ந பானுமதி
என்னுடன் இருப்பவர் சிலரே
எப்பொழுதாவது வரும் விருந்து
எந்தன் சமையலறை ஜன்னல்
வழியே வண்ணக் கழுத்துடன் வந்து
போகும் மாடப்புறா இரண்டு
ந பானுமதி
என்னுடன் இருப்பவர் சிலரே
எப்பொழுதாவது வரும் விருந்து
எந்தன் சமையலறை ஜன்னல்
வழியே வண்ணக் கழுத்துடன் வந்து
போகும் மாடப்புறா இரண்டு
(சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். அவசரமும் பதைபதைப்பும் கூடிய அவளது உடலசைவுகள் வினோதமாகத் தெரிந்தன. இப்போதே நேரம் ஆகிவிட்டது. இதுவரை பஸ் வரும் சப்தம் ஏதும் கேட்காமல் இருப்பதே ஆச்சரியம். ஈச்சம்பாறையின் மேலேறி நின்றுக்கொண்டு தூரத்தில் தெரியும் தார்ரோட்டில் பஸ் ஏதும் வருகிறதா எனப் பார்த்தேன். நல்லவேளை. வளைவுகளில் நெளிந்து, மின்னி ஓடும் ஒரு கருநதியாய் தார் ரோடு வெறுமையாகக் கிடந்தது. ஆனால் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இளம் பசுமையான வெற்றிலைக் கொடிகள் அகத்தி மரத்தில் படர்ந்திருக்கும் தோப்புகளின் ஊடாக கடந்து வரும் ஹாரன் சப்தம் கேட்டுவிடக்கூடும். அதற்குள் கிளம்பிக்கூட் ரோட்டை அடைந்துவிட்டால் பிடித்துவிடலாம் பஸ்ஸை.
கடவுளே! கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…
சாயங்காலம் மாட்டுக்கொட்டாய்க்கு ‘புளஸ்தண்ணி’ வைக்கப் போன பாட்டி திடீரென கத்தி கூப்பாடு போட்டாள். புளியங்கொட்டை மாவில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன் கொட்டாயை நோக்கி ஓடினாள். தும்பைப் பூக்களை வாயில் வைத்து தேன் உறிஞ்சியபடியே அம்மாவுக்கு பின்னால் நானும் ஓடினேன். கருப்பி அசை போடவில்லை. அவள் உடம்புக்கு என்னமோ ஆகியிருந்தது. அழகான கொம்புகளுடன் கூடிய அம்முகத்தின் வசீகரம் காணாமல் போயிருந்தது. அசை போடாத நிச்சலனத்துடன் தரை வெறித்திருந்த அதன் பார்வையில் பீதியும் வெறுமையும் சேர்ந்த கலவையின் மின்னல்கள் பளிச்சிட்டன. நான் அருகில் சென்று அவள் கழுத்தை கைகளால் வளைத்து கருப்பியின் முகத்தை என்னை நோக்கித் திருப்பினேன். அதன் கழுத்தில் இருந்த தொன்னச்சி பூச்சிகளையும் உண்ணிகளையும் பிடுங்கி நசுக்கி போட்டேன். அளவற்ற வாஞ்சையுடன் கருப்பியின் கழுத்தில் என் முகத்தை பதித்துக்கொண்டு கைகளால் தடவிக்கொடுத்தேன். வழக்கமாக நான் இப்படி செய்தவுடன் கருப்பி உற்சாகமாக தலையை ஆட்டுவாள். கொம்பைத் தாழ்த்திக் கொண்டு தடவிக் கொடுப்பதற்கு வாட்டமாக தலையைக் காட்டுவாள். ’பேசற அறிவு ஒண்ணுதான் இல்ல, மத்த எல்லாம் இருக்கு’ என அம்மா செல்லமாக திட்டுவாள். ஆனால் அன்றைக்கு கருப்பியிடம் எந்த அசைவும் இருக்கவில்லை. என் கருப்பி வழக்கம் போல தலையை ஆட்டவில்லை. தடவிக் கொடுப்பதற்காக முகத்தை காண்பிக்கவில்லை… உனக்கு என்ன ஆகிவிட்டது கருப்பியே… ஏன் இப்படி இருக்கிறாய்… நீ இப்படியே இருந்தால் சூடு கொட்டைகளை கொண்டு வந்து பாறையில் தேய்த்து சூடு வைத்துவிடுவேன்…
“அத தொந்தரவு பண்ணாத… எழுந்து தூர வாடா” என்றாள் அம்மா. நான் துக்கத்துடன் எழுந்து வந்து அம்மாவுக்கருகில் நின்று கொண்டேன். இதற்குள் விஷயம் தெரிந்து பக்கத்து தோப்பிலிருந்து கிருஷ்ணா பாட்டி வந்தாள். “ஒண்ணும் பயப்படாத கண்ணு… ஜீரண கோளாறாத்தான் இருக்கும்… வெத்தலயில பெருங்காயத்த வெச்சி ஊட்டக் கொடுத்தா சரியாப் போயிடும்…’ என்றாள்
வேடி மாமாவும் செல்வமும் பெருங்காயத்தை வெற்றிலைக்குள் மடித்து வைத்து கருப்பிக்கு ஊட்டினார்கள். வேடி மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொள்ள செல்வம் கருப்பியின் வாயை வலியத் திறந்து பிடித்துக்கொண்டு உள்ளே வெற்றிலை மூடிய பெருங்காயத்தை திணித்தார். நடப்பது புரியாமல் மிரண்டு திமிறிய கருப்பியைப் பார்க்க பார்க்க எனக்கு அழுகை கிளறிக் கொண்டு வந்தது.
“அர மணி நேரம் பாருங்க… அதுக்கப்புறமும் அச திரும்பலன்னா வைத்தியனதான் போய் கூட்டி வரணும்…” என்று சொல்லிவிட்டு வேடி மாமா போய்விட்டார்.
காற்றடிக்கையிலெல்லாம் உதிர்ந்தபடியே இருந்த புளியம்பூக்களை வாயில் போட்டு மென்று மென்று துப்பியபடியே நான் கருப்பியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரைமணி நேரத்திற்கு மேலாகியும் கருப்பி அசையே போடவில்லை. லேசாக கருப்பியின் வாயில் இருந்து ஜொள் ஒழுகத் தொடங்கியது. உடனே பதறியடித்துக் கொண்டு ராமசாமியைக் கூட்டி வருவதற்காக அம்மா கிளம்பினாள். கூடவே நானும் கிளம்பினேன்.
ராமசாமி எங்கள் பக்கத்தின் ஒரே நாட்டு வைத்தியன். மாடுகளின் நோய்களுக்கும் எலும்பு முறிவிற்கும் வைத்தியம் செய்வதுதான் அவன் தொழிலாக இருந்தது. மனிதர்களுக்கென வரும் சில ரகசிய நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் அவன் தேர்ந்தவனென பிற்பாடு அறிந்தேன்.
ராமசாமியை தேடி நானும் அம்மாவும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஊருக்கு வெளியே அடர்ந்த தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே தென்படும் ஒற்றை வீடுகளில் ஒன்றுதான் எங்களுடையது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் கூப்பிடு தூரங்களில் நாலைந்து குடிசைகள் மட்டுமே இருந்தன. எங்கள் வீட்டிலிருந்து அடிக்கடி ஊருக்குள் போய் வருபவனாக நான் இருக்கவில்லை. ஊருக்குள் போய் எனது பள்ளி நண்பர்களுடன் விளையாடுவது என்பது எனக்கொரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வந்தது. வழி நடுவில் ‘ஒம்போது புளியமரம்’ என்றொரு இடம் இருப்பதே காரணம். அருகருகே எழும்பிய ஒன்பது புளிய மரங்கள் தம் நீண்டர்ந்த கிளைகளுடன் அங்கே வியாபித்திருந்தன. பல பேய்களும் ஒரு முனியும் அங்கு உலவுவதாக கதைகள் சொல்லப்பட்டன. ஒருவித மயான அமைதியுடனும், விவரிக்க முடியாத இருளின் கதிர்களுடனும் அந்த இடம் காணப்பட்டது. செழித்த நிழற்குளுமை பூத்துக்கிடக்கும் அந்த இடத்தை கடந்து போகும் போதெல்லாம் திகில் கொடிகள் உடம்பைச் சுற்றத்தொடங்க பயக்குமிழிகள் பூத்து உதிரும். அந்த இடம் வந்தவுடன் நான் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன்.
அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தைக் கடக்கும்போது எனக்கு பயமே தெரிவதில்லை. அம்மாவின் அருகாமை என்பது சகல அச்சங்களையும் எரித்துவிடக்கூடியதாக இருக்கிறது. சொரசொரப்பான அவள் உள்ளங்கையிலிருந்து உணர நேர்கிற கதகதப்பு சொல்லமுடியாத பல விஷயங்களினால் ஆனது. எத்தனையோ ஆண்டுகள் கழிந்து போயினும் இன்னும் இதமூட்டுவதாய் அம்மாவின் அந்த ஸ்பரிசமே எஞ்சி, அணையாது மனத்திரியில் நின்றொளிரும் அருட்சுடராக வாழ்வெளி எங்கும் பிரகாசிக்கிறது.
நாங்கள் ஊருக்குள் போன போது ராமசாமி வீட்டில் இல்லை. ஏதாவது சாராயக் கடையில் இருப்பானென்று யாரோ சொன்னார்கள். அருகருகே இருந்த இரண்டு சாராயக்கடைகளிலும் அவன் இல்லை. மூன்றாவது கடை கொஞ்சம் தொலைவில் இருந்தது. ஓடிச்சென்று விசாரித்ததில் அங்கேயும் அவன் இல்லையென்று சொன்னார்கள். அப்போதுதான் குடித்து முடித்திருந்த மூர்த்தி குழறியபடியே சொன்னான், ”அடடா அச போடலன்னா கஷ்டமாச்சே… இப்பத்தான் ராமசாமி இந்த ஓணில போனான். சுருக்கா நடந்தா புடிச்சிறலாம்…”
பதற்றத்தையும் அவசரத்தையும் வரித்த பாதங்களூடன் நானும் அம்மாவும் இருள் அடர்ந்திருந்த அந்த ஓணி வழியில் நடந்தோம். வழியின் இரு பக்கத்திலும் அடர்ந்திருந்த பனைமரங்களில் இருந்து கள் வாசம் சிந்திக்கொண்டிருந்தது. எனக்கு மிகப்பிடித்தமான வெல்வெட் பூச்சிகள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலக்கடலை வயலிருந்து சிள்வண்டுகள் ரீங்கரித்தன. சற்று தொலைவில் தள்ளாடியபடியே யாரோ நடப்பது நிழலைசைவாகத் தெரிந்தது. நல்லவேளை. ராமசாமிதான், இனிக் கவலையில்லை. எப்படிப்பட்ட நோயையும் குணப்படுத்தி விடுவதில் ராமசாமி தேர்ந்தவன்.
அவனிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தோம். தள்ளாடியபடியே நடந்தான். எவ்வளவு போதையிலும் எதையும் கவனித்து நிதானிக்கும் சித்தம் பெற்றவன்தான் அவன். ஆனால் அன்றைக்கு வழக்கத்தை விட அதிகமாயிருந்தது போதை. அதிகரித்துக்கொண்டே வந்தது அவன் நடையின் தள்ளாட்டம். மாட்டுக்கொட்டாய்க்கு கொஞ்ச தொலைவிலேயே விழுந்தவன் விழுந்தவன்தான், எழவே இல்லை. எழுப்பி எழுப்பி பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தோம். கருப்பி அப்படியேதான் இருந்தாள். அசை போடவில்லை. இனி மருத்துவரைக் கூட்டிவர போச்சம்பள்ளிதான் போகவேண்டும். சற்று நேரத்தில் பஸ் வந்துவிடக்கூடும், அதற்காகத்தான் கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். நான் அப்போதுதான் சுட்டு வைத்திருந்த பலாக்கொட்டைகள் சிலதை உண்பதற்காக எடுத்து ஜோபியில் போட்டுக்கொண்டு அம்மாவுடன் கிளம்பினேன்.
இரவு எட்டு மணிக்கு நாங்கள் போச்சம்பள்ளி போய் சேர்ந்தோம். மருத்துவரின் வீடு எங்கிருக்கிறதென தெரியவில்லை. முன்பு எப்போதோ ஒருமுறை மருத்துவர் வீட்டுக்கு போயிருப்பதாகவும் இப்போது மறந்துவிட்டதாகவும் அம்மா சொன்னாள். பக்கத்திலிருந்த தேநீர் கடையில் விசாரித்தோம். கூட நடந்து வந்த ஒன்றிரண்டு பேரிடம் கேட்டோம். யாருக்கும் தெரியவில்லை. தெளிவில்லாமல் ஒரு தெருவில் நடந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த ஒருவர் சொன்னார், ”இப்படியே நேரா போய் இடது பக்கம் திரும்பினா மூணாவது வீடு…”. மூன்று மாதங்களுக்கு முன்பு செத்துப் போயிருந்த என் அப்பாவைப் போல மீசை வைத்திருந்த அவரை திரும்பி திரும்பி பார்த்தபடியே நான் நடந்தேன்.
மருத்துவரின் வீடு வெளிர்நீல நிறத்தில் இருந்தது. வீட்டின் முன்புறத்தை அநேக வகையான பூச்செடிகள் நிறைத்திருந்தன. மைசூரிலிருந்து அவர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருந்தனர். சந்தோஷக் கூச்சல்களும், கொண்டாட்ட ஆரவாரங்களும் அவர் வீட்டிலிருந்து ததும்பி வந்தன. மருத்துவர் வீட்டில் இல்லை. பக்கத்தில் எங்கோ போயிருக்கிறார் என்றும் சீக்கிரத்தில் வந்துவிடுவார் என்றும் அவர் மனைவி சொன்னார். நாங்கள் தாழ்வாரத்தில் உட்கார்ந்தோம்.
கருப்பி இதுமாதிரி ஆனதற்கு ஏதாவது விஷப்பூண்டை மேய்ந்ததுதான் காரணமாக இருக்குமென்று அம்மா சொன்னாள். கருப்பி பெரும்பாலும் பெரிய காவாயில்தான் மேய்ந்துக் கொண்டிருப்பாள். ’பெரியக்காவாய்’ என்று அழைக்கப்பட்டாலும் அவ்வளவு பெரிய கால்வாயாக இல்லை அது. அதிக மழை பொழிந்து எப்போதாவது செல்லநாக ஏரி நிரம்பி வழியும் போதுதான் அந்த கால்வாயில் தண்ணீர் வரும். என்றாலும் எப்போதும் ஈரம் சொதசொதக்கும் மண்ணைக் கொண்டதாக அந்த கால்வாய் இருந்தது. கரிசாலையும் பொண்ணாங்கண்ணியும் நிறைந்து கிடக்கும் அங்கே நிறைய வண்ணத்து பூச்சிகள் பறந்தபடியே இருந்தன. அந்த இடம்தான் வண்ணத்து பூச்சிகளின் கோயில் என்று கீதாக்கா சொன்னாள். மிக நல்ல அக்காவாகவே அவள் இருந்தாள். சாப்பிட்டிருக்காத வாயின் கசப்பை நான் எச்சிலாக துப்பிக் கொண்டிருந்த தருணங்களில் எல்லாம் அம்மாவுக்கு தெரியாமல் பூசணி இலையில் வைத்து சோறும் குழம்பும் ஊற்றிக் கொடுத்த விரல்கள் அவளுடையதாக இருந்தன. பௌர்ணமிதான் வண்ணத்து பூச்சிகளின் பண்டிகை நாளென்றும் வானத்துக்கு மேலே இருக்கும் வண்ணத்து பூச்சிகளின் சாமி ராட்சஸ உருவத்துடன் பெரிய சிறகுகளுடன் பறந்தபடி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கீழே வரும் என்றும் இரவில் ஒண்ணுக்கிருப்பதற்காக வெளியே வந்த போது இரண்டு முறை அவற்றை தான் பார்த்திருப்பதாகவும், அழகான அவைகளை பிடித்து விளையாடி ஒருபோதும் துன்புறுத்தக்கூடாதென்றும் சதா சொல்லிக் கொண்டிருந்த அவள்தான் ஒரு பௌர்ணமி தினத்திலேயே யாருடனோ ஓடிப்போனவள் ஆனாள்.
எனக்கும் கருப்பிக்கும் வண்ணத்துபூச்சிகளின் கோயிலை ரொம்பவும் பிடித்திருந்தது. விதவிதமான நிறங்களில் பறந்து களித்திருக்கும் வண்ணத்துபூச்சிகளின் மீது கருப்பிக்கு ஏதோவொரு ஆர்வமும் கவர்ச்சியும் இருந்ததென்றுதான் நினைக்கிறேன். நான் கவனித்திருந்த பல சமயங்களில் கருப்பி புல்லைக் கூட மேயாமல் வண்ணத்துபூச்சிகள் பறப்பதையே பார்த்துக்கொண்டிருப்பாள். ஒருவேளை அங்கே ஏதாவது விஷப்பூண்டுகள் இருந்திருக்குமோ? அது வண்ணத்து பூச்சிகளின் கோயிலாயிற்றே… எப்படியிருந்தாலும் கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…
மருத்துவரின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறுமி நந்தியாவட்டைப் பூக்கள் கொய்து கொண்டிருந்தாள். மருத்துவரின் மகளாகவோ வந்திருக்கும் விருந்தினர்களின் மகளாகவோ இருக்கலாம். பூக்களைக் கொய்யும் விளையாட்டில் சலிப்படைந்தவள் போல காணப்பட்டாள். நான் எழுந்து அவள் அருகே சென்றேன். ஒருசில விளையாட்டுகள் மூலம் நாங்கள் வெகு சீக்கிரமே நட்பில் ஒன்றிவிட முடிந்தது. என் ஜோபியிலிருந்த சுட்ட பலாக்கொட்டைகளை அவளிடம் எடுத்துக் கொடுத்தேன். முடியக்கூடிய எதையும் எல்லோருக்கும் தருபவனாகவே எப்போதும் நான் இருந்து வந்திருக்கிறேன். பலாக்கொட்டைகளின் ருசி அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதற்கான நன்றியுடன் என்னைப் பார்த்தாள். இருந்தாலும் ஒரு கடனாளியாக அவள் தன்னை உணர்ந்திருக்க வேண்டும். பதிலுக்கு தானும் எதையாவது எனக்கு தர விரும்பியவளாக வீட்டினுள்ளே சென்று ஒரு சிறு கிண்ணத்துடன் திரும்பிவந்து என்னிடம் அதை நீட்டினாள். ஆர்வத்துடன் அக்கிண்ணத்தை வாங்கிப் பார்த்தவாறு நான் சொன்னேன்.
“ அட மண்புழு மாதிரி இருக்குதே…”
“… ஐயோ அது மண்புழு இல்ல… நூடுல்ஸ்… ”
ப்ரியமான என் நண்பர்களே! வாழ்வில் முதல் முறையாக அப்போதுதான் நான் நூடுல்ஸ் புழுவைத் தின்றேன். கொஞ்சத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியை பிளாஸ்டிக் காகிதத்தில் சுருட்டி ஜோபியில் பத்திரப்படுத்திக் கொண்டேன். திடீரென எனக்கொரு யோசனை தோன்றியது. மண்புழுவை தூண்டிலில் கோர்த்து மீன் பிடிப்பதைவிட இந்த நூடுல்ஸ் புழுவைக் கோர்த்து மீன் பிடித்தால் நிறைய மீன்கள் சிக்கலாம் எனபதுதான் அது. ஒரே தடவையில் ரெண்டு மூணு மீன்கள் கூட மாட்டலாம்.
நான் உடனே அம்மாவிடம் ஓடி வந்தேன்.
“…உனக்கு தெரியுமா அம்மா… என்னிடம் ருசியுள்ள நூடுல்ஸ் புழுக்கள் இருக்கின்றன… மண்புழுவை விட ஒசத்தியானவை… இன்றைக்கே போய் கல்யாணி மாமாவின் தூண்டிலை நான் வாங்கிக் கொள்வேன… பெரிய பெரிய மீன்களை நான் பிடிப்பேன் அம்மா.. பெரிய பெரிய சப்பாரைகளை நான் கொண்டுவருவேன்.”
அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அம்மாவுக்கே உரிய பல நிம்மதியின்மைகள் இருந்தன. ஆறாத ரணங்களின் சொல்ல முடியாத வலிகளின் முடிவற்றத் தடங்கள் அவள் மனதெங்கிலும் வியாபித்திருந்தன. இறுக்கத்தால் வேயப்பட்ட அவள் முகத்தில் எப்போதாவதுதான் மகிழ்ச்சியின் சிறு கீற்றுகளை காண முடிந்தது. என்றாலும் அழக்கூடியவளாக அம்மா இருந்ததேயில்லை. எந்த விஷயத்தைம் தனக்கேயுரிய அறியாமையோடும் தெளிவோடும்தான் அவள் எதிர்கொண்டாள்.
கருப்பி பிறத்தியாரிடமிருந்து வாங்கிய மாடல்ல. எங்கள் வீட்டிலேயே கன்றென பிறந்து மகளென வளர்ந்தவள். விதவிதமான மாடுகளுடனும் அவற்றின் இணக்கமான ஸ்நேகங்களுடனுமே காலமெல்லாம் வாழ்ந்து வந்தவள் என் பாட்டி. முன்பொரு காலத்தில் அநேக மாடுகளை வளர்ப்பவளாய் பாட்டி இருந்திருக்கிறாள். கட்சி கட்சியென்று தாத்தா அழித்தது போக எஞ்சியது கருப்பி மட்டும்தான். அதுவும் போய்விட்டால் என்ன செய்வது… கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…
எங்கள் ஊருக்குப் போகும் கடைசி பஸ்சும் போனப்பிறகே மருத்துவர் வீட்டிற்கு வந்தார். பதற்றத்துடன் அம்மா விஷயத்தைக் கூறினாள். மருத்துவர் அம்மா சொல்லி முடிக்கும்வரை நிதானமாக கேட்டார். மருத்துவரின் சித்தி குடும்பம் எங்களூரில்தான் இருந்தது. வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் சித்தி வீட்டுக்கு வரவிருப்பதால் எல்லோரும் சேர்ந்து காரில் போய்விடலாம் என்றும், தயாராகி வரும்வரை காத்திருக்குமாறும் சொல்லிவிட்டு மருத்துவர் வீட்டினுள் சென்றுவிட்டார்.
அப்பாடா… இனி பிரச்சனை இல்லை… இதுவரைக்கும் ஏதும் ஆகாமலிருந்தால்…
‘சென்றாய சாமியே…’ என்று அம்மா வாய்விட்டு முனகுவது காதில் தெளிவாக கேட்டது. சென்றாய சுவாமிதான் எங்கள் குல தெய்வம். பத்து மைல் தொலைவில் இருக்கும் சென்றாய மலைக்கு புரட்டாசி மாசத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் சத்யாக்காவுடன் சேர்ந்து நான் போகாமலிருக்க மாட்டேன். சத்யாக்காவுடன் சேர்ந்து மலையேறுவதைப் போல அவ்வளவு குதூகலமானதாக வேறொன்று எனக்கு இருந்ததில்லை. துணிமணிகளையும் பொரி உருண்டைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயே சென்று விடுவோம். கால்வாசி மலையில் பஸ்வான தீர்த்தமும், பாதிமலையில் மந்தி தீர்த்தமும் இருந்தன. நாங்கள் மந்தி தீர்த்தத்தில்தான் எப்போதும் குளிப்போம். குளித்து முடித்தவுடன் பொரி உருண்டைகளை தின்றுவிட்டு சீத்தாபழங்களை தேட ஆரம்பிப்போம். மலையெங்கும் சீத்தா மரங்கள் காடாய் செழித்திருந்தன. சீத்தாக்காய்களை பறித்தால் ஏலம் எடுத்தவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பழத்தை பறித்து எவ்வளவு வேண்டுமானாலும் அங்கேயே சாப்பிடலாம். ஆனால் வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. நாங்கள் வேண்டிய மட்டும் அங்கேயே பழத்தை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்ப சாயங்காலம் ஆகிவிடும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் சித்தம் குலைந்து சத்யாக்கா பைத்தியம் ஆகும்வரை ஒவ்வொரு புரட்டாசி மாதமும் சென்றாய மலைக்கு நான் போய்க்கொண்டிருந்தேன்.
கருணையிலும் கருணை கொண்ட சென்றாய சுவாமியே எங்கள் கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…
பாதிநிலா ஒளிர்ந்த அந்த இரவில் மருத்துவரின் குடும்பமும் உறவினர்களும் தயாராகி காரில் ஏற ஒருமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இருபது நிமிஷத்தில் எங்களூருக்கு வந்துவிட்டோம். கார் நேராக மருத்துவரின் சித்தி வீட்டிற்கு முன்பு நின்றது. குடும்பத்தினர் எல்லோரும் இறங்கிய பிறகு மருத்துவர் காரை திருப்ப முயன்றார். எங்கள் வீடு இன்னும் கொஞ்ச தொலைவில்தான். அங்கே கருப்பி எப்படியிருக்கிறாளோ…
அப்போது மருத்துவரின் சித்தி வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியே ஓடிவந்தாள்.
“…ஹலோ மாமா… திடீர்னு நீங்க வருவீங்கனு நா எதிர்பார்க்கவே இல்ல…சாயங்காலம்தான் மணியம்பாடியிலிருந்து வந்தேன்… சரி வாங்க காப்பி குடிச்சிட்டு போகலாம்…”
கருப்பி எப்படி இருக்கிறாளோ…
“…சங்கீ… நீயும் இங்கதான் இருக்கறியா… சரி இரு அர்ஜெண்ட்டா ஒரு கேஸ் பாத்துட்டு வந்துர்றேன்…”
கருப்பி எப்படி இருக்கிறாளோ…
“.. அட காப்பிதானே எப்ப பார்த்தாலும் கேஸ்கேஸ்ன்னுட்டு… இல்லனா இங்கியே கொண்டுவந்து தர்றேன்… கார்லேயே குடிச்சிட்டு கிளம்புங்க சரியா…”
கருப்பி எப்படி இருக்கிறாளோ…
”அவ்வளவுதான் ஒரு நிமிஷம் போலாம் இரும்மா…” என்றார் மருத்துவர் பின்னால் திரும்பி எங்களைப் பார்த்து.
நான் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அழுகை வெடிக்கும் நிலையில் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அது நிகழ்ந்து விடலாம் போலத்தோன்றியது. திடீரென கார்க்கதவை திறந்துக் கொண்டு எங்கள் குடிசையை நோக்கி அம்மா ஓடத்துவங்கினாள் .எதிரில் தடுக்கிய வேலி முட்களில் பாதம் கிழிபட்டு ரத்தங்கசிய பின்னாலேயே ஓடிய என்னை பாட்டியின் அழுகுரல் எதிர்கொண்டது.
வண்ணத்து பூச்சிகளின் பறத்தலைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த கருப்பி அசையுடன் மூச்சையும் நிறுத்தியிருந்தாள்.
(சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
“தம்பி, சீக்கிரம் ஆஸ்பத்திரி போயிருங்க! எ, புள்ளைனா எனக்கு உசுரு!” என்றாள் அந்த வயதான தாய்.
இது போன்ற உணர்ச்சி மிகுந்த வாக்கியங்கள் வேலு பல முறை கேட்டு புளித்தவை.
டாக்டர் வேலுவை அழைத்து, “வேலு, இப்ப மணி 6, சரியா 9.30க்கு இந்த கேஸை சென்னை அப்பல்லோவுல சேத்துரு! ரொம்ப கிரிட்டிக்கல். சென்னை வர தாங்குமானு தெரியல. பீ கேர்ஃபுல்” என்றார். இதுகூட வழக்கமான வார்த்தைகள்தான்.
தனது குலதெய்வமான பதினெட்டாம்படி கருப்பனை வேண்டியவாறே ஆம்புலன்சை ஸ்டார்ட் செய்து திரும்பிப் பார்த்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு உணர்வற்ற நிலையில் ஒரு வாலிபன். முகத்தில் பிராணவாயு முகமூடி அணிவிக்கப்பட்டு இருந்தது. தலையில் பெரிய கட்டு. உடன் அந்த வயதான தாய் மற்றும் இந்த ஹாஸ்பிட்டல் நர்ஸ் ஒருத்தி.
ஆம்புலன்சை கிளப்பி மருத்துவமனை வளாகத்தை கடக்கும் முன்பே அவன் அலைபேசி ஒலித்தது. அழைப்பது மனைவி. மொபைலை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் 30 நொடிகள் கடந்ததும் அழைப்பை ஏற்றான்.
போனில், “என்னடி? ஒன்னோட பெரிய எளவா போச்சு! சொல்லி தொலை என்ன விஷயம்?” பின்னே உட்காந்திருந்த வயதான தாய் அவனை ஏறிட்டாள்.
போனில் அவன் மனைவி, “சீ, எப்ப பாத்தாலும் உனக்கு வாயில எளவு தான் வரும். எப்ப வீட்டுக்கு வருவீங்க? நாளைக்கு என் பெரியம்மா மகள் கல்யாணம் யாவகம் இருக்கா?”
“ம், இருக்கு! இருக்கு!! அர்ஜென்ட் கேஸ் ஒண்ணு. வை அப்புறம் பேசுறேன்” பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்தான்.
வாகனத்தை பைபாஸ் சாலையில் செலுத்தி வேகத்தை அதிகப்படுத்தினான். ஆம்புலன்ஸ் இருட்டைக் கிழித்துக்கொண்டு சீறிப்பாய்ந்தது.
நர்சிடம் வயதான தாய் பேசுவது வேலுவிற்கு மெதுவாக கேட்டது.
“எனக்கு மொத்தம் நாலு பசங்க! அவரு போய் சேந்ததுக்கு அப்புறம் நானே சுயமா உழைச்சு நாலு பேரையும் ஆளாக்கினேன்”
அந்த நர்ஸ் அசுவாரசியமாக, “ம்” என்றாள்.
“என்ன தவிக்க வச்சுட்டு இப்ப மூச்சு பேச்சு இல்லாம இந்தா படுத்துக்கிடக்குரானே, இவன் தான் கடைசி புள்ள. இன்னும் கல்யாணம் கூட பண்ணல. மொத மூணு மகன்களும் பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு தனி குடித்தனம் போய்டாணுங்க. இவன் இப்ப தான் படிப்பை முடிச்சுட்டு 6 மாசமா வேலைக்கு போய்கிட்டு இருந்தான். அதுவும் இந்த பாழாய் போன கடவுளுக்கு புடிக்கல.”
நர்ஸ், எதுவும் சொல்லவில்லை.
“இவனுக்கு அடிபட்டு ஆஸ்பத்திரில கிடந்த போது கூட இவனோட அண்ணன்கள் மூணு பேரும் எதோ மூணாவது மனுஷன் மாதிரி வந்து பாத்துட்டு செலவுக்கு பணத்தை கொடுத்துட்டு பொண்டாட்டி பின்னாடியே போயிட்டாங்க. அந்த மனுஷன் இப்ப இருந்தா இப்படி நடந்துருக்குமா? உதவிக்கு கூட ஆளு இல்லாம இப்படி அனாதை மாதிரி ஆயிட்டேன்”
இப்பொழுது நர்ஸ் வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டிருக்க வேண்டும்.
“என்ன பண்றது எல்லாத்தையும் பாக்கணும்னு என் தலைல எழுதிருக்கு!” மிக பலவீனமான அழுகை கேட்டது.
சிறிது நேரத்தில் நர்ஸ் மெதுவாக வேலு அருகில் வந்து காதில் வந்து கிசுகிசுத்தாள், “பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு. இன்னும் எவ்வளோ நேரத்துல சென்னைல ரீச் ஆவோம்?”
வேலு, “மாக்சிமம், ஒரு மணி நேரம். பெரிய டிராபிக்ல சிக்காமல் இருந்தா!”
வயதான தாய், “என்னமா ஆச்சு?”
நர்ஸ், “ஒண்ணுமில்லமா! நீங்க பயப்படதீங்க!”
வாகனம் இன்னும் வேகம் பிடித்தது.
நாளை பள்ளி திறக்கும் நாள் என்பதால் சொந்த ஊரிலிருந்து விடுமுறை முடித்து மக்கள் அனைவரும் சென்னை நோக்கி விரைவதால் சாலை முழுவதும் வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. எனிலும் ஆம்புலன்சுக்கு பொறுப்பாக வழி கொடுத்து விலகி நிற்கிறார்கள்.
வயதான தாய் மீண்டும், “ஏ, புள்ள எப்படியும் பிழைத்து விடுவான். நம்பிக்கை இருக்கு.”
வேலு கண்ணாடி வழியாக நர்சை பார்த்தான். நர்ஸ், வராத புன்னகையை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“இவனுக்கு சின்ன வயசுல இருந்து சாதாரண காய்ச்சல் வந்தாக்கூட லேசுல போகாது. ரெண்டு மூணு நாள் சிரமப்படுத்திட்டு தான் போகும். இப்ப இவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் லேசுல போகாது தான். அந்த பெரிய ஆஸ்பத்திரில சேர்த்தா எல்லாம் சரியா போய்டும். என்ன காசுதான் அதிகமா செலவாகும். அதுக்கு என்ன? ஏ புள்ள சம்பாதிப்பான்.”
இப்பொழுது தான் பேசுவதை யாராவது கேட்க வேண்டும் என்பதை அந்த வயதான தாய் எதிர்பார்க்கவில்லை.
“இவன நா எப்போதுமே திட்டுனது இல்ல! கை நீட்டி அடிச்சதில்ல. ரொம்ப செல்லம். ஏ காலயே சுத்தி சுத்தி வருவான். இவனுக்கு ரெண்டு வயசு இருக்கும் போது பயங்கரமான காய்ச்சல் வந்துச்சு. நடுராத்திரி, பேய் மழை. காய்ச்சல் அதிகமாகி வலிப்பு மாதிரி வந்துருச்சு. என்ன பண்றதுனே புரியல. வலிப்பும் நிக்கல. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. பழனி முருகனை வேண்டிக்கிட்டு இவன நெஞ்சோடு அணைச்ச பத்தாவது நிமிசத்தில வலிப்பு நின்னு என்ன “அம்மா”னு கூப்பிட்டன். அதே மாதிரி இப்பவும் என்னை “அம்மா”ன்னு கூப்பிடுவான்.”
இப்பொழுது ஏனோ வேலுவிற்கு அந்த தாயின் முகத்தை திரும்பி பார்க்க தோன்றியது.
சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் வளர்த்தவன் வேலு. மனைவி இறந்த 6 மாதத்தில் வேறு திருமணம் செய்தார் தந்தை. மாற்றாந்தாய் கொடுமைப்படுத்தவில்லை என்றாலும் பாசம் என்கிற கதகதப்பு அவனுக்கு அரிதாகவே இருந்தது. தன் தாய் உயிரோடு இருந்தால் இந்த வயதான தாய் போல தான் இருந்திருப்பாள் என்று மனதிற்குள் நினைத்து கொண்டான் வேலு.
ஒரு வளைவில் சைரனை ஒலிக்க விட்டு ஒரு ஒரு சரக்கு லாரியை ஒதுங்க வைத்து விரைவாக வண்டியைச் செலுத்தினான்.
சிறிது நேரத்தில் வாகனத்துக்குள் “உஷ்ஷ்ஷ்ஷ்” என்ற சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்? ஆக்சிசன் சிலின்டரில் ஆக்சிசன் வெளியே போகிறதோ? என்று வேலு ஊகிப்பதற்கு நர்ஸ் டிரைவர் இருக்கைக்கு அருகில் வந்து, “மெதுவா போங்க! இனி அவசரம் இல்ல” என்றாள்.
வேலு திரும்பிப் பார்க்கையில் அந்த தாய் மகனின் கைகளை இறுக்க பிடித்துக்கொண்டு அவன் நெஞ்சில் தனது காதை வைத்துக் எதையோ செய்து கொண்டிருந்தாள்.

இவ்விடத்தின் ஆவி
உயிர்கொண்டு வாழ்கிறது
நிலையத்து நாயின்
சொறிபிடித்த உடலுக்குள்.
முந்நூறு ஆண்டு
பிரார்த்தனையின் சுயவதை
வருகை புறப்பாட்டு
மரத்தின் கீழ்.
மனிதனா
அல்லது கடவுளின் அவதாரமா
என்பதை மட்டும் கண்டு அறியும் அளவுக்கு
வலது விழியை மட்டும்
திறந்துபார்க்கிறது நாய்
இல்லையேல்
குணப்படுத்தி சொர்க்கத்துக்கு
அழைத்துச்செல்லும் வகையில்
எட்டுக்கை கொண்ட
ரயில்வேயின் காலஅட்டவணை
தலையில் வந்து அடிக்கிறது.
அந்த நாள் இன்னும்
வரவில்லையென
தீர்மானிக்கிறது நாய்.
000
அருண் கொலாட்கர் எழுதிய, The Station Dog, என்ற கவிதையின் தமிழாக்கம்
ஒளிப்பட உதவி – http://www.maciejdakowicz.com/

கலம் டுபீனின் (Colm Toibin) ‘The Blackwater Lightship‘ நாவலில் இரு சம்பவங்கள். ஒன்று. தாய் லில்லியுடன் (Lily) பல வருடங்களாக பிணக்கு கொண்டுள்ள ஹெலனிடம் (Helen) லில்லி அன்னியோன்யமான தொனியில் பேசும்போது, “It brought anxiety with it as much as reassurance” என்று உணர்கிறார். இரண்டு- ஹெலனின் வீட்டில் விருந்து நடக்கிறது. அவர்களுக்குத் தெரிந்த நண்பர்களும் நண்பர்களின் நண்பர்கள் என தெரியாதவர்கள் பலரும் வருகின்றனர். அதில் ஓர் ஆண் ஹெலனுடன் சற்றே நெருக்கமான/ கிண்டலான தொனியில் பேசுகிறார். சிறிய உரையாடலான இது எல்லைமீறிச் செல்வதில்லை. அடுத்த நாள், அந்த ஆண் தன் இளைய சகோதரன் டெக்லனுக்கு தெரிந்தவன் என்றும் தற்பால்விழைவு கொண்டவன் என்றும் ஹெலனுக்கு தெரியவரும்போது அவள் எரிச்சலடைகிறாள்.
இந்த இரு சம்பவங்களும் சாதாரணமானவை போன்று தோற்றமளித்தாலும் இவற்றுக்குச் சிறிது நேரம் ஒதுக்குவோம். முதல் சம்பவத்தில் தாயின் எதிர்பாராத அன்னியோன்யம், ஹெலனுக்கு ஆச்சரியமளிக்கக்கூடும். ஆனால் ஏன் பதட்டப்படுத்த வேண்டும்? இதற்கான காரணம் நாவலில் பின்னொரு இடத்தில், வேறொரு சூழலில் இந்தச் சம்பவத்திற்கு தொடர்பில்லாத நிகழ்வில் தெரியக்கூடும், அது ஹெலனுக்கும் அவர் தாய்க்கும் உள்ள பிணக்கு ஏன் என்ற கேள்விக்கான விடையாகவும் இருக்கக்கூடும்.
இரண்டாவது சம்பவத்தில் ஹெலன் கோபப்படுவது அந்த ஆண், தான் அவளின் சகோதரனுக்கு தெரிந்தவன் என்பதைச் சொல்லாததால் மட்டும்தானா? ஒரு இனிய flirting நினைவு அவன் தற்பால்விழைவு கொண்டவன் என்று தெரிந்ததும் மாற்றமடைந்து, தன்னை அவன் கேலி செய்ததாக எண்ணுவதால்கூட இருக்கலாம் (ஹெலனுக்கு அந்த ஆண் மீது பெரிய ஈர்ப்பெல்லாம் இல்லை, அவள் குடும்ப வாழ்க்கை திருப்திகரமாகவே உள்ளது, கணவனை மிகவும் நேசிக்கிறாள். அந்த ஆணுடனான உரையாடலை ‘compliment’ஆகவே அவள் முதலில் எடுத்துக் கொள்கிறாள்)
முதல் சம்பவம் நாவலின் முக்கிய கேள்வியாக உருப்பெருவதை பின்னர் உணர்கிறோம். இரண்டாம் சம்பவம் அதனைத் தாண்டி வேறெந்த தாக்கத்தையும் கொண்டிராவிட்டாலும் அதற்குப் பின்னுள்ள அக உணர்வுகள் அத்தனை எளிமையாக விளக்கப்படக்கூடியவை அல்ல. “I’m against story,” என்று ஒரு பேட்டியில் டுபின் சொல்வதற்கேற்ப, முதல் பார்வையில் எளிமையானவையாக தோற்றமளிக்கும் பல புறவய நிகழ்வுகள்/ அவற்றின் பின்னாலுள்ள அகஉணர்வுகள் மற்றும் அந்நிகழ்வுகளால் பாத்திரங்களின் அகத்தில் உண்டாகும் மாற்றங்கள்/ உணர்ச்சிகளின் திரட்சியாக இந்த நாவல் உள்ளது.
தலைமை ஆசிரியை பொறுப்பில் இருக்கும் ஹெலனுக்கு அவரின் தாய் மற்றும் பாட்டி டோராவுடன் (Dora) சுமுகமான உறவில்லை. பாட்டியையாவது அவ்வப்போது அவர் சந்தித்தாலும் தாயை முற்றிலும் ஒதுக்குகிறார் (அல்லது தாயும் அவரிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் என்றும் அர்த்தம் கொள்ளலாம்). ஹெலனின் இளைய சகோதரன் டெக்லன் (Declan) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள விஷயம் ஹெலனுக்குத் தெரியவருகிறது. பாட்டியின் வீட்டில் சில நாட்கள் தங்க ஆசைப்படுகிறாள் ஹெலன். இதன் பொருட்டு அவர் வீட்டில் பாட்டி, தாய், மகள் மற்றும் மகன் என்று மூன்று தலைமுறை ஆட்களும் டெக்லனின் இரு நண்பர்களும் சில நாட்கள் தங்குவதை விவரிக்கும் நாவலின் களம் பரிச்சயமான ஒன்றுதான்.
பிணக்கு கொண்ட குடும்பங்கள் ஏதோ காரணத்திற்காக ஒன்று கூடுவதை ‘Douglas Coupland’ (‘All families are psychotic’) போல இருண்மையான நகைச்சுவையோடு சொல்வது அல்லது ‘Anne Enright’ போல நேரடித்தன்மை கொண்ட நடை என பல வகைகளில் சொல்லப்படுகிறது. மேலே பார்த்த பாணிகளிலிருந்து மாறுபட்ட உரைநடை stylist டுபீன். தான் விவரிப்பது தன் பாத்திரங்களை distract செய்து விடும் என்று அஞ்சுபவர் போல, வாசகனுக்கு மட்டும் (அவன் கூர்ந்து கவனித்தால்) கேட்கும் தொனியில் அவரது நடை உள்ளது.
ஹெலனுக்கும் அவர் தாய்க்கும் நடக்கும் ஓர் உரையாடலில் தன்னைக் குறித்து லில்லி எப்போதுமே திருப்தியுறவில்லை என்று ஹெலனும் அதை மறுத்து லில்லியும் வழக்கம் போல் வாதத்தில் இறங்க
‘Helen, I’ve always accepted you,’ her mother said.
‘That’s a lovely word for it, thanks,’ Helen said.
என்று சொல்வதில் ‘accepted’ என்ற வார்த்தை ஒரு மகளுக்கு ஏற்படுத்தக்கூடிய காயம், மிகுந்த வலி தரக்கூடியது இல்லையா (லில்லி அதை நேர்மறையான அர்த்தத்திலேயே சொல்லி இருந்தாலும்)?
டெக்லன் மருத்துவமனையில் உள்ளான் என்று மட்டும் கூறி பால் என்ற அவனின் நண்பன், ஹெலனை அங்கு அழைத்துச் செல்ல, அவன் பின்னால் செல்லும் ஹெலன் மிகப் பெரிய மருத்துவமனை என்றோ, கால் வலிக்க நடக்க வேண்டியுள்ளது என்றோ யோசிப்பது போல் விவரிக்காமல், “..did not know at what point he would turn and open a door and she would find Declan” என்று எழுதுகிறார் டுபீன். ‘did not know at what point he would turn‘ என்பதில் நடையின் நீளமும், ‘open a door and she would find Declan‘ என்பதில் ஹெலனின் பயம்/ பதற்றமும் தெரிகிறது. ஏன் இங்கு கதவு திறக்கப்படுவதைச் சுட்ட வேண்டும் என்றால், மூடிய கதவிற்கு பின்னால் என்ன காத்திருக்கிறது என்ற பயம் பொதுவான ஒன்றுதானே? (மூன்று பூட்டிய கதவுகளில் ஒன்றினுள் மட்டும் கொடிய மிருகம் உள்ளது, அதைத் தவிர்க்க வேண்டும்- போன்ற போட்டிகள் பல மாயாஜாலக் கதைகளில் உண்டு) . ‘Pandora’s box’ஐ திறப்பது போன்று அவன் அறையைத் திறந்தால் என்ன தெரியவருமோ?
உரைநடை stylist என்று சொல்லும் போது அது எதிர்மறையான விமர்சனங்களுக்கும் இட்டுச் செல்லக் கூடும். ஹெலன் தன் தந்தையை இழந்த பின் பாட்டியின் வீட்டிற்கு வரும் போது கடற்கரைக்குச் சென்று
“imagined the sea, angry and inexorable, moving slowly towards the town, everything dissolving, slowly disappearing, the dead being washed out of their graces, houses crumbling and falling, cards being dragged out into the unruly ocean until there was nothing any more but this vast chaos”
என்று கற்பனை செய்வதாக விவரிக்கப்படுவதை வாசிக்கும்போது, 11 வயது சிறுமி இப்படி எண்ணக்கூடுமா என்ற கேள்வி எழலாம். அதைத் தாண்டி, நடை/ style என்பதை எழுத்தில் முக்கிய அம்சமாக ஏற்றுக்கொண்டு பார்க்கும் போது, ‘chaos’ பற்றி பேசும் இந்தப் பத்தியில் உள்ள அமைதியையும், அதனுள் பொதிந்திருக்கும் பயங்கரத்தையும், தந்தையை இழந்த சிறுமியின் இயலாமையால் விளையும் கோபத்தையும் அது உருவாக்கும் மன உளைச்சலையும் உணர முடியும்.
“I would take realism as something where the sentences provide information, whereas here, you’re being led towards feeling with as much subtlety as I can manage. It’s closer to some sort of poetic thing, but it’s buried.”
என்று டுபீன் சொல்கிறார். நாவலில் கடலைப் பார்த்தமர்ந்தபடி ஹெலனின் நினைவுகள் விரிவது பல முறை வரும் நிகழ்வாக (motif) உள்ளது. ஒரு முறை கோபம், இன்னொரு முறை ஆற்றாமை, வேறொரு முறை வெறுமை-
“Imaginings and resonances and pain and small longings and prejudices. They mean nothing against the resolute hardness of the sea. They meant less than the marl and the mud and the dry clay of the cliff that were eaten away by the weather, washed away by the sea. It was not just that they would fade: they hardly existed, they did not matter, they would have no impact on this cold dawn, this deserted remote seascape where the water shone in the early light and shocked her with its sullen beauty. It might have been better, she felt, if there had never been people, if this turning of the world, and the glistening sea, and the morning breeze happened without witnesses, without anyone feeling, or remembering, or dying, or trying to love. She stood at the edge of the cliff until the sun came out from behind the black rainclouds”
மேலே உள்ளது போல் நிச்சலமான வெறுமை என அவர் உணர்வுகளின் வண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் பகுதிகளில் கறாரான ‘realism’ இல்லை, ஆனால் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் அவை நம்மைக் கொண்டு செல்லும் இடம் ஹெலனைப் பற்றிய புரிதலுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.
கதைக்கு எதிரானவர் என்று டுபீன் சொல்லிக் கொண்டாலும், அவரின் நடை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமில்லாமல், அவற்றில் உள்ள nuances, சம்பவங்களை இணைக்கும் சரடாகி ‘கதையுள்ள/ கதை நிகழும்’ உலகை உருவாக்குவதைக் காண்பதோடு (ஹெலன் கடலைப் பார்த்தபடி இருக்கும் சம்பவங்கள் ஒரு உதாரணம்). பாத்திரங்களும் நாம் கவனித்திராத கணத்தில் உயிர் கொண்டெழுவதை உணர்கிறோம். சம்பவங்களை அடுக்குவதிலும் ஒரு நடையை டுபீன் பின்பற்றுகிறார்.
வார்த்தைகளால் காயப்படுத்தி, அடுத்த கணமே அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்டு, சிறிது நேரத்தில் மீண்டும் அதே சுழற்சியைத் தொடங்குவதாக இருக்கும் பாட்டி/ மகள்/ பேத்தி உறவை, அவ்வுறவில் அத்தகைய விரிசல் விழக் காரணம் என்ன, அது முற்றிலும் உடையாமல் காக்கும் பிணைப்பு என்ன என்பதை டுபீன் நேர்க்கோட்டில் சொல்வதில்லை. ஒரு சம்பவம், அதனால் ஒரு பாத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக்காயம் முதலில் சொல்லப்படுகிறது. பிறகு எத்தேச்சையாக இன்னொரு பாத்திரம் அந்தச் சம்பவம் பற்றி ஏதோ சொல்ல, வாசகனுக்கு புரிதல் ஏற்படுவது போல் தோன்றுகிறது. சில இடங்களில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. நாவலில் அதன் இடம் என்ன என்று அப்போது புரிவதில்லை. பிறகு அதே சம்பவத்தின் நீட்சி சொல்லப்படும்போது அது முழுமையடைகிறது.
உரைநடையின் நுட்பங்கள் மட்டுமின்றி, நாவலின் கட்டமைப்பும் வாசகனிடம் ஒருமுகப்படுத்திய வாசிப்பைக் கோருகின்றன. டுபீன் நேரடியாக எதையும் சொல்வதில்லை என்பதால், அத்தகைய வாசிப்பே வாசகனுக்குள் நாவலின் உலகை உருவாக்கும். அல்லது கவனமாக வாசிக்காமல் போனால், விரைந்து கடந்து விடும் ஒரு வரியோ/ பத்தியோ/ சிறு நிகழ்வோ பின்னர் நடப்பவற்றை சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாமல் செய்துவிடக்கூடும்.
ஹெலனுக்கு அவள் தாயுடன் ஒத்துப்போகவில்லை, லில்லிக்கு அவள் மகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் இதை வெறும் தலைமுறை இடைவெளி சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது. டெக்லன் தற்பால்விழைவாளன் என்பது குறித்து ஹெலனுக்கு எந்த எதிர்மறை கருத்தும் இல்லை. பாட்டி டோராவோ, அதை ஆமோதிக்காவிட்டாலும், பெரிதாக எதிர்வினை புரிவதில்லை, அவன் நண்பர்களுடன் நட்பாகவும் இருக்கிறார். லில்லி மட்டுமே அவன் பால்விழைவை, அவன் நண்பர்களை சகித்துக்கொள்ளக்கூட முடியாமல் இருக்கிறார்.
கார் ஓட்டக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும், தனியாக வசிப்பதால் தற்காப்புக்கு கத்தி வைத்திருக்கும் பாட்டி டோரா எளிதில் வாசகனை ஈர்ப்பார். நாவல் ஹெலனின் பார்வையிலேயே நகர்வதால் பாசம்/ வெறுப்பு இவற்றுக்கிடையே ஊசலாடும் அவரின் முரண்பாடான உணர்வுகள் குறித்து வாசகனுக்குப் பிடி கிட்டுகிறது. எனவே ஹெலன் பாட்டி போல் வாசகனை ஈர்க்காவிட்டாலும், அவருடன் empathize செய்யலாம். நேர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புக்கள் அதிகம் இல்லாத பாத்திரம் லில்லி. ஹெலனின் கண்ணின் வழியே நாம் காணும் லில்லி இறுகிய மனம் உடையவராக மட்டுமே முதலில் தெரிகிறார். ஆனால் இளம் வயதில் கணவனை இழந்து, பிள்ளைகளை வளர்த்து, கணினி பயிற்சி/ விற்பனை வியாபாரத்தில் வெற்றி பெற்றுள்ள அவருக்குள் உள்ள துயரைப் பற்றிய சமிக்ஞைகளுக்கும் நாவலில் உரிய இடமளிக்கிறார் டுபீன்.
டெக்லனின் உடல்நிலை மூன்று பெண்களையும் சில நாட்களுக்கு இணைப்பதற்கே அதிகம் பயன்படுகிறது. அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையே உள்ள ஆழமான நட்பைச் சுட்டும் பழைய? கணங்கள் நாவலில் உள்ளன, அதற்கான பின்னணி பற்றி அதிகம் சொல்லப்படுவதில்லை. மூவரில் பாலின் வாழ்க்கை பற்றி மட்டுமே சற்று விரிவாக ஹெலனுக்கும் அவனுக்கும் இடையே நடக்கும் நீண்ட உரையாடலில் சொல்லப்படுகிறது.
டுபீன் எந்தச் சம்பவத்தையும் அதன் எல்லையைத் தாண்டி செல்ல அனுமதிப்பதில்லை. அவர் அச்சம்பவத்தின் எல்லையென்று எதை இலக்காக வைத்துள்ளார் என்பதே வாசகன் முன்புள்ள கேள்வி.
பாலுடனான உரையாடலில் ஹெலனின் கடந்த காலம் குறித்த சில விஷயங்கள் தெரியவருகின்றன. இங்கு ஆசிரியர் இரு பாத்திரங்களை பேசவைத்து அதன் மூலம் சில விஷயங்கள் வெளிக்கொணரும்போது நேரடியாக ஏன் இப்படி எளிதான வழியில் சொல்லவேண்டும், ஒருவருக்கொருவர் அறிமுகமாகி ஓரிரு நாட்களில் இத்தகைய விஷயங்களை (கணவனிடம் பகிர்ந்திராத) பேசிக்கொள்வார்களா, ‘நுட்பம்’ என எதுவும் கிடையாதோ என்று தோன்றினால் “..being led towards feeling with as much subtlety..” என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். நண்பனின் உடல் நிலை குறித்த கவலையில் பாலும், கடந்த காலத்தின் நிழல் மீண்டும் தன் மீதும் படருமோ என்ற பதற்றத்தில் ஹெலனும் இருக்கையில், அதற்கான வடிகாலாக அவர்கள் பேசிக்கொள்வது இருக்கலாம். இல்லற வாழ்க்கையில் இத்தகைய அசாதாரணமான சூழலை சந்திக்காத நிலையில், உறவுகளை ஒதுக்கிவிட்ட அவள் தன் பயங்கள் குறித்து கணவனிடம் பகிர்ந்து கொள்ளமுடியாதபடி மனத்தை பயிற்றுவித்திருப்பதும் இயல்பானதே. இந்த உரையாடலால் இருவரிடையேயும் ஆழமான நட்பு எதுவும் உருவாவதில்லை. அந்த நேரத்தில் இருந்த மனநிலையில் சில விஷயங்களை பரிமாறிக் கொண்டவர்களாக, பரஸ்பரம் மரியாதை உடையவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த உரையாடலில் அதனுடன் நேரடியாக சம்பந்தமில்லாத இன்னொரு விஷயம் புதைந்துள்ளது. “… recognizing when he saw her how much she feared her own passionate attachment to him, how much she would hold back for a while,” என்று நாவலின் ஆரம்பத்தில் தன் அன்பைக் கண்டு அவளே அச்சமடைவது பற்றியும், தனக்கு அவ்வப்போது ஏற்படும் மனநிலை மாற்றங்களை (black moods) தன் கணவன் சகித்துக்கொள்வது பற்றியும் அவர் கூறுகிறார். இவற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முயலும் வாசகன் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடியாக, பால்/ஹெலன் உரையாடலை அதற்கு முன்பு சாதாரணமாக சொல்லிச் செல்லப்பட்ட விஷயங்களுடனும், பின்னர் நடப்பதையும்/பேசப்படுவதையும் இணைத்துப் பார்ப்பது உள்ளது.
டோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும் சம்பவம் ஒன்று நாவலில் வருகிறது. மூதாட்டி கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறாள், அதில் தேர்ச்சி பெறுகிறாள் என்பது, இறுக்கமான சூழலை சமன் செய்யும், செயற்கையான உற்சாகம் தோற்றுவிக்கும் (feel good) நிகழ்வாக ஆகியிருக்கும். ஆனால் டோரா கார் ஓட்டக் கற்றுக்கொள்வதை பார்த்துக்கொண்டிருக்கும் லில்லியும் ஹெலனும் சாதாரணமாக பேச ஆரம்பித்து இன்னொரு வாக்குவாதத்திற்கான ஆரம்பத்திற்கு சென்று விடுகிறார்கள். கார் ஓட்டுவது என்னும் நிகழ்வு பின்னுக்கு சென்று விடுகிறது. ‘It’s a vale of tears, Lily… It’s a vale of tears, and there’s nothing we can do,’ என்று ஒரு இடத்தில் டோரா லில்லியிடம் சொல்கிறார். வாழ்வின் துயரை முற்றிலும் துடைக்க முடியாவிட்டாலும், துயரை சந்தோஷத்தால் எப்போதும் சமன் செய்ய முடியாவிட்டாலும், தற்காலிக ஆசுவாசம் அளிக்கும் கணங்களை (moments of reprieve) நாம் எத்தேச்சையாக கண்டடைய முடியும்.
ஹெலன்/ பால் உரையாடல் அதைத் தாண்டி சில விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்க, கார் ஓட்டும் நிகழ்விற்கு, ஆசுவாசமளிக்கும் ஒரு கணத்தின் பெறுமானத்தையே டுபீன் அளிக்கிறார். நாவலின் சில நிகழ்வுகள் ஓர் உணர்வு நிலையை மட்டுமே முன்வைத்தும், சில நிகழ்வுகள் அவற்றின் பின்னால் சிலவற்றை பொதித்துள்ளதாகவும் இருப்பதால், முதல் வகை நிகழ்வுகளால், இரண்டாம் வகையையும் அவ்வாறே எண்ணி வாசகன் கடந்து சென்று விடக்கூடிய வாசிப்பு மனநிலை அவனையறியாமலே உருவாகக்கூடும்.
“Tóibín is suspicious, he says, of “literature that depends on plot”. He doesn’t think more should be required than “a portrait of a sensibility”” என்பதற்கேற்ப, மூன்று பெண்களும் ஒன்றாக இருக்கும் சில நாட்களில் அடைபட்டுள்ள உணர்வுகள் பீறிட்டெழுந்து (catharsis), அனைத்து பிணக்குகளும் தீர்ந்து விடுவது என்பது இந்த நாவலின் கரு (plot) அல்ல. பாசத்தை வெளிக்காட்ட முடியாத மனநிலை/ சூழல், அதனால் ஒருவரையொருவர் தவறாக புரிந்துகொண்டு/ புரிந்து கொள்ளப்பட்டு (அவரவர் கோணத்தில் சரியாக), விரிசல் பெரிதாகி ஒருவரை தன் வாழ்விலிருந்து ஒதுக்கினாலும், அவரின் அன்பிற்காக உள்ளூர ஏங்கிக்கொண்டே இருத்தல், அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியை எப்போதாவது அன்பின் கீற்று குறைத்தால், அந்த அன்பைக் கண்டு ஒரே நேரத்தில் ஆசுவாசமும்/ அந்த அன்பு மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடுமோ என்று அச்சமும் கொள்ளுதல், அந்த அச்சத்தால் மீண்டும் வெறுப்பை உமிழ்ந்து மீண்டும் அதே சுழற்சியை ஆரம்பித்தல் என மூடிய மனதின் புழுக்கத்தை தாள முடியாமல் அதே நேரம் மனதின் கதவுகளைத் திறக்கத் துணிவும் இல்லாமல் துன்புறுபவர்களின் உணர்வுகளின் சிக்கலான சித்திரம் (டுபீன், ஹெலனின் எண்ணங்களின் வழியாக சொல்லும் Imaginings and resonances and pain and small longings and prejudices) இந்நாவலின் “portrait of a sensibility”யாக உருவாகிறது.
“Ending a novel is almost like putting a child to sleep – it can’t be done abruptly,” என்று ஒரு பேட்டியில் டுபீன் சொல்கிறார். பல வருட விரிசல் சில நாட்களில் சரியாகப் போவதில்லை என்றாலும் இணக்கமான சூழலுக்கான (நல்லுறவுக்கல்ல) முதல் அடி எடுத்து வைக்கப்படுகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அதுவும் கூட நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகச் சொல்லாமல், வாசகனின் எதிர்பார்ப்பாக, கவனத்துடன், அதே நேரம் பொருத்தமாக முடித்து வைக்கிறது.
000
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா