தி. இரா. மீனா

கடவுளுக்கு கண்ணில்லை – ஒரிய மொழி- பிரதிப்தா குமார் மிஸ்ரா ஆங்கிலம் : லீலாவதி மொகாபத்ரா ,கே.கே. மொகாபத்ரா தமிழில்: தி.இரா.மீனா

 

தி. இரா. மீனா

 

கடவுளுக்குக் கண்ணில்லை. ஆமாம். இல்லைதான். பரம ஏழையான என் மீது அவன் காட்டும் வன்மத்தை வேறு எப்படிச் சொல்ல முடியும்? கடவுள் இப்படிச் சொல்லியிருப்பார்; “ சக்ரா ! என்னைக் குறை சொல்லாதே! ரயில் நிற்கும்போது எல்லா கம்பார்ட்மெண்டுகளுக்கும் நீ போக முடியாததற்கு நான் என்ன செய்வேன்?” என்று. ஆனால் என் பதில் இப்படியிருக்கும்: கடவுளே! நீ எப்படி இரண்டு முகம் கொண்டவனாக இருக்கிறாய்? பரத்தை எடுத்துக் கொள். அவனுக்கு ஒரு கண்ணில் பார்வை இருப்பதால் அவனால் முழு ரயிலுக்குள்ளும் போக முடிகிறது .காலியான இடங்களுக்குப் போய் நேரத்தை விரயம் செய்யவேண்டிய அவசியம் அவனுக்கில்லை. ஏன் என்னை முழுக் குருடனாகப் படைத்தாய்? பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஜனங்கள் இருப்பதாக நினைத்துக் காலியான சீட்டுகளுக்குப் போய் நிற்கும் நிலை எனக்கு. பரத் ஒருநாளைக்கு ஆறு ரூபாய் சம்பாதிக்கிறான். எனக்கு இரண்டு ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனாலும் நீ கடவுள் என்ற பெருமையை எடுத்துக் கொள்கிறாய். இதுபோக எந்தச் சண்டை வந்தாலும் அவனுக்கு நீ சாதகமாக இருக்கிறாய். போகட்டும். நான் பரத்தைப் போல கெட்டிக்காரனில்லை.ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான்  எனக்குக் குறைவாய்க் கிடைக்கிறது. நியாயம்தான். பத்து, பன்னிரண்டு வயதில் ஒரு சிறுவன் என் கையைப் பிடித்துக்கொண்டு எல்லாக் கம்பார்ட்மெண்டுகளுக்கும் என்னைக் கூட்டிக்கொண்டு போக நீ உதவ வேண்டும் என்று நான் உன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டேனே! அந்தச் சிறுவன் செய்ய வேண்டியதெல்லாம் என்னை அழைத்துக்கொண்டு போகவேண்டியதுதான். நான் பேச்சில் கெட்டிக்காரன். “கனவான்களே! எஜமான்களே! இந்தக் குருடனுக்கு காசுகொடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார் என்று சொல்வேன்”, என்ற என் பிரார்த்தனை  உன் காதில் விழுந்ததா? ஏன் விழவில்லை?

ரயில் ஸ்டேஷனில் நிற்கும்போது எல்லாக் கம்பார்ட்மெண்டுகளுக்கும் என்னை அழைத்துச் செல்ல வழிகாட்டி யாருமில்லை.சரி. ஒப்புக் கொள்கிறேன். இந்த பிளாட்பாரத்தை எடுத்துக் கொள்வோம். இங்கு பத்துத் தூண்கள் உள்ளன.“ இதில் ஒரு தூணை எடுத்துக் கொண்டு நீ அங்கேயே இருக்க வேண்டும். வேறெங்கேயாவது உன்னைப் பார்த்தேன் என்றால் இங்கிருந்து ஒரேயடியாக உன்னைத் துரத்திவிடுவேன்” என்று ஒரு போலீஸ்காரன் சொன்னான். நான் போவதற்கு முன்னாலேயே நல்ல தூண்கள் இருக்குமிடத்தை மற்றவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். தங்களுடைய கம்புகள், சாக்குகள், பாத்திரங்கள் ஆகியவற்றை அந்த இடத்தில் வைத்துத் தங்கள்  உடைமையாக்கிக் கொண்டு விட்டனர். கடைசித் தூண் தான் எனக்குக் கிடைத்தது. அதுவும் பரத் சொல்லித்தான் தெரிந்தது. நான் வந்த நாளன்றே அங்கு போகும்படி அவன்தான் சொன்னான். வந்தது முதல் அங்குதானிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் கிடைக்கும். நேற்று பரத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்,

“பரத்! ஏன் எப்போதும் என் வருமானம் ஒரே மாதிரியாக இருக்கிறது?”

“உன் தூண் எதிரில் சரக்கு கம்பார்ட்மெண்ட்தான் நிற்கும். அதில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் உனக்குக் காசு போட யாருமில்லை.”

“இது நியாயமில்லை. எது நல்ல இடமென்று எனக்குத் தெரியாது. நான் குருடன். ஆனால் கடவுளுக்கு இரக்கமில்லை. நான் கேட்பது சிறிய உதவிதான் என்று அவருக்குத் தெரியாதா? என் தூண் முன்பாக மனிதர்கள் இருக்கும் கம்பார்ட்மெண்ட்டை நிற்கச் செய்வது அவர் வேலையல்லவா?” என்றேன்.

இரவு முழுவதும் சக்ரா தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். நல்ல தூக்கமில்லை. கோபமாக கடவுளோடு மோதிக் கொண்டிருந்தான்.எனக்குக் கை,கால், மூக்கு, காதுகள் என்றுஎல்லாவற்றையும் கொடுத்திருக்கிறாய். ஏன் ஒரு ஜோடிக் கண்களை மட்டும் கொடுக்கவில்லை? ஏன் இந்த தண்டனை?

கடவுள் தன்னிடம் வரும்வரைக் காத்திருப்பது என்று சக்ரா முடிவு செய்தான். கடவுளை முகர்ந்து கண்டுபிடிப்பதில் கஷ்டமில்லை. அவன் தூணுக்கு அருகே ஒரு முறை நல்லவாசனை வந்தது. அங்கிருப்பவரிடம் பேசத் தைரியமில்லை. நல்லவேளை, பேசவில்லை. பொருட்களை விற்கும் ஒருவர்தான்  விலை மலிவான சென்ட்டைப் போட்டுக் கொண்டிருந்தார் என்று பரத் சொன்னான்.

கடவுள் தன்னைக் கடக்க மாட்டாரா? சிறுவன் ஒருவன் தன் கையைப் பிடித்துக்கொண்டு  ரயில் கம்பார்ட்மெண்டுகளுக்கு அழைத்துச் செல்லும் நாள் வரவே வராதா?  அந்தச் சிறுவனுடன்  டீல் வைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தான். ஒரு நாளைக்குப் பத்து பைசாவும், இரவு உணவாக ரொட்டியும் தரத் தயாராக இருந்தான். ஆனால் சிறுவன் கிடைக்க வேண்டுமே.

சக்ரா தன்னை மிக பலவீனமாக உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் மோசமாகக் கழிந்தது. இன்று மிகவும் மோசம். எதுவும் கிடைக்கவில்லை. அந்த நொண்டிப் பெண்மணி கூட வரவில்லை .தும்மிக் கொண்டும், முனகிக் கொண்டும், தவழ்வது போலவும் அவள் அங்கிருப்பாள் . நாற்றம் பொறுக்க முடியாவிட்டாலும் ஆறுதலாக இருக்கும். நேற்றிரவு தங்களுக்குள் நடந்த உரையாடலை  நினைத்துப் பார்த்தான்.
“கோரமண்டல ரயில் வந்துவிட்டுப் போய்விட்டதா?”அவன் கேட்டான்.

“உம். போய் விட்டது.”

“நீ இரவு என்ன சாப்பிட்டாய்?”

“மார்க்கெட் அருகேயுள்ள கடையில் வெந்த காய்களோடு இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டேன். எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.” அந்தப் பெண்மணி இதற்கு முன்பு ஒரு மோசமான சந்தில் வசித்து வந்தாள். அவளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். சில சமயங்களில் ஓர் இரவுக்கு ஐந்நூறு ரூபாய் வரை கிடைத்தது. ஆனால அவளுக்கும் கஷ்டம் வந்தது. அவளைவிட அழகான, வயது குறைந்த பெண்கள் வந்ததால் அவள் தொழில் கெட்டது. எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் போலீசுக்குக் கமிஷன் கண்டிப்பாகத் தர வேண்டியிருந்தது.

சக்ரா தும்மினான். அப்போது அவனுக்குப் பழக்கமான அந்த நெடி வந்தது. சத்தமும் கேட்டது. அவள் வந்து தரையில் தன் சாக்கை விரித்திருக்க வேண்டும். எப்படி அவள் அந்த இடத்திற்கு நேரடியாக வரமுடியும்? அவள் ஏன் வேறிடம் பார்க்கக் கூடாது? ஒவ்வொரு இரவும் அவள் ஏன்  இங்கு வரவேண்டும்? இன்று அவள் முனகுவதும்,முக்குவதும் அதிகமாகக் கேட்டது.

“பெண்ணே!  உடல் நலமில்லையா?”

“ஒன்றுமில்லை. அந்தக் கூலிக்காரன் என்னைக் காலியான சரக்கு கம்பார்ட்மெண்டுக்கு இழுத்துக் கொண்டுபோனான். அவனிடமிருந்து தப்பி வரும்போது காலில் அடிபட்டுவிட்டது.”

“இப்படியான மனிதர்களிடமிருந்து நீ விலகியிருக்க வேண்டும்”

“விலகித்தானிருப்பேன். ஏனோ இன்று இப்படியாகிவிட்டது. அவன் என்னை இழுத்தபோது மறுத்தேன். வயிற்றில் எட்டி உதைத்தான். மயக்கமாகி விழுந்து விட்டேன்.”

“வேறு யாரிடம் அவன் பலத்தைக் காட்ட முடியும்? என்னால் அவனைப் பார்க்க முடியாமலிருக்கலாம். ஆனால் என் கையில் அவன் கிடைத்தால் எலும்பை முறித்து விடுவேன்”.

அவளுடைய மெல்லிய சிரிப்பு காற்றில் மறைந்தது. சக்ரா பின் வாங்கினான். இதில் என்ன வேடிக்கை? அவள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாளா?

“இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. எனக்குச் சரியாகி விட்டது . நீ போய்த் தூங்கு.”

அவள் அருகே வந்துவிட்டாளா? இப்போதெல்லாம் அவள் அவனுக்கு அருகில்தானிருக்கிறாள். இந்த பிளாட்பாரத்திற்கு வந்த புதிதில் ஒரு கடைவாசலில்தான் படுத்திருந்தாள். கடையில் ஏதோ திருட்டு நடந்தபோது போலீஸ் அவளைச் சந்தேகப்பட்டு அடித்தது. பிறகு தண்ணீர் டாங்க் அருகேயிருந்தாள். அங்கும் சிக்கல்.  பிறகு கடைசியாக இந்தத் தூணுக்கு வந்தாள். சக்ராவைப் பார்த்தாள். அங்கிருந்தால் எந்தத் தொந்தரவும் வராதென்று நினைத்தாள். அங்கேயே படுத்தாள். இவனுடைய மனைவியாகி விட்டாலென்ன என்று கூட யோசித்தாள். தப்பித் தவறிக்கூட அவன் அவளைத் தொட்டதில்லை. என்ன மனிதன் இவன்!  ரயில் வரும்போது அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டாக அழைத்துச் செல்லலாம்.அவர்கள் வருமானம் ஜாஸ்தியாகும். ஒர் அறை கொண்ட குடிசையை ஸ்டேஷனுக்கு அருகில் கட்டமுடியும். அவள் அங்கு கீரை  பயிரிடுவாள். அவள் சக்ராவைத் திரும்பிப் பார்த்தாள். குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தான்.

மிகவும் பசியாக இருக்கும் போது சக்ரா நன்றாகத் தூங்கிவிடுவான். சில சமயங்களில் போலீஸ் அவனைக் கடக்கும்போது இரண்டு தட்டு தட்டுவார்கள். அவன் இங்குமங்கும் உருள்வான். கோடையில் இது பெரிய தொந்தரவில்லை. குளிர்காலத்தில்தான் தொல்லையாக இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் “பெண்ணே ! உனக்குச் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டான். அது ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வரும் நேரம்.

“பாட்டி இருந்தாள். அவளும் செத்துப் போய்விட்டாள்.”

“வேறு யாரும்?”

“வேறு யாரு?”

“கணவன்?”

“என்னைப் போன்ற பெண்களுக்கு எப்படிக் கணவன் இருக்க முடியும்?”

“நீ வேறுயாரையாவது ஏன் பார்க்கக் கூடாது?”

ரயில் வந்து நின்றது.  பான், பீடி, சிகரெட், வாழைப்பழம், டீ, முட்டை ,அவித்த  முட்டை…. குர்தா ரோடு ஸ்டேஷனா என் மீது ஏறிக்கொண்டுதான் உன் சீட்டுக்குப் போக வேண்டுமா.. பின்கள்.. கல்தட்டுக்கள்  கம்மி விலையில்..

குரல்கள்..

நான்காவது பிளாட்பாரத்தில் அன்றுகாலை ஒரு பெரியவர் இறந்து போய் விட்டார். அவர் உடலைக் கேட்டு யாராவது வந்தார்களா அல்லது அவர் அனாதையா என்று அவன் அறிய விரும்பினான். அவர் மனைவி வந்ததாகவும், கூலிக்காரர்கள் அவரை அடக்கம்செய்யப் பணம் தந்ததாகவும் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகவும் சொன்னார்கள்.

“கொடுத்து வைத்தவர். சொந்தமண்ணில் அடக்கம் செய்யப்படுவது என்பது எவ்வளவு புண்ணியம் தெரியுமா? எனக்கு என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? பெண்ணே! நான் பிச்சுக்குளி என்ற கிராமத்திலிருந்து வந்தவன். பிறக்கும்போதே பார்வையில்லாமல்தான் பிறந்தேன். குருடன் சக்ரா என்றால் பிச்சுக்குளியில் எல்லோருக்கும் தெரியும். சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்படக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்,” என்று சொன்னான்.

சில நாட்களில் ஓரளவு வருமானம் கிடைத்து விட்டால் சக்ரா வீடுகளுக்கு முன்னால் போய் நின்று பக்திப்பாடல்கள் பாடுவான். அங்கு கிடைக்கும் காசை வைத்து ஒன்றிரண்டு இனிப்புகள் வாங்கிச் சாப்பிடுவான். சில சமயங்களில் பொடியும் வாங்குவான். அடிக்கடி சிறிய மீனின் விலையைக் கேட்பான். அவனுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவனால் தனக்கென்று ஒன்று கூட வாங்கிச் சாப்பிட முடிந்ததில்லை. ரத்த சோகை காரணமாக அவன் நிறம் இப்போது மஞ்சளாகி விட்டது. அந்த நொண்டிப் பெண்மணி தன்னருகில் படுக்கத் தொடங்கிய பிறகு அவன் வேறு எங்கும் போவதில்லை. அந்தக் கூலியோ அல்லது தரை சுத்தம்செய்பவனோ அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது . எவ்வளவு நேரமானாலும் கம்பைத் தரையில் தட்டியபடி அங்கு வந்துவிடுவான். கொஞ்சம் தள்ளிப்படு என்று சொல்லும்போது அவனுக்குள் ஒரு மகிழ்ச்சியும்..

“ஏன் இன்று இவ்வளவு நேரம்?”

“உனக்கென்ன அதனால்? நீ வேறிடம் பார்த்துக்கொள். ஜனங்கள் நம்மைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.”

“கவலைப்படாதே, நான் வேறிடம் போய்விடுவேன். உனக்கு என்னால் எந்தத் தொந்தரவுமில்லை என்றுதான் இத்தனை நாளாய் நினைத்து இருந்தேன். ஆனால் நான் இப்போது வேறிடம் பார்க்க வேண்டும்.”

“விளையாட்டுக்குத்தான் சொன்னேன். இங்கேயே இரு.  எப்போதும் இரு”

“நான் போய்விடுவேன் என்று நினைத்தாயா? நானும் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்.” இந்த மாதிரி யார் இருக்க முடியும்,  அவன் ஆச்சர்யப்பட்டான். அவள் என்னை விரும்புகிறாளா?அதனால்தான் போக விரும்பவில்லையா? அவள் காலில் குறையிருந்தால் என்ன?  கையைப் பிடித்துக் கொண்டு என்னை எல்லா கம்பார்ட்மெண்டுக்களுக்கும் அவளால் அழைத்துச் செல்லமுடியும். இரண்டுபேரும் சேர்ந்து பிச்சை எடுத்தால் ஓரளவு வருமானம் கிடைக்கும். ஒரு டப்பாவில் அதைப் போட்டு வைக்கலாம். அவள் விருப்பத்தைக் கேட்டால் கேலி செய்து சிரிப்பாளோ? கேட்பதா, வேண்டாமா குழப்பமாக இருந்தது. அவனுக்கு இரண்டு கண்ணும் குருடில்லை. வலது கண்ணில் எப்போதும் எரிச்சல். எப்போதாதாவது இரத்தம் அந்தக் கண்ணிலிருந்து வரும்.

அந்தப் பெண்மணி நடுங்கிக்கொண்டே தூங்கிவிட்டாள். மெல்லிய போர்வை. காலை மூடிக்கொள்ள நினைத்தால் தலைப்பகுதி வெளியே தெரிந்தது. சக்ரா தன் மூட்டையிலிருந்து சால்வையை எடுத்துப் போர்த்தி விட்டான். குளிர் கொஞ்சம் குறையும்.”

அவள் எழுந்து விட்டாள். “விடிந்து விட்டதா? ”

“விடிந்து விடவேண்டுமென்று உனக்கு ஆசையாயிருக்கிறதா? உனக்குத் தெரியாது. காலையில்தான் நமக்கு பசி பத்து மடங்காக இருக்கும். மதியத்தில் குறைந்துவிடும்.”
“தினமும் இரவில் ரொட்டி சாப்பிட்டு அலுத்துவிட்டது. கொஞ்சம் அரிசி வாங்கி அந்த வேப்பமரத்தடியில் நாம் ஏன் சமைத்துச் சாப்பிடக் கூடாது?”

“வேண்டாம். இங்கு கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் எல்லோரும் இன்னும் அதிகமாக என்னைக் கேலி செய்வார்கள். ஆசையாயிருந்தால் நீ சமைத்துச் சாப்பிடு .எனக்கு ரொட்டியே போதும்.”

“எனக்கும் போதும். ஒருத்தருக்காக யார் சமைப்பது?”

“சரி. இப்போது தூங்கு. காலையில் தண்ணீர் வரிசையில் நிற்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும்”

திரும்பிப் படுத்த சக்ராவுக்கு கடவுள் இன்னும் ஏன் பிரசன்னமாகவில்லை என்று தோன்றியது. சரக்கு ரயில் கம்பார்ட்மென்ட் தன் தூணுக்கு முன்னால் நிறுத்தப்படுவதைத் தொடரப்போகிறாரா? எந்தச் சிறுவனும் உதவிக்கு வராமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறாரோ? மறைவில் நின்று சக்ராவின் திசையைப் பார்க்கிறவர்களைத் தள்ளிக் கொண்டு போய்விடுகிறாரோ? யாருக்குத் தெரியும்? இப்படிச் சொல்லலாம்; இங்கே பார்!   அந்தத் திசைக்குப் போகாதே! ஒரு புலி பாய்வதற்குத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது. சக்ராவுக்கு கடவுளைப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவர் விரட்டி விடுவார். எவ்வளவு இரக்கமற்றவர் அவர்!

அந்தப் பெண்மணியைத் தன்னோடு வாழும்படி கேட்கலாமா?அவர்கள் ஒரு  குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவனுக்கு உடம்பு சரியில்லாத போது அவள் பார்த்துக் கொள்வாள். சுடுதண்ணீர் வைத்துத் தந்து.. தலை பிடித்து.. அவளுக்கு எது வந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான். அவனுக்குத் தலைவலியும் , அவளுக்கு முதுகுவலியும் பொறுக்க முடியாமலிருக்கிறது. இருவரும் அருகருகே இருந்து கொண்டு ஒருவருக்கொருவர்  உதவி செய்து கொள்ளா விட்டால் என்ன பயன்?

“கவுண்ட்டர் எண் ஐந்தில் யாருக்கோ அடிபட்டு ரத்தம் வந்ததாமே?” கேட்டான்.

“நம் கூட்டத்தில் ஒருவருக்காகத் தானிருக்க வேண்டும். சீக்கிரம் தூங்கு. உன் சால்வையை ஏன் எனக்குத் தந்தாய்? நாளையிலிருந்து நாமிருவரும் சேர்ந்து பிச்சை எடுப்போம். நான் உன் கையைப் பிடித்துக் கொள்கிறேன்.” அவள் அவன் தலைமுடியைக் கோதினாள். இன்னும் இரவு எவ்வளவு நேரமிருக்கிறது? அவன் யோசித்தான்.

மெட்ராஸ் மெயில் வந்து நின்றது. கூலிகள் இங்குமங்குமாக ஓடினர். ஒரு வயதான போலீஸ்காரன் பிச்சைக்காரர் கும்பலில் யாராவது புதிதாக வந்திருக்கிறார்களா, மிரட்டிக் காசு வாங்கலாம் என்று வந்து கொண்டிருந்தான். வழக்கமான குரல்கள்.. டீ.. சூடான டீ. முட்டை.. இந்த சீட்டை எடுத்துக் கொள்ளலாம்.. இல்லை. இது என்னுடையது. என் கர்ச்சீப்பை முன்பே போட்டு வைத்திருந்தேன். ரயில் சரியான நேரத்துக்கு வந்ததா.. தாமதமா? கவலைப்பட வேண்டாம் . சரி செய்துகொள்ளலாம்.. இப்படி…

இருட்டு கடுமையாகி அவர்கள் மீது பரவியது. சிறிது நேரத்தில் வெளிச்சம் வந்துவிடும். இறைச்சிக் கடையில் கறிவாங்கக் கூட்டம் கூடிவிடும். அவன் தூங்க முயற்சித்தான்.

அந்தப் பெண்மணி எழுந்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து தலையை வாரிக் கொண்டாள். நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சக்ரா எழுந்து கொள்வதற்கு முன்னால் மார்க்கெட்டுக்குப் போகவேண்டும். ரயில் வரும்போது சக்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லா கம்பார்ட்மெண்டுகளுக்கும் போவதை இன்று ஆரம்பிக்க வேண்டும். நொண்டியும், குருடனும் சேர்ந்து பிச்சையெடுப்பதைப் பார்த்து ஜனங்கள் காசு தருவார்கள். கடவுளருளால் காசு அதிகமாகக் கிடைக்கும்.

சக்ரா எழுந்தபோது அந்தப் பெண்மணி அங்கில்லை. அவள் மூட்டை மட்டுமிருந்தது. அவள் எங்கே போயிருப்பாள்? அவள் எப்போதும் தாமதமாகத்தான் எழுந்திருப்பாள். அந்தக் கூலி இழுத்துக் கொண்டு போய்விட்டானோ? ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு தடவை அவளை அடித்த போலீஸ்காரனைப் பார்த்து பயந்து ஓடி விட்டாளோ? ஆனால் எதற்கு அவள் மூட்டையை  இங்கே வைக்க வேண்டும்? என்ன திட்டம் ?

“அவள் ஓடிப் போயிருக்க வேண்டும்” பரத் சொன்னான். ஒரு வேசியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஒரு முறை தவறு செய்தவர்கள் தவறு செய்பவர்கள்தான்.

“இங்கே பார்! பரத். அவள் என் கூட  இருக்க வேண்டுமென்று எந்தச் சட்டமுமில்லை. அவள் இங்கிருந்து போக விரும்பினால் அது அவள் விருப்பம். நீ ஏன் அவள் மீது இவ்வளவு கோபப்படுகிறாய்?அவளுடன் நான் இருக்க விரும்பியதும் சேர்ந்து பிச்சை எடுக்க நினைத்ததும் உண்மைதான். சில கனவுகள் கனவுகளாகத்தானிருக்கும். போகட்டும். பரவாயில்லை. கொனார்க் எக்ஸ்பிரஸ் வரும் நேரமாகி விட்டதே? வா, போகலாம்.”

அன்றுகாலை சக்ரா எந்த ரயிலையும் தவறவிடவில்லை. அவன் பிச்சை எடுக்கப் போனாலும் அந்தப் பெண்மணியின் நினைவு வந்து கொண்டே இருந்தது. அவள் ஏன் அப்படிப் போனாள்? ஏன் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் போனாள்? அவனோடு தங்கும்படி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப் பட்டாள். இரவில் வந்து விடுவாளா? அவனருகே படுப்பாளா? அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் அவனுக்கு. போவதற்கு முன்னால் ஏன் அவனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை? ஒரு வார்த்தை மட்டும் அவனுக்குப் போதுமே.

சாயங்காலம் பரத் தான் அந்த விஷயத்தைச் சொன்னான்.

“உனக்குத் தெரியுமா சக்ரா? அந்தப் பெண்மணி இன்று காலை தன் இரண்டு கால்களையும் இழந்து விட்டாளாம். மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது சிக்னல் அருகே, அவள் மேல் ஒரு ரயில் ஏறிவிட்டதாம். கையில் ஒரு புதிய பாத்திரம் வைத்திருந்தாளாம். அது நொறுங்கிக் கிடந்ததாம். தன் புடவையில் முடிச்சாக வைத்திருந்த அரிசி அப்படியே இருந்ததாம். நெற்றியில் குங்குமம் அப்படியே இருந்ததாம். அவளைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்”.

“ரயில் ஏறிவிட்டதா?” சக்ரா அதிர்ந்தான். இரண்டு கால்களும் போய் விட்டதா? அவன் இப்போது எங்கே போவான்? எந்தத் திசையில்?அவன் நின்று கொண்டிருந்த தரையைக் குச்சியால் சுழட்டியடித்தான். அவன் குச்சி குட்டையாக இருப்பது போலத் தோன்றியது. ”பரத்! என்னை அந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறாயா? நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன்”.

“அந்த விபத்தைப் பார்த்த சில புத்திசாலியான போலீஸ்காரர்கள் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய்விட்டனர்.” சொல்லி விட்டு அவன் சக்ராவைத் திரும்பிப் பார்த்தான். “ஐயோ! உன் வலது கண்ணிலிருந்து ரத்தம் வருகிறது,” கத்தினான்.

“கவலைப்படாதே பரத்! என் கண்ணைப் பற்றிக் கவலைப்படாதே. நான் யுதிஷ்டிரனில்லை. என் கண்ணிலிருந்து விழும் ஒரு சொட்டு ரத்தம் பூமியை பன்னிரண்டாண்டுகளுக்கு தரிசாக்கிவிடாது. என்னைப் போன்ற ஓராயிரம் குருடர்களின் ரத்தம் ஆறாக ஓடினாலும் ஒன்றுமே நடக்காது. கொஞ்சம் என்னைத் தனியாக இருக்கவிடுகிறாயா? நீ உன் இடத்திற்குப் போ. சிறிது நேரம் நான்  நானாக இருக்க விரும்புகிறேன்.”

———————————————-

நன்றி : Contemporary Indian Short Stories Series II,  Sahitya Akademi

 

 

பரிசு சிறுகதை : டோக்ரி மொழி [Dogri] மூலம் : பி.பி.சாத்தே [B.P.Sathe] ஆங்கிலம் : சிவ்நாத் [Shivnath] தமிழில் : தி. இரா.மீனா

தி இரா மீனா 

ரஹிம் அண்ணி புதுப் பெண்ணாக கிராமத்திற்கு வந்தபோது எங்கள் வீட்டுப் பெண்கள் அவளைப் பார்க்கப் போனார்கள். புதுப் பெண்ணின் முகத்தைப் பார்க்க ஒவ்வொருவரும் ஒரு பொருளை பரிசாக எடுத்துப் போக வேண்டும். என் அம்மா அவளுக்கு ஒரு ஜோடி வளையல்களைத் தந்தாள்.என் அத்தை காலுக்குக் கொலுசு கொடுத்தார். என் மூத்த அண்ணி அவளுக்கு சிறிய மெட்டி தந்தார். அவர்கள் வீடு திரும்பிய பிறகு ரஹிம் அண்ணியின் அழகைப் புகழ்ந்து தள்ளினார்கள். சிறியவர்களான எங்களுக்குக் கூட அவளைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை எழுமளவிற்கு.

“என்ன அழகான பெண்! செதுக்கப்பட்ட பளிங்குச் சிலை போல இருக்கிறாள்.” அம்மா சொன்னாள்.

“என்ன கண்கள் ! மின்னிப் பளபளக்கும் கருமையான கண்கள் ! பெண் மிகவும் உயரமும் கூட.” அத்தை சேர்ந்து கொண்டாள்.

“அவள் நிறமாக இருக்கிறாள்; முகம் முழுவதும் புள்ளிகள். அப்படியிருக்கும் போது, ஒரு பெண் உட்கார்ந்திருக்கும் போது அவள் நொண்டியா அல்லது வேறு எதுவும் குறை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும?” என் அண்ணி சிறிது கடுப்பாகச் சொன்னார்.

“அவள் ஊனம் என்று யார் சொன்னது ?வீட்டின் உள்ளேயிருந்து வரும்போது அவள் மிக இயல்பாகத்தான் நடந்து வந்தாள்” அம்மா பதில் சொன்னாள்.

“முகத்திலுள்ள கரும் சிவப்புப்புள்ளிகள் அவளுடைய சிவந்த முகத்திற்கு இன்னும் அழகு தருகிறது.” அத்தை சேர்த்துச் சொன்னாள்.

“அது கிரேக்க அழகு .ஓர் அரண்மனையின் அலங்காரம். யாரைப் பற்றிப் பேசுகிறீர்கள்?” என்று எங்கிருந்தோ அந்த இடத்திற்கு வந்த என் மூத்த அண்ணன் அந்த வாக்கியத்தை முடித்தான்.

“அந்த சலவைத் தொழிலாளி தன் புது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். நாங்கள் இலாம்தீனின் மனைவியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். பரிசுகளைக் கொடுக்க நாங்கள் அவர் வீட்டிற்குப் போயிருந்தோம்.விளக்கைப் போல அந்தப் பெண் மிக அழகாக இருக்கிறாள்.” அம்மா விளக்கினாள்.

என் மூத்த அண்ணிக்குக் கண்கள் மிக அழகானவை. ஆனால் அவளுடைய நிறம் சிறிது கருமை கலந்தது. உயரம் குறைவு. தன் வெறுப்பை அடக்கிக் கொண்டு “அவள் ஓர் அந்தணப் பெண்ணோ அல்லது ராஜ்புத் பெண்ணோ இல்லை, ஒரு சாதாரணமான சலவைத் தொழிலாளியின் மனைவி.” என்றாள்.

“ஆமாம்,அவள் சலவைத் தொழிலாளியின் மனைவிதான், ஆனால் சாதாரண குலத்தில் அழகிருக்க முடியாதா ?” என் அத்தை உடனடியாக வெடித்தாள்.

“உங்கள் மகனுக்கு அவள் தங்கையைத் திருமணம் செய்து வையுங்கள்,” உள்ளே போனபடி அண்ணி பதிலடி கொடுத்தாள்.அது என்அண்ணனுக்குக் குறிப்பாகச் சொல்லப்பட்ட வார்த்தைதான். என்றாலும் அவளுக்கு ’ கிரேக்க அழகு” என்பதன் அர்த்தம் புரியவில்லை.

ஹம்தீனின் அம்மாவும் எங்கள் அத்தைதான் ,ஆனால் எங்கள் சொந்த அத்தையிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாங்கள் அவளை ’துணி வெளுக்கும் அத்தை’ என்போம்.சில சமயங்களில் இரண்டு அத்தைகளும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும் போது, நாங்கள் ’அத்தை ’ என்று கூப்பிட இருவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்ப்பது வேடிக்கையாக இருக்கும் . அதைப் பார்த்து நாங்கள் குதித்துக் கும்மாளமிடுவோம்.

ஜம்முவிலிருந்து திரும்பும் வழியில் என் அப்பா சரினாசாரிலிருந்துமெதப்தீனை அழைத்து வந்தார். அவருக்குத் தங்குமிடம் கிடைப்பதில் சில தொல்லைகள் இருந்ததால் அப்பா அவரை ராம் நகருக்கு வர வைத்தார். அவருக்குக் கொஞ்சம் நிலமும், இருக்க வீடும் கொடுத்தார். துறை முகத்தில் அவருக்கு வேலையும் கிடைத்தது. அவருடைய மகன்களும் சலவை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவர் மூத்த மகன் குலாப்தீனுக்கு அந்த வேலை தரப்பட்டது.இளைய மகன் இலாம்தீன் சலவை செய்யும் வேலையையே செய்தார். குலாப்தீனின் மகன் சாம்சுவுக்கும் ,எனக்கும் ஒரே வயதுதான். இலாம்தீன் சலவை செய்த துணிகளைக் கொண்டு வரும் போது சாம்சு என் துணிகளைத் தூக்கி வருவான். சாம்சுவின் தாத்தா ஓரிடத்தில் சும்மாஉட்கார மாட்டார்; அரிசி,கோதுமை ஆகியவறை விவசாயம் செய்து வந்தார். நானும் , சாம்சுவும் மெதாப்தீன் வயலுக்குள் போய், பட்டாணிபறித்துத் திருட்டுத்தனமாகச் சாப்பிட்டு மகிழ்வோம்.

இரண்டு,மூன்று நாட்கள் புதுப்பெண்ணிற்கு மவுசு இருந்தது.பிறகு அவள் வீட்டு வேலைகளில் சேர்ந்து கொள்ள வேண்டியதாகி விட்டது. சலவை செய்யும் பெண்மணியும்,அத்தையும் தங்கள்மருமகளை நீரிறைக்க ஊர்க் கிணற்றுக்கு அழைத்துப் போனார்கள். மருமகள் தன் கழுத்து வரை முகத்திரையணிந்திருந்தாள். தலையில்ஒரு குடமும், இடுப்பில் ஒன்றும். பச்சை நிறத்தில் வெள்ளி எம்பிராய்டரி நூலால் பின்னப்பட்ட காலணியும் அணிந்திருந்தாள். மாமியாருக்குப் பின்னால் அவள் நடந்த போது மாமியாரை விட ஒன்றரை இன்ச் அதிக உயரமாக இருந்தாள்.

கிணறு எங்கள் வீட்டருகிலிருந்தது. தொலைவிலிருந்தும்,பக்கத்திலிருந்தும் ஜனங்கள் அங்கு வந்து பாத்திரங்களில் நீர் நிரப்பிக்கொண்டு போவார்கள். நீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மாமியார் மருமகளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.என் தாயையும்,அத்தையையும், அண்ணியையும் நமஸ்கரிக்கச் சொன்னார்.எங்கள் வீட்டுப் பெண்கள் அவளை, “உன் கணவரும் நீயும் நீண்ட காலம் வாழ வேண்டும் “ என்று ஆசீர்வதித்தனர். பிறகு அவர்கள் நீர் நிரப்பிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குப் போனார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் எங்கள் வீட்டில் இன்னொரு சலசலப்பு ஏற்படக்காரணமானார்கள்.

“அந்தப் பெண்ணின் நடை மயில் நடனமாடுவது போல இருக்கிறது.”

வயதான அம்மாவும் ,அத்தையும் பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும், கண்டிக்க வேண்டியதைக் கண்டிக்கவும் செய்கிற மனப்பான்மை உடையவர்கள். ஆனால் என் அண்ணி இளமையானவர்,யாரையும் பாராட்டுவதைப் பொறுக்க மாட்டார். “மயில் கருப்பாக இருக்கும்.இவள் வெள்ளையாக இருக்கிறாள். அதனால் வெள்ளைவாத்து நடனமாடியது போல என்று சொல்வது சரியாக இருக்கும்” என்றாள்.

“மயில் வெள்ளையாக இருக்கிறது என்று சொல்வதால் நாம் எதை இழக்கப் போகிறோம்?” என்றாள் அத்தை வெடுக்கென்று.

அண்ணி அமைதியானாள் — உடனடியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது அந்த விவாதத்தை அவள் மேலே வளர்க்க விரும்பவில்லை.

அடுத்த நாள் தண்ணீர் இறைக்கப் போவதற்கு முன்னால் மீண்டும் அவர்களிருவரும் எங்கள் வீட்டிற்கு வந்து, சிறிது நேரம் பேசி விட்டுப் போனார்கள். மருமகளின் வீடு சரினாசாரில் எங்கேயிருக்கிறதென்று எங்கள் வீட்டினர் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

“இவர்கள்தான் சின்ன அத்தை சாச்சி, இவர் பெரிய அத்தை,தாய், என் மகன்கள் அவர்களை அப்படித்தான் கூப்பிடுவார்கள்; நீயும் அப்படிக் கூப்பிடு. இவர்கள் அண்ணி [பாபி], மூத்த மகனின் மனைவி. அவர்களின் கணவரும், குலாபுதீனும் ஒன்றாகப் பள்ளிக்குப் போனவர்கள். நான் பெயர் சொல்லிதான் அவர்களைக் கூப்பிடுவேன் ஆனால் நீ அண்ணி என்றே கூப்பிட வேண்டும் “ என்று மாமியார் சொன்னாள்.

“நாங்கள் சரினாசாரில் கடைகள் இருக்கும் பகுதிக்குத் தெற்கில் வசிக்கிறோம்” மருமகள் சரினாசாரில் தன் வீடு இருக்குமிடத்தை விளக்கிக் கொண்டிருந்தாள்.

இன்னும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு அவர்கள் போய்விட்டனர். மீண்டும் எங்கள் வீட்டில் விவாதம்.

“எவ்வளவு அழகாகப் பேசுகிறாள், குயில் கூவுவதைப் போல.”

“என்னைப் பற்றியும் இது போலத்தான் முன்பு சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.” அண்ணி சொன்னாள்.

“நீ யாருக்கும் குறைந்தவளில்லை. உன் குரலும் இனிமையானது தான்.”

சரயு அண்ணி மகிழ்ச்சியடைந்தாள், பழைய நாட்களின் வெறுப்பை அவள் மறந்து விட்டாள்.

பிறகு சில நாட்களில் மருமகளோடு வருவதை மாமியார் நிறுத்திக் கொண்டாள். வீட்டின் பிற வேலைகளில் மூழ்கிப் போயிருக்கவேண்டும். ரஹிம் அண்ணி காலையில் இரண்டு தடவையும் ,மாலையில் ஒரு தடவையும் தண்ணீர் எடுக்க வருவாள். பள்ளிக்குப் போகும் வழியில் நாங்கள் அவளைப் பார்ப்போம். ஒரு நாள் மற்ற பையன்கள் சிறிது தூரம் போய் விட நான் நின்றேன். ரஹிம் அண்ணி வரும் வழிக்கு எதிர் பக்கத்தில். வழக்கம் போல அவள் முகம் கழுத்து வரை மூடியிருந்தது.

“ரஹிம் அண்ணி ,உங்கள் முகத்தை எனக்குக் காட்ட வேண்டும், நான் மிகச் சின்ன பையன்தானே ?” சிறிது தயக்கமாக நான் சொன்னேன்.

“பாவ்ஜி, நீங்கள் என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால், எனக்குப் பரிசு தரவேண்டும்.” அவள் நடந்து கொண்டே பேசினாள்.

நாங்கள் எதிரெதிர் திசைகளில் சிறிது இடைவெளியில் நடந்து கொண்டிருந்ததால் என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அடுத்த நாளும் அது போலவே நான் மற்றவர்களிடமிருந்து பின்தங்கி நின்றேன்; அவள் வந்த போது “ரஹிம் அண்ணி, உங்களுக்குப் பரிசு தானே வேண்டும், நான் அம்மாவிடமிருந்து வாங்கி வருகிறேன்.”என்றேன்.

“இல்லை, இல்லை, அம்மாவிடமிருந்து வேண்டாம். உங்கள்சொந்த சம்பாத்தியத்திலிருந்து எனக்குப் பரிசு கொடுத்தால்தான் என்முகத்தைக் காட்டுவேன். அதுவரை, நான் திரையை விலக்க மாட்டேன்.” என்று பதில் சொன்னாள்.

ரஹிம் அண்ணி அவள் சொன்னதில் உறுதியாக இருந்தாள். பல ஆண்டுகளாக திரை அணிந்திருந்தாள். எட்டாவது வகுப்பு முடித்த பிறகு,மேலே படிக்க நான் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் போய் விட்டேன். அதன் பிறகு ஒன்றரை வருடத்திற்கு நான் கிராமத்திற்குப் போக முடியவில்லை. எனக்கு இப்போது பதினைந்து வயது, நான் ஒன்பதாம்வகுப்பில் பெயிலாகி விட்டேன். விடுமுறையில் நான் கிராமத்திற்குப் போன போது ரஹிம் அண்ணியைப் பார்த்தேன். “பாவ்ஜி, என்ன வகுப்பில் படிக்கிறீர்கள் ?” என்று கேட்டாள்.

“ஒன்பதாம் வகுப்பு.”

“போன வருஷமும் ஒன்பதாவதில் தானே இருந்தீர்கள்?”

எனக்குப் பேச்சே வரவில்லை. அவள் முன்னால் நிற்க முடியாமல் “ஆமாம்,ஆமாம்.” என்று சொல்லி விட்டு நகர்ந்தேன்.

இரண்டாவது முறையும் ஒன்பதாவதில் பெயிலானதால் அந்த வருடமும் நான் ஊருக்குப் போகவில்லை. பத்தாம் வகுப்பு போன பிறகுதான் வீட்டிற்குப் போனேன். ரஹிம் அண்ணியை அப்போது பார்க்க நேர்ந்த போது “நீங்கள் இப்போது கல்லூரியில் படிக்கிறீர்கள் அல்லவா ?” என்று கேட்டாள்.

“இல்லை, அண்ணி, நான் இப்போது பத்தாவதிலிருக்கிறேன். இந்த தடவை நான் பாஸான பிறகு எனக்கு வேலை கிடைக்கும். என் முதல் சம்பளத்தில் நான் உங்கள் பரிசுக்கு ஏற்பாடு செய்வேன்.”

“இல்லை, பாவ்ஜி, உங்கள் முதல் மாதச் சம்பளத்தை அம்மாவிற்குக் கொடுத்து நமஸ்கரியுங்கள். அவர்கள் தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்வதால், பூஜைக்கு வேண்டிய சாமான்களை வாங்க வேண்டியிருக்கும். நான் என் பரிசிற்காக ஒரு வருடம் காத்திருப்பேன்.”

“ரஹிம் அண்ணி, என் சொந்த அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஇவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குத் தெரியவேயில்லை.”

“பாவ்ஜி, காத்திருந்து ஒன்றைப் பெற நினைக்கும் போது, அந்த விருப்பம் ஆழமாக வளரும். இளமையின் ஆரம்ப நாட்களில் இருக்கும் உங்களுக்கு ஒரு முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு விட்டால் அது மறையாது. விருப்பம் நிறைவேற வேண்டுமெனில், தேடிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இன்னும் மிகச் சிறிய பையன்தான்.இந்த வயதில் பல திருப்பங்கள் வாழ்க்கையில் ஏற்படலாம், பல விருப்பங்கள் நம்மை விட்டும் போகலாம். ஆனால் உங்களுக்கு ஒருவிருப்பம், என் முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஏன் அதை முடித்து விட நினைக்கிறீர்கள்?அது பக்குவப்படட்டும், உறுதியாகட்டும், அப்போது அது உடையாது.”

இந்த நிமிடம் வரை ரஹிம் அண்ணியின் முகத்தைப் பார்ப்பதுஒரு சின்ன வேடிக்கை, ஒரு வெறும் பொழுதுபோக்கு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அவள் முகத்தைப் பார்ப்பது என்பது வேறு ஒரு வடிவம் எடுத்திருக்கிறது. என் சொந்த சம்பாத்தியத்திலிருந்து பரிசு வாங்கி அவளுக்குக் கொடுப்பதென முடிவு செய்தேன்.

விதியின் தீர்மானம் வேறாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேறியபிறகு கல்லூரியில் சேர்ந்தேன். மூன்றாண்டுகளில் சம்பாதிக்க என்று எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. படிப்பை முடித்தவுடன் குடும்ப நிலங்களை பார்த்துக் கொள்ள வேறு யாருமில்லாததால் கிராமத்திற்குத்திரும்ப வேண்டியதாகி விட்டது. என் அப்பா இறந்து போனார். என்படிப்புச் செலவுகளை மற்றவர்கள் கவனித்துக் கொண்டனர். சிறிது காலத்தில் எனக்குத் திருமணமுமாகி விட்டது. ஆனால் ரஹிம் அண்ணி திரையை விலக்கவேயில்லை. என்னால் அவளுக்கு பரிசு கொடுக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் “பாவ்ஜி, பரிசு கிடைக்காமல் நான் என் முகத்திரையை விலக்க மாட்டேன்.” என்று சொன்னாள்.

ரஹிம் அண்ணியின் பேரழகை எல்லோரும் பாராட்டினார்கள்.வெள்ளைக்காரப் பெண் போல நிறம் ,தோற்றமும், வடிவமும் கவர்ச்சி ஆனவை. என் மனைவிக்கு ரஹிம் அண்ணியின் மேல் பொறாமை. அவளுடைய காலணிகள் இன்னமும் வெள்ளி நூல் எம்பிராய்டரி அழகோடு, இருக்கின்றன, ரஹிம் அண்ணியின் காலணியில் அந்த வெள்ளி எம்பிராய்டரி நூல் கிழிந்து போய் விட்டது.அதற்குப் பிறகு அவள் அணிந்தது சிவப்புக்காலணி, இப்போது தோல் காலணி என்று சில வருடங்கள் கழிந்து விட்டன. ஆனால் அவளது நிறம், முக அழகு ஆகியவை அழகான எம்பிராய்டரி காலணியாய்த் தங்கி விட்டன.

“உங்களிடம் ரஹிமு தன் நீண்ட முகத்திரையை மறைத்துக் கொண்டே பேசுவது ஏன் ? “ என்று என் மனைவி ஒருநாள் கேட்டாள்.

“என்னிடமிருந்து பரிசு கிடைத்த பின்புதான், ரஹிமு அண்ணி தன் திரையை விலக்குவாள். சரயு அண்ணி என்னிடம் எப்படிப் பேசுவாளோ அப்படித்தான் அவளும் என்னிடம் பேசுகிறாள்.”

“சரயு அண்ணி, உங்கள் சொந்த அண்ணி, ஆனால் ரஹிமு இஸ்லாமிய இனத்தவள். அவளுக்கு உங்களோடு என்ன உறவு ?”

“கடவுளர் பெயர் வேறு என்பதாலே சகோதரர்கள் உறவு முறிந்து விடாது. இலாம்தீன் என் சொந்த மூத்த அண்ணனைப் போலத்தான்.”

“நீங்கள் அப்படிச் சொல்லலாம், ஆனால் ஜனங்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.”

“போகட்டும், மற்றவர்கள் சொல்வதை நான் பின்பற்ற மாட்டேன். நான் சொல்வதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவேன்.”

“ஜனங்கள் எதைப் பின்பற்றுகிறார்களோ அதைத்தான் உலகம்பின்பற்றும்.”

“ஆனால் ஜனங்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறாயா?” அவளிடம் இதற்கு பதிலில்லை.

ரம்ஜான் மாதம் வந்துவிட்டது. இசுலாமியர் தங்கள் நோன்பைத் தொடங்கி விட்டனர். “ ரஹிம் அண்ணி, நீங்கள் விரதம் இருப்பதில்லையா?” நான் கேட்டேன்.

“என்னால் நீண்ட நாட்கள் விரதமிருக்க முடியாது. நான் ஒரு நாள்தான் விரதமிருப்பேன். எனக்குப் பசி வந்துவிடும். வெறும் ரொட்டி சாப்பிட்டால் கூட எனக்குப் போதும், ஆனால் சாப்பிடாமலிருக்க முடியாது.”

“எந்த நாளில் விரதமிருப்பீர்கள்?”

“நான் என்று நீர் இறைக்க வரவில்லையோ, அன்று விரதம்
இருப்பேன்.”

“விரதத்தை முடிக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்கு இனிப்பு வாங்கி வருகிறேன்.”

“இல்லை,இல்லை, என் விரதத்தை முடிக்க நீங்கள் இனிப்பு வாங்கித் தருவது சரியல்ல. யார் வாங்கி வரவேண்டுமோ அவர்தான் இனிப்பு வாங்கித் தர வேண்டும்.”

“பிறகு நான் என்ன வாங்கித் தந்தால் பொருத்தமாக இருக்கும் ?”

“பரிசு வாங்கித் தருவது தான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். எனக்கு அது கிடைக்கும் போது, நான் பெருவிழா நிலாவைப்பார்ப்பேன்.”

“சரி. நீங்கள் பெருவிழா நிலவைப் பாருங்கள். என்னைப் பொறுத்த வரை ,உங்களின் கிரகணத் திரையால் பௌர்ணமி நிலவு பல ஆண்டுகளாக உறையிடப்பட்டிருக்கிறது. “

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரஹிம் அண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். சாம்சுதான் நீர் இறைக்க வருவான், நான் அவனிடம் அண்ணியின் உடல்நிலை பற்றி விசாரிப்பேன். அவள் உடல்நலம் சீர்கேடு அடைந்து வருவதாகக் கேள்விப்பட்டேன். காய்ச்சல் டைபாய்டாகி,பின் நிமோனியா ஆனது. நிலைமை மோசமாகவைத்தியர் கைவிரித்து விட்டார். ஆங்கில மருத்துவரும் நம்பிக்கை இல்லையென்று சொல்லி விட்டார்.

ஒருநாள் காலை சாம்சு எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தான்,”நேற்று இரவிலிருந்து அத்தை நிலை மிக மோசமாகி விட்டது. பார்ப்பவர்களிடம் எல்லாம் பாவ்ஜியைக் கூப்பிடுமாறு சொல்கிறார். நான் அழைத்து வருகிறேன் என்று புறப்பட்ட போது “ நான் போகிறேன். கடைசித் தடவையாக அவர் வந்து என்னிடம் தன் முகத்தைக் காண்பிக்க வேண்டும்
என்று பாவ்ஜியிடம் சொல்” என்றாள்.

உடனடியாக நான் சாம்சுவுடன் கிளம்பினேன். ரஹிம் அண்ணி கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தாள். முகம் திரையின்றி இருந்தது. அழகான பிரேமில், மிக அழகானமுகம், கருப்பு விழிகள், கன்னங்களில் பரவியிருந்த கரும் சிவப்புப் புள்ளிகள் கிரேக்க சிலைகளில் ஒன்றை நினைவூட்டியது. மெதுவாக அவள் பார்வையை என் மீது திருப்பினாள்.

பிறகு மெல்லிய குரலில் ,”பாவ்ஜி, பரிசு பெறுவதற்காக என் திரையை இன்று விலக்கியிருக்கிறேன். நீங்கள் என் முகத்தைப் பார்க்கலாம், உங்கள் முகத்தைப் பார்ப்பதற்காக மட்டும் என் வாழ்க்கை என் கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் மயானத்திற்கு வர வேண்டும்.உங்கள் பரிசாக ஒரு கைப்பிடியளவு மண்ணை என்முகத்திலிட வேண்டும். இல்லையெனில் ,உங்கள் பரிசை யாசித்து கொண்டே என் புதைகுழிக்குச் செல்வேன்…”
—————————–

நன்றி : Contemporary Indian Short Stories Series III, Sahitya Akademi
Short Story Heading Masahni – B. P .Sathe

 

 

 

 

 

 

 

விசித்திரம்- கன்னடமொழி சிறுகதை மூலம் : யு.ஆர்.அனந்தமூர்த்தி ஆங்கிலம்: தீபா கணேஷ் தமிழில் : தி. இரா.மீனா

தி இரா மீனா

ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன்தான் அவள் இங்கு வந்திருக்கிறாள். காரை நிறுத்த முயன்றபோது அவள் பார்த்த காட்சிகள் : வைக்கோல் மூடிய குடிசை, அதன் முன்னாலி்ருக்கும் தற்காலிகக் கடை, கடையில் உள்ள குண்டு பெண்மணி, அவள் மடியில் ஒரு குழந்தை, இரண்டு குலை வாழைப்பழங்கள், பீடி பற்ற வைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர். ஏரியில் படர்ந்திருக்கும் பச்சை இலைச் செடி.

அங்கிருக்கும் சிறுகுன்றின் வலது புறத்திலிருந்த சாலை தெளிவாகத் தெரிய, விளக்கு வெளிச்சத்தோடு வந்த ஒரு கார் கணத்தில் கண்ணிலிருந்து மறைந்து விட்டது. பௌர்ணமியின் போது கூவுமே, கீச்சென்று ஒலிக்குமே! அது என்ன பட்சி? ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இப்படியே நான் உட்கார்ந்திருந்தால், என்னால் பார்க்க முடியும், கேட்க முடியும். விரைவில் விடியல் வர என்னைப் பார்த்து சூரியன் எழுந்து விடுவான். நான் இறந்து விட்டால், இவை எதுவுமில்லை.

இதற்கு பின்னாலுள்ள புதரில் கார நெடியுடைய இலைகள் இருக்கின்றன. அதற்குப் பின்னால் யாரோ உட்கார்ந்திருக்க வேண்டும். அவர் சீக்கிரமாக வர மாட்டார். ஓர் ஆணாக இருக்க வேண்டும். அல்லது என்னைப் போல நவீனமான பெண்ணாக இருக்கலாம். நான் முடித்ததற்குப் பின்னால் அந்த ஆள் வந்திருந்தால், எனக்கு காலடிச் சத்தம் கேட்டிருக்கும். இப்போது அந்தப் பக்கத்திலிருந்து சிகரெட் புகை நெடி.

தலைமுடி முதுகில் விரிந்திருக்கும்படியாக அவள் தளர்வாகக் கட்டியிருந்தாள். தண்ணீரில் மூழ்கி இறக்கும்போது பிணத்தின் முகம் வீங்கி விடும். அவள் சிறுமியாக இருந்தபோது எல்லோரையும் கவர்ந்த இடது கன்ன மச்சம் முகவீக்கத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும். உடல் மேலிருந்து கீழாக மிதக்கும்; அவளுடைய கருமையான தலைமுடி தண்ணீரின் மேல் படரும். அனாதை கால்நடையின் அசை போடும் தொலை பார்வையைப் போல அவள் கண்கள் ஒன்றுமில்லாததை வெறித்திருக்கும். நிர்வாணம்–ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அதைச் சொல்வது எளிதல்ல.

அந்த உறுதியான கணத்தை ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை; அப்படி ஒன்று இருந்ததாக நினைவு; அது நித்திய நிலையாகவும் தெரிந்தது. மனைவியின் கன்னத்தில் கணவன் அறைவது பெரிய விஷயமில்லை; காதலிக்கும் ஒருவரை அடித்து கூட விடலாம். செத்துப் போ, செத்துப் போ செத்துப் போ—அவன் அந்நியமான தொனியில் சொன்னான். அந்தச் சத்தம் அவளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்ததைப் போலிருந்தது. அவன் கண்கள் கொலை வெறியோடு உற்றுப் பார்த்தன.அந்தக் கத்தலுக்குப் பிறகு அவன் தளர்ந்து சரிந்தான். அவன் முகம் பிணம் போல வெளிறிக் கிடந்தது. காதுகளைச் சம்மட்டியால் அடித்தது போலானான். அவன் மீசை, வில் புருவங்கள், இன்னமும் பெண்களைக் கவரும் அழகான முடி ஆகியவை உல்லாசமானவனாகக் காட்டின. அவனிடமிருந்து சிரிப்பு எழுந்து மறைந்தது. மகன்? ஊட்டியில் படிக்கிறான். முன்னாள் டென்னிஸ் சாம்பியனான தந்தையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் எப்படியோ வளர்ந்து விடுவான். மெதுவாக எல்லாவற்றையும் மறந்து விடுவான்.

இவற்றிற்கெல்லாம் காரணம்? கண்டுபிடிக்க முடியவில்லை.

யாருடைய தவறு? அவன்தானே என்னைக் காதலித்தான்? தன் தந்தையோடு சண்டை போட்டு என்னைத் திருமணம் செய்து கொண்டான். தனது சொத்தில் பாதியை விற்று என்னை அமெரிக்காவிற்கு அழைத்துப் போய் நாடகக் கல்லூரியில் படிக்க வைத்தான். யார் முதலில் தவறு செய்தது? அது குறித்து நாங்கள் நூறு தடவை சண்டை போட்டுக் கொண்டாகிவிட்டது.

அந்தத் தவறுகள் எங்களை பதினைந்து வருடம் பின்னிப் பிணைய வைத்திருந்தது. இப்போதும் கூட நான் இல்லாதபோது அவன் எப்படி மனம் விட்டுச் சிரிக்கிறான். அவனுடைய ஆரோக்கியமான பற்கள் கருப்பு மீசையின் பின்புலத்தில் ஒளிரும். பெண்கள், எங்கள் இருவரையும் அறிந்தவர்கள் என்னை மட்டுமே பொறுப்பாக்கினர்கள். வெறுப்பும் கூட காதலைப் போல களங்கமற்ற உணர்ச்சிதான் என்பது அவளுக்கு ஆச்சர்யம் தருவதாக இருந்தது.

அவள் தன் முடியைத் தொங்கவிட்டாள். அவள் கண்கள் நிலவொளியில் மிளிர்ந்தன; அவைகளைச் சுற்றிக் கோடுகளிருந்தன. அவளுக்கு முப்பத்தி ஐந்து வயது. இன்னும் இளமையாகத்தானிருந்தாள்.

கடந்த இரண்டு வருடங்களாக அவர்களிடையே எதுவுமில்லை. இந்த வெறுப்பின் கொடூரத்தில் அவள் உடல் வேறுவிதமான பொலிவு பெற்றது. அவள் மற்றவர்களால் பார்க்கப்பட்டாள். அதை அவள் அழுத்தமாகவும் சொன்னாள். அது ஒருவிதமான கர்வத்தையும் அவளுக்குத் தந்தது. அதனால் அவனுக்கு அவளைக் கொல்லவேண்டும் போலிருந்தது என்பது கூட ஞாபகத்தில் வந்தது.

புதரின் பின்னாலிருந்த மனிதன் அணைக்காமல் சிகரெட்டைத் தூக்கிப் போட்டான். அத்துண்டு நிலவொளியில் இன்னமும் ஒளிர்ந்தது.

அவள் தன் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். ஆனால் அவளிடம் நெருப்புப் பெட்டியில்லை.

தூங்கும் பறவைகளைப் போல அவள் கைகள் மடியின் மீது இன்னமும் இருந்தன. அந்த மனிதனிடம் நெருப்புப் பெட்டி கேட்கலாமா? செத்துப் போவது அர்த்தமற்றது என்று திடீரென அவள் நினைத்தாள். இது புதிய உணர்வில்லை, ஆனால் அவள் எப்போதும் உணர்வதுதான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். இன்னொரு கார் மேலே போகிறது. பறவை கூவுகிறது. ஏரியின் தண்ணீர் நிலவொளியில் லேசாக நடுங்குகிறது. அந்த முதியவர் பீடி பற்ற வைத்ததை நினைக்கிறாள். சிறுமியாக இருந்த போது படர்ந்திருந்த செடியின் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தது படமாக நினைவில் ஓடுகிறது. பிறப்பு, இறப்பு இரண்டும் அர்த்தமற்றது. நான் இருக்கிறேன் என்று நினைத்தால்தான் இருக்கிறேன், இல்லையா? யாரிடமாவது நெருப்புப் பெட்டி வாங்கலாமா என்று நினைத்தாள். ஆனால் அதில் அவ்வளவு வேகம் இல்லை என்பதால் தன் கைகளை மடியில் வைத்தபடி தலை குனிந்து அமைதியாக நிலவொளியில் உட்கார்ந்திருந்தாள். அவளது கருங்கூந்தல் முதுகில் பரவியிருந்தது. இடது கால் பெருவிரல் மண்ணில் அரையாகப் புதைந்திருந்த மெல்லிய கல்லைத் துழாவிக் கொண்டிருந்தது. அதன் வடிவத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தாள். அது தவறும் போது
வலது பெருவிரல் அதன் கசட்டைத் துருவி எடுத்தது.

பத்துவயதுச் சிறுமி. இரட்டைச் சடை. சிவப்பு கவுன்,சிவப்பு ஷு கறுப்பு ரிப்பன்கள் இதுதான் அவள். எல்லோரையும் கவர்ந்தாள். அவளுடைய சதைப்பற்றான மச்சமிருக்கிற கன்னத்தைக் கிள்ளுவார்கள். அது இன்னமும் நினைவிலிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. அவள் அப்போதும் கூச்சமுடையவளாக இருந்தாள்; பயமும், அவமானங்களும் இருந்தாலும் யாருடனும் அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் நடக்கிறதே நான் உண்மையானவளா, இதுதான் என்னுடைய பெயரா—அப்போதும் நிகழ்வுகள் அவளைக் குழப்பின.

நான் அப்பாவுடன் ராட்சஸ ராட்டினத்திலிருந்தேன். அவர் பட்டுக் குர்தாவும், வேட்டியும்–தன்னுடைய பண்டிகை ஆடையை அணிந்திருந்தார். சந்தனம் வைத்திருந்த பெட்டியில் இருந்ததால் குர்தா நல்ல வாசனை உடையதாக இருந்தது. முதல்முறையாக பயத்தோடும்,ஆர்வத்தோடும் நான் ராட்டினத்தில் உட்கார்ந்திருந்தேன்.அதன் சக்கரம் சுற்றத் தொடங்கியவுடன் என் பயம் மும்மடங்கானது. அது மேலே போகப்போக வேகம் அதிகமாக தான் இறப்பது போன்ற உணர்வில், அவள் அப்பாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் இறக்கி விடுங்கள் .. இறக்கி விடுங்கள்.. என்று கத்தினாள். அப்பா அதை நிறுத்தவில்லை. எதையும் செய்துவிட முடியும் என்று நான் நினைத்திருந்த அப்பாவால் அந்தச் சக்கரத்தை நிறுத்த முடியவில்லை. அப்பா சிரித்திருக்க வேண்டும். அவர் என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். குளிர்க்காற்று பட, நான் சில்லிப்பாக உணர்ந்தேன்.

கவுனை நான் ஈரப்படுத்தி விட்டால் அம்மா கத்துவாள். அப்பாவையும்தான். வயிறு வெடித்துவிடும் போல உணர்ந்தாள். கவுனை ஈரப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பயம் அவளை விட்டுப் போயிருந்தது. ஏன் இப்போது அவளுக்கு கடந்த காலம் நினைவில் வரவேண்டும்? அதுவும் இந்த வகையிலான ஒரு மனநிலையில்? அவள் உள்ளங்கைகள் ஈரமாகியிருந்தன. கடந்த சில மாதங்களாகவே அவள் தன்னை விட்டேற்றியான ஒரு மனநிலைக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்பா இப்போது மிக வயதான மனிதர். தளர்ந்து போன அவரிடம் தன்னைப் பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியைக் கேட்பது கூட அர்த்தமற்றது. வாரா வாரம் அவள் அவருக்கு எழுதும் கடிதம் வராத போது அவள் பிரிவை அவர் உணரலாம் .மும்பையிலிருக்கும் என் தங்கையின் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக நான் வாங்கிய கொலுசு மேஜையில் இருக்கிறது. பல கடிதங்களுக்கு பதில் அனுப்பவேண்டும் ; திட்டக் கமிஷனிலிருந்து வந்த அழைப்பிதழ், மரம் நடும் அமைப்பு, குதிரைப் பயண அமைப்பு –ஆனால் எல்லாம் அர்த்தமற்றவை.

***

அவன் என் சங்கடமான நிலையை உணர்ந்திருக்க வேண்டும்; என் சிகரெட்டைப் பற்ற வைத்தான். “நீங்கள் தினமும் காலையில் குதிரை சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறேன் ஆங்கில நாடகங்களில் நடிப்பதையும் பார்த்திருக்கிறேன்..” நகரத்திற்கு வெகு தொலைவில், தனியான மூலைப் பகுதியில் ஏரியருகே ஒரு பெண் இருப்பது மிகச் சாதாரணம் என்பது போல அவன் நடந்து கொண்டான். அவள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உட்கார்ந்தாள். அவள் வசதியாக உட்காரும் வகையில் அவன் சிறிது நகர்ந்து உட்கார்ந்தான். அந்த உரையாடலைத் தொடர்வதில் அவன் எந்த வேகமும் காட்டவில்லை. எந்த விவரத்தையும் எதிர்பார்க்காத, நட்பின் அமைதியான தன்மையைக் காட்டுவது போலிருந்தான். அவனுக்குத் தன்னைத் தெரிந்திருப்பது சிறிது அமைதியைத் தந்தது என்றாலும் தனது அடையாளம் தெரியப்படாத நிலை மறைந்து விட்டது வருத்தம் தந்தது.

அவன் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாதது பெரியதாகப் படவில்லை. அவள் தன்பழைய மனநிலைக்குத் திரும்ப விரும்பி, தோற்று தன்அமைதியைத் தானே உடைத்தாள்.

“ இது மிகச் சின்ன உலகம். ”

அவன் இயல்பான சிரிப்போடு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளுக்கு அமைதி தேவை என்பதை புரிந்து கொண்டவன் போல இருந்தான். தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அங்கு வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் இயல்பாகத் தன்னால் சொல்ல முடியுமென்று அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அவனிடம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எந்த மாறுதலும் வரப்போவதில்லை என்றும் தோன்றியது . அவள் சிகரெட்டைப் புகைத்தாள். பறவையொன்று கெஞ்சுவது போல அவர்களைப் பார்த்து ஒலித்தது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“திருமதி…”

அவளைப் பார்த்த அவன் , அவள் பேச விரும்பாததைப் புரிந்து கொண்டவன் போல பாதியில் பேச்சை நிறுத்திவிட்டான். அவன் ஆழமான அமைதியில் ஆழ்ந்து விடுவான் என்றும் அவன் பேசவேண்டும் என்றும் நினைத்து அவள் “ஷைலி என்று கூப்பிடுங்கள்” என்று சொன்னாள்.

அவள் காத்திருந்தாள். தன் அடர்த்தியான கூந்தலை முதுகில் பரவவிட்டு அவனைப் பார்த்துத் திரும்பி இயல்பாகச் சிரித்தாள்.ஓ.. தன் கணவனுடன் சேர்ந்து, இப்படி நிம்மதியாகச் சிரித்து பல ஆண்டுகளாகி விட்டன! அவனுடைய அமைதியான முகம் ,நிலவொளியில் ஒரு மென்மையான உணர்வை வெளிப்படுத்தியது. அவன் கண்கள் மின்னின

“ஷைலி, என் மனைவி இறந்திருக்கலாம்’ அவன் அவளிடமிருந்து பதிலை ,எந்தவித அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் குரல் வெளிப்படுத்தியது. அவள் அதிர்ந்தாள்.

“விசாரணைக்காக வரும் போலீசிடம் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆமாம். தொடக்கத்தில் எங்களிடையே இருந்த காதல் மெல்ல, மெல்ல மறைந்து விட்டது. அது யாருடைய தவறு என்று கண்டுபிடித்துச் சொல்வது அசாதாரணமானது. நாம் சொல்லக் கூட முடியாது. காதல் மறைகிறது.—அது பரஸ்பரம் காணமுடிகிற ஒன்றல்ல. அது மந்திரமான மயக்கம், சிறிது நேரத்திற்குப் பிறகு அப்படி உணர்வது நின்று விடும். பிறகு இந்த ஏரி, குன்று, இந்த வானம்.. எல்லாம் மரணித்துவிடும்.

“நீங்கள் இதை வேடிக்கையாக உணரலாம் ஷைலி —ஆனால் இந்தப் பறவை ஒலித்தபோது நான் ஆச்சர்யப் பட்டேன். நீங்களும்தான். அது மிகவும் அற்புதம் .இல்லையா? நீங்கள் உங்கள் கூந்தலைப் பிரித்து முதுகில் பரவ விட்டுச் சிரித்த போது நான் வியப்படைந்தேன்., ஏன் என் மனைவியால் இது போல் இனிமையாகச் சிரிக்க முடியாது என்று நினைத்தேன். இந்த நாட்களில், நான் ஆச்சர்யப்படுவதும் கூட நின்று விட்டது. இல்லாவிட்டால் நான் ஒரு கலைஞனாக வாழும் தைரியம் பெற்றிருப்பேன்.எனக்கு அந்த தைரியம் இருந்திருந்தால் ஒருவேளை அவள் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டாள். எங்களுக்குத் திருமணமான புதிதில் கல் போன்றிருந்த படுக்கையில்தான் படுப்போம். வறுமை.. எனக்கு ஏராளமான கனவுகளிருந்தன. ஆனால் இப்போது எதுவுமில்லை. அது போய் விட்டது. ஏன் போனது என்று எனக்குத் தெரியவில்லை. அவமானகரமான அந்த நாட்கள் போய்விட்டன. இவை எல்லாவற்றோடும், என்னுடைய , காரணமின்றிச் சந்தோஷப்படும் இயல்பும் கூடப் போய்விட்டது அதிகத் தேவை நமக்கிருக்கிறது என்று எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கும் எல்லைக்கு அவள் போய்விட்டாள்.. எதுவும் வேண்டாமென்று சொல்பவனில்லை நான்.

“நான் என் மனைவியை இன்று கொன்றிருப்பேன். எதற்குச் சண்டை போடத் தொடங்கினோம் என்பது கூட எனக்கு நினைவில்லை. பயங்கரம்.. இல்லையா? தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள். செய்து கொள் என்று சொல்லி அவளைத் தள்ளினேன். செத்துப் போ..செத்துப் போ.. நான் கத்தினேன். அவள் தன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டாள். அப்போது எனக்கு எந்தவித உணர்வும் ஏற்படாதது குறித்து அதிர்ந்தேன். அவள் ஒரு நாற்காலியின் மீதேறி மேலே கயிற்றைப் போட்டு சுருக்குவதை கதவின் ஓட்டை வழியாக நான் பார்ப்பதை அவள் பார்த்தாள். அல்லது அவள் பார்க்காமலும் இருந்திருக்கலாம்.! ஆனால் அவள் கதவு இருந்த திசையைப் பார்த்தாள். எங்களுக்கு இரு குழந்தைகள் –ஓர் ஆண்,ஒரு பெண்—அவர்கள் விளையாடிவிட்டுத் திரும்பும் போது என்ன விதமான வேதனைக்கு ஆளாவார்கள் என்று நினைத்து வெந்து போனேன்.

“அவளுக்கு அப்படித் தோன்றவில்லை என்பது ஆச்சர்யம் தந்தது. அவள் சாவு பற்றிய சிந்தனையை நான் உணர்ந்த போது என் முழு உலகமே மாறிப் போனது .நான் எழுந்து வீட்டை விட்டு வெளியேறி, நடந்து இங்கு வந்து உட்கார்ந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நடந்திருக்கிறேன். நடந்து வரும் போது நான் நானாக இல்லை, வேறு யாரோ என்பதாவும் உணர்ந்தேன்.

“இப்போது அவள் உடல் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். குழந்தைகள் அழுது கொண்டிருப்பார்கள். போலீஸ் வந்திருக்கலாம். வீட்டிற்கு முன்னால் அக்கம் பக்கத்தவர்கள் கூடியிருப்பார்கள். எதுவெனினும், வேறு யாருக்கோ இது நடந்திருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்”.

“என் திருமணத்திற்கு முன்பான கதையைக் கேளுங்கள். அவளுக்கு பதினெட்டு வயது. அவர்கள் கிராமத்தில் நான் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களது ஒரே வீடுதான் அந்தக் காட்டில். ரப்பர் செடியால் வீடு சூழப்பட்டிருந்தது. இரண்டு புறத்திலும் வரிசையாகக் குன்றுகள். நாங்கள் சுள்ளிபொறுக்கச் சேர்ந்து போவோம். கிணற்றில் தண்ணீர் இறைப்பது, காய்கறிகள் நறுக்குவது, துணிகள் துவைப்பது வரிசையாகக் காய வைப்பது என்று அவள் செய்யும் எல்லா வேலைகளிலும் ஒரு நடனப் பாங்கிருக்கும். காரணமின்றி நாங்கள் சிரித்துக் கொண்டிருப்போம். அவள் தன் தாய்க்கு உதவியாகச் சமையலறையில் இருககும்போது நான் பேச விரும்ப மாட்டேன். அவள் எனக்காக சுடுதண்ணீர் வைத்துத் தருவாள். தாய் அறியாமல் முதுகு தேய்த்து விடுவாள். இரவில் நான் எழுந்திருக்கும் போது தான் விழித்திருப்பதைக் காட்டுவாள். இரவு
நேரத்தில் சாணக் கிடங்கிற்குப் போகும்போது துணைக்கு அழைப்பாள். சிறிது நேரம் தனியாக நெருக்கமாக நின்றிருப்போம்.அவள்தான் இது எல்லாவற்றையும் செய்தாள் என்று சில சமயம் எனக்குத் தோனறும்.

“அவளுக்கு ஒரு தாத்தா இருந்தார். ரப்பர் தோட்டம் போட அவர் காட்டைச் சமப்படுத்தினார். நாங்கள் சந்திப்பதற்கு ஐந்து வருடங்கள் முன்னதாகவே அவர் இறந்து விட்டாலும் எல்லோரும் அவரைப் பற்றி தினமும் பேசிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவர் சிறிது குறும்புக்காரர். காதல் கடிதங்கள் எழுதுவதில் திறமைசாலி. அந்தப் பழக்கம் சிறுவயது தொடங்கி அவர் சாகும்வரை இருந்தது. கடிதங்கள் எழுதுவது மட்டுமின்றி, தனது ஆதாரத்திற்காக அதன் பிரதிகளையும் வைத்திருந்தார். அந்தக் கடிதங்கள் தன் காதலியைச் சந்தித்ததையும், கவனமற்ற வார்த்தைகளால் வர்ணித்ததையும் விவரிக்கும்.. காதலியின் போக்கு வித்தியாசமாக இருந்தால் கடிதத்தின் தொனியும் மாறுபடும். சில கடிதங்கள் எளிமையாக – நெஞ்சு, பூக்கள் , பட்டாம்பூச்சிகள், அழகான வெள்ளை உடையுடனான இளம்பெண் என்ற வர்ணனைகளோடு. அவள் மாடிக்கு வந்து அந்தக் கடிதங்களை படித்துக் காட்டி சிரிப்பாள். அந்தத் தாத்தாவின் மனைவிக்கு எப்போதும் எங்கள் மீது ஒரு கண். ஒரு தடவை கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது வந்துவிட்டாள் புண்ணாக இருந்த தன் முதுகை பெருமையாகக் காட்டி அது தாத்தாவின் வேலை என்றாள். நாங்களிருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். தன் கணவனின் சாகசங்கள், பில்லி சூனியத்தில் அவர் காட்டிய ஈடுபாடு, அவருடைய பிடிவாத குணம், அதை அவள் பொறுத்துக் கொண்ட விதம் என்று எல்லாவற்றையும் சொன்னாள். ஷைலி, உங்கள் முகத்தைப் பார்த்ததும், எனக்கு இவை எல்லாம் ஏன் ஞாபகம் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவள் உங்களைப் போன்றில்லை. வீடே அவள்
உலகம். நன்றாகப் பாடுவாள். இப்போது அதையும் நிறுத்தி விட்டாள். அவர்கள் வீட்டில் ஓர் ஆடு இருந்தது. கண்ணில் பட்டவை எல்லாவற்றையும்மேய்ந்துவிடும். கட்டியிருக்கும் கயிறையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடும். ஒரு தடவை அது என் நிக்கரையும் கூடச் சாப்பிட்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அவள் சிரித்தாள். என் இறுகிய முகத்தைப் பார்த்து விட்டு இன்னும் அதிகமாகச் சிரித்தாள். நானும்தான். அவள் ஏன் சிரிக்கிறாள் என்று தெரியாமல் சிரித்தேன். அது அல்ப விஷயம்தான். ஆனால் அதுபற்றி நினைத்து நாங்கள் இரண்டு மூன்று வருடங்கள் சிரித்திருக்கிறோம். நான் உங்களிடம் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது— நான் இப்படிப் பேசுவேன், நினைப்பேன் என்று எல்லாம் அவளுக்குத் தெரியாது. என் வெறி அதிகமாகி இருந்திருக்கிறது, உங்களைப் பார்க்கும் வரை அது எனக்குத் தெரியவில்லை.” அவன் இடைவெளியில்லாமல் பேசிவிட்டு அமைதியானான்

அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவன் தன் கைகளை அவள் கை மேல் வைத்தான்.மீண்டும் அவள் ஆச்சர்யமடைந்தாள். ஈரப்பதமான மேகங்கள் நிலாவின் மேல் மிதப்பதைப் பார்த்தாள். காற்று வீசியது.

“வாருங்கள், நாம் போகலாம்…” சொல்லிவிட்டு எழுந்தாள். காரில் ஏறி உட்கார்ந்த பிறகு அவன் வீடு இருக்குமிடத்தைக் கேட்டாள். காரின் பின் இருக்கையிலிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து “உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டாள். அவன் சிறிது உறிஞ்சி விட்டு, “நன்றி” என்றான். அவள் பாட்டிலை மூடினாள். “ வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுக் காரை கிளப்பினாள்.

“உங்கள் மனைவி இறந்திருக்க மாட்டாள் என்று நம்புகிறேன்” என்று கார் ஓட்டும் போது சொன்னாள்.

“ஆனால் எதுவும் மாறியிருக்கப் போவதில்லை” என்று சொன்னான் அமைதியாக.

”ஆமாம். மாறப் போவதில்லை” என்று அவள் தனக்காகவும் சேர்த்துச் சொன்னாள். அவனுடைய அமைதியான, மென்மையான முகம், மெலிந்த உதடுகளைப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அவன் வீட்டின் முன்பு காரை நிறுத்தினாள். தன் மகன் அமைதியாக பாடம் எழுதுவதை அவனால் பார்க்க முடிந்தது. அவள் கைகளை அவன் அழுத்தினான். அவள் அவன் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “குட்பை “என்றாள்.’

*****
நன்றி:
Apoorva [ Uncanny ] first appeared in the collection Akasha Mattu Bekku Akshara Prakashana, Sagar, 1981

கோபாலகிருஷ்ண அடிகா- கவிதை பற்றியும், ஒரு கவிஞனாகவும்

தி இரா மீனா

கன்னட மொழி கவிதை உலகில் ’ நவ்யா ’ இலக்கிய இயக்கத்தின் முன்னோடியாக போற்றப்படுபவர் மொகேரி கோபாலகிருஷ்ண அடிகா. ஆங்கில மொழி பேராசிரியர், கல்லூரி முதல்வர் என்று முக்கிய பொறுப்புகள் வகித்தவரெனினும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் கன்னட இலக்கிய உலகை படைப்புகளால் பெருமைப்படுத்தியவர். சாட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து கன்னட இலக்கியத்தை பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணின் வாசனே, அனந்தே, பூமி கீதா, வர்த்த மானா, பாவதரங்கா ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

ஞானபீட விருது பெற்ற யு.ஆர். அனந்தமூர்த்தி கோபாலகிருஷ்ண அடிகாவின் மாணவரும், சிறந்த நாவலாசிரியரும், விமர்சகருமாவார். அவர் அடிகாவோடு நிகழ்த்திய பேட்டியின் சில முக்கியமான பகுதிகள் இங்கே. எந்த மொழி கவிஞனுக்கும் ஆர்வமூட்டுவதான பார்வையை யு.ஆர். மற்றும் அடிகா வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

யு. ஆர்: உங்கள் இளம்பருவத்து நினைவுகளையும், அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டே உங்கள் பெரும்பாலான கவிதைகளின் வெளிப்பாடுள்ளது. ஏன் அப்படி? கவிதை எழுத உங்களைத் தூண்டிய ஓரிரு சமபவங்களைச் சொல்ல இயலுமா?

அடிகா: உங்களுடைய கேள்விக்கான பதில் சுலபமானதில்லை. ஆனால் அந்த பதிலைத் தேடுவதும் பொருத்தமானதுதான். ஒரு குழந்தையின் ஆசையான பார்வைக்கு முன்னால் உலகத்திலிருக்கும் எல்லாமும் புதியதாகவும், மலர்ச்சியானதாகவுமிருக்கும். குழந்தையின் மனம் மெழுகு பந்து போன்றது. பார்த்த அனுபவங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் அதில் பதிவாகிவிடும். அவை பின்னாளில் சரியான நேரத்தில் வெளிப்படும். இது எல்லா மனித உயிர்களுக்கும் பொருந்தும். இளம்பருவத்தின் அனுபவ தொகுப்புகள் யாருடைய [கவிஞன்] மனதிலும் புதிய கோணத்தை கற்பனைகளோடு உருவாக்கும். இந்த அனுபவங்களும், கற்பனைகளும் சாதாரண கருத்து என்பதை மீறி காலவெளி கடந்தவையாகின்ற அந்த உணர்வில் வெளியானவைதான் என்னுடைய சில சிறந்த கவிதைகள். இளம்பருவ அனுபவங்களைக் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ மதிப்பீடு செய்வதென்பது சிறிது கடினமானதுதான். இப்போது அந்த நாட்களை நான் நினைக்கும்பொழுது உடனடியாக கேட்க முடிவது- காக்கையின் அலகில் சிக்கிக் கொண்டு தப்பிக்கப் போராடும் தவளையின் குரல்தான். அந்த தவளையைக் காப்பாற்றத் தவறிவிட்ட வேதனையில் நெஞ்சு துடித்ததை கேட்க முடிகிறது. மழைக்குப் பின்னால், சம்பிரதாயம் போல வீட்டின் மிக அருகிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் குரல் கொடுத்ததைப் பார்த்தும், கேட்டும் கழிந்த, வளர்ந்த நாட்கள்… இது போல பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். எதுவும் முக்கியமானதோ, முக்கியமற்றதோ இல்லை. ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்திருக்கிறது.

யு.ஆர் : உங்களின் தொடக்க கால கவிதைகளில் நகரக் குறியீடும், பிற்கால கவிதைகளில் கிராமம்சார் வெளிப்பாடும் உள்ளது போல தெரிகிறதே! இதற்கு காரணம் உங்களின் கிராமம் சார்ந்த இளம்பருவத் தாக்கம் எனலாமா? ? மொழித் தடை [கன்னடம்] என்பதற்கு இதில் பங்குண்டா?

அடிகா: இந்தியச் சுதந்திர காலகட்டத்தில் நாங்கள் [கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள்] உடனடி கடந்த காலவெளிப்பாட்டிற்கு முதன்மை தந்தது உண்மைதான். நாங்கள் நகர்ப்புற குறியீட்டுத் தளைகளிலிருந்து தப்பிக்க முயன்றோம். என் தொடக்க காலக் கவிதைகளில் கவனக் குறைவாக நான் நகர்ப்புறக் குறியீடுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். அன்று மேற்கத்திய நாகரிகம் சார்ந்த ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் அதிகமிருந்தது என்பதையும் நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். எப்படியிருப்பினும், கவிதை எழுதுவதென்பது ஒருவரின் வாழ்வுச் சூழல் என்பதை மட்டும் உள்ளடக்கியதில்லை. இலக்கிய உணர்வுநிலை என்பது வாழ்க்கையின் பன்முகத்தன்மையை அறிவதும், அடையாளம் காட்டுவதும் மட்டுமின்றி, மாறுபட்ட ,உயர்வான அகம்சார்ந்த அனுபவங்களின் தேடலுமாகிறது.

யு.ஆர்: மக்கள் ஏற்கும் முறையில் , அணுகுவதற்கு எளிதான வகையில் கவிதைகள் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அடிகா: நீங்கள் மக்கள் என்று சொல்லும் போது உடனடியாக எழும் கேள்வி ’எந்த மக்கள்’ என்பதுதான் . எந்த கலையும் எவருக்கும் எளிமையானதி்ல்லை. பொது ஜனங்களை விட்டுவிடுவோம். படித்தவர்கள், அறிவாளிகள் என்று நாம் சொல்பவர்களில் பலர் கலையின் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவர்களாகவோ அல்லது கலையுணர்வு அற்றவர்களாகவோ இருப்பதை நாம் பார்க்கவில்லையா? கவிதைகளில் வெளிப்படும் எளிய அனுபவங்கள் எளிமைத் தன்மையை காட்சிப்படுத்துவது முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் மிகச் சிக்கலான அனுபவங்களை வெளிப்படுத்தும்போது, அந்த வெளிப்பாடு அதிநவீனம் சார்ந்த நிலையில் அமைவதும் முக்கியமானதே. அணுகுவதற்கு எளிமையான நிலையில் இருப்பதுதான் கவிதை என்று சொல்வது எப்படித் தவறானதோ அது போலவே புரிந்து கொள்ளக் கடினமாக இருப்பது கவிதை என்று சொல்வதும்- இரண்டும் தவறுதான். ஒலிநயம் என்ற தளையை உடைத்துக் கொண்டு வருவது இலக்கியத்திற்கு மிக அவசியமானது. வடிவத்தை ஆழமாக புரிந்து கொண்டவருக்கு அது சாத்தியமாகிறது. தளையை உடைப்பதென்பது ’கட்டுத் தளர்வான செய்யுளை ’ உருவாக்கும் தன்மையல்ல. புதிய வடிவில் நம்மைத் தயார் செய்து கொள்ள நாம் ஓர் இறுக்கமான வடிவத்தை உடைத்து இன்னொன்றை உருவாக்குகிறோம் அவ்வளவுதான். இன்றைய சூழலில் நாம்- கவிஞர்கள் மக்கள் விரும்பும் படைப்புகளைத் தரும் வகையிலான பொறுப்பிலிருக்கிறோம்.

நன்றி :உதயவாணி – கன்னடம் தீபாவளிச் சிறப்பிதழ் மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா [1918—1992] ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார் தமிழில் : தி.இரா.மீனா


விமர்சகர்

நான் ஏறிய உயரத்திற்கு நிழல்போல நீயும் ஏறினாய்,
தாழ்வு ஆழங்களில் நான் குதித்து நகர்ந்தேன்,
உன் சிறகுகளை என்னுடைய சிறகுகளோடு உராய்ந்தபடி.
நான் பறக்கும் தொடுவானத்தில் நீயும் பறக்கிறாய்.
என்னைப் போல புதிய எல்லைகளைத் தேடுகிறாய் ;
இன்னமும் நீ தனியாகவே நிற்கிறாய் ,
தீண்டப்படாமல், உன்னைப் பரத்தியபடி,
மேலே, கீழே , சுற்றி வானத்தை ஊடுருவியபடி
நிலத்தைத் துளையிட்டபடி.

தலையிலிருந்து கால்வரை நான் என்னைத் திறந்து கொண்டேன்.
உள்ளிடத்தை உப்பால் நிரப்பினேன்,

காயங்களைத் ஆற்றிக்கொண்டேன்,
நிலத்தடிக்குப் போய் காட்டேரியானேன்,
மேலே வந்து சூரியனை நோக்கிக் குதித்து ,
சிறகுகளை எரித்துக் கொண்டேன்,
மண்ணில் விழுந்தேன்,
அந்த இடத்தைச் சுற்றி குகை அமைத்துக்கொண்டேன்,
அந்தக் குகையின் கும்மிருட்டானேன்,
பதினான்கு வருடங்கள் போராடினேன், கசந்து போனேன்
பழுத்து, நெருப்பைப் போல வெடித்தேன்,
சிறகுகள் மீண்டும் கிடைத்தது,
காணும் சிறகாக ஒன்றும், காணாததாக மற்றொன்றும்.
இசைவானவனாக மாறிக் கொண்டிருந்தேன்.
ஸ்தூலத்திலிருந்து சுருக்கத்திற்கு,
சுருக்கத்திலிரு!ந்து உண்மைக்கு ––இவை எல்லாமும்
உன்னாலும் பார்க்கப்பட்டிருக்கிறது,
என்றாலும் நிழலைப் போல
இன்னமும் நீ முழுமையாக , இடையீடின்றி…

நீ மனக்கண்ணில் எழுகிறாய்; நீ வெளியே இல்லை,
ஆனால் எனக்குள் இருக்கிறாய்;
சோதித்து ,அளந்து, எடைபோட்டு, சரிபார்த்து—
இவையெல்லாம் உன் பணிகள்.
நான் உறங்கும் போது ஊசியால் குத்தினாய்
எனக்குள் வீங்கியிருந்த தேவையற்ற
காற்றை வெளியேற்றினாய்.
நீ உள்ளிருக்கும் நிழலா? அல்லது,
சித்ரகுப்தனின் ஒரு தூதனா?
உணர்ச்சியுள்ள எந்த விலங்கும் செய்ய விரும்புகிற
அலைந்து திரிதலுக்கு நீ என்னை அனுமதிக்கவில்லை.

நீ என்னை இரங்கலுக்குட்படுத்தினாய், இரங்கலால் என்னை எரித்தாய்,
சரி ,தவறு என்ற சக்கரத்தில் என்னைப் பிடித்துக் கொண்டாய்
என்னை அவமதித்து,தெருக்களில் இழுத்துச் சென்று கொன்றாய்,
கொன்றதன் மூலம் எனக்குப் புத்துணர்ச்சி தந்தாய்,
நீ , ஒரு சனி, ஒரு அட்டைப் பூச்சி,
இருப்பினும் ஒரு சினேகிதன் ,என் ஆசான்.

உன் கண்கள்

உன் கண்கள் . அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவைகளின் தங்க இழையில் என்னிதயம் சிக்கிக் கிடக்கிறது.
அவற்றின் நீலவானில் என்நெஞ்சு பறக்கிறது.
பனியின் வெண்மைக்கிடையில்
ஒளிரும் நீலக்கற்களா அவை ?
அல்லது வெண்தாமரையின் கருவறையிலிருந்து
எட்டிப் பார்க்கும் ஒரிரு குழந்தை தேனீக்களா?
உன் இதயக் கடைசலிலிருந்து தெறிக்கும் திவலைகளா?
ஒவ்வொன்றிலும் இத்தனை காதலை நிரப்பிக் கொண்டும்
எப்படி அவைகளால் இவ்வளவு பேசமுடிகிறது?

உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !
அவற்றின் நினைவுகளில் மூழ்கி
என் இதயம் தனிப் பயணியாகிறது

என் செந்தாமரை

வழிப்போக்கர்களுக்காக, பிரகாசமாக செந்தாமரை
இன்று மலர்ந்திருக்கிறது என்ன நறுமண விருந்து !
காற்று, தேனீக்கள், அல்லது மெலிதான திவலை
விருந்திற்கு அழைப்பு வேண்டுமா, என்ன?

பொன் கதிர்களால் கிச்சுகிச்சு மூட்டப்பட்டு
தண்ணீர் களிப்புடன் தெறித்துக் கொள்கிறது
எத்தனை வழிகளில் நான் இவற்றைக் காதலிக்க முடியும்?
தேனீ சுறுசுறுப்பாக வழிகளைக் கணக்கிடுகிறது….
தாமரை நாணுகிறது:
இதழ்கள் கருஞ்சிவப்பாகின்றன.
கவனி ! அவனுடைய ஏழு குதிரைகள் பூட்டியதேர்
கிழக்கு வானத்தில் ஊடுருவுகிறது..
அவனுடைய ஒவ்வொரு லட்சக் கணக்கான கைகளிலும்
சிக்கலான காதலின் வலைப் பின்னலைச் சுமக்கிறான்.
அந்தத் தாமரை மகிழ்வுக்குள்ளானது.
தேனீக்களின் ரீங்காரம் தேய்ந்தது;
அது எப்படியோ வெளிறிப் போனது

தன்னைச் சுற்றியுள்ள தேனீக்களை அவள் புறக்கணிக்கிறாள்
என் செந்தாமரை கதிரவனுக்காகக் காத்திருக்கிறாள்,
நாளைய கனவு கதிரவனின் உருவமாகுமா?
———————–

மழையில் ஒரு சிறுகுழந்தை

மூலம் : சுகதகுமாரி [ 1934 – 2020 ]
ஆங்கிலம் : மினிஸ்தி எஸ். நாயர் [ Ministhy S.Nair ]
தமிழில் : தி. இரா.மீனா

ஒரு சிறுகுழந்தை திண்ணைப் படியில் உட்கார்ந்திருக்கிறது–
வரப்போகும் மழையை உன்னிப்பாக கவனித்தபடி.
மழையும், சூரிய ஒளியும் கைகோர்த்துக் கொண்டு
சிரித்து விளையாடத் தொடங்குகின்றன.
காற்றின் வரவால் சூரிய ஒளி மறைகிறது !
காய்ந்த இலைகள், எங்கும் மிதக்கின்றன.
தாவரங்கள், நடனமாடுகின்றன
மழையில் நனைந்த மலர்கள், தலைசாய்கின்றன.
மழையால் தீண்டப்பட்ட சிறுகுழந்தை,
அகன்ற விழிகளுடன் உன்னிப்பாய் கவனிக்கிறது
மழை கனமாக, ஒரு சிறு நீரோடை பாய்கிறது,
வீட்டின் முன்பகுதியினூடே.
அதன் மேல் நீர்க்குமிழிகளும் மலர்களும்
வானவில்லும் மிதக்கின்றன.
சின்னக் குழந்தை விளையாட்டாக
சிறு பாதங்களை, கணுக்கால் உடையை நனைத்துக் கொள்கிறது.
தன் புத்தகத்தின் பக்கங்களை ஒன்றொன்றாய்க் கிழித்துப் போட்டு
அவை நீரில் மிதப்பதைப் பார்க்கிறது–
பிறகு தன் சிவப்புப் பென்சிலையும்
படகாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது,
திடீரெனச் சிரிப்பு நிற்கிறது!
ஒரு சிற்றெறும்பு மழை நீரோடையில் போராடிக் கொண்டிருக்கிறது,
ஐயோ பாவம் !
அழகான தன் பூ விரலின் நுனியை நீட்டுகிறாள்,
மேலே வர, உதவுகிறாள்,
’என்னைக் கடித்தாயோ அவ்வளவுதான் .பார் !’ திட்டுகிறாள்.
பிறகு விடுவிக்கிறாள்.
அருகே மற்றொன்று மிதந்து வர உதவுகிறாள்.
இன்னொன்றும் வர — பிறகு பின்னால் கணக்கற்றதாக,
அவள் என்ன செய்ய வேண்டும்?
மழையில் இறங்குகிறாள்.
ஒரு பழுத்த பலா இலையை எடுத்து
மன்றாடிக் கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அதன் மேல் சேர்க்கிறாள்.
மழை கனக்க ,காற்று உறும
ஆயிரக் கணக்கில் எறும்புகள் வெளிவர—
கண்களில் கண்ணீர்ப் பெருக்கை உணர்கிறாள் !
அவள் ஆடை முழுவதும் தொப்பலாகிறது,
பின்னல் அவிழ அவளது அழகிய முகம்
மழைத்துளிகளாலும் ,கண்ணீராலும் மறைக்கப்படுகிறது–
அவள் குனிந்து மூழ்கும் எறும்புகளைக் காப்பாற்றுகிறாள்.
அவளின் சிறு இரு கரங்களும் கடுமையாய்ப் பாடுபடுகின்றன.
“என் குழந்தை எங்கே?” அம்மா உள்ளிருந்து கேட்கிறாள்.
அவள் அதைக் கேட்ட போதிலும், மழையில் நிற்கிறாள்—
நூற்றுக்கணக்கான எறும்புகள் தீவிரமாக மேலும் கீழும் எம்புகின்றன;
திகைத்து, வெறித்துப் பார்த்து, அழுகிறாள்.
அந்தச் சின்னப் பலா இலை அவள் கையிலிருந்து
நழுவி நீரோடையில் மிதக்கிறது.

எழுபத்து ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன,
ஆயிரக் கணக்கில் மழை வந்து போனது–
ஒவ்வொரு முறையும் அணிகளாக எறும்புகள் தப்பிக்கப் போராடி
கடலுக்குத் திரும்புகின்றன.
அந்தச் சிறு குழந்தை இன்னமும் அங்கேயே நிற்கிறது,
மழையில் தொப்பலாகி… கையற்று..
————-

நன்றி : மாத்ருபூமி 2016