எழுத்து

மீட்டெடுக்க முடியாத முகம்

– ஸ்ரீதர் நாராயணன் –

“எனக்கு உதவவும்” என்று
ஒடிசல் எழுத்துகளில்
கோணலட்டையை விலாச அட்டையாக
வைத்துக் கொண்டிருந்தான்.

குளிரும், குத்துப் பார்வைகளும்
விரவிய வெட்டவெளியில்
சகஜமான தோரணையில்
நின்றிருந்தான்.

சில சில்லறைக் காசுகளும்,
ஒரு கோப்பை காப்பியும்,
இரண்டு சிகரெட்டுகளும்,
அரைப்புட்டி சாராயமும்,
அருகில் சென்று கொடுத்திருந்தால்
இரண்டு ஜோக்குகள் கூட
சொல்லி சிரித்திருப்பான்.

எத்தனை நாட்களோ
யாசகம் கொண்டிருந்தவன்
நின்றிருந்த இடத்தில்
மடிந்திருந்த புற்களுடன்,
விலாச அட்டையையும்
நினைவில் மீட்டெடுக்க
முடியாததொரு முகத்தையும்
விட்டுவிட்டுப் போய்விட்டான்.

அலைகளுக்கப்பால்

பானுமதி. ந

அலைகடலில் மிதவைகள் கனவைச் சுமந்து செல்கின்றன. அலைகளை எதிர்த்தும் அவற்றுடன் இசைந்தும்,செல்லும் அவைகள் ஒளிக்கதிரில், புரிந்தும் புரியாமலும் புன்னகைக்கின்றன.

வண்ணக் கொடிகள் கட்டிய என் ஓடம் தனித்துத் தெரிகிறது. அதைக் காற்று சீண்டும்போதெல்லாம் கொடிகள் சீறுகின்றன, நிலைக்கு வருவதற்கு தவிக்கின்றன. பறக்காத கொடியில் பார்வை இலயிப்பதில்லை.

இதனுள் மூன்று பெட்டகங்கள் இருக்கின்றன. எல்லாம் உன் பொருட்டுத்தான்; ஒருக்கால் என் பொருட்டாகவும் இருக்கலாம். சொல்லவும், சொல்லாமல் சொல்லவும் எனக்கு நிறைய இருக்கிறது. உனக்கும் இருக்கலாம்? பின்னரும் அக்கரை போனது ஏன்?

மல்லியும், முல்லையும் சேர்ந்து பூத்த அதிசயம் நம் நட்பு. மாதவிப் பந்தல் மேல் பல்கால்  குயிலினங்கள் கூவின காலை. நீ எதிர் வந்தாய். நான் உன் எதிரில். ஆனால், எதிரியாக வரவில்லை. ஒரு தயக்கப் புன்னகை; தலையசைப்பில் நாம் மீண்டும் எதிரெதிர்.

எனக்குச் சிறு சபலம். என்னுடன் வருவாய் என. நடந்த பாதையில் மீண்டும் பயணிக்க மாட்டாயோ? அப்படியென்றால் அப்பால் அலைகள் தழுவும் கரையை நோக்கி ஏன் சென்றாய்? எனக்கு எதிர்த்திசை என்பதாலா? இந்தப் பிரிவினைகள் நமக்கு இல்லை என்று சொல்ல நான் தவித்தேன். நான் நீயாக நினைத்தபோது நீயும்         நானாக நினைத்திருப்பாய். அது நமது வெற்றி. அதன் நினைவாகத்தான் அந்த பச்சைப் பெட்டகம்.ஆனால் அது நிறையவேயில்லை. இருந்தும் அதிலுள்ள பவள மணிகளை நான் எண்ணிப் பார்க்கையில் என்னுள் உணரும் இன்பம் உன்னிலும் வருகிறதா என இந்தக் கடல் கேட்டு வந்து என்னிடம் சொல்லும்.

எனக்கோ நிறங்கள், ஆசைகள், ஆவல்கள். உனக்கு பிடித்தது வெள்ளை அல்லவா?அதனால்தான் இரண்டாம் பெட்டகத்தில் முத்துக்கள். அது என் இயல்பின் வெளிப்பாடு என்பதும் உனக்குப் பிடிக்கும் என்பதால்தான். நீ வெண்முத்துக்களைச் சேர்த்து உன் மார்பில் அணைப்பதை என் வெண்கொடி நிச்சயம் வந்து சொல்லும். எனக்குத் தெரியும், உன்னால் அனைவர் எதிரிலும் அதை எடுத்து அணிய முடியாதென்று. ஆனாலும் என் வெள்ளைக்கொடி உன் கைவிரல்கள் அதை அளைவதை என்னிடம் மீண்டு வந்து சொல்லும்.

ஏனோ, நாம் அன்றொரு நாள் தற்செயலாக நின்றிருந்த சிறு குளக்கரையோரம் மீண்டும் சென்றேன். அதில் மண்ணெடுத்து கோபி சந்தனமெனக் குழைக்கிறார்கள். வாசனைத் துளி ஏதுமில்லை. கலாபச் சந்தனத்தின் விழைவு இல்லை. மண்ணனிந்த நெற்றி அல்லது நெற்றி அணிந்த மண்ணா?

கோபிகைப் பெண்கள் கூட்டமாக மரணித்த குளம். உனக்குச் சொல்ல நினைத்த அந்தக் கதை இன்னமும் சொல்லப்படவேயில்லை.அந்தக் குறையாத அன்பை வார்த்தைகளால் நான் சொல்ல முயற்சித்தபோதெல்லாம் உன் கண்கள் என்னைக் கெஞ்சும்-சொல்லிவிடாதே, நான் மரணப்பட்டுப் போவேன் என்று.

வெராவலில் கண்ணனின் காலில் அம்பு பட்டுவிட்டதாம்; அவன் என்னமோ சிரித்துக்கொண்டுதான் இருந்தான். அவன் குழல்தான் காற்றில் மிதந்து அவர்கள் உயிரை உருக்கியது. அவன் இல்லாமல் போவதைத் தாங்காத அந்தப் பெண்கள் இறந்த கோபி தலாபில் உன்னை நினைத்துக் கொண்டு,ஏதோ தோன்றி இந்தக் கடலின் கரைக்கு வந்து அலைகள் மூலம் தோணியில் என் கனவுகளை உனக்குச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

நீ ஏன் இங்கு வந்தாய்? என்ன கற்றுக் கொள்ள வந்தாய்? கேத்தி பந்தாரின் மௌனச் சந்துகளில் ஓடியோடி உன்னை அழைத்த குரல் எது? எந்தக் காற்றின் உயிரோசையாய் அதை நீ இனம் கண்டாய்? துறந்தும், மறந்தும், துடிப்பும், தவிப்புமாய் அந்தக் கண்களில் நான் கண்ட துயரம்தான் என்ன? அதை நான் எப்படி உணர்ந்தேன்? அந்தத் துயரை நீ அணை தேக்கிப் பாதுகாப்பது உன் வெற்றி என்று யார் சொன்னார்கள்? தன் வாதையை முழுதும் மௌனமாக சகித்துக் கொள்ளும் வனமிருகமா நீ?

உன் கோட்டைக் கதவுகளை நான் தட்டித் தகர்த்தெறிய உண்மையாக முயலவில்லை. அதன் சிறு பிளவொன்றில் கால் நுழைத்து, உடல் நுழைத்து ஒரு சிலிர்ப்பாக உன் உளம் நிறைக்க விழைந்தேன். யாசகன் கேட்காத உணவை கைகள் கோர்த்து இருத்தி வைத்துக் கொடுக்க ஏன் இந்த விழைவு என என் தன்மானம் தடுத்தது. வண்ணங்களின்  உலகை உனக்குக் காட்ட ஆசைப்பட்டேன்.

மண்ணையே பார்த்துக் கொண்டு இருக்கும் உனக்கு விண்ணைக் காட்ட வேண்டும். புல் வேய்ந்த குடிசையில் ஒரு வாரமேனும் உன் ஸுஃபி பாடல்கள் என் ஆத்மாவை துளைக்க வேண்டும். ஆகையால்தான் நீல வானை மட்டுமே காட்டும் வெற்றுப் பெட்டகமும் இதில் வைத்துள்ளேன். நீ அதை நிரப்பி அணுப்புவாய் என. நீ சிரிக்கிறாய் என நினைக்கிறேன். வரமாட்டாய் எனத் தெரிந்தும் என் மிதவைகள் பயணப்படுகின்றன.

சிந்து நதியின் மேற்பரப்பில் பட்டுத் தெறித்து நலுங்கும் நிலாக் கதிர்கள் இன்று மாலை அரபிக் கடலின் மேல் படர்ந்து அடர்ந்து சிவந்து அடங்கிய சூரியனின் கதிர்களல்லவா? இந்தக் கடலலையும் மீறும் அந்த துப்பாக்கி குண்டுகளை நீ இயக்கவில்லை என்று சொல்வதற்காகவாவது வருவாயா?

 

போகப் புத்தகம்

வெ. சுரேஷ்

   

கோவை தியாகு நூல் நிலையத்தில் நடக்கும் எங்கள் வழக்கமான வார இறுதிச் சந்திப்பின்போது, தமிழின் இன்றைய பிரபல எழுத்தாளர் குறித்த ஒரு பேச்சில் நண்பர் ஒன்று சொன்னார். அந்த எழுத்தாளர் தன் வாழ்க்கை அனுபவங்கள் என்று குறிப்பிடும் சம்பவங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், அவருக்கு குறைந்தபட்சம் இரு நூறு வயதாவது இருக்க வேண்டும் என்றார் அவர். நான் வேறொரு பிரபல எழுத்தாளரின் பெயரைச் சொல்லி அவருக்கும் இது பொருந்துமே, என்றேன். மற்ற நண்பர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால், பின்னர் அந்த அரட்டை மனநிலையிலிருந்து விடுபட்டு சற்றே நிதானமாக அதைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்தது. வெவ்வேறு வாழ்க்கைகளை தன் வாழ்வாகக் காணச் செய்வதில்தான் எழுத்தாளன் வெற்றி பெறுகிறான். புனைவிலோ, அல்லது கட்டுரையிலோகூட இடம் பெறும் அனுபவங்கள் எல்லாமே எழுதியவனுக்குரியதாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லைதான். எழுத்தாளன் ஒரு அனுபவத்தை விவரிக்கும்போது, அங்கு நேரடி அனுபவம் பேசுகிறது, ஒரு வகையில் அந்த அனுபவம் அவனுடையதுதான் என்று வாசகனை நம்ப வைப்பதில்தான் புனைவுக்கலையின் வெற்றி இருக்கிறது (அந்த அனுபவங்களில் பிறர் ஏற்கும் பாத்திரங்கள் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து அதன் நம்பகத்தன்மை குறித்த கருத்து வேறுபாடு எழலாம்). யாருக்கோ, எங்கோ, எப்போதோ நிகழ்ந்ததை, தன்னுடையதாக மாற்றி, அதை வாசிக்கும் ஒருவரை, அவருடையதாக உணர வைப்பதே புனைவெழுத்தாளனின் வெற்றி..

முதலில் கேட்ட கேள்விதான் – இத்தனை அனுபவங்களை எழுதுகிறாரே, இதெல்லாம் உண்மையாக இருந்தால் இவருக்கு எத்தனை வயதிருக்கும்?- இப்போது போகன் சங்கர் எழுதி வெளிவந்திருக்கும், அல்லது அவர் முகநூல் மற்றும் தனது வலைத்தளத்தில் என்று முன்னரே எழுதியவற்றை தொகுத்து வெளிவந்திருக்கும், ‘போகப் புத்தகம்‘ நூலை வாசிக்கும்போது மனதில் தோன்றுகிறது. அதற்கான அதே பதிலையும் தொடர்ந்து சொல்லிக் கொள்ள வேண்டியதாகிறது – எழுத்தில் காணப்படும் ‘நான்’, எழுதியவனின் ‘நான்’ இரண்டும் வெவ்வேறு; இவற்றை ஒன்றாய்க் காணும் தோற்றப்பிழை, வாசிப்பின்பத்தை முன்னிட்டு வாசகன் எழுத்தாளனுக்கு அளிக்கும் குறைந்தபட்ச சலுகை.

பின்னர் வரும் கேள்விகள்- இது என்ன மாதிரியான நூல்? சிறுகதைத் தொகுப்பா? அல்லது அனுபவக் குறிப்புகளா? போகனே தன்னிடமும் அதற்கு விடை இல்லை, என்று முன்னுரையில் குறிப்பிட்டு விடுகிறார். புனைவம்சம் மேலோங்கியிருக்கும் அனுபவங்கள், அல்லது அச்சு அசல் அனுபவங்கள் போல் தோன்றும் புனைகதைகள் என்று வகைப்படுத்திக் கொள்ளலாம், ஒரு வசதிக்காக.

எப்படியாயினும், அவரது சிறுகதைத் தொகுப்பான ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படும் அதே அனுபவத்தை, வெவ்வேறு அளவில், இந்த நூலும் தருகிறது என்பதில் ஐயமில்லை. இதில் மொத்தம் 106 கதைகள்/ குறிப்புகள் உள்ளன. அனைத்துமே அவருக்கும் நமக்கும் நன்கு அறிமுகமான கன்னியாகுமரி மாவட்டத்தின் கேரள எல்லையில், அதிகபட்சம் திருநெல்வேலி அல்லது மதுரை வரை நடைபெறும் கதைகள். அவற்றில் நிச்சயம் பாதிக்குப் பாதி, நம்முள் உடனடியாக ஒரு பாதிப்பை உண்டாக்குகின்றன.

இந்தக் கதைகளை தோராயமாக ஒரு நான்கு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம்- 1.காதல், காதல் தோல்வி, முறை மீறிய உறவுகளால் வரும் சிக்கல்கள். 2. யதார்த்த வாழ்வின் மிக அருகிலேயே அல்லது அதன் இணையாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும், யதார்த்தத்தை மீறிய அமானுஷ்ய அனுபவங்களால் நிரம்பிய வாழ்க்கை; ஜோதிடம், ஆவிகள், மத நம்பிக்கைகளின் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை பற்றியது. 3. வாழ்வின் மிகக் கொடுமையான சூழலிலும் அடியோடு நைந்து கிடக்கும் நிலையிலும் எல்லா வகையிலும் கைவிடப்பட்டவர்களும்கூட, தங்களைப் போன்ற பிற மனிதர்கள் அல்லது தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்த கதைகள் 4. நோய்வாய்ப்பட்ட நிலை உருவாக்கக்கூடிய தீவிர மற்றும் நகைச்சுவை கலந்த அனுபவங்கள். இவைகூடவே காரணமே இன்றி அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய அபத்தங்கள் நிறைந்த நிகழ்வுகள். சில கதைகளை மேலே சொன்ன எல்லாம் கலந்தது என்றும் சொல்ல முடியும்.

இந்தக் கதைகளில் பெரும்பாலானவை நம்மைத் தொடுவதற்கும் நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பவை, போகனின் நடை, கூரிய அங்கதம், ஒரு கசந்த நகைச்சுவை உணர்வு (Wry Humour) பல சமயங்களில், ஜெயமோகனும் சுஜாதாவும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க இயலவில்லை.

‘பொருட்காட்சி’, ‘அசல் ராஜா’, ‘குரூரம்’, ‘சந்திர பிரபை’, ‘அமரன்’, ‘நெருப்பு’, ‘அப்பாக்களின் நாட்கள்’, ‘நீல வெளிச்சம்’, ‘பண்டிகை’, போன்ற கதைகள் உருவாக்கும் பெரும் அழுத்தத்தை உடனடியாக சமனப்படுத்தும், ‘இலக்கியக் கூட்டம்’, ‘comically yours’, ‘ஒரு கர்நாடக இசையும் தமிழ் மனமும்’, ‘வசிய மை’, ‘ஆன்லைன் ஷாப்பிங்’, ‘இரண்டு டாக்டர்கள்‘, ஆகிய நகைச்சுவை கதைகள் என்று கலந்து கட்டி சுவாரசியமான ஒரு வாசிப்பு அனுபவத்தை தருகிறது இந்தப் புத்தகம்.

தமிழ்ப் புத்தகங்களுக்கான பின்னட்டை blurbகள் பல சமயங்களில் புத்தகத்தை பற்றிய மிகை மதிப்பீடுகளாகவும், அதைவிட சிக்கலானவையாகவுமே அமைந்து வரும் இந்த காலகட்டத்தில், இந்த புத்தகத்தின் blurb மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளதை சொல்லியே ஆகவேண்டும்.

ஒரு முறை சுஜாதா தமிழ்வாணன் பற்றி எழுதும்போது ஒரே சமயத்தில் வள்ளலாராகவும் ப்ரூஸ் லீயாகவும் தோன்றியவர் என்று குறிப்பிட்டார். அது போல போகனைப் பற்றி அல்லது இந்த நூலில் வரும் “நான்” பற்றிச் சொன்னால், ஒரே சமயம் தேவதாஸ் ஆகவும் கோகுலத்துக் கிருஷ்ணாகவும் தோற்றம் அளிக்கிறார் எனலாம். அவ்வப்போது எம்ஜியார்கூட (மிகப் பெரும்பாலும் பெண்களே இவரை நாடுகிறார்கள். இவர் அவர்களை அல்ல). இவை, என்னடா ஒரேயடியாக அலட்டிக் கொள்கிறாரே என்று தோன்றாமலிருப்பதற்கு முக்கிய காரணம், போகனிடம் உள்ள சுய எள்ளல். என்றாலும், இந்த இரு எல்லைகளின் வசீகரம் அவரது இந்தக் கதைகளுக்கு அலுப்புத் தட்டாத ஒரு சுவாரசியத்தை அளிப்பது உண்மைதான்.

‘லைட் ரீடிங்’ என்று வகைமைப்படுத்தக்கூடிய இத்தொகுப்பில் போகன் கணிசமான இடங்களில் வெறும் சுவாரசியத்தைத் தாண்டி ஆழங்களைத் தொடவும் செய்கிறார்தான். ஆனால் பின்னது அதிகம் அமையும் படைப்புகளை நோக்கி அவர் முன்னேறுவதை முன்னது தடுத்து விடக்கூடாதே என்ற கவலை இந்தப் புத்தகத்தை முடிக்கும்போது தோன்றாமலில்லை.இதுகூட அவரது வெற்றிதான் என்று சொல்லலாமா?

வெந்து தணியும் வாழ்வு

ஆ. மகராஜன்

வாழ்ந்து களிக்க வந்த
மாநகரப் பெருவெளியின்
வெப்பம் உமிழும்
பகல் பொழுது வீதிகளில்
பொருளீட்டிக் களைத்து,

கட்டிடங்களின் நெருக்த்தில்
பிதுங்கித் திணறுமோர்
முட்டுச்சந்து மேன்ஷனின்
குறுகிப் புழுங்கும் அறையொன்றுள்
ஓய்வுக்காய்ப் புகுந்து,

தூரத்துக் கிராமத்தின்
மனைவி மக்களோடு
தூக்கம் தழுவும் வரை
அலைபேசிவழி கிசுகிசுத்து,

குழந்தைகளோடு கொஞ்சலும்
இல்லாளோடு கலவியும்
கனவுக் குடித்தனத்திலேயே
நடத்தி முடித்து,

மற்றுமோர் ‘நாளை’க்காய்
உடலும் உள்ளமும் தயாராகி
எப்படியோ வாழ்ந்து கழிக்க
முடிகிறது.

 

கங்கையின் பாடல்

ரா கிரிதரன்

(This is an unauthorised translation of the poem, ‘Songs of the Ganga,’ originally written in English by Arvind Krishna Mehrotra. The Tamil translation is intended for educational, non-commercial reproduction at this particular website only)

நான் கங்கை
மலைப்பனி
நீர்த்தேவதை

நான் சமவெளி
நான் மலையடி
என் ஓடைகளின் ஆசைகளை
கடலுக்கு கொண்டு செல்லும்
தூதுவன்

ஆணும் நான் பெண்ணும் நான்

குழந்தைகளுக்கு நான் காகிதக்கப்பல்
கடலாடிக்கு நான் ஒரு பழக்கம்
மழித்த முனிக்கு நான் ஒரு மேகம்
அசைவுகள் அனைத்தும் என் பிம்பம்

நான் ஒரு பாலம்
கோட்டையும் நான்
குறிபார்க்கும் வில்லாளியும்
மனிதனைக் கரைப்பதில் மகத்தானவள் நான்

உயிரை ஆக்குபவனும் நான்
எடுப்பவனும் நான்

**

நான் வெளியுலகுக்குள் செல்கிறேன்
நான் உலகம்
நான் தேசங்கள், நகரங்கள், மக்கள்
கோர்க்காத புத்தகத்தின் பக்கங்கள் நான்

சுற்றியிருக்கும் காற்று என் அறை
நான் நீரை உடுத்தியிருக்கிறேன்
நான் நீரைப் போல் நிர்வாணமானவள்
தெளிவு நான்

அரசு வீழ்ந்ததென
ஒரு கொடி கொடுத்தான்
நண்பனொருவன்

மழை பிடிக்கப் போவதாகச் சொல்லி
வலை விரிக்கிறேன்

நான் விஷம்

**
மலையிலிருந்து
வரையாடுகள்
இறங்குகின்றன
தனிமை கிடைக்காமல்
பாலையிலிருந்து
ஒட்டகங்கள் திரும்புகின்றன

மணலில் இருகோடுகள் வரைந்து
அவை உடைக்க முடியாத சுவர்கள் என்கிறேன்

நான்கு திசைகளை ஒன்றாக்கினேன்
நடையின் ரகசியம் அறிந்தவள் நான்

நெருப்பின் இறப்பு நான்.

**

அறிந்தேன் புகையிலிருந்து மறைதலை
கடலிலிருந்து பாரபட்சமற்ற தன்மையை

அறிந்தேன் பறவைகளிடமிருந்து
சூறாவெளியில் வீடொதுங்கும் வழியை

அறிந்தேன் சிறுத்தையிலிருந்து
புள்ளிகளால் சூரியனை மறைக்க

கோடையில் நான் செழு தர்பூசணி வளர்க்கிறேன்
வெள்ளத்தின் போது தங்குவேன்
தபால்காரனின் வீட்டருகே

நான் ஏதிலி
நான் ஒரு கோமாளி
நிழலற்றவளும் நான்.

oOo

(1970களின் நவீன ஆங்கில இந்திய கவிதை உலகத்தில் மிகப் பிரபலமானப் பெயர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. அருண் கொலாட்கர், ஏ.கே.ராமானுஜம், போன்றவர்களுடன் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா ஒரு கவிதை இயக்கமாகச் செயல்பட்டார். அவரது ஆங்கில கவிதைகளும், பிராகிரத மொழியாக்கங்களும், கபீரின் கவிதை ஆக்கங்களும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுத்தந்தது. பம்பாயின் நவீன சிறு பத்திரிக்கை உலகின் அடையாளமாகக் காணப்பட்டவர் அரவிந்த் கிருஷ்ண மெஹ்ரோத்ரா. damn you எனும் சிறு பத்திரிகையைத் தொடங்கி பல இளம் கவிஞர்களை ஆங்கில கவிதைக்கு ஆற்றுப்படுத்தியிருக்கிறார். Middle Earth, Nine Enclosures போன்ற தொகுப்புகளும் History of Indian Literature, The Oxford India anthology of twelve modern Indian Poets போன்ற விமர்சக நூல்களும் எழுதியவர்.

அவரது கவிதைகளின் மொழியாக்கங்களை இத்தொடரில் பார்க்கலாம்.)

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா