எழுத்து

அமேஸான் காடுகளிலிருந்து- 12 ஆசிரியர் எங்கே? (தொடர்கதை)

மித்யா 

 12. ஆசிரியர் எங்கே?

ஜார்ஜ் ட்ருக்கர் எழுதிய ‘லைப் ஆப் எ லிவிங் செயின்ட்’ புத்தகம் வெளியானவுடன் பிரிட்டன் முழுக்க பெரிய சர்ச்சை கிளம்பியது. இதன் நம்பகத்தன்மையை பல விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். பெரும்பாலான கிறிஸ்துவர்கள் இதில் வரும் கிறிஸ்டோவை இரண்டாம் இயேசுவாக ஏற்க மறுத்தனர். இந்த புத்தகம் அமெரிக்காவிலும் வெளியாகி அங்கும் ஒரு சர்ச்சை கிளப்பியது. இங்கிலாந்தில் ஆன்மீகவாதிகளுக்கும் நாத்திகர்களுக்கும் இடையில் பெரிய சண்டை வந்தது. ஆன்மீகவாதிகள் இந்தப் புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்றும், நாத்திகர்கள் தடைக்கு எதிராகவும் போராடினர். இந்தச் சண்டை பல சமயங்களில் கைகலப்பில் முடிந்தது. தெருக்களில் இறங்கி இரண்டு கூட்டங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. என்ன செய்வது என்று தெரியாத அரசு, புத்தகத்தைத் தடை செய்தது. அதை எதிர்த்து நாத்திகர்களின் போராட்டம் சூடு பிடித்தது. இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத அரசு தடையை நீக்கியது.

பிரான்சிஸ் என்ற பாதிரி தன்னுடைய சர்ச் கூட்டம் ஒன்றில் ஆவேசமாகப் பேசினார். “இரண்டாம் இயேசு என்பதெல்லாம் பொய். நம்மை ஏமாற்ற நம் எதிரிகள் செய்யும் சதி இது,” என்று முழங்கினார். “நாம் நம் மதத்தையும் இயேசுவின் நாமத்தையும் காக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் எல்லோரும் வரும் ஞாயிறன்று ஜார்ஜ் ட்ருக்கர் வீட்டின்முன் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார். கூடியிருந்த கூட்டம் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தியது. (more…)

வலி மாத்திரை – ஆரூர் பாஸ்கர்

ஆரூர் பாஸ்கர்

அதை
அப்படியே விழுங்கிவிட்டேன்.

அது தொண்டைக்குள் சிக்கி
சிறு திணறலுடன்
உள் சென்று விட்டது.

கொஞ்சம் ஜலத்தோடு
விழுங்கி இருக்கலாம்
கடைசியில் கரையப்போகும்
அந்த வலி மாத்திரையை.

கண்ணுக்குத் தெரியாத கரம்- ஒரு நாவலின் ரகசிய வரலாறு

(அண்மையில் The New York Times தளத்தில் ஜானதன் மாஹ்லர் (Jonathan Mahler) எழுதியிருந்த, “The Invisible Hand Behind Harper Lee’s ‘To Kill a Mockingbird’” என்ற கட்டுரையின் தமிழாக்கம்).

அப்போது 31 வயதாகியிருந்த ஹார்பர் லீ, 1967ஆம் ஆண்டின் வேனிற்பருவத்தில் “Go Set a Watchman” என்ற நாவலின் கைப்பிரதியைத் தன் ஏஜண்டிடம் அளித்தார். அனைவராலும் நெல் என்று அழைக்கப்பட்ட ஹார்பர் லீக்கு நாவல் எழுத வேண்டும் என்ற பெருவிருப்பம் இருந்தது. அவரது கைப்பிரதி பதிப்பகங்களுக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இப்போது காலாவதியாகிவிட்ட ஜே. பி. லிப்பின்காட் கம்பெனி. இறுதியில் அதுவே நாவலின் கைப்பிரதியை வாங்கிக் கொண்டது.

அந்த நாவல், லிப்பின்காட் நிறுவனத்தில் தெரசா வொன் ஹோஹோஃப் டோரி என்ற பெண்ணின் கை சேர்ந்தது. டே ஹோஹோஃப் என்று தொழில் வட்டத்தில் அறியப்பட்டிருந்த அவர் உருவத்தில் சிறியவராக, ஒல்லியானவராக இருந்தார். ஐம்பதுகளின் இறுதிகளில் இருந்த, நீண்ட அனுபவம் கொண்ட எடிட்டர் அவர். படித்தவுடன் நாவல் அவருக்குப் பிடித்துப் போனது. “ஒவ்வொரு வரியிலும் உண்மையான எழுத்தாளரின் பொறி தட்டியது,” என்று அவர் பின்னர் லிப்பின்காட் நிறுவன வரலாற்றை எழுதும்போது நினைவுகூர்ந்தார். (more…)

அலமாரி – அருண் கொலாட்கர் (மொழியாக்கம்- காஸ்மிக் தூசி)

  காஸ்மிக் தூசி

The cuboard-Image

மஞ்சளடைந்த
பழைய செய்தித்தாள்
கொண்டு சேர்க்கப்பட்ட
கண்ணாடிச் சில்லுகள்

கதவுச் சட்டத்தின் செவ்வகம்
ஒவ்வொன்றும்
ஓரு திரள்கலையின்
படைப்பு

அடைப்புச்சட்டத்துள்
இருத்தப்படாமல்
கீழ்நோக்கி துருத்திக்கொண்டிருக்கும்
நிச்சயமற்ற சரிவகங்கள்

நெருக்கியடித்துக்கொண்டு
அடுக்கடுக்காக அலமாரி முழுக்க
நிறைந்திருக்கிறார்கள்
தங்கநிறக் கடவுளர்கள்

வெட்டப்பட்ட தலையங்கங்கள்
நித்திய வாலிப வாக்குறுதிகளின்
பின்னால் இருந்தபடி
எட்டிப்பார்க்கிறார்கள்

பங்குச்சந்தை நிலவர
பத்திகளுக்கு அப்பாலும்
பார்க்கலாம் நீங்கள்
தங்கநிற கடவுளர்களை

கஞ்சிப்பசையால்
கெட்டிப்பட்ட
கருத்துக்களத்தின் பின்னால்
தெரிகிறது ஒரு தங்கக் கை

அந்தக்கதவின் மீது
எதிர்பார்த்ததைப் போலவே
இயல்பாக இருக்கிறது
ஒரு பெரிய பூட்டு
***
அருண் கொலாட்கர் எழுதிய The Cupboard என்ற ஆங்கில கவிதையின் தமிழாக்கம் இது

அமேஸான் காடுகளிலிருந்து 11. இரண்டாம் இயேசு – மித்யா

மித்யா 

11. இரண்டாம் இயேசு

ஆலிஸின் கோர மரணத்தைக் கண்ட கிறிஸ்டோவால் துக்கத்திலிருந்து மீள முடியவில்லை. ஒரு வாரம் அவனுக்கு காய்ச்சல் இருந்தது. அவன் ஏதேதோ பிதற்ற ஆரம்பித்தான். காட்டுவாசிகள் அவனுக்குப் பலவித மூலிகைகளைக் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அவன் மீது அவை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. அவன் பிதற்றிக்கொண்டே இருந்தான். ஒரு வாரம் கழித்து அவனுக்கு காய்ச்சல் சரியானது. ஆனால்கூட அவன் தினமும் ஏதோ பிதற்றிக்கொண்டே இருந்தான்.

திடீரென்று ஒரு நாள் அவன் பேசுவதை நிறுத்திவிட்டான். தினமும் குடிசைக்கு வெளியே உட்கார்ந்து கொண்டு காட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பல இரவுகள் அவன் தூங்கவில்லை. காட்டுவாசிகள் அவனுடன் பேச முயற்சித்தார்கள். ஆனால் அவனோ காது கேட்காதவன் போல் ஊமையாக இருந்தான். அவர்கள் எது கொடுக்கிறார்களோ அதை உண்டான். “இவனிடம் உடல் மட்டும்தான் இருக்கிறது. இவன் உயிரை அந்த வெள்ளைக்காரி எடுத்துச் சென்றுவிட்டாள்,” என்றான் ஒரு முதிய காட்டுவாசி. (more…)