காஸ்மிக் தூசி

மகரந்த்

  காஸ்மிக் தூசி


என்னது?
சட்டையை
கழற்றிவிட்டு
பூஜை செய்ய
போகவா?
நன்றி வேண்டாம்.

என்னால் ஆகாது
நீங்கள் விரும்பினால்
தாராளமாக போகலாம்.

போகும் முன்
தீப்பெட்டியை தருகிறீரா?

புகைத்தால்
யாரும்
பொருட்படுத்தாத
முற்றத்தில்
வெளியே
இருக்கிறேன் நான்.

000

அருண் கொலாட்கரின் Makarand என்ற கவிதை மொழிபெயர்ப்பு

சிறு கற்குவியல்

 காஸ்மிக் தூசி

SONY DSC

மிகவும்
மேடுபள்ளமில்லாத
பலமாக
காற்றடிக்காத
ஓரு இடத்தை
கண்டுபிடிக்க
வேண்டும்

ஒரு கல்லின் மேல்
இன்னொரு கல்
அதற்குமேல்
மூன்றாவது கல்
என்றவாறு
அடுக்க வேண்டும்

அடுத்தகல்லை
நினைவில் வைத்து
ஒவ்வொரு கல்லையும்
எடுக்க வேண்டும்
சரியான அளவில்
சரியான எடையில்

முதல் கல்லை
சரியாக வைத்தால்
நிற்கும்
எல்லாக்கல்லும்

கடவுள்
ஆசிர்வதிக்கட்டும்
இளம்பெண்ணே
உன் சாதுர்யம் போலவே
அதிர்ஷ்டமும்
வாய்க்கும்

வீட்டுக்குப்போ
உன் கணவனுடன்
சந்தோஷம் உண்டாகி
இருக்கட்டும்
எப்போதும்.

000

அருண் கொலாட்கரின் A Little Pile of Stones என்ற கவிதை மொழிபெயர்ப்பு

நீர்த்தேக்கம்  

காஸ்மிக் தூசி

பேஷ்வாக்கள்
நிறுவிய
மாபெரும்
நீர்த்தேக்கத்தில்
இல்லவே இல்லை
துளி நீர் கூட

வேறெதுவும்
இல்லை
நூற்றாண்டு கால
வண்டல்
தவிர.

000

அருண் கொலாட்கரின் The Reservoir என்ற கவிதை மொழிபெயர்ப்பு

முரளிக்காக ஒரு பாடல்

 காஸ்மிக் தூசி

பாருங்கள்,
மலை முகட்டில்
மேய்வதற்கென
வந்து விட்டது
நிலவு

குதிரை திருடரே
சவாரி செய்யலாம்
என்று மட்டும் நினைக்காதீர்

கந்தோபாவின்
முத்திரை
அதன் பக்கவாட்டில்
தெரிகிறதல்லவா
இடது
காறை எலும்புக்கு கீழே
பச்சை குத்தப்பட்டிருக்கிறதே
அதுதான்
கந்தோபாவின் பெயர்
பாருங்கள்

கிழட்டு பெண்பித்தரே
கந்தோபாவின் பெண்மீது
வைக்காதீர்
கையை

பார்ப்போம்
அதற்குமுன்
உங்கள் பணத்தின்
நிறத்தை

000

அருண் கொலாட்கரின் A Song for Murli என்ற கவிதை மொழிபெயர்ப்பு

கந்தோபாவின் சூதன் (அல்லது) வாக்கியாவின் பாடல்

காஸ்மிக் தூசி

இந்த மஞ்சள் நிற துப்பட்டா
சூரியனிடமிருந்து
நான் எடுத்து போது
இரண்டாக கிழிந்தது
இதுபாதிதான் என்பது தெரியும்
நல்ல ஒன்று கிடைத்ததும்
எறிந்து விடுவேன்
இதை

என் தாயை கொன்றேன்
அவளின் தோலுக்காக
எனக்கு
மஞ்சள் வைக்கவென
இப்பையை செய்ய
தேவைப்பட்டதோ
அதில் கொஞ்சம்தான்

இந்த எண்ணெய்க் குப்பியை
பார்த்துக்கொள்வது
என் வேலை
எப்போதும் நிறைந்திருக்கும்படி
பார்த்துக்கொள்வது
உங்களுடையது

பிச்சை எடுக்கவில்லை
ஆனால்
தேவைப்பட்டால் திருடுவேன்
சரியா?

கந்தோபாவின் ஆலயம்
விடியலில் எழுகிறது
அது இருளக்கூடாது இரவில்
என்றைக்கும்.

ஒரு சுடர் கொண்டு
கோயிலைக் காக்கின்றேன்
அப்படிசொல்லாதீர்
எனக்கு வேண்டுவதெல்லாம்
ஒரு பிடி
எண்ணை மட்டுமே
முடியவில்லை என்றால்
கொடுங்கள்
ஒரு துளியாவது

இந்த வீணையில் இருப்பது
ஒற்றைத்தந்தி மட்டுமே
தெய்வீக நமைச்சலுடன்
நான் அதை வருடும்போது
ஒலிப்பதெல்லாம்
ஒரு ஸ்தாயி மட்டுமே
என் குரலில் ஒலிப்பதெல்லாம்
ஒரு ஸ்வரம் மட்டுமே
குரலில் இருப்பதும்
ஒற்றைச்சொல் மட்டும்
குறைகூற
நான் யார்?

கடவுளே உலகம்
அட்சரம் பிசகாமல்
தெரியும் எனக்கு
என் விலாவில்
விஷப்பல் போல
இருப்பதும் அதுவே

என் பற்களிடையே
அகப்பட்ட நாவில்
இரத்தச்சுவை கொண்ட
ஆட்டுக்குட்டியும் அதுவே
என்பதும்
அறிவேன் நான்

நான் பாடும் பாடல்
எப்போதும்
இது மட்டுமே

௦௦

அருண் கொலாட்கரின் A Song for Vaghya என்ற கவிதை மொழிபெயர்ப்பு

ஒளிப்பட உதவி – விக்கிமீடியா