Author: பதாகை

செல்பி – எஸ். சுரேஷ்

செல்பி  எடுத்துகொண்டிருந்த எங்களை பார்த்துவிட்டு

லங்கூர் குரங்கொன்று மரத்திலிருந்து கீழிறங்கி
“என்னையும் ஒரு செல்பி எடுங்கள்” என்றது

நான், மனைவி மற்றும் லங்கூர் உள்ள ஒரு செல்பி எடுத்தேன்

செல்பியை பார்த்துவிட்டு
“ஹ்ம்ம். இதுக்குதான் தனியா எடுத்துக்கணும்னு சொல்றது”
என்று பெருமூச்சு விட்டுவிட்டு
மரத்தில் மறுபடியும் ஏறியது

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா

தமிழில்: சரவணன் அபி

Karl Iagnemma

அத்தியாயம் 1

முழுதும் நிறையாத அந்த கருத்தரங்கு அறையின் பின்னாலிருந்த காலி நாற்காலியொன்றில் ஹெண்டெர்சன் மஞ்சள் நிற குறிப்பேட்டைக் கொண்டு முகத்தை மறைத்தவாறே சரிந்து அமர்ந்து கொண்டார். அவரைச் சுற்றிலும் கணித வல்லுனர்கள் மூன்று நான்கு பேராய் நின்றபடி ஸ்டைரோபோம் கப்களிலிருந்து காபியை பருகிக்கொண்டு ‘வேரியேஷனல் கால்குலஸ் – செர்மெலோ பிரான்கல் தேற்றம்’ பற்றி கிண்டல் செய்து சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவர்களின் ரசமில்லாத நகைச்சுவை, மட்கிய ஆரஞ்சு நிற தரைவிரிப்பும், வசதியற்ற நாற்காலிகளும், சீராக எரியாத மின்விளக்குகளும் கொண்ட அந்த கருத்தரங்கு அறைக்கு பொருத்தமாகவே பட்டது. சரி, இது தான் அக்ரோன் நகரமா என்று எண்ணிக் கொண்டார் ஹெண்டெர்சன். அவர் எண்ணியதை விட மோசமாகவோ நன்றாகவோ அது இருந்து விடவில்லை.

ஒவ்வொரு வருடமும் அதே கருத்தரங்கு; அதே முந்நூறு பேர்; உற்சாகமற்ற நகரங்கள். டான்ஸ்க் ஒரு வருடம்; பெல்பாஸ்ட் அடுத்த வருடம்; இதோ இப்போது அக்ரோன். அடுத்தது எங்கே – மோகதிஷு போல. அல்லது டெஹரான்? ஹெண்டெர்சனுக்கு அரங்கிலிருந்த தெரிந்த முகங்களில் பல பிடிக்காதவை. நேரில், ஈரமான கைகுலுக்கல்களும், நாற்றமடித்த சுவாசங்களும் கரகரத்த குரல்களும் கொண்ட இந்த மனிதர்கள், அவரவர் ஆராய்ச்சி புத்தகங்களின் தடித்த அட்டைகளுக்கிடையே கணிதம் சமன்படுத்திய கோர்வையான குரல்களில் மிக ஏற்புடையவர்களாக தெரிபவர்கள். ஹெண்டெர்சன் தலையை குறிப்பேட்டினுள் புதைத்துக் கொண்டு, சுற்றி நின்றவர்கள் யாரும் பார்த்து விடாதவாறு, முக்கியமாக, பேச்சாளர் சோக்லோஸ் கண்ணில் படாதவாறு ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

மணி இரண்டானதும் ‘வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் மாறுபாடுகள்: ஒரு பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை அன்று சமர்ப்பிக்கவிருந்த சோக்லோஸ் மேடை மேலேறி ப்ரொஜெக்டரை உயிர்ப்பித்தார். ஹெண்டெர்சன் எதிர்பார்த்ததை விடவும் இன்னும் இளமையாகத் தெரிந்தார் சோக்லோஸ். முன்தலை இன்னும் வழுக்கை விழுந்து விடவில்லை; பெரும்பாலான கணித வல்லுனர்களுக்கே உரிய நெற்றிச் சுருக்கங்கள் இல்லை; நான்கு வருட துணைப் பேராசிரியர் பொறுப்பு சோக்லோஸை அவ்வளவாக பாதிக்காதது அநியாயமாகப் பட்டது.

சோக்லோஸ் குறுந்தாடி வைத்திருந்தார். அவர் அணிந்திருந்த, பளபளக்கும் ஊதா நிற டை வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை வாசிப்புக்கு முற்றிலும் பொருத்தமில்லாதது என்று நினைத்தார் ஹெண்டர்சன். குறுந்தாடி, சோக்லோஸுக்கு ஒரு பைசாச பாவம் அளிப்பதாக நினைத்துக் கொண்டார்.

“வணக்கம், இங்கு நன்கு தெரிந்த பலர் கூடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது”, சோக்லோஸ் தனது செழுமையான ஹங்கரியன் உச்சரிப்பில் துவங்கினார். ஹெண்டெர்சன் தன்னிச்சையாக நாற்காலிக்குள் இன்னும் புதைந்து கொண்டார். ஆனால் சோக்லோஸ் குறிப்புகளிலிருந்து தன் கண்களை எடுக்காமல் ஆராய்ச்சிக் கட்டுரைக்குள் பிரவேசித்து கொண்டிருந்தார் – வலுவிழந்த நான்-லீனியர் தொகுப்புகளின் இப்போதுள்ள தீர்க்க முடியாத பிரச்சனைகள், அவை குறித்த முந்தைய ஆய்வுகள், அவற்றின் முடிவுகள், டோபுஞ்ஸ்கியின் 1964-இல் வெளிவந்த பிரபலமான தேற்றம்; கிரேக்க கணித வல்லுநர் காலியார்டோஸ் முன்வைத்த, அதிகம் அறியப்படாத தொடர் முடிவுகள் – என ஒரு துல்லியமான, தேர்ந்த, ஒன்றன் பின் ஒன்றான நகர்வு.

கட்டுரையின் இந்தக் கட்டம் கடந்ததும் சோக்லோஸ் குரலைச் செருமிக் கொண்டார். ஓர் அரை சுரம் குரலில் கூட்டிக் கொண்டு தன் சொந்த ஆராய்ச்சியை இப்போது அவர் விவரிக்க ஆரம்பித்தார். அரையிருளில் ஆழ்ந்திருந்த அரங்கை பார்வையால் அளந்த ஹெண்டெர்சனுக்கு இது போன்ற ஆய்வரங்குகளில் நிலவும் சந்தேகம் கலந்த விரோத மனப்போக்கு இல்லாமல் பொருமலுடன் கூடிய ஒரு மரியாதை நிறைந்திருப்பதாகப் பட்டது. தனது குறிப்பேட்டுக்கு பார்வையை திருப்பி கொண்டு, திரையில் தெரியும் சமன்பாடுகளில் எங்கே குறை தெரிகிறது, எந்த மென்மையான பாகம் தெரியும், எங்கே அந்த கூர் ஈட்டியைச் செருகலாம் என நுண்ணிய மன அவதானிப்புடன் காத்திருந்தார்.

‘இறுதி வரைவு மற்றும் முடிவுகள்’ என்ற படியை ப்ரொஜக்டரில் சோக்லொஸ் வைத்ததும், உறக்கத்திலிருந்து விழித்த பாவனையுடன் இருந்த அரங்கைப் பார்த்து “இதனால் தீர்மானிக்க முடிவது என்னவென்றால் வலுவிழந்த நான்-லீனியர் சமன்பாடுகளின் நிலைத்தன்மையை மரபார்ந்த மாறுபாட்டு ஆய்வின் மூலம் தீர்க்கலாம் என்பதே” என்றார். உணர்வுகளை வெளிக்காட்டாமல் ஆனால் வசீகரமான ஒரு புன்னகையுடன் தன் குறிப்புகளிலிருந்து நிமிர்ந்து நோக்கி, “இப்போது யாருக்காவது ஏதேனும் – ”

“ஒரு கேள்வி”, என்றார் ஹெண்டெர்சன் உரத்த குரலில். அவர் குரலில் பதட்டமும் ஆக்ரோஷமும் இருந்ததை மறைத்துக் கொள்ள முயலவில்லை. இந்த ஒரு கணத்திற்காகத்தான் அவர் பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார். “அணி H-ன் நேர்மாற்றும் தன்மை குறித்து என்ன கூறுகிறீர்கள்? H ஒருமையாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை.”

சோக்லோஸ் குரல் வந்த அரங்கின் இருண்ட ஆழங்களைப் பார்வையால் துழாவினார். “இன்னும் குறிப்பாக கூற முடியுமா?”

“நிச்சயமாக”. அரங்கில் சில தலைகள் திரும்பி ஹெண்டெர்சனை பார்த்தன. “படி 11-ல் நீங்கள் அணி B ஒரு நேர் அணியாயின் அணி H பன்மைத் தன்மையுடையது என்று வாதிடுகிறீர்கள். ஆனால் B உறுதி செய்ய முடியாத நேர் அணியாக இருந்தால் என்னவாகும் என நீங்கள் ஆராயவில்லை. இது போன்ற பரவலான அணி மாற்றங்களில், B உறுதி செய்ய இயலாத நேர் அணியாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது; அதனால் H ஒற்றை அணியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது; எனவே, நீங்கள் நிறுவும் இந்த முடிவு நேர் மாற்றத்தக்கதல்ல.”

சோக்லோஸ் நிதானித்தார். கட்டுரையின் படிகளை மெதுவாக புரட்டி பக்கம் 11க்கு வந்தார். அந்த படியை ப்ரொஜக்டரில் வைத்துவிட்டு, அரங்கிற்கு முதுகை காட்டியவாறு திரும்பி தலையைத் உயர்த்தி திரையை பார்த்தார். அரங்கில் இப்போது பரவிய இறுக்கமான முணுமுணுப்புகள் ஹெண்டெர்சனுக்கு திரைப்படங்களில் காட்டப்படும் பொது மரண தண்டனை நிறைவேற்றத்தின் நாடகமாக்கலை நினைவுபடுத்தியது. தன்னிச்சையாக தாடியை வருடிக்கொண்டே சோக்லோஸ் தன்முன் நேர்த்தியாக கட்டவிழ்கிற கணிதச் சிக்கலை, தான் சரியென்று கருதிப் பொருத்திய நேர்மாற்ற முறையை, தான் பார்க்கத் தவறிய, ஹெண்டெர்சன் தாக்கிய மிக நுண்ணிய ஆனால் மிக அத்தியாவசியமான அனுமானத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

“ஆம், சரிதான்.” சோக்லோஸ் குரலை செருமிக் கொண்டார். கடற்கரை வெயிலில் காய்ந்தவை போல் அவர் காதுகள் தகித்தன. “நீங்கள் சுட்டிக் காட்டும் நேர் மாற்ற அணியின் இந்தக் கட்டுப்பாடு… ஒரு வரையறையே.”

“வரையறையா? அந்தத் தவறான அனுமானத்திற்கு பின் நீங்கள் நிரூபிக்கும் அத்தனை முடிவுகளும் தவறல்லவா?”

அரங்கத்தில் ப்ரஜக்டரின் மெல்லிய உறுமல் தவிர முழு நிசப்தம்.

சிறிது நேர அவகாசத்திற்கு பிறகு சோக்லோஸின் தலை விறைப்பாக அசைந்தது. “நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அந்த அனுமானத்திற்கு பின்னான விளைவுகளை நான் இன்னும் தெளிவாக ஆராய வேண்டும் என நினைக்கிறேன்.”

அரங்கிலிருந்து வாழ்த்தொலி எழுந்தது. கருத்தரங்குகளில் இது போன்ற நிகழ்வுகள் அபூர்வம். இந்த நாளின் நாடகீயம் அடுத்த கருத்தரங்கிலும், அதற்கடுத்ததிலும் மெல்லிய கிசுகிசுத்த குரல்களில் விவாதிக்கப் பெறும். இனி பயம் கலந்த மரியாதையுடன் ஹெண்டெர்சன் பார்க்கப் பெறுவார். கூட்டங்களில் அவரது கணித கட்டுரைகளும் இனி தாக்குதல்களின் இலக்காகலாம். இதெல்லாம் ஹெண்டெர்சன் அறிவார். இந்தக் கூட்டம் முடிந்ததும் அவரிடம் பேசவும் சிலர் காத்திருப்பார்கள் என்பதால், சோக்லோஸ் மீண்டும் வலுவாய்ச் செருமி பார்வையாளர்களின் கவனத்தை மீண்டும் தன்பால் திருப்பிக் கொள்ளுமுன் ஹெண்டெர்சன் சத்தமின்றி அரங்கின் பின் கதவு வழியே வெளியேறினார்.

(தொடரும்)

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின்  முறையாக முன்னனுமதி  பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT

யாசகத்தின் வாசகம்

ஜிஃப்ரி ஹாசன்

கையேந்தலில் வைக்கப்பட்ட

நம்பிக்கையோடு

யாசகர் கூட்டத்தின் பயணம்

ஒவ்வொரு அதிகாலையிலும்

தொடர்ந்தபடியேதான் இருக்கிறது

 

இந்த வாழ்வு யாருடனும்

பகிரப்படாமல் ஒரு புண்ணின் வலியோடும்

ஒரு பிணத்தின் வாடையோடும்

எதுவரை நகரப் போகிறது?

 

கைகள் நீளும் தூரம் வரை

கண்கள் ஒளிகொள்ளும் தொலைவு வரைதான்

அவர்களின் நம்பிக்கையும்

வரையறை செய்யப்பட்டுள்ளது.

பாதைகள் விரியும் திசை எங்கும்

பயணம் தொடர்ந்தபடிதான்

இருக்கிறது!

பரிதவிப்பின்  குரலை

எதிர்பார்ப்புகள் நிறைந்த

கண்களின் ஒளியை

காற்று எல்லாத் திசைகளுக்கும்

எடுத்துச் செல்கிறது

வீட்டின் சுவரோரங்களில்

நின்றபடி

ஏக்கத்துடன் கதவுகளைத் திறக்க முனையும்

குரல்களில் கசிந்து கொண்டிருக்கும்

பதட்டத்தை செவியுறும் வாசல்கள்

திறந்து கொள்கின்றன

செவியுறாத கதவுகள்

மூடியபடியே இருக்கின்றன

நடுக்கத்துடன் நீளும் கரங்களில்

கனவுகளற்றுப் போன

பாதைகள் விரியும் திசைகளில்

அலைவுறும் அந்த வாழ்வின்

எல்லாத் துயரங்களும்

எழுதப்பட்டிருக்கிறது

ஒரு புண்ணின் வலியோடும்

ஒரு பிணத்தின் வாடையோடும்

கசிந்துருகும் குரல்களை காற்று

எந்த வெட்கமுமின்றி

இன்னும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு

காவித் திரியப் போகிறது?

நிழலைத் தின்றவன்

                   ந. பானுமதி

 

அவன் கனவில் ஒரு குதிரை வந்தது. பட்டுக் கருப்புக் குதிரை.நெற்றியில் வெள்ளை ஒரு பதக்கம் போல் ஓடியது. அதன் அழகு வியப்பிற்குரியதாய் இருந்தது. அதனால்தானோ என்னவோ சற்று கர்வமாகவும், அலட்சியமாகவும் நின்றிருந்தது.

இதைப் போன்ற குதிரையை பார்த்திருக்கிறானா என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

மொத்தமாகவே அவன் ஏழெட்டு குதிரைகளைத்தான் பார்த்திருப்பான். ஆனால் அவைகள் அனைத்தையுமே வண்டியில் பூட்டப்பட்ட நிலையில்தான் கண்டிருக்கிறான். ஓடி ஓடிக் களைத்த குதிரைகள். உணவைக்கூட அவை ஆவலாக உட்கொண்டதில்லை.. அவைகளின் மூச்சுச் சீறல்கள் சிறு வயதில் பயமாகவும், வளர்ந்த பின்னர் சோகமாகவும் தனக்குக் கேட்டதாக கனவிற்குள்ளும் அவனுக்கு நினைவு வந்தது.

இந்தக் கறுப்பு பட்டுக் குதிரை ஒரு சேணமும் அணியவில்லை. கடிவாளமும் இல்லை. உயரமாகவும், அசையாமலும் நின்றிருந்தது. அதை நெருங்க அவன் ஆசைப்பட்டான். அது  அவனை ஒரு பொருட்டாகக் கூட பார்க்காதது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. அதன் பயங்கர வசீகர அழகு அவனை அங்கிருந்து நகரவிடவில்லை.

அதை “நிலா” என அழைக்க ஆசைப்பட்டான்.  கறுப்பு நிலா! அமாவாசையை கறுப்பு நிலா எனச் சொல்லலாமோ என்று கேட்டுக் கொண்டான்.  கறுப்புத் துகள்களிலிருந்து உலகம் தோன்றியிருக்கலாம் என்கிறார்களே விக்ஞானிகள்— அதைப் போல் இந்த கறுப்பு நிலா ஒரு வெளியைத் தோற்றுவிக்கக்கூடும்.  கருநிழல் படிந்த பேரொளியாக அந்த வெளியில் பல தோற்றங்கள் உருக்கொள்ளக் கூடும்.

நிழல்… அப்பொழுதுதான் அவன் கவனித்தான். அதற்கு நிழலே இல்லை. முன்னே, பின்னே, பக்கவாட்டில், கால்களுக்கிடையில். அடர்ந்த வாலை ஒட்டி எங்குமே நிழலைக் காணோம். கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தான். இல்லை—நிழலில்லை.

ஒளி படாது காட்சி இல்லை.  இங்கே காட்சியிருப்பதால், நிழல் இருக்க வேண்டுமே? அவன் தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டான். அதை நெருங்கும் ஆசையுடன், அதனால் ஏதேனும்மோசமான  விளைவு ஏற்படுமோ என்றும் தவித்தான்.

ஏன் நெருங்காமலே அந்த அழகை இரசிக்க மனம் ஒப்பவில்லை என அவனுக்குப் புரியவில்லை. மேலும் விபரீதமாக அதன் மேல் ஏறும் ஆசையும் வந்தது. அதன் உயரம் மலைக்க வைத்தாலும், அதில் பயணிக்க மிகுந்த முனைப்பும் மனதளவில் ஏற்பட்டது. நிழல் விழாத “நிலா”அச்சத்தைத் தந்தது.

அவன் வாழ்க்கையில் பெரும் நிகழ்வுகள் இல்லை. பெரிய மாற்றங்கள் கிடையாது. கல்வி, வேலை, திருமணம், குழந்தை  என்ற பாதுகாக்கப்பட்ட சராசரி வாழ்க்கை. அவன் படகில் பயணித்ததில்லை, ஓர் இரவிற்கு மேல் இரயிலில் சென்றதில்லை, மலை ஏறியதில்லை.தேர் இழுத்ததில்லை, தெப்பம் செலுத்தியதில்லை.

இதெல்லாம் சேர்ந்து கனவாக வந்ததோ என கனவிற்குள் ஒரு இழை வந்து போனது. தான் மட்டும் தனியாக அந்த வெளியில் நிலாவுடன் நிற்பதை அவன் அப்பொழுதுதான் உணர்ந்தான். இரு உயிர்கள். மனிதனும், விலங்குமாக. விந்தைகளேயற்ற தன் வாழ்வின் தனிப்பட்ட பொக்கிஷம் போல் கறுப்பு நிலாவும் தானும்..

அவன் ஆவல் இப்பொழுது கட்டுக்கடங்கவில்லை. “நிலா” என்று அழைத்துக் கொண்டே அடியெடுத்து வைத்தான். இந்த நிலையில்கூட தான் ஓடிச் சென்று அதைத் தொட முயற்சிக்கவில்லை என்பது ஆறுதலா, வருத்தமா எனவும் சிந்தித்தான்.

அவன் அடியெடுத்துவைக்கையில் “நிலா” பக்கவாட்டில் விலகி நடந்தது. அவன் வியப்பின் சிகரத்தில் நின்றான். இது என்ன  என்று மீண்டும் ஒரு முறை முயன்ற போதும் “நிலா” பக்கவாட்டில் நடந்து சென்றது. ஆனால், மறையவில்லை. இந்த விளையாட்டின் கவர்ச்சி அவன் களைப்புறும் வரை தொடர்ந்தது. அவன் திடீரென்று உணர்ந்தான்- அவனின் நிழலும் விழவில்லை. அவனின் அருகில் “நிலா” நின்று கொண்டிருந்தது.

..

ஒளிப்பட உதவி – Ponthieu14

 

 

ஏரிக்கரை

IMG_0711

 

ஒற்றைக்காலில்
தவம் செய்யும்
மல்லார்ட் வாத்து
பித்தளை மூக்கை தூக்கி
காற்றில் வாசம் பிடிக்கிறது.

துலங்கும் வெளிச்சத்தில்
மின்னும் மரகதக் கழுத்தை
சுற்றிச்சுற்றி வந்து
படம்பிடித்து தள்ளுகிறவர்களை
அரைக்கண் சரித்துப் பார்க்கிறது

கேமிராவும் ஃபேஸ்புக்கும்
கண்டுபிடிக்கப்படாத காலமொன்றில்,
எள்ளுப்பிண்ணாக்கையும், மக்காசோளத்தையும்
உருண்டை பிரட்டி
உலர்ந்த மீன்களை
கொண்டு வந்திருப்பார்களாக இருக்கும்.

வண்ணமயமான இறக்கைகளுடனான
உடலைக் கொஞ்ச நேரம்
அவர்களுக்குக் காட்டிவிட்டு
ஏரிக்குள் மறைகிறது.