(நியூ யார்க்கர் இதழில் காரத் கிரீன்வெல் எழுதிய கட்டுரையின் தமிழாக்க வடிவம்)
தி எகானமிஸ்ட் பத்திரிக்கையில் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “மகிழ்ச்சியின் புவிப்பரப்பு” என்று ஒரு கட்டுரை வந்தது. அப்போதைய ஐரோப்பிய யூனியனில் ரோமானியாவும் பல்கேரியாவும் புதிதாய் இணைந்திருந்தன. ஐரோப்பிய யூனியனில் மிகவும் மோசமாகப் பேசப்பட்ட பல்கேரியாவைத்தான் “உலகின் மிகவும் சோகமான இடம்” என்று எகானமிஸ்ட் கட்டுரை பிரகடனப்படுத்தியது.
அதன்பின் சரியாக ஓராண்டுக்குப்பின், பல்கேரியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜியோர்கி கொஸ்போதினோவ் “துயரத்தின் இயற்பியல்” என்ற தனது இரண்டாம் நாவலை எழுதினார் (இவ்வாண்டு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஓப்பன் லெட்டர் புக்ஸ் பதிப்பிக்கிறது). எகானமிஸ்ட் கட்டுரைக்கும், கிழக்கு ஐரோப்பிய மனநிலை குறித்து பரவலாய் அறியப்பட்ட தேய்வழக்குகளுக்கும் ஒருவகையில் இது தன் எதிர்வினை என்று ஜியோர்கி கொஸ்போதினோவ் நேர்முக உரையாடல்களில் தனது இந்த நாவலின் இடத்தை வரையறை செய்து கொண்டார். “அடிப்படையில் என் கதையின் நாயகன் ஒரு கதை சொல்ல முயற்சி செய்கிறான். குறிப்பாக இந்த இடத்தைப் பற்றி கதை சொல்ல முற்படுகிறான், இது மிகவும் சோகம் நிறைந்த இடம். அவன், தன் சோகங்களை எதிர்கொள்ள முயற்சி செய்கிறான். அல்லது, குறைந்தபட்சம் அவற்றை ஓர் ஒழுங்குக்குக் கொணர்ந்து விவரிக்க முயற்சி செய்கிறான்”. (more…)
பொட்டுப் பொட்டாய்
தூர்த்தும் மேகமழைக்குள்
கை நுழைத்துச்
சில்லிடுகிறாள்
(அப்போது துள்ளிக் குதிப்பதற்காகவாவது மழை நீளலாம் என்று தோன்றும்)
தோழிகள்
வெளிர் நீல நிற மழை வானத்தின்
குறுக்காய்
பணிவாய்க் குனிந்து
நிறங்களமைக்கிறார்கள்
அம்மாவின் வானம்
பாதுகாப்பானது
கருணை மிக்கது
வெயிலின் உக்கிரத்தை
திரைப்பது
இரைஞ்சுதலையும் கூடுமானவரை
பரிவோடு அணைத்துக்
கொண்டும் செல்வது
வண்ணாத்திப் பூச்சியின்
மென் வருகையை நினைவூட்டுவது
விளையாடும்
சிறு குழந்தை போல
வெள்ளந்தித்தனமானது
அதில்
கூடும்
குளிர் தரும்
வெண் புகை
அடர்
கரு மேகம்
தாழ்வாய்
உலாத்தும்
கூரலகு தவிட்டு நிற நீள் றெக்கை
கொடும்
பருந்து.
சென்ற வாரம் பதாகையில் ‘பாகேஸ்ரீ’ என்ற என் சிறுகதை வெளியானது. அதில் பல ராகங்களின் குறிப்பும் பாடல்களின் குறிப்பும் வரும். கதையைப் படித்த நண்பர்கள் சிலர் இந்த பாடல்களுக்கும் ராகங்களுக்கும் சுட்டி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் இங்கு இந்த ராகங்களை பற்றியும் பாடல்கள் பற்றியும் சிறுகுறிப்பு எழுதி சுட்டி தருகிறேன்.
ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு கதைசொல்லி முதலில் பாடும் ராகம் பாகேஸ்ரீ: இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம். கர்நாடக இசைக்கு வடக்கேயிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. திரை இசையில் பல அருமையான பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருக்கின்றன. கதையில் வரும் பாகேஸ்ரீ பாடல்கள் இவை:
– ஜாக் தரத் எ இஷ்க் ஜாக். இந்த பாடல் ‘அனார்கலி’ என்ற படத்தில் வந்தது. இதற்கு இசையமைத்தவர் சீ.ராமச்சந்திர. இந்தப் படப்பாடல்கள் அந்த காலத்தில் இந்தியா முழுவதும் முழங்கின. குறிப்பாக லதா பாடிய ‘எ ஜிந்தகி உசிகி ஹய்’ பாடலும் இந்தப் பாடலும் எல்லோராலும் விரும்பப்பட்டன. ஹேமந்த் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் சேர்ந்து பாடிய ஜாக் தரத் எ இஷ்க் ஜாக்’ பாடலை இங்கு கேட்கலாம்:
– சித்சோர் என்ற படம் சின்ன பட்ஜெட் படம் ஆனால் பெரிய வெற்றி பெற்ற படம். அந்த வெற்றிக்கு உறுதுணையாக அந்த படத்தின் பாடல்கள் இருந்தன. ‘கோரி தேரா காவ்ன் படா ப்யரா’ பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஜேசுதாசுக்கு ஹிந்தியில் அழியாப் புகழை இந்தப் படப்பாடல்கள் பெற்றுக் கொடுத்தன. ரவீந்திர ஜெயின் இசையில் ஜேசுதாஸ் மற்றும் ஹேமலதா பாடிய பாகேஸ்ரீ ராக பாடல் இங்கே:
– மாயா பஜார் ஓர் அழியாக் காவியம். நான் இதை தெலுங்கில்தான் பார்த்திருக்கிறேன். ரங்கா ராவின் நடிப்பும் சாவித்ரியின் நடிப்பும் அருமையாக இருக்கும். அதுவும் சாவித்திரி கடோத்கஜன் போல் நடிக்கும்பொழுது ஏன் அவர் சினிமா உலகில் அவ்வளவு பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் என்று நமக்கு தெரியும். அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். ‘கல்யாண சமையல் சாதம்’ அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்தப் படத்திற்கு ராஜேஷ்வர் ராவ் முதலில் இசையமைத்ததாகவும் பிறகு ஏதோ காரணத்தால் அவர் விலகி கண்டசாலாவின் பெயர் இசையமைப்பாளராக வந்தது என்றும் சொல்வதுண்டு. மாயா பஜார் படலை இங்கு கேட்கலாம். கண்டசாலாவும் லீலாவும் பாடியது:
– தமிழ் திரையிசையில் பல அருமையான பாகேஸ்ரீ ராக பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் இன்றும் பாகேஸ்ரீ என்று சொன்னால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வரும் பாடல் ராமு படத்தில் வந்த ‘நிலவே என்னிடம்’தான். பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம், எம்.எஸ்.வி.யின் அருமையான மெட்டு, பி.பி. ஸ்ரீனிவாசின் மென்மையான குரல். இவை எல்லாம் சேர்த்து நம்மைச் சொக்க வைத்து விடுகின்றன. பாடல் இங்கே கேட்கலாம்:
– பாகேஸ்ரீ ராகத்தை அற்புதமாகப் பாடியவர்களில் கிஷோரி அமோன்கர் ஒருவர். பல வருடங்களுக்கு முன் அவர் ரிலீஸ் செய்த ரெகார்டில் ஒரு பக்கம் பாகேஸ்ரீயும் மறுபக்கம் பூப் ராகமும் (மோகனம்) இருக்கும். இது ஒரு அற்புதமான இசைத்தட்டு. ஹிந்துஸ்தானி இசை அறிந்தவர்கள் இதைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று அடித்துச் சொல்லலாம். விளம்பித் க்ஹையால் மற்றும் திருத் பாடியிருப்பார். இங்கே கேட்கலாம்:
– இந்த பாகேஸ்ரீ ரகத்தை அற்புதமாக கையாண்ட இன்னொரு இசைக் கலைஞர் அமீர் கான். இவருடைய பாடும் பாணிக்கு இது போன்ற ராகங்கள் வெகு உகந்தவைக இருந்தன. ஒரு அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு ஸ்வரத்தையும் அனுபவித்து பாடும் இவர் ஹிந்துஸ்தானி இசையின் மாமன்னர்களில் ஒருவர். அவர் பாடிய பாகேஸ்ரீ இங்கே:
தாகூர்ஸ் ஹோம் ஸ்கூலில் பேப்பர் திருத்தும்பொழுது கதைசொல்லி பாடும் ராகம் பூர்ய தனஸ்ரீ. இதை கர்நாடக இசையில் பந்துவராளி என்கிறோம். இந்த ராகத்திலும் தமிழ் திரைசையில் பல பாடல்கள் வந்திருக்கின்றன.
– மிகவும் பிரசித்தி அடைந்த ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் பல்லவி பந்துவாரளியில் அமைக்கப்பட்டது. (இந்த பாடல் ராகமாலிகை பாடல். சரண்த்தில் ராகம் மாறும்) :
– ரங்கீலா படத்தில் வரும் ‘ஹே ராமா’ பாடல் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இந்திய முழுக்க முழங்கிய இந்த பாடல் ரஹ்மானுக்கு ஹிந்தி பட உலகில் உயர்ந்த இடத்தை கொடுத்தது:
– ஹிந்துஸ்தானி இசையில் பூரிய தனஸ்ரீ எப்படி இருக்கும்? பாரத் ரத்னா பீம்சென் ஜோஷி பாடுகிறார்:
– கர்நாடக சங்கீதத்தில் பந்துவராளி எப்படி இருக்கும்? இன்னொரு பாரத் ரத்னா, எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுகிறார்:
மேஹபில் ஒன்றில் குல்கர்னியின் மகனும் கதைசொல்லியும் பாடுகிறார்கள். கதைசொல்லி மால்கௌன்ஸ் ராகத்தில் அமைந்த ஹிந்தி சினிமா பாடலை பாடுகிறான். இந்த ராகத்தை கர்நாடக இசையில் ஹிந்தோளம் என்பார்கள். அந்த பாட்டு இதோ. நவ்ஷாத் இசையில் முஹம்மத் ரபி பாடிய பாடல்:
மழை பெய்து கொண்டிருக்கும்போது பக்கத்து இருக்கையில் இருப்பவன் கதைசொல்லியின் பாட்டைப் புகழ அவர் பாட ஆரம்பிக்கும் ராகம் மியான் கி மல்ஹார். இது மழைக்கால ராகம். கர்நாடக சங்கீதத்தில் இந்த ராகம் கிடையாது. ஹிந்துஸ்தானியில் இதை பலர் பாடியிருக்கிறார்கள். ஹிந்துஸ்தானி இசையில் எல்லோருக்கும் பிடித்த ராகம் இது.
– இதில் முக்கியமான பாடல் படா க்ஹையால் ‘கரீம் நாம் தேரோ” இதை பல பிரசித்தமான பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அமீர் கான், பீம்சென் ஜோஷி, கிஷோரி, மன்சூர் மற்றும் பலர். இதில் என்னை மிகவும் கவர்ந்தது அமீர் கான் பாடியதுதான்.
– ‘மேகா தாகே தாரா என்னும் வங்காள படத்தில் இதே பாடல்
– ‘போலே ரே பபிஹரா’ என்ற சோட்டா க்ஹையால் இந்த ராகத்தில் புகழ்பெற்ற ஒன்று. அதை குமார் கந்தர்வா பாடுகிறார்:
– குட்டி என்ற படத்தில் வந்த பிறகு ‘போலே ரே பபிஹரா’ இன்னும் புகழ் பெற்றது. வாணி ஜெயராம் என்ற பாடகியை இந்தியா முழுவது அறிமுகம் செய்து வைத்த பாடல் இது. வசந்த் தேசாய் இசையமைப்பு:
‘இவன் கான் சாப் போல பாடுகிறான்’ என்று குல்கர்னியை வியக்க வைத்த பாட்டு ‘கா கரூன் சஜனி’. படே குலாம் அலி கான் பல தும்ரிகளுக்கு அதிபதி. அவற்றில் முக்கியமானவை ‘ஓம் தத் சத்’ மற்றும் ‘கா கரூன் சஜனி’. அவர் ‘ஓம் தத் சத்’ பாடாமல் எந்த கச்சேரியும் முடிக்க முடியாது என்று படித்திருக்கிறேன். என்ன அருமையான குரல். உணர்வுப்பூர்வமான பாடல். ‘கா கரூன் சஜனி’ :
இதே முதல் வரியை எடுத்துக்கொண்டு சுவாமி என்ற படத்தில் அமைக்கப்பட்ட பாடல். ஜேசுதாசின் புகழ் பெற்ற ஹிந்தி பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் வந்த காலத்தில் தினமும் ரேடியோவில் ஒலித்த பாடல்.
கான் சாப் அவனிடம் வாங்கிய சத்தியத்தை எண்ணி கதைசொல்லி பாடும் ராகம் தோடி. ஹிந்துஸ்தானி இசையில் ராக் தோடி என்று அழைக்கப்படும் ராகம் கர்நாடக இசையில் சுபபந்துவராளி என்று அழைக்கப்படுகிறது. (கர்நாடக இசையிலும் தோடி என்ற ராகம் உண்டு ஆனால் அதற்கும் ஹிந்துஸ்தானி தோடிக்கும் சம்பந்தம் இல்லை).
சுபாவமா நான் ஒரு தீவிர வாசிப்பாளன், எழுதப்படிக்க தெரிந்த நாளிலிருந்து கன்னித்தீவு சிந்துபாத் முதல் தொடங்கியது, இன்றைய ஜெயமோகன் வரை கிடைப்பதையெல்லாம் படிப்பேன். நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது அவரின் நாஞ்சில் நாட்டு கதைகள் பெரும்பாலும் எங்க ஊர் பேச்சுத்தமிழை ஒத்திருப்பதாலும், அவரது நாஞ்சில் நாட்டு மொழியில் உள்ள சொல்வழக்குகள், விவசாய அனுபவங்கள், அனைத்தும் ஏதோ ஒரு அன்னியோன்யத்தை எனக்கு உண்டாக்கியது.
அடுத்து நானும் பம்பாயில் லேபராக வேலை செய்திருக்கிறேன். அவரது பம்பாயை தளமாக கொண்ட நாவல்களில், கதைகளில் வரும் பம்பாயின் சந்துகளிலிலும். பொந்துகளிலும் நானும் நிஜமாகவே நடந்திருக்கிறேன், எஸ் கே முத்துவாகவும் சண்முகமாகவும் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறேன். இதுவும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள்மீது எனக்கு மிகுந்த அன்னியோனியத்தை உண்டாக்கியது..
இதனால் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை இணையத்தில் தேடி தேடி வாசிக்க தொடங்கினேன். இணையத்தில் வாசிப்பது என்றால் எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.. அன்றன்று கிடைக்கும் கதைகள் , கட்டுரை முதலியவைகளை கணிணியிலேயே நேரடியாக படிக்காமல் , அவற்றை வேர்ட் பைலில் தொகுத்து ,ஒரு 30, 40 பக்கமாக சேர்த்து பிரிண்ட் எடுத்து தினமும் படிப்பது என் வழக்கம். அப்படி தொகுக்கும்போது நாஞ்சிலின் கதைகளை தனி பைலாக தொகுக்க ஆரம்பித்தேன்.
சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது பிரபலமாக தொடங்கியது. அந்த நேரத்தில் நானும் பிளாக் தொடங்க ஆசைப்பட்டேன். ஆனால் எழுத என்னிடம் சரக்கு இல்லையே?
அந்த நேரம் இணையத்தில் கிடைக்கும் நாஞ்சில்நாடனின் எழுத்துக்களையும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களையும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுத்தால் என்ன எனும் எண்ணம் தோன்றியது.. நாஞ்சில்நாடன் பிளாக்கை தொடங்கினேன்.
அந்த நேரம் நாஞ்சிநாடனை எனக்கு நேரடியாக பழக்கம் கிடையாது. ஏதோ என்போக்கில் நான் தொகுத்துக் கொண்டு இருந்தேன்.. இந்த பிளாக்கை தொடங்கிய சில மாதங்களில் நாஞ்சிநாடனுக்கு சாஹித்ய அகாதமி விருது கிடைத்தது. நாஞ்சிலின் எழுத்துக்களை படிக்க விரும்பிய வாசகர்களுக்கு என் தளம் ஒரு சிறந்த வாசலாக தொடங்கியது..
நாஞ்சிலுக்கு சாஹிய அகாதமி விருது கிடைத்ததை பாராட்டி ஜெயமோகனின் விஸ்ணுபுரம் வாசகர் குழு சென்னையில் பாராட்டுவிழா நட்த்தினார்கள். எனக்கும் அழைப்பு வந்தது. விழாவுக்கு முன்தினமே சென்று அவர்களுடன் தன்கினேன். அன்றுதான் நான் முதன்முதலாக நாஞ்சில்நாடனை சந்தித்தது..
”ஓஓ.. நீங்கதானா எஸ் ஐ சுல்தான் என்பவங்களா? வணக்கம்!”
””ஓஒ.. நீங்கதான் நாஞ்சில் நாடன் என்பவங்களா?? வணக்கம்!!” என எங்கள் நட்பு தொடங்கியது..
நாஞ்சிநாடனின் வாசகனாக இருந்த நான் அன்றுமுதல் நாஞ்சில்நாடனின் நட்பு வட்டத்தில் இணைந்தேன்.
ஒரு மூத்த அண்ணன்போல பாசாங்கில்லாத அவரது பழக்கவழக்கங்கள், நட்பை பாசமாக வளரச் செய்தது.
எனக்கு வேறு பொழுது போக்கில்லை. நண்பர்கள் கிடையாது. சாஹித்ய அகாதமி விருதுக்கு பின் நாஞ்சிநாடனை குறித்த செய்திகள் தினமும் வரத் தொடங்கின.. நானும் தளவேலைகளில் பிசியானேன்..
ஒரு கால கட்டத்துக்கு பிறகு அவரது நாவல்கள், கதைகளை நானே ஸ்கேன் எடுத்து பிளாக்கில் பதிக்க தொடங்கினேன். நல்ல வரவேற்ப்பிருந்தது. இருக்கிறது.
இன்று நாஞ்சில்நாடனின் எழுத்துக்களில், அவர் குறித்த செய்திகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை இந்த நாஞ்சிநாடன் தளத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விசயம். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கிறது என்பது எனக்கும் பெருமையான விசயம்..