விமரிசனம்

இராகப் பெண்கள் – 5: ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்

பானுமதி. ந

4. ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்

மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஒன்றேதான? வேறுபாடுகள் உண்டல்லவா? சொல் பெருகும் ஓடையில் தி ஜா ஒரு செம்பகப் பூவை மலர வைக்கிறார்.

“பிரமிப்பில் ஏறி நின்ற சோகத்தின் அதிர்ச்சி கண்ணீராகக் கரைந்தது.”

“மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல் வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்தையும், நீரில் மிதந்த கரு விழியையும் வயசான துணிச்சலுடன் கண்ணாரப் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தார்.

“அது என்ன பெண்ணா? முகம் நிறைய கண் .. கண் நிறைய விழி… விழி நிறைய மர்மங்கள்.. உடல் நிறைய இளமை.. இளமை நிறைய கூச்சம்.. கூச்சம் நிறைய நெளிவு.. நெளிவு நிறைய இளமுறுவல்”

“தேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்துவிளக்கைப் போல”

செம்பகப் பூவை அனைவராலும் முகர்தல் இயலாது. அதன் வாசம், அதன் வாடல் எல்லாமே தனி. இதழ் விரித்து மணம் வீசும் அது சிலர் மூக்கின் அருகே முகர்கையில் குருதியையும் வரவழைத்துவிடும்.

அழகே  உருவானவள். மானிட இனத்தோரால் தன் உடமை என்று சொந்தம் கொண்டாட முடியுமா அவளை? ஆனாலும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது. அவன் முகர்ந்து பின்னர் மரணிக்கிறான். இவளின் இள வயதும், அழகும், ஆனந்தமும், களியும் யாரோ ஒருவன் சாவினால் அழியக் கூடாதென கதையில் வரும் கிழவர் நினைக்கிறார். அவர் மனைவியும், சமூகமும் வேறுபடுகிறார்கள். இந்த செம்பகப் பூ சில நாட்கள்தான் துக்கம் கொண்டாடுகிறது.  பின்னர் தன் ஆனந்தத்திற்கு வந்து விடுகிறது. சந்தன சோப்பில் முகம் கழுவி, கருமேகக் கூந்தலை  பின்னலிட்டு முடிந்து, பாங்காய் சேலை உடுத்தி அந்தப் பூ வாடாது வாசம் வீசுகிறது. இறந்தவனின் அண்ணனின் துணை கொண்டு வாழ்வையும், தன் இருப்பின் உண்மையையும் செம்பகம் சொல்லிச் செல்கிறது.

கேட்பதற்கு ரீதிகௌளை சற்று ஆனந்த பைரவியை நினைவுபடுத்தும். அதன் வளைவும், நெளிவும், அழகும் சொல்லித் தீர்வதில்லை. ஒரு சிறு கதையில் ஒரு பார்வையாளன் வாயிலாக தி ஜா நமக்கும் அந்த மலரின் வாசத்தைக் காட்டுகிறார். நியதிகள் வாழ்க்கை முறைக்குவழி காட்டுபவையே. ஆனால் ஆனந்தம் என்பது வாழ்விற்கு அவசியம். களி கொள்ளும் உவகை, உவகை தரும் உரிமை, உரிமை தரும் மாற்றம், மாறுதல் தரும் தருணம், அந்தத் தருணத்தின் ஆனந்தம் இதுதான் உயிர்ப்பின் அடையாளம்.. மற்றவை உடலில் உயிர் இருக்கிறது என்பது மட்டும்தானோ?

ஆனந்த பைரவியைப் போல் தோன்றும் ரீதி கௌளை இவள். உலகக் கணக்குப்படி பாஷாங்க இராகம்; ஆனால் இசைக்கப்படவேண்டிய இராகம். தன் மனோதர்மப்படி அலை மோதும் இது. அதில் குற்ற உண்ர்வு ஏற்படுத்தாத இராகம். ஸ்தாயியும், ஸ்வரமும், ஸ்வரூபமும் உள்ளது; இராக லக்ஷணங்கள் உள்ளது. புல்லாங்குழலுக்குள் காற்றாகப் புகுந்து கொள்வது. இசைபட வாழ்தல் என் உரிமையெனச் சொல்லாமல் சொல்வது.

இனி ஆனந்தபைரவி

தி ஜா வைப் போலவே லா ச ராவும் இந்தப் பெண்ணின் பெயர் சொல்லவில்லை, “ப்ரளயம்” என்ற சிறுகதையில். உள்ளுக்குள் முனகும் ஒரு இராகம். கதை சொல்லும் மாற்றுத் திறனாளியின் ஆனந்த இராகம்.  அன்பைத் தேடுகிறான்-கருணை, இரக்கம் இவற்றையல்ல. அவன் சொல்கிறான்—“அன்பு கூட அல்ல; நான் தேடுவது உள்ளத்தின் நேர் எழுச்சி. இரு தன்மைகள் ஒன்றுடனொன்று இணைந்தோ, மோதியோ விளையும் இரசாயனம்”

“சில சமயம் வாழ்க்கையின் இன்பப் பகுதிகளை வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிடுங்கி அனுபவித்தால் நலமே என்று தோன்றுகிறது”

“என்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தும் இந்த மீளமுடியாத தனிமை. நான் என்னுள் உணர்ந்த இந்தத் தனிமை சகிக்க முடியவில்லை”

உயிர்களின் அடிநாதமான நீட்சி, தன்னிலிருந்து ஒரு உயிர்… அவனுக்கும் வேண்டும். தன்னைக் கொடுக்கும், தன்னிடம் அன்பாக இருக்கும் பெண் அவனுக்கும் வேண்டும். உடலில் குறைபாடு உள்ளவன் இதைப்  பிறரிடம் சொல்லவும் நாணுகிறான். பணம் இருந்தும் துணை இல்லை. ஏழையான உறவுப் பெண்ணை நினைத்துக் கொள்கிறான். கேட்கவில்லை. அவளுக்கும் திருமணமாகி ஊரை விட்டுச் செல்கிறாள். மணந்தவனும் வசதியற்றவன். எப்பொழுதாவது அந்தக் கணவன் எழுதும் கடிதம்.

ஒரு நீல இரவில், பார்வையை ஏமாற்றிய சரடுகள் தொங்கும் நக்ஷத்திர இரவில், நீல ஏரியில் இரு கைகளிலும் (அவன் ஒரு கை அற்றவன்- தோளிலிருந்து சூம்பியவன்) துடுப்பு ஏந்தி அவன் செலுத்தும் ஓடம் கரை தட்டி அவனின் அந்தப் பெண் படகில் ஏறுகிறாள். அவள் நீலப் புடவை உடுத்தியுள்ளாள்.

“நான் நீலச் சுடரானேன்- கர்ப்பூரம் அசைவற்று எரிவதைப் போல். என்னுள் குறையும் அத்தனையின்  நிவர்த்தியுமானேன். என்னின் நிவர்த்தியுமானேன்”

அவனின் இந்த உண்மையுமான கனவில் ஓடம் பாறையில் மோதி அவள் நீரில் மூழ்குகிறாள்.

அவள் தாயாகப் போகும் செய்தி தாங்கி வரும் கடிதம் அவனின் ஆதார சூக்ஷுமத்தைத் தொடுகிறது. தன் மகவு, அது பெண் மகவு என திண்ணமாக நினைக்கிறான். அவர்களுக்குத் தொடர்ந்து பணம் அனுப்பி தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்கிறான், அவளும் பிள்ளைபேற்றுக்கு வருகிறாள். ஒரு நாள் குளக்கரையில் நீர் நிறைந்த விழிகளுடன் யதேச்சையாக அவனைப் பார்க்கிறாள்.

அவள்  இறந்து விடுகிறாள். ஆண் குழந்தையும் வயிற்றிலேயே இறந்து போகிறது. தன் ஆசைப் பசி அவளைத் தின்றுவிட்டதாக இவன் நினைக்கிறான். அவள் கணவன் இவனுடன் பேசுகையில்  இவன் நினைக்கிறான். ”என் குழந்தையைப் பெற்றவள் அவள். என் குழந்தைக்கு தந்தையாய் இருப்பவன் அவள் கணவன்”

“உள்ளத்தின் மூலம் உடலை வெற்றி கொண்டேனா?அல்லது உடலின் மூலமே உள்ளத்தின் தாபத்தை வெற்றி கொண்டேனா?”

அனைவரும் இரசிக்கும் இராகம் ஆனந்த பைரவி. நாட்டுப்புறப் பாடல்களிருந்து அனைத்திலும் அது விரவி உள்ளது. மனம் வருடும் இராகம்.

ஆனால் ஏன் எல்லோருக்கும் நேரே கிடப்பதில்லை?கிடைக்காவிட்டால் என்ன? ஆனந்தம் மனிதனுக்கும் இயல்பு. அதை அவன் தேடி இசைத்துவிடுவான்.

ஒரு வார்த்தைகூட கதையில் அந்தப் பெண்ணை லா.ச ரா பேசவிடவில்லை. சிறு பருவத்தில் கதைசொல்லியை அவள் கேலி செய்வதுகூட இவன் குரலில் தான். அந்தப் பெண் பேச வேண்டியதனைத்தும், நிறைசூலியாய் நீர் எடுக்க குளத்திற்கு வருகையில் துடிக்கும் உதடுகளும், கண்களில் நிறையும் நீரும், மௌனமும், அவள் விருட்டென்று சென்றுவிடும் வேகமும் மொத்தமாகக் காட்டிவிடுகின்றன. அவன் வாழ்க்கையில் பிறர் அறியா ஆனந்தம் அவள். அவன் இசைத்த ஆன்மீகப் பாடல் அவள். தன் சுருதி சேர்ந்த இடத்தினை நுட்பமாகக் கையாள்கிறாள். அவனின் தாபம் தீர்த்தவள், அவனுக்கு மட்டுமே இரகசிய ஆனந்தத்தை தந்து இறந்து விடுகிறாள். அவன் நெந்சுக்குள் கமழும் இராகம். அவரவர் பாடல் அவரவர்க்கு.

ரீதி கௌளை:  ச க ரி க ம  நி த ம நி நி ச; 

    ச நி த ம க ம ப ம க ரி ச

ஆனந்த பைரவி:  ச க ரி க ம ப த ப ச

                ச நி த ப ம க ரி ச

oOo

 

 

 

 

 

 

 

 

 

இராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட (தர்பார் கானடா)

பானுமதி. ந

2. தர்பாரி கானட (தர்பார் கானடா) – ஒளியும் ஒலியும்  

கானடா நம் நினைவில் தன்னிரக்கத்தையும், சுகமான சோகத்தையும் ஏற்படுத்தும். தர்பாரில் ஒரு கம்பீரம் கலந்த நிலை. இவ்விரு ராகங்களைப் போல்,  பூர்வா மற்றும் அம்மணி இருவரும் இரு மாபெரும் எழுத்தாளர்கள் படைத்த ராகங்கள்..

பெயரில் ஒரு பாவம் பொதுவாக இருக்கிறது. பெயரைக் கேட்கும்போதே ஒரு கோட்டுச் சித்திரம் மனது வரைந்துவிடுகிறது. அதிகம் கேள்விப்படாத பெயரோ அல்லது பொதுப்பெயரோ நம்மைச் சிறிது நேரம் சிந்திக்க வைக்கிறது.

பூர்வா ஒரு அபூர்வ பெயர். அம்மணியோ பொதுப் பெயர். இப்பாத்திரப் பெயர்களே நம்முள் அலை எழுப்புகின்றன. இந்தக் கதாநாயகிகள் உயிர்ப்புடன் உலா வர உறுதுணை செய்கின்றன..

இரைச்சலும், மௌனமுமான சூழ்நிலையில்தான் அறிமுகமாகிறாள் பூர்வா!

ஒளியும் ஒலியுமாக அம்மணி.

அம்மணிக்கு அவள் ஊரைப் பற்றி பிறர் பேச விருப்பமில்லை. தன்னுள் நினைத்துக்கொள்ளவே ஆசை.

பூர்வா ஊரை நினைப்பதேயில்லை.

அம்மணி ஆதிப் பெருங்காற்று, ஊழிப் பெருவெள்ளம், தடை உடைக்கும் பிரவாகம்! காட்டாற்றின் வேகம். பிரபஞ்ச தாண்டவம். வெளியே இரைச்சல். உள்ளே நிறைவு. அழகின் செருக்கு. மனிதர்களைத் தொட்டு உணரும் மனப்பழக்கம். ஊரில் பெரிய மனிதரின் சிறு கால் அழுக்கைக்கூடத் தாளாத சிறுமி- அவர் மனக்குப்பையை அறிகையில் பந்தத்தையும், சொந்தத்தையும் துறக்கிறாள். பாடலும், ஆடலுமாக வாழப் பிடித்திருக்கிறது.

இறைவன் இணைக்கும் பந்தங்கள் வேடிக்கையாக இருக்கிறது அவளுக்கு!

கோபாலி இசைக்க மறந்த ராகம் அவள். அவளே இசையென பொங்குகிறாள். நிறைக்கிறாள், நிறைகிறாள். தன் போதி மரத்தை கண்டுகொள்கிறாள்.

பூர்வா நீர் நிறைந்த குடம். தன்னுள் தானே மூழ்கும் சிலை. மௌனமே இயல்பு. பேசும் அபூர்வ தருணங்கள் கலக்கமே! வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அதைப் பற்றி பெருமையுமில்லை, நிறைவுமில்லை, குறையுமில்லை. கணவன் கூட நுழையமுடியாத உள் ஆழம். இந்த உலகைப் படைத்த பின்னர் கடவுள் கொண்ட மௌனம். இரு பாதியெனப் பிரித்த பின்னர் சேர்க்கும் விளையாட்டில் அவன் கொண்ட ஆசை! அதில் வென்றும், தோற்றும் இருள், ஒளியென அவன் காணும் காட்சி.

வலி என்பதையே வெளிப்படுத்தாத பூர்வா ஒரு அபூர்வா! அமைதியாக அனுபவித்துக் கொள்ள அவளால் முடிகிறது. தன் முடிவை அறிந்த மௌனமோ அது!. முடிவில், கதறலில், வலி அவளை வெல்கிறது. இரு குழந்தைகள் வயிற்றிலேயே இறக்க அவளும் இறக்கிறாள்.

ஒலி நிறைந்த, வண்ணமயமான உலகில் இருந்து அம்மணி ஆர்ப்பாட்டமில்லாத அமைதிக்கு வருகிறாள். அவளுக்கு என்றுமே மனதில் இரைச்சலில்லை. வெளியே மௌனமில்லை.

பூர்வாவிற்கு வெளியே இரைச்சலில்லை, உள்ளேயோ அமைதியின் ஒலம்.

பூர்வா புன்னகையின் புதிர். கதாநாயகன் நினைத்துக் கொள்வான், “நான் இவளை மணந்தேனா அல்லது இவள் புன்னகையை மணந்தேனா?” என்று. அவள் “பொருள் புரியாப் புன்னகையுடன்” உட்கார்ந்திருப்பாள். “அவள் பத்திரம் என் மனதின் நிம்மதியைக் குலைத்தது” ஆனாலும் அவள் பால் கொண்ட காதல் குறையவில்லை.

ச ரி  ம ப த நி ச    ச  நி ச த ப ம க ரி. தர்பார். அம்மணி

ஆரோகணத்தில் அவள் காட்டாறு என்றாலும் அவரோகணத்தில் நீர்வீழ்ச்சி

ச ரி ப க ம த நி ச      ச  நிப ம  க ம ரி ச. – கானடா. பூர்வா

இவள் பனி உறைந்த பாறை  கடலுள்ளே சிதறும் எரிமலை

அம்மணியும் பூர்வாவும் ஒரு புள்ளியில் தொடங்கி  இரு கிளையெனப் பிரிந்து இணையும் இராகங்கள்.

தர்பாரி கானடா:

ச ரி க  ச ம ப த நி ச        ச த நி ப ம ப க  ரி ச

வாழ்வைத் தன் போக்கில் அணுகி, வாழ்ந்து பிறர் கவனங்களைக் கவர்ந்து, அனைத்தையும் தழுவும் காற்றாய், ஒலியாய் வாழ்ந்த அம்மணி அமைதியை உள்வாங்குகிறாள்.

தன்னுள்ளே மூழ்கி, உள்ளே இரைச்சலாய், வெளியே மௌனமாய், கேட்காத கேள்விக்கு விடை தேடி, வலியை ஒலியாய் வெளிப்படுத்தி பூர்வா விடை பெறுகிறாள்.

 

மெடுசாவின் மிதவை, ஒரு நீதிக்கதை – டாம் ஸ்டொப்பார்ட்

– பீட்டர் பொங்கல் –

அவர்களது துரதிருஷ்டம் அது. கடல் ஓதத்தின்போது கப்பல் மணற்திட்டில் மோதியது, கப்பலை விடுவிக்கும் முயற்சிகள் கடல் மேலும் மேலும் கொந்தளிக்கையில் தோற்றுப்போயின. போர்க்கப்பலை மீட்கவே முடியாது என்றானதும் மிதவை ஒன்றைக் கட்டுவது என்று முடிவானது. மிதவையொன்று செய்யப்பட்டது, அதுவும், சிறப்பாகவே செய்யப்பட்டது. நூற்றைம்பது பேர் அந்த மிதவையில் செல்வதென்றானது. மிதவையில் இருந்தவர்களிடம் ஒயின் இருந்தது, சிறிது பிராந்தி இருந்தது, சிறிதளவு தண்ணீர், நமுத்துப்போன பிஸ்கட்கள் கொஞ்சம். அவர்களுக்கு திசைகாட்டியோ வரைபடமோ அளிக்கப்படவில்லை. துடுப்பும் இல்லை, சுக்கானும் இல்லை- மிதவையைச் செலுத்த வழியேதும் இல்லை.

முதல் நாளிரவு  வீசிய புயல், மிதவையை பலத்த வேகத்துடன் அங்குமிங்கும் அலைக்கழித்தது. பொழுது புலர்ந்தபோது எங்கும் கூக்குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன, அனைவரும் தங்களைச் சாவுக்குத் தயார்ப்படுத்திக் கொண்டனர். மறுநாள், கடல் அமைதியாக இருந்தது. பலர் மனதில் நம்பிக்கை மீண்டும் மலர்ந்தது. மிதவையில் இருந்த பலருக்கும் மனப்பிரமைகள் இந்தப் பகலில்தான் முதலில் தோன்றின. சிலர் கரை தெரிவதாகக் கற்பனை செய்தனர், சிலர் தங்களைக் காப்பாற்ற வரும் கப்பல்கள் தெரிவதாய் நினைத்துக் கொண்டனர்.

முதல் நாள் இரவைவிட இரண்டாம் இரவு கொடூரமாய் இருந்தது. தாம் மோசம் போய் விட்டோம் என்று உறுதியாய் நம்பிய சிலர் தங்கள் கடைசி கணங்களுக்கான ஆறுதலாய் தன்னிலை மறந்திருக்க விரும்பி, ஒயின் நிரம்பிய மிடாவொன்றை உடைத்தனர். தன்னிலை மறத்தலில் வெற்றியும் பெற்ற அவர்கள் ஒயின் நிறைந்திருந்த மிடாவுள் கடல்நீர் புகுந்து அதை நீர்க்கச் செய்யும்வரை தம்மை மறந்திருந்தனர். இதனால் இரட்டிப்பு ஆத்திரமடைந்த அவர்கள், மனம் பேதலித்தவர்களாகி அத்தனை பேரையும் ஒழித்துவிடுவது என்று உறுதி பூண்டு, மிதவையைப் பிணைத்த கயிறுகளைத் தங்கள் கத்திகளால் தாக்கினர். இந்தக் கலகக்காரர்கள் எதிர்ப்பைச் சந்திக்கவும், மிதவையில் இருந்தவர்கள்  இரவின் இருளில் அலைகளுக்கிடையே இரு தரப்புகளாய் திரண்டு அமைதி நிலைநாட்டப்படும்வரை மோதிக் கொண்டனர். ஆனால் அன்று நள்ளிரவில் போர்வீரர்கள் மீண்டும் எழுந்து, தம் உயர் அதிகாரிகளைக் கத்திகளாலும் வாட்களாலும் தாக்க முற்பட்டனர். பலர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர், மரக்கட்டைகளால் தாக்கப்பட்டனர், கத்தியால் குத்தப்பட்டனர். ஒயின் மிடாக்கள் இரண்டு கடலுக்குள் வீசப்பட்டன, இருந்த தண்ணீரும் இழக்கப்பட்டது. முரடர்கள் அடக்கப்பட்டபோது, மிதவை பிணங்களால் கனத்தது.

மூன்றாம் நாள் அமைதியாகவும் அருமையாகவும் இருந்தது. அனைவரும் உறங்கினார்கள், ஆனால் பசியும் தாகமும் ஏற்கனவே துன்புறுத்திய கொடூரங்கள் போதாதென்று இப்போது குரூரமான கனவுகள் அவர்களை வதைத்தன. முதலில் இருந்தவர்களில் பாதியே இப்போது அந்த மிதவையில் இருந்தார்கள்.

நான்காம் நாள் காலை, தங்கள் சகாக்களில் பன்னிருவர் இரவில் உயிர் துறந்திருப்பதைக் கண்டனர். அவர்களது உடல்கள் கடலுக்கு அளிக்கப்பட்டன. ஒன்றைத் தவிர. அது பசிக்கு இருக்கட்டும் என்று எடுத்து வைத்துக் கொள்ளப்பட்டது. இன்றுதான் அனைவரும் மனித மாமிசம் உண்ணப் பழகினர். அடுத்த நாள் இரவு புதிய உணவு கிடைத்தது: மீண்டும் ஒரு பயங்கர சண்டை நடந்தது, விதியால் சபிக்கப்பட்ட மிதவை குருதியால் கழுவப்பட்டது. இப்போது முப்பது பேருக்கு மேல் மிதவையில் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் காயப்பட்டிருந்தனர். அதனுள் உப்பு நீர் தொடர்ந்து புகுந்தது. உருக்கமான ஓலங்கள் எழுந்தன.

ஏழாம் நாள், இரு போர் வீரர்கள் கடைசி ஒயின் மிடாவின் பின் தம்மை மறைத்துக் கொண்டனர். அதில் துளையிட்டு, குடிக்க ஆரம்பித்தனர். அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், கடலுக்குள் வீசியெறியப்பட்டனர். இப்போது அதிபயங்கரமான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டிய நேரம் வந்தது. இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டபோது, இருபத்து ஏழு பேர் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பதினைந்து பேர் சில நாட்கள் வாழக்கூடும். பிறர், கடுமையான காயங்களால் குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்தனர். அவர்களில் பலர் பிதற்றிக் கொண்டிருந்தனர், பிழைக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே இருந்தது. பெருஞ்சோகம் கவிந்திருக்க ஒரு விவாதம் நிகழ்ந்தபின், ஆரோக்கியமாய் இருந்த பதினைந்து பேரும் நோய்வாய்ப்பட்டிருந்த சகாக்கள், பிழைக்கும் வாய்ப்புள்ளவர்களின் பொதுநலனை முன்னிட்டு, கடலுக்குள் வீசியெறியப்பட வேண்டும் என்று ஒருமனதாய் முடிவெடுத்தனர்.

இந்தக் குரூர தியாகத்துக்குப்பின், இறுதியில் பிழைத்திருந்த இந்த பதினைந்து பேரும் தங்கள் ஆயுதங்களைக் கடலில் வீசினர்- கயிறு அல்லது மரம் வெட்ட வேண்டிய தேவை எழுவதை முன்னிட்டு ஒரு குறுவாள் மட்டும் வைத்துக் கொண்டனர். சுட்டெரிக்கும் சூரியனின் கீழ், அவர்கள் உயிரை அடக்கமாட்டாத தாகம் உண்ணத் துவங்கியது. அவர்கள் தம் சிறுநீர் கொண்டு உதடுகளை நனைத்துக் கொள்ளத் துவங்கினர். இப்போது மிதவையைச் சுற்றி சுறாமீன்கள் வலம் வந்தன. சில போர் வீரர்கள், சித்தம் பேதலித்த நிலையில், மாபெரும் அந்த மீன்கள் பார்வையில் குளியல் எடுத்துக் கொண்டனர்.

பதின்மூன்றாம் நாள், மேகங்களற்ற வானில் சூரியன் உதித்தது. பாவப்பட்ட பதினைந்து பேரும் எல்லாம் வல்ல இறைவனைத் துதித்து, மிச்சமிருந்த ஒயினைப் பகிர்ந்து கொள்ளும்போது, காலாட்படைத் தலைவன் ஒருவன், தொடுவானத்தைப் பார்க்க நேரிட்டு, தொலைவில் ஒரு கப்பலைக் கண்டான். இறைவனுக்கு நன்றி சொல்லி ஒரு சிறு படையல் அளிக்கப்பட்டது. மிடாக்களின் வளையங்களை நிமிர்த்தி, அதன் முனைகளில் கைக்குட்டைகளைக் கட்டி வைத்தனர். அவர்கள் அடுத்த அரை மணி நேரம்  நம்பிக்கைக்கும் அச்சத்துக்கும் இடையில் ஊசலாடினர். அதன்பின் கப்பல் கடலைவிட்டு மறைந்தது. மிகக் குரூரமான சிந்தனைகளில் அடுத்த இரண்டு மணி நேரங்கள் கழிந்தன. அதன்பின், துப்பாக்கி வீரர் குழுத்தலைவன் ஒருவன் மேலே பார்த்தபோது, ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆர்கஸ் கப்பலைக் கண்டான். அது தன் பாய்மரங்களை விரித்து வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பிழைத்திருந்த பதினைந்து பேரும் அதில் ஏற்றிக் கொள்ளப்பட்டனர். கப்பல் தலைவனும் அதிகாரிகளும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தனர். பின்னாளில் தங்களது கொடூரமான அனுபவத்தை நினைவு கூர்ந்த இருவர் தாங்கள் காப்பற்றப்பட்ட விதம் உண்மையாகவே அதிசயமானது என்ற முடிவுக்கு வந்தனர், இந்த நிகழ்வில் இறைவனின் விரல் சுட்டுவது வெளிப்படை என்றனர்.

நடந்தது என்னவென்றால், இந்தக் கதை அளிக்கும் படிப்பினைகள் எல்லாம் நல்லபடி முடியும் என்று நினைப்பவர்களுக்கா, எல்லாம் மோசம் போகும் என்று அஞ்சுபவர்களுக்கா, இருவருக்கும் என்ன சேதி சொல்கிறது என்று நான் யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ‘மெடுசாவின் மிதவை‘ என்று நம்மால் அழைக்கப்படும் Géricaultன் மகத்தான ஓவியம் பற்றி ஜூலியன் பார்ன்ஸ் எழுதியிருந்த கட்டுரை ஒன்றை நான் வாசிக்க நேர்ந்தது (கடலில் கவிழ்ந்த கப்பல் என்று அதன் ஓவியரால் அழைக்கப்பட்ட ஓவியம் அது). அந்த மிதவையில் என்ன நடந்தது என்பதை நான் இங்கு மிகவும் சுருக்கிக் கூறியிருக்கிறேன் என்றாலும்கூட, மிதவையில் இருந்தவர்கள் எதிர்கொண்ட கொடூரங்களை நீங்கள் எளிதாய் புரிந்து கொள்ள முடியும். என்னோடு நீங்களும் இதில் உள்ள ஒரு நீதிக்கதையின் வசீகரத்தைக் கண்டிருக்கக்கூடும்: ஆம், நாமெல்லாரும் அந்த மிதவையில்தான் இருக்கிறோம்.

ஆனால், இதில் விடை காணப்படாத கேள்வி ஒன்றுக்கு நாம் பதில் கண்டாக வேண்டும். இதுதான் அது: எல்லாம் நல்லபடி நடக்கும் என்ற நம்பிக்கைக்கான நீதிக்கதையா, அல்லது, எல்லாம் மோசம் போகும் என்ற அச்சத்துக்கான நீதிக்கதையா? எல்லாம் மோசம் போகும் என்ற அச்சத்துக்கான கதை என்றால் இது அவ்வளவு மோசமானது அல்ல: சரியாவதற்கு முன் நிலைமை  மோசமாகும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது, ஆனால் எப்படியும் நிலைமை சரியாகும். ஆனால் எல்லாம் நல்லபடி நடக்கும் என்று நாம் நினைக்க விரும்பினால்? இந்த முடிவு அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை. இருப்பதிலேயே நல்லது என்பது, தொடுவானத்தில் தெரிந்த ஆர்கஸ் அருகில் வந்து காப்பாற்றும் என்றால், அதைவிடச் சிறிய நன்மை என்பது அது வராமல் போவது என்றுதான் அர்த்தமாகும்.

ஆனால் நம்பிக்கைக்கான கதையா அல்லது அச்சத்துக்கான கதையா என்று நாம் இது குறித்து கேட்க முடியும் என்பதிலேயே ஒரு உண்மை பொதிந்திருக்கிறது. தம் மிதவையில் சிக்கிக்கொண்டிருந்த அப்பாவிகள் போல் நாம் நம் கதையாடல்களில் சிறைப்படவில்லை என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது. அந்த விபத்தின் காரணிகள் இறுதியானவை மட்டுமல்ல, நெருக்கமானவையும்கூட. முதலில் அவர்கள் கப்பலைச் செலுத்துவதில் பிழை செய்திருந்தார்கள், அடுத்தபடியாக கப்பல் மணற்திட்டில் மோதிக் கொண்டது. கப்பலில் இருந்தவர்களின் உடனடி பின்விளைவுகளுக்கான நடத்தையிலும் ஒழுங்கு கெட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேல், நாம் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதற்கான அண்மைக் காரணங்கள். இதுதான் இந்த நீதிக்கதையின் மையம். இதுதான் நமக்கு அர்த்தப்படவேண்டும்.

அந்த மிதவையில் இருந்தவர்களில் பத்துக்கு ஒருவர் பிழைத்துக் கொண்டார்கள். மெடுசா 1816ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயணத்தைத் துவங்கியது. இது எல்லாம் வெகு விரைவில் நடந்து முடிந்து விட்டன. அந்த மிதவையில் இயங்கியது எது என்று பார்த்தால், பேர் பெற்ற, அழிக்க முடியாத, உறுதியான நம் தற்காப்பு உணர்வுதான். ஒற்றுமையாய் செயல்பட்டிருந்தால், அந்த நூற்று ஐம்பது பேரில் பத்துக்கு ஒன்பது பேர் சுலபமாகவே பிழைத்திருக்கக் கூடும். ஆனால் பத்துக்கு ஒருவர்தான் பிழைக்க முடிந்தது. எதிர்காலம் நமக்கு அளிக்கக்கூடிய நன்மைகளில் மிகச் சிறந்தது எது என்றும் நமக்குச் செய்யக்கூடிய தீமைகளில் மிக மோசமானது எது என்பதையும் பார்க்க உதவும் இரட்டைப் பார்வை கொண்ட இந்தக் கதையில் நான் இதைத்தான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். மெடுசாவின் மிதவை கதையை ஒரு நீதிக்கதையாக, நம்மை எச்சரிக்கும் கதையாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். கதை நமக்குச் சொல்வது இது என்று நினைக்கிறேன் – நாம் ஒத்துழைக்காவிட்டால் நாசமாய்ப் போவோம். நாம் மோசம் போனோம். இந்த மிதவையில் நாம் வாழும் வாழ்வில் நாம் தயையை போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், அப்படிச் செய்தால் மட்டுமே, நாம் உயிர்பிழைக்க முடியும்.

நன்றி – The Raft of the Medusa: A Cautionary Tale from Tom Stoppard. Lithub 

ஒளிப்பட உதவி – The Raft of the Medusa, Wikipedia

குளக்கரையில் ஒரு மாயம் – நகுல்வசன் மொழிபெயர்ப்பில், ‘மரங்கொத்தி’

பீட்டர் பொங்கல்

The Kingfisher

The sky was clear and blue
barring the clouds gathering in the South.
No sooner the unruffled pond
entered my thoughts than the waves began;
A frog hopped into the water.
To appreciate the lotus flower, apparently.
At the sky, vacantly I stare. Ha!
Just then, out of the sky, headlong,
accursed Menaka falls,
and falls.

Dazzling with the seven colors of Indra’s Realm
her garment unfurling in the sky,
into the pond headlong Menaka falls.
No one else but me.

I waited for Menaka to rise,
into the air a Kingfisher rose.
A fish in its beak, seeking
a shadowed haunt it flew.
Clear and blue, yet again, the sky.

(ஞானக்கூத்தன் எழுதிய ‘மரங்கொத்தி’ என்ற தமிழ் கவிதையின் ஆங்கில மொழியாக்கம், நகுல் வசன்)

குறிப்புகளின் நோக்கம் இந்த மொழிபெயர்ப்பின் தரம் உயர்ந்தது என்று நிறுவுவதோ, எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று சொல்வதோ, எப்படியெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறோம் பார் என்று காட்டிக்கொள்வதோ அல்ல. ஒரு கவிதையை மொழிபெயர்க்கிறோம் என்றால் சில குறைபாடுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்று சொல்வதும், ஒரு கட்டத்தில் ஆங்கிலம், தமிழ் என்று மொழிகளைக் கடந்து கவிதை பொருட்படுகிறது என்று சொல்வதும்தான். அப்போது கவிதை எழுதப்பட்டதன் காரணமும் கவிஞனின் நோக்கமும் அவ்வளவு பிரமாதமாகத் தெரிவதில்லை. கவிதையைக் காட்டிலும் மொழி தனித்து உயர்ந்து நிற்கும் தருணம் அது.

இந்தக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சுலபமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும் (இப்படிச் சொல்வது இது எவ்வளவு ‘நல்ல’ மொழிபெயர்ப்பு என்பதற்கான உத்திரவாதம் ஒன்றை முற்படவில்லை).

முதலில் ‘தெளிவாய் நீலமாய் இருந்தது வானம்‘ என்பது ‘The sky was serene and blue‘ என்று மொழிபெயர்க்கப்பட்டது. தெளிவு என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல் அல்ல ‘serene‘. ஆனால், அதற்கப்புறம் தவளை குதித்து குளம் கலங்கப் போகிறது, வானத்திலிருந்து மேனகை தலைகீழாக அந்தக் குளத்தில் விழப் போகிறாள், கடைசியில் ‘தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்‘ என்று கவிதை முடிகிறது என்பதை எல்லாம் பார்க்கும்போது ‘serene‘ என்பது அப்படி ஒன்றும் மோசமான தேர்வல்ல என்று தோன்றுகிறது. ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வு காரணமாக, ‘The sky was clear and blue’ என்று தமிழாக்கம் செய்யப்பட்டது. எனினும் இந்தக் கவிதை தெளிவைவிட அமைதி குறித்ததுதான், ‘serene‘ என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் ஒன்றும் மோசம் போயிருக்காது.

அடுத்த வாக்கியம், ‘தெற்கில் மேகத் திரட்டைத் தவிர்த்தால்,’ என்பது ‘barring the patch of cloud in the South,’ என்று இருந்து, ‘barring the clouds gathering in the South‘ என்று மாறியிருக்கிறது. மேகத்திரட்டு என்பதை patch of cloud என்று மொழிபெயர்ப்பது அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை. வானம் தெளிவாக இருந்தது, தெற்கில் சில மேகங்கள் இருந்தன என்பதை ஒரு காட்சியாய்க் கற்பனை செய்ய இது போதும். ஆனால் மேகம் திரண்டு வருவதில் மழை இருக்கிறதோ இல்லையோ ஒரு இருண்மைக்கான சாத்தியம் இருக்கிறது. தெளிவான வானத்தில் ஏற்படக்கூடிய மூட்டமாகவும் Serene என்ற உணர்வுநிலைக்குப் பொருந்தாத வகையிலும் மேகங்கள் திரள்கின்றன. ஒரு அச்சுறுத்தல் இருக்கிறது அல்லவா, சினிமா என்றால் பின்னணியில் இசையால் கொடுக்கப்படும் பில்ட்-அப் மாதிரி?

அடுத்த வரியில், ‘சலனம் குளத்தில் சிறிதும் இல்லை‘ என்று ஞானக்கூத்தன் எழுதும்போது, தெளிவான வானம், திரளும் மேகம்,  சலனமற்ற குளம் என்று நம் கவனத்துக்கு வருகிறது. அடுத்தபடியாக, ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்று திரும்பி, ‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்று வரும்போது அதுவரை இருந்த காட்சி முற்றிலும் குலைகிறது. பொதுவாக, கவிதையில் காட்சிகளின் வரிசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முயற்சிப்பவர் நகுல்வசன். எனவே, ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை ‘Not even the hint of a ripple in the pond,’ என்றும், ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்பதை, ‘I was just thinking that, when/ all of a sudden there were waves,‘ என்றும் மொழிபெயர்த்திருந்தார். இது ஒரு மொண்ணைத்தனமான முயற்சி என்பதை நாமெல்லாரும் ஒப்புக்கொள்வோம். ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை முதலில் சொல்ல வேண்டும் என்று முயற்சித்ததால்தான் இப்படியாயிற்று- ஆங்கில வாக்கிய அமைப்பில் இதை முன்கூட்டியே சொல்லிவிடுவது அடுத்து வரும் சொற்களுக்கு அதிக வேலை வைக்கிறது. எனவே ஒரு சமரசமாக, ‘No sooner the unruffled pond/ entered my thoughts than the waves began;‘ என்று முடிவாயிற்று. தமிழில் உள்ள அடர்த்தி ஆங்கில மொழிபெயர்ப்பில் இல்லை என்றாலும் சொற்கள் அவற்றுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சரியான சமயத்தில் செவ்வனே செய்கின்றன என்றுதான் நினைக்கிறேன். சொல்லப்போனால், no sooner -> the unruffled pond என்பதில் உள்ள மிரட்டலும், entered my thoughts -> than the waves began என்ற அதன் நிறைவேற்றலும் இதற்கு முந்தைய வரிகளுடன் ஒத்துப் போகின்றன என்றும் தோன்றுகிறது. மொத்தத்தில், சில லாபநஷ்டங்கள் இந்தப் பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கின்றன.

(‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்பதற்கு ‘A frog had dived into the water,’ என்பது பரிசீலிக்கப்பட்டு, தவளை டைவ் அடிக்குமா என்ற யோசனையின் பேரில் ‘A frog hopped into the water,’ என்று மாற்றப்பட்டது. ‘Dived‘ என்பதில் உள்ள தீர்மானமும் விசையும் ‘hopped‘ என்பதில் இல்லைதான். ‘hopped‘ என்றால் தவளை  அலட்சியமாக அடுத்த அடி எடுத்து வைப்பதுபோல் தண்ணீருக்குள் இறங்கிற்று என்று தோன்றுகிறது – அடுத்த வரி, ‘தாமரைப் பூவை ரசிக்கப் போகிறதாம்.’ என்பதில் உள்ள விளையாட்டுத்தனம் இதற்குப் பொருந்துகிறது. ‘To appreciate the lotus flower, apparently. ‘)

(தாமரைப்பூ என்பதை lotus என்று சொன்னால் போதாதா, அது என்ன lotus flower என்று கேட்கலாம், நியாயமான கேள்விதான்)

oOo

சும்மா இருக்கும்போதுகூட சும்மா இருக்க முடியாதவர் கவிஞர் என்பதை அறிந்தோம் – மேலுக்கும் கீழுக்கும் பார்த்துக் கொண்டேயிருப்பவர் இப்போது வானத்தைப் பார்க்கிறார். அங்கு அவருக்குக் காத்திருக்கிறது ஓர் அதிர்ச்சி – ‘வெறுமனே வானத்தைப் பார்த்தேன். ஹா!‘. இதற்கான முதல் முயற்சி, ‘I was staring at the sky vacantly. And Lo!‘- ரொம்ப உரையாடலாக இருக்கிறது, அது தவிர “Lo!” என்றெல்லாம் ஆச்சரியப்படுவது ஒரு மந்திரவாதியை ஞாபகப்படுத்துகிறது என்றெல்லாம் யோசித்து, ‘At the sky, vacantly I stare. Ha!‘. என்பது முடிவாயிற்று. நியாயப்படி பார்த்தால் ‘பார்த்தேன்‘ என்பது ‘stared‘ என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாருங்கள், தமிழில் காலம் ஒரு ஆஸ்மாட்டிக் தன்மை கொண்டது. நிகழ்காலம் என்பது கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் கூடுதுறை, இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று ஒரு ரேஞ்சுக்குள்தான் எதுவும் நடக்கிறது. தமிழில், ‘வானத்தைப் பார்த்தேன்… மேனகை அப்பத்தான் விழுகிறாள்’ என்று எழுதலாம். நம் அனுபவ காலவரிசைக்கிரமம் இப்படிதான் இருக்கிறது. ஒரு விஷயம் முடிந்து போகும்போது அதன் அனுபவஸ்தர்களாகிய நாம் முடிந்து விடுவதில்லை, அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில், “I looked… Menaka was just then falling” என்றெல்லாம் எழுதினால் தமிழிஷாக இருக்கும், tense agree ஆகவில்லையே என்று சந்தேகப்படுவார்கள். சில பேருக்கு படிக்கவும் நன்றாக இருக்காது. எனவேதான் எதற்கு வம்பு என்று, ‘vacantly I stare,’ நாம் நிகழ்காலத்தில்தான் இருக்கிறோம்.

இப்போது என்ன நடக்கிறது? ‘வானத்தை விட்டுத் தலைகீழாக/ சாபம் கொண்ட மேனகை அப்பதான்/ விழுகிறாள். இருக்கிறாள் விழுந்து கொண்டே.’ இது ஆங்கிலத்தில் முதலில், ‘Out of the sky, upside down/ I saw accursed Menaka fall. / She kept on falling. ‘ ரொம்பவே தமிழிஷாக இருக்கிறது, காலவழு ஏதோ இருக்கிற மாதிரி இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தபின், ‘Just then, out of the sky, headlong,/ accursed Menaka falls,/ and falls.‘ இப்போதும்கூட ‘just then‘ என்பது அந்த அளவுக்குச் சரியான ஆங்கிலமா என்ற சந்தேகம் இருந்தாலும், ‘அப்பதான்‘ என்பதில் உள்ள பேச்சுத்தன்மை அதில் இருப்பதால் சரியான தேர்வுதான் என்று பாராட்டிக்கொள்ளலாம், தப்பில்லை.

oOo

இனி வரும் மூன்று வரிகளும் மிக அழகியவை – ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்/ மிளிரும் ஆடை விண்ணிலே அவிழ/ விழுகிறாள் குளத்தில் மேனகை தலைகீழாய்‘ வானத்தில் வண்ண ஆடைகள் அவிழ்ந்து பறக்கின்றன, ஒளியில் அவை மிளிர்கின்றன. ஆடைகள் விலகி நிலைகுலைந்து தலைகீழாய் குளத்தில் விழுகிறாள் மேனகை.

இந்த மூன்று வரிகளும் எவ்வளவு குறைவான சொற்களில் எவ்வளவு விஷயங்களை உணர்த்துகின்றன என்பதை எழுதுவதானால் அதற்கு ஒரு தனிப்பதிவு வேண்டும். அது எதுவும் இல்லாமலேயே நாம் சுலபமாக, ‘தன் நிலை குலைந்து மேனகை விண்ணிலிருந்து வீழ்ந்தாள்‘, என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது சொல்லப்பட்ட விதம், அதன் அழகும் அவலமும் உணர்வுடன் காட்சிப்படுத்தப்படும் பன்னிரண்டே சொற்கள், இது கவிதையிலன்றி வேறெங்கு சாத்தியம்? புத்திசாலித்தனம், ஆழமான சிந்தனை, மெய்ம்மை, உண்மைக் குரல் என்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன் இப்படி எழுத முடிவதுதான் கவிஞனின் முதல் தகுதி, சொற்களை இப்படி கட்டமைப்பதுதான் அவனது கற்பனைத்திறன்.

ஆங்கிலத்தில் இது எப்படி இருக்கிறது? ‘Dazzling with the seven colors of Indra’s Realm/ her garment unfurling in the sky,/ into the pond headlong Menaka falls.‘ எனக்குத் தெரிந்தவரை இது குறை சொல்ல முடியாதபடிதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழின் கச்சிதம் எங்கே? நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்‘, ‘the seven colors of Indra’s Realm‘ என்று அந்நியப்படுவது ஒரு மாதிரி பில்டர் காப்பி கேட்ட இடத்தில் இன்ஸ்டன்ட் காபியைக் கொண்டு வந்து வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு முயற்சியே ஒரு வகையில் பில்டர் காபியை இன்ஸ்டண்ட் காப்பி ஆக்கும் முயற்சி என்று சொல்லலாம். ஆங்கில மொழி வரலாற்றில் இந்திரலோகம் இடம் பெறவில்லை என்பது நம் குறையல்ல, ஆனால் இந்த மொழிபெயர்ப்பு விஷயத்தில் அதனால் குறைபட்டுதான் நிற்க வேண்டும்.

இதற்கு அடுத்த வரி, ‘எவரும் இல்லை என்னைத் தவிர.’ மொழிபெயர்க்க எளிது. ஆனால், ‘There was no one else but me,’ என்பது சரியா அல்லது ‘There is no one else but me‘ என்பது சரியா என்று யோசித்துப் பார்க்கப்பட்டு, ‘No one else but me,’ என்ற இடத்தில் வந்து நின்றிருக்கிறது. இதுவே, ‘None, but me‘ என்றும் இருக்கலாம், ஆனால் பிறர் இல்லை என்ற சுட்டுதல் இருக்குமா, தெரியவில்லை.

oOo

அடுத்து, ‘காத்திருந்தேன் மேனகை வெளிப்பட,/ வெளியில் எழுந்தது மீன்கொத்திப் பறவை.” ஆங்கிலத்தில் நிறைய காலவழுக்களை உருவாக்குகிறது. தமிழில், காத்திருந்தேன், என்பது காத்துக்கொண்டிருந்தேன் என்ற அர்த்தத்திலும் படிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ‘காத்திருந்தேன்‘ என்பதை நேரடியாக ‘I waited‘ என்று மொழிபெயர்த்தால் அடுத்து நடப்பது எல்லாமும் கடந்த காலத்தில் நடப்பவையாய் இருந்தால்தான் அங்கே சரிப்படும். எனவே, ‘I was waiting for her to emerge when/ into the air a Kingfisher rose,‘ என்று மிகச் சரியாகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வாசித்துப் பார்க்கும்போது இது கொஞ்சம் இயந்திர மொழியாக்கம் போலிருப்பதாய் தோன்றிய காரணத்தால், ‘I waited for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்று மாற்றப்பட்டது. இது பிரச்சினையான மொழிபெயர்ப்புதான், யாராவது கேள்வி கேட்டாலும் சரியான பதில் சொல்ல முடியாது. ஆனால் இப்படி மொழிபெயர்க்கப்பட்டிருப்பதில் ஒரு அழகு இருக்கிறது என்று தோன்றுகிறது. ”I wait for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்றும் எழுதலாம். இன்னும் பல சாத்தியங்களும் இருக்கின்றன. எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கற்பனையைப் பொருத்தது. ஆனால் எதுவும் முழுத்திருப்தி கொடுக்காது என்று தோன்றுகிறது.

கவிதை, ‘அலகிலே மீனுடன் நிழலுக்குப் பறந்தது./ தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்.’ என்று முடிந்து விடுகிறது. இதுவே ஆங்கிலத்தில், ‘A fish in its beak, seeking/ a shadowed haunt it flew./ Clear and blue, yet again, the sky’ என்று ஆகியிருக்கிறது. ‘நிழலுக்குப் பறந்தது‘ என்பது எப்படி ‘seeking a shadowed haunt it flew,’ என்று ஆகும் என்பது சரியான கேள்வி.  flew into shadows என்று நானானால் செய்திருப்பேன். ஆனால் நகுல்வசன் இந்தக் கவிதையில் சொல்லப்படாத, ஆனால் கவிதையால் சொல்லப்படும் முக்கியமான ஒன்றைச் சுட்ட விரும்புகிறார் என்று நினைக்கிறேன். இங்கு கொஞ்சம் மிகையான சுதந்திரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டலாம், அல்லது, அது shadowed haunt என்பது எதைச் சொல்கிறது என்று யோசிக்கலாம். என் பாணியில் அதைச் செய்கிறேன்.

oOo

பதாகையில் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை வந்தது- இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல். ந்யூஸ்டாட் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய மொழி எழுத்தாளரும் மொசாம்பிக் தேசத்தவருமான மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம். அதன் முடிவில் அவர் ஒரு கவிதையை வாசிக்கிறார், அதன் அவ்வளவு பிரமாதமாய் இல்லாத தமிழாக்கம் இது –

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்

பரந்து விரிந்த சூழ்நிலங்களையும்
பறத்தலில் தொட்டுச் சென்ற சரிவுகளையும்
நினைவில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.

ஒற்றை மேகமும் அதன் அலட்சிய வெண்தடமும்
என்னை மண்ணில் பிணைத்திருக்கின்றன.

பறவைச் சிறகின் இதயத்துடிப்பாய் வாழ்ந்தேன்,
மண்ணைப் பசித்து வீழும் மின்னலென வீழ்ந்தேன்.

என் இதயத்தில் இருக்கும் அந்தச் சிறகை.
தன் நினைவைக் காலத்தில் பாதுகாப்பவனாய்
பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்,

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்,
வேறொரு பறவையில் நான் உயிராய் இருந்தேன்.

World Literature Today 

நினைவென்பது மறைவில் இருப்பது. அன்றொரு நாள் மேனகை வீழ்ந்தாள், மரங்கொத்தியாய் மாறி மறைந்தாள், என்பதல்ல இக்கவிதை சொல்வது. அவள் ஒரு shadowed hauntல் வாழ்கிறாள். ‘தெளிவாய் நீலமாய் மறுபடி வானம்‘, என்றாலும் இது முன்னிருந்த வானல்ல. மேனகை வீழ்ந்த வானம், மரங்கொத்தி பறக்கும் வானம். நினைவின் சுவடு கொண்ட, ஆனால் அதன் மூட்டமில்லாத வானம்.

Re-enchanting the World‘ என்ற தன் உரையில், மியா கோடோ, ‘ஒவ்வொரு கண்டத்திலும், பல்வேறு தேசங்களைத் தன்னுள் கொண்ட தேசமாய் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்,’ என்று சொல்கிறார். அவற்றை உயிர்ப்பிப்பதுதான் கலைஞனின் பணி,மீண்டும் மாயத்தால் நிறைத்தல் (Re-enchantment) என்பது இதுதான். இதுவே மொழிபெயர்ப்புக்கான தேவையும்கூட.

மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.

ஒளிப்பட உதவி – Alcyone, The Kingfisher

உணர்ச்சிகளின் இடம்: மார்கேஸ்ஸின் ‘The Saint’

ஆர். அஜய்

strangepilgrimscover

பதாகையில் வெளியான இந்தக் கட்டுரை குறித்த உரையாடலில், உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்று ஒரு கருத்து பகிரப்பட்டது. அந்தக் கட்டுரை மற்றும் கருத்தின் நீட்சியாக மார்கேஸ்ஸின் ‘The Saint‘ கதையை அணுகுவது சில புரிதல்களை நமக்கு அளிக்கலாம். மேலே சுட்டப்பட்டுள்ள கட்டுரையில் “In great fiction we are moved by what happens, not by the whimpering or bawling of the writer’s presentation of what happens,” என்று Gardner எழுதிய ‘Art Of Fiction‘ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது.

மார்கேஸ்ஸின் ‘The Saint‘ சிறுகதையில் மார்கரீட்டோ (Margarito) என்பவர் ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க கிராமத்திலிருந்து ரோமுக்கு வருகிறார். 18 வயதில் திருமணம் முடித்து, பிள்ளைப் பேற்றிற்குச் சில காலத்திலேயே மனைவி இறந்து, சில வருடங்களில் மகளையும் இழக்கிறார். அதன்பின் இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களின் கல்லறைகளை தோண்டியெடுக்கும்போது, மகளின் உடல் கெடாமல் இருப்பதைப் பார்த்து அவர் கிராமமே அதிசயிக்கிறது. மகளின் பூதவுடலை போப்பிடம் காட்டி, இத்தகைய அதிசயம் நிகழ்ந்துள்ளதால் தன் மகளை புனிதர் என கிருத்துவச் திருச்சபை ஏற்க வேண்டும் என்று மார்கரீட்டோ எடுத்துக்கொள்ளும் முயற்சியே இந்தக் கதை.

இயல்பாகவே வாசகனை எளிதில் நெகிழச் செய்யக்கூடிய ‘sentiment/ பாசவுணர்ச்சிக்கான’ சாத்தியங்கள் இந்தக் கதையில் உள்ளன என்பது வெளிப்படை. அதே நேரம் வாசகன் இந்தக் கதையின் களத்தை நெகிழ்வோடு அணுகுவான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நடைபெற முடியாத ஒன்றுக்காக இருபத்து இரண்டு வருட காலம் ஒருவர் முயற்சி செய்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக உள்ளது, எனவே நம்மை நெகிழச்செய்ய முனையும் பசப்புணர்வே (sentimentality) கதையில் மிகுந்துள்ளது எனவும் ஒருவர் கூறலாம். அதுவும் தனக்கான நியாயங்களைக் கொண்டுள்ள தரப்பே.

Gardner குறிப்பிடும் புலம்பலோ, பிழிந்தெடுக்கப்படும் சோகமோ The Saint கதையின் எழுத்தில் இல்லை. மார்கரீட்டோ பற்றிய கதை என்றாலும், அவருடன் விடுதியில் தங்கும் கதைசொல்லியின் பார்வையிலே கதை நகர்கிறது. மார்கரீட்டோவின் முயற்சி பற்றிய எந்த விதந்தோதலும் இல்லாமலேயே அதன் கடினத்தை காபோ (Gabo) நமக்கு உணர்த்துகிறார். ரோம் வந்த ஒரு வருடத்தில் அந்நகரின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் மார்கரீட்டோவிற்கு அத்துப்படியாகிவிட்டது என்று காபோ ஒற்றை வரியில் சொல்லும்போது நகரம் முழுதும் அலைந்து திரியும் மார்கரீட்டோவின் உருவம் நம் மனக்கண்ணில் இயல்பாகவே தோன்றுகிறது. அவருடைய அன்றாட நடவடிக்கை பற்றிய எளிய விவரிப்பின் – பெரும்பாலும் வெளியே அலைந்து திரிந்தபடி இருக்கும் தனக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்திலும் தன் லட்சியம் தொடர்புள்ள (புனிதர்கள் பற்றியவையாக இருக்கக்கூடும்) நூல்களை படிப்பது, மாத இறுதியில் செலவினங்களை விரிவாக குறித்து வைப்பது- மூலமாகவே மார்கரீட்டோவின் நடை, உடை, பாவனை அனைத்திலும் கண்ணியத்தை, எப்போதும் சமநிலை குலையாத சீரான தன்மையை, கதைசொல்லி மட்டுமல்ல, அவர்கள் தங்கும் விடுதியில் உள்ள மற்ற அனைவரும், வாசகரும்கூட உணர ஆரம்பிக்கிறார்கள். சிற்சில நிகழ்வுகள் மூலம் அவரின் ஆளுமை இயல்பாகவே வாசகன் மீது தாக்கத்தை செலுத்த ஆரம்பிக்கிறது. அவர்கள் தங்கும் விடுதியின் அமைப்பு, அதன் உரிமையாளர், மற்ற குடித்தனக்காரர்கள் பற்றிய தகவல்கள், ரோம் நகரின் நண்பகல் மயக்கச் சித்தரிப்புக்கள், கதைசொல்லியின் புகழ் பெற்ற -திரைக்கதை எழுதச் சொல்லிக் கொடுக்கும்- ஆசிரியர், என காபோவின்- அவர் எடுத்துக் கொள்ளும் களத்தை/ நிலவியலை இன்னும் துல்லியமாக மாற்றும் – எழுத்துக்குரிய சின்னச் சின்ன இன்பங்கள் (incidental pleasures) இந்தக் கதையிலும் உள்ளன.

மார்கரீட்டோவை மிருகக் காட்சி சாலைக்கு கதைசொல்லி அழைத்துப் போக, சிங்கம் ஒன்று தொடர்ச்சியாக கர்ஜிக்கிறது. அங்குள்ள பணியாளர், சிங்கம் மார்கரீட்டோவையே கவனிக்கிறது, அவருக்காகவே கர்ஜிக்கிறது என்றும், அதில் பச்சாதாபம் தெரிகிறது என்றும் சொல்கிறார். சிங்கத்தின் கண்ணீர் என்றெல்லாம் இந்த நிகழ்வை நீட்டி முழக்காமல் சட்டென்று காபோ கடந்து விடுகிறார்- மேலும், இது பணியாளர் சொல்வதாகத்தான் குறிப்பிடப்படுகிறதே தவிர உண்மை என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை. பணியாளர் சொல்லும் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. மார்கரீட்டோ அன்று வேறு ஏதேனும் சிங்கங்களுக்கு அருகில் சென்றிருந்து, அவற்றின் உடல் மணம், அவர் மேல் பரவி அதனாலும் சிங்கம் கர்ஜிக்கக்கூடும் என்கிறார் அவர். அவ்வாறு நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ‘சிங்கத்தின் உடல் மணம்’ என்பதை, அச்சிங்கம் தன்னில் ஒருவராக, தன்னைப் போன்ற ஆளுமையாக மார்கரீட்டோவை எண்ணியதா என்பது குறித்தும் வாசகன் யூகிக்கலாம்.

இந்த நிகழ்வுகள் நடந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கதைசொல்லி மீண்டும் ரோம் செல்கிறார். தான் முன்பு தங்கிய விடுதியும், மிருகக்காட்சி சாலையும் அடையாளம் தெரியாமல் மாறி விட்டுள்ளது. தன் நண்பனை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த அவரது ஆசிரியரை இப்போது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் மார்கரீட்டோவை கதைசொல்லி மீண்டும் சந்திக்கிறார்.’ The Saint is there.. Waiting‘ என்று தன் முயற்சியின் தற்போதைய நிலை பற்றி குறிப்பிடும் மார்கரீட்டோ, இன்னும் சில மாதங்களில் தான் எண்ணியது நடந்துவிடும் என்று கூறி, கதைசொல்லியிடம் விடை பெற்று செல்கிறார். மார்கரீட்டோவை உண்மையான புனிதர் என்றும், அவர் தன்னையறியாமலேயே இத்தனை ஆண்டுகளாக, தன்னுடைய ‘புனிதர் பட்டத்திற்காகவும்’ (canonization) போராடி வருகிறார் என்று கதைசொல்லி எண்ணிக் கொள்வதோடு கதை முடிகிறது. எந்த அதீத மொழி வெளிப்பாடும் இல்லாமல் இயல்பான நடையிலேயே கதைசொல்லியின் மனவோட்டம் வெளிப்படுகிறது.

இங்கு ஒரு கருத்தை யோசிக்கலாம். உணர்ச்சிவசப்படச் செய்வதில் கதையோட்டத்துக்கு உள்ள பங்கும் கதைசொல்லலுக்கு உள்ள பங்கும் ஆராயத்தக்கவை. மகளை புனிதராக ஆக்க முயலும் தந்தையைப் பற்றிய கதையாக இல்லாமல் மனைவியை இழந்து தனியாளாக பெண்ணை வளர்க்கும் தந்தையைப் பற்றியதாக இது இருந்திருந்தாலும் அதன் கரு மற்றும் கதையோட்டம் உணர்ச்சிவசப்படச் செய்யும் சாத்தியத்தைக் கொண்டதாகவே இருக்கும். பெரும்பாலான கதைக்கருக்களுக்கும் இது பொருந்துமென்றாலும் கதையாக மொழியில் அது வெளிப்படும் விதமே நம்மை உணர்ச்சிவசப்படச் செய்கிறது, நெகிழ்த்துகிறது, அல்லது பசப்புணர்வு என்று விலக்கச் செய்கிறது. இந்தக் கதை உணர்ச்சிகரமானதுதான், வாசகனை நெகிழ்த்தும் ஆற்றல் கொண்டதுதான். ஆனால் உணர்ச்சிகள் வாசகன் மீது திணிக்கப்படுவதில்லை, மாறாக அவற்றை உணரும் பாதையில் காபோவால் மெல்லச் செலுத்தப்படுகிறான், அதன் முடிவில் காபோவின் இடத்தையே அவன் அடைகிறான். மார்கரீட்டோவின் கண்ணியமான ஆளுமை குறித்த சுட்டுதல்கள் கதையின் ஆரம்பத்திலிருந்தே வருவதால் முடிவில் திணிக்கப்பட்ட திடீர் திருப்பமோ, உச்ச நிகழ்வோ வருவதில்லை.

..On one hand, don’t overdo the denouement, so ferociously pushing meaning that the reader is distracted from the fictional dream, giving the narrative a too conscious, contrived, or ‘workshop’ effect…,” என்று கார்ட்னர் குறிப்பிடுவதற்கு சிறந்த உதாரணம் இக்கதை. கடைசி வரை வாசகன் உணர்ந்திருந்த கதையின் ஒழுங்கைக் குலைத்து, அவனை அப்புனைவுலகிலிருந்து காபோ வெளியே இழுப்பதில்லை. இறுதியில் வாசகன் மார்கரீட்டோபால் அடையும் பாசவுணர்வு காபோ முதலிலிருந்து உருவாக்கும் உணர்வுச் சங்கிலித் தொடரின் கடைசி -அதை மேலும் இறுக்கும்- கண்ணியாகவே உள்ளது. இறுதி பகுதிக்கு முன்பான பகுதியை மறுவாசிப்பு செய்வது இது குறித்த மேலதிக தெளிவை அளிக்கக்கூடும்.

கதைசொல்லி மார்கரீட்டோவைச் சந்திக்கும் நிகழ்வுக்கான முன்னெடுப்பாக, காலத்தின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை காபோ விரிவாகச் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன, கதைசொல்லி ஏன் மார்கரீட்டோவைத் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியவில்லை, அப்படி அமைப்பதற்கான காபோவின் நோக்கம் என்ன? காலமாற்றத்தையும் மார்கரீட்டோவின் நிலைகுலையாத முயற்சியையும் இணைக்க முயன்றால், அவற்றிற்கிடையே உள்ள பெரும் வேற்றுமையை நேரடியாகச் சொல்லாமல் வாசகனை உணரச் செய்து, அதன் மூலம் அவனையும் மார்கரீட்டோ குறித்த ஒத்த முடிவுக்கு வரச் செய்கிறார் காபோ என்பது புரிகிறது. ஆம், இத்தனை ஆண்டுகளில் ரோம் நகரமே மாறியிருக்கும்போது, மார்கரீட்டோவின் மகளின் பூதவுடல் கெடாமல் இருப்பது அதிசயம் என்றால், மனதைத் தளர விடாமல், அதே கண்ணியமும், விடாமுயற்சியும், நம்பிக்கையும் கொண்ட மார்கரீட்டோவின் அத்தனை ஆண்டு கால செயல்பாடும் (அவருடைய சிறு கிராமத்தில் அவரை நினைவில் வைத்திருப்பவர்கள் யாரேனும் இன்னும் இருப்பார்களா?) அதிசயம்தானே? அத்தனை மாற்றங்களுக்கிடையே தான் ரோம் நகருக்கு முதலில் வந்தபோது எந்த மனநிலையில் இருந்தாரோ, அது கெடாமல் இருக்கும் மார்கரீட்டோவும் புனிதர்தான் இல்லையா?

நம் வாசிப்பில் மார்க்கரீட்டோவின் கண்ணியம், ஒரு புனிதருக்கு உரிய கண்ணியம் எனப் புலப்படுகிறது என்றால் அது மார்க்கேஸின் கதைகூறலில் வெளிப்படுவதுதான். இந்தச் சிறுகதை அளிக்கும் நெகிழ்வு, உணர்ச்சிகள் நம்மை ஆக்கிரமிப்பதால் அல்ல, உணர்ச்சிகள் அடங்கிய ஒரு அமைதியில் தோன்றுவது. ஆனால் அதனால் இது உணர்ச்சிவசப்படச் செய்யாத கதையாகி விடுவதில்லை. உணர்ச்சிவசப்படச் செய்வது எப்போதும் தவறாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்துக்கு நேர்மறை உதாரணமாக இந்தக் கதை இருக்கிறது.