Author: பதாகை

எனக்குள் நிகழும் இரவு

சோழகக்கொண்டல் 

எனக்குள்
நிகழ்ந்தபடியே இருக்கிறது
ஒரு இரவு

நிலவுகள் மீன்களின் நிச்சயமில்லாமல்
நிகழ்ந்தபடியே இருக்கிறது
ஒரு நீண்ட இரவு (more…)

கவியின் கண்- “இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி”

எஸ். சுரேஷ்

இனி என்ன விற்பார்கள்?
– விஜயலட்சுமி

ஆற்றையும் காற்றையும் வெயிலையும் விற்கவும்
மழையையும் மண்ணின் துகள்களை விற்கவும்
பதினான்காம் காலையின் அழகை விற்கவும்
காலைப்பொழுதின் சப்த ஸ்வரங்களை விற்கவும்

அழைப்பு விடுக்கிறார்கள்! – வருக, உலகின்
பெரும் பணப்பை கொண்ட கனவான்களே –

நீல மலைகளை உங்களுக்காகத் தோண்டி எடுக்கவும்
அழகிய மரங்களைப் பிடுங்கி எடுக்கவும்
மகரமும் பனியும் குளிரும் உங்களுக்கு
மறந்து விடாமல் முடிந்து கொள்ளவும்

சலவை செய்த வெள்ளைச் சிரிப்புடன் நாட்டை
கூறு போட்டு விற்பதற்குக் காதலுடன் நிற்பவர்கள்
உரக்கக் கூவுகிறார்கள்- கேரளத்தைக் கூறு போடுங்கள்,
வெட்டி எடுங்கள் கசாப்பு கத்தியால்.

இனி விற்பனைக்கு இருப்பது – தம்மை வேறுபடுத்தும்
அடையாளங்களைக் கழுத்தில் தொங்க விட்டிருப்பவர்,
இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி-
இவர்களை வாங்கிக் கொள்ள இனி யார் வருவார்?

மலையாளத்திலிருந்து தமிழாக்கம் – app_engine  (more…)

வண்ணக்கழுத்து 6: காணாமல் போன வண்ணக்கழுத்து

வண்ணக்கழுத்து 6: காணாமல் போன வண்ணக்கழுத்து

நாங்கள் திரும்பி வந்த அடுத்த நாளே வண்ணக்கழுத்து மீண்டும் பறந்து போய்விட்டான். காலையில் போனவன்தான், பிறகு அவனைக் காணவேயில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள் பதற்றத்துடன் அவனுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். பிறகு, வருவான மாட்டானா என்ற சந்தேகம் தாளாமல் நானும் கோண்டுவும், அவனைத் தேடி உயிருடனோ பிணமாகவோ  கண்டுபிடித்துவிடுவது என்ற முடிவோடு புறப்பட்டோம். இந்த முறை எங்களை சிக்கிம் வரை ஏற்றிச் செல்ல, இரண்டு குதிரைகளை அமர்த்திக் கொண்டோம். நாங்கள் கடந்து சென்ற ஒவ்வொரு கிராமத்திலிருந்த மக்களிடமும் வண்ணக்கழுத்தைப் பற்றிக் கேட்டு, அவனுடைய பாதையை உறுதி செய்து கொண்டோம். பெரும்பாலானவர்கள் அவனைப் பார்த்திருந்தார்கள். அவர்களில் சிலர் அவனுடைய தோற்றத்தை கச்சிதமாக விவரித்தார்கள். ஒரு வேடன் அவனை பெளத்த மடத்தின் கூரைக்குக் கீழ் இருந்த கூட்டில் ஒரு உழவாரக் குருவிக்குப் பக்கத்தில் பார்த்திருக்கிறார். ஒரு பெளத்த துறவி, சிக்கிமில் காட்டு வாத்துகளின் கூடுகள் கொண்ட நதிக்கரையில் இருக்கும் அவர்களுடைய மடாலயத்திற்குப் பக்கத்தில் அவனை பார்த்ததாகச் சொன்னார். மேலும், சமீபமாக இரண்டாம் நாள் மதியும் நாங்கள் கடந்த வந்த கிராமத்தில், அவனை உழவாரக் குருவிகளின் கூட்டத்தோடு பார்த்ததாகச் சொன்னார்கள்.

இதுமாதிரியான நல்ல செய்திகள் வழிநடத்த நாங்கள் சிக்கிமின் உயர்ந்த சமநிலத்தை அடைந்தோம். அங்கு மூன்றாம் நாள் இரவு கூடாரம் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. எங்கள் குதிரைகள் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. நாங்களும் தான். ஆனால், ஒரு மணிநேரத் தூக்கம் போல் இருந்தற்குப் பிறகு, எல்லாவற்றின் மீதும் படிந்திருந்த ஒருவிதமான பதற்றத்தினால் நான் விழித்துக் கொண்டேன். பொதி சுமக்கும் இரண்டு மிருகங்களும் விரைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன். நெருப்பின் ஒளியிலும், உயர்ந்திருந்த பாதி அரைநிலவின் ஒளியிலும், அவற்றின் காதுகள், கவனமாகக் கேட்கும் நோக்கத்தில் விரைத்துக் கொண்டு நின்றன. அவற்றின் வால்கள் கூட அசையவில்லை. நானும் கூர்ந்து கேட்டேன். அந்த இரவின் அமைதி வெறும் சத்தமின்மை மட்டுமல்ல. அது அதையும் தாண்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அமைதி என்பது வெறுமையானது. ஆனால், எங்கள் முன்னால் இருந்த அந்த அமைதியானது முழுக்க முழுக்க அர்த்தம் கொண்டிருந்தது. நிலாவொளியை அணிந்து வரும் ஒரு கடவுள், நான் கைநீட்டினால் அவரது ஆடையைத் தொட்டுவிடும் தூரத்தில் அளவு நெருக்கத்தில் வருவது போல அந்த அமைதி இருந்தது.

உடனே குதிரைகள், அப்போது நிசப்தத்தின் ஊடே மெதுவாகக் யாருக்கும் தெரியாமல் கடந்து சென்ற ஒரு சத்தத்தின் எதிரொலியைப் பிடிப்பதற்காக தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டன. பெரும் தெய்வம் கடந்து சென்றிருக்க வேண்டும். இப்போது, பதற்றமான சூழல் கரைந்து ஒரு அறிமுகமில்லாத அறிமுகமற்ற  ஒரு சூழல் உருவானது. புற்களின் நுண் அசைவுகளைக் கூட உணர முடிந்தது. அதுவும் கூட தற்காலிகமானது கணப்பொழுதுதான். குதிரைகள் இப்போது வடக்கிலிருந்து எழும் புதிய சத்தத்தைக் கேட்டன. தங்கள் முயற்சியில் ஒவ்வொரு நரம்பையும் சிரமப்படுத்திக் இறுக்கிக் கொண்டு செவிகூர்ந்தனகொண்டன. கடைசியில் என்னாலும் அதைக் கேட்க முடிந்தது. ஒரு குழந்தை தூக்கத்தில் கொட்டாவி விடுவதைப் போல ஒரு சத்தம். மீண்டும் நிசப்தம் வந்தது. பிறகு ஒரு பெருமூச்சு, ஆழமாக இழுத்து விடப்பட்டது, ஒரு கெட்டியான பச்சை இலை சலனமில்லாத தண்ணீரில் மெதுவாக மூழ்குவது போல, காற்றோடு ஓடி கீழே இன்னும் கீழே அமிழ்ந்தது. பிறகு வானத்தை நோக்கி யாரோ பிரார்த்தனை செய்வதைப் போல, அடிவானத்தில் ஒரு முணுமுணுப்பு எழுந்தது. ஒரு நிமிடம் கழித்து, குதிரைகள் தங்கள் காதுகளை தளர்த்திக் கொண்டு, வால்களையும் ஆட்டின. நானும் இலகுவாக உணர்ந்தேன். ஓ! ஆயிரக்கணக்கான கீஸ் வாத்துகள் மேற்காற்றில் பறந்தன. எங்களிடமிருந்து சுமார் நாலாயிரம் அடி உயரத்தில் அவை பறந்தன. ஆனால், நான் அறிந்து கொள்வதற்கு வெகு முன்னரே, குதிரைகள் அவற்றின் வருகையைக் கேட்டுவிட்டன.

கீஸ் வாத்துகளின் வருகை, சீக்கிரமே விடியப் போவதை உணர்த்தின. நான் எழுந்து உட்கார்ந்து கொண்டு பார்த்தேன். நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அஸ்தமித்தன. குதிரைகள் மேயத் துவங்கின. இரவு கடந்துவிட்டபடியால் அவற்றை நெருப்புக்குப் பக்கத்தில் கட்டி வைக்க வேண்டிய தேவை இல்லை. அவற்றின் கயிறுகளைத் தளர்த்தி விட்டேன்.

அடுத்த பத்து நிமிடங்களில், விடியலில் ஆழ்ந்த நிசப்தம் எல்லாவற்றையும் தன்னுடைய பிடியில் வைத்திருந்தது. எங்கள் இரண்டு குதிரைகளிடமும் அதன் தாக்கம் இருந்தது. இந்த முறை, அவை இரண்டும் தங்கள் தலையை உயர்த்தி கேட்பதை தெளிவாகக் காண முடிந்தது. என்ன சத்தத்தை அவை கேட்க முயல்கின்றன? நான் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு பறவை தன்னை உலுக்கிக் கொண்டது. பிறகு மற்றொரு கிளையிலிருந்து மற்றொரு பறவை. அவற்றில் ஒன்று பாடியது. அதுவொரு பாட்டுக் குருவி. அதன் சத்தம் மொத்த இயற்கையையும் எழுப்பியது. மற்ற சிட்டுக் குருவிகளும் கிரீச்சிட்டன. பிறகு மற்ற பறவைகள். அதற்குப் பிறகு மேலும் பல பறவைகள் கிரீச்சிட்டன. இப்போது குருடாக்கிவிடும் வேகத்தில், வடிவங்களும் வண்ணங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. வெப்பமண்டலத்தின் விடியல் இப்படியே வேகமாகக் கழிந்தது. கோண்ட் தன்னுடைய பிரார்த்தனைகளைச் செய்ய பிரார்த்திக்க எழுந்தார்.

அன்று எங்கள் அலைச்சல், எங்களை சிங்காலியாவிற்குப் பக்கத்திலிருந்த ஒரு மடாலயத்திற்கு கொண்டு சேர்த்த்து. இந்த மடாலயம் பற்றி நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். வண்ணக்கழுத்தைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அந்த லாமாக்கள் மகிழ்ச்சியோடு எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு முந்தைய நாள் மதியம், மடாலயத்தின் கூரைக்குக் கீழ் தங்கியிருந்த வண்ணக்கழுத்தும் உழவாரக் குருவிக் கூட்டமும் தெற்கு நோக்கிப் பறந்து போனதாகத் தெரிவித்தார்கள்.

மீண்டும் லாமாக்களின் ஆசீர்வாதங்களோடு, அவர்களுடைய சிறந்த விரும்தோம்பல் கொண்ட சத்திரத்திற்கு விடை கொடுத்துவிட்டு வண்ணக்கழுத்தைத் தேடிப் புறப்பட்டோம். கடைசியாகத் திரும்பிப் பார்க்கும் போது, மலைகள் தீப்பந்தங்கள் போல் எங்களுக்குப் பின்னால் எரிந்து கொண்டிருந்தன. இலையுதிர்காலம் பற்றிக் கொண்டத்தின் சாயம் வண்ணங்களில் மரங்கள் மிளிர்ந்தன. பொன், ஊதா, பச்சை, குங்குமச்சிவப்பு நிறங்கள் எங்களுக்கு முன்னால் இருந்தன.

500A சம்பவம்

சிகந்தர்வாசி 

மதியம் மூன்று மணிவாக்கில் 500Aவில் ஏறினேன். ஏ.சி. பஸ் அது. மதிய வேலை என்பதால் டிரைவர், கண்டக்டர் தவிர கடைசி சீட்டுக்கு முன் உள்ள சீட்டில் ஒரு பெண்ணும் இருந்தார்கள். நான் முன்பக்கம் உட்கார்ந்து கொண்டேன். கதவுகள் மூடியவுடன் அவள் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்தது.

“.. அவா ரெண்டு பேரும் மீட் பண்ணிண்டா. தீபக் நல்லா பேசினான்னு சொன்னா. ரொம்ப நேரம் பேசினாப் போல இருக்கு. அவளுக்கு ஓகேன்னு சொன்னா. அவனும் ஓகே சொல்லியிருப்பான்னு நெனைக்கறேன்” தமிழில் பேசினாள். உரக்க பேசினாள். வேறு மனிதர்கள் பஸ்ஸில் இருப்பதை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

சற்று நேரம் மௌனத்துக்கு பின், “அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவ ரொம்ப கான்பிடண்டா இருந்தா. ஆனா இப்போ அவன் பிடி கொடுத்து பேசமாட்டேன்கிறான்”

“…”

“சார், உங்களுக்கு இது பத்தி தெரியாதுன்னு எனக்கு தெரியும் சார். ஆனா நீங்க அவனோட மேனேஜர். நீங்க ஒரு வார்த்த அவன கேக்கலாம்”

“…”

“அது கரெக்ட்தான் சார். இது பர்சனல் விஷயம்தான். ஆனா நாங்க என் கசினுக்கு கல்யாணம் ஆகணும்னு ரொம்ப டென்ஷனா இருக்கோம். அதுக்குதான் உங்கள கேக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட்தான்.”

“…”

“இல்ல சார். நீங்க அவன போர்ஸ் பண்ண வேணாம். ஆனா ஏன் அவன் வேணாம்ன்னு சொல்றான்னு கேளுங்களேன்?”

“…”

“அவளுக்கு இப்போ முப்பது வயசாச்சு சார். சீக்கிரம் கல்யாணம் பண்ணிடணும்னு என் சித்தி சித்தப்பா பாக்கறா. இவ்வளவு நாள் அவ வேண்டாம்ன்னு இருந்தா. இவனதான் மொதல்ல சரின்னு சொல்லியிருக்கா. இந்த சந்தர்ப்பத்த விட முடியாது சார். நீங்கதான் எப்படியாவது அவன கன்வின்ஸ் பண்ணனும்”

“…”

“சார் நான் சொல்லறத கேளுங்க சார். ப்ளீஸ்.” அவள் குரல் உயர்ந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். கண்டக்டர் என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். “மனை அனுக்கொண்டிதாரே” என்றார் என்னிடம். பஸ் ஸ்டாப்பில் நின்றது. ஒருவர் ஏறிக்கொண்டார்.

கதவு மூடியபின் மறுபடியும் அவள் குரல். “…இருக்கலாம் சார். இல்லேன்னு சொல்லல. நீங்க இவள உங்க தங்கையா நினைச்சுக்கோங்க. ஒரு சிஸ்டருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி ஹெல்ப் பண்ணுங்கோன்னு கேக்கறேன்”

“…”

“இல்ல சார். அவருக்கு நீங்க மேனேஜர். நீங்க மனசு வெச்சா அவன கன்வின்ஸ் பண்ணலாம் சார். ஒரு தங்கைக்கு …”

“…”

“உங்களுக்கு தெரியாதது இல்ல. இந்த காலத்துல கல்யாணம் பண்ணி வெக்கறது எவ்வளவு கஷ்டம்னு. அதுவும் பொண்ணும் பையனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பற மாதிரி இருக்கறது இன்னும் கஷ்டம். அதுனாலதான் இது கை நழுவக்கூடாதுன்னு பாக்கறேன்”

“…”

“அவளுக்கு அவன பிடிச்சிருக்கு சார். அதுனாலதான் அவனுக்கு அடிக்கடி போன் பண்றா. இத ஏன் அவன் தப்பா எடுத்துக்கறான்? அடிக்கடி போன் பண்றதுல என்ன சார் தப்பு இருக்கு?”

“…”

“ஓகே சார். ஐ அண்டர்ஸ்டான்ட். நான் அப்புறம் போன் பண்றேன்”

அடுத்த ஸ்டாப் வரை நிசப்தமாக இருந்தது. ஸ்டாப்பில் பஸ் நின்றவுடன் அந்த பெண் இறங்க வந்தாள்.

பஸ்ஸில் இருந்த மற்றொருவரும் எழுந்து, “நீங்க தமிழ் போல இருக்கு. நீங்க பேசறத நான் கேட்டேன்….” என்று சொல்லிக்கொண்டே அந்த பெண்ணுடன் பஸ்ஸைவிட்டு இறங்கினார்.

பஸ் கதவு காற்றை உள்ளிழுத்துக் கொள்வது போன்ற மெல்லிய சப்தத்துடன் மூடிக் கொண்டது.

நோபல் பரிசின் வாசலில்

ஸ்ரீதர் நாராயணன்

mia-couto

‘அமெரிக்கன் நோபல்’ என்று பரவலாக அறியப்படும் நூஸ்டாட் சர்வதேச பரிசு, கவிஞர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள் என்று எல்லோரும் சமமான வாய்ப்பு பெறும் வெகு சில சர்வதேச பரிசுகளில் ஒன்று.. இவ்வருட நூஸ்டாட் பரிசு போர்ச்சுகீசிய எழுத்தாளர் மியா கோதோவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நூஸ்டாட் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் முப்பது பேராவது நோபல் பரிசை பெற்றிருக்கின்றனர் என்பதால் சர்வதே இலக்கிய வட்டாரத்தில் இது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்து நாடுகளில் இருந்து பதிமூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதும் முப்பத்து நான்கு படைப்பாளிகள் பங்குபெறும் நடுவர் குழு இந்த பரிசுக்குரிய எழுத்தாளரை தேர்ந்தெடுக்கிறது.

“தொலைவிலிருக்கும் ஐஸ்லாந்தின் பெரும் எழுத்தாளரால், காஃப்காவின் கனவுகளைச் சேர்ந்த, தனித்துவ ரோஜாப் பாறைகளின் நிலமான, புராண ஓக்லஹாமாவின் இந்தப் பரிசு, இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த – புதிரான, ஒதுக்குப்புறமான நாடு ஒன்றின் எழுத்தாளனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற சூழல்கள்தான், இலக்கியத்திற்கான நூஸ்டாட் சர்வதேச விருதை, அதிகம் அறியப்படாத, ஆனால் தகுதி பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பெரும் சர்வதேச பரிசாக ஆக்குகிறது.” என்று 1972ல் தன்னுடைய ஏற்புரையில் மார்க்குவெஸ் குறிப்பிட்டார்.

அடுத்து பத்தாண்டுகள் கழித்துதான் அவர் நோபல் பரிசுக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளவில் மிகப்பெரும் வீச்சைப் பெறுகிறார். நோபலும், நூஸ்டாட்டும் உலகளவில் உன்னத எழுத்தாளர்ளிலிருந்து பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுத்தாலும், நூஸ்டாட் அடையாளபடுத்தும் விதம் சற்று விரைவாகவும், அதன் அங்கீகாரம் நோபல் தேர்வுக்குழுவினருக்கு உதவிகரமாகவும் அமைகிறது. படைப்பாளிகளின் பரிந்துரைகளில் பல புதியவர்களை இடம்பெறச் செய்தாலும், அதற்காக எவ்வித சமரச அரசியல் வழக்கங்களில் ஈடுபடாமல் முற்றிலும் வெளிப்படைத்தன்மை கொண்ட முறைமைகளை கொண்டிருக்கிறது. ஆனால் அது அவ்வளவு சுலபமானதா? ஒரு பிரபலமானவரை அல்லது புதியவரை பரிந்துரை பட்டியலில் இணைக்கும்போது தேர்வுக்குழுவினரின் சார்பரசியலை எப்படி மட்டுப்படுத்துவது?

இப்பரிசை நிர்வகிக்கும் ‘The world literature today‘ பத்திரிகையின் செயற்குழு இயக்குநரும், ஓக்லஹாமா பல்கலை பேராசிரியருமான டேவிஸ்-உண்டியானோ தன்னுடைய விளக்கத்தில், விமர்சகர்களும், நூல் அறிமுகம் எழுதுபவர்களை விட எழுத்தாளர்களை அதிகம் கொண்ட தேர்வுக்குழு இத்தகைய புறச்சாய்வுகளை பக்குவமாக கையாளுகிறது என்கிறார். படைப்பாளிகள் நிரம்பிய தேர்வுக்குழு தவிர, 800 ஆலோசகர்கள் கொண்ட குழு, உலகளவில் புதிய எழுத்தாளர்களின் வரவைப் பற்றி தொடர்ந்து அறிவுறுத்தல்களை தேர்வுக்குழுவிற்கு சமர்பிக்கிறது. பரிந்துரைக்கப்படும் எழுத்தாளர் உயிருடன் இருக்க வேண்டியது மற்றும், நூஸ்டாட் பரிசை பெற்றுக்கொள்ள ஓக்லஹோமா வரத்தயாராக இருக்க வேண்டும் என்பதே நிர்வாக கமிட்டியின் ஒரே கோரிக்கையாக தேர்வுக்குழுவிடம் வைக்கப்படுகிறது. மற்ற நிகழ்முறைகள் எல்லாமே தேர்வுக்குழுவின் முழு சுதந்திரத்திற்கு உட்பட்டது. கவிஞர்கள், புனைவு எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், அபுனைவு எழுத்தாளர்கள் என்ற பெரிய கலவையின் தேர்வுமுறைகள் மிகவும் கடினமானதாக இருந்தாலும், தொழில்முறை படைப்பாளிகளை கொண்ட தேர்வுக்குழு அதை பிரமாதமாக கையாள்கிறது. இலக்கிய வரலாற்றை மாற்றியமைக்கும் அதிமுக்கிய பரிசுகள் இவை. தங்களுடைய ஆழ்ந்தாராய்வுகளில் எவ்வித விரைவையும் சுருக்குவழியையும் தேர்வாளர்கள் மேற்கொள்ளக் கூடாது என்பதில் நிர்வாகக் குழு மிகக்கவனமாக இருக்கிறது.

“இனி எப்போதும் நிகழாது என்று நாங்கள் நினைத்திருந்த போர்சூழல் மீண்டும் மொஸாம்பிக்கில் தொடங்கியிருக்கும் இந்த சோக காலகட்டத்தில், நூஸ்டாட் பரிசு என்னும் நற்செய்தி எனக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது’ என்று மகிழும் மியா கோதோவைத்தான் 2014ம் வருடத்து வெற்றியாளராக ஜூரர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எதிர்மறையான மற்றும் பலியாக்கப்பட்ட விழுமியங்களாலேயே குறிப்பிடப்படும ஆப்பிரிக்க நாடுகளுக்கான தேய்வழக்கை மறுத்து தங்களுடைய தனித்துவத்தை கண்டடையும் நாடான மொஸாம்பிக்கை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்ளும் மியா, போர்ச்சுகீசிய வம்சாவளி பெற்றோருக்கு பிறந்தவர். மொஸாம்பிக்கின் சமகால அரசியல் பின்னடைவில், மியா கோதாவின் இலக்கிய செயல்பாட்டிற்கான இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

முப்பது வருடங்களாக வருடத்திற்கு ஒரு புத்தகமாக வெளியிட்டுக் கொண்டு வரும் படைப்பூக்கம் மிக்க எழுத்தாளராக அறியப்பட்ட மியா தன்னுடைய ஆதர்சமாக பிரதானமாக பிரேசிலிய எழுத்தாளர்களையும், பிற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களையும் சொல்கிறார். மொஸாம்பிக்கின் சுதந்திர போராட்ட வரலாறும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றியுமான பதிவுகளை அவருடைய நூல்களில் பரவலாக காணமுடிகிறது. 1992ல் வெளியிடப்பட்ட ‘தூக்கத்தில் நடக்கும் நிலம்’ (Terra Sonâmbula) ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது.

மொஸாம்பிக்கின் உள்நாட்டு கலகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த நாவல், அகதி முகாமில் இருந்து தப்பித்து செல்லும் துஹாஹிர் என்னும் கிழவரும், தன்னுடைய குடும்பத்தை தேடிச்செல்லும் ம்யுதிங்கா என்னும் இளைஞனும் எரிந்து போன பேருந்து ஒன்றில், இறந்த பிரயாணியின் குறிப்புப் புத்தகத்தை கண்டடைவதாக விரிந்து செல்கிறது. மொஸாம்பிக்கின் சுதந்திர போராட்டங்களும், அதைத் தொடர்ந்து நிலைத்தன்மைக்கான அதன் தத்தளிப்புகளைப் பற்றியும் அந்த குறிப்புப் புத்தகம் வாயிலாக விவரிக்கிறது. பெரும் போராட்டமான அந்த பயணத்தின் இறுதியில் இருவரும் பாழடைந்த நாட்டின் ‘தூக்கமிழந்தவர்களாக’ (Somnambulists) ஆகிவிடுகின்றனர். இந்த நாவல் தெரசா பிரதாவின் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு விருதுகளையும் பெற்றது.

‘பதினாறு வருடப் போருக்கு பின்னர், கலை என்பது (முக்கியமாக கவிதையும் இலக்கியமும்) எதிர்ப்பின் ஒருவகைமையாயாக இருக்கிறது என்பது எனக்கு தெளிவாகிறது. போரின் முதல் நோக்கமே மனிதத்தை அழிப்பதுதான். இம்மாதிரியான சூழல்களில் கலை மொழி என்பது மனிதத்தை மீள் உருவாக்கும் தெளிவான வழியாக அமைகிறது’ என்ற மியோவின் கூற்றை உலகிற்கு எடுத்து சொல்லும் நிகழ்வாக இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மனிதத்தை பண்படுத்துவதே இலக்கியத்தின் தேவையாக அன்றும், இன்றும், என்றும் இருக்கிறது. நூஸ்டேட்டின் பரிசு அதை மேலும் உறுதிபடுத்துகிறது.

மியா கோதோவின் நூஸ்டாட் பரிசு ஏற்புரை – இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்
மியா கோதோவின் சிறுகதை – காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும்