எழுத்து

பொறிக்குள் அகப்படாத எலி

மஜீஸ்

பொறிக்குள் அகப்படாத
அந்த எலி
கால் பெருவிரலில் கடித்து
வஞ்சம் தீர்த்துவிட்டு தப்பியிருந்தது
எலிக்கடிக்கு ஆஸ்பத்திரி மருந்து
விஷம் முறிக்காது
கடிபட்ட இடத்தில்
“தங்கத்தைச் சுட்டு தேய்த்தால்”
விஷம் நொடிப்பொழுதில்
முறிந்து விடுமென்று
மரபு வழி வைத்தியமொன்றை
பரிந்துரைக்கும்
பக்கத்து வீட்டு கிழவிக்கு தெரியாது
அடுத்த அறுவடைக்குப் பிறகு
மீள முடியுமென்ற நம்பிக்கையில்
உள் வீட்டு அலுமாரியில்
பத்திரப்படுத்தியிருக்கும்
அடகு சீட்டுக்கள் ஒரு போதும்
தங்கத்திற்கு ஒப்பாகாதென்று.

குற்றமும் தண்டனையும்

காலத்துகள்

1. குற்றம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு வார இறுதியில் பழைய புத்தகக் கடையில் துழாவிப் கொண்டிருக்கும்போது ‘வாசகனுக்காக காத்திருக்கும் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை பார்த்தேன். எழுதியவர் பெயர் ‘முற்றுப்புள்ளி’ என்று இருந்தது. 1971ஆம் ஆண்டு வெளிவந்திருந்த அந்தநூலின் முதல் பக்கத்தில் ‘எப்போதும் என்னுடனிருக்கும் என் மனைவிக்கும், இந்தப் புத்தகத்தை வாசிக்கப்போகும் என் முதல் வாசகனுக்கும் சமர்ப்பணம்’ என்றிருந்ததும் என்னை ஈர்க்க, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

சிறிய முன்னுரையில் இந்த நூல் உருவான விதம் குறித்து எழுத்தாளர் சொல்லி இருந்தார். சுமார் 15 ஆண்டுகளாக எழுதி வந்துள்ள அவருடைய எந்தக் கதையும் பிரசுரமாகவில்லையாம். அதற்காக பத்திரிக்கைகளை அவர் திட்டவும் இல்லை. ஆனால் மனமுடைந்த நிலையில் இருந்த அவரிடம் அவர் மனைவிதான், தானே தன் கதைகளைத் தொகுத்து வெளியிடும் யோசனையைத் தந்திருக்கிறார். முதலில் இவர் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யோசித்துப் பார்க்கும்போது அதுவே சரியான முடிவென்று தோன்றியதாகவும், இந்த நூலை வெளியிட்டு முடித்தவுடன் எதையும் எழுதப்போவதில்லை என்றும் முடிவு செய்ததாக கூறுகிறார். அதுவரை அவர் மனைவி மட்டுமே அவர் கதைகளை வாசித்திருந்தாலும், கணவன் என்பதால்தான் அவர் வாசித்திருக்கிறார், வேற்று மனிதனாக இருந்திருந்தால் அவருக்கும் தன்னைப் பற்றி தெரிந்திருக்காது, எனவே இனிமேல்தான் தன் முதல் வாசகனைப் பெறவேண்டும், எனவேதான் இந்நூலுக்கு இத்தகைய தலைப்பை வைத்ததாகவும், இத்துடன் தன் எழுத்துலக வாழ்க்கை முடிந்து விடுகிறது என்றும் எழுதியிருந்தார். பதிப்பித்தவர் பற்றிய தகவலில் ‘முற்றுப்புள்ளி’ என்றிருந்தாலும், முகவரி நானிருக்கும் நகரத்தில் இருந்தவர் அவர் என்பதை தெரிவித்தது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர் இன்னும் அங்கிருப்பாரா கேள்வி எழுந்தது.

நான் அன்றிருந்த மனநிலைக்கு இந்த நூல், இல்லை, அதன் முன்னுரை மிகவும் நெருக்கமானதாக இருந்தது. 14 கதைகள் கொண்ட அந்தத் தொகுப்பை அன்றே படித்து முடித்தேன். எனக்கு அக்கதைகள் பிடித்திருந்தன. அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய 3 கதைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. சோர்வுற்றிருந்த நான் மீண்டும் இந்த சிறுகதைத் தொகுப்பை படித்தபோதுதான் அந்த எண்ணம் தோன்றியது. யோசிக்காமல், ‘முற்றுப்புள்ளி’ என்று மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து உங்களுக்கு இந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கதையை தட்டச்சு செய்து அனுப்பினேன்.

தன் கதைகளைப் பிரசுரிக்க பெரும்பாடுபட்ட அவர்பால் எனக்கு உண்டான பரிவா அல்லது (‘எனது’ இரண்டாவது புனைபெயரில் என்றாலும்) இதுவாவது பிரசுரமாகுமா என்ற நப்பாசையா என்று என்னால் இப்போதும் உறுதியாகச் சொல்ல முடியாது. அந்த நேர உந்துதலில் அதைச் செய்து விட்டேன். அந்தக் கதை ஏற்கப்பட்டது. பிறகு கடந்த 4 மாதங்களில் முற்றுப்புள்ளி தொகுப்பில் இருந்த வேறு 6 கதைகளும், காலத்துகளின் 2 கதைகளும் உங்கள் தளத்தில் வெளிவந்துள்ளன.

இப்படி ஏமாற்றி அனுப்புவது குறித்த கடந்த 10-15 நாளாக மன உளைச்சல் அதிகமாக, நேற்று மாலை நூலில் இருந்த முகவரிக்கு சென்று பார்க்க முடிவு செய்தேன். அந்த வீட்டில் 50-55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்எ ன்னை எதிர்கொண்டார். அவருக்கு இந்நூல் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும், தன் தந்தை அறிந்திருக்கக்கூடும் என்றும் சொல்லி அவர் அறைக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். 80 வயதிருக்கக்கூடிய முதியவர், என் கையில் இருந்த நூலைப் பார்த்ததும் மிக சிறிய அளவில் சலனமடைந்தார் என்று தோன்றியது.

மகன் வெளியே செல்ல, இருவரும் பேச ஆரம்பித்தோம். முன்னுரையில் எழுதி இருந்ததையே மீண்டும் சொன்னார். மனைவி குறித்து மன எழுச்சியுடன் பேசினார். அவர்தான் நூல் வெளியிட்டு ஒரு வடிகால் கிடைத்தால், தான் தொடர்ந்து எழுதுவோம் என்று நம்பினார் என்றும், அவர் இல்லாவிட்டால் தனக்கு பைத்தியம் பிடித்திருக்கும் என்றார். அருகிலுள்ள பூங்காவிற்கு மாலை நேர நடைக்கு சென்றிருக்கும் அவரது மனைவி என்னை (அவரது முதல் வாசகனை) கண்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவார் என்றும் சொன்னார். அவர் இன்றைய எழுத்துக்கள் வரை தொடர்ந்து வாசித்து வருகிறார் என்பது அவர் அறையில் அறையில் இருந்த புத்தகங்களிலிருந்து தெரிந்தது. இன்னும் பத்திருபது நாட்களில் ‘வெய்யோன்’ நாவலின் செம்பதிப்பு கிடைத்து விடும் என்று குதூகலத்துடன் சொன்னார்.

அவரிடம், மிகுந்த தயக்கத்துடன் நான் செய்த காரியத்தைச் சொன்னேன். அவர் உடல் மொழியில் இறுக்கம் தோன்றினாலும் , அதிர்ச்சி அடைந்தவர் போல் தெரியவில்லை. அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். உங்கள் தளத்தை அவர் தொடர்ந்து வாசித்து வருகிறாராம். 4 மாதங்களுக்கு முன் தன் புனைப்பெயரிலேயே தன் கதைகளை இன்னொருவன் தன் அனுமதியில்லாமல் பதிவுகள் செய்திருந்ததை படித்து முதலில் வியப்படைந்தாலும், பிறகு விட்டுவிட்டாராம். (இந்த வயதில் வேறு என்ன செய்ய, என்றார்). தொடர்ந்து தன் கதைகள் வெளியாகவே அடுத்து எந்தக் கதை வரும் என்று (நான் புத்தகத்தில் உள்ளது போல் இல்லாமல் எனக்கு பிடித்திருந்த வரிசையில் உங்களுக்கு கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன்) ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.

மன்னிப்பு கேட்கும் தகுதி எனக்கு இல்லை, இன்றே உண்மையைச் சொல்லி அனைத்து கதைகளையும் எழுதியவர் நீங்கள்தான் என்று தெரிவித்து விடுகிறேன் என்றேன். அதெல்லாம் வேண்டாம், உங்கள் மனசாட்சி உங்களைத் தொந்தரவு செய்ததால்தானே நீங்கள் இங்கு வந்தீர்கள், இலக்கியத்தின் ஒரு முக்கிய நோக்கம், மனசாட்சி குறித்த சிக்கலை முன்வைப்பதுதானே, மஹாபாரதமே அதைத்தானே செய்கிறது, மேலும் தாஸ்தாவெஸ்கிகூட ரஸ்கால்நிகோவும் மீட்சியடைமுடியும் என்றுதானே சொல்கிறார், அவனுடன் ஒப்பிடும் போது நீ ஒன்றுமே செய்யவில்லையே, எனவே நீ வருந்தாதே, என்றார்.

அப்போது அவர் மனைவி வர, அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் மனைவி அடைந்த பரவசத்தை எளிதில் சொல்ல முடியாது. கணவரின் முயற்சிக்கு இப்போதாவது பலன் கிடைத்ததே என்று நெகிழ்வோடு சொன்னதோடு, வீடு தேடி வந்து சந்தித்ததற்கு நன்றி சொன்னார். எனக்குத்தான் நான் செய்ததை நினைத்து மிகவும் கூச்சமாக இருந்தது. முற்றுப்புள்ளி நான் செய்ததைக் குறித்து தன் மனைவியிடம் கூறவில்லை. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அது மட்டும் தெரிந்திருந்தால் அந்த அம்மையாரிடமிருந்து நான் தப்பித்திருக்க முடியாது. சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பிறகு தன் மனைவி சொன்னதில் பாதி நடந்தது என்றார். தான் தொடர்ந்து எழுதி வருவதாகவும், ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக ஒன்றையும் பிரசுரிக்க அனுப்பவில்லையென்றும் சொன்னார். தன் லேப்டாப்பில் பதிவேற்றி வைத்திருந்த கதைகளை காண்பித்தார். 45 ஆண்டுகளில் 77 கதைகளை எழுதியுள்ளார். ஆனால் அவற்றை 77 கதைகள் என்று சொல்லிவிட முடியாது. 77 ஃபோல்டர்களில், ஒவ்வொன்றின் உள்ளேயேயும் V1, V2, V3 என பல வெர்ஷன்கள் அவை எழுதப்பட்ட வருடங்கள் பற்றிய குறிப்புடன் இருந்தன (சில கதைகள் v1.1, v1.2, v1.3 என்று சப்-ஃபோல்டர்களிலும் நீண்டன). கதைகளை யாருக்கும் அனுப்புவதில்லை என்பதால், அவற்றை தொடர்ந்து திருத்திக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். 70களில் எழுதிய கதையை போன வருடம்கூட சற்றே திருத்தியிருக்கிறார். அவரின் ஈடுபாடு அசரடித்த அதே நேரம் அதற்கு துரோகம் செய்து விட்டேன் என்ற நினைவு வருத்தியது. உண்மையைச் சொல்லப்போகிறேன் என்று நான் மீண்டும் அவரிடம் சொன்னபோது அவர் மறுத்துவிட்டு வேறு சில நாவல்கள்/எழுத்தாளர்கள், இலக்கிய போக்கு இவற்றில் உரையாடலை திருப்பி விட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிய பிறகு, இனி அடிக்கடி வந்து அவரைச் சந்திப்பதாகக் கூறி விடைபெற்றேன். அவர் மனைவியிடம் நான் செய்ததைப் பற்றி கூறாமல் இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் மீண்டும் செல்ல எண்ணியுள்ளேன். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

அவர் என்ன சொன்னாலும் என் மனம் ஒப்பாததால் இன்று காலை இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன். அவரை மட்டுமல்ல, உங்களையும் நான் ஏமாற்றி இருக்கிறேன். நான் மன்னிப்பு கோரப்போவதில்லை. இந்த மின்னஞ்சலை நீங்கள் அப்படியே உங்கள் தளத்தில் வெளியிட்டு ‘காலத்துகள்’ என்ற பெயரில் (நான் சொந்தமாக எழுதிய) கதைகளை நீக்க முடிவு செய்தாலும் எனக்குச் சம்மதமே. என்ன, முற்றுப்புள்ளியைப் பற்றி இப்போது உங்களிடம் நான் எதுவும் சொல்ல முடியாது. அதையும் இன்னும் ஓரிரு வாரத்தில் சரிசெய்து அவர் அனுமதி பெற்று அவரது முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

தண்டனை கோரி,

காலத்துகள்

2. தண்டனை

வணக்கம் காலத்துகள்,

உங்கள் கதை கிடைத்தது. இதைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். இரு நண்பர்களின் கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை, இந்தக் கதையை இவை இன்னும் செறிவாக்கும் என்று நினைத்தால் செய்யலாம். அதற்கு முன் என் கருத்து.

இந்தக் கதையில் நீங்கள் இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி என்ற இலக்கிய கோட்பாட்டைப் பயன்படுத்த முயல்கிறீர்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியாது, ஆனால் நீங்கள் குறிப்பிடும் அதே காலகட்டத்தில் ‘முற்றுப்புள்ளி’ என்பவரும் சில சிறுகதைகளை இங்கு எழுதியுள்ளார். இன்டர்-டெக்ஸ்டுவாலிட்டி குழப்பங்கள் வேண்டாம் என்று நினைத்தால் இந்தப் பாத்திரத்தின் பெயரை மட்டும் நீங்கள் மாற்றி விடலாம் (நீங்கள் முற்றுப்புள்ளி இல்லை என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்). இன்னொன்று உங்கள் கதைகள் தன்னுணர்வு கொண்டவையாக, தன்னைத் தானே பிரதிபலித்துக் கொள்பவையாக உள்ளன. அது தவறில்லை, ஆனால் மனித உணர்வுகளின் ஆழங்களை தேடுவதற்கு பதிலாக, வடிவம்/ உத்தி மட்டுமே எழுத்து என்ற இடத்திற்கு உங்களை அவை இட்டுச் செல்லக் கூடும்.

பின்நவீனத்துவ நகைமுரண் (postmodern irony) குறித்த டேவிட் பாஸ்டர் வாலஸின் இந்தக் கருத்தையும் சிந்தித்துப் பார்க்கலாம்-

“Irony and cynicism were just what the U.S. hypocrisy of the fifties and sixties called for. That’s what made the early postmodernists great artists. The great thing about irony is that it splits things apart, gets up above them so we can see the flaws and hypocrisies and duplicates. The virtuous always triumph? Ward Cleaver is the prototypical fifties father? “Sure.” Sarcasm, parody, absurdism and irony are great ways to strip off stuff’s mask and show the unpleasant reality behind it. The problem is that once the rules of art are debunked, and once the unpleasant realities the irony diagnoses are revealed and diagnosed, “then” what do we do? Irony’s useful for debunking illusions, but most of the illusion-debunking in the U.S. has now been done and redone. Once everybody knows that equality of opportunity is bunk and Mike Brady’s bunk and Just Say No is bunk, now what do we do? All we seem to want to do is keep ridiculing the stuff. Postmodern irony and cynicism’s become an end in itself, a measure of hip sophistication and literary savvy. Few artists dare to try to talk about ways of working toward redeeming what’s wrong, because they’ll look sentimental and naive to all the weary ironists. Irony’s gone from liberating to enslaving. There’s some great essay somewhere that has a line about irony being the song of the prisoner who’s come to love his cage.”

அவருடைய இந்தக் கட்டுரையையும் https://jsomers.net/DFW_TV.pdf படித்துப்பாருங்கள்.

இனி நண்பர்களின் கருத்து.

முதல் நண்பர் கூறுவது இது-

“இந்த மாதிரியான வடிவ உத்திகள் ஏற்கனவே வந்துள்ளன, அதன் தாக்கம் இந்தக் கதையில் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எழுத்தாளர் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார், எல்லாவற்றையும் ஒரே கதையில் சொல்ல வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை என்று அவருக்கு சொல்லவேண்டும். அதே போல் தேவையில்லாமல் எழுத்தாளர்/நூல்கள்/பாத்திரங்கள் பெயர் உதிர்ப்பும் செய்கிறாரோ என்று- இந்தக் கதையில் மட்டுமல்ல -இவர் கதைகளை படிக்கும் போது தோன்றுகிறது. முன்பு அனுப்பியிருந்த கதையில் மௌனி, இதில் ‘ரஸ்கால்நிகோவ்’ (அடுத்து தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் தால்ஸ்தோய் மற்றும் செகாவ் வரப் போகிறார்களா?)- இதெல்லாம் தேவையா என்று இவர் யோசிக்கலாம்.”

இன்னொரு நண்பரின் கருத்து.

“முற்றுப்புள்ளி பற்றியும் அவர் மனைவி பற்றியும் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லலாம். அவருடைய எந்தக் கதைகளும் பிரசுரமாகவில்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும், அவை எப்படிப்பட்டக் கதைகள் என்று குறிப்பிடப்படவில்லை. அவை எந்த தரத்தில் இருந்தாலும், இந்தப் பாத்திரம் குறித்து படிக்கும்போது ‘கான முயல் எய்த அம்பினில்…’ என்ற குறள்தான் ஞாபகம் வந்தது. முற்றுப்புள்ளி இலக்கியம்/ எழுத்து என்ற களிறுடன் போராடித் தோற்றிருந்தாலும், அது கம்பீரமான தோல்வியே (magnificent failure). காலத்துகள் குறித்து அப்படிச் சொல்ல முடியுமா என்பதை, யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.”

சிவப்புக்கிளி

விஜய் விக்கி

காலை முதலாகவே அலுவலக வேலை எதுவும் சரியாக ஓடவில்லை.. உடல் மட்டுமே வழக்கமான இருக்கையில் அமர்ந்தவண்ணம் இருக்க, எண்ணங்கள் சிதறியபடியே உள்ளத்தினை பரபரக்கச்செய்துகொண்டிருக்கிறது.. ஏற்றுமதி நிறுவனத்துக்கு அனுப்பவேண்டிய ஒப்பந்தப்படிவம் கிடப்பிலேயே போடப்பட்டிருப்பதற்கு மேலாளரிடம் ஒரு குட்டும் வாங்கியாகிவிட்டது.. இன்றைய நாள் இதைவிட மோசமாகிவிட முடியாது என்கிற தீர்க்கமான முடிவிற்கு வருமளவு எல்லாம் எரிச்சல்மயம்.. ஏதோ ஒரு கடுகடுப்பு மனதினுள் உறுத்திக்கொண்டே இருக்கிறது, பொறிக்குள் சிக்கிய எலியாக மனம் பதைபதைக்கிறது…

அலுவலகத்திலிருந்து படியிறங்கி, அருகிலுள்ள பெட்டிக்கடையை அடைந்தேன்.. வழக்கமான பரிச்சயப் புன்னகையுடன் கிங்க்ஸ் சிகரெட்டை எடுத்து கண்ணாடி குடுவையின் மீது வைத்தார் அண்ணாச்சி.. அதனை அவசரமாக பற்றவைத்தபடி அருகிலிருந்த திட்டினில் அமர்ந்தேன்.. ஒன்றிரண்டு புகைத்தலுக்கு பிறகு பதற்றம் சற்று தணிந்திருப்பதாக உணர்ந்தேன்..

கவினை அடித்திருக்கக்கூடாது!.. ஐந்து வயது குழந்தைக்கு என்ன உலக ஞானம் தெரிந்திருக்கப்போகிறது?… முட்டாள்த்தனமாக கன்னத்தில் ஒரு அறை, முதுகினில் இரண்டு அடிகள்… வலியால் துடித்து அழுதுவிட்டான்.. அப்படி அடிக்கும் அளவிற்கு என்ன தவறுசெய்துவிட்டான்?..

அவனுடைய டிராயிங் புத்தகத்தில் வரையப்பட்டிருந்த கிளிக்கு சிவப்பு வண்ணம் தீட்டியதற்குத்தான் அவ்வளவு அடிகளும், அதனை தொடர்ந்து என்னுடைய முழுநாள் புலம்பல்களும்..

“கிளிக்கு வேற கலர்ல பெயின்ட் பண்ணதுக்காக யாராச்சும் குழந்தைய போட்டு அடிப்பாங்களா?” அலுவலக பார்க்கிங்கில், சகா சற்று ஆற்றாமையுடன் வினவினார்…

“என்னப்பா பண்றது!… அந்த நிமிஷம் அது தப்புன்னு பட்டுச்சு.. கிளி பச்சை கலர்லதான் இருக்கும்னு ஒரு அடிப்படை அறிவுகூட இல்லையேன்னு சட்டுன்னு ஒரு கோபம், யோசிக்காம அடிச்சுட்டேன்..”

“சரி விடு.. வீட்டுக்கு போனதும் சமாதானப்படுத்திடு வெங்கட்.. இல்லைன்னா, உன்மேல லேசா அவனுக்கு வெறுப்பு படிஞ்சிடும்.. நாளடைவுல அதுவே அப்பா பையனுக்கு இடைல ஒரு விரிசல உண்டாக்கிடும்..”

தன் பங்கிற்கு சகாவும் மேலதிகமாய் குழப்புகிறார்.. இன்னும் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தால், கவினுடனான சண்டையை பாகப்பிரிவினை அளவுக்கு கற்பனை செய்துவிடுவார்… அவசரமாக அந்த கற்பனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்பொருட்டு, உறுமிக்கொண்டிருந்த பைக்கை ஸ்டார்ட் செய்து சர்ரென கிளம்பிவிட்டேன்..

இந்நேரம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்திருப்பான் கவின்… எங்காவது வெளியே அழைத்துச்செல்ல வேண்டும்… அவனுக்கு பிடித்தமான ப்ளாக் கரண்ட்  ஐஸ் க்ரீமும், பென்டன் பொம்மையுமே கவினை சமாதானப்படுத்த போதுமான விஷயங்கள்தான்!..

கோபமோ சந்தோஷமோ, குழந்தைகளை பொருத்தவரைக்கும் அந்தந்த தருணங்களை சார்ந்தவை மட்டுமே… நம்மைப்போல கோபங்களை மனதிலே சுமந்துகொண்டு, பழிதீர்க்க வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்குகள் கிடையாது!..

மனதினுள் கவினின் சிரித்த முகம் பிம்பமாய் தோன்றி, எனது குற்ற உணர்ச்சியை மேலும் அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறது.. கிளியின் வண்ணம் என்னவாக இருந்தால் எனக்கென்ன?.. நிஜத்தில் கவினை அடித்ததற்கு அதுதான் காரணமா? என்றால், என் மனமே கூட அதனை ஒப்புக்கொள்ள தடுமாறும், வெட்கித்தலை குனியும்.. கிளிக்கு ஏன் அவன் சிகப்பு, மஞ்சள் என வண்ணங்கள் தீட்டனும்?… சட்டென விதவிதமான வண்ணங்களை பார்த்ததும் மனதிற்குள் ஒரு பகீர் உணர்வு.. சற்றும் மனம் நிதானித்திடாமல், அடிக்கத்துணிந்துவிட்டேன்…

எனக்கொன்றும் வண்ணங்களின் மீது போபியா இல்லை… கிட்டத்தட்ட ஒருவார காலமாகவே மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயம், அதன் க்ரிட்டிக்கல் அளவீட்டினை தாண்டியபோது வெடித்து சிதறிய எண்ணக்குவியல்களின் விளைவுதான் கிளியை காரணமாக பிடித்துக்கொண்டு, என் செல்ல மகனை அடித்துவிட்டேன்… வண்ணங்களின் மீதான வெறுப்பும் அப்போதுதான் அரும்பியது..

கடந்த வாரத்தில் ஒருநாள், வழக்கமாக நாளிதழ்களை புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் ஜனனி அந்த பேச்சினை சாவகாசமாக தொடங்கினாள்… இல்லை, நான்தான் எப்படியோ ஹரியைப்பற்றிய பேச்சினை தொடங்கி ஒரு பூகம்பத்தின் வரவுக்கு பூக்கோலமிட்டேன்…

“எங்க போனான் ஹரி?.. ஆள பார்த்தே நாலஞ்சு நாள் ஆகுதுல்ல… இந்நேரம் இருந்திருந்தா நூறு ‘மாமா’ போட்டு, ஆயிரம் விஷயங்கள பேசிருப்பான்…” சிரித்தபடியே கலவரத்துக்கு தொடக்கப்புள்ளி வைத்தேன்…

“உங்க காதுக்கு இன்னும் அந்த விஷயம் வந்து சேரலையா?..” தக்காளியை பக்குவமாக நறுக்கிக்கொண்டிருந்தாள் ஜனனி..

“எந்த விஷயம்?” ஆர்வமானேன்..

“ஹரியைப்பத்தி.. நம்ம அப்பார்ட்மென்ட் முழுக்க பேசிப்பேசி ஓஞ்சு போன விஷயமாச்சே.. செகரட்டரி பாலு சார் சொல்லிருப்பார்னு நெனச்சேனே?”

“யாரும் எதுவும் சொல்லல ஜனு.. யாரையும் நான் பார்க்கவும் இல்ல… நீ புதிர்போடாம விஷயத்த சொல்லு” சற்று கடுகடுத்தேன்.. ஜனனிக்கு எப்போதும் தலையை சுற்றி மூக்கைத்தொட்டு பேசுவதுதான் வழக்கம்.. ஆர்வமாய் ஏதோ ஒரு தகவலுக்கு காத்திருக்க, அவளோ திருச்சி வழியாய் திண்டுக்கல் வந்துதான் கதையை சொல்லி முடிப்பாள்…

“நம்ம ஹரி ஹோமோசெக்சுவலாம்.”

“என்னது?”

“ஹ்ம்ம்… ஆமாங்க… அந்த பசங்களுக்கு பசங்க மேலயே ஈர்ப்பு வரும்ல.. அதான்..” நிமிர்ந்து பார்த்து சொல்லிவிட்டு, மீண்டும் வெங்காயம் நறுக்கத்தொடங்கினாள்.. நான்தான் வழிதவறிய மான், சிங்கத்தின் குகைக்குள் சிக்கிக்கொண்டதைப் போல திகைத்து நிற்கிறேன்.. ஓரிரு வினாடிகள் நிசப்தத்துக்கு பிறகு நானே தொடர்ந்தேன்…

“அவன் அப்டின்னு யார் சொன்னது?”

“ஹரி அம்மாதான்… அழுது புலம்புனாங்க”

“அப்புறம் என்ன பண்ணாங்க?”

“ரெண்டு நாள் ரொம்ப தீவிரமா அவன்கிட்ட பேசிருக்காங்க… அவன் ரொம்ப தெளிவா தன்னோட ஈர்ப்பை பத்தி சொல்லிட்டானாம்… பதினேழு வயசு பையனுக்கு, தன்னைப்பத்தி புரியாதா என்ன?… அதனால அவங்க அப்பா சரின்னு ஏத்துகிட்டார்….” எப்படி ஜனனியால் இவ்வளவு இயல்பாக பேசமுடிகிறது… அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம்கூட பதற்றம் தெரியவில்லை.. எப்படி?..

“அந்தம்மாவுக்கு இதில கஷ்டம் இல்லையா?”

“இல்லாம இருக்குமா?.. இப்பவும் புலம்பிக்கிட்டுதான் இருக்காங்க.. மெல்ல சகஜமாகிடுவாங்கன்னு நெனைக்குறேன்.. இனி புலம்புறதால அவன் மாறவாப்போறான்!…” சிரிக்கிறாள்..

“இதில என்ன சிரிப்பு ஜனனி உனக்கு?.. கொஞ்சம் கூட பதறலையா?… நாம அமெரிக்காவுல ஒன்னும் இல்ல, நமக்குன்னு கலாச்சாரம்னு ஒன்னு இருக்கு… எதுவும் புரியாம அவங்க ஏத்துகிட்டாங்கன்னா நாளைக்கு அக்கம்பக்கத்துல இருக்குற நமக்கு சங்கடமா இருக்காதா?” சமூக அக்கறை என்னை மீறி வெளியில் கசியத்தொடங்கியது..

“இதுல சங்கடப்பட என்ன இருக்கு?… அமெரிக்காவோ ஆண்டிப்பட்டியோ, மனுஷங்க எல்லாம் ஒண்ணுதாங்க.. எல்லாரும் வாயாலதான் சாப்பிடுறோம், காலாலதான் நடக்குறோம்… பெத்த பையன் மேல அவங்களுக்கு இருக்காத அக்கறையா நமக்கு இருக்கப்போகுது?.. நீங்க ஏன் சும்மா குதிக்குறீங்க?ன்னுதான் தெரியல…” சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்து சட்னி தாளிக்கத்தொடங்கிவிட்டாள்..

எண்ணெயில் வெங்காயத்தை வதக்கும்போதே, என்னைப்பற்றி ஏதோ முனுமுனுத்துக்கொண்டிருக்கிறாள்.. என்ன பேசுகிறாள்? என ஆராய்ந்து சண்டைபிடிக்க அது தருணமாக தோன்றவில்லை.. என் மனம் முழுவதும் ஹரியைப்பற்றிய நினைவுகளே சுழன்றுகொண்டிருந்தது..

சிறுவயது முதலாகவே எங்கள் வீட்டின் ஒரு பிள்ளைபோல வளர்ந்தவன்.. ஜனனியோடு மணம் முடித்து இந்த புது குடியிருப்புக்கு வந்தபிறகு, ‘அக்கா, மாமா’ என பாசத்தோடு பல பொழுதுகளை இங்கேயே கழித்தவன்.. என்றைக்குமே அவனை ‘பக்கத்து வீட்டுப்பையன்!’ என்ற எண்ணத்தில் பார்த்ததே இல்லை.. ஹரிக்கு பிடித்த சப்பாத்திதான் எங்கள் வீட்டின் பெரும்பாலான நாட்களின் ப்ரேக் பாஸ்ட்.. கவின் பிறந்தபிறகும் கூட, மூத்த மகனைப்போல அத்தனை சலுகைகளும் ஹரிக்கு கொடுக்கப்பட்டுத்தான் வந்தது..

கவினும் கூட “ஹரி அண்ணா!” என்றால் உயிரையே விடுவான்..

பலநாட்கள், “அப்பா, நான் ஹரி அண்ணன் வீட்ல தூங்கிக்கறேன்!” என பதிலுக்காக காத்திராமல் கவின் ஓடிய ஓட்டங்கள் கண்முன் தோன்றி மறைந்தது..

மனம் பதைபதைத்தது.. நாக்கு வறண்டு, தொண்டை கமறியது.. பைக்கினை சாலை ஓரமாக நிறுத்தி சில நிமிடங்கள் ஆசுவாசமடைந்தேன்…

மொபைலை எடுத்து ஜனனியை அழைத்தேன்.. “கவின் வந்துட்டானா?” நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்..

“ஹ்ம்ம்.. இப்போதான் வந்தான்… லேசா காய்ச்சல் அடிக்குற மாதிரி இருக்கு, பெட்ல படுத்திருக்கான்.. நீங்க அடிச்சதுல கன்னமெல்லாம் சிவந்து போயிருக்கு!” அவசரமாக அழைப்பை துண்டித்தேன்… மீண்டும் பேயறைந்ததை போல ஒரு பதற்றம்.. உள்ளங்கையினை விரித்துப்பார்த்தேன்.. சற்று கடினமான தோல், கண்டிப்பாக குழந்தையால் அந்த வலியை தாங்கியிருக்க முடியாதுதான்.. என் மீதே எனக்கு கோபம் கொப்புளித்தது.. விரல்களை மடக்கி பைக்கின் மீது வேகமாய் ஒரு அடி.. விரல்களின் முட்டியில் வலி சுளீரிட்டது.. இப்படித்தானே வலித்திருக்கும் கவினுக்கும்…

ஆனால், எத்தனை முறை கவினிடம் சொல்வது? கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவே இல்லையே .. “இனிமே ஹரி வீட்டுக்கு போகவேணாம் தம்பி…”

“ஏன்பா போகக்கூடாது?”

“அது ஒரு ப்ராப்ளம்ப்பா… உனக்கு சொன்னா புரியாது..”

“சொல்லுங்கப்பா.. புரியுதா இல்லையான்னு அப்புறம் சொல்றேன்..”

“எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல முடியாது… ஒழுங்கா நான் சொல்றத கேளு, இனி அவங்க வீட்டுக்கு போகாத!” பாசமாய், பக்குவமாய், கெஞ்சி, கடிந்து, அதட்டி என பலவகைகளிலும் சொல்லிப்பார்த்து சலித்துவிட்டேன்… பக்குவமாய் சொல்லும்போது மட்டும், “சரிப்பா” என தலை அசைப்பவன், அடுத்த சில மணி நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்துதான் வெளியே வருவான்…

ஜனனியிடமும் எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன், ஆனால் அவளும் கொஞ்சம் கூட என் மனநிலையை புரிந்துகொள்ளவில்லை…

“ஹரி கே’ங்குறதுக்காக கவின் அங்க விளையாட போகக்கூடாதுன்னு சொல்றது என்னங்க நியாயம்… ஹரி நமக்கு இன்னிக்கு நேத்தா பழக்கம்?… அவனும் நம்ம புள்ள மாதிரிதானேங்க.. இதுக்காகவல்லாம் அவனை நாம ஒதுக்குறது தப்புங்க!” கடவுளே!… இவள் பார்த்த பாலச்சந்தர் படங்கள்தான் இப்படி பேசவைக்கிறது… நிதர்சனத்தை ஏற்கவே முற்படவில்லை..

எனக்குள் உண்டான பயத்தை எப்படி இவர்களிடம் தெளியவைப்பது?… நிஜத்தில், என்னுடைய பயம் பற்றி என்னாலே கூட முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.. ஆனால், ஹரி வளர்கின்ற சூழலில் வளர்ந்தால், கண்டிப்பாக கவின் தவறான பாதையில் பயணிக்க நேருமோ? என்றுதான் மனம் அதிகம் பரபரத்தது…

நாளைக்கே, “அப்பா, நானும் கே தான்பா” என கவின் என் முன்னால் வந்து நின்றுவிட்டால், என்னால் அந்த சூழலை எப்படி சமாளிக்க முடியும்?.. அதற்கு இன்னொரு படி மேலே போய், கவினை தவறாக அவன் பயன்படுத்திக்கொண்டால் என்னாவது?… நினைக்கும்போதே இதயம் ஒருமுறை நின்று துடித்தது..  இப்படி ஒருவார காலம் யோசித்துத் தடுமாறி, அதன் விளைவுகளிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை… அவசரமாக அந்த நினைவுகளை லாக் அவுட் செய்துவிட்டு, பைக்கை மீண்டும் செலுத்தினேன்..

ஒருவேளை என் சிந்தனைகள்தான் தவறானவையா? அல்லது ஜனனிக்கு உலகம் இன்னும் புரியவில்லையா?.. ஹரியைப்பற்றிய பேச்சை எடுத்தபோதெல்லாம் அவள் கொஞ்சமும் சலனப்படவே இல்லை.. மாறாக பலநேரங்களில், சாக்ரட்டிஸ் முதல் டிம் குக் வரைக்கும் முற்போக்கு மேதைகளை வாதத்திற்கு துணைக்கு அழைத்துக்கொள்கிறாள்.. பேஸ்புக் புரட்சி பதிவுகளுக்கும் நிதர்சன வாழ்க்கைக்கும் இடையே இருக்கின்ற தூரம் மெர்க்குரிக்கும் ப்ளூட்டோவுக்குமான இடைவெளியின் அளவென்று அவளுக்கு புரியவில்லை..

பேஸ்புக் டிபி’யில் வானவில் படத்தை சேர்ப்பது ஒன்றும் புரட்சிகர சித்தாந்தம் இல்லை என்ற உண்மையும் அவள் அறியவில்லை.. ஆணுக்கும் பெண்ணுக்கும்தான் திருமணம் நடக்கவேண்டும், அதுதான் இயற்கையானதும் கூட என்பதை ஏற்று வாழ்வதுதான் நிதர்சனம்.. அது மூடத்தனமாக, அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்தாக இருந்தாலும், சகித்து வாழ்வதுதான் புத்திசாலித்தனம் என்கிற பொதுப்படைத்தன்மை அவளுக்கு இல்லாமல் போனது ஆபத்தானது…

அதற்காக நானும் ஒன்றும் பிற்போக்குவாதியென நினைத்திட வேண்டாம்.. வாரத்தில் ஒருநாள் சமைப்பது, வீட்டு வேலைகளை பகிர்வது, சாதி பேதம் பார்த்திடாமல் பழகுவது என்று இந்த உலகம் முற்போக்குவாதியென ஏற்றுக்கொள்ளும் அத்தனை தகுதிகளும் பெற்றிருப்பவன்தான்… அண்மையில் கூட சுவாதி படுகொலையை கண்டித்து, பெண்ணுரிமைக்கு ஆதரவாக ஆறு பத்திகளில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன்…

அதற்காக நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவன் இல்லையே!.. உலகின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளோடு ஒத்துப்போகும் சாமானியன்தான்!..

அன்றொருநாள் அப்படித்தான்… வழக்கமான ஒரு பார்ட்டி… குடியிருப்புவாசிகள் ஒன்றாக குடித்து மகிழ, ஏதேனும் ஒரு காரணம் வழக்கமாய் உருவாக்கப்பட்டிருக்கும்… இரவு முழுக்க குடித்துவிட்டு, ஊர் வம்பை இழுத்துக்கொண்டு, வழக்கமாக ஏதேனும் ஒரு சண்டையில் முடியும் அப்படிப்பட்ட பார்ட்டியின் மூலம் கிடைப்பது இரண்டே விஷயங்கள் மட்டும்தான்.. ஒன்று ஜனனியிடம் அன்றைய பொழுது முழுவதும் வாங்கிக்கட்டும் திட்டு, மற்றொன்று காலையில் கண்விழிக்க முடியாத அளவிற்கான ‘ஹாங் ஓவர்’ தலைவலி.. “இல்ல சார்… நான் வரல.. காலைல கொஞ்சம் ஆபிஸ் வர்க் இருக்கு, பார்க்கணும்!” முதலில் கறாராய் மறுக்கத்தான் செய்தேன்…

“நாளைக்கு சண்டே தான சார்… என்ன வேலை இருந்திடப்போகுது?… எல்லாரும் வர்றாங்க… இப்டி பார்ட்டியே அத்தி பூத்த மாதிரிதான் நம்ம அப்பார்ட்மென்ட்ல நடக்குது, இதல்லாம் மிஸ் பண்ணிடாதிங்க சார்” செகரட்டரி பாலு விடுவதாக இல்லை… அநேகமாக எல்லோரிடமும், “எல்லாரும் வர்றாங்க, நீங்க மிஸ் பண்ணிடாதிங்க!” என்ற வசனத்தைத்தான் இம்மி பிசகாமல் சொல்லியிருப்பார்..

“வேணாம் சார்… ஏற்கனவே எனக்கு நாக்குல சனி, வந்து எதுனாச்சும் சிக்கல் வந்துட்டா வீட்டுக்குள்ள நுழையமுடியாது!”

“என்ன சார் இதல்லாம்?… நான் இருக்கப்போ என்ன பயம் உங்களுக்கு?… தைரியமா வாங்க… உங்க பேவரைட் பாலன்ட்டைன்’ஸ் ஸ்காட்ச் அரேஞ் பண்ணிருக்கேன்.. உங்களுக்காகவே ஸ்பெஷலா பாரின்லேந்து வரவச்சேன்!”

இறுதியாக வேறுவழியின்றி ஒப்புக்கொண்டேன்… பாலுவின் வற்புறுத்தலுக்காக இல்லை, பாலண்டைன் ஸ்காட்ச்’க்காக… உதட்டில் வைத்து ஒரு சிப், அது தொண்டைக்குள் நுழைந்து இரைப்பையை அடைவதற்குள் வரும் அந்த மன்மத கிறக்கம் சொல்லி மாளாது…. அவ்வளவு காஸ்ட்லியான சரக்கு, எப்போதாவது இப்படி ஓசியில் கிடைத்தால்தான் உண்டு… சூழ்ந்து நின்ற சிக்கல்களை, அந்த மதுவின் மயக்கம் மறைத்துவிட்டது…

ஆனால், நான் எதிர்பார்த்தபடியே அங்கு சிக்கல் ஹரியின் அப்பாவின் ரூபத்தில் என் எதிரே ஒரு வைன் க்ளாசுடன் வந்து அமர்ந்தது.. ஹரியைப்பற்றிய பேச்சை எடுக்கவே கூடாது என்று மனதினை பாஸ்வர்ட் போட்டு அடைத்துவைத்திருந்தாலும், அதனை அன்லாக் செய்துகொண்டு வெளியே கொட்டியது வார்த்தைகள்..

“எப்டி சார் உங்களால ஹரியோட ஓரியன்டேஷன அக்சப்ட் பண்ணிக்க முடிஞ்சுது?” சமூக நீதி காத்திட திமிறி எழுந்தது எனது உள்ளம்..

“ஏன்னா அது அவனோட ஓரியன்டேஷன் சார்… அதை ஏத்துக்க, மறுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு?” சகஜமாக பதில் சொல்கிறார்… அநேகமாக பலரிடத்திலும் இந்த கேள்வியை அவர் எதிர்கொண்டதன் விளைவே, இவ்வளவு சரளமான பதிலென்று தோன்றுகிறது…

“உங்க பையன்னு நீங்க ஏத்துக்கறது கூட ஒரு நியாயம் இருக்கு சார்… அதை நாங்க ஏன் சகிச்சுக்கனும்?” அருகிலிருந்த பாலு சமாதானப்படுத்த முயன்றும், என் பேச்சு இடைநில்லாமல் ஓடியது..

“நீங்க சகிச்சுக்க முடியாத அளவுக்கு என்ன நடந்திடுச்சு?”

“சார், இந்த அப்பார்ட்மென்ட்ல நீங்க மட்டுமில்ல… எத்தனையோ குடும்பங்கள், அதில நிறைய பசங்க இருக்காங்க… அவங்க மேல கொஞ்சமாவது அக்கறை இருக்கா உங்களுக்கு?… பேசாம இந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற வீட்டுக்கு போய்டுங்க… இல்லைன்னா, எதாச்சும் பேசி உங்க பையனோட ஈர்ப்பை மாத்திக்க வையுங்க!” கடகடவென பேசி முடித்து சற்று ஆசுவாசமானேன்… அத்தனை நாட்களின் மனச்சுமையை இறக்கிவைத்து விட்டதாக ஒரு உணர்வு… ஹரி அப்பா பதிலெதுவும் பேசவில்லை… ஒருவேளை குற்ற உணர்ச்சியால் வாயடைத்து போய்விட்டாரோ? நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்… அப்படி உணர்ச்சியல்லாம் அந்த முகத்தில் இல்லை, மெலிதான ஒரு அலட்சியம் மட்டும் தொக்கி நிற்கிறது… எனக்கோ கோபம் சுர்ரென தலைக்கு ஏறியது…

“என்ன சார் பதிலே காணும்?… எதாச்சும் பேசுங்க!” இப்போதும் பதில் பேசாமல், அருகிலிருந்த ரம் பாட்டிலை திறந்து என் கிளாசில் ஊற்றத்தொடங்கினார்… அவசரமாக அதனை தடுத்து, க்லாசினை நகர்த்திக்கொண்டேன்…

“என்ன சார் பண்றீங்க?.. போதைல உங்க க்ளாஸ்ல ஊத்துறதுக்கு பதிலா, என்னோடதுல ஊத்துறீங்க?”

“உங்களுக்குத்தான் வெங்கட் ஊத்துறேன்…”

“சார்… நான் ஸ்காட்ச் மட்டும்தான் குடிப்பேன்… மத்த பிரான்ட் பிடிக்காது, இது தெரிஞ்சும் வம்பிழுக்கன்னு இதை செய்றீங்களா?” கோபம் குபுக்கென்று கொட்டியது…

“ஹ ஹா… சார், சாதாரண குடிக்குற விஷயத்துல உங்க பிராண்டை மாத்திக்க முடியாத நீங்க, என் பையனோட ஈர்ப்பை போற போக்குல மாத்திக்க சொல்றது எவ்ளோ முட்டாள்த்தனம்னு தெரியலையா?… அவனோட ஈர்ப்பு அவன் பிறப்புலையே தீர்மானிக்கப்பட்டது சார், அதை மாத்திக்க சொல்ல உங்களுக்கு மட்டுமில்ல, எனக்கே கூட ரைட்ஸ் இல்ல… இன்னும் சொல்லனும்னா, அதை அந்த கடவுள் நெனச்சாலும் மாத்திட முடியாது… அந்த சயின்ஸ் உங்களுக்கு தெரியும், அதோட நியாயங்கள் உங்களுக்கும் புரியும்… ஆனா அதல்லாம் ஏத்துக்க மட்டும் முடியாதுல்ல?… இப்போ சொல்றேன் சார், நாங்க இங்கதான் இருப்போம்… உங்களுக்கு இஷ்டம் இல்லன்னா நீங்க வீட்டை காலி பண்ணிக்கோங்க… கே பையன் இருக்குற குடும்பத்துக்கு வீடு கெடையாதுன்னு நம்ம அப்பார்ட்மென்ட் ரூல்ஸ் எதுவும் இல்ல… பிள்ளைகள மனுஷங்களா பாருங்க சார், அவங்க ஓரியன்டேஷேன வச்சு அவங்க மேல பாகுபாடு பார்ககாதிங்க!” என்னென்னவோ பேசிவிட்டார்… பதில்தான் எனக்கு பேசமுடியவில்லை… தடுமாறி நின்றேன்… சற்று திமிறினேன், கோபமாக க்ளாசை தட்டிவிட்டேன், பாலு சமாதானப்படுத்தினார்… எல்லோரையும் உதாசினப்படுத்தி, ஒன்றிரண்டு அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை மட்டும் கொட்டிவிட்டு, அங்கிருந்து வெளியேறினேன்…

அந்த நாளை இன்றும் மறக்கமுடியவில்லை… உலகத்தில் நான் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக ஒரு மேலெழுந்தவாரியான உணர்வு அன்று அரும்பியது… அவ்வப்போது சக குடியிருப்புவாசிகள் என்னை தனியே சந்திக்கும்போது மட்டும், என்னை தேற்றிட முயல்வார்கள்..

“அவரு லாயர் சார்… நாம எதாச்சும் பேசினா, அதுக்கு எதுனாச்சும் லா பாய்ன்ட் பேசுவார்னுதான் அன்னிக்கு அமைதியா இருந்தேன்.. மற்றபடி அன்னிக்கு நீங்க பேசின அத்தனை வார்த்தைகளும் சத்தியமான உண்மை சார்..” பாலுவே கூட தன் இயலாமையை ஒருமுறை கொட்டிவிட்டார்… ‘இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன், எனக்கும் ஒருநாள் சந்தர்ப்பம் அமையாமலா போய்விடும்!… அன்றைக்கு அனுமன் வாலில் வைத்த நெருப்பாக, மொத்தமாக பஸ்பம் ஆக்கிவிடுகிறேன்!’ மனதிற்குள் கருகிக்கொண்டேன்…

படபடவென திடீர் மழை கொட்டத்தொடங்கியது… அவசரமாக ஒரு சாலையோர கடையினருகே பைக்கை நிறுத்திவிட்டு, சற்றே நீண்டிருந்த கடையின் வாயிற் கூரையில் ஒதுங்கிக்கொண்டேன்.. நினைவுகளை சுழலவிட்டிருந்ததில் மனம் மெலிதாய் அசதியுற்றிருந்தது… ஆவசுவாசமாக்க ஒரு கிங்க்ஸ் இருந்தால் தேவலாம்… கடைக்குள் கண்களை துழாவச்செய்தேன்… பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்தன சிகரெட்டுகள்…

ஒன்றை வாங்கி பற்றவைத்தபடி சாலையை வெறித்துக்கொண்டிருந்தேன்… வானம் கருத்திடக்கூட இல்லை, திடீர் மழை அது.. வெப்பசலனத்தால் இருக்கக்கூடும்.. இத்தகைய எதிர்ப்பார்த்திடாத மழை, திடீர் பரபரப்பை உண்டாக்கிவிடுகிறது… புத்தகப்பையை தலையில் மறைத்துக்கொண்டு ஓடும் குழந்தைகள், சேலையின் முந்தானைக்குள் பொம்மைகளை காபந்து செய்துகொண்டு ஓடும் பொம்மை விற்பவள், அலட்சியமாக நடந்துகொண்டிருக்கும் மனநலம் பாதித்தவன்… புயலும், மழையும் கூட இந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றும் செய்துவிடுவதில்லை.. ஒருவகையில் கண்முன்னே நடக்கும் அசிங்கத்தினை, கண்டுகொள்ளாது கடந்துசெல்லும் இந்த உலகமும் கூட மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதோ என்னவோ…

அன்றொருநாள் இப்படித்தான் மழைபெய்துகொண்டிருந்தது.. சாலைகள் முழுக்க தண்ணீர் தேங்கி நிற்க, தத்தித்தடுமாறி வீட்டினை அடைந்தபோது நேரம் நள்ளிரவை நெருங்கியிருந்தது.. ஜனனி பதைபதைப்புடன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. தொப்பலாக நனைந்து வந்து சேர்ந்ததில், அவள் கண்களில் நிம்மதி பெருமூச்சு… துண்டால் தலையை துவட்டிவிட்டு, மாற்றிக்கொள்ள உடைகளையும் எடுத்துத்தந்தாள்… சாப்பிட இட்லியை எடுத்துவைத்து, நான் வரும்வரை சட்னியை ஊற்றிடாமல் காத்திருந்தாள்.. சற்றே அசதியுடன் இருக்கையில் அமர்ந்து, சாப்பிடத்தொடங்கினேன்…

“கவின் சாப்டானா?”

“அவன் ஹரி வீட்லயே சாப்டானாம்…”

“அவங்க வீட்டுக்கு இன்னும் போறத நிறுத்தலையா அவன்?… சொல்றதையே கேட்க மாட்றான்… சாப்ட்டு எப்போ வந்தான் வீட்டுக்கு?” கடிந்துகொண்டேன்…

“இன்னும் வரல… அங்கயே தூங்கிட்டான்… மழை பெய்றதால நானும் கூட்டிட்டு வரல..”

“அறிவில்லையா உனக்கு?… இங்கருந்து அவங்க வீட்டுக்கு போறதுல ஒரு பத்து அடி மழைல நனையுற அளவுக்கு இருக்குமா?… போய் கூட்டிட்டு வர்றதுல என்ன கரைஞ்சா போய்டுவ?…” சட்டென எழுந்து கைகளை கழுவிவிட்டு, விருட்டென ஹரியின் வீட்டுக்கு விரைந்தேன்…

அழைப்பு மணியை விடாமல் அடிக்க, பதற்றத்தோடு கதவை திறந்தார் ஹரியின் அம்மா…

“என்ன சார் இந்த நேரத்துல?” அநேகமாய் நள்ளிரவை தொட்டிருக்கும் நேரம்…

“கவின்…”

“தூங்குறான்… எழுந்ததும் காலைல கூட்டிட்டு வரேனே…”

“இல்ல… நான் இப்பவே கூட்டிட்டு போறேன்..” விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்து, அறைகளை துழாவினேன்.. ஹரியின் அம்மா படுத்திருந்த அறையில்தான் கவின் படுத்திருக்கிறான்… நல்லவேளையாய் ஹரி வேறு அறைக்குள் படுத்திருக்கிறான், மனம் மெலிதாய் இலகுவானது.. கொஞ்சமும் தாமதிக்காமல் அவனை தோளில் எடுத்து போட்டுக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினேன்…

“சார், குடையாவது எடுத்திட்டுப்போங்க… மழை மேல பட்டு எழுந்திடப்போறான்!” குடையோடு பின்னே நகர்ந்துவந்த அப்பெண்மணியை ஒரு புழுவைப்போல கடந்து வீட்டை நோக்கி விரைந்தேன்…

அந்த இரவெல்லாம் உறக்கமே இல்லை… கவினை எப்படி மாற்றுவது?.. ஹரியுடனான இவன் பழக்கத்தை எப்படி தடுத்து நிறுத்துவது?.. குறைந்தபட்சம் என் மனநிலை ஜனனிக்கு புரிந்தாலாவது இந்த சிக்கல்களிலிருந்து வெளிவர முடியும்.. அவளோ புரட்சிப்போராட்டவாதியாக அல்லவா பேசுகிறாள்.. ஒருவழியாய் தூங்கிப்போனேன்…

வீட்டின் அழைப்புமணி அடிக்கும் சத்தத்தில்தான் கண் விழித்தேன்… வெகுநேரமாய் மணி அடித்துக்கொண்டிருக்கிறது… ஜனனி குளித்துக்கொண்டிருக்கிறாள் போலும்.. கண்களை சிரமப்பட்டு விழித்தேன்.. அருகில் கவின் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறான்…

வேகமாய் எழுந்து, உடைகளை சரிசெய்தவாறு கதவை திறந்தேன்.. முகம் முழுக்க புன்னகையோடு ஹரி நின்றுகொண்டிருக்கிறான்…

“ஹாய் மாமா… குட் மார்னிங்…” சிரிக்கிறான்…

“ஹ்ம்ம்… என்ன?” பிடிகொடுக்காத பதில்…

கையில் வைத்திருந்த கலர் பென்சில், ஸ்கேல், பேனா என பொருட்களை என் கைக்குள் திணித்தான்… “இன்னிக்கு ஸ்கூல்ல கேட்டாங்கன்னு கவின் சொன்னான், அதான் நேத்து நைட் வாங்கிட்டு வந்தேன்… கொடுத்திடுங்க…”

“ஹ்ம்ம் சரி…” இப்போதுவரைக்கும் அவனை வீட்டிற்குள் அழைக்காததன் வித்தியாசத்தை ஹரி உணர்ந்திருக்கக்கூடும்… வழக்கமான நாட்களில் இந்நேரம் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருக்க வேண்டியவன், இன்றைக்கு அலட்சியப்படுத்தும் பதில்களை எதிர்கொண்டு வாசலிலேயே நின்றுகொண்டிருக்கிறான்…

“கவின் எங்க?.. தூங்குறானா?” இடைவெளிக்குள் எட்டிப்பார்த்தான்…

“இல்ல… டென்னிஸ் ப்ராக்டிஸ் போயிருக்கான்…”

“ஹ ஹா… நைட் பேய்ஞ்ச மழைல போட்டிங் கிளாஸ் மட்டும்தான் மாமா போகமுடியும்…” சிரிக்கிறான்…

அடுத்து என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் தடுமாறிக்கொண்டிருக்க, அறைக்குள்லிருந்து தூக்கம் கலைத்து வெளியே ஓடிவந்தான் கவின்..

“ஹரி அண்ணா… நான் சொன்ன திங்க்ஸ்லாம் வாங்கியாச்சா?… எங்க ஷார்ப்னர் காணும்?” உரிமையோடு வினவிக்கொண்டிருக்கிறான் என் மகன்.. தலையை கவிழ்த்துக்கொண்டேன்… கவினோடு சிரித்து பேசிவிட்டு, “போயிட்டு வரேன் மாமா” கொஞ்சமும் சலனமின்றி என்னை கடந்து சென்றான் ஹரி…

குடித்துக்கொண்டிருந்த சிகரெட் என் விரல்களை சுட்டு, திடுக்கிட்டு நிதானிக்கச்செய்தது…

மழை குறைந்துவிட்டது… அடுத்த மழையில் சிக்கிக்கொள்வதற்குள் வீட்டை அடைந்துவிடவேண்டும்.. வேகமாய் பைக்கை உதைத்து, வீட்டை நோக்கி விரைந்தேன்… நான் நினைத்தது போலவே குடியிருப்பின் வாகன நிறுத்தத்தை அடைவதற்கும், மறுமழை பொழிவதற்கும் சரியாக இருந்தது..

மழை நிற்பதற்கு எப்படியும் ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும் போல… கவினோடு சற்று விளையாடிவிட்டு, இரவு உணவுக்கு மூவரும் ஒன்றாக ரெஸ்டாரண்ட் போகலாம்.. ஜனனியும் வெகுநாட்களாகவே கேட்டுக்கொண்டிருந்தும், என் சோம்பேறித்தனத்தால் தட்டிக்கழிந்து போன விஷயம்… ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக, தாயையும் மகனையும் சமாதானப்படுத்திவிடலாம்… மனதிற்குள் சாணக்கியனாய் கணக்குகளை போட்டவாறே லிப்ட்டின் பொத்தானை அழுத்தி, அது வரும்வரை காத்துக்கொண்டிருந்தேன்…

லிப்டில் ஏறி, நான்கு என்ற எண்ணை அழுத்தியதற்கும், அதனுள் ஹரி நுழைவதற்கும் சரியாக இருந்தது.. விதி அவ்வப்போது இப்படி அலாரம் வைத்து ஆப்பு வைப்பதுண்டு… அவன் உள்ளே நுழைந்ததும், கதவும் அதன் பங்கிற்கு மூடிக்கொண்டது…

ஒரு எரிச்சல், கோபம், வெறுப்பு, அருவருப்பு என எல்லாம் கலந்த பார்வையில் அவனை ஏறிட்டேன்… அவனோ இயல்பாய் சிரித்தபடி, “பாலு அங்கிள் வீட்டுக்கு போறேன்… பைப் ரிப்பேர் பண்ண ஆள் வரச்சொல்லனும்…” அவனாகவே பேச்சை தொடங்கினான்…

பதிலெதுவும் பேசாமல் கடந்து சென்ற இரண்டாவது மாடியை கவனித்துக்கொண்டிருந்தேன்…

“ஏன் மாமா இப்டி வியர்த்து நிற்குறீங்க?… லிப்ட்ல பேன் ஓடியும் இப்டி ஸ்வெட் ஆகுது… என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல…”

“என்னை பார்த்து பயமா மாமா?.. பயம் என்மேல மட்டும் இல்ல போலயே, ரெயின்போ கலர்சை பார்த்தாக்கூட மூக்குக்கு மேல கோபம் வருதாமே!” நான்காவது தளம் வந்துவிட்டாலும், அவனுடைய கேள்வி என்னை அங்கிருந்து வெளியேறவிடாமல் தடுத்தது… பதில் பேசாமல் சென்றுவிட்டால், அவனுக்கு பயந்ததாகவல்லவா ஆகிவிடும்… ஈகோ அதனை சகிக்க மறுத்து அப்படியே நின்றேன்…

“ஏன் மாமா என் மேல இவ்ளோ வெறுப்பு?.. நான் கே’ங்குறதாலயா?…”

“எதுவும் என்கிட்ட கேட்காத.. என்னைய நிம்மதியா விடு ஹரி” எரிச்சல் மேலிட்டது..

“இல்ல மாமா… இப்போ கேட்கலைன்னா, எப்பவுமே உங்களுக்கு புரியவைக்க முடியாது!”

“நீ சொல்லி புரிஞ்சுக்கர்ற அளவுக்கு நான் இல்ல…”

“உண்மைதான் மாமா… என்னோட வலியை, உங்ககிட்ட சொல்லத்தான் முடியும்.. உணரவைக்க முடியாது.. குறைஞ்சபட்சம் என்ன சொல்றேன்னு கேட்கலாம்ல” பதிலுக்காக என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்… நான் பதில் சொல்லாது, சுவற்றை வெறித்துக்கொண்டிருந்தேன்…

ஹரியே தொடர்ந்தான் “கே’ன்னா எல்லா ஆம்பளைங்க கூடவும் படுப்பாங்கன்னு நெனச்சுட்டிங்களா?… அப்டி இல்ல, கவின் என் தம்பிதான்னு எப்டி மாமா உங்களுக்கு புரியவைக்க முடியும்?.. கஷ்டமா இருக்கு மாமா…” அவன் கண்கள் கலங்கியிருந்தது… என் மனம் அதிகம் படபடத்தது… ஆனால், பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை… சற்று தயங்கியபடியே நின்றேன்…

“ஒரு உண்மை தெரியுமா மாமா உங்களுக்கு?… கிளிகள் பச்சைக்கலர்ல மட்டும் இருக்குறதில்ல… பஞ்சவர்ணக்கிளிக்கு அஞ்சு கலர்ஸ் கூட இருக்குமாம்!”

ஹரியே லிப்டின் கதவை திறந்து வெளியேறினான்… என்னை கடப்பதற்கு முன்பு, திரும்பிப்பார்த்து, “நல்லவேளை மாமா… நான் கேயா பிறந்ததுலையும் ஒரு நல்லது நடந்திருக்கு… ஒருவேளை நான் ஸ்ட்ரைட்டா இருந்திருந்தா அக்காவ சந்தேகப்பட்டிருப்பிங்கல்ல?” சொல்லிவிட்டு வேகமாய் நடந்துசென்றுவிட்டான்…

 

நினைவுமுள்

ஜிஃப்ரி ஹாசன்

எந்த இடத்தில் பிரிந்தோமோ
அந்த இடத்தில் சேர்வோம்
பாதைதோறும் நினைவுகள் குடை விரித்தன
உங்கள் முகத்தில்
நான் ஒரு களங்கமற்ற சிரிப்பையும்
உங்கள் இதயங்களில்
ஒரு நல்லெண்ணத்தையுமே வேண்டுகிறேன்
நம் பிரிவு நிகழ்ந்த இடங்களை
நம் சேரிடங்களாக்கி
களங்கமற்ற ஒரு புன்னைகையை நடுவோம்
நெஞ்சையுறுத்தும் நினைவு முட்களை
உயிர்ப்பற்ற குருட்டு நம்பிக்கைகளை
ஒரு யுகப் பின்னடைவை
இப்போது நமது சொற்கள் தாண்டிவிட்டன
துயர் படிந்த ஒரு காலமும்
அதன் குரூரக் காயங்களும்
ஒரு பயணத்தில் கடந்து விடக்கூடியவையே.

ஆற்றுகை

ஸ்ரீதர் நாராயணன்

கூர்சுடர் கீற்றென
பல்லவி முடிந்து
கார்வையில் நிற்கும் ரீங்காரம்.

குறுகிய கட்டையின் மீதேறி
விரித்த கைகளுடன்
கால்நுனியில் ஒரு மென்நடை.

புருவமுயர்த்தி முன்னிற்பவர்
ஐயம் தீர்ந்து நம்பிக்கை கொள்ள
வசியம் தொடங்கிய சொல்லாடல்.

வண்ணத் தெறிப்புகளில்
கண்சிமிட்டி முளைத்தெழும்
புத்துருச் சித்திரிப்பு.

கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.

இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.

எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.