ஸிந்துஜா

அமிழ்து

ஸிந்துஜா

“அப்பா இன்னும் நீங்க எத்தனை நாள்தான் தனியா அந்த ஆத்திலே உக்காந்துண்டு கஷ்டப்படப் போறேள்? எங்களோட பேசாம பெங்களூருக்கு வந்துடுங்கோ” என்று அன்று காலை மறுபடியும் ரங்கநாதனின் பிள்ளை திலீப் போனில் சங்கடப்பட்டான்.

“பாக்கலாண்டா” என்றார் ரங்கநாதன்.

“மூணு மாசமா இந்த காமராஜர் பதிலையே சொல்லிண்டு இருக்கேள்.”

அவருக்கு சிரிப்பு வந்து விட்டது.

“சரி, சாப்பிட்டாச்சா? என்ன டிபன் இன்னிக்கி?” என்று கேட்டான் திலீப்.

அவர் ஒரு கணம் பொய் சொல்லி விடலாம் என்று நினைத்தார். பிறகு மனதை மாற்றிக் கொண்டு “இல்லே. இன்னிக்கி டிபன் வேண்டாம்னு பாக்கறேன்” என்றார்.

“ஏன், உடம்பு சரியில்லையா? ஜுரமா?” என்று அவன் பதறுவது அவருக்குக் கேட்டது.

“இல்லே. வயிறு கொஞ்சம் மொணங்கறது. ஒரு வேளை லங்கனம் போட்டா சரியாப் போயிடும்” என்றார்.

திலீப் அவரிடம் “நேத்திக்கு கோபி ஐயங்கார் ஓட்டலுக்குப் போனேளா?” என்று குற்றம் சாட்டும் தொனியில் கேட்டான்.

“உன்னிடமிருந்து ஒரு குற்றவாளி தப்பித்து விட முடியுமா?” என்றார் ஆங்கிலத்தில். அவன் பெங்களூரில் லாயராகப் ஒரு பெரிய கம்பனியில் வேலை பார்க்கிறான். அவன் சொல்லுவதில் உண்மை இருக்கிறது. சட்டினியில் பச்சை மிளகாயை மட்டும் வைத்து அரைத்தது போல அப்படி ஒரு காரம். ஐம்பது வருஷத்துக்கு முன்னால் அவரது இருபதாவது வயதில் அந்த ஒரப்பு வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த வயதில்?

“அதுக்குத்தான் சொல்றேன். நீங்க இங்கே வந்துடணும்னு. வீட்டு சாப்பாடுதான் உங்களுக்கு ஒத்துக்கும். சரி, இப்போ எளனி, ஹார்லிக்ஸ்னு நீராகாரமா சாப்பிடுங்கோ. மத்தியானம் தயிர் சாதம் சாப்பிட்டா சரியாயிடும். சாப்பிட்டதுக்கு அப்புறம் ஜெலுசில் போட்டுக்கோங்கோ. நீங்க அங்கேர்ந்து கிளம்பி இங்க வந்துடறதுதான் பெட்டர். ராத்திரி போன் பண்றேன்” என்று போனைக் கீழே வைத்து விட்டான்.

ரங்கநாதன் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின் மனைவியுடன் மதுரைக்கு வந்தார். சென்னையில் அவர் உத்தியோகத்தில் இருந்த போது மதுரையில் வாங்கிய வீடு. மதுரையில்தான் அவர் பிறந்தது படித்து வளர்ந்தது எல்லாம். வேலைக்காக என்று சென்னைக்குப் போய் விட்டாலும் சென்னையின் ஆரவாரம் அடங்காப்பிடாரித்தனம் அவரைக் கவரவில்லை. இதற்கு அவர் மனதில் ஏற்கனவே மதுரை ஒரு பெரிய கிராமம் என்று ஆழப் பதிந்து அதன் எளிமையும் பகட்டற்ற சூழலும் ஒரு வித நேசத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து விட்டதுதான் காரணமாக இருக்க வேண்டும். அவருக்கும் அவரது மனைவிக்கும் இருந்த ஆசைக்கு ஒரு பெண்ணும் அவர்களிடம் இல்லாத ஆஸ்திக்கு ஒரு பையனும் பிறந்தார்கள்.

பெண்ணைத் திருச்சியில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டார். பெங்களூரில் அவருடைய பையன் திலீபின் குடும்பம் இருந்தது. அவன் லா ஸ்கூலில் படிக்க பெங்களூர் வந்தவன் ஊர் பிடித்து விட்டதால் ஒரு வேலையையும் வாங்கிக் கொண்டு பெங்களூர்வாசியாகி விட்டான். அவனைத் திருமணம் செய்து கொண்ட நர்மதாவும் பெங்களூர்க்காரி. அவர்களுடைய ஒரே பெண் பத்மினி ஊட்டியில் லவ்டேலில் உள்ள ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்தாள்.

அவர் மனைவி மூன்று மாதங்களுக்கு முன் காலமாகி விட்டாள். தனது வாழ்நாளில் வெந்நீர் போடக் கூடச் சமையலறையில் நுழைந்திராத அவருக்கு மனைவியின் மறைவுக்குப் பின் சாப்பாட்டுப் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. ஊரிலிருந்து சாவுக்கு வந்திருந்த உறவினர்கள், காரியங்கள் முடிந்த பின் பத்துப் பதினைந்து நாள்கள் சமையல் செய்து போட்டு விட்டுப் போனார்கள். அப்புறம் அவர் வடக்கு மாசி வீதியில் இருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து டிபன், லஞ்ச், இரவு உணவு எல்லாம் வரும்படி ஏற்பாடு செய்து கொண்டார். என்றாவது மாலையில் வயிற்றைக் கிள்ளும் போதும் நாக்கு அரிப்பெடுக்கும் போதும் கோபி அய்யங்கார் கடைக்குப் போய் வெள்ளையப்பம், பஜ்ஜி, காரச் சட்டினி என்று இறங்கி அடித்து விட்டு வருவார்.

‘தகப்பனார் மதுரையில் எதற்காகத் தனியே கிடந்தது உழல வேண்டும்; அதுவும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு’ என்று திலீப் வாரத்துக்கு ஒரு முறை அவரைப் போனில் தொந்திரவு பண்ணிக் கடைசியில் பெங்களூருக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டான்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஒரு சமையல்கார மாமியை வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். நன்றாகச் சமைத்துப் பழக்கப்பட்ட கை என்று அவர்கள் ஆறு மாதம் மகிழ்ந்து கொண்டிருந்த போதே அந்தக் கை கொஞ்சம் நீளமாகி விட ரங்கநாதனின் சில கைக்குட்டைகள், நர்மதாவின் பெர்ஃபியூம், திலீப் தனது அறையில் மறந்து விட்டுச் சென்று விட்ட சில பத்து ரூபாய்கள், சமையலறையில் ஒரு மாதத்துக்கு இருக்கட்டும் என்று வாங்கிப் போட்டிருந்த ஆறு எம்.டி.ஆர். இட்லிப் பொடிப் பாக்கெட்டுகளில் இரண்டு எல்லாம் கால் முளைத்து வீட்டை விட்டுப் போய் விட்டதால் மாமியையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி விட்டார்கள். அதனால் சமையல் செய்யும் வேலை நர்மதாவின் தலையில் விழுந்தது. அவள் மிக நன்றாகச் சமைத்தாள். ரங்கநாதனுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ரங்கநாதன் அவள் சமையலை ஆரம்பித்த முதல் நாளே சொல்லி விட்டார். “இதோ பாரும்மா. ரொம்ப இழுத்து விட்டுண்டு நீ எதுவும் செய்ய வேணாம். சமையக்காரி இருந்தப்பவே கார்த்தாலே பாதி நாள் அவ டயத்துக்கு வரமாட்டா. சனி ஞாயிறிலே திலீபுக்கு லீவுன்னு நேரே பிரென்ச்க்குப் போயிடுவோம். இல்லாட்டா அந்த ரெண்டு
நாள் மட்டும் மல்லேஸ்வரத்திலே இல்லாத ஹோட்டலா? அவன் ஏ 2 பி க்கோ, எம்.டி. ஆருக்கோ போய் டிபன் வாங்கிண்டு வரட்டும். அதனாலே நீ டிபன் கச்சேரியைக் காலம்பற வச்சுக்க வேண்டாம். தெனமும் பத்து பத்தரைக்கு நேரே லஞ்சு சாப்பிட்டுடலாம். சரியா?” என்று திட்டம் போட்டுக் கொடுத்து விட்டார்.

கணவனும் மனைவியும் நல்ல ஐடியா என்று ஒப்புக் கொண்டார்கள்.

ரங்கநாதன் மேலும் நர்மதாவிடம் “கொழம்போ சாம்பாரோ வக்யற
அன்னிக்கு ரசம் பண்ணாதே, கறி பண்ணினா கூட்டு எதுக்கு? கூட்டு பண்ற நாள்ல கறி ஒதுங்கிக்கட்டும்” என்று அவர் சொன்ன போது நர்மதா சிரித்தாள். “ரெண்டுமே இல்லாம ஒண்ணு ரெண்டு நாள் அப்பளாம், சிப்ஸ், ஊறுகாயை வெச்சுண்டு சமாளிச்சுக்கலாம். இல்லியா?” என்று திட்டத்தை முடித்து வைத்தார்.

ஆனால் சில வாரங்கள் கழித்து ரங்கநாதன் ஒரு பிரச்சினையைச்
சந்திக்க வேண்டியதாயிற்று. அதை யாரிடமும், குறிப்பாகப் பிள்ளையிடமும் நாட்டுப் பெண்ணிடமும், சொல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. நர்மதா சமைக்க ஆரம்பித்ததிலிருந்து திலீப் மாத்திரம் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பிப் போய் விடுவான். நர்மதா பத்து மணி வாக்கில் சமையலை முடித்து விடுவாள். ரங்கநாதன் பத்தரை மணிக்குச் சாப்பிடுவதைப் பழக்கிக் கொண்டார். திலீப்பின் பியூனும் அந்த நேரத்துக்கு வந்து நர்மதா கட்டி வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக் கொண்டு போவான். நர்மதா நிதானமாகப் பனிரெண்டு மணிக்குச் சாப்பிட உட்காருவாள்.

நாளடைவில் இந்த சமையல் நேரமும் சாப்பிடும் நேரமும் மாற்றமடைந்தன. நர்மதா திடீரென்று நெட் ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சினிமாக்களை இரவு பார்க்க ஆரம்பித்ததால் படுக்கையில் இரவு விழ வெகு நேரமானது. அதனால் அவள் காலையில் நேரங் கழித்து எழுந்திருக்க ஆரம்பித்தாள். சமையல் செய்து முடிக்கவும் நேரமாயிற்று. அதனால் ரங்கநாதன் பதினோரு மணி, பதினொன்றரை மணிக்குதான் சாப்பிட முடிந்தது. அவ்வளவு நேரம் அவரால் பசியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் நர்மதாவிடம் சொல்ல அவருக்கு இஷ்டமில்லை. தானே வாயைக் கொடுத்து வம்பை வாங்கிக் கொண்டோமோ என்று கூட அவர் தன்னை நொந்து கொண்டார்.

ஒரு நாள் திருச்சியிலிருந்து பெண் கூப்பிட்டாள்.

“என்னம்மா சாரதா? எப்படி இருக்கே? மாப்பிள்ளையும் குழந்தைகளும் எப்படி இருக்கா?” என்று கேட்டார்.

அவள் பதிலுக்கு அவர்கள் மூவரையும் பற்றி நலம் விசாரித்தாள்.

“அப்பா, நான் இப்ப எதுக்கு உங்களைக் கூப்பிட்டேன்னா என்னோட மாமனாருக்கு இருபத்தி அஞ்சாம் தேதி சதாபிஷகம் நடக்கறது. நீங்க எல்லோரும் வரணும்னு இவரும் ரொம்ப சொல்றார்” என்றாள் சாரதா.

இருபத்தி ஐந்தாம் தேதிக்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தது. ஆனால் தனக்கு ஆபீசில் வேலை இருப்பதால் வருவதற்கில்லை என்று திலீப் சொன்னான். ஆபிஸ் போகும் அவனைப் பார்த்துக் கொள்ள நர்மதாவும் வரவில்லை என்று சொல்லி விட்டாள். சம்பந்தியாக அவர் போவதைத் தவிர்க்க முடியாது. விசேஷம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னே அவர் மதுரை சென்றார்.

சதாபிஷேகம் முடிந்த பின்னும் மதுரையில் அவர் ஒரு மாதம் பெண்ணுடன் இருந்தார். இப்போது அவருக்கு வேளா வேளைக்கு உணவு கிடைப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. அவர் அங்கு வந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் தான் எதிர்கொண்ட சாப்பாட்டுப் பிரச்சினையைப் பெண்ணுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர் பெங்களூருக்குக் கிளம்புகிறேன் என்று சொன்னபோது “இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போயேம்ப்பா” என்றாள் பெண். அவர் ஒன்றும் சொல்லாமல் புன்னகை புரிந்தார்.

கிளம்பும் அன்று “எல்லாம் எடுத்து வச்சுண்டுட்டேளா?” என்று சாரதா ரங்கநாதனிடம் கேட்டாள்.

“எங்கியோ அமெரிக்காவுக்குப் போறாப்பிலேன்னா நூறு தடவை கேட்டுண்டு இருக்கே?” என்று ரங்கநாதன் பெண்ணைப் பார்த்துச் சிரித்தார். “இங்க இருக்கிற பெங்களூருக்கு ராத்திரி ட்ரெயின் பிடிச்சா காலங்காத்தால கொண்டு போய்த் தள்ளி விட்டுடறான்.”

“இல்லே, ஏதாவது மறந்து வச்சிடக் கூடாதேன்னுதான். கண்ணாடி, மொபைல்,வாட்ச், ஸ்லோகப் புஸ்தகப் பை, மருந்து டப்பான்னு எல்லாம் முக்கியமான ஐட்டங்களாச்சே!”

“திருச்சியிலே கிடைக்கிறதை விட இதெல்லாம் ஃபாஸ்டா பெங்களூர்லே கிடைச்சுடும். ஒழுங்கா வேளைக்குக் கிடைக்காதது சாப்பாடுதான்.”

சாரதா பரிவுடன் தந்தையை நோக்கினாள்.

“அதெல்லாம் சரியாயிடும். கவலைப்படாதேங்கோ.”

“கவலை என்ன கவலை எழுபது வயசுக்கு? அதுக்காக நானும் எவ்வளவு நாள்தான் பொண் வீட்டிலே உக்காந்துண்டு சாப்பிட்டாறது?”

“நீங்களா நினைச்சிண்டு இப்படிப் போறேள். நூறு வருஷத்துக்கு மின்னாலே எவனோ பொண்ணாத்திலே போய்க் கையை நனைக்கிறதே வெக்கம். அதிலே இன்னும் அங்க போய் நாள் கணக்குலே தங்கறதுங்கறது மானக்கேடுன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அதையே உடும்புப் பிடியாப் பிடிச்சிண்டு ..! ஹ்ம். காலம் எவ்வளவோ மாறிப் போயிடுத்து. இங்க நீங்க இருக்கறதைப் பத்தி நானோ உங்க மாப்பிள்ளையோ ஒரு வார்த்தை சொன்னோமா? நீங்க ரெண்டு குழந்தைகளுக்கும் கைடு மாதிரி இங்க இருக்கறது பெரிய அதிர்ஷ்டமா இருந்தது. ஏன் போறேள்னு அவருக்கும் ரொம்ப வருத்தம்தான்” என்றாள் சாரதா. அவர் பெண்ணைச் சமாதானப்படுத்தி விட்டு ரயில் ஏறினார்.

பெங்களூரில் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

காரை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து அவரை அழைத்துச் சென்ற திலீப் அவரிடம் ” நாளைக்கு விடிகார்த்தாலையும் எனக்குப் பிக்கப் வேலை இருக்கு” என்று சிரித்தான். “பத்மினி ஊட்டிலேர்ந்து வரா!”

அவர் சில வினாடிகள் யோசித்து விட்டு “இப்ப ஒண்ணும் ஸ்கூல் லீவு கிடையாதே?” என்றார்.

“இல்லே. ஒரு மாசம் ஸ்டடி லீவ்ன்னு இங்க வரா. அப்புறம் பரீட்சை ஆரம்பிக்க ரெண்டு நாள் முன்னாலே திரும்பிப் போகணும்” என்றான்.

அன்று வழக்கம் போல் திலீப் காலையில் கோதுமைக் கஞ்சி குடித்து விட்டு ஆபீசுக்குப் போனான். நர்மதா சமையலை முடிக்கும் போது பதினொன்றே கால் ஆகி விட்டது. ரங்கநாதன் நல்ல பசியுடன் சாப்பிட உட்காரும் போது மணி பதினொன்றரை.

மறுநாள் காலையில் பத்மினி பெட்டி படுக்கையுடன் உற்சாகத்தையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள் . அவரைப் பாத்ததும் “தாத்தா!” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள் . அவளுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்.

“என்ன தாத்தா? இப்பிடி இளைச்சுப் போயிருக்கேள்?” என்று அவரது கையைப் பிடித்துப் பார்த்தாள்.

“நானா? என்ன விளையாடறியா? உங்கம்மா கைபாகத்திலே மாசா மாசம் எனக்கு வெயிட் கூடிண்டே போறது” என்று அவர் சிரித்தார்.

ஒன்பது மணிக்கு பத்மினி அவரிடம் வந்து “தாத்தா, வாங்கோ. டிபன் சாப்பிடலாம்” என்று அழைத்துக் கொண்டு போனாள்.

பொங்கலும் கொத்ஸும் டைனிங் டேபிளில் சட்னியுடன் வீற்றிருந்தன.

“அந்த ஹாஸ்டல்லே இதையெல்லாம் இவளுக்கு யார் பண்ணிப் போடறா? தினைக்கும் ப்ரெட்டும் ஜாமும் சாப்பிட்டுண்டுதானே கிடக்கறது குழந்தைகள். அதனாலேதான் இப்பிடி டிபன் பண்ணினேன்” என்றாள் நர்மதா ரங்கநாதனைப் பார்த்து. “அதுவுமில்லாம காலம்பற எட்டரைக்கு பிரேக் ஃ பாஸ்ட், மத்தியானம் பன்னண்டரைக்கு லஞ்ச், ராத்திரி எட்டு மணிக்கு டின்னர்னு ஹாஸ்டல்லே சாப்பிட்டுடறா. இங்கையும் அந்தந்த நேரத்துக்கு அப்படியே பண்ணிக் குடுத்துட்டாப் போச்சு.”

பத்மினி இருந்த ஒரு மாதமும் இப்படித்தான் சமையலும் சாப்பாடும் நடந்தன.

பத்மினி கிளம்புவதற்கு முதல் நாள் இரவு அவர்கள் வெளியே போய்ச் சாப்பிடலாம் என்று ஆஷா ஃபுட் கேம்ப் போனார்கள்.

“இங்கே நார்த் இண்டியன் நன்னா பண்றான் இல்லே?” என்றாள் நர்மதா.

“நார்த் இண்டியா போய்தான் நார்த் இண்டியன் ஐட்டம்ஸ் சாப்பிடணும்” என்று சிரித்தான் திலீப்.

“நாங்கூட எக்ஸாம் முடிஞ்சு ரெண்டு மாசம் லீவு விடறச்சே டெல்லி போலாம்னு இருக்கேம்ப்பா. என் ஃபிரென்ட் சுலேகா அவாத்திலே வந்து தங்கிண்டு அப்படியே கொஞ்சம் நார்த் இண்டியா எல்லாம் சுத்திப் பாக்கலாம்னு சொல்றா” என்றாள் பத்மினி.

ரங்கநாதனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“போடி. வருஷம் பூரா உன்னைப் பிரிஞ்சு நாங்க இருக்கோம். லீவுலேயும் எங்கேயோ போறாளாம். சும்மாக் கிட ” என்றாள் நர்மதா.

ரங்கநாதன் நன்றியுடன் நர்மதாவைப் பார்த்தார்.

“அப்பா! பாருப்பா அம்மாவ!” என்று பத்மினி சிணுங்கினாள்.

திலீப் “ஆசைப்பட்டா அவ போயிட்டு வரட்டுமே. எப்பவும் நம்ம கூடவே கட்டிப் போட்டு வச்சுக்க அவள் என்ன கன்னுக்குட்டியா?” என்றான்.

ரங்கநாதன் ” இல்லே. அவ இங்கியே இருக்கட்டும். வெளியூர்லாம் போக வேண்டாம்” என்றார் குரலைக் கடுமையாக ஆக்கிக் கொண்டு.

பத்மினி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள். தன் குரல் கடுமைக்குப் பதிலாக இறைஞ்சலாய் ஒலிப்பதைத்தான் அவள் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் என்று அப்போது அவருக்குத் தோன்றியது.

அகிலமும் அண்டையும்

 

ஸிந்துஜா

வண்டி இன்னும் கிளம்பவில்லை. நாலேகால் என்று கைக்கடிகாரம் காண்பித்தது. நாலு மணிக்கு மைசூரை விட்டுக் கிளம்ப வேண்டிய வண்டி கிளம்பாமல் அடமாய் நின்று கொண்டிருந்தது. அந்த முதல் வகுப்பில் நான்கு பேர் என்று சார்ட் சொன்னது.உட்கார்ந்திருந்தோம். மூன்று பேர் என் வயதுக்காரர்கள்தாம். நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வரை. நான்காவது நபருக்கு வயது அறுபத்தி ஆறு

எங்கள் கம்பார்ட்மெண்டில் அடுத்திருந்த அடுக்குகளில் யாரோ கல்யாணப் பார்ட்டி போலிருக்கிறது. பத்திருபது பேர் இருக்கலாம். கச்சாமுச்சாவென்று சிரிப்பும் பேச்சுமாய் ஏதோ ரகளை நடந்து கொண்டிருந்தது.

எனக்கு எதிரே இருந்தவர் உட்கார்ந்த வாக்கிலேயே நல்ல உயரம் என்று தெரிந்தது. அகன்ற நெற்றி. பாந்தமான கண்ணாடி. தீர்க்கமான மூக்கு. முகத்தை இனிமையாகக் காட்டும் புன்னகை எப்போதும் உதட்டை விட்டுப் பிரிய மறுப்பது போல உட்கார்ந்திருந்தது. நான் வண்டிக்குள் வந்த போது அவர் ஒருவர்தான் வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் நட்பைத் தெரிவிக்கும் புன்னகை ஒன்றை எறிந்தார். அதை பிடித்துக் கொண்டு அவருடன் பேச ஆரம்பித்தேன்.

“என் பேர்” என்று பெயரைத் தெரிவித்தேன்.

“நான் ஸ்கந்தன்.”

“மாயவரம் போறேளா?”

“இல்லே. தஞ்சாவூர்” என்றார் அவர். “என் மாமனாருக்கு சதாபிஷேகம். ஒய்ஃப் குழந்தைகள் எல்லாரும் போன வாரமே போயிட்டா. நான் இப்ப போறேன். நாள்னிக்கு விசேஷம், நீங்க மாயவரமா?”

“இல்லேல்லே. நான் ஆடுதுறை வரைக்கும் போறேன். நீங்க இறங்கின ஒரு மணி நேரத்திலே நானும் இறங்கிடுவேன்” என்று சிரித்தேன்.

அப்போது மூன்றாமவர் வந்தார். வந்தவர் உட்கார்ந்ததும் அவரது கைபேசி ஒலித்தது. அவர்தான் அறுபத்தி ஆறு என்று நினைத்தேன். கைபேசியை எடுத்து “குட் ஈவ்னிங். ராமநாதன் ஸ்பீக்கிங்” என்றார். சில வினாடிகள் சத்தமில்லாமல் இருந்தன. “கட் ஆயிடுத்து” என்று கைபேசியை அணைத்தார்.

நான்காவது ஆளும் வந்து விட்டார்.. கன்னடக்காரர். இடையில் பஞ்சகச்சமும் மேலே சட்டையும் தலையில் டர்பனும் அணிந்திருந்தார். நெற்றியில் பளிச்சென்று திருமண். தடிமனான கண்ணாடிக்குள் கோலிப் பந்துகளைப் போலக் கண்கள் உருண்டன. புரஃபஸர் மாதிரி தென்பட்டார்.

“நான் ஸ்கந்தன். நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்?” என்று ஸ்கந்தன் அவரிடம் பரிச்சயம் செய்து கொண்டார்.

“என் பேர் செட்லூர் வெங்கடரங்கன் பெங்களூருக்குப் போயிண்டிருக்கேன்” என்றார். “எனக்கும் கொஞ்சம் தமிழ் வரும்” என்று ஸ்பஷ்டமாக வார்த்தைகளை உச்சரித்தார்.

நான் புன்னகை செய்தேன்.

ஸ்கந்தன் அவரிடம் “அசப்பில் நீங்க மாஸ்தி மாதிரி இருக்கேள்” என்றார்.

“அவரெங்கே, நானெங்கே? போட்டுட்டு இருக்கற வேஷம் வேணும்னா அப்பிடி இருக்குன்னு நீங்க சொல்லலாம்” என்று நெற்றியையும் டர்பனையும் தொட்டுக் காட்டினார்.

மறுபடியும் கைபேசி ஒலித்தது. ராமநாதன் முகத்தில் சற்று அலுப்பைக் காட்டி “ஹலோ ராமநாதன் ஸ்பீக்கிங்” என்றார். “ஆமா, அப்போ கட்டாயிடுத்து. சொல்லுங்கோ” என்றார். மறுமுனையில் பேசிய குரல் முடிந்ததும் “ஸ்டேஷனிலேதான் இருக்கு. இன்னும் கிளம்பலே. நான்தான் அடிச்சுப் புரண்டுண்டு ஓடி வந்தேன். ஏ டூ பி லே ஒரு ஸ்ட்ராங் காப்பியானும் குடிச்சிட்டு வந்திருக்கலாம்” என்றார். மறுமுனை மறுபடியும் பேசி முடித்ததும் “ஆடுதுறைலே இறங்கினதும் போன் பண்றேன். வரட்டா” என்று கைபேசியை அணைத்தார்.

ஸ்கந்தன் சிரித்தபடி “இங்க ரெண்டு ஆடுதுறை டிக்கட்டா?” என்றார்.

ராமநாதன் அவரைக் கேள்வி தொங்கும் கண்களுடன் பார்த்தார்.

“நானும் ஆடுதுறைலேதான் இறங்கணும்” என்றேன் ராமநாதனைப் பார்த்து,

“ஓ அப்படியா? இதுக்கு மின்னாலே உங்களை நான் பாத்திருக்கேனோ?” .

“இல்லே. நான் இருக்கறது பாம்பேல. ஒரு வேலையா ஆடுதுறை போறேன். உங்களுக்கு அதான் ஊரா?” என்று கேட்டேன்.

“ஆமா. தலைமுறை தலைமுறையா அங்கதான் இருக்கோம். ஆனா எனக்கு யாதும் ஊரே. யாவரும் கேளிர்னு ஆயிடுத்து லைஃபிலே” என்றபடி சிரித்தார்.

கன்னடக்காரர் “தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே” என்று பாடினார்.

திகைப்புடன் மற்ற மூவரும் அவரைப் பார்த்தோம்.

அவர் மேலும் “அஞ்சாயிரம் வருஷத்துக்கு முன்னாலே லைஃபைப் பத்தி ஒருத்தனுக்கு என்ன தீட்சண்யம்! என்ன வேதாந்த மனசு! மெல்லிசு நூலால யானையைக் கட்டி இழுத்துண்டு போற அசாத்தியம்னா ஆளை அடிக்கிறது! பெரிய மகானாத்தான் இருக்கணும்!” என்று கண்ணாடிக்குள் பளபளக்கும் கண்களுடன் சொன்னார்.

‘நீங்களும் தீட்சண்யம்தான்! ஆளை அடிக்கிற அசாத்தியம்தான்!’ என்று அவரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது எனக்கு.

“உங்களுக்கு எப்படி இவ்ளோ தமிழ்…?” என்று கேட்டார் ராமநாதன். “எங்களை மாதிரி மெட்ராஸ்காராளுக்குக் கூட மொத வரி மட்டுந்தானே தெரியும்!”

செட்லூர் சிரித்தபடி “எங்கம்மா சீரங்கம். சின்ன வயசிலேயே கொழந்தைக்குப் பால் போட்ற மாதிரி தமிழையும் போட்டிட்டா” என்றார்

புகை வண்டியும் மெல்ல அசைந்து நகர ஆரம்பித்தது.

ராமநாதன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு “இருபத்தி அஞ்சு நிமிஷம் லேட்டு. இதோட விட்டானே. ஆனா வழியிலே அட்ஜஸ்ட் பண்ணி மாயவரத்துக்குக் கரெக்ட் டயத்துக்குப் போயிடுவான்” என்றார். “ட்ரெயினை சரியான நேரத்துக்கு கிளப்பி சரியான நேரத்துக்குப் போக வச்சது எனக்குத் தெரிஞ்சு கடைசியா இந்திரா காந்திதான்.”

“எமெர்ஜென்ஸியோட மத்த அக்கரமங்கள்னாலே இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல காரியங்களும் மூலேல போயிடுத்து” என்றார் ஸ்கந்தன்.

“ரொம்ப கரெக்ட்டா சொன்னேள். ஐயோ, இப்பக்கூட அதை நினைச்சாலே படபடங்கறது!” என்றார் ராமநாதன். “அன்னிக்கின்னு பாத்து நான் டெல்லிலே இருந்தேன். துர்க்மான் கேட்டுக்குப் போக வேண்டியிருந்தது. என்ன ஒரு கலவரம் அங்க! கலவரம்னா சொன்னாப் புரியாது, நேர்லே பாத்துருக்கணும். என்ன பயங்கரம்! ஜும்மா மசூதி பக்கத்து சந்து பொந்து எல்லாத்திலேயும் ஜனங்கள். எல்லார் மூஞ்சியும் ஏதோ எமன் வந்து பக்கத்துலே நிக்கற மாதிரி பேயறைஞ்சு கிடக்கு உடம்பெல்லாம் நடுங்கிண்டு பொண்களும் குழந்தைகளும் கத்தி அழறா. அன்னிக்குப் பாத்து நான் ரெண்டு டஜன் சர விளக்கு ரொம்ப சீப்பாவும் நல்லதாவும் கிடைக்குமே, வாங்கலாம்னு சாந்தினி சௌக்லேந்து நடந்து போனேன். மீனா பஜார் போய் அங்கேந்து ஜூம்மா மசூதி வரைக்கும் இருக்கற ரோடுலே சின்னச் சின்னப் பக்கத்து சந்துகள்லே இந்த விளக்குக் கடைகளைக் கொட்டி வச்சிருப்பான்கள், அப்படி ஒரு கடைக்குள் இருந்து பாத்துண்டு இருக்கறச்சேதான் தெருவிலே ஒரு சத்தம். கடைலேர்ந்து எல்லாரும் வெளியே ஓடி வந்து பார்த்தா ஒரே தலைகள்தான். ‘போலீஸ், துப்பாக்கி வச்சு சுடறாங்க, ஒடுங்க’ன்னு ஒரே சத்தம். பயந்து போய் மறுபடியும் கடைக்குள்ளே போய் ஒளிஞ்சுண்டோம். வெளியே ஒடிண்டு இருந்த கொஞ்ச ஜனம் வேறே கடைக்குளே நுழைஞ்சுடுத்து. ஒருத்தர் மேலே ஒருத்தர் மூச்சு விட்டுண்டு நின்னோம். கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் அப்படியே இருந்தோம். உயிர் மேல் ஆசைன்னா கஷ்டம் கூடக் கஷ்டமாத் தெரியறதில்லேன்னு அப்பத்தான் தெரிஞ்சது.”

“நீங்க டெல்லிலே வேலை பாத்துண்டு இருக்கேளா?” என்று நான் கேட்டேன்.

“இருந்தேன். நான் ஒரு ஜெயின் க்ரூப்பிலே சேர்ந்து அங்கயும் இங்கயுமா அலைஞ்சு திரிஞ்சு இப்ப ரிட்டையர் ஆயிட்டேன். ஆனா வடக்கு தெற்கு மேற்குன்னு எல்லா இடங்களுக்கும் போகற வேலை” என்றார்.

“யாதும் ஊரேன்னு சரியாத்தானே சொன்னீங்க” என்று செட்லூர் புன்னகை புரிந்தார்.

“உங்களுக்கு மைசூரா?” என்று கேட்டார் ஸ்கந்தன்.

“ஆமா. பொறந்து வளர்ந்தது எல்லாம் மைசூர்தான். மகாராஜா காலேஜ்லே படிச்சேன்.”

“பெரிய தலைகள் எல்லாம் படிச்ச காலேஜுன்னா அது?” என்று இடை
மறித்தார்.ஸ்கந்தன். “ஆர்.கே. நாராயண், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், குவெம்புன்னு பெரிய லிஸ்டே உண்டே!”

“ஆமா. அங்கே இந்தப் பொடித் தலையையும் சேத்துண்டாங்க” என்று சிரித்தார் செட்லுர். “எங்கப்பாவும் ஆர்.கே லட்சுமணனும் கிளாஸ்மேட்ஸ். மகாராஜா காலேஜில் படிச்சிட்டு உன்னை யாராவது மேலே படிக்கிறதுக்கோ இல்லே வேலைக்கோ ரிஜெக்ட் பண்ணினா நீ பெரிய ஆளாயிடுவேன்னு லட்சுமணன் சொல்லுவார்னு எங்கப்பா சொல்லுவார். அவருக்குப் படம் போடற திறமை இல்லேன்னு ஜே ஜே ஆர்ட் ஸ்கூல்லே அட்மிஷன் கொடுக்கலையாம். அவர் அண்ணா ஆர்.கே. நாராயணனை யூனிவர்சிட்டி எண்ட்ரன்ஸ் பரிட்சைல பெயிலாக்கிட்டாங்களாம்” என்று சிரித்தார்.

“உங்களையும் காலேஜிலே….?” என்று சிரித்தார் ராமநாதன்.

“ஆமா. பி.எஸ்சி சேர ஆசைப்பட்டேன். தரலே.பி.காம்லே சேந்து படிச்சேன். ஏ,ஜிஸ் ஆபீசிலே வேலை கிடைச்சது. ஆறு வருஷம் முன்னாலே இந்த ஊர் ஏ.ஜி.யா ரிட்டையரானேன்.”

“ஓ, உங்களை மொதல்லே பாத்ததும் நீங்க யாரோ காலேஜ் புரஃபஸர் மாதிரி எனக்கு இருந்தது! இப்ப நீங்க சொன்னதையெல்லாம் கேட்டா ஏதோ சினிமாலே வர்ற மாதிரி இருக்கு” என்றேன் நான்.

“எனக்கும்தான். நீங்க சொல்றதை வச்சுப் பார்த்தா ரெண்டு வருஷங் கழிச்சு என் பேரனையும் மகாராஜா காலேஜிலேயே சேத்து விட்டுடறது உத்தமம்னு தோணறது. அவன் ஹாஸ்டல்லே இருந்தாலும் பரவாயில்லே!” என்று சிரித்தார் ராமநாதன். மற்றவர்கள் சிரிப்பில் கலந்து கொண்டோம்.

“உங்க காலேஜுக்குப் பக்கத்திலேதான்… வாணி விலாஸ் ரோடு பக்கத்திலே ஒரு பெரிய ரைட்டர் இருந்தாரே?”என்று ராமநாதன் யோசித்தார்.

“ஆமா. குவெம்பு வீடு அங்கேதான்.”

“அதேதான். அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு சந்துலே டைலர் கடை ஒண்ணு இருந்தது. சையதோ சைமனோ என்னவோ பேர். ஆள் வாட்டசாட்டமா சினிமா ஸ்டார் மாதிரி இருப்பான். கோட்டு தச்சா அவன் தச்சுக் கொடுக்கற மாதிரி இருக்கணும்னு எப்பவும் கல்யாணக் கூட்டம் நிக்கும். நாலாவது மெயினோ அஞ்சாவது மெயினோ சரியா ஞாபகம் இல்லே இப்போ” என்றார்.

“எனக்குக் குவெம்பு வீடு தெரியும். இந்த டைலரை எங்கே நீங்க ஆடுதுறையிலேயும்,டெல்லியிலேயும் இருந்துண்டே கண்டு பிடிச்சீங்க?” என்று செட்லுர் ஆச்சரியப்பட்டார்.

“எனக்குப் பொண்ணு கொடுத்தவா உங்க ஊர்க்காராதான்!” என்றார் ராமநாதன். “ஆனா நான்தான் கோட்டைத் தைக்கக் கொடுத்துட்டு வந்து இந்த இடத்தைப் பத்தி என் மாமனாருக்கு சொன்னேன். அதுவரைக்கும் அவருக்கும் அதை பத்தித் தெரிஞ்சிருக்கலே.”

பேச்சு அரசியல், சினிமா, நாடகம், பத்திரிகை என்று நீண்டு கொண்டே போனது.

அடுத்த அடுக்குகளில் இருந்த கூட்டம் வந்து எழுந்து முன்னே சென்றது. ஏதோ ஸ்டேஷன் வருகிறது போலிருக்கிறது. என்று நினைத்தேன்.

“மத்தூர்” என்றார் ராமநாதன்.

“மத்தூர் வடை ரொம்ப ஃபேமஸ் ஆச்சே” என்றேன் நான்.

“ஒரு காலத்திலே” என்றார் ஸ்கந்தன். “இப்ப யாரெல்லாமோ போட்டுண்டு ட்ரெய்னுக்குள்ளே வந்து மத்தூர் வடைங்கிறான். சகிக்கலை. நூறு வருஷமா போட்டெடுத்து பேர் வாங்கினவனை நூறு நாளைக்கு முன்னாலே வந்தவன் காப்பியடிச்சு சம்பாதிக்கிறான்னா வயத்தெரிச்சலாத்தான் இருக்கு.”

“அவாதான் ஸ்டேஷனிலே இருந்ததை மூடிட்டாளே. போன தடவை கார்லே வந்தப்போ இங்க ஸ்டேஷன்லேந்து முக்கா கிலோ மீட்டர்லே மத்தூர் டிஃபானின்னு ஓட்டல் இருக்கு. அங்க ஒரிஜினல் வடை கிடைக்கிறதுன்னு யாரோ சொன்னா. அங்க போய் வாங்கிண்டு போனேன்” என்றார் ராமநாதன். “ஓட்டல்காரர்தான் அப்போ பழைய கதையை எடுத்துச் சொன்னார். நூறு வருஷத்துக்கு முந்தி பெங்களூருக்குப் நீராவி ரெயில்தானே போயிண்டிருந்தது. அப்ப தண்ணி டேங்கை ரொப்பறதுக்கு மத்தூர்லே வந்து நிக்குமாம். பக்கத்திலே ஷிம்ஷான்னு ஆறு. காவேரியோட போய் கலக்கறது அது. அதுலேர்ந்து தண்ணி பிடிச்சிண்டு வந்து டேங்க்கையெல்லாம் ரொப்புவாளாம். இந்தக் காரியம் நடந்து முடிய அரைமணி முக்கா மணி நேரமாகும். அப்ப ட்ரெய்னலே வரவா கிட்டே ஓட்டல்காரர் இட்லியும் வடையும் விக்க ஆரமிச்சார். கொஞ்ச நாள் கழிச்சு ஸ்டேஷன்லேயே மத்தூர் வடைக் கடையை ஆரமிச்சுட்டார். ஓஹோ ஓஹோன்னுதான் ரொம்ப வருஷம் ஓடிண்டு இருந்தது. ஒரு நா மூடிட்டா. ஏன் தெரியுமா? வர்ற டிரெயின் எல்லாம் ரெண்டு நிமிஷம் மூணு நிமிஷத்துக்கு மேலே நிக்கப்படாதுன்னு ரயில்வேல புதுசா உத்திரவு போட்டா, யாரெல்லாமோ ஒரு வடைத் தட்டைத் தூக்கிண்டு கம்பார்ட்மெண்டுக்குள்ளே நுழைஞ்சு மத்தூர் வடைன்னு விக்க ஆரமிச்சது, வடை விலையை பத்து ரூபான்னு ரயில்வேக்காரா ஃபிக்ஸ் பண்ணினது எல்லாத்தையும் ஓட்டல்காரர் பாத்தாறாம். போறும், ஆளை விடுங்கோன்னு மூடிப்பிட்டார்.”

எனக்கு ராமநாதனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு விஷயத்துக்குப் போனால் கூடவே அதன் உள்ளுக்குள்ளும் போய்ப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளும் அவர் சுபாவம்!

வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

“இன்னும் ரெண்டு மாசம் போச்சுன்னா பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேலே பஸ்ஸெல்லாம் மைசூருக்கு ஒண்ணரை மணி நேரத்திலேயே போய்ச் சேந்துடுமாம். இப்ப மூணு மணி நேரம்னா ஆறது” என்றார் ஸ்கந்தன்.

“எப்பவோ வந்திருக்க வேண்டியது. கோர்ட்டு, கேசுன்னு இழுத்தடிச்சிட்டாங்க” என்றார் செட்லூர்.

“எல்லாம் பணம் செய்யற வேலை” என்றார் ராமநாதன்.

“அப்படியா? ” என்றேன் ஆச்சரியத்துடன்.

“ஆமா. எல்லாம் பாலிட்டிஷியனோட விளையாட்டுதான். எப்போ மொத மொதலா கவர்மெண்டுல இந்த பிராஜெக்ட்டை எடுத்தாங்களோ அவங்களோட அந்த முடிவுக்கு சில மாசங்களுக்கு மின்னயே பெங்களூர்லேந்து மைசூருக்கு ரோடு போற வழியை சுத்தி இருக்கற நிலத்தை யெல்லாம் பார்ட்டி ஆட்கள் வளைச்சிட்டா. ஆனா பிராஜக்ட் வரப்போ நல்ல நஷ்டஈடு கிடைக்கும்ங்கிற அவங்க நினைப்பிலதான் மண்ணு விழுந்துடுத்து. அப்புறம் என்ன, கோர்ட்டுதான், வாய்தாதான்.
எவ்வளவு வருஷம்? எல்லாம் பண ஆசைதான்.”

“பணத்தையும் அதிகாரத்தையும் வச்சுண்டு கடைசியிலே என்ன பண்ணப் போறோம்? செத்தா நாலு பேர் தூக்கிண்டு போய் மண்ணிலேதான் புதைக்கணும். இல்லே எரிச்சு மண்ணோட மண்ணா கரைக்கணும். பணம் இருக்கேன்னு பிளேன்லே போயி வானத்திலே உடம்பை அடக்கம் பண்ணிட முடியுமா?” என்று சிரித்தார் செட்லுர்.

“வாஸ்தவம். மகான்கள் சொல்லியே கேக்காதவா சாதாரண மனுஷா சொல்லியா கேக்கப் போறா?” என்றார் ராமநாதன்.

செட்லூர் எழுந்து மேலே கைப்பைகளையும் பெட்டிகளையும் வைத்திருக்கும் இடத்திலிருந்து ஒரு சிறிய சூட்கேஸை எடுத்து தான் உட்கார்ந்த இடத்தின் அருகில் வைத்துக் கொண்டார்.

“உங்க ஊர் வந்துடுத்து” என்றார் ஸ்கந்தன் சிரித்தபடி.

“பெங்களூரில் எங்க ஜாகை உங்களுக்கு?” என்று ராமநாதன் கேட்டார்.

“மல்லேஸ்வரம். அஞ்சாவது கிராஸ் கிட்டக்க” என்றார் செட்லூர்.

“அங்கதானே இந்த கீதாஞ்சலி தியேட்டர்…?”

“ஆமா. எல்லாப் பெரிய தியேட்டர்களுக்கும் கெடச்ச அந்தஸ்து அதுக்கும் கிடைச்சு மூடிட்டா. இப்போ பெரிய மால் இருக்கு அந்த இடத்திலே” என்றார் செட்லூர்.

“நானும் அங்க வந்துட்டுப் போயி ரொம்ப வருஷம் இருக்கும்” என்றார் ராமநாதன்.

“அதுக்குப் பக்கத்திலே கோகனட் அவெனியுன்னு தேங்கா மரத்தையெல்லாம் வெட்டிப் போட்டுட்டு கட்டிடமா மாத்தி விட்டுட்ட ரோடுலதான் என்னோட வீடு இருக்கு” என்றார் செட்லூர் சிரித்தபடி.

“கோகனட் அவெனியூன்னா சிதானந்தா மடத்துக்குப் பக்கத்திலேயா?” என்று கேட்டார் ராமநாதன்.

“அது எங்க இருக்கு?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் செட்லூர்.

“அஞ்சாவது கிராஸ் டவுனிலே நாலு ரோடு சேர்ற இடம்தானே நீங்க சொல்றது? அங்க ஒரு ராகவேந்திரா பேக்கரி கூட ரொம்ப ஃபேமஸா இருந்தது.”

மறுபடியும் ஆச்சரியத்துடன் செட்லூர் “அந்த பேக்கரிக்குப் ஏழெட்டு வீடு தள்ளித்தான் நானும் இருக்கேன். அந்த பேக்கரியும் தெரு பூரா வாசனை அடிச்சிண்டு இப்பவும் நிக்கறது” என்றார்.

“அந்த பேக்கரிக்குப் பக்கத்தாப்பிலே ஒரு சின்ன சந்து போகும். உள்ளே போனா ஒரு வீடு மாதிரி அந்த மடம் இருக்கு. அது இன்னும் அங்கேதான் இருக்குன்னு எனக்கு எப்படித் தெரியும்னா நான் ஒவ்வொரு வருஷமும் மடத்துக்கு பணம் அனுப்புவேன். அவாகிட்டியிருந்து ரசீது வந்துடும். மடம் உள்ளே அவ்வளவு தெய்வ சாந்நித்யம் ரொம்பி வழியற இடம். பத்துப் பேரை சேந்தாப்பிலே பாக்க முடியாது. அமைதின்னா அப்பிடி ஒரு அமைதி. அரை முழ நூலைக் கீழே போட்டா சத்தம் கேட்கும்” என்றார் உணர்ச்சி வசப்பட்ட குரலில்.

“பாருங்கோ. நான் இவ்வளவு வருஷம் இங்கே இருக்கேன். உங்க மூலமா தெரிஞ்சிண்டேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றார் செட்லூர்.

ஏழரை மணிக்கு வண்டி பெங்களூரை அடைந்தது. செட்லூர் எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார். சிறிது நேரம் பேசியபடி இருந்தோம். பிறகு அவரவர் கொண்டு வந்திருந்த இரவு உணவை சாப்பிட்டோம். மற்ற இருவரும் படுக்க ஆயத்தமானார்கள். நான் படுத்தபடி தலைக்கு மேலிருந்த சிறிய மின் விளக்கின் ஒளியில் கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் படிக்கலானேன்.

காலையில் வண்டி தஞ்சாவூரை அடைய கால் மணி இருக்கும் போது ஸ்கந்தன் எழுந்து விட்டார். ராமநாதனும் நானும் அவர் எழுந்த சத்தத்தில் விழித்து விட்டோம். நான் பாத்ரூம் போய் விட்டுத் திரும்பியதும் ராமநாதனும் அங்கே சென்றார். அவர் திரும்பி வந்ததும் எனக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்து விட்டு “சித்த நாழில நாம இறங்க வேண்டிய இடமும் வந்துடும். ஆடுதுறையிலே நீங்க எங்கே தங்கறேள்?” என்று கேட்டார்.

“நான் அங்க ஒரு டாக்டரைப் பாக்கப் போறேன். பாத்துட்டு சாயங்காலம் திருச்சிக்குப் போயிடுவேன்” என்றேன்.

“பாம்பேலேந்து ஆடுதுறைக்கு டாக்டரைத் தேடிண்டு வந்திருக்கேளா?” என்று சிரித்தார். “கேக்கவே ஆச்சரியமா இருக்கே? பேரென்ன?”

“டாக்டர் லயோலான்னு”

“கேட்ட பேராவே இல்லையே. எங்க இருக்கு அவரோட கிளினிக்?” என்று கேட்டார் ராமநாதன்.

நான் அவரிடம் விவரத்தைச் சொன்னேன். அவர் பேசாமலிருந்தார். ‘ஏதோ கத்துக்குட்டி டாக்டர்’ என்ற நினைப்பு அவர் முகத்தில் படர்ந்திருந்த அலட்சியத்தில் தெரிந்தது. “உங்களுக்கு நிச்சயம் தெரியுமா அவர்ஆடுதுறையிலதான் இருக்கார்னு? நானும் இந்த ஊர்க்காரன்தான். ஆனா கேட்ட பேராவோ பாத்த இடமாவோ இல்லையே” என்றார்.

“நான் தேடிப் பாத்துக்கறேன்” என்றேன் நான்.

ரயில் ஆடுதுறையில் நின்ற போது இறங்கினோம். குளிர்ந்த காற்றின் ஸ்பரிசம் பட்டு உடம்பு ஒரு முறை சிலிர்த்தது.

“எவ்வளவு நீள பிளாட்ஃபார்ம் !” என்று வாய் விட்டுச் சொன்னேன். அவ்வளவு சிறிய ஊருக்கு, அதிகம் பேர் பிரயாணம் செய்யாத இடத்திற்கு இவ்வளவு விசாலமாக நீளமாகக் கட்டி விட்டிருந்த புண்ணியவானை நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே அவருடன் நடந்தேன். ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் இரண்டு ரிக் ஷாக்கள் எங்களைத் தேடி வந்தன. அவர் தன்னுடைய பெட்டியை ஒன்றில் வைத்து விட்டு இன்னொரு ரிக் ஷாக்காரனிடம் “சார் போகற இடத்தை விஜாரிச்சுக் கூட்டிண்டு போறியா? என்று கேட்டார். அவன் தலையாட்டினான். அவர் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு ரிக் ஸாவில் ஏறிக் கொண்டார்.

நானும் ரிக் ஷாவில் ஏறிக் கொண்டேன். போக வேண்டிய விலாசத்தைச் சொன்னேன்.

“நம்ம பச்சிலை வைத்தியருங்களா?” என்றான். நான் வியப்புடன் தலையாட்டினேன்.

“சாமி, அது இங்கேர்ந்து நாலு மைலு இருக்கும். ஏதாச்சும் கூட போட்டுக் குடுங்க” என்றான்.

“சரி தரேன். நீ போ” என்றேன்.

அவன் ரிக் ஷாவை மிதித்து ஒட்டிக் கொண்டு சென்றான்.

“நான் சொன்னவுடனேயே நீ அவரான்னு கேட்டுட்டியே. இங்க அவரை எல்லாருக்கும் தெரியுமா?” என்று அவனிடம் கேட்டேன்.

“பின்னே? இந்த ஊர்க்காரங்க வைத்தியத்துக்குஅவருகிட்ட போறதை விடுங்க. தெக்கே தூத்துக்குடி, கன்யாகுமரி, வடக்கே தில்லி காசுமீரு கிழக்கே கல்கத்தான்னு வெளியூருலேந்து எம்புட்டு சனம் வந்து போயிட்டு இருக்கு. போன வருசம் ஒரு சாயபு துபாயிலேந்து குடும்பத்தோட மருந்து வேணும்னு வந்தாங்கன்னா பாத்துக்கோங்க” என்றான் ரிக் ஷாக்காரன்.

அவன் வைத்தியரின் வீட்டுக்கு இருபது நிமிஷத்தில் கொண்டு போய் விட்டு விட்டான். பணத்தை அவனுக்கு கொடுத்த போது எனக்கு ராமநாதனின் நினைவு வந்து போயிற்று.

 

 

 

 

 

 

 

பி. பத்மராஜுவின் “படகின் மேல்” சிறுகதை பற்றி

ஸிந்துஜா

ம்பத்தி நான்கு வருஷங்களுக்குப் பின் பத்மராஜூவை மறுபடியும் சந்திப்பேன் என்று நான் ஒரு பொழுதும் நினைக்கவில்லை. 1967ல் வாசகர் வட்டம் வெளியிட்ட “பாரத நாட்டுப் புதுக்கதைகள்”புத்தகத்தில் பத்மராஜுவின் “பனி மூட்டம்”என்ற கதையைப் படித்துப் பிரமித்தது ஏதோ சமீபத்தில் நடந்தது போல நினைவில் தெளிவாக நிற்கிறது. சமூகம் நிறுவிய மதிப்புகள் கட்டுக்களாக எழுந்து நின்று மனித மனங்களை உணர்வுகளைச்  சீண்டியதைக் காணப் பொறாது எழுந்த எழுத்துக்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க முறையில் தம்மை ஸ்தாபிக்க முயன்ற காலகட்டம் அது என்று நினைக்கிறேன். பத்மராஜுவின்  “பனி மூட்டம்” அந்த வகையில் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்து. Jump Cut பாணியை வைத்து எழுதப்பட்டிருந்தது. ஒரு பெண்ணின் மனதை எவரும் அவ்வளவு லகுவில் படித்து விட முடியாது என்பதைப் பனிமூட்டம் உணர்த்த விரும்பியது என்று அன்று தோன்றியது இப்போது மீண்டும் எடுத்துப் படிக்கையிலும் தோன்றுகிறது என்பது படைப்பாளியின் வெற்றியன்றி வேறென்ன? அன்பு காதல் வெறுப்பு கோபம் எல்லாம் வெவ்வேறு வடிவங்களில் ஒருவனை அல்லது ஒருத்தியை மரபுடன் இயைந்து உலகுக்குக் காட்டவே வந்தவை என்னும் பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நிலைப்பாட்டை மறுப்பதில் எழுத்தாளன் இன்பம் காண்கிறானோ என்ற சந்தேகத்தை எழுப்பும் கதையாக எனக்குப் “பனிமூட்டம்” காட்சியளித்தது.

சமீபத்திய பதாகை இதழில் தி. இரா. மீனாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் பத்மராஜுவின் “படகின் மேல்” மறுபடியும் ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை என்று நான் நினைக்கிறேன். கதைசொல்லி படகில் பிரயாணம் செய்கிறவர். அந்தப் படகில் வழியில் ஒரு ஜோடி ஏறிக் கொள்கிறது. அவன் பெயர் பட்டாலு. ரங்கி என்பது அவள் பெயர். ரங்கி எப்படிப்பட்டவள்  என்கிற சித்திரம் இவ்வாறு கதையில் வருகிறது:

பட்டாலு உன் கணவனா?”  நான் கேட்டேன்.

அவன் என்னுடையவன்!பதிலளித்தாள்.

இவள் சிறுமியாக இருக்கும்போதே அவன் மயக்கிவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளவில்லை. இப்போது வேறு ஒரு பெண் இருக்கிறாள். அவள் எங்கிருக்கிறாள் ரங்கி?” தொழிலாளி கேட்டார்.

கொவ்வூரில். அவளுக்குச் சின்ன வயது. என்னைப் போல கஷ்டப்பட்டாள், அவள் என்னைவிட மோசமாக இருப்பாள்.”

பின் ஏன் நீ அவனுடன் இருக்கவேண்டும்?” கேட்டேன்.

அவன் என்னுடையவன்எல்லாவற்றையும் விளக்கிவிட்டதைப் போல பதில் சொன்னாள்.

ஆனால் அவனுக்கு இன்னொருத்தி இருக்கிறாளே.”

நான் இல்லாமல் அவனால் என்ன செய்யமுடியும். ஒருவனுக்கு எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவன் ராஜா. யாரும் அவனைப் போல இருக்க முடியாது. நான் சொல்கிறேன்

இப்படி ஒரு மனநிலை எப்படி ஒரு பெண்ணுக்கு வாய்த்திருக்கிறது என்று ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும்  ஏற்படுகிறது. தி.ஜா.வின் அம்மணியின்  மீது அவ்வப்போது என் மேல் இடறி விழும் நம்பகத்தன்மையில்லாமை இங்கு விலகி நிற்கிறது.

ரங்கியை இழுத்துக் கொண்டு பட்டாலு ஓடிப் போன போது அவள்  இளமையும், துடிப்புமாக இருந்தாள். ஒரு நாளிரவு குடிசைக்குள் இவளைப் பூட்டி வைத்துவிட்டு குடிசைக்குத் தீ வைத்து விட்டான். இவள் எரிந்து சாம்பலாகும் நிலைக்கு வந்துவிட்டாள். எதற்காக தீ? ரங்கி சொல்கிறாள்:

இப்போது அவனுடனிருப்பவள். என் படுக்கையிலே அவளைப் படுக்க வைத்து, தானும் படுத்துக் கொண்டான். என் கண் முன்னாலேயே! இருவரும் குடித்திருந்தனர். நான் அவள் மேல் விழுந்து பிராண்டினேன். அவன் குறுக்கே புகுந்து என்னை அடித்துக் காயப்படுத்தினான். நள்ளிரவில் அவளை அழைத்துக் கொண்டு எங்கோ போய்விட்டான். திரும்பவும் வந்தான். அவனை வீட்டுக்குள் விடாமல் திட்டித் தீர்த்தேன். கதவருகே விழுந்து குழந்தையைப் போல அழுதான். எனக்கு மனமிளகி விட்டது. அருகில் உட்கார்ந்தேன்.என்னைக் கட்டிக் கொண்டு நெக்லஸைத் தரும்படி கேட்டான். எதற்கென்றேன். அவளுக்காகஎன்றான். அந்தப் பெண் இல்லாமல் தன்னால் வாழ முடியாதென்றழுதான். என் கோபத்திற்கு அளவில்லாமல் போனது. அவனை வெளியே தள்ளி கதவைத் தாளிட்டேன். தட்டிப் பார்த்துவிட்டுப் போய்விட்டான். தூங்க முடியாமல் வெகுநேரம் தவித்தேன் ஒரு வழியாக நான் தூங்கிய பிறகு வீடு தீப்பற்றிக் கொண்டது. அவன் குடிசையை வெளியே பூட்டிவிட்டு தீ வைத்து விட்டான். கதவைத் திறக்க முயற்சித்தேன். இரவு நேரமென்பதால் என் கூச்சல் அக்கம்பக்கத்தவர்களுக்குக் கேட்கவில்லை. மயக்கமானேன். அந்த நிலையில் அக்கம்பக்கத்தவர்கள் என்னைக் காப்பாற்றியிருக்க வேண்டும். மறுநாள் போலீஸ் அவனைக் கைது செய்தது. ஆனால் அவன் இதைச் செய்திருக்க மாட்டானென்று நான் உறுதியாகச் சொன்னேன். அன்று மாலை வந்து மணிக்கணக்கில் அழுதான். சில சமயங்களில், குடித்திருக்கும்போது அப்படித்தான் அழுவான். ஆனால் குடிக்காத போது அவன் மிக வேடிக்கையானவன். நான் நெக்லஸை அவனிடம் கொடுத்து விட்டேன்.”

பத்மராஜுவின் ரங்கியைப் பார்த்து ஏமாளி என்று எரிச்சல் வருவதில்லை. ஏளனமாகப் பார்க்கத் தோன்றுவதில்லை. வெறுப்போ, பரிதாபமோ இல்லை கசப்போ ஏற்படுவதில்லை. அவளது காதல், அவள் காண்பிக்கும் பரிவு, புரிந்து கொள்ளல் எல்லாமும் அவளது பின்னணிக்கு முன்னால் விஸ்வரூபம் எடுக்கின்றன. புத்திசாலித்தனத்தைப் படிப்பாலல்ல மனதால் கூட ஒருவர் தன்னிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று இந்தப் பெண் நிரூபிக்கிறாள். அவள் தன் இழுபறியான வாழ்க்கையைப் பற்றிய புகார் எதுவுமில்லாமல் நிச்சிந்தையாக நடமாடுவது அவள் மீது மிகுந்த மரியாதையை எழுப்புகிறது.

மூல ஆசிரியரின் கட்டுக்கோப்பான நுட்பமான கதையின் உள்ளடக்கம்  சரளமான தமிழில் வந்திருக்கிறது.

(பின் குறிப்பு: மொழிபெயர்ப்பாளர் இதை எழுதுபவரின் உறவினர். பத்மராஜுவின் சிறந்த எழுத்து பற்றி எழுத வேண்டிய உந்துதல் இதைப் பின்னுக்குத் தள்ளி விட்டது)

 

தூரத்து அருகாமை 

ஸிந்துஜா

  ஜானகி பதினெட்டாம் கிராஸ் பஸ் நிறுத்தத்துக்கு வந்த போது வழக்கம் போல் கூட்டம் முட்டிக் கொண்டு நின்றது. அத்தனை கூட்டமும் அவள் போகும் வண்டிக்கு அல்ல. அவள் கன்னிங்காம் ரோடு போக வேண்டும். ஆனால் அந்த நிறுத்தத்துக்கு வரும் வண்டிகள் மெஜஸ்டிக், மார்கெட், ஜெயநகர், ஜே.பி. நகர், ஹொசஹள்ளி என்று திசைக்கொரு பக்கம் செல்வனவாக இருந்தன. ஜானகி தான் செல்ல வேண்டிய வண்டியின் எண்ணைக் குறிப்பிட்டு அது வந்து விட்டுப் போய் விட்டதா என்று பக்கத்தில் நின்றிருந்த பெண்ணைக் கேட்டாள். அந்தப் பெண் அவளை ஏற இறங்க ஒரு முறை பார்த்து விட்டு இன்னும் இல்லை என்று சொன்னாள். அவள் அம்மாதிரி தன்னைப் பார்த்தது ஜானகிக்கு உறுத்தவில்லை. ‘இப்பிடி இல்லே இருக்கணும்!’ என்று சொல்லத்  தூண்டும் அழகு தன்னிடம் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ‘இதென்ன இப்பிடி’ என்று அவளைப் பார்த்த பெரும்பாலான கண்கள் தெரிவித்ததை அவள் பல வருடங்களுக்கு முன்பே அறிந்து விட்டாள்.

அன்று காலை கிளம்புவதற்கு முன்னால் அவள் கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்ட போதும் அது பொய் சொல்லாமல் அவளைக் காட்டியது. அவள் முழு உயரத்தையும் காட்ட முடியாத (ஐந்தடி ஒன்பது அங்குலம்) கண்ணாடியில் முகமும் மார்பும் இடையும் பாதிக் கால்களும் தெரிந்தன. மேட்டு நெற்றியும்,  நீள  நாசியும் சதைப்பிடிப்பு இல்லாத கன்னங்களும் தாடையும் தெரிந்தன. மார்பகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இரு புள்ளிகள் காணப்பட்டன. உடலில் சதைப்பற்றுக் காண்பிக்காத இயற்கை அவளுக்குத் தேவைக்கும் மீறிய செழிப்பைத் தலை மயிரில் கொடுத்திருந்தது. திரும்பி பக்கவாட்டில் அவள் தன்னைப் பார்த்துக் கொண்ட போது பின்புறம் பிருஷ்டத்துக்கும் கீழே நீளக் கூந்தல் தொங்கிற்று.

 

இன்று திங்கட் கிழமையாதலால் அவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று ஜானகி நினைத்தாள். நேற்று ஒய்வு தினம். வாரத்தில் மற்ற நாள்களில் காலை ஐந்தரைக்கே ஆரம்பித்து விடும் தினங்களிலிருந்து விடுதலை தரும் நாள் என்று ஞாயிற்றுக் கிழமையை அவள் மிகவும் விரும்புவாள், அன்று எட்டு எட்டரைக்கே முழிப்பு வந்தாலும் ஒன்பதுக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டாள். அப்படி சீக்கிரம் எழுந்து காப்பி போட்டுக் காலை உணவு சமைத்துப் பரிமாற ஒரு குழந்தையோ குட்டியோ கணவனோ அவள் கூட இல்லை. நிதானமாக எழுந்து வாசல் கதவைத் திறந்து வெளியே பையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு வருவாள். ஐந்தரை மணியிலிருந்து ஒன்பது மணி வரை அடிக்கும் இளம் வெய்யிலில் அது தன்னுடன் கொண்டு வரும் ஜில்லிப்பை இழந்திருக்கும், அவளுக்குக் காலை உணவு என்பது காப்பியும், அய்யங்கார் பேக்கரியிலிருந்து வாங்கி வைத்திருக்கும் பிஸ்கட்டுகளில் நாலைந்தும்தான். நிதானமாகப் பதினொன்றரை பனிரெண்டு மணிக்கு மத்தியானத்துக்கு வேண்டிய உணவை சமைத்துக் கொள்வாள்.

அவளைத் தேடி ஞாயிறு அன்று யாரும் வரமாட்டார்கள். அவளும் யாரைத் தேடியும் செல்ல மாட்டாள். அவளுடைய அம்மாவைத் தவிர. அம்மா குவீன்ஸ் ரோடில் இருக்கிறாள். அவள் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரியில்  குடியிருப்பும் கொடுத்திருந்தார்கள். பத்து வருஷமாக – அவள் கணவனை விட்டுப் பிரிந்த பிறகு – அவள் அங்கேதான் இருக்கிறாள். அவளுக்கோ ஜானகிக்கோ அவன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்றதில் எந்த ஒரு துக்கமும் இல்லை. ஏனென்றால் அதற்கு முன்பு அனுபவிக்க வேண்டிய துக்கம் எல்லாவற்றையும் அவன் மூலம் அவர்கள் அடைந்திருந்தார்கள். அவர்கள் வருத்தப்பட்டதெல்லாம் இன்னொரு பெண் அவர்கள் நிலைக்கு வந்து விட்டாளே என்றுதான்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அவள் மதியச் சாப்பாட்டுக்குப் பின் அம்மாவிடம் சென்று விடுவாள். அவளுக்கும் ஞாயிறு அன்றுதான் விடுமுறை நாள். இவள் தன் கல்லூரியில் நடந்த அந்த வார நிகழ்ச்சிகளையும் அம்மா அவளுடையதையும் சொல்லிப் பகிர்ந்து கொள்வார்கள். ஜானகி தன் வகுப்பு மாணவிகளில் சிலரின் கெட்டிக்காரத்தனத்தையும் பெரும்பாலான மற்றவர்களின் பொல்லாத்தனத்தையும் விஷமத்தையும் சொல்லிச் சிரிப்பாள். அம்மாவுக்கு ஆஸ்பத்திரியில் நேரும் அனுபவங்களில் சந்தோஷம் எப்போதாவதுதான் வரும். ‘நோயாளிகளுக்கு ஆறுதலா நீ இருக்கியே’ என்று ஜானகி அம்மாவிடம் ஆறுதலாகச் சொல்லுவாள்.

ஜானகியின் எட்டு ஐம்பது பஸ் வந்து விட்டது. முன் வழியாக ஏறுவதில் வழக்கமாகப் பிரச்சினை எதுவும் இருப்பதில்லை. ஆனால் இன்று வழக்கத்துக்கு விரோதமாக வண்டியின் ஸ்டியரிங் வரை பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஜானகி ஒருவழியாகப் பஸ் உள்ளே நுழைந்து விட்டாள். பின் பக்க வழியில் படிக்கட்டு வரை ஆண்கள் நிரம்பி வழிந்தார்கள்.அவர்களில் சிலர் வேலைக்காகத் தாங்கள் உயிரை விடத் தயாராக உள்ள ஜனம் என்று உலகத்துக்குத் தெரிவிக்கும் வண்ணம் படிக்கட்டில் ஒரு காலும் அதற்கு வெளியே காற்றில் தொங்கிக் கொண்டிருந்த இன்னொரு காலுமாக நின்றார்கள். தனக்கும் கூட வாழ்க்கையில் முக்கியமானது வேலை என்றுதான் ஜானகி நினைத்தாள். யாருடைய கவனமும் மரியாதையும் கிடைக்காத இந்த வாழ்க்கையில் வேலை ஒன்றுதான் அவள் உயிரைப் பிடித்து நிறுத்தியிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

பஸ் போய்க் கொண்டிருக்கும் போது மணி என்ன என்று அவள் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தாள். ஒன்பது ஐந்து. இன்னும் நாலைந்து நிமிஷங்களில் அவள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விடும். அது அவளது கல்லூரிக்கு எதிரே இருக்கிறது. அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் அவள் அலுவலகத்துக்குள் நுழைந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விடலாம்.  வகுப்புகள் ஒன்பதரை மணிக்குத்தான் ஆரம்பிக்கின்றன. ஆகவே அவள் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆசிரியைகளுக்கான அறைக்குச் சென்று உட்கார வேண்டும். வரவேற்பைச் சற்றும் காட்டாத முகங்களை அவள் பார்க்க விரும்பவில்லை. அழகு, பணம், அறிவு ஆகிய வார்த்தைகளின் உண்மையான ரூபங்களை அறியாத ஒரு கூட்டம் காண்பிக்கும் அன்னியத்தில் துவளும் மனமே பின்னர் அது பொருட்படுத்தப்பட வேண்டிய கூட்டம் அல்ல என்று தீர்மானம் கொண்டு விடுகிறது.

இம்மாதிரி நாள்களில் அவள் தான் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு முந்திய ஸ்டாப்பிலேயே இறங்கி விடுவாள். இன்றும்  அதையே செய்தாள். அழகு, அழகின்மை என்று வித்தியாசம் பார்க்காமல் டிசம்பர்க் குளிருடன் வந்த காற்று அவளைத் தொட்டுவிட்டுச் சென்றது. ஜானகி மெதுவாக நடந்தாள். அந்த வேகத்துக்கு அவள் கல்லூரியை அடையும் போது வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு நேராக வகுப்புக்குச் செல்ல சரியாக இருக்கும். அவளுக்கு நேர் எதிரேயும் எதிர்ப்புறத்தில் இருந்த பிளாட்ஃபார்மிலும் அவள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் சிலர் அவர்களின் ஜோடியுடன் எதிர்ப்பட்டனர். இன்று அவர்கள் தம் வகுப்புகளுக்குச் செல்வது நடக்காத காரியம்தான். அவளைப்  பார்க்க எந்தவித முயற்சியும் எடுத்துக் கொள்ள விடாமல் கூடவே வந்த இளைஞர்களின் சேஷ்டைகளில் அவர்கள் மகிழ்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.அந்தப் பெண்களின் பெற்றோர்கள் பாவம் என்று நினைப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை தன் இயலாமையும், லேசான பொறாமையும் தன்னைச் சற்று உயர்நிலை மனோபாவத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனவோ என்று அவள் தன்னையே கடிந்து கொண்டாள்.

அவள் பள்ளியில் படிக்கும் போது ஒரேயொரு ஜோடி இம்மாதிரி அலைந்ததைப் பார்த்திருக்கிறாள். சினிமாவில் வரும் கதாநாயக, நாயகி அந்தஸ்து கொஞ்ச காலம் அவர்களுக்குக் கிட்டியிருந்தது என்னவோ வாஸ்தவம்தான். வகுப்பறைகளில் கிடைத்த கிண்டலான வார்த்தைப் பரிமாறல்களில் அவர்களிருவரும் சிரித்துக் கொண்டோ முறைத்துக் கொண்டோ போனார்கள். ஆனால் ஒரு நாள் அந்தப் பெண் பள்ளிக்கு வரவில்லை. அதற்குப் பிறகு அவள் என்றுமே வரவில்லை. அவள் படித்த கல்லூரியில் பெண்கள் மட்டும் படிக்க வந்தார்கள். பஸ் ஸ்டாப்பில் சில  சமயம் நடக்கும் கலாட்டாக்களைப் பற்றிச் சில பெண்கள் பேசுவார்கள். அங்கே எல்லாவற்றையும் ரசித்து விட்டு வரும் அவர்களே வகுப்புக்கு வந்து சிநேகிதிகளிடம் அந்தப் பையன்கள் ‘வழிவது’ பற்றி எகத்தாளத்தையும் அலட்சியத்தையும் கொண்டுள்ள குரலில் எப்படிச் சொல்லுகிறார்கள் என்று ஜானகிக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஜானகி கல்லூரிக்குள் நுழையும் போது மணி ஒன்பது இருபத்தி ஐந்து ஆகியிருந்தது. அலுவலகத்தை நோக்கி அவள் நடந்து சென்றாள்.

அவளுக்கு முன்னால்  நடந்து சென்ற ஒருத்தி எதற்கோ பின்னே திரும்பிப் பார்த்தாள். வத்சலா கோசாம்பி. சரித்திரப்  பேராசிரியை. அவள் பார்வை ஜானகியைத் தாண்டி நூறு கஜம் சென்று விட்டுப் பிறகு தான் நடந்து போகும் வழிக்குத் திரும்பிற்று. தன் மீது பார்வை விழும் போது மட்டும் அவள் குருடாகி விடும் வரத்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறாள் என்று ஜானகிக்குத் தோன்றியது. அவளைப் போலவே  ஆங்கிலத் துறைத் தலைவி எலிசபெத் சாமுவேல்,  ஹிந்தி ஆசிரியை லீனா ஷிவ்சாகர், ஃபிரென்ச் ஆசிரியை கல்பனா மாணிக்கவாசகம், வணிகவியல் புரஃபஸர் நஞ்சப்பா (ஒரே ஒரு ஆண் ஆசிரியர்) என்று கல்லூரிக்கு ஒன்பது மணிக்கே வந்து வம்படிக்கக் கூடியிருக்கும் ஒரு பெரும் கூட்டத்துக்கும் கடவுள் அந்த வரத்தை அளித்து விட்டார். ஜானகியைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் அவர்கள்  பார்த்தும் பாராதது போலிருக்கும் ஓர் உன்னதப் பயிற்சியில் தேர்வடைந்தது போன்று இருப்பார்கள்.  அவர்கள் ஓவ்வொருவரைப் பொறுத்த வரையும் அவளிடம் ஒரு அனுபவம் இருந்தது.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அவள் கல்லூரி முதல்வரைப் பார்க்கச் சென்றாள். அவளுக்கு வணக்கம் செலுத்தி விட்டு அன்றிலிருந்து தான் வேலையில் சேர்ந்து விட்டதைத் தெரிவித்தாள். அப்போது அறைக்குள் வந்த பெண்மணி ஒரு வாசனை திரவிய நிலையத்தையே அணிந்து கொண்டு வந்திருந்தவள்  போலிருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பதுக்குள்  இருக்கலாம். ஆனால் உடை அணிந்த முறை மூலம் அவள் காலத்துக்குச் சவால் விட முயன்று அதில்  தோற்றிருந்தாள்.

முதல்வர் ” ஜானகி! இவங்கதான் புரஃபசர் எலிசபெத் சாமுவேல், இங்கிலிஷ் டிபார்ட்மென்ட், எலிசபெத்! இவங்க  ஜானகி இன்னிக்கி ஜாயின் பண்ணறாங்க. சயன்ஸ் லெக்சரர்” என்று அறிமுகம் செய்வித்தாள். எலிசபெத் ஜானகியை ஏற இறங்கப் பார்த்தாள். குரலிலோ முகத்திலோ சந்தோஷம் எதுவும் காண்பிக்காமல் அவள் ஜானகியிடம் “கிளாட் டு மீட் யூ” என்றாள். ஜானகி நன்றி தெரிவித்துச் சொல்லிய சொல்லைக் காற்று ஏற்றுக் கொள்ளட்டும் என்பது போல முதல்வருடன் பேசத்  தொடங்கி விட்டாள். ஜானகி கிளம்ப முயற்சி செய்த போது முதல்வர் அவளிடம் சற்று இருக்கச் சொல்லி எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினாள். எலிசபெத் பேசி முடித்ததும் வெளியே சென்றாள்

“அவள் சீனியர் ஃ பேகல்ட்டி. ஆனால் அவள் நடந்து கொண்ட முறை எனக்கு வருத்தத்தைத் தருகிறது. நீங்கள் வருத்தப்படக் கூடாது” என்றாள் முதல்வர்.

“மிதிச்ச இடத்துப் புல் சாகாது” என்றாள் ஜானகி. முதல்வர் அவளை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.  அன்று அவள் சந்தித்த லீனா, கல்பனா, புவனா ரெட்டி ஆகிய ஆசிரியைகளும் எலிசபெத்தின் சிஷ்யைகள் போலவே இருந்தார்கள்.

அவள் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமிருக்கும். அன்று மாலையில் அவள் வீடு திரும்ப பஸ் நிறுத்தத்துக்கு வந்த போது அங்குலீனா கையில் வைத்திருந்த ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

அவளும்மல்லேஸ்வரத்தில் தான் குடியிருந்தாள். ஏற்கனவே தான் வருவதைப் பார்த்து விட்டு அவள் புத்தகத்தில் அடைக்கலம் புகுந்திருக்க வேண்டும் என்று ஜானகிக்குத் தோன்றியது.

அப்போது அங்கு வந்து நின்ற காரிலிருந்து “லீனா!” என்ற குரல் கேட்டது. லீனா ஏறெடுத்துப் பார்த்து விட்டுக் கையை அசைத்தவாறே புன்னகையுடன் காரை நோக்கிச் சென்றாள். ஜானகி பார்த்த போது காருக்குள் எலிசபெத் இருந்தாள். அவளும் லீனாவும் தன்னைப் பார்ப்பதை ஜானகியும் பார்த்தாள். கார் கிளம்பிச் சென்றது.

அவர்கள் அவளை ஒதுக்குவதற்கும், அவள் மீது ஆத்திரப்படுவதற்கும் தேவையான காரணங்கள் இருந்தன என்று ஜானகி நம்பினாள். அவர்களிடம் இருந்த அழகு – பூச்சுக்களால் ஆனது- பணம், கார் வீடு போன்ற வசதிகள் அவர்கள் அவள் மீது செலுத்திய  கீழ்ப்பார்வைகளை நியாயப்படுத்துவனவாக இருந்தன. ஆனால் ஆத்திரம்? அவளிடம் சயன்ஸ் படித்த வெவ்வேறு வகுப்புகளில் இருந்த எல்லா மாணவிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் ஒவ்வொரு சயன்ஸ் தேர்விலும் தேர்ச்சியடைந்து வந்தார்கள். தோல்வியடைந்தவள் என்று ஒரு பெண்ணும் அவள் காலை வாரி விடவில்லை. இதற்கு முன்னால் இருந்த சயன்ஸ் ஆசிரியை சரியாகப் பாடம் சொல்லித் தராமல் கல்லூரிக்குக் கெட்ட பெயர் வாங்கித் தந்தாள் என்று ஜானகியைப் பாராட்டி  ஆசிரியைகள் கூட்டத்தில் முதல்வர் வெளிப்படையாகக் கூறியதுதான் அவர்களின் ஆத்திரத்துக்குக் காரணமாகி விட்டது. போதாதற்கு அந்த ஆசிரியையும் கல்லூரியில் இருந்த வரை அவர்கள் கூட்டத்தின் தலைவியாக வேறு இருந்தாள். பழைய சயன்ஸ் ஆசிரியைக்கு முதல்வரிடம்  கிட்டிய மரியாதை ஜானகியால் தங்களுக்கும் வந்து விடுமோ என்று அதிக அளவில் தேர்ச்சி பெறாத மாணவர்களைக் கொண்டிருந்தவர்கள் உள்ளூரப் பயந்தார்கள்.

அன்று ஜானகிக்குக் காலையில் இரண்டு வகுப்புகள்தாம் இருந்தன. பனிரெண்டு மணிக்கு மேல் அவளுக்கு வேலை இல்லை. இம்மாதிரி நாள்களில் அவள் லைப்ரரியில் போய் உட்கார்ந்து விடுவாள். ஜேன் ஆஸ்டனிலிருந்து சால் பெல்லோ வரை அங்கு நடமாடிக் கொண்டிருந்தது அவளுக்கு சௌகரியமாக இருந்தது. அவள் தன் இரண்டாவது வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த போது  வலது பக்கமிருந்த ஆர்ட்ஸ் பிளாக் மாடியிலிருந்து கல்பனா இறங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ஜானகி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் சரிந்து விழுந்தாள். விழுந்தவள் படிகளில் உருண்டு கீழே வருவதைப் பார்த்து ஜானகி வேகமாக அவளை நோக்கி ஓடினாள். நாலைந்து படிகளில் உருண்டு கீழே விழுந்தவள் அப்படியே படியில் படுத்துக் கிடந்தாள். அவளை நெருங்கியதும் ஜானகி அருகில் யாராவது தென்படுகின்றார்களா என்று பதற்றத்துடன் பார்த்தாள். யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை.

அப்போது ஒரு ஆட்டோ அலுவலகக் கட்டிடம் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து சந்தியப்பா இறங்குவதைப் பார்த்தாள். காண்டீனில் வேலை பார்க்கும் உதவியாள். இறங்கி ஆட்டோவிலிருந்து ஒரு மூட்டையை இறக்கிக் கொண்டிருந்தான். ஜானகி அவனைப் பார்த்து “சந்தியப்பா!” என்று கத்தினாள். அவன் அவளையும் படியில் கிடக்கும் உருவத்தையும் பார்த்து ஓடி வந்தான். ஆட்டோ டிரைவரும் இறங்கி அவர்களைப் பார்த்து ஓடி வந்தார் . மூவருமாகக் கல்பனாவைத் தூக்கினார்கள். “ஆட்டோலேயே  ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போயிடலாம்” என்றாள் ஜானகி. கல்பனாவின் தலையிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கையிலும் சிராய்ப்பு காணப்பட்டது.

அவள் முதலில் உள்ளே உட்கார்ந்து கொள்ள அவள் மடியில் கல்பனாவின் தலையை மற்ற இருவரும் கிடத்தினார்கள். ஜானகி ஆட்டோக்காரரிடம் “தண்ணி இருக்கா?” என்று கேட்டாள். ஆட்டோ டிரைவர் வண்டியின் உள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து ஜானகியிடம் கொடுத்தார். அவள் தன் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து நெற்றி, முகம் கழுத்து எல்லாவற்றிலும் சிதறியிருந்த ரத்தத்தைத் துடைத்தாள். கல்பனா அரை மயக்கத்தில் வலி பொறுக்க முடியாமல் அழுதாள். ஜானகி அவள் வாயில் சிறிதளவு நீர் ஊற்றியபடி சந்தியப்பாவிடம் “நான் இவங்களை மகாராணி ஆஸ்பிடலுக்குக் கொண்டு போறேன். நீங்க கொஞ்சம் பிரின்சி கிட்டே சொல்லிடறீங்களா? நான் ஆஸ்பிடல்லேர்ந்து அப்புறமா போன்பண்ணி அவங்க கிட்டே  பேசறேன்” என்று சொல்லிவிட்டு  சந்தியப்பாவிடம் “அங்க படிலே கெடக்கற இவங்க ஹேண்ட் பேக்கையும் புஸ்தகத்தையும் எடுத்துக் குடுங்க”  என்றாள். அவற்றை  வாங்கிக் கொண்டு  ஆட்டோக்காரரிடம் ” குவீன்ஸ் ரோடு” என்றாள்.

ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போது அவள் தன் அம்மாவை அழைத்தாள். நல்ல வேளை, அவள் அப்போது டூட்டி முடிந்து சாப்பிடப் போய்க் கொண்டிருந்தாள். ஜானகி எமர்ஜென்சி என்றதும் அவள் போர்ட்டிகோவில் ஸ்ட்ரெச்சருடன் நிற்பதாகத் தெரிவித்தாள். ஜானகி  கல்லூரியிலிருந்து ஆஸ்பத்திரியை ஏழெட்டு நிமிடத்தில் அடைந்து விட்டாள். அவள் அம்மாவுடன் இருந்த இரண்டு சிப்பந்திகள் ஸ்ட்ரெச்சரில் கல்பனாவை எடுத்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றார்கள். அவர்களுடன் ஜானகியின் அம்மாவும் சென்றாள் , ஜானகியை ரிசப்ஷனில் உட்கார்ந்திருக்குமாறு சொல்லி விட்டு சுற்றி இருந்தவர்களைப் பார்த்தாள் ஜானகி. பெரும்பாலும் கவலை ஏறிய முகங்கள். அவர்களின் உள்ளங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும். நோவு பற்றி, உயிரைப் பற்றி, பணத்தைப் பற்றி என்று எல்லாப் பக்கமும் நெளியும் பாம்புகளே அடங்கிய பரமபத விளையாட்டு. இதை அறிந்தும் அறியாத மாதிரி, தெரிந்தும் தெரியாத மாதிரி ஓடுகிறார்கள் – அழகா, அழகில்லையா, பணக்காரியா பிச்சைக்காரியா கெட்டிக்காரியா முட்டாளா என்ற  விவாதத்தின் பின்னால் வெறியுடன். கல்பனாவுக்கு நேர்ந்தது தனக்கு நேர்ந்திருந்தால் கல்பனாவோ அவளது கூட்டத்தில் இருக்கும் எவரோ தான் நடந்து கொண்ட மாதிரி இயங்கியிருப்பார்களா என்று சட்டென ஓர் எண்ணம் அவளுள் மின்னி மறைந்தது. உடனடியாகவே அவள் மனதில் பதிலும் வந்து ஓடி விட்டது.

கல்பனாவுக்கு எப்படி இருக்கிறதோ என்று அவள் கவலையுடன் நினைத்தாள். மற்றவர்களைப் போலக் கல்பனாவும் ஜானகியிடம் ஒதுங்கி நிற்பவள்தான். அவள் வீடு எங்கே இருக்கிறது? வீட்டில் யார் இருக்கிறார்கள்? இந்த விபத்து பற்றியும் ஆஸ்பத்திரியில் இருப்பது பற்றியும் யாரிடம் தெரிவிப்பது? அவள் கணவன் எங்கே இருக்கிறான்?

இந்த  ஊரில்தானா? அல்லது வெளியூரிலா? வெளிநாட்டிலா?

அவள் கல்பனாவின் கைப்பையைத் திறந்து பார்த்தாள். அதில் ஒரு பர்சும் கைபேசியும் பேனாவும் ஒரு கைக் குட்டையும் இருந்தன. கைபேசியை எடுத்துப் பிரித்த போது அவள் கடைசியாகக் கூப்பிட்டிருந்த பெயர் டார்லிங் என்றிருந்தது.அவளது கணவனின் நம்பராக இருக்க வேண்டும். அம்மாவிடமிருந்து நிலைமை என்னவென்று தெரிந்தபின் கல்பனாவின்கணவனையும் பிரின்சியையும்  கூப்பிட்டுச் சொல்லி விடலாமென்று நினைத்தாள். பத்து நிமிஷம் கழிந்திருக்கும். அப்போது அவள் அம்மா வருவதைப் பார்த்தாள். அவளருகே வந்தவள் “ஜானு, கவலைப்பட ஒண்ணும் இல்லே. படியிலே மோதி உருண்டு விழுந்ததிலே நெத்திலேயும் அதுக்கு மேலே தலை ஆரம்பத்திலேயும் காயம் பட்டு அங்கேர்ந்துதான் ரத்தம் வந்திருக்கு. அதனாலே மைல்டா  அனஸ்தேஷியா கொடுத்து தையல் போட்ருக்கா. அவ எழுந்திருக்கக் கொஞ்சம் டைம் ஆகும். நீயும் என் கூட சாப்பிட வா. எவ்வளவு வருஷமாதான் நான் மாத்திரம் ஒண்டியா எங்க கான்டீன் சாப்பாடை சாப்பிட்டுண்டு இருக்கறது?” என்று சிரித்தாள்.

“அம்மா. ஒரு நிமிஷம். போன் பண்ணி முடிச்சுடறேன்” என்று பிரின்சியை முதலில் கூப்பிட்டாள். அம்மா சொன்னதை அவளிடம் சொல்லி விட்டுக் கவலைப்பட ஒன்றுமில்லை என்றாள்.

“இப்போவே டிஸ்சார்ஜ் பண்ணறாங்களா ஜானகி?” என்று பிரின்சி கேட்டாள் .

“இல்லே மேடம். இன்னும் நேரமாகும். நான் கூட இருந்து கல்பனாவை அவங்க வீட்டுலே விட்டுட்டுப் போறேன்” என்றாள் ஜானகி.

“நான் காலேஜ் வேனை அனுப்புறேன்” என்றாள் பிரின்சி.

“இல்லை மேடம், வேண்டாம். எப்போ இங்கேர்ந்து டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு தெரியலே. உங்களுக்குத்தான் தெரியுமே இங்கே என் அம்மா வேலையிலே இருக்காங்கன்னு. அதனாலே நாங்க மேனேஜ் பண்ணிக்கிறோம்” என்றாள் ஜானகி.

பிரின்சி விடாமல் அவளுக்கு மூன்று நான்கு நிமிஷம் நன்றி தெரிவித்து விட்டுத்தான் போனைக் கீழே வைத்தாள்.

ஜானகி  கல்பனாவின் கணவனுக்குப் போன் செய்தாள் . அவன் எடுத்ததும் எங்கேயாவது “டார்லிங்” என்று கூப்பிட ஆரம்பித்து விட்டால்  என்ற பயத்தில் மறுமுனையில் போன் எடுக்கப்பட்டவுடனே ஜானகி “”சார், மிஸ்டர் மாணிக்கவாசகமா?” என்று கேட்டாள்.

மறுமுனையிலிருந்து பதில் வர சில வினாடிகள் பிடித்தன. பிறகு “ஆமா நான் மாணிக்கவாசகம்தான் பேசறேன். இது என் ஒய்ஃப் நம்பர்ல? யார்பேசுறது?” என்று குரல் கேட்டது.

“சார், என் பேர் ஜானகி. நான் கல்பனாவோட வேலை பாக்கறேன். நீங்க கவலைப்பட வேணாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே  கல்பனாவுக்குக் காலேஜிலே ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகி விட்டது.படியிலேந்து இறங்கறப்போ ஸ்லிப்பாயி  நெத்திகிட்டே கொஞ்சம் காயம்  நான் அவங்களை இங்கே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு வந்தேன்.”

” ஐயோ, நான் இப்போ ஊர்லே இல்லையே!  அவளோட  பேசமுடியுமா?”

“சார், நான் வெளியே இருந்து பேசறேன். ஓ பி டி லேந்து என்னைக் கூப்பிடுவாங்க. அப்ப  உங்க கிட்டே போனைக் கொடுக்கிறேன். எனக்கு உங்க வீட்டு அட்ரெஸ்ஸை மெஸேஜ் பண்ணுங்க. டிஸ்சார்ஜ் ஆனதும் நான் நேரே வீட்டிலே கொண்டு போய் விட்டுடறேன். நீங்க இப்போ எங்கே இருக்கிங்க?” என்று கேட்டாள் ஜானகி.

“நான் வேலை விஷயமா டூர்லே வந்தேன். ஹூப்ளிலே இருக்கேன். இப்ப மணி என்ன ஒண்ணா? கார்லேதான் இங்கே வந்தேன். இப்பக் கிளம்பினாக் கூட அங்க வந்து சேர்றதுக்கு ஏழு ஏழரை ஆயிரும்…” என்று அவன் தயங்கிப் பேசுவது அவளுக்குத் தெரிந்தது.

“நீங்க கிளம்பி வாங்க. நீங்க வர்ற வரைக்கும் நான் கல்பனாவோட உங்க வீட்டிலே வெயிட் பண்ணறேன்.”

“ஓ மேடம்! தேங்க்ஸ் எ லாட். ஸ்கூலுக்குப் போயிருக்கற ரெண்டு பசங்களும் நாலு மணிக்கு வந்துடுவாங்க.'”

“டோன்ட் ஒரி சார். நான் அதையெல்லாம் பாத்துக்கறேன்” என்று ஜானகி சிரித்தாள்.

“ஏதோ கடவுள் அனுப்பிச்ச மாதிரி வந்து உதவி செய்யறீங்க. எனக்கு வேறே என்ன சொல்லறதுன்னு தெரியலே.”

“பெரிய வார்த்தையெல்லாம் எதுக்கு? மனுஷாளுக்கு மனுஷா உதவி செய்யறது எல்லா இடத்திலேயும் நடக்கிறதுதானே. நீங்க பதட்டப்படாம நிதானமா வாங்க. நீங்க வந்ததுக்கு அப்புறம் நான் என் வீட்டுக்குக் கிளம்பிப் போறேன். சரியா?” என்று போனை அணைத்தாள்.

ஜானகியும் அம்மாவும் சாப்பிட்டு விட்டுத் திரும்பியதும் ஓ பி டிக்கு ஜானகியும் அவள் அம்மாவுடன் சென்றாள் . கல்பனா விழித்திருந்தபடி படுக்கையில் படுத்திருந்தாள். ஜானகியைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒளி தோன்றியது. ஜானகி அவளருகே சென்று கையைப் பிடித்துக் கொண்டு “எப்படி இருக்கீங்க? வலி ஜாஸ்தியிருக்கா?” என்று கேட்டாள். தன் அம்மாவை அவளுக்கு அறிமுகப்படுத்தினாள்.

“விட்டு விட்டு வலிக்குது” என்றாள் கல்பனா. அடிபட்ட அதிர்ச்சியில் அவள் முகம் வாடியிருந்தது.

“கவலைப்படறதுக்கு ஒண்ணும் இல்லேம்மா!” என்று ஜானகியின் அம்மா பரிவுடன் கல்பனாவைத் தடவிக் கொடுத்தாள். “இன்னிக்கி ராத்திரி வரைக்கும் வலி இருக்கத்தான் செய்யும்.  மருந்து எழுதிக் கொடுக்கிறோம். ஒரு ரெண்டு நாள் வேலை கீலைன்னு அலட்டிக்காம நீ கம்ப்ளீட் ரெஸ்டுலே இருந்தா சரியாயிடும்.”

அவள் அவர்கள் இருவரையும்பார்த்து ” ரொம்ப நன்றிம்மா, ரொம்ப நன்றி ஜானகி” என்றாள்.

“இன்னிக்கு ராத்திரி வரைக்கும் நான் உங்களோட இருப்பேன்கல்பனா. நான் செய்ய வேண்டிய ஒவ்வொரு காரியத்துக்கும் நீங்க நன்றின்னு சொல்ல ஆரமிச்சா ரொம்ப டயர்டாயிருவீங்க. அதனால நான் கிளம்பிப் போறப்போ ஒரு நன்றியைக் குடுங்க. வாங்கிண்டுபோறேன்” என்று சிரித்தாள் ஜானகி.

ஜானகி அவளிடம் அவள் கணவனோடு பேசியதையும் அவன் உடனே காரில் புறப்பட்டு பெங்களூர் வருவதையும் பற்றிச் சொன்னாள். அடுத்த அரை மணியில் கல்பனாவை டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஜானகியின் அம்மாவுக்குத் தெரிந்த கேஸ் என்பதால் ஆஸ்பத்திரிக்குத் தர வேண்டிய பணத்தை இரண்டு மூன்று நாள்களுக்குள் கொண்டு வந்து கட்டினால் போதும் என்று ஆஸ்பத்திரியில் சொன்னார்கள்.

ஜானகி ஊபருக்குப் போன் செய்து ஒரு காரை வரவழைத்து அவளும் கல்பனாவும் கல்பனாவின் வீட்டை அடையும் போது இரண்டரை ஆகி விட்டது. குமாரா பார்க்கில் இருந்த ஒரு பலமாடிக் கட்டிடத்தில் கல்பனாவின் வீடு இருந்தது. வாசலில் செழித்திருந்த செடிகளும் அவற்றின் மீது மலர்ந்து ஆடிக் கொண்டிருந்த பூக்களும் தேக்கு மர வாசற் கதவுகளின் பளபளப்பும் கண்ணை உறுத்தாத வண்ணத்தில் தீட்டப்பட்டிருந்த சுவர்களும் கட்டிடத்தின் உள்ளே நடமாடிய செல்வத்தைச் சுட்டிக் காட்டுவனவாக இருந்தன. கல்பனாவின் வீடு மூன்று படுக்கையறைகள் கொண்ட பெரிய ஃபிளாட்.  நீள அகல வீச்சும், அலங்காரப்  பொருள்களின் அணிவகுப்புமாக அந்த வீட்டில் பணம் மண்டி போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ஜானகி தரையைப் பார்த்த போது தூசி கூடப் பளபளப்பாக மின்னியது போலிருந்தது.

ஜானகி கல்பனாவை அவளது படுக்கையறையில் கொண்டு போய் விட்டாள்.

“ஜானகி, உங்களுக்கு நான் ரொம்பத் தொந்திரவு கொடுத்துட்டேன்” என்றாள் கல்பனா.

“இப்படி நீங்கள் சொல்றதுதான் தொந்திரவு” என்றாள் ஜானகி. கல்பனா ஜானகியை ஆச்சரியத்துடன் பார்த்தாள்

“நான் என் ஹஸ்பண்டோட பேசிடறேன். ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாரு” என்று கல்பனா போனை எடுத்தாள்.

“பேசிட்டு நல்லாப் படுத்துத் தூங்குங்க. உங்க குழந்தைகள் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அவங்களை நான் பாத்துக்கிறேன். அவங்க குடிக்கிறதுக்கு போர்ன்விட்டாவா, டீயா இல்லே வேறே எதானுமா?” என்று கேட்டாள்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்?ஒரு நா அவங்க பால் குடிக்காட்டா ஒண்ணும் குறைஞ்சு போயிடாது” என்றாள் கல்பனா.

“என் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிட்டீங்க” என்று சிரித்தாள் ஜானகி.

“ஜானகி, உங்களைப் பேச்சுலே ஜெயிக்கறது ரொம்பக் கஷ்டம்.”

ஜானகி பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியே சென்றாள்.

நாலரை மணிக்குக் குழந்தைகள் வந்து விட்டன. கதவைத் திறந்த புது முகத்தைப் பார்த்து இரண்டும் திகைத்து நின்றன. ஒன்றுக்கு ஐந்து வயது இருக்கலாம் இன்னொன்றுக்கு ஏழு அல்லது எட்டு. ஜானகி அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அன்று கல்பனாவுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றியும் இப்போது அவள் படுக்கையறையில் ஒய்வு எடுத்துக் கொண்டிருப்பது பற்றியும் சொன்னாள் . இரண்டும் சத்தமில்லாமல் நடந்து கல்பனாவின் அறைக்குச் சென்று பார்த்து விட்டுத் திரும்பின.

அவர்கள் இருவருக்கும் தட்டுகளில் சோன்பப்டியும் சமோசாவும் வைத்துக் கொடுத்தாள். கன்னங்களில் குழி விழ  இரண்டும் சிரித்து வாங்கிக் கொண்டன. “ஆன்ட்டி , இது யார் கொண்டு வந்தாங்க?” என்று பெரியவள் கேட்டாள்.

“ஸோமட்டோ!” என்று சிரித்தாள் ஜானகி. “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல்லேர்ந்து வரப்போ உங்களுக்கு பசிக்கும்னுதான்.”

“தாங்க்ஸ் ஆன்ட்டி.!” ஜானகி அவர்கள் இருவரும் குடிக்க பால் நிரம்பிய தம்ளர்களை அவர்களிடம் கொடுத்தாள்.

“ராத்திரி நீங்க என்ன சாப்பிடுவீங்க? சாப்பாடா, இல்லே டிபனா?” என்று கேட்டாள் ஜானகி.

“”டிபன்தான். ஆனா அம்மாக்கு உடம்பு சரியில்லையே!”

“அதுக்காக நீங்க பட்டினி கிடப்பீங்களா?” என்று கேட்டாள் ஜானகி.

“இல்லே, அப்பா ஓட்டல்லேர்ந்து வாங்கிட்டு வருவாங்க” என்றாள் பெரியவள்.

“சரி, இன்னிக்கி ஒட்டல்லேர்ந்து வேணாம். உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டிபன் எது ?”

இருவரும் ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் ஒரே குரலில் “பூரி” என்று சொல்லிச் சிரித்தார்கள்.

“சரி, இன்னிக்கிப் பூரி பண்ணித் தரேன். நீங்க ரெண்டு பேரும் வெளுத்துக் கட்டுங்க” என்றாள் ஜானகி.

அப்போது கல்பனாவின் படுக்கையறையிலிருந்து அவள் அழைக்கும் சப்தம் கேட்டது. ஜானகியுடன் குழந்தைகளும் ஓடி வந்தார்கள்.

“எப்படி இருக்கு இப்போ?” என்று கேட்டாள் ஜானகி.

“ரெண்டு மணி நேரம் அடிச்சுப் போட்டாப்பிலே தூங்கினது நல்லதாப் போச்சு. வலியும் இப்ப அவ்வளவா இல்லே.”

“இன்னும் ஒரு நா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாயிடும். கனகதாசா ஜெயந்தின்னு நாளைக்குக் காலேஜும் லீவுதானே” என்றாள் ஜானகி

சிறியவள் கல்பனாவிடம் “அம்மா எங்களுக்கு ஆன்ட்டி ஸ்வீட்டும் சமோசாவும் கொடுத்தாங்க!” என்றாள் சந்தோஷம் கொப்புளிக்க.

கல்பனா “எதுக்கு ஜானகி இதெல்லாம்?” என்று கோபித்துக் கொள்கிற மாதிரி சொன்னாள்.

“சாப்பிடறதுக்குத்தான்” என்றாள் ஜானகி. குழந்தைகள் இருவரும் அடக்க முடியாமல் சிரித்தார்கள். கல்பனாவின் முகத்திலும் சிரிப்புண்டாயிற்று.

“அம்மா, இன்னிக்கி நைட் டிபன் பூரி” என்றாள் பெரியவள்.

“என்னது?”

“ஆமா, ஆன்ட்டி இன்னிக்கிப் பண்ணித் தரேன்னு சொன்னாங்க” என்று கபடமற்றுச் சொல்லிற்று குழந்தை.

கல்பனா நெகிழ்ச்சியுடன் ஜானகியைப் பார்த்தாள்.

“எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லே கல்பனா. உங்க வீட்டுக்காரர் வர்ற வரைக்கும் நான் இங்க இருந்து உங்களைப் பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்கேன். அவர் வரதுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரம் ஆகுமில்லையா? நான் சும்மா உக்காந்திருக்கிறதுக்குப் பதிலா வேலை செய்யறேன். குழந்தைகளும் சாப்பிடறதுக்குக் கஷ்டப்பட வேண்டாம். இல்லையா?” என்றாள் ஜானகி.

“சரி, கிச்சன்லே சாமான்லாம் எங்க இருக்குன்னு நான் காமிக்கிறேன்” என்று எழ முயன்றாள் கல்பனா.

“நீங்க ஒண்ணும் எழுந்திருக்க வேண்டாம். நான் என்ன கல்யாணத்துக்கா சமைக்கப் போறேன்? நானே பாத்து எடுத்துக்கறேன்” என்று குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

“ஜானகி, அப்ப நீங்களும் இங்கியே சாப்பிட்டுருங்க” என்று கல்பனாவின் குரல் அவளை விரட்டிக் கொண்டு வந்தது, குழந்தைகள் ஹோம் ஒர்க் என்று ஹாலில் உட்கார்ந்து கொண்டன.

ஜானகி சமையல் வேலையை முடித்து கால் மணி ஆகியிருக்கும். மாணிக்கவாசகம் வீட்டுக்குள் வந்து குழந்தைகளிடம் விசாரித்து நேராக அவளைப் பார்க்க அவன் வந்து விட்டான்.

“என்ன மேடம் நீங்க கல்பனாவுக்கு இன்னிக்கு முழுக்க செஞ்ச உதவியெல்லாம் போறாதுன்னு இப்பிடி உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக்கிட்டு? நாம வெளிலே ஆர்டர் பண்ணியிருக்கலாம்!” என்று பதறினான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. பாருங்க, நீங்க வரதுக்குள்ளே சமையல் வேலையெல்லாம் முடிஞ்சிருச்சு. குழந்தைகளுக்கும் பசிக்கும் போது சாப்பிட டிபன் ரெடி ஆயிருச்சு. எனக்கு என்ன இதிலே பெரிய கஷ்டம்? நீங்க போய்க் கல்பனாவைப் பாருங்க. நான் கிளம்பறேன்” என்றாள்.

“அதெல்லாம் இல்லை. நீங்க இங்கே சாப்பிட்டு விட்டுதான் போகணும். நீங்களும் வாங்க. கல்பனாவைப் பார்க்கலாம்” என்று அவன் கல்பனா இருக்கும் அறையை நோக்கி நடந்தான். அவளும் உடன் சென்றாள்.

ஜானகி கல்பனாவிடம் சிறிது நேரம் பேசி விட்டு ” சரி.நான் கிளம்பட்டா? நாளைக்கு சாயந்திரம் வந்து பாக்கறேன். கம்ளீட் ரெஸ்ட்லே இருங்க” என்றாள்.

“ஓகே. மறக்காம வந்துடுங்க. நாளைக்கு டின்னர் உங்களுக்குஇங்கதான்” என்று விடை கொடுத்தாள்.

ஜானகி சிரித்தபடி நகராமல் அங்கேயே நின்றாள். கல்பனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் ஆச்சரியத்துடன் ஜானகியைப் பார்த்தாள்.

“தாங்ஸ்ஸை எடுத்துக் கொடுங்க. மறந்துட்டீங்களா?” என்று சிரிக்காமல் சொன்னாள்.

“அடேயப்பா!” என்று கல்பனா ஜானகியின் கையைப் பிடித்துத் தன் கரங்களுக்குள் இறுக்கிக் கொண்டாள்.

மாணிக்கவாசகத்தின் டிரைவர் ஜானகியை அவள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்றான்.

ஜானகி மறுதினம் மாலையில் கல்பனாவைப் பார்க்கச் சென்றாள். அவள் வலி குறைந்து தெளிவாகக் காணப்பட்டாள். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அவள் கணவன் கப்பன் பார்க்குக்குச் சென்றிருப்பதாகக் கூறினாள்.

“காலேல டீச்சர்ஸ்லாம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துகிட்டே இருந்தாங்க. நீங்க நேத்திக்கிப் பண்ணின உதவியெல்லாம் நானும் ஏழெட்டு தடவை சொல்லியிருப்பேன். நீங்க என்னை ஆஸ்பத்திரிக்கு வேகமா எடுத்துகிட்டுப் போனது, அங்கே  உங்கம்மா ஆஸ்பத்திரியில் என்னைப் பாத்துக்கிட்டது, நீங்க என் ஹஸ்பண்ட் கிட்டே பேசி கவலைப்பட வேண்டாம்னு ஆறுதலா சொன்னது, அவரு ஊர்லேந்து வர்ற வரைக்கும் எங்க கூட இருந்தது, குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ், நைட் டின்னர்னு எல்லாத்தையும் இழுத்துப்  போட்டுக்கிட்டு செஞ்சதுன்னு நான் சொல்லச் சொல்ல அவங்களுக்கு அப்பிடி ஒரு ஆச்சரியம். ஏன் கேக்குறீங்க? அவங்க மூஞ்சியை எல்லாம் பாக்கணுமே!” என்று சிரித்தாள் கல்பனா. “கேட்டு எல்லோரும் மாஞ்சு போயிட்டாங்க. உங்களோட பேசி ஜெயிக்க என்னால் முடியலேன்னு நான் சொன்னப்போ எலிசபெத் ‘நம்பவே முடியலையே? நிஜமாவா சொல்றீங்க, நம்ப காத்தா அப்பிடிப்  பேசினா?’ன்னு…” சட்டென்று கல்பனா பேசுவதை நிறுத்தி விட்டாள். அவள் முகத்தில் குழப்பமும் கலவரமும் அசட்டுத்தனமும் பரவியதை ஜானகி பார்த்தாள்

“என்னது காத்தா?”

“ஐ’ம் ஸோ ஸாரி. ஸோ ஸாரி” என்று கல்பனா ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“எதுக்கு?”

“என்னமோ உளறிட்டேன்” என்றாள் கல்பனா. அவள் முகத்தில் இன்னும் கலவரம் இருந்தது. “லெட்ஸ் லீவ் இட், ப்ளீஸ்.”

ஜானகி மேலே எதுவும் பேசாமல் கல்பனாவின் முகத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“சரி சொல்லிடறேன். நீங்க இவ்வளவு ஸ்லிம்மா இருக்கறதுனால காத்து கொஞ்சம் பலமா வீசினா அது உங்களைத் தூக்கிட்டுப் போயிடும்னு….”

சில வினாடிகள் மௌனமாக இருந்து விட்டுப் பலமாகச் சிரிக்கத் தொடங்கினாள் ஜானகி.

கல்பனா அவளை உற்றுப் பார்த்தாள்.

“காத்து! நைஸ் ஜோக் !!’ என்று மறுபடியும் சிரித்தாள். கல்பனாவைப் பார்த்து “நான் ஸ்லிம்மா? நோஞ்சான். ஓல்லிப்பிச்சான்! காத்து! கல்பனா, ஐ லவ் யூ ஆல்.”

ஜானகி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே இருந்ததைப் பார்த்துக் கல்பனாவின் முகத்திலும் புன்னகை தோன்றியது.

 

புதன் கிழமையன்று காலையில் அவள் வழக்கம் போல எட்டு ஐம்பது பஸ்ஸைப் பிடித்து கல்லூரி வாசலுக்கு எதிரே இருந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது வாட்ச்சைப் பார்த்தாள். ஒன்பது பத்து. ஐந்து நிமிட நடையில் அவள் கல்லூரி அலுவலகத்தை அடைந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டாள். பிறகு நேராக ஆசிரியைகளுக்கான

அறைக்குச் சென்று காலியாய் இருந்த ஆசனமொன்றில் உட்கார்ந்து கொண்டாள். அவளுக்கு எதிர்ப்புறத்தில் அறைக்குள் நுழையும் வாசல் இருந்தது. அவள் கழுத்தைத் திருப்பிப் பின்புறம் பார்த்தாள். ஜன்னல் வழியே சுமார் நூறு கஜ தூரத்துக்கு மரங்களும் செடிகளும் நிரம்பிய கல்லூரியின் தோட்டம் தெரிந்தது.

அப்போது அறைக்குள் யாரோ நுழையும் சத்தம் கேட்டது. வத்சலா கோசாம்பி. உள்ளே நுழைந்த அவள் ஒரு கணம் திடுக்கிட்ட மாதிரி இருந்தது. அவளுடைய சாப்பாட்டுப் பையை ஆசிரியைகளுக்காக ஒதுக்கியிருந்த பீரோவில் வைத்துக் கொண்டே அவள் “குட்  மார்னிங் ஜானகி” என்றாள்.

“குட்மார்னிங் காத்துன்னே சொல்லுங்க. பரவாயில்லே” என்றாள் ஜானகி.

வத்சலா திரும்பி ஜானகியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள். அப்போது ஜானகிக்குத் தனக்குப் பின்னே ஜன்னல் வழியாக நூறு கஜ தூரத்துக்குக் கல்லூரியின் தோட்டம் இருப்பது நினைவுக்கு வந்தது..

 

இன்னொரு பக்கம்

ஸிந்துஜா

கிழக்கு மேற்காகத் திருப்பரங்குன்றம் சாலை ஓடிற்று. சாலையின் வடக்கில் இருந்த பஸ் ஸ்டாப்புக்குப் பின்புறம் வரிசையாக நான்கு வீடுகள் ஒரே காம்பவுண்டுக்குள்  சாலையைப் பார்த்தபடி நின்றன. இடது பக்கம் இரண்டு, வலது பக்கம் இரண்டு என்று பிரித்து நடுவில் உயர்ந்து நின்ற இரும்புக் கிராதியிட்ட கேட்டின் வழியே ஒரு பாதை சென்றது. பாதை வழியே உள்ளே சென்றால் உள்ளே இடது பக்கம் முன்பு கோடவுன் என்று கட்டப்பட்டு அப்புறம் வீடாய் மாறி விட்ட கட்டிடம். வலது பக்கம் பெரிய கிணறு. வீட்டுக்குள்ளேயே கக்கூஸ் கட்டிக் கொள்ளும் நாகரீகத்தை ஒத்துக் கொள்ளாத காம்பவுண்டின் சொந்தக்காரர்  கிணற்றைத் தாண்டி  மூன்று கழிவறைகள் கட்டியிருந்தார். தவிர பெண்கள் வீட்டின் முற்றத்திலேயே குளியல் வேலைகளை முடித்துக் கொள்பவர்களாக இருந்ததால், குடியிருக்கும் வீட்டு ஆண்கள் உபயோகிக்க என்று இரண்டு குளியலறைகளும் அங்கே இருந்தன. கோடவுனுக்கு என்று கட்டப்பட்டு யாரும் வராததால் இரண்டு மூன்று தடுப்புச் சுவர்களை எழுப்பி ஒரு வீடாக அதை வீட்டுச் சொந்தக்காரர் மாற்றியும் அது முறையான வீடாக அமையாதிருந்த

தால் குடி வருவதற்கும் ஆள் கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. கடைசியாக மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் தர்மலிங்கம் குடும்பம் அந்தப் பின் வீட்டுக்குக் குடி வந்தது..

தர்மலிங்கம் வீட்டில் அவர், அவரது மனைவி, பிள்ளை நாராயணன் என்று மொத்தம் மூன்று பேர். அந்த வீட்டில் எப்போதும் ஒருவித மயான அமைதி நிலவியது. வீட்டில் உள்ளவர்கள் பேசும் குரல்களைக் கூட யாரும் கேட்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்களா என்று கூட மற்றவர்களுக்கு ஐயம் இருந்தது.

காம்பவுண்டில் முன்புறம் சாலையைப் பார்த்து நின்ற நான்கு வீடுகளிலும் நடுத்தரக் குடும்பத்தினர்தாம் வசித்து வந்தனர். முதல் வீட்டில் பழனிச்சாமி வாத்தியார் என்று வீணை வித்துவான் குடி இருந்தார். சிபாரிசு, சபா போன்ற புழுக்களை அவர் மதிக்காமல் இருந்ததால் கேடு கெட்ட உலகம் அவர் பக்கம் திரும்பாமல் இருந்தது. ட்யூஷன்களிலும் மீனாக்ஷி அம்மன் கோயில் நவராத்திரி போன்ற விசேஷக்  கச்சேரிகளிலும், அவ்வப்போது கிடைத்த கல்யாண வீட்டு வாசிப்புகளிலும் ஜீவனம் நடத்த முடிந்தது. அவர்களுக்கு விஜயா என்று  பெண். அவள் பள்ளி இறுதி வகுப்பை முடித்து விட்டு நான்கு வருஷங்களாகக் கலியாணத்துக்குக் காத்துக் கொண்டிருந்தாள்.

இரண்டாம் வீட்டில் இந்தியன் வங்கியில் வேலை பார்த்த வரதராஜுவும் அவர் மனைவி லட்சுமியும்  இருந்தார்கள்.

இந்தக் கதைக்கு மற்ற இரண்டு குடித்தனக்காரர்களைப் பற்றிய அறிமுகம் தேவை இல்லை.

வரதராஜுதான் எல்லோரிடமிருந்தும் மாத வாடகையை வசூலித்து அவர் அலுவலகம் போகும் வழியில் இருந்த வீட்டுக்காரரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.  இதற்காக மாதம் ஒரு முறை அந்தந்த வீட்டுக்

காரர்கள் வரதராஜுவிடம் வந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொடுத்து விட்டுச் செல்லுவார்கள். இந்த வசூல் விவகாரத்தின் பொருட்டு தர்மலிங்கத்துக்கு வரதராஜுவுடன் பேசும் பழக்கம் ஏற்பட்டது. முதல் மாத வாடகை கொடுக்க வந்த போது வரதராஜு அவரிடம் “இதுக்கு முன்னாலே எங்கே குடியிருந்தீங்க?” என்று கேட்டார்.

அவர் “கல்கத்தாலே” என்றார். “ரிட்டயர்மென்டுக்கு அப்புறம் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிடலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதுதான் சொந்த ஊரு. ஆனா நாப்பது வருஷங் கழிச்சும் பரமகல்யாணியைத் தினமும் சேவிக்கிற பாக்கியம் கிடைக்கலே” என்று சிரித்தார்.

வரதராஜு ‘ஏன், என்ன ஆச்சு?’ என்று பார்வையாலேயே கேட்டார்.

“பையனுக்கு இங்கே காலேஜில் சீட்டு கிடைச்சிது. ஆஸ்டல்லே விடலாம்னுதான் இருந்தேன். ஆனா என் சம்சாரம் ஒத்துக்கலே. இங்க ஒரு மூணு வருஷம் மீனாச்சியைப் பாத்துகிட்டு சிவனேன்னு கிடடான்னு நமக்கு எழுதியிருக்கு.”

“நாப்பது வருஷமா? வேலையெல்லாம்?”

“ஒரு வெள்ளைக்காரன் கம்பனியிலே. சேந்தப்போ பத்து மணி ஆபீசுக்கு எட்டு மணிக்கே போயி கூட்டிப் பெருக்கணும்; டேபிள் சேர் எல்லாத்தையும் துடைக்கணும். பாத்ரூமைக் கழுவி சுத்தம் பண்ணனும். ஆபீஸ்லே வேலை பாக்கறவங்களுக்கு சமோசாவும் டீயும் அவங்க கேக்கிறப்போ வாங்கிக் கொடுக்கணும். ரூமுலேதான் தங்கி இருந்தேன். அங்கே திரும்பிப் போக ராத்திரி ஆயிரும்.  கடைசி பத்து வருஷத்திலே வீட்டுக்கும் ஆபீசுக்கும் சேத்து யூஸ் பண்ணக் கார் கொடுத்தாங்க. பதினோரு மணிக்கு ஆபீஸ். நாலு மணிக்கு வீடு. கம்பனி கஸ்டமர்களுக்கும் சப்ளையர்களுக்கும் தீபாவளிக்கு ரசகுல்லாவும் துர்கா பூஜைக்கு சோன் பப்டியும் பாக்கெட் பாக்கெட்டா அட்டன்டர்களை விட்டு அனுப்புவேன். மாசத்திலே பாதி நாள் இன்கம்டாக்ஸ், சேல்ஸுடாக்ஸ் ஆபீசர்களுக்கு ஸ்டார் ஹோட்டல்லே பார்ட்டி கொடுக்கிற நெலைமைக்கு ஏத்தி விட்டுட்டான் வெள்ளைக்கார பாஸ்” என்று புன்னகை செய்தார்.

பிறகு “நீங்க இந்த ஊர்தானா?” என்று தர்மலிங்கம் வரதராஜுவைக் கேட்டார்.

“எனக்குப் புட்டபர்த்தி பூர்வீகம். இங்கே ஒரு மில்லுலே வேலை கிடைச்சுதுன்னு வந்தேன். அப்புறம் பேங்கிலே வேலை கிடைச்சு இங்கேயே செட்டில் ஆயிட்டேன்” என்றார் வரதராஜு. “நானும் மீனாச்சி கிட்டே வந்து முப்பது வருஷம் ஆயிடுச்சு.”

“புட்டபர்த்தின்னா சத்திய சாயி பாபா?”

“ஆமா.”

“நிஜமாவே விபூதி எல்லாம் மேலேந்து கொட்டுமா?”

“எல்லாம் நம்பிக்கைதான். கடவுள் தலைக் கொண்டையிலே கங்கையை முடிஞ்சு வச்சார்னும், கெட்டவனுக்குப் பத்து தலை இருந்ததுன்னும், செங்கடலை  வத்த வெச்சு மத்தவங்க நடக்கறதுக்கு வழி பண்ணிக் கொடுத்தார்னும் சொல்லிட்டு இருக்கறதை எப்பிடி நம்புறோம்? அது மாதிரிதான்” என்றார் வரதராஜு.

“நீங்க கல்கத்தாலே இருந்தது பத்திப் பேசிட்டிருந்தீங்க. கல்கத்தாலே நீங்க எங்க குடியிருந்தீங்க?” என்று வரதராஜு யதார்த்தமாகக் கேட்டார்.

தர்மலிங்கம் கொஞ்சம் யோசித்தவர் போல மௌனமாக இருந்தார். பிறகு “அலிப்பூர்லே” என்றார். “நீங்க கல்கத்தா வந்திருக்கீங்களா?”

“நாங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒரு பத்து நாள் என் மச்சான் வீட்டுலே போய்த் தங்கினோம். அவன் அங்கே ரயில்வேலே இருக்கான்” என்றார் வரதராஜு

“அலிப்பூர்லேயா?”

“இல்லே. ஜே  சி போஸ் ரோடுக்குப் பக்கத்திலே. அங்கேர்ந்து அலிப்பூர் பக்கந்தான்னு  என் மச்சான்  சொல்லுவான் அங்கே அவனோட மாமனார் வீடு இருந்திச்சின்னு அடிக்கடி போவான். நாங்க கல்கத்தா போனப்போ எங்களையும் ஒரு தடவை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப்  போயிக் காமிச்சான் ” என்றார் வரதராஜு.

” ஓ சம்பந்திங்க வீடா? அவங்க எங்கே இருந்தாங்க அலிப்பூர்லே? ” என்று தர்மலிங்கம் கேட்டார்.

வரதராஜு கொஞ்சம் யோசித்தார். பிறகு “எனக்கு ரோடு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது” என்றார். “ஆனா நாங்க போனப்போ சம்பந்தி வீடு பக்கத்திலே ஒரு ஆஸ்பத்திரி இருந்திச்சு. பெரிய ஆஸ்பத்திரி.”

தர்மலிங்கம் “ஆஸ்பத்திரியா? அப்போ கமாண்ட் ஆஸ்பத்திரியாதான் இருக்கும்” என்றார்.

வரதராஜு “ஆமா. அதேதான்” என்றார்.

“சரி, நான் கிளம்பறேன்” என்று எழுந்தார் தர்மலிங்கம்.

அவர் கூடவே வாசலுக்கு வந்த வரதராஜு “அப்ப எங்க இருந்தீங்க?” என்று கேட்டார்.

தர்மராஜு திடுக்கிட்டு “என்ன? என்ன?” என்றார்,

“இல்லே, நீங்க அலிப்பூர்லே எங்கே இருந்தீங்கன்னு கேட்டேன்” என்றார் வரதராஜு. .

“ஓ, அதுவா?” என்றார் தர்மலிங்கம். “ஆஸ்பத்திரிக்குக் கொஞ்சம் தள்ளி.”

“ஒரு வேளை நீங்க என் தம்பியைக் கூடப் பாத்திருப்பீங்க. அவனுங் கூட உங்களைப் பாத்திருப்பான்” என்றார் வரதராஜு.

தர்மலிங்கம் “அப்ப நான் வரட்டுமா?” என்று கேட்டபடி வெளியே சென்றார்.

அதற்குப் பின் அடுத்த மாதம்  வாடகை கொடுக்க வந்தார் தர்மலிங்கம், அவர் வரும் போது மாலை நாலரை இருக்கும். வரதராஜு காப்பி குடித்துக் கொண்டிருந்தார்.

வந்தவரைப் பார்த்து “வாங்க. உக்காருங்க. காப்பி சாப்பிடுங்க” என்று உபசரித்தார் வரதராஜு.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் அப்புறமா வரட்டுமா?” என்று கேட்டார் தர்மலிங்கம் நின்று கொண்டே.

“அட, உக்காருங்க சொல்லுறேன். நம்ம வீட்டுக் காப்பியையும் டேஸ்ட் பண்ணிப் பாருங்க” என்று வரதராஜு சொல்லிக் கொண்டிருக்கும் போதே லட்சுமி ஒரு தட்டில் பட்சணங்களைக் கொண்டு வந்து ஒரு ஸ்டூலில் தர்மலிங்கம் முன்னால் வைத்து “சாப்பிடுங்க” என்றாள்.

அவர் சங்கோஜத்துடன் நாற்காலியில் உட்கார்ந்தார். தட்டிலிருந்து

அல்வாத்துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.

வரதராஜுவிடம் “பிரமாதமா இருக்கே. நாகப்பட்டினம் மிட்டாய்க் கடையிலே வாங்கினதா?” என்று கேட்டார்.

“இல்லே. நம்ம வீட்டிலே செஞ்சதுதான்” என்றார் வரதராஜு சிரித்துக் கொண்டே.

“அடடா, எவ்வளவு பிரமாதமா இருக்கு? நான் ஒரு முட்டாள், நாகப்

பட்டினம் கடை அல்வாதான் உலகத்திலேயே டேஸ்டின்னு நினைச்சு

கிட்டு இருந்தேன்” என்று சிரித்தார். “அப்படியே கரையுதே நாக்கிலே! என்னமா ஒரு ஸ்மெல்லு!” என்று விடாமல் புகழ்ந்தார்.

“கொஞ்சம் மிச்சரையும் எடுத்துக்குங்க. காப்பி குடிக்கறப்போ

நாக்குலே கொஞ்சம் காரம் இருக்கணுமில்லே” என்றார் வரதராஜு.

மிக்சரை எடுத்து வாயில் போட்டு மென்றார். “இப்பவாச்சும் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாப் பேசணும்! இது வீட்டிலே செஞ்சதுதானே!” என்றார்.

உள்ளேயிருந்து சிரித்துக் கொண்டே வந்த லட்சுமி அவரிடம் காப்பிக் கோப்பையைக் கொடுத்தாள்.

“இவ்வளவு காப்பியா?” என்று அவர் பிரமித்தார். “இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டிலே நான் ஒண்ணும் சாப்பிட வேணாம்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க” என்றார். அப்புறம் வாடகைப் பணத்தைக் கொடுத்தார்.

“உங்க மச்சான் இந்தப் பக்கம் வருவாரா?” என்று கேட்டார்.

திடீரென்று அவர் அப்படிக் கேட்டதும் வரதராஜூவுக்கு ஒன்றும் புரியவில்லை. விழித்தார்.

“அதான் கல்கத்தாலே இருக்காருன்னிங்களே!”

“ஓ அவனா? எனக்கு மொத்தம் மூணு மச்சாங்க இருக்காங்க. அதான் நீங்க திடீர்னு கேட்டதும் முழிச்சிட்டேன். அவன் எங்க இப்ப கல்கத்தாலேந்து வர்றது? போன வருஷந்தான் வந்திட்டுப் போனான். குடும்பத்திலே எல்லாரையும் இழுத்துப் பிடிச்சி அழச்சிட்டு வரதுன்னா சும்மாவா இருக்கு?” என்றார் வரதராஜு.

“அது சரி, அது சரி” என்று எழுந்தார் தர்மலிங்கம்,

லட்சுமி உள்ளேயிருந்து வந்து ஒரு பாத்திரத்தை அவரிடம்கொடுத்தாள்.

“கொஞ்சம் அல்வாவும், மிச்சரும் வச்சிருக்கேன். அம்மாவுக்கும் தம்பிக்கும் கொடுங்க.”

வியப்பு அவரை அடித்துத் துவைத்துப் போட்டது போல ஒரு நிமிஷம் தர்மலிங்கம் அப்படியே நின்றார். பிறகு லட்சுமியைப் பார்த்து வணங்கி விட்டு மெதுவாக வெளியே சென்றார்.

வரதராஜு “இந்த மனுஷன் ஒரு மாசம் கழிச்சு வந்து எதுக்கு உன் தம்பியைப் பத்தி கேக்கறாரு? ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியாம முழிச்சிட்டேன்” என்றார் மனைவியிடம்.

“கல்கத்தாலே உங்க மச்சான் இருக்கான்னதும் நீங்க ரொம்ப சொந்தமாயிட்டீங்க போலிருக்கு” என்று சிரித்தாள் அவர் மனைவி,

“அப்பிடியா சொல்லுறே? எனக்கு என்னமோ அப்படித் தோணலியே?” என்றார் வரதராஜு.

“பின்னே எப்பிடித் தோணுதாம்?”

அவர் ஒன்றும் சொல்லாமல் அவளைப்  பார்த்தார்.

“வந்ததுக்கு ஏதாவது பேசிட்டுப் போகணும்னு நினைச்சிருப்பாரு. பாவம்” என்றாள் லட்சுமி.

 

ரு நாள் தாயம்மா லட்சுமியிடம் வந்து “நம்ம அய்யாவோட பிரெண்டு

ஊருக்குப் போயிருக்காரு” என்றாள்.

“யாரு? எந்த ஊருக்கு?” என்று லட்சுமி கேட்டாள்.

“அதான் பின்  வூட்லே இருக்காரே அவருதான்.”

“யாரு கல்கத்தாக்காரரா?”

“ஆமா. அவருதான். அந்த ஊருக்குத்தான் போயிருக்காராம்” என்றாள் தாயம்மா.

லட்சுமிக்கு வியப்புடன் கூடவே சற்றுக் கோபமும் வந்தது. கல்கத்தா போற மனுஷனுக்கு நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லத் தோணலை பாரு என்று நினைத்தாள். தர்மலிங்கம் போவதை அவளிடம் தெரிவித்திருந்தால் தம்பிக்குக் கொஞ்சம் பலகாரங்கள் செய்து கொடுத்திருப்பாள். அடுத்த மாதம் அவன் மனைவிக்குப் பிறந்த நாள் வருகிறது. அதுக்கு ஒரு  புடவை வாங்கிக் கொடுத்தனுப்பி இருக்கலாம்.

மாலையில் வரதராஜு வீட்டுக்கு வந்த போது அவள் தாளமாட்டாமல் அவரிடம் பொருமினாள்.

“போன மாசம் ஒரு நாள் திருச்சிக்கு அவரு மாத்திரம் ஒரு கலியாணத்துக்குப் போயிட்டு வரேன்னு உங்ககிட்டே சொல்லிட்டுப் போனாரில்லே? இப்போ உங்க மச்சான் இருக்கற ஊருக்குப் போகறதைக் கூட சொல்லாமப் போறாரு! ஏதாச்சும் பார்சல் கட்டிக் கொடுத்திருவோமுன்னு பயமா?”

“சரி விடு. அந்த மனுஷனுக்கு என்ன பிரச்சினையோ, நமக்கு என்ன தெரியும்? திடீர்னு போயிருக்காருன்னா ஒண்ணும் குறை சொல்ல முடியாது. ஆனா பிளான் போட்டு ஊருக்குப் போனாருன்னா நாமதான் அவருகிட்டேர்ந்து விலகி நிக்கணும். இல்லியா?” என்றார் அவர்.

ஒரு வாரம் கழித்து தர்மலிங்கம் திரும்பி விட்டார்.அவர் டாக்சியிலிருந்து இறங்கும் போது வாசலில் நின்ற வேப்பமரத்திலிருந்து வரதராஜு வேப்பங்குச்சியை ஒடித்துக் கொண்டிருந்தார். தர்மலிங்கம் கூட ஓர் இளைஞனும் இறங்கினான். உயரமாக, கட்டுடலுடன், செவேலென்று இருந்தான். காரிலிருந்து ஒரு பெட்டியும் இரு தோள் பைகளும் இறக்கப்பட்டன. தர்மலிங்கம் அவரருகே வரும் போது வரதராஜுவிடம் “இது என் பையன் சார். செல்வம்னு பேரு. நாராயணனுக்கு அண்ணன். கல்கத்தாலே வேலை பாக்குறான்” என்றார். அவனைப் பார்த்து “சாருக்கு வணக்கம் சொல்லுடா” என்றார். அவன் கை தூக்கி அவரை வணங்கினான்.

“திடீர்னு கிளம்பிப் போக வேண்டியதா ஆயிடிச்சு. அதான் உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிக்கக் கூட முடியாமப் போயிருச்சு” என்றார் தர்மலிங்கம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. போன வேலை திருப்தியா ஆச்சுன்னா சரிதான்” என்றார் வரதராஜு.  அவர்கள் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நடந்தார்கள். அந்தப் பையன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்துக் கொண்டே போனான்.

அடுத்து வந்த நாள்களில் காம்பவுண்டில் உள்ளவர்களுக்கு செல்வம் பெரும் காட்சிப் பொருளாகி விட்டான். தினமும் மாலையில் அண்ணனும் தம்பியும் வெளியே கிளம்பி விடுவார்கள். செல்வம் அணிந்திருந்த உடைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தன. ஒரு நாள் அணிந்த உடையை அவன் மறுநாள் அணிந்து யாரும் பார்க்கவில்லை. அண்ணனும் தம்பியும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு செல்வார்கள்.

ஒரு நாள் மாலையில் வாத்தியாரின் மனைவியும் லட்சுமியும் பேசிக் கொண்டிருந்த போது விஜயாவின் கலியாணப் பேச்சு வந்தது.

“நானும் படாதபாடு படுறேன். இந்தப் பொண்ணுக்கு ஒரு சம்பந்தம் அமைஞ்சிட்டா தேவலே” என்றாள் வாத்தியாரின் மனைவி.

“நாமதான் கையிலே வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையறமோன்னு தோணுது” என்றாள் லட்சுமி.

“என்ன சொல்றீங்க?”

“ஆமா. இந்தப் பின்வீட்டுலே இருக்காரே தர்மலிங்கம், அவர் பிள்ளையைப் பாத்தீங்கள்ளே? ராஜா மாதிரி இருக்கான். கல்கத்தாலே வேலையிலே இருக்கான்னு சொல்றாங்க. அவனை விஜயாவுக்குப் பாக்கலாமில்லே?”

“ஆனா யாரு எப்பிடிப் போயி கேக்கறது? அவங்க வீட்டுலே இருக்கிறவங்க சண்டிகேஸ்வரரைக் குலதெய்வமா வச்சிருக்கிற மாதிரியில்லே இருக்காங்க? அவங்க யாரும் இங்கே  யாரோடையும் பேசி நான் பாத்ததில்லையே!” என்றாள் வாத்தியாரின் மனைவி. அவள் குரலில் லட்சுமியின் யோசனைக்கு வரவேற்பிருந்தது.

“நா எங்க வீட்டுக்காரரைக் கேக்கச் சொல்லறேன். அந்த வீட்டு மனுஷன் நாலுலே ரெண்டிலே இவங்க கிட்டே வந்து பேசிட்டுப் போவாரு” என்றாள் லட்சுமி. அன்றிரவு அவள் வரதராஜுவிடம் இதைச் சொன்ன போது “இந்த ஐடியா நல்லா இருக்கே. தர்மலிங்கத்துக்கிட்டே கேட்டுப் பாக்கலாம்” என்றார். ஆனால் மறுநாள் அவர் ஆபிசிலிருந்து வரும் போதே இரவு மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்ததும் சூடாகத் தோசை சுட லட்சுமி அடுப்படிக்குச் சென்றாள்.

எட்டரைக்கு எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். அப்போது ‘ஓ’வென்று பெருங் குரலில் யாரோ ஓலமிடுவது கேட்டது. பதறியடித்துக் கொண்டு வரதராஜு வாசலுக்கு ஓடினார். ஆனால் சத்தம் பின் வீட்டிலிருந்து வந்து கொண்டு இருந்தது. அவர் வேகமாகத் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்தார். அவருக்குப் பின்னாலேயே பழனிச்சாமி வாத்தியாரும் ஓடி வந்தார். வரதராஜு “தர்மலிங்கம் சார், தர்மலிங்கம் சார்!” என்று சத்தமாக அழைத்தார். உள்ளேயிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை. உள்ளே இருந்த அழுகுரல் சத்தத்தில், தான் கூப்பிடுவது கேட்கவில்லை போலும் என்று வரதராஜு கதவைத் தட்டினார். வாத்தியாரும் சேர்ந்து கொள்ள இருவரும் பலமாகக் கதவைத் தட்டினர். ஆனால் எந்தவித பதிலும் உள்ளிருந்து வரவில்லை. சில வினாடிகளில் அழுகுரலின் உக்கிரம் அடங்கி நின்றது. ஓரிரு நிமிஷங்கள் இருவரும் காத்திருந்து விட்டுத் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.

மறுநாள் காலையில் தர்மலிங்கம் வீட்டில் பால் கொண்டு வந்து தரும் கறுப்பாயி, லட்சுமியிடம் வந்து அவர்கள் வீட்டில் கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை என்று சொன்னாள். வரதராஜூவுக்கும் லட்சுமிக்கும் வயிற்றில் கலவரம் பிடுங்கித் தின்றாலும் வேறு எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பதை உணர்ந்தார்கள். வரதராஜு மாலை வீடு திரும்பியதும்  லட்சுமி அவரிடம் அன்று மத்தியானம் தர்மலிங்கம் வீட்டை விட்டு வெளியே வந்து தண்டல்காரன்பட்டிப் பக்கம் நடந்து சென்றதாகச் சொன்னாள். ஒரு மாதிரி தள்ளாடிக் கொண்டே அவர் சென்றது பார்க்கப் பரிதாபமாக இருந்தது என்றாள்.

ஆனால் அடுத்த இரண்டு நாள் கழித்து நடந்ததுதான் மிகுந்த அதிர்ச்சியை வரதராஜுவிடம் ஏற்படுத்தி விட்டது. வரதராஜுவின் வீட்டுக்கு அன்று  மாலையில் வந்து வாத்தியார்தான் விஷயத்தைச் சொல்லிக் கோபப்பட்டார். அன்று காலை வாத்தியாரின் வீட்டுக் கொல்லைப்புறம் வழியாக அவர் வீட்டுக்குள் வெகு வேகமாக செல்வம் ஓடி வந்தானாம். வந்தவன்  வாசல் வரை சென்று விட்டு மறுபடியும் அதே வேகத்தில் திரும்ப வந்தானாம். வெள்ளிக்கிழமையென்று அப்போதுதான் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வெளியே வந்த விஜயாவின் மீது மோதி அவள் கீழே விழுந்து விட்டாள். அவன் நின்று அவளைப் பார்த்துச் சிரித்தானாம். அவள் பயந்து போய் “ஐயோ ஐயோ!” என்று கத்தியதைக் கேட்டு விஜயாவின் அம்மா வந்து பார்த்து அவளும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். செல்வம் மறுபடியும் திரும்பி வாசல் வழியே ஓடிப் போய் மெயின் ரோடில் நின்றானாம். அங்கே அப்போது பஸ்களும் லாரிகளும் கார்களும் பறந்து கொண்டிருந்த நேரம். இதற்குள் அவன் வீட்டில் இல்லாததைக் கண்டு பிடித்த நாராயணன் வாசலுக்கு வந்து ரோடில் நிற்பவனைப் பார்த்திருக்கிறான். அவனை நோக்கி ஓடிய இவனைப் பார்த்து அவன் ரோடின் குறுக்காக எதிர் முனைக்கு ஓடினானாம். அப்போது வந்து கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றின் மேல் மோதி செல்வம் ரோடில் விழுந்து விட்டான். கையிலும் காலிலும் நல்ல அடி. தோல் சிராய்ப்பினால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஒரே களேபரமாகிக் கடைசியில் நாராயணன் அவனை ஒரு ரிக் ஷாவில் ஏற்றிப் பக்கத்தில் இருந்த கிளினிக்குக்கு எடுத்துச் சென்றான். அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டதாம். கைகளிலும் கால்களிலும் கட்டுப் போட்டிருந்த அவனை நாராயணன்தான் ரிக் ஷா விலிருந்து தூக்கிச் சென்றானாம்

கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த முகத்துடன் இதையெல்லாம் சொல்லி விட்டு பழனிச்சாமி அவரிடம்  “என்ன சார் இங்கே நடக்குது? வீட்டுக்குள்ளாற ஒருவன் தாந்தோணியா ஓடி வாரான். குளிச்சிட்டு வந்த பொம்பளைப் புள்ளே மேலே இடிச்சு அதைக் கீளே தள்ளி விட்டுருக்கான். போதாதுக்கு அவ கீளே விளுந்து கிடக்கிறதைப் பாத்து சிரிச்சுகிட்டே நின்னானாம். மனுஷத்தன்மையே இல்லாத பயலால்லே இருக்கான்? ‘இப்பிடி ஆயிருச்சே, மன்னிச்சுக்குங்க’ன்னு ஒரு வார்த்தை அந்தப் பயலோட அப்பன் கிட்டேயிருந்து இதுவரைக்கும் வரலே. என்னை என்னா கையாலாகாத பயலுன்னு நினைச்சுகிட்டு இருக்காங்களா? வீச்சரிவா எடுத்தா ஒரே போடுதான். நான் செயிலுக்குப் போனாலும் ஆயிட்டுப் போகுதுன்னு வெட்டிப் போட்டிருவேன்” என்று  கத்தினார்.

“சார். பதட்டப்படாதீங்க. உங்க கோபம் எனக்குப் புரியுது. உங்க நிலைமையிலே இருந்தா நான் கூட இப்படித்தான் இருப்பேன். நாம  அங்கே போயி தர்மலிங்கத்தையே கேப்போம்”  என்று வரதராஜு அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்.

“நாம போவோம். ஆனா நீங்க நாளைக்கு வீட்டுக்காரரைப் பாத்து முதல்லே இந்தக் குடித்தனத்தை வெளியே போகச் சொல்லணும்” என்றார்.

“நிச்சயமா. காலேலே மொத வேலையாப் போயி வீட்டுக்காரரைப் பாத்துப் பேசிடறேன்” என்றார் வரதராஜு. அவராலும் ஆத்திரத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

அவர்கள் தர்மலிங்கத்தின் வீட்டை அடைந்து கதவைத் தட்டினார்கள். தர்மலிங்கம்தான் கதவைத் திறந்தார். அவரைப் பார்த்ததும் வரதராஜு திடுக்கிட்டு விட்டார். சில தினங்களில் ஒருவரால் இவ்வளவு கிழடு தட்டிப் போக முடியுமா? நைந்த கண்களும், வதங்கிய முகமுமாகக் காணப்பட்ட அவர் கதவைப் பிடித்துக் கொண்டிராவிட்டால் கீழே விழுந்து விடுவார் போலத் தோன்றியது. கோபத்துடன் வந்த வாத்தியார் கூட ஒரு நிமிடம் அரண்டு போய் நின்றார்.

தர்மலிங்கம் அவர்களை உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார்.

“இன்னிக்கிக் காலையிலே உங்க பையன் எங்க வீட்டுக்கு வந்து அடிச்ச கூத்து உங்களுக்குத் தெரியுமா?” என்று பழனிச்சாமி தர்மலிங்கத்தைப் பார்த்துக் காட்டமாகக் கேட்டார்.

தர்மலிங்கம் திடுக்கிட்டு அவரைப் பார்த்தார். “என்ன ஆச்சு? எனக்குத் தெரியாதே” என்றார் குரல் நடுங்க.

பழனிச்சாமி அன்று அவர் வீட்டில் நடந்ததைக் கூறினார். “இது வெளியே தெரிஞ்சா எம் பொண்ணுக்கு எவ்வளவு அவமானம்.  பெத்த மனசு துடிக்குது.”

தர்மலிங்கம் வாத்தியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இதை உங்க காலா நினைச்சு விழுந்து கும்பிடறேன். தயவு செய்து மன்னிச்சிருங்க என்னை” என்றார்.

வாத்தியார் “நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்கறீங்க? அந்தப் பயித்தியக்காரப் பயலைக் கூப்பிடுங்க. நீங்க மட்டும் இல்லேன்னா, இத்தினி நேரத்துக்கு அவன் கையைக் காலை முறிச்சிப் போட்டிருப்பேன்” என்றார் கோபமாக.

“நீங்க சொல்லுறது ரொம்ப சரி. அவன் பயித்தியக்காரன்தான். இப்ப ரூமுக்குள்ளாறே அடைச்சுப் போட்டிருக்கோம்” என்றார் தர்மலிங்கம்.

“என்னது?”

“இது என்ன வியாதின்னு தெரியலே. எல்லாரையும் மாதிரி ஒழுங்கா பேசுவான், நடப்பான், சாப்புடுவான், தூங்குவான். முன்னாலே ஒரு வருஷத்துக்கு ஒன்றரை வருஷத்துக்கு ஒரு வாட்டி திடீர்னு யாரோட கண்ட்ரோலுக்கும் அடங்காம, திடீர்னு சிரிச்சுக்கிட்டு  திடீர்னு அழுதுகிட்டு, தனக்குள்ளேயே பேசிகிட்டு ஓடுவான். ஏன் இப்பிடின்னு யாருக்குமே தெரியாது. இன்னிக்கி உங்க வீட்டுக்குள்ளே ஓடி வந்த மாதிரி திடீர்னு வீட்டை விட்டு வெளியே வந்து ஓடிப் போயிருவான்.

ஆனா இப்ப இந்த ஒரு வருஷத்திலே இது மாதிரி நடக்கறது மூணாவது தடவை. அதுக்குத்தான் பதறிட்டு கல்கத்தா போனேன். டாக்டர் அவனைத் தனியா விடாதீங்க. கொஞ்ச காலம் உங்க கூடவே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. அதனாலே இங்கே கூட்டிக்கிட்டு வந்தேன்” என்றார்.

சத்தம் போட வந்தவர்கள் சத்தமடங்கிக் கிடந்தார்கள்.

தர்மலிங்கம் பழனிச்சாமியிடம் “சாரு கூட என்னையத் தப்பா நினைச்சிருப்பாரு. அவரு நான் கல்கத்தாவில் இருக்கறதை பத்திக் கேக்குறப்போ அதை மறிச்சிகிட்டு வேறே எதாவது கேள்வி கேட்டு பதில் சொல்லிப் பேச்சை மாத்தப் பாப்பேன். என் பையனை இவரோ இவரு உறவோ பாத்துறக்கூடாதுன்னுதான் அப்பிடி நடந்துக்கிட்டேன்” என்று மன்னிப்புக் கோரும் குரலில் சொன்னார்.

“நா அதெல்லாம் மனசிலே வச்சிக்கலையே” என்று வரதராஜு பரிவுடன் அவரிடம் சொன்னார். “ஆனா அன்னிக்கி ராத்திரி உங்க வீட்டுலேந்து அழற குரல் வந்தப்போவே எனக்கு சந்தேகமா இருந்துச்சு. நீங்கதான் நாங்க ரெண்டு பேரும் வந்து அப்பிடிக்  கதவைத் தட்டியும் கதவைத் தெறக்கவேயில்லை” என்றார் வரதராஜு.

தர்மலிங்கம் அவர்கள் இருவரையும் பார்த்து “ரெண்டு நிமிஷம் நாம வெளியிலே போய்ப் பேசலாமா?” என்று இறைஞ்சும் குரலில் கேட்டார்.

அவர்கள் மூவரும் வாசலில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றார்கள். சாலையில் போக்குவரத்து எதுவுமில்லாமல் நிசப்தம் தெருவை அடை காத்தது. இருந்த இருள் வெளியில் ஏதோ ஒரு வீட்டில் சுவர்க்கோழிஒன்று  ‘ணிக்’கிட்டுக் கொண்டிருந்தது. நின்றிருந்தவர்களின் மனப் போராட்டங்களை எதிரொலித்து வேப்ப மர இலைகள் அசையாமல் நின்றன. அவர்களைப் பார்த்து உறுமிக் கொண்டே ஒரு தெரு நாய் ஓடிற்று.

தர்மலிங்கம் “என் சம்சாரத்தை வச்சுக்கிட்டுப் பேச வேணாமின்னுதான் இங்க உங்களைக் கூட்டிகிட்டு வந்தேன்” என்று சொன்னார். “அன்னிக்கி ஏன் அப்பிடி செல்வம் பய அழுதான் தெரியுங்களா? ராத்திரி எட்டு மணிக்கு சாதாரணமா சிலோன் ரேடியோலே பாட்டு கேட்டுகிட்டு இருந்தவன் தீடீர்னு டிரஸ்ஸைக் கழட்டிப் போட்டுட்டு அம்மணமா நிக்குறான். டேய் டேய் என்னடா பண்ணுறேன்னு அவங்கிட்டே நான் ஓடறேன். அவன் சிரிச்சுகிட்டே எதோ ஓடிப்பிடிச்சு விளையாடற குழந்தை மாதிரி கொல்லப்பக்கம் ஓடுறான். என்ன சத்தம்னு அவங்கம்மா வெளிலே வந்து பாத்து அப்படியே கலங்கி நின்னுடுச்சி. நாராயணன்தான் அவன் பின்னாலேயே ஓடிப் போயி தடுத்து நிறுத்தி வீட்டுக்குள்ளாற  இழுத்திட்டு வந்தான். கழட்டிப் போட்ட உடுப்பை மாட்டுறான்னா மாட்டேன்னு மணிக் கணக்கா அடம் பிடிக்குறான். கெஞ்சிக் கதறி மெரட்டி சொன்னாலும் கேக்காம உடுப்பைக் கழட்டி எறிஞ்சு எறிஞ்சு ஓடப் பாக்குறான். நாராயணன் அவனை ரூமுக்குள்ளை தள்ளிக்  கட்டிப் போட்டான். அப்போ அவன் மூஞ்சிலே இந்தப் பய காறித் துப்பினான். வேணுமின்னே ஒரு வார்த்தை சொல்லாம உக்காந்தபடியே ஒண்ணுக்குப் போயிட்டான். அப்பதான் நாராயணனுக்கும் பொறுமை போயிருச்சு. உருட்டுக் கம்பை எடுத்திட்டு வந்து சாத்த ஆரமிச்சான். அடிக்காவது பயந்து அடங்கட்டுமின்னு. வலி பொறுக்காம அவன் அலறினதும் அப்பதான்.”

மற்ற இருவரும் வாயடைத்து நின்றார்கள். சமாளித்து வரதராஜுதான் தர்மலிங்கத்தின் முதுகில் அணைப்பாகக் கை வைத்து மெல்லத் தட்டிக் கொடுத்தார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து தர்மலிங்கத்தை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினார்கள்.

வீட்டுக்குத் திரும்பிய வரதராஜு லட்சுமியிடம் தர்மலிங்கத்தின் தோற்றத்தையும், செல்வம் மனநலம் சரியாக இல்லாதவன் என்பதையும் சொல்லிப் புலம்பித் தீர்த்து விட்டார்.

“நீங்க செல்வத்தைப் பாத்தீங்களா?”

“ஆமா. உள்ளே ஒரு ரூமிலே கட்டிப் போட்டு வச்சிருக்காங்க. லேசா கதவைத் திறந்து காமிச்சாரு தர்மலிங்கம். கட்டில்லே அவன்  படுத்திருந்தான். எங்க மூணு பேரையும் அவன் கண்ணு பாத்துகிட்டே இருந்திச்சு. அவன் மனசிலே என்ன ஓடிக்கிட்டு இருந்திச்சோ?” என்றார் வரதராஜு.

மறுநாள் வரதராஜு வழக்கம் போல் காலை ஆறு மணிக்கு நடைப் பயிற்சிக்குக் கிளம்பிப் போகும் போது பழனிச்சாமி அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தார்.

“என்ன இன்னிக்கி புதுசா வாக்கிங் ஆரமிச்சிருக்கீங்களா?” என்று பழனிச்சாமியைப் பார்த்து வரதராஜு சிரித்தார்.

“நீங்க வெளியே வரதுக்காகத்தான் நான் காத்துக்கிட்டிருந்தேன். வாங்க போகலாம்” என்று பழனிச்சாமி வரதராஜுவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

நடந்து செல்கையில் “நேத்தி ராத்திரி இந்த தர்மலிங்கத்தையும் அவரு குடும்பத்தையும் நினைச்சு நான் சுத்தமா தூங்கவே இல்லே” என்றார் பழனிச்சாமி. “உலகத்துலே கடவுள் மனுஷனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறான் பாருங்க.”

“ஆமா. விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நானும் லட்சுமியும் கூட நேத்து ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம். இன்னிக்கிக் காலேலே முடியாது. ஆனா சாயங்காலம் ஆபீஸ்லேர்ந்து திரும்பி வரப்போ வீட்டுக்காரரைப் பாத்து சொல்லிட்டு வந்திடறேன்” என்றார் வரதராஜு.

“இல்லே. வேணாம். நீங்க வீட்டுக்காரரைப் பாத்து தர்மலிங்கத்தைக் காலி பண்ணச் சொல்ல வேணாம்.”

வரதராஜு அவரை உற்றுப் பார்த்தார்.

“நேத்து ராத்திரி விஜயாவுக்கு நடந்ததைப் பத்தி நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டிருந்தேன். யோசிச்சுப் பாத்தா ஒருத்தன் பைத்தியமா இருக்குறப்போ அவனுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதான்னு சந்தேகமாத்தான் இருக்கு. ‘அவன் கண்ணு பாக்குறது காது கேக்குறது எல்லாம் அவன் மூளையிலே பதிஞ்சு பாக்குறானா கேக்குறானா என்ன?’ன்னு எனக்குத் தோணிச்சு. நாம வயசுப் பிள்ளைகளா இருந்தப்போ பக்கத்திலே எதுத்தாப்பிலே வர்ற நம்ம வயசுப் பொண்ணுங்களை ஓரக் கண்ணாலே பாப்போம். அவ பார்வை நம்ம பக்கம் இல்லேன்னு நல்லாத் தெரிஞ்சா அவ மேலே முழுக் கண்ணையும் வச்சுப் பாப்போம். அப்போ நம்ம மனசிலே அப்பிடி ஒரு சந்தோஷம் வரும். பயமும் வரும். நமக்கெல்லாம் அப்போ இருபது இருபத்திரண்டு வயசு இருந்திருக்குமா? இப்போ இந்த செல்வம் பயலுக்கும் அந்த வயசுதானே இருக்கும்? அன்னிக்கு செல்வம்  பய கீழே விழுந்து கிடந்த என் மகளைப் பாத்தப்போ அவன் கண்ணு அவ மேலே பட்ட மாதிரி இருந்திருக்கும். ஆனா பார்வை? அந்தப் பித்த நிலையிலே ஆம்பளை பொம்பிளைங்கிற வித்தியாசமெல்லாம் தெரிஞ்சிருக்குமா அவனுக்கு? எனக்கு நான் அது வரைக்கும்  குமுறிக்கிட்டே இருந்ததை நினைச்சு ராத்திரி ரொம்ப வெக்கமாயிருச்சு” என்றார் பழனிச்சாமி.

பழனிச்சாமி பேசிக் கொண்டு வந்தார். வானம் அலம்பி விட்ட தரை போல சுத்தமாக இருந்தது. அவர்களைத் தழுவிச் சென்ற அதிகாலையின் இளங்காற்றில் பழனிச்சாமியின் வார்த்தைகள் குளித்தெழுந்து மெருகேறியது போல வரதராஜூவுக்குத்தோன்றிற்று.அவரைத்

தழுவிக் கொண்டு நிற்க வேண்டும் போலவும் அவரது கைகளையும் நெற்றியையும் முத்தமிட வேண்டும் போலவும் வரதராஜூவுக்கு இருந்தது. அக்கம் பக்கம் வந்து போய்க் கொண்டிருந்த ஜனம் வேடிக்கை பார்க்கும் என்ற தயக்கத்தில் அவர் எதுவும் செய்யாமல் நடந்து சென்றார்.

பழனிச்சாமி “தர்மலிங்கமும் என்னா பாடு பட்டுக்கிட்டு இருப்பாரு? சொந்த வீட்டிலே கண்ணுக்கு முன்னாலே சொந்த மகனை ஜெயில்லே போடுற மாதிரி கட்டிப் போட்டு பாத்துகிட்டு இருக்குறதை விட வேறே பெரிய தண்டனை இந்த வயசிலே அவருக்கு வேணுமா? அவரு சம்சாரத்தை நினைச்சா எனக்கு அப்பிடியே புரட்டிக்கிட்டு வருது. வயசுக்கு வந்த மகன்  உடம்புல ஒரு பொட்டுத் துணி இல்லாமே நிக்கறதைப் பாக்குற அம்மாவோட மனசு எப்பிடி முறிஞ்சு போயிருக்கும்? அந்தத் துக்கத்தை அவுங்க யாரோடவாவது பகிந்துக்க முடியுமா? நினைச்சு நினைச்சு மறுகுறதைத் தவிர வேறே என்ன செய்ய முடியும் அவுங்களாலே? தர்மலிங்கத்தோட சம்சாரம் அனுபவிச்சிட்டு இருக்கிற கஷ்டத்துக்கு முன்னாலே என்னோட வீட்டக்காரம்மா ஓரு நா பட்ட கஷ்டம் எந்த மூலைக்குன்னு நெஞ்சு பொங்கி கிட்டே இருக்கு. கடவுள் ஏன் இப்படியாப்பட்ட கஷ்டத்தைக் கொடுக்குற கயவாளியா இருக்கான்னு திட்டணும் போல இருக்கு” என்று உடைந்த குரலில் சொன்னார். அவரது உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததை வரதராஜு பார்த்தார்.

“சரி, ரெண்டு நிமிஷம் உக்காந்துட்டுப் போகலாம்” என்று சாலை ஓரத்தில் போட்டிருந்த சிமெண்டு பெஞ்சுக்கு பழனிச்சாமியை வரதராஜு அழைத்துச் சென்றார்.