பீட்டர் பொங்கல்

விழுந்தது என்ன?- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’

பீட்டர் பொங்கல்

பதாகை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் பதிப்பித்திருந்தாலும், முதல் முறையாக எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாய் பதாகையில் வெளிவரும் சிறுகதைகளுக்கு முழுமையான முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ‘தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்‘ என்ற கட்டுரையில்  எஸ். ராமகிருஷ்ணன், இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை தான் வாசிப்பதாய் எந்தச் சலிப்பும் இல்லாமல் சொல்லிக் கொள்வதோடல்லாமல், பதாகையில் எழுதும் காலத்துகள் சிறுகதைகள் குறித்து, “பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது“, என்று எழுதியிருக்கிறார்.

யார் எவரென்றே தெரியாத ஒருவரை முன்னணி எழுத்தாளர் ஒருவர் வாசிப்பதில் தமிழ் இலக்கியத்தின் இனிய முகமொன்று வெளிப்படுகிறது- பாராட்டுகள் யாருக்குமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எந்த கோரிக்கையும் இல்லாமல் தன் கதைகளை வாசிப்பதாய்க் குறிப்பிடுவதற்கு மேல் புதிதாய் எழுத வருபவனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பதாகை மற்றும் காலத்துகளின் மனமார்ந்த நன்றிகள்.

எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பத்து முகங்களில் இன்னொரு முகமான ஹரன் பிரசன்னாவும் பதாகையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்- ஹரன் பிரசன்னா குறித்து, “… வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,” என்று குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

ஹரன் பிரசன்னா பதாகையில் எழுதிய, ‘சோழி’ என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது

“முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக் கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.”

குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,’ என்று எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சரியாகவே சொல்கிறார். இந்த முதல் பத்தியில் நமக்குக் கிடைக்கும் சித்திரம் சிறிது புன்னகைக்க வைக்கிறது, கூடவே இக்கதையின் மிக முக்கிய இயல்பான நிலையின்மை, கதையின் துவக்கத்திலேயே வந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் அலைந்து அலைந்து என்று அலைதல் இரு முறை வருகின்றன- இந்தத் தடுமாற்றம் எண்ணத்தின் கனம் தாங்காமல் ஏற்பட்ட ஒன்று, எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் போல் அலைந்து அலைந்து நடந்தார் என்று வாசிக்கும்போது தடுமாறிச் செல்லும் அவரது நடையின் கூடவே எண்ணங்களின் சுமையால் அழுந்திய அவரது முகமும் நம் கண் முன் தோன்றுகிறது- இந்த வாக்கியத்தில் மட்டுமல்ல, இந்தப் பத்தியில் அவரது முக பாவனை சொல்லப்படவே இல்லை. ஆனால், முரளிதர ராவின் முகத்தில் ஆடும் உணர்ச்சிகளைக் காண புற விவரணைகளே போதுமானதாய் இருக்கின்றன.

அவர் அலைவது போதாதென்று, அவரது மெல்லிய உடலில் தரித்த பூணூலும் காற்றில் அலைகிறது- கதை நெடுக ஒரு தீர்மானமான முடிவுக்கு அலையும் முரளிதர ராவ், இங்கு அலையும் பூணூலை மட்டுமல்ல, சூம்பித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்க்காம்புகளையும் மேல் துண்டு கொண்டு மூடிக் கொள்கிறார் (தொங்குவதால், அவையும் ஆடுகின்றன என்று நினைக்கிறேன்). இது போதாதென்று வழுக்கைத் தலையில் ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன என்ற குறிப்பு வேறு – அவையும் காற்றில் அலைகின்றன என்று தோன்றுகிறது. வழுக்கைத் தலையில் இருக்கும் பிற மயிர்களோ சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடக்கின்றன – அவை ஓய்ந்து விட்டன போலிருக்கிறது. கதையின் சீரற்ற தன்மையை மேலும் உணர்த்தும் வகையில் வியர்வை வழிந்து அவரது நாமத்தைக் கரைக்கிறது, அதைத் துடைக்கும் துண்டோ நாமத்துக்கிடையே உள்ள கரிக்கோட்டை அழித்து கறுப்பாகிறது. தள்ளாத வயது, மனக்குழப்பம் அவரை வேகமாய்ச் செலுத்துகிறது, அவர் தோற்றுத் துவண்டு விரைகிறார் என்று துவங்குகிறது கதை.

ஹரன் பிரசன்னா இது போலவே எழுதிக் கொண்டு சென்றால் அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பாத்திர விவரணைகள், உரையாடல்கள் என்று இருக்க வேண்டியது எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. ஆனால், அவரிடம் உள்ள ஒரு குறை, அதிபுத்திசாலித்தனம்தான் (இதைத்தான் எஸ். ராமகிருஷ்ணன், “சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன” என்று எழுதுகிறார் என்று நினைக்கிறேன்). ஒரு நல்ல கதை என்பது எலிப்பொறி போலிருக்க வேண்டும். மசால் வடை வாசனைக்கு ஓடி வரும் எலி, தன் மீது பொறியின் கதவுகள் விழுவதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்கிறது. இங்கு மசால் வடை மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அது மணக்கிறது என்பதால் அதுவல்ல, அதைச் சுற்றியுள்ள பொறிதான் பூடகம். கண் முன் முழுசாக இருந்தாலும், புலன்களின் மயக்கத்தில் பொறி காணப்படுவதில்லை- வேலையைக் காட்டும்போதுதான் அது புலனாகிறது.

எது முழுமையாய் விவரிக்கப்படுகிறதோ, அதன் இயல்பு இறுதி வரை மறைந்திருப்பதில் ஒரு கலை இருக்கிறது. வாசகன் மனதில் தெறிக்கும் ஸ்ப்ரிங்தான் பூடகமே தவிர, கதை வெளிப்படை. ஹரன் பிரசன்னா இதை மிகச் சிறப்பாய்ச் செய்யக்கூடியவர். ஆனால் அவர் வைக்கும் பொறிகளோ அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் மூத்த சகோதரனின் பொறிகள் போல் சிக்கலானவை, கண்கள் நிலைகுத்தி நிற்கச் செய்பவை- எலிப்பொறி போல் எளிமையானவையாய் இல்லாத அவரது பொறிகள் ஒரு தேர்ந்த தோட்டக்காரனின் maze போன்றவை: பொறி விழுந்து விட்டது என்று தெரிந்தாலும் நாம் எங்கேயிருக்கிறோம், நம் மீது விழுந்த பொறி எப்படிப்பட்டது என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது: “கதை நல்லா இருக்கு ஸார், ஆனா என்ன ஆச்சு?” என்று கேட்கிறோம்.

சோழி கதை சிறப்பான கதையாக இருந்தாலும் அப்படிப்பட்ட கதைதான். படித்துப் பாருங்கள் – சோழி, ஹரன் பிரசன்னா.

அன்றாடத்தின் வினோதங்கள் – மாயக்கூத்தனின் ‘பாராமுகம்’

பீட்டர் பொங்கல்

செகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்:

1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை

2. முழுமையான புறவயப்பட்ட பார்வை

3. மனிதர்கள் மற்றும் பொருட்களின் மெய்ம்மைச் சித்தரிப்பு

4. மிகக் கச்சிதமான வடிவம்

5. துணிச்சலும் புதுமையும்: ஸ்டீரியோடைப்புகளைத் தவிர்ப்பது

6. கருணை

செகாவ் கதைகள் குறித்த நீண்ட ஒரு விவாதம் இங்கிருக்கிறது. இதில் மேற்கண்டவிஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தன் கதைகளில் அன்றாட வாழ்வை விவரிப்பதில் தீர்மானமாயிருந்தார் செகாவ் என்று எழுதும் கட்டுரையாளர் கிறிஸ்டினா வார்ட்-நிவென், செகாவ் உண்மையாகவும் புதுமையாகவும் எழுத விரும்பியதால் அவரது புனைவில் உள்ள அன்றாடக் காட்சிகள் வினோதத்தன்மை கொண்டிருக்கின்றன என்கிறார்- “நமக்குப் பழக்கப்பட்டசூழ்நிலத்தில் வினோதத்தன்மையை அனுமதிப்பதால், நாம் வாசகர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்கள் சற்று தாமதித்து, கவனம் செலுத்தச் செய்யலாம் – அப்போது ஒருவேளை அவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு மானுட உண்மையை புதிய வெளிச்சத்தில் கண்டு கொள்ளக்கூடும்“.

oOo
மாயக்கூத்தனின் ‘பாராமுகம்‘ நானூற்றுக்கும் குறைவான சொற்கள் கொண்ட குறுங்கதை. அதன் மையம், கதையின் மத்தியில் வருகிறது – “போன வாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.

சீனிவாசன் கட்டிய வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லை- இவர்கள் இருந்த குறுக்குத் தெரு அரசு வரைபடத்தில் விட்டுப் போயிருந்ததால் இவர்களுக்குச் சாக்கடை இணைப்பு கிடைக்கவில்லை. கழிவு நீர் வெளியேறினால் மகாதேவன்கள் சண்டைக்கு வருகிறார்கள் – “ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்விடும் என்பது போலவும் கத்தினார்“. அக்கம் பக்கத்தில் எல்லாரும் பகை. மகாதேவன் வீட்டு அம்மா சொன்னது போல் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் சுற்றி வந்து ஒரு குழிக்குள் வடியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனாலும் அவ்வப்போது குழி நிறைந்து நீர் தெருவில் கசிகிறது.

அப்படியான ஒரு சமயம்தான் மகாதேவன் இவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைக்கிறார்- நடக்காத ஒன்று நடக்கும்போது பேச்சு வழக்கில் சொல்வது போல், மழை பெய்வது மட்டுமல்லமட்டுமல்ல, உலகமே அழிந்து விடுகிறது. அப்போது பிடித்துக் கொள்ளும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, வீட்டுக்குள் வெள்ளம் வந்து விடும் போலிருக்கிறது. சீனிவாசன்,

மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீரில் ஆழ்த்தினான். குளிர்ந்தது.

“காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.”

இதற்கப்புறம் சீனிவாசன் செய்வது இந்த உலக வாழ்க்கையின் உக்கிரத்தை மிக எளிமையாக, ஒரு சொல் இல்லாமல் உணர்த்துகிறது. கதை கச்சிதமான முடிவுக்கு வருகிறது.

ஆனால் அதற்கப்புறம் ‘யுகசந்தி‘ என்று ஒரு வார்த்தை, அதன் உறுத்தலுடன் நெருடுகிறது. அது இல்லாமல் கதையின் உலகம் முடிவுக்கு வருவதில்லை என்பதால் தவிர்க்க முடியாத வார்த்தைதான். ஆனால், அது நம்மைக் கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. இது சரியா தவறா என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாராமுகம், மாயக்கூத்தன்.

கண்ணுறு கலை – நரோபாவின் ‘திருமிகு பரிசுத்தம்’

பீட்டர் பொங்கல்

சென்ற மாதம் மறைந்த எழுத்தாளர் வில்லியம் ட்ரெவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவார் என்று பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு ஏமாற்றத்தில் முடிந்தது. சிறுகதை வடிவத்தை மிகச் சிறந்த வகையில் கையாண்ட ட்ரெவர் குறித்து இனி ஆர். அஜய் எதுவும் எழுதினால்தான் உண்டு. மற்றபடி அவர் பெயர் தமிழில் பேசப்படும் வாய்ப்புகள் குறைவு.

பாரிஸ் ரிவ்யூ தள நேர்முகம் ஒன்றில் அவரிடம்  சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுதான் சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல்தான் அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில்  நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

oOo

466 சொற்களே கொண்ட நரோபாவின் ‘திருமிகு. பரிசுத்தம்‘  குறுங்கதையாய் வாசிக்கப்படும் என்று நினைக்கிறேன். குறுகிய வடிவம் கொண்டது என்பதால் சிறுகதை செய்யும் வேலையை குறுங்கதை இன்னும் வேகமாய்ச் செய்ய வேண்டும், அதன் சொற்கள் இன்னும் கனம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு குறுங்கதை கண்ணுறும் காட்சி கணப்பொழுது என்பதால் அது விவரிக்கும் காலம் யுகங்களாய் இருக்க முடியாது என்றில்லை.

திருமிகு. பரிசுத்தம் கதை மிக எளிய, இலகுவான மொழியில் சொல்லப்படுகிறது. நரோபாவின் ஆரம்ப கால கதைகளைப் படித்தவர்களுக்கு இங்கு அவர் கடந்து வந்திருக்கும் தொலைவு ஆச்சரியப்படுத்துவது. பெருமூச்சுகளோடு சொல்லி வந்த கதைகளை அவர் இப்போது  ஒரு புன்னகையுடன் சொல்கிறார். மிகச் சாதாரணமான தொனியில், “ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது,” என்று, காவியங்கள் மற்றும் காலமின்மைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் கதை துவங்குகிறது. அடுத்த வரியிலேயே, ‘எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்,‘ என்று கதைக்குரியவரின் பிரச்சனை சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கு அடுத்து,

“பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.”

என்று விஷயத்துக்கு வந்து விடுகிறார் நரோபா. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரோபா இந்த இடத்துக்கு வர இரண்டு பக்கங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அதன் பின்,

“திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.”

என்ற அறிமுகத்தில் திருமிகு பரிசுத்தம் யார் என்பதும் இந்தக் கதையின் மிகைகளும் நிறுவப்பட்டு விடுகின்றன.

அதற்கு அடுத்த இரு பத்திகளில் கதைக்குரியவர் இங்கும் ஒரு மிதியடியாய் இருப்பதைக் காட்டியபின் கதை திருமிகு. பரிசுத்தத்தின் அறைக்குள் நுழைகிறது. அங்கு நாம் அவரது வெல்லும் விசையை நன்றாகவே அறிந்து கொள்கிறோம். ‘கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி…‘ முதலான கனவான்களோடு திருமிகு பரிசுத்தம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போதாதென்று, ‘பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே‘ மாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒரு அபத்த உரையாடல் நிகழ்கிறது. சமூகம் ஒரு டார்வினிய சோதனைக்கூடம், அதில் வெல்லும் விசை கோபத்தால் அருளப்படுவது என்பதுபோல் திருமிகு பரிசுத்தம் மேற்கொள்ளும் விசாரணை தொடர்கிறது, ஆனாலும் பயனில்லை.

““பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது”,

என்று தொடரும் உரையாடலின் முடிவு கதைக்குரியவர் எதற்கும் கோபப்படாதவர் என்று உணரும் இடத்துக்கு வந்து சேர்ந்ததும், ஒரு தேர்ந்த சிறுகதைக்குரிய திருப்பம் நிகழ்கிறது.

‘அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே…’

பறந்து செல்கிறார். ஒரு காலத்தில் அவர் இந்திரனாக இருந்திருக்கக்கூடும்.

கதையின் முடிவு, இவ்வுலகம் சபிக்கப்பட்ட ஒன்றாகவும், இங்கு வெற்றி பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இதன் நோய்மையால் பீடிக்கப்பட்டவர்கள் குழப்பத்தில் தவிக்கும் புண்ணியாத்மாக்களாவும் இருப்பதாய் நினைக்க வைக்கும் வகையில் கதையைப் புரட்டிப் போடுகிறது. திருமிகு பரிசுத்தம் யார் என்ற கேள்வி எழாமலே நாம் அதற்கான விடையை உணர்கிறோம்.

திருமிகு பரிசுத்தம், நரோபா

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

பீட்டர் பொங்கல்

குழந்தைகள் கையில் ஒரு புதுப்பொருள் கிடைத்தால் அதை எல்லா இடங்களிலும் பொருத்தி விளையாடுகின்றன- ஸ்க்ரூ டிரைவர் இருந்தால் எல்லாவற்றையும் கழற்றிப் போடப் பார்த்தல், பசை இருந்தால் எதையெல்லாம் ஒட்டி வைக்கலாம் என்று தேடுதல், தீப்பெட்டி இருந்தால் எதற்கெல்லாம் தீ வைக்கலாம் என்று யோசித்தல் – நாம் வளர்ந்து, நமக்கு பொறுப்பு வந்து விட்டால் மட்டும் இது பெரிய அளவில் மாறுவதில்லை. எப்போதும் நாம் கைவசம் உள்ள கருவிகளைக் கொண்டே இவ்வுலகைப் புரிந்து கொள்கிறோம், அவ்வாறு புரிந்து கொள்ளும்போதே உலகின் இயல்பை நம் மனதில் திருத்தி வடிவமைக்கவும் செய்கிறோம். இதில், பொறுப்புடன் கூடவே வெற்றியும் அதனால் ஏற்படும் தன்னம்பிக்கையும் வாய்த்து விட்டால், நாழியே  நம் கருவி என்றாலும் அதைக் கொண்டு உலகளந்து விடலாம் என்ற உறுதியான நம்பிக்கை வந்து விடுகிறது. ஆற்றலும் வெற்றியும் நாம் சரியாக இருப்பதற்கான அத்தாட்சிகள் என்பதால் அதை வேறு பலரும் ஏற்கப் போய் நம் நாழி ஒரு அலகும் ஆகிறது. ஆனால், யானையைப் போல் உலகும் தடவிப் பார்க்கும் கரங்களுக்கும் புறத்தகவல்களைத் தொகுத்து அதற்கொரு உருவம் அளிக்க உதவும் கருவிகளாகிய கருத்துச் சட்டகங்களுக்கும் அப்பால் தன் போக்கில் போகிறது.

ஆங்கிலத்தில் லிடரேச்சர் என்பதை நாம் இலக்கியம் என்கிறோம். ஹை-லிட், லோ-லிட் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த காலம்கூட இப்போது போய் விட்டது. எழுதப்படும் எல்லாவற்றையும் லிடரேச்சர் என்று சொல்ல ஆரம்பித்து, திரைப்படங்கள் உட்பட நம் விசாரணைக்குரிய பிரதி நிலையை அடையக்கூடியவை எல்லாம் லிடரேச்சர் என்ற இடத்தில் வந்து நிற்கிறோம். அதற்காக எல்லாம் ஒரே அளவில் சம மதிப்பு கொண்ட இலக்கியம் ஆவதில்லை – புனைவுத்தன்மை, வடிவத்துக்கு ஏற்ற மொழி கொண்டிருத்தல், பயன்பாட்டு நோக்கமின்மை, கற்பனையைத் தூண்டுதல் போன்ற விஷயங்கள் ஒரு படைப்பை இலக்கியம் என்று பாராட்டத்தக்க இடத்துக்கு அருகில் கொண்டு செல்கின்றன.

மொழி பல திசைகளில் விரியக்கூடியது, பல்பொருள் அளிக்கக்கூடியது. குறிப்பிட்ட ஒரு தொடர் வரிசையில் முன்னும் பின்னும் வரக்கூடிய வாக்கியங்களைக் கொண்டே எந்த ஒரு வாக்கியமும் அதன் பொருள் இன்னது என்று வரையறை செய்யப்படக்கூடியது. அப்படியும் அதன் பொருள் பல கற்பனைகளுக்கு இடம் தரலாம். மொழியின் இத்தன்மையை அழகியலாய்க் கொள்வதாலேயே இலக்கியம் என்பது சுட்டுதல் என்று பொருள் கொண்டு, ஒரு படைப்பு எதைச் சுட்டுகிறது, தான் சுட்டும் பொருளைத் தன்னுள் எவ்வளவு கொண்டிருக்கிறது, எவ்வகையில் இச்சுட்டல் நிகழ்கிறது என்று பலவாறு பேசுகிறோம். ஒரு படைப்பு தான் நேரடியாய்ச் சொல்வதற்கு முற்றிலும் முரணான பொருள் தரலாம், அல்லது நேரடியான பொருள் ஒன்று மறைபொருள் ஒன்று என்று இருவேறு வகைகளில் பொருள்படலாம், படைப்பில் உள்ளதன் ஒரு பகுதியை மறைத்து அது சுட்டுவதாய் நாம் கொள்ளும் பொருளை, சொன்னது பாதி சொல்லாதது பாதி என்று அதிலுள்ள இடைவெளியில் நிரப்பும் சாத்தியம் கொண்டிருக்கலாம்.

இது எதுவும் நாம் அறியாதது அல்ல. ஒரு படைப்பு கற்பனைக்கு இடம் கொடுக்காதபோது, அதன் வாசிப்பனுபவத்தில் அகத்தூண்டுதல் நிகழாதபோது, தட்டையான மொழி, தட்டையான வடிவம் என்று அது நிராகரிக்கப்படுகிறது. புனைவென்றால், திரைக்குப்பின் உள்ள நிழலாட்டத்தின் சாயல் அதில் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிழல், சொல்லப்படும் விஷயத்துக்குப் பின்னுள்ள சொல்லப்படாத விஷயத்தின் சுட்டல், புனைவுக்கு, ஏன் மொழிக்கே, ஒரு கூடுதல் பரிமாணம் அளிக்கிறது. இது தொடர்பாகவே இலக்கியம் குறித்த விவாதங்கள் நிகழ்கின்றன.

இந்த அழகியலோடு அறம் சேரும்போது ஒரு சிறிய நுண்மையாக்கம் நிகழ்ந்து தீவிர நிலைப்பாடுகள் தோன்றுகின்றன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது, எது மதிப்பு கொண்டது, எது மதிப்பற்றது என்ற விவாதங்களில் கதைசொல்லலின் விளையாட்டுத்தனம் அடிபட்டுப் போகிறது. எத்தனை பேசினாலும் கதை சொல்லல் ஒரு மொழி விளையாட்டும்தான் என்பதை மறுக்கவே முடியாது, ஆனால் விளையாட்டுத்தனமான கதைகளில் இலக்கியத்தின் ஒளி பெரும்பாலும் பாய்வதே இல்லை. விளையாட்டுத்தனம் குறையும்போது இலக்கியத்தின் ஒரு முக்கிய இயல்பான பயன்பாட்டு நோக்கமின்மைக்கு இடமில்லாமல் போகிறது – இலக்கியம் ஒரு இயக்கம் என்ற இடத்தை அடையும்போது அதன் இலட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, விளையாட்டுத்தனம் அர்த்தமற்றுப் போகிறது. குழந்தைகள் விஷயத்தில் பார்ப்பது போல், விளையாட்டுத்தனம்தான் கற்பனையைத் தூண்டுகிறது, நம் கருவிகளின் புதுப் பயன்பாட்டைக் கண்டறிய உதவுகிறது.

oOo

பொண்டிங் இன்னமும் வந்து சேரவில்லை‘, என்று துவங்கும் ஜேகேவின் கதையில்  பிரிந்து வாழும் அருணும் மயூரியும் உரிமை கொண்டாடும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவன் பொண்டிங். பெரும்பாலும் அருனின் பார்வையில் சொல்லப்படுகிறது- மயூரி நிறைய பொய் சொல்பவள் என்பதையும் அவள் சூடானியன் ஒருவனோடு சேர்ந்து வாழ்கிறாள் என்பதையும் அது குறித்த அருணின் கவலைகளையும் நாம் துவக்கத்திலேயே அறிகிறோம்- “பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது.” அவன் கவலையெல்லாம் பொண்டிங் மீதே என்று சொல்லிக் கொண்டாலும் மயூரி மீது அருண் கொண்டுள்ள உரிமையை மணமுறிவுக்குப் பின்னும் அவன் மனம் விலக்கிக்கொள்ள மறுக்கிறது.

பொண்டிங் என்ற பெயரைத் தேர்வு செய்வது மயூரிதான். கதைக்களம் ஆஸ்திரேலியாவில் உள்ள ப்ரெஸ்டன் என்பதால் பொண்டிங்கைத் தேர்ந்தெடுக்கும் மயூரி ஆஸ்திரேலிய அடையாளத்தை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்றும் ‘ராம், சிவாஸ், கண்பத்’ என்ற சாமி பெயர்கள், அல்லது, ‘சச்சின், சனத்’ என்ற ஆசிய கிரிக்கெட்டர்களின் பெயர்களை அருண் விரும்புவதில் அவனது அடையாளச் சிக்கல் தொடர்கிறது என்றும் கொள்ளலாம். ஆனால் குடியேறியவர்களின் இந்தச் சிக்கல்கள் கதையில் இன்னும் விரித்தெடுக்கப்படவில்லை. போகிற போக்கில் இது இடம் பெறுகிறது, எப்படி மயூரி சூடானியனுடனும் அருண் அலெக்சாந்திராவுடனும் மணமுறிவுக்குப்பின் வாழ்கிறார்களோ அது போல் இதுவும் கதைக்கு பின்னணி சேர்க்கிறது.

பொண்டிங் குறித்த சண்டை எண்ணற்ற பல சண்டைகளில் ஒன்று, இறுதிச் சண்டை, ‘அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை‘. இது ஏன் இறுதிச் சண்டையாக ஆகிறது, ஏன் அவ்வளவு பலமான அடிதடி என்பது கதையின் கடைசி வரியில்தான் புலப்படுகிறது. இதற்கு வேண்டிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதால் அருணுக்கும் மயூரிக்கும் நடுவில் என்ன நடந்திருக்கும், அவர்களின் சண்டை எது குறித்து இருந்திருக்கும் என்பதை வாசகனே ஊகிக்க வேண்டியதாகிறது. பொண்டிங்கைவிட கதைக்கு இதுதான் முக்கியம், இதில் இல்லாத கவனம் பொண்டிங் மீது விழுவதில் உண்மையை எதிர்கொள்ள மறுக்கும் அருணின் பலவீனம் இருக்கிறது.

இன்னும் சொல்வதானால், அருண் சில உண்மைகளை நம்மிடமிருந்தும் மறைக்கிறான்- “மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது,” என்று பல தகவல்களுக்கு இடையே அருண் விவாகரத்து பெற அவசரப்படுகிறான் என்ற தகவலும் இருக்கிறது, ஆனால் அது ஏன் எதனால் என்ற கேள்வி கதையில் இல்லை. அருண் அதைச் சொல்வதில்லை, அருண் பார்வையில் கதைசொல்லும் ஜேகேவும் சொல்வதில்லை. ஆனால் சிறிது ஊகித்தால் நாம் கண்டு கொள்ளலாம். அதற்கும் கதையின் இறுதிக்கு வர வேண்டியிருக்கிறது.

ஆங்கில துப்பறியும் கதைகளில் red herring என்று ஒன்று சொல்வார்கள், வாசகனின் கவனத்தைத் திசை திருப்ப வேறு திசையில் சந்தேகம் கொள்ள வைக்கும் உத்தி. அதற்கு இணையான ஒன்றாக, அருண் மீது சந்தேகம் எழாத வகையில் இங்கு பொண்டிங் யார் என்ற கேள்வி கதை முழுக்க, தலைப்பு துவங்கி இறுதி வரை நீடிக்கிறது – “இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும்,” என்ற ஒரு புதிர்த்தனமான இடத்தைத் தவிர கதை முழுவதும் பொண்டிங்கை அருண் ‘பிள்ளை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்- “சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக் கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.  படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான்,” என்றெல்லாம் வேறு எழுதுகிறார். பொண்டிங் மீது யாருக்கு கூடுதல் உரிமை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.

கதையின் இறுதியில் அலெக்சாந்தரா வெளிப்படும்போதுதான் பொண்டிங் யார் என்ற நம் சந்தேகமும் உறுதிப்படுகிறது. ஆனால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று மிகத் தேர்ந்த வகையில் கதை சொல்லும் ஜேகே, பாண்டிங் குறித்த மர்மத்தை அவிழ்க்கும் அதே வரியில் இதனுள் உள்ள இன்னொரு கதையின் மர்மத்துக்கும் விடையளிக்கிறார். ஆனால், இப்படியொரு மர்மம் இருப்பதே கதையை இரண்டாம் முறை படிக்கும்போதுதான் தெரிகிறது.

இந்தக் கதை நமக்கு அளிப்பது முழுக்க முழுக்க ஒரு அறிவு நிலை திருப்தியைதான். ஒரு குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்த திருப்தி போன்றது இது. அருண், மயூரி, பொண்டிங் என்று எவரது உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. புறத்தகவல்கள் என்ற அளவிலேயே கதை சொல்லப்படுகிறது, முரண்கள் குறித்த அகவுணர்வுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. அருணின் உணர்வுகள் விவரிக்கப்படுவதும் ஒரு விளையாட்டுப் போக்கில்தான் என்பதை யோசித்துப் பார்த்தால் நாம் அறிய முடியும். விளையாட்டாகக் கதை சொல்வது என்று பார்த்தால் ஜேகே மிகச் சுவாரசியமாக, படித்து முடித்த பின்னரும் அசை போடக்கூடிய கதையைச் சொல்லியிருக்கிறார், அதில் சந்தேகமில்லை.

பொண்டிங், ஜே.கே. 

அகம் கொள்ளும் பாவனைகள் – நித்ய சைதன்யா சிறுகதை குறித்து

பீட்டர் பொங்கல்

சென்ற வாரம் பதிப்பிக்கப்பட்ட நித்ய சைதன்யாவின் ‘அகம்‘ என்ற சிறுகதை ஆசீர்வதிக்கப்பட்டது- பதாகையின் இருநூறாவது கதை அது. பதிப்பிக்கப்பட்டு ஒரு வாரம் ஆனபின், எந்த ஆரவாரமும் இல்லாமல் அந்த மைல்கல் கடக்கப்பட்டிருப்பது இன்றுதான் தெரிந்தது. பதாகையில் வந்த மற்ற பல கதைகளைப் போலவே எந்த விமரிசனமும் எதிர்வினையும் இல்லாமல் இந்தக் கதையும் வாசிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இது ஒரு முக்கியமான இடம் கடக்கப்பட்டிருப்பதன் தடமாகிறது. இது போல் இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள வேறு பல கதைகளும் அவ்வவற்றின் அளவில் ஏதோ ஒரு தடமாக பின்னொரு காலம் அங்கீகரிக்கப்படலாம். இந்த எதிர்பார்ப்புதான் பதாகை தொடர்ந்து இயங்க காரணமாகிறது.

ஒரு படைப்புக்கு கிடைக்கக்கூடிய எதிர்வினை என்பது எப்போதும் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக, நாம் நினைத்தபடி அமைவதில்லை. “‘அகம்‘ சிறுகதை படித்தீர்களா, என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு நண்பருக்கு அஞ்சல் செய்து கேட்டபோது, அவர் அளித்த பதில் அவ்வளவு மகிழ்ச்சியளிப்பதாய் இல்லை:

“சென்ற வாரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் உங்கள் அஞ்சலுக்குப்பின் படித்தேன். அவ்வளவாக சுரத்தில்லாது, அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்டது போல் இருக்கிறது. தொடக்கத்தில் கிழம், கிழவன் எனத் திட்டுகிறார். அப்புறம் ஏனோ தாத்தா என பாசத்துடன் விளிக்கிறார். முடிவில் பிரம்மஸ்ரீ என மரியாதையுடன் போகிறது. தலைப்புக்கேற்ற அகத்தேடலாகவும் இல்லை. சைவ சித்தாந்த விளக்கங்களும் இயல்பாக பொருந்தாமல் தேய்வழக்காகத் துருத்திக்கொண்டு இருக்கிறது.”

நித்ய சைதன்யாவின் இரண்டாம் கதை இது- இதற்கு முன் மலைகள் தளத்தில் ஒரு கதை வெளிவந்திருக்கிறது (‘நிழலேந்திய மரம்‘ ). கவிதைகளில் காண முடியாத களத்தை நித்ய சைதன்யா தன் கதைகளுக்கு என்று எடுத்து வைத்திருக்கிறார்- அதிர்ச்சி என்பது அதன் ஒரு இயல்பு என்று நினைக்கிறேன்.

வெகுச் சில கதைகளே எழுதியவர்களின் எழுத்தை எவ்வாறு அணுகுவது? நண்பர் அளித்த கருத்து, எந்தச் சலுகையும் இல்லாத கறாரான பார்வை கொண்டது. அதனால் அது மதிப்புமிக்கது. ஆனால், பதிப்பிக்கத் தகுந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது என்று வரும்போது இந்த எழுத்தாளர்களின் சாத்தியத்தைதான் பார்க்கிறோம். வேறு வகையில் சொல்வதானால், பதாகையில் வெளிவரும் இந்தக் கதைகள் சிறந்த கதைகள் என்று முன்வைக்கப்படுவதில்லை- விமரிசிக்கத்தக்க கதைகள் என்ற நம்பிக்கையில்தான் இவை தேர்வு செய்யப்படுகின்றன. விமரிசனங்கள் எதிர்மறையாய் இருந்தபோதிலும் அவற்றுக்கான பதிலைத் தம்மகத்தே கொண்ட கதைகளாய் விளங்கும் உயிர்ப்பு இவற்றுக்கு உண்டு என்பதுதான் எதிர்பார்ப்பு.

“”கிழட்டுத் தாயோளி உயிர வாங்குதானே” என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டே பன்னீர் பாட்டில்கள் அடங்கிய சாக்குப்பையை தோளில் துாக்கிவைத்தேன். உருவத்திற்குப் பொருந்தாமல் பஞ்சைப்போலிருந்தது.

”பேபி ஸ்டோர்ல குடுத்துட்டு. உங்கக்காவுக்கு ரெண்டு தேங்கா வாங்கிக்கோடா மாப்ள” என்றது கிழம். கோமணம் மீறி விதைப்பை ஒன்று வெளித்தெரிந்தது. எண்ணெய்க் குவளையால் பன்னீரை மொண்டு வெள்ளைப்பிளாஸ்டிக் பன்னீர் பாட்டிலில் புனல்கொண்டு ஊற்றினார். எனக்கு எப்போதும் அவர்மீது ஒருவித ஏளனம் கலந்த எரிச்சல்தான். குடும்பத்தின் சவால்களுக்குப் பயந்த பெருங்கோழை.”

என்று துவங்குகிறது கதை. இதையடுத்த பத்திகள், தாத்தாவின் பழக்க வழக்கங்களை விவரிக்கும்போதே அம்மாவுக்கு தாத்தாவிடம் உள்ள முரண் உணர்வு நிலை சொல்லப்படுகிறது – வீட்டுக்கு வராத தாத்தா, வழியில் ஏதாவது சாப்பிடத் தந்ததை அம்மாவிடம் சொல்லும்போது, “சட்டென்று அவள் முகத்தில் ஒரு குழைவு தோன்றும். முந்தானையால் கண்களை ஒற்றிக் கொள்வாள்“. ஆனால் அடுத்த வாக்கியத்திலேயே, “அம்மா பிறந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சண்டை நாறும். அம்மாவின் வாயில் இருந்து தெறித்து விழும் வார்த்தைகளால் தாத்தா நடுங்கிப்போவார். ”நீச முடிவான் பாழுங்கிணத்துல என்னெக்கொண்டு தள்ளிப்போட்டானே. இந்தப்பிஞ்சுக்காக நான் இன்னும் உயிரோட இருக்கேன்”, என்று செல்கிறது கதை.

பத்துத்தறிகள் போட்டு இரண்டு ஜவுளிக்கடைகளை நடத்திவந்த‘ தாத்தா திடீரென்று சாமியார் ஆகிறார், அவர் இருக்குமிடம் தெரிந்ததும் மூன்று பெண் குழந்தைகளுடன் போய் அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார் பாட்டி. தாத்தா சாமியார் போல் இருந்து கொண்டு ஊதுபத்தி செய்து விற்றுக் கொண்டிருக்கிறார். பேரன் ஒரு காதல் தோல்விக்குப்பின் பாட்டி வீட்டுக்குச் சென்று, தாத்தாவுக்கு அணுக்கமானவனாக- ஊதுபத்தி செய்ய உதவி, அவரது சைவ சித்தாந்த தத்துவங்களை ஆர்வமில்லாமல் கேட்டு- வளர்கிறான்.

தோற்றுப் போனவராக, வேடதாரியாக-, இரக்கத்துக்கு உரியவராக அல்ல, வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் உரியவராக வெவ்வேறு இடங்களில் விவரிக்கப்படும் தாத்தா, பேரனின் பார்வையில்தான் நமக்குக் கிடைக்கிறார்- அவரை வசவு பாடும் அம்மாவின் பார்வையில் கிழவனாக, பாட்டியின் அணுக்கத்தில் தாத்தாவாக, இறுதியில் சக காவி வேட்டிக்காரரின் வணக்கத்துக்குரிய பிரம்மஸ்ரீ மாணிக்கம் சுவாமியாக. அம்மா திட்டும்போது இந்தத் தாத்தா நடுங்கிப் போகிறார், இருபது ஆண்டுகளாகப் பேசிக் கொள்ளாமல், ஆனால் தாத்தாவிடம் மாறாப்பிரியம் கொண்ட, எப்போதும் தரையை வெறித்துக் கொண்டிருக்கும் பாட்டியுடன் தனக்கென்று ஒரு உலகில் ஆணவ மலம் பற்றியும் பட்டினத்தார் பாடல்கள் பற்றியும் பேசும், துறவு பூண்ட சித்தாந்தியாக இருக்கிறார்- தன்னிடம் வினயமாக நடந்து கொள்ளும் சாதகன் வரும்போதுதான் அவரது அகம் மலர்கிறது-

“வந்தவர் நாற்காலியில் அமராமல் தாத்தாவின் காலருகே பயபக்தியோடு தரையில் அமர்ந்தார். நான் தாத்தாவின் முகத்தைப்பார்த்தேன். அதுவரை நானறியாத புதுபாவனை அவர் மீது வந்து இறங்கியிருந்தது.”

இங்கு மலர்வது தாத்தாவின் அகம் மட்டுமல்ல, கிழட்டுத் தாயோளி என்று திட்டிய, தற்கொலை செய்து கொண்ட தந்தையை இழந்த, காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற பேரனின் அகமும்தான்- இப்போது அவனும் தாத்தாவை புது பாவனையுடன் பார்க்கிறான், இல்லையா? தாத்தாவைப் போலவே தனது இழப்புகளையும் சரிக்கட்டும் ஒரு இடத்தை அவனும் அடையலாம், அவனே அவமானமானது, ஏளனத்துக்குரியது, மதிப்பற்றது என்று அதை நினைத்தாலும்.

அகம் சிறுகதை