Author: பதாகை

நட்சத்திரக் குழந்தை – ஒரு கற்பனை

 

நட்சத்திரங்கள் விண்ணில் கண்சிமிட்ட ஆரம்பிக்கும் அந்த முதல் நொடியைக் காண வேண்டும் என்று நினைத்து வானத்தைப் பார்த்துக் கொண்டே இருந்து கொஞ்சம் கவனம் சிதறும் நேரத்தில் அதைத் தவற விட்டு விடுவதே என் வழக்கம். அத்தகைய ஒரு இரவில் சிறு வயதிலிருந்து நட்சத்திரங்கள் குறித்த என் அனுபவங்களையும் கற்பனைகளையும் அனு சொல்ல, அதை அவள் தாய் கேட்டபடித் தூங்கி விடுகிறாள்- விட, நட்சத்திரங்கள் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பதாக் முதலில் எழுத ஆரம்பித்தேன்: ஒன்று, இரண்டு, மூன்று என்று நட்சத்திரங்களை எண்ணுதல், அவற்றுக்கு பெயர் சூட்டுதல் என்று பல விஷயங்கள்.

பிறகு தங்களைப் இவ்வளவு நேசிக்கும் அனுவை நட்சத்திரங்களுக்கும் கண்டிப்பாக மிகவும் பிடிக்குமே என்பதால் கதை கேட்க அவர்களை அவள் அறைக்கே அழைத்து வந்தேன். வந்தவர்களில் ஒருவர் அனுவுடன் தங்கினால் எப்படி இருக்கும் என்பதும் வேறு பல கற்பனைகளும் எழுதும்போது உருவாகின.

ஒளிப்பட உதவி – Etsy.com

தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்…

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்’ வாடியவனும், ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம்’ என்று சொன்னவனும் பிற உயிர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே சொன்னார்கள்.

மரங்கள் தன் சுயம் இழப்பதில்லை; பொறாமையில் போட்டியிடுவதில்லை; தம்மளவிலான நிறைவும், நிறைவின் பெருமிதமற்ற வெளிப்பாடும் நிறைந்தவை. நீர் தேடி வேரனுப்பும் சாகசமும் மண்ணுக்கடியே. மானுடம் கற்றுக்கொள்ள குரலின்றி அநேகம் உரைப்பவை.

ஆறறிவில் குறைந்தவை இவ்வளவு ஆழமான பொருள் பொதிந்து நிற்கையில், ஆறறிவு கைகூடிய மானுடம் என்னவெல்லாம் சாதிக்கக்கூடும்? எத்தனை அணுக்கமான உறவு இப்புவியுடனும் சக மனிதருடனும், பிற உயிர்களுடனும் பேண இயலும்?

புலனடக்கத்தோடு, தீமைகளையும் துரோகங்களையும் செரித்து, நன்மை ஈயக்கூடிய ஒரு தாவரத் தன்மை மானுடத்திற்கு வாய்த்து விட்டால் எப்படியிருக்கும்…

காதலும் காதல் சார்ந்த மனநிலைகளும்

எத்தனை யோசித்தாலும் தீராத புதிராக இருப்பது காதலும் காதல் சார்ந்த மனநிலைகளும். கடவுள் குறித்து விவாதிக்கப்பட்டதைவிட காதல் குறித்து விவாதிப்பது அதிகம் என்று நினைக்கிறேன். காதல் வரமாக இருக்கிறது. தீராத் தாகமாக நீள்கிறது. சலிப்பில்லா செயலாக தொடர்கிறது. கடுமையின் வெஞ்சினத்தை குறைத்து இதமளிக்கும் மருந்தாகிறது. பரம்பரைப் பகையை வளர்க்கிறது. கருணை மிகுந்து தன்னை ஒப்புக்கொடுக்கிறது. அனைத்தையும் அர்ப்பணித்து சரணாகதியடைகிறது. மூர்க்கம் கொண்டு கொலைகள் செய்கிறது. திகட்டி மீண்டும் மீண்டும் காதலிக்கச் சொல்கிறது.

ஆனால் தீவிர காதல் மனநிலை என்பது நிச்சயமாக வாழ்வில் எப்போதும் எல்லாருக்கும் வாய்க்கும் ஒன்றல்ல. அது ஒரு இயற்கைப் பேரிடர். அறிவியல் உடலை வெறும் நாளமில்லாச் சுரப்பிகளின் முன் பின் விளைவுகளாகக் கருதி எளிமைப்படுத்தினாலும். காதலும் காதல் சார்ந்த உளமாற்றங்களையும் அவ்வளவு எளிதாக வரையறை செய்ய இயலாது என்றுதான் நினைக்கிறேன்.

அனுபவத்தில் சொல்கிறேன். காதல் மனநிலை என்பது ஒருவகை மனநிலைப் பிறழ்வு. ஞானம் வாய்த்த மனநிலைக்கு ஒப்பானது. அல்லது பெரும் துக்கமோ பெரும் வரமோ பெற்றபின் நிகழும் மனஇயல்பு திரிதலுக்கு இணையானது. நம்முடைய சொற்களினால் ஆன தர்க்கம் கொண்டு அதைப்பற்றி எள்ளவும் சொல்லிவிட முடியாது. விளக்கமுடியா எளிமை. தன்னை மீறி ஊற்றென பாய்ந்தோடும் துக்கித்த சொற்கள் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் தோன்றிடுமா என்ன?

காதல் மறுக்க முடியாத லட்சியவாதம். லட்சியவாதிகளுக்குரிய அத்தனை குணாம்சங்களும் அதில் உள்ளது. புற உலகிற்கான சொற்களால் அதை நாம் விவாதிக்கும் போதும் புறக்கணிக்கும் போதும் நாம் அதன் தரம் குறைக்கிறோம். அக உலகிற்கான மனநிலையை சொல்ல காலத்தின் களிம்பேறா சொற்கள் வேண்டும். சிறப்பான கலைச்சொற்கள் அவசியம்.

காதலர்களும் குடிகாரர்களும் ஒன்று என்பது போல் காதலர்களை ஏளனம் கொண்டு அவர்களின் வார்த்தைகளை வெறும் பிதற்றலாக எடுத்துக்கொள்வதும் நமக்குள்ள சகஜ மனநிலை. உண்மையில் காதல் உருவாக்கும் சொற்கள் வேறொரு உலகில் உள்ளவை. ஒரு சொல் அவ்வுலகில் இருந்து நமக்கு வரும்போது அச்சொல்லின் சாரம் நம்மை வந்தடைய எடுத்துக்கொண்ட காலஇடைவெளியில் இல்லாமலாகிறது. கண்ணாடிப் பிம்பம் போன்று நம் பொருளை அச்சொல்லிற்கு அணிந்து எளிமையாக்குகிறோம்.

அவளை மட்டுமே நாளெல்லாம் எண்ணி சொற்களாக ததும்பும் மனம். ஒரு நளினமோ கூந்தல் அசைவோ புருவச் சுழிப்போ எங்கிருந்தோ கேட்கும் சிரிப்போ மின்னதிர்ச்சியாக மாறி மொத்த இருப்பையும் கலைத்தடுக்குவது . அவள் மணமாகி பிறிதொரு ஊரேகிய பின்பும் அவள் வாழ்ந்த வீட்டைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ஏற்படும் கனிவும் துயர் கனக்கும் நடையும் அத்தனை சாதாரணமானதா? அவள் வாழ்ந்த ஊர் என்பதனாலும் வீதி என்பதனாலும் வீடு என்பதனாலும் அவற்றிற்கெல்லாம் நம் மனதில் ஒரு தனிப்பிரியம் இருக்கத்தானே செய்கிறது. என்ன செய்தாலும் அப்பிரியத்தை அழித்துவிடமுடிவதில்லையே.

உடற்தாகமெனும் சிக்கிமுக்கி கற்களின் மோதலில் தெறித்து மனச்சருகில் பற்றி வான்நோக்கி தழலாட எரியும் சுடர் காதல். சுடர்களின் நடனத்தை மோகித்து தன்னிலை மறக்கும் நிலையில் ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறும் உருவழிப்பு நிகழ்கிறது. சுடர்கள் முற்றிக்கனிந்து பழரசமாகி லார்வாக்களின் ஊட்டஉணவுபோன்று காதலர்களால் உண்ணப்பட்டு சதா போதையில் தள்ளாடச்செய்கிறது. அவர்களின் சொற்களில் சுடர்களின் மதுவாசனை. சுடர்களின் வெக்கையும்கூட அதன் அந்நியத்தால் அஞ்சி பிரியத்தோடு தவிக்கிறோம். வாழ்நாளெல்லாம் நம்மால் மீட்டப்படும் தனிராகம்தான் அவரவர் காதலும் காதல் நினைவுகளும். இசையோடு இயைந்த பெருவாழ்வு. ஊனுக்குள் வந்தமரும் உன்மத்தம்.

அமில ஆவி / Acid Fumes

அமில ஆவி பறக்கிறது
கடையைச் சுற்றிலும்

ரசாயனப் பொடியின் வெண்மை நெடி
கடை முழுவதும்

கறுத்துக் கொண்டிருக்கின்றன
பித்தளை வெண்கலப்
பாத்திரங்கள்

அரித்துச் செல்கிறது அனைத்தையும்
திருகல் காமம்

--ந. ஜயபாஸ்கரன்
(சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் தொகுப்பு)

oOo

 

The shop smoldering with
acid fumes

reeks with the white heat
of powdered chemicals.

As its brass and bronze
utensils age and
blacken

A twisted lust
corrodes everything in its wake.

– Translated by

தாவர வாழ்க்கை

சரவணன் அபி

என் குணங்களை
யாவரும் அறியும் வண்ணமே
வைத்திருக்கிறேன்
விருட்சம் தன்
அத்தனை இலைகளையும்
கதிரொளிக்கென
விரித்தே
அடுக்கியிருப்பது போல்

பழகுமிடம் தோறும்
பகை பொறுத்து
பண்பருளும்
விவேகம்
விதிக்கப்பட்டிருக்கிறேன்
கரியமிலம் உண்டு
உயிர்வளி தருதல் போல்

வேரோட்டம் போலவே
பசை தேடி
போராட்டம்

பட்டையைச்
செதுக்கினாலும்
சுரத்தல் கூடும்
பால் மரங்கள் போலும்
சேதம் சகித்தல்

ஆறிலொன்று குறைந்தால்
ஆகாதா என்ன