எழுத்து

நீலக்குதிரை (கவிதை) – காஸ்மிக் தூசி

  காஸ்மிக் தூசி

பல்லில்லாத பாடகி
பொக்கை வாய் திறந்து
பற்ற வைக்கிறாள் நெருப்பை.
குரல்வளையின்
நரம்பு முடிச்சுகளில் மின்சாரம்.
அவளின்
பாதி கருகிய நாவில்
பறந்து வருகின்றன
தீப்பொறிகள்

தானாகவே
இயைந்து கொள்கிறது முகம்.
சூரியன் சுட்டெரித்ததில்
மேலும் கருகிய கருந்தோல்
முகத்தில் நீலம் பாரிக்க
கஞ்சிராவை அறைந்து அடிக்கிறான்
வாசிப்பவன்.

சற்றும்
சுருதியற்ற தாபத்துடன்
பாடலில் இணைந்து கொள்கிறான்
அம்மைத்தழும்புகள் நிறைந்த
ஒன்று விட்ட சகோதரன்.
தந்தி கொண்ட கருவியின்மீது
மேலும் கீழுமாய் கரகரத்து
கவனமில்லாமல்
எதிரொலிக்கிறது பாட்டு.
இசை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்,
கடவுளின் சொந்தக் குழந்தைகள்.

இதைப்போன்ற ஒரு
புனிதகேளிக்கையை –
தன் வீட்டில் வைத்து
ஏற்பாடு செய்யுமளவுக்கு
நல்லவரான பூசாரியிடம்
பேச்சுக்கொடுத்து,
பாடியவர்கள்
நீலக்குதிரை என்றார்களே,
உங்கள் சுவரில்
இருக்கும் படத்தில்
குதிரை வெள்ளையாக இருப்பது
எங்ஙனம்? என்றால்,

வாயின்
இடமிருந்து வலதுக்கு
பாக்குத்துண்டை
மாற்றிக்கொண்டு.
எனக்கு நீலமாகத்தான் தெரிகிறது
என்கிறார் பூசாரி.
புகழ்பெற்ற ஓவியர்
வரைய விரும்பும்
நீல வண்ணத்தின் ஒருநிறத்தை,
புனிதவிலங்கின்
வெள்ளை நிற
அடிவயிற்றில்,
பாக்குவெட்டியால்
தொட்டுக்காட்டி..
கஞ்சிரா
தன் நெஞ்சில்
அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது.

oOo

(“The Blue Horse” என்ற அருண் கொலாட்கர் கவிதை தமிழாக்கம்)

ஒளிப்பட உதவி – விக்கிமீடியா

பூந்தொட்டி நம் உறவின் படிமம் (புனைவு) – எமில் ஒஸ்ட்ரோஸ்கி

(Wordriot என்ற தளத்தில் Emil Ostrovski எழுதிய “His Vase is a Metaphor for Our Relationship” என்ற குறுங்கதையின் தமிழாக்கம்)

நாங்கள் ஒரு மாதம் போல் இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அவன் ஒரு பூந்தொட்டியை வீட்டுக்கு கொண்டு வருகிறான். எனக்கு அந்தப் பூந்தொட்டி பிடித்திருக்கிறதா என்று கேட்கிறான். “தெரியவில்லை,” என்று சொல்கிறேன்.

“தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? இது ஒரு பூந்தொட்டி”

“இது பூந்தொட்டி என்று எனக்குத் தெரியும்”.

“உனக்கு பூந்தொட்டிகளைப் பிடிக்காதா? உனக்குப் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… இது.- இது உன்னை எனக்கு நினைவுபடுத்தியது…” (more…)

ஞானத்தெருநாய் (கவிதை)

சோழகக்கொண்டல்

 

வெளிர்க்காவி நிறத்தில்
வற்றிய வயிறும்
ஒடுங்கி ஒளிரும் கண்களுமாய்
குத்துக்கால் ஆசனத்தில்
மானுடத்தை நோட்டமிட்டபடி
மோனத்தில் வீற்றிருக்கிறது
ஞானத்தெருநாய்

திறந்த வானின்கீழ்
திசையெங்கும் வீடென்றலைந்தும்
தன் எல்லைவரை மட்டுமே
அருள்பாலித்து மீளும்
சிறுநீர்க்குறிச் சித்தன்

கயமையை கண்டவிடத்து
காலபைரவன் ஆகிவிடக்கூடும் இருந்தும்
கைப்பிடிச் சோற்றுக்கே
காவல்தெய்வமாகிவிடும்
தனிப்பெருங்கருணை இந்த
அருட்பெருஞ்சோதி

பால்குடி மறக்கும்முன்பே
பந்தம் அறுபட்ட பிக்கு
ஏந்தி அலைவதெல்லாம்
எச்சில் பொங்கி வழியும் ஒரு
யாக குண்டம் மட்டுமே

அதனுள் அவியிடும்
அருகதையில்லாதவர்
இல்லங்களுக்கு முன்னாலும்
வந்து நிற்பான்
இரக்கத்தின் கடைசி பருக்கையை
எதிர்பார்த்து

விரட்டும் கைகளையும்
விருந்திடும் கைகளையும்
விண்ணே அறியும்படி பார்க்கும் முகத்தில்
என்றுமே தரிசனமாவது ஒரு
நெடுந்தவத்தின் நிச்சலனம் மட்டுமே.

ஓம் ஓம் ஓம்.

நெகிழ்வற்ற படிமங்கள் (முன்னுரை)

எஸ்.சுரேஷ்

cat21

கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாக பதாகை இணைய இதழில் நான் மிருகக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன், இனியும் எழுதுவேன் என்று நினைக்கிறேன். அவற்றில் சில இந்த மின்னூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் ஏன் இந்தக் கவிதைகளை எழுதினேன், அதுவும் ஏன் இப்படி எழுதினேன் என்பதை விளக்கக் கொஞ்சம் முயற்சி செய்யப் போகிறேன்.

இந்தக் கவிதைகளை மிருகக் கவிதைகள் என்று நண்பர்கள்தான் சொல்கிறார்கள், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இவற்றை நான் உறைபடிமங்களாகவே பார்க்கிறேன். பொதுவாக, ஒரு கவிதை என்றால் அது பல்பொருள் உணர்த்த வேண்டும், அதில் உள்ள படிமங்கள் நம் மனதில் ஒரு நகர்வை ஏற்படுத்த வேண்டும், அதன் மொழி நம்மை வசீகரிக்க வேண்டும் என்றும் இன்னும் பலவாறாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒன்றுகூட அப்படி எதுவும் செய்யாது. அது போன்ற பயன்மதிப்பு எதையும் முன்னிட்டு இந்தக் கவிதைகளை எழுதவில்லை. அடிப்படையில் இவை, சலனமற்ற பிம்பங்கள்- எழுதப்பட்ட பக்கத்தின் எல்லைகளுக்கு அப்பால் செல்லாதவை. வாசகன் மனதினுள் வளர வேண்டும், ஆழமான உண்மையை உணர்ந்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட மறுக்கும் பிம்பங்கள். (more…)

இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு! (கவியின்கண் கட்டுரைத் தொடர்)

எஸ். சுரேஷ்

இதுவே உண்மை- பிற உண்மைகளைக் கைவிடு!
யாரும் இந்தப் பூமியில் போராடத் தேவையில்லை.
பார்- அந்தி சாய்ந்து விட்டது, பார், இரவு நெருங்கி விட்டது:
கவிஞர்களே, காதலர்களே, தளபதிகளே, நீங்கள் சொல்வதற்கென்ன இருக்கிறது?

ஓய்ந்துவிட்டது காற்று, பூமியில் பனித்துளிகளின் ஈரம்,
இனி வானின் நட்சத்திரச் சூறாவளியும் அமைதி கொள்ளும்.
விரைவில் நாம் அனைவரும் மண்ணின்கீழ் உறங்கப் போகிறோம், நாம்
அதன்மேல் ஒருவரையொருவர் உறங்க விடாத நாம்.

(‘I know the Truth, Marina Tsvetaeva. English version by Elaine Feinstein) (more…)