எழுத்து

நிலவொளியில், தனியே மதுவருந்துகிறேன்

செந்தில் நாதன்

libai

 

மலர்களிடையே, ஒரு மதுக் குவளை.
தனியே மது அருந்துகிறேன், தோழர்கள் யாரும் இல்லை.
நிலவை அழைக்க கோப்பையை உயர்த்துகிறேன்.
நிலவும், நானும், என் நிழலும் சேர்ந்து மூவராகிறோம்.

நிலவுக்கு மது அருந்தத் தெரியாது;
நிழல் என் உடல் அசைவுகளை நகலெடுக்கிறது;
ஆனாலும் அவர்களுடன் கொண்டாடுகிறேன் –
விரைவில் வசந்தம் வந்துவிடும்.

நான் பாடுகிறேன் – நிலவு அசைந்தாடுகிறது.
நான் ஆடுகிறேன் – நிழல் அலைபாய்கிறது.
தெளிவாய் இருக்கையில், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம்.
கள்வெறி ஏறியபின், அவரவர் வழி செல்வோம்.

உறவுகளுக்கு அப்பால், நண்பர்களாயிருக்க உறுதி கொள்வோம்
விண்மீன் திரளின் முடிவில் மீண்டும் சந்திப்போம்.

(Drinking Alone, Li Bai)

படம் : http://en.people.cn

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 2

திரும்பிச் சென்ற காலத்தைத் தொடர்ந்து செல்லுதல்

ஜுஸ்ஸாவாலாவின் கண்கள் உற்றுநோக்கிக் காண்கின்றன என்பது மட்டுமல்ல, அதனினும் ஓர் இந்தியனிடம் காண்பதற்கரிய இயல்பு, பிற மனிதனின் திறமையை ஒப்புக் கொள்ளும் மனவிரிவு, அவரிடம் உண்டு. “சுதீரை நினைவுகூர்தல்,” என்ற கட்டுரையில் எஜகீலைக் காட்டிலும் குறைவாகவே அறியப்பட்ட, இன்று ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்ட ஒரு நண்பரைக் குறித்து எழுதுகிறார் அவர். சுதிர் சொனால்கர் ஜுஸ்ஸாவாலாவின் சமவயதினர், ஜுஸ்ஸாவாலா போலவே அவரும் தனித்தியங்கும் பத்திரிகையாளராய் நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவர் தன் ஐம்பதுகளின் ஆரம்பப் பருவத்தில் 1995ஆம் ஆண்டு காலமானார், மதுபானம் அவரை அழித்தது. சொனால்கர் குறித்து தாளவொண்ணா நுண்ணுணர்வுடன் எழுதுகிறார் ஜுஸ்ஸாவாலா. அவரது கட்டுரையில் இரட்டைச் சித்திரம் உருவாகிறது- ஆம், சொனால்கரின் உருவம் ஒன்று, ஆனால் அதனுடன் ஜுஸ்ஸாவாலா தீட்டும் சித்திரமும் தோன்றுகிறது, கண்ணாடியின்மீது நடந்து செல்லும் பூனையின் அமைதியுடன் அவரது வாக்கியங்கள் நம்மைக் கவர்ந்து செல்கின்றன. (more…)

இளைப்பாறுதல்

ஸ்ரீதர் நாராயணன்

image1

மூலக்கடை பிள்ளையார் கோவில் பக்கமாக வரும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ‘சிக்னல் போட்டிருக்கு’ என்று சாந்தலட்சுமியின் காதுகளில் கேட்கும்படி முணுமுணுத்துவிட்டு சிவசுப்ரமணியன் வேகமாக பஸ்ஸின் படிக்கட்டுகள் பக்கமாக வந்தான். எதிர்பார்த்தது போல டிரைவர் வேகத்தைக் குறைக்க சட்டென குதித்து இறங்கினான். பின்னாடியே தடதடவென சாந்தலட்சுமி இறங்குவதற்குள் பஸ் வேகமெடுத்து விட்டது. அந்த மதிய நேரத்தில் நூறடிச்சாலை வெறிச்சோடி இருந்ததால், டிரைவர் வேகமெடுத்தபடி சிக்னலைத் தாண்ட, பஸ்ஸிலிருந்து குதித்த சாந்தலட்சுமி கொஞ்சம் தூரம் ஓடி சமாளித்து நின்றாள்.

‘த, விழுந்து சாவறதுக்குனு வந்துக்குது பாரு. ஸ்டாப்பிங்ல இறங்கி நடந்து வாறதுக்கு என்னா கேடு’ கண்டக்டர் தலையை நீட்டி திட்டுவது சிவசுப்ரமணியன் காதுகளில் நன்றாகவே கேட்டது.

‘பேமானி. ரெட்ல கிராஸ் பண்ணிட்டு, என்னா சவுண்டு விடறான்’ சாந்தலட்சுமியின் குரல் பஸ்ஸை எட்டியிருக்காது என்றாலும், சாலையோரத்து இளநீர் கடைக்காரரின் காதுகளை எட்டியிருந்தது அவருடைய சிரிப்பின் மூலம் தெரிந்தது.

‘அதான், ஸ்பீடு கூட்டிக்கிறான்ல. என்னாத்துக்கு குதிக்கிற நீயு?’ (more…)

யாரோ ஒருவன்

ஹரன் பிரசன்னா

பிரகதி மைதானத்தில் நடக்கும் டெல்லி புத்தகக் கண்காட்சியின் குளிரூட்டப்பட்ட அரங்குக்குள் நுழைந்தபோதே என் நாசி அந்த மணத்தை உணர்ந்து இதற்கு முன்பு டெல்லி வந்ததன் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது. உடனே நினைவுக்கு வந்தவன் சுனில் வர்மாதான். கடந்தமுறை என் புத்தக அரங்குக்குப் பக்கத்து அரங்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ முறை பங்கேற்றிருந்தாலும், யாருடனும் ஒட்டிப் பழகியதில்லை. ஒரு ஹாய் ஒரு ஹலோ, அவ்வளவுதான். ஆனால் கடந்தமுறை சுனில் வந்து வந்து பேசினான். எத்தனை முறை கிழே இறக்கிவிட்டாலும் வலிந்து இடுப்பேறிக் கொள்ளும் குழந்தை போல.

அவனுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் விடாமல் பேசிக்கொண்டே இருப்பான். எனக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசமாவது இருக்கும். வெளுத்த தோலுடன் ஒல்லியாக உடல் உள்ளொடுங்கி அவன் பேசும்போதெல்லாம் தொண்டைக் குமிழ் ஏறி இறங்குவது எனக்கு சிரிப்பாக வரும். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னென்னவோ பேசுவான். ரொட்டியை வாங்கி சாயாவில் முக்கி யாரோ அடித்துப் பிடுங்கவருவதுபோல வேகவேகமாக அவன் உண்பதைப் பார்க்க எனக்குச் சிரிப்பாக வரும். அதே ரொட்டியைக் காண்பித்து சாப்பிடறீங்களா ஜி என்பான். வேண்டாம் என்று மறுப்பேன். சுடச்சுட கடும் சாயா வாங்கித் தருவான். மெல்லிய மீசை நெளிய இது தனது ட்ரீட் என்று சொல்வான். (more…)

பிளான் பி

எஸ். சுரேஷ்

பாடிக்கொண்டிருந்த கழுதை முன் ‘சபாஷ் சபாஷ்’ என்று தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தது குள்ளநரி.

கழுதையை ‘குஷிப்படுத்தி’ சிங்கத்திடம் அழைத்துச் சென்றால், சிங்கம் விட்டு வைத்த மீதி தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசை நரிக்கு.

ரசித்துக்கொண்டிருந்த நரியைக் கண்ட காட்டு மிருகங்கள் கழுதை முன் உட்கார்ந்து பாட்டை ‘ஹும்’ கொட்டி ரசிக்க ஆரம்பித்தன.

இதைக் கண்ட நரி எல்லோரிடமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.

கிடைத்த பணத்தில் தனக்கொரு மட்டன் பிரியாணியும் கழுதைக்கு ஒரு கட்டு புல்லும் ஆர்டர் செய்தது.

ஒளிப்பட உதவி – mummy-donkey, Deviant Art