கவிதை

கடற்கரை ஓரம்

சிகந்தர்வாசி

முடிவில்லா கடல்

சிறு பகுதியில் சிவப்பு நிறம்

தங்கக் கரங்கள் கொண்டழைக்கும் கடல் நுரை

ஓயாத உரையாடல்

எல்லையற்ற கடலையும் வானையும்
அளக்கப் பறக்கும் சிறு பறவை

என் அருகே யாரோ
விட்டுச் சென்ற கால் தடங்கள்

A Poem by Kalyanji

IMG_0248

 

Confounding
which is whose
One over one
upon the sands
Duck footprints
by the hundreds
in a trail
shepherded by
yet another trail
of a man’s footprints
that walk alone.
The river walks along
for company.

தண்டட்டி

ஸ்ரீதர் நாராயணன் 

thandatti
சிட்டிகை திருநீறு
சிறு நெட்டி முறிப்பு
விரிந்த புன்னகை
வெள்ளையான வாழ்த்துரை

‘தொலைதூரம் போவறவஹ
காத்து கருப்பு அண்டாம
சாக்கிரதையா போயிட்டு வரனும்’

கையைத் தட்டிவிட்டுக் கொண்டு
முந்தானையுடன் விபூதிப்பையையும்
இடுப்பில் செருகிக் கொண்ட
தயிர் விற்கும் அம்மாளின்
காது தண்டட்டி ஆடுகிறது

நெகிழ்ச்சியை வெளிக்கிடாமல்
நாசூக்காக நாணுகிறேன்.
வளர்ச்சியின் அடையாளமென
விடுபட்டு விலகி ஓடுகிறேன்.

காப்பிக்கடையில்
சில்லறை பாக்கி கொடுக்கும்
கொரியன் அம்மாளின்,
நீளக்காதுகளில் கனத்த தோடுகள்.
கண்பற்றி நிற்கின்றன
நெடிய கணங்களுக்கு.

யானை இல்லா மன்றம்

சிகந்தர்வாசி

என்னை மறந்துவிட்டிருந்த கணவரை தினமும்
– குளிப்பாட்டி
– சோறூட்டி
– தேநீர் கொடுத்து
– நடைப்பழகவைத்து
– தூங்கவைத்த
எனக்கு அவர் மறைவு சற்று நிம்மதியை
கொடுத்திருக்கவேண்டும்

யாரோ கலைத்துப் போட்ட அமைதி

ஜிஃப்ரி ஹாசன்

மெண்ணுணர்வுகளோடு
ஒரு பூவையும், சில பறவைகளையும்,
கொஞ்சம் நட்சத்திரங்களையும்
இரசித்தபடி
ஒரு மெளனத் தவத்துள்
புதையுண்டு போகிறான்
“என்னை விட்டு விடு
மௌனத் தவத்துள் நான் இன்னும் சில யுகங்கள்
கனவுகள் காண வேண்டும்”
எனப் புலம்புகிறான்
எதையோ வெற்றிகொள்ளும்
உக்கிர வேட்கையோடும்
தீயின் கனலோடும்
இதோ ஒரு சந்நியாசி இருக்கிறான்
வாழ்க்கை பரிசளிக்கும் தண்டனைகளை
பூக்களை இரசிப்பது போல் இரசிக்கும்படி
கடவுள் அவனுக்கு கட்டளை இட்டார்
எந்த ஆரவாரங்களுக்கும்
அவன் தவம் கலைதல் கூடாதென்று
கடவுள் அவனை ஏவினார்
எனினும்
கறைபடிந்த காலத்தில்
அடையாளமற்ற சில அருவருப்பான
குரல்கள் அவன் அமைதியைக் குலைத்தன
எந்த அர்த்தமுமற்ற பொய்யான சொற்களால்
பகடிகளால் நிறைந்த அர்த்தமற்ற
ஆரவாரங்களால்
அவன் தவம் சிதைந்திற்று
வாழ்க்கை, நேசிப்பிலிருந்து
உன்னதங்களிலிருந்து
தவத்திலிருந்து
புனிதங்களிலிருந்து
மனிதனைத் தள்ளிவைக்கும் தண்டனைகளால் நிறைந்தது
என இறுதியில் அதே கடவுளிடம் முறையிட்டபடி
மீண்டும் வாழ்வின் சாளரங்களை
எதையோ வெற்றி கொள்வதற்கான
உக்கிரத்தோடு திறக்கத் தொடங்கினான்.