எழுத்து

தெளிவின்மை தெளிதல் – டிம் பார்க்ஸ்

(முடிவைத் தெளிவாகச் சொல்லாத புனைவுகள், நிச்சயத்தன்மையற்ற முடிவுகள், இவை ஏதோ ஓர் உயர் இலக்கிய மதிப்பீடு கொண்டிருப்பதான பாவனை நம்மிடையே காணப்படுகிறது, ​ கருத்துலக யதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும் பன்முகத்தன்மைக்கு ஆதரவாகவும் உள்ள செயல்பாடு என்றும் பல்பொருட்படுதல்​ பாராட்டப்படுகிறது. அப்படிப்பட்ட புத்திசாலித்தனமோ அரசியலோ இந்த விஷயத்தில் தேவையில்லை என்று சொல்லும் டிம் பார்க்ஸ், “ஒரு நாவல் ​பல்பொருட்படுதல், படைப்பு குறித்து அதனால் நிகழக்கூடிய அனுமானங்கள் போன்றவற்றை நாம் எவ்வளவு துல்லியமாகப் பேச முடியுமோ அவ்வளவு துல்லியமாய்ப் பேச வேண்டும்” என்கிறார். அதற்கான இலக்கிய காரணங்கள் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சிறு பகுதி இங்கே மொழியாக்கம் செய்யப்படுகிறது)

செவன் டைப்ஸ் ஆஃப் ஆம்பிக்யுட்டி‘ (1930) நூலின் பக்கங்களைத் திறக்கும்போது ஒரு விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது- தெளிவின்மையின் வெவ்வேறு வடிவங்கள் மிகத் துல்லியமாய் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. கிரேக்க துயர் நாடகங்கள் முதற்கொண்டு இன்றைய இலக்கியம் வரை, குறிப்பாக ஷேக்ஸ்பியர் மற்றும் அவரது சமகாலத்தவர்களை கவனப்படுத்தி, பல உதாரணங்களைக் கொண்டு எம்ப்சன் இந்த நூலில் ஒரு வேறுபாட்டை எப்போதும் வலியுறுத்துகிறார். சாதாரண தெளிவின்மைக்கும் (அது ஆர்வமூட்டினாலும்கூட), அதற்கு மாறாய், மொழிபடும் பொருள் அமைப்பின் செறிவால் உருவாகும் தெளிவின்மைக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை கவனப்படுத்துகிறார் அவர். உணர்த்துதல்கள் கொண்ட, ஆனால் வரையறைக்கு அடங்காத, தாமஸ் நாஷின் “Brightness falls from the air” என்பதற்கும் கவிதையின் அதே ஸ்டான்சாவில் பின்னர் வரும் “Dust hath closed Helen’s eye,” என்ற வரியின் பல்வகை துலக்கத்துக்கு இடமளிக்கும் பொருட்செறிவையும் அவர் வேறுபடுத்துகிறார். “Dust hath closed Helen’s eye,” என்பதை, ஒரு கண் தூளிதமாகிறது என்று புரிந்து கொள்ளலாம், ஆனால் துகள் விழும் சிலையைக் கவிஞர் உணர்த்துகிறார் என்று எம்ப்சன் சுட்டுகிறார். எது எப்படியானாலும், ஒரு நுண்விபரம் ஒரே சமயத்தில் பல்வேறு வகைகளில் பொருட்படும் “முதலாம் தெளிவின்மை” குறித்த விளக்கத்தின் முடிவில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“இரண்டையும் ஒரே சமயத்தில் யாரும் செய்திருக்க முடியாது, ஆனால் இரண்டையும் செய்வதற்கு ஏதோ ஒரு வகையில் தயாராக இருந்திருக்க வேண்டும். இரண்டில் எதைச் செய்திருந்தாலும் அதற்கு மாறான வேறொன்றைச் செய்து தம் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் மனதில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். இரு சாத்தியங்களையும் மனதில் கொண்டால்தான் இவர்களைப் புரிந்து கொள்ள முடியும்”.

தெளிவின்மை என்றால் என்ன என்பதன் துல்லியமான வரையறையை விட்டுவிடுவோம். ஆனால் எம்ப்சன் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பது நமக்குச் சீக்கிரமே புலப்படுகிறது- இலக்கியம் எவ்வகைகளில் அடர்த்தியாய் இருக்க முடியும், செறிவை உருவாக்க முடியும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல நினைக்கிறார் எம்ப்சன். இத்தகைய அடர்த்தியில் அது சிடுக்குகளூடாய்ச் செறிவடைந்து ஒரு வகை யதார்த்தத்தைத் தொடுகிறது. எவ்வாறெனில், அனுபவம் அதனியல்பில் சிக்கல்கள் நிறைந்தது, அடர்த்தியானது, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதது. “அடர்ந்து இறுகிய அறிவு வளத்தையும் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்ட பல்வகைப்பட்ட உணர்வுகளுக்கிடையிலான சமநிலை குறித்தும் ஒரு பொது உணர்வு” என்ற ஒன்றை அவர் முன்வைக்கிறார். அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் தெரிகிறது. பென் ஜான்சனின் இந்த வரிகளில் “அலாஸ்” என்ற சொல்லால் ஏற்படும் தெளிவின்மை குறித்து அவர் அருமையாக விவாதிக்கிறார்-

Pan is our All, by him we breathe, we live,
We move, we are;…
But when he frowns, the sheep, alas,
The shepherds wither, and the grass.

அதன்பின் எம்ப்சன் இவ்வாறு எழுதுகிறார்-

“சொற்பொருள் குறித்த தேர்வுகள் உன்னால் புரிந்து கொள்ள முடியாத அளவு தீர்மானமாய் எழுத்தாளனால் கைகொள்ளப்பட்டிருக்கின்றன என்ற உணர்த்தல்தான் முக்கியம். இந்த மொழியையே ஒரு பிரதியாய்க் கொண்டு, உனக்குத் தெரியாத எண்ணற்ற அர்த்தங்களைக் கண்டடைய முடியும் என்ற உணர்வுதான் ஒருவரின் நடை குறித்து ஒரு உயர்மதிப்பை நீ உருவாக்கிக்கொள்ளச் செய்கிறது.

“பொதுவாக மொழி எப்போதும் எளிமைப்படுத்துகிறது, அது எதைக் குறிக்கிறதோ அதை எளிமைப்படுத்தியே விவரிக்கிறது என்று ஜேனட் சோல்பர்க் கூறுவதற்கு மாறான விஷயம் இது- மொழி இப்படிதான் இருக்க முடியும். ஓய்வின்றி, முரட்டுத்தனமாய், சொல்லமைப்பைக் கொண்டு மொழி நம் அனுபவத்தை நிறைக்கிறது. நம்மைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் அடையும் சிக்கலான உணர்வுகளையும் அவற்றின் அடர்த்தியையும் ஓரளவுக்காவது தன் மொழியில் வெளிப்படுத்துபவனை நாம் உயர்வாய் மதிப்பது இதனால்தான்”.

இந்த இடத்தில் ஒன்று சொல்லலாம். நம் எதார்த்த அனுபவம் தெளிவற்றதாக இருக்கிறது என்பது உண்மையானால் மெய்ம்மையின் ஒப்புமையாதலை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு இலக்கியம் அதை எவ்வாறு அணுக முடியும்? ஓர் இலக்கியப்புனைவு புற விவரணைகளைத் துல்லியமாக விவரிக்கும்போதே  அது அளிக்கும் முழுமையான தரிசனம் தெளிவற்றதாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்  உண்மையின் ஒப்புமையாவதற்கும் அப்பால் தெளிவின்மைக்கு  ஒரு மதிப்பு உண்டு என்றும் சொல்ல இடமிருக்கிறது.

முந்தைய கட்டுரை ஒன்றில் கிரெகரி பேட்சன் என்ற மானுடவியலாளர் பாலி ஓவியங்கள் மற்றும் கலை குறித்து எழுதியதைக் குறிப்பிட்டிருக்கிறேன். நோக்கங்கள் கொண்ட, பிரச்சினைகளைத் தீர்க்கும் விழிப்பு நிலை மனதை உயர்ந்த இடத்தில் இருத்தி , நனவிலியை நோக்கும் வழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்தள்ளும் நவீன உலகின் போக்கைப் பற்றிய தன் பதைப்பை அவர் பதிவு செய்கிறார்.. எப்போதும் இந்த உலகை இனம் பிரித்து புரிந்து கொள்ளும், அதனால் பிரச்சினைகளை வளர்த்துக் கொள்ளும், உத்தி சார்ந்த உந்துதலைக் குடைசாய்த்து, குழப்பும் தன்மை கொண்டிருப்பதே தெளிவின்மையைக் கைகொள்ளும் கலையின் நோக்கமாக இருக்கலாம் என்கிறார் அவர். எனவே ஒரு சவ ஊர்வலம் பற்றிய ஓவியம், லிங்கக் குறியாகவும் வாசிக்கப்படலாம் என்றால் (ஓவியத்தின் மத்தியில் இடுகாட்டின் உயர்ந்த கோபுரம், இரு புறமும் வட்ட வடிவில் இரு யானைகள்), அந்த ஓவியத்தின் கூறுகளாய் நாம் காணும் எதைப் பற்றியும் அந்த ஓவியம் பேசுவதாகக் கொள்ள வேண்டியதில்லை. மாறாய், அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புறுதலின் சாத்தியம் குறித்துச் சிந்திக்க நம்மை அழைப்பதாகக் கொள்ளலாம். எனவே கருவி நோக்கம் கொண்ட மனநிலையைவிட தியானத்துக்குத் தக்க மனநிலையைத் தெளிவின்மை ஊக்குவிக்கிறது- உலகு செறிவு நிறைந்த சிக்கல் எனும் மர்மத்தின் வெளிச்சத்தில் கண்கூசி நின்று மதிக்கச் செய்கிறது- நேரடியாய் களத்தில் குதித்து எதிர்கொள்ளும் நம் உந்துதலுக்கு அது இடமில்லாமல் செய்கிறது…

டி. ஹெச். லாரன்சும் பேட்சனின் எண்ணத் தடத்தையொட்டியே சிந்தித்தார் என்று சொல்லலாம். 1925ஆம் ஆண்டு அவர் நாவலுக்குரிய உயர்ந்த இடத்தைச் சுட்டும்போது, எம்ப்சன் தெளிவின்மை குறித்து வெளிப்படுத்தும் உற்சாகத்தின் முன்னோடியாகிறார். புனைவு வெளியினுள், “உலகில் உள்ள அனைத்தும் பிற அனைத்தினோடும் உறவு பூண்டிருக்கிறது“, எனவே எதுவொன்று குறித்தும் நாவல்கள் தீர்மானமான நிலைப்பாடு எடுக்க முடியாது என்பதையே நாவல் வடிவின் மகோன்னதம் என்றார் அவர். தால்ஸ்டாய் கிறித்தவ லட்சியங்களை “பதுக்கி வைத்திருக்கலாம்“, ஆனால் சிறந்த ஒரு நாவலாசிரியன் வாழ்க்கையின் செறிவான சிக்கல்களில் கவனம் செலுத்தி எழுதும்போது, நாவலின் பிற கூறுகளுடன் தொடர்புறுத்தி வாசிக்க வேண்டிய பலவற்றில் ஒன்று மட்டுமே அது என்ற நிலைக்குத் தன் நோக்கத்தை ஒடுக்கி விடுவான் என்கிறார் அவர். இப்படி அவர் சொல்வதில் ஒரு சுவையான புதிர்த்தன்மை இருக்கிறது…

எனவே நாவல், “அறிவுறுத்தும் பொய்களைச் சொல்ல விடாது,” என்று முடிக்கிறார் லாரன்ஸ். பேட்சன் போல் அவரும் கலையை அதன் எதிர்ப்பாற்றலுக்காக, அதன் எதிர்மறை இயல்புக்காக, போற்றுகிறார். இங்குதான் நாம் இன்னும் பின் சென்று  கீட்ஸின், “எதிர்மறை ஆற்றல்”  என்ற கருத்துருவாக்கத்தில் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதை  உணர்கிறோம்- “எந்த தகவலையும் தர்க்கத்தையும் தேடிச் செல்லாமல் ஒருவன் நிச்சயமின்மைகளில், மர்மங்களில், சந்தேகங்களில் நீடித்திருக்கும் போதுள்ளது“-

அவ்வளவுதான் விஷயம், இல்லையா?  தெளிவின்மை, நிச்சயமின்மை, பல்விரிவு இவை இலக்கியத்தின் நேர்மறைக் கூறுகள்- மனதின் மேலாதிக்கம் செலுத்தும், கருவி நோக்கச் செயல்பாட்டால் ஊறு விளைவிக்கக்கூடிய தீச்செயல் இறுமாப்புக்கு மாற்றாய், இவை இருக்கும்வரை. இதுவெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் கலை இந்த இயல்பை எட்ட வேண்டுமென்றால், கலைஞன் நனவிலி வெளிப்படக்கூடிய மெய்யான திறப்பு கொண்டவனாக இருக்க வேண்டும். எதுவெல்லாம் பகுத்தறியவும் கட்டுப்படுத்தவும் முனையும் நடத்தைக்கு வெளியே இருக்கிறதோ, அது அனைத்துக்கும் அவன் தன்னைத் திறந்து வைத்துக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்கிறார் பேட்சன். இதை லாரன்ஸும் ஏற்றுக் கொள்கிறார். நாவல் அறிவுறுத்தும் தன்மை கொண்டதாக இருக்கக்கூடாது என்றால், தான் விவரிக்கும் உலகு தன்னுள் வெளிப்படும் வகையில் உண்மையாகவே திறந்த மனம் கொண்டவனாக இருக்க வேண்டும் நாவலாசிரியன். அப்போது தன் பிரதியுள் அவன் பல்விரிவை நுழைய அனுமதிக்கும்போது, அது  சரிகளைத் தேர்ந்தறியும் அற்பப் பழக்கத்தைச் சாய்த்து விடுகிறது.

நன்றி – Clearing Up Ambiguity, Tim Parks, The New York Review of Books, September 1, 2015 

முத்துப்பிள்ளை

தி வேல்முருகன்

மணி 4.15க்கு கடைசியாக டிங் டிங் டிங் என்று ராகத்தொடு ஆரம்பித்து டாங் டாங் என்று முடிந்தபோது அவனுக்கு முன்னால் மனம் சென்று விட்டது வீட்டிற்கு.

வரிசையாகதான் செல்ல வேண்டும். 4வது வாத்தியார் வாசலில் நின்று கொண்டு ஓவ்வோரு வகுப்பாக வெளியே விட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் அ, ஆ என இரண்டு பிரிவுகள் உண்டு. இவனது பிரிவு வந்தபோது முதல் ஆளாக பிடித்த ஓட்டம் வீடு வரும்வரை தொடர்ந்தது.

தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை- சனி, ஞாயிறு என்று மனம் கணக்கிட்டது. மரமேறி மாங்காயும் கொய்யாக்காயும் பறித்து திங்கனும், கொடுக்காப்புளி அடித்து திங்கனும் என்று நினைத்துக்கொண்டே ஓடிய ஓட்டத்தில் சீக்கிரம் வீடு வந்து விட்டது.

குடத்தில் வாயை வைத்துச் சாய்த்துக் குடித்தபோதுதான் பார்த்தான், ஊரிலிருந்து ஆயா வந்திருந்தார். உடனே அனைத்தும் மறந்து விட்டது, இப்போது அவனுக்கு ஆயாவுடன் ஊருக்குச் செல்ல வேண்டும்.

“ஆயா, எப்ப வந்திங்க?”

“ஒரு மணி வண்டிக்கு வந்தேன்டி”

“ஆயா, ஊருக்கு நானும் வரேன். எனக்கு இரண்டு நாள் லீவு”

“மாராசனா வாடி”

அம்மா இடையில் புகுந்து, “வாண்டாம், அவன் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்,” என்றார்.

“நான் கேட்கிறேன் ஆயா, நீ சொல்லு ஆயா”

“இல்லம்மா… பொழுது போயிடும், நீ எப்படிம்மா இவனை இட்டுட்டு தனியா போவ?”

“புள்ள ஆசைப்படுறான், மோட்டையன பொட்டி வண்டி கொண்டு வரச் சொல்லி இருக்கேன், இவனை அனுப்பும்மா”

“ஏய், மாத்து துணி எடுத்துக்க, ஆயாவை தொந்தரவு பண்ணாம பார்த்து இருந்துட்டு வா”

“சரிம்மா”

பையை எடுத்த அவன் ரயில்வே ஸ்டேஷன் வரும்வரை கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆயா பொறுமையாக பதில் அளித்தார். டிக்கெட் எடுத்து ரயில் ஏறியதும் ஐன்னலை ஒட்டி நின்று கொண்டு, ஓட தொடங்கியதும் காட்சிகளைப் பார்த்து, “ஆயா, இது வெள்ளாறு, இது பழையாறு, இப்ப கிள்ளை வரும் பாரு,” என்றபோது வந்துவிட்டது கிள்ளை.

“யம்மா, அரும்பு, அரும்பு… குண்டுமல்லி, குண்டுமல்லி…”

அவனும் சேர்ந்து ராகம் வைத்ததில் அந்த அக்கா கோபத்துடன் திரும்பியதும் இவன் ஆயா பின்னாடி ஒளிந்து கொண்டான்.

ஆயாவைப் பார்த்தவுடன், அத்தே எங்க, மகவூட்டுக்கு போயிட்டு வரியா?” என்றாள் அந்த அக்கா.

“ஆமாண்டி பவூனு”

“நல்லா இருக்கா உம் புள்ள?”

“இருக்காடி. நீ எங்க இங்க நிக்கற? என்னாச்சுடி, கட்டிக் குடுத்த இடத்தில பிரச்சினையா?”

“இதாரு, உம் பேரனா?”

“ஆமாண்டி. நீ ஊருக்கு வரதுல்ல, வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்”

“குடிகாரன் அத்த, அத ஏன் கேட்கற? குடிச்சுட்டு அடிப்பான், குடிக்கலனா சந்தேகப்பட்டு அடிப்பான். தாலியத் தவிர நிலம் நட்டு ஒன்னுடாம குடிச்சு அழிச்சாட்டியம் பண்ணி இப்ப பத்தாயிரம் பணத்தோட வாடின்னு சொல்றான். அப்பா, அம்மாவுக்கு வயசாயிடுச்சு. ஒரு ஏக்கர் நிலத்தை வித்துதான் என்ன கரையேத்துச்சு, இப்ப இங்கே திரும்ப வந்து சீரழியணுமானுருக்கு”

கண்ணீர் துளிர்த்து இரண்டு கண்ணிலும் வழிகிறது.

“அழாதடி, நான்லாம் இல்லையா?புள்ளகுட்டில விட்டுவிட்டு அவரு போனதும் வானமே இடிஞ்சு தலை மேல விழுந்த மாதிரி இருந்துச்சு. நான் மீண்டு வரல? என்ன, எம்மவன்தான் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்”

“இல்லத்த… புள்ளைவோ இருந்தா முகத்த பார்த்துட்டு இருந்திடலாம். இங்கே அண்ணிவோ எல்லாம் தப்பா பேசறாளுவோ, உயிர உட்டுடலாம் போலிருக்கு. நான் ஏன் இருக்கணும், நீ சொல்லு?”

எதிர் திசையில் வந்த இரயில் வேகமாய் கடந்து சென்றது. ஆயா அக்காளின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அவசரப்பட்டுடாதடி காலம் மாறும். வந்து புருஷன் இட்டுப் போவான், பவுனு அவசரப்பட்டுடாதடி” என்று சொன்னாள்.

அக்கா இவனை அழைத்து இரண்டு கன்னத்தையும் வழித்து நெட்டி முறித்து முத்தம் கொடுத்தார்.

இரயில் நின்றதும் அக்கா இறங்கிக் கொண்டார். அது மீண்டும் புறப்பட்டதும் சிறிது தூரம் வரை வந்து கையாட்டினாா், ஒரு கண்ணில் கோடாககண்ணீர் தெரிந்தது.

ஆயா கண்ணிலும் நீர். வேறெங்கோ சென்றிருந்தார். இவன் வெளியே பார்த்தான். வண்டி சிதம்பரம் தாண்டி பழங்கொள்ளிடம் வந்து விட்டது.

“ஆயா, வந்துடுச்சி”

வெளியில் பார்த்து, உடனே பையோடு எழுந்தார். “சும்மாவா சொன்னாங்க, சாண் புள்ளனாலும் ஆண் புள்ளதான். நல்ல வேளை, வண்டி போயிருக்கும், கடவுளே, யப்பா கைய புடிச்சுக்கடி”

இறங்கிப் பார்த்தபோது மொட்டைப்பிள்ளை வண்டி பூட்டிக் கொண்டிருந்தார்.

இருவரும் ஏறியபிறகு பொட்டி வண்டி நகர்ந்தது. ஆயா, மொட்டப்பிள்ளையிடம், “இந்த ஊட்டுகாரன பார்த்தியா? சாயந்திரம் செம்மறி ஆட்டப் புடுச்சுகிட்டு மேற்கே போனான்” என்று கேட்டாள்.

“ஆடா? எப்ப ஆயா வாங்கினிங்க?”

“இவன் ஒருத்தன்… அந்தக் கூத்த அங்க வந்து பாரு”. ஆயா வருத்தத்துடன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வெளியே வேடிக்கை பார்த்தான்.

செம்மண் சாலை அது. வண்டி கேட்டை தாண்டியதும் மாடுகள் தீனியை நினைத்து மெல்லோட்டமாக சென்றன. இருபுறமும் வரிசையாக வேலி, இடையில் புளி, மா மரங்கள். ஆடு மாடுகள் மேய்ச்சல் சென்று வழியை அடைத்து கொண்டு வந்தன. வண்டி தேங்கி, பின் சென்றது. அடிவானில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது, அதன் ஒளி அவன் மேல் விட்டுவிட்டுப் பட்டது.

அவன் முன் நகர்ந்து மொட்டைப்பிள்ளையிடம், “மாமா, செம்மறி ஆடு முட்டுமா?” என்று கேட்டான்.

“ஏலே முட்டிடும். படிக்கிற பையன் நீ கிட்ட கிட்ட போயிடாத”

அவனுக்கு வருத்தமாகிவிட்டது.

வண்டி கிழனையை விட்டு இறங்கியது. இருபுறமும் சொய்சா மரங்களில் கீச் கீச் என்று பறவைகள் சத்தமிட்டதைக் கேட்டு அதிசயத்தான்.

சிறிது நேரம்தான், அவன் தளர்ந்து தூங்க ஆரம்பித்ததும், “எப்பா போழுது போன நேரம் தூங்காதடி… ஆயா கதை சொல்றேன்,” என்று எழுப்பிவிட்டாள் ஆயா.

“ஏ மொட்டைப்பிள்ளை, வண்டிய எட்டி ஓட்டு. போயி விளக்கு வைக்கணும் பாரு”

“ஆயா, கத?”

“சொல்றண்டி.

“…ஒரு ஊர்ல ஒரு ஆம்படையான் பெண்டாட்டி இருந்தாங்க, அவங்களுக்கு இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தைகள் இருந்துச்சு. பெரிய பொண்ணு கட்டிக் குடுத்து ஒரு பேரன் பிறந்த பிறகு அவரு குடிச்சுக் குடிச்சு உடம்பு சரியில்லாமப் போய் செத்து போயிட்டாரு. அப்புறம் அந்தம்மா இன்னொரு பொண்ணயும் எப்படியோ கட்டிக்குடுத்துட்டு படிக்காத பையன வச்சிக்கிட்டு கஷ்டப்படுது”

“ஏன் ஆயா அழுவுற?”

“ஏலே, கம்முனு வா,” என்று அதட்டினார் மொட்டைப்பிள்ளை.

“பூவோட சேர்ந்தா மணக்கும், இது பன்னியோடல்ல சுத்துது,” என்றார் ஆயா.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

வீட்டின் வாசல் கேட்டில் ஒரு செம்மறியாடு கட்டியிருந்தது.

“மாமா…” என்று அவன் ஓடிப்போய் பார்த்தபோது அதற்கு புல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி புல்லை உதறித் திங்கும்போதும் அது தலை ஆட்டும்போதும் ஒலியெழுப்பியது.

“மாமா, முட்டுமா?”

:கிட்ட கிட்ட போயிடாத, சன்டை பழக்கி வச்சிருக்கேன்,” என்று மண்வெட்டியின் அடிபாகத்தை காண்பித்தார் மாமா. ஆடு பாய்ந்து வந்து முட்டியது. அவன் பயந்ததைப் பார்த்துச் சிரித்தார் அவர்.

“குடுத்தனக்காரன் செய்யற வேலையா இது?” என்று சத்தம் போட்ட ஆயா, மாமா முறைத்ததும் உள்ளே சென்று விட்டார்.

“மாமா, ஆட்டுக்கு பேர் வச்சிட்டியா?”

உள்ளிருந்து, “விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம்தான் கொறச்ச,” என்றார் ஆயா.

மாமா, “யேய், பேரு முத்து. முத்து…”, என்றார் கிசுகிசுப்பாக.

ஆட்டைப் பார்த்தான். கருப்பில் மரை கலரில் பெரிய கொம்புடன் இருந்தது.

“முத்து,” என்று பில் அள்ளிக் கொடுத்தபோது அதைத் தின்று விட்டு முட்ட வந்தது அவனை. “மாமா…”

“ஏய், பழகற வரைக்கும் அப்படிதான் இருக்கும். கிட்டப் போகாத, எட்ட இருந்து குடு”

ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள்.

சாப்பிட்டுவிட்டுப் படுக்கும்போது மாமா அவனிடம், :நாளைக்கு நம்ம முத்துவ இன்னோரு ஆட்டுக்கூட சண்டைக்கு உடப் போறேன். நீனும் வா,” என்றார்.

“ஏய், உன் போக்கிரித்தனம்லாம் அவனுக்கு சொல்லி குடுக்காத,” என்றார் ஆயா. அவர் வருத்தமா இருப்பது தெரிந்தது. மாமா திரும்பிப் படுத்து கொண்டார். இவனும் தூங்கிவிட்டான்.

மொட்டைப்பிள்ளை மாமா கழுத்தில் மாலையுடன் கையில் தீச்சட்டி ஏந்தி ஆடிக்கொண்டிருக்கிறார். அருகில் பூசாரி மிகப் பெரிய கொடுவாள் கத்தியுடன் நின்றாடுகிறார். கத்தியில் பட்டை பூசி பொட்டு வைத்து கூம்பில் பூச்சூட்டியிருந்தது. மாமா ஆட்டைப் பிடித்திருக்கிறார். ஆடு பரிதாபமாக இவனைப் பார்க்கிறது. ஆட்டை வெட்டப் போகிறார்கள் என்று உணர்ந்து அலறி எழுந்து விட்டான்.

மாமாவைத் தேடிப் போனால், ஆடு புல்லைத் தின்று கொண்டிருக்கிறது. மாமா அதைத் தடவி கொடுத்துக் கொண்டு நின்றார்.

இவனை பார்த்து, “போயி பல்ல விளக்கு, சாப்பிடு, நாம வெளியே போகணும்” என்கிறார்.

அவன் தட்டை எடுத்து வைத்ததும், இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் இட்டுக் கொடுக்கிறார். அது ஏலக்காய் போட்டு அமிர்தமாக இருந்தது.

“ஆயா எங்க மாமா?”

“ஏதோ செய்தி வந்து முட்லூர் போயிருக்கு. உன்னைத் தண்ணிக்கு போகாம வெள்ளாடச் சொல்லியிருக்கு. சாப்பிடு, கொல்லைக்கு போவோம்.”

“சரி மாமா”

மாமா முத்தை அவுத்துப் பிடித்துக்கொண்டு முன்னாள் நடந்தார். இவன் அவர் பின்னால் நடந்தான்.

முத்தின் விதைமணி தொடையில் உராய்ந்ததால் அது காலை அகட்டிக் கொண்டு பெண்கள் மாதிரி நடந்தது. இவன் சிரித்து விட்டான்.

“என்னடா சிரிக்கற?”

“இல்ல மாமா, ஆடு பொம்பளை மாதிரி நடக்குது”

“வக்கால…” என்று அடிக்க வந்தார் மாமா. இவன் அமைதியாகி விட்டான்.

இருபுறமும் சோளம் விளைந்து ஒடிக்கும் பதத்தில் இருந்தது. மாமாவிடம் கேட்க பயம், அவன் எதுவும் பேசாமல் நடந்தான். மாந்தோப்பு வந்ததும், “ஏய் சோளம் சுடுமா?”| என்று கேட்டார் மாமா.

“சரி, மாமா. ஆட்டுச் சன்டை எப்ப? நம்ம முத்து செய்ச்சுடுமா?”

“குட்டியா வாங்கி பழக்கி வச்சிருக்கேன். வெறும் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, புல்லுனு கொடுத்து வளத்திருக்கேன். சொன்னதைச் செய்யும். சாயந்திரம்தான் போட்டி”

ஆட்டை அவிழ்த்து தெரித்து விட்டுவிட்டு இளம் சோளக் கதிராக ஒடித்து வந்து தீ முட்டி இட்டார். பதமாக வாட்டி அவனிடம் இரண்டு கொடுத்து விட்டு தீயில் மர்ளிக் கிழங்குகளைச் சொருகினார்.

அருகில் குருவிகள் விரட்டும் பரண் பந்தல் இருந்தது.

“யேய், இப்ப பாக்கிரியா…”

“உய், உய், உய்ய்ய்ய்ய்ய்…” என்று விசிலடித்ததும் முத்து தாவி பறந்து ஒடி வந்தது. அவன் பயந்து பரன் மேல் ஏறிவிட்டான். முத்து சுற்றி வந்து மாமா மேல் உரசிவிட்டு தீயை ஒரே தாவலாக தாவிச் சென்றது. மாமா கிழங்கும் சோளக் கதிருடனும் மேலேறி வந்தார்.

“என்னடா பயந்திட்டியா? நம்ம முத்து எப்படி பாத்தியா?”

“மாமா, அந்த ஆட்டுப் பேரு என்ன?”

“குட்டி மணிடா”

“பெருசா இருக்குமா?”

“நம்ம முத்து பெருசுதான், ஆனால் குட்டி மணி கொஞ்சம் சூட்டிகைடா”

“அப்ப முத்து தோத்துடும்”

மாமா, “யாய்,” என்று கையை ஓங்கியதும் அமைதியாகிவிட்டான். மீண்டும் விசிலடித்து முத்துவைக் கூப்பிட்டார். முத்து தாவி ஒடி வந்து பரணைச் சுற்றியது.

மாமா கீழிறங்கிப் போய் விட்டார். இவன் அருகில் இருந்த டின்னில் சிறிது மோளமடித்தான், குருவி எதுவும் இல்லை. உற்சாகம் இழந்து கீழிறங்கி மாமாவுடன் சேர்ந்து கொண்டான்.

“ஏய், அடிக்க மாட்டன் வா குளிக்க போவம்”

“எங்க போயி மாமா?”

“நம்ம இன்ஐின்லதான்”

மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வந்து இன்ஐினில் மாட்டிச் சுற்றினார். அது அசக், அசக், என்று தொடங்கியதும் சாவியை அவசரப்பட்டு எடுத்து விட்டார். சுற்று பத்தாமல் அச்சக் என்று நின்று விட்டது. மீண்டும் சாவியை மாட்டி இம்முறை கைகளில் மண்ணைத் தொட்டு கபடி வீரன் போல் சுற்றினார். இஞ்சின் அசக் அசக் அசக் என்று ஸ்டார்ட் ஆகிவிட்டது, சாவியை எடுக்க முடியவில்லை.

“ஏலேய், ஓடிடு. சாவி மாட்டிக்கிச்சு”

அவன் ஓடத்தொடங்கியதும் எதிர்ப்புற மரத்தில் இருந்த பாம்பு தாவியது. இவன் பயந்து மிரண்டு வந்த வழியே திரும்பவும் சாவி முன்னாள் விழுந்தது. பதறி நின்றவனை அடித்து விட்டார் மாமா. அழுது கொண்டே, “மாமா, அங்கே பாரு பாம்பு,” என்றான்.

“ஏலேய் நல்லதுடே”

அழுகையை நிறுத்தி, “அடிப்பமா?” என்று கேட்டான்.

“ஏய், அத அடிக்க முடியாது, போட்டுடும்”

“வா, குளிச்சு விட்டு ஆட்ட சண்டைக்கு விட இட்டுட்டு போவம்”

அவன் பார்க்கும்போதே நல்லது திரும்பி பூவரசு மரத்தில் ஏறி பொந்தில் இறங்கியதும், “மாமா பாம்பு அந்த ஓட்டையிலருக்கு, நான் பார்த்துட்டன்”, என்றான்.

“யேய், வாடா, வந்து குளிடா,” என்றார் மாமா.

அவன் மரத்தைப் பார்த்துக் கொண்டே குளித்தான். இன்ஜினை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்வரை தன் பார்வையை விலக்கவில்லை.

“பசிக்குது மாமா…”

தென்னையேறி இளநீர் போட்டு இன்ஐின் கொட்டாயில் இருந்து சூரிக்கத்தி எடுத்து சீவிக் கொடுத்தார். குடிக்கத் தெரியாமல் மேலெல்லாம் ஊற்றிக் கொண்டு புரையேரியது இவனுக்கு. அடிக்க கையை ஒங்கியவர் விட்டு விட்டார், இவனும் மௌனமாகி விட்டான். குளித்து தலை துவட்டியதால் முடி படிந்திருந்தது.

“ஏய், தேங்காய தின்னு”

“நீ தின்னு, எனக்கு வாணாம்”

முறைத்து விட்டு மாமா விசிலடித்ததும் மேய்ந்து கொண்டிருந்த முத்து மான் போல துள்ளி ஒடிவந்தது. உற்சாகமாகி, “மாமா, மாமா, நான் தரேன்,” என்றான். முத்து ஆவலோடு கையில் இருந்த தேங்காயைத்
தின்றது.

“சரி வா, போவும்”

முன்னும் பின்னுமாக முத்துவுடன் நடந்து மேடு இறங்கியதும் தூரத்தில் ஆற்றுக் கரம்பில் ஆடுகள் மேய்வது தெரிந்தது நெருங்கியதும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாலேசன் வந்தார்.

“ஏய் பாலேசா, மணிய பிரிச்சு கொண்டு வா. சண்டை உடணும்”

” வாணாண்ணன், ஓ ஆடு தோத்துப்புடுச்சுனா நீ என்ன அடிப்ப, நான் வரல”

“ஏலே, இப்ப பிரிக்க போறியா, உத வாங்கப் போறியா?” சூரிக்கத்தியை எடுத்தார் மாமா. பாலேசன் அவரது ஆட்டைப் பிரிக்க சென்றதும் மாமா முத்தின் தலைக் கயிறு, மணிக்கயிறு எல்லாம் அவிழ்த்தார், முத்து முண்டம் போல் தெரிந்தது. தட்டித் தட்டிக் கொடுத்தார். முத்து, தன் தலையை ஆட்டிக் கொண்டு, மண்ணை முன் காலால் கிளறி ரோமாஞ்சனம் கொண்டு சிறிது மமதையுடன் நின்றது. அவன் மனதில் முத்து ஐெயிக்கனும் என்று வேண்டிக் கொண்டு திரும்பியபோது குட்டி மணிய்ஹை பெட்டைகளின் பின்னிருந்து பாலேசன் பிரித்துக் கொண்டு வந்தார்.

பத்தடி தூரத்தில் ஓன்றை ஓன்றை பார்க்கும்படி நிறுத்தி, பாலேசன் “உம்”, என்றதும் மிக அலட்சியமாக குட்டி மணி முத்தை எதிர்கொண்டது. முதலில் ஓரே சீராக இரண்டும் முட்டிக் கொண்டன. சிறிது சிறிதாக உச்சபச்ச வேகத்தை அடைந்தது சண்டை. தொடர்ச்சியாக பின்னகர்ந்து முன்னேறி இரு ஆடுகளும் முட்டிக் கொண்டன. முத்து சோர்ந்து போகாமல் சண்டை போட்டது, இறுதியில் குட்டிமணி சோர்ந்து ஓவ்வோரு அடியாக பின்னகர்ந்து மந்தையினுள் பாய்ந்தோடி மறைந்தது. மாமாவும் அவனும், “ஏய்…” என்று கத்திக் கூப்பாடு போட்டனர். பாலேசனைப் பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு.

முத்து பெருமிதத்துடன் நடந்து அங்கிருந்த பெட்டையை மோப்பம் பிடித்து மூக்கைச் சுழித்து தலையை உயர்த்திய தருணத்தில் எங்கிருந்தோ குட்டி மணி பாய்ந்து வந்து முத்துவின் பின்புறம் சரியாக விதைமணியில் குத்தித் தூக்கியது.

“மே…” என்ற அதன் அலறலில் அதிர்ந்து அவனும் மாமாவும் ஓடிச் சென்று முத்தைத் தூக்கினர். முத்தால் நிற்க முடியவில்லை. கால் நடுங்கி சிறுநீர் கழித்தது. பின் கிழே ஒருக்களித்து, கத்திக்கொண்டு விழுந்தது. மாமா ஆவேசம் கொண்டு குட்டிமணியை வெட்டப் பாய்ந்தார்.

“மாமா, வாணாம்” என கத்தினான் அவன். பாலேசனும், “வாயில்லா ஐீவன், வாணாம்ணே” என்று கும்பிட்டதும் கத்தியை விட்டெறிந்துந்து விட்டு மாமா முத்தை தூக்கப் பார்த்தார், அவரால் முடியவில்லை. அவனும் சேர்ந்து தூக்கிப் பார்த்ததில் முத்து அசையவில்லை.

மாமா மவுனமாக அழுதுகொண்டு நின்றார். இவனுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. மாமா அவனிடம், “நம்ம வண்டிய கொண்டு வரன். ஏய், பார்த்துக்க, ஆயாகிட்ட மூச்சு உடக்கூடாது”, என்று வாயில் விரலை வைத்து காண்பித்தார் .

முத்தைப் பார்த்தான். பாவமாக இருந்தது கண்ணில் நீர் துளித்துளியாக சொட்டியது. இவன் நெற்றியைத் தடவிவிட்டான். அவன் கையை அது நக்கிய போது உடல் சிலிர்த்தான்.

வண்டி நெருங்கி வந்தது. அவன் தன் ஆயாவைத் தேடினான். அவர் அங்கில்லை.

“என்னடா பண்ணீங்க?” என்றார் மொட்டைப்பிள்ளை.

இவன் ஒன்றும் சொல்லவில்லை. ஆடு கால் மாட்டி விழுந்துவிட்டதாக மாமாதான் சொன்னார். அவர் நம்பவில்லை, “ஏன்டா இது பாவத்த எடுத்துக் கொட்டினிங்க” என்று வருத்தப்பட்டார்.

முத்துவால் எழ முடியவில்லை. மொட்டைப்பிள்ளை கை கொடுத்து தூக்கி முத்துவைத் தூக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை, பிறகு மாமாவும் சேர்ந்து தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். வலியில் அது கத்தியது. மாமா வண்டியை நேராக கிழக்கே வைத்தியரிடம் விடச் சொல்லிவிட்டு முத்தைப் பார்த்தார். அவனால் இருவரையும் பார்க்க முடியவில்லை, பார்வையை வெளியில் திருப்பினான்.

வண்டி மனம் போல் வேகாமாய் ஓடி வைத்தியர் வீட்டில் நின்றது. வைத்தியர் தன் வேட்டியை மடித்துக் கட்டி அதை நிறுத்த பச்சை பெல்ட் கட்டி இருந்தார். நல்ல உயரம். கருப்பு. ஒடிசலான உடம்புக்கு இடுப்பில் இடது கையால் முட்டுக் கொடுத்திருந்தார். வலது கையில் சுருட்டு புகைந்த நெடி சுழன்று அடித்தது.

வைத்தியரிடம் மாமா நடந்ததைச் சொன்னார்.

“ஏலேய், அடுத்தவன் பெண்டாட்டிய தொட்டா சும்மா விடுவானா?” என்றார் வைத்தியர் சிரித்துக் கொண்டே. பின்னர், அவர் முத்துவை எழுப்பி தடவிப் பார்த்தார், வலியில் “மே…”, எனக் கத்தியது. மருந்து கொடுத்தார், அதன் நாக்கை இழுத்து, உள்ளுக்கு.

“ஏலேய், வர்ம அடி பட்டிருக்கு. வித்துடு,” என்றார் மாமாவிடம். மாமா அழுதார், அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

“சரி, போயி சோறு வடிச்ச தண்ணியில மஞ்சள் பொடி போட்டு சுடவச்சு தடவி விடுங்க. ரத்தக்கட்டு கரையும், காலையிலே வரன்,” என்றார் வைத்தியர்.

இரவாகிவிட்டது. முத்தை இறக்கும்போது ஆயா, “இது என்னடா கொடுமை! அய்யோ என்னடாச்சு,” என்று அலறினார்.

நடந்த விஷயத்தை மொட்டைப்பிள்ளை மாமா விரிவாகச் சொன்னார். ஆயா சத்தமில்லாமல் அழுதார், அவர் தலைக்கு குளித்திருந்தார். அவனைப் பார்த்து, “ஏலேய், நேற்று இரயிலடில பார்த்தம பவுனு… அவ மருந்தக் குடிச்சுட்டு செத்துப் போயிட்டாடா…” என்று அழுதுகொண்டே சொன்னார். அப்புறம், “இன்னும் நான் என்னவெல்லாம் பாக்கணுமோ,” என்று மாமாவைப் பார்த்துச் சொன்னார். மாமா தலையைத் திருப்பிக் கொண்டார். ஆயாவின் முகம் ரொம்ப சோகமாக இருந்தது, அவன் கேவிக் கேவி ஒலமிட்டு அழ ஆரம்பித்தான். ஆயா, மாமா, மொட்டைப்பிள்ளை யார் சொல்லியும் அவன் அழுகை அடங்கவில்லை.

ஆயா மோட்டப்பிள்ளையிடம், “காலை முதவண்டியில் இவனை கொண்டு விட்டு வா”, என்றார். அவனுக்கு அப்பொதே அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. பிறகு மாமாவையும் முத்துவையும் பார்த்துச் சமாதானமானான். ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள். மாமா முதலில் மறுத்து, பிறகு இவன் வற்புறுத்தியதும் சாப்பிட வந்தார்.

முத்து தண்ணீர், தீனி எடுக்கவில்லை. அசையும் போடவில்லை. “யே மொட்டைப்பிள்ளை, கசாப்புக்காரனைக் கூப்பிட்டு வா,” என்று ஆயா சொன்னார்.

சிறிது நேரத்தில் கசாப்புக்காரன் ஒரு ஆளோடு வந்தார். மாமா குடுகுடு என்று ஓடி வீட்டிலிருந்து சுலுக்கியோடு வெளிவந்து, “ஏலேய், எவனாவது ஆட்டத் தொட்டிங்க, குடல சரிச்சுடுவன்,” என்று கத்தினார்.

முத்துவின் சன்னமான முனகலைத் தவிர வேறு சப்தமில்லை. சிறிது நேரம் பொருத்து கசாப்புக்காரர், “தம்பி பொழைக்காதுப்பா,” என்றார். மாமா கீழே குனிந்து தேடினார். திண்ணையில்யில் தராசுப் படிகல் இருந்தது. அதை எடுத்து எறிந்ததும், “நான் போறன்டா சாமீ, நீ இஷ்டப்படி செய்டா யப்பா…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

மாமா ஆட்டை பார்த்து கொண்டே படுத்தார். காலை எழுந்தபோது முத்து செத்து விறைத்திருந்தது.மாமா சன்னமாக அழுதார். இவனை பார்த்ததும் கேவி அழுதார். ஆயா, “இப்படி கொள்ளை போவத்தான் இப்படி மாங்கு மாங்குன்னு வளந்துச்சோ… அழுவாதடா, வேற வாங்கி தரன்,” என்றார்.

அதற்குள் கேள்விபட்டு ஊர் கூடி தலைக்கு தல பேச வந்துவிட்டார்கள். ஒரு தாத்தா, “நல்ல இளம்கிடா. வெட்டி ஆளுக்கோரு கூறு போட்டா ஊரே கல அடங்கும், என்றார். தாத்தா தலை முழுக்க நரைத்து வயிறு ஒட்டி கறிசோறு கண்ணால் கண்டு பலவருசம் ஆகி இருக்கும் போல நாக்கை சப்புகொட்டிக் கொண்டிருந்தார். கூட இருந்தவர்களும் அவருடன்
சேர்ந்து ஆளாளுக்குப் பேச ஆரம்பித்ததும் மாமா, “முத்தை தொட்டிங்க உங்கள வெட்டி கறி போட்டுடுவன்,” என்று கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீச ஆரம்பித்து விட்டார். “அப்படியே கிழக்கே போங்க பொணம் எரியும். ஆளுக்கு ஒரு கையா பிச்சு தின்னுங்க,” என்றார் மாமா.

“முரட்டுப் பய”, என்று திட்டிக்கொண்டே எல்லாரும் கலைந்து சென்றனர்.

மாமா எதுவும் பேசவில்லை. எல்லாருக்கும் அவரிடம் பேச பயம்.

மாமா எழுந்து மண்வெட்டி எடுத்து குப்பை மேடு ஒரமாக குழி வெட்ட ஆரம்பித்தார். புரிந்து கொண்டு மொட்டைப்பிள்ளை மண்வெட்டியை வாங்கி பள்ளம் வெட்ட ஆரம்பித்தார்.

ஆயா வந்து பார்த்து, “பள்ளம் இடுப்ப தாண்டி ஆழம் இருக்கட்டும், இல்லனா நாய் நோண்டிடும்,” என்று சொன்னார்

பள்ளம் வெட்டிவிட்டு மொட்டைப்பிள்ளையும் மாமாவும் இருவருமாக சேர்ந்து முத்துவைத் தூக்கி வந்தனர்.

மாமா அவனிடம், “ஏய் ஓடி சிவப்பு எடுத்து வா,” என்றார். அவன் சிவப்பு கொண்டு வந்தபோது அவர் பூவுடன் நின்றார். சிவப்பும் செம்பருத்தி பூவும் வைத்து குழியில் இறக்கினர். ஆயா அழுது கொண்டிருந்தார். மாமா மண் தள்ளினார். பாதி குழியில் இருக்கும்போது பாலேசன் ஒரு செம்மறிக் குட்டியுடன் வந்து, “அண்ண, முதலாளி கேள்விப்பட்டு இந்த குட்டிய
குடுத்துட்டு வரச் சொன்னாங்க,” என்றார்.

“ஏய் நீ எடுத்துட்டு போ, எனக்கு வாணாம்,” என்றார் மாமா. ஆயா, “இருக்கட்டுமப்பா, என்று சொன்னதற்கு, மாமா முறைத்ததும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வில்லை. பாலேசன் நின்று பார்த்து விட்டு குட்டியுடன் சென்று விட்டார்.

மாமா மொட்டைப்பிள்ளையிடம் மம்மட்டியை வாங்கி அடிபம்பு ஓரம் சென்றார். அங்கு புதைத்து இருந்ததில் முன்று தென்னை நெற்றுக்கள் முளை விட்டிருந்தது. அதில் துடியாய் இருந்ததை நோண்டி வந்து மொட்டைப்பிள்ளையிடம் கொடுத்து, குழியில் வைக்கச் சொன்னார். அதன்பின், சுற்றி மூங்கில் படல் வைத்து வேலி அடைத்து சென்று வர வழியெல்லாம் வைத்தார். பிறகு அடிபம்பிலிருந்து தண்ணீர் வர வாய்க்கால் அமைத்தார்.

அவன், “மாமா இனிமேல் முத்துவ பார்க்கவே முடியாது இல்ல,” என்று கேட்டான்.

ஆயா சத்தமாக, “அங்க தோரணம் கட்டுனது போதும், வந்து சாப்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பு. இந்த ஊட்டுக்காரனையும் இட்டுட்டு வா,” என்றார்.

“மாமா, ஆயா கூப்புடுறாங்க,” என்று மாமாவிடம் போய் சொன்னான்.

“யேய் இங்கே வா, இது பேர் என்ன தெரியுதா? என்று கேட்டார் மாமா.

“தென்னம்பிள்ள, மாமா”, என்றான் அவன்.

“இல்லடா, இது முத்துப்புள்ள, முத்துப்புள்ள,” என்றார் அவர் கிசுகிசுப்பாக.

2015 ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அலெக்ஸியெவிச்சின் எழுத்து – நீனா க்ருஷ்சேவா

– நீனா க்ருஷ்சேவா-

1985. சோவியத் யூனியனில் மாற்றங்கள் நிகழத் துவங்கியிருந்த நேரம். வெயிலில் சுருண்டு விழும் ஈக்கள் போல் முதுமையடைந்த பொதுச் செயலாளர்கள் வீழ்ந்து கொண்டிருந்த காலம். நாம் கண்டு வளர்ந்த நாயகத்தன்மைகளைத் தவிர்த்து மகத்தான மானுட துயரைச் சித்தரித்தது எலம் க்ளீமோவின் “கம் அண்ட் சீ” என்ற மிகச்சிறந்த திரைப்படம். க்ளீமோவின் அணுகுமுறை இவ்வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சின் பார்வையை எதிரொலித்தது. அவரது முதல் நூல், “வார்’ஸ் அன்வுமன்லி ஃபேஸ்” முந்தைய ஆண்டு பதிப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் க்ளீமோவின் படத்தை ஏராளமானவர்கள் திரையரங்குகளுக்கு விரைந்தனர், அலெக்ஸியெவிச்சின் புத்தகம் வாசகர்கள் மத்தியில் எந்த பரபரப்பையும் தூண்டவில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. முற்போக்கு என்று சொல்லப்படும் சோவியத் யூனியன், தந்தைவழிச் சமூகமாகவே இருந்தது. பெண்கள் வேலைக்குப் போனார்கள், ஆனால் அவர்கள் அதை ஒரு தொழிலாய்க் கொள்ளவில்லை. பெண் எழுத்தாளர்கள் அழகிய கவிதைளும் உரைநடையும் எழுதினார்கள், கிட்டத்தட்ட ஆண் எழுத்தாளர்களுக்கு இணையான அதிகாரபூர்வ அங்கீகாரம் இருந்தது- ஆனால் அவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து எழுதுவதைத் தவிர்த்தார்கள்- போர் ஆண்களுக்கு உரியது. அலெக்ஸியெவிச் தன் புத்தகத்தை இவ்வாறாக தொடங்குகிறார், “உலகில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான யுத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன, அவற்றைவிட அதிக புத்தகங்களும் இருக்கின்றன.. ஆனால் போரைப் பற்றி நாம் அறிந்ததெல்லாம் ஆண்களால் சொல்லப்பட்டவை”.

ஆண்களும் நிறைய சொன்னார்கள். “”நாம் பள்ளிகளிலும் வீட்டிலும் திருமணங்களிலும் பெயர்சூட்டு விழாக்களிலும் விடுமுறைகளிலும் ஈமச்சடங்குகளிலும் எப்போதும் நாம் போரை நினைவுகூர்ந்தோம்,” என்று எழுதுகிறார் அலெக்ஸியெவிச்சின் , “நம் ஆன்மாவை இல்லமாய்க் கொண்டு போரும் போருக்குப் பிற்பட்ட காலமும் உறைந்திருக்கின்றன” ஆம், அவரது புத்தகம் வெளிவருவதற்குமுன் நான் போர் பற்றி நிறைய அறிந்திருந்தேன், அது பற்றி மேலும் அறிவதற்கு ஆர்வம் இல்லாத அளவுக்கு அறிந்திருந்தேன்; துயரம், தியாகம், சாகசம், வெற்றி- எந்தக் கோணத்திலும் போர் குறித்த செய்திகளில் நாட்டம் இருக்கவில்லை.

பத்தாண்டுகள் கடந்து செல்வோம். பாலின வேறுபாட்டின் அரசியல் குறித்து அமெரிக்காவில் பெரிய அளவில் பேசப்படுகிறது. இங்கு பட்டக்கல்வி பயிலும் மாணவியாக இருக்கும் நான், இந்த விஷயத்தில் பின்தங்கி இருப்பது குறித்து சங்கடப்பட்டேன்.. எனவே, ஒரு வழியாக வார்’ஸ் அன்வுமன்லி ஃபேஸ் வாசித்தேன்.

என்ன ஒரு ஆச்சரியம், அதில் நான் இரண்டாம் உலக யுத்தம் குறித்து வாசிக்கவில்லை. மாறாக என் உறவினர்களின் அனுபவமாக இருந்த உணர்வுகளை, அவர்கள் எப்படி போரிட்டார்கள், எப்படி உயிர் பிழைத்தார்கள் என்பதை, நான் முதல்முறையாக அறிந்தேன். என் பாட்டி முதலானவர்கள், தம் அனுபவத்தையும் முழுமையாய் மறுத்து, ஆண்களால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட அதே கதையையே திரும்பவும் சொன்னார்கள். ஆனால் அவளது அனுபவதட்டுக்கு ஒரு இடம் இருந்தது, அதை அலெக்ஸியெவிச் அங்கீகரித்தார். அவரது புத்தகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் எந்த அளவு இருந்தது என்றால், போரால் சீரழிக்கப்ப்பட்ட சோவியத் யூனியனில் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்ட துயரங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை விவரிக்கும் புத்தகம் ஒன்றை நானும் சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன்.

அலெக்ஸியெவிச் எழுதிய பிற புத்தகங்களும் அப்படிப்பட்ட தாக்கம் கொண்டவையாக இருந்தன. “ஜின்கி பாய்ஸ்: சோவியத் வாய்சஸ் ஃப்ரம் தி ஆப்கானிஸ்தான் வார்” (1991) என்ற புத்தகம் ருஷ்ய கலாசாரத்தையும் மானுட நேயத்தையும் சிதைத்த ஒரு தொலைதூர யுத்தத்தை விவரித்தது- ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த ஒன்பதாண்டு கால யுத்தம். “வாய்சஸ் ஃப்ரம் செர்னோபில்: தி ஓரல் ஹிஸ்டரி ஆஃப் எ ந்யூக்ளியர் டிசாஸ்டர்” (1997) என்ற புத்தகம் அதன் அணு உலை விபத்தின் உலகளாவிய முக்கியத்துவம் குறித்த தியானமாக இருந்தது. இரண்டு புத்தகங்களும் பல்வகைப்பட்ட எதிர்வினைகளைச் சந்தித்தன. ஆப்கானிஸ்தான் குறித்தும் செர்னோபில் குறித்தும் உள்ள உணர்வுகளில் அரசுக்கும் மக்களுக்கும் தெளிவான புரிதல் இருக்கவில்லை- ஒன்று தோல்வியுற்ற யுத்தம், மற்றொன்று புரிந்து கொள்ள முடியாத பேரழிவு..

தான் “ஒரு செவி, பேனாவல்ல” என்று அலெக்ஸியெவிச் தன்னைக் குறித்துச் சொல்கிறார். காது கொடுத்து கேட்டு ஒரு கதையை உருவாக்கிக் கொள்கிறார், அதன் பின்னரே அதற்கு எழுத்து வடிவம் அளிக்கிறார். தனியுணர்வுகளைப் பொதுவெளிக்கு உரித்தாக்குவதுதான் அவரது ஆற்றல், மக்கள் நினைக்க அஞ்சும் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்.

தான் எழுதும் விஷயத்தின் பயங்கரங்களைக் கண்டு அலெக்ஸியெவிச் தவிர்த்து விலகுவதில்லை. வார்’ஸ் அன்வுமன்லி ஃபேஸ் என்ற நூலில் வரும் ஒரு பகுதி இதற்குச் சான்று: “(கைதிகளை) நாங்கள் சும்மாச் சுடவில்லை…பன்றிகளைப் போல் இரும்புக் கம்பிகளில் செருகினோம், அதன்பின் துண்டங்களாய் வெட்டினோம். நான் அதைப் பார்க்கப் போனேன்… வலி தாங்காமல் அவர்களின் கண்கள் தெறிக்கும் கணத்துக்குக் காத்திருந்தேன்”. சாதாரண உரையாடல் போல் இந்தக் கொடூரத்தைப் பேசும் தொனி வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம் (இந்தப் புத்தகத்தை நான் படித்து முடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ள இது ஒரு காரணமாக இருந்தது). ஆனால் நாம் உண்மை நம்மைச் சங்கடப்படுத்துகிறது என்பது உண்மையை அறியாதிருக்க ஒரு காரணமாக முடியாது. ஏன், அந்த அசௌகரிய உணர்வே உண்மையை அறிவதற்கான முக்கியமான காரணம் ஆகலாம்.

நேர்மையாய், துணிச்சலாய், சோகம் நிறைந்ததாய் எழுதப்பட்ட அலெக்ஸியெவிச்சின் நூல்கள்- மரணத்தைக் காட்டிலும் மோசமான, உடைந்த, களவு போன வாழ்க்கைகளை விவரிக்கும் கதைகள் நிறைந்த நூல்கள்- ஒரு பெண்ணின் பார்வை உலகப் பிரச்சினைகளுக்கு மானுட நேயம் பாய்ச்சி அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடியதாவது எப்படி என்பதைக் காட்டுகின்றன. சில வகைகளில்,அலெக்ஸியெவிச்சின் இலக்கியப் பங்களிப்பு என்பது, ஆஸ்திரிய நாவலாசிரியரும் நாடகாசிரியருமான எல்ஃப்ரைட் ஜெலினக்குக்கு இணையானது. ஆஸ்திரியாவின் நாஜி கடந்த காலத்தையும் ஆண்-மைய நிகழ்காலத்தையும் பெண்ணிய விமரிசனத்துக்கு உட்படுத்திய அவரது எழுத்து 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு அளித்து அங்கீகரிக்கப்பட்டது. அலெக்ஸியெவிச்சின் இலக்கிய பங்களிப்பை நோபல் கமிட்டி, “நம் காலத்தின் துயருக்கும் வீரத்துக்கும் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம்” என்று அழைக்கிறது.

ஜெலினக்கின் எழுத்து ஜெர்மன் மொழி அறியாத வாசகர்களை அவர் நோபல் பரிசு வென்ற பின்னரே சென்று சேர்ந்தது. இப்போது அலெக்ஸியெவிச்சும் அவரது செறிவான தாக்கத்துக்கு அன்கீகரிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசு சக்திவாய்ந்த செய்தியொன்றைச் சொல்கிறது- அவரது எழுத்தாற்றல் பற்றி மட்டுமல்ல, பொதுவெளியில் பெண்பார்வைக்கு உள்ள முக்கியத்துவம் குறித்தும்.

ஆம், இதற்கு முன் அவர் அறியப்படாதவராக இருந்தார் என்று சொல்ல முடியாதுதான். அவரது புத்தகங்கள் இருபது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, பல லட்சம் பிரதிகள் விற்கப்படுகின்றன. ஜெலினக் உட்பட, நோபல் பரிசு பெற்ற பிற எழுத்தாளர்கள் பலரையும் போலவே, அவரும் குடிமைச் சமூகச் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்றிருக்கிறார்- அண்மையில் கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு முன்னைவிட இப்போது பெண்களுக்கு அதிக அளவில் அளிக்கப்படுவது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப்பின்னர் முதல் முறையாக 1991ஆம் ஆண்டு நடீன் கோர்டிமர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இப்போது ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பெண்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. மேலும்,இவ்வாண்டின் கோடைப்பருவத்தில், எழுத்தாளரும் இலக்கிய விமரிசகருமான சாரா டேனியஸ் இருநூறு ஆண்டுகளில் முதல் முறையாக ஸ்வீடிஷ் அகாதமியின் நிரந்தரச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்- இக்குழுவே இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறது.

ஆனால் எந்த ஆண்-மைய கலாசாரத்தைக் கடந்து அலெக்ஸியெவிச் தோன்றினாரோ அது இன்னும் அழியவில்லை. கடினமான, வரலாற்று நோக்கில் ஆண்மைத்தன்மை கொண்ட விஷயங்கள் குறித்த சிந்தனையை அவர் எவ்வகைகளில் செறிவாக்கியிருக்கிறார் என்பதை அங்கீகரிப்பது, அவரால் உத்வேகம் பெரும் பெண்களுக்கு மட்டுமல்ல, அவரது தாக்கம் கொண்ட ஆண்களுக்கும் நன்மை பயக்கும்.

“செகன்ட்ஹாண்ட் டைம்” என்ற அவரது தாளவொண்ணா மாஸ்டர்பீசை இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன். 1990களில் ரஷ்யாவில் நிலவிய இரக்கமற்ற முதலியத்தை விவரிக்கும் புத்தகம் இது. சமீபத்திய நேர்காணல்களில் இன்னும் இரு புத்தகங்கள் எழுதிக் கொண்டிருப்பதாக அலெக்ஸியெவிச் கூறியிருக்கிறார்- காதல் பற்றிய புத்தகம் ஒன்று, மற்றொன்று முதுமை பற்றியது. இந்த இரண்டில் எதையும் வாசிக்கும் விருப்பம் எனக்கு இல்லை, ஆனால் படிப்பேன்.

நன்றி – Alexievich’s Achievement Nina L. Khrushcheva, Project Syndicate

தேநீர் நிலையம்

காஸ்மிக் தூசி

photo

தேநீர் நிலையத்தின்
இளம் புதுமாணவன்
பூண்டுள்ளான்
பேசா உறுதிமொழி.

கேள்வி கேட்டால்
பேய் ஓட்டுகிறான்

பாத்திரத்து நீரை
முகத்தில் தெளித்து.

பின் கழுவும் தொட்டியில்
புனிதப்பாத்திரங்களை கழுவும்
திருப்பணிக்கு திரும்புகிறான்

கோப்பை தட்டுக்களை கழுவுதல்
இவற்றுடன் தொடர்புடைய
இன்னபிற சடங்குகளை
தொடர்ந்தபடி

000

அருண் கொலாட்கரின் The Tea Shop என்ற கவிதை மொழிபெயர்ப்பு

ஒளிப்பட உதவி – tribuneindia.com

பாப்பா சொல்லுச்சு

தி வேல்முருகன்

காலையிலேயே சின்னவன் ஆரம்பிச்சுட்டான். “பீஸ் கட்டாதவங்களை எல்லாம் மிஸ் எழுந்து நிக்கச் சொல்லிட்டாங்க. நான் போ மாட்டேன் இன்னைக்கு”

ஒரு மாசம் முடிஞ்சு தேதி 13 ஆயிடுச்சு, இந்த கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியப் போவுது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கணுமில்ல, எந்த பூசாரி டேபிளில் கிடக்கோ? மகராசன் மனசு வச்சா இன்னைக்கி கிடைக்கும்.

“ஸ்கூலுக்கு போ நான் மதியம் வந்து கட்டிடறன். தங்கமில்ல, போப்பா”

“கண்டிப்பா மதியம் வரணும்”

“கண்டிப்பா வந்திடறேன்”

யாருகிட்டயும் கேட்டு வாங்கி கட்டலாம்னா ஒரு நிலை இல்லை எப்ப கிடைக்கும்னு. கேக்காமலே உதவிய நண்பருக்கு வேற அவர் கேட்டப்போ தர முடியலை. அவர் என்னை எதுவும் பேசவே விடலை, “கதைலாம் சொல்லாத காசு உடனே வேணும்,” என்றதும் ரொம்ப சங்கடமா போயிடுச்சு. சரி, அவரையும் இப்ப கேக்க முடியாது, சம்பளம் போடலன்னா மதியம் ஸ்கூல் போயி சொல்லிட்டு வந்துடணும்னு நினைச்சுக்கிட்டு வேலைக்கு கிளம்பினேன்.

சம்பளம் வாங்கினா மட்டும் என்ன காற்றுல பறக்கற உமி கதைதான், வாங்கறதும் தெரியாது பறக்கறதும் தெரியாது. முதல்ல 1ந்தேதி சம்பளம் போடற கம்பேனியா பார்த்து வேலை தேடனும். சம்பளம் போடல வேலை பார்க்க முடியாதுனு சொல்ல முடியாது இல்லையா. இரண்டு மாடு கட்டற இடத்துல ஒரே மாட்ட கட்டி இழுக்கறானுவ. இத உட்டாலும் வழியில்ல, பார்ப்போம் ஏதாவது வழி பிறக்கும்.

மணி 11 ஆச்சு, சரி டீ குடிக்கலாம்னு வெளியே போனா, நண்பர் வேகமாக என்னைப் பாத்து வந்தார். எங்க காசு கேப்பாரோன்னு பயந்து பம்மினேன்.

“சார், சம்பளம் போட்டுட்டானுவ சார்”

காசும் கேக்கலை, பார்ட்டியும் கேக்கல. கதை இதோடு முடிஞ்சிருந்தா நல்லாதான் இருக்கும்.

1 மணி நேரம் பர்மிசனுக்கு மேனேஜரிடம் சொல்லிட்டு பேங்க் போய் பணம் எடுத்து வரும்போதுதான் விதி சிரித்தது.

நான் பணத்தை வேகமாக பையில் வைக்கிறேன், “மாப்பிள்ளை,”ன்னு வேகமாக வந்தார் மாமா. வண்டியைத் தள்ளும்போது, “நானும் வரேன்”.

“பசங்களுக்கு பீஸ் கட்டணும் முட்லூர் போறேன்”

“இல்ல மாப்பிள்ளை தீத்தாம்பாளையம் போயி ஒருத்தர பார்க்கனும். நீங்க எடுங்க வண்டிய, அப்படியே இறங்கி அவரைப் பாத்திடறேன்”

பணம் கேட்கவில்லை.

“ஏம்மாப்பிள்ளை, சின்னவன் என்ன படிக்கறான்?”

“ரெண்டாவது படிக்கறான்”

“புது பணக்காரனுவ எல்லாம் பெரிய ஸ்கூலா பார்த்து படிக்க வைக்கறானுவ. நீதான் என்ன பண்ணுவ பாவம், வெளிநாடுலாம் போன. கடைசியா பவர் பிளாண்ட்ல வந்து கஷ்டப்படணும்னு இருக்கு உன் விதி”

“அப்படில்லாம் இல்லை மாமா நல்லாதான் போவுது.”

“நீ ஒன்னு மாப்பிள்ளை காலைலேருந்துபச்சை தண்ணி பள்ளுல படாம வண்டி மாடுவ பட்டினி கிடக்குதுவன்னு பணத்துக்கு வந்து நிக்கறன், அந்த தீத்தாம்பாளையத்து வக்காலஓழி என்ன ஏமாத்திப்புட்டான் நீ வண்டிய விடு நான் அவன பாத்துக்கறேன்”

நான் எதுவும் பேசலை.

|மாடுவல பார்தா பாவமா இருக்கு. போரோட தின்ன மாட்டுக்கு புடிங்கிப்போட்டா கட்டுபடியாவுமா, வாணான்டி வானான்டின்னு சொன்னா கேக்கறாளா தேவடியாச் செருக்கீ, இப்ப நான்தான் கஷ்டப்படறன். மாடுவலுக்கு பில்லுவ போட்டா காபந்து பண்ண முடியும், போக்கத்த செருக்கீ”

நான் எதுவும் பேசலை.

“பையன் ரெண்டு நாள்ல சிங்கப்பூர் போறான், சின்னவன் அங்கதான இருக்கான், ஆனா நம்ம யோக்கிதை அப்படி- எவனும் ஊம்புனாக்கூட காசு தர மாட்டான்”

நான் இந்த இடத்தில் பலார மாவு போல் பாகாய் உருகி கேட்டால் கொடுக்கும் மனநிலைக்கு வந்து விட்டேன்.

“ஸ்கூல் வந்துட்டது மாமா, இருங்க பணம் கட்டிட்டு வந்துடறன்”.

வெளியே வந்ததும், “மாப்பிள்ளை, கைல எவ்வளவு இருக்கும்?”

“மாமா, இத வச்சுதான் இந்த மாசம் ஓட்டனும்”

“அதிகமில்லை மாப்பிள்ளை ஐய்யாயிரம்தான், பெரியவன் போன உடனே அனுப்பிடுவான். நான் புதன்கிழமை தரன், நீ குடு. அட குடு மாப்பிள்ளை, நான் தரன் நீ கேட்கவே வாண்டாம்”

“இல்லை மாமா நீ தீத்தாம்பாளையம் போறேன்னு சொன்ன?”

“அவன் திருட்டுப்பய மாப்பிள்ளை, அவன் கிடைக்க மாட்டான் நீ குடு”

“இல்லை மாமா, வீட்ல பிரச்சினையாயிடும்”

“யாரு பாப்பாவா? தங்கமான புள்ளப்பா அது. ஒரு வம்புதும்புக்கும் போவாது அது வேல உண்டு வித்து உண்டுன்னு இருக்கும். உன் சித்தப்பா வாங்கிச்சுன்னு சொல்லு, ஒன்னும் சொல்லாது”

வந்து சொன்னன் பாப்பாகிட்ட.

பாப்பா சொல்லுச்சு, “அதான் குடுத்துட்டல, ஏன் எழவு விழுந்த மாதிரி மூஞ்ச வச்சிகிட்டு உக்காந்து இருக்க, உன்ன எனக்கு தெரியாது? பசப்புனான்னு குடுத்துட்டு இருக்கியே, அவன்கிட்ட வாங்க முடியுமா? கட்டைல போறவன் குடுக்கும்போது குடுக்கட்டும், வா வந்து ஒரு வாய் சாப்பிடு”

எனக்குன்னு ஏன்தான் இப்படி வந்து வாச்சுதோ.