விஷால் ராஜாவிடம் சில கேள்விகள் – நரோபா

நரோபா

புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து’ – நரோபா 

உங்களைப்பற்றி- பிறப்பு, கல்வி…?

விஷால் ராஜா: 1993ம் வருடம் பிறந்தேன். படித்து வளர்ந்தது முழுக்க சென்னை புறநகரை சேர்ந்த திருநின்றவூரில். 2014ம் வருடம் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன். 3 வருடங்களாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இலக்கிய பரிச்சயம் எப்படி? எப்போது?

விஷால் ராஜா: சிறு வயதிலேயே நூலகம் அறிமுகம் ஆகிவிட்டது. இலக்கியம் சார்ந்த வாசிப்பு பள்ளி இறுதி ஆண்டுகளில் தொடங்கியது. கல்லூரி காலத்தில் தீவிரம் பெற்றது.

உங்கள்  முதல் கதை எப்போது வெளியானது?

விஷால் ராஜா:  2012 என நினைக்கிறேன். அச்சில் வெளியான முதல் கதை “ஞாபகங்களின் கல்லறை”. உயிர் எழுத்து பத்திரிக்கை.

எது உங்களை எழுதத் தூண்டியது? அல்லது ஏன் எழுதுகிறீர்கள்?

விஷால் ராஜா: எழுத்தைத் தவிர வேறெதுவும் அர்த்தமோ மன நிறைவோ அளிப்பதாக இல்லை.

உங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் யார் ?

விஷால் ராஜா: ஒவ்வொரு நல்ல படைப்புமே எனக்கு ஏதோவொரு வகையில் உந்துதல் கொடுக்கிறது. எனவே ஆதர்சங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அசோகமித்திரன் மற்றும் ஜெயமோகன்.

கவிதைகள் எழுதியதுண்டா?

விஷால் ராஜா: ஆம். ஆரம்ப காலத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். சொல்வனம், வல்லினம் போன்ற இணைய இதழ்களில் அவை பிரசுரம்கூட ஆகியிருக்கின்றன. கவிதைகளை விரும்பி வாசிக்கிற ஒருவனாகவே நான் எப்போதும் இருந்திருக்கிறேன். ஆனால் புனைவே என்னுடைய வடிவம் என்பதில் எனக்கு தொடக்கம் முதலே தீர்மானமான எண்ணம் உண்டு.

சிறுகதைகள் உங்களுக்குரிய வடிவமாக உணர்கிறீர்களா?

விஷால் ராஜா: இப்போது யாரும் ஒற்றைச் சம்பவத்தையோ அல்லது ஒரு முரண்பாட்டையோ மட்டுமே குறிப்பிட சிறுகதை வடிவத்தை பயன்படுத்துவதில்லை. அப்படி இறுக்கத்திற்கும் கச்சிதத்திற்குமான வடிவம்தான் சிறுகதை என்று கூறினால் அது நிச்சயம் எனக்கான வடிவம் இல்லை. மாறாக அதன் எல்லைகள் விஸ்தீரணம் அடைந்திருக்கும் இன்றையச் சூழலில் சிறுகதையை நான் எனக்கான வடிவமாகவே உணர்கிறேன்.

நாவல் எழுதும் எண்ணமுண்டா?

விஷால் ராஜா: உறுதியாக உண்டு.

தமிழின் தற்கால இலக்கிய போக்கு குறித்து உங்கள் அவதானிப்பு என்ன?

விஷால் ராஜா: குழப்பமாக இருக்கிறது. நிறைய விஷயங்களை எதிர்மறையாக சொல்லலாம். ஒரு எழுத்தாளனாக என் மேலேயே எனக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.  சமூக வலைதளங்கள் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் நிலையில் பொழுதுபோக்கு என்கிற அம்சம் எல்லா மட்டங்களிலும் தீவிரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. நாம் கேளிக்கையை மட்டும் விரும்புகிறவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம். பொதுபுத்தி என்பது இனிமேல் மசாலா திரைப்படங்களை மட்டும் சார்ந்தது அல்ல. வாசிப்பு மற்றும் எழுத்து செயல்பாடுகளுக்குள் நுழைந்துக் கொண்டிருக்கும் விட்டேத்தித்தனமும்தான்.  இக்கருத்தை சமீபத்தில் சபரிநாதன் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

உங்கள் முதல் சிறுகதை தொகுப்புக்கு எத்தகைய எதிர்வினைகள் வந்தன?

விஷால் ராஜா: நூல் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன. பெரிதாக கவனிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. எழுத்தாளர்கள் ஜீ.முருகனும் கார்த்திகை பாண்டியனும் செல்பேசியில் அழைத்துப் பேசினார்கள். அது சந்தோஷமாக இருந்தது. மற்றபடி எந்த எதிர்வினையும் இல்லை. ஆனால் எனக்கு இப்புத்தகம் ஒரு சிறு அடையாளத்தை பெற்றுத் தந்துள்ளது. அதிகம் வாசிக்கப்படவில்லை என்றாலும்கூட.

நவீன தொழில்நுட்பம் இலக்கியத்தின் மீது என்ன வகையான தாக்கத்தைச் செலுத்தியுள்ளதாக எண்ணுகிறீர்கள்?

விஷால் ராஜா: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நம் வாழ்க்கையே முற்றிலுமாக உருமாறி கலவையான புது வடிவத்தை எட்டியுள்ளது. அது நம் சிந்தனை முறையிலும் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இலக்கியத்திலும் பேசுபொருள் சார்ந்து அது அதிக தாக்கத்தை உண்டு பண்ணும் என நான் நம்புகிறேன். தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு சமூக அழுத்தங்களும் உறவுச் சிக்கல்களும் புதுப்புது உருவங்கள் பெறுகின்றன. அவற்றை எழுத்தில் பேசாமல் இருக்க முடியாது. அதுவே தாக்கத்தின் முதல் படிதான்.

எழுதி முடித்த கதைகளை திருத்துவது வழக்கமா? வெளியான பின்னர் தொகுப்புக்காக திருத்துவது உண்டா?

விஷால் ராஜா: எழுதி முடித்த பிறகும் வாக்கிய அமைப்பிலும் வார்த்தைத் தேர்வுகளிலும் நிறைய திருத்தங்கள் செய்வேன். முதல் தொகுப்பிற்காக கதைகளை சேர்த்தபோது அதிகம் மாற்றங்கள் தோன்றவில்லை. ஆனால் கதைகளைத் திருத்துவதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?

விஷால் ராஜா: முதல் புத்தகத்தின் மீது எனக்கே அவ்வப்போது சின்ன சந்தேகமும் விலக்கமும் தோன்றுகின்றன. அப்படியான எந்த ஐயப்பாடும் இனி எழாத வகையில் தொடர்ந்து எழுத வேண்டும். இப்போது ஒரு குறுநாவல் எழுத ஆரம்பித்திருக்கிறேன். சிறுகதை, நாவல் என்று தீவிரமாகச் செயல்பட விரும்புகிறேன்.

நன்றி, வாழ்த்துகள் விஷால்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.