மொழியாக்கம்

ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 2

முந்தைய பகுதி: ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் 1

கடல், இதமான வசந்தகாலம், ஒளியில் நனையும் தீவுகள், கிரேக்கத்தின் அலங்காரமற்ற அழியா திருமேனியின் மீது மென்மழை தெள்ளிய திரையாகப் பரவியது. ஏஜியன் கடலை மரணிப்பதற்கு முன் தன் வாழ்நாளில் கடப்பவன் உண்மையில் பாக்கியவான் என எண்ணிக்கொண்டேன்.

பெண்கள், பழங்கள், சிந்தனைகள்– ஆம் இவ்வுலகின் இன்பங்கள் கணக்கற்றவை. ஆனால் இந்த அற்புதமான வசந்த காலத்தில், கடந்து செல்லும் ஒவ்வொரு தீவின் பெயரையும் முணுமுணுத்தபடி கடலைக் கிழித்துக்கொண்டு பயணிப்பதில் உள்ள மகிழ்ச்சிதான் என்னளவில் மனிதனின் இதயத்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மிகச் சிறந்த மார்க்கம். வேறெங்கும் நிகழ்காலத்திலிருந்து கனவிற்குள் இத்தனை எளிதாக, அமைதியுடன் நுழைந்துவிட இயலாது. எல்லைகோடுகள் ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன, புராதனமான கப்பல்களின் கொடிகம்பங்களில் இருந்து கிளைகள் முளைத்து கனிகள் காய்க்கின்றன. கிரேக்கத்தில், தேவையே அற்புதங்களை உண்டாக்கும் அன்னை என்றாகிறது. (more…)

சமகால கவிதைகளின் சிக்கல் – ரேமண்ட் ஹாரிஸ் நேர்காணல்

The New York Quarterly என்ற கவிதை காலாண்டிதழ், மற்றும் New York Quarterly Books என்ற அச்சு நூல்களின் பதிப்பாசிரியர் ரேமண்ட் ஹாமண்ட். இவர் பலரால் மதிக்கப்படும் கவிஞரும்கூட. Poetic Amusement என்ற விவாதநூல் எழுதியவர். இவரோடு அனிஸ் ஷிவானி நிகழ்த்திய ஒரு மின்னஞ்சல் நேர்முகத்தின் சிறு பகுதி இங்கு தமிழாக்கப்படுகிறது. நேர்முகத்தின் முழு ஆங்கில வடிவை இங்கு வாசிக்கலாம் .

பழகிய பாதைகளில் பயணிக்கும்,  மரபார்ந்த அச்சிதழ்களில் துவங்கி, avant garde இணைய இதழ்கள் வரை எண்ணற்ற இலக்கிய இதழ்கள் இருக்கின்றன. The New York Quarterlyயின் தனித்தன்மை என்ன? வேறெங்கும் கிடைக்காத எது உங்கள் இதழின் கவிதை வாசகர்களுக்குக் கிடைக்கக்கூடும்? ரோலிங் ஸ்டோன் ஒரு முறை அமெரிக்காவின் சிறந்த கவிதை பத்திரிக்கை என்று The New York Quarterlyயை அழைத்தது. அவர்களுக்கு இப்போதும் கவிதையில் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், இன்றும் உங்களைச் சிறந்த பத்திரிக்கையாகக் கருதுவார்களா?

சிறந்த பத்திரிக்கை என்று எங்களைச் சொல்லக்கூடாது என்று நினைக்கிறேன். விசாலமான பார்வை கொண்ட இதழ் என்றோ, பரந்துபட்ட படைப்புகளுக்கு இடமளிக்கும் இதழ் என்றோ, அதிக அளவில் சாதாரண வாசகர்களால் வாசிக்கப்படும் பத்திரிக்கை என்றோ சொன்னால் நன்றாக இருக்கும். ‘சிறந்தது’ என்று சொல்லும்போது உயர்ந்தது என்ற பொருள் வருகிறது. அப்படிப்பட்ட ஒரு தீர்மானம் தனி நபர் ரசனை சார்ந்த முடிவு என்பது நம் எல்லாருக்கும் தெரியும் – அல்லது நமக்கு அது தெரிந்திருக்க வேண்டும். இதைச் சொன்னாலும், அவர்கள் அன்று அவ்வாறு அழைத்த நாள் முதல் இன்றும், உயர் அடுக்கில் உள்ள இலக்கிய இதழ்களுக்கு இணையான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். (more…)

காமம் – இரு தமிழாக்கக் கவிதைகள்

நம்பி கிருஷ்ணன்

புல்லட்டுமா என்றான்

புல்லட்டுமா என்றான்
(கத்துவேன் என்றாள்
ஒரே ஒரு முறை என்றான்)
ஜாலி தான் என்றாள்

(தொடட்டுமா என்றான்
எவ்வளவு என்றாள்
நிறையவே என்றான் )
குடியா முழுகிவிடும் என்றாள்.

(போதருக என்றான்
தொலை தூரம் வேண்டாம் என்றாள்
எது தொலைவென்றான்
நீ இருக்குமிடம் என்றாள் )

தங்கி விடவா என்றான்
( எவ்வழி என்றாள்
இதோ இப்படி என்றான்
நீ முத்தமிட்டால் என்றாள்

முன்னேறவா என்றான்
இது தான் காதலா என்றாள் )
நீ சம்மதித்தால் என்றான்
(கொல்லாதே என்றாள்

ஆனால் இது தான் வாழ்க்கை என்றான்
ஆனாலும் உன் மனைவி என்றாள்
இதோ இப்போதே என்றான்)
ஆ அம்மா என்றாள்
(அமர்க்களம் என்றான்
நிறுத்தாதே என்றாள்
மாட்டவே மாட்டேன் என்றான்)
மெதுவாக என்றாள்

(வந்ந்து… விடவா? என்றான்
உம்…ம்ம் என்றாள்)
இன்பத்தின் உச்சமடி நீ என்றான்
(எனக்கு சொந்தமடா நீ என்றாள் )

(may i feel said he, e e cummings)

oOo
புணர்ச்சி

கழட்டினாள்!
வெறும் ஆடைகளை மட்டும் அவள் களையவில்லை.
முலை, புட்டம்,
பொன்னாய் மினுக்கும் தொடைகளை

அல்ல

மெல்லிய நுரையீரல், குடலின் ஊதாக்கூடு,
எலும்பின் ஒளிரும் தந்தம்,
வாஞ்சையுடன் துடிக்கும் இதயத்தையே

காட்டும்படியாக

உள்ளிருப்பதை வெளியே கொணரும்
சிக்கலானச் செயலை அவள் நிகழ்த்த
நான் அவளைக்
கைகளில் அள்ளினேன்

என்னையே திடீரென்று அவள் குடிகொண்டதைப் போலொரு
மெல்லதிர்ச்சி!

மௌனம்.
வெளியே ஜன்னலில்
மழையின் தாழ்ந்த வியப்பொலிகள்.

கவலையுடன் வரைபடமின்றி பயணித்தேன்
சதையின் நகரத்தில்:
அவளது நடைபாதைகளின் நீல நிழல்களில்
தொலைந்து இடறினேன்.
கனவின் அமைதி
ஊசலாட்டம்
நீரில், துடுப்பின் சிதறடிப்பு!

திடீரென, சற்றும் எதிர்பாராமலே
வெய்யில் நிரம்பிய சதுக்கத்தில்
நான் வந்தடைகையில்,
என் கரங்களில்,
மெல்லிய கரைதல்களுடன்,
பறவைத் திரளாக
அவள் சிதறினாள்.

நிர்பந்தங்களே இல்லாமல்
ஓருடல் அளிக்கப்படுகையில்:
கனிவான இரக்கம்,
ஆனாலும் பொறுமையின்மையும்கூட.
கொஞ்சம் அலட்சியத்துடன் கலந்து.
இதையெல்லாம்விட,
பெயரிடவே முடியாத ஏதோவொன்று:
ஒருவிதமான சோகம்.

பின்கழுத்தில் விரல்களால்
விரைவாக மும்முறை தட்டிவிட்டு
அவள் எழுந்து உட்காரும் வரையில்
நாங்கள் கிடந்தோம்:
நசுநசுத்து, குளிருடன்,
கரையில் தனித்த மீன்களைப் போல்.

(After John Banville, The Newton Letter)

ஜோர்பா எனும் கிரேக்கன் – அத்தியாயம் ஒன்று

(நரோபா தமிழாக்கம் செய்துகொண்டிருக்கும் Nikos Kazantzakis எழுதிய Zorba the Greek நாவலின் முதல் அத்தியாயம்)

நான் அவனை பைரியசில் தான் முதன் முதலாகச் சந்தித்தேன். க்ரெட்டுக்கு கப்பலேறிச் செல்ல வேண்டியிருந்தது எனக்கு, துறைமுகம் வந்திருந்தேன். பொழுது விடியவிருந்தது, மழை வேறு வலுவாக பொழிந்து கொண்டிருந்தது. கண்ணாடி கதவுகள் மூடியிருந்த அந்த சிறிய கஃபே வரையில்கூட வலுவான சூறைக்காற்று அலைகளின் மீதிருந்து நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்தது. நன்றாக நொதிந்த சேஜ் பானத்தின் வாசனை கஃபே முழுவதும் நிரம்பியிருந்தது. வெளிப்புறத்து குளிரால் உறைந்திருந்த கண்ணாடி சாளரங்கள் மனிதர்களின் உஷ்ணமான மூச்சுக்காற்றால் அதன் உட்புறங்களில் வியர்த்திருந்தன. இரவை அங்கேயே கழித்த ஐந்தாறு அரக்கு நிற ஆட்டுத்தோல் மேற்சட்டை அணிந்த கப்பல்காரர்கள் காபியையோ சேஜ் பானத்தையோ அருந்திக்கொண்டு தெளிவற்ற சாளரங்களின் வழியே கடலையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கொந்தளிக்கும் கடல்நீரின் வலுவுக்கு அஞ்சி மீன்கள் கடலாழத்திற்குள் அடைக்கலம் புகுந்து கடல்பரப்பில் அமைதி திரும்புவதற்காக காத்திருந்தன. கஃபேயில் கூடியிருந்த மீனவர்கள் புயல் ஓய்வதற்காக காத்திருந்தனர் ஏனெனில் அதன் பின்னர்தான் தூண்டில் புழுவைத்தேடி மீன்கள் மிக நிச்சயமாக கடற்பரப்பை நோக்கி வரும். மத்திகளும், சுறாக்களும், திருக்கைகளும் தங்கள் தலைமறைவு வாழ்வை முடித்துக்கொண்டு மேலெழும். பொழுது மெல்ல புலர்ந்துக்கொண்டிருந்தது. (more…)