எழுத்து
நசி
ஹரீஷ்
இரண்டு நாட்களாகவே தொந்தரவு செய்யத் துவங்கி விட்டாள் அவள். சென்ற முறை வந்தவள் போலில்லை. இவள் புதிது. அவளை விடவும் வேகமாக இருந்தாள்.அவளது செய்கைகள் ஒவ்வொன்றும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தன.
உள்ளுக்குள் பரபரப்பு மிகுந்திருந்தாலும் வெளியில் ஒரு ஜோம்பியைப் போல் அமர்ந்திருந்தேன். “ஏன் இப்படியே உக்காந்திருக்கே? கிளம்பேன் . வெளியில மழை பெய்யுது என்றாள் அவள்.
வாசலில் அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். “என்னவோ தெரில. நல்லாததான் இருந்தான். இப்ப கொஞ்ச நாளாததான். விட்டத்தப் பாத்துக்கிட்டு கெடக்கான். திடீர்னு சிரிக்கிறான். என்னான்னு கேட்டா கோவப்பட்றான். எப்பப்பாரு ஒரு வெள்ளைப் பேப்பர எடுத்து வெச்சுகிட்டு வெறிச்சு வெறிச்சுப் பாக்கறான். ரூம் கதவ அறஞ்சு சாத்திக்கிறான்” என்று.
எதிர்க்குரல் கிசுகிசுப்பாகப் பேசியது. விஷயம் சரியாகக் காதில் விழவில்லை. என்ன சொல்லியிருக்கக்கூடும், மேலத்தெரு தர்காவுக்குக் கூட்டிச் சென்று சாகிப் மஸ்தானிடம் மந்திரிக்கச் சொல்லியிருக்கக்கூடும். மழைக்குத் திண்ணையில் ஒதுங்கியவர்களுக்கெல்லாம் வம்புக் கதை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது இந்த வீட்டில்.
அலமாரியைத் திறந்து இருப்பதிலேயே பழைய சட்டையாய்ப் பார்த்து எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தேன். மழை நசநசத்துக் கொண்டிருந்தது. அம்மா “ எங்க கண்ணு போற” என்றாள். அதற்குள் இவள் “ அங்கென்ன பதில் சொல்லிகிட்டு? வா போலாம். க்விக்” என்றாள். பாவம் அம்மா. எப்போதும் என்னை டா போட்டுக்கூட அழைத்ததில்லை. அவளைப் பரிதாபகரமாய்ப் பார்த்து விட்டு வெளியேறினேன். “சந்தேகமே இல்ல. அதான். நீங்க நான் சொன்னத முதல்ல செய்ங்க” என்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த எதிர்க்குரல் முதுகின் பின் தேய்ந்து மறைந்தது.
இவள் யட்சி. போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். அங்கும் இங்கும் கடற்காற்றில் தள்ளாடும் தோணி போல் மனசும் மூளையும் வெவ்வேறு திசைகளில் பிய்த்துக் கொண்டிருந்தன. சொற்கள் அகப்படவில்லை. எவ்வளவு வேகமாக நடந்தேன் என்பது சட்டென்று நின்று சுற்றிலும் பார்த்தபின்தான் தெரிந்தது. வீட்டிலிருந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் வரை வந்திருக்கிறேன். கிட்டத்தட்ட நாலரை கிலோமீட்டர். அவளுடன் பேசிக் கொண்டே வந்ததில் தெரியவில்லை. வரும் வழியில் ரயில் பாதையை வேறு கடந்து வந்திருக்கிறேன் எதுவுமே கவனத்தில் இல்லை.
சட்டை நனைந்திருந்தது. வேகமாக நடந்து வந்ததில் வியர்வையிலா அல்லது நச நசவெனத் தூறியபடியிருக்கும் மழையினாலா என்று தெரியவில்லை. மைதானத்தைப் பார்த்தேன். ஒருத்தரையும் காணோம். ஆங்காங்கே சிறு சேற்றுக் குட்டைகள் உருவாகிக் கிடந்தன. நட்டு வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான கோல் போஸ்ட் கம்பிகளிலிருந்தும் பூப்பந்துக்கான வலையமைக்கப்பட்டிருந்த கம்பிகளிலிருந்தும் இடைவிடாமல் நீர் சொட்டிக் கொண்டிருந்தது.
காம்பவுண்டு சுவரின் மீது கைவைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தவனை உள்ளே போ என நெட்டித் தள்ளினாள் யட்சி. சற்றே தள்ளியிருந்த வாயில் கேட்டைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. சுவற்றின் மேல் கால் வைத்து சரியாக எகிறும் தருணத்தில் சாலையில் தலை முதல் முழங்கால் வரை நெகிழிப்பை போர்த்தியிருந்த ஒருவர் என்னைப் பார்த்தபடியே கடந்து போனார். நெகிழியால் தலை மறைக்கப்பட்டிருந்ததால் அவர் வயதைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.
உள்ளே போலாம் என்றாள். அடுத்த நிமிஷம் குட்டைச் சுவர் எகிறி உள்ளே குதித்திருந்தேன். மூலை வேப்ப மரத்தடியை நோக்கி நடந்தேன். நேராகப் போகாமல் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் செய்வது போல் மைதானத்தை ஒரு சுற்று சுற்றி நடந்தேன்.
“இந்த சேத்துல கால் நுழைச்சா எப்படி இருக்கும் தெரியுமா. ஐ ஜஸ்ட் லவ் இட். நீயும் நடந்து தான் பாரேன்” என்றாள். கேட்கவில்லையென்றால் விட மாட்டாள். போன முறை வந்தவள் இவ்வளவு ஆதிக்கமில்லை. அவள் பூப்போல் மென்மையானவள். இவள் பயங்கர ராட்சசியாக இருக்கிறாள்.
ஆங்காங்கே உருவாகியிருந்த சேற்றுப் பொதிகளில் கால்களை உள்நுழைத்து அளையச் சொல்லிப் படுத்தினாள். அவள் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் சேற்றில் கால்களை உழல விட்டு நடந்தேன். வேப்ப மரத்தடியை அடைந்தபோது மழையின் வேகம் குறைந்திருந்தது. கால்கள் கரும்பழுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. மழை தரும் புத்துணர்ச்சியையும் மீறி உடல் மிகவும் சோர்ந்திருந்தது.
இது எப்போது வரை நீளுமென்று தெரியவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதிலிருந்து விடுபட வேண்டும். சொற்களைத் தேடிக் கொண்டே இருந்தேன். எதைப் பார்த்தாலும் அதிலிருந்து ஏதேனும் சொற்கள் கிட்டக் கூடுமா என்று உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.
தேடலைக் கலைத்தாள். “ஹேய்.. இந்த மரத்தடியிலதானே நீ முதல் முதல்ல தமிழ் செக்ஸ் புக் படிச்சே? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றாள். அவள் தொனியில் கிண்டலில்லை. பால்ய கால நினைவுகளை அசைபோட வாய்ப்பு கிடைத்த ஒரு வயசாளியின் குதூகலம் மட்டுமே தெரிந்தது. தொடர்ந்தாள். “ புக் பேர் கூட ஞாபகம் இருக்கு. “பாப்பாத்தியின் காம லீலைகள்” கரெக்டா?” என்று சிரித்தாள்.
சிரிக்க முயன்று தோற்றேன். மண்டைக் குடைச்சல் பலமாக இருந்தது. கைகளின் நடுக்கமும் லேசாகத் துவங்கி விட்டிருந்தது. “உங்க சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளான மாதிரி ஒரு பீல். இல்ல?” என்றாள் காரணமேயின்றி திடீரென்று. அவள் சொன்னதும் எனக்கும் அப்படித் தோன்ற ஆரம்பித்து விட்டது. இடையே சொற்களைச் சேமித்து வைத்தபடியிருந்தேன்.
அவள் கேள்விக்கு ஆமா என்பது போல் தலையாட்டினேன். “அப்ப வா போலாம் “ என்றாள். திடுக்கிட்டேன். அவள் பேச்சை வேறு தட்ட முடியாது. எழுந்து நடப்பதே சிரமமாக இருந்தது. திரும்ப வீடு நோக்கி நடக்கும் போது ரயில்வே குவார்ட்டர்ஸ் மிகப் பெரும் அமைதியைப் போர்த்திக் கொண்டிருந்தது. மழைக்குப் பின்னான ரம்மியம் காற்றில் இல்லை. தனிமையின் ஓலம் நிறைந்திருந்தது. தனிமையின் ராட்சசம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிப்பது போலிருந்தது.
முடிந்தவரை சீக்கிரமாக அங்கிருந்து அகல முயன்று வேகமாக நடந்தேன். அந்தச் சாலையின் முனையில் இருக்கும் ரயில் நிலையமும் கோவிலும்கூட சூழலின் இறுக்கத்தை மாற்ற முடியவில்லை.
ஓரிரு வினாடிகள் நின்று ரயில் நிலைய முகப்பைப் பார்த்தேன். மனித சஞ்சாரம் ஏதுமில்லை. உள்ளே யாரும் இருக்கக்கூடும். ரயில் நிலைய முகப்புக் கட்டிடம் எந்த நேரமும் நிமிர்ந்து நின்று தன் உடல் மீது படர்ந்த ஈரத்தை உதறிக் கொள்ளக்கூடும் என்பது போல் ஒரு தோற்றம் மனசில் ஏற்பட்டது. அது அச்சமூட்டுவதாக இருந்தது.
மீண்டும் நடக்கத் துவங்கினேன். சாலை வழி செல்லாமல் ரயில் பாதையை ஒட்டியே நடக்கத் துவங்கினேன்.. மழை நீரில் கரைந்த மலத்தின் வாடை முகம் சுளிக்கச் செய்வதாய் இருந்தது. அவளும் முகம் சுளித்தாள்.
தொப்பலாக நனைந்து வீட்டுக்குள் நுழையும்போது முதுகின் பின் அம்மாவின் பார்வை துரத்துவதை உணர முடிந்தது. எதுவும் கேட்கவில்லை. உள்ளே சென்று ஒரே ஒரு சட்டையையும் வேட்டியையும் ஒரு பழைய பையில் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினேன். அறை வாசலுக்கு வந்தவன் மீண்டும் உள்ளே போய் ஒரு நெகிழிப் பையை எடுத்து ஓரிரு வெள்ளைக் காகிதங்களை எடுத்து கவனமாய் அதில் போட்டுக் கொண்டேன். உபயோகப்படும். பேனாவை எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன்.
அறையை விட்டு வெளியே வரவும் இதை எதிர்பார்த்தேயிருந்த அம்மா பதற்றமாய் அருகில் வந்தாள். “ என்ன கண்ணு எங்க கெளம்பிட்ட” என்றாள்.மெல்லப் புன்னகைத்தேன். “ஒண்ணுமில்லம்மா பயப்படாத. சித்தப்பாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. திடீர்னு பாக்கணும்னு தோணிச்சு. அதான் போறேன். நாளைக்கி வந்துருவேன்” என்றேன்.
என்னைத் தனியாக அனுப்புவதில் அவளுக்கு நிறைய யோசனைகள் இருந்தன. என்ன செய்வது, போய்த்தானாக வேண்டும். ஏதோ கேட்க நினைத்தவள் கடைசி நொடியில் கேள்வியை மாற்றி “ இந்த மழையிலயா?” என்றாள். சிரித்தேன். அதற்கு மேல் ஏதும் பதில் கிடைக்காது என்று அவளுக்குத் தெரியும். இயலாமையுடன் “பத்திரமா போய்ட்டு வாப்பா” என்றாள்.
என் உளைச்சலை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் புரிவது கஷ்டம். “சீக்கிரம். நேரமாச்சு” என்று இவள் வேறு உந்தித் தள்ளினாள். பேருந்து நிலையத்தை நடந்தே அடைந்தேன். எல்லாப் பேருந்துகளும் கழுவி விடப்பட்டவை போல் சுத்தமாக இருந்தன. சேலம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்து பயணச் சீட்டை வாங்கிக் கொண்டேன். ஜன்னலை முழுக்கத் திறந்து விட்டுக் கொண்டேன்.
அரசுப் பேருந்தாதலால் கூட்டமில்லை. கூட்டமாயிருந்திருந்தால் ஜன்னலை இப்படி முழுக்கத் திறந்து விட்டுக்கொள்ள எதிர்ப்பி\ருந்திருக்கும். பேருந்தில் எந்தக் காலத்திலோ பொருத்தப்பட்ட ஆடியோ செட் இயங்காமல் போய் வயர்கள் அறுந்து தொங்கும் நிலையிலிருந்தது.
பேருந்து கிளம்பவும் சிலர் ஓடி வந்து ஏறினார்கள். அவர்கள் யாரும் என் அருகிலோ அதற்கருகிலிருக்கும் இருக்கையிலோ வந்து அமர்ந்து விடக்கூடாதென்று வேண்டிக் கொண்டேன். சற்று நேரமாய் இல்லாமலிருந்த மழை இப்போதுதான் மீண்டும் சிறு தூறல் தெளிக்கத் துவங்கியிருந்தது. ஜன்னல் திறப்பு தடைபடக்கூடாதென்றே அப்படி ஒர் வேண்டுதல். வழியெங்கும் மழை சிலுசிலுத்தபடியே வந்தது. ஆங்காங்கே சொற்ப கூட்டம் பேருந்தில் ஏறுவதும் பேருந்தை விட்டு இறங்குவதுமாய் இருந்தது. இவள் பேசிக்கொண்டே இருந்தாள். அதை கவனியாமல் இருக்க முடியாது. இருந்தும் அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மனசு லேசாக சமனப்படத் துவங்கியிருந்தது.
இந்த நிலைதான் வேண்டும். இன்னும் கொஞ்சம் .இன்னும் கொஞ்சம். முயற்சித்தபடியே இருந்தேன். அவள் குரல்கூட மெல்லத் தேய்ந்து ஒரு கட்டத்தில் மெலிதாய் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஆனால் அவள் போகவில்லை. அவளின் இருப்பு சர்வ நிச்சயமாய் இருந்தது. என்ன, முன்பு போல் மூளையைப் பிடித்து உலுக்குவதாய் உளைச்சல் தருவதாய் இல்லை. மென்மையாய் இருந்தது.
நாமக்கல் வந்து இறங்கினேன். இரண்டு ஊர்களிலும் பெய்தது ஒரே மழைதான் என்றாலும் மழையில் நனைந்தபின் இரு ஊர்களும் முற்றிலும் வேறாக இருந்தன. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டேன் போல் தோன்றியது. சித்தப்பா வீட்டின் கதவைத் தட்டியதும் சித்திதான் வந்து திறந்தாள். மெல்லிய புன்னகையுடன். நெற்றி சுருக்கவில்லை. அம்மா போன் செய்திருப்பாள் என்று புரிந்தது.
“வா உக்காரு. எப்படி இருக்க?” என்றாள். அவஸ்தையாய்ச் சிரித்தேன். “சித்தப்பா இப்ப சாப்புட வர நேரம்தான். அவர் வர வரை காத்திருக்கறியா இல்ல இப்ப சாப்பிடறியா” என்றாள். அவள் கண்களில் தெரிந்தது சிறு பயமா என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. ”வரட்டும் “ என்றேன் ஒற்றை வார்த்தையில். “அதானே. அவரைப் பாக்கதான் இத்தனை தூரம் வந்தது. அவரைப் பாக்காம என்ன சாப்பாடு?” என்றாள் இடையில் இவள்.
உள்ளங்கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். சித்தி குறுகுறுவெனப் பார்ப்பதைக் குனிந்திருந்தாலும் உணர முடிந்தது. அசூயையாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் சிரமமாக இருந்தது. சித்தப்பா வந்து விட்டார். வழக்கமான விசாரிப்புகளைப் பெரும் ஆயாசத்துடன் கடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்து அவரைப் பார்க்கவென்று வந்துவிட்டு அவர் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தட்டில் போட்ட சோற்றை அளைந்து கொண்டிருப்பது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.
கை கழுவியவுடன் “கிளம்பறேன் சித்தப்பா. பசங்க வந்தா சொல்லுங்க” என்றேன். என்னப்பா அவசரம் என்றோ… இரேன் போகலாம் என்றோ சித்தப்பா ஏதும் சொல்லவில்லை. அம்மா என் நிலைமை பற்றி விவரித்திருக்கக் கூடும். மெலிதாய்த் தலையசைத்து “போய்ட்டு வாப்பா… ஒடம்பப் பாத்துக்க” என்றார். அவர் கண்கள் பச்சாதாபத்திலும் நம்பிக்கையின்மையிலும் நிரம்பியிருந்தன.
கிளம்பி விட்டேன். மழை முற்றாக நின்று விட்டிருந்தது. வெயில்கூட அடிக்கத் துவங்கியது. ரமேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தம் கடந்து பெண்கள் கல்லூரி தாண்டி வேக வேகமாக நடந்தேன். கல்லூரியிலிருந்து பெண்கள் வெளி வரத்துவங்கியிருந்தனர். கல்லூரி முடியும் நேரமாகியிருக்க வேண்டும்.
கூட்டத்தை வேகமாய்க் கடந்து பேருந்து நிலையத்தை அடைந்து வரும்போதிருந்தது போலவே காலியான அரசுப் பேருந்தாய் பார்த்து ஏறி அமர்ந்தேன். ஜன்னல் வழி வெயில் ஊர்ந்து தேகமெங்கும் வழியத் துவங்கியிருந்தது. வண்டி கிளம்பியது. இவள் இடைவிடாமல் பேசியபடியே வந்தாள். பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.
ஜன்னல் வழியே விரையும் மரங்கள் ஒரு கண்ணை மூடிக் கொண்டு பார்க்க மிகச் சிறியவையாகத் தெரிந்தன. அவற்றை ஆள்காட்டி விரல் கொண்டு தொட முயன்றபடியே இருந்தேன். என் செய்கையைப் பார்த்து அவள் சிரித்தாள். சட்டென்று ஏதோ தோன்றியது. இதுதான் தருணம். நான் தயாராயிருப்பதாய் ஏதோ சொன்னது. ராசிபுரம் பிரிவருகே வரும் போது எழுந்து வண்டியின் கதவருகே சென்றேன்.
நடத்துனர் என்ன என்பது போல் பார்த்தார். கண்களால் கெஞ்சலாக “இறங்கணும் “ என்றேன். முறைத்தவர் விசிலை ஊதினார். பேருந்திலிருந்து என்னை உதிர்த்துக் கொண்டேன். மனம் நிச்சலனமாக இருந்தது. மண்டைக்குள் குடைச்சலும் உளைச்சலும் ஓய்ந்திருந்தது.
மெதுவாக நடந்தேன். நடக்கப் போவதை அறிந்தோ என்னவோ அவள் ஏதும் பேசாமலிருந்தாள். அந்த அமைதி எனக்குத் தேவையாயிருந்தது. சற்று தூரம் நடந்த பின் ஆளரவமற்ற சாலையோரம் ஒரு டீக்கடை தென்பட்டது. உள்ளே நுழைந்தேன். யாரையும் காணவில்லை. நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடம் கடந்தபின் வயதான பெரியவர் ஒருவர் கையில் பெரிய பாத்திரத்துடன் வந்தார்.” என்னா” என்றார். “டீ வேணும்” என்றேன்.
“இனிமேதான் பால் காச்சணும். லேட்டாவும்,” என்றார். பரவால்ல போடுங்க என்றபடி உடைந்திருந்த நாற்காலியில் அமர்ந்த என்னை வினோதமாகப் பார்த்தார். சுற்று முற்றும் பார்த்தேன். லாபம் என்று எழுதப்பட்டு ஓரங்கள் கிழிந்து போயிருந்த பிள்ளையார் படம் போட்ட காலண்டர் அட்டை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டேன்.
கவனமாய்ப் பைக்குள் கைவிட்டு நெகிழிக்குள் பொதிந்து வைத்திருந்த வெள்ளைக் காகிதங்களை எடுத்தேன். நடக்கப் போவதை அறிந்த அவள் பதறினாள். கண்ணீர் வரத் துவங்கி விட்டது அவளுக்கு. “ இதை நீ கண்டிப்பா செஞ்சாகணுமா. ப்ளீஸ் வேண்டாமே” என்றாள். வெற்றுக் கண்களுடன் அவளை ஏறிட்ட நான், “ வேற வழியில்ல” என்றேன். தெளிவாக இருந்தேன்.
கண்களை மூடி ஒரு முறை மூச்சை ஆழமாய் உள்ளிழுத்தேன். பின் கண்களைத் திறந்தேன். நடக்கப் போகும் விஷயத்தை ஏற்றுக் கொண்டவள் போல் எந்த விதமான உணர்ச்சிகளும் காட்டாமல் அவளிருந்தாள்.
“நசி” என்று தலைப்பிட்டேன். மெல்ல அவளை ஒவ்வொரு சொல்லாய் எழுதத் துவங்கினேன். அவள் பார்வை என் மேல் நிலைகுத்தியிருந்தது. எழுத எழுத எதிரிலிருந்தவள் மையில் மெல்லக் கரைந்து காகிதத்தில் பரவத் துவங்கினாள்.
டிசம்பர் பூக்கள்

கரளைகற்கள் உறுத்தும்
வெட்டிவைத்த பாத்திகளில்
காட்சிக்கென மட்டும்
வளர்க்கப்பட்டிருக்கும்,
பெயர் தெரியாத
வெளிறிய ஊதா வண்ணப்பூக்களை
படமெடுத்து சேமிக்கையில்
‘டிசம்பர் பூக்கள்’
எனப் பெயரிடுகிறேன்.
பெயர் தெரிந்து கொள்ளாமலேப் போன
புதுமண்டபத்து பூக்கார அம்மாளின்
பூதொடுக்கும் தாளகதியையும்
வாயோர வெற்றிலை சிவப்பையும்
எப்படிப் பெயரிடுவது
934

வரிசை நெடுக கூட்டமோ கூட்டம்.
வாயில் கதவு ஒரு தொலைதூர கருந்துளை என எங்கோ தெரிந்தது.
ரொம்ப காலமாக நின்று அலுத்துவிட்டது.
வரிசையில் கடைசியாக வந்து சேர்ந்த எனக்குப்பின் முன்னிருப்பது போல் பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது.
விட்டுவரவும் மனமில்லை.
வியர்வை வழியும் கழுத்தில் பவுடர் பொதிந்த கைக்குட்டையைச் சுற்றியிருந்தார் முன்னாலிருப்பவர்.
பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து நெடுநேரமாகத் துழாவியபடி இருந்தார் பின்னாலிருப்பவர்.
யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
தொலைவில் துவங்கிய பரபரப்பு அலையாக என்னை வந்தடைந்தது.
தாழ் திறக்கப்பட்டுவிட்டது.
கதவு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை உள்ளிழுத்துக் கொண்டது.
“தகுதியுடையவர்கள் இவ்வழி,” என வலப்பக்கம் ஒரு பாதை திரும்பியது.
தயக்கமே இன்றி திரும்பினேன்.
“தனித்துவமானவர்கள் இவ்வழி,” என மற்றொரு பாதை பிரிந்தது.
ஐயமே இல்லை. அதுவே என் வழி.
“சிறப்புடையவர்கள் இவ்வழி,” என திறந்தது மற்றொரு பாதை.
அவ்வழியில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை எவரையும் காணவில்லை நான்.
முன்னவரின் பவுடர் நெடி மட்டும் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது.
நெடுந்தூரப் பாதை மற்றுமொரு பிரிவில் சென்று முட்டியது – “தன்னம்பிக்கை கொண்டவர்கள் இவ்வழி” என்றது.
நானறிவேன் என்னம்பிக்கையை என பீடு நடை போட்டேன்.
குறுகியும் இருண்டும் சுழன்றும் குளிர்ந்தும் சென்றது அப்பாதை.
தொலைவிழியாக தெரிந்த ஒளி மெல்ல கீற்றாக மாறியது.
பாதையின் முடிவில் வானுயரத் தெரிந்த வெள்ளை மதில் சுவர் ஓரமாக பலரும் அமர்ந்திருந்தார்கள்.
சுருட்டு பிடித்தப்படி திரும்பிய அவன், “இதோ வந்துட்டான்யா 934… சவுத்த மூதி எம்புட்டு தடவதான் திரும்பி வருவானோ,” என்றான்.
மலங்க மலங்க விழித்தபடி நானும் அந்த மதில் சுவரைப் பார்த்தப்படி குந்தி அமர்ந்தேன்.
…
ஒளிப்பட உதவி – Ripley Auctions
சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 5
அத்தியாயம்- 5

சோக்லோஸும் மரியாவும் வசித்த காண்டோமினியம் கென்மோர் ஸ்கொயர் அருகே காமன்வெல்த் அவென்யுவில் இருந்தது. நகருக்குள் எப்போது வந்தாலும் செய்வது போல ஹெண்டர்சன் இப்போதும் I-93 எக்ஸிட் வழியாக நகரை அடைந்து காரை வீட்டருகே நிறுத்தி பூட்டிவிட்டு நடந்தார். வீட்டின் முன்வாயிலில் அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருக்கும்போது சோக்லோஸுடன் சில நாட்களுக்கு முன் தான் பேசிக்கொண்டிருந்ததை கசப்புடன் நினைத்துப் பார்த்தார். மீண்டும் அவர் ஏமாற்றப் பட்டுவிட்டார்: அவரைக் தூக்கியெறிந்து விட்டு போன பெண்ணை அவர் சமாதானப் படுத்தவேண்டும். அந்த வேலையைக் கொடுத்திருப்பது யாருக்காக அவள் ஹெண்டர்சனை விட்டுவிட்டு போனாளோ அவர். அந்தப் பெண்மணி! அவரை மயக்கி தனது ஆய்வுக்கட்டுரையை எழுதச் செய்தது மட்டுமல்லாமல் இப்போது அதை எழுதியதற்காக அவரைத் தண்டிக்கவும் போகிறாள். வாயில் ஊறிய கசப்பைக் காறி டுலிப் மலர்ச்செடிகளில் உமிழ்ந்தார் ஹெண்டர்சன். ஹெண்டர்சன் ஆய்வு நிதிக்கு கையேந்தும் வேளையில் சோக்லோஸ் போன்றவர்கள் நேஷனல் சயின்ஸ் கழகத்தின் மானியங்களில் கொழிக்கிறார்கள் – ஹெண்டர்சன் பதற்றத்தில் இருக்கும்போது தன்னை படர்க்கையில் எண்ணிக்கொள்வது போல இப்போதும் நினைத்துக் கொண்டார்.
கதவு திறந்தது. வெளுத்துப் போன ஜீன்சும் மஞ்சள் போலோ சட்டையும் அணிந்து, அக்ரோன் நகரில் பார்த்ததை விட இயல்பாக தெரிந்த சோக்லோஸுக்கு பின்னால் நின்றிருந்தாள் மரியா. அவள் லேசாக சுருங்கிவிட்டது போல் பட்டது அவருக்கு. வலிநிறைந்த துல்லியத்தோடு அவரால் நினைவுகூர முடிந்தது – தலைமுடி ஐஸ்-டீயின் ப்ரௌன் நிறத்திலிருந்து கருப்பாக மாறியிருந்ததைத் தவிர அவளில் வேறொன்றும் மாற்றமில்லை. ஆரஞ்சு நிற மேற்சட்டையும், கருநிற ஸ்கர்ட்டும், ஊதா நிற காற்சட்டையும் அவள் அணிந்திருந்தது அவளின் இயல்பான ஒரு வினோத கவர்ச்சியை ஊட்டுவதாக இருந்தது. அவருக்கு முன்னால் அவள் நின்ற அந்தக் கோலம் ஹெண்டர்சனுக்குள் ஆசையின் வெம்மையை ஊற்றாக பாயச் செய்தது. உள்ளே நுழைந்த ஹெண்டர்சனை மரியா தன் கைகளை சிறு டவலில் துடைத்தவாறு பார்த்தாள்.
“வாருங்கள், அற்புதமான அறிஞரே! உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி, ஜான்!” தோள்களை அணைத்து, கன்னங்களில் முத்தமிட்டு கிறங்கிப்போன ஹெண்டர்சனை வரவேற்றாள் மரியா. “உள்ளே வா, ஜான் – எல்லாம் தயாராக இருக்கிறது!”
வீட்டைச் சுற்றிக் காண்பித்தார் சோக்லோஸ். அது ஒரு சுமாரான வீடு – சோக்லோஸ் விரைந்து கடந்த ஒளிகுறைந்த, துணிகள் பொதிகளாக தரையிற்கிடந்த அந்தப் படுக்கையறையைத் தவிர – பெரிதாக ஈர்க்கும்படி ஒன்றுமில்லை. பளபளக்கும் ஒக்மரப் பலகைகள் பதித்த, பெரிய சன்னலுடன் வெளிச்சமும் காற்றோட்டமும் கூடிய டைனிங் அறையில் அனைவரும் அமர்ந்தார்கள்.அந்த அறை சோக்லோஸ் – மரியா இருவரின் தவறவிடமுடியாத தடயங்களால் நிரம்பியிருப்பதாகப் பட்டது. பிரேம் செய்யப்பட்ட கணித ஆய்வுக்கட்டுரையின் பட்டயம்; அருகிலேயே உறைகளில்லாத இசைவட்டுகளும் ஸ்டீரியோவும்.
பொருட்களின் பொருத்தமற்ற அருகண்மை ஹெண்டர்சனின் எரிச்சலைக் கூட்டியது. மாலை இன்னும் சூடு தணியவில்லை; திறந்து விடப்பட்டிருந்த சன்னல்கள்வழி பக்கத்துவீட்டு தொலைக்காட்சியிலிருந்து ரெட் சாக்ஸ் ஆடிக்கொண்டிருந்த பேஸ்பால் போட்டியின் ஒளிபரப்பின் சன்னமான ஒலி வழிந்து கொண்டிருந்தது. ஹெண்டர்சன் சோக்லோஸ் ஊற்றித்தந்த கலங்கிய ரெட் வைனை மூன்று மடக்குகளில் விழுங்கினார். “வீட்டுக்கான கடன் அதிகம் இருக்குமே? ஆனாலும் ஓர் உதவி பேராசிரியருக்கு பரவாயில்லைதான்!” என்றார் ஹெண்டர்சன்.
“வீட்டின் கீழ்தளத்தில் தண்ணீர் புகுந்து விடும். ரேடியேட்டர் அவ்வப்போது பழுதாகிவிடும். அதைத் தவிர…பிரச்சனை ஒன்றுமில்லை,” என்றார் சோக்லோஸ்.
கொலாப்கி அடுக்கிய தட்டுடன் சமையலறையிலிருந்து மரியா வெளிப்பட்டாள். கொலாப்கி – ஹெண்டர்சனுக்கு நெஞ்சில் எழுந்து வந்த தீவிர உணர்வெழுச்சியில் கண்கள் கலங்குவது போலிருந்தது. ஒரு குறிப்பிட்ட ஆகஸ்டு மாத பின்னிரவின் நினைவு: இதே கொலாப்கியும் ரெட் வைனும். அவரும் அவளும் , தரையில் சப்பணமிட்டு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த வெப்பமிகுந்த இரவில், வெறும் உள்ளாடைகளில். தேய்ந்து போன இசைத்தட்டு ஒன்று படுக்கையறையில் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது…
அந்தப் பெண்!
உணவு மேசையில் அமர்ந்த ஹெண்டர்சன் முள்கரண்டியால் கொலாப்கியை வெட்டி முட்டைக்கோஸை வாயில் போட்டுக் கொண்டார்.
“உனக்கு காரம் பிடிக்கும் என்று தெரியும் ஆனால் ரொம்பக் காரமாக இருக்காது என்று நினைக்கிறேன்,” என்றாள் மரியா’.
ஹெண்டர்சன் நிமிர்ந்து அவளை பார்த்தார். “ம். பிறகு? சோக்லோஸ் – மிக்லோஸ் – சொன்னான் – நீ மிகவும் மாறி விட்டதாக.மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லத்தான் நினைக்கிறேன், ஆனால் அப்படிச் சொன்னால் அது சரியாக இருக்காது,” என்றார்.
சிறிய அடிபட்ட மிருகமொன்றை குழந்தையொன்று பார்வையிடும் பாவனையில் மரியா ஹெண்டர்சனை மிருதுவான பார்வையொன்று பார்த்தாள். “நீ மாறவேயில்லை, ஜான். வெட்டிப்பேச்சு உனக்கு பிடிப்பதில்லை இல்லையா?” ஒயினை சுவைத்தவாறே சிரித்தாள். “உருப்படாத என்னுடைய யோசனைகளில் இதுவும் ஒன்று என்று நீ நினைப்பது எனக்குத் தெரியும். ஆனால் அப்படியில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன்.”
“J.A.M. கணித ஜர்னலில் நீ ‘ஒத்துக்கொள்ளப்போகும்’ உண்மைக்கு எனது அனுமதி தேவை, இல்லையா? இந்த டின்னரின் காரணமே அதுதான், இல்லையா?”
மரியா சிரித்தாள். உயிரற்ற பார்வையொன்றை அவர் மேல் வீசியபடி, “ஜான், ப்ளீஸ் – உன் அனுமதி வேண்டும்தான், நான் மறுக்கவில்லை,” என்றாள்.
“என் அனுமதி,” ஹெண்டர்சன் தொடர்ந்தார். “நீ பாட்டுக்கு ஆய்வு உன்னுடையதல்ல என்று மறுப்பு வெளியிட்டுவிட்டு போய்விடுவாய். உன் மனசாட்சியின் உறுத்தலில் இருந்து உனக்கு விடுதலை கிடைத்து விடும். எனக்கு? பணிநீட்டிப்பு குழுவின் அவமதிப்பும், கருத்தரங்குகளில் ஒதுக்கப்படுவதும் நடக்கும்.”
ஹெண்டர்சனின் கையை தனது கைகளுக்குள் பொதிந்தவாறு மரியா சொன்னாள், “உனக்கு என் நன்றி கிடைக்கும், ஜான். என்னை மகிழ்வாக வைத்துக்கொண்ட பெருமிதம் உனக்கு கிடைக்கும். அவ்வளவுதான் என்னால் உனக்குத் தரமுடியும், ஜான். என்னிடம் வேறென்ன இருக்கிறது, சொல்?”
“கடவுளே!” மரியாவின் தொடுகையால் திடீரென்று ஹெண்டர்சன் கிளர்ச்சியடைந்தார். “இது மிகவும் அவசியமா? வெளியே Ph.D பட்டதோடு உலவும் அவ்வளவு முட்டாள்களை நினைத்துப் பார். நீ இதற்கு தகுதியானவள், மரியா! பலியொன்றும் இல்லாத குற்றம், அவ்வளவுதான்.”
“பாதிக்கப்படாதவர்கள் இல்லாத குற்றமென்று ஒன்று இல்லை, ஜான்,” மரியா தோள்களை குலுக்கினாள். “மதத்தை நீ கண்டடைந்தால் நான் சொல்வது என்னவென்று நீ புரிந்து கொள்வாய்.”
வெறுப்பாக தலையை அசைத்துக் கொண்டார் ஹெண்டர்சன். மரியா மாறி விட்டாள். கொஞ்சம் மந்தமாக, தன்னிச்சையாக இல்லாமல். அவள் பேசிய ஆங்கிலத்தின் சாயலும் – வசீகரிக்கும் அயல்நாட்டு தொனியைக் கேட்க முடியவில்லை; எரிச்சலூட்டும் அரைகுறை அமெரிக்க இழுவை. மரியாவுக்கு அருகே, சோக்லோஸ் ஏதும் பேசாமல் தீவிரமான பாவனையுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். ரெட் சாக்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தின் ஒளிபரப்பில் ரசிகர்களின் சத்தம் வர்ணனையாளரின் உரத்தக் குரலை மீறி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது. ஆட்டம் தலா மூன்று என ஐந்தாவது ஆட்டத்தில் சமநிலையில் இருந்தது.
மூவரும் கொலாப்கியை அமைதியாக சாப்பிட்டு முடித்தனர். காலித் தட்டுகளை கொண்டு போய் உள்ளே போட்டுவிட்டு ஆவிபறக்கும் பிகோஸ் நிறைந்த பாத்திரங்களுடன் சோக்லோஸ் உணவுமேசைக்கு வந்தார். இன்னொரு ஒயின் பாட்டிலை எடுக்க சோக்லோஸ் உள்ளே சென்ற போது, ஹெண்டர்சன் கைகளை மேசையின் மீது ஊன்றிக்கொண்டு மரியாவைப் பார்த்துக் கேட்டார், “ஆக, இப்போது நீ மன்னிக்கப்பட வேண்டும்? அதற்கெல்லாம் உங்களை போன்றவர்களுக்கு பாதிரிமார்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்?” என்றார்.
மரியா உதடுகளை இறுகக் கடித்தபடி அவரை வெறித்துப் பார்த்தாள். அமைதியாக, “இது மனச்சாட்சி சம்பந்தப் பட்டது, ஜான். பல மோசமான காரியங்களை செய்திருக்கிறேன், ஜான். உன்னை ஏமாற்றியது. இன்னொருவரின் எழுத்தைத் திருடியது. மிக்லோஸ் இல்லாத காலைகளில் உன்னை அழைத்தது. எதுவுமே சரியல்ல.”
“அதுவெல்லாம் ஒரு காரணமேயல்ல. ஒன்றும் நடக்கவில்லை! நாம் கண்ட்ரோல் தியரியைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம் – அதுவொரு பாவமா?”
“தவறுதான். உன்னை நான் நடத்தியவிதம் தவறுதான், ” மரியா தலையை அசைத்துக் கொண்டாள். “பல வருடங்களாக நான் மகிழ்ச்சியாக இல்லை.”
“இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாய்?” ஹெண்டர்சன் வினவினார்.
மரியா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவள் முகத்தில் உணர்ச்சிகள் சந்தேகத்திலிருந்து வருத்தத்திற்கும் பின் மென்மைக்கும் கணநேரத்தில் மாறின. “ஆம், இப்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்,” என்றாள்.
ஹெண்டர்சன் ஏதோ சொல்ல வாயெடுத்தார், பின் தலையை இல்லையென்பது போல் அசைத்துக்கொண்டு ஒரு பெரிய மிடறு ஒயினை விழுங்கினார். மரியா மகிழ்ச்சியாக இருப்பதை அவரும் விரும்பினார். ஆனால் இப்படியல்ல. மதத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு, பின்வாசல் வழியாக மகிழ்வின் நிழலுக்குள் நுழைவது எளியதுதான். ஆனால் அதுவொரு முட்டாளின் பேரம். கோபம் தலைக்கேற அமைதியில்லாமல் மொத்த ஒயினையும் வாயில் கவிழ்த்துக் கொண்டு புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டார்.
“சரி, நாம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்,” ஹெண்டர்சன் திறந்திருந்த ஜன்னல் வழியே கேட்டுக் கொண்டிருந்த பேஸ்பால் ஆட்டத்தின் வர்ணனையை சுட்டிக்காட்டினார். “இந்த ஆட்டத்தில் ரெட் சாக்ஸ் வென்றால் உனக்கு என் அனுமதி உண்டு. உன் மறுப்பை நீ வெளியிடலாம். என் தொழிலை சீர்குலைக்கலாம். நீ சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் ரெட் சாக்ஸ் தோற்று விட்டால், என்னை மன்னித்துக்கொள் மரியா, நீ உன் மனசாட்சியுடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் எல்லாரையும் போல்.”
“ஜான்! என்ன இது – என்ன பேசுகிறாய் நீ?” மரியா பதறினாள். அவளும் சோக்லோஸும் உறைந்த பாவனையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “தயவு செய்து எனக்காக இதைச்செய் ஜான். நமது நட்புக்காக. ப்ளீஸ்”
“ஹெண்டர்சன்,” சோக்லோஸ் கிசுகிசுத்த குரலில் கேட்டார், “இப்படி எளிமையாக தீர்க்கக் கூடிய விஷயமல்ல இது. நம் அனைவருக்கும் இது முக்கியம்.”
தனது நாற்காலியில் சாய்ந்துகொண்ட ஹெண்டர்சன் தோள்களை குலுக்கிக் கொண்டார். இவ்வளவு நாள் விதிகளின் படி ஆட்டத்தை ஆடி என்ன கண்டார் தோல்வியைத் தவிர? விதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க தீர்மானித்து விட்டார்.
சோக்லோஸ் அறையின் மூலையிலிருந்த தொலைக்காட்சியை இதுவரை பார்த்திராத ஒரு பொருளை பார்ப்பது போல வெறித்துப்பார்த்தார். பின் சானல்களை மாற்றி ரெட் சாக்சின் ஆட்டத்தை வைத்தார். மூவரும் தத்தம் நாற்காலிகளை நகர்த்தி போட்டுக்கொண்டு அமைதியாக ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆறாவதிலும் எட்டாவது ஆட்டத்திலும் ரெட் சாக்ஸ் ஸ்கோர் செய்ய, ஒன்பதாவது ஆட்டத்தில் டைகர்ஸ் மூன்று சுற்று ஓட்டத்தின் மூலம் மீண்டும் ஆட்டத்தை சமன் செய்தது. ஒன்பது ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் சமமாக இருந்ததால், ஆட்டத்தை தீர்மானிக்க மேலதிக இன்னிங்ஸ் ஒன்று என்ற கணக்கின்படி ஆட்டம் மீண்டும் துவங்கியது. தனது நாற்காலியில் கைகளை இறுகக் கட்டியபடி முன்னகர்ந்து மரியா அமர்ந்திருக்க, ஹெண்டர்சனோ எதிலும் மனம் நிலையில்லாமல் மைதானத்தின் மேல் பறக்கவிடப்பட்டிருந்த பலூனைப் பார்த்துக் கொண்டிருந்தார். மூன்று நான்கு என ஒயின் கோப்பை அடுத்து கோப்பையாக அருந்தியபடியே ஹெண்டர்சன் பெரிய ஜன்னல் வழியாக அந்தி மெதுமெதுவே இளஞ்சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறமாக தொலைவானம் வரை மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தார். எத்தனை அந்திகள் அவரது அலுவலக ஜன்னல் வழியே வடக்குவானின் வர்ண ஜாலங்களை, செந்நிற தீற்றல்களை தனிமையில் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்! சோக்லோஸ் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து ஹெண்டர்சன் திரும்பிப் பார்த்தார். சோக்லோஸ் திரும்பிக் கொண்டார்.
டைகர்ஸ் அணி பதினொன்றாவது ஆட்டத்தில் ஒரு ஓட்டம் முன்னிலை; ரெட் சாக்ஸ் இரண்டு ஓட்டங்களை தவற விட, கூட்டத்தில் ஒரு சலசலப்பு.
“இப்போது என்னவாகும்?” மரியாவின் பக்கவாட்டு முகத்தைப் பார்த்து பேசினார் ஹெண்டர்சன். “என்ன நடக்கும் மரியா? நீ மேலும் மேலும் உன் பாவ மன்னிப்புகளை செய்து கொண்டே போவாய். உன் மன நிம்மதியைக் கூட்டிக் கொள்வாய். பிறகு? உன்னைத் சுற்றியிருப்பவர்களை நினைத்துப் பார்த்தாயா? மன்னிப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை, மரியா!”
மரியா அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. “கணிதம் போல் மதத்திலும் விடை காண முடியாத கேள்விகள் நிறைய உண்டு. பொறுத்திருந்து பார்,” என்றார் ஹெண்டர்சன்.
அவர் சொல்லிமுடிக்கவும், கூட்டத்தின் சத்தம் ஒரு பேரிரைச்சலாக எழும்பியது. விசையுடன் அடிக்கப்பட்டு அந்தரத்தில் பறந்த பந்தை கண்டார் ஹெண்டர்சன். அசைவில்லாமல் தொங்கியது போல் தோன்றிய பந்து, திடீரென ஒரு மாயக்கரத்தினால் அடிக்கப்பட்டது போல் கீழ் நோக்கி விழத் தொடங்கியது. மரியா பரபரப்பில் கைகளை கொட்டிக் கொண்டாள். டெட்ராய்ட் அணியின் வலதுபுற தடுப்பாட்டக்காரர் பின்னோக்கி ஓடி, மைதான சுவரில் மோதுவது போல் விழுந்து எழுந்தான். மைதான கோட்டை தாண்டிப் பறந்த பந்து, அவன் எழுந்த போது அவனது நீட்டிய கையின் கிளவ்ஸுக்குள். பந்தை பிடித்து விட்டான்! பாஸ்டன் ரசிகர்களிடம் ஒரு நம்பிக்கையில்லாத முனகல்; டெட்ராய்ட் ஆட்டக்காரன் முஷ்டியை காற்றில் குத்தியவாறு பந்தை கைகளுக்குள் மாற்றியவாறு தனது அணியினர் அமர்ந்திருந்த பக்கத்திற்கு செல்வதைக் கண்டார்கள்.
சோக்லோஸ் பெருமூச்செறிந்தார். “நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆட்டங்களில் என்னால் இந்த பதற்றத்தைத் தாங்க முடிவதில்லை.” மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவர், ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தொலைக்காட்சியில் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொண்டு தத்தம் அணியின் டக் அவுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஹெண்டர்சன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டிருந்தார். மரியா தொலைக்காட்சிப்பெட்டிக்கு அப்பால் மிகத் தொலைவில் ஏதோவொன்றை பார்ப்பவள் போல் அமர்ந்திருந்தாள். உதடுகள் ஒரு மெல்லிய கோடாக இறுகியிருக்க, கைகள் எதையோ வேண்டுவன போல் குவிந்திருந்தன. அவளை பார்த்தபடி, “நான் கொடூரமானவனாக இருந்திருந்தால், இதில் ஒரு நீதியை சுட்டிக் காட்டியிருப்பேன்,” என்றார் ஹெண்டர்சன்.
“ஆனால் நீ கொடூரமானவனில்லை. நீ தயை நிறைந்தவன்; புத்திசாலி, கருணையுள்ளவன்.” மரியா ஹெண்டர்சனின் கையை தான் கைகளில் ஏந்திக் கொண்டாள். “நீ கொடூரமானவனில்லை தானே, ஜான்?”
(தொடரும்)
oOo
19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.
பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.
பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின் முறையாக முன்னனுமதி பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.
ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT