எழுத்து

பொம்மை

                          பானுமதி ந

‘ரோஜாவைப் போல் இருந்தான். நீலமும், பச்சையும் கலந்த கண்கள். உன்னைப் போல் முகமெல்லாம் மூக்கு. எவ்வளவு மென்மையான காதுகள்! அவன்- ‘ம்—மா’ என்று கூப்பிட்டான். அவன் எங்கே, பிரின்ஸ்? எனக்கு அவன் வேண்டும்’

இவள் இப்பொழுதெல்லாம் கனவுகளை உண்மையென நம்புகிறாள். இருள் பிரியவில்லை இன்னமும். பனிக்காற்று அதிகம் வீசுகிறது. உறைந்த நதிகளின் கரைகளில் இருந்த நாணல்கள் என்னவாயின? கூம்பி நிற்பதாக மனதில் எழும் அந்தப் பைன் மரக் கிளைகளில் விளையாடிய அணில்கள் எந்தக் கூட்டுக்குள் சென்றன? என் மூன்று வயது மகள்  உறங்கும் கல்லறையில் அவள்  எழுந்து வருவாள் எனக் காத்திருக்கிறதோ?  லில்லி மலர்களும் அவளுடனே தூங்கச் சென்று விட்டன போலும்.வெறுமையான வெண்பனிதான் இடறிக் கொண்டிருக்கிறது.

ஜான் எதைச் சொன்னாலும் கேட்காமல் பனியில் விளையாடுவான். உருட்டி உருட்டி பொம்மைகள்- ஆறு வயதில் அவனுக்கு எவ்வளவு கற்பனை! அதிகமும் குல்லாய் போட்ட ஏசு. என்னடா இது என்றால் ‘எனக்கு குல்லா, சாமிக்கும்- அவருக்கும் குளிரும்,” என்பான். முடிவில் எங்களை விட்டுப் போய்விட்டான்.

பனியில் கானலின் வெம்மையில் நாங்கள். தலையால் கவ்விக் கொண்டு வாலால் பிணைத்துக் கொண்டு எங்களை விழுங்கும் தனிமை. எலும்புகள் நொறுங்கும் வாதை. ’எஸ்தர், சற்றுத் தூங்கு’

நான் கண் விழிக்கையில் அவள் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒரு சோகம் கவ்வியது என்னை. தன்னிலை மறந்த அவளும் விட்டுப் போய் விடுவாளோ? நான் தலையைக் குலுக்கி சிலுவையிட்டுக் கொண்டேன்.

மிகச் சூடான சுவையான மசித்த உருளை பான் கேக் காலை உணவிற்கு. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது- இயல்பு நிலை வந்துவிட்டதென்று. எஸ்தர் ஆலிவ் பச்சை வண்ணத்தில் காஷ்மீர கதகதப்பு ஆடைகள் அணிந்து ஒரு பூங்கொத்தினைப் போல் இருந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாலும் அவள் கண்களும், உதடுகளும் எதையோ சொல்லத் தவித்தன. மீண்டும் குழந்தையைப் பற்றி சொல்லப் போகிறாள் எனத் தெரிந்தாலும் தவிர்க்க முடியாதல்லவா?

‘அவன் பால் வாசனையோடு சிரிக்கிறான் பிரின்ஸ். உன்னைப் பார்த்தால் உடனே என்னைப் பார்த்துக் கொள்கிறான். நான் ‘டாடிடா’ என்றால்தான் அரை மனதோடு உன்னிடம் வருகிறான்.ஒரு சிட்டுக் குருவியைப் போல் வாயைக் குவித்து ம்-மா என்கிறான்.’

“எஸ்தர், போதும் இந்த விளையாட்டு. உண்மையை உணர்ந்து கொள்.’ என் குரலின் கடுமையும் அதன் ஆயாசமும் அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

‘பிரின்ஸ், நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது’

‘எஸ்தர், அது உயிரோடு இருக்கப் போவதில்லையே’

‘என்னால்தானே, எல்லாமும். அதை நான்தானே சரி செய்ய வேண்டும்’

நான் சிரிக்கப் பார்த்தேன். வெறும் ஒலி தான் எழுந்தது.

‘நீ கடவுளின் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று எழ முயன்றேன்.

அவள் ஓடி வந்து என் மடியில் உட்கார்ந்து விட்டாள். ‘என்ன, இன்று ரொமான்ஸ் இப்பொழுதே!’ அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டேன். மிக நளினமாக விடுவித்துக் கொண்டாள்.

‘நாம் இன்று ஒரு புதிய மருத்துவரை பார்க்கப் போகிறோம் ஒரு மணிக்கு. அவர் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்பவராம். நெட்டில் எல்லா விவரமும் பார்த்தேன்’

நான் நிஜமாகவே சிரித்தேன்.’ தெருவிற்கு இரண்டு இருக்கிறது இப்பொழுது’

‘இது வேறு, பிரின்ஸ்’

‘தத்து எடுக்கப் போகிறோமா? இல்லை, வாடகைத் தாய், தந்தை என ஏதாவது?’

‘இது மிகவும் புதியது. நம் குழந்தைக்கு மூன்று பெற்றோர்கள்’

‘என்னது? உன் கற்பனைகள் எல்லை தாண்டிப் போகின்றன, எஸ்தர், நான் உன்னையும் இழக்க விரும்பவில்லை. நீ இப்படியே இருந்தால் உன் மனம் பாதிக்கப்படும். விடு இந்தப் பேச்சை’

‘ப்ரின்ஸ், எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. நாம் டாக்டர். லீயைப் பார்ப்போம். நமக்கு சரிவராதெனில் விட்டுவிடலாம். ப்ராமிஸ், இதுவும் இல்லையென்றால் நான் குழந்தையைப் பற்றி பேசவே மாட்டேன்’

சாலைகளில் பனியை அகற்றி பாதை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் பனி பொழியும், ஆனாலும் பாதை சீராக்கப்படத்தான் வேண்டும்.

டாக்டர். லீயின் க்ளினிக் அமைதியாக இருந்தது. அவரது வயதே அவரது அனுபவம் என்று சொல்லத்தக்க தோற்றம். புரியாத ஓவியங்களைப் பார்ப்பது போல் இருந்தது அவர் அறையில் மாட்டப்பட்டிருந்த ஜெனோம் சார்ட்டுகள்.

சிறு புன்னகையுடன் ஒரு கைகுலுக்கல். இரண்டு மணி நேரம் எங்களின் பழைய மருத்துவ அறிக்கைகளைப் பார்வையிட்டார்.

‘இரு குழந்தைகளை இழந்த உங்களுக்கு என் அனுதாபங்கள். இம்முறை நாம் செய்யப் போவது உங்களுக்கு ஒரு வரமென அமையலாம். ஆமாம், ஏன் மூவர் மூலம் செயற்கைக் கரு உருவாக்கக் கூடாது?’

‘மிஸ்டர். லீ?’

‘1990 முதல் இது ஒவ்வொரு வகையாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலே எம்ஆர்டி வரையறைக்கு முன்னால் 17 குழந்தைகள் இம்முறையில் பிறந்துள்ளனர். அதில் இன்றைக்கு 13 குழந்தைகள் பற்றி இரகசியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. ஆனால், இம்முறை இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறவில்லை.  இம்முறையில் கரு தரிப்பது தாய்க்கு ஆபத்தில்லை’

‘மிஸ்டர். லீ,எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. நான், எஸ்தர்  இருவர் தானே, மூன்று என்றால்?’

‘எஸ்தரின் ஊண் குருத்துகள் (mitochondria) பழுதாகி உள்ளன. இது அவருக்கு எந்த உடல் குறைபாட்டையும் ஏற்படுத்தாது. அவரது 37 ஜீன்களில் ஏற்படும் தன் பெருக்கமானது அவரது குழந்தைகளுக்கு கடத்தப்படுவதால், புதிய உயிர்கள் செல் சக்தியைப் பெற இயலாது சிறு வயதிலே இறந்து விடுகின்றனர்.’

‘ஆம், எங்கள் மருத்துவரும் அதைச் சொன்னார்’

‘இதைச் சரி செய்வதற்குத்தான் மூன்றாவது நபர்’

எஸ்தர் முதல் முறையாக, ‘எப்படி?’ என்றாள்.

‘உங்கள் கரு முட்டையின் மையம் ஸ்பிண்டில் நுட்பம் மூலம் அணுகப்படும். அதன் திசுக்கள், ஊண் குருத்துகள் மட்டும் நீக்கப்பட்டு உங்கள் கரு மையம் கொடையாளரின் மையக் கருவிற்குள் செலுத்தப்படும். உங்களுடைய மரபணு மாறாது. கொடையாளரின் நலமான ஊண் குருத்துக்கள் இப்பொழுது உங்கள் கரு முட்டையில். பிரின்ஸின் விந்தினை இணைத்து கருமுளையை உங்கள் கர்பைப்பையில் வைத்துவிடுவோம். கரு வழக்கம் போல் வளரும். உங்கள் வாரிசு, உங்கள் குறைபாடில்லாமல்.’

‘இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாக இருக்குமா? அதாவது மனிதனாக?’ என்றேன் நான்.

‘சில்லி கொஸ்டின். மனிதக் கரு, மனித விந்து. பின்னர் பிறப்பது என்னவாக இருக்கும்?’

‘இதற்கு பதிலாக நாம் ஏன் வேற்று கருமுட்டையைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடாது?’

‘செய்யலாம். உங்கள் மனைவியின் அழகோடும், ஆற்றலோடும் உங்களுக்கு வாரிசு வேண்டாமா?’

‘எங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்’

‘நாளைக்குச் சொல்லுங்கள்’ என்றார் லீ சிரிக்காமல்.

என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆபத்தில்லையென்றால் இந்த செயல்பாட்டிற்கு ஏன் சட்ட அனுமதி இல்லை? யூகேயில் அனுமதிக்கப்பட்டதாக  லீ சொன்னாரே. இதை ஒத்துக் கொண்டு அவளையோ, குழந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து விட்டால்? நான் அவளுக்குச் சொல்ல காரணங்கள் தேடிக்கொண்டிருந்தேன். அவள் அமைதியாக குழந்தைக்கான காலுறை செய்து கொண்டிருந்தாலும் அவளும் சிந்தனையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

‘பிரின்ஸ், உனக்கு கேத்ரினை நினைவு இருக்கிறதா?’ என்றாள்

‘உன் கஸின் தானே, அவளுக்கு என்ன இப்போ?’

‘அவள் வாடகைத் தாய் ஒருத்தி மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால், பார் அந்த பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு இவளின் கனவும் அழிந்தது.’

‘ஏதோ ஒருத்தருக்கு நடந்ததை வைத்து இப்படிப் பேசுவது என் புத்திசாலி மனைவிக்குப் பொருந்தவில்லை’

‘பொய்ப் புகழ்ச்சி. நான் சொல்வது ரிஸ்க் என்பது எதிலும் இருக்கிறது’

‘ஆனால், அதைத் தவிர்க்கவும், இல்லையெனில் அதன் விசையைக் குறைக்கவும் நாம் முடிந்ததை செய்கிறோம் அல்லவா?’

‘இன்று காலை உணவு எப்படி இருந்தது?’ என்றாள் சம்பந்தமில்லாமல்.

குழந்தை, ட்ரீட்மென்ட் இதை விட்டுவிட்டு இவள் ஏதோ பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. ’டேஸ்டி, வெரி டேஸ்டி’

‘மதியம் வெளியில் சாப்பிட்ட லன்ச்?’

‘அது சுமார்தான்.’

‘நல்ல உணவகம். மேஜைகள் சிறப்பாக செட் செய்யப்பட்டிருந்தன. விலையும் அதிகம், மெனுவும் அதிகம். ஆனாலும் நம் பான் கேக்கிற்கு ஈடில்லை’ என்றாள் சிரித்துக் கொண்டே.

இவள் எங்கே வருகிறாள் என்று புரியாமல் பார்த்தேன்.

‘பணம் கொடுத்து பொருள் வாங்குகிறோம், ஆனால் அதை நம் பக்குவத்தில் செய்கிறோம். நமக்கே நமக்கென. அதில் அன்பு கலந்து விடுகிறது. பணம் கொடுத்து வெளியில் உண்பது நம் பக்குவத்தில் இருப்பதில்லை’

‘இது பொதுவான வாதம்’

‘பிரின்ஸ், என் உடல் நலமாக இருக்கிறது. என் கர்ப்பைப்பை நம் உயிர் தாங்கும் ஒரு அனுபவம், அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கருமுளையின் ஒவ்வொரு வளர்ச்சியும் என்னுள் திறக்கும் கதவுகள் தேவன் கோயிலின் வாசல்கள். நான் உன்னை நினைத்துக் கொண்டே அதனுடன் பேசுவேன். என் பாடல்களை இரகசியமாக சொல்லித் தருவேன். கடவுள் நம் பங்கில் கொடுக்க நினைப்பதை வாங்க கைகளை ஏந்துவோம்’

‘உணர்ச்சிகரமாக இருக்கிறது. எதற்கும் நாம் நம் பாதிரியாரைக் கேட்போம். இதில் மதத்திற்கு எதிரான, இயற்கைக்கு மாறான செயல் இருக்கிறது’ என்றேன்.

‘கடவுள் மனிதனுக்கு இன்பங்களை மறுப்பதில்லை. ஆனால், கடவுளைக் காட்டுவதாகச் சொல்லும் சில மனிதர்கள் மறுக்கக்கூடும்’ என்றாள் அமைதியாக.

எனக்கு அதிர்ச்சிதான். எந்த ஞாயிறும் தேவாலயம் தவறாதவள், இரு வேளை ஜெபிப்பவள், பிரசங்கக் கூட்டங்களில் கண்களில் ததும்பும் நீருடன் இருப்பவள், இவள் தேவ மைந்தனுடன் வசித்திருக்கிறாள். நான் அறியா எஸ்தர்.

நாங்கள் டாக்டர் லீயைப் பார்த்தோம்.

ரோஜாவைப் போல் இருந்தான் எங்கள் மகன்.

 

 

 

 

சுஜாதா செல்வராஜின் ‘காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

suja-cover

சுஜாதா செல்வராஜின்காலங்களைக் கடந்து வருபவன்’: மொழியின் ஆழத்துள் மிதக்கும் கவிதைகள்

ஜிஃப்ரி ஹாஸன்

 

புது எழுத்து” பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் சுஜாதா செல்வராஜின் “காலங்களைக் கடந்து வருபவன்” நவீன தமிழ் பெண் கவிதைவெளியில் ஒரு குறிப்பிடத்தக்க வரவு. இக் கவிதைப் பிரதியில் பெண்- ஆண் எனும் இரண்டு தளங்களில் நகர்ந்து செல்லும் சொற்கள் கவிதையை உருவாக்கிச் செல்கின்றன. பெண்ணின் உலகத்தை ஆணின் கரங்கள் எப்படித் தீர்மானிக்கின்றன என்ற நுட்பத்தை சுஜாதா வெளிப்படுத்தும் தருணந்தான் அவரது கவிதைகளின் நிகழ் நேரம்.

தமிழின் நவீன பெண் கவிதைவெளிக்குள்ளிருக்கும் மௌனமும், அழகியலும், தீவிரமும் அப்படியே கிஞ்சித்தும் பிசகாமல் சுஜாதாவின் கவிதைகளுக்குள்ளும் இருக்கின்றன. பெண் குறித்த அவரது கவிதை மனத்தின் பல்வேறு பிரதிபலிப்புகளையும் இந்தத் தொகுதிக் கவிதைகள் பாசாங்குகளற்று வெளிப்படுத்துகின்றன.

இவரது கவிதைகள் பெண்ணைத் தன்னிலைக் கதாபாத்திரமாகவும் ஆணைப் புறநிலைக் கதாபாத்திரமாகவும் கொண்டு பெண்ணின் வாழ்வை அதன் முழு அர்த்தத்தோடும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள முற்படுகின்றன.

பெண் தனது சராசரி வாழ்வை எப்படி வாழ விரும்புகிறாள் என்ற அவளது சுயவிருப்பத்துக்கும் அவள் எப்படி வாழ வேண்டும் என்ற ஆணின் அதிகார விருப்பத்துக்கும் இடையிலான போராட்டத் தருணங்களே சுஜாதாவின் கவிதைப் புனைவுக்கான அடித்தளமாக ஆகியுள்ளன.

ஆனால் அவரது இந்தப் போராட்டம் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதில்லை.

““நம் இருவருக்குமிடையில்
நிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்
அத்தனை உறுதியானதொன்றும் இல்லைதான்
ஆயினும் நாம் அதைக் கடக்கவோ
உடைக்கவோ முயன்றதில்லை”

என அவர் எழுதுகிறார். இங்கு எதிர்க் கதாபாத்திரமாக ஆண் இருக்கிற போதிலும் இருவருக்குமிடையில் சமரசத்துக்கான சாத்தியங்களே அதிகம் இருப்பதை அவர் கண்டுகொள்கிறார்.

பெண்ணின் இருப்பு, அவளது வாழ்வு, கனவுகள், வேட்கை என விரியும் சுஜாதாவின் கவிதைகள் சிக்கலற்ற எளிமையான குறியீடுகளையே கொண்டுள்ளன. படிமங்கள் மிக மிக குறைவு. சாதாரண பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்துவதற்கு மொழியின் கூடுதல் புதிர்த்தன்மை தேவையற்றது என்பதை புரிந்து கொண்டு அதனை இயன்றளவு சுஜாதா தவிர்ந்து கொண்டிருக்கிறார். மிகைக் கற்பனைகளும் அவரது கவிதைக்குள் இருப்பதில்லை. இந்த வகையில், இவரது கவிதைகள் யதார்த்தவாதத்துக்கும், இயல்புவாதத்துக்கும் மிக நெருக்கமாகவுள்ளன.

பெண்ணின் சுதந்திரம் பற்றிப் பேசும்போது கூண்டு, வானம், பறவை போன்ற மிக எளிமையான குறியீடுகளையே பாவிக்கிறார். “வானம் மறுதலிக்கும் சிறகுகள்” எனும் அவரது கவிதையில்,

“என்றுமே நீ அறியப்போவதில்லை
வனம் அளக்கும் பறவையின் சிறகிற்கும்
கூண்டு தாண்டும் பறவையின் சிறகிற்கும்
வானம் வேறு என்பதை

இதுபோன்ற எளிமையான குறியீடுகளைத்தான் அவர் தனது கவிதைகளில் கையாள்கிறார்.

பெண் பற்றிய அறிவிப்புகளை தமது கவிதைகளில் வெளியிடுவது நவீன தமிழ் பெண் கவிதைகளின் பொதுப்போக்காகவே இருக்கிறது. ஆயினும் அந்தப் பொதுப் போக்கிலிருந்து ஒரு நுண்ணிய வித்தியாசத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் சுஜாதா. பெண் பற்றிய சுஜாதாவின் அறிவிப்பு அவரது “மருதானிக் காடுகளின் உன்மத்தம்” எனும் கவிதையில் நிகழ்கிறது.

“நாங்கள் துடுப்புகளற்ற படகு செலுத்தும்
கலை அறிந்தவர்கள்

என்கிறார். இன்னொரு வரியில்,

”ஆதிக்கனவுகளை திருத்தி எழுதிக் கொண்ட
முனை மழுங்கிய பேனைகள்

என்கிறார்.

”மேலும் உங்கள் செங்கோல்
ஆட்சியின் கீழ் வராத குடிகள் நாங்கள்

என்கிறார்.

இந்த அறிவிப்பு தமிழ்க் கவிதைவெளியின் பொதுப்போக்கிலிருந்து எப்படி வேறுபடுகிறதென்றால், தமிழ் பெண்கவிகள் தன்னிலை ஒருமையில்தான் பெண்களை அறிமுகப்படுத்துவதோ அல்லது அவர்களின் அனுபவங்களைப் பேசுவதோ வழக்கம். ஆனால் சுஜாதா தன்னிலைப் பன்மையில் பெண்களை அறிமுகம் செய்வது அவருக்கான தனித்துவத்தை அர்த்தப்படுத்துகிறது.

சமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சினைகளாக சுஜாதா அடையாளங் கண்டிருப்பவை எவையும்  கற்பிதமாகத் தெரியவில்லை. இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி அவற்றைப் புனைவுகளில் பூதாகரப்படுத்தி தனக்கான பிம்பங்களையும் ஒளிவட்டங்களையும் சூடிக்கொள்ள அவர் பிரயாசைப்படுவதாகவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

ஒரு ஆண் வீட்டில் தனிமையை உணரும்போது அவன் வெளியில் சென்று தனது தனிமையையும் வெறுமையையும் போக்கிக் கொள்ள முடியும். இதே நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படும்போது அவளால் வெளியில் சுதந்திரமாக உலவிவிட்டு வருவதற்கான சூழல் இன்று இல்லை என்பது பெண்களின் சுதந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். இது உண்மையில் உள்ள பிரச்சினைதான். இது கற்பிதமல்ல.

“ஆளற்ற வீட்டின் முன்
எத்தனை நேரம்தான் வெறித்திருப்பாய்

என்ற வரிகள் இந்த அவலச் சூழலைப் பற்றித்தான் சொல்கிறது.

இப்படியான ஒரு சூழலில் பெண்ணின் வாழ்வு தோல்வியுற்றிருப்பதாக கருதுகிறார் சுஜாதா.

“கண்மூடிக்கிடப்பதங்கே தோற்ற வாழ்வென்று
ஈக்கள் ஆர்ப்பரித்து அறிவிக்கும்

என்று தோல்வியை அறிவிக்கும் அவர், திடீரென்று இன்னுமொரு கவிதையில்

“வெற்றி முரசு வனமெங்கும் தெறித்து எதிரொலிக்க
கள்வெறி கொள்கிறேன்

என வெற்றியைக் கொண்டாடுகிறார். இவ்வாறு முரண்பட்ட உணர்வுகளை ஒரே நேரத்திலும் ஒரே வாழ்விலும் அனுபவிக்கும் பெண்கள்தான் சுஜாதாவின் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

நமது சமூக அடுக்கமைவு பாரபட்சமானதாக, ஆண்கள் தமது சொந்த விருப்புக்கேற்ற விதத்தில் வடிவமைத்துக் கொண்டதான ஒரு தோற்றப்பாட்டையே கொண்டிருக்கிறது.  பெண்ணுக்கும்- ஆணுக்கும் என பகிரப்பட்டிருக்கும் பணிகள் எந்தவொரு தர்க்க ஒழுங்குகளையோ, அடிப்படைகளையோ கொண்டிருப்பதில்லை என்ற பார்வையை நமது பெண் கவிகள் தொடர்ந்தும் வலியுறுத்திக்  கொண்டே வருகின்றனர்.

சுஜாதாவின் “இருப்பின் ஒரு பிரதி” எனும் கவிதைக்குள் இந்தக் குரல் மேலும் ஆழமாக ஒலிக்கிறது-

“பெண்ணின் புகைப்படங்கள் தொங்கும்
பூஜையறைகளுக்குப் பின்னால்தான்
ஜன்னல்கள் ஏதுமற்ற
வழுக்கும் சமயலறைகளும்
தூமைத் துணிகள் சொருகப்பட்ட
புழக்கடை வெளிகளும் பரந்து கிடக்கின்றன
” 

இங்கு “சமையலறை“ என்பது ஆதியிலிருந்தே பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட ஒரு இடமல்ல. ஆதி நிலையிலிருந்த சமூகம் குடும்பமாக மாறி ஒரு மனையை நிர்மாணித்துக் கொண்டதன் பின்னர்தான் அதற்குள் பெண்ணுக்கென பிரத்தியேகமாக சமையலறையையும் உருவாக்கிக் கொண்டான். அன்றிலிருந்து அநேக பெண்களுக்கு “சமையலறை” மீட்சியற்ற ஒரு பணி அறையாகவே மாற்றப்பட்டு விட்டது. இதனால் நமது பெண்கவிகள் “சமையலறை“ மீதான தமது அதிருப்தியை தொடர்ந்தும் தமது கவிதைகளில் பதிவு செய்தே வருகின்றனர்.

ஆனால் தூமைத் துணிகள் சொருகப்பட்ட புழக்கடைவெளிகள் பெண்ணின் இயல்பான தன்மைக்காக பெண்ணே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அறையாக இருக்கிறது. இதற்கெதிராக பெண்கவிகள் கலகம் செய்யத் தேவை இல்லை என்பது என் அபிப்ராயம்.

பெண்ணின் இருப்பு குறித்த அர்த்தங்களைத் தேடியலைபவையாகவும் சுஜாதாவின் கவிதைகள் வடிவங்கொள்கின்றன. பெண்ணின் இருப்புக்கான சுதந்திரத்தின் எல்லைகள் எப்படி ஆண்களால் ஈவிரக்கமற்றுக் குறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை சுஜாதா வெளிப்படுத்தும் வரிகளில் பெண் அனுதாபத்துக்குரியவளாகவும், ஆண் அதிகாரத்துக்குரியவனாகவும் வாசக மனதில் பதிவாகின்றனர்.

”புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென
உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு

“ஆசுவாசம்” எனும் கவிதையில்,

“இருள் அப்பிப் பிசுபிசுக்கும் என் இருப்பெங்கும்
அலறி ஓடும் ஓர் அம்மணம்

என்ற வரிகளில் மட்டுமல்ல

“என் திசை எங்கும்
நீ வனம் பரப்பி வைத்திருக்கிறாய்
உன் பாதை தோறும்
நான் முள் பொறுக்கி்க்கொண்டிருக்கிறேன்

என்று நெகிழ்கிறார்.

அதேநேரம் “கொத்தித் துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்” என்ற அவரது கவிதையிலும்

“சிறகுதிர்ந்த பட்டாம் பூச்சியென
பதறித் தவித்தலைகிறது எனதிந்த இருப்பு

எனத் துயருறுகிறார்.

மேலோட்டமான வாசிப்பில் இத்தகைய அனுபவமற்ற ஒரு ஆண் வாசகனோ அல்லது வாசகியோ இந்தத் துயரம் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருப்பதாக உணர்வதற்கு சாத்தியமுள்ளது.

பெண் பற்றிய புரிதலில் நமது பாரம்பரிய தமிழ்மொழிச் சமூகங்களிலிருந்து நவீன தமிழ் மொழிச் சமூகங்கள் பெரிதளவுக்கு முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை. இத்தகையதொரு அபத்தமான சமூக சூழலில் பெண்ணின் இருப்பு சுஜாதா விபரிப்பது போன்ற கையறுநிலைக்குள்ளும், தகிப்புக்குள்ளும் இருப்பது இயல்பானதே. இந்தவரிகள் கவிஞர் வாழும் சமூகத்துக்கு நெருக்கமானதாக இருக்கின்றன. எனவே பெண்ணின் இருப்பு பற்றிய சுஜாதாவின் இந்த வரிகள் மேலைத்தேய நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்குள்ள சமூக சூழலில் ஒரு அர்த்தத்தை வழங்குவதில் தோல்வியடையக் கூடும். இதனால் இக்கவிதை நிலையான அர்த்தத்தைக் கொண்டதாகவன்றி ஒரு நிலைமாறும் அர்த்தப்பிரதியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகிறது.

ஆண்களால் உருவாக்கப்பட்டிருக்கும் “கலாசாரம்“ பெண்ணின் இருப்பு மீதும், அவளின் சுதந்திரத்தின் மீதும் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ஓரளவு அடக்கி வாசிக்கும் பாணியில் வெளிப்படுத்துகிறார் சுஜாதா.  தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் பெண் மீதான கலாசார இறுக்கங்களை துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவரது “அவ்வளவே” என்ற கவிதைக்குள் இந்தக் குரலை நீங்கள் கேட்கமுடியும்.

”நெஞ்சுக்கூட்டில் முட்டி அழும் இதயத்தின் குரல்
தலைமயிர் சிதைக்கப்பட்ட
பெண்ணின் கூக்குரலாய் ஒலிக்கிறது

என்று அவர் எழுதும் போது கலாசாரத்தின் இறுக்கப்பிடியிலிருந்து பெண்ணின் மீட்சிக்காக வாசக மனம் அவாவுறுகிறது.

எனினும் பிரதி முழுவதையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்யும்போது தமிழ் கலாசாரத்தின் மீது மிகவும் அவதானமான ஒரு வரையறுக்கப்பட்ட விமர்சனத்தையே கவிஞை சுஜாதா செல்வராஜால் முன்வைக்க முடிந்திருக்கிறது. இந்த சுயதணிக்கை அவரது கவிதைகளுக்கு மேலும் ஒரு நடைமுறைசார் அர்த்தத்தை வழங்கிவிடுகிறது.

ஒரு வாசகனுக்கு அற்புதமான கற்பனைகளி்ன் தரிசனமும் சுஜாதாவின் கவிதைகளுக்குள் கிடைக்கிறது.

நினைவைக் கலைத்துக் கலைத்து
அடுக்கிப் பாரக்கிறேன்

தவறாமல் என் வாசல் வரும்
இளமாலை வெயிலுக்கு என்
மௌனங்களை நுரைக்க ஊற்றித் தருகின்றேன்

போன்ற வரிகளில் அதீத கற்பனையின் தரிசனத்தை வாசகன் கண்டுகொள்கிறான்.

பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் மனவுணர்வுகள் பற்றி நமது தமிழ்க் கவிகள் அவ்வளவாக கவனத்திற்கொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் கண்களுக்கு அவர்கள் உண்மையான குற்றவாளிகளாகவே தெரிகின்றனர். ஒரு இடத்தில் ஒரு பொருள் திருடப்பட்டிருந்தால் அங்கு யாராவது ஒருவர் பொது மக்களால் சந்தேகிக்கப்படுகிறார். ஏற்கனவே சும்மா குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நிரபராதியின் மீது எப்போதும் சமூகத்தின் சந்தேகக் கண்கள் மொய்த்தபடிதான் இருக்கும்.

அப்படிப்பட்ட விளிம்புகள் மீதும் சுஜாதாவின் கவிதை மனம் கவனங்கொள்கிறது. “சுதந்திரத்தின் முடிச்சு” என்ற கவிதையில்,

காணாமல் போகும் “ஒன்று“
அதன் வாசனையை அடையாளத்தை
இரக்கமின்றி அவன் மீதே விட்டுச்செல்கிறது

தெளிந்த தனது கைகளை மீண்டும் மீண்டும்
அவன் கழுவியபடியே இருக்கிறான்

என்று சுஜாதா எழுதும்போது சந்தேகிக்கப்பட்ட ஒரு நிரபராதியின் மனத்தின் வலி தன் உடலெங்கும் பரவுவதை வாசகன் தீவிரமாக உணர்கிறான்.

இந்தக் கவிதைக்குள் வருபவன் ஒரு ஆணாக இருப்பினும் அவன் ஒரு விளிம்பாக இருக்கிறான் அல்லது அவ்வாறு சமூகத்தால் உணர வைக்கப்பட்டவனாக இருக்கிறான்.

ஆயினும் சுஜாதா சித்தரிக்கும் பெண்ணின் எதிர்நிலைக் கதாபாத்திரமான ஆண் காலங்களைக் கடந்து வருபவனாக இருக்கிறான். மிக மிகத் தொன்மையான காலத்திலிருந்து இன்று வரை பெண் மீதான அவனது செயற்பாடுகளில் காலம் எந்தப்பெரிய உடைப்புகளையும் நிகழ்த்தி விடவில்லை என்ற உண்மையின் பல்வேறு பிரதிபலிப்புகளே சுஜாதாவுக்குள் ஒரு எதிர்ப்பாக வடிவங்கொண்டு, மொழியின் அழகியலோடு வெளிப்பட்டுள்ளன.

சுருங்கக்கூறின் சுஜாதா செல்வராஜின் கவிதைகளின் அகம் ஒரு ஆணிண் வன்மத்தோடும் புறம் ஒரு பெண்ணின் மென்மையோடும் இருக்கின்றன. எனினும் எனது இந்த சுருங்கிய பார்வைக்கும் அப்பாலுள்ளது அவரது கவிதை.

 

 

குளத்தங்கரை

வே. நி. சூரியா

குளத்தின் மீது பிரதிபலிக்கும் மரத்தின் மீது கல்லெறிகிறாள். கல்லேதும் விழாமலே கல் விழுந்ததைப் போல குளம் சலனமடைகிறது. மரமோ அசைவற்ற குளம் போல நிற்கிறது, கிளைவிரித்து. வந்தமர்ந்த காக்கைகள் வெயில் உலர்த்திக்கொண்டு வழக்கம்போல பழங்களை கொத்திச் சென்றன. குளத்திலிருந்து இலைகள் சில உதிர்ந்து மரத்தின் மீது மிதந்தன. அப்போது கூட அவளெறிந்த கல் திரும்பவில்லை.

வலிமையான போராட்டம்

ஏ. நஸ்புள்ளாஹ்

அலாதியாய் வெடிக்கும் காற்று
அசைவற்ற
என் தனிமையையும்
என் மௌனத்தையும்
இசைக்கத் தொடங்குகிறது.

ஆர்ப்பரித்த
என் ஆழி
கனா தந்த என் யாக்கை
எல்லாம் வாசனையற்றும்
உயிரற்றும்
இவ்வுலகில் வீழ்ந்து கிடக்கின்றன
வலிமையான போராட்டம்
தொடங்கியிருக்கிறேன்.

நேரிடையான சம்பவங்களின்
நிழல்களுக்குள்
ஆழமாய் வீழ்த்தப்பட்ட
பால்யம் என்கிற
துரோகத்தின் துன்பியம்
நிலமெங்கும் வழியத்தொடங்கியதன்
கோத்திரம் புரியவில்லை

அன்பின் மூதாதையத்தை
அளவீடு செய்யத் தெரியாத
நபராகவே நான் வாழ்ந்திருக்கிறேன்
என்கிற பின்னணி நாகரீகத்தை
பின்னரே அறிந்தேன்.

உயர்ந்த அன்பின்
மதுக் கோப்பை எங்கும்
நுரை தள்ளியபடி
தனிமை முளைத்து நின்ற கதை
நேற்று அறைக்குள் புகுந்த
சர்ப்பமொன்றின் விஷத்துளியிலிருந்து
நான் கவனிக்கத் தொடங்குகிறேன்.

 

தடதடக்கிறது

– பெ விஜயராகவன்-

ஒரு பின்னிரவில்
தாழிட்ட என் வீட்டுக் கதவுகளை
தடதடக்கிறது இரு கைகள்
தாழ் நீக்க மனமில்லை எனக்கு
அக்கைகள் எழுப்பும் ஓசை
மிகப் பரிச்சயம் என்பதனாலும்
அக்கைகள் கொணர்ந்துச் செல்ல
ஏதுமில்லை என்பதனாலும்