Author: பதாகை

போட்டோ சார் – லட்சுமிஹர் சிறுகதை

“குளிருதா,”

‘கொஞ்சம், “

“கொஞ்சம்னா,”

“இன்னொரு ஸ்வெட்டர் கூடப் போட்டுட்டு வந்துருக்கலாம்னு சொன்னே, அழகாயிட்டயோ ? “

“யாரு.. நானா? “

“அப்புறோம்… உம்னு இருக்கிறயா ? “

“இல்ல “

“அந்தப் பாலுப் பையன் என்ன சொன்னான் தெரியுமா,? “

“கம்முனு இருக்கமாட்டியா? “

“ரொம்ப நாளா அப்படித்தான இருக்கேன் “

……

“பேசு… “

“கூடவே தான இருக்க? “

“அதான்.. உன் நன்மைக்குத்தான் சொல்றேன்… “

“என்ன.. சொல்லு? “

“பாலுப் பையன் உன்ன இந்தக் கம்பெனி பார்க்ல இருந்து தூக்க பிளான் போடுறான் “

“நீயும்.. ஊரு வம்பு பேச ஆரம்பிச்சுட்டயா..? “

“தாடி வெட்டல “

“போய்தான் ஷேவ் பண்ணனும்.. “

“இன்னைக்குக் கூட்டமோ? “

“ஆமா.. சனிக்கிழமையில்ல !”

இப்படித்தான் சில காலங்களாகக் கையில் வைத்திருக்கும் கேமரா உடன் பேசத் தொடங்கிவிட்டார் யாசிர் பாய்.

கொடைக்கானல் பார்க்கில் தனியாக, கேமராவுடன் அமர்ந்திருக்கிறார் . மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க அவரின் மகிழ்ச்சியை அவைகள் விழுங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை.

மக்கள் நெருக்கமாக அங்கும், இங்கும் உட்கார்ந்து கொண்டும், நகர்ந்து கொண்டும் இருந்தனர்.

பாலு கூட்டத்திலிருந்து யாசிர் பாயை நோக்கி வந்து கொண்டிருந்தான்…

கழுத்தில் மாட்டிக்கொண்டார் கையில் வைத்திருந்த கேமராவை…

“ஐடி எங்க யாசிர் பாய்? கேமரா…

யாசிர் தன்னுடைய ஐடி யை எடுத்துவர மறந்தது அப்போது தான் நினைவுக்கு வர…

” யாசிர் பாய் இன்னைக்கு உங்கள மேனேஜர் பாக்கனுன்னு சொல்றாரு, சாயங்காலம் கொஞ்ச வெயிட் பண்ணுங்க ஆபீஸ்ல” எனச் சொல்லும்போதே இருமிக்கொண்டான். யாசிர் பாய் இருமலின் எச்சில் கேமராவின் லென்ஸ்ல் படப் போகிறது என்று நினைத்து கையால் முன்பகுதியை மூடியபடி தலையை ஆட்டினார்.

யாசிர், பாலு ஐடியை பற்றிக் கேட்கவில்லை என்று சந்தோசப்பட்டாலும் , மேனேஜர் என்ன சொல்லப் போகிறார் என்ற பயம் கேலிசெய்யத் தயாரானது ..

அன்றிரவு மேனேஜரிடம் பேசிவிட்டு வீட்டிற்குச் செல்ல 9மணி ஆகிற்று.. லென்ஸ் கிளோஸரைத் தேட ஆரம்பித்தார். அதை எங்கு வைத்தோம் என்ற நினைவும் இல்லை. வீட்டின் அனைத்து லைட்களையும் ஆன்செய்து தேடத் தொடங்கியவருக்குப் பரீதின் கல்யாணத்தின் போது எடுத்த போட்டோ பிலிம் ரோல்கள் இருந்த விரிசல் அடைந்த பெட்டி கண்ணில் படவே அதை எடுத்தார்.

யாசிர் பாய் தங்கி இருக்கும் வீடு, இரண்டு சின்ன அறைகளைக் கொண்ட வீடு.வாடகை ஒழுங்காகச் செல்வதால் பிரச்சனை இல்லை. தேடுவதற்கு எதுவும் இல்லாத அறைகள்தான் அவை.

தரையில் பாயை விரித்துப் படுத்துக் கொண்டார் யாசிர். கேமரா பேக்கை காலியாக இருந்த துணிவைக்கும் கூடைக்குள் வைத்துவிட்டார். படுத்துக் கொண்டு அந்தப் பிலிம் ரோல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் யாசிர். அவருக்கு ஏன் இதைப் பிலிம் ரோல்களாகவே விட்டுவிட்டோம் என்று நினைவில்லை . போட்டோ ரோல்கள் அடிபட்டு கோடும், கீறலுமாகப் பல்லிளித்தது .

அடுத்தநாள் காலையில் ஷேவிங் கண்ணாடி டப்பாவில் இருந்த அவருடைய பார்க் ஐடி யை மட்டும் எடுத்துக் கொண்டு பார்க்கிற்குக் கிளம்பினார் .

மேனேஜர் சொன்னது இன்னும் மனதிற்குள் போட்டு உளட்டிக்கொண்டிருந்தார் யாசிர் பாய்… அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி அவருக்குள் பல நாட்களுக்குப் பிறகு எழுந்தது, இதுவரைஅவரின் வயது அவருக்குக் குறையாகத் தெரிந்தது இல்லை. இன்று அதை எண்ணி வருத்தப்படத் தொடங்கியிருந்தார் .நேற்று காலையில் பாலு சொல்லிவிட்டுப் போன பின்பு மாலை ஆறு மணிக்கு மேனேஜர் அறையில் கொஞ்சம் பதட்டத்துடன் தான் அமர்ந்திருந்தார் என்ன விசயமாக இருக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிந்தது ..

 அரை மணி நேரம் கழித்தே வந்தார் நந்தன்.

“பாய் நல்லாருக்கீங்களா? ” என்ற நந்தனிடம் தலையாட்டிச் சிரித்துக்கொண்டார் யாசிர் பாய்.

“பாத்து ரொம்ப நாள் ஆச்சுல்ல பாய்..? “

கேமரா வைத்திருந்த கை வேர்க்கத் தொடங்கியது, அதைப் பேண்டில் துடைத்துக் கொண்டு, இன்னொரு கையில் கேமராவை மாற்றிக் கொண்டார்.

இப்போதான் நமக்கு ரெண்டு, மூணு பார்க் இன்ச்சார்ஜ் வந்திருச்சு அதான் பாய் லேட் ஆகிருச்சு .

கையை நீட்டி பாலுவிடம் எதையோ கேக்க, பாலு உள்ளே ஓடிப் போய் ரெகார்ட் நோட்டை எடுத்து வந்தான்.. அதை வாங்கிப் பார்க்கத் தொடங்கிய நந்தன்.

“பாய், நம்ம பார்க்குல போட்டோ ஆளுங்க நிறைய இருக்காங்கள, அவங்கள மேல இருந்து குறைக்கச் சொல்லுறாங்க… ” என யாசிர் பாயைப் பார்த்தான் நந்தன்.. இடதுகையில் வேர்வையோடு இருந்தது கேமரா… மேலும் பேசிய நந்தன்.

“அதான்யா… இங்கிருந்து உங்கள அடுத்த இனிதல் பார்க்குக்கு மாத்தலாம்னு இருக்கோம் “என்றான்.. பாய் பதில் ஏதும் சொல்லவில்லை, எதிர்பார்த்ததுதான்.

என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியுடன் பார்க் வந்து சேர்ந்தார் பாய். ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடித் காணப்பட்ட பார்க்கை ஸ்வெட்டருடன் இறுக்கி அணைத்துக் கொண்டார் குளிருக்கு.

அங்கங்கே பனிமூட்டம் விலகாமல் நேற்று பெய்த மழையில் கொஞ்சம் பசுமை கூடி இருப்பதுபோலப் பட்டது.

என்ன யாசிர் பாயால்தான் அதை அனுபவிக்க முடியவில்லை. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் தொழுகையை முடித்து விட்டு யாசிர் பாய் வீட்டுக்கு வர மணி ஏழு.

மேனேஜர் பேசி ஒரு வாரம் ஆகிற்று , அவரின் எளிமையான சாராம்சம் வேலைக்கு வர வேண்டாம் என்பதே. கேமராவைத் தோளில்போட்டுகொண்டு, பார்க்பிளாட்பார்மில் இதற்கு முன் எடுத்த பழைய போட்டோக்களை நீட்டி.. “போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .” எனக் குரங்கு உணவை கண்டு பின் செல்வது போல மனிதர்கள் பின் தொற்றிக்கொள்ளத் தயாரானார் .. ” போட்டோ சார்.. போட்டோ சார்… “

பாலுவின் ” போட்டோ போட்டோ போட்டோ” என்கிற சத்தம் இங்கு வரைக்கும் கேட்டது.. இன்றைக்கு யாசிர் பாய்க்கு ஆறுபோட்டோக்கள்தான் கிடைத்தன..சனிக்கிழமையே இப்படி என்றால் வாரநாட்களில் ஒன்றோ, இரண்டோ தான்.

பலரும் யாசிர் பாயைக் கடந்து சென்று கொண்டுதான் இருந்தனர்.. போட்டோ ஸார் .. போட்டோ ஸார் .. என நடுங்கும் குரலில் யாசிர் பாயிடமிருந்து வெளிப்பட்டது.

போட்டோவாக மாற்றப்படாத போட்டோ பிலிம் ரோல்களை எடுத்து வீட்டில் அவருக்கென்றிருந்த ஒரே சேரில் அதைப் போட்டுவிட்டு , தான் வைத்திருந்த பழைய கேமராவைத் தேடத் தொடங்கினார்.சில நேரங்களில் நமக்கென்று எதுவும் இல்லாமல் ஆகிவிடக் கூடாது என யோசிப்பது வாழ்க்கை மீதான நம் பயத்தையே மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. நமக்கென இருப்பதாக எண்ணிக் கொண்டு நாம் பழைய நினைவுகளுக்குள் செல்கிறோம். அதிலிருந்து நம் கையில் அகப்படுவது நம்மை முன் நகர்த்தவும் செய்கிறது. சில நேரங்களில் நம்மை ஒரே நிலையில் தேங்கிவிடவும் செய்கிறது.

இரண்டு அறைகளில்…அப்பா கல்யாணம் பண்ணிக்க வேண்டி எழுதின கடிதங்கள், பழைய சட்டைகள், இரண்டு, மூன்று போட்டோ பிரேம்கள், ரேடியோ காஸெட் சீடிக்கள் இருந்தன. அங்கிருந்து எடுத்த பொருட்கள் தூசிபடிந்து போய்க் கிடந்தன . தனக்கென இருந்த போட்டோ ஸ்டுடியோவை விட்டுவிட்டு வந்த யாசிருக்கு இவைகள் அதைப் பற்றிய கேள்விகள் கேட்பது போலவே இருந்தது. யாசிர் பாய் அவைகளிடம் தன் பக்கம் இருக்கும் காரணங்களைப் பேசத் தொடங்கினார் .யாசிர் பாய் பக்கம் இருந்த எந்தக் காரணங்களையும் அவைகள் ஏற்கவில்லை.பழைய பிலிம் ரோல் கேமராவைத் தேடிக் கண்டுபிடிக்க இரவு பதினொரு மணி ஆகிற்று..அதை எடுத்துக் கொண்டு.. கூடையில் இருந்த கேமரா பேக்கை எடுத்தார் யாசிர்..

“டேய்.. இத பாத்தியா உங்க தாத்தா… இப்பலாம் ஏதோ பொசுக்குன்னு கிளிக் பண்ணா படம் விழுந்துற நீயெல்லாம்.. அப்போ போட்டோக்கு ரோல் வாங்கி லேப்ல கிளீன் பண்ணி நெகடிவ்ல தான் பாப்போம்.. அப்ப அதெல்லாம் ஏதோ பெருசா செய்றமாதிரியிருக்கும்.. காத்துக் கிடந்து முந்தினநாளு எடுத்த போட்டோவ வாங்கிட்டுப் போவாங்க…

அப்போ நான் எவ்வளவு பெரிய கடை வச்சிருந்தேன்.. காலம் இப்படி வந்து தள்ளிருச்சு. இன்னும் எங்க எங்க ஓடப் போறேனோ ” எனத் தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.

இறுதியில் புதுக் கேமரா பதில் ஏதும் சொல்லவில்லை என்பதைப் பார்த்தார்.

” என்னாச்சு உனக்கு..? ஏன் அமைதியா இருக்க நீ..? பே கவர்ல குப்பையா இருக்கா? எனப் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். பழைய கேமரா தரையில் கொஞ்சதூரம் தள்ளி உட்கார்ந்து கொண்டு வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தது. யாசிர் பாய் கஷ்டத்தில் பங்கு கொண்டாலும் அவருக்கு உதவ முடிய வில்லையே எனப் பழைய கேமரா நினைத்துக் கொண்டது. அந்த டிஎஸ்எல்ஆர் கேமரா பேசவே இல்லை..

யாசிர் பாய் மேனேஜரிடம் பேசிவிட்டு வந்த பிறகிலிருந்து தான் பார்க்கில் கொடுத்த கேமரா பேசவில்லை என்பதை யூகித்துகொண்டவர் ..இந்த புது மாடல் டி எஸ் எல் ஆர் கேமரா யாசிர் பாயோடையது கிடையாது.. பார்க்கில் இருந்து கொடுத்ததுதான். யாசிர் பாய் பார்க்கை விட்டுப் போக நேர்ந்தால், அதை மேனேஜரிடம் கொடுத்துவிட்டுத் தான் செல்ல வேண்டும். அவர் பேசினதக் கேட்டிருப்ப. அதான் இப்படி உம்முனு இருக்க… தெரியும்.. அதான… உன்னத்தான்.. எனக் கேமராவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார் யாசிர் பாய்.அவருக்குக் கேமரா மீதான தனி அக்கறை இன்னும் சிறுவயது பையனைப் போல அதன் மேல் வண்ணம் அடிக்கச் செய்கிறது என்பதை அறிந்தவர்தான் .அதுவே அவரை இதுவரை உயிர்ப்போடு வாழ எத்தனித்திருக்கிறது.

கையில் தனக்குத் துணையாக முதலில் இருந்த கேமராவை மட்டும் எடுத்துக் கொண்டு கொடைக்கானல் மலை ஏறிவிட்டார். அந்தக் காலக் கட்டம் யாசிருக்கு பெரும் துயரே . காதல் மனைவியின் பிரிவு, பரீதின் இறப்பு என்று பிடித்த பேய் அவரின் சொந்த ஸ்டூடியோ கை விட்டு போகும் வரை விடவில்லை .அவர் அதிலிருந்து விடுபட்டு வரவே பல காலம் தேவைப்பட்டது.

பார்க்கில் புது டி எஸ் எல் ஆர் யை மேனேஜர் யாசிரிடம் கொடுத்த போது, அதைப் பயன்படுத்த தெரியவில்லை.. பழைய கேமராவிலேயே எடுத்தவருக்குப் பாலுதான் புதுக் காமெரா இயக்கங்கள் பற்றிச் சொல்லித் தந்தான். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், பழகிக் கொண்டார் யாசிர்.. ஆனால் அந்தப் பெயர்களை மனப்பாடம் செய்து கொள்வதில்தான் சிரமம். ‘ ஐ எஸ் ஒ, ஷட்டர் ஸ்பீட், கான்ட்ராஸ்ட் லெவல் ‘….. .கடைசியில் பெயர்கள் தான் மாறியுள்ளது, எப்போதும் போலத்தான் போட்டோ எடுக்கும் விதங்கள் உள்ளன என அடிக்கடி யோசித்துக் கொள்வார்.ஆனால் பாலு அளவுக்குத் தெளிவாக அந்தப் பெயர்களை உச்சரிப்பதில் கொஞ்சம் கஷ்டப்பட்டார் யாசிர்.. தன்னோடு பதினைந்து வருடங்களாக இருந்த கேமராவை மட்டுமே கடனில் இருந்து மீட்டு யாசிரால் கொடைக்கானலுக்குக் கொண்டு வர முடிந்தது. அதையும் மடித்து ஒரு பெட்டிக்குள் பத்திரமாக வைத்தார் யாசிர்.. எப்போதும் தொலைத்த பொருள் எளிமையாகக் கிடைத்து விடுகிறது.நாம் பத்திரமாக வைத்ததை எடுக்கத்தான் சிரமம்ஆகிவிடுகிறது. அப்படிதான் நேற்று யாசிர் அந்தப் பழைய கேமராவைத் தேடி எடுத்தார்.அதன் மேல் இருந்த குப்பை, நூலாம்படையைத் தட்டி விட்டு, துணியால் துடைத்து விட்டு அந்தச் சிறிய பெட்டிக்குள் இன்று காலையில் வைத்து விட்டு வந்தார்.

பார்க்கிற்குச் செல்லும் வழி நெடுகிலும் கேமரா உடன் பேசிப் பார்த்தும் பதில்சொல்லவில்லை.

‘போட்டோ சார் போட்டோ சார். . ‘இன்றைக்கு இரண்டு போட்டோ என்று ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டார் யாசிர்.அதில் யாசிர் பெயருக்கு மேல் எழுதியிருந்த பாலுவின் பெயருக்கு அருகில் இன்றைக்கு மட்டும் 10 போட்டோ என எழுதி இருந்ததைப் பார்த்தார். எப்போதும் பார்க்காத அவர்.. ஏன் பார்த்தார் என்பது அவருக்குத் தெரியவில்லை.. வாழ்க்கையின் அடுத்த நகர்வைப் பற்றிய கவலையிலேயே அன்றிரவு கண்கள் விழித்திருந்தார்…

போட்டோ சார் போட்டோ சார் ..

” எவ்வளவு “

” இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது ரூபா சார் .. “

” நாலு போட்டோ எடுங்க “என வயதான தம்பதி ஒருவர் யாசிர் பாய் உடன் பேசிக் கொண்டிருப்பதைப் பாலு பார்த்துக் கொண்டிருந்தான்.யாசிர் பாய் அவர்களைப் பார்க்கின் நல்ல ஸ்பாட் களில் எல்லாம் நிற்க வைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.. அடிக்கடி அந்த அம்மா மட்டும் கால் வலிக்குது கொஞ்சம் பக்கத்திலேயே இருந்தா நல்லாருக்கும் எனக் கணவனிடம் சொல்லிக் கொண்டே இருந்தார் … ஒரு அரை மணி நேரத்தில் போட்டோ எடுத்து முடித்து அதை அவர்களிடம் கொடுத்தார் யாசிர்.அந்த அம்மாவுக்குப் போட்டோக்கள் ரொம்பப் புடித்துவிட்டன… ரொம்ப நேரமாக இருவரும் போட்டோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்… போகின்ற போது யாசிருடைய மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டனர்.. அவருக்கு மொபைலில் நம்பரை சேவ் பண்ணுவதில் பிரச்னை இருந்ததால்.. பாலு தான் வந்து உதவி செய்தான்.. அவர்களுக்குப் பேத்தி பிறந்துள்ளதாம்.. அவர்கள் வீட்டுக்கு வந்து போட்டோ எடுக்கணும் என்றார் அந்த அம்மா… அருகில் நின்றிருந்த கணவர், நாங்க எதுக்கும் பையன் கிட்ட கேக்கணும்.. அப்புறம் தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டுத்தான் நம்பரை பதிந்து கொண்டனர் .

அன்றைக்கு இரவு பாயில் ஓடிய கரப்பான்பூச்சியை அடிக்க நோட்டைத் தேடுவதற்குள் ஓடிவிட்டது.படுத்துக்கொண்டார்.. கால் எதுவும் அவர்களிடம் இருந்து வருமோ என நினைத்தவர் மொபைலைப் பக்கத்தில் வைத்து போன் ரிங்கிற்காகக் காத்திருந்தார். அப்படி வந்தாலும் இப்போது இருக்கிற பிரச்னையால் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் வர , கேமரா இல்லாமல் என்ன எடுப்பது? பாலு தனியாகக் கேமரா வாங்குவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனிடம் கேட்கலாமா என்று யோசித்தவர் வேணாம் என்று முடிவெடுத்தார். தன் மொபைல் போனில் இருக்கும் காண்டாக்ட் களைப் பார்த்துக் கொண்டே வந்தவர் .அதில் இருந்தது வெறும் எட்டு

நம்பர்களே..

பாலு

பரீத்

தமிழரசன்

தமீம்

கஸ்டமர் கேர்

வோடபோன் ஸ்பெஷல் அபெர்ஸ்

யமர்ஜன்சி காண்டாக்ட்

பாலு தான் அவைகளைப் பதிவு செய்து தந்திருந்தான் ..

பரீத்.. யாசிர் பாயுடன் அசிஸ்டன்ட் ஆக ஸ்டுடியோவில் வேலை பார்த்தவன்.. ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டான்… அவன் இறந்த பின் பரீத் மொபைலில் இருந்து கால் வர பதறிப் போய் விட்டார் யாசிர் பாய்… அது பரீத்தின் மனைவி

“வாப்பா.. நான் பேகம் பேசுறேன்…”

“சொல்லுமா… “

“இல்ல.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. “

“என்னமா… நான் கொடைக்கானல இருக்கேன்”

” இல்லப்பா… போன்லதான்… “

” என்னமா.. “

” நம்ம போட்டோ ஸ்டூடியோல இருந்து பரீத் கடைசியா வேல முடுஞ்சு கொண்டு வந்த கொட லைட்டு.. கலர் பேப்பர்ல இருக்கு.. அதல விக்கலாமானுதான் வாப்பா?.. இங்க பாப்பாவை வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியலப்பா… “

யாசிர் பாய் இப்போதும் நினைத்துப் பார்ப்பார் – “பாய் நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் னு ” பரீத் சொல்றத..ஏண்டா அப்படிச் சொல்றனு? கேட்டா பதில் சொல்லமாட்டான். டேய் நான் அவ்ளோ கொடுமக்காரனாடா என்பார் யாசிர். ‘ இல்லபாய்… எங்க அப்பா பாய் நீ ‘ என்றான் சின்னச் சிரிப்புடன்.

பேலன்ஸ் இல்லாமல் கால் கட்டாகிவிட்டது என்று அடுத்த நாள் பேசினாள் பேகம்.எடுத்துக்கம்மா எனச் சொல்லி விட்டார்.. கையில் கொஞ்சம் காசு சேரும் போது பழைய போட்டோ ஸ்டூடியோ அட்ரஸ்க்கு காசு அனுப்பியும் வந்தார்… பேகத்திற்குக் கிடைக்கிறதா என அதை உறுதிப் படுத்தியும் கொள்வார். இனிமேல் அனுப்புவதில் தான் சிக்கல்கள் இருக்கும்.

பதினைந்து நாளாக ஷேவ் பண்ணாத தாடி யாசிருக்குப் புதுத் தோற்றத்தை கொடுத்துவிட்டது எனத் தொழுகை முடித்து வரும்போது சிலர் கூறினர். கையிலிருந்த போனை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டார். அவர்கள் கால் பண்ணுவார்கள் என எண்ணி.. பாட்டு வர மாதிரி மொபைல் ரிங்க்டோனை செட் பண்ணி கொண்டார்.. அது பழைய போன் என்பதால் சத்தமாக அடிக்க.. பார்க்கிலிருந்த சிலர் திரும்பிப் பார்த்தனர்.. ஆன் செய்து காதில் வைத்தார்.. அது கஸ்டமர் கேரிலிருந்து வந்த கால். உடனே கட் பண்ணி விட்டார்…

“இன்னும் ஏன்டா அமைதியா இருக்க…? நீ பேச என்ன செய்யணும்னாதுசொல்லுடா!” எனக் கேமராவைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்….

மேகமூட்டம் சட்டென நகர்ந்து வெயில் வந்தவுடன் யாசிர் பாய்க்குத் தலைச் சுற்றல் ஏற்பட்டது.

கொஞ்சதூரம் பார்க்கில் நடந்து சென்று தண்ணீர் வரக் கூடிய பைப்பை திறந்து… கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் பிடித்துக் குடித்துக்கொண்டார்.. அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொள்வதற்காக நடந்த யாசிர் பாய் பக்கத்தில் இளம் ஜோடி முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர், அவர்களை நோக்கிச் சத்தம் போட, இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.. அதில் அந்தப் பெண் யாசிர் பாயை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

சேரில் அமர்ந்து மதியச் சாப்பாடைச் சாப்பிடத் தொடங்கினார் யாசிர் பாய்.

மேனேஜரிடம் வேண்டும், வேண்டாம் என்ற பதில் எதுவும் சொல்லாமல் வந்தது தவறு . மாற்ற வேண்டாம் என்று நேரடியாகக் கூடக் கேட்டிருக்கலாமோ என்று யோசித்தவருக்கு இல்லை அவர்களின் முடிவு முன்பே எடுக்கப் பட்டதுதானே என்று வீடு வந்து சேரும் வரை மண்டைக்குள் நிறைய விஷயங்கள் ஓட பதிலாய் ‘ என்ன கவலை பாய்.. எது இருக்கு நம்மகிட்ட கவலைபட…. இப்போ எதுக்கு இவ்ளோ வருத்தம்… ‘ என்று மனதை கேட்க…இதயத் துடிப்பு ஓசை டப்.. டப்… ப்…

இரவு போன் அடிக்க, பழைய ரூமில் எதையோ தேடிக் கொண்டிருந்த யாசிர் பதறி அடித்துக் கொண்டு அதை ஆன் செய்தார்..

” ஹலோ யாசிரா..? ! “

“ஆமா…நீங்க…!? “என இழுத்தார் யாசிர் பாய்…

“அன்னைக்குப் பார்க்ல போட்டோ எடுத்தோமே நானும், மனைவியும்…”

” ஆமா சார். . நல்லாருக்கீங்களா… “

“நல்லாருக்கேன்.. யாசிர்.. ப்ரீயா “

” ப்ரீதான் சார்.. சொல்லுங்க “

“பேத்திய போட்டோ எடுக்கச் சொல்லிருந்தோமே ஞாபகம் இருக்கா…? ” எனச் சிரித்துக்கொண்டார் , தயக்கத்துடன் யாசிர் பாய் ‘ஆமாம் சார்’ …

” இந்த மாசம் எண்ட்ல அவங்க வெளி ஊர்ல இருந்து வராங்க.. நீங்க கொஞ்ச பிரீயா வச்சுக்கிட்டா நல்லாருக்கும்”

” கண்டிப்பா சார் .. வந்தவுடனே போன் பண்ணுங்க”

” ஷ்யூர் .. ” எனச் சொல்லி கட் பண்ணினார்…

யாசிருக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.. போட்டோ ஸ்டூடியோ வச்சுருந்தப்போ எடுத்த ஆர்டர் .. இப்பதான் பார்க்கினுடைய கேமராவில் வெளியே யாருக்கும் எடுக்கக் கூடாது, சிலருக்கு மட்டும் தான் வெளியே எடுத்துச் செல்லவே அனுமதி என்பது யாஸிர்க்குச் சட்டெனெ ஞாபகம் வர … தூரத்தில் அமைதியாக மூட்டையில் இருந்த கேமரா , பாவனையற்ற முகத்தோடு .

பார்க்கைச் சுற்றியும் புதிதாக விளம்பர பேனர்கள் வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே அன்று பார்க்கிற்குள் நுழைந்தார் யாசிர் பாய். . பார்க்கினுள் நுழைய நுழைய பத்து வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்தப் பார்க் அந்நியப்பட்டுப் போனது . அது பார்க்கில் நடந்திருக்கும் வெளி மாற்றத்தால் இல்லை என்பது அவருக்குத் தெரியும். பாலு யாசிரிடம் வந்து” ஆபீஸ்ல உங்கள கூப்டறாங்க” என்றான்..

” இதலாம் உங்களுக்குத் தேவையா.. போட்டோ எடுக்குறதுனா.. அந்த வேலைய மட்டும் பாக்கவேண்டியதுதான? வயசானாலும் சின்னப் புத்தியா இருக்கீங்க” எனத் திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் பாலு..

“யாசிர், பார்க்குக்கு வரவங்கள ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? ” என்றான் நந்தன்..

பாய்க்கு புரியவில்லை.

. “பாய்.. இந்தப் பொண்ணு உங்க மேல வந்து கம்பளைண்ட் பண்ணிருக்கு “எனப் போட்டோவைக் காட்டினார்…

யாசிர் யாராக இருக்கும் என்பதை அந்தப் படத்தைப் பார்க்கும் முன்பே யூகித்துவிட்டார்.

“அவங்களப் போட்டோ எடுங்கனு சொல்லி நீங்க கம்பெல் பண்ணிங்கனு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு இந்தப் பொண்ணு….”. சிறிது அமைதிக்குப் பிறகு நந்தன் “பாய் அங்க என்ன நடந்துருக்கும்னு எனக்குப் புரியுது…இப்ப காலம் மாறிபோச்சு.. சில விஷயங்கள ஏத்துக்கிட்டு..பாத்தும் பாக்காத மாதிரி போய்றனும் ” நந்தன்…

யாசிர் பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.. என்றைக்கும் இல்லாமல் கால் வலிக்க ஆரம்பித்தது.. இந்தப் பார்க் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே பிரஷர் மாத்திரை எடுக்க மறந்திருந்தார், இன்றும் அசதியில் தூங்கிப் போனார்..

காலையில் நேரம் ஆகிவிட்டது.. ஐ டி கார்டை மறந்திடாமல் எடுத்துக் கொண்டு பார்க்கிற்கு நடக்க ஆரம்பித்தார்.. காலையில் வாக்கிங் போறவர்கள் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.. பார்க்கிற்குச் சென்ற உடன்தான் தெரிந்தது. இன்றைக்குப் பார்க்கின் போட்டோகிராபர்ஸ் அனைவருக்கும் மேனேஜர் மீட்டிங் பத்து மணிக்கென்று. பக்கத்தில் இருந்த வெள்ளரிக்காயை வாங்கிச் சாப்பிடத் தொடங்கினார்.மேனேஜர் சரியாகப் பத்து மணிக்கு ஆஜராகிவிட்டார்… பார்க்கின் விதிமுறைகளை மறுபடிமறுபடிச் சொல்லிக் கொண்டிருந்தார். தான் மேலும் இரண்டு பார்க்கிற்கு மேனேஜர் ஆகிவிட்டதையும் சொல்லாமல் இல்லை… பாலுவைக் கூப்பிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்து வரச் சொல்ல… ரெகார்ட் நோட்டிலிருந்து ஒரு கவரை எடுத்த நந்தன்.. அதைப் பிரித்து ஒரு லெட்டரை எடுத்தான்.. அதில் இங்கிருந்து வேற பார்க்கிற்கு மாற்றப் பட்ட பெயர்களைவாசித்தான் நந்தன்.. அதில் யாசிர் பாய் பெயருடன் இரண்டு பெயர்கள் இருந்தன… இது பிரைவேட் பார்க் என்பதால் போட்டோக்ராபர்ஸ் எனத் தனி அஸோஸியேஷன் கிடையாது. அதனால் எந்த முடிவும் எடுக்கக் கூடிய உரிமை அவர்களுக்கு உண்டு. வேலை செய்பவர்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இங்கிருந்து புதிய பார்க்கிற்குத் தினமும் செல்ல எவ்வளவு செலவாகும், பார்க் கொடுக்கும் சம்பளம்,அறுபது வயது எனப் பலவற்றயும் யோசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார்.. இன்றைக்கு மேனேஜர் மீட்டிங் இருந்ததால் தொழுகைக்குச் செல்ல முடிய வில்லை.. சேரில் கிடந்த பிலிம் ரோல்களை எடுத்து பழைய கேமரா பெட்டிக்குள் திணித்துவிட்டார் யாசிர்.வெளியே மழை பெய்யத் தொடங்கி இருந்தது.. மழை என்பது கொடைக்கானலுக்கு வந்த பின்பு யாசிருக்குப் பழக்கம் ஆகிவிட்டது… இங்கு வந்து நிறைய மாறிவிட்டார்.. பச்சத்தண்ணியில் குளிக்கப் பழகிக் கொண்டார்.

ஒரு மாசம் ஷேவ் பண்ணாத தாடியைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டார்.

அருகிலிருந்த ஐ டி கார்டை எடுத்துக் கொண்டு பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ஸார் ..’போட்டோ ஸார் ‘.. ‘போட்டோ ஸார் … ‘ ஜோடியாக வந்தவர்கள் யாசிர் பாயிடம்

“எவ்வளவு” என்றனர்

“இரண்டு போட்டோ பிரேமோட நாற்பது “

“நாப்பதா… இவ்வளவு அதிகமா சொல்றீங்க.. “

” இது நம்ம பிக்ஸ் பண்றது இல்லப்பா.. “

” முப்பது நா கூடப் பரவலா… “

“இல்லப்பா.. நாப்பது தான் ” என யாசிர் பாய் சொல்ல.. சரியான பொல்லாதவனா இருப்பான் போல என வாய்க்குள் முனங்கிக்கொண்டே நகர்ந்தனர் இருவரும்..

பெரும்பாலும் இந்தச் சனிக்கிழமைதான் இங்குக் கடைசி நாள் என யாசிர் பாய்க்கு தோன்றியது .. பாலு ‘ போட்டோ சார் போட்டோ சார் …’ எனக் கத்துவது இங்கு வரைக்கும் கேட்டது..

“தாத்தா.. அப்பா எடுக்குற போட்டோவ விட நீங்க எடுக்குறது தான்நல்லாருக்குனு ” பாலுவின் பையன் சொன்னது ஞாபகம் வந்தது யாசிர் பாய்க்கு…

பார்க்கில் அன்றைக்குப் பார்த்த ஜோடி யாசிரை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றனர்…

யாசிர் புல் தரையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்… பாலு உடன் ஏற்பட்ட சண்டை, அவன் மேனேஜரிடம் அதைப் பற்றிச் சொல்லியது…இங்கு போட்டோ வேலை செய்யும் அனைவரும் சேர்ந்து எடுத்த போட்டோ என எதை எதையோ யோசித்துக்கொண்டிருந்தார்யாசிர்..சற்றுத் தொலைவில் இருந்த பாலு சத்தமாக இருமிக் கொண்டிருந்தான்.. இறுமலும் பேச்சும் ஒரே அளவில் இருந்தது…. யாசிர் பார்க்கைச் சுற்றிப் பார்த்தார்.. முன்பெல்லாம் பார்க்கில் போட்டோ எடுக்க ஆர்வமாக இருந்தனர்.. ஒரு நாளைக்குச் சுமார்  இருபது பேர் போட்டோ எடுப்பாங்க… இப்பலாம் எவ்வளவு கொறஞ்சுருச்சு ஒரு நாளைக்கு மூணோ, நாளோ அவ்வளவுதான் ..

வெயில் அதிகமாக அடிக்கப் புல் வெளியில் இருந்த மரத்தின் அடியில் இருக்கும் சேரில் அமர்ந்தார் யாசிர். புதுசாகப் பார்க்கிற்குள் நுழைந்த டூரிஸ்ட் பஸ் சுமார் அறுபத்தைந்து பேரை இறக்கிவிட்டுவிட்டுப் பார்க்கிங் இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது..

அங்கங்கு இருந்த போட்டோ நபர்கள் ஒன்றாக மொய்க்கத் தொடங்கினர்.. சிலர் காதுகொடுத்துக் கேட்டுவிட்டு வேண்டாமென நகர்ந்தனர்.. சிலர் பார்க்கை பார்த்துக் கொண்டே சென்றனர்… சிலர் கோவமாகக் கூடப் பார்த்துச் சென்றனர்.. ஆனால் அனைவரும் தன் கையில் வைத்திருந்த சிலேடு போல இருந்த போனை எடுத்துப் படம் பிடித்துக் கொண்டனர்… அந்தச் சிலேடு எவ்வளவை மாற்றிவிட்டது என யோசித்துக் கொண்டார்யாசிர். பார்க் குளோசிங் டைம் விசில் அடித்தும்.. அங்கும் இங்கும் டூரிஸ்ட் பஸ்சில் வந்தவர்கள் ஷெல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.. ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுப் பார்க்கை விட்டு வெளியே வந்தார் யாசிர்.. மழை பிடிக்கத் தொடங்யிருந்தது…

“யாஸிற்குப் பேலன்ஸ் சம்பளத்தைக் கொடுத்தனுப்புங்க” என்றார் நந்தன்.யாசிர் பாய் பேசத் தொடங்கினார் தயங்கிக் கொண்டே .

“அவ்வளவு தூரம் போறது கஷ்டம் சார் “

“அப்படினா எப்படிப் பாய்.. ரெகார்ட்ல பேரு வந்துருக்கே “

“பரவால சார்.. “

“புரியல பாய் “

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்குறேன்… “

“அப்புறோம்.. என்ன செய்யப் போறிங்க பாய்.? “.

” தெர்ல சார்… “

லென்ஸ்உடைய கிளோஸர் மூடியைக் காணவில்லை என்று சம்பளத்தில் அதைப் பிடித்துக் கொண்டுதான் மீதி பணத்தைக் கொடுத்தான் நந்தன். அவன் பேசுவான் என்று கடைசி வரை எதிர்பார்த்தும் நடக்கவில்லை. கேமராவைக் கொடுத்துவிட்டு கிளம்பினார் யாசிர் பாய்..கையில் காசில்லாமல் போன வாரம், தான் வைத்திருந்த பழைய கேமராவை விற்கவேண்டிய நிலை . யாசிர் பாய் தனக்குள் எதை எதையோ முனங்கிக் கொண்டே வந்தார்.

மழை நின்றபாடில்லை. உடம்பு கொஞ்சம் ஜுரம் அடிப்பது போல இருக்க , பாயில் படுத்திருந்த பாய் மாத்திரை வைத்திருந்த டப்பாவை திறந்தார்.. அதில் காமெராவின் கிளோஸர் இருந்தது.அவரை அறியாமலே ஒரு சிரிப்பு அவருடன் ஒட்டிக் கொண்டது. அதைத் தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தார்…அவரிடம் இருந்த வெறுமையை அது தன்னுள் புதைத்துக் கொள்ள ! . அவர் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார். சுவரின் மூளையில் இருந்த கரப்பான்பூச்சி இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. வீட்டின் கதவை திறந்து மழை சாரலில் நனைய தொடங்கியவர் மனதிற்குள் எந்த விதமான iso, ஷட்டர் ஸ்பீட் ரேஞ் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டு கண்களைச் சிமிட்டினார் கொண்டாட்ட நிலையாகி போன வான் மழை துளிகள் யாசிர் பாய் சுமந்து கொண்டிருந்த யாவற்றுக்கும் விடுதலையாய் சிமிட்டல்களுக்குள் உறைந்து கிடந்தன…!

மணிமேகலையின் வாழ்விலே ஒரு தினம் – ஸிந்துஜா சிறுகதை

மணிமேகலையின் வேண்டுகோளுக்கு கடவுள் செவி சாய்க்கவில்லை என்று அன்றிரவு  அவளுக்குத் தெரிந்து விட்டது. சாப்பிட்டு விட்டுக் கணினியைத் திறந்து பார்த்த போது , அவள் பெயர் லிஸ்டில் காணப்

பட்டது. அவள் வேண்டிப் படைக்கும் கொழுக்கட்டை கடவுளுக்கு அலுத்து விட்டது போலிருக்கிறது. எங்கே  போட்டுத் தொலைத்திருக்கிறார்கள் என்று எரிச்சலுடன் பார்த்தாள். நகரத்துக்கு வெளியே  போவதற்குச் சற்று முன்பாக அமைந்திருந்த காலனியின் பெயர் காணப்பட்டது. அவள் இருக்குமிடத்

திலிருந்து, அங்கே போவதற்கே  பஸ்ஸில் ஒன்றரை மணி நேரமாகும். தங்குமிடத்தில் இரண்டு பகல்களும் ஒரு இரவும் கழித்தாக வேண்டிய கொடும் தண்டனை வேறு என்று வெறுப்புடன் நினைத்தாள். 

சென்ற  முறை தப்பித்த மாதிரி  இந்த முறையும் தேர்தல் வேலையில் 

மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும் என்று ஆரம்பத்தில் ஒரு நப்பாசை இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த முறை கடுமையான விதியைக் கொண்டு வரப்  போவதாகவும் , அரசியல் அல்லது அரசாங்க  செல்வாக்கைக்  கொண்டு வர முயல்பவர்களுக்குக்  கடுமையான தண்டனை இருக்கும் என்றும் சர்குலர் வந்து விட்டதாக ஒரு நாள் செகரட்டரி விமலா செல்வராஜ் அவள் நம்பிக்கையில் மண்ணைப் போட்டாள். விதியை மீறுபவர்களின் ஸி. ஆரில் கறுப்புக் குறிப்புகள் இடம் பெறும் என்று விமலா பயமுறுத்தினாள். போன தடவை மணிமேகலையின் சித்தப்பா கார்பரேஷன் கமிஷனரின் அந்தரங்கச் செயலாளராக இருந்தார். கமிஷனரின் செல்வாக்கு மூலம்  மணிமேகலையின் பெயர் லிஸ்டில் தவிர்க்கப்பட்டு விட்டது. அப்போதே யாரோ போய் விமலாவிடம்,வத்தி வைத்து விட்டார்கள். மணிமேகலைக்குப் பதிலாக , லிஸ்டில் விமலா பெயர் சேர்க்கப்பட்டு விட்டதாக. அந்தக்  கோபத்தைத்தான் விமலா இந்த பயமுறுத்தல்களாகக் காண்பிக்கிறாளோ  என்று மணிமேகலைக்கு மெலிதாக ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் விமலா சொன்னது எல்லாம் உண்மைதான் என்று ரெவினியு இன்ஸ்பெக்டர் குமரப்பா உறுதி செய்து விட்டான்.

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தேர்தல் நடக்கும் போது  வாக்குப் பதிவு  

நடத்த முன் வந்து கடமை ஆற்ற வேண்டும் என்று எந்தப் புண்ணியவான் எழுதி வைத்தானோ என்று திட்டினாள் மணிமேகலை..அ. உத்தியோகஸ்

தர்கள்தான் இளிச்சவாயர்கள் என்று அரசாங்கமே நினைத்து இருக்க வேண்டும் . தேர்தல் அன்று ஓட்டுப் போடத் தகுதியில்லாத குழந்தைகளில் இருந்து தகுதியுள்ள ஆனால் ஓட்டுப் போடப் போகாத பெரியவர்கள் வரை விடுமுறை தினம் என்று ஜாலியாக மஜா பண்ணும் நாளில் ஒரு அரதப் பழசான கட்டிடத்தில் மின்விசிறி இல்லாத அல்லது இருந்தும் ஓடாத அறையில் சர்க்காரின் பழுப்புக்  காகிதங்கள்  சாமான்கள் என்று அடுக்கி பிரித்து மூடி மறுபடியும்  திறந்து அடுக்கி காலை முதல் மாலை வரை தேர்தல் பணி  என்னும் காரியத்தைச் செய்தாக வேண்டும்.

லீவு போய்விட்டதே என்பதல்ல மணிமேகலையின் வருத்தம் எல்லாம். அவள் விடுமுறை நாட்களில் கூட அலுவலகம் வந்து வேலை செய்து

விட்டுப் போகும் பிரகிருதி.  தேர்தல் தேதிதான் அவள் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது. முன்னமேயே ஒரு வாரம் குடும்பத்

துடன் தாய்லாந்து போகத் தீர்மானித்திருந்தார்கள். மிகவும் குறைந்த விலையும்  அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கப்பட்ட  விமானப் பிரயாணச் சீட்டுக்களினால் கவரப்பட்டு ஏற்பாடுகளைச் செய்வதாக மணிமேகலையின் கணவன் கூறியிருந்தான். அந்த வாரத்தின் நட்ட நடுவில் தேர்தல் தேதியை வைத்தால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனால் என்ன புலம்பி என்ன? 

இதைத் தவிர, தேர்தல் பணியை முன்னிட்டு அவள் மேற்கொள்ள

வேண்டிய பிரயாசைகள் மணிமேகலைக்கு அதிக எரிச்சலைத் தந்தன. அலுவலக நேரத்தில் பயிற்சி முகாம்களுக்குச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்  அவள் மேஜையில் வந்து குமியும் ஃபைல்களை அவள்தான் அலுவலகத்துக்கு வீட்டிலிருந்து சீக்கிரம் வந்து அல்லது வீட்டுக்கு நேரம் கழித்துப் போய், இல்லாவிட்டால், சனி,ஞாயிறுகளில் வந்து உட்கார்ந்து குவியல்களைக் குறைக்க வேண்டும். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் மாதிரி தேர்தல் பயிற்சி முகாமில் சொல்லிக் கொடுப்பதை  மனப்பாடம் செய்ய வேண்டும். நாற்பது  வயதில் இது என்ன தலையெழுத்து?  சிலசமயம் அவள் கணவன் சொல்கிற மாதிரி வேலைக்குப் போகாமல் இருந்திருக்

கலாம்.   ஆனால் கை நிறையக் கிடைக்கும் சம்பளத்தை எப்படி இழப்பது ? அவள் வருவாய்த் துறையில் இரண்டாம் நிலை அதிகாரியாக இருந்தாள்.

இந்த அரசாங்க வேலை சம்பளத்தைத் தவிர தரும் அதிகாரம், செல்வாக்கு போன்ற சௌகரியங்களை எப்படி இழக்க முடியும் ? 

குறிப்பிட்ட தினத்தில் மணிமேகலை  அரசாங்கக் கட்டிடத்தை  அடைந்த போது மணி பத்து அடிக்கப் பத்து நிமிஷங்கள் இருந்தன. பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் குழுமியிருந்தார்கள். மணிமேகலையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள். தெரிந்த முகம் எதுவும் தென்படுகிறதா என்று பார்த்தாள். ஒருவரும் காணப்படவில்லை . அன்றையக் கூட்டத்தில் எந்தெந்த வாக்குச் சாவடிகளுக்கு யார் யார் தேர்தல் அதிகாரியாகப்  போக வேண்டும். அவருக்குக் கீழே பணி புரியவிருக்கும் அரசாங்கப் பணியாளர்கள் எவ்வளவு பேர், அவர்களைப் பற்றிய விவரங்கள், என்னென்ன உபகரணங்களை வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் விவரங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் பேசி விவாதித்து முடிவு செய்யப்படும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். 

“போன வருஷம் நான் போன பள்ளிக்கூடம் இடிஞ்சு விழுந்துருமோன்னு பயந்துக்கிட்டேதான் எல்லாரும் வந்து போனாங்க. அந்த வாக்குச் சாவடி

லேதான் ரொம்பக் கம்மியான  வாக்குப்  பதிவு. ஒரு சமயம் ஜனங்க  கம்மியா வரட்டும்னு அங்கே ஏற்பாடு பண்ணி ணாங்களோ என்னவோ!” என்று சிவப்பு ஸ்வெட்டர் அணிந்த ஒருவர் சொன்னார்.

“ஏன்தான் இந்த மாதிரி கவர்மெண்டு பள்ளிக்கூடத்தை எல்லாம் வாக்குச் சாவடியா யூஸ் பண்றாங்களோ?” என்று ஒரு நடுத்தர வயது மாது அங்கலாய்த்தாள்.

“என்ன அப்படிச் சொல்லிட்டீங்க? பள்ளிக்கூடத்திலே நடத்தினா மேஜை  

நாற்காலி பெஞ்சு இதுக்கெல்லாம் செலவழிக்க வேண்டாம். இடத்துக்கு வாடகை குடுக்க வேண்டாம்ன்னு  ரொம்ப யோசிச்சில்லே முடிவு எடுத்தி

ருக்காங்க?”‘என்று கிண்டலும் கேலியுமாக ஒரு நாமக்காரர் சிரித்தார்.

“இப்ப ஒவ்வொரு கட்சியும்  தேர்தல் செலவுக்குன்னு இறைக்கிற பணத்துல இதெல்லாம் பிச்சைக் காசு. நம்ம கழுத்திலே கத்தியை வச்சு  பாவம் கவர்மெண்ட்டு மிச்சம் பிடிக்கிறாங்க. எதோ நம்மளால ஆன தேச சேவை போங்க ” என்றார் முதலில் பேசிய சிவப்பு ஸ்வெட்டர்காரர். 

“விலைவாசி நாளுக்கு நாள் ஏறிகிட்டே போகுது . பஸ்காரன் அப்பப்ப விலையை ஏத்தறான் . நமக்குக் கொடுக்கற அலவன்ஸ் மாத்திரம் மார்க்கண்டேயன் வயசு மாதிரி அப்படியே நிக்குது. கேட்டா கமிட்டின்னு சொல்றான். இன்னும் முடிவு எடுக்கலையாம்.  அவங்க நாம ரிட்டையரானதுக்கு அப்புறம் வரவங்களுக்குக் கொடுப்பாங்க போல இருக்கு” என்றாள் இன்னொரு பெண்.

மணிமேகலைக்கு இந்தப் பேச்சை எல்லாம் கேட்பதற்கு அலுப்பாக இருந்தது. இரண்டு நாள் வேலைக்கு தினம் ஐநூறோ என்னமோ 

கொடுக்கிறார்கள். அப்படியே உயர்த்தி விட்டாலும் இப்போது ஒருவர் சொன்னது போல கொஞ்சம் அதிகமான பிச்சைக்காசுதான் வரும். 

அப்போது ஒரு பணியாள்  வந்து அவர்களைக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அழைத்தான். எல்லோரும் எழுந்து சென்றார்கள். அவர்களது மேலதிகாரி தேர்தலன்று வாக்குச் சாவடி அதிகாரியாக அவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றிச் சொன்னார்.

அதற்கு அடுத்த வாரம் ஒரு நாள் காலை பதினோரு மணிக்கு ஒரு கூட்டம் நடந்தது. அன்று அவளுடைய வாக்குச்  சாவடியில் அவளுக்குக் கீழே பணி

புரிய வேண்டிய மூன்று பேர்கள் அவளுடன்  வந்து சேர்ந்து கொண்டனர். அவர்களில் இருவர் உதவி அதிகாரிகள். மற்றும் ஒரு பியூன். இரு உதவி

அதிகாரிகளிலும் மூத்தவர்.பெயர் கஜபதி  . இன்னொருவர் சம்சுதீன். 

கஜபதி அவளருகே வந்து “நமஸ்காரா மேடம்”என்றார். 

“குட்மார்னிங். உங்கள் ஆபிஸ் எங்கே? எந்த டிபார்ட்மென்ட்?” என்று மணிமேகலை கேட்டாள் ஆங்கிலத்தில்.

“சிக்க மகளூரு . ரெவினியூ டிபார்ட்மென்ட்டல்லி கலசா மாடுத்தினி” என்றார்.

“ஓ, நீங்களும் நம்முடைய டிபார்ட்மெண்டில்தான் இருக்கிறீர்களா? ” என்றாள் மணிமேகலை.

“ஹௌது மேடம்” என்றார் கஜபதி.

பிடிவாதமாக அவர் தனக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்காதது அவளுக்கு எரிச்சலை மூட்டியது. சிக்கமகளூரிலிருந்து பெங்களூருக்கு மாற்றல் உத்திரவு கொடுத்தால் இதெல்லாம் சரியாகி விடும்.

பிறகு அவர் சம்சுதீனை அறிமுகப்படுத்தினார். இருவரும் ஒரே ஊர்க்

காரர்கள். ஆனால் சம்சுதீன் வேலை பார்ப்பது அங்குள்ள ஒரு அரசு நிறுவனத்தின் கிளையில். பியூன் தன்னைக் கரியப்பா என்று அறிமுகப்

படுத்திக் கொண்டான். பேசும் போது கஜபதிக்கு  தேர்தல் வேலைகளில்

அதிகப் பரிச்சயம் உண்டு என்று தெரிந்தது. அந்த வகையில் தான் அதிர்ஷ்டசாலி என்று மணிமேகலை நினைத்துக் கொண்டாள். புதிதாகவோ அல்லது அதிகம் உள்வாங்கிக் கொள்ளாமல் தேர்தல் வேலைகளைக் கடனே என்று செய்பவர்களாய் இருந்தாலோ  எல்லாவற்றையும் முதன்மை அதிகாரி என்று அவளே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும். அதில் அவள் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரும் பிரச்சினை வாக்குச் சாவடியில் தேர்தல் நடக்கும் போதும் முடிந்தவுடனும்  மாநில மொழியில் உள்ள ரிக்கார்டுகளைச் சீராகத் தயாரித்து சமர்ப்பணம் செய்ய வேண்டி

யிருந்ததுதான். அவளுக்கு அம்மொழியில் பேச்சுப் பரிச்சயம் இருந்தது. ஆனால் எழுதத் தெரியாது. ஆனால் அரசாங்கத்தில் அவளைப் போலப் பலர் இருந்தார்கள்.

சென்ற முறை தேர்தல் வேலைக்கு அவளைப் பெங்களூருக்குள்ளேயே போட்டார்கள். ஆனால் அப்போது அவளுக்குஉதவியாளனாக வந்தவன் மண்டைக்கர்வம் பிடித்தவனாக இருந்தான். அவளுக்கு மொழிப் பிரச்சினை இருக்கிறது என்று தெரிந்தும்  அவளுடைய வேலைகளையெல்லாம் தான் பார்க்க முடியாது என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டான். அதற்குப் பின் அவள் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளார்க்கை வரச் சொல்லி வேலைகளை முடித்தாள். 

கூட்டம் முடிந்ததும் அவர்கள் அதே கட்டிடத்தில் இருந்த தேர்தல் கமிஷன்  அலுவலகத்திற்குச் சென்றார்கள். அவர்களது வாக்குச் சாவடியில் வைக்கப்பட வேண்டிய வாக்கு இயந்திரம்  வாக்குப் பதிவு மற்றும் வாக்காளர் ரிஜிஸ்தர். வாக்காளர் சீட்டுக் கட்டுக்கள், அழியாத மை அடங்கிய கூடுகள், தேர்தல் அதிகாரியினுடைய ரப்பர் சீல், டயரி, தேர்தல் வேட்பாளர் மற்றும் வாக்காளர் ஃபார்ம்கள், சிறிய பெரிய கவர்கள், அடையாளப் பலகைகள், பேனா, பென்சில், ரப்பர், கோந்து என்று எல்லாப் பொருட்களும் அடங்கிய இரு பெட்டிகளில்  அவர்களது வாக்குச் சாவடியின் எண் , சாவடியின் விலாசம் குறிக்கப்பட்டுத் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. மணிமேகலையின் உதவியாளர்கள் அனைத்தையும் சரி பார்த்த பின் அங்கிருந்த ரிஜிஸ்டரில் இவற்றைப்  பெற்றுக் கொண்டதாக மணிமேகலை கையெழுத்திட்டாள். இரு பணியாட்கள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து அலுவலகத்துக்கு வெளியில் இருந்த பஸ்ஸில் ஏற்றினார்கள். மணிமேகலையும் மற்றவர்களும் பஸ்ஸில் ஏறிக் கொண்டனர். ஏற்கனவே மேலும் பலர் அந்தப் பஸ்ஸில் இருந்தனர்.     

ணிமேகலையின் வாக்குச் சாவடியும் ஒரு பள்ளிக் கட்டிடத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தது. பஸ்ஸிலிருந்து இரு பெட்டிகளையும் பணியாட்கள் வாக்குச் சாவடிக்குள் இறக்கி வைத்து விட்டுத் திரும்பிப் போனார்கள். 

பள்ளிக் கட்டிடம் பங்கரையாகக் காணப்பட்டது. அதன் சுவர்களில் அடிக்கப்

பட்டிருந்த வெண்மை நிறம் இப்போது பழுப்புக்கு மாறிக் கொண்டிருந்தது. ஊர்த் தூசியும் மாறி மாறி அடித்த வெய்யிலும் மழையும் இந்த மாற்றத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று மணிமேகலை நினைத்தாள். ஆனால் வெளித் தோற்றத்திற்கு மாறாக உள்ளே சுத்தமும்,

ஒழுங்கும் காணப்பட்டன. தரை கழுவப்பட்டு மேஜை நாற்காலிகள் சீராக வைக்கப்பட்டிருந்தன. கஜபதி அவளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் அறைக்கு எதிரே இருந்த அறையில் நுழைந்தவரை மணிமேகலையும் தொடர்ந்தாள். அச் சிறிய அறையில் ஒரு கட்டிலும், அதன் மேல் ஒரு தலையணையும் போர்வையும் இருந்தன. 

“இல்லினே மேடம் நீங்க தங்கணும்” என்றார் கஜபதி அவளைப்  பார்த்து.

“உங்களுக்குத் தமிழ் தெரியுமா?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“சொல்ப சொல்ப” என்றார்.. 

“எனக்குக் கன்னடம் தெரிஞ்சிருக்கற மாதிரி” என்று அவள் சிரித்தாள்.

கஜபதி வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவளைப் பார்த்தார். அது அவளுக்குப் பிடிக்கவில்லை.

“ரொம்ப திவசமா இங்க இருக்கீங்களா?” என்று கேட்டார் மணிமேகலை

யிடம்.

“ஆமா. பத்துப் பன்னெண்டு வருஷமா இருக்கேன்” என்றாள் அவள்.

‘அப்படியும்  கன்னடம் கத்துக்  கொள்ளவில்லையா?’ என்று கஜபதி கேட்க

வில்லை. ஆனால் மனதுக்குள் எழுந்த குற்ற உணர்ச்சியை அவளால் அடக்க முடியவில்லை.  

“கரியப்பா இங்க ராத்திரி நீரு  வெச்சிர்வான். ஃபேனு  இருக்கு. நல்லதாப் போச்சு”  என்று விட்டத்தைப் பார்த்தார்.

“நீங்கள்லாம்?” என்று கேட்டாள். 

“நாம  வெளி ஜாகாலே தலையை போட்டுக்க வேண்டியதுதான். எங்க தூங்கறது? சொள்ளே பிராபிளம்   ஜாஸ்தி” என்றார்.

பரிதாபத்தை வரவழைக்கும் பேச்சா என்று அவள் அவரை உற்றுப் பார்த்தாள்.

“எலக்சன் கலசாந்தரே  எரடு மூறு திவசா ஒள்ள கிரகச்சாரானே. நம்பள ஆளப் போறவன் கிட்டே கஷ்டப்படுடான்னு  இப்பவே  நம்பள கஷ்டப்படுத்த

றாங்கோ. அப்புறம் அவன் ஆளறேன்னும் நம்பளத்தான் கஷ்டப்படுத்தப் போறான்” என்றார் கஜபதி.

மணிமேகலை புன்னகை செய்யவில்லை. 

பிறகு தன் கைப்பையை அங்கிருந்த கட்டிலின் மீது வைத்தாள். அது தவறிக் கீழே விழ உள்ளிருந்த பர்ஸ் வெளியே வந்து திறந்து கொண்டது.. கஜபதி குனிந்து அதை எடுத்து அவள் கையில் கொடுத்தார். அப்போது பர்ஸின்  உள்ளேயிருந்த புகைப்படத்தின் மீது அவர் பார்வை விழுந்தது. பர்ஸை மணிமேகலையிடம் கொடுத்துக் கொண்டே “நிம்ம மகளுனா?” என்று கேட்டார்.

“ஆமா” என்று அவள் புன்னகை செய்தபடி பர்ஸைத் திறந்து பெண்ணின் 

படத்தைப் பார்த்தாள்.

“பேரு என்னா மேடம்?” என்று கேட்டார் கஜபதி.

“சத்யபாமா.” 

“ஓ ஒள்ள எசரு. கிருஷ்ண பரமாத்மாவை நினைச்சா சத்யபாமா

ஞாபகத்துக்கு வந்திடும்”  என்று சிரித்தார் கஜபதி.

“உங்களுக்குக் குழந்தைகள்?” 

“எனக்கும் ஒரே மகள்தான். சம்யுக்தான்னு பேரு.”

“நல்ல பெயர்” என்றாள்.

‘வடக்கத்தி ராணி பேருன்னு ஞாபகம் வச்சுக்கலாம்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். சொல்லவில்லை.      

அவளும் கஜபதியும் கட்டிடத்தின் பின் பகுதிக்குச் சென்றார்கள். பரந்த இடத்தை முள்ளும் கல்லும் நிறைத்திருந்தன. வலது பக்க மூலையில் கிணறு காணப்பட்டது. அதன் வெளியே இரண்டு பக்கெட்டுகளும், சங்கிலி பிணைத்திருந்த வாளியும் இருந்தன. கிணற்றிலிருந்து வாளியில் நீரை எடுத்து க்கெட்டில் வைத்திருந்தார்கள். அவள் பார்வை சுற்றிய போது சற்றுத் தொலைவில் கதவு மூடிய ஒரு அறை தென்பட்டது. 

அவள் பார்வையைப் பின்பற்றிய கஜபதி “அதுதான் பாத்ரூம். உள்றே டாய்லெட்டும் இருக்குது” என்றார்.

அவள் அதை நோக்கி நடந்து மூடியிருந்த கதவைத் திறந்தாள். டாய்லெட் படு சுத்தமாக இருந்தது. ஆனால் குளிக்க வசதியாக அந்த இடம் இருக்க

வில்லை.

“ரொம்ப ஆச்சரியமா இருக்கே. பப்ளிக் வந்து போற இடம் இவ்வளவு சுத்தமா இருக்கும்னு நான் நினைக்கலே” என்றாள் அவள்.

கஜபதி அங்கிருந்த போர்டைக் காண்பித்தார். கன்னடத்தில் எழுதப்

பட்டிருந்தது. ‘வெளியாட்களுக்கு உரிமை கிடையாது. மீறி நுழைவோர் தண்டிக்கப்படுவர்’ என்று எழுதியிருப்பதாக அவர் கூறினார்.  

கஜபதி அவளிடம் “இது எங்களுக்கோசரம் மேடம். இங்க பக்கத்து மனேலே சொல்லி வச்சிருக்கு. இந்த ஸ்கூல் டீச்சரவரு மனை. அங்க நீங்க போயிட்டு வரலாம்” என்றார்.

அவள் நன்றியுடன் கஜபதியைப் பார்த்தாள்.   

இரவுச் சாப்பாடு வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு அன்றிரவு கரியப்பா வந்தான். அவள் வீட்டிலிருந்து பிரெட்டும் பழமும் கையில் எடுத்துக் 

கொண்டு வந்ததால் ஒன்றும் வேண்டாம் என்று கூறி விட்டாள். அவன் போன பின், பையிலிருந்து பிரெட்டையும் பழங்களையும் எடுத்தாள். கூடவே பையிலிருந்து எடுத்ததில் ஒரு பெரிய சாக்லேட் பாக்கெட்டும் வந்தது. மறுநாள் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அதை உள்ளே வைத்து விட்டாள்.  

மறுநாள் காலையில் ஏழு மணிக்கு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு ஆரம்பிக்கும் என்பதால் ஐந்து மணிக்கே மணிமேகலை படுக்கையை விட்டு எழுந்து விட்டாள். அருகிலிருக்கும் வீட்டிற்குச் சென்று தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள அவள்  கஜபதியைத் தேடிச் சென்றாள். இரவு வாசலில் படுத்திருந்த மூன்று பேரையும் அங்கே காணவில்லை. அவள் ஹாலுக்குள் நுழைந்த போது கஜபதியும் சம்சுதீனும் கரியப்பாவும் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.

கஜபதி அவளைப் பார்த்ததும் “குட்மார்னிங் மேடம்” என்றார். மற்ற இருவரும் அவரைப் பின்பற்றினார்கள்.

“இந்த வேட்பாளர்கள் லிஸ்டு, அவங்க கையெழுத்து ஸ்பெசிமன், போட்டோ எல்லாத்தையும் நீங்க பாக்கறதுக்கு எடுத்து வச்சிருக்கேன். அதேமாதிரி ஏஜெண்டுகளுக்கும் இந்த பேப்பர்கள் எல்லாம் கொடுத்

திருக்காங்க. அழியாத மசி பாட்டில் மூடியோட வச்சிருக்கோம். கட்சிச் சின்னத்தோட இருக்கிற வேட்பாளர் போஸ்டரையெல்லாம் எல்லாப் பக்கமும் ஒட்டி வச்சாச்சு. வாக்காளருங்க  மத்தவங்க பார்வை படாம வோட்டு போடுறதுக்கு வசதியா மூணு கவுண்டர் கட்டி வச்சாச்சு. இதெல்லாம் முடிக்கணும்னுதான் நாங்க சீக்கிரமா எழுந்து வந்துட்டோம்” என்றார் கஜபதி.   

பிறகு அவர் “மேடம் நீங்க வாங்க. டீச்சரவரு மனையல்லி நீங்க ரெடி பண்ணிட்டு வந்திறலாம்” என்று அழைத்துச் சென்றார். அவள் குளித்துத் தயாராகி கஜபதி இருந்த இடத்துக்குத் திரும்பிய போது ஐந்தரை என்று கைக்கடிகாரம் காட்டியது. ஆறு மணிக்கு தேர்தல் ஏஜெண்டுகள் அனைவரும் வந்து விட்டார்கள். மாதிரி தேர்தல் நடத்தி முடிக்க ஐம்பது நிமிஷம் ஆகியது. ஏழு மணிக்குச் சரியாக முதல் மனிதர் வாக்குப் பதிவு செய்ய உள்ளே வந்தார்.

மணிமேகலை கஜபதியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். வந்திருந்த ஏஜெண்டுகளிடம் இன்முகம் காட்டி அவர்கள் ஒவ்வொரு

வரையும் அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மாதிரி தேர்தல் நடக்கையில் மெஷினிலிருந்து வர வேண்டிய ‘பீப்’ சத்தம் வராத போது அதைச் சரி செய்தார். உள்ளூர் பாஷையிலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ஏஜெண்டுகளுக்கான கடமைகள் உரிமைகள் பற்றிச் சொன்னார். அவரது பார்வை ஹாலின் உள்ளே, வாக்கைப் பதிவு செய்யும் இயந்திரம் மேலே, அவரது உதவியாளர்கள் மீது என்று சுழன்று கொண்டே இருந்தது., வாக்காளர்களின் சந்தேகங்களை நிவர்த்திப்பது,வாக்காளர்களை வாக்குப் பெட்டிக்கு அருகே நடத்திச் செல்லுவது என்று பம்பரம் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் பல தேர்தல்களில் அவர் பணி  புரிந்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள்.

காலையில் குடிக்க எடுத்து வந்த கடுங் காப்பியையும், இட்லி என்று கல்லுடன் போட்டி போட்டுக் கொண்டு வந்து நின்ற உணவையும் சாப்பிட மணிமேகலை திணறி விட்டாள். இது ஒவ்வொரு முறையும் அவள் எதிர் கொண்ட சித்திரவதைதான். அவள் பரிதாபமாக கஜபதியையும் அவர் அவளையும் நோக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

கஜபதி அவளிடம் வந்து “மத்தியானம் டீச்சர் வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வர அரேஞ்சு பண்ணிடறேன்” என்றார்.

“எனக்கு மட்டுமா?” என்று மணிமேகலை கேட்டாள். அவள் முகத்தை அவர் உற்றுப் பார்த்தார். “சரி, நாம நாலு பேருக்கும் சொல்லிடறேன்” என்று சிரித்தார். மதியம் வந்த உணவு சாப்பிடும்படி ஓரளவு சுவையாக இருந்தது. 

அவளுக்கு அவரிடம் நன்றி தெரிவிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அலுவலகத்தில் அவளுக்குக் கீழ்மட்டத்தில் வேலை பார்ப்பவர்களிடம் நன்றி தெரிவிக்கும் பழக்கம் இருந்ததில்லை. அவர்கள் கடமையைச் செய்வதற்கு எதற்கு நன்றி கூற வேண்டும்? 

நடுவில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல்  ஏழு மணிக்குத் தேர்தல் முடிந்தது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘மூடு’ என்று தெரிவித்த பட்டனை கஜபதி அழுத்தினார். அதன் காட்சிப் பலகை அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைக் காட்டியது. அதைக் குறிப்பிட்ட பாரத்தில் எழுதி மணிமேகலையின் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டார். சம்சுதீனும் கஜபதியும் வாக்குச் சாவடியில் தேர்தல் நடந்த வழிமுறை

களைப் பின்பற்றியது, வாக்குப் பதிவு சம்பந்தமான பாரங்கள்,வாக்காளர்கள், ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியவர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய ரிஜிஸ்தர்கள் ஆகியவற்றை அப்டேட் செய்தார்கள்.மணிமேகலை

கையெழுத்திட வேண்டிய இடத்தைக் கஜபதி காட்டினார். வாக்குப்பதிவு யூனிட்டையும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் யூனிட்டையும் சீல் வைத்து 

வாக்குச் சாவடியில் பெயரும் விலாசமும் நிரப்பப்பட்ட அட்டையைக் கயிற்றுடன் கட்டி இயந்திரத்தின் வெளிப்புறத்தில் வைத்தார்கள். பிறகு சர்வீஸ் சென்டருக்கு அவற்றை எடுத்துச் செல்ல வந்த வேனில் ஏற்றுக் கொண்டு நால்வரும் சென்றார்கள். அங்குள்ள அதிகாரி அவற்றைச் சரி பார்த்து விட்டு அவர்கள் போகலாம் என்று அனுமதி தந்தார்.

திரும்பவும் அவர்கள் பள்ளிக்கு அருகில் இருந்த டீச்சரின் வீட்டுக்கு வந்தார்கள். அங்குதான் அவர்கள் கொண்டு வந்திருந்த கைப்பெட்டி, பை ஆகியவற்றை வைத்து விட்டு சர்வீஸ் செண்டருக்குப்  போயிருந்தார்கள். அங்கே சென்றதும் அவர் மற்ற இருவரிடமும் “நீங்க இங்கயே இருங்க. மேடத்தை நான் பஸ் ஸ்டான்டில் விட்டுட்டு வரேன்” என்றார். அவளிடம் “நாங்க மூணு பேரும் இங்கியே ஒரு பிரெண்டு வீட்டிலே தங்கிட்டு நாளைக்குதான் ஊருக்குப் போறோம்” என்று சொன்னார். பிறகு இருவரும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். 

அவள் ஏற வேண்டிய பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தது. அவள் தயக்கத்துடன் தன் கைப்பையைத் திறந்து சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து “நீங்க மூணு பேரும் எனக்கு செஞ்ச உதவிக்கு இதைவச்சுக்கணும்”

என்றாள்.  

கஜபதி ஒன்றும் சொல்லாமல் அவளைச் சில நொடிகள் பார்த்தார். பிறகு “இல்ல மேடம். நம்ப வேலைக்கு கவர்மெண்டு பணம் தராங்க. உங்களுக்கும் அவங்க கொடுக்கறது உங்க வேலைக்கு” என்றார்.

மணிமேகலை பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டு வெளியே பார்த்தாள். சற்றுத் தொலைவில் கஜபதி நடந்து போய் ஒரு கடை முன்னே நிற்பதைப் பார்த்தாள். திரும்பி வரும் போது அவர் கையில் ஒரு சிறிய கூடை இருந்தது. ஜன்னல் வழியே அதை மணிமேகலையிடம் நீட்டி “எடுத்திட்டு போங்க மேடம். ரஸ்புரி மாம்பழம். ரொம்ப இனிப்பா டேஸ்டியா இருக்கும்” என்று கொடுத்தார்.

அவள் அவரிடம் “இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு வீண் செலவு? எவ்வளவு ஆச்சு?” என்று பைக்குள் பர்ஸை எடுக்கக் கையை விட்டாள்.

“பணத்தையெல்லாம் எடுக்க வேண்டாம். சரி. உங்களுக்குப் பழம் வேண்டாம்னா சத்யபாமாவுக்குக் கொடுங்க ” என்றார் கஜபதி.

‘சட்’டென்று ஒரு வினாடி அவளுக்குப் புரியவில்லை. பிறகு தன் பெண்ணைச் சொல்கிறார் என்று உணர்ந்து அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.

பைக்குள் விட்ட கையில் சாக்லேட் பாக்கெட் பட்டது. அதை எடுத்து அவள் கஜபதியிடம் கொடுத்தாள்.  சில வினாடிகள் கழித்து “உங்க பொண்ணுக்குக் குடுங்க” என்றாள்.

“தாங்க்ஸ் மேடம்” என்றார் கஜபதி.  பஸ் கிளம்பிற்று. மணிமேகலை கையை அசைத்து அவருக்கு விடை கொடுத்தாள். பஸ் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த கால்மணிக்கும் மேலே அவள் எவ்வளவோ முயன்றும் கஜபதியின் பெண்ணின் பெயரை ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியவில்லை.

அமிழ்து

ஸிந்துஜா

“அப்பா இன்னும் நீங்க எத்தனை நாள்தான் தனியா அந்த ஆத்திலே உக்காந்துண்டு கஷ்டப்படப் போறேள்? எங்களோட பேசாம பெங்களூருக்கு வந்துடுங்கோ” என்று அன்று காலை மறுபடியும் ரங்கநாதனின் பிள்ளை திலீப் போனில் சங்கடப்பட்டான்.

“பாக்கலாண்டா” என்றார் ரங்கநாதன்.

“மூணு மாசமா இந்த காமராஜர் பதிலையே சொல்லிண்டு இருக்கேள்.”

அவருக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சரி, சாப்பிட்டாச்சா? என்ன டிபன் இன்னிக்கி?” என்று கேட்டான் திலீப்.

அவர் ஒரு கணம் பொய் சொல்லி விடலாம் என்று நினைத்தார். பிறகு மனதை மாற்றிக் கொண்டு “இல்லே. இன்னிக்கி டிபன் வேண்டாம்னு பாக்கறேன்” என்றார்.

“ஏன், உடம்பு சரியில்லையா? ஜுரமா?” என்று அவன் பதறுவது அவருக்குக் கேட்டது.

“இல்லே. வயிறு கொஞ்சம் மொணங்கறது. ஒரு வேளை லங்கனம் போட்டா சரியாப் போயிடும்” என்றார்.

திலீப் அவரிடம் “நேத்திக்கு கோபி ஐயங்கார் ஓட்டலுக்குப் போனேளா?” என்று குற்றம் சாட்டும் தொனியில் கேட்டான்.

“உன்னிடமிருந்து ஒரு குற்றவாளி தப்பித்து விட முடியுமா?” என்றார் ஆங்கிலத்தில். அவன் பெங்களூரில் லாயராகப் ஒரு பெரிய கம்பனியில் வேலை பார்க்கிறான். அவன் சொல்லுவதில் உண்மை இருக்கிறது. சட்டினியில் பச்சை மிளகாயை மட்டும் வைத்து அரைத்தது போல அப்படி ஒரு காரம். ஐம்பது வருஷத்துக்கு முன்னால் அவரது இருபதாவது வயதில் அந்த ஒரப்பு வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த வயதில்?

“அதுக்குத்தான் சொல்றேன். நீங்க இங்கே வந்துடணும்னு. வீட்டு சாப்பாடுதான் உங்களுக்கு ஒத்துக்கும். சரி, இப்போ எளனி, ஹார்லிக்ஸ்னு நீராகாரமா சாப்பிடுங்கோ. மத்தியானம் தயிர் சாதம் சாப்பிட்டா சரியாயிடும். சாப்பிட்டதுக்கு அப்புறம் ஜெலுசில் போட்டுக்கோங்கோ. நீங்க அங்கேர்ந்து கிளம்பி இங்க வந்துடறதுதான் பெட்டர். ராத்திரி போன் பண்றேன்” என்று போனைக் கீழே வைத்து விட்டான்.

ரங்கநாதன் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின் மனைவியுடன் மதுரைக்கு வந்தார். சென்னையில் அவர் உத்தியோகத்தில் இருந்த போது மதுரையில் வாங்கிய வீடு. மதுரையில்தான் அவர் பிறந்தது படித்து வளர்ந்தது எல்லாம். வேலைக்காக என்று சென்னைக்குப் போய் விட்டாலும் சென்னையின் ஆரவாரம் அடங்காப்பிடாரித்தனம் அவரைக் கவரவில்லை. இதற்கு அவர் மனதில் ஏற்கனவே மதுரை ஒரு பெரிய கிராமம் என்று ஆழப் பதிந்து அதன் எளிமையும் பகட்டற்ற சூழலும் ஒரு வித நேசத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டதுதான் காரணமாக இருக்க வேண்டும். அவருக்கும் அவரது மனைவிக்கும் இருந்த ஆசைக்கு ஒரு பெண்ணும் அவர்களிடம் இல்லாத ஆஸ்திக்கு ஒரு பையனும் பிறந்தார்கள்.

பெண்ணைத் திருச்சியில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டார். பெங்களூரில் அவருடைய பையன் திலீபின் குடும்பம் இருந்தது. அவன் லா ஸ்கூலில் படிக்க பெங்களூர் வந்தவன் ஊர் பிடித்து விட்டதால் ஒரு வேலையையும் வாங்கிக் கொண்டு பெங்களூர்வாசியாகி விட்டான். அவனைத் திருமணம் செய்து கொண்ட நர்மதாவும் பெங்களூர்க்காரி. அவர்களுடைய ஒரே பெண் பத்மினி ஊட்டியில் லவ்டேலில் உள்ள ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தாள்.

அவர் மனைவி மூன்று மாதங்களுக்கு முன் காலமாகி விட்டாள். தனது வாழ்நாளில் வெந்நீர் போடக் கூடச் சமையலறையில் நுழைந்திராத அவருக்கு மனைவியின் மறைவுக்குப் பின் சாப்பாட்டுப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. ஊரிலிருந்து சாவுக்கு வந்திருந்த உறவினர்கள், காரியங்கள் முடிந்த பின் பத்துப் பதினைந்து நாள்கள் சமையல் செய்து போட்டு விட்டுப் போனார்கள். அப்புறம் அவர் வடக்கு மாசி வீதியில் இருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து டிபன், லஞ்ச், இரவு உணவு எல்லாம் வரும்படி ஏற்பாடு செய்து கொண்டார். என்றாவது மாலையில் வயிற்றைக் கிள்ளும் போதும் நாக்கு அரிப்பெடுக்கும் போதும் கோபி அய்யங்கார் கடைக்குப் போய் வெள்ளையப்பம், பஜ்ஜி, காரச் சட்டினி என்று இறங்கி அடித்து விட்டு வருவார்.

‘தகப்பனார் மதுரையில் எதற்காகத் தனியே கிடந்தது உழல வேண்டும்; அதுவும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு’ என்று திலீப் வாரத்துக்கு ஒரு முறை அவரைப் போனில் தொந்திரவு பண்ணிக் கடைசியில் பெங்களூருக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஒரு சமையல்கார மாமியை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். நன்றாகச் சமைத்துப் பழக்கப்பட்ட கை என்று அவர்கள் ஆறு மாதம் மகிழ்ந்து கொண்டிருந்த போதே அந்தக் கை கொஞ்சம் நீளமாகி விட ரங்கநாதனின் சில கைக்குட்டைகள், நர்மதாவின் பெர்ஃபியூம், திலீப் தனது அறையில் மறந்து விட்டுச் சென்று விட்ட சில பத்து ரூபாய்கள், சமையலறையில் ஒரு மாதத்துக்கு இருக்கட்டும் என்று வாங்கிப் போட்டிருந்த ஆறு எம்.டி.ஆர். இட்லிப் பொடிப் பாக்கெட்டுகளில் இரண்டு எல்லாம் கால் முளைத்து வீட்டை விட்டுப் போய் விட்டதால் மாமியையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விட்டார்கள். அதனால் சமையல் செய்யும் வேலை நர்மதாவின் தலையில் விழுந்தது. அவள் மிக நன்றாகச் சமைத்தாள். ரங்கநாதனுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ரங்கநாதன் அவள் சமையலை ஆரம்பித்த முதல் நாளே சொல்லி விட்டார். “இதோ பாரும்மா. ரொம்ப இழுத்து விட்டுண்டு நீ எதுவும் செய்ய வேணாம். சமையக்காரி இருந்தப்பவே கார்த்தாலே பாதி நாள் அவ டயத்துக்கு வரமாட்டா. சனி ஞாயிறிலே திலீபுக்கு லீவுன்னு நேரே பிரென்ச்க்குப் போயிடுவோம். இல்லாட்டா அந்த ரெண்டு
நாள் மட்டும் மல்லேஸ்வரத்திலே இல்லாத ஹோட்டலா? அவன் ஏ 2 பி க்கோ, எம்.டி. ஆருக்கோ போய் டிபன் வாங்கிண்டு வரட்டும். அதனாலே நீ டிபன் கச்சேரியைக் காலம்பற வச்சுக்க வேண்டாம். தெனமும் பத்து பத்தரைக்கு நேரே லஞ்சு சாப்பிட்டுடலாம். சரியா?” என்று திட்டம் போட்டுக் கொடுத்து விட்டார்.

கணவனும் மனைவியும் நல்ல ஐடியா என்று ஒப்புக் கொண்டார்கள்.

ரங்கநாதன் மேலும் நர்மதாவிடம் “கொழம்போ சாம்பாரோ வக்யற
அன்னிக்கு ரசம் பண்ணாதே, கறி பண்ணினா கூட்டு எதுக்கு? கூட்டு பண்ற நாள்ல கறி ஒதுங்கிக்கட்டும்” என்று அவர் சொன்ன போது நர்மதா சிரித்தாள். “ரெண்டுமே இல்லாம ஒண்ணு ரெண்டு நாள் அப்பளாம், சிப்ஸ், ஊறுகாயை வெச்சுண்டு சமாளிச்சுக்கலாம். இல்லியா?” என்று திட்டத்தை முடித்து வைத்தார்.

ஆனால் சில வாரங்கள் கழித்து ரங்கநாதன் ஒரு பிரச்சினையைச்
சந்திக்க வேண்டியதாயிற்று. அதை யாரிடமும், குறிப்பாகப் பிள்ளையிடமும் நாட்டுப் பெண்ணிடமும், சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. நர்மதா சமைக்க ஆரம்பித்ததிலிருந்து திலீப் மாத்திரம் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பிப் போய் விடுவான். நர்மதா பத்து மணி வாக்கில் சமையலை முடித்து விடுவாள். ரங்கநாதன் பத்தரை மணிக்குச் சாப்பிடுவதைப் பழக்கிக் கொண்டார். திலீப்பின் பியூனும் அந்த நேரத்துக்கு வந்து நர்மதா கட்டி வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு போவான். நர்மதா நிதானமாகப் பனிரெண்டு மணிக்குச் சாப்பிட உட்காருவாள்.

நாளடைவில் இந்த சமையல் நேரமும் சாப்பிடும் நேரமும் மாற்றமடைந்தன. நர்மதா திடீரென்று நெட் ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சினிமாக்களை இரவு பார்க்க ஆரம்பித்ததால் படுக்கையில் இரவு விழ வெகு நேரமானது. அதனால் அவள் காலையில் நேரங் கழித்து எழுந்திருக்க ஆரம்பித்தாள். சமையல் செய்து முடிக்கவும் நேரமாயிற்று. அதனால் ரங்கநாதன் பதினோரு மணி, பதினொன்றரை மணிக்குதான் சாப்பிட முடிந்தது. அவ்வளவு நேரம் அவரால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் நர்மதாவிடம் சொல்ல அவருக்கு இஷ்டமில்லை. தானே வாயைக் கொடுத்து வம்பை வாங்கிக் கொண்டோமோ என்று கூட அவர் தன்னை நொந்து கொண்டார்.

ஒரு நாள் திருச்சியிலிருந்து பெண் கூப்பிட்டாள்.

“என்னம்மா சாரதா? எப்படி இருக்கே? மாப்பிள்ளையும் குழந்தைகளும் எப்படி இருக்கா?” என்று கேட்டார்.

அவள் பதிலுக்கு அவர்கள் மூவரையும் பற்றி நலம் விசாரித்தாள்.

“அப்பா, நான் இப்ப எதுக்கு உங்களைக் கூப்பிட்டேன்னா என்னோட மாமனாருக்கு இருபத்தி அஞ்சாம் தேதி சதாபிஷகம் நடக்கறது. நீங்க எல்லோரும் வரணும்னு இவரும் ரொம்ப சொல்றார்” என்றாள் சாரதா.

இருபத்தி ஐந்தாம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தது. ஆனால் தனக்கு ஆபீசில் வேலை இருப்பதால் வருவதற்கில்லை என்று திலீப் சொன்னான். ஆபிஸ் போகும் அவனைப் பார்த்துக் கொள்ள நர்மதாவும் வரவில்லை என்று சொல்லி விட்டாள். சம்பந்தியாக அவர் போவதைத் தவிர்க்க முடியாது. விசேஷம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னே அவர் மதுரை சென்றார்.

சதாபிஷேகம் முடிந்த பின்னும் மதுரையில் அவர் ஒரு மாதம் பெண்ணுடன் இருந்தார். இப்போது அவருக்கு வேளா வேளைக்கு உணவு கிடைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. அவர் அங்கு வந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் தான் எதிர்கொண்ட சாப்பாட்டுப் பிரச்சினையைப் பெண்ணுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர் பெங்களூருக்குக் கிளம்புகிறேன் என்று சொன்னபோது “இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போயேம்ப்பா” என்றாள் பெண். அவர் ஒன்றும் சொல்லாமல் புன்னகை புரிந்தார்.

கிளம்பும் அன்று “எல்லாம் எடுத்து வச்சுண்டுட்டேளா?” என்று சாரதா ரங்கநாதனிடம் கேட்டாள்.

“எங்கியோ அமெரிக்காவுக்குப் போறாப்பிலேன்னா நூறு தடவை கேட்டுண்டு இருக்கே?” என்று ரங்கநாதன் பெண்ணைப் பார்த்துச் சிரித்தார். “இங்க இருக்கிற பெங்களூருக்கு ராத்திரி ட்ரெயின் பிடிச்சா காலங்காத்தால கொண்டு போய்த் தள்ளி விட்டுடறான்.”

“இல்லே, ஏதாவது மறந்து வச்சிடக் கூடாதேன்னுதான். கண்ணாடி, மொபைல்,வாட்ச், ஸ்லோகப் புஸ்தகப் பை, மருந்து டப்பான்னு எல்லாம் முக்கியமான ஐட்டங்களாச்சே!”

“திருச்சியிலே கிடைக்கிறதை விட இதெல்லாம் ஃபாஸ்டா பெங்களூர்லே கிடைச்சுடும். ஒழுங்கா வேளைக்குக் கிடைக்காதது சாப்பாடுதான்.”

சாரதா பரிவுடன் தந்தையை நோக்கினாள்.

“அதெல்லாம் சரியாயிடும். கவலைப்படாதேங்கோ.”

“கவலை என்ன கவலை எழுபது வயசுக்கு? அதுக்காக நானும் எவ்வளவு நாள்தான் பொண் வீட்டிலே உக்காந்துண்டு சாப்பிட்டாறது?”

“நீங்களா நினைச்சிண்டு இப்படிப் போறேள். நூறு வருஷத்துக்கு மின்னாலே எவனோ பொண்ணாத்திலே போய்க் கையை நனைக்கிறதே வெக்கம். அதிலே இன்னும் அங்க போய் நாள் கணக்குலே தங்கறதுங்கறது மானக்கேடுன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அதையே உடும்புப் பிடியாப் பிடிச்சிண்டு ..! ஹ்ம். காலம் எவ்வளவோ மாறிப் போயிடுத்து. இங்க நீங்க இருக்கறதைப் பத்தி நானோ உங்க மாப்பிள்ளையோ ஒரு வார்த்தை சொன்னோமா? நீங்க ரெண்டு குழந்தைகளுக்கும் கைடு மாதிரி இங்க இருக்கறது பெரிய அதிர்ஷ்டமா இருந்தது. ஏன் போறேள்னு அவருக்கும் ரொம்ப வருத்தம்தான்” என்றாள் சாரதா. அவர் பெண்ணைச் சமாதானப்படுத்தி விட்டு ரயில் ஏறினார்.

பெங்களூரில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

காரை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து அவரை அழைத்துச் சென்ற திலீப் அவரிடம் ” நாளைக்கு விடிகார்த்தாலையும் எனக்குப் பிக்கப் வேலை இருக்கு” என்று சிரித்தான். “பத்மினி ஊட்டிலேர்ந்து வரா!”

அவர் சில வினாடிகள் யோசித்து விட்டு “இப்ப ஒண்ணும் ஸ்கூல் லீவு கிடையாதே?” என்றார்.

“இல்லே. ஒரு மாசம் ஸ்டடி லீவ்ன்னு இங்க வரா. அப்புறம் பரீட்சை ஆரம்பிக்க ரெண்டு நாள் முன்னாலே திரும்பிப் போகணும்” என்றான்.

அன்று வழக்கம் போல் திலீப் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குப் போனான். நர்மதா சமையலை முடிக்கும் போது பதினொன்றே கால் ஆகி விட்டது. ரங்கநாதன் நல்ல பசியுடன் சாப்பிட உட்காரும் போது மணி பதினொன்றரை.

மறுநாள் காலையில் பத்மினி பெட்டி படுக்கையுடன் உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் . அவரைப் பாத்ததும் “தாத்தா!” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் . அவளுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்.

“என்ன தாத்தா? இப்பிடி இளைச்சுப் போயிருக்கேள்?” என்று அவரது கையைப் பிடித்துப் பார்த்தாள்.

“நானா? என்ன விளையாடறியா? உங்கம்மா கைபாகத்திலே மாசா மாசம் எனக்கு வெயிட் கூடிண்டே போறது” என்று அவர் சிரித்தார்.

ஒன்பது மணிக்கு பத்மினி அவரிடம் வந்து “தாத்தா, வாங்கோ. டிபன் சாப்பிடலாம்” என்று அழைத்துக் கொண்டு போனாள்.

பொங்கலும் கொத்ஸும் டைனிங் டேபிளில் சட்னியுடன் வீற்றிருந்தன.

“அந்த ஹாஸ்டல்லே இதையெல்லாம் இவளுக்கு யார் பண்ணிப் போடறா? தினைக்கும் ப்ரெட்டும் ஜாமும் சாப்பிட்டுண்டுதானே கிடக்கறது குழந்தைகள். அதனாலேதான் இப்பிடி டிபன் பண்ணினேன்” என்றாள் நர்மதா ரங்கநாதனைப் பார்த்து. “அதுவுமில்லாம காலம்பற எட்டரைக்கு பிரேக் ஃ பாஸ்ட், மத்தியானம் பன்னண்டரைக்கு லஞ்ச், ராத்திரி எட்டு மணிக்கு டின்னர்னு ஹாஸ்டல்லே சாப்பிட்டுடறா. இங்கையும் அந்தந்த நேரத்துக்கு அப்படியே பண்ணிக் குடுத்துட்டாப் போச்சு.”

பத்மினி இருந்த ஒரு மாதமும் இப்படித்தான் சமையலும் சாப்பாடும் நடந்தன.

பத்மினி கிளம்புவதற்கு முதல் நாள் இரவு அவர்கள் வெளியே போய்ச் சாப்பிடலாம் என்று ஆஷா ஃபுட் கேம்ப் போனார்கள்.

“இங்கே நார்த் இண்டியன் நன்னா பண்றான் இல்லே?” என்றாள் நர்மதா.

“நார்த் இண்டியா போய்தான் நார்த் இண்டியன் ஐட்டம்ஸ் சாப்பிடணும்” என்று சிரித்தான் திலீப்.

“நாங்கூட எக்ஸாம் முடிஞ்சு ரெண்டு மாசம் லீவு விடறச்சே டெல்லி போலாம்னு இருக்கேம்ப்பா. என் ஃபிரென்ட் சுலேகா அவாத்திலே வந்து தங்கிண்டு அப்படியே கொஞ்சம் நார்த் இண்டியா எல்லாம் சுத்திப் பாக்கலாம்னு சொல்றா” என்றாள் பத்மினி.

ரங்கநாதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“போடி. வருஷம் பூரா உன்னைப் பிரிஞ்சு நாங்க இருக்கோம். லீவுலேயும் எங்கேயோ போறாளாம். சும்மாக் கிட ” என்றாள் நர்மதா.

ரங்கநாதன் நன்றியுடன் நர்மதாவைப் பார்த்தார்.

“அப்பா! பாருப்பா அம்மாவ!” என்று பத்மினி சிணுங்கினாள்.

திலீப் “ஆசைப்பட்டா அவ போயிட்டு வரட்டுமே. எப்பவும் நம்ம கூடவே கட்டிப் போட்டு வச்சுக்க அவள் என்ன கன்னுக்குட்டியா?” என்றான்.

ரங்கநாதன் ” இல்லே. அவ இங்கியே இருக்கட்டும். வெளியூர்லாம் போக வேண்டாம்” என்றார் குரலைக் கடுமையாக ஆக்கிக் கொண்டு.

பத்மினி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள். தன் குரல் கடுமைக்குப் பதிலாக இறைஞ்சலாய் ஒலிப்பதைத்தான் அவள் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் என்று அப்போது அவருக்குத் தோன்றியது.

சக மனிதன்

உஷாதீபன் 

டது தோளை அவர் அசைக்கவேயில்லை. இருக்கையின் பிடியில் இடது கையைப் பதித்திருந்தார். அத்தனை ஆசுவாசமாகவும், அழுத்தமாகவும் தலை சாய்ந்திருந்தான் அந்த ஆள். மெலிந்த சரீரம். அவனது மொத்த எடையையும் அவரே தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் உணர்ந்தார். சட்டை பட்டன்கள் அவிழ்ந்து அந்த மங்கிய இருட்டிலும் வியர்வை சொரிவது தெரிந்தது. இடது தோளிலிருந்து முழங்கை வரை சற்று மரத்துப் போனது போல்தான் இருந்தது. மணிக்கட்டோடு கையை மட்டும் அசைக்க முடிந்தது. அவன் லேசாக எழும்பினால் இடது சுவர்ப்பக்கமா சாய்ஞ்சுக்குங்க என்று சொல்லலாம் என எண்ணினார். அதற்காக விரல்களைத் தாளம் போடுவது போல் கைப்பிடியில் மெல்ல சத்தமெழுப்பினார். எந்தச் சலனமுமில்லை.

படம் ஓடும் சப்தத்தில் இது எங்கே காதில் விழப் போகிறது அவனுக்கு. வந்தது முதலே தூங்க ஆரம்பித்துவிட்டான். தூங்கிக் கொண்டேதான் வந்தான் என்றும் சொல்லலாம். நியூஸ் ரீலுக்கு முன்பு போட்ட விளம்பரம் கூட அவன் பார்க்கவில்லை. தூங்குவதற்காகவே தியேட்டருக்கு வந்திருப்பானோ என்று தோன்றியது. காசு கொடுத்துத் தூங்குகிறான்.  வரிசைக் கடைசி, சுவர் ஓர இருக்கையில் அமர்ந்தால் ஏ.சி. சரியாக வராதோ என்ற சந்தேகத்தில் அதற்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தார் பூவராகன். ஏ.சி. ஓடுகிறதா என்று சந்தேகமாய் இருந்தது. குளிர்ச்சியே இல்லை. ஒருவேளை கொஞ்ச நேரம் கழித்துத் தெரியலாம். தோளை லேசாகக் குலுக்கினார். அவன் உறக்கம் கலைந்து அதற்கு வேறு சண்டைக்கு வந்தால்? என்று தோன்றியது. இன்னொரு முறை குலுக்கிப் பார்த்தார். பலனில்லை. இருக்கும் இருப்பைப் பார்த்தால் படம் முடியும் வரை அவன் விழிக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றியது.

தேடி வந்ததுபோல், அல்லது குறி வைத்து நுழைந்ததுபோல், அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கை என்பதாய் எண்ணி வருவதுபோல் அவன் அந்த வரிசையில் நுழைந்தான். பத்துப் பேரைக் கடந்து வந்து அமர வேண்டும். தனி ஆட்களாகவும், மனைவி மக்களோடும் அமர்ந்திருந்தார்கள். அத்தனை இருக்கைகளிலும் ஆட்கள் இருக்க, இடித்தும், பிடித்தும், தடுமாறியும் ஏதோவோர் வேகத்தை உணர்ந்தவனாய்   நுழைந்தான் அவன். யார் காலையோ மிதித்து விட்டான் போல அவன் கடந்ததும், அவர் அவனை நோக்கி கையை நீட்டியும் நீட்டாமலும்  என்னவோ சொல்லித் திட்டினார். தடுமாறி ஒருவர் தொடையில் கையை வைத்துத் தாங்கிக் கொண்டான்.  காதில் விழக் கூடாது, சண்டை வேண்டாம் என்பது போல் திட்டியவர்,  முனகினார் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் எதையும் பொருட்படுத்தியவனாய் இல்லை. வந்து சேர்ந்த விதமும், பொத்தென்று இருக்கையில் விழுந்த விதமும் ஒரே இணைப்பாக இருந்த அந்த மொத்த வரிசையையும் ஒரு குலுக்குக் குலுக்கிற்று. பலரது தலையும் முன்னெழும்பி அவனை அந்த அரையிருட்டில் பார்த்தது. சுத்தக் காட்டானா இருப்பான் போல்ருக்கு!- ஒருவர் சத்தமாகவே சொன்னார். அதுவும் அவன் காதில் விழவில்லை. முழு நினைவில் இருந்தால்தானே! இப்போது அவன் உலகம் வேறு!

லேசாக சுவற்றைப் பார்த்து எச்சில் உமிழ்ந்து கொண்டதுபோல் இருந்தது. மூக்கைப் பிடித்துக் கொண்டார் இவர். முட்டக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.. புளிச்ச வாடை அவனிடமிருந்து வீசியது. படம் முடிந்து போகும் வரை இந்த அவஸ்தை உண்டு என்று அந்தக் கணமே தோன்றியது இவருக்கு. கர்சீப்பை எடுத்து வாயையும் மூக்கையும் அழுந்தப் பொத்திக் கொண்டார். இன்னிக்குக் கிளம்பின நேரம் சரியில்ல!-நினைத்துக் கொண்டார். கண்கள் சொக்கிக் கிறங்கியது அவனுக்கு. விளம்பரம் முடிந்து நியூஸ் ரீல் ஓட ஆரம்பித்திருந்தது. எதுவும் பார்க்கவில்லை அவன். நமக்குன்னு இடம் அமையுதே என்று நினைத்துக் கொண்டார். வேறு எங்கும் இடம் இல்லாதது கண்டே அந்த இடத்தைப் பிடித்தார். எண்ணிட்ட இருக்கைகள் இல்லை. இஷ்டம்போல் அமர்ந்து கொள்வதுதான். முதலில் வருபவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் ஆகிறார்கள். தாமதமாய் வந்தால் அப்படித்தான்! அதுக்காக இப்படியா அமையணும்? காசு கொடுத்து சங்கடத்தை விலைக்கு வாங்குவது இதுதான்!

எப்போதுமே வரிசை நுனியில்தான் அமர்வார். அப்போதுதான் சட்டென்று எழுந்து விருட்டென்று எல்லோருக்கும் முன்பு வெளியேற முடியும். அவரது தேர்வு வரிசை நுனி இருக்கைகள்தான். பாத்ரூம் போய் வருவதற்கும் அதுதான் வசதி அவரைப் பொறுத்தவரை. இன்று அப்படி அமையவில்லை. அத்தோடு கிளம்பும்போதே மிகவும் தாமதமாகி விட்டது. போவமா இருந்திருவமா என்று நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்து விட்டார். டூ வீலரில் வருகையிலேயே மனதுக்குள் ஏகத் தடுமாற்றம். பாதியில் வண்டியை வளைத்து வீடு திரும்பி, மீண்டும் தியேட்டருக்கு விட்டு ஏகக் குழப்பம்.

இத்தனைக்கும் மிருணாளினியிடம் சொல்லவில்லை. வெளில போய்ட்டு வர்றேன் என்றுதான் கிளம்பினார். அவளும் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை. எப்பொழுதுமே கேட்கமாட்டாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் அருகே சம்மந்தபுரம் பார்க்குக்குப் போகப்போகிறார். போய் நண்பர்களிடம் அளவளாவிவிட்டு வருவார். வெளியே வரும்போது வழக்கம்போல்  ஒரு தேங்காய் போளி, ஒரு பருப்பு போளி சாப்பிடுவார். அத்தனை நேரம் வயதொத்த நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிவிட்டு, பிறகு தான் மட்டும் வந்து அந்த போளியைப் பதம் பார்ப்பது என்பதில் அவருக்கு ஒன்றும் சங்கடம் இருந்ததில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ருசியில் இருந்தார்கள். சிலர் சுண்டல் வாங்கி உண்டார்கள். இன்னும் சிலர் சூடாக வேப்பெண்ணெய் மணக்க வறுத்த  கடலைப் பருப்பை  வாங்கிக் கொரித்தார்கள். அவரவர் டேஸ்ட் அவரவருக்கு. கூடி உட்கார்ந்து மணிக்கணக்காய்ப் பேசுபவர்கள், தின்பதில் பிரிந்து போவார்கள். இவருக்கு சின்ன வயது முதலே போளி என்றால் பிரியம். அம்மா கையால் செய்த போளியின் ருசி மறக்காது இன்னும் அவர் நாக்கில் தவழ்கிறது. ஏங்கித் திரிந்த காலம். அது பணக்காரர்கள் பண்டம் என்ற நினைப்பிருந்தது மனதில்

அவர்களுக்காக அவள் செய்ததில்லை. அதற்கான வசதியும் இருந்ததில்லை. ஏதாவது விசேடம் நடக்கும் வீட்டில் அழைத்திருப்பார்கள். முறுக்கு சுற்ற, பலகாரம் செய்ய என்று. அம்மா போய் வரும்போது நாலு கட்டித் தருவார்கள். மூன்று  சகோதரர்கள், சகோதரிகள் மத்தியில் அதற்கு அடிபிடி. ஆளுக்கொன்றாவது வேண்டாமா, இன்னும் ரெண்டு சேர்த்துத் தாருங்கள் என்று அம்மா கேட்க மாட்டாள். கொடுத்ததை வாங்கி வருவாள். கொடுக்காவிட்டாலும் வந்து விடுவாள். கேட்கமாட்டாள். முறுக்கு சுத்தப் போனியேம்மா ஒண்ணும் கொண்டு வரல்லியா? என்று கேட்டு அழுதால், அடிதான் விழும். அவா கொடுத்தாத்தான் இல்லன்னா இல்ல. புரியுதா? அப்டியெல்லாம் எதிர்பார்த்து நாக்கைத் தீட்டிண்டு இருக்கக் கூடாது புரிஞ்சிதா? இது அம்மாவின் கண்டிப்பு.

திட்டமாய் வளர்ந்தவர் அவர். எந்த செயலுக்கும் சில முன் தீர்மானங்கள், முடிவுகள் என்பது உண்டு. ஒரு சினிமா போவதென்றால் கூட இந்த நேரத்திற்குள் கிளம்ப வேண்டும், இந்த நேரத்திற்குள் வீடு திரும்பி விட வேண்டும் என்று வரித்துக் கொள்வார். இஷ்டம்போல் கிளம்பி, இஷ்டம்போல் வந்து சேருவது என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை பொறுப்பற்ற செயல். ஆனால் இன்று உண்மையிலேயே கொஞ்சம் லேட் ஆகிவிட்டதுதான். தடுமாற்றம்தான் காரணம். புறப்படுகையில் வயிற்றைக் கலக்குவது போலிருந்தது. பாத்ரூம் போய்விட்டுக் கிளம்பினார். முதல் தடங்கல். போவோமா அல்லது அப்படியே இருந்து விடுவோமா என்றும் தோன்றியது. கொஞ்சம் தண்ணி கொண்டா என்றார் மனைவியிடம். பெரிய டம்ளர் நிரம்பக் கொண்டு வந்தாள் அவள். நல்லவேளை சொம்புல எடுத்திட்டு வரல என்றார். ஒரு வாய் தொண்டைய நனைக்கன்னு கேட்டா இவ்வளவா? என்று விட்டு எழுந்து நடந்து விட்டார். அவர் கண் முன்னால் அந்த மீதித் தண்ணீரை வாசல் செடிக்கு அவள் வீசியது அவளது கோபத்தைக் காட்டியது. தூக்கித்தானே குடிச்சேன் எச்சிலா பண்ணினேன் தூரக் கொட்டுற? என்றவாறே கிளம்பி விட்டார்.

அன்று மிருணாளினியிடம் சிறு மனத்தாங்கல். அதை வெளிப்படையாய் அவளிடம் கேட்கவில்லை. அவளாகச் சொல்வாள் என்று எதிர்பார்த்திருந்தார். செய்து முடித்துவிட்டுச் சொன்னாள் அவள். முன்பே சொன்னால், தான் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறோம் என்கிற நம்பிக்கை அவளுக்கு ஏன் இந்த வயதிலும் வரவில்லை என்பதை நினைத்தார். பெண்கள் சம்பாதிக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு ஒரு சுதந்திரம் தானாகவே வந்து விடுகிறது. Financial freedom. அது தன்னெழுச்சியானது. மற்றவரை லட்சியம் செய்யாதது. அலுவலகத் தோழிகளோடு எதிர் வங்கிக்குப் போய் அவள் அக்காவிற்குப் பணம் அனுப்பியிருக்கிறாள். இதற்கு முன்பு ஒரு தரம் அப்படிச் செய்தபோது இவனிடம் சொல்லி வங்கிக்குக் கூட்டிப் போனாள். RTGSல் பணம் எப்படி அனுப்புவது என்பதை அன்று தெரிந்து கொண்டாள். இந்த முறை அவளாகவே செய்திருக்கிறாள். முன்னதாகவே சொல்வதானாலும் “எங்க அக்காவுக்குப் பணம் அனுப்பப் போறேன்..“ என்றுதான் சொல்வாள் முடிவு பண்ணிவிட்டதைத் தெரிவிப்பதுபோல் தகவல் வரும். அனுப்பட்டுமா? என்ற முறைக் கேள்வியெல்லாம் இல்லை. தடுப்பேன் என்று அவளாகவே நினைத்துக் கொள்வாளோ என்னவோ? அல்லது அப்படிச் செய்வதில் அவளுக்கே ஒரு உறுத்தல் அல்லது தயக்கம் இருந்ததோ என்னவோ? அவள் என்ன வாங்குகிறாள் என்று கூட இன்றுவரை இவர் கேட்டதில்லை. பணம் என்பது ஒரு காரணி. அதுவே வாழ்க்கையில்லை.

இப்போது அவன் மிக நன்றாய்ச் சாய்ந்திருந்தான் இவர் தோளில். அவனை எழுப்ப ஏனோ இவருக்கு மனசாகவில்லை. தோள் கண்டேன் தோளே கண்டேன் என்று அவன் அயர்ந்திருந்தான்.  இப்படி ஒருவன் தூங்கக் கொடுத்து வைக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டார். அவன் முகம் வற்றியிருந்தது. பாவமாய்த்தான் தெரிந்தது. ஒரு வேளை தன்னைப்போலவே பெண்டாட்டியிடம் சண்டை போட்டு விட்டு, ஏற்றிக் கொண்டு வந்திருப்பானோ? நல்ல உறக்கம் என்பது ஒருவனுக்குக் கிடைக்கும் கிஃப்ட். ஓய்வு பெற்ற பிறகு சமீபத்தில்தான் இந்த உறக்கம் அவரிடம் குறைந்திருக்கிறது. இரவு பத்து மணிக்குக் கண்ணசந்தார் என்றால் படக்கென்று தூங்கி விடுகிறார்தான். அடுத்தாற்போல் ரெண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்து விடுகிறது அவருக்கு. சிறுநீர் கட்டி நிற்கிறது. அது எழுப்பி விடுகிறது. மீண்டும் வந்து படுக்கையில் தூக்கம் பிடிக்கத் தாமதமாகி விடுகிறது. ஆக நாலு மணி நேர உறக்கம் என்பதுதான் உத்தரவாதம்.

பிறகு படுத்துப் புரண்டால், என்னென்னவோ நினைப்புகள் வந்து விடுகின்றன. குடும்பத்தில் சகோதரர்களிடம் ஏற்பட்ட சண்டை, திருமணம் செய்வதற்கு முன் தங்கைமார்கள் படுத்திய பாடு, அலுவலகத்தில் திடீர் திடீர் என்று அவருக்குக் கிடைத்த மாறுதல்கள், தர்மபுரி, பாலக்கோடு,  கிருஷ்ணகிரி என்று தூக்கியடித்தது.. உள்ளூர் வரப் படாத பாடு பட்டது. தன் விண்ணப்பம் சீனியாரிட்டியில் வைக்கப்படாமல், அதற்குரிய பதிவேட்டில் பதியப்படாமல், வேண்டுமென்றே காணாமற் போக்கியது, கடைசியில் சி.எம். செல்லுக்கு மனுப்போட்டு நியாயம் கிடைத்தது அடேயப்பா எத்தனை துன்பங்கள், அலைக்கழிப்புகள்?.

எல்லாக் காலத்திலும் மிருணாளினி தனியாய்த்தான் இருந்து கழித்திருக்கிறாள். ராத்திரிதான் பயமாயிருக்கும் மத்தப்படி ஒண்ணுமில்ல என்பாள் சாதாரணமாய். ஒருவேளை தான் இல்லாமல் இருந்ததே அவளுக்குப் பெருத்த நிம்மதியாய் இருந்துவிட்டது போலும்! என்று நினைத்துக் கொள்வார். டிபார்ட்மென்ட் சர்வீஸில் அவர் பட்ட கஷ்டங்கள் யாருமே பட்டிருக்க மாட்டார்கள். எந்த மாறுதலுக்கும் சிபாரிசு என்று போனதில்லை. பைசா செலவழித்து வாங்கியதில்லை. அப்படி அவசியமில்லை என்று விடுவார். ஒரு வேளை ஒரு குழந்தை பிறந்திருந்தால் எண்ணங்கள் மாறியிருக்குமோ என்னவோ? அந்த பாக்கியம் இல்லை.  அப்பாவிகள் இந்த உலகத்தின் எல்லா இடங்களிலும் துன்பத்திற்குள்ளாகிறார்கள். அதுதான் யதார்த்தம். கஜகர்ண வித்தை தெரிந்தவன்தான் இங்கு பிழைக்க முடியும்.

. படம் ஓடிக் கொண்டிருந்தது. அவனைக்  கை தொட்டு அசைத்தால் மேற்கொண்டு ஏதேனும் விபரீதம் ஆகி விடலாம். அப்படியே மெதுவாய்த் தள்ளி சுவற்றுப் பக்கம் சாய்த்து விடலாம் என்றாலோ அது பெரும் பிரயத்தனம். முழு போதையானாலும், நிச்சயம் எழுந்து விடுவான். அப்படியே தலை கவிழ்ந்து கீழே சாய்ந்து விட்டால்? பிறகு எவன் இடுக்கில் தூக்குவது? ஆகவே எதுவும் சாத்தியமில்லை என்று தோன்றியது. ஆனால் அவன் உறக்கத்தைக் கலைக்க மனமில்லை. தான் பிரயத்தனப்பட்டாலும் கலையாது. மீறிக் கலைந்தால் பிரச்னைதான்.

கவனம் அவன் மீதுதான் இருந்ததே தவிர படத்தின் மீது சுத்தமாய் இல்லை. வில்லனின் கார் பின்னால் சர்ரு சர்ரு. என்று பத்திருபது கார்கள் புயலாய்ப்  பின் தொடர. வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் என்னவோ ஏதோவென்று புரியாமல் பார்க்கிறார்கள். ஒரு கணம் தோன்றி மறையும் இந்தக் காட்சியில் எழும் சப்தம் தியேட்டரையே அதிர வைத்தது. இதெல்லாம் எனக்கு ச்ச்சும்மா.! என்பதுபோல் அவன் இவர் தோளில் கிடந்தான். அவன் வீட்டில் கூட இத்தனை சுகமாய்த் தூங்கியிருக்க மாட்டான். நிச்சயம்.  அவனை ஒதுக்குவதற்கு ஒருவரும் முன் வரவில்லை. இவர் வரிசை ஆட்களே உதவியில்லை.  இது அவர் தலைவிதி என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. திரும்பித் திரும்பிப் பார்க்க மட்டும் செய்தார்கள். பிறகு படத்தில் லயித்து விட்டார்கள். அவனுக்கும் சேர்த்து படம் பார்த்துக் கொண்டிருந்தார் இவர். எழுந்து கதை கேட்டால்? என்று தோன்ற சிரிப்புதான் வந்தது.

மிருணாளினியைக் கூட்டி வந்திருந்தால் இந்தத் தொந்தரவு வந்திருக்குமா?- திடீரென்று இப்படித் தோன்றியது இவருக்கு. ஆபத்துக் காலங்களில் என்றும் அவள் இவர் கூட இருந்ததேயில்லை.. இதுதான் நிதர்சனம். அவளுக்கு சினிமா பிடிக்காது. கோயில் குளம் என்றால் கிளம்பி விடுவாள். அவளுக்கும் ஒரு ரிலாக்சேஷன் வேண்டுமே என்று கூட்டிப் போவார்.. சாமி தரிசனம் செய்ய பத்து ரூபாய் க்யூ நீண்டு நிற்கும். ஆனால் ஐம்பது ரூபாய்க் க்யூவில் போக வேண்டுமென்பாள். அதுதான் எனக்குப் பிடிக்காது. ரெண்டு வரிசையும் சந்நிதிக்குள்ள நுழையும்போது ஒண்ணாயிடப் போகுது இதுக்கு எதுக்கு அம்பது வெட்டிச் செலவு? அவ்வளவு பெரிய கூட்டமில்லையே?  அந்தக் காசை அர்ச்சகர் தட்டுல போடு அவருக்காச்சும் உதவும். குறைஞ்ச சம்பளம் உள்ளவங்க அவங்கதான் என்பார் இவர். அதுவும் போடறேன் இல்லேங்கல. ஆனா இதுல போனா சீக்கிரம் முடிஞ்சிடுமே.? என்று சொல்லி இவரின் பதிலை எதிர்பாராமல் போய் நின்று விடுவாள்.

இவரோ வெளியே துவஜஸ்தம்பத்திற்கு அடுத்தாற்போல் நின்று நேரே சந்நிதியைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு வந்து அமர்ந்து விடுவார். ஸ்டாலில் அன்று என்ன புதிய நைவேத்யம் என்று பார்ப்பார். புளியோதரை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பொட்டணம் வாங்கி வந்து ஒன்றைப் பிரித்து, சுவைத்து உண்ண ஆரம்பிப்பார். விழுந்து விழுந்து கும்பிடுபவர்களையும், சுற்றிச் சுற்றி வருபவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்கும். இப்படி எத்தனாயிரம் பேரின் வேண்டுதல்களை எப்பொழுது இந்தச் சாமி விடுபடல் இல்லாமல் நிறைவேற்றி வைப்பார்? என்று தோன்றும். மிருணாளினி எனக்கு வாங்கலையா? என்று கேட்டுக் கொண்டேதான் வருவாள். அகத்திக் கீரை வாங்கி மாட்டுக்குக் கொடுத்தேண்ணா. எவ்வளவு அழகா வாங்கிக்கிறது தெரியுமா? அது திங்கிற அழகே தனி ஒரு இலை விடாம ஒரு முடி முழுக்கத் தின்னுடுத்து. இன்னொண்ணு வாங்கப் போனேன். காப்பாளன் போதும் மாமின்னுட்டான். பிடிச்சிக்கோன்னு அவன்ட்டச் சொல்லி, முன் பக்கமும், பின் பக்கமும் நன்னாத் தொட்டுக் கண்ணுல ஒத்திண்டு வந்தேன்.. கோயிலுக்குன்னு நிக்கிற பசு மாடுகளுக்கே தனி அழகு..! கண்ணுக்குள்ளயே நிக்கறது.!

இன்று அவள் இவருடன் வந்திருந்தால் இந்தக் கடைசி இரண்டு இருக்கைகள்தான் நிச்சயம் கிடைத்திருக்கும். ஏனென்றால் தான் வந்த பிறகு சற்று நேரம் கழித்துத்தானே இந்தாள் வந்தான். ஆனால் அவளுக்கு இதுபோல் சண்டைப் படங்களெல்லாம் பிடிக்காது. ஏதாவது சாமி படம் என்றால் ஒருவேளை வரலாம். அல்லது சரித்திரப் படம். அவள் கடைசியாக மனதோடு தியேட்டர்  வந்து  பார்த்தது பாகுபலி. ரெண்டாம் பாகம் எப்ப வருதாம் என்று உற்சாகமாய்க் கேட்டாள். பிறகு அது வந்தபோதும் கூட்டிப் போனார் இவர். பிரம்மாண்டமா இங்கிலீஷ் படம் போல எடுத்திருக்கான் என்றாள். அந்தக் காலத்துல பென்ஹர்னு ஒரு படம் வந்தது. நான் சின்ன வயசுல பார்த்திருக்கேன். அதுக்கப்புறம் இதைத்தான் பார்க்கிறேன் இத்தனை பிரம்மாண்டமாய் என்று வியந்தாள்.

அப்போது இவர் லீவில் இருந்தார். தனது சி.எம். செல் மனு நடவடிக்கையில் இருந்த நேரம் அது. உடனடியாக இவருக்கு உள்ளூர் மாறுதல் வழங்கவும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அடுத்தாப்ல டிரான்ஸ்பர் ஆர்டரோடதான் இந்த ஆபீஸ்ல காலடி வைப்பேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தார். அதுபோலவே போய் நின்றார். அந்த நிகழ்வுக்குப் பின்தான் அவர் மீது கை வைப்பதை விட்டது  உள்ளூர் நிர்வாகம். கடைசி ஒரு வருடம் இருக்கும்போது திரும்பவும் களேபரம்  ஆரம்பமானது. பணி ஓய்வு பெற ஓராண்டிருக்கையில் யாரையும் சொந்த ஊரிலிருந்து மாற்றக் கூடாது என்ற உத்தரவினைக் காட்டி அங்கேயே ஓய்வு பெற்று கம்பீரமாய் வீடு வந்து சேர்ந்தார். அது அவரின் வாழ்நாள் சாதனையானது.

படம் முடிந்திருந்தது. என்ன பார்த்தோம் என்றே நினைவில்லை. அவன் பாரமே பெரிய மனபாரமாய்ப் போனது. அதுபோக ஏதேதோ நினைவுகள்.  இனி வேறு வழியில்லை என்று எழ முயன்றார் பூவராகன். தள்ளிவிட்டிட்டு நீங்க பாட்டுக்கு எந்திரிங்க சார் கிடக்கான் அந்த ஆளு நமக்கென்ன? என்றனர் சிலர். படம் ஓடுகையில் இது நேரம் வரை வாயைத் திறக்காதிருந்தவர்கள் அவர்கள். வெளியேறும் நேரம் வீரமாய் வந்தது வார்த்தைகள். கீழ தடுமாறி அடி கிடி பட்டுச்சின்னா? என்று நினைத்தார். ஆனது ஆச்சு அவன்பாட்டுக்குத் தூங்கத்தானே செய்றான் போகட்டும் பாவம்! என்ன வேதனைல இங்க தஞ்சம் புகுந்தானோ? அவர் மனசு இரக்கப்பட்டது.

தன்னுடன் வைத்திருந்த ஜோல்னாப் பையை எடுத்து வலது தோளில் மாட்டிக் கொண்டு மெல்ல அவனைத் தம் பிடித்துத் தூக்கி  தடுமாறாமல் எழுந்தார் பூவராகன். இருக்கையின் பின்னால் அவனை மெல்லச்  சாய்த்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார். முதலிலேயே செய்திருக்கலாமோ என்று தோன்றியது. இப்போது எப்படி சாத்தியமானது என்றும் வியப்பாயிருந்தது. ஒரு வேளை அவனாகவே அட்ஜஸ்ட் ஆகி சாய்ந்து கொண்டானோ? அவன் தலை தொங்கித்தான் கிடந்தது.  தியேட்டர் ஏறக்குறையக் காலி. திரைக்கு அருகே பக்கவாட்டில் நிறையப் பேர் படியிறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை இவரை நோக்கியிருந்தது. இருக்கை வரிசையை விட்டு வெளியேறி வாயிலை நோக்கிய பிரதான நடுப்பகுதி அகண்ட வழிப் படிகளில் இறங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு படியிலும் வெளிச்சம். ஒராள் உள்ளே மயங்கிக் கிடக்கிறான் என்று தியேட்டர் ஆள் யாரிடமாவது சொல்வோம் என்று நினைத்துக் கொண்டார்.

அரங்கு இப்போது முழுக்கக் காலியாகிவிட்டது. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த கொஞ்சப் பேரோடு இவரும் வேகமாகப் போய்ச் சேர்ந்து கொண்டபோது அந்தச் சத்தம் கேட்டது.

ஓவ்வ்வாவ்வ்வ்வ்வ்!  – அந்த ஆள் மிகப்  பெரிதாகக் கத்திக் கொண்டு சுற்றிலும் உள்ள இருக்கைகள் அதிரும் வண்ணம். ஆவாவ்வ்வ்வ்.வே..வென்று சத்தமாய் எதுக்களித்து.. அந்த ஏரியாவே அசிங்கப்படும்படிக்கு பொளேரென்று  வாந்தியெடுத்தான். திரும்பத் திரும்ப பொளக் பொளக்கென்று தாங்க மாட்டாமல், அடக்கத் திராணியின்றி அவன் கொட்டித் தீர்த்தபோது. கடைசிப் படியில் நின்று ஒரு முறை கலக்கத்தோடு நோக்கிய பூவராகன் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனார். படம் பார்க்கையில் அவனை நகர்த்தியிருந்தால் இது நடந்திருக்குமோ?  எண்ணம் தந்த பயத்தில் வியர்த்தது அவருக்கு. மீதிப் படிகளை இறங்கிக் கடக்கலானார்.  அப்டி ஆகியிருந்தா என்ன பண்ணப் போறோம்? குழாய்ல  போய் முழுக்கக்  கழுவிட்டு வீடு போக வேண்டியதுதான்.. வேறே வழி? அவராகவே சமாதானப்படுத்திக் கொண்டார். அப்டி ஆகாததுனாலதான் இப்டி நினைக்கத் தோணுதோ? என்றும் ஒரு குறுக்குச் சிந்தனை இடையே பாய்ந்தது. இவ்வளவு நேரம் அவனைப் பொறுத்திட்டிருந்தவன் அதையும் செய்ய மாட்டனா? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு வண்டி ஸ்டான்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

உள்ளே என்ன சத்தம் என்று புரியாமல் எமர்ஜென்ஸி  வாயிலிலிருந்து  நாலைந்து ஆட்கள் திடு திடுவென்று தியேட்டருக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள்.

 

 

 

 

ஆகாச பூச்சியின் நீர்க்கட்டி

கோ . பிரியதர்ஷினி

ஊர் முழுக்க
கேட்கும் எல்லா
குழந்தைகளின் அழுகுரல்களும்
இடிந்து விழுகின்றன
வயிற்றின் மேலொரு
வரி விழாதவளுக்கு

நீர்க்கட்டிகளை ஒவ்வொரு கல்லாய்
தூக்கி போட்டு உடைத்தெறிந்து
உங்களுக்கென்று ஒரு சிசுவை
ஈனுவதற்குள்
நீலமித்து விடுகின்றன
கெட்டிக் கருப்பைகள்

வெப்பத்தை சுரந்து கொண்டிருக்கும்
உதடுகளிலிருந்து
நீள வாக்கியமாகவே
குறு வாக்கியமாகவே
வெளித்தள்ளும் சொற்களில்
இயற்கையாகவே வளைய நெளிகிறது
பேரன்பின் ஆகாச பூச்சியொன்று
என் நுனி வயிற்றில்

கிரீடங்களை
அழுத்தி எடுத்துக் கொண்ட
எல்லா புகைப்படங்களையும்
மாட்டித் தொங்க விடுவது போல்
எங்களினுள் ஆழமாக
சொருகிக்கொண்டிருக்கின்றன
மறைமுக ஆணிகள்

சிலைகளை போல சும்மாவும்
அசையாமலும்
அப்படியே நின்று கொள்ள
நினைவெண்ணுகிறோம்
கீழாடையும் மேலாடையும்
களவாடாத புனிதக் கைகள்
போற்றுதலுக்குரியவை

பரிகசம் ஒன்றை
பாத்திரத்தில் எடுத்து வந்து
ஸ்பூன்களால் ஊட்டி விடுகிறீர்கள்
தலை தூக்கிய போது
வானில் மங்கலாக
அசைகிறது குளியலறை
அந்தரங்க படமொன்று

முறிந்த விரல்களில்
எழுதுமொரு தடுமாறும்
எழுத்துக்களில்
நிறைந்திருக்கும் அஞ்ஞானமாய்
எல்லாருடைய
கழுத்திலும் தடித்து சிரிக்கிறது
தேர்ந்த கள்வர்களின் சாவி