தினப்பதிவுகள்

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து 

நிலப்பிரபுத்துவ நடைமுறைகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் வாழும் பெண்களின் நிலையைச் சுட்டும் கவிதையாகவும் இதை வாசிக்கலாம் (பிற வாசிப்புகளின் சாத்தியத்தை இது நிராகரிப்பதில்லை).

சொத்து பெண்களுக்கு அளிக்கப்படும் பழக்கம் இல்லாத இடத்தில், பிறந்து வளர்ந்த வீடு எத்தனை நெருக்கமானதாக இருந்தாலும் அது ஆண்களுக்கே செல்கிறது. மா பழுப்பதற்கு முன் விழுவது, நிறைவேறாமல் பொய்க்கும் நம்பிக்கைகளைச் சுட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவள் மணமாகி வேறெங்கோ செல்வார், அவளது பெண் அவளுக்கு தலை சீவி விடுவாள், வேறு இடங்களில் வேறு உள்ளங்களில் கண்டுகொள்ளப்படாத வேறு மூலைகளில் வேறு மாம்பழங்கள் கனியும் முன்பே விழக்கூடும். வெம்மையற்ற சாம்பல் இந்தச் சுழற்சியின் மீட்சியின்மையைச் சித்தரிக்கிறது- பீனிக்ஸ் போன்ற மறுமலர்ச்சி எதுவும் சாத்தியமில்லை.

ஆனால் இது ஒரு புதிரான கவிதை. மூளையைக் கொண்டு கவிதை வாசிப்பவர்கள் குறுக்கெழுத்தை அணுகுவது போல் இதை அணுகலாம்.

கவிதையின் முதல் வரி, Not yet., என்று வருகிறது. தலைப்பு கோடை என்பதால், அதனுடன் இணைத்து, கோடை இன்னும் வரவில்லை என்று புரிந்து கொள்ளலாம். அடுத்து, மாமரத்தின் கீழ், The cold ash of a deserted fire. வட இந்திய இலக்கியத்தில் கோடையும் மாங்கனியும் காமத்தின் குறியீடாகக் கருதப்படுகின்றன என்று நினைக்கிறேன் (இங்கு இந்தக் கவிதை நினைவுக்கு வருகிறது – – “பச்சையின்/ நிர்வாணத்தாலான/ அதன் உடல்/ ஒரு கோடைக் கரம்”. – மேஜையின் மீதிருக்கும் ஆரஞ்சு பழங்கள், ஸ்ரீனிவாஸ் ராயப்ரல்“. cold ash என்பதை அவிந்த நெருப்பின் சாம்பல் என்று வாசிக்கலாம், deserted fire, அனாதையாய் விடப்பட்ட, கைவிடப்பட்ட நெருப்பு- மாமரத்தின் கீழ் யாரோ எதற்கோ நெருப்பு வைத்திருக்கிறார்கள், அந்த நெருப்பை வளர்க்கத் தவறி கைவிட்டதால் அது அவிந்து கிடக்கிறது.

அடுத்து வரும், Who needs the future? என்பதை கோடை இன்னும் வரவில்லை என்பதோடு சேர்த்து யாருக்கு வேண்டும் எதிர்காலம் என்று வாசிக்கலாம். மாமரத்தின் கீழிருக்கும் நெருப்பை வளர்க்க ஆளில்லை, அது தணிந்து சாம்பலாகி விட்டது. இனி எதிர்காலத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

அடுத்து ஒரு காட்சி. ஒரு பெண் தன் தாய்க்கு தலை பின்னி விடுகிறாள். பத்து வயது, அவள் அம்மாவின் தலைமுடியில் crows of rivalries are quietly nesting. இந்த சச்சரவுகள் முடிந்து போனவையாக இருக்கலாம், அப்படியானால் நடந்தது அத்தனையையும் அம்மா தன் கூந்தலில் அள்ளி முடிந்து வைத்திருக்கிறாள். அல்லது, இனி அம்மாவுக்கும் பெண்ணுக்கும் உருவாகப் போகும் சச்சரவுகளாக இருக்கலாம். அம்மா- பெண் போட்டியின் சச்சரவுக் காகங்கள் இப்போதைக்கு கூடடைந்து மௌனமாய் இருக்கின்றன.

அது என்ன போட்டி என்று கேட்டால், சிறுமி ஒரு போதும் தனக்கு இந்த வீடு சொந்தமாகாது என்று தெரிந்து வைத்திருக்கிறாள், அவள் போக வேண்டிய வீடு வேறு.

எனவேதான் இன்னும் உயிர்ப்புள்ள ஒரு மாங்காய், இன்னும் பச்சை அதன் மாறாத அத்தனை சாத்தியங்களோடும் (மீண்டும் அந்த மேற்கோள்  – “பச்சையின்/ நிர்வாணத்தாலான/ அதன் உடல்/ ஒரு கோடைக் கரம்.), மண்ணில் வீழ்கிறது, மென்மையாக. அவள் கோடை வரக் காத்திருக்கிறாள் என்று கொள்ளலாம். ஆனால் பத்து வயது பெண்ணின் உணர்வுகளா இவை என்று கேட்கும்போது இது அத்தனையும் அடிபட்டுப் போகிறது.

நாம் இந்தக் கவிதையை அம்மா, பெண், அல்லது இருவரையும் பார்க்கும் கவிஞர் என்று மூவரில் யாருடைய பார்வையில் வாசித்து யாருடைய உணர்வுகளை அடைகிறோம் என்பதில்தான் கவிதை அனுபவம் காத்திருக்கிறது.

கவிதை இங்கே

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “எனக்கே தெரியாமல் உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து –

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “எனக்கே தெரியாமல் உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்” – நகுல்வசன் தமிழாக்கம்  குறித்து –

பயனற்ற இல்லற வாழ்வு என்ற புள்ளியிலிருந்து இந்தக் கவிதையைப் பார்ப்பது வசதியாய் இருக்கலாம். தனது இல்லற வாழ்வின் நசிவை அவன் உணர்வதில்லை, எல்லாம் நல்லபடிதான் இருக்கும் என்று கவனிக்காமல் இருந்து விடுகிறான். ஆனால் ஒரு நாள் அவன் தன் மணமுறிவு துவங்கும் சாத்தியத்தைக் கண்டு கொள்கிறான். இது நாள் வரை, தான் அலட்சியப்படுத்திய விஷயங்கள் இப்போது அவன் மனக்கண் முன் அவனது சிறுமைகளைச் சித்தரிக்கின்றன. காலமோ கடந்து விட்டது, ஆண்களுக்கே உரிய கண்டுகொள்ளாமையினால் அவன் எண்ணற்ற ஆண்டுகளாகச் செய்ததை இப்போது அவனால் திருத்த முடியாது. தன் மனைவியின் இதயத்தை மீண்டும் அடைவது எப்படி என்பதற்கான வழி அவனுக்குத் தெரிவில்லை (வீடு திரும்ப முடியாதது போலவே).

இனி கவிதையை இன்னும் கொஞ்சம் நெருங்கி வாசிக்கலாம்.

“வெளியே ராப்பகலாக மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. நான் நிச்சயம் என் வீடு திரும்பப் போவதில்லை (வீட்டுக்கு வெளியே இங்கே சிக்கிக்கொண்டு இருக்கிறேன்), விபரீதமாய் எதுவோ நடக்கப் போவது நன்றாகத் தெரிகிறது. (என்னோடு இப்போது இருப்பது) (என்னை அச்சுறுத்துவது) சில்லிட்டு வரும் தரைதான்”

இதைத் தலைப்புடன் தொடர்புபடுத்தி வாசிக்கும்போது இது தாம்பத்ய கவிதையாகும் சாத்தியம் கொள்கிறது.

இரவு பகலாய் மழை, வீடு போய்ச் சேரப் போவதில்லை என்பதை இவர் தன் வீடு திரும்பப் போவதில்லை என்று பொருள் கொள்ளாமல், இந்த இருவரும் அவர்கள் கனவுகண்ட வீட்டைச் சென்றடையப் போவதில்லை. மழை கண்ணீராக இருக்கலாம், அல்லது இவர்களை ஆழ்த்தும், முறிவிறக்கு இட்டும் செல்லும் அன்றாடச் சூழல். நிச்சயம் என்னவோ நடக்கப் போகிறது என்பதை, எப்போதும் இப்படியே நாம் இருந்துவிட முடியாது, ஏதோ ஒரு இடத்தில் முறியத்தான் போகிறது, என்று புரிந்து கொள்ளலாம். இப்போதொ வீட்டுக்கு வெளியே மழை, அதன் ஈரத்தால் தரை சில்லிட்டு வருகிறது. இதயம் என்றால் வெம்மை இருக்க வேண்டும், இங்கே அது மெல்ல மெல்ல அடங்குகிறது.

கவிதை இங்கே

‘சூடிக் கொடுத்த பாவை’ குறித்து தி. வேல்முருகன்

… “பிள்ளைவளோ, யாரு பெத்த புள்ளையோ, நல்லா இருப்பிங்க, இருங்க வரேன்” என்று உள்ளே போய் ஒரு கொட்டுக்கூடை நிறைய பந்து கொடுத்தார். சிவப்பும், நீலமும், மஞ்சளுமாக பந்துகள்,” என்று அப்பாவின் சட்டை சிறுகதையில் எழுதியிருந்தேன்.

ஒரு நண்பர் கொட்டுக்கூடை என்றால் என்ன, அது எப்படி இருக்கும், எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கேட்டபோது எனக்கு ஆச்சரியம்.

“கொட்டுக்கூடை என்பது நெல் அளக்கும் மரக்கால் அளவு இருக்கும். 4 படி அரிசி பிடிக்கும். எல்லா கிராமத்து வீடுகளிலும் இருக்கும். புளியம்பழம், அரும்பு எடுக்க பெண்கள் பயன்படுத்துவதுண்டு. பிரம்பு அல்லது மூங்கிலால் பின்னப்பட்டிருக்கும். மூங்கில் கூடை என்றால் நீடித்த உழைப்புக்கு சாணம் கொண்டு மொழுவியிருப்பார்கள். தற்போது பயன் குறைந்துவிட்டது, இதன் உபயோகத்தை பிளாஸ்டிக் பறித்துவிட்டது,” என்று பதில் சொன்னேன்.

பிறகு யோசித்தபோது, இதன் பயன்பாடு தற்சமயம் மிகவம் அருகி விட்டது, இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு போட்டோவில்தான்  நாம் பார்க்கப் போகிறோம், என்று தோன்றியது. “கடைசியாக எப்போது பார்த்தோம், வீட்டில் இப்போது ஏதாவது இருக்குமா, பழைய பிரம்புக் கூடைகளாவது இருக்குமா,” என்று யோசித்துப் பார்த்தால் சுத்தமாக இல்லை. வீட்டில் உள்ளவை எல்லாம் அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் கூடைகள்தான்.

வருத்தத்தோடு இதை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆண்டாள் வந்தார். சந்தையில் கூடை முறம் விற்று விட்டு, விற்றது போக மீதமுள்ளதை தெருவில் விற்றுக்கொண்டு வருவார். தாழம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றபோது வழியில் இவர் வீட்டைப் பார்த்திருக்கிறேன். வாசலில் நான்கு, ஐந்து பேர் எப்போதும் கூடை பின்னிக் கொண்டு இருப்பார்கள். பட்டைகள், கொடிகள் காய்ந்து கொண்டிருக்கும். வனக்கத்துக்காக தண்ணீர் தெளித்து தேர்ந்ததாக எடுத்தனர். சிறிது நேரம் பார்த்து கொண்டு இருப்பேன், இதெல்லாம்  ஒரு பதினைந்து வருடங்கள் முன்பு.

இப்போது கூடை முறம் பயன்பாடு குறைந்து விட்டதே, இதையே நம்பியிருந்தவர்கள் கால ஓட்டத்தில் என்னவாகியிருப்பார்கள், எங்காவது கூலி வேலைக்கு போயிருப்பார்களா, இவர்கள் வேறு என்ன வேலை செய்ய முடியும், கட்டிட வேலைக்கு வெளியூர் போயிருப்பார்களோ என்று பலவாறு எண்ணியதும் மனம் நெகிழ்ந்து கனத்து விட்டது. நாள் முழுவதும் அதே எண்ணம். எந்த வேலையிலிருந்தாலும் கோடு போல் உள்ளுக்குள் ஓடி கொண்டு இருந்ததில் அவர் சந்தையில் நின்று விற்கும் இடம் ஞாபகம் வந்தது.

அதன்பின் கலியன் தன் தோளில் காட்டுப்பூனையோடு சந்தையில் நுழைந்தது ஞாபகம் வந்து கதை தானாக பரவி ஒடி பெருமாள் கோவில் திருப்பாவை ஒலி கேட்டதும் நான் பார்த்து அந்தக் கோயிலுக்கு முதல் கும்பாபிஷேகம் செய்த ஆயா ஞாபகம் வந்தார். அவர் வீட்டின் நலிவை கண் எதிரே கண்டதை இரு பெண்களின் பார்வையில் சொல்ல முடிந்தது, அதன் பின்புதான் சிறிது ஆசுவாசம்.

கதையில் வரும் மனிதர்கள் எல்லாம் நம்மோடு இருந்தவர்கள். அவர்களைக் காலம் ஒரு கற்பூரம் போல் கரைத்து விட்டது, இதில் கூடையும் முறமும் எம்மாத்திரம்.

தி. வேல்முருகனின் சிறுகதை, ‘சூடிக் கொடுத்த பாவை’ இங்கே

அசோகமித்திரனின் ‘கதர்’ சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நேர்ந்தது குறித்து சிவசக்தி சரவணன் குறிப்பு

விமோசனம், புண் உமிழ் குருதி (கல்யாண் ராமனின் புத்தகத்துக்குத் தலைப்பாக ஆகியிருக்கிறது), பழக்கம் போன்ற என்னைக் கவர்ந்த அமி கதைகள் பல இருக்கையில் இதை நான் தேர்ந்தெடுக்க என்ன காரணம் (நாலு பக்கத்தில் முடிந்துவிடுவதுதானே என்று கேட்காதீர்கள்) என்று எனக்கே சற்று வியப்புதான்.

உண்மையில் கதை என்னைத் தேர்ந்தெடுத்தது (அல்லது தானாகவே தன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது) என்பதே சரி! நஞ்சன்கூடு பல்பொடி என்ற பெயர் மனசில் தங்கி சுற்றிக்கொண்டே இருந்தது. பார் சோப்பில் ஆரம்பித்து ராம்கோபால் மில் துணி, ஃபோட்டோவுக்காக நூல் நூற்கும் கதாநாயகியர், கைதி உடை, சைக்கிளை சுற்றுவது என்று தொடர்பற்ற பல படிமங்கள் நினைவை விட்டு அகலவில்லை. பெஞ்சு மேல் நின்றாலும் அதற்காக இவன்மேல் கோபப்படாத வகாப், புண் உமிழ் குருதியில் தர்ம அடி வாங்கிக்கொண்டு ‘உன் பணத்தை நான் எடுக்கலப்பா’ என்று அமைதியாக அகலும் கிழவரின் இன்னொரு வார்ப்பாகத் தோன்றினான்.

சிவசக்தி சரவணன் மொழிபெயர்த்த Khaddar இங்கே

‘அப்பாவின் சட்டை’ ராம் மேஸ்திரி குறித்து தி. வேல்முருகன்

இந்தக் கதையில் வரும் பெரியவர், ராம் மேஸ்திரியை நான் முதலில் இரண்டாவது படிக்கும்போதிலிருந்து பள்ளி இறுதி வரை பார்த்திருக்கிறேன். மெயின் ரோட்டை ஒட்டி, சுற்றி தென்னைகள் சூழ அவர் வீடு இருக்கும். எப்போதும் வீட்டு வாசலில் ஆட்கள் வேலை கேட்டு நிற்பார்கள். சுற்று வட்டாரத்தில் அறியப்படுகிற கட்டிட மேஸ்திரியாக இருந்தார் அவர்.

மச்சு வீடு கட்டும் எல்லாருக்கும் கிணறு சுற்ற வராது. ஓட்டு வீடு, மச்சு விடு என்று எல்லா வேலைகளையும் தெரிந்த கைராசிக்காரர், பணமும் புகழும் என்று செல்வாக்காக இருந்தவர். அவர் கை தொட்டு கரணை கொடுத்த கொத்தனார் எல்லாம் மேஸ்திரி ஆகி பேர் சொல்கின்றனர். அவர் பிள்ளைகள் எல்லாரும் கொத்தனார்கள்தான், ஆனால் சோபிக்கவில்லை- மற்றவர்களிடம் வேலை செய்கிறார்கள்.

கால ஒட்டத்தில் ரோட்டோர மனை கைவிட்டுப் போய், வயலை ஒட்டிய மகன் வீட்டில் மருமகளின் கையை எதிர்பார்த்து தன் வயதான காலத்தில் சிறுவர்கள் விளையாடுவதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மருமகள் மேல் பிரியம் இருந்தாலும் காலம் பூராவும் மேஸ்திரியாக இருந்ததால் அவரால் அப்படிதான் பேச இயலும்.

தி. வேல்முருகனின் சிறுகதை, ‘அப்பாவின் சட்டை’ இங்கே