எழுத்து

பட்டாம்பூச்சி

காஸ்மிக் தூசி

butterfly

அதற்குப் பின்னால்
எந்தக் கதையுமில்லை
வினாடியைப்போல இரட்டித்து
மூடித்திறக்கிறது
தன்னுடலையே கீலாக்கி

அதற்கு
எதிர்காலமில்லை
இறந்த காலத்துடன்
இணைப்பு ஏதுமில்லை
இஃதொரு
நிகழ்காலச் சிலேடை

கொடிய மலைகளை
தன் சிறகுகளுக்குள்
கொண்டுள்ள

சிறிய
மஞ்சள் நிற
வண்ணத்துப் பூச்சி

ஒரு துளியளவு
மஞ்சள்
திறக்கும் முன் மூடி
மூடும் முன் திறக்…

எங்கே அது?

ஓவியம் – நந்து

௦௦௦

அருண் கொலாட்கரின் The Butterfly  என்ற கவிதை தமிழாக்கம்

அவன் வருவானா?

மித்யா

fingerscrossed

ன்டா அவன் வருவானா?”

“வருவான்டா. நிச்சயமா வருவான்”

“மணி ஏழு ஆகப்போவுது. எப்போ வருவேன்னு சொன்னான்?”

“வருவான்டா வருவான். நிச்சயமா வருவான். அவனுக்கு நம்ம பணம் வேணும்”

“கை நடுங்குதுடா. சீக்கிரம் வந்தா நல்லா இருக்கும்.”

“வந்து உக்காரு. நீ இப்படி அங்க இங்கேன்னு நடக்காத. போலிஸ்காரன் எவனாவது பாக்க போறான்”

“டேய். அவந்தானா அது”

“என்னங்க. நம்ப பையன் இப்போயெல்லாம் வீட்டுக்கு ரொம்ப ரொம்ப லேட்டா வரான். ஏன்னு கேளுங்க”

“சின்னப்பசங்க. அப்படித்தான் இருப்பாங்க. அதுவும் ஆம்பளப்பசங்க. இந்த வயசுலதான் ஜாலியா சுத்த முடியும். இப்போ லீவ்தானே. வருவான் வருவான்.”

“அதில்லீங்க. பக்கத்து வூட்டம்மா அவன் சிகரெட் புடிக்கறத பாத்தாங்களாம். இன்னிக்கி எங்கிட்ட சொன்னாங்க. நான் வச்சிருந்த காசும் காணோம். ஏதாவது தப்பு தண்டா பண்றதுக்கு முன்னாடி நீங்க ஒரு முறை அவங்கிட்டப் பேசுங்க”

“சும்மாப் படுடீ. ஆம்பள பசங்க சிகரெட் புடிக்கறது சகஜம்தான். நான் புடிக்கறேன். நாளைக்கு அவனும் பீர் குடிப்பான். இதெல்லாம் சாதாரணம். எல்லாம் கண்ட்ரோல்ல இருக்கணும் அவ்வளவுதான்”

“துட்டு கொணாந்தியா?”

“இந்தா ஐநூறு ரூபா”

“டேய். என்ன ஐநூறு ரூபா? ஒரு முறை மூந்து பாக்க பத்தாது இது. போயி சிகரெட் புடிக்கற வழியப் பாரு. இதுக்கு தானாடா நீ என்ன சீக்கீரம் வா சீக்கிரம் வான்னு பேஜார் பண்ண?”

“அடிக்காதண்ணே. அவன் ஐநூறு ரூபா தான் கொண்டுவந்திக்குறான்னு எனக்குத் தெரியாது.”

“நான் நாளைக்கு மீதி பணம் கொடுக்குறேன். இன்னிக்கி எனக்கு குடுங்க ப்ளீஸ். இன்னிக்கி எனக்கு வேணும். இல்லாம நான் போக முடியாது. ப்ளீஸ்…ப்ளீஸ்… நீ சொல்லுடா.”

“அண்ணே குடுண்ணே. நாளைக்கு பணம் கொணாந்து குடுத்துடுவான். ஏமாத்தற பையன் இல்லண்ணே அவன்”

“இப்படி எல்லாம் பிச்ச எடுக்கறவங்களுக்கு குடுத்துகின்னே இருந்தா என்ன எங்காளுங்க க்ளோஸ் பண்ணிடுவாங்க. பணத்த கொண்டா. அப்புறம் இத எடுத்துகினு போ.”

“உங்களுக்கு இருக்குற எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு வரணுமா? ஏன் உங்க புத்தி அப்படி போவுது?”

“ஏ. இன்னா? ரொம்பத்தான் பேசுற. நான் குடிக்கிறேன். நான் சிகரெட் புடிக்கிறேன். என் இஷ்டம். உனக்கு ஏதாவது குறை வச்சேனா? இல்லை அவனுக்குத்தான் குறை வச்சேனா?”

“அதுக்குன்னு பையன் என்ன பண்றான்னு கூட பாக்க மாட்டீங்களா?”

“இந்தக்காலத்து பசங்க ரொம்ப உஷாரு. நம்ம காலம் மாதிரி இல்ல. அவங்களுக்கு நல்லது எது கேட்டது எதுன்னு நல்லாத் தெரியும்.”

“அண்ணே குடுத்துட்டு போண்ணே. நான் அவனுக்கு ஜவாப்தாரி”

“போடா மயிரு. ஜவப்தாரியாம் ஜவாப்தாரி. நீ ஒரு… டேய். விடுறா பைய விடுறா டேய்”

“எனக்கு வேணும். எனக்கு வேணும். நான் காசு அப்புறம் தரேன். எனக்கு இப்போ வேணும். எனக்கு வேணும்.”

“டேய். விட்றா டேய். ரெண்டு பேரையும் கொன்னுடுவேன். விடுங்கா டேய். இன்னிக்கு உனக்கு சாவுதாண்டா மவனே. இனி நீங்க உயிரோட இருக்க முடியாது”

“ஏ. இங்க பார்ரா. யாரோ விழுந்து கிடக்குறான்”

“ஐயோ. ரத்தம்டா. கத்தியால குத்திக்குறாங்க போல இக்குது”

“உயிர் இக்குதா?”

“ஏ போவாத. இது போலிஸ் கேஸ்.”

“போயி போலிசுக்கு சொல்வோமா”

“மென்டலா நீ. நம்ப ஏதோ இருட்டா இக்குதுன்னு இங்க குடிக்க வந்தோம். போலிசுக்கு சொன்னா அவங்க நம்மள உள்ள தள்ளிடுவாங்கோ. யாரும் பாக்குறதுக்கு முன்னாடி கெளம்பிடுவோம்”

“என்னங்க இன்னும் அவன காணோம். அவன் இவ்வளவு லேட்டா வந்ததில்ல.”

“ஒரு ஆம்பள பையன் வெளில போயிட்டு லேட்டா வரான்னா அதுக்கு கவலை பட வேணாம். ஏதோ பொட்ட பிள்ளை வெளியில போயி இருட்டின பிறகும் வரலேன்னா பயப்படணும். செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருப்பான். கம்முன படு”

“அதில்லீங்க….”

“அத பார். யாரோ கதவ தட்டறாங்க. அவனாத்தான் இருக்கும்”

காப்பி எடிட்டிங்: “குறை கண்டுபிடிக்க எனக்கு காசு கொடுத்தார்கள்” – அரைப்புள்ளி அரசி ஒருவரின் அனுபவங்கள்

(Mary Norris எழுதிய “Between You & Me – Confessions of a Comma Queen” என்ற நூலின் ஒருசில பகுதிகள் The Guardian தளத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியே இந்த மொழிபெயர்ப்பு)
 
…அதன்பின் என்னை காப்பிடெஸ்கில் வேலை செய்ய அனுமதித்தார்கள். என் உரைநடை வாசிப்பை அது மாற்றிற்று- குறை கண்டுபிடிக்க எனக்கு காசு கொடுத்தார்கள். வாசிப்பின் சுவைக்காகப் படிப்பது என்பது வெகு காலம் எனக்குச் சாத்தியப்படாமல் போயிற்று. என் கண்ணில் படுவதை எல்லாம் அனிச்சையாக காப்பி-எடிட் செய்தேன். ஆனால், காப்பிடெஸ்க் பழகிப்போய் இறுக்கம் தளர்ந்ததும் சில சமயம் என்னால் என் வேலையை அனுபவித்துச் செய்ய முடிந்தது. சில எழுத்தாளர்களின் உரைநடை மிக உயர்ந்த நிலையில் மேம்படுத்தப்பட்டு என் கைக்கு வந்தது, அதை எல்லாம் படிக்க எனக்கு காசு கொடுக்கிறார்கள் என்பதை நம்புவதே கடினமாக இருந்தது: ஜான் அப்டைக், பாலின் கேல், மார்க் சிங்கர், இயன் பிரேசர்! ஒருவகையில் இவையே கடினமானவையாக இருந்தன, இவற்றின் உரைநடையின் மயக்கத்தில் விழிப்புணர்வோடு வாசிக்கத் தவறுவதுண்டு. காப்பி எடிட்டரின் அலுவல் அறைக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள். குற்றம் குறையற்ற ஒரு பிரதியில் கை வைக்கும் வாய்ப்புகளுக்குத் தயாராய் இருப்பது கடினமான விஷயம், ஆனால் எதையாவது தவற விட்டுவிட்டால் அதைக் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.
 
நான் பேஜ் ஓகேயர் ஆகி இருபது ஆண்டுகள் ஆகின்றன- இந்தப் பதவி நியூ யார்க்கரில் மட்டும்தான் உண்டு. இந்தப் பொறுப்பில் இருப்பவர் மெய்ப்பு பார்க்கப்பட்ட ஆக்கங்கள் குறித்து கேள்விகள் கேட்டு அவற்றை மேம்படுத்த வேண்டும்- எடிட்டர், எழுத்தாளர், தகவல் பிழை திருத்துனர், இரண்டாம் நிலை மெய்ப்பு பார்ப்பவர் என்று அச்சுக்குப் போகும்வரை ஒவ்வொருவரிடம் பேசி முடிவு செய்ய வேண்டும். ஒரு எடிட்டர் எங்களை உரைநடைத் தெய்வங்கள் என்று அழைத்தார்; அரைப்புள்ளிகளின் அரசி என்று விவரிப்பதும் சரியாக இருக்கும்.
 
என் பணியில் எனக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று, என் முழு ஆளுமைக்கும் இங்கு வேலை இருக்கிறது: இலக்கணம், நிறுத்தற்குறிகள், மொழிப் பயன்பாடு, அன்னிய மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கியங்கள் பற்றிய அறிவு மட்டுமல்ல, உன் பயண அனுபவம், தோட்ட வேலை அனுபவம், கடற்பயண அனுபவம், இசையறிவு, குழாய்களைச் சரி செய்யத் தெரிந்திருத்தல், கத்தோலிக்க சமய ஞானம், மிட்வெஸ்ட்டர்னிஸம், மொஸாரல்லா, ஏ ட்ரெயின், நியூ ஜெர்சி என்று உனக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அதற்கெல்லாம் இங்கு வேலை இருக்கிறது. பதிலுக்கு, இந்தப் பணி உன் அனுபவங்களை மேலும் செறிவாக்குகிறது. உரைநடைத் தெய்வங்களில் அடுக்குவரிசையில், நான் மிகவும் கீழே இருப்பவள். ஆனால் இந்த விஷயத்தில் எனக்குக் கிட்டியுள்ள மேதைமையை நான் பிறருக்குக் கைமாற்றிக் கொடுக்க விரும்புகிறேன். என் புத்தகத்தின் பெயரைப் பார்த்த மாத்திரத்தில் நீங்கள் “between you and me” என்று அச்சமின்றிச் சொல்லக் கற்றுக் கொள்வீர்கள் என்பதுதான் என் மனதுக்கினிய விருப்பம் (“I” அல்ல)
 
நாம் ஏன் எழுத்துப்பிழை பற்றி கவலைப்பட வேண்டும், அதுவும் இப்போது, நமக்கு அதைச் செய்து கொடுக்க இயந்திரங்கள் இருக்கும்போது? இந்நேரம் ரோபோட்கள் உலகை ஆளும் என்று இருபதாம் நூற்றாண்டில் நாம் நினைத்துக் கொண்டிருந்தோம், ஒருவகையில் அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் ஓர் இனம் என்ற வகையில் ரோபோட்கள் நம்மை ஏமாற்றிவிட்டன. எஃக்காலும் பிளாஸ்டிக்காலும் செய்யப்பட்டு, சர்க்யூட்களும் பளிச்சிடும் விளக்குகளும் டாங்கி ட்ரெடுகளுமாய் இயங்கும் அடியாட்களை ஏவிக் கொண்டிருப்பதற்கு மாறாக, நாம் ரோபோட்டிக் புற உறுப்புகள் அணிந்து கொண்டிருக்கிறோம். நாம் அடுத்து என்ன பாடல் கேட்க வேண்டும் என்று நம் ஐபாட்கள் உத்தரவிடுகின்றன, நாம் எந்தப் பக்கம் போக வேண்டும் என்று நம் காரில் உள்ள கருவிகள் சொல்கின்றன, நம் வாக்கியங்களை நமக்கு பதில் ஸ்மார்ட்போன்கள் நிறைவு செய்கின்றன.  
 
நாமே நமக்கான ரோபோட்கள் ஆகிவிட்டோம்.
 
ஸ்பெல் செக் இருக்கும்போது எதற்கு காப்பி எடிட்டர்கள் இன்னமும் இருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். ஆட்டோகரெக்ட் இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் சொல்ல வேண்டியதை ஒரு இயந்திரம் ஏன் சொல்ல வேண்டும்? நான் ஒருவருக்கு “நல்லிரவு” என்று ஜெர்மன் மொழியில் டெக்ஸ்ட் செய்கிறேன், ஆனால் “Gute Nacht” என்பதற்கு பதிலாக “Cute Nachos” என்று போகிறது. வேலை செய்யும்போது, ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொரு ஆக்கத்தையும் ஸ்பெல் செக் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்க முயற்சி செய்கிறேன். அது எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்து விடுகிறது. ஆனால் ஸ்பெல் செக்கர் ஏன் காப்பி எடிட்டரின் வேலையைச் செய்ய முடியாது என்றால், அது ஒரு சொல் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதில்லை.
 
ஆங்கில மொழியெங்கும் பிழையாய் எழுதக் காத்திருக்கும் சொற்கள் நிறைந்திருக்கின்றன, நம் மேல் பாய்வதற்குத் தயாராய்க் காத்திருக்கும் இலக்கணர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கின்றனர். இத்தாலியன், ஸ்பானிஷ், நவீன கிரேக்கம் போல் நம் மொழி ஒலிப்புமுறை சார்ந்ததன்று- குறிப்பிட்ட சில எழுத்துகளும் எழுத்துகளின் வரிசையும் எப்போதும் ஒரே மாதிரியான ஒலியெழுப்பும் என்று அம்மொழிகளில் நம்பலாம். ஆங்கிலத்தில் பல எழுத்துகள் மௌனமாய் இருக்கின்றன. வரைமுறையற்ற துவக்கங்கள் காரணமாக இந்த மொழியின் சிக்கல்களை அவிழ்ப்பது மிகக் கொடுமையான கஷ்டமாக இருக்கிறது.
 
ந்யூ யார்க்கரில் என் திறமையைக் காட்ட முதல் வாய்ப்பு அளித்தது ஓர் எழுத்துப் பிழைதான். பதிப்பாசிரிய நூலகத்தில் எனக்கு இருப்பு கொள்ளாது என்று ஹெலன் ஸ்டார்க் கணித்தது சரியாகத்தான் இருந்தது. வாரத்தின் சில காலைப் பொழுதுகளின் பத்தொன்பதாம் மாடிக்கு வந்து ஃபவுண்டரி ப்ரூஃப்களை வாசித்து உதவ அவர் எனக்கு அனுமதியளித்தார். அங்கே டேவ் ஜாக்ஸன்தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். மெய்ப்பு பார்ப்பவர்கள் பலரும் அவருடன் பணியாற்றித்தான் வேலை செய்யத் துவங்கியிருந்தனர். அவர் உயரமாக, ஒல்லியாக இருந்தார், அவரது முகம் அடிக்கடி சிவந்து போகும்- அவரது பற்கள் ஒரு கொடூரமான கிரில்லாக அவருக்குப் பயன்படக்கூடியவை. கொஞ்சம் அதிர்ஷ்டம்கெட்ட நோயல் கவார்ட் போலிருந்தார். 
 
எதுவொன்றும் அச்சுக்குப் போவதற்கு முன் இறுதியாக வாசிக்கப்படும் இடம்தான் பவுண்டரி ப்ரூப்ரீடிங். ஓவியத்திரை சாய்த்து வைக்கும் ஏணி போலிருந்த ஒரு போர்டின் முன் டேவ் என்னை இருத்தினார்- முந்தைய நாள் திருத்தப்பட்ட மாற்றங்கள் குறிக்கப்பட்டிருந்த ரீடர்ஸ் ப்ரூப் ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி என்று எனக்கு அவர் கற்றுத் தந்தார்- புதிய வரைவு வடிவத்துடன் அதை ஒவ்வொரு வரியாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அப்போதுதான் அச்சிடுபவர் புதிய பிழை எதையும் புகுத்தியிருக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். மாற்றங்கள் எதுவும் இல்லை, காப்பி சரியாக இருக்கிறது என்றால் எந்த வரிகளும் விட்டுப் போகவில்லை என்பதை மட்டும் உறுதி செய்துகொண்டால் போதும். அதைப் படித்துப் பார்க்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. உண்மையில், யாரும் உன் கருத்துக்காகக் காத்திருக்கவில்லை. அது மிகவும் இயந்திரத்தன்மை கொண்ட ஒரு வேலை- முதல் ப்ரூபை நீளவாக்கில் மடிக்க வேண்டும், அதை புதிய ப்ரூப்புக்கு நேராக வைத்துப் பார்க்க வேண்டும், பத்திவாக்கில் பென்சிலை கீழே இறக்கிக் கொண்டே வர வேண்டும்- ஒவ்வொரு வரியின் முதல் சில எழுத்துகளை மட்டும் ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால் அதைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்ததால் நான் எப்போதும் முழு வரியையும் படிப்பது வழக்கம். 
 
“idiosyncrasyயில் உள்ள எழுத்துப் பிழையையும் நீ கண்டுபிடித்து விட்டாய் போலிருக்கிறது,” என்று டேவ் பாராட்டும் விதமாகச் சொன்னார்- அதிர்ஷ்டசாலிகள் சிலருக்கு மட்டுமே அந்தச் சொல்லின் இறுதியில் சி என்ற எழுத்தல்ல, எஸ் என்ற எழுத்து வரும் என்று தெரிந்திருக்கும் என்பது அவரது பாராட்டின் உள்ளர்த்தம். ஒரு முறை அவர் வி எஸ் பிரிட்செட் marvellous writer (ந்யூ யார்க்கரின் இரட்டை எல்களை அந்தச் சொல்லில் பயன்படுத்துபவர்), ஆனால் மிக மோசமான எழுத்துப்பிழைகளைச் செய்பவர் அவர் என்று சொன்னார். ப்ரிட்செட்  “skeptical”  என்ற சொல்லில் பிரிட்டிஷ் மரபுப்படி சி பயன்படுத்தி “sceptical” என்று எழுதியிருந்தார். இது போன்ற விஷயங்களைப் பேசும்போது டேவ் பார்ப்பதற்கு அத்தனை கோபமாக இருப்பார்.
 
கிருஸ்துமஸ் ஷாப்பிங் பத்திகள் ஒன்றில்தான் நான் பவுண்டரி ப்ரூப்ரீடராக எனக்குப் பெருமை சேர்க்கக்கூடிய முதல் பெரும்பிழையைக் கண்டுபிடித்தேன். அதை எழுதியவர் ப்ளூமிங்டேல்ஸின் பேஸ்மெண்ட்டில் இருந்தார், அன்றாட உணவுப் பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்தார் அவர், அப்போது சில சர்க்கரைப் பைகளுக்குப் பின்னர், தன் பட்டியலில் “flowers” என்று  சேர்த்திருந்தார். நான் உள்ளிருக்கும் we என்ற இரு எழுத்துகளைக் கட்டம் கட்டி அதைப் பத்தியின் விளிம்புக்குக் கொண்டு வந்து, u என்ற எழுத்தைப் பரிந்துரைத்து, அதனருகில் கேள்விக்குறி இட்டேன்- எனக்குக் கற்றுத்தரப்பட்டிருந்தவாறே அதை செய்தேன். உன் அறியாமையை அம்பலப்படுத்தும் ஏதோவொரு விஷயத்தைக் கேள்வியாய்க் கேட்பது அடிமுட்டாள்தனம் (நான் அதையும் செய்தேன்), ஆனால் கேள்விக்குறியைத் தவிர்ப்பது என்பது இப்பணியில் ஒரு தற்கொலை போன்றது, எழுத்தாளர் எழுத நினைக்காத மாற்றத்தைச் செய்ததற்கு நாம் பொறுப்பாக நேரிடும். 
 
பொது கற்பனையில் காப்பி எடிட்டருக்கு ஒரு சூனியக்காரி போன்ற பிம்பம் இருக்கிறது எனபதை நான் எப்போதும் மறந்து விடுகிறேன், யாராவது என்னைப் பார்த்து பயப்படும்போது எனக்கு அது ஒரு ஆச்சரியமாக இருக்கிறது. சில காலம் முன்னர், நியூ யார்க்கர் அலுவலகத்தின் பணியாளர்களை அறிமுகப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஒரு புதிய இளம் பதிப்பாசிரிய உதவியாளர், என் கதவடியில் அறிமுகம் செய்யப்படக் காத்து நின்றார். நான் ஒரு காப்பி எடிட்டர் என்பதைக் கேட்டதும் அவர் குதித்து ஒரு அடி பின்வாங்கினார், நான் ஏதோ செக்கச் சிவந்த ஹைஃபன் கொண்டு அவளைக் குத்திவிடப் போகிறேன் என்பது போலவோ, ஒரு பவுண்ட் காற்புள்ளிகளை அவள் வாயில் திணித்து விடுவேன் என்பது போலவோ அரண்டு விட்டாள். ரிலாக்ஸ், என்று சொல்ல விரும்பினேன்.
 
எழுத்தின் போக்கை மடைமாற்ற விரும்புவதாவும், ஏவுகணையின் பாதையை திசைதிருப்ப விரும்புவதாகவும், உரைநடையை எங்கள் விருப்பத்துக்குத் திருத்த விரும்புவதாகவும் எங்களைக் குறித்து சில சமயம் பேசப்படுவதுண்டு. ஒரே மாதிரி எழுத வேண்டும் என்று இறுக்கமாக வலியுறுத்துபவர், பிறர் பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் சந்தோஷப்படும் அற்பன், அச்சுத்துறையின் துவக்க நிலையில் இருக்கும் கடைக்கோடி ஊழியர், தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்படுபவள், அல்லது, மிக மோசமாகச் சொல்வதானால், எழுத்தாளன் ஆக முயன்று தோற்றுப் போய் ஐ’க்கு புள்ளி வைத்து டி’க்கு கோடு போட்டு பிற எழுத்தாளர்களின் வெற்றிக்கு உதவ  வேண்டியிருப்பதன் கசப்பு மிகுந்தவள் என்றெல்லாம் எங்களைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. நான் இது அத்தனையுமாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
 
ஆனால் நல்ல எழுத்தாளர்கள் தாம் செய்வது எதையும் காரணத்தோடுதான் செய்கின்றனர், சற்றே கோட்டித்தனமான பயன்பாட்டைச் சரி செய்வது, ஒரு காற்புள்ளியை நீக்குவது, எழுத்தாளர் தெரிந்தே புரிந்து கொள்வதற்குக் கடினமான வகையில் எழுதிதை ஆணித்தரமாக நிறுவும் வகையில் கூர் தீட்டுவது- இதையெல்லாம் உன் வேலையாக எடுத்துக் கொண்டு ஒரு படைப்பில் கை வைக்கும்போது நீ செய்வது அவர்களுக்கு உதவியல்ல. உண்மையாகவே சிறந்த எழுத்தாளர்கள் பதிப்பாசிரிய உரையாடலை விரும்புகிறார்கள் என்பது என் அனுபவம். நீ அங்கே போகும்போது உன் சட்டைக் காலரில் ஒட்டிக் கொண்டிருக்கும் லேபிள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்- ஒருவேளை, நீ வேண்டுமென்றே உன் சட்டையைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை,.
 
பிலிப் ராத் எழுதிய “ஐ மேரிட் எ கம்யூனிஸ்ட்”டின் முதல் சில அத்தியாயங்கள் நியூ யார்க்கரில் பதிப்பிக்கப்பட்டபோது, நான்தான் அதற்கு மெய்ப்பு பார்த்தபின் ஒகே சொல்லும் இடத்தில் இருந்தேன். அவர் அனுப்பியதைப் படித்துப் பார்த்தேன், ஒரு பிழை இல்லை. எனக்குத் தெரிந்த அளவுக்கு என் ஆற்றல்கள் அனைத்தையும் பிரயோகித்து கவனமாக வாசித்தேன்: எப்படிப்பட்ட பதிப்பகமாக இருந்தாலும் அங்குள்ள மெய்ப்பு பார்க்கும் துறையினர் எதையேனும் சில சமயம் தவற விடுவதுண்டு, நாங்கள் சில சமயம் சில பிழைகளைக் கவனிக்காமல் விட்டுவிடுவது போலத்தான். குழந்தைகளுக்கான சரித்திர பாட புத்தகத்தில் இருந்து கையாளப்பட்ட மேற்கோள் ஒன்றில் ஒரு சிறு முரண் இருந்தது. அந்த இடத்தில் ஒரு குறிப்புக் கோடிட்டு மெய்ப்புப் பிரதியை புனைவுகளுக்கான எடிட்டராக இருந்த பில் பூபோர்டிடம் கொடுத்தேன். பிறகு சிறிது நேரத்தில் பில்லின் உதவியாளர் மாடிப்படிகளில் வேகமாகத் தாவி வந்து என் மெய்ப்பின் முதல் பக்கத்தின் கலர் ஜெராக்ஸ் ஒன்றை என்னிடம் கொடுத்தார்- அதில் நீல வண்ணத்தில், “மேரி நோரிஸ் குறித்து ராத் சொன்னது: “யார் இந்தப் பெண்? இவள் என் வீட்டுக்கு வந்து என்னோடு இருப்பாளா?”” என்று பூபோர்ட் எழுதியிருந்தார்.
 
ஒரு முறை நான் ராத்துடன் போனில் பேசவும் செய்தேன். சால் பெல்லோ பற்றிய ஒரு கட்டுரையை முடித்துக் கொடுப்பது சம்பந்தமான உரையாடல் அது. அப்புறம் அவரை நியூ யார்க்கர் ஹாலிடே பார்ட்டி ஒன்றில் பார்த்தேன். என் மெய்ப்புப் பிரதியில் அவர் விடுத்த அழைப்புக்குப்பின் எப்போதும் அவரிடம் மனதை பறிகொடுத்தவளாகவே இருக்கிறேன். அவருக்குத் தேவைப்பட்டது என்னவோ வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண்தான் என்று நினைக்கிறேன், வீட்டு விவகாரங்களைச் சரியாக கவனித்து கணக்கு வைத்துக் கொள்ள ஒருத்தர் வேண்டும் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அவர் இதை எப்போதாவது படிக்க நேருமெனில், நான் இப்போதும் ரெடியாக இருக்கிறேன் என்ற விஷயத்தை அவருக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஒளிப்பட உதவி – npr

நத்தையின் கனவு

எண்ணற்ற நேர்க்கோடுகள்
எப்போதுமே  குவிகின்றன
பழகிப்போன  அறையின்
மூலையில்.

கனவின் கரையில்
நனவின் நினைவென
நிலைத்து நிற்கிறது
அந்த நத்தை.

கலையின் வலையில்
நத்தையின் நிழலை
அறையின் மூலையில்
நிறுத்த நினைக்கையில்,

நேர்கோட்டு ஏணியில்
விதியின் பழக்கத்தோடு
மூலையிலிருந்து முந்துகிறது
நத்தையின் கனவு:

காலத்தின் கரையில்
மரணத்தின் நனவாய்
நிழலாகி நிற்கிறேன்
நான்.

கரையைக் கடந்து
அலையில் அமிழ்ந்தால்
கனவும் நனவாகும்
வார்த்தைகளின் வானத்தில்,

குளிசங்கின் வளைவுகளில்
மரணத்தை நத்தையாக்கி
மூலைகளில்லா பெருவெளியாய்
விரியுமா என் கவிதை ?

000

ஒளிப்பட உதவி – Lightwave

லூயிஸ் ஏட்ரிக்கின் The Round House

அஜய் ஆர்

(லூயிஸ் ஏட்ரிக்கின் இலக்கியச் செயல்பாடுகளை அங்கீகரித்து அவருக்கு  இவ்வாண்டு Library of Congress Prize for American Fiction வழங்கப்பட்டுள்ளது- Library of Congress Prize for American Fiction Awarded to Louise Erdrich )

ஒரு சிறு நகரம்/ டவுன், அதில் இரு இனக்குழுக்களுக்கிடையே நிலவும் அதிகார சமத்துவமின்மை, பிறரால் ஒதுக்கப்படும்/ கேலியாகப் பார்க்கப்படும் ஒருவர், ஒரு கொடூர குற்றம், அதிகார சமமின்மையினால் அந்த குற்றத்திற்கான நீதி கிடைப்பதில் உள்ள (சட்ட ரீதியான/ அல்லாத) தடைகள், அவற்றை மீறி நீதிக்குப் போராடும் ஒருவர், இவை அனைத்தையும் விரிந்த விழிகளால் பார்த்தபடி புரிந்து கொள்ள முயலும் பதின்பருவ வாயிலில் இருக்கும் கதைசொல்லி என ஒரு நாவலைப் பற்றி விவரிக்கும்போது ‘To Kill a Mockingbird’ முதலில் நினைவுக்கு வருவது இயல்பே. ஆனால் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போவது லூயிஸ் ஏட்ரிக்கின் (Louise Edrich) ‘The Round House’ நாவலைப் பற்றி.

‘To Kill a Mockingbird’ நாவலின் நினைவு வந்தாலும், ‘The Round House’ஐ அதன் தழுவலாகவோ, அதன் தாக்கம் மிகவும் அதிகம் உள்ளதாகவோ சொல்ல முடியாது. இரு நாவல்கள் இணையும் புள்ளிகளுக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவேகூட விலகும் புள்ளிகள் உள்ளன. இணையும் புள்ளிகளும்கூட இரு நாவல்களிலும் உள்ள, எல்லா காலத்திற்கும்/ நாட்டிற்கும் பொருந்தக்கூடிய மைய அம்சத்தினால் தன்னிச்சையாக ஏற்பட்டிருக்கக்கூடும். எப்படி இருப்பினும், வாசகருக்கு இத்தகைய ஊடுபாவுகள், சுவாரஸ்யமானவையாக தோன்றுகின்றன.

நாவலின் சம்பவங்களுடன் நேரடியாக சம்பந்தப்படாத/ (இறுதிப் பகுதி வரைக்குமாவது) பாதிக்கப்படாத கதைசொல்லியின் பார்வைக்கு மாறாக, அந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர் கதைசொல்லியாக இருப்பது ‘To Kill a Mockingbird’ நாவலில் இல்லாத முகத்திலறையும் குரூரத்தை வாசகனுக்கு முதலிலேயே கடத்துகிறது.

அமெரிக்க பூர்வகுடிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள (அவர்களை ஒதுக்கி வைக்க ஏற்படுத்தப்பட்டுள்ள) நிலத்தில் (reservation) வசிக்கும் தன் தாய் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை கதைசொல்லி நினைவு கூர்வதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது.

அந்த துர்ச்சம்பவத்தால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படும் கதைசொல்லியின் தாய் பேசவே மறுக்கிறார். இதனால் குற்றமிழைத்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல். அடுத்த சிக்கல் குற்றம் நடந்த இடம் பூர்வகுடிகளின் ஆளுமைக்குட்பட்டது அல்ல என்பதால், அவர்களின் சட்டம் அங்கு செல்லாது என்பதால், வெள்ளையர்களின் விசாரணை (அதாவது விசாரணையில் அவர்கள் காட்டும் சுணக்கம்), இந்த சம்பவத்திற்கான நீதி கிடைப்பதில் தாமதத்தையும், எப்போதாவது கிடைக்குமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. பூர்வகுடிகள் வசிக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு நியாயம் வழங்கும் நீதிபதியாக உள்ள கதைசொல்லியின் தந்தையின் கைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து கதைசொல்லியே விசாரணை செய்யத் துவங்குகிறார்.

‘இனிட் ப்ளைடனின்’ சிறார் துப்பறியும் நாவல் போல் சென்றிருக்கக்கூடிய ஜோ செய்யும் விசாரணைகளை பரபரக்க வைக்கும் சம்பவங்களாக ஆக்காமல், ஒரு சிறுவன் செய்யக்கூடிய இயல்பான ஒன்றாகவே காட்டுவதன் மூலம் வாசகன் துப்பறிதலின் பரவசத்தில் அந்த துர்ச்சம்பவத்தை மறந்து நாவலின் மையத்திலிருந்து விலகிச்செல்ல முடியாதபடி செய்கிறார். ஜோ என்ன செய்தாலும், எங்கு திரும்பினாலும், திறக்கப்பட முடியாத கதவுகளே உள்ளன, குற்றவாளி யார் என்று தெரிந்தும், அவன் மேலும் திமிருடன் மீண்டும் இவர்களை சீண்டுகிறான் என்பது தெரிந்தும், அவனை ஏன் யாரும் தண்டிக்கவில்லை என்பதை கதைசொல்லியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சட்டம் குறித்த கருப்பு/ வெள்ளை பார்வை கொண்ட சிறுவனாக இருந்தாலும் ஜோ ஏதுறியாதவன் அல்ல. பதின்பருவத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அவனுக்கு அந்த பருவத்திற்குரிய குறும்புகள், பாலியல் கிளர்ச்சிகள் அனைத்தும் உள்ளன. (ஒரு கட்டத்தில் தன் சித்தியுடன் சேர்ந்து, முறைதவறிய விதத்தில் கணிசமான தொகையைப் பதுக்கி வைக்கிறான். இதற்கு பணத்தின் மீதுள்ள ஆசையைவிட, சித்தி மீதுள்ள கிளர்ச்சியே அவர் சொல்வதைப் போல் செய்யத் தூண்டுகிறது) அவை தவறு என்று அவனுக்கு தோன்றினாலும், அவற்றை மீண்டும் மீண்டும் ருசிக்கவே விரும்புகிறான். (அவ்வப்போது சித்தியின் கடைக்குச் சென்று அவருடன் பேசுவது போல் அவர் உடலை நோட்டம் விடுகிறான்)

சட்டத்தின் வரம்புகளால் கட்டிப்போடப்பட்டுள்ளதை வெறுத்தாலும், அதை வெளிக்காட்டாமல், அந்தத் தளைகளை உடைக்காமல் தன் பதவிக்கேற்ப சட்டத்தின்படியே செல்ல முயலும் நீதிபதியாக – சட்டத்தின் நுட்பங்களை, அது பல நேரம் பாதிக்கப்பட்டவர்களுக்கே எதிராக உள்ளதை அறிந்திருந்தாலும், அதை மீறக் கூடாது என்பதைத் தன் மகனுக்கு புரியவைக்க முயலும் தந்தையாக – எதிலும் விருப்பமில்லாமல், விலகியே இருக்கும் மனைவியின் (catatonic) மனநிலை கண்டு மருகும் தகப்பன் பேஸில் (Bazil) பாத்திரம், ஆட்டிகிஸ் பின்ச் (Atticus Finch) பாத்திரத்தை சற்று நினைவூட்டினாலும், தனக்கான தனித்துவம் கொண்டது.

எப்போதும் எல்லோரிடமிருந்தும் விலகியே இருப்பது, கொஞ்சம் சத்தம் கேட்டாலும் பயப்படுவது என ஒரு சில கட்டங்கள் தவிர்த்து, ஜோவின் தாய் பற்றி வாசகன் யூகிக்கக் கூடியதே அதிகம். இந்தப் பாத்திரத்தை ஏட்ரிக் இன்னும் விரிவாக ஆக்கி இருக்கலாம் என்று விமர்சிக்கலாம் என்றாலும், நாவல் முழுதும் ஜோவின் பார்வையிலே நகர்வதால், அவன் கோணத்திலிருந்து இதை விட அதிகம் கூறி இருக்கவும் முடியாது. உதாரணமாக இந்த நிகழ்வால் தம்பதியரின் உறவில் ஏற்படும் மாற்றம்- பேஸில் தங்களின் படுக்கையறையில் படுக்காமல், வெளியே படுக்கிறார், அதை ஜோ பார்ப்பதாக ஒரு இடம் வருகிறது, அது மேலும் விவரிக்கப்படவில்லை. இந்த காட்சியில், அதன் பின்னால் உள்ள உளவியலை ஜோ அதிகம் அறிந்திருக்க முடியாது.. எனவே ஜோவின் தாய் இந்த நிகழ்வால் பாதிக்கப்படுவதை/ ஆவர் இந்தக் குற்றத்தை எதிர்கொள்வது குறித்த பல விஷயங்களை வாசகனின் யூகத்திற்கு விடுவது, நாவலின் கதைசொல்லல் முறைக்கு ஒத்துப்போவதாகவே உள்ளது.

ஏட்ரிக்கின் மற்ற படைப்புக்களைப் போல, முக்கிய பாத்திரங்கள், அவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களோடு, அமெரிக்க பூர்வ குடிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தில் (reservation) உள்ள நிகழ்கால வாழ்க்கை முறை, அவர்களின் தொன்மங்கள், என இந்த நாவலிலும் சில விஷயங்கள் உள்ளன. முதியவர்கள் தங்கள் பேச்சினுடே பாலியலை அனாயசமாக கலந்து பேச , அதை இளைஞர்கள் /மத்திய வயதுடையவர்கள் கூச்சத்துடன் எதிர்கொள்வதை காண்கிறோம்.

“I had a fat Indian for a husband at one time…..His pecker was long and big but only the head reached past his gut.
And of course I didn’t like to get underneath him anyway for fear of getting smashed..
His belly grew big as a hill and I couldn’t see over it. I’d call out, Are you still back there? Holler to me!”,

என்று ஒரு மூதாட்டி சொல்லும் போது, தன் வயது கொடுக்கும் பாதுகாப்பால், நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட தளைகளை உடைத்தெறியும், எந்த நாட்டிலும் காணக்கூடிய முதியவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால் இவை வெறும் தகவல் துணுக்குக்களாக நாவலில் துருத்திக்கொண்டிருப்பதாக இல்லாமல், ஒரு முழு உலகை உருவாக்குகின்றன. உதாரணமாக “sweat lodge/round house”அவர்களால் அழைக்கப்படும் இடத்தில் நடைபெறும் பழங்குடி சடங்குகளை விவரிக்கும், மாயத்தன்மை உடைய ஒரு பகுதி நாவலில் உள்ளது.

இன்னொரு புறம், “Youth Encounter Christ” என்ற கிறிஸ்துவ முகாம் பற்றிய வர்ணனையும், தேவாலயத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதை பாதிரியாரிடம் ஒப்புதல் வாக்குமுலம் (confession) கொடுக்கும் சம்பவமும், வாக்குமுலம் கொடுத்தவனை வெறித்தனமானாக துரத்திச் செல்லும் பாதிரியாரின் எதிர்வினையும் நாவலில் உண்டு. இவை இரண்டும் தனித்தனி சம்பவங்களாக, நாவலின் மையத்திற்கு தொடர்பில்லாதவையாக தோன்றக்கூடும். (பாதிரியார் சம்பந்தப்பட்ட நிகழ்வு நகைச்சுவைக்காக திணிக்கப்பட்ட சம்பவமாக வாசகன் எடுத்துக்கொள்ளலாம்). ஆனால், கிறிஸ்துவம் அவர்களிடையே செலுத்தும் தாக்கம், அதன் பரவலாக்கம் ஒரு பக்கமிருக்க, தங்கள் பழங்கால சடங்குகளை அவர்கள் விட்டுக் கொடாதிருத்தல், இரண்டையும் ஒரே நேரத்தில் பேணுவதை இயல்பான ஒன்றாகக் கருதுதல் என அவர்கள் இன்றைய வாழ்க்கை முறையை நுட்பமாக இந்த இரண்டு சம்பவங்களும் சுட்டுகின்றன. இந்த மனநிலையும் நாம் காணக்கூடியதே.

தொன்மங்களைப் பற்றி வரும் சிறு பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளில் ‘அட’ போட வைக்கும், நினைவில் தங்கும் விவரணைகளோ, உரையாடல்களோ இல்லாத, இறுக்கமில்லாத, தெளிவான, வாசகனை அவனையறியாமல் நாவலுக்குள் இழுத்து, அதன் நிகழ்வுகளில் தனக்கும் பங்கு உள்ளதாக, அதன் நன்மை தீமைகள் தன்னையும் பாதிக்கும் என்பதாக உணரச் செய்யும் உரைநடை இந்த நாவலில் உள்ளது. (தான் சொல்ல வரும் செய்திக்கேற்ப தன் நடையை நுட்பமாக ஏட்ரிக மாற்றுவதை அவரின் மற்றப் படைப்புக்களிலும் பார்க்க முடிகிறது. ‘The Plague of Doves’ சிறுகதையில் உள்ள கனவுத்தன்மை ஒரு உதாரணம்)

தன் தாய்க்கு நீதி கிடைக்க தாமதமாவதை பார்க்கும் ஜோ, அது கிடைக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பிக்கிறான். மனதளவில் கொதி நிலையை அடையும் அவன் செய்யும் சில செயல்கள், அதன் விளைவுகளோடு நாவல் முடிகிறது. நீதி முழுமையாகக் கிடைக்காவிட்டாலும், வாசகனுக்கு கொஞ்சமேனும் ஆசுவாசமளிக்கக் கூடியதாக ‘To Kill a Mockingbird’ முடிகிறது. இதிலும் ஏட்ரிக், ஹார்பர் லீயுடன் இணைந்தும் விலகியும் இருக்கிறார். பாதிக்கப்பட்டவரின் கோணத்தில் நாவல் நகர்வதால் ஆசுவாசம் என்பது நிஜத்தில் கிடைக்கக் கூடியது அல்ல என அவர் முடிவு செய்திருக்கலாம், எல்லா செயல்களுக்கும் ஒரு விளைவு உள்ளது என்பதை நாவலின் இறுதியில் நடக்கும் சம்பவம் நமக்குச்\ சுட்டுகிறது.

எனினும், முழு அவநம்பிக்கையை அளிக்கும் நாவல் அல்ல இது. பிறந்தவுடன் பெற்றோர்களால் ஒதுக்கப்பட்ட லிண்டா (Linda) ஒரு காட்சிப் பொருளாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறார் (Boo Radley /பூ ராட்லியைப் போல). ஜோ அவரை ஏமாற்ற முயல்கிறான், அதில் வெற்றி பெற்றதாகவும் நினைக்கிறான். ஆனால் ஜோ செய்த செயலால் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிந்ததும், இறுதியில் அவர் எடுக்கும் முடிவு, உறவுமுறை பாசத்தைத் தாண்டி அறம் சார்ந்து ஒருவர் இருக்க முடியும், தனக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னிக்க முடியும், நீதியும் கருணையும் எப்போதும் முற்றிலும் வழக்கொழிந்து போகாது என்ற நம்பிக்கையை எந்த விதமான அதீத உணர்சிக் கொந்தளிப்பும் இல்லாமல் வாசகனிடம் விதைப்பதோடு அவனை நெகிழவும் செய்கிறது. இந்த விதத்தில் ஹார்பர் லீயுடன் ஏட்ரிக் ஒத்துப்போகிறார்.

“Tenth Of December” சிறுகதை தொகுப்பின் தலைப்புக் கதையில் ஜ்யொர்ஜ் ஸாண்டர்ஸ் “…now saw that there could still be many—many drops of goodness, is how it came to him—many drops of happy—of good fellowship—ahead, and those drops of fellowship were not—had never been—his to withheld.” என்று சொல்வதையும் இங்கு நினைவு கூரும்போது, வேறு வேறு எழுத்தாளர்கள், வேறு வேறு களங்கள்/ பாத்திரங்கள்/ நிகழ்வுகள் இருந்தும் அடிப்படை கருவாக ஒரே விஷயம் இயல்பாகவே உருவாகி வருவதை காண முடிவதோடு, சிறந்த படைப்பு என்பது, மற்ற படைப்புக்களுடன் உள்ள ஒற்றுமை/ வேற்றுமைகளைத் தாண்டி, தனித்தன்மையோடு இருப்பதுடன், வாழ்வின் ஆதார விசைகளில் ஒன்றைப் பற்றிப் பேசுகின்றன என்பதை உணர முடிகிறது.

பின்குறிப்பு

1. இந்த நாவலின் கதைசொல்லி ஜோ, நாவலின் சம்பவங்களால் எதிர்மறையாக பாதிக்கப்படாமல், தன் வாழ்வை அமைத்துக் கொண்டான் என்று அவனின் நிகழ்காலத்திலிருந்து நாம் அறிகிறோம். அதே போல் ஸ்கௌட் பின்ச் (Scout Finch), வாழ்வு எப்படி மாறியது என்பதை அறிந்து கொள்வதற்கான ஐம்பத்து இரண்டு ஆண்டுகால காத்திருப்பு “Go Set a Watchman” நாவல் அடுத்த மாதம் வெளிவருகையில் முடிவுக்கு வரவிருக்கிறது.
2. ஏட்ரிக்கின் நாவல்கள்/ சிறுகதைகளில் பாத்திரங்கள்/ சம்பவங்கள்/ நிலவியல் சார்ந்து ஒரு தொடர்ச்சி உள்ளதை கவனிக்க முடியும், அதே நேரம் அவை தனி படைப்புகளாக வாசிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.

ஒளிப்பட உதவி – The Bookforum