்களைப் பற்றிய கதையும், நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. அழுத்தங்கள் எல்லாம் ஒரு பெரு வெடிப்பில் சென்று முடிகிறது. இக்கதையில் வரும் எதிர்பாத்திரம் ‘மிஸ்டர் நோ ஐடி’ என்று அழைக்கப்படுகிறார். உலமயமாக்கலுக்குப் பின்பான வாழ்வில் அடையாள சிக்கல் வலுவாக காலூன்றி இருக்கிறது.

விலகி செல்லும் தூர‘மும், ‘மகிழ்ச்சிக்கான ரத்தப் புரட்சி‘யும் அதன் எதிரெதிர் அக நிலைகள் காரணமாக ஒன்றையொன்று நிரப்பி கொள்கின்றன. அப்படி என்ன பொருளின்மையைக் கண்டுவிட்டாய், என நம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கிறது. விஷாலின் கதைகள் பொதுவாக இவ்விரு புள்ளிகளுக்கிடையிலான ஊசலாட்டம் என கூறலாம். ‘விலகி செல்லும் தூரம்’ ஏறத்தாழ ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யின் அதே மனநிலையை பிரதிபலிக்கிறது ஆனால் பிந்தைய கதை சென்று சேரும் வெறுமையை அடையவில்லை. இந்த அழுத்தங்கள், அலைக்கழிவுகள் ஒன்றும் அத்தனை முக்கியமல்ல எனும் நம்பிக்கையுடன் நிறைவுறுகிறது. இத்தொகுதியின் மனவோட்டத்திற்கு ஒரு சமரச புள்ளியென ஜேக்கப் மற்றும் ஜானின் கதாபாத்திரங்களை கூறலாம். ‘மகிழ்ச்சிக்கான ரத்த புரட்சி’யில் வரும் நோ ஐடி ஒரு மீட்பரைப் போலத்தான் தோன்றுகிறான், சிக்கல்களுக்கான காரணங்களை வெளியில் அடையாளப்படுத்துகிறான், வெறுப்பை விதைக்கிறான், அதனால் மொத்தத்தையும் அழிவில் அமிழ்த்துகிறான். ஜேக்கப் சின்ன சின்ன நேசங்களை வெளிப்படுத்துகிறான், அவனிடம் பெரிய திட்டங்கள் கனவுகள் ஏதுமில்லை, சிக்கல்களின் ஊதிப் பெருக்கபட்ட பிம்பங்களை உடைக்கிறான். தால்ஸ்தாயின் ‘Where Love is God is’ கதையை மனம் நினைவு கூர்ந்தது.

இத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான குரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன்.

வதம் – பானுமதி. ந

 பானுமதி. ந

காலையிலேயே மிகுந்த கோபத்துடன் உதித்த ஆதவன் நாள் முழுதும் தன் கிரணங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தான். அவனின் தேர் உழுத வான வெளியில் துல்லிய நீல மேகங்களை உண்ணும் ஆசையில் பதுங்கிப் பதுங்கி வந்த வெண் மேகங்கள் அவனது சாரதியின் சவுக்கு பட்டு வீறிய வடிவங்களுடன் ஒதுங்கி ஒதுங்கி அசைவற்று சோர்வுடன் படுத்திருந்தன. தன் கோபம் எதனால் என்று அறியாமல் அவன் கடலுக்குள் தன்னையே தனக்கு ஒளித்துக் கொண்டு மறைந்தான். காற்று அவன் சினத்தில் தானும் கட்டுப்படுவது போல் எங்கோ ஒளிந்து கொண்டு விட்டது.

வழி தப்பிய தவிட்டுக் குருவி  அந்த மொட்டை மாடியில் உயர்ந்திருந்த குடிநீர் குழாயின் வளைவில் அமர்ந்து குரல் எழுப்பிப் பார்த்து பின்னர் சோகமாக அலைக்கழிந்தது. அத்தனை பறவைகள் சுகமாக இருப்பிடம் சேர இது மட்டும் தன் வழி மறந்த விதியை சாகேதராமன் நோக்கினான். ’ஒருக்கால் உன்னை அழுத்தும் பாரத்தை நீ தனியேதான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறதோ?’ அதன் கூட்டுப் பறவை வந்து அதை அழைத்துச் சென்றால் தனக்கு இந்தப் பிரச்சனையிலிருந்து விடிவு கிடைக்கும் என்றும் அப்படி எதுவும் நடக்காவிடில் தான் அந்தப் பிரச்சனையை எதிர் கொள்ள நேரிடும் என்றும் அவன் உளம் பதைத்தான்.  அதன் சினேகிதப் பறவையை அந்தப் பறவையைவிட இவன் எதிர்பார்க்கத் தொடங்கினான்.

இருள் கவிந்து பெருகியது. குரல் எழுப்பாமல் அந்தப் பறவை பறந்துவிட்டது. இவனை ஏமாற்றம் கவ்வியது. சலித்து நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். மிகத் தேசலான தேங்காயின் கால் ஓட்டில் ஒட்டியிருப்பது போல் நிலா காட்சியளித்தது. ’இன்று நாலாம் பிறையா? நாய் படாத பாடு படப் போகிறேன்.’

தன் எதிர்மறை எண்ணங்களும், அறிவிற்கு உடன்பாடில்லாத சிந்தனைகளும் அவனுக்கு வியப்பாகவும் இருந்தன. ஆனாலும் தன்னைக் குத்திக் கிழித்து, அந்த வதையில், வாதையில் தன்னை வாட்டிக் கொள்ளவே அவனுக்கு விருப்பம் மிகுந்தது.

வீணையில் அன்று ‘சலமேல ரா, சாகேத ராமா’ என்ற பாடலை அக்காவிற்கு அவளது வாத்தியார் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாராம். இரவு 3 மணிக்கு இவன் பிறந்ததால் இவன் ‘சாகேத ராமன்’. அந்த மார்க்க இந்தோளத்தை இன்று கேட்டாலும் இவனுக்கு மனதைப் பிசையும். பள்ளியில் இவனை ‘சாகேது பிஸ்கோத்து’ என்று கேலி செய்வார்கள். ’சாது கேது சூது’ என்று பாடுவார்கள். தன்னை ஏன் ‘ராமன்’ என்றோ, ‘ராமா’ என்றோ, ‘ராம்’ என்றோ கூப்பிட மறுக்கிறார்கள் இவர்கள் என்றெல்லாம் தோன்றும் இவனுக்கு. ஆனால் சொல்ல பயம். நிலையான தோழமையற்ற தனிமை அவனை படிப்பில் முன்னேறச் செய்தது. பேராசிரியர்கள்கூட இவனிடம் சந்தேகம் கேட்பார்கள். உடன் படிப்பவர்கள் விளக்கங்கள் கேட்பார்கள். ஆனால், யாருமே ஒட்டி உறவாடியதில்லை. தன்னை ஒரு சினிமா பார்க்கக்கூட ஏன் அழைத்ததில்லை யாரும்? ஏன் கர்ப்பக்கிரஹத்துக் கடவுளாக தன்னை ஒதுக்கி விட்டார்கள்? வேண்டிக் கொள்ள மட்டும்….  ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ பிரச்சனைகளைத் தீர்க்க மட்டும்… அசடு என்று என் முகத்தில் எழுதியிருக்கிறது போலும்!

சோபையற்ற நிலவைச் சுற்றி வெண்கரடி என மேகங்கள் சூழ்வதை சாகேத ராமன் பார்த்தான். ஆம், ஆம்.. கரடிதான். இவனின் சிறு வயதில் ஒருவன் கரடி வேஷம் கட்டிக் கொண்டு தெருவில் திடீரென வந்தான். பெரியவர்கள் பயந்து கொண்டே பார்க்க, குழந்தைகள் அலறிக் கொண்டே ஓடின. இவன் நினைத்தான், ’நான் எந்த வேஷம் போட்டு மனிதர்களை நெருங்கவிடவில்லை? நான் மனிதனா, கரடியா, குழந்தையா, பெரியவனா?  என் அறிவின் தகிக்கும் நெருப்பில் நானென்னையே வார்த்துக் கொண்டிருக்கிறேன் போலும்.’

‘யாருடன் நான் சாதாரணமாகப் பேசியிருக்கிறேன்? இல்லை, என்னிடம் தப்பில்லை. உலகில் பெரும்பான்மையினர் முட்டாள்கள். நான் என் தொழிலில் மேம்பட்டவன். எனக்கு என்ன குறை?’

‘குறைதான், என் மேதமை அடிபடப் போகிறது. என்னை கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கப் போகிறார்கள். நிமித்தங்களில் மட்டும் அறிவைச் செலுத்தாத தான் தான் இன்று நாலாம் பிறையையும், தனித்த பறவையையும் எண்ணிக் கலங்குகிறேன்.’

‘சாகேதன், உங்களுக்கு நெறையா வேலை. ஆனா, இந்த ப்ரபோசலை உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது. ஒரு ரெண்டு நாள்ல .. பிளீஸ் மேலேந்து ப்ரஷர்ப்பா’

தான் ஒரு கரடிதான் என இவன் மேலும் நினைத்தான். தேன் குடிக்க ஓடும், மதி மயங்கிய கரடி. ’உங்களை விட்டா யாரும் புரிஞ்சிக்கக்கூட முடியாது’ இது போறும் முட்ட முட்ட தேன் குடிக்க

இவன் சிந்தனையைக் கலைப்பது போல் மெட்டி ஒலி. ரமணி ஏன் இங்கே வருகிறாள் இப்போ? என் டேபிளைக் கொடைஞ்சிருப்பாளோ? என் வாதையை கொண்டாடப் போறா. அவளை மனசால வதச்சது தெரியாத மாதிரி நான் நடந்துக்கறேன்னு சொல்லுவோ.. எல்லார்ட்டயும் சாதாரணமா இல்ல, ரணமாத்தான்… என்று முடிக்காம விடுவோ…

“ஏன் இங்க தனியா உக்காந்துண்டு இருக்கேள்? சாப்பிடக்கூட வல்லியே?”

இவன் பதில் சொல்லவில்லை. ”என்ன பிராப்ளம், சொன்னாத்தானே தெரியும்?”

‘உனக்கு என்ன சொல்லணும் இப்போ? நீயும், சங்கரும் சாப்பிட்டாச்சோல்யோ? நை நைன்னு புடுங்காம போய்த் தூங்கு’

“எதுக்கு எரிச்சல் படறேள்? வாய் விட்டு சொன்னாத்தானே சல்யூஷன் சொல்லலாம்.”

அவளை எரிப்பது போலும் இழிவாகவும் இவன் பார்த்த பார்வை அவளை காயப்படுத்தியது. அப்படிப் பார்த்த பிறகு இவனையும் இவன் மனம் சாடியது. அவள் சொல்வது சரிதான்; ‘வதையும், வாதையுமான குணம் எனக்கு.’

“எனக்கு ஆப்பிள் க்ரீனும் தெரியும். பேரியம் நைட்ரேட்டின் ஃப்ளேமும் தெரியும். இன்னிக்கு உங்களுக்கு சி.பி.ஐயிலிருந்து வந்த நோட்டீசும் தெரியும்” என்றாள் ரமணி.

பளாரென கன்னத்தில் அறை வாங்கியது போல் இவன் உடல் அதிர்ந்தது. அவர்கள் தேன் நிலவில் நடந்த விஷயத்தை எத்தனை ஞாபகமாக இப்போ சொல்கிறாள்?

திருமணம் முடிந்த அன்றே அவர்கள் தேன் நிலவு பயணம். தனி கூபே அவளை நன்றாகப் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு இவன் தன் வேலையில் மூழ்கி விட்டான். ரமணிக்கு தானாகப் பேசவும் தயக்கம். ஆனாலும், மறுநாள் மாலையில் வெளியே போக இவன் அழைத்தபோது அவள் மகிழ்ந்து போனாள். நீலத்தகடு போன்ற ஏரியில் வண்ண வண்ண நிறப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கூடாரம் போல் தொங்கவிட்டிருந்த ஹனிமூன் படகுகள். ஏரியில் கரைகளிலிருந்தும் நீரூற்றிலிருந்தும் நலுங்கும் மின் சிதறல்கள். இனிமை இனிமையென மெருகூட்டிக்கொண்டெ மயக்கும் மாலை. அதற்குப் போட்டியாக மேற்கில் மறையும் கதிர்கள் மேகங்களில் எழுதும் காதல் கவிதைகள். வண்ண வண்ண நெசவுகள், நொடியில் நிறம் மாறும் கலவைகள். அப்பொழுதுதான் அவன் கேட்டான். ”அதோ, அந்த மேகத்தோட கலரை நீ என்னன்னு சொல்வ?”

அவள் சிரித்துக் கொண்டே ‘ஆப்பிள் க்ரீன்’ என்றாள்.

’நீஎன்ன கெமிஸ்ட்ரி எம்.ஃபில்? பேரியம் நைட்ரெட்ன்னு உனக்குத் தோண வேணாம்?’

”இயல்பா எல்லாரும் சொல்ற மாதிரிதானே நானும் சொன்னேன். பேச்சில எல்லாம் இப்படி வராது எனக்கு” என்றாள். அன்று இவன் அலட்சியமாக சிரித்த சிரிப்பு இன்றுவரை அவளுக்கு நெருஞ்சி முள். இன்று அதைப் பிடுங்கி இவனைக் குத்திவிட்டாள்.

இதைப் போல் எத்தனையோ? காயப்படுத்திய பிறகு தன்னை நினைத்து தானும் காயப்படுவான். இது என்ன வதம்? ஏன் அனைவரையும் சொல்லால் அடித்துக்கொண்டே இருக்கிறேன்? உன்னைவிட எனக்கு எல்லாம் தெரியும் என்று ஏன் உணர்த்திக்கொண்டே இருக்கிறேன்? நான் அப்படி மேம்பட்டவன் என்றால் இந்த கோர்ட் நோட்டீசுக்கு ஏன் உளைகிறேன்?

இவளை கரடியெனவே பயம் காட்டுகிறேன். அதன் இளிப்பை, முகச் சுளிப்பை சாமா போன்ற அண்டியவர்களிடம், தன் அறிவை வியக்கும் மேலதிகாரிகளிடம் ஆட்டுவிக்கும் கயிற்றையும் கொடுத்துவிட்டு அதை உணராத மௌடீகமாக மிதப்பில் நான் நடக்கும் நடப்பு.. அடேயப்பா! எல்லாவற்றிற்கும் தன்னையே சொல்லிக் கொள்வதில் இல்லை, தன்னையே கொல்வதில் மனிதனும், மிருகமுமாக… வாதை.

“உங்கள் மனம் கண்ணாடி போல் எனக்குத் தெரியறது. என்னை யாரும் குறை சொல்ல முடியாது என்ற உங்கள் மனப்பிம்பம் இன்று உடைந்துவிட்டது. நோட்டீசைவிட அதுதான் உங்களை பாதிக்கிறது. எம் பி எ கோல்ட் மெடலிஸ்ட் அதுவும் ஃபினான்ஸில் என்பதால் உங்கள் கிரெடிட் தீர்மானங்கள் தவறே ஆகாது என்ற ஆதர்சம் இன்று சிதைகிறது”

‘மேலே பேசாதே. நான் ரெகமண்ட் செய்தபடி நடந்திருந்தா இன்னிக்கு இந்த நோட்டீஸ் வர அவசியமில்லை.ஆனா, பாவிகள்…’

“உங்க பேர்ல தப்பு இல்லைன்னு எனக்குத் தெரியும். அதை க்ளியரா சொல்றதுக்கு வழி வகை செய்யணும் இப்பொ. அதை விட்டுட்டு சாப்பிடாம கொள்ளாம உக்காந்திருந்தா வந்த கடிதாசு இல்லன்னு ஆயிடுமா?”

‘என் காலம் பாத்தியா? உங்கிட்ட எல்லாம் பேச்சு கேக்க வேண்டியிருக்கு’

“விதி சேத்துப் போட்டிருக்கே! ஒண்ணு பண்ணுங்கோ! சாமி அலமாரி முன்னாடி நின்னு இவளை சீக்கிரம் அழைச்சுக்கோன்னு வேண்டிக்கோங்கோ. இதையும் கேட்டுட்டு ருத்ரம் ஆடலாம். நாளைக்கு காத்தால என் அண்ணா வரார். இந்த கோர்ட் சமாசாரமெல்லாம் பாக்கறத்துக்காக”

அவளை அப்படியே தரையில் சாய்த்து வதைக்க எழுந்தவன் அழுது கொண்டே அவளை அணைத்துக் கொண்டான். கரடிக்குப் பயந்த குழந்தை.

 

தி பிரின்செஸ் ஆஃப் புருண்டி – ஷெல் எரிக்ஸோன்

– ஆர். அஜய்-

‘லிட்டில்’ ஜான் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு காவல்துறை உயரதிகாரி வருகிறார். அவர் அங்கு வருமளவிற்கு இந்தக் கொலை பரபரப்பான நிகழ்வு இல்லையென்றாலும் ஜானின் பதினாறாவது வயதில் அவனை முதன்முதலாக கைது செய்தவர் என்பதால் இந்த வருகை. பேருந்தில் தன் பள்ளிக்கால வகுப்பறை கனவுக்கன்னியை காண்பவனுக்கு அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிறு திருப்தியை அளிக்கின்றன. ஆனால் பள்ளி நாட்களைப் போலவே இப்போதும் அவள் தன்னை சற்றும் பொருட்படுத்தாமல் இருப்பது, அவனை அடையாளம்கூட காணாதது அவன் மறக்க நினைப்பவற்றை மீண்டும் கிளர்த்தி, அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியை குலைக்கிறது. வெளியில் பாதுகாப்பாக நின்று கொண்டு உள்ளே எட்டிப் பார்ப்பது போல் உள்ள குற்றப்புனைவுகளில் இருந்து மாறுபட்டு அச்சமும், துன்பமும், இருளும் நிறைந்த தங்கள் புனைவுலகுகளுக்கு வாசகனை இட்டுச் சென்று, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளி, புலனாய்வு செய்பவர்கள் என அனைவருக்கும் மனிதத்தன்மையை அளித்து வாசகனை சலனப்படுத்தும் நுட்பங்கள் மோஸ்தராகி விட்டாலும், ஷெல் எரிக்ஸோனின் (Kjell Eriksson) ‘The Princess of Burundi’ நாவலில் விரவியுள்ள, எந்தக் கணத்திலும் உடையக் கூடிய மனங்கள், முறியக் கூடிய உறவுகள் நிறைந்திருக்கும் அதன் நொய்மைத்தன்மை அதனளவில் தனித்துவம் கொண்டதாக ஆக்குகிறது.

காலத்தின் நிறுத்தவியலா பயணம், அப்பயணத்தில் எதிர்பட்ட திருப்பங்களில், வேறொன்றை தேர்வு செய்திருக்கலாமோ என்று ஜானின் நினைவுகள் அவனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சிந்தனையை கிளர்த்துகின்றன. ஜானின் மரணத்தை பற்றிய செய்தியைப் படிக்கும் சக மாணவி அவன் மேல் தனக்கிருந்த ஈர்ப்பை நினைத்துப் பார்க்கிறாள். எரிக்ஸோன் இத்துடன் இதை விட்டிருந்தால் ஒரு வழமையான நிகழ்வாக மட்டும் இருந்திருக்கும். இந்தப் பெண்ணும் தனியாகதான் வசிக்கிறார் என்று நமக்குத் தெரிய வருகிறது. இப்போது காப்பகத்தில் உள்ள தன் பெற்றோரின் மனம் தெளிவாக இருந்த காலத்தில் அவர்களைச் சந்தித்த ஒரு சிலரில் ஜானும் ஒருவன் என்பதை நினைத்துப் பார்க்கிறார். ஜான் சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவனிடமிருந்து விலகியதும் தெரியவருகிறது. அந்த முடிவு சரியே என்றுதான் இப்போதும் அவர் நினைக்கிறார், ஆனால் அவருடைய இப்போதைய தனிமையும் பதின்பருவத்தில் இருந்த கனவுகளும், இன்றைய நிஜமும் முரண்படும் இடம் தரும் வலி அவருள் தன் முடிவு குறித்த சந்தேகத்தின் விதையை விதைக்கிறது. தாங்கள் பிறந்து வளர்ந்த நகரின் தெருக்களின் பெயர்கள் மாறுவது, தன் கண்முன்னே அந்நகரம் வேறுருவம் கொண்டு அடையாளம் தெரியாமலாவது குறித்து ஜானின் நண்பனும், வழக்கை விசாரிக்கும் அதிகாரியிடம் அங்கலாய்க்கின்றான்.

பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பிழைப்புக்காக விலகி வாழ்தல் துயரமானது என்பது உண்மையே. அதே நேரம் சொந்த ஊரிலேயே வசிப்பவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதும் இல்லை. தங்களை அறியாமல் மனதளவில் அங்கிருந்து விலக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த இடத்திற்கு அந்நியமாகிப் போவதிலும், அவர்களை அவ்விடத்துடன் பிணைக்கும் இறுதிக் கண்ணியான நினைவுகளும் துன்பம் நிறைந்ததாக மாறுவதிலும் உள்ள நகைமுரணை நாவலினூடே உணர முடிகிறது.

தம்பியின் மரணத்தால் தன்னிலை இழந்து பழிக்குப் பழி வாங்க அலையும், குற்ற வாழ்கையில் இருந்து வெளிவராத முரடனான ஜானின் அண்ணன் தம்பியின் நண்பன் மேல் சந்தேகம் கொள்கிறான். பேச்சுவாக்கில் தம்பி மனைவியின் நடத்தை குறித்து யாரோ சொல்ல, பற்றிக் கொள்ள வேறெதுவும் இல்லாததால் அதை நம்பி அவளிடம் சண்டை பிடிக்கிறான். இதுவரை ஒருவருக்கு ஒருவர் நட்பாக இருந்தவர்கள்தான் என்றாலும், ஜான் மீதுள்ள பாசத்தினால் மட்டும் இணைக்கப்பட்டவர்கள். இந்த துர்மரணத்தால் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஜானின் மகனை, தந்தை இறந்த அதிர்ச்சியோடு தாயின் நடத்தை குறித்து பெரியப்பாவின் குற்றச்சாட்டும் சேர்ந்து தாக்க, எந்த முடிவுக்கும் வர முடியாமல் தத்தளிக்கிறான். சிக்கலான பருவத்தை கடந்து கொண்டிருக்கும் அவன் வேறேதேனும் மோசமான முடிவை எடுக்கக் கூடும்.

தொலைகாட்சிகளில் வரும் புலனாய்வு அதிகாரிகள் போல் கிரேக்க தொன்மத்தில் ஆர்வம் கொண்டவர்களாக, ஒபேரா கேட்பவர்களாக இல்லாமல், பேருந்து ஒட்டுதல், தோட்ட வேலை செய்தல் போன்றவற்றை தேர்வு செய்யாமல், காவல்துறையை தேர்வு செய்த சாதாரணமானவள் நான், என்று ஜானின் கொலையை விசாரிக்கும் பெண் அதிகாரி தன்னை வரையறை செய்து கொள்கிறார். புலனாய்வில் ஈடுபடுபவர்களும் மிக நொய்மையானவர்களாகத்தான் உள்ளார்கள். திருமணமான சக அதிகாரி மீது ஈர்ப்பு கொள்ளும், தனி ஆளாக கைக்குழந்தையை வளர்க்கும் அதிகாரி, அது இட்டுச் செல்லக் கூடிய உறவின் அறம் குறித்து இரட்டை மனநிலையில் உள்ளார். வெறும் உடல் சார்ந்த தற்காலிக உறவை பேணலாமா என்று யோசிக்கிறார். அந்த ஆண் அதிகாரிக்கும் சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது, அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே பேச்சு வார்த்தை குறைந்து விட்டது, ஒருவரையொருவர் சீண்டக் கூடாது என்ற பயத்தில்/ விலகல் மனநிலையில் ஒன்றாக வசிக்கிறார்கள். குழந்தைப் பேறு உருவாக்கக்கூடிய மனச் சோர்வு, அது உருவாகக்கூடிய உளவியல் சிக்கல்கள் பற்றிய நுட்பமான சுட்டுதல் நாவலில் உள்ளது. வேறு மனித உடலின் அருகாமையை உணர்ந்து பல காலமாகி விட்டது என்பது மட்டுமே இந்த ஈர்ப்பிற்கான காரணமாக இருக்கக் கூடும். பெண் அதிகாரியும் இவ்வாறு தன்னைச் சமாதானம் செய்து கொள்ள முயல்கிறார். ஆண் அதிகாரி தான் பெண்களால் விரும்பப்படுபவனாக உணர்ந்து பல காலம் ஆகி விட்டதால், அப்படி விரும்பப்படுவதே, புதிய உறவில் ஈடுபடுவதைவிட அவரை அதிகம் கிளர்த்துவதாக இருக்கிறது.

நாவலின் இருண்மையான தொனியை உருவாக்குவதில் இத்தகைய உறவுச் சிக்கல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில கொலைகள், வன்முறைச் செயல்கள் நிகழ்கின்றன என்றாலும், அவற்றை, அவற்றில் உள்ள ரத்த விரயத்தை விட, எந்த பெரிய காரணமும் இல்லாமல் அவை நிகழ்த்தப்படுவதே கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய ஒருவனின் நடத்தை, ஜானின் அண்ணன் எடுக்கும் முடிவு – வாசகனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. ஒவ்வொரு வன்முறை நிகழ்வின் போதும் அதன் அர்த்தமின்மையை, அது மிக எளிதில் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய ஒன்று என்பதை வாசகன் உணர்கிறான்.

ஜானின் கொலை துப்புத் துலக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்படுவதுடன் வாசகனுக்கு முடிவு கிடைப்பதில்லை. ஜானின் மகன் மனதில் தாய் குறித்து எழுந்துள்ள சந்தேகம் தீருமா என்ற கேள்வி எழுகிறது. பதின் பருவத்தில் சின்ன குற்றச் செயல்கள்செய்ய ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தன் பாதையை மாற்றி நாற்பத்திரெண்டாவது வயதில் கொல்லப்படும் ஜான், அந்தப் பருவத்திலேயே தன் வழியைச் சரியாக தேர்ந்தெடுத்திருந்தால் அவனுக்கு இந்த துர்மரணம் சம்பவித்திருந்திருக்குமா என்றும் வாசகன் யோசிக்கலாம். இத்தனைக்கும் பெரும்பாலானோரைப் போல சராசரி மத்தியத் தர குடும்பத்தின் குழந்தைப் பருவம்தான் அவனுடையது, மற்றொரு திருப்பத்தில் அவன் சென்றிருந்தால், வேலை, குடும்பம், குழந்தை, வேலையிலிருந்து ஓய்வு, முதுமை, மரணம் என பெரும்பாலானோருக்கு கிடைக்கும் வாழ்க்கை அவனுக்கும் அமைந்திருக்கக் கூடும். ‘இவ்வாறு நிகழ்வதை தவிர்க்க நாம் என்ன செய்திருக்கக்கூடும் என்ற கேள்வியை அனைவரும் தம்முள் எழுப்ப வேண்டும்’ என்று நாவலில் ஒரு இடத்தில் காவல்துறை அதிகாரி கூறுவது தன் சக ஊழியரைப் பார்த்து மட்டுமல்ல, இதே கேள்வியை வேறு வேறு வடிவங்களில் தன் வாழ்வில் ஒரு சில முறையேனும் எதிர்கொண்டிருக்கும் வாசகனிடமும்தான்.

நாவலின் இறுதியில் அதிகாரி ஒருவர் சொல்லும் யோசனையின் தார்மீகமும்- கனவுகள் கலையாமல் பார்த்துக் கொள்வது முக்கியமா அல்லது அது எவ்வாறு நிறைவேறுகிறது என்பது முக்கியமா- விவாதத்துக்குரியதே. புலம் பெயர்ந்தவர்கள் அதிகரிப்பதற்கும் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று சொல்லும் காவல்துறை அதிகாரி, நிறவெறி கொண்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரின் இந்த எண்ணம் அவரை அந்த இடத்திற்கு கொண்டு செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

‘இப்போதுதானே எல்லாம் நடந்தது போல் உள்ளது, பின் எப்படி காலம் அவ்வளவு தூரத்திற்கு பின்னால் சென்றது’ என்று மத்திய வயதுடைய ஒருவர் தன் நினைவுகளினூடே அங்கலாய்த்தபடி அலைகிறார். ஜானின் கொலை நடந்து சில நாட்கள் கழித்து அது பற்றிய விசாரணை வளையத்தில் வரும் சில பதின் பருவத்தினர் ‘அது எப்போதோ நடந்தது அல்லவா’ என்று அந்த நிகழ்வை பற்றி அசட்டையாக குறிப்பிடுகின்றனர். ஒருவர் கை தவறிவிட்ட காலத்தை மீண்டும் சிறைப்படுத்த நினைக்கிறார், மற்றொருவர் அதை விசிறி எறிகிறார். காலத்தின் பெறுமானம் நம் வயதிற்கேற்ப மாறுகிறது, ஆரம்பத்தில் அதன் இருப்பையே உணராமல் இருக்கும் நாம் பின்னர் அதன் பின் ஓட வியர்த்தமாக ஓட ஆரம்பிக்கிறோம். இந்த பதின்பருவ குழுவிலும் ஒரு ஜானும் அவன் அண்ணனும், தோழர்களும் இருக்கக்கூடும், ஓரிரு பத்தாண்டுகள் கழித்து இதே கதை மீண்டும் நிகழக்கூடும்.ஆனால் காலம் அப்போதும் தன்னுடைய வழமையான தாள கதியில் முன் சென்று கொண்டிருக்கும், அதன் பயணத்தில் விட்டுச் செல்லும் சக யாத்திரீகர்களின் முகங்களும், பெயர்களும் மட்டுமே மாறுகின்றன, உணர்வுகள் அல்ல.

ஒளிப்பட உதவி – Reader. Writer. Nerd.

பின்-நவீனத்துவத்தை நோக்கி: இஹாப் ஹாஸனை முன்வைத்து ஒரு கருத்தாடல் – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

தமிழில் நவீனத்துவ, யதார்த்தவாத இலக்கியம் வலுவாக உள்ள நிலையில் அதன் மீது படைப்பு மற்றும் சிந்தனைத்தளங்களில் தமிழ்ச் சூழலில் தாக்குதல்களைத் தொடுத்து வந்தவர்கள் ரமேஷ்-பிரேம், எம்.ஜி.சுரேஸ், தமிழவன், எம்.டி.முத்துக்குமாரசாமி, அ. மார்க்ஸ் போன்றோர். ஜெயமோகன், சாருநிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் நவீன தமிழ் இலக்கியத்தில் மும்மூர்த்திகள் என்றொரு குரல் தமிழ்ச் சூழலில் ஒலிக்கிறது. அது வேடிக்கையான ஒரு மதிப்பீடாகவோ அல்லது சீரியஸான ஒரு மதிப்பீடாகவோ இருக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரை மூலம் நான் சீரியசாகவே தமிழ்ச் சூழலின் பின்-நவீன இலக்கிய மும்மூர்த்திகளாக ரமேஷ்-பிரேம், எம்.ஜீ. சுரேஸ், தமிழவன் ஆகியோரைப் பிரகடனம் செய்ய விரும்புகிறேன்.  ஆயினும் அவர்களின் படைப்புகளிலும் அநேகமானவை முழுமையான பின்நவீனப் படைப்புகளாகவன்றி பின்நவீனத்துவத்தை நோக்கிய படைப்புகளாகவே உள்ளன. தமிழ்ச் சூழலில் சாரு நிவேதிதாவும் கதைகூறலில் பின்-நவீன உத்திகளைக் கையாண்ட ஒருவர் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த பின்-நவீன மும்மூர்த்திகளோடு வேறு பலரும் படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கருத்துநிலைகளை தமிழ்ச் சூழலில் பேசியும் அதற்கான சோதனை முன்னோடிப் படைப்புகளை முன்வைத்தும் வந்துள்ளனர். எனினும் இவர்கள் அதிகமாக படைப்பிலக்கியம் குறித்த பின்நவீனக் கோட்பாட்டை தமிழ்ச் சூழலில் அறிமுகம் செய்வதை விடவும் அதற்கான படைப்பு முயற்சிகளை தமிழில் முன்னெடுப்பதிலேயே கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டனர்.

தமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்புகள் பெருக்கமுறவும் அதன் முழுமையான தன்மைகளோடு பரவலடையவும் வேண்டுமெனில், மிக முக்கிய பின்நவீனக் கோட்பாட்டாளரான இஹாப் ஹாஸனின் பின்நவீனக் கோட்பாடுகளும், அதுதொடர்பான அவரது ஆய்வுக் கருத்துகளும் நமது தமிழ்ச் சூழலில் போதியளவில் பேசப்பட வேண்டியுள்ளது. இவரது பின்-நவீனத்துவ சிந்தனைகள், ஆய்வுகள் குறித்து தமிழ்ச் சூழலில் ஒரு ஆழ்ந்த மௌனமே நிலவி வருகிறது. எம்.ஜி.சுரேஷின் “பின்நவீனத்துவம் என்றால் என்ன?“ என்ற நூலில் மட்டுமே அவருக்கு ஒரு சிறு இடம் வழங்கப்பட்டது. தமிழ்ச் சூழலில் பின்நவீனப் படைப்புகள் எந்தளவு வெளிவந்துள்ளன என அறிந்துகொள்ளவும் அது தொடர்பான ஒரு வாசகக் கருத்துநிலையை உருவாக்கிக் கொள்ளவும் இவர் போன்ற பின்நவீனக் கோட்பாட்டாளர்களின் சிந்தனைகள் பற்றிய அறிமுகமும் உரையாடலும் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் அவசியமாகின்றன.

50 க்கு மேற்பட்ட புத்தகங்களையும், 300க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதிய உலகின் மிக முக்கிய பின்-நவீனக் கோட்பாட்டாளர் பேராசிரியர் இஹாப் ஹாஸன். பின்நவீனத்துவம் குறித்த ‘Dismemberment of Orpheus’, The Postmodern Turn: Essays in Postmodern Theory and Culture’, ‘From Postmodernism to Postmodernity’, ‘Toward Concept of Postmodernism’ போன்ற இவரது கட்டுரைகள் சமகால பின்நவீன சிந்தனையில் மிகவும் கவனிக்கத்தக்கவையாகவும், மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்திய கட்டுரைகளாகவும் கருதப்படுவன.

பின்நவீனத்துவம் முன்வைக்கும் மிக முக்கிய கதையாடல்களையும், அதன் தன்மைகளையும் சரியானதொரு அர்த்தத்தில் விபரிப்பதில் இஹாப் ஹாஸன் பெரியளவில் பங்களிப்புச் செய்திருக்கிறார். இவரது விமர்சன எழுத்துகள் மற்றும் கட்டுரைகள் இலக்கிய கலாசாரத்திலும், கோட்பாட்டிலும் ஒரு பெருந்தாக்கத்தை உண்டு பண்ணின.

பின்-நவீன இலக்கியத்தின் தன்மைகளை நவீனத்துவத்தோடு ஒப்பீட்டு முதன் முதலில் சிறப்பாக வேறுபடுத்திக் காட்டினார். ரொபர்ட் ஸ்டோர் போன்ற சிந்தனையாளர்கள் கூட பின்-நவீனம் என்ற பதம் எப்போதும் தங்களைக் குழப்பும் ஒன்றாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இஹாப் ஹாஸன் அதனைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

நான் இந்த சொல்லுடன் மிகவும் பிணைந்திருந்து புதிய தோற்றப்பாடான அந்த இயக்கத்தை தெளிவுபடுத்த முயற்சித்தேன் என்று ஊகிக்கிறேன்”  என்று பின்நவீனக் கோட்பாட்டுக்கான தனது பங்களிப்பை இஹாப் ஹாஸன் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுவார்.

இஹாப் ஹாஸன் உருவாக்கிய நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைத் தெளிவாக முன்வைக்கும் இரட்டை எதிர்நிலை அட்டவணை மிகவும் புகழ்பெற்றது. அதுவரை எல்லோரையும் குழப்பிக்கொண்டிருந்த பின்நவீனக்கருத்தியலின் சரியான தன்மையை முதன் முதலில் இந்த அட்டவணையில் இஹாப் ஹாஸன் வரையறுத்தார். இதனால் அந்த அட்டவணை லிண்டா ஹட்சன் போன்ற உலகின் மிக முக்கிய விமர்சகர்களாலேயே அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் இக்கட்டுரை பல மறுபதிப்புகளைக் கண்டது.

நவீனத்துவத்திற்கும், பின்நவீனத்துவத்துக்குமிடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருந்த இரண்டு செங்குத்து வரிசையில் சில பக்கங்கள் அடிக்கடி மறுபதிப்புச் செய்யப்பட்டன

என்று இஹாப் ஹாஸனே தனது நேர்காணலொன்றில் அவரது இரட்டை எதிர்நிலை அட்டவணைக்கு கிடைத்த பரவலான அங்கீகாரம் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுதான் அந்த அட்டவணை:

நவீனத்துவம் பின்நவீனத்துவம்
புனைவுவாதம்/குறியீட்டுவாதம் டாடாயிசம்(கலைவேடிக்கை வாதம்)
உருவம் (மூடிய நிலை) எதிர்-உருவம் (திறந்தநிலை)
நோக்கம் விளையாட்டு
வடிவமைப்பு சந்தர்ப்பம்
அடுக்கு நிலை குலைத்துவிடல்
தேர்ச்சித் திறன் சோர்வுநிலை
தொடர்செயல்/ நிகழ்த்துகை கலை புறவயமானது/முற்றுக்பெற்ற ஆக்கம்
படைப்பு/ ஒட்டுமொத்தப்படுத்தல் சிதைவு/ கட்டுடைப்பு
ஒன்றிணைவு முரண்படல்
இருப்பு இன்மை
மையப்படுத்தல் சிதறடித்தல்
வகைமை/ எல்லைப்படுத்தப்பட்டது பிரதி பரஸ்பரம் சார்ந்திருத்தல்
பொருண்மை சார்ந்தது அலங்காரமானது
உருவகம் ஆகுபெயர்
விருப்பத் தேர்வு பலவற்றின் கலவை
வேர்/ ஆழம் மேல்பரப்பு
விளக்கவுரை/ வாசிப்பு எதிர்-விளக்கவுரை
குறிப்பீடு குறிப்பான்
கதையாடல் எதிர்க்கதையாடல்
தேர்ச்சியான சொற்கோவை சாதாரணமாக புழங்கும் சொற்கள்
அறிகுறி விழைவு
பௌதீக அதீதம் முரண்நகை
உறுதிப்பாடு உறுதியற்ற தன்மை

அவர் உருவாக்கிய இந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை நவீனத்துவத்துக்கும், பின்-நவீனத்துவத்துக்குமிடையிலான வேறுபாட்டினைத் தெளிவாக முன்வைப்பதோடு எது பின்-நவீன இலக்கியம் என்பதை ஒரு வாசகன் இலகுவில் அடையாளங் கண்டுகொள்வதற்கும், ஒரு எழுத்தாளன் பின்-நவீனப் பிரதிகளை உருவாக்குவதற்கும் அது மிகவும் உதவியாக அமைந்திருக்கிறது. இந்த அட்டவணையில் பின்-நவீனத்துவப் பண்புகளாக குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ்ச் சூழலில் ரமேஷ்:பிரேம், தமிழவன், எம்.ஜி. சுரேஷ், எம்.டி. முத்துக்குமாரசாமி போன்றவர்களின் புனைவெழுத்துகளில் வெளிப்பட்டு வருகிறது.

இந்த இரட்டை எதிர்நிலை அட்டவணை மொழியியல், இலக்கியக் கோட்பாடு, தத்துவம், மானுடவியல், உளப்பகுப்பாய்வு, அரசியல் விஞ்ஞானம் மற்றும் இறையியல் போன்ற துறைகளிலும் கூட கவனப்படுத்தப்பட்டு வருகிறது.

பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மேலும் மக்கள்மயப்படுத்துவதில் அக்கறை எடுத்துக்கொண்ட இஹாப் ஹாஸன் புதிய சொற்களை உருவாக்கவும் செய்தார்.

ஒரு தடவை பின்நவீனத்துவத்தின் சிறப்பியல்புகள் அல்லது தூண்டு விசை அல்லது பாணி பற்றி விபரிக்கும் போது நான் ‘indeterminance’ (உறுதியற்ற தன்மை) எனும் சொல்லை உருவாக்கினேன். இது ஒரு போதாமையான விபரணமாகவே இருந்தது. ஏனெனில், பூகோள அரசியல் சூழலில், பின்நவீனத்துவமானது மேற்கத்திய கலாசாரங்களில் மட்டுமன்றி, ஒவ்வொரு வகையினதும் (கலாசாரத்தினதும்) மையங்களுக்கும் விளிம்புகளுக்கும், விளிம்புகளுக்கும் விளிம்புகளுக்கும், மையங்களுக்கும் மையங்களுக்கும், இன்மைகளுக்கும் இன்மைகளுக்குமிடையிலான புதிய உறவுகளிலும் தொடர்புபட்டது. இது உலகமயமாக்கல்/ உள்ளூர்மயமாக்கலின் சிக்கலான மற்றும் புதிய சொற்றொடாரியல் ஆகும்“.

என்று அவர் தனது நேர்காணலொன்றில் குறிப்பிடுகிறார். பின்நவீனத்துவத்தின் இயல்பு பற்றி விபரிக்கும் போது அவர் உருவாக்கிய ‘indeterminance’ எனும் சொல் ஆங்கிலத்திற்கு ஒரு புதிய வரவாகவும், பின்-நவீனக் கோட்பாட்டின் மைய ஆன்மாவையே விபரித்துவிடுவதாகவும் இருந்தது.

பின்-நவீனத்துவம் குறித்து விபரிக்கையில் இஹாப் ஹாஸன் உருவாக்கிய இந்த ‘indeterminancy’ எனும் பதமானது பின்நவீனக் கோட்பாட்டின் முக்கிய போக்குகளான நிச்சயமற்ற அர்த்தம் (ambiguity),  தொடரறு நிலை (discontinuity)  பன்மைத்துவம் (pluralism), தற்செயல் தன்மை (randomness), கலகம் (revolt) நெறிபிறழ்வு ( perversion), சிதைவாக்கம் (deformation) போன்றவற்றுக்கு ஒரு கருத்தியல் வலுவை வழங்கியது.

அநேகமாக தமிழ்ச் சூழலில் பின்-நவீனப் படைப்பாளிகளின் புனைவெழுத்துகளில் இந்த குணாம்சங்கள் சில படைப்புகளில் ஓரளவும், சில படைப்புகளில் முழுமையாகவும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுரைகூட பின்நவீனம் குறித்த அவரது முழுக் கருத்தியலையும் கவனத்திற் கொள்ளவில்லை. இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில்தான் அது குறித்து எழுத முடியும்.

குறிப்பு: பின்-நவீனக் கோட்பாட்டுக்கான இஹாப் ஹாஸனின் முழுமையான பங்களிப்புக்காகவே அவரது மரணத்தை ஒட்டி இரங்கல் செய்தி வெளியிட்ட nytimes.org எனும் இணையத் தளம் ‘Father of postmodernism dies at 89’ என இரங்கல் குறிப்பு வெளியிட்டது.

கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் – சுரேஷ் பிரதீப்

சுரேஷ் பிரதீப்

அக்கா வீடாகவே இருந்தும் வீட்டு முற்றத்தில் யாரும் இல்லாதது உள்ளே செல்வதற்கான ஒரு தயக்கத்தை அளித்தது. காலர் வைத்த நைட்டி அணிந்தபடி விமன்யா எதிர்பட்டாள். என் தயக்கத்தை பார்த்து சிரித்தபடியே என் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமல் “ம்மா” என சத்தமாக அழைத்தாள். பள்ளிச் சீருடை தான் அவளை எடுப்பாக காட்டும் ஒரு உடை. மெலிந்து உயர்ந்த பெண்களின் முகம் எவ்வளவு திருத்தமாக இருந்தாலும் அவர்களின் அசைவுகளில் ஒரு கவர்ச்சியின்மையும் நம்பிக்கை குறைவும் வெளிப்படவே செய்கிறது. போட்டுப் பழகிய சீருடையிலேயே சற்றே மிளிர்வு தெரியும் அவளிடம்.

அக்கா கூடத்தின் இடப்புற அறையில் இருந்து மூக்கை ஊறிஞ்சியபடி வெளியே வந்தாள். கார்த்திகாவின் மீது கடுமையான துவேஷம் எழுந்தது. அவளுக்கும் என் அக்கா வயது தான் இருக்கும். விமன்யாவை விட பெரிய பெண் ஒருத்தி அவளுக்கு இருக்கிறாள். ஆனால் அவளிடம் இன்னமும் இளமை தீரவில்லை. அக்காவின் முகம் பழுத்துச் சிவந்திருந்தது. வழக்கம் போல் இடக்கையால் தலையை சொறிந்த படி “தம்பி வாடா” என்றாள். அவள் தலையில் கை படும் போது உதடு வலது ஓரத்தில் லேசாக சுளித்துக் கொள்ளும். அவ்வழகை கார்த்திகா என்றுமே தொட்டு விட முடியாது என மனம் ஆசுவாசம் கொண்டது அல்லது கொள்ள விழைந்தது.

ஜீவா வந்து மேலே ஏறிக் கொண்டான்.

“என்னா மாமா” என இழுத்தான்.

“என்னா மாப்ள” என நானும் இழுத்தேன். அவன் என் தலையில் ஏறிக் கொண்டு பேன் பார்க்கத் தொடங்கினான்.

“அபபா இல்லையாடி” என்றேன்.

“இல்ல மாமா” என்ற விமன்யாவின் விழிகளில் என்னிடம் சொல்ல ஏதோ எஞ்சி இருந்தது.

“என்னடி” என்றேன்.

“உங்க போன வேற யாரும் எடுக்க மாட்டாங்கல்ல” என்றாள். அதிர்ந்த மனதை கட்டுப்படுத்தி “ஓ நீயா அது. வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்றது இந்த கொரங்குன்னு நெனச்சேன்” என ஜீவாவை கை காட்டினேன் அவள் அந்த நாசூக்கின்மையை வெறுக்க வேண்டும் என்ற உட்சபட்ச வேண்டுதலுடன். விமன்யா மேலே ஏதும் பேசவில்லை.

பசித்தது. அது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். “டின்னர் இங்க சாப்ட்றீங்களா மாமா” என்றாள். ஏற்பின் அசைவுகள் என்னுள் எழுவதற்கு நேரம் கொடுக்காமல் “கெளம்புறீங்களா” என்றாள். இவ்வளவு சிறிய பெண்ணுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு கூர்மை என எண்ணும் போதே பதினைந்து பெண்ணுக்கு சிறு வயது அல்ல என்றும் தோன்றியது. பல பெண்களிடம் ஆடுவது தான் என்றாலும் அச்சிறுமியிடம் அவ்விளையாட்டை நிகழ்த்த மனம் ஒப்பவில்லை. அவள் எதிர்பார்க்கும் சங்கட உணர்வை முகத்தில் நிலைக்க விட்டால் என்ன என்று கூட ஒரு கணம் தோன்றியது. ஆனால் உள்ளுக்குள் ஒன்று தீர்மானமாக அதை மறுத்தது. நல்லவேளையாக “தூங்குற நேரத்த நீ எப்படி கொறச்சுப்பன்னு சொன்ன மாமா” என்றபடியே அக்கா வெளிவந்த அதே அறைக்குள் இருந்து வந்தாள் விமன்யாவின் தங்கை கீர்த்தி. எதை முதன்முறையாக கேட்டாலும் ஏற்கனவே அதை என்னிடம் கேட்டது போலத்தான் சொல்வாள்.

சிலரிடம் எச்சூழலிலும் ஒளியேற்றிவிடும் ஒரு தீ இருக்கும். கீர்த்தி அத்தகையவள்.

“ரொம்ப நேரம் தூங்கணும்னு அவசியம் இல்லடா. கண்ணுக்கு மட்டும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும். அதனால பஸ்ல போறப்ப வண்டில பின்னாடி உக்காந்து போறப்பவெல்லாம் கண்ண மூடிப்பேன்” என்றேன்.

“இப்ப நா கேட்டுட்டு தான இருக்கேன் நானும் கண்ண மூடிக்கிறேன்” என்று கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

திடீரென நினைவெழுந்தவளாய் “மாமா அந்த கதைய கண்டினியூ பண்ணே. தலமுடியும் துளிக் குருதியும்” என்றாள்.

குருதி என்ற வார்த்தையை அவள் உச்சரிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொல்லியிருந்தது எனக்கே மறந்து விட்டது. நெருங்கி நண்பர்கள் அனைவரின் ஒரேயொரு முடியையும் ஒரு துளி ரத்தத்தையும் எடுத்து பாடம் செய்து வைப்பவனின் கதை. யார் என்னிடம் அதைச் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் அதைக் கதையாக இன்னொருவரிடம் சொல்லும் வரை உள்ளுக்குள் ஏதோ அரித்துக் கொண்டிருந்தது. இப்போது கீர்த்தியிடம் கூட இயல்பாக சொல்லக்கூடியதாகிவிட்டது அக்கதை. விமன்யாவின் கடுப்பான முகத்தைப் பார்க்க எழுந்த இச்சையை மிகுந்த சிரத்தையுடன் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

“பஸ் ஸ்டாண்டுக்கு எப்படி மாமா போவீங்க” என இடை வெட்டினாள் விமன்யா.

“கீறி என்ன தூக்கிட்டுப் போகும்” என கீர்த்தியை கை காட்டினேன்.

“நானும் தூக்குவேன் நானும் தூக்குவேன்” என ஜீவா தலையில் இருந்து முதுகுக்கு இறங்கி விட்டான். விமன்யா மேலு‌ம் எரிச்சல் அடைவது தெரிந்தது.

“நான் பிரசன்னாவ வந்து விட்டுட்டு வரச் சொல்றேன்” என்றாள். அந்நேரம் அவள் மீது கடுமையான வெறுப்பு எழுந்தது. இவளுக்கு என்ன வேண்டும்? என்னிடம் என்ன சொல்ல விழைகிறாள்? நான் அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கிறாள்?

பிரசன்னா வந்தான். நெடுநெடுவென இருப்பவன். அப்படி மெலிந்து உயரமாக இருக்கும் இளைஞர்கள் தான் சாதிக்க தகுந்தவர்கள் என்ற ஒரு பொது புத்தி இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனால் விமன்யா போன்ற மெலிந்த பெண்கள் அப்படி நினைக்கப்படுவதில்லை.

“வர்றண்டி கீறி வர்றங்க்கா வர்றேன் மாப்ள” என ஒவ்வொருவராக விடைபெற்ற பிறகு “இது லைஂபோட பிககனிங் ஸ்டேஜ் விமி. பிகேவ் யுவர்செல்ப் ” என விமன்யாவிடம் சொல்ல வந்ததை முழுங்கி “சி யூ விமி” என்று மட்டும் சொல்லிவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஏறினேன். அப்படி அவளிடம் சொல்லாதது ஒரு ஆறுதலையும் அளித்தது.

பிரசன்னாவிற்கு பின்னே வண்டியில் நான் ஏறியதும் ஒவ்வொரு தெரு விளக்காக அணைந்ததை எட்டு மணிக்கே கடைத்தெரு காலியாகக் கிடந்ததை பிரசன்னா என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாததை பேருந்தில் ஏறிய பிறகே எண்ணிக் கொண்டேன். ஓட்டுநரையும் நடத்துநரையும் தவிர வேறு யாருமே இல்லாத பேருந்து மெல்லிய துணுக்குறலையும் மகிழ்ச்சியையும் அளித்தது யானையின் உட்புறம் இருப்பது போல . விளக்குகள் அணைந்திருந்ததால் அமர்ந்திருந்த நடத்துநரின் முகம் தெரியவில்லை. டிக்கெட் எடுத்து பிறகு பேருந்தின் மைய இருக்கை ஒன்றில் அமர்ந்தேன்.

எல்லா இருக்கையும் காலியாகக் கிடந்தும் என் இருக்கை ஓரத்தில் அவன் வந்து அமர்ந்தான். நான் ஏறிய பிறகு பேருந்து எங்குமே நிற்கவில்லை இவன் எப்படி ஏறினான் என்ற எண்ணம் எழுந்ததும் ஒரு பயம் பிடித்துக் கொண்டது. அந்த பயமும் பலமுறை ஏற்கனவே உணர்ந்தது போலவே இருந்தது. தமிழ்ச்செல்வி அக்காவின் வீட்டின் இருண்டு அகன்ற கூடத்தில் அவள் தனியே அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்ட போது எழுந்த பயம் அது. காட்சியை விட சத்தங்களே அதிக பயத்தை கொடுத்தது. அவள் குரல் அந்த குளிர்ந்த பெருங்கூடத்தின் எல்லா மூலைகளிலும் பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது நாய்கள் ஒன்றிணைந்து ஊளையிடுவது போல.

நம்பிக்கை இன்மையை மட்டுமே வெளிப்படுத்தும் உடலசைவுகளைக் கொண்டிருந்தான். அவன் செய்யப் போகும் ஒவ்வொன்றையும் முன்னரே என்னால் கணிக்க முடியும் எனத் தோன்றியது. அப்படி நான் கணிப்பவற்றையே அவன் செய்வது அவனை மேலும் வெறுக்க வைத்தது. அசிங்கமான ஏதோவொன்று காலில் ஒட்டியிருப்பது போல நெளிந்து கொண்டே இருந்தேன். அழகானவற்றால் அப்படி ஈர்த்து அருகில் வைத்துக் கொள்ள முடியாது.அவற்றால் சலிப்பு தட்டக்கூடும். ஆனால் வெறுக்கிறவற்றை நோக்கி எழும் ஈர்ப்பை எப்போதும் போல் அப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு பர்ஸை சட்டைப் பையிலிருந்து எடுத்தான். சில பத்து ரூபாய் தாள்கள் மட்டுமே இருந்த பழைய கிழிந்த பர்ஸ் அது. அதிலிருந்து இரண்டு பத்து ரூபாய் தாள்களை எடுத்து அந்த பர்ஸின் இன்னொரு மூலையில் சொறுகினான். அதனை ஒரு சிறிய நோட்டில் குறித்துக் கொண்டான். ஒரு பழைய தோளில் மாட்டக் கூடிய பை. அவன் அதைத் திறந்த போது உளராத துணிகளில் இருந்து வரும் ஊமை வாடை அடித்தது. பை முழுக்க புத்தகங்கள் சீரில்லாமல் கிடந்தன. வாசிக்கும் பழக்கமுடைய இன்னொரு பைத்தியம் என எண்ணிக் கொண்டேன். அனுவனுவாக அவன் மீது வெறுப்பு பெருகியபடியே வந்தது. கூர்மையற்ற மங்கலான முகம். தொப்பை வெளித்தள்ளத் தொடங்கி இருக்கும் உடல். எண்ணெய் வைக்காத தலை. முகம் முழுவதும் படராமல் அங்கொன்றும் இங்கொன்றுமென தென்பட்ட தாடி. என்னைப் பார்த்து அவன் லேசாக சிரித்த போது பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. அந்தப் குறுகிய நேரப் பயணம் எப்போது முடியும் என்றிருந்தது.

“சார்” என நான் கேட்டதிலேயே கேவலமான குரலில் என்னை அழைத்தான்.என் வயதோ என்னை விட சற்று மூப்பாகவோ இருக்கக்கூடியவன் என்னை அப்படி அழைப்பது மேலும் வெறுப்பேற்படுத்தியது.

ஒன்றும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

“நீங்க புரோகிராமரா” என்றான். எனக்கு திக்கென்றிருந்தது.

“இல்லை” என்றேன்.

“பொய் சொல்லாதீங்க பிரகாஷ்” என்றவனின் முகம் கணம் கணம் மாறுவது போல இருந்தது.

“எப்படித் தெரியும்?” என்றேன்.

“என்னத் தெரியலையா” என்றவனின் முகத்தை எங்கோ பார்த்தது போல் இருந்தது. இருந்தும் அம்முகத்தை நான் நினைவுமீட்ட விரும்பவில்லை.

மேலு‌ம் சிலர் பேருந்தில் இப்போது அமர்ந்திருந்தனர். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். என்னையறியாமலே அவன் யார் என நான் ஊகித்திருந்தேன். விசித்திரமாகத் தோன்றினாலும் ஓட்டுநர் இருக்கை காலியாக இருந்தது எனக்கு எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பேருந்து விரைந்து கொண்டிருந்த போதே நடத்துநர் குதித்து விட்டார். அவர் மேல் பேருந்து ஏறி இறங்கியதால் ஏற்பட்ட குலுக்கலில் என் அருகே அமர்ந்திருந்தவன் முன் இருக்கையின் கம்பியில் இடித்துக் கொண்டான்.

“விமன்யாவ ஏன் தேவிடிச்சின்னு சொன்ன?” என்று அவன் குரலுக்கு வாய்க்கவே முடியாத கடுமையுடன் சொன்னான்.

“நான் சொல்லல” என்றேன். அவன் சிரித்தான்.

ஏதோ ஒரு உள்ளுணர்வில் திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கையில் விமன்யா அழுதபடி அமர்ந்திருந்தாள்.

“இப்ப என்னடா பண்ணனுங்கிற நீ” என்றேன் என்னுடைய வழக்கமான கடுமையுடன். பழகிய நாய் போல அவன் முகம் சுண்டியது. அது மேலும் தன்னம்பிக்கையை அளிக்கவே “அப்படி பேசினாத்தான் பதினஞ்சு வயசுலயே கண்ட நெனப்புலயும் அலையாம ஒழுங்கா படிப்பா. அதோட நான் தூக்கி வளத்த பொண்ணுடா அவ” எனச் சொல்லும் போது என் சொற்களின் நம்பிக்கை இன்மையை உணர்ந்து அவன் மீண்டும் சிரித்தான்.

“மரியாதையா இறங்கிப் போயிடு” என்றேன்.

ஒரு சிறிய ஊசியால் என் விரல் நுனியில் குத்தி ஒரு துளிக் குருதியை எடுத்தான். ஒரேயொரு முடியை மட்டும் லாவகமாக பிடுங்கினான். அச்செய்கை பால் புகட்டி விடுவது போல இருந்தது. பெருமூச்சுடன் எழுந்துகொண்டு மெலிதாக சிரித்தான்.

“இறங்கப் போறியா” என்றேன். அவ்வளவு கனிவுடன் அதை கேட்டிருக்கத் தேவையில்லை.

“ஆமா இதுக்குத்தான வந்தேன்” என்றேன்.

ஏதோ வருத்தம் நெஞ்சை அழுத்தவே “போகாதடா” என்றேன்.

படபடப்புடன் “ப்ளீஸ் டா பிரகாஷ் போகாத” என்றேன் மீண்டும்.

அவன் அமர்ந்தான்.

பிரகாஷ் மீண்டும் அந்தக் கதையை என்னிடம் சொன்னான். பலமுறை கேட்ட பலமுறை சொன்ன அதே கதை. அக்கதையை கேட்காமல் அதன் உச்சத்தில் திளைக்காமல் வதைபடாமல் அவனை என்னால் என்னிடமிருந்து பிரித்தனுப்ப முடிந்ததேயில்லை.

அந்தப் பழக்கம் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்டது. அப்பாவின் தலையில் இருக்கும் நரைமுடிகளை அம்மா அழகாகப் பிடுங்குவாள். “வெடுக்” என்ற சப்தத்துடன் அந்த முடிகள் பிடுங்கப்படுவது என்னுள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும். அந்த முடி பிடுங்கப்பட்டதும் அப்பா அம்மாவைப் பார்த்து மெலிதாகச் சிரிப்பார். இவ்வளவு அழகாக என் அப்பாவால் சிரிக்க இயலுமா? உலகத்தில் எந்த மனிதராவது இவ்வளவு அழகாக சிரித்துவிட முடியுமா? அச்சிரிப்பை அம்மாவுக்காக மட்டுமே சேர்த்து வைத்திருந்தார் போல. ஒருமுறை கூட அவர் அப்படி என்னைப் பார்த்து அப்படி சிரித்ததில்லை. என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாத ஒரு கருணை மட்டுமே அவர் சிரிப்பில் இருக்கும். அது என்னை துன்புறுத்தும்.

அப்பா அம்மாவையோ என்னையோ அடித்ததில்லை. மிக நிதானமாகப் பேசுவார். தூய கண்ணாடியின் கூர்மை கொண்ட பேச்சு. லாவகமாக வயிற்றுக்குள் இறக்கி உள்ளுறுப்புகளை அறுத்து ரத்தம் கொப்பளிக்க வைக்கும் பேச்சு. அவரின் நிதானமான பேச்சினை அழாமல் கேட்பது அம்மாவுக்கு மற்றொரு பாடு. ஒருவேளை அழுதுவிட்டால் அவர் தன்னையே துன்புறுத்திக் கொள்ளத் தொடங்குவார். அதனால் அம்மா அவரின் கண்ணாடிப் பேச்சுகளை நெஞ்சில் பொங்கும் அழுகையையும் ஆற்றாமையையும் பற்களில் தேக்கி உதட்டை கடித்தபடி கேட்டு நிற்பாள். அவள் திரும்பி நடக்கும் நேரங்களில் கண்ணீரோடு சில துளிகள் குருதியும் சிந்தும்.

நெற்றிப் பொட்டு போன்ற சத்து மாத்திரை கொடுப்பதெற்கென அரை நாள் பள்ளி வைக்கும் போது மருத்துவமனை அழைத்துச் செல்வார்கள். அரை கிலோமீட்டர் தாண்டி இருக்கும் மருத்துவமனைக்கு பின் கை கட்டியபடி வரிசையாகச் செல்வோம். சில நாட்களில் வலது கை ஆட்காட்டி விரலின் நுனியைப் பிடித்து ஊசியால ஒரு குத்து குத்தி ஒரு துளி ரத்தம் எடுப்பார்கள். அதனை ஒரு சிறிய செவ்வக வடிவ கண்ணாடி சில்லில் தேய்ப்பார்கள். குத்தும் போதிருந்ததை விட அந்த கண்ணாடி கையில் படும் போது உடல் கூசும்படியாக வலிக்கும். வரிசை முடியும் வரை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிச் சில்லுகளையே பார்த்து நிற்பேன். வரிசையாக அடுக்கப்பட்ட பொருட்களின் மீது ஒரு மோகம் உருவாகத் தொடங்கியிருந்தது அப்போது. அம்மா மௌனித்துப் போய்விடும் நாட்களில் என் உலகம் ஓடாமல் நின்று போய்விடும். அது போன்ற நாட்களில் பயன்படுத்தி தூக்கி எறியப்பட்ட தீப்பெட்டிகள் அப்பாவின் பிளேடு பாக்கெட்டுகள் கொட்டாங்குச்சிகள் அம்மாவின் உடைந்த கண்ணாடி வளையல்கள் என அனைத்தையும் அடுக்கியபடியே இருப்பேன். அது என் ரகசியப் பொழுது போக்கு. யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் இருப்பேன். அதோடு புளியங்காயை லேசாக வாயில் வைத்தால் வாய் நிறைய உமிழ்நீர் சுரந்து விடும். அதனை நூறு மிடறாக துளித்துளியாய் அருந்துவேன். இதுவும் பிறருக்குத் தெரியாது.

வரிசையாக அடுக்கப்பட்ட ரத்தம் தோய்ந்த கண்ணாடிச் சில்லுகளை பார்த்த போது மற்ற அனைத்தும் அற்பமாகத் தெரிந்தது.

“இதெல்லாம் என்னக்கா பண்ணுவீங்க” என்று ஊசியால் குத்தும் பெண்ணிடம் கேட்டேன்.

என்னை குறும்புடன் கூர்ந்து நோக்கியவள் “இந்த கிளாஸ் எல்லாத்தையும் வெந்நீர்ல போட்டா ரத்தம் எல்லாம் தண்ணிக்கு போயிடும். அதோட காபி பவுடர் கலந்து குடிப்போம்” என்றாள். எனக்கு வாயில் அந்த நீரை வைத்துக் கொண்டு மிடறு மிடறாக அருந்த வேண்டும் போலிருந்தது. தியாகராஜனிடம் அதைச் சொன்ன மறுநாள் முதல் என்னிடம் அவன் பேசுவதை நிறுத்தி விட்டான்.

ஆனால் என்னால் தான் முடியவில்லை. நான் முதலில் எடுத்ததே அவன் விரல் குருதியைத் தான். மறுமுறை மருத்துவமனைச் சென்ற போது குருதியற்ற கண்ணாடிச் சில்லுகள் கொண்ட பெட்டியை எடுத்து விட்டேன். ஒவ்வொரு ரூபாயாக சேர்ப்பது போல ஒவ்வொரு துளி குருதியாக எடுத்தேன். பெரும்பாலும் நண்பர்கள் தனிமையில் இருக்கும் போது தான் எடுப்பேன். ஒருவன் விரலில் எடுப்பதை மற்றவன் அறிந்துவிடாதபடி பார்த்துக் கொள்வேன். சில சமயம் எதேச்சையாக சில சமயம் மிரட்டி சில சமயம் பயமுறுத்தி என எப்படியெல்லாமோ குருதிச்சில்லுகளை சேகரித்தேன். என் காக்கி கால்சட்டையின் டிக்கெட் பாக்கெட்டில் இரண்டு சில்லுகள் எப்போதும் இருக்கும்.

யார் விரலில் என்றைக்கு எடுத்தேன் என்பதை ஒரு தனி நோட்டில் குறித்து வைத்துக் கொள்வேன். அந்த நோட்டையும் கண்ணாடிச் சில்லுகளின் பெட்டியையும் ஒரு பாலிதீன் பையில் போட்டு ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்தேன். குருதி எடுப்பதை விட முடி பிடுங்குவது எளிது. அதற்கும் தனி நோட்டு. முடிகளை முதலில் கோணி ஊசிகளில் கட்டி வைத்திருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல அந்த பழக்கம் குறைந்தது. முடிகளை நோட்டுப் புத்தகத்தில் வைத்து அது யாருடைய முடி என்று என்பதை குறித்து வைப்பேன். அப்படி குறித்த போது தான் கண்ணாடிச் சில்லுகளின் நினைவெழுந்தது. அதில் குறித்து வைக்கவில்லை என்றபோது திக்கென்றிருந்தது. பின்னர் ரத்தக் குறிப்புகள் எடுக்கப்பட்டிருந்த நோட்டைப் புரட்டி அடுக்கி வைத்திருந்த வரிசையையும் நோட்டில் குறித்திருந்த சீரியல் நம்பரையும் ஒப்பிட்டு நுனி விரலால் தொட்டெடுக்கக்கூடிய சிறிய காகித நறுக்கில் சீரியல் நம்பர் போட்டு ஒட்டி வைத்தேன். மிகத்தீவிரமாக ஒரு செயலில் நான் ஈடுபாடு கொண்டிருந்ததாக அது என்னை நம்ப வைத்தது. அதைத்தவிர அனைத்துமே அவசியம்றறது என எண்ணத்தலைப்பட்டேன். அம்மாவின் கடித்த உதடுகளும் அப்பாவின் கண்ணாடிப் பேச்சுகளும் எனக்கு பொருட்டல்ல என்றாயின.

கல்லூரி இறுதி ஆண்டுகளில் வீட்டிற்கு வரும் போது கண்ணாடிச் சில்லுகளின் வரிசை எண்ணைப் பார்த்து அது என்று எடுக்கப்பட்டது என்பதை நினைவு மீட்டுவதும் ஒரு இஞ்சில் இருந்து இரண்டு அடி வரை உள்ள மயிரிழைகள் யார் தலையில் இருந்து என்று எடுக்கப்பட்டன என எண்ணிக் கொள்வதும் என் தனிமையைப் போக்கும் முக்கிய பொழுது போக்குகள். வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தச் சில்லுகளை கண்களை மூடியபடி வருடுவேன். முடிகளின் மென்மையை விரல்களில் உணரும் போது உடல் சிலிர்க்கும்.

அதன்பிறகு நானே அறியாமல் நான் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தேன். முதலில் நான் செத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகே என் கனவுகளில் அவனை காணத் தொடங்கினேன். என் கனவில் வருபவனை எல்லோரும் விரும்பினர். அவன் யார் என அறிவதற்காக நான் வெகு நேரம் உறங்கினேன். வெகுநாட்கள் உறங்கினேன். உறங்கி எழுந்த போது நான் முழுமையாக இறந்து விட்டிருந்தேன். கண்ணாடிச் சில்லுகளும் கருங்குழல் நோட்டுகளும் எங்கோ புதையத் தொடங்கின. மீண்டும் அம்மாவின் கடித்த உதடுகள் கண்ணில் படத் தொடங்கியது.

பிரகாஷ் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் முகத்தில் அச்சமூட்டும் வெறுப்பு படர்ந்தது.

“ஒம்மால நீ தாண்ட என்னக் கொன்ன” என விபரீதமான குரலில் கத்தினான்.

எனக்கு தொண்டை அடைத்தது. விமன்யா இளித்தபடி எழுந்து சென்றாள்.

“இல்ல எனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது” என்றபோது எனக்கு அழுகை வந்துவிட்டது.

“உனக்கு ஒன்னும் தான் தெரியாதே. உங்கிட்ட எவ்வளவு சொன்னேன். என் கண்ணாடிகள உடைக்காத உடைக்காதன்னு. தேவடிப்பயலே கேட்டியாடா நீ. போட்டு ஒடச்சேல்ல. நீ ஒடச்ச பிறகும் எவ்வளவு கெஞ்சு கெஞ்சினே உன்னைய. அத அப்படியே கரச்சாவது என்ன குடிக்க வுட்றான்னு. வுட்டியாடா வுட்டியாடா என்னைய நீ” என்றபோது அவன் முகத்தில் அச்சமூட்டக்கூடிய உக்கிரம் படர்ந்தது.

நான் அவனைத் தடுத்ததாக நினைவில்லை.

“தட்டி விடலேன்னா நீ செத்துருப்படா நாயே” என்றதும் சட்டென ஒரு ஆவேசம் எழுந்தவனாய் “நா உன்னோட மீட்பன்” என்றேன்.

“தூ ஒலுக்க குடுக்கி. நான் ஏன்டா சாவுறேன். எனக்கு சாவே கிடையாது. நீ செத்துருப்படா. அன்னிக்கு நீ செத்துருப்ப” என்றான்.

கை கால்கள் எல்லாம் படபடத்து நடுங்கத் தொடங்கின. அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது.

“இப்பனாச்சும் ஒத்துக்கடா. இப்பனாச்சும் ஒத்துக்கடா” எனக் கெஞ்சத் தொடங்கினான். புண்ணைக் கிண்டியது போல ஒரு வெறி ஏற்படுத்தும் நமைச்சல் உடல் முழுக்கப் பரவியது எனக்கு.

“எத ஒத்துக்கணும்” என்றேன்.

மண்டையே தெறித்து விடுவது போல “அய்யோ அய்யோ அய்யோ என்னக் கொல்லுடா. என்னால முடியாதுடா என்னால முடியலடா. நான் என்னடா பாவம் பண்ணினேன் உனக்கு. அல்லாத்தையும் உட்டுத் தொலச்சுட்டு போகத் தான்டா உன்ன கேக்கிறேன்” என தலையில் அடித்துக் கொண்டு அலறினான்.

என்னுள் மேலும் மகிழ்ச்சி பரவியது. மகிழ்ச்சியாக மட்டுமே இதனை எனக்கு நான் சொல்லிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவன் வென்று விடுவான். அவன் என்னை வென்றால் நீங்கள் என்னை மதிக்க மாட்டீர்கள்.

“நீ போகலாம்” என்றேன். பேருந்து உச்ச விரைவில் சென்று கொண்டிருந்தது. கூரையை பிய்த்துக் கொண்டு பேருந்தின் மேலேறினான். தலைகுப்புறக் குதித்தான். அவன் மண்டை சிதறுவதைக் கண்டேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் அலைபேசியை எடுத்தேன்.

“கீரி அந்த கதைய கண்டினியூ பண்ணலாமா?” என்றேன். சொல்லச் சொல்ல எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அது கதை தான். கதை மட்டும் தான்.