Author: பதாகை

‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.

வெ. சுரேஷ்

 

தமிழக வரலாற்றில் திரும்பத் திரும்ப படிக்கக்கூடிய காலகட்டம் என்பது, அது புனைவாக இருந்தாலும் சரி, பாடப்புத்தகமாக இருந்தாலும் சரி, கி.பி. 7ம் நூற்றாண்டு துவங்கி 13ம் நூற்றாண்டு வரையிலான ஒன்று. அதற்கு முந்தைய காலகட்டத்தில் தெளிவில்லை. நிகழ்வுகளுக்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதே சமயம், சுவையான வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும் 13ம் நூற்றாண்டு துவங்கி 20ம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாறு அவ்வளவு விரும்பி படிக்கப்படுவதில்லை- முக்கியமாக, 18ம் நூற்றாண்டும் 19ம் நூற்றாண்டும் தமிழக வரலாற்றின் அவலமான காலகட்டங்கள். வலுவான மையப்பேரரசு என்று ஏதுமில்லை. பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு, குறுநில மன்னர்களாலும் பாளையக்காரர்களாலும் ஆளப்பட்டு வந்த காலம், ஐரோப்பியர் முதன்முதலாக ஆட்சியுரிமையை விலைக்கு வாங்கிய காலகட்டம். ஒரு தமிழனாகப் படிக்க பெரும் சோர்வூட்டும் காலக்கட்டம். ஆனால் ஒரு வரலாற்று ஆர்வலனுக்கோ மாணவனுக்கோ அது அப்படியல்ல. பெரும் மாற்றங்களைச் சந்தித்த அந்த காலகட்டமே பெரும் ஆர்வமூட்டக்கூடிய ஒன்றெனக்கூட சொல்ல முடியும். ஆனால் அந்தக் காலகட்டம் பற்றிய புனைவுகள் தமிழ்ப் பரப்பில் (நான் அறிந்த வரையில்) அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். ஒப்பு நோக்க தமிழ் சினிமாவில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கைச் சீமை ஆகிய படங்களில் (அவற்றின் அத்தனை வரலாற்றுப் பிழைகளோடும்) அக்கால நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று மகத்தான வெற்றி பெற்றதும், இன்னொன்று தோல்வியடைந்ததுமேகூட இதில் ஆராயக் கூடிய விஷயங்கள்.

பாளையக்காரர்கள், ஐரோப்பியர்களான ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆர்க்காட்டு நவாப், தஞ்சை மராத்திய அரசு, நாயக்க அரசர்களின் கடைசி வாரிசுகள் என்று ஒருவரோடு ஒருவர் தங்களுக்குள் இணைந்தும் பிணங்கியும் உருவாக்கிய அந்தக் குழப்பமான காலகட்டம் பற்றி இன்று படிக்கும்போது யார் யாருக்குத் துணை, யாருக்கு எதிரி என்பதெல்லாம் எவ்வளவு விரைவில் மாறியிருக்கிறது என்பது மிகவும் வியப்பூட்டுகிறது. உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். மருது பாண்டியர்கள் கட்டபொம்மனை ஆதரித்தார்களா அல்லது எதிர்த்தார்களா? அல்லது, ஏன் ஆதரிக்கவில்லை? அவர்களுக்கும் வேலு நாச்சியாருக்கு என்ன உறவு? கட்டபொம்மன் விடுதலைப் போர்வீரனா? அல்லது வெறும் கொள்ளைக்காரனா? எட்டப்பனும் புதுக்கோட்டை மன்னரும் ஏன் ஆங்கிலேயரோடு சேர்ந்து கொண்டார்கள் என்பதற்கெல்லாம் தெளிவான விடைகள் ஏதும் இல்லை. கே.கே. பிள்ளை அவர்கள் எழுதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, ‘ தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’, என்கிற பெரிதும் மதிக்கப்படுகிற நூலில், அதன் 500 பக்கங்களில், இந்த காலகட்டத்தின், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்களின் கிளர்ச்சிக்கு வெறும் ஒன்றரைப் பக்ககங்கள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று சில புதிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் காலகட்டத்தின் வரலாறு முழுமையாக எழுதப்படும் என்று தோன்றுகிறது.

இந்த நிலையில் இப்போது வெளிவந்திருக்கும் “1801” நாவல் இந்தக் காலகட்டத்தைப் பற்றியது என்பதால் மிகவும் ஆவலோடு வாசித்தேன். நாவல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஒரு மாதத்துக்குப் பின் தொடங்கி, மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டு அந்தக் கிளர்ச்சி முற்றிலும் ஒடுக்கப்படுவதோடு முடிகிறது. இடையில், கட்டபொம்மனின் சகோதரர்களான ஊமைத்துரை, சிவத்தையா, இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போர், ராமநாதபுரச் சீமை சேதுபதி பட்டத்துக்கான வாரிசுரிமைப் போர் என்று பல நிகழ்வுகளினூடாகப் பயணிக்கிறது.

பல புதிய தகவல்களை இந்நாவல் அளிக்கிறது. உதாரணமாக, கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை பிரபலமானவர். ஆனால் அவரது முதல் தம்பியான சிவத்தையா? அவரைப் பற்றி இதுவரை நான் எதுவும் கேள்விப்பட்டதில்லை, படித்ததில்லை. ஆனால், கட்டபொம்மனின் மறைவுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பாளையங்கோட்டை சிறையில் ஏற்பட்ட ஒரு கலவரத்தின் மூலம், அங்கிருந்து வெளியே வந்து தன் தம்பி ஊமைத்துரையின் துணையுடன், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை மீண்டும் கட்டி எழுப்பி ஆட்சி புரிந்திருக்கிறார் இவர் என்ற தகவலை நான் இந்த நாவலில்தான் படிக்கிறேன். இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கர்னல் அக்னியுவால் (Agnew), தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்படுகிறார் இவர். அது இந்நாவலில் விரிவாகவே வருகிறது.

அதேபோல், மருது சகோதரர்கள் மராட்டிய சிவாஜியின் படைத்தளபதிகளில் ஒருவரான தூந்தாஜி வாக், மற்றும் கோவை ஹுசேன், விருப்பாச்சி கோபால நாயக்கர், ஊமைத்துரை ஆகியோர் ஆதரவோடு புனேவிலிருந்து நாங்குநேரி வரையிலான ஒரு ஒருங்கிணைந்த போரை ஆங்கிலேயருக்கு எதிராக துவங்கியதையும் இந்நாவல் காட்டுகிறது. மிக முக்கியமாக, மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக திருவரங்கத்தில் வெளியிட்ட விடுதலைப் பிரகடனமும் இந்நாவலில் இடம் பெறுகிறது..அதுமட்டுமில்லாமல் சிவகங்கை மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி, இரண்டு பாளையகாரர்களின் நெருங்கிய உறவினையும்,முக்கியமாக, பிணக்கினையும், அவை எப்படி அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயரின் கை தென்னகத்தில் ஓங்கிட வழி வகுத்தன என்பதையும் சித்தரிக்கிறது..

இவ்வளவு அருமையான களத்தினையும் காலத்தையும் கருப்பொருளாக தன்னகத்தே கொண்டிருந்தும் இந்த நாவல் அது அடைய வேண்டிய உயரத்தினை அடையவில்லை என்பதே இதன் பெரிய சோகம். ஆசிரியரின் புனைவுத் திறன் மற்றும் மொழி, நடை ஆகியவற்றில் உள்ள போதாமைகளே இதற்கு முக்கிய காரணம். பல இடங்களில் பத்திரிக்கைகளில் வெளிவரும் வெறும் தகவல் கட்டுரையை படிக்கும் உணர்வே மேலிடுகிறது. உணர்ச்சி மிகுந்த காவியமாக வெளிப்பட்டிருக்க வேண்டிய தருணங்கள் ஆகியவற்றை எல்லாம்கூட மிகத்தட்டையான தன் எழுத்தின் மூலம் சாதாரணமாக்கி விடுகிறார் ஆசிரியர். இருப்பதற்குள்ளேயே ஓரளவாவது சுமாராக வந்துள்ள இடங்கள் என்று, மருது சகோதரர்கள் தாம் தூக்கிலேற்றப்படுவதற்கு முன் கர்னல் அக்னியுவுடன் வாதாடும் இடத்தை சொல்லலாம்.

இம்மாதிரி சமகாலத்துக்கு மிக அருகாமையிலுள்ள வரலாற்றுக் காலத்தைப் பற்றி ஒரு புனைவை எழுதும்போது அதன் மொழியும் நடையும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயம். கல்கி, சாண்டில்யன், போன்ற வரலாற்றுக் கதாசிரியர்களின் செந்தமிழ் மொழியா, அல்லது இன்று வழங்கும் மொழியா என்பதைத் தீர்மானிப்பதில் ஆசிரியர் மிகவும் குழம்பி இருக்கிறார். பல இடங்களில் தற்கால மொழி பயன்படுத்தப்படுவது நாவல் நடக்கும் காலத்துக்கு நியாயம் செய்யத் தவறிவிடுகின்றது. மேலும், இன்று வழங்கப்படும் கலைச்சொற்களை அந்த காலகட்டத்துக்கு பயன்படுத்துவதும் துருத்திக்கொண்டு நிற்கிறது. உதாரணமாக, மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக மேற்கொண்ட மறைந்திருந்து தாக்கும் போர்முறை. இதை நாவலில் வரும் பாத்திரங்கள் “கொரில்லாப்” போர்முறை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? அந்த சொல் தமிழ் மொழியில் எந்தக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது போன்ற விஷயங்களை ஆசிரியர் கவனிக்கவேயில்லை என்று தெரிகிறது.

இன்னொன்று. நாவலின் காலகட்டத்தில் நிகழாத சம்பவங்களை சொல்லும்போது அவற்றை மீண்டும் மீண்டும் பாத்திரங்களின் உரையாடலின் மூலமே முற்றிலும் வெளிப்படுத்தும் பாணி சலிப்பூட்டுவதாகவும் எப்போதும் யாரேனும், பேசிக்கொண்டே இருப்பதைப் போன்ற, படிப்பதைவிட உரை கேட்பதைப் போன்ற ஒரு உணர்வையும் தருகிறது.

தகவல் களஞ்சியமாகத் திகழும் இதில், தகவல் பிழைகளும் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக, மராட்டிய சிவாஜியின் வரலாற்றை விவரிக்கும் ஒரு இடத்தில் சிவாஜி, ஒளரங்கசீப் இருந்தவரையில், மலைகளில் மறைந்திருந்து போர் புரிவதையே கைக்கொண்டார் எனவும் ஒளரங்கசீப் இறந்த பின்னர்தான் வெளியே வந்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், உண்மையில் சிவாஜி ஒளரங்கசீப்புக்கு முன்னரே மறைந்து விட்டார் என்பதும், அவர் மறைந்து 17 ஆண்டுகள் கழித்தே ஒளரங்கசீப் மறைந்தார் என்பதுமே வரலாறு. நாம் அறிந்த இடங்களில் இருக்கக்கூடிய இது போன்ற பிழைகள், நாம் அறியாத இடங்களை விவரிக்கும் பகுதிகளை சந்தேகத்தோடு பார்க்க வைக்கிறது.

ஸ்காட்லாந்துக்காரரான கோர்லே என்பவர் இந்தக் காலத்திய நிகழ்வுகளை பற்றி எழுதிய குறிப்புகளை வைத்து சில ஆண்டுகளுக்கு முன்னால் பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய மருதுபாண்டியர்கள் பற்றிய ஒரு கட்டுரையேகூட ஒரு புனைவுக்குரிய சுவாரஸ்யம் கொண்டிருந்தது. ஆனால், தமிழர்களின் மிகச் சோதனையான, படிக்கப் படிக்க மிகுந்த மன வருத்தத்தினைத் தரும், மிகப்பெரிய சவாலான ஒரு காலகட்டத்தினை எடுத்துக் கொண்டு, அதற்கான தகவல்களை சேகரிப்பதில் மிகக்கடினமான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தந்து, மிகுந்த பிரயாசையுடன் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு, அந்த படைப்பாளியின் புனைவுத்திறன் மற்றும் மொழிநடை போதாமைகளால் திருப்தி அளிக்காத ஒன்றாக மாறி இருப்பது மிகுந்த வருத்தத்தையே அளிக்கிறது.

‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ. ஆ.ப., ரூ.500, அகநி

மார்ச் 1979லிருந்து – டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர்

– டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – 

சொல் கொண்டு வருபவர்களில் களைத்து,
சொற்கள், ஆனால் மொழியில்லை,
பனி படர்ந்த தீவுக்குச் சென்றேன்.
சொல்லில்லாதது காடு.
எழுதப்படாத பக்கங்கள் எல்லா திசைகளிலும் விரிகின்றன.
பனியில் ஒரு செஞ்சிறுமானின் குளம்புத் தடத்தைக் காண்கிறேன்.
மொழி, ஆனால் சொற்களில்லை.

 

(This is an unauthorised translation of the poem, From March ’79, originally written in Swedish by Tomas Transtomer, and translated into English by John F. Deane. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

ஒளிப்பட உதவி – Wikipedia

பொய்கள் – யெவ்கெனி யெவ்டுஷென்கோ

யெவ்கெனி யெவ்டுஷென்கோ

 

குழந்தைகளிடம் பொய் சொல்வது தவறு.

பொய்களை உண்மை என்று சாதிப்பது தவறு.

கடவுள் சுவர்க்கத்தில் இருக்கிறார், உலகில் எல்லாம் நலம்,
என்று அவர்களிடம் சொல்வது தவறு.
அவர்களுக்கு நீங்கள் சொல்வதன் பொருள் புரியும்.
குழந்தைகளும் மனிதர்கள்.
எண்ணற்ற இடர்கள் இருப்பதைச் சொல்லுங்கள்,
வரப்போவதை அவர்கள் பார்க்கட்டும், அது மட்டுமல்ல,
இன்றுள்ளவற்றை தெளிவாய்க் காணட்டும்.
எதிர்கொள்ள வேண்டிய தடைகள் இருப்பதைச் சொல்லுங்கள்,
துயரம் நிகழ்கிறது, கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
எக்கேடோ கெட்டு ஒழியட்டும்.
மகிழ்ச்சிக்குத் தர வேண்டிய விலை அறியாதவன்
மகிழ்ச்சியாய் இருக்க மாட்டான்.
மனமறிந்து பிழை எதையும் மன்னிக்க வேண்டாம்,
அது மீண்டும் நிகழும், வளரும்,
அதன்பின் நம் கண்களின் பாவைகள்
நம்முள் மன்னிக்க மாட்டா, நாம் மன்னித்ததை.

(This is an unauthorised translation of the poem, Lies, originally written in Russian by Yevgeny Yevtushenko and translated into English by Robin Milner-Gulland and Peter Levi. The Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only)

ஒளிப்பட உதவி – The Guardian

ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

ஜிஃப்ரி ஹாஸன்

பின்-காலனிய இலக்கியத்தை, குடியேற்ற நாடுகளை அல்லது அதன் மக்களை முக்கிய பேசுபொருளாகக் கொண்டு குடியேற்ற நாடொன்றின் குடிமகனால் எழுதப்படும் இலக்கியங்கள்என இலக்கியக் கோட்பாட்டாளர்கள் வரையறுக்கின்றனர்.

காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடாக இந்தியா இருந்தபோதும் பின்-காலனிய இலக்கியங்கள் இங்கிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்தளவுக்கு தமிழில் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழின் புனைவெழுத்துகளை சராசரியான மனித வாழ்வும் அதன் உணர்ச்சிகரமான பக்கங்களுமே தீர்மானித்து வந்தன. தமிழ்ச்சிறுகதைகளுக்குள்ளும், நாவல்களுக்குள்ளும் கொட்டிக்கிடக்கின்றன மனித வாழ்வு பற்றிய நூற்றுக்கணக்கான பார்வைகள். இந்த வட்டத்தை  தமிழ்ப் புனைவுலகம் மிக அபூர்வமாகவே மீறியுள்ளது. ஜெயமோகனின் “ஊமைச்செந்நாய்“ தமிழ்ச் சிறுகதை வெளியில் அத்தகையதொரு அபூர்வமான  மீறலே.

காலனித்துவ ஆட்சி பல பரிமாணங்களை உடையது. கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் தங்களது காலனித்துவத்தின் கீழ் கொண்டு வந்து அங்குள்ள பொருளியல் வளங்களைச் சூறையாடியமை காலனித்துவ ஆட்சியின் ஒரு பரிமாணம் என்றால் அங்குள்ள மக்களின், தனிமனிதர்களின் கனவுகளை, சுயமரியாதையை, வாழ்க்கையை சூறையாடியமை அதன் இன்னொரு பரிமாணமாகும். இவை தவிர வேறு பல பரிமாணங்களும் அதற்குண்டு.

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய் காலனித்துவத்தின் பல பரிமாணங்களைப் பேசும் கதை. மேற்கில் அதிக மதிப்புமிக்கதாக விளங்கிய யானைத்தந்தம் எனும் பொருள் வளத்தை சூறையாடுவதற்காக வில்சன் எனும் வெள்ளைக்கார துரை  ‘ஊமைச்செந்நாய்’ என அந்த துரையால் அழைக்கப்படும் (அழைக்கப்படும் என்பதைவிட வசைபாடப்படும் என்பதே பொருத்தமானது) சுதேசியான வேட்டையாள் ஒருவனை உதவிக்கு வைத்துக்கொண்டு இந்தியாவின் அடர்வனமொன்றுக்குள் காட்டு யானை ஒன்றை வேட்டையாடும் ஒரு நிகழ்வுதான் இந்தக்கதையின் மையச் சம்பவமாக வடிவங்கொள்கிறது. அதேநேரம் மனிதர்களது கனவுகள் சுய மரியாதை என்பன இன்னொரு விதத்தில் எப்படி மோசமாக சூறையாடப்பட்டன என்பது கதையின் உபபரிமாணமாக வெளிப்படுகிறது. இந்த இரு பரிமாணங்களும் ஒற்றை வடிவங்கொண்டு ஒரு விசையுடன் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறது.

வளச்சூறையாடல் என்ற பெருந்தளத்திலிருந்து சுழலும் இக்கதையில் நுண்மையான மனித உணர்ச்சிகள்கூட புறக்கணிக்கப்படாமல் அதற்கே உரிய தீவிரத்துடன் சித்தரிக்கப்படுவது, காடு பற்றிய விபரணங்களின்போது காட்டின் மௌனத்தையும், அதன் ஓலத்தையும் கதையின் சொற்களுக்குள் உள்ளடக்கி இருப்பது, வாசகனைச் சோர்வடையச் செய்யாத கதைமொழி மற்றும் உணர்ச்சிச் சித்தரிப்பு போன்ற காரணங்களால் இந்தக் கதை ஜெயமோகனின் ஒரு மாஸ்டர்பீஸாகவும், தமிழின் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகவும் மாறுகிறது.

ஊமைச்செந்நாயிலிருந்து ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளக்கூடிய உண்மை காலனித்துவ சுரண்டல் என்பது வளங்களைச் சூறையாடுவதுடனோ, பண்பாட்டுத் திணிப்புடனோ நின்று விடாது ஒரு இனத்தின் மற்றும் தனிமனிதனின் சுய மரியாதையைக்கூட சூறையாடும் வரைக்கும் அதன் எல்லை விரிவுபட்டது என்பதுதான். ஊமைச்செந்நாயின் மையக் கதையாக இந்த உண்மைதான் வரிக்கு வரி அழுத்தமாக சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு பிரச்சாரத்தன்மையாகத் தோற்றங்கொள்ளாமல் ஒரு புனைவுத் தன்மையாகவே வெளிப்படுகிறது. புனைவை கலைத்துவச் செறிவுமிக்கதாய் ஆக்கும் ஜெயமோகனின் வழமையான புனைவு மொழியிலிருந்தும், எடுத்துரைப்பிலிருந்தும் ஒரு நூலளவு வித்தியாசம் இக்கதைக்குள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

வில்சன் எனும் பெயரையுடைய வெள்ளைக்கார துரை மேற்கின் குறியீடென்றால் ஊமைச்செந்நாயை இந்தியாவின் குறியீடாக கொள்ள முடியாது. ஏனெனில், காலனித்துவ சக்திகளை மூர்க்கமாகவும், சாத்வீகமாகவும் எதிர்த்து நின்றதே காலனித்துவ இந்தியாவின் வரலாறாகும். ஆனால் ‘ஊமைச்செந்நாய்‘ கதையின் இறுதியில் அடையும் தீவிரத்தை வேறெங்கும் அடைவதில்லை.

கதையில் வில்சன் பற்றிய விபரணம் காலனியப் பேரரசு பற்றிய விபரணமாக வாசகனின் மனதில் படிகிறது. வில்சன் பிரித்தானியா எனும் காலனியப் பேரரசினதும் வெள்ளை இன மையவாதத்தினதும் (Ethnocentrism) அகமும் புறமுமாக இருக்கிறான். ஆனால் ஊமைச்செந்நாயோ அக்கால இந்தியாவின் அகமும் புறமுமாக இருக்கிறானா என்பதை திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது.

ஆங்கிலேய வெள்ளைத் திமிர் வில்சன் வழியே கதையில் ஆரம்பம் முதல் முடிவு வரை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

துரை கண்களைச் சிமிட்டினான். பதிலுக்கு நாம் சிமிட்ட முடியாது என்று கதையின் தொடக்கத்திலேயே கதைசொல்லி சொல்லும்போது அது வெள்ளையனுக்கும்-இந்தியனுக்குமிடையிலான  ஒரு சமநிலையின்மையை காட்டுகிறது. அச்சமநிலையின்மையே கதையின் மையப்புள்ளியும் கூட.

துரையின் பாலியல்  தேவைக்காக கிராமத்திலிருந்து அழைத்துவரப்படும் பெண்ணோடு துரை வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபடுகிறான். அவனுடன் சமமாகப் படுப்பதற்கு, யோனி வழி புணர்வதற்குக்கூட இந்தப்பெண்கள் கீழானவர்கள் என்ற வெள்ளைத்திமிர் இது போன்று இன்னும் பல இடங்களிலும் வெளிப்படுகிறது.

வில்சன் துரை ஊமைச்செந்நாயிடம் நீ வெள்ளைக்காரப் பெண்ணோடு எப்போதாவது புணர்ந்தாயா?” எனக்கேட்கிறான். ஊமைச்செந்நாய் வழமை போன்று மௌனமாக இருக்கிறான்.

 ”உன் கண்களைப்பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்…”

என்கிறான் வில்சன் துரை. ஒரு இந்தியப் பெண்ணுக்கும் வெள்ளையனுக்கும் பிறந்தவன்தான் ஊமைச்செந்நாய். அதனால் ஓரளவு வெள்ளையனின் சாயலை ஊமைச்செந்நாய் பெற்றிருந்தது வில்சன் துரையால் சகித்துக்கொள்ள முடியாமல் போகிறது. ஒரு வெள்ளையன் ஒரு போதும் அடிமையாக இருப்பதில்லை, என செந்நாயை நோக்கி கத்துகிறான் துரை.

இப்படி கதையின் பல இடங்களிலும் வெள்ளைத் திமிர், காலனிய அகம்பாவம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு எந்த விதத்திலும் குறைவுபடாமல் ஊமைச்செந்நாயின் தாழ்வுணர்ச்சியும், அடிமை மனப்பான்மையும் சமாந்தரமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

கதையின் மையக் கதாபாத்திரமான ஊமைச்செந்நாய் எனும் கதைசொல்லிக்கு வெள்ளையன் பற்றிய பிம்பம் உயர்வானதாகவே இருக்கிறது. தாழ்வுணர்ச்சியுள்ள கதாபாத்திரமாகவே பல இடங்களில் வாசகனுக்குத் தென்படுகிறான். அவனது தாழ்வுணர்ச்சி என்பது ஒருவிதத்தில் அன்றைய இந்தியாவின் தாழ்வுணர்ச்சியாக ஒரு வாசகன் கருதவும் இடமுண்டு. ஊமைச்செந்நாய் என அவனுக்கு வழங்கப்பட்ட அடையாளத்தைக்கூட அவன் எதிர்த்து நிற்பதில்லை. புறத்திலிருந்து அவன் மீது திணிக்கப்பட்ட அடையாளம் அது. தனது அடையாளத்தை தன் புறத்திலிருந்து, தனது சுயத்திலிருந்து அவன் சூடிக்கொள்வதில்லை. காலனித்துவவாதியால் தன் மீது திணிக்கப்பட்ட அந்த அடையாளத்தை ஒருவாசகன் இந்திய தேசத்தின் மீதான, அதன் குடிமக்களின் மீதான அவமானத்தின் அடையாளமாகவே காண்கிறான். கதை நெடுகிலும் ஊமைச்செந்நாய் மௌனமாகவே அதைக் கடந்து சென்று விடுகிறான். ஆனால் ஒரு கீழைத்தேய வாசகன் பெரும் அதிர்ச்சியுடன் அவனது மௌனத்தை எதிர்கொள்கிறான். ஊமைச்செந்நாயின் மௌனத்தை அவனால் இலகுவில் கடந்துசெல்ல முடிவதில்லை.

கதைசொல்லியான ஊமைச்செந்நாய் வில்சன் துரையைப் பற்றிச் சொல்லும் போது-

அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பது வயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தாடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். ”

காலனித்துவ பேரரசின் மீதும் வெள்ளையினத்தின் மீதும் ஒரு எல்லையற்ற மயக்கம் குடியேற்றநாட்டு மக்களின் மனங்களில் மறைமுகமாக ஏற்றப்பட்டிருந்ததைத்தான் இந்தவரிகள் வெளிப்படுத்துகின்றன. காலனித்துவத்தின் ஒரு உளவியல் பரிமாணம் அது. அது நம்மை அறியாமல் நமக்குள் வந்துவிடுவது. ஜெயமோகனால் கூட அதனை தவிர்க்கமுடியாமல் போய்விட்டது.

காலனிய ஆட்சியாளர்களுக்கும், வெள்ளைத்திமிருக்குமெதிரான இந்திய மிடுக்கு கதையின் எந்தவொரு புள்ளியிலும் வெளிப்படுவதாக இல்லை. கதைமுடிவில் ஊமைச்செந்நாய் எடுக்கும் முடிவு இந்தியாவின் மிடுக்கைப் பறைசாற்றப் போதுமானதாக இல்லை. ஊமைச்செந்நாயையும் அவன் தேசத்தையும் கன்னா பின்னா என்று கடுமையாக அவமரியாதை செய்யும் வில்சனை ஒரு சந்தர்ப்பத்தில் ஊமைச்செந்நாய்தான் சாவின் விளிம்பிலிருந்து மீட்டுக்கொண்டு வருகிறான். எதிர்ப்புக் குணமற்ற முழுமையாக சரணாகதியடைந்த பாத்திரம் அவன்.

கதையின் முடிவில் செந்நாய் உயரத்திலிருந்து சறுக்கி கீழே விழ நிகழும்போது பதிலுக்கு துரையும் அவனைக் காப்பாற்றுவதற்கு முயற்சிக்கிறான். ஆனால் செந்நாயோ அவன் தயவால் உயிர் பிழைப்பதைவிட சாவை அல்லது சுயமாகத் தப்பித்தலைத் தெரிவு செய்து, கடைசியில் துரையை சபித்துவிட்டு மரணப் பள்ளத்தாக்கை நோக்கி விசையுடன் இறங்குகிறான்.

ஊமைச்செந்நாய் வில்சனை சாவிலிருந்து மீட்டெடுத்ததற்கும் வில்சனால் காப்பாற்றப்படுவதை தவிர்த்துக்கொண்டமைக்கும் வேறு பண்பாட்டுக்காரணிகள் இருக்கக்கூடும். ஆனால் வாசகனுக்கு அவை பூடகமானவை.  ஊமைச்செந்நாயின் அந்த முடிவு துரையினதும் அவன் தேசத்தினதும் ஆணவம், ஒரு எளிய மனிதனின் முன்னால் எதுவுமே இல்லை என்பதைச் சொல்வதோடு அவனை (ஊமைச்செந்நாயை) ஒரு சரித்திரச் சித்திரமாகவும் மாற்றிவிடுகிறது.

எனினும் கதையில் இந்தக்கட்டம் காலனித்துவ அடக்குமுறைக்கெதிரான இந்தியாவின் சுதந்திர உணர்வை இப்படியான அடிமை உணர்வுள்ள மனிதர்களைக்கொண்டு மாற்றீடு செய்வது ஒரு வரலாற்று அபத்தம் என இன்னொரு கோணத்திலும் வாசிக்கப்பட முடியும். கதைக்குள் அதற்கான சாத்தியங்கள் திறந்தே கிடக்கின்றன.

கதையின் ஒட்டுமொத்தத்தையும் ஒரு அறிவுத் தளமன்றி உணர்வுத்தளமே தீர்மானித்திருக்கிறது.  கதைக்குள் ஒரு பின்காலனிய அரசியல் பரிமாணம் அதன் எல்லாப் பண்புகளோடும் இல்லாமல் இருக்கிறது. காலனிய முதலாளித்துவ அரசியல் மீதான விமர்சனமாக கதை அமைந்துவிடாமல் வேறொரு தளத்துக்கு ஜெயமோகன் கதையை நுட்பமாக நகர்த்திக்கொண்டு செல்கிறார். ஊமைச்செந்நாய் என வில்சன் துரையால் கிண்டலாக அழைக்கப்படும் சுதேசி ஊழியமற்ற ஒரு வேட்டை உதவியாளனாகவே வருகிறான். அவன் தனது தன்னுணர்வு சார்ந்தும், உழைப்பு சார்ந்தும், இருப்பு சார்ந்தும் பல பரிமாணங்களில் சுரண்டப்படுகிறான். சுருக்கமாகச் சொல்வதானால் வில்சன் துரை எனும் ஆங்கிலேயப் பேரரசின் காலனித்துவப் பசிக்கு முழுமையாக அவன் இரையாகிறான். இந்த அரசியல் கதைக்குள் ஊடுபாவி இருக்கிறது. ஆனால் அதுவே கதையாக இருப்பதில்லை. மனித உணர்ச்சிசார்ந்த சித்தரிப்புத்தான் கதையை நகர்த்தும் மைய விசையாகவுள்ளது.

இக்கதை முடிவடைவதில்லை. ஊமைச்செந்நாயின் கதை மட்டுமே முடிகிறது. கதையின் தலைப்பாக ஊமைச்செந்நாயை வைத்து கதையை முடித்திருக்கிறார் ஜெயமோகன். மற்றப்படி கதை மேலும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஊமைச்செந்நாயின் கதையை முடிப்பதன் மூலம் கதைக்கு ஒரு நிறுத்தம் மட்டுமே ஏற்படுகிறது.

கதை காலனித்துவச் சில்லுகளாலேயே உருண்டு செல்கிறது. கதாபாத்திரங்கள் காலனிய சுரண்டலை ஏதோ ஒருவிதத்தில் அனுபவிப்பவர்கள். அந்தவகையில் பின் காலனிய புனைவுகளின் தன்மைகளைப் பெற்றதாகவுள்ளது. ஒரு புனைவாக அது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

ஐரீன்

காலத்துகள்

தொடர்ந்து ஐந்து கிராண்ட் ஸ்லாம் வென்றிருந்த  ஸ்டெப்பி கிராப் அன்று பிரெஞ்சு ஓபன் பைனலில்  தோல்வி அடைந்திருந்தார். சென்றாண்டைப் போலவே இந்த வருடமும் நான்கு க்ராண்ட் ஸ்லாம்களையும் வென்று விடுவார் என்று உறுதியாக நம்பியிருந்தேன்.

‘போன வர்ஷம் அவ ஜெயிச்சதெல்லாம் ப்ளூக்குனுதான் அப்போலேந்து சொல்லிட்டேருக்கேன், ஒலிம்பிக்ஸ் வேற’, அப்பா என்னிடம். க்றிஸ் எவர்ட் ரசிகர்.

கருப்பு வெள்ளையில் பரிசளிப்பு விழா. வெற்றி பெற்ற, வாயில் நுழையாத மிக நீளமான பெயர் கொண்ட ஸ்பெயின் நாட்டுப் பெண் அழுது கொண்டிருந்தார். ஸ்டெப்பி அழுவதையும், அவர் பார்வையாளர் பகுதியில் ஏறிக் குதித்து அங்கிருக்கும் அவரது தந்தையைக் கட்டிக்கொள்வதையும் பார்த்ததுதான் அதிகம்.  இன்று டிவி காமிரா அவர் பக்கம் செல்லும்போதெல்லாம் எங்கோ நிலைகுத்தி இருந்த பார்வை. மூன்றாவது செட்டில் வெற்றியின் விளிம்பைத் தொட்ட பின்னான தோல்வி.

எல்லாம் முடிந்து டி.வியை அணைக்கும் நேரத்தில் வீட்டு உரிமையாளர் தண்டபாணி எங்கள் போர்ஷனுக்கு வந்தார். காலை நேரங்களில் கோமணம் மட்டும் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் உள்ள சாக்கடை கால்வாயை நோண்டியபின் மூன்று கீழ் போர்ஷன்கள் வழியாக சிறு நடை, பின் தன் மாடி போர்ஷனுக்குச் சென்று விடுவார். அவருடன் வந்தவர் சிறிய கை கொண்ட, முட்டிக்கு கீழே கொஞ்சம் நீளும், கவுன் அணிந்திருந்தார்.

பெரிய, சின்ன மணியக்காரத் தெரு இரண்டிலும்  இரவு ஆடை, சுடிதார் அணியும் இருவது முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பத்து  பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். தேன் நிறம், விரித்து விடப்பட்ட தலைமுடி, துருத்திக் கொண்டிருக்கும் கன்ன எலும்புகள். கை நரம்புகள் தெரிந்தன. மிசஸ். கோம்ஸ், பள்ளி ஆசிரியை.

‘இவனும் ஒங்க ஸ்கூல்தான்’

‘என்ன க்ளாஸ்?’

‘எய்த்து’

‘ஐ டேக் பார் கே.ஜி’

ரெண்டு தெரு தள்ளிதான் பள்ளி என்பதால் இங்கு குடிவந்திருக்கிறார். இரு பிள்ளைகள்- ராபர்ட், ஐரீன். இருவரும் நல்ல சிவப்பு நிறம்.’நல்ல காலம்டா அவங்க ஹை ஸ்கூலுக்கு எடுக்கல’

‘எப்டியும் மாட்ன நீ, ஸ்கூல்ல சும்மா எதாவது பண்றத பாத்தாக்கூட, வீட்ல சொல்லப் போறாங்க பாரு’.

‘ஆங்க்லோ இண்டியன்தான?’

‘ஆமா’

‘க்ராஸ்ஸு’

‘டேடேய்..’

‘சும்மா சொன்னேன்டா’

‘எங்க வீட்ல தவ்ற மத்த மூணு போர்ஷன்லையும் நான்-வெஜ் உண்ட’

அவர்கள் குடி வந்த இரு நாட்களில் தண்டபாணிக்கும் அவர் மகனுக்கும் வழக்கமான  சண்டை. மாடியில் இருந்து வரும் இரு தரப்பு  வசவுகள், மாமியாரும் மருமகளும் பக்கபலம். மகனுக்கு  நிலையான வேலை கிடையாது. எப்போதும் சிவந்த கண்கள், கலைந்த தலைமுடி. ஓரிரு தடவை தந்தையை அடிக்கச் சென்றதும் உண்டு. பீஸ்ட். இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை. மூன்று போர்ஷன்களில் வரும் வாடகையை

வைத்துதான் குடும்பம் நடக்கிறது.

‘குடி இருக்றவங்க புள்ளிங்க இங்குலீசு மீடியம் படிக்குது, ஏன் புள்ளக்கு என்ன கொறச்சல்?’

‘எளக்காரம்’

‘காச கொடுக்க மாட்டேங்கறான் கம்நேட்டி’

‘வெளில நிக்காத உள்ள வா,’ அம்மா.

‘இங்க ஷிப்ட் பண்ணப்ப எம்பேரன தமிழ் மீடியம்லதான் போட்ருக்கேன், எதுக்கு இங்கிலீஷ்னு கேட்டான்,’ அப்பா.

‘அப்பா குடுக்க மாட்டேங்கறார்னா, ஒழுங்கா வேலைக்காவது போணும்,’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றார்

‘எல்லார்க்கும் வேல செய்ற பொண்டாட்டி கடப்பாங்களா’

ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் மூவரின் உச்சரிப்பிற்கு விரைவில் பிடிபட்டு விட்டது. ‘அன்க்கீகீள்’ என்று ராபர்ட் என் தந்தையை அழைப்பதும், கழிவறைக்குச் செல்லும்போது சிறிய பாட்டிலில்  பினாயிலை அவன் எடுத்துச் செல்வதும் சில நாட்களில் புதுமை இழந்தது.

தாம்பரத்தில் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த ஐரீன் காலையில் சீக்கிரமாக கிளம்பி விடுவாள். ராபர்ட் செங்கல்பட்டு கல்லூரியில் இறுதியாண்டு. கல்லூரிக்கு எப்போதும் தடி ஜீன்ஸும் அடர்த்தியான நிறத்தில் காலர் வைத்தடி-ஷர்ட்டும் தான். பள்ளியில் இருந்து நான் திரும்பும் போது ராபர்ட் மட்டும் எதையாவது படித்துக் கொண்டோ, மேற்கத்திய பாடல்களை கேட்டுக் கொண்டோ இரண்டு அறை மட்டுமே கொண்ட அவர்கள் போர்ஷன் வாசலில் அமர்ந்திருப்பான்.

ஆரம்பத்தில் பார்க்கும்போது தலையசைத்தல்கள், ஓரிரு வார்த்தை பரிமாற்றங்கள்  மட்டும். அடுத்த மூன்று வாரங்களில் ஸ்டெப்பி விம்பிள்டன் வென்றதை இருவரும் கொண்டாடினோம்.

‘ராபர்ட் ஆர் பாப்’

‘பாப்ப்பா?’

‘பெட் நேம்’

‘செட் ஆகலையே ராபர்ட்டுக்கு’

‘பாப்பி. ஐ லைக் பாப்’

‘லேடிஸ் நேம் இல்ல?’

‘போத்’

‘இந்த பேர்ல இந்தி படம் வந்த்ருக்கு’

‘தெரியும், நைஸ் சாங்க்ஸ், மாம் லைக்ஸ் தி மூவி எ லாட்’

வீடு திரும்பியபின் அவனுடன் கொஞ்ச நேரம்  பாட்டு கேட்டுக்கொண்டிருந்து அவனுடன் சேர்ந்து  தலையாட்டி வைப்பேன். தமிழ், ஹிந்தி திரைப்படப் பாடல்களிடம்  அத்தகைய விலக்கம் இல்லை அவனுக்கு, எங்கள் வீட்டில் உள்ள கேசட்டுக்களை வாங்கி கேட்பான். டப்பா ஸ்கூலுக்கோ, ஸ்ரீனிவாசா  க்ரவுண்ட்டுக்கோ கிரிகெட் ஆடப் போகும்போதும் என்னுடன் வந்து சும்மாவேனும் அமர்ந்திருப்பான்.

அவனையோ, ஐரீனையோ  தேடி யாரும் வருவதில்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை  வார நாளொன்றின் மாலையில் ஒருவர் வந்து செல்வார். பெல்டின் மீது பிதுங்கும் பெரிய தொப்பை, நல்ல நிறம், கைகளில் அடர்த்தியாக சுருட்டை சுருட்டையாக  கருப்பு முடிகள்.

‘ஆர் அங்க்கீள் டேவிட்’

ஞாயிறு காலை நூலகத்திற்கு போவதை வழக்கமாக வைத்திருந்தேன்.’லெட்ஸ் கோ இன் தி ஆப்டர்நூன்’  என்றான் ராபர்ட்.’அவங் கூட போகாத’ என்றாள் ஐரீன்.

‘தனியா போனா போர் மேன், வெயிட் பார் மீ’

அவனுடனேயே ஒரு மணி வாக்கில் கிளம்பினேன்.

‘பாப் டோன்ட் கெட் ஹிம் இன் ட்ரபுள்’ .

‘வி வில் ஹேவ் பன் டோன்ட் வர்றி’

ஏதோ நூலை படித்துக்  கொண்டு அவன் அமர்ந்திருக்க, நான் புத்தகங்களை தேடிக் கொண்டிருந்தேன். கண்காணிப்பாளர் மதிய உணவிற்கு சென்று விட்டார், மீதமிருந்த இரண்டு பேரும் புத்தகங்களை வைத்து விட்டு கிளம்பினார்கள். ராபர்ட்  அறையில் மூலையில் இருந்த அடுக்கிற்கு சென்று இடுக்கிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து பேன்ட்டினுள் செருகிக் கொண்டான். நான் பார்ப்பதை கவனித்து அருகில் வந்து  கண்ணடித்தான். அவன் வயிறு பிதுங்கி இருப்பது போல் தோன்றியது.

‘புக்ஸ் எடுத்துடியா, ஷால் ஐ வெயிட் அவுட்சைட்?’.

‘இல்ல தோ கெளம்பலாம்’ மூன்று கார்டுகளில் ரெண்டிற்கு மட்டும்தான் புத்தகம் எடுத்தேன்.

என்ட்ரி  போட்டுக் கொண்டிருக்கும்போது, ராபர்ட் வெளியே சென்று நின்று கொண்டான். சிறிது தூரம் நடந்த பின் புத்தகத்தை எடுத்து என்னிடம்காட்டி சிரித்தவனிடம், ‘கரெக்ட்டா எப்படி எடுத்த?’

‘வில் கீப் இட் தேர் மேன், தென் சம் டேஸ் லேட்டர் வந்து எடுத்துப்பேன்’

மாதத்தில் ஒரு முறை என்னுடன் நூலகத்திற்கு வருவான். அன்று மட்டும் நான் ஒன்றோ இரண்டோதான் புத்தகங்கள் எடுப்பேன்.

‘கரெக்ட்டா வேணும்னுதானே லஞ்ச் டைம்ல வர’

‘ஆஹ், மை ஷெர்லாக்’

நானும் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு, ‘நோ நோ நீலாம் இத பண்ணக் கூடாது’

‘ஜாலிக்குதான பாப்’

‘தென் ஐ வில் கோ அலோன்’

அந்த ஞாயிறும் ராபர்ட்டும் நானும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு முதியவர் முடிச்சை அவிழ்த்துப் பார்த்து மீண்டும் கட்டியபடி முன்னால் சென்று கொண்டிருந்தார்.

‘ஹே, ஆஸ்க் தட் ஓல்ட் மேன் டு ஸ்டாப்’

ஓடிச் சென்று அவரை நிறுத்தினேன்.

‘என்ன தம்பி என்ன வேணும்?’ வயது அறுபதிற்கு மேல் இருக்கும்.

இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்டி, ‘கீழ் போட்டீங்க’ என்றான் ராபர்ட்.

முடிச்சை அவிழ்த்து  மீண்டும் பார்த்து ‘நீங்களே எடுத்துக்காம குடுத்தீங்களே’

செட்டித் தெருவை தாண்டி இருந்தோம்.

‘ஏன் சிரிக்கற’

‘ஒண்ணு..ல  ராபர்ட்’

‘யூ  இம்ப்’. அவனும் சிரிக்க ஆரம்பித்தான்.

மண்டையைப் பிளக்கும் மதிய வெயிலில் ஆளரவமற்ற தெருவில் நடந்து கொண்டிருந்தோம்.

இரு வீட்டிலும் அங்கமுத்து திரையரங்கில் மாலைக் காட்சி பார்க்க முடிவு. டிக்கெட் வாங்க நாங்களிருவரும் முன்னதாக வெளிவந்து இரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் நல்ல கூட்டம், பிரபலமான பாடல்கள். நுழைவாயில் படிக்கட்டில் நின்றபடி, ‘ஸ்டே ஹியர்  கீப் எ பேர்ட்ஸ் ஐ வியு பார் தெம், நா டிக்கெட் வாங்கறேன்,’ என்றதில் ‘பேர்ட்ஸ் ஐ வியுவின்’ அர்த்தம் பிடிபட   சில கணங்கள் ஆனது. ஐரீன் அருகே அமர்ந்துதான் படம் பார்த்தேன். படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் தற்கொலைச் சம்பவங்கள். இரண்டு தடவையும் அவளின்  ‘ஊ’, ‘காட்’.  திரும்பி வரும்போது படத்தின் இசை பற்றி ராபர்ட் பரவசமாக பேசிக் கொண்டிருந்தான். குறிப்பாக நாயகன்-நாயகி நடனமாடும் வரிகள் இல்லாத  இசைக் கோர்வை குறித்து ‘ப்ளட்டி குட்’. ஐரீன் எதுவும் பேசாமல் வந்தாள்.

‘ஹீரோ இஸ் அ லூசர்’

‘பாப், ஹீரோயின் ரெண்டும் கூடத்தான்’

‘ஐரீன் நீ என்ன சொல்ற?’

‘ஷட் அப் பாப்’

‘ஏன் கோவப்பட்ற’

‘வில்லன்ட்ட சண்ட போட்டு செத்தாக்கூட பரவால்ல பாப். வேஸ்ட் இந்தாள், சண்டையே போடத் தெரியாது’ என்று என்னுடைய ஆதர்ச நட்சத்திர நடிகர் அந்தச் சூழலை எப்படி அதிரடியாக  சமாளித்திருப்பார் என்று விவரித்தேன்.

‘கரெக்ட்டா சொல்றான் பார்’

‘இன்சென்சிடிவ் பிக்ஸ் போத் ஆப் யு’

வீடு வந்து சேரும் முன் அவளுடன் இயல்பாக பேசத் துவங்கி இருந்தேன்.

மேட்டுத் தெரு ஐஸ் பால் கடைக்கு சென்று சொம்பில்  குளிர்ந்த பால் வாங்கி வருவது, சின்ன மணியக்கார தையல் கடை என அவளுடன் விடுமுறை நாட்களில் அலைந்தேன். ‘ஒ யூ ஹவ் ப்ரோக்கன் மை ஹார்ட்,’ என்று ஊளையிடுவான் ராபர்ட்.

வீட்டில் பெரியவர்கள்தான் என் பள்ளிக்கு முன்பாக இருக்கும் காப்பி அரைக்கும் கடைக்கு செல்வார்கள்.  இந்த முறை தனியாக சென்று வருவதாக கெஞ்சி அனுமதி பெற்று கொண்டு ஐரீனிடம், அவள் வருகிறாளா என்று கேட்க, அவள் தயார்.

பில்டர் காபி மீது அவளுக்கு பிரியம்.  கடையின் இரண்டாம் படிக்கட்டில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தாள். கடைக்காரரிடம் அரைக்க வேண்டிய விதம், அளவுகளை  சொன்னேன்.

‘எப்பமே நான்தான் வருவேன் இங்க’

‘நைஸ், க்ரேட் ஸ்மெல், இங்கேயே ஒக்காந்திருக்கலாம் போலிருக்கு’

‘யா’

‘அதுதான் மிஸ் எடுக்கற கிளாஸ்’

‘யுவர்ஸ்’

‘அது மேல, தர்ட் வரைக்கும்தான் இங்க, ஹை ஸ்கூல்லாம் பர்ஸ்ட், செகண்ட் ப்ளோர் ‘

சைக்கிளில் வந்து கொண்டிருந்த கஞ்சாவைப் பார்த்ததும் கடைப்பக்கம் திரும்பினேன். சைக்கிள் பெல் ஓசை.

‘ஹி இஸ் காலிங் யு’

அவனருகில் சென்றேன்.

‘என்னடா’

‘சும்மா வெளில ஒரு ரவுண்ட்’

‘இவங்க தான் மிஸ் பொண்ணா?’

‘ம்ம், சைக்கிள் ப்ரேக்கு சரி இல்லையா? லூசா இருக்கு’

‘இல்லடா’

‘கூப்டறாங்கடா’

‘நீ கெளம்பு’

‘யுவர் பிரெண்ட்?’

ஸ்டாண்ட் போட்டான்.

‘மை கிளாஸ்மேட் கஞ்சா’

‘கஞ்சா?’

‘மை நேம் இஸ் ரகுராமன்’

‘பின்ன ஏன் அப்டி கூப்டற?’

‘சொல்லட்டுமாடா’

‘சும்மா ஜோக்கடிக்கறான்’

‘பட் தேர் மஸ்ட் பி சம் ரீசன் நோ’

‘யா’

‘நாளக்கு இஸ்கூல் வருவேல்ல’

‘ஏன் அவன டீஸ் பண்ற, போய்ட்டான் பாரு’

‘பிரெண்ட்தான’

‘வை இஸ் தட் பாய் ஸ்டேரிங் அட் மீ’

‘தெர்ல, சும்மா நிக்கறான்னு நெனக்கறேன்’

‘டேய் என்னடா இங்கேயே நிக்கற, கெளம்பு போ’

இரண்டடி தள்ளிச் சென்று நின்று தெரு முனையை பார்த்தான்.

‘ஐரீன் கார்னர்ல பாரு’

லுங்கி கட்டிக் கொண்டு இரண்டு இளைஞர்கள், இவர்கள் பக்கம் பார்த்தபடி. ஒருவன் எங்கள்பால்காரம்மாவின் கடைசி மகன். போன வருடம், லுங்கி அவிழ்ந்து மேலே முழுக்கை சட்டையுடன் கையில் பெரிய கம்புடன் அடுத்த தெருவுக்கு ஓட முயற்சித்துக் கொண்டிருந்தவனை

பால்காரம்மாவும் மற்றவர்களும் அடக்கிக் கொண்டிருந்தார்கள். சற்று அமைதியான பின்பும் அவர்கள் கொடுத்த லுங்கியை அணியாமல்

தூக்கி வீசிக் கொண்டிருந்தான். குச்சி குச்சியான கால்கள்.

அந்தச் சிறுவனை அருகே வருமாறு ஐரீன் சைகை காட்டினார்.

‘வாடா ஒண்ணும் பண்ண மாட்டாங்க’

‘ஏன் நிக்கற’

‘இல்லக்கா அவங்கதான்’

‘சொல்ரா’

‘அக்கா பேரு என்ன, வயசு என்னனு கேக்கச் சொன்னாங்க’, நாலணா நாணயத்தை எடுத்துக் காட்டினான்.

‘என்ட்ட நேரா கேக்கச் சொல்லு போ’

‘அதெல்லாம் வேணாம், அக்கா பதில் சொல்லலன்னு மட்டும் போய் சொல்லு’

‘  நீ போய் அப்படியே சொல்லு’

‘ப்ரச்சன ஆயிடும்’

‘நத்திங் வில் ஹேபென்’

திரும்பிச் சென்றவன் அவர்கள் அருகில் சென்று ஏதோ சொல்லி விட்டு ஓடினான்.

‘திக் ப்ரவ்ன், லுக்ஸ் யம்மி’. பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து வைக்கப்பட்ட காபிப் பொடியை வாங்கிய போது உள்ளங்கையில் உஷ்ணம். வீடு செல்லும்வரை இருக்கும்.

‘இது என்ன?’

‘சிக்கரி’ மற்றொரு சிறிய உறையில்.

‘வாட்ஸ் இட், ஊஸ்’

‘இதையும் மிக்ஸ் பண்ணுவாங்க’. வீட்டிற்குச் சென்றவுடன் முழுதாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரு முனையில் வேறெங்கேயோ பார்த்தபடி   பால்காரம்மா பேரனும் அவன் நண்பர்களும்.

‘சைட்ல பாக்காத, லுக் ஸ்ட்ரைட்’

பத்தடி நடப்பதற்குள் சீட்டி ஓசை, உற்சாகச் சிரிப்பு.

‘வேணாம் அவங்க பொறுக்கிங்க’

நான் அங்கேயே நின்று விட்டேன். ஐரீன்   ஏதோ கேட்கிறாள். பதில் இல்லை. மீண்டும்  கை நீட்டி ஏதோ கேட்க, ஏதோ வாயசைக்கிறார்கள்.

அருகே சென்றேன்.

‘சின்னப் பையன்கிட்ட கேக்க சொன்னீங்கள்ல, ஆஸ்க் நவ்’

‘என்னடா சொல்லுது இது?’

‘அது இதுலாம் பேசாத’

‘நீ என்ன சொல்றேன்னு புர்ல’

‘ஓட்றானுங்க பாரு’

‘புல்லீஸ்’

டிசம்பர் மாத மத்தியில் நாடார் கடையில் சிவப்பு கலர் பேப்பர் வாங்கி வெட்டப்பட்டு அவர்கள் போர்ஷன் முன்பும், இயேசு படத்திற்கும் தோரணம். கிறிஸ்த்மஸ் ஸ்டார். நானும் வீட்டில் உள்ள சாய்பாபா படத்தின் சட்டகத்தின்மீது கலர் பேப்பர் ஒட்ட  முயற்சித்து கோந்து சரியாக பதியாமல் அரை மணி நேரத்திற்குள் பாதி ஒட்டியபடி ஊசலாட ஆரம்பித்தது.

‘என் கிளாஸ்மேட்ஸ் ரெண்டு பேர் அவங்க வீட்டுக்கு சான்டா, கரோல்ஸ் பாட்றவங்க வருவாங்கன்னு சொல்வாங்க’

‘இங்க சான்டா வருவாரா’

‘ஹன்ட்ரட்ஸ் ஆப் சான்டா’

‘ரீல் வுடாத’

‘ட்ரூ’

‘இந்தளவுக்கு பீலா விடக்கூடாது, ஐரீன் சான்டா வருவாரா’

‘நெக்ஸ்ட் இயர் பாக்கலாம்’

‘பழைய வீட்ல’

‘நோ. சான்டா ஹேட்ஸ் அஸ்’

‘பாப். சும்மா சொல்றான்’

கிறிஸ்த்மஸ்சுக்கு முந்தைய நாள் முன்னிரவு அவர்கள் வீட்டில் பாடல்களுக்கு  ஆட்டம். டேவிட் வந்திருந்தார். அந்த வயதிலும் மிசஸ். கோம்ஸ் டேவிட்டுடன் மெல்லிசை பாடலொன்றுக்கு அசைந்தபடி நன்றாகவே ஆடினார். ராபர்ட்டும் ஐரீனும்  துள்ளலான இசைக்கு. ‘பை தி ரிவர்ஸ்’ என தொடங்கும் பாடலைத் தவிர மற்றனைத்தும் மனதில் தங்காதவை. என்னையும் ஆடச் சொன்னார்கள். சில நிமிடங்கள் உடம்பையும் தலையும் உலுக்கியபின் சென்றமரும்போது சம்பிரதாய கைதட்டல்கள்.

‘அனதர் மைகேல் ஜாக்சன் இன் தி மேக்கிங்’.

மாலை ஐரீனுடன் வெளியே சென்றுவிட்டு  சந்திற்குள் நுழையும்போது பக்கத்து வீட்டு ராட்சஸி கூப்பிட்டார்.

‘ராத்ரி பெரியவர் ஒலாத்தறாரு வீட்டு வாசல்ல, கல்லுப்பு போட்டு வைங்க’

‘ஹவுஸ் ஓனரா’

‘இல்ல, ஸ்னேக்க சொல்றாங்க. நைட் அந்த பேர சொல்லமாட்டங்க’

‘ஹி இஸ் ஏ ஸ்னேக் டூ’

‘ஏன்?’

‘நத்திங்’

‘உப்பு போட்டா வரமாட்டாரு’

‘நாங்க எந்த பாம்பும் பாக்கலையே, என்ன பாம்பு?’

‘பெரியவர் எல்லார் கண்ணுக்கும் தெரிய மாட்டார்”

ராட்சஸிக்கு மாந்த்ரீகம் தெரியும் என்ற தெருப்  பேச்சை நம்பச் செய்யும் உருவம். எங்கள் இரு வீட்டிற்கும் பொதுக் கிணறு. ராட்சஸி வீட்டு மா, தென்னை மரங்களுக்கு நிறைய தண்ணீர் செலவாகி  விடுகிறது என்று தண்டபாணி கோடைக் காலங்களில் கிணற்றை தூர் வாரும்போது முணுமுணுப்பார். ராட்சஸியிடம் நேரடியாகச் சொன்னதில்லை.

‘அவங்களுக்கு மேஜிக் தெரியும் ‘

‘விச்?’

‘அப்டித்தான் சொல்றாங்க’

உப்பை வாசலில் போடாவிட்டாலும் எந்த பாம்பும் தென்படவில்லை.

‘எப்டி அவங்கள்ட்ட தைரியமா பேசறீங்க’

‘நீதான் பயமுறுத்தற, எனக்கு எந்த டிப்ரன்ஸ்சும் தெரில’

‘குமாஸ்தாக்கு பர்ஸ்ட் வைப் இருந்தாங்களாம், அதப் பத்திலாம்…’ ராட்சஸி கணவர் வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்தார்.

‘ஹு நோஸ், அவங்ளுக்கு எப்டி தெரியும்’

‘…’

‘ஷி இஸ் வெரி லோன்லி அவ்ளோதான்’

மிசஸ். கோம்ஸின் போர்ஷனுக்கு முன் சிறிய கொட்டகை.  தண்டபாணி முன்பு மாடு வளர்த்த இடம். வீட்டை விரிவாக்கி கட்டியபின் கொட்டகையை இடிக்க மனமில்லை. இப்போது குடியிருப்பவர் உபயோகத்திற்கு மாவாட்டும் கல்லும் அம்மிக் கல்லும், அவருடைய வேறு பழைய பொருட்களும். அரைக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கோவணத்துடன் கொட்டகையில் இருந்து தண்டபாணி வெளியே வந்து போர்ஷன் வாசலில் நின்று, நெஞ்சை நீவியபடி உள்ளே ஏதோ சொல்லி விட்டுச் சென்றார். வழுக்கை, தொங்கும் மார்பகங்களில் சில வெள்ளை முடிகள், தொந்தி, கருத்த பிருஷ்டங்களில் தேமல்.

‘நாடார் கடக்கு போறேன் எதாவது வாங்கணுமா’

ஐரீன் தோளைக் குலுக்கினாள்.

‘ஹி இஸ் டுயிங் இட் ஆன் பர்பஸ்’

‘மா’

‘இங்க பூச்சி ஜாஸ்தி, போர்த் படிக்கும்போது என்ன நட்டுவாக்கிளி கொட்டிடுச்சு’

‘அப்டின்னா’

‘ஸ்கார்பியன் டைப்’

‘இங்க பாக்க என்ன இருக்கு?’

‘முன்னலாம் அவர் காத்தால மட்டும்தான் இங்கெல்லாம் வருவாரு’

‘ஸீ’

‘நீ கெளம்பு கடேக்கு’

‘டோன்ட் டெல் பாப் மாம்’

டப்பா ஸ்கூலில் விளையாடி விட்டு  வீட்டிற்குத் திரும்பும் போது மிசஸ். கோம்ஸ் போர்ஷனுக்கு முன்பு சண்டை.

‘ஓனர் எங்க வேண்ணாலும் போவான், வீட்டுக்குள்ள வரலல்ல’ தண்டபாணிகூட பீஸ்ட். ராபர்ட் தோளில் வைத்து அழுத்தியபடி ஐரீன்.

‘அதுக்கு இப்டியா வரணும்’

‘ஏம்மா இங்க எதாவது குப்ப அடச்சு கெடக்கான்னு பாக்க வராரு, வேறப்படி வர முடியும்?’

‘நாங்க வீட்ல இருக்கும்போதுதான் மெனி டைம்ஸ் வராரு ‘

‘வேணும்னேவா இங்க வராங்க, நீ இல்லாதப்பதான் வர்னுமா, பெர்சா நீட்டி கேள்வி கேக்கற?’

‘கொஞ்சம் மரியாதையா பேசுங்க’

‘தபார்ம்மா இப்டிதான் பேச வரும், இங்க்லீசுலாம் தெர்யாது’

‘வேணும்னே வந்து வீட்டு முன்னாடி நிக்கறீங்க’

‘நிய்யூ இந்த வவுசுல கவுனு போட்டுட்டு நிக்கற, எவன் எவனோ வூட்டுக்கு வரான் நான் கேக்கறேனா’

‘ராபர்ட், நோ…’ தோளில் கை வைத்து அவனை இழுத்தாள் ஐரீன்.

‘ஒங்கள சொன்னா கோவம் வர்தில்ல’

‘ஹி இஸ் அவர் அங்கிள்’

‘நீதான சொல்ற’

இந்த முறை ராபர்ட் தண்டபாணியை நெருங்கி நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டான்.

‘அடிங்கோத்தா எங்கப்பன.. ‘

தெருவாசிகள் பலர் கூடி விட்டார்கள்.

‘நைனாவ அட்சிட்டான்  ‘

‘அவரு ஊடு என்னமோ பண்றாரு’

‘இஸ்கூல் வாத்தியாரம்மா இப்டி பண்ணுதே’

‘ஓனரையே அடிப்பாங்களாமா’

‘நானே பாத்திருக்கேன் இந்தாளு  இங்க அப்பப்ப வர்த அத கேக்க மாட்டேங்கறீங்க,’ ராட்சஸி.

‘மாய்மாலம் பண்ணி வீட்ல ஒட்டிக்கிட்டவ பேசறா’ தள்ளிச் சென்று தண்டபாணி முணுமுணுத்ததோடு சரி, யாரும் நேரடியாக ராட்சஸியிடம் பேசவில்லை.

அப்பா பேசிப் பார்த்தார்.

‘அவங்களுக்கும் நமக்கு சரிப்பட்டு வராது, காலி பண்ண சொல்லிடுங்க ஸார்’

‘ஏதோ கோவத்துல ரெண்டு சைட்லயும் பேசிட்டீங்க’

‘இல்லங்க ஸார் இதுங்களுக்கெல்லாம் வூட கொட்த்தருக்க கூடாது ஸாரு, ரெண்டுங்கெட்டான்’

மீண்டும்  ராபர்ட்டை அடக்கினார்கள்.

‘தோ இதுதான் சொல்றேன், காலி பண்ண சொல்லுங்க’

‘லச்சரஸ் பகர்’ என்று ராபர்ட் கத்திக் கொண்டிருந்தான்.

‘இங்கிலீசு பேசுனா மட்டும் போதுமா?’

‘அவ்ங்க அவங்க ஆளுங்களோட கூத்தடிக்கட்டும்’

அந்த மாத முடிவிலேயே காலி செய்து குடி புக வேறு வீடு டேவிட் ஏற்பாட்டில் கிடைத்து விட்டது. கிளம்ப இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கும்போது

அவர்கள் போர்ஷனுக்கு சென்றேன்.  இரண்டு  சூட்கேஸ்களில் துணிகளை திணித்துக் கொண்டிருந்தார்கள் மிசஸ். கோம்சும் ஐரீன்வும்.

‘என்னடா?’

‘ஹெல்ப் பண்ணட்டுமா?’

‘வேணாம், தேங்க்ஸ்’

சூட்கேஸை மூட அதன் மேல் பகுதியில் வலுவான அடி.

‘பார்பேரியன்ஸ்’

‘மா’

‘இட்ஸ் தி ட்ருத்’

‘நீ கெளம்புடா’

‘இட் வாஸ் அ மிஸ்டேக் டு கம் ஹியர் ‘

‘போயிட்டு அப்பறம் வா’

‘திஸ் இஸ் நாட் அவர் பிளேஸ்’

‘வாட் இஸ், மாம்?’