எழுத்து

பஞ்ச காலத்தில்: வங்காளம் – சி ஹெச் சிசொன்

சி ஹெச் சிசொன் (அபிநந்தன்)

இந்தக் குழந்தை என்று நான் சொல்வதில்லை
தன் பெருத்த உடலில்
சாம்பல் சேறு பூசிய இந்தக் குழந்தை
இந்தக் குழந்தை என்று நான் சொல்வதில்லை
இவள் தடுமாறாமல், மகிழ்ச்சியாய் நடக்கிறாள்
ஆனால் இது சொல்வேன்
என் வாகன சன்னலில் பார்க்கிறாளே
இவளது கண்கள் பெரியவை
மிகப் பெரியவை
இவள் மயிர் கலைந்திருக்கிறது, இதழ்களில் சந்தேகம்
இதையும் சொல்வேன்
திறந்த கண்களுடன் நடைபாதையில் கிடக்கிறாளே
இவளை உன்னால் காயப்படுத்த முடியுமா?
அஞ்சும் அக்கண்களில் பாதம் பதிக்க முடியுமா
சாவதற்கு இவள் ஏன் பயப்பட வேண்டும்?
இது ஒரு தவறு
இது ஒரு தவறு இதில் எனக்கொரு பங்குண்டு

(This is an unauthorised translation of the poem, “In Times of Famine: Bengal”, originally written in English by C.H. Sisson. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

ஸ்ருதி பேதம்    

 பானுமதி. ந

கோடை காலம் தொடங்கப் போகிறது என்றாலும் இந்த இள மஞ்சள் மாலை வேளை சற்று குளிர்ச்சியாக இருந்தது. சந்தோஷ் தான் உடுத்தியிருந்த டி ஷர்ட்டையும், பர்முடாசையும் பார்த்துக்கொண்டான். நீலமும், வெண்மையுமான மேகங்கள் தலையில் மட்டும் செந்நிறம் கொண்டு விரைந்து கொண்டிருந்தன. ”என் பாட்டி இருக்கும் விண்ணகர் வரை நீங்கள் செல்வீர்கள்தானே. அவளிடம் சொல்லுங்கள்- அவள் அளித்த உடுப்பு இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது என”

அவள் தன்னை அவனாக அறிந்தது சிறு வயது முதலே. ஆனால் தெளிவில்லாமல் இருந்தது. திம்மாச்சிபுரத்தில் பாட்டியின் வீட்டில் பார்த்த அந்த ஆளுயரக் கண்ணாடி அவளை இரண்டெனக் காட்டியது. கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கையில் நிழல் கூத்து கட்டியது. தான் மறைந்து தான் தோன்றியதை பயத்துடன்தான் பார்த்தாள். இரண்டு எனக் காட்டி ஒன்றெனப் புரிந்தது அவளது பதினாங்காம் வயதில் தெளிவாயிற்று.

தன் ஏழாவது வயதில் சந்தியா அம்மா, அப்பா, அண்ணனுடன் திம்மாச்சிபுரத்திற்கு பாட்டி வீட்டிற்கு வந்தாள். அந்த ஊருக்கு அவர்கள் சென்ற நேரம் குளிர் காலம் போய் இள வேனில் அடியெடுத்து வைத்த நேரம். இந்தப் பருவங்களின் காலடி ஓசை என்பது இயற்கை மாற்றங்களில்தான் கேட்கிறது. மெதுமெதுவாக வந்து, சிறிது சிறிதாகப் பரிணமித்து பின் முழுதாக தன் கோலம் மட்டுமே காட்டும் பருவ மாறுதல்கள். ஆனால் அவை கால அளவுகளை ஒரு சீராகத்தான் பின்பற்றுமா என்ன? குளிரிலிருந்தும், முதுவேனிலிலிருந்தும் சிறிது களவாடிக்கொள்ளும் போலும்!

அவர்கள் பம்பாயிலிருந்து சென்னை வந்து பின்னர் திருச்சி வந்து அங்கிருந்து வாடகை காரில் திம்மாச்சிபுரம் வந்தனர். அம்மாவிற்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பிரார்த்தனை இருந்தது. வழியெங்கும் சிறு சிறு குளங்கள், அதன் கரையோரங்களில் பெரும் மரங்கள். அவை நீரின் மேலே கிளைகளைத் தாழவிட்டு வரையும் நிழல் ஒவியங்கள்- நீரலையில் காற்றலை செல்ல கலைந்து கூடும் சித்திரங்கள். இன்னதென்று புரியாத சந்தோஷமும், கிலியும் சந்தியாவிற்கு ஏற்பட்டது. அம்மா அவளை அவளைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் பழிப்பு காட்டினாள். அப்பா வழக்கமான அமைதியில்.

தாத்தா  வரவேற்றதே, “என்னடி, இப்படி ‘க்ளோஸ் கட்’ பண்ணிண்டிருக்கே” என்றுதான். ”சந்தீப் தலையப் பாருங்கோ, ஹிப்பி மாரி வச்சுண்டிருக்கான்” என்றாள் அவள். “அவன் புருஷக் கொழைந்தேடி. எப்படியும் இருப்பான்.” அம்மா மேலே பேசாதே என்று ஜாடை காட்டினாள். ”கட்டித் தங்கமே. பாட்டி உனக்குத்தான் ஸப்போர்ட். நீ உன் இஷ்டப்படி இருடி கொழந்தே” அன்றுதான் இந்த விதை முளை விட்டிருக்க வேண்டும். அங்கே இருந்த முப்பது நாட்களும் அவள் சந்தீப்பின் உடைகளை வேண்டுமென்றே அணிந்து கொண்டு தாத்தாவின் வாயில் விழுந்து புறப்பட்டுக் கொண்டேயிருந்தாள். எப்படியும் அவர்கள்தான் அமெரிக்கா போகப் போகிறார்களே- அப்ப இந்தத்  தாத்தா என்ன செய்வாராம்?

இன்று முப்பதாவது வயதில் கோடை தொடங்கும் பருவத்தில் இங்கே ந்யூயார்க்கில் தனிமையில் அமர்ந்திருக்கையில் அவனுக்கு பாட்டியும், அந்த ஊரும் நினைவில் கிளர்ந்தெழுந்தன. ஒரே ஒருமுறை பார்த்த ஊர், என்றுமே நினைவில்..

அவள் அதுவரை ’இருவாக்ஷி’ என்ற பூவைப் பார்த்ததேயில்லை. ஊருக்கு வந்த மறுநாள் இளங்காலைப் பொழுதில் வந்த அந்த வாசம். அவள் அரவமே செய்யாமல் தோட்டத்திற்கு வந்தாள். செடிகளில் முளைத்த நட்சத்திரங்களென அவை மின்னின. இருளுமில்லை, ஒளியுமில்லை என இரண்டும் சந்திக்கும் மாலையை அவள் அறிவாள். ஜூஹூ பீச்சை பார்த்திருக்கும் அவர்களது பம்பாய் வீட்டில் அதை அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள். ஆனால், இரவும், பகலும் சந்திக்கும் இந்தக் காலை-இதுதான் நான் மலரும் வேளை என வாசம் வீசும் இருவாக்ஷி. பாட்டி  வீடு இத்தனை அழகா?

அந்தக் கிராமத்தில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பெரிய வட்ட வடிவமான கிணறு. உள்ளே இறங்க படிக்கட்டுகள், தண்ணீர் இறைக்க ராட்டினம், அந்த தாம்புக் கயிறும் அதன் முடிவில் கட்டப்பட்டுள்ள தோண்டியும், பாட்டி மடிசார் கட்டிக் கொண்டு அதில் பூஜைக்கெனவும், குடிப்பதற்கெனவும் சுமக்கும் குடங்களும் அவளை வியப்பில் ஆழ்த்தின. குளிப்பதற்கென மோட்டார் கனெக்க்ஷன் வேறு இருந்தது. அவள் நீந்தத்தான் ஆசைப்பட்டாள். அந்தக் கிணற்றிலே ஐந்து நாட்களில் அவள் டைவ் அடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்.

“நடராஜா, இந்தப் பொண்ணு இங்கியே இப்டி ஆம்பிளைத்தனமா இருக்கேடா. அமரிக்காவுல எப்படி ஆகப் போறதோ?” அப்பா என்றைக்கு பதில் சொல்லியிருக்கிறார் இன்று சொல்ல? தாத்தாவைப் போல் ஏன் பாட்டி அந்த வீட்டில் ஒரு முக்கிய ஆளாக இல்லை? அவள் பச்சைக்குதிரை தாண்டினாள். கபடி ஆடினாள். கிட்டிப்புள் அடிக்கக் கற்றுக் கொண்டாள். பெண்கள் விளையாட்டில் அவளுக்குப் பிடித்ததே ஏழாங்கல் மட்டும்தான்.

அவர்களின் குலதெய்வக் கோயிலில்கூட தாத்தாவிற்குத்தான் பரிவட்டம் கட்டினார்கள். அப்பாவிற்கு மாலை போட்டார்கள், சந்தீப்பிற்கு குட்டி மாலை. ’எனக்கு’ என்றாள் சந்தியா. ”நிக்கர் போட்டுண்டா நீ என் வம்சமாயிடுவியாடி?” என்றார் தாத்தா. பாட்டி அதற்குள் தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி, “நோக்கு வாடாத மாலை, சந்தியா,” என்று அவள் கழுத்தில் போட்டுவிட்டாள். அம்மாவிற்கு கண்ணைக் கண்ணை உருட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.

அவள் காற்றாகச் சுற்றினாள். மிகப் பெரிய விடுதலையை உணர்ந்தாள். அன்றைய தன் நிலைக்கு இன்றைய வார்த்தைகள்! உள்ளுணர்வு அறிவிக்காமல் இருப்பதில்லை எதையும். ஆனால், அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடியுமா?

“சந்தியா, நீ கேட்டுண்ட்ருக்கியே, அந்த ரூமை இப்ப திறக்கப் போறேன்”. பாட்டி அவளை அழைத்துச் சென்ற அறை அவ்வளவு பெரியது. சுவர் முழுதும் அவள் பார்த்திருந்த ஸ்வாமி படங்களைத் தவிர பல படங்கள்; இரு வேறு உடல் பகுதிகள் இணைக்கப்பட்ட வண்ண ஓவியங்கள், சிறகு முளைத்த தேவதைகள், வீணை வடிவான பெண் மிக அழகாக இருந்தாள். பாட்டி சொல்லி அர்ச்சுனன் பெண்ணான கதையைக் கேட்டாள். அந்த மாறுதலை மழுப்பிய வண்ணங்களோடு வரைந்திருந்தார்கள். அன்று பாட்டி ‘ஹைமவதி’யைப் பற்றிச் சொன்னது புரியவில்லை. ஆனால், அந்த ஓவியம் இன்றும் கண்முன் எழுகிறது. இவை தவிர கல்யாணப் புகைப்படங்கள் இருந்தன.

“பாட்டி, உன் கல்யாண போட்டோ இருக்கா. இந்தத் தாத்தா அப்பயும் இப்படித்தான்  வெஞ்சுண்டே இருந்தாரா?” என்றாள் சந்தியா. ”போட்டோ இல்லடி. ஆனா ரெண்டு டிரெஸ் இருக்கு. அந்தப் பெட்டிக்குள்ள வச்சிருக்கேன் பாரு.”

பாட்டி காண்பித்த நீல நிற கால் சராயும், பட்டு மஞ்சள் மேல்சட்டையும் பொன்னிறப் பூ இழைகளால் சந்தியாவை அப்படிக் கவர்ந்தன. இதோ இதையும் பாரு, என்று பாட்டி காண்பித்தது அதே நீல நிறத்தில் பட்டுப் பாவாடையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டுமாக அதை விடச் சற்றுப் பெரியதாக இருந்தது. ”பாட்டி, ரெண்டுமே இவ்ளோ சின்னதா இருக்கே. ஏன் இன்னும் வச்சுண்டிருக்கே?”

“உனக்காத்தான் சந்தியா. நேக்கு கல்யாணம் ஆறச்சே உன் வயசு. அப்ப மட்டும் இல்லடி, இப்பக்கூட கல்யாணத்தை சரியா புரிஞ்சுக்க முடியல்லே. எங்களுக்கு நாலு நாள் கல்யாணம். அப்போ மூணாம் நா சாயங்காலமா ‘அம்மான் ஊர்வலம்’னு ஒன்னு நடந்தது. அன்னிக்கு ரெட்டக் குதிர சாரட்டுல, பேண்டு, நாதசுரம், வாண வேடிக்கையோட பொண்ணு, மாப்ளயை ஊர்வலமா அழைப்பா. அப்போ, பெண்ணுக்கு ஆண் டிரெஸ், ஆணுக்கு பெண் டிரெஸ். நானும், உன் தாத்தாவும் சின்னவாதானே. நேக்கு ஆண்கள் டிரெஸ் பொருத்தமா இருந்ததாம். அவரும் சில்லாட்டமா இருப்பார் அப்போ. சீதைக்கும், ராமனுக்கும் அப்படி ஒரு ஊர்கோலம் நடந்ததாம்.’

“பாட்டி, ஸ்வாரஸ்யமாயிருக்கு. அம்மாவுக்கு இதெல்லாம் தெரில்ல போலிருக்கு. அப்பாகிட்ட கதை கேட்டா காக்கா வடை திருடின கதை மட்டும்தான் சொல்றா”

“இத்தனை நாள் காப்பாத்தியாச்சு, நோக்கு இரண்டையும் தரென், இனிமே இது உனக்குத்தான்”

யாருக்கும் புரியாத அவனை, அவனுக்கே தெளிவில்லாத அவனை, பாட்டி எப்படி அறிந்தாள்? பாட்டி தந்த உடுப்புகளை உடனே தொட்டுத் தடவ அவனுக்கு ஆசை வந்தது.

 

 

தாகூரின் ‘பிறை நிலா’- என்னும் பிள்ளைக்கவி!

மீனாட்சி பாலகணேஷ்

பன்மொழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தாகூரின் கவிதைகளைப் படித்து ரசித்திராமல் இருக்க முடியாது. ஆன்மீகம், தாய்மை, குழந்தைகளைப் பற்றிய கவிதைகள், காதல், தத்துவம், மதம் இன்னும் பல என்று அவர் தனது எழுத்தில் கையாளாத விஷயங்களே கிடையாது எனலாம்.

எந்தவொரு பொருளையும் கையாளும்போது சிற்சில சிந்தனைகளை வாசகனின் அனுமானத்திற்கு விட்டுவிடும் நயமும், உவமைகளைத் தேர்ந்து காட்சிகளில் பொருத்தும் அழகும் உள்ளத்தைக் கவர்வன. இதனாலேயே அவருடைய பெரும்பாலான கவிதைகளும் கதைகளும் திரும்பத்திரும்பப் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. ஒவ்வொரு வாசிப்பிலும் புத்தம் புதிய கருத்துக்கள் உருவாகின்றன. அவருடைய பிறைநிலா எனும் கவிதை நூல் குழந்தைகளைப் பற்றியது. தாய், குழந்தை, இவர்களைப் பார்ப்பவர் ஆகியோரின் உரையாடல்கள் வாயிலாக உளவியல் ரீதியான எண்ணங்களை எழுத்தில் அழகாக வடித்துள்ளமை கருத்தைக் கவரும் தன்மையுடையது.

தாகூரின் வண்ணமயமான எண்ணச்சிதறல்களுள் இந்த நூலும் ஒன்று – இதில் உள்ள கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் புதிதான எண்ணங்கள் தோன்றி பிரமிக்க வைப்பதுண்டு. ஒரு கவிஞன் தான் காணும், கண்ட பிரபஞ்சக் காட்சிகளை இதைவிட, நுட்பமாக, துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டவியலுமா எனும் பிரமிப்புத்தான் அது. காட்சி விளக்கங்கள் தனித்து ஒவ்வொன்றும் ஒரு உருக்கொண்டு உளவியல் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் மாயம் ஒரு விந்தை! ஒவ்வொரு எண்ணமும் அந்த உளவியல் ரீதியான வண்ணங்கள் தீட்டப்பட்டுப் பொலிவது மற்றொரு பேரதிசயம்.

ஒரு நம்பிக்கையற்ற முடிவில் கவிதையின் துவக்கம்

வீடு  (Home- கவிதை- ரவீந்திரநாத் தாகூர்– பிறைநிலா (Crescent Moon) எனும் கவிதைத்தொகுப்பிலிருந்து)

 ‘சூரியாஸ்தமனம் தனது கடைசிப் பொற்கிரணங்களைக் கஞ்சனைப்போல் ஒளித்துக்கொள்ளும் வேளையில் நான் மைதானத்தின் குறுக்கே தனியாக நடந்தபடி இருந்தேன்.

 பகலின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக ஆழமான இருளினுள் புதைந்து கொண்டிருக்க, அறுவடை கொள்முதல் செய்யப்பட்டு விதவைக் கோலமாகக் காணப்பட்ட நிலம் அமைதியாகக் கிடந்தது.

திடீரென ஒரு சிறுவனின் கிறீச்சிட்ட குரல் ஆகாயத்தினூடே எழுந்தது. அவனுடைய பாட்டின் தடத்தை மட்டும் அந்த மாலைப்போதின் அமைதியில் பின்னடைய விட்டுவிட்டு அவன் அந்த இருளில் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியைக் கடந்து சென்றான்.’

ஒரு வெறுமையைத் தேக்கிய வண்ணம் துவங்கும் கவிதை- ஆமாம், வெறுமைதான்- சூரியாஸ்தமனம், விதவைக்கோலம் பூண்ட அறுவடை நிலம், தனித்த ஒரு சிறுவனின் குரல்- இவையெல்லாம் ஒரு இலக்கற்ற, நட்பற்ற, வெறுமை மட்டுமே நிறைந்த உலகைக் கண்முன் விரிக்கின்றன.

தனியனான கவிஞர், சூரியாஸ்தமனத்தின் முடிவு – எனும் சுவாரசியமற்ற, வெறுமை நிறைந்து வழியும் காட்சிகளுக்குப் பதிலாக, தான் காண்பவற்றை அழகிய நிலா ஒளிரும் இரவின் ஆனந்தமான துவக்கமாகக் காண்பித்திருக்கலாமல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? விதவைக்கோலம் பூண்ட அறுவடை நிலத்திற்குப் பதிலாக, பிரசவித்துக் களைத்திருந்தாலும், மகிழ்ச்சியில் ஆழ்ந்து, ஒரு சாதனையின் நிறைவில் அமிழ்ந்திருக்கும் தாயின் உள்ளத்தைப் பிரதிபலிக்கலாகாதா? இப்படியெல்லாம் சோகமான உவமைகளை ஏன் தாகூர் கையாண்டிருக்கிறார்? சிறுவனின் ஒற்றைக்குரல், வீடுசெல்லும் உற்சாகத்தை நிரப்பிக் கொண்டு இனிமையான பாடலாக ஒலிக்கலாகாதா? அது ஏன் தனித்துக் ‘கிறீச்சிட’ வேண்டும்?…

விடைகாண நீண்டநேரம் தவிக்க வேண்டிய அவசியமேயில்லாமல் செய்கின்றன கவிதையின் அடுத்த வரிகள்!

‘அவனுடைய கிராமத்து வீடு அந்த தரிசான நிலத்தின் முடிவில் கரும்பு வயல்களைத் தாண்டி, வாழை மரங்கள், மெல்லிய பாக்கு மரங்கள், தேங்காய் மற்றும் ஆழ்ந்த பச்சை நிறப் பலா மரங்கள் இவற்றினால் மறைந்திருந்தது,’

அச்சிறுவன், தரிசான நிலத்தின் முடிவில் கரும்பு வயல்களைத் தாண்டி, வாழை மரங்கள், மெல்லிய பாக்கு மரங்கள், தேங்காய் மற்றும் ஆழந்த பச்சை நிறப் பலா மரங்கள் இவற்றினால் மறைந்திருந்த தனது கிராமத்து வீட்டை நோக்கித்தான் செல்கிறான். இவ்வரிகளில் வாழையும், கரும்பும், பாக்கும், பலாவும், தேங்காயும்  வாழ்வின் வளமையை, பசுமையை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை அறிவுறுத்தும் சாட்சியங்களாகி நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றன என அழுத்தமான நம்பிக்கையைப் பதிவுசெய்து விடுகிறார் தாகூர்.

முதல் சில வரிகள் நம் மனதில் விதைத்த வெறுமை அவசரமாக எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது. ஒரு ஆர்வமான எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்த வரிகளுக்கு கண்களும் உள்ளமும் கடிதில் தாவுகின்றன. இழப்புக்கும் இருப்புக்கும் இடையே ஒரு பாலம் அமைக்கும் சொற்கள் நிறைந்த வரிகள்!

அடுத்து என்ன சொல்கிறார் எனப் பார்ப்போமா?

எனது தனிமையான வழியில் நான் அந்த நட்சத்திர ஒளியின் கீழ் சிறிது தயங்கி நின்றேன். என் கண் முன்பு விரிந்து கிடந்த இருளான பூமி,  தொட்டில்களாலும், படுக்கைகளாலும் அன்னைமார்களின் கனிவான இதயங்களாலும், மாலை நேரத்து விளக்குகளாலும் நிரம்பியிருந்தது; அந்த எண்ணற்ற வீடுகளில் இருக்கும் தளிர் போலும் பிஞ்சு உயிர்களை- தம் உள்ளங்கள் ஆனந்தத்தில் நிரம்பியிருக்க, உலகத்தோர் கொண்டாடும் ‘மகிழ்ச்சி’யின் மதிப்பினைச் சிறிதும் அறியாதவர்களாக  வாழும் பிஞ்சுகளை- தனது இரு கரங்களாலும் அவ்விருண்ட பூமி அணைத்திருந்தது.

ஏதோ ஒரு எண்ணம் கவிஞரை ஒரு தயக்கத்திற்குள்ளாக்கி விடுகிறது. நட்சத்திர ஒளியின் கீழ் தயங்கி நிற்க வைக்கின்றது. இத்தனை பொழுதும் கண் முன் விரிந்து கிடந்த இரவும், அதன் இருளும், வண்ணமயமான எண்ணச்சிதறல்களாகி நின்று, வானில் ஒளிரும் நம்பிக்கை நட்சத்திரங்களைப்போல் காண இயலும் மாலை நேரத்து விளக்குகளையும், உணர மட்டுமே இயலும் அன்னைமார்களின் அன்பு இதயங்களையும் நம்முன் விரிக்கின்றன. அன்னைமார்களின் கனிவான அன்பு இதயங்களை அறிமுகப்படுத்த கவிஞர் கையாளும் உத்தி ‘தொட்டில்களும் படுக்கைகளும் நிரம்பிய வீடு’களைக் காண்பிப்பதுதான்.

வாழ்வின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் ஏன் அன்னைமாரின் கனிவான அன்பில் மட்டுமே வெளிப்பட வேண்டும்? ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல், தெய்வபக்தி, கல்வியின் பயன் இவற்றால் வாழ்க்கையின் சிறப்பை விளக்கவியலாதா எனும் கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன அல்லவா? எனக்குள் எழுந்தது!

தாய்மையின் சிறப்பு தனித்துவமானது என்பதனை விளக்கவே தாகூர் இவ்வாறு செய்தாரோ என எண்ணத் தோன்றுகிறது. தனது சிறுகுழந்தையைக் கண்டதும் கனியும் இதயம் தாய்க்கே உரியது. அந்தக் குழந்தைக்கு அறுபது வயது நிறைந்தாலும்கூடத் தாயின் பாசம் மட்டும் மாறுவதேயில்லை. இதுதான் இந்த உவமைக்கு விளக்கமா எனும் கேள்வி எழுகிறது! சரி, அப்படியானால் தொட்டில் குழந்தைகளை இங்கு குறிப்பிடுவானேன்?

தொட்டில் குழந்தைகளான பிஞ்சு உள்ளங்கள் வளர்ந்த மனிதர்கள் அறியும், அல்லது அனுபவிக்கும் நுட்பமான உணர்வுகளான கோபம், தாபம், பகைமை, பொறாமை, இன்ன பிறவற்றிற்கு இன்னமும் ஆட்படாதவர்கள்! தாயினையே அக்குழந்தைகள் உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் சார்ந்து இருப்பதனால், அவள் முகத்தைக் கண்டதும் அன்பும், பாதுகாப்பு உணர்வும், அதனால் எழும் நிறைவும், அதன் தொடர்பான ஆனந்தமும் அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் எழுந்து பொங்குகின்றன. இதுவே பிஞ்சு உள்ளங்கள் அனுபவிக்கும் ஆனந்தம். மானிடர்கள் பெரிதும் நயக்கும் விலைமதிப்பற்ற ஆனந்தம். இத்தகைய ஆனந்தத்தின் மதிப்பை, மகிழ்ச்சி உணர்வை உலகத்தோர் பெரிதும் போற்றி மதித்துக் கொண்டாடுகிறார்களே- ஏன் தெரியுமா? பணம், பதவி, ஆட்கள், கல்வி தரும் பெருமிதம், காதலின் வெற்றி, வழிபாட்டுத் தலங்கள் இவையனைத்தும் மட்டுமே பாதுகாப்பு உணர்வு, நிறைவு, பெருமிதம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை உலகத்தோர் உள்ளங்களில் நிறைக்கின்றன. ஆனால் ஒரு சிறு பிஞ்சுக் குழந்தைக்கு இவை ஒன்றும் வேண்டாம். தாயின் முகத்தைக் காண்பதன் மூலமும், அவளுடைய அணைப்பின் மூலமும் மட்டுமே இவை கிடைத்து விடுகின்றன என நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இல்லை?

மேலும் அந்த மழலைகள் இந்த ‘உலகத்தோர் கொண்டாடும் மகிழ்ச்சி’யின் மதிப்பை உணராதவர்கள். அதன் மதிப்பு வேறானது என மேலே கண்டோம். அதனை அறியாத வரையே அவர்கள் உயர்வான பிஞ்சு மழலைகள். இந்த உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இக்குழந்தைகள்தான்! வளர்ந்துவிட்டால் மனித உணர்வுகள் அவர்களைப் பற்றிக்கொண்டு விடுகின்றன!!

இந்தக் காட்சியை ‘வீடு’ எனும் தலைப்பின் கீழ் ஒரு அழகான வசன கவிதையாக்கி வைத்துள்ளார் தாகூர். உலகு பல தேசங்களைக் கொண்டது; தேசம் பல வீடுகளைக் கொண்டது; வீடு செழிக்க, குடும்பம் செழிக்க, நாடும் செழிக்க குழந்தைகள் இன்றியமையாதவர்கள். இந்த உன்னதமான கருத்தை எளிய அன்றாட நிகழ்வுகள் கொண்ட கவிதையில் பொதிந்து வைத்துள்ள நயம் இரசிக்கத்தக்கது.

இதுபோலும் பல கவிதைகள் கொண்ட கவிதைத் தொகுதிக்கு ‘பிறைநிலா’ என அழகான பெயரையும் இட்டுள்ளார் தாகூர். பிறைநிலா கீற்று கீற்றாக நாள்தோறும் வளருவது போலக் குழந்தைகளும் வளர்கிறார்கள் அல்லவா? அதனால்தானோ என்னவோ இப்பெயரைத் தெரிவு செய்துள்ளார்.

நம்பிக்கை இழந்த நிலைக்கும் நம்பிக்கை பிறக்கும் நிலைக்குமான வெறுமை- நிறைவு (Hope & Despair) இவற்றின் தொடர்பை இக்கவிதை வெகு அருமையாகச் சித்தரித்துள்ளது. நம்பிக்கை- இழப்பு எனும் இரு நிலைகளையும் விவரிக்கும் ‘நம்பிக்கை- வெறுமை’ சார்ந்த கருத்துக்கள்  ‘வெறுமை -நம்பிக்கை’ என மாற்றிப்போடப்பட்டுள்ளதால் அற்புதமான பொருளைக் கொடுக்கும் அழகான கவிதை இதுவல்லவோ?

இருளின் கருமையிலிருந்து துவங்கி, மரங்களின் பச்சை, ஒளிரும் நட்சத்திரங்களின் வெள்ளி, விளக்குகளின் பொன்னிறம், குழந்தைகளின் புன்னகைக்கும் ரோஜா முகங்கள் என வண்ணமயமாக விளங்கும் இக்கவிதைக்கு ‘வீடு’ எனப்பெயரிட்டதும்கூட ஒரு பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையையும் மனித மனங்களில் எழுப்பத்தானோ என்னவோ எனத் தோன்றுகிறது!

ஒளிப்பட உதவி – Bangla Sahitto

 

 

 

புரட்சியும் மனிதனின் விதியும்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

ஒரு மரணச் செய்தி
காதுகளைத் தட்டும் போது
எந்த அசூசையுமின்றி
வானத்தை வெறித்திருப்பேன்
துயர் தரும் சூழலின் இயக்கத்திலிருந்து
என் இதயத்தை நான்
அப்படித்தான் துண்டிக்கிறேன்
ஒரு மரணச் செய்தியால்
நான் கலவரமடையும் போது
என் இதயம் இறந்துவிடக்கூடும்
ஒரு மரணச் செய்தியால்
நான் அச்சமடையும் போது
எனது புத்தகமொன்று
தாமதமாக வெளிவரக்கூடும்
நான் சூழலினால்
கைதுசெய்யப்படுவதை விரும்புவதில்லை

ஒரு திருமண அழைப்பிதழ்
வரும்போது
அழைப்பிதழை புத்தகமொன்றுக்குள்
மறைத்து வைத்து விட்டு மறந்துவிடுகிறேன்
திருமணத்துக்கு முன்னர்
அது என் கண்களில் பட்டுவிடக்கூடாது
என்று மௌனமாகப் பிரார்த்திக்கிறேன்
சிறிய நிகழ்வொன்று
என் பயணத்தை திசை திருப்புவதை
நான் தவிர்ந்து கொள்வது அப்படித்தான்
கடைசியில் என் கனவுப் பயணம்
எதற்கும் உபயோகமற்றது
என உங்களுக்குத் தெரிய வரும்போது
சோவியத்யூனியன் போல்
துண்டுகளாய்ச் சிதறிப் போகிறேன்
பின் கனவுச் சிறையிலிருந்து வெளியேறி
சூழலின் கைதியாகிறேன்-
“மனிதனின் விதியை கற்பனையால்
மாற்றிட முடிவதில்லை”
என விதிக்கப்பட்ட வாழ்வை
நோக்கிச் செல்கிறேன்

அலுங்கலின் நடுக்கம்

சுரேஷ் பிரதீப்

கருவை இலைகள் மெல்ல, சீரற்ற இடைவெளியில் இறங்கிக் கொண்டிருந்தன. குத்துக் கருவைகளைப் போன்றவை அல்ல சீமைக் கருவைகள். மரமாக உயர்ந்து வளர்பவை. ஓடி விளையாடும் போதும் கருவையில் உரசிக் கொண்டால் ஏற்படும் சிராய்ப்பு மட்டும் தனியாகத் தெரியும். அதன் உடல் துவைத்து முறுக்கிய போர்வையைப் போல் சுருங்கியும் கடினப்பட்டும் கிடக்கும். மனம் இயல்பாகவே கருவையைக் கண்டால் எச்சரிக்கை அடைவதற்கு அதைச் சூழ்ந்து கிடக்கும் முட்களும் மற்றொரு காரணம். ஆனால் மணிமாறனுக்கு இப்போது சற்று தள்ளி நின்று அவற்றைப் பார்க்கும் போது மனம் அமைதி அடைவது போல் இருந்தது. குரலின் ஒலி உயர்ந்து விடாமல் தொடர்ச்சி அறுபடாமல் பேசுவது போல கருவையின் இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருந்தன. பழுப்பேறிய சிறிய இலைகள். ஒரே சீராக விழுவது போலத் தெரிந்தாலும் நெருங்கிச் சென்றால் காணக்கூடிய ஒரு நலுங்கல் அவற்றில் உண்டு. நிதானத்தில் ஏற்படும் நடுக்கம்.

“அவன் போன டிசம்பர்லயே வாங்குறன்னு தான் சொன்னான். நீங்க தான் அவன கெடுத்திய” என்று வழக்கம் போல் புனிதா ஆரம்பித்தாள். மணிமாறன் வெளியே அமர்ந்து செய்தித்தாளை விரித்துப் பிடித்திருந்தான். ஒரு வரியைக் கூட மனம் தொடவில்லை. புனிதாவின் வார்த்தைகள் அவனை ஆர்வம் கொள்ள வைத்தன. தங்கராஜை ஏதோ குறை சொல்லப் போகிறாள். அவளுக்கு ஏதேனும் குறிப்பினை எடுத்துக் கொடுத்து அதனை மேலும் பெரிதாக்கி அவரை குத்திக் கிளற வேண்டும் என்று மனம் பரபரப்படைந்தது. அந்த எண்ணத்திற்காக தன்னை நொந்து கொண்டான். இப்போதெல்லாம் அவனால் கையாள முடியாத எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டாலும் அவன் அப்பாவை வெறுக்கிறான். அவனுக்கு ஏற்படும் அத்தனை இழிவுகளுக்கும் அந்த மனிதரே காரணம் என எண்ணத் தோன்றுகிறது. புனிதா பேசுவதன் பொருள் அவனுக்கு விளங்கியது. வீட்டில் எல்.ஈ.டி டி.வி இல்லாததால் விடுமுறையில் வந்திருக்கும் தான் முறைத்துக் கொண்டிருப்பதாக அவள் கற்பனை செய்கிறாள். அவளைப் பொறுத்தவரை பிள்ளைகளின் அத்தனை சினமும் பசியாலும் எளிய ஆசைகளாலும் எழுபவை மட்டுமே. அவனே வார்த்தைகளாக ஆக்கிக் கொள்ளாத அவன் சிக்கல்களை ” பெரிய டிவி இல்லாததால் முறைத்துக் கொண்டு இருக்கிறான்” என்றே விளங்கிக் கொள்ள முயல்கிறாள். அந்த “ஆசை” நிறைவேறாததற்கு காரணம் கண்டு பிடிக்கிறாள்.

எச்செயலிலும் சற்றே தயக்கம் காட்டும் அப்பாவின் குணத்தை பயன்படுத்திக் கொண்டு அம்மா அவரை குறை சொல்கிறாள். நானும் இந்த மனிதர் மேல் அப்படித்தான் பழி சுமத்துகிறேனா? அவருடைய இறந்த காலத்தை முற்றாக நிராகரிக்கிறேனா? அவர் இருந்த சூழலுக்கும் தகுதிக்கும் அவரால் முடிந்த அதிகபட்சத்தையே எங்களுக்கு கொடுத்திருக்கிறார் மௌனமாக. ஆனால் அவர் இன்னும் சற்று உழைக்கலாமே? இன்னும் சற்று போராடலாமே? எதுவரை?

மணிமாறன் எழுந்து கொண்டான்.

உள்ளே சென்றவன் “கொரடாச்சேரி போறேன்” என்றான். சொல்லும் வரை அதை அவன் எண்ணியிருக்கவில்லை. தங்கராஜும் புனிதாவும் விரும்பாத ஒன்றை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் அனிச்சையாய் அவ்வார்த்தையை வரவழைத்தது. அவன் பெங்களூருவில் குடித்து விட்டு பத்துப் பெண்களை கட்டித் தழுவி ஆடினாலும் புனிதா கண்டு கொள்ளமாட்டாள். ஆனால் உள்ளூரில் ஒரு பெண்ணுடனும் அவன் பேசி விடக்கூடாது. அதுபோலவே “கொரடாச்சேரி செட்டு” என தங்கராஜ் அடிக்கடி ஏளனம் செய்யும் சிலருடன் அவன் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் தங்கராஜும் உறுதியாக இருந்தார். இருவரும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. அது அவனை மேலு‌ம் தூண்டியது. சீறித் திரும்பாத மிருகத்தை எப்படி கல்லால் அடிக்க மனம் வரும்? மேலும் கொரடாச்சேரி செல்லும் சிற்றுந்தும் அவனுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

இருந்தும் ஏறினான். “ராஜராஜ சோழன் நான்” என பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல. பேருந்தில் பேசப்படுவதும் பழையதாகவே இருக்கும். ஏதோவொரு நாளில் உறைந்து போய்விட்ட ஊர். எட்டு வருடங்களுக்கு முன்பு ஆற்றோரம் குளிக்க வரும் அத்தைகளையும் சித்திகளையும் பார்ப்பதற்கென சிறப்பு வகுப்பென்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சீக்கிரம் புறப்படுவது குற்றவுணர்வும் பரபரப்பும் தரும் இனிய அனுபவமாக இருக்கும். மல்லாந்து நீச்சல் அடிக்கும் போது துள்ளும் முலைகள் வெளீரெனத் தெரியும் கால்கள் அனைத்தையும் விட குளிக்கும் போது மட்டுமே புளி போட்டு தேய்த்த குத்து விளக்கு போல் பளீரென வெளிவரும் சுதந்திரமான சிரிப்பும் ஏளனமும் நிறைந்த குரல்கள் என அவர்களை பார்க்கும் முன்பே அக்கணங்கள் பலவாறாக அவனுள் விரிந்து விடும். அவர்களை கடக்கும் போது அவர்களின் ஏதோவொரு ஆழம் இவனைக் கண்டு கொண்டு ஏளனமும் பரிவும் ஒரே நேரம் தோன்ற சிரித்து மறுகணமே புன்னகை குடியேறிய முகத்துடன் கனிவுடன் நோக்கும். அப்புன்னகைக்கு பின்னிருக்கும் சிரிப்பை அவன் கண்டதேயில்லை. கொரடாச்சேரி செல்லும் வரை குற்றவுணர்வு மனதை அழுத்தும். நாளை முதல் இப்படி கிளம்பவே கூடாது என முடிவு செய்து கொள்வான்.இருந்தும் இளங்காலையின் தூய்மைக்காக கிளிகளின் சத்தத்திற்காக அந்த சத்தத்தை உண்டெழும் நிசப்தத்திற்காக அவன் ஏங்குவதாக மனம் பாவனை செய்யும். அதை அவன் அறியவும் செய்வான். அறியாதவனாக தன்னை கற்பனித்துக் கொள்வான். மீண்டும் படபடப்பு. மகிழ்ச்சி. மீண்டும் குற்றவுணர்வு. ஆனால் இன்று அதே சித்திகளும் அத்தைகளும் நிறைந்த பேருந்து வெறுப்பேற்படுத்தியது. ஒருத்தி முகம் சுருங்கி இருந்தாள். ஒருத்தி மஞ்சளை முகம் முழுக்க அப்பி இருந்தாள். ஒருத்தி சமயபுரத்திற்கு மாலை போட்டிருந்தாள். அவன் தன் உடலையும் நினைத்துக் கொண்டான்.

“மணி நல்லா இருக்கீங்களா?” என்றவாறே ஒருவன் அருகில் வந்தமர்ந்தான். பணிவதற்கென்றே உருவான இளிப்பு பரவிய முகம். உட்திரண்ட வெறுப்பினை ஒரு வெற்றிளிப்பாக மாற்றி அவனுக்களித்தான்.

“ஏதாவது வேலருந்தா பாத்து குடுங்க மணி” என்று அவன் சொன்ன போது அவன் மனம் அதிர்ந்தது. அவனை நினைவு கூர முடிந்தது. ஆனால் அந்த நினைவு கூறல் ஏன் ஒரு அதிர்ச்சியாக நிகழ வேண்டும்? அவனுடன் படித்தவன் தான். இப்போது அவனை பன்மையில் அழைக்கிறான். அவன் பெயர் சிவராஜ். மணிமாறன் பட்டம் பெறுவதற்கு முன்னே மணம் புரிந்து கொண்டவன்.

“ஒழுங்கா படிச்சிருக்கலாம்” என்றான் குரலில் சிறு ஏமாற்றத்துடன். “நான் மட்டும் முயன்றிருந்தால்” எனப் பேசத் தொடங்குகிறான். அத்தகைய சொற்களுக்கு ஒரு அங்கீகாரப் புன்னகையை அளித்த பின்பு தான் தொடங்க வேண்டும்.

எதைச் சொல்லி ஆரம்பிப்பது?

“பெரிய பையன் ஸ்கூல் போயிட்டானா?”

அந்த “பெரிய” பையன்தானா என்பதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

இருந்தும் மணிமாறன் எதிர்பார்த்தபடி சிவராஜின் முகம் மலர்ந்தது. “சேர்த்துட்டேன் மணி. நாமதான் வீணா போயிட்டோம். நம்ம புள்ளைங்களாவது நல்லா இருக்கட்டும்” என்றான்.

நல்லவேளை பையன் தான். ஆனால் “நாம்” என தன்னையும் சேர்த்துக் கொள்கிறானா என்ற எண்ணம் மணிமாறனுக்கு எழுந்தது. “நான் ஒன்னும் வீணாப் போயிடல” என சொல்லத் தோன்றியது.

“ஆனா பீஸ் தான் வருஷத்துக்கு பதினஞ்சாயிரம் ஆவுது” என்றான்.

மணி சற்றே அதிர்ந்தான். அவன் உடையையும் பேச்சையும் வைத்து அவன் வாயிலிருந்து வரத் தகுதியான தொகையை விட அது சற்று அதிகம் என எண்ணினான்.

“ஆமா நீங்க எங்க இருக்கீங்க?” என்றான்.

“பெங்களூர்.”

சிவராஜின் முகத்தில் ஒரு சுருக்கம் வந்து சென்றது. மணிமாறனால் தனக்கு உதவு முடியாது என்பதை எப்படியோ அறிந்து கொண்டவன் போல அவனிடம் ஒரு நிமிர்வு எழுந்தது.

“மேரேஜ் ஆயிட்டா” என்றான். அதுவரை அவன் குரலில் இருந்த களிமண் தன்மை உலர்ந்து இறுகியிருந்தது.

“இன்னும் இல்ல” என்றான் மணிமாறன்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மணி” எனும் போது அவன் குரலில் சற்றே ரகசியத் தன்மை வந்திருந்தது. மெல்லிய அலட்சியம் கூட. பேருந்து கிட்டத்தட்ட காலியாகி இருந்தது.

“ஒனக்கே தெரியும். எங்கொப்பன் சின்ன வயசுலேயே அம்மால வுட்டுட்டு ஓடிட்டான். அம்மாவும் என் ஸ்கூலுக்கு அனுப்ப தொரத்தி தொரத்தியே நான் பத்து தாண்டறதுக்குள்ள செத்து போச்சு. எளவு வூட்டுக்கும் கோவிலு திருவிசாவுக்கும் பேசியே காலத்த ஓட்டிட்டு இருந்தேன். என்னடா பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப ஒரு பிடிப்பும் கெடைக்காம செத்துடலாம்னு தோணிச்சு மணி. அப்பதான் இவளப் பாத்தன்” அவன் ஏன் தன்னிடம் இதைச் சொல்கிறான் என மணிமாறன் யோசித்தான்.

மேலும் அடங்கிய குரலில் சிவராஜ் தொடர்ந்தான்.

“அதுக்கும் யாருமில்ல. சும்மா சேத்துக்கிட்டேன். என்னவிட நாலு வயசு மூப்பு” என்றபோது மணிமாறன் ஏனோ குன்றிப் போனான். சிவராஜின் குரலில் குழைவு வேறு வகையில் மீண்டு வந்தது.

“ஆனா சும்மா சொல்லக் கூடாது” என்றவனின் முகத்தில் மணிமாறன் பலரிடம் கண்டும் செரித்துக் கொள்ள முடியாத இளிப்பு குடியேறியது. கண்களில் இருந்த ஏற்புணர்ச்சி மறைந்து ஒரு விரோதத் தன்மை அவன் முகத்தில் குடியேறியது. சிவராஜ் அதை கவனிக்கவில்லை.

“அம்மா செத்து போனத நெனச்சி செல நாள் மனசு அடிச்சிக்கும். தூக்கம் வராம எந்திருச்சி ஒக்காந்திருப்பேன் மணி. எப்டி தெரியுமோ அப்படியே என்ன சேத்துக்குவா” என்றான். மணிமாறனுக்கு அவனை அடித்துக் கொல்ல வேண்டும் போல் இருந்தது. கொரடாச்சேரி இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது?

“ஆனா அவ கஷ்டமெல்லாம் எனக்குத் தெரியாது மணி. ஒர்நா தூக்கத்துல கை அவ மொகத்துல பட்டது. அழதுட்டு இருந்தா. ‘என்னடி’ன்னு பிடிச்சு திருப்புனா கைய தட்டி விட்டுட்டா. அப்புறம் அவளே காலைல என்ன எழுப்புறா” என்பதை ஏதோ மாபெரும் ஆச்சரியத்தை பகிர்ந்து கொள்வதைப் போல் சொல்லிக் கொண்டிருந்தான். சொல்லச் சொல்ல அவன் மனம் மகிழ்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. இனி அவன் சொல்ல இருப்பவற்றில் இல்லாதவையும் இணையும் என்பது மணிமாறனுக்கு சோர்வேற்படுத்தியது.

“ஊர்ல கட்டட வேல இருந்தா மத்தியானத்துல சாப்பிட வந்துவேன். சாப்பிடறமோ இல்லையோ கண்டிப்பா அது உண்டு” என்றபடி கண்ணடித்தான். அவன் தலையை பிடித்து வெளியே வீச வேண்டும் போலிருந்தது.

“உங்க இதுலெல்லாம் லேட்டா தான் கல்யாணம் பண்ணுவாங்களா” என்றபோது சிவராஜின் முகத்தில் அருதியிட்டுக் கூற முடியாத ஒரு ஒளியினை மணிமாறன் உணர்ந்தான்.

“உங்க இது” என அவன் எதைச் சுட்டுகிறான்.

காற்று போன பலூன் போன்ற முகம். சிகரெட்டும் புகையிலையும் தயாரித்து வைத்திருந்த அருவருப்பூட்டக் கூடிய வாய். இவனைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேனா? இவற்றை ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான். பத்து வருடங்களுக்கு முன் இவன் பக்கத்து வீட்டில் புதிதாக திருமணமாகி வந்த ஒருவன் சொன்னதாக இவன் சொன்னக் கதைகளை விழி விரிய அருவருப்புடன் ஆர்வமாக கேட்டதால் இப்போது இவற்றை சொல்கிறானா அல்லது என்னை வென்று செல்ல விழைகிறானா?

கொரடாச்சேரி வந்தது.

பூப்போட்ட மெல்லிய சேலை கட்டிய ஒல்லியான பெண்ணை காண்பித்து “இதான் மணி நம்ம சம்சாரம்” என்றான் சிவராஜ்.

மணிமாறன் மனம் அதிர்ந்தடங்கியது. அவன் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் ஏற்கனவே அறிந்தவள் போல் அவள் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். மணிமாறன் அவன் அம்மாவை அலைபேசியில் அழைத்தான்.

“அப்பாவ நாலு செட்டு டிரெஸ் அயர்ன் பண்ணச் சொல்லு. இன்னிக்கு நைட்டே கெளம்புறேன்” என்றான்.

அவ்வூரில் இல்லாமல் இருப்பது மட்டுமே தீர்வு எனத் தோன்றியது. கருவை இலைகள் அதே அமைதியுடன் உதிர்ந்து கொண்டிருந்தன. நடுக்கத்தை மட்டுமே அவனால் காண முடிந்தது.