எழுத்து

சருகுகள் – அமெரிக்கக்காரி சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து

கோகுல் பிரசாத்

16 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கடைசிச் சிறுகதையான ‘அமெரிக்கக்காரி’யில் லான்ஹங் மதியிடம் ‘என்னை ஆச்சரியப்படுத்து’ என சொல்லிக் கொண்டே இருக்கிறான். அ முத்துலிங்கத்தின் தலையாய நோக்கமும் வாசகரை ஆச்சரியப்படுத்துவது தான். இலகுவான மனநிலையில் பக்கங்களை அனாயசமாக புரட்டிக் கொண்டே செல்லலாம். மொழியைத் திருகித் திருகி எழுதுவதில்லை. சோதனை முயற்சி என்ற பெயரில் வாசகரை பரிசோதனை எலியாக்கி பலி கொடுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கதைகளை ஞாபக இடுக்குகளில் சுமந்தலைந்து கொண்டு திரிய வேண்டிய அவசியமேதும் ஏற்படப் போவதில்லை. வாசிக்க வாசிக்கவே கழன்று கொண்டு காணாமல் போய்விடும் அற்பக் கதைகள். வேண்டாத பொருளை தொலைத்து விட்டு அழிச்சட்டியம் பண்ணும் சமர்த்துப் பிள்ளைகளும் இருநூறு ஆண்டுகள் வாழப் போகிறவர்களும் கட்டுரை எழுதுவதாக ஒப்புக் கொண்டவர்களும் இரண்டாவது முறை வாசித்துக் கொள்வார்கள்.

இவை கட்டுரை, சிறுகதை, முன்னுரை, அனுபவம் போன்ற வகை மாதிரிகளுக்குள் அடங்க மறுக்கிற வரையறைகளுக்குள் விழுந்து விடாத அபாரமான தனித்துவம் கொண்டவை. ஒரே சமயத்தில் நாட்குறிப்பு போலவும் தகவல் களஞ்சியம் போலவும் எண்ணச் செய்யும் மாயாஜால விளையாட்டை நிகழ்த்தி முகமூடிகளை கழற்றி மாற்றி அணிந்து வாசகரை திக்குமுக்காட வைக்கின்றன. Genre லேபிள்களை மாற்றி மாற்றி ஓட்டினாலும் அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன். எட்ட நின்று வேடிக்கை பார்த்தவாறே சம்பவங்களை வெறுமனே சொல்லிச் செல்லும் இவரது பாணியில் போதாமைகள் பூதாகரமாகத் தென்படுகின்றன. ஓர் இலக்கிய ஆக்கத்திற்குத் தேவைப்படும் நுணுக்கமான அவதானிப்புகளும் நுட்பமான விவரணைகளும் இவற்றில் இல்லை. ஓர் அந்நிய நிலத்திற்குள் முதன்முறை அலையும் மனிதனைக் கூட அந்த மண்ணையும் மாந்தரையும் கூர்ந்து கவனிக்க ஆசிரியர் அனுமதிக்க மறுக்கிறார். நைரோபி வீதி ஆள் அரவமற்று இருந்தது என்கிறார். இப்படிச் ‘சொல்வதற்கு’ கதைக் களத்தை எமக்கு பரிச்சயமான மண்ணிலேயே அமைத்திருக்கலாம். அரவமற்று ‘எப்படி’ இருந்தது என்பது முக்கியமற்றதாக ஆகிவிடும் பொழுது நைரோபி என்பது ‘ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் கதைகள்’ எனப் பீற்றிக் கொள்வதற்கான அசட்டுக்காரணம் மட்டுமே என்றாகி விடுகிறது.

மனித உணர்வுகள் வெளிப்படுவதற்கான அடிப்படை முகாந்திரத்தை எத்தனை முறை துழாவித் துழாவி தேடினாலும் கண்டடைய முடிவதில்லை. கதை நிகழ்புலங்களும் மனித முகங்களும் மாறுகின்றன. ஆனால் எல்லோரும் நம் பொதுப்புத்தியில் சிறைப்பட்டிருக்கும் பிம்பங்களின் ‘மாதிரிகளாக’வே (Samples) இருக்கிறார்கள். ‘எருமை மாடு மேலே மழை பெய்ஞ்சா எனக்கென்ன’ மாதிரி உப்புச் சப்பில்லாமல் வாழ்வை கடக்கிறார்கள். ஏனெனில் அத்தனை நபர்களையும் கண்காணித்தபடி நமக்கு கதை சொல்வது கிட்டப் பார்வை குறைபாடு உடைய ஒரே ஆள். இந்தக் கதை சொல்லும் முறையில் இவரால் இவ்வளவு தான் இயலும் போல. முப்பரிணாமமோ பஞ்சபரிணாமமோ எதிர்பார்க்கவில்லை. தட்டையாக இருப்பது சகித்துக் கொள்ள முடியாததாகி விடுகிறது என்கிறேன். எல்லாப் பெண்களின் இடைப் பிரதேசம் கூட, எந்த நாட்டுப் பெண்களானாலும் சரி எந்தக் காலத்தில் வாழ்ந்த பெண்களானாலும் சரி, மறைக்கப்படாமல் இருக்கிறது. இடைப் பகுதியின் நிறம் ஒருத்திக்கு பழுத்த பரு நிறத்திலும் இன்னொருத்திக்கு மண்புழு நிறத்திலும் இருப்பது மட்டும் ஆறுதல். அப்புறம் போனால் போகிறது என்று ஓரிரு இடங்களில் ஒன்றிரண்டு தடவைகள் கழுத்துப் பள்ளத்திற்கும் பன்றி இறைச்சியைப் போன்ற தொடைகளுக்கும் போய் வருகிறார். இந்தக் கதைகளை ‘முந்தி எழுதியது’ போலலல்லாத கதைகள் என முன்னுரையில் அ முத்துலிங்கம் குறிப்பிட்டாலும் ஒரே தொகுப்பிலேயே சில குறிப்பிட்ட விஷயங்கள் பல கதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதை கவனிக்க மறந்து விட்டிருக்கிறார். நினைவூட்ட வேண்டியது எம் கடமை.

வாசகர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து இரசிப்பார்கள் என்ற நம்பிக்கையிலோ ஓ ஹென்றி திருப்பம் வைக்கிறேன் பேர்வழி என்றோ ‘அவள் இன்னும் 118 வருடங்கள் காத்திருக்க வேண்டும்’, ‘மேலும் 21 வருடங்கள் பிடித்தன’ என சில கதைகளை முடிக்கிறார். (லூசியா & உடனே திரும்ப வேண்டும்). தன்னுடைய கதைகளில் இடம்பெறும் பழங்காலத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 14 வயது தான் இருக்க வேண்டும் என தனக்குத் தானே விதித்துக் கொண்டிருப்பார் போல. (லூசியா & புகைக்கண்ணர்களின் தேசம்). ஒரு வயது கூடியிருந்தாலோ குறைந்தாலோ என்ன குறை ஏற்பட்டுவிடப் போகிறது எனப் புரியவில்லை. பின் ஏதோவொரு வருடத்தை குறிப்பிட்டு ‘அந்த ஆண்டில் இதே போல நடந்தது என நினைத்துக் கொண்டேன்’ என பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கதைசொல்லி நினைத்துக் கொள்கிறார். இரண்டும் வெவ்வேறு தனித்தனிக் கதைகள் என்றாலும் பதினாறாம் நூற்றாண்டில் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்ட ரோபர்ட் நொக்சிற்கும் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் கதையை வேறொரு நிலப்பகுதியில் விவரிக்கும் கதை சொல்லிக்கும் சொல்லி வைத்தாற் போல 1611ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட பைபிள் தான் கிடைக்கிறது. (லூசியா & பத்தாவது கட்டளை). ரோபர்ட்டிடம் இருந்து பல கைகள் மாறி பல நூற்றாண்டுகள் கடந்து இடையே ஏழு கதைகளை வேறு தாண்டி கதை சொல்லியிடம் அதே பைபிளை எவரோ எவருக்கோ எழுதிய கள்ளக்காதல் கடிதத்துடன் காலம் சேர்ப்பித்ததை வாசக இடைவெளிகள் எனக் கருதி நாம் நிரப்ப வேண்டுமா போன்ற குழப்பங்களுக்கு வாசகர்கள் தங்களை ஒப்புவித்துவிடக் கூடாது.

‘பரிமளத்திற்கு 33 வயதிருக்கும் என்பதை ஒருவரும் சொல்லவே முடியாது’ என எவரும் கணிக்க முடியாத பரிமளத்தின் வயதை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் ஆசிரியரால் ‘பரிமளத்தின் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்’ எனத் தோராயமாகத் தான் குறிப்பிட முடிகிறது.(மன்மதன்) ‘விவரமான ஆள் தான்’ என நினைத்துக் கொண்டேன். (அ.மு.பாதிப்பு!) இதற்காவது ஆண்களின் சார்பாக ஒரு பொது மன்னிப்பை வழங்கி விடலாம். வேட்டை நாய் சிறுகதை சம்பந்தமே இல்லாமல் தொடங்கி இலக்கற்று திரிந்து மற்றுமொரு ‘நினைத்துக் கொண்டான்’ இல் முடிகிறது. இந்த ‘வேட்டை நாய்’ என்பது குறியீடாக இருக்கும் பட்சத்தில் விபரீதமான முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது. ஒரு கட்டிப்பிடி சம்பவத்திற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றை தழுவி  எழுதப்பட்ட பத்தாவது கட்டளை எனும் கதை மாதிரி ஒன்று சுந்தர ராமசாமியின் ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ போல பசப்பலாகி விடுமோ என பயந்து கொண்டிருந்தேன். பயந்ததை விட மோசமாக பிசுபிசுத்து விட்டது. கதையின் இறுதித் திருகலில் வாசகருக்கு உண்டாக வேண்டிய நம்பகத்தன்மை குறித்து ஆசிரியர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ‘இதெல்லாம் தனக்கு நேரவில்லை’ என திசை மாற்றுவது வடுவூர் துரைசாமி காலத்து டெக்னிக் ஐயா.

கதைகள் நெடுக Gimmicks-களுக்கு பஞ்சமே இல்லை. தான் வாசிக்க நேர்ந்த அறிவியல் தகவல்களை மையமாக வைத்து அவற்றை சுற்றி கதை பண்ணிவிடுவது ராஜேஷ்குமாரின் வழக்கம். அ முத்துலிங்கமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாரே என அங்கலாய்ப்பாக இருக்கிறது. எலிஸபெத் மகாராணி பதவி ஏற்றது, எல்லைக்கோடுகளுக்கு இடையே நிலவும் நேர வித்தியாசம் போன்று தகவல் துணுக்குகளாக வாசித்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கக் கூடியவற்றை நம்பி பல கதைகளை சமைத்திருக்கிறார். அவற்றை அந்தக் கதைகளில் இருந்து பிடுங்கி எறிந்து விட்டால் எஞ்சுவது எதுவுமில்லை. ‘கொடிக்கயிற்றில் மறந்து போய்விட்ட கடைசி உடுப்பு போல’ என சிற்சில இடங்களில் திடுக்கிட வைக்கிறார். சில இடங்களில் மென்னகையும் கையளவு சொற்களிலேயே முழுமையாக திரண்டெழும் ஒரு சில கதாபாத்திரங்களின் சித்திரமும் ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு போதுமானது அல்ல. அ முத்துலிங்கத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் போல ‘முன்பு எப்படியெல்லாம் நன்றாக எழுதியிருக்கிறார்’ என வாசகர்கள் நினைத்துப் பெருமூச்செறிய வேண்டியது தான்.

 

அமெரிக்கக்காரி, அ. முத்துலிங்கம்

வெளியீடு : காலச்சுவடு.

 

மௌனித்திருக்கிறது

– பெ விஜயராகவன்-

சதுர மதில் குளமது
இரவில் தனித்து
சலனமற்று
மௌனித்திருக்கிறது
பகலில் ரிஷிகளும்
முனிகளும்
இறங்காதிருக்கக்
கடவது.

 

மிட்டு மியா

காலத்துகள்

நான் ஆறாவது படிக்கும்போது எங்களுக்கு தெரிந்தவரொருவர் அவர் வீட்டு நாய் ஈன்ற குட்டிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தார். டாமி, ஜிம்மிகளுக்கு மத்தியில் வித்தியாசமாக, என் அம்மா குழந்தையாக இருக்கும்போது அவர்கள் வீட்டில் வளர்த்த ‘ஐவன்’ என்ற அல்சேஷனின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டதும், அந்தப் பெயரை கேட்பவர்கள் ஒரு கணம் துணுக்குறுவதும்,  எனக்கு பெருமிதத்தை அளித்தது.

பெயருக்கு  ஏற்றாற்போல்  ஆஜானுபாகுவாக,  சிங்கம் போல் பிடரியுடன் கம்பீரமாக இருந்ததாக  அம்மா குறிப்பிட்ட ஐவன் போல் இதுவும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டாலும், அது என்னவோ சராசரி நாய் போல்தான் வளர்ந்தது. வீட்டிற்கு அருகில் சின்ன சலனம் இருந்தாலும்  குறைப்பது ஆரம்பத்தில் பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும் என் வீட்டிற்கு பலமுறை வருபவர்கள், அடுத்த போர்ஷனுக்கு வரும் விருந்தாளிகள் என யாரை, எத்தனை முறை பார்த்த பின்பும்  குரைத்துத் தள்ளுவது அதன் மனநிலை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீட்டின் பின்புறத்தில் இருந்த எங்கள் போர்ஷன்களுக்கு வர இருள் நிறைந்த சந்துதான் வழி. எங்களுக்கு நேர் பின்வரிசையில் சிதிலமடைந்த கல்யாண மண்டபம், யாரும் குடியிருக்காத பேய் நடமாட்ட புரளிகள் உலவும்  பங்களா பாணி வீடு, காலி மனை. எனவே இப்படி ஒரு காவல் தேவைதான் என பக்கத்து குடித்தனக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும். ஐவனின் குரைப்பு குறித்து   பிரச்சனை எழவில்லை, அதுவும் இஷ்டம் போல் குரைத்துத் தீர்த்தது. அதன் சத்தம் முன்  சந்தையும் தாண்டி தெருவரை கேட்பதால், ‘அந்த கத்து கத்துனு கத்தற நாய் வீடு இருக்கற தெரு’ என்பது பெரிய மணியக்காரத் தெருவிற்கு அடையாளமாகிவிட்டது.

ஒரு நாள் சனிக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் நூலகம் செல்லக் கிளம்பியவன் தூங்கிக் கொண்டிருந்த ஐவனுக்கு  மூக்கில் முத்தமிட முயன்றேன். பயமோ, தூக்கம் கலைந்த கோபமோ, உறுமியபடி என் மீது பாய்ந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழ, ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவனை அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காதான் முகத்தில் ரத்தம் என்று தடுத்து நிறுத்தினார். ஐவனின் நகமோ பல்லோ பட்டு கண்ணிற்கு  மிக அருகில் கன்ன எலும்பில் காயம். எதனால் என்று சரியாக தெரியாவிட்டாலும் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என்றார் டாக்டர்.

தொப்புளைச் சுற்றி  பத்து பன்னிரண்டு ஊசி போடப்படுமே என்ற பீதியில் இருந்தவனுக்கு, நாய்க்கடிக்கு புதிதாக சந்தைக்கு வந்திருந்த, ஒரு முறை மட்டுமே போட வேண்டிய முன்னூற்றி ஐம்பது ருபாய் தடுப்பூசி கொஞ்சம் நிம்மதி அளித்தாலும் வேறொரு  சந்தேகம் உண்டானது. சமீபத்தில்தான் ‘கெனி பிக்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொண்டிருந்தேன்.  இரண்டொரு நாட்களில்  கன்னவெலும்பு கருநீல நிறமாகி , கொருக்குத் தட்டியிருந்தது.  இரண்டு வாரங்கள்  கழித்து அது உதிர்ந்து தோல் இயல்பான நிறத்திற்கு மாறும் வரை எங்கு சென்றாலும் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வு.

வீட்டில் ஐவனைக் கொடுத்து விடும் முடிவுக்கு  வந்து விட்டார்கள். அது தெரியாமல் செய்து விட்டது என்று நான் சொன்னதை யாரும் கேட்பதாயில்லை, கண் தப்பித்தது என் அதிர்ஷ்டம்தான் என்றும் அடுத்த முறை அது மீண்டும் கை கொடுக்காமல் போனால் என்ன ஆகும் என்றும் கேட்டார்கள். அழைத்துச் செல்பவர் வந்த அன்று ஓலமிட்டபடி இருந்த ஐவனை அவர் இழுத்துச் செல்வதை தெருமுனை வரை அழுதபடி சென்று பார்த்தேன். அன்று ஐவன் செய்த ரகளையைப் பற்றி பெரிய மணியக்காரத் தெரு சில நாட்கள் நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தது.  வீட்டிற்கு வந்தால் என் அப்பாவின் கண்ணும் கலங்கி இருந்ததுதான் ஆச்சரியம். அம்மா அழுவது எனக்கு புதிதல்ல, அதற்கான சூழ்நிலை அடிக்கடி என் வீட்டில் உருவாகும். என் வயது பையன்கள் அழுதும் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரியவர்களில் ஆண்கள்கூட அழுவார்கள் என்று அன்றுதான் தெரிந்தது.

அதன்பின் திருமணம் முடிந்து மகனும் பிறந்து பின், எந்த யோசனையோ, காரணமோ இன்றி   கிளி ஒன்றை வாங்குவது வரை  வளர்ப்பு  பிராணிகள் பற்றிய எண்ணம் தோன்றியதில்லை. என் பால்யத்தில் நடந்த, எப்போதோ மறந்திருக்க வேண்டிய மிக எளிய, ஆனால் மனதின்  ஆழத்தில் இருந்து அவ்வப்போது மேலெழுந்து வரும் நிகழ்வு ஒன்றுதான் கிளிக்கும் எனக்குமான ஒரே நேரடி சம்பந்தம்.

எங்களை ஆரியர்கள்  என்று  சொல்ல முடியாது, எங்கோ எப்போதோ என் குடும்பத்தின் குடிமரபில் எங்கும் நேர்வது போல் இயல்பான கலப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கு என் மூக்கையும் ஒரு  சான்றாக  நான் முன்வைப்பதுண்டு.  தாயைப் போல் தீர்க்கமான  நாசி இல்லாமல் என் மகனும்    ‘சப்ப மூக்கு சப்பான் பொம்மையாகிப்’ போனது குறித்து இரு குடும்பத்திலும் கொஞ்சம் வருத்தம்.      லவ் பர்ட்ஸ், பஞ்சவர்ணக் கிளி எனப் பலவகைப் பறவைகளை விற்றுக்கொண்டிருந்தவனிடம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு நான் கிளி வாங்க இவைகூட  தூண்டுதலாக இருந்திருக்கக்கூடும்.  இத்தனைக்கும் லவ் பர்ட்ஸ் பார்ப்பதற்கு  அத்தனை  அழகு, குரலும் இனிமை.  ஒரு கிளியின் விலைக்கு இரு லவ் பர்ட்ஸ் வேறு.

வீட்டிற்கு வந்தவுடன், கிளியை கொஞ்ச நேரம் ரசித்து விட்டு கூண்டை எங்கு மாட்டுவது, என்ன உணவு, யார் கொடுப்பது போன்ற, நான் அதுவரை யோசித்திராத நடைமுறை விஷயங்கள் குறித்து என் மனைவி முடிவுகள் எடுக்க ஆரம்பித்தாள். நானே உணவளிக்கும் பொறுப்பையும், கூண்டைச் சுத்தம் செய்யும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதாக சொன்னேன். பள்ளி முடிந்து வந்த  மகனுக்கும் கிளியைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷம். ‘அம்மா மூக்கு மாதிரி இருக்குலப்பா’ என்று அவன் சொல்ல என் மனைவிக்கு கோபமாக வெளிப்படும் சந்தோஷம். ‘இதுக்கு என்ன பேருப்பா’ என்று கேட்டவுடன் தான் அதை பற்றிய நினைவு வந்தது. என் பாட்டி, சிறுவயதில் தன் வீட்டில் கிளி வளர்த்தார்கள் என்றும் அதன் பெயர் ‘மிட்டு’ என்றும் சொன்னார்.

நான் குழந்தையாக இருக்கும்போது என் பாட்டி தன் பால்ய கால அனுபவங்கள் பலவற்றை சொல்லி இருக்கிறார். பத்து பன்னிரண்டு வயது வாக்கில்  அவர்  மிகப் பெரிய கதைசொல்லி என்பது புரிந்தது. ஆனால் அதற்குப் பின் இத்தனை வருடங்கள் கழித்தும், அவர் சொல்வதில் எது உண்மை, பொய் என்பது எனக்கு பிடிபடுவதே இல்லை என்பதால் அவர் சொல்வதெல்லாம் பொய் என்ற இடத்திலிருந்தே ஆரம்பிப்பது என் வழக்கம்.  கிளி விஷயம் எப்படியோ,  இப்போது  பெயர்தான் முக்கியம் என்பதாலும், அவர் சொன்ன பெயர் எல்லோருக்கும் பிடித்துப் போனதாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ‘மிட்டு’வை  இன்னும் வாஞ்சையாக ‘மிட்டு மியா’ என்று    அழைக்கலாம், வட மாநிலங்களில் இந்த உருது பின்னொட்டு சேர்க்கும் வழக்கம் உண்டு என்ற கூடுதல் தகவலையும் பாட்டி அளித்தார்.  வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்தவர்தான் என்றாலும் வழக்கம் போல் இது குறித்தும் சந்தேகம் எழத்தான் செய்தது.

எழுந்தவுடன் ‘குட்மார்னிங்’, படுக்கும் முன் ‘குட்நைட்’ என மிட்டுவுடன் ஒட்டிக்கொண்டுவிட்ட என் மகன் பெரிதாக முடியாவிட்டாலும் கூண்டைச் சுத்தப்படுத்துவதில் எனக்கு உதவினான். கூண்டின் சிறு கதவைத் திறந்து உள்ளே ‘துவரம் பருப்பு’, தண்ணீர் கிண்ணங்களை வைப்பது அவனுக்கு ஒரு சாகசம். மிட்டு உண்டு முடித்து மூக்கை கூண்டின் கம்பிகளில் தேய்க்கும்போது, ஒற்றைக் காலை மட்டும்  கொண்டு கம்பியை பற்றிக் கொண்டு நிற்கும்போது கிளர்ந்து சத்தம் போடுவான்.

அனைவருக்கும் மிட்டுவை பிடித்துப் போனாலும், அது என்னவோ விலகியே இருந்தது. முதலில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் வருத்தம் என்று நினைத்தாலும் அப்படியல்ல  என்று விரைவில்  புரிந்தது, அது உண்பதில் எல்லாம் எந்த சுணக்கமும் இல்லை. மிட்டுவிடம் எப்போதும் ஒரு அலட்சிய தோரணை, உள்ளே வைக்கப்படும் உணவையும் திறை  ஏற்றுக்கொள்ளும் அரசனின் பாவனையுடன்தான் உண்ணும். என் அறையின் ஜன்னலோரத்தில் பறவைகளுக்கு வைக்கப்படும் தானியங்களை உண்ண அவை வரும்போதுகூட எந்த உணர்ச்சியையும் காட்டாது. இரவு நேரத்தில்  என் மகன் தன் பாடங்களை அதற்கு படித்துக் காட்டும்போது மட்டும், கூண்டின் அருகில் வந்து  ஒரு கண்ணை மூடியபடி கவனிப்பது போல் நின்றிருக்கும்.

ஒரு மாதம் கழிந்து கிளி எப்போது பேசும் என்ற கேள்வியை மகன் எழுப்பினான். அதற்கு தொடர்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றும், மிளகாயை அதன் நாவில் தேய்த்தால் விரைவில் பேசும் என்றும், தாங்கள் வளர்த்த கிளி அவ்வாறுதான் பேசியது என்றும் என் பாட்டி கூறினார். பயல் அதைச் செய்ய வேண்டும் என்றான், அவனுக்கு பத்து வயதாக இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. யார், எப்படி  மிளகாயை  அதற்கு தருவது? பாட்டி நடுங்கும் கையுடன் அப்படியே மிளகாயை நீட்ட அன்று மிட்டு என்ன மனநிலையில் இருந்ததோ பாட்டி கொஞ்சம் அசந்திருந்தால் விரலைப் பிடுங்கி விட்டிருக்கும்.’கோணக்கேடு பிடிச்சது, வயத்தாலி  சனியன்’ என்று  திட்டித் தீர்த்த பாட்டி அரைத்து விழுதாகக் கொடுக்கலாம் என்று அடுத்த யோசனையை  சொன்னார்.  மிளகாய் சாப்பிட்டு ஒத்துக்கொள்ளாமல் கழிய ஆரம்பித்து இறந்து விடப்போகிறது, என்று என் மனைவி கூற அந்த யோசனையை கைவிட்டோம்.

ஆங்கிலமா, தமிழா என்று யோசித்து, பேச்சு வழக்கில் இருப்பது போல் இரண்டிலும்  கற்றுத்  தருவது, பின் மிட்டுவின் சமர்த்து என்று முடிவு செய்து, ‘குட்மார்னிங்’, ‘வணக்கம்’, ‘வெல்கம்’ என்று கலந்து கட்டிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.  நானொருவன் அங்கு கத்திக் கொண்டிருப்பதை கவனிக்காமல், நான் அங்கில்லாதது போலவே மிட்டு நடந்து கொண்டது.  இரவு நேரங்களில் அதற்கு தானறிந்த சில மாயாஜாலக்  கதைகளை என் மகன் சொன்னதில்  மந்திரவாதியின் உயிர் கிளியில் இருந்து குருவிக்கு குடிபெயர்ந்து, குருவி செத்தது. மிட்டு எப்போதும் போல் தலை சாய்த்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்ததே ஒழிய பேச மட்டும் செய்யவில்லை.

என் பாட்டி வேறு, தங்கள் ஊரில் கிளிகள் இந்த நேரத்தில் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் என்றும், ஒன்று இங்குள்ள கிளிகள் சாமர்த்தியசாலிகள் அல்ல, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள்  திறமையானவர்கள் இல்லை என்று பொருள்படுமாறு சொல்ல ஆரம்பித்தார். பாட்டியின் சொல்வன்மையை நான் நேரடியாக உணர்ந்தவன். மகனுக்கு என் திறமை மீது சந்தேகம் வந்து விடப் போகிறது என்று கிளியைப் பேச வைத்தல் பற்றி இணையத்தில் தேடி படித்து அவற்றில் சொல்லி இருந்தது போல் சில முயற்சிகள் செய்தேன்.  மகன் பேச ஆரம்பித்த காலகட்டத்தில் அவனுக்குக்கூட நான் இத்தனை சிரத்தையாக வார்த்தைகள் சொல்லிக் கொடுக்க்கவில்லை என்பது என் மனைவியின் அவதானிப்பு. எதுவும் பலன் அளிக்கவில்லை, மிட்டு கல்லுளிமங்கனாகத்தான் இருந்தது.

அடுத்த முயற்சியாக அறையில் யாரும் இல்லாபோது நான் அதற்கு வசைச் சொற்களையும், ஆபாச வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அதை கவனித்த என் மனைவி கடுப்பாகி விட்டாள். நல்லவற்றைவிட தீயவைதான் எளிதில் பதியும் என்பதால் அப்படி செய்தேன் என்று நான் சொன்னதற்கெல்லாம் அவள் சமாதானம் ஆகவில்லை.  நான் சொல்வதை  மகனும் கேட்டு அப்படியே பேச ஆரம்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று அவள் சொன்னது நியாயம் என்பதால் அந்த முயற்சியை  நிறுத்தினேன்.

மிட்டு மகா கர்வியாக அல்லது படு முட்டாளாக இருக்க வேண்டும். அது அந்த வசை, ஆபாசச் சொற்களில் இருந்துகூட ஒரு வார்த்தையையும்   கற்றுக்கொள்ளவில்லை.  ஏன் மிட்டு  நல்ல, பண்புள்ள கிளியாக இருக்ககூடாதா என்று என் மனைவி சொன்னதை நான் ஏற்கவில்லை, அதற்கும் பண்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது என்பது என் வாதம். கிளி மீதுள்ள என் ஆர்வம் குறைய ஆரம்பிக்க, அதை பராமரிக்கும் பொறுப்பு  என் மனைவியிடம் சென்றது.  மகனுக்கு நீதானே பொறுமையாக சொல்லிக் கொடுத்தாய், என்று அதையும் அவள் தலையில்  கட்டி விட்டேன்.  யாருக்கும், எதற்கும் மிட்டு மசிந்து கொடுக்கவில்லை, அதற்கு  சிறிதளவேனும் ஒட்டுதல் இருந்ததாக நாங்கள் நினைத்திருந்த மகனுக்கும்கூட. ஒவ்வொரு இரவும், விடுமுறை நாளிலும் அவன் அதன் முன்  பொறுமையாக ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை.

இந்த நேரத்தில் மிட்டுவை விடுதலை செய்து விடலாமா  என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன். மனைவியிடம் பேசிப் பார்த்தேன், முதலில் ஒப்புக்கொள்ளாதவளை, கிளிக்கு ஆயுசு குறைவு, அது இறந்தால் மகன் மிகவும் வருந்துவான், குழந்தையின் மனதை  பாதிக்கக்கூடும்,  எனவே இப்போதே அதை வெளியே விட்டு விடலாம் என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லி  என் வழிக்கு வர வைத்தேன். மகனிடம் இந்தப் பேச்சை ஆரம்பித்தபோது அவனும் ஒப்புக்கொள்ளவில்லை. கிளியை கூண்டில் அடைப்பது பாவம் என்று நான் இறுதியாக  சொன்ன காரணத்தில் இருந்த அப்பட்டமான பொய்யை  அவன்  உணர்ந்திருக்கக் கூடும். அதை வெளிப்படையாக சொல்லும் வயதில்லை அவனுக்கு. ஆனால் ‘மிட்டுக்கு  ப்ளை  பண்ண தெரியும்லபா’ என்று மட்டும் கேட்டான்.

அந்த ஞாயிறு அன்று காலையிலேயே மாடிக்குச் சென்றேன். கலங்கிய கண்களுடன் இருந்த மனைவி, வர மாட்டேன் என்று சொல்லி விட்டாள், மிளகாய் கொடுக்க முயன்ற சம்பவத்திற்கு பின் மிட்டு மேல் கோபமாக இருந்த பாட்டிகூட கொஞ்சம் கனிந்திருந்தார். முகத்தில் சுரத்தே இல்லையென்றாலும் மகன் மட்டும் வந்தான். இறுதி நேர ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தி கூண்டை திறந்தேன். முதலில் புரியாமல் வழக்கம் போல்  உள்ளேயே அமர்ந்திருந்த மிட்டு பின் வெளியே வந்து சில அடிகள் எடுத்து வைத்து  திரும்பிப் பார்க்காமல் பறந்தது.  அது கண்ணில் இருந்து மறைந்த பின்னும் தொடுவானத்தை பார்த்தபடி இருவரும் நின்று கொண்டிருக்க ‘மிட்டு  வீட்டுக்கு போய் சேந்துடும்லபா’ என்று கேட்டான். எனக்கோ, ஐவன்  வீட்டை விட்டுச் சென்று  சில நாட்கள் கழித்து புதிய இடத்தில் சந்தோஷமாக இருப்பதாக கேள்விப்பட்டபோது ஏற்பட்ட அதே  ஏமாற்ற  உணர்வு.

தொடர்தல்

ஸ்ரீதர் நாராயணன்

திருப்பங்களை தொலைத்தாலும்
நீண்டதொரு நடையில்
மீண்டும் வந்து சேர்ந்துவிடுகிறேன்.

புழுக்கமான இறுக்க பாதைகளிலும்
மெல்லிய மூச்சிழுப்பில்
காற்றுக்கான வெளியை
தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

பாதையோரத்து சாளரங்கள்
சாத்தப்படும் சத்தங்களை சமன்செய்ய
விரிசல் வழியே வழியும்
புன்னகைகளை உருவகிக்க முடிகிறது.

விசித்திர வடிவங்கள் காட்டியபடி
நீண்டு பின்தொடரும்
என் நிழல்கள்
சற்றேனும் இப்பூமியை
குளிர்வித்திருக்கும்.

அரசின்மைவாதி – நரோபா

நரோபா

தம்பி நீங்க?
நா கல்டர் ஆவணும்
மூணாவது வரிசை டோக்கன் நம்பர் 39
அடுத்தாப்ல நீங்க?
நான் டாக்டர் சார்
ரெண்டாவது வரிசை டோக்கன் நம்பர் 78
நீ சொல்லுப்பா?
நான் நானாகவே இருக்க வேண்டும்
மொத வரிசை 334 ஆவது டோக்கன்
நீ என்னப்பா?
நீங்க யாரு சார் எனக்கு டோக்கன் கொடுக்க?
தம்பி வா உக்காந்து சத்த நேரம் டோக்கன் போடு டீ குடிச்சிட்டு வாரேன்