Author: பதாகை

திரிதலின்பம் – நித்ய சைதன்யா

யாரிடம் என்றில்லாமல்  
சதா
கதையாடி மகிழும்
நதிக்கரையோர நாணல்கள்

இரவுகளை பகைத்தஞ்சி
விடியல்களை ஏங்கி
காத்திருந்த
நீர்மையின் நடுக்கத்தில்
அன்றைய எனதின்பங்கள்

தெருக்களில் இல்லை
தேரடி வீதியில் இல்லை
கண்களால் பேசிக்களித்த
படித்துறையிலும் இல்லை
நதிக்கரையில் தேடியலைகிறேன்
நட்பிலமர்ந்த அந்நாட்களின் சுவடுகளை

நதியில் மிதந்துசெல்கின்றன
நீ சூடிய
பொன்னிற மலர்கள்

மாட்டுக்கார வேலன்

மு வெங்கடேஷ்

அதிகாலை ஐந்து மணி, விடிந்தும் விடியாமலும் இருந்தது. கோவில் மூலஸ்தானத்தில் இருக்கும் சாமியைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் பண்டாரம். ராசம்மாள் கோவிலுக்குள் இருக்கும் குப்பைகளைத் தூத்துப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்குத் துணையாக இருந்த மகள் சங்கரி, எதையோ கையில் எடுத்துக் காட்டி அது என்னவென்று கேட்டாள். “அது ஒன்னுமில்லம்மா, பாம்புச் சட்டதான். கழட்டிப் போட்டு போயிருக்கு, நீ அதத் தூக்கித் தூரப் போட்டுட்டு வேலயப் பாரு” என்றாள் ராசம்மாள்.

அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர் பண்டாரம் ராசம்மாளிடம்,“தங்கப் பாண்டி அண்ணாச்சி  தோட்டத்துல மோட்டார் ஓடுற சத்தம் கேக்கு, நீங்க ரெண்டு வேரும் போயி மொதல்ல குளிச்சிட்டு வந்துருங்க, நா செத்த நேரம் கழிச்சிப் போறேன்” என்றார். சரி, என்றவாறு ராசம்மாளும் சங்கரியும் சென்றனர்.

பண்டாரம் கோவில் திண்ணையில் தனியாக அமர்ந்திருந்தார்.

அப்போது ஏதோ சத்தம் கேட்கவே, “யார்ல அது? வேலனா? என்ன சத்தத்தையே காணும்? காது கேக்குதா இல்லையா? ஏல ஒன்னத்தான கேக்கேன்,” என்றார்.

பதில் ஏதும் சொல்லாமல் வந்த வேலன் சுதாரித்துக் கொண்டு, “அண்ணாச்சி நாந்தான் வேலன். ஏதோ சிந்தனைல இருந்துட்டேன். மன்னிச்சிக்கோங்க,” என்று சொல்லிக்கொண்டே கோவிலைப் பார்க்க நடந்து வந்தான். உடன் அவன் வளர்க்கும் மாடும்.

“சரியாப் போச்சுடே ஒன்னோட, கேட்டா ஒடனேப் பதில் ச்சொல்ல வேணாமா? அந்தானிக்கு வார?” என்று கேட்ட பண்டாரத்திடம், “அதான் ச்சொன்னம்லா அண்ணாச்சி” என்றான் வேலன்.

பண்டாரம் விடுவதாக இல்லை. “எப்பச் ச்சொன்னடே? கேட்ட ஒடனேச் சொல்ல வேணாமா? சரி, இன்னைக்கு என்ன இவ்ளோ வெள்ளன?”

“ஆமா அண்ணாச்சி, மாட்டக் கூட்டிட்டு இன்னைக்கு பக்கத்துக்கு ஊர் வரப் போ வேண்டி இருக்கு, அதான்”

“சரிடே. பாத்து பைய சூதானமாப் போயிட்டு வா,” என்று சொல்லிவிட்டு பண்டாரம் எழுந்து கோவிலுக்குள் சென்றார்.

மாட்டைக் கூட்டிக் கொண்டு சிறிது தூரம் சென்ற வேலன் ஏதோ ஞாபகம் வர மீண்டும் கோவிலைப் பார்க்க வந்தான். வந்தவன் பண்டாரத்தைப் பார்த்து, “இந்தாரும், வர்ற வழில பேச்சியம்மங் கோயில்ல கொட, பொங்கல் குடுத்தானுவோ, ஒங்க ஞாபகம் வந்துச்சு. அதான் வாங்கியாந்தேன். மைனிக்கும் புள்ளைக்கும் குடுங்க,” என்று ஒரு பொட்டலத்தை நீட்ட, அதை வாங்கிய பண்டாரமோ “ஒனக்குடே?” என்றார்.

“நாந்தான் கோயில் ச்சாப்பாடு ச்சாப்ட மாட்டம்லா, விட்டுப் பல வருசமாச்சு” என்று சொன்ன வேலனிடம், ”வெளங்காமப் போச்சு. எக்கேடும் கெட்டுப் போ” என்றார் பண்டாரம்.

எதையும் கண்டுகொள்ளாதவன், “சரி அண்ணாச்சி சாந்தரம் வாரேன்,” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சற்று நேரத்தில் ராசம்மாளும் சங்கரியும் குளித்து விட்டு வர, பண்டாரமும் குளித்துவிட்டு வந்தார். சாமிக்குப் பூசை முடித்துவிட்டு, வேலன் கொடுத்த பொங்கலைச் சாப்பிட்ட மூவரும் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் காற்று சிலுசிலுவென வீசிக் கொண்டிருந்தது. நாலாபுறமும் மரங்களாலும் வயல்களாலும் சூழ்ந்து இருந்தது கோவில். ஆள் அரவமற்ற அந்த காட்டுக்குள் மொத்தத்தில் இருந்ததோ ஆறு வீடுகளும் ஒரு சின்ன பொட்டிக் கடையும்தான். கிழக்கு திசை நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையைப் பிடித்தால் ஐந்து மைல் தூரத்தில் ஊர் வந்து விடும்.

ராசம்மாளும் சங்கரியும் அடுப்பு எரிப்பதற்காகக் கோவிலைச் சுற்றி விழுந்து கிடக்கும் சுள்ளிகளைப் புறக்கிக் கொண்டிருந்தனர். பண்டாரமோ சில நாட்களுக்கு முன் கீழே விழுந்து உடைந்த மணியை சரி செய்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, “மத்தியானத்துக்கு நேத்து வச்ச பழைய சோறு கெடக்கு தொட்டுக்குறதுக்கு ஊறுகா மட்டும் வாங்கியாரீங்களா,” என்று ராசம்மாள் கேட்க, சரி என்று சொன்ன பண்டாரம் எழுந்து கடைக்குச் சென்றார். மடியில் படுத்திருந்த சங்கரிக்கு தலைவாரிக் கொண்டிருந்தாள் ராசம்மாள்.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல நமக்கு சொந்த வீடு வாசலெல்லாம் இல்லையாம்மா?”

“இருந்துச்சும்மா. அதெல்லாம் ஒரு காலம். ஒங்க அப்பாவுக்கு என்னைக்குக் கண் பார்வ போச்சோ அன்னைக்கே நம்ம வாழ்க்கையும் இருண்டு போச்சு”.

ஒன்றும் புரியாத சங்கரி, “ஏம்மா என்னாச்சு?” என்று கேட்க, குடும்பத்தில் நடந்த சண்டை, அதில் தாங்கள் ஏமாற்றப்பட்ட கதை என எதையும் கூற விரும்பாத ராசம்மாள், ”அத விடும்மா, அதெல்லாம் நமக்கு இனிமே இல்ல, இனி இந்த கோயில்தான் நமக்கு வீடு, இந்த நத்தமுடையார்தான் நமக்கு எல்லாமே” என்று பேச்சை முடித்தாள்.

சங்கரி யோசித்துக் கொண்டே ராசம்மாளின் மடியில் படுத்திருந்தாள்.

மணி ஒன்றைத் தொட்டிருந்தது. கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் ராசம்மாளிடம் தான் கொண்டு வந்திருக்கும் வெங்காயத்தைக் கோவிலுக்குள் காய வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க, ராசம்மாள் சரி என்றாள். இடுப்பிலிருக்கும் குழந்தையை இறக்கி விட்டு, வெங்காயம் காய வைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையின் தலை சற்று விநோதமாக இருக்கவே சங்கரி வைத்த கண் மாறாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். வேலை முடிந்ததும் குழந்தையை மீண்டும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ராசம்மாளிடம் சொல்லி விட்டு அப்பெண் கிளம்பிச் சென்றாள். சங்கரி அக்குழந்தையை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, இடுப்பிலிருக்கும் அக்குழந்தையும் சங்கரியைப் பார்த்து சிரித்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

”கேளும்மா” என்றாள் ராசம்மாள்.

“இல்ல, அந்தப் பையனோட தல கொஞ்சம் ச்சாஞ்ச மாரி இருக்கே அதான் என்னனு” என்று கேட்டு முடிப்பதற்குள், “அதாம்மா,அது ஒரு பெரிய கத. இந்த பையன் வயித்துல இருக்கும்போது அவங்க அப்பேன் மூக்கன் இருக்காம்லா, ஒரு நா ச்சாராயத்தக் குடிச்சிட்டு இங்க வந்து தேங்காய ச்சாமி தலைல ஒடச்சிருக்கான். நாம வேற அந்த நேரத்துல இங்க இல்லையா, குடிச்சிட்டு வந்த மூதி தேங்காயப் போயி ச்சாமி தலைல ஓடச்சாம்லா, அதுல ச்சாமி தல லேசா ச்சாஞ்சிட்டு. பொறந்த கொழந்த தலையும் லேசா ச்சாஞ்சிட்டு. இந்த ச்சாமி அவ்ளோ சக்தி வாஞ்சதாக்கும். இந்தக் கோயில்ல இருந்து யாரும் ஒரு கல்லக்கூடத் திருட முடியாது” என்று பழைய கதையைச் சொல்லி முடித்தாள் அவள்.

சங்கரி ஓடிப் போய் பார்த்தாள், சாமி தலையும் லேசாக சாய்ந்திருந்தது.

கடைக்குச் சென்று திரும்பி வந்தார் பண்டாரம். வாங்கி வந்த ஊறுகாயை வைத்து மூன்று பேரும் சாப்பிட்ட பின்னர் சற்று நேரம் படுத்திருந்தனர். வெயில் இறங்கத் தொடங்கியது.

“அண்ணாச்சி இருக்கீகளா இல்லையா?” என்று கேட்டவாறே மாட்டுடன் வந்தான் வேலன்.

“இந்தக் கோயில விட்டுட்டு நா எங்கடே போ போறேன். இங்கனதான் இருக்கேன். ச்சரி அதவிடு. நீ போன காரியம்லாம் நல்லவடியா முடிஞ்சிச்சா?”

“முடிஞ்சிச்சு முடிஞ்சிச்சு. நீருதான் இந்தக் கோயிலே கதின்னு கெடக்கீரு. போய் ஊருக்குள்ள பாரும்யா மனுசங்கெல்லம் எப்படி இருக்காங்கன்னு, அதவிட்டுட்டு” என்று வேலன் சொல்லவும் பண்டாரத்துக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. “போடே நீயும் ஓ ஊரும், நன்றி கெட்ட ஊரு, தீயதான் வைக்கணும். அதுக்கு இந்தக் காட்டு வாழ்க்கையே சொகமாத்தாம்டே இருக்கு” என்றார் கோபமாக.

“ச்சாமி ச்சாமின்னு இந்தக் கோயிலையே கெட்டி அழும், கடைசியில கோட்டிதான் புடிக்கப்போவுது ஒமக்கு. இந்தச் ச்சாமியாவே ஒமருக்கு சோறு போடப் போவுது? பாவம் மைனியும் புள்ளையுந்தான்” என்றான் வேலன்.

கண்கள் சிவக்க, கைகள் நடுங்க, பல்லைக் கடித்துக் கொண்டு பண்டாரம், “செத்த மூதி வாய மூடுல. எடுபட்ட பய. கூறு கெட்டத்தனமாப் பேசிக்கிட்டு. என்னல பேசுற? நீ ச்சொன்ன அதே ஊருக்குள்ள இருந்துட்டுத்தாம்ல இங்க வந்து கெடக்கேன். ஊராம்லா ஊரு? மனுசன மனுசனாவாடே மதிக்கிறானுவ? வண்டிக்காரப் பய ரோட்டுல அவங் குறுக்க வந்துட்டு என்ன குருட்டுப் பயலேங்குறான், கடைல கொள்ளையடிக்கிற மூதிட்ட என்னன்னு கேட்டா குருட்டுப் பயலுக்கு இவ்ளோ ஆகாதுங்குறான், ஒரு திருட்டுப் பய, அந்த நாய் என்ன குருடேன்னு சொல்லுது, குடிகாரப் பயலுவோ அங்கயும் இங்கயும் நின்னுட்டு குருட்டுப் பயலுக்குப் பொண்டாட்டி புள்ள எதுக்குங்குறான். கொஞ்சோம் ஏமாந்தா கட்டிருக்க கோவணத்தக்கூட அவுத்துட்டு விட்ருவானுவடே. அவ்ளோ கேவலமா இருக்கு ஒங்க ஊரு. ஒங்க ஊருக்கு இந்த காடே மேலு. நல்லாக் கேட்டுக்கோ எனக்குக் கண்ணுதாம்டே இல்ல மானம் மரியாதையெல்லாம் நெறையவே இருக்கு. ஏங்கெட்ட நேரம் இங்க வந்து கெடக்கேன். ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்குடே இந்த நிம்மதியான வாழ்க்க, கடவுள் புண்ணியத்துல குடிக்கிறதுக்கு கூழோ கஞ்சியோ கெடக்கி. இதவிட வேறென்னடே வேணும்? கோடி ரூவா குடுத்தாலும் இந்த சுகங்கிடைக்குமாடே ஒங்க ஊருல?” என்று தன் கோவத்தைக் கொட்டித் தீர்த்தார்.

இதனைத்தையும் கேட்டு பதில் ஒன்றும் சொல்ல முடியாத வேலன், மாட்டை அருகிலிருக்கும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு தலை குனிந்தவாறே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“ஏல வேலா, என்ன அண்ணாச்சி மேலக் கோவமாடே? பேசாமப் போற?”

“ச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணாச்சி. நீங்க சொல்றதும் நியாயந்தான”

“சரிடே அண்ணாச்சி ஏதாது தப்பாப் பேசிருந்தம்னா மன்னிச்சிக்கோ”

“அட விடுங்க அண்ணாச்சி, வயசுக்கு மூத்தவரு நீங்க போய் என்ட மன்னிப்பு கேட்டுட்டு” என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான்.

“பாவங்க வேலன். அவனப் போயி இந்த ஏச்சு ஏசிட்டீங்களே” என்றாள் ராசம்மாள்.

”இல்லம்மா, என்னன்னேத் தெரியல, அந்தப் பய அப்படிச் சொன்னதும் கோவம் ச்சுள்ளுன்னு வந்துட்டு அதான் மனசுல உள்ளத அப்படியே கொட்டித் தீத்துட்டேன். இப்போ ஏன்டா அப்படிப் பேசுனோம்னு ச்சங்கடமா இருக்கு” என்றார் பண்டாரம்.

“சரி விடுங்க நாளைக்கு வருவாம்லா பேசித் தீத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறிவிட்டு சாப்பிடக் கூப்பிட்டாள்.

மீதமிருந்த சோறையும் பழத்தையும் சாப்பிட்டு விட்டு மூன்றுபேரும் கோவில் திண்ணையில் ஒரு பாயை விரித்துப் படுத்தனர். சிறிது நேரத்தில் பண்டாரம் குறட்டை விடத் தொடங்கினார். ராசம்மாளுக்கும் கண் அசந்தது.

“எம்மா நா ஒன்னு கேக்கவா?”

பதில் ஒன்றும் இல்லாததால் மீண்டும் “எம்மா… எம்மா…” என்றாள்.

தூக்கத்தில் இருந்து விழித்த ராசம்மாள், “என்னதும்மா கேளு” என்றாள்.

“இல்ல அங்க பாருங்களேன் வயக்காட்டுக்குள்ள ஏதோ கொள்ளிப் பிசாசு மாரித் தெரியுது”.

“அதெல்லாம் ஒன்னு இல்லம்மா. பேயும் கெடயாது பிசாசும் கெடயாது. பேசாம கண்ண மூடிட்டுப் படு தாயி” என்று அவள் பயத்தைப் போக்கச் சொன்னாள் ராசம்மாள்.

பயம் தெளியாத சங்கரியோ, “அப்போ அது என்னதும்மா?” என்றாள்.

“அதா…? அதா…? அது வயக்காட்டுக்குள்ள பன்னி வரக் கூடாதுன்னு இந்தப் பயலுவ தீப்பந்தத்த ஏந்திட்டுப் போறானுவ. பயப்படாம கண்ண மூடிட்டுத் தூங்கும்மா,” என்று சொல்லிவிட்டு அவளை அணைத்துப் படுத்தாள்.

என்னதான் சொன்னாலும் சங்கரிக்கோ பயம் போகவில்லை. “பயம்மா இருக்கும்மா,” என்று மறுபடியும் கூறிய சங்கரியிடம், ”கோயிலுக்குள்ள என்னம்மா பயம்? பேசாமப் படு” என்று சொல்லிவிட்டு ராசம்மாளும் படுத்தாள்.

சற்று நேரம் கழித்து, “எம்மா நா ஒன்னு கேக்கவா?” என்று மறுபடியும் ஆரம்பித்தாள் சங்கரி.

“நீ இன்னும் தூங்கலையா? என்னம்மா கேக்கப் போற? என்றாள் ராசம்மாள்.

“அங்க பாரும்மா ஏதோ அசையிற மாரித் தெரியுது. எனக்குப் பயம்மா இருக்கு”

“எங்கம்மா?”

“அப்பாவுக்கு அந்தப் பக்கம்”

“ஐயோ அது அப்பாவோட ச்சாரத்தத் தொவச்சிக் காயப் போட்ருக்கேன். அது காத்துல ஆடுது. அதுக்குப் போய் பயமா? இந்தா ச்சாமி தின்னாரப் பூசிக்கோ பயம் வராது” என்று தான் இடுப்பில் முடிந்து வைத்திருக்கும் சுருக்கப் பையில் இருந்த திருநீரை எடுத்து சங்கரியின் நெற்றியில் பூசினாள்.

மூன்றுபேரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

திடீரென்று “ச்சில் ச்சில்” என்றொரு சத்தம். திடுக்கென்று விழித்த சங்கரி அசையாமல் படுத்திருந்தாள். மீண்டும் “ச்சில் ச்சில்” என்ற சத்தம். பயத்தில், அசையாமல் “எம்மா எம்மா” என்று ராசம்மாளைக் கூப்பிட்டாள்.

“என்னம்மா வேணும் ஒனக்கு?”

“ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் கேக்குதும்மா. பயமா இருக்கும்மா,” என்று நடுங்கினாள் சங்கரி.

கண் விழித்த ராசம்மாளுக்கும் அதே “ச்சில் ச்சில்” சத்தம். சத்தம் நெருங்கிக் கொண்டே இருக்க, ராசம்மாளுக்கும் பயம் தொற்றிக்கொண்டது.

“என்னங்க என்னங்க,” பண்டாரத்தை எழுப்பினாள் அவள்.

பண்டாரம் என்னவென்று கேட்க, ஏதோ சத்தம் கேட்பதாகக் கூறினாள்.
“என்ன சத்தம்?” என்று தூக்கம் தெளியாத பண்டாரம் மீண்டும் கேட்க, ஏதோ “ச்சில் ச்சில்” னு சத்தம் என்றாள். பண்டாரம் விழித்துப் பார்த்தார். எல்லாம் இருட்டாக இருந்தது. “ச்சில் ச்சில்” சத்தம் அவருக்கும் கேட்டது.

திடீரென்று சங்கரி “எம்மா அங்க பாரேன், ஏதோ வெள்ளையா” என்றாள்.

“அடி ஆமாடி” என்ற ராசம்மாளிடம் “என்னதும்மா?” என்று கேட்டாள் சங்கரி.

அதைப் பார்த்த ராசம்மாளுக்கும் பயம் வரவே பண்டாரத்திடம் “என்னங்க அங்க ஏதோ வெள்ளையா” என்று சொல்லி முடிப்பதற்குள் “அடப் பேசாமப் படுங்க. வெள்ளையாது நொள்ளையாது. நா போய் என்னன்னு பாக்குறேன்” என்று கூறிவிட்டு அருகில் வைத்திருந்த கட்டையை எடுத்துக் கொண்டு சென்றார் பண்டாரம்.

“யார்ல அது? ஏ ஒன்னத்தான கேக்குறேன் யார்ல அது இந்த நேரத்துல?” என்று கேட்டுக்கொண்டே சென்றார்.

“எப்பாஅந்தப் பக்கம் இல்லப்பா இந்தப் பக்கம்” என்றாள் சங்கரி.

பண்டாரம் திசையை மாற்றினார்.

“ச்சில் ச்சில்” சத்தம் இன்னும் நெருங்கியது.

“எப்பா பக்கத்துல போவாத, மாடு கயிற அவுத்துட்டு வருது. அதான் இந்தச் சத்தம்” என்று கத்தினாள் சங்கரி.

மாடு இவர்களை நோக்கி “ச்சில் ச்சில்” என்று புதிதாக கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சத்தத்தோடு நெருங்கியது.

பண்டாரமோ “ச்சூ ச்சூ” என்றவாறு எங்கோ சென்று கொண்டிருந்தார். ராசம்மாளும் “ச்சூ ச்சூ” என்று கூறிக் கொண்டே சங்கரியை கட்டி அணைத்துக் கொண்டாள். சங்கரியும் பயத்தினால் ராசம்மாளை இறுக்கி அணைத்துக் கொண்டு ராசம்மாளின் முந்தானைச் சேலையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள். வெள்ளை மாடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நெருங்கியது. சங்கரி பயத்தில் எம்மா என்று அலறினாள்.

திடீரென்று ஓடி வந்த வேலன் மாட்டைப் பிடித்து இழுத்து மரத்தில் கட்டி வைத்தான். மாடு திமிறிக் கொண்டிருந்தது.

“எப்பா வேலண்ணே வந்துட்டாக” என்றாள் சங்கரி.

“என்னப்பா வேலா இப்படிப் பண்ணீட்ட? ஒழுங்கா கட்டீருக்க வேணாமா?” என்றாள் ராசம்மாள்.

“ஏ அண்ணாச்சி மேல இன்னுங் கோவந்தனியலயாடே ஒனக்கு?” என்றார் பண்டாரம்.

பதிலொன்றும் சொல்லாமல் சென்றான் வேலன்.

“இந்தப் பய எப்பவும் இப்படித்தான் கேட்ட கேள்விக்கு பதிலே ச்சொல்ல மாட்டான். சரி இனி பயப்படாமப் போய்ப் படுங்க. அதான் அந்தப் பய வந்துட்டாம்லா. காலேல பேசிக்கலாம் அவன்ட” என்று சொல்லிவிட்டு “ஏல வேலா இப்பயாது ஒழுங்கா கட்டிருக்கியாடே” என்றார் கத்தினார்.

பதில் இல்லை.

காலை ஐந்து மணி, வழக்கம்போல் கோவிலை சுத்தம் செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தனர் பண்டாரமும் ராசம்மாளும். சங்கரி மட்டும் இன்னும் பயத்திலிருந்து மீளாமல் இருந்தாள் .சற்று நேரத்தில் மாட்டின் சத்தம் கேட்கவே, மூவரும் வெளியே வந்தனர்.

“ஏல கூறுகெட்ட மூதி, ராத்திரி இப்படியாடே பண்ணுவ? மாட்ட ஒழுங்கா கட்டாம அது அவுத்துட்டு வந்து எங்க தூக்கத்தக் கெடுத்து, கடைசியில வந்து கட்டிட்டுப் போற? என்னனு கேட்டா பதிலே ச்சொல்லல. அண்ணாச்சி மேலக் கோவமாடே? அதான் நேத்தே மன்னிப்பு கேட்டம்லா. இன்னும் கோவந்தீரலயா ஒனக்கு? வாயத் தொறக்க மாட்டிக்கிற?” என்று வேலனைப் பார்த்துக் கேட்டார் பண்டாரம்.

“என்ன அண்ணாச்சி கனவு கினவு கண்டீகளா? நானாது ராத்திரி வர்றதாவது? நேத்து ராத்திரி வீட்டுக்குப் போய் கட்டய சாச்சவந்தான், இப்பத்தான் எந்திச்சு வாறேன். என்ன மைனி, அண்ணாச்சிக்கு மண்டைக்குச் சரி இல்லமாப் போயிருச்சா? அப்போ நா சொன்னது சரியாப் போச்சு போல” என்று கூறியவாறே கயிற்றை அவிழ்த்து மாட்டை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“வேலா வேலா” என்று பண்டாரமும் ராசம்மாளும் கூப்பிட, வழக்கம்போல் பதிலேதும் சொல்லாமல் போய்விட்டான் அவன்.

இந்தக் கணம் – ந. ஜயபாஸ்கரன் (மொழிபெயர்ப்பு: Nakul Vāc)

கல்யானைகள் மதம்பிடித்து
அலைகின்றன இரை எடுக்க
சித்தரின் சிரிப்பையும் கரும்பையும்
உதாசீனம் செய்து.

சித்தரோ எனில்
புன்னகை துறந்து
பொன்னணையாளின்
நம்பிக்கையுடனும் பொன்னுடனும்
நீங்குகிறார் திருப்பூவனம்.

எதிர் ஏற முடியாமல்
தத்தளிக்கின்றன ஏடுகள்
திரு ஏடகத்தில்.

பிரம்மாண்டமான ஆலவாய்க்
கோவில் பிரகாரங்களில்
கொலையும் சூதும் மணமும் பேசி முடித்து
நீண்ட பகலில் உறங்குகிறார்கள் 
கல்தளங்களில்
இருண்ட மனிதர்கள்.

ஓடுகாலில் கொலையுண்ட
அடையாளம் அற்றவனின்
அங்காத்த வாயில் 
படிந்து செல்கிறது
வையை மணல்
பயணமாய்.


This Moment

Spurning 
The Ascetic's smile and cane
Stone elephants in rut
roam in search of prey.

The Ascetic meanwhile
renounces laughter and 
removes to Thirupuvanam
with Ponnanaiyaal's
Faith and Gold.

Unable to tide against the current
the palmyra-scripts bob helplessly
in Thiruvedakam.

In Madura's massive temple 
courtyards of stone
Dark saturnine men
sleep through the long day
Having shaken hands on
Murder, Plots, and Matrimony. 

Through the gaping mouth
of the murdered 
Anonymous runaway
wend the journeying
Sands of Vaikai.

This post was changed on March 11th, 2016, following the comments of சரவணன் . Original version of this translation is here – this moment

காட்சிகள் – சிகந்தர்வாசி

எதையோ பார்த்து சிரிக்கும்
சுருக்கங்களே  முகமான கிழவி

தூரத்தில் 
கதவு மூடும் ஓசை

பச்சை புல்வெளியில் சூரிய கதிர்கள் பட்டு
சிதறும் கனவுகள்

வட்டமான சூரியனை 
சதுரமாக மாற்றும் கண்ணாடி

யாரும் திறக்கத கதவு ஒன்று

'அருகே வா' என்று இடைவிடாது 
அழைக்கும் நதி

இல்லாத ஒருவனை நினைத்து
ஏங்கும் பெண்ணொருத்தி

கிணற்று தண்ணீரை நோக்கில் 
வேகமாக விரையும் கல்

பழைய நினைவுகளில் 
உறைந்த புன்னைகை

ஆசைகள் மேல் தூசு படிந்த
புகைப்படம்

2016 – நரோபா

ஜார்ஜ் ஆர்வெல் எனும் பிரபல எழுத்தாளரின் 1984 நாவலின் பிரதான கதாபாத்திரம் வின்ஸ்டன் ஸ்மித்தை பதாகைக்காக நேர்காணல் செய்திருக்கிறார் நரோபா. ஆங்கிலத்தில் நிகழ்ந்த நேர்காணல் தமிழ் இலக்கிய சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் தகவமைக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  

வின்ஸ்டன் ஸ்மித் ஒரு சிறிய அறிமுக குறிப்பு

ஸ்மித் ஓசியானியா ராஜ்ஜியத்தின் ஏர்ஸ்ட்ரிப் 1 (இன்று பரவலாக பிரித்தானிய ராஜ்ஜியத்தில் லண்டன் என அறியபடுகிறது) எனும் நகரில் வாழ்ந்தவர். இளமையிலேயே புரட்சியின் பொருட்டோ அல்லது எதிர்த்ததை பொருட்டோ அல்லது எதிர்க்க கூடிய சாத்தியமிருந்ததன் பொருட்டோ தந்தையையும், பின்னர் அசாதாரணமான சூழலில் தாயையும் தங்கையையும் இழந்தவர் (இழந்தவர் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும்.)

பின்னர் கட்சியில் சேர்ந்து ‘வாய்மைத்துறை அமைச்சகத்தில்’ வரலாற்றை திருத்தி எழுதும் கணக்கற்ற பணியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். மிகுந்த நுண்ணறிவும் கவனமும் கோரும் சவாலான பணி அது. முதல் மனைவியுடனான திருமண உறவு தோல்வியுற்று அவர் பிரிந்து சென்று பதினோரு ஆண்டுகளுக்கு பின்னர் அமைச்சகத்தின் சக ஊழியரான ஜூலியாவும் அவரும் அரசாங்க விதிகளுக்கு முரணாக காதல் கொண்டனர். “சிந்தை குற்றத்திற்காக” பிடிபட்டு, அரசுக்கு எதிராக சதி செயல் உட்பட அனேக குற்றங்களை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு ஒ பிரையன் தலைமையிலான குழு அவரது கோணல் மனோபாவங்களை நேராக்கி பரிவுடன் சீராக்கி விடுதலை செய்தது. ஓர் நன்னாளின் நற்தருணத்தில் ஓசியானியா ராஜ்ஜியத்தின் மரபிர்கிணங்க பின்னாலிருந்து மூளை சிதற சுடப்பட்டு உலகிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் மறைந்தார்.- ஆசிரியர் குழு

வின்ஸ்டன் ஸ்மித் மிக சுவாரசியமான ஆளுமை. அவருடைய அலுவலக சூழலில் நமக்கு அவர் அறிமுகபடுத்தப்படும் முதல் நொடியில் அதை உணர முடிந்தது. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும், தனக்குள் ஆழ்ந்து தனிமையில் இருந்தார். இறுதிவரை தெளிந்த போதத்துடன் இருக்க முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேர்காணலுக்காக அவரை துண்டு சீட்டு வழியாக தொடர்புகொண்டபோது (இனி இப்படி ரகசியம் காக்க வேண்டியதில்லை என்று பதில் எழுதி இருந்தார்) செஸ்ட்நட் மரத்தடி கஃபெயில் சாவகாசமாக சந்திப்பதாக முடிவு செய்துகொண்டோம். அவருக்கு ஒரு சின்ன குழப்பம் இருந்தது. “நீங்கள் எந்த காலகட்டத்து ஸ்மித்தை சந்திக்க விரும்புகிறீர்கள்?” என கேட்டு எழுதி இருந்தார். “சுடப்படுவதற்கு சற்று முந்தைய ஸ்மித்” என்பதே எனது பதில். ஆம் அவரையே நான் சந்திக்க விழைந்தேன்.

கோடை காலத்து அஸ்தமன சூரியன் இதமான வெம்மையுடன் தொலைதூரத்து மலை முகடுகளுக்கு கீழ் இறங்கி கொண்டிருந்தான். மேகங்கள் தங்களுக்குள் அனல் சுடரை பொத்தி வைத்திருந்தது போல் அதன் விளிம்புகளில் செம்மை படர்ந்திருந்தது. ‘தொலைதிரையில் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தேசபக்தி பாடல் ஒன்று ஒலித்துகொண்டிருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகி கிடந்தன. மூலையில் இருந்த மேஜையில் மூவர் ஒருவரை ஒருவர் வெறித்தபடி அமர்ந்திருந்தனர். ஆரோன், ரூதர்ஃபோர்ட், ஜோன்சாக இருக்கக்கூடும். தனது கனத்த உடலை தூக்கியபடி தனக்குள் முனங்குவதாக எண்ணிக்கொண்டு சற்றே உரத்த குரலில் ‘இருக்காது..எதுவும் நடக்காது..அஞ்சவேண்டியதில்லை” என முனகியபடி நிலையிழந்து கஃபேக்கு வெளியே நடந்து கொண்டிருந்தவர் திருவாளர் பார்சனாக இருக்கவேண்டும்.

வெட்டவெளியை நோக்கி திறந்திருந்த சாளரத்துக்கு அருகிலிருந்த மேஜையில் முதுகை காட்டியபடி அமர்ந்திருந்தார் ஒருவர். அவர் தான் வின்ஸ்டன் ஸ்மித்தாக இருக்க வேண்டும் என தோன்றியது. அருகே சென்று நோக்குகையில் உறுதி செய்து கொண்டேன். அவரை நெருங்கிய போது அவருக்கு எதிருக்கையில் அமர்ந்திருந்த சிறிய மஞ்சள் முகமும், கோரை தலைமயிரும் உடையவன் எழுந்து  என்னை பார்த்து புன்னகைத்தபடி கடந்து சென்றான் அவருடைய மேஜையின் மேலிருந்த சதுரங்க பலகையில் வெள்ளையும் கருப்புமாக பாதி விளையாடிய நிலையில் காய்கள் பரவி கிடந்தன சற்று கிழடு தட்டி போயிருந்தார். காதுக்கும் தாடைக்கும் இடையிலான பகுதி தழும்பேறி கிடந்தது. சற்று கூர்ந்து கவனித்தால் உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் சென்றகாலத்து வடுக்களை கண்டுகொள்ள முடியும் என தோன்றியது. வடுக்களை துழாவிய என் கண்கள் அவர் பற்களில் வந்து ஒருநொடி திகைத்து நின்றன.

வி – புதிய செயற்கை பல் வரிசை பொருத்தபட்டிருக்கிறது..நினைவிருக்கும் என எண்ணுகிறேன்..

ந- ஆம், இப்போது நினைவுக்கு வருகிறது..

ஸ்மித் நாற்காலியில் அமரும்படி வலது கையால் சைகை காட்டினார். தலையில் அணிந்திருந்த எனது தொப்பியை மரியாதை நிமித்தம் மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்துபோட்டு அமர்ந்தேன்.

வி- முதலாளிகளின் தொப்பி..

என்றபடி மெல்ல எதையோ எண்ணி நகைத்தார் .

வி- இது உங்கள் ஊர் வழக்கமில்லையே ?

ந- இல்லை தான்..ஆனால் ஏனோ உங்களை சந்திக்க வரும்போது இதை அணிந்து கொண்டு வரவேண்டும் என தோன்றியது..

ஏனோ எனக்கு அந்த பதிலில் நிறைவில்லை.

இரு நொடி நீண்ட அசவுகரியமான மவுனத்திற்கு பிறகு

ந- சரியாக சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்காகவே கொண்டு வந்தேன்..உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என தோன்றியது..நீங்கள் சுடப்படும் போது இதை அணிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்..

என்றேன் தயங்கியபடி

வி- நன்றி. ..மெல்லிய துணியால் ஆன தொப்பி..குண்டை எவ்வகையிலும் நிறுத்தாது..(சிறிய புன்னகை முகத்தில் விரிந்தது)..எனக்கு தொப்பியின் மீது யாதொரு நாட்டமும் இல்லை. ஆனால் வேண்டியவர்கள் அணிந்து கொண்டு போகும் போது பிடுங்கி வீசி எரியமாட்டேன்..அவ்வளவுதான்..

அலுமினிய லோட்டாவில் இருந்த திரவத்தை இரண்டு லோட்டாக்களில் ஊற்றிவிட்டு ஒன்றை என்னிடம் நீட்டினார்.

வி- விக்டரி ஜின்?

ந- நன்றி..வேண்டியதில்லை..

பரவாயில்லை என்ற மாதிரி தலையசைத்து மொத்தத்தையும் மளமளவென குடித்த பின் தலை கவிழ்த்து அமர்ந்திருந்தார்.

வி- நாம் இப்போது பேசலாம்..

எனது பார்வை எதிரே இருந்த தொலைதிரையின் மீது விழுந்தது. செவி கூர்ந்து விழி நோக்கி பெரியண்ணன் எங்களுக்காக எங்கோ அமர்ந்திருக்க கூடும்.

வி- அஞ்ச வேண்டியதில்லை..என்னிடம் அவர்கள் பெறுவதற்கு இனி எதுவும் இல்லை..அவர்கள் கனிவுடன் என்னை சகித்துகொள்வார்கள்..பேரன்பின் கணத்தில் பெரியண்ணன் மீது மூத்திரம் பெய்தால் கூட அவர்களுக்கு இப்போது நான் ஒரு பொருட்டல்ல..

நானும் புன்னகைத்தேன்.

ந- உண்மையிலேயே பெரியண்ணன் இருக்கிறாரா? நீங்கள் பார்த்ததுண்டா?

வி- நான் ஒ பிரையனை அறிவேன்..கோல்ட்பெர்க்கை திரையில் கண்டாலே கோபத்தில் பிதற்றும் கோரை கூந்தல் சக பெண் அலுவலகரை அறிவேன்…நான் பார்க்க வேண்டும் என்பதில்லை..அவர் இருக்கிறார்..எஞ்சியிருக்கும் எனது ஒவ்வொரு உயிரணுவும் அவரது இருப்பை உணர்கிறது..

ந- அப்படியானால் கோல்ட்பெர்க்?

வி- அவரும் தான் இருக்கிறார்..பெரியண்ணன் இருக்கும் வரை கோல்ட்பெர்க்கும் இருப்பார்..கோல்ட்பெர்க் இல்லாமல் பெரியண்ணன் எப்படி இருக்க முடியும்? வலுவான எதிரி வேண்டும் தோழரே, மக்கள் அஞ்சும் வலுவான எதிரி, அஞ்சி அடைக்கலம் கோரும் அளவுக்கு ஆற்றல் மிகுந்த எதிரி, துரோகிகளை இனம் காண ஒரு எதிரி, நாயகர்களை போல் எதிரிகளும் அமரர்களே..பெரியண்ணன் எத்தனைக்கு எத்தனை உண்மையோ அத்தனைக்கு அத்தனை கோல்ட்பெர்க்கும் உண்மை..

ந- அல்லது எத்தனைக்கு எத்தனை பொய்யோ அத்தனைக்கத்தனை பொய்..

வி- இன்னும் உங்கள் நாட்டில் புரட்சி வரவில்லை என எண்ணுகிறேன்..வந்திருந்தால் இந்நேரம் நாம் நிச்சயம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டோம் தோழரே..

ந- (நகைத்தேன்) நீங்கள் அதிகம் நகைக்கும் தருணங்கள் வாய்க்கவில்லை என்றாலும், உங்களுக்கு கூரிய நகைச்சுவை உணர்வு இருக்கும் என ஊகித்தேன்..கலகக்காரர்கள் அரசுக்கு எதிராக நகைப்பவர்களாகவே இருக்க முடியும்..

வி- நான் கலகக்காரன் இல்லை தோழரே..ஒருவேளை நானே அப்படி ஏதேனும் சொல்லியிருந்தாலும் கூட நம்ப வேண்டியதில்லை…நான் விரும்பிய வாழ்வை வாழ ஆசைப்பட்டேன்..அது நன்மையா தீமையா என்று கூட  பகுத்தறிய முடியாத மிக சாதாரண சுயநலமி நான்..

ந- இல்லை திரு.ஸ்மித், தொலைதூர நடைபயணம் கூட எங்கே தனிமையில் சிந்தனையை தூண்டிவிடுமோ என ஐயப்படும் தேசத்தில் வசிப்பவர் நீங்கள், கலவி கூட அமைப்பிற்கு எதிரான கலகமாகத்தான் இருக்க முடியும் எனும் சூழலில் வாழ்பவர் நீங்கள்…முழுக்க முழுக்க அபத்தமும் கயமையும் நிறைந்த ஒருலகில் ஒரு துளி என்றாலும் வாய்மையை சிந்தையில் சுமந்தாலும் கூட அவர்கள் கலககாரர்கள் தான்..

வி- சிந்தையில் வாய்மையை சுமப்பது- ஆஹ்..இதை அவர்களும் அறிந்திருக்கிறார்கள்..(லேசாக சிரிக்கிறார்) கண்டுகொண்டு களையெடுக்கவும் பயின்றிருக்கிறார்கள் சிந்தை காவலர்கள், பாவம் பார்சன்ஸ்..அவரை மீறி அவர் அகத்திற்குள் நுழைந்த ஒன்றுக்காக வருந்திகொண்டுள்ளார்.. ஒருவேளை கைதாவதற்கு முன்பான ஸ்மித்தை, குறைந்தது அறை எண் 101 க்கு செல்வதற்கு முன்பான ஸ்மித்தை நீங்கள் சந்தித்திருந்தால் ஆம் என மகிழ்வோடு ஒப்புக்கொண்டிருப்பேன்..

ந- ஒரு வேளை அடிப்படைவாதிகள் அரசாளும் காலம் வரலாம்..அன்று நான் என்னவாக இருப்பேன் என தெரியவில்லை..நீங்களாகதான் இருப்பேன் என நினைக்கிறேன் அரசு தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள கதைகளை தான் நம்பியிருக்கிறது, கதைகளை கதைகளால் தான் எதிர்கொள்ள முடியும் ஸ்மித். உங்கள் ஒப்புதல் எனக்கு முக்கியமில்லை. உங்கள் கரங்களை அகத்திற்குள் இறுக பற்றியபடி கடந்து செல்லவே முயல்வேன்.

ஸ்மித் பதிலேதும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். கீழே குனிந்து அவரது கெண்டை கால்களை நோக்கி கொண்டிருந்தார்.

எனது கோட்டு பாக்கெட்டில் இருந்து தாளில் பொதிந்திருந்த சிறிய பொருளை எடுத்து மேஜை மீது பிரித்து அவரிடம் காட்டினேன். தந்தத்தால் செய்யப்பட்ட சிறிய கப்பல் ஒன்று கண்ணாடி உருளைக்குள் மிதந்து கொண்டிருந்தது. அதை கையில் எடுத்து உற்று பார்த்து கொண்டிருந்தார் ஸ்மித்.

வி- குறைந்தது நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை எடுத்து வந்திருக்கலாம்..என்னே ஒரு கற்பனை வறட்சி..

.ந- இல்லை..இதில் ஒரு வசீகரம் உண்டு..உங்களை அறிந்துகொள்வதற்கு முன்னரே இதை வைத்திருந்தேன் என பொய் கூற மாட்டேன்..தேடி சென்று வாங்கினேன்..எப்போதும் எனக்கு நான் வாழ நினைக்கும் வாழ்வை இது நினைவுறுத்தும்..நானும் கூட எண்ணுவதுண்டு..இதோ எனக்கே எனக்கான பிரபஞ்சம்..நான் தனித்திருக்க, தப்பித்துகொள்ள, மறைந்துகொள்ள, மகிழ்ந்திருக்க..

வி- (பாதியில் இடைமறித்து) அப்படி ஒன்றில்லை..அது வெறும் கற்பனை…கற்பனை மட்டுமே..

என்றபடி சட்டென அதை மேஜையின் மறு எல்லைக்கு உருட்டிவிட்டார். கண்ணாடி உருளைக்குள் கப்பல் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தது.

இல்லை அப்படியில்லை என மறுத்து வாதிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தி தள்ளியது..

ந- இல்லை ஸ்மித்..நிச்சயம்

மீண்டும் வேகமாக இடைமறித்து பேச துவங்கினார்..

வி- இல்லை நண்பரே..நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள், நீங்கள் எண்ணுவது போல் எங்கிருந்தும் மறைந்துகொள்ள முடியாது, ரகசியமும் அந்தரங்கமும் எவருக்கும் இங்கு இல்லை…உங்கள் ரகசியங்களை நானறிவேன்’ என எவரும் உங்களிடம் சொல்லாதவரை நீங்கள் நம்ப போவதில்லை..

என்னை நோக்காமல் எங்கோ அப்பால் நோக்கி பேசி கொண்டிருந்தார். சினம் தலைக்கேற உரத்த குரலில் பேச துவங்கினேன்..

ந- ஒருநிமிடம்..திருவாளர்.ஸ்மித்..ஆர்வெல் உங்களை படைத்த சூழலை பற்றி நீங்கள் அறிவீர்களா? அணுகுண்டு வெடித்து பலர் இறந்த இரண்டாம் உலகப்போர் முடிந்த பின், அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த பனிப்போர் காலகட்டமது..அவர் அஞ்சியது போல் உலகம் மூன்று துண்டங்களாக பிரிந்து போய்விடவில்லை..முன்பை விட போர்கள் வெகுவாக அருகிவிட்டது….பொருளாதாரமும் மனித வளமும் தான் இன்று ஆற்றலையும் அதிகாரத்தையும் நிர்ணயிக்கிறது….நீங்கள் காலாவதி ஆகிவிட்டீர்கள் ஸ்மித்..உங்கள் படைப்பிற்கு எந்த பொருளும் இல்லை..பிறரின் நம்பிக்கை கோட்டைகளை சரித்து அழிப்பதற்கு முன், வெறும் வீனச்சம் உருவாக்கிய வறட்டு பாத்திரம் நீங்கள் ஸ்மித்….உங்கள் எல்லையை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்..

மூச்சு வாங்கியது.

மெதுவாக மற்றொரு லோட்டாவில் ஜின்னை நிரப்பிகொண்டிருந்தார்.

வி- இருக்கலாம், நீங்கள் கூறுவது உண்மையாகவும் இருக்கலாம், காலாவதியான என்னை நீங்கள் சந்திக்க இத்தனை முயற்சித்திருக்க வேண்டியதில்லை…எனது சிறுபகுதி உங்களுள் எப்படியோ புகுந்துகொண்டது தோழரே..நான் உங்களின் ஒரு பகுதியாக, உங்கள் மொழியை பேசிக்கொண்டிருக்கிறேன்..எனக்கு எவ்வித நோக்கங்களும் இல்லை..எனது உலகிற்கு அப்பால் சென்று ஆர்வெலின் நோக்கங்களை ஆராயும் ஆற்றல் எனக்கில்லை..ஆனால் ஒன்றுண்டு..போர்கள் அருகி இருக்கலாம், போரச்சம் இல்லாமல் ஆகிவிட்டதா என்ன?

என் கைகள் நடுங்கி கொண்டிருந்தன. பதிலேதும் கூறாமல் சிலைந்து அமர்ந்திருந்தேன்.

வி- நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள் நண்பரே..எவரும் தப்ப முடியாது….நீங்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உள்ளாடையின் நிறம் வரை எல்லாமும் அவர்களுக்கு தெரியும்..அவ்வளவு ஏன்? உங்கள் பிறப்புறுப்பின் கரிய மச்சம் கூட அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள்..ஒருவேளை உங்கள் வாழ்வில் எதுவும் நிகழாமல் போகலாம்..உங்களால் உங்கள் சிந்தனைகளால் ஆபத்தில்லை என்பது வரை நீங்கள் நிம்மதியாக வாழ்ந்து மறைய அனுமதிக்க படுவீர்கள், உங்கள் பிறழ்வுகளும் புரட்சிகளும் முன் தீர்மானிக்கப்பட்டவை தோழரே, பழகிய தடத்தில் அனுமதிக்கப்பட்ட எல்லைவரை சென்று வரலாம்..அதற்கப்பால் செல்ல முனைந்தால் சுவடின்றி அழிக்க படுவீர்கள்…

சன்னதம் போல் அவர் குரல் உயர்ந்து அடங்கி சட்டென மவுனத்திற்குள் புதைந்து கொண்டது..

என்னுடல் இன்னமும் நடுங்கிகொண்டிருந்தது. மூச்சை சீராக்க முயன்றேன்.

 வெளியே இருள் கவிய துவங்கியது. செந்நிற தீற்றல் தூரத்து நினைவாக எங்கோ ஒடுங்கி கொண்டிருந்தது.

ந- மன்னிக்க வேண்டும் ஸ்மித், நான் சற்று நிதானம் தவறிவிட்டேன்..

மாறா மெல்லிய புன்னகையுடன் மவுனமாக அமர்ந்திருந்தார்.

‘தொலைதிரையில்’ ‘வெற்றி’ ‘வெற்றி’ என ஒரு பெண் குரல் பிளிறியது. ஆங்காங்கு அமர்ந்திருந்த மக்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

வி- இந்த அநாகரீக செயலுக்கு மன்னிக்கவும் …இந்த வெரிகோஸ் புண்..

என்றபடி குனிந்து கெண்டைக்கால் அருகே லேசாக சொறிந்து கொண்டார்.

ந- பரவாயில்லை..நீங்கள் நிலையழிந்து உள்ளீர்கள் என புரிந்து கொள்கிறேன்..அப்படி இருக்கும் ஒவ்வொருமுறையும் இந்த வெரிக்கோஸ் புண் அரிப்பு அதிகமாவதை கவனித்திருக்கிறேன்..

ஸ்மித் சாளரத்தின் வழியே எதையோ வெறித்து நோக்கினார். அவர் கண்களில் எவ்வித சலனமும் இல்லை. தொலைவில் யாரோ ஒரு பெண் குழந்தையை தூக்கியபடி பாடி கொண்டிருந்தாள். அந்த ஓசை மிக சன்னமாக கேட்டு கொண்டிருந்தது.

சட்டென திரும்பி நேராக என் கண்ணை நோக்கியபடி

வி – நீங்கள் ஜூலியாவை பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

கணநேர யோசனைக்கு பின்னர்

ந- உங்கள் அளவுக்கு அவருக்கு அறசிக்கல் இருந்திருக்காது..நீங்கள் அவசியத்திற்கு மேல் அறிந்து கொண்டீர்கள்..அவரை பொறுத்தவரை விதி முறை என்றால் அதை மீற வேண்டும்..அதனால் ஏற்படும் கிளர்ச்சியை அனுபவிக்க வேண்டும் ..அவ்வளவு தான்..

வி- இல்லை..நீங்கள் எண்ணுவது போல் அத்தனை எளிதல்ல..நான் எனது உணர்வுகளுக்கு தேவையான ஆதாரங்களை நியாயங்களை தேடி அலைந்தேன்..அவளுக்கு அவையெல்லாம் தேவைப்படவில்லை..இயல்பிலேயே அறிந்திருந்தாள்..கச்சிதமாக தன்னை மறைத்து கொண்டாள், ஒருவகையில் எனது முட்டாள்தனத்தால் அவளும் சிக்கிகொண்டாள்..ஆனால் அவர் அதை எதிர்பார்த்திருப்பாள்..அதிலும் தனது மீறலை வெளிபடுத்த முயன்றிருப்பாள்..

வாயிலில் ஆராவாரம் குறைந்தது. தொலைதிரை சட்டென மவுனித்தது..

வி- உங்களுக்கு அதிக நேரமில்லை..அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்….இறுதியாக ஏதாவது கேட்க வேண்டுமானால் கேட்கலாம்

ந- ஏதேதோ கேட்க எண்ணியிருந்தேன்..உங்கள் அன்னையை பற்றி, தங்கையை பற்றி, முதல் மனைவியை பற்றி, பிறகு காதலை பற்றி, முழுமையடையாத அந்த பாடலை பற்றி….ஆனால் இப்போது முடியுமா என தெரியவில்லை..

வி- ஏன்?

ந- தெரியவில்லை..உங்களுக்கு ஒ பிரையன் மீதிருந்த விளக்கிக்கொள்ள முடியாத பிரேமையை போல் ஏதோ ஒன்று..உங்களிடம் என்னால் பேச முடியும் ..ஏதோ ஒருவகையில் எனக்கு அனுக்கமானவர் என தோன்றியது..நீங்கள் எனக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை ஏற்கனவே சொல்லிவிட்டதாக தோன்றுகிறது..

சீரான காலடியோசையை அருகிலென கேட்க முடிந்தது. இதற்காகவே காத்திருந்தது போல் எவ்வித மறுப்பும் இன்றி எழுந்தார். வாழ்வை உறிஞ்சி உயிர் மட்டும் எஞ்சியிருக்கும் வெட்டவெளி என அவர் உடல் இலகுவாக எழுந்தது.

வி- உங்களை சந்தித்தது மகிழ்ச்சி தோழரே, உங்கள் நாள் இனிதாகுக..

என போகிற போக்கில் மேஜையின் மூலையில் கிடந்த கண்ணாடி உருளையை என்னைநோக்கி தள்ளிவிட்டு சலனமின்றி வெளியேறினார்.

கருப்புடை அணிந்த காவலன் அவரை வாய்மை துறை அமைச்சகத்துக்கு அழைத்து செல்வான். அதன் தூய இருளற்ற வெண்பளிங்கு வளாகத்தில் அமைதியாக எவ்வித வன்மமும் இன்றி நடந்து கொண்டிருப்பார். இப்போது பின்னாலிருந்து தோட்டா தலையில் பாய்ந்திருக்கும். இரு துளி கண்ணீர்..வருத்தங்களும் குரோதங்களும் அற்ற தூய்மையான கண்ணீர் வடித்திருப்பார். முழுமனதோடு பெரியண்ணனை நேசித்தபடி மூளை சிதற மரித்திருப்பார்.

எங்கள் மேஜையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தான் ஒருவன். இரு லோட்டாக்களையும் கால்வாசி நிரம்பியிருந்த ஜின் புட்டியையும் எடுத்து சென்றான். இனி இங்கிருக்க வேண்டியதில்லை. காலடிகள் கணக்க மெல்ல நடந்தேன். திரும்பி நோக்கியபோது, மூலையில் சாளரத்துக்கருகே இருக்கும் மேஜையில் எவரோ ஒருவர் அமர்ந்திருந்தார். அருகே சிதறிய காய்கள் கொண்ட சதுரங்க பலகையும் பெரியண்ணனின் விசால முகம் நிறைந்த விக்டரி ஜின் புட்டியும் இரண்டு அலுமினிய லோட்டாக்களும் இருந்தன. எதிரே எவனோ ஒருவன் அமர்ந்திருந்தான். நல்ல உயரம். கறுப்பன். தலையில் கருப்பு துணியை வித்யாசமாக கட்டியிருந்தான். கழுத்தில் ஏகப்பட்ட சங்கிலிகள் தொங்கி கொண்டிருந்தன. கையில்லாத சட்டையிலிருந்து அவன் புஜங்கள் புடைத்து எழுந்தன. அலுமினிய லோட்டாவிலிருந்த ஜின்னை ஒரே மடக்கில் குடித்துவிட்டு கையை ஆட்டி ஆட்டி பேசிகொண்டிருந்தான். அங்கிருந்தபடியே என்னை நோக்கி அங்கிருந்து புன்னகைத்தான். நானும் புன்னகைத்தேன். கோட்டு பாக்கெட்டில் இருந்த கண்ணாடி உருளையை உருட்டியபடி கஃபெயை விட்டு வெளியேறினேன். காற்றில் ஈரம் கூடியிருந்தது. ஒருவேளை இன்று மழைவரகூடும்.