கவிதை

டார்ச்சர்

ஏகாந்தன் 

பூங்காவைச் சுற்றிச் சுற்றி
வந்தது போதுமென கொஞ்சம்
ஓய்வு தனிமைக்கு ஆசைப்பட்டு
ஓரத்து காலி பெஞ்சில் உட்கார்ந்தேன்
நொடியில் நெருங்கிய ஒரு நோஞ்சான்
முகக்கவசத்தைக் கீழிறக்கி
பக்கத்தில் உட்கார்ந்து இளிக்க
பல்லைக் கடித்தேன் மனதுக்குள்
தள்ளி ஒரு பக்கமாக நகர்ந்தேன்
உடனே எழுந்து சென்றால்
உட்கார்ந்த மனிதனை
அவமதித்ததாக ஆகிவிடுமே ..
”இந்தக் கொரோனா விடாது சார்
எல்லாரையும் அனுப்பிச்சிட்டுத்தான் போகும்”
நூல்விட்டுப் பார்க்கும் ஆசாமியை
மேல்நோக்க ஆர்வமின்றி
பேருக்கு ஆட்டினேன் தலையை லேசாக
”கேஸ் ஜாஸ்தியாகிக்கிட்டிருக்கு சார் ..
மூணாவது அலை வந்தாச்சு !”
அதுக்கு என்னய்யா பண்ணச் சொல்ற
என்பதாக நேராக முறைத்து
போதும் என கையை உயர்த்தினேன்.
விட்டுருவானா அவ்வளவு ஈஸியா ..
”நார்த் கொரியால கொரோனா வந்த ஆளுங்கள
சுட்டுத் தள்ளிடறாங்களாம் சார்!”
இன்னும் யாரையும் நான் கொலை செய்ததில்லை
இன்று ஒரு கொலை விழுவதில் விருப்பமில்லை
என மனம் முணுமுணுக்க
எழுந்து நடக்கலானேன்

சாய்ந்திருப்பதெல்லாம் மாயத்தோள்கள்

ஹேமந்த் குமார்

தொட்டிலுக்குப் பதிலாக
நான் உறங்கிய படுக்கை,
என் தாயின் தோள்;
ஆறுதலாக கட்டித் தழுவியது,
என் தந்தையின் தோள்

பெற்றோரிடம் கூறாமுடியா
சொற்களை பெற்றுக்கொண்டது,
என் சகோதர சகோதரியின் தோள்;
இரத்த சொந்தம் இல்லாவிட்டாலும்
நெஞ்சம் நிறைய தஞ்சமளித்தது,
நண்பரின் அன்புத் தோள்

தன் உடலெனும் கட்டிலில்
என்னை சுமந்த தலையணை,
என் காதலியின் தோள்;
வாழ்க்கை முழுவதும்
குடும்ப வருத்தங்களை சுமக்கிறது,
என் மனைவியின் தோள்
வரும் மரணத்தின் தோளுக்கு முன்பு
நான் சாய்ந்திருப்பதெல்லாம்,
வெறும் மாயத்தோள்கள்.

 

 

இன்று இங்கு வந்திருக்கிறேன்

ஏகாந்தன்

சிறகு போல் மிதக்கும்
மிருதுவான நினைவுகளோடு
உன்னூருக்கு
வந்திருக்கிறேன்
போய்விட்ட காலத்தின்
பொன் சுவடுகளுக்கேங்கி
அலைகிறேன் அங்குமிங்குமாக
இதோ உன் ராஜவீதி
பின்பக்கம் தள்ளியிருக்கும் கோவிலில்
பதற்றமின்றி நிற்பார் பெருமாள்
சத்தமாக இயங்கும் பெண்கள் பள்ளி
நிசப்தமாக நெருங்கி நிற்கும் அந்த மரம்
களைத்த முகங்களோடு
இளைத்த உடல்களோடு
நினைவுகளின் சிற்றலைகள்
நெஞ்சுக்கரையில் விசிறியடிக்க
நனைந்தவாறு நடக்கிறேன்
மெல்ல நெருங்குகிறது
உன் வீடு
என் கோவில்
நீ நிலவாத அகத்தின் அகத்திற்குள்
நீர்த்துப்போன கண்களால் துழாவுகிறேன்
எங்காவது அசையாதா உன் நிழல்
ம்ஹும் ..
என்று பிடிபட்டாய் ..
இன்று தரிசனம் தர

சுற்றி எப்போதும் நான்கு பல்லிகள்

தேடன் 

வெளிறிய, கரும்புள்ளியோடு, தடித்த, வால் துண்டிக்கப்பட்ட என நான்கு பல்லிகள்

டியூப் லைட் பின்னாலும் சாமி படங்களுள் ஒளிந்தும் கடிகாரத்தில் உறவாடியும் குடும்பம் நடத்துக்கின்றன

வீட்டின் ஒவ்வொரு கதவை திறந்து மூடும் போதும் தெறித்து ஓடுகின்றன;
ஒட்டிய பதற்றம்

ஒரு பட்டாம்பூச்சியின் இரண்டு ரெக்கைகளை பிய்த்துத் தின்கின்றன அவை

ஒருமுறை அப்பாவின் கடிந்த பாதச்சுவடோடு நசுங்கி
கண்கள் பிதுங்கி இதயத்துடிப்பு நிற்பதை கூட பார்க்க முடிந்தது
‘த்தொ..த்தொ.. த்தொ… பாவம்’
என்றாள் அம்மா
வாரியெடுத்து பக்கத்து வீட்டு மனையில் கொட்டிவிட்டோம்

பட்டாம்பூச்சியை தின்றுவிட்ட பல்லி சத்தம் எழுப்புகிறது
‘த்த்தத்த்த்த்த்த்..’
அம்மாவும் ‘த்த்த்த்த்த்…’ என்று சத்தமிடுகிறாள்
பட்டாம்பூச்சியை தப்பிக்க வைக்க பார்த்து தோற்றுப்போன தங்கை
‘அச்சோ பாவம்’ என்கிறாள்

கழிவறைக் குழிக்குள் விழுந்த பல்லியை தண்ணீர் ஊற்றி மூழ்கடித்து ஆசுவாசமாக கழிவகற்றிவிட்டு வந்தான் தம்பி‌
வாலில்லா பல்லியை தேடிக் கொண்டிருக்கிறேன்
அதோ தெரிகிறது கண்ணாடியில்

நினைவு

புஷ்பால ஜெயக்குமார்

மழை ரகசிய ஒப்பந்தத்தில்
காற்றோடு கலந்து வீசியது
மின்னல் தாக்குவது தெரியாமல்
பேயாட்டம் ஆடியது மரம்
கரிய மேகங்களின் அடர்த்தி
யாருக்கும் தெரியாமல்
போகும் நேரம்
இருள் கூடியது வானம்
நான் மட்டும்
நனைவது போல்
நடந்து போனேன்
தெரு நாய் ஒன்று
என்னோடு நடந்து வந்தது
யார் கண்ட கனவு இது
யார் எடுத்த புகைப்படம் இது
யார் வரைந்த ஓவியம் இது
ஒரு நாள் இருப்பேன்
அந்த வானத்தின் கீழ்
மரத்தின் நிழலில்
மழையின் ஞாபகத்தில்
நான் நின்று இருப்பேன்