Author: பதாகை

ஆதவனின் ‘அந்தி’

வெ. சுரேஷ்

சிறு வயதில பாட்டி தாத்தா வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அவர்களின் சண்டையை ரசிப்பதில் பெரும் ஆனந்தம் அடைவதுண்டு.  அவை, மேசை மின்விசிறியை யார் பக்கம் திருப்பி வைப்பது, யாருக்கு வாய் குழறல்,  மறதி, கை  நடுக்கம் அதிகம் போன்ற தீராத விவாதங்கள். இறுதியில் எப்போதும் பாட்டிதான் ஜெயிப்பார். தாத்தா சில சமயம் பெருந்தன்மையுடனும், பல சமயம் அசட்டுச் சிரிப்புடனும் தோல்வியை ஒப்புக் கொள்வார். அதில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் என் குடும்பத்தில் பிரபலமான,  குறிப்பாக என் தம்பிக்கு மிகவும் பிடித்த ஒரு கதை. அவனை விட்டுவிட்டு நானும் என் அண்ணனும் தாத்தா பாட்டியுடன் மதுரை சென்று  வந்தபோது, தாத்தா எங்களுக்கு அங்கு ஒரு  ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ரூம் போட்டு விட்டதனால் பாட்டி அவரை, ‘திட்டிண்டு திட்டிண்டு’ படி ஏறினார் என்ற அந்தப் பகுதியை கேட்கும்போதெல்லாம், என் தம்பி பரவசம் அடைவான். அவனை விட்டுவிட்டுப் போன தாத்தா நல்ல திட்டு வாங்குகிறாரே! தாத்தா அந்தத் திட்டுகளை ரசித்து ஏற்றுக் கொண்டார் என்பதே என் நினைவு.

நான் பார்த்த இவர்கள் இப்படித்தான் இருந்தார்கள், ஆனால் தாத்தா பாட்டியைப் பற்றிய பழைய கதைகள் முற்றிலும் வேறானவை. தாத்தா ஒரு பயங்கர முன்கோபி, பாட்டி அவரைப் பார்த்தாலே நடுங்குவார். இருவரும் ஒருவருக்கொருவர் நேராகப் பேசிக்கொண்டுகூட என் அம்மா, சித்திகள், மாமாக்கள் பார்த்ததில்லை. தாத்தாவுடன் பேசுவதென்றால், மூத்தமகளான என் தாயார், அல்லது கடைக் குட்டியான எங்கள் கடைசி மாமா இவர்களால்தான் முடியும். வார்த்தைகள் அதிகமற்ற, ஹூம்,ம்ஹூம், என்பது போன்ற உருமல்கள்தான். எப்போதும் வாயில் வெற்றிலை, கையில் செல்லம், இல்லையென்றால் புத்தகம். Sslc சான்றிதழ் வாங்க பள்ளிக்கு வரும்படி என் தாயார் அழைத்தபோது, “நீ Sslc முடிச்சிட்டயா?” என்று கேட்குமளவு வீட்டின் மேல் கவனம்.அவரா இவர்? என்று நாங்கள் சிறுவர்கள் நம்பமாட்டோம்.

அவர்களின் ஏறத்தாழ, 50 வருட தாம்பத்திய வாழ்வின் இறுதி ஐந்தாறு வருடங்களே நாங்கள் பார்த்தது. நான் பார்த்த தாத்தா பாட்டியிடம் நிகழ்ந்திருந்த மாற்றங்கள்  (என் பிற உறவினர்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டிருந்ததை வைத்துப் பார்க்கும்போது) எத்தகையவை, அவற்றுக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என நான் புரிந்து  கொள்ள தொடங்கியது, என்  இருபதுகளில் ஆதவனின் ‘அந்தி‘ சிறுகதை  படித்தபின்தான் .

அந்தி‘ சிறுகதையின் கதைசொல்லி, தன் மனைவியின் மிக வயதான, தங்கள் கல்யாணத்துக்கு கூட வர இயலாத, தாத்தா பாட்டியின் வீட்டுக்கு  மனைவியுடன் சென்று வரும் நிகழ்விலும், பின்னர் அந்தப் பாட்டியின் மரணச்  செய்தியைக் கேள்விப்பட்டு அவர்களை பற்றி நினைத்துக் கொள்வதிலும் விரிகிறது. இளம் தம்பதியினர், தாம்பத்திய வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர்கள், அதன் அந்திப் பொழுதில் இருப்பவர்களைச் சந்திக்கின்றனர் என்பது இந்தக் கதையின் நெகிழ்ச்சியான பின்புலம். கதையும், இளம் மாப்பிள்ளையின் பார்வையில்தான் சொல்லப்படுகிறது. அதன் முக்கிய பகுதி அவர்களின் தாத்தா பாட்டி வீட்டு விஜயம். தாத்தாவைப் பற்றி கதைசொல்லி கேள்விப்பட்டிருந்தது எல்லாம் அவர் ரயில்வேயில் ஸ்டோர்ஸ்  சூப்பிரென்டெண்டாக இருந்து ஓய்வு பெற்றார் என்பதுதான் (அங்கு ஒரு பஞ்ச் வைக்கிறார் ஆதவன்,அது சூப்பிரென்டெண்டுகளுக்குக் கூட  சுய மரியாதையோடு இருந்த காலம் என்று). கூடவே, அவர் அபாரமான ஆங்கில அறிவு கொண்டவர். ஆபீஸையே முதல் மனைவியாகக்  கொண்டவர்.  கண்டிப்புக்கும், கறார்த்தன்மைக்கும்,முன்கோபத்துக்கும் பேர் போனவர்; (என் தாத்தாவைப் போலவே) பாட்டி பொறுமையின் சொரூபம், தாத்தாவின் எந்த உதவியும் இல்லாமல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர், தாத்தா முன் ஒரு சொல்லெடுத்து அறியாதவள்என்ற புறத்தகவல்கள்தான்.

ஆனால் இங்கு அவர்  காணும் காட்சியே முற்றிலும் வேறானது. பாட்டி அதிகம் பேசுவதில்லை. தாத்தா சமையல் அறை நிபுணராக இருக்கிறார். காபி போடுவது அவர்தான். ஓயாமல் சமையல் அறையிலும் மேடையிலும் வேலைகளை சுலபமாக்குவதற்கும், சமையலைறைப் பாத்திரங்களை இலகுவாக அலம்புவது குறித்தும் தான் செய்திருக்கும் மாற்றங்களையுமே  பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரயில்வே ஸ்டோர்ஸ் சூப்பிரென்டெண்டுஅங்கு இல்லவே இல்லை. ஆனால், அவர் ஒரு ஐந்து நிமிடம் பால் வாங்க வெளியே சென்றிருக்கும் சமயம், பாட்டி கதைசொல்லியிடம், திடீரென்று அக்ஷரம் பிசகாத அழகிய ஆங்கிலத்தில் பழங்காலத்து ரயில்வே விஷயங்களை பேசத் துவங்குகிறார். தாத்தா உள்ளே வந்தவுடன் அந்தப் பேச்சு அடங்கிவிடுகிறது. இப்படி ஒரு பகல் நேரம் அங்கே இருந்துவிட்ட, குழம்பிய மனநிலையுடன் இன்னொரு உறவினர் வீட்டுக்கு செல்கின்றனர் இவர்கள். அங்குதான் தெரிகிறது அவர்களுக்கு, பாட்டிக்கு சில காலமாகவே சித்த சுவாதினம் இல்லையென்றும் திடீர் திடீரென்று இப்படி ஆங்கிலப் பேச்சில் புகுந்து விளையாடுவதுண்டு என்பதும். அப்படியென்றால் அவர் தன்னிடம் பேசியதெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தாத்தா பேசிய ஆங்கிலத்தின் எதிரொலிகளா, என்று பிரமிப்பில் ஆழ்கிறார் கதைசொல்லி. பிரமிப்பு  விலகாத மனநிலையுடன் ஊர் திரும்புகின்றனர் புதுமணத் தம்பதியினர். சில மாதங்கள் கழித்து, பாட்டி இறந்த செயதி வருகிறது. வருத்தத்தில் மூழ்கும் கதைசொல்லி, தான் அவர்களது வீட்டில் கண்ட காட்சிகளுக்கு அர்த்தம் தேடுவதில் முனைகிறார்.

மிக நீண்ட காலம் மணவாழ்க்கையில் இணைந்து வாழும் தம்பதியினர், ஒருவரது பிரிவை இன்னொருவர் எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள்? நான் என் தாத்தா பாட்டியிடம் கண்டதும், இங்கு இந்தக் கதைசொல்லி தன் மனைவியின் தாத்தா பாட்டியின் நடவடிக்கைகளிலும்  கண்டதும்  ஒரு role reversal என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவரது இழப்பை இன்னொருவர் தாங்குவதற்கு மிகச் சிறந்த உபாயமாக அவர்களது ஆழ்மனம் தங்கள் துணையின் பாத்திரங்களைத் தான் ஏற்று நடிக்கத்  தொடங்குகிறது. இங்கே, பாட்டியின் பாத்திரத்தை தாத்தா ஏற்று நடிப்பது, பிரக்ஞாபூர்வமாக- ஆனால் பாட்டி நடிப்பதில்லை. அவர் சித்தம் தாத்தா அருகிலில்லாதபோது அவராகவே மாறி  விடுகிறது. என்றோ எப்போதோ கேட்ட ஆங்கில வாக்கியங்கள் அவரை அறியாமல் அவரது வாயிலிருந்து வந்து கொண்டேயிருக்கின்றன. இதை அன்றாடம் நாம் நம் குடும்பங்களில் காண முடியும்- குறிப்பாக கணவன் – மனைவி இருவர் மட்டுமாய் இணைந்து வாழ்பவர்களின் பேச்சே மாறிவிடுகிறது, அவர்களது குரல்களின் ஏற்ற இறக்கங்கள்கூட ஒருவரையொருவர் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. என் தாத்தாவைப் போலவே சர்வாதிகாரியாக தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த ஆண்கள் தம் இறுதிக் காலத்தில் முழுக்க முழுக்க மனைவிகளிடம் முற்றடங்குவதும், அடங்கி போதலே சுபாவம்  என்றிருந்த பெண்கள் ஒரு கட்டத்தில் தம் கணவர்களை வழிநடத்துபவர்களாகவும் மாறி  இருப்பதைக் காண முடியும்.

முதுமையையும் பிரிவையும் மனித மனம் எதிர்கொள்ளும் விதத்தை இதை விட அழகாகச் சொன்ன ஒரு கதையை நான் தமிழில்  படித்ததில்லை. ஆர். சூடாமணியின் ஒரு கதையே ஆதவனின் இந்தக் கதைக்குப் பின் என் நினைவில் வருகிறது. முதுமையின் துயர், எதிரில் நீண்டு நெருங்கும் பிரிவின்  நிழல்  இவையெல்லாம் தமிழ் சிறுகதை உலகில் அதிகம் பதிவானதில்லை. வழக்கம் போல ஆழ்மனதின் நினைவோட்டங்களை உரையாடல்களாக மாற்றுவதில் ஆதவனுக்கிருந்த நுட்பமான திறமை வியக்க வைக்கிறது. கதைசொல்லி, தனக்கு ஏன் முதியவர்களை எப்போதும்  பிடிக்கிறது என்று தன்னைத்தானே ஆராய்ந்து கொள்ளும் இடங்களில் ஆதவனின் கசந்த நகைச்சுவை மிளிர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இந்த கதையை இப்படி முடிக்கிறார்-

“பாட்டி இறந்த செய்தியைக் கேட்டவுடன், சட்டென்று தாத்தா பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. முன்னை விடவும் தீவிரமாக அவர் சதா சமையலைறையில் முனைந்து கிடைக்கக் கூடுமோ என்று தோன்றுகிறது. இன்னொன்றும் தோன்றுகிறது, அவர் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தியிருக்கக் கூடும்.”

         இக்கதையை படித்த பிறகு, நான் பார்க்கும் ஒவ்வொரு முதிய தம்பதியினரிடமும் இந்தக் கதையின் தாத்தா பாட்டியின் சாயல்களைக் கண்டு கொண்டேயிருக்கிறேன். என் தந்தை தனது  முதுமையில் எப்படி இருந்திருப்பார் என்றறிய சந்தர்ப்பம் அமையவில்லை. ஆனால் இன்று மேலே சொன்ன  என் தாத்தா பாட்டி என் நினைவில் எழும்போதெல்லாம் முதுமையில் இருந்திருக்கக்கூடிய என் தந்தையின் நடவடிக்கைகளை ஊகிப்பது சுலபம் என்றே தோன்றுகிறது. கூடவே எனது முதுமையும். அதுவே ஆதவனின் இந்தக் கதை நம் மீது செலுத்தும் ஆழ்ந்த பாதிப்பின் அடையாளம். அவரது கலையின் வெற்றி.

மேலும், என்னவொரு பொருத்தமான தலைப்பு.

அசோகமித்திரனின் ‘துரோகங்கள்’

ஆர்.அஜய்

18 வயதில், தன்னை விட ஒரு வயது அதிகம் இருக்கக்கூடிய சக மாணவி ரஞ்சனியைப் பெண் கேட்டு அவள் வீட்டிற்கு நீலகண்டன்     செல்வதுடன் ‘துரோகங்கள்’ கதை ஆரம்பிக்கிறது. அசோகமித்திரனின் தொடர்வாசகனுக்கு மிகவும் பரிச்சயமான, சுதந்திரம் நெருங்கும் காலகட்டம்.  பதின் வயதிற்கு உரிய குறுகுறுப்பும் அயல் பெண்களுடன் பழகுவதில் தயக்கமும் கொண்ட   அ.மியின் பாத்திரங்களில்  (நாகரத்தினத்தின் மீது ஈர்ப்பும் அவளை அணுகத் தயக்கமும் கொண்ட சந்திரசேகரன் ஒரு முன்னுதாரணம்) நீலகண்டன்  மாறுபட்டிருக்கிறார்.

பெண் கேட்டு வந்ததைப் பார்த்து ரஞ்சனியின் வீட்டில் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், ரஞ்சனி  ஒப்புக்கொண்டபின் அவர்களும் சம்மதிப்பதாக சொல்வதோடு, ஒரு மாதத்திற்கு  வீட்டிற்கு வரக்கூடாது என்றும்  நிபந்தனை விதிப்பவர்கள், கெடு முடிவதற்குள் மெட்ராஸிற்கு குடி பெயர்ந்து விடுகிறார்கள். 18 வயதில் நீலகண்டனுக்கு  இந்த  தைரியம் எப்படி வந்தது என்பதற்கு  எந்த முகாந்திரமோ அதை விவரிப்பதற்கான  சூழலோ  கதையின் போக்கில்    இல்லை என்பது ஒருபுறமிருக்க ரஞ்சனியின் தந்தை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு முப்பது நாட்கள் அந்தப் பக்கம் வராமல் இருப்பதில் உள்ள பேதமைக்கும்  பெண் கேட்டுச் செல்வதற்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றும் தோன்றுகிறது.

ரஞ்சனி சென்னை போனபிறகு நடக்கும் சம்பவங்கள்  வாசகனுக்கு ஆசுவாசமளிக்க  வேண்டும் என்று திணிக்கப்படவில்லை.  உடம்பிற்கு முடியவில்லை என்று சாதாரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் தந்தை திரும்பி வரவில்லை என்று ஒற்றை வரியில் நீலகண்டன் சொல்லிச் செல்வதன்  பின்னால்  அந்தப் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை தலை கீழாகிப்போன வரலாறு உள்ளது.

சிறிது காலம் கழித்து நீலகண்டன் குடும்பம்  மெட்ராஸ் வருகிறது.   அக்காவை அவன் கணவனிடம் அழைத்துச் செல்ல,  அவன் அவர்களைத்  துரத்தி விடுவது, குடும்பத்தைத் தாங்க வேண்டிய பல சூழ்நிலைகள் என அ.மி.யின் புனைவுகளில் ஏற்கனவே பார்த்ததுதான்;  சிறிது காலம் ரஞ்சனியை தேடினாலும் வாழ்க்கை  நீலகண்டனைத் தன் போக்கில் இழுத்துச் செல்வதை -திருமணம், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவது – வழக்கமான நேர்த்தியோடு பதிவு செய்கிறார்.   ‘அவனுடைய  பெற்றோர் முகம் கூட  மறந்துவிட்டது’ என்று ஒரு இடத்தில்  முதுமை தரும் குரூரமான யதார்த்தத்தின் சுட்டுவது போல் காலச் சுழற்சி சிக்கனமாக  பதிவு செய்யப்படுகிறது. ஒரு கட்டத்தில் கண்ணாடியில்  பார்க்குமபோது அவர் முகமே வேறு யாருடையது போல் தெரிகிறது.

நீலகண்டனின் அக்கா பெயர் கொண்டுள்ள பெண்ணை தனக்குத் தெரிந்த  வயதான பெண்ணொருவர்  அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பார் என்று அவருக்கு  ஒருவர் சொல்ல அப்பெண்ணின் வீட்டிற்கு   செல்கிறார் நீலகண்டன். வாசகன் யூகிப்பது போல் அது ரஞ்சனிதான். ஆனால் பல பத்தாண்டுகளுக்கு பின்னான சந்திப்பை  உணர்ச்சிகரமாக ஆக்க அ.மி முயலவில்லை. தன் அக்காவின் பெயரை சொல்லித் தேடியவர் யார் என்று நீலகண்டனுக்கு ரஞ்சனியை நேரில் கண்ட பிறகும் அடையாளம் காண முடியவில்லை. இருவர் மனதிலும்  இத்தனை ஆண்டுகளாக பொத்தி வைக்கப்பட்டிருந்த ஏக்கம் அர்த்தமற்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பும் அதே நேரம் யாருக்கும், எந்த மெல்லுணர்வுக்கும் கருணை காட்டாத  காலத்தின் பிணைப்பில்  இருந்து  நீலகண்டனும் தப்பவில்லை   என்று  மீண்டும் புரிகிறது.  அவர்  பெற்றோரின்/தன் முகத்தையே நினைவு கூற தடுமாறும் ஆசாமியாகி விட்டாரே.

நடைமுறை வாழ்வில் தர்க்கத்திற்கான மதிப்பு அதிகப்படியாகத்தான் தரப்படுகிறது என்றாலும்,  நீலகண்டனின் பெயரைச் சொல்லி தேடாமல் அவர் அக்காவின் பெயர் சொல்லி தேடுவதற்கான காரணத்தை ரஞ்சனி கூறுவது  வாசகனின் மனதில் கண்டிப்பாக அது குறித்து  எழும்  கேள்வியை முன்கூட்டியே யூகித்து கதையில் அதற்கான பதில் இருக்க வேண்டும்  என்ற அளவில் மட்டுமே பொருந்துகிறது.

 ரஞ்சனி திருமணம் செய்துகொள்ளவில்லை.  ‘எனக்கு உன்னோட  ஆன கல்யாணம்தான்டா’ என்று  ஒற்றை வரியில் அதை ரஞ்சனி முடித்து விடுவது அவர் எடுத்த இந்த முடிவைப்  பற்றி  பல வரிகளில் எழுதப்பட்டிருக்கக் கூடியதை விட அதிக தாக்கத்ததை ஏற்படுத்தும், அவர்  அன்பின் முழு வீச்சை உணரச் செய்யும் நெகிழ்வான  இடம். வாசகன் எளிதில் கடந்து செல்லக்கூடிய  அ.மியின் சொற்சிக்கனத்தின் இன்னொரு எடுத்துக்காட்டு.    அதே போல் நீலகண்டனும் ரஞ்சனியும்    மற்றவரின் குடும்பத்தை பற்றி பொதுவான  ஒரு சில விவரங்கள் தவிர எதுவும் தெரிந்து கொள்ளாததால்  – அதற்கான தேவையோ, சாத்தியங்களோ பொதுவாக எந்த உறவின் ஆரம்பத்திலும்  தேவைப்படுவதும் இல்லை என்பதால் –  ஒருவரை மற்றொருவர் கண்டுபிடிக்க முடியாமல் போனது  எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல், நடந்த உண்மைகளாக மட்டுமே இருவராலும் பகிரப்படுகிறது.  ஒரு சில மேலதிக  தகவல்கள் மட்டும் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இருவரின் வாழ்வும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும் என்ற பகற்கனவை அவர்களிருவருள்  மட்டுமல்ல, வாசகனிடமும்கூட உருவாகக்   கூடும்.

நீலகண்டன் திருமணம் செய்து கொண்டிருக்க,  ரஞ்சனி தனித்தே தன் வாழ்கையை கடத்தியது பெண்களை குறித்தான சமூகத்தின் வழமையான எதிர்பார்ப்பின் வெளிப்பாடு  என்ற விமர்சனம்  எழலாம்  ஆனால் ,  ‘இனி வேண்டியதில்லை’ கதையின் சுஜாதா, ‘ இந்தியா 1948’ன்  லட்சமி போன்ற அ.மியின் பெண் பாத்திரங்களின்  நீட்சியாகவும்  ரஞ்சனியையும் பார்க்க முடியும். சுஜாதா பாத்திரம் குறித்து ‘பெண்களுக்குத் தான் எத்தனை பொறுமை? தன்னுடையவன் என்று அவர்கள் ஏற்றுக்கொள்பவனுக்காகத்தான் எவ்வளவு சிறுமைகளையும் அவதிகளையும் அனுபவிக்கிறார்கள்! எவ்வளவு விடாமுயற்சி! எவ்வளவு நம்பிக்கை!’  என்று அ.மி ஒரு கட்டுரையில் சொல்வதை இங்கு பொருத்திப் பார்க்கலாம். ஆனால் இப்பெண்கள் அனைவரும் ஆண்களின் கைப்பாவைகள் மட்டுமே அல்ல.  ‘இனி வேண்டியதில்லை’ கதையும்  சுஜாதாவும்கூட இனி சந்தரை தேடி வரமாட்டாள் என்ற சூசகத்துடன், அவள் தன் சுயத்தை முற்றிலும் இழக்காதவாறு தான் முடிகிறது. 1948ன் லட்சமி வெளிநாட்டில் தனியே படித்து முடிக்கும், நிர்வாகத் திறன் மிக்க பெண்தான்.

ரஞ்சனியின் வீடு, அவரின் உறவினர்கள் குறித்த சுருக்கமான சித்தரிப்பு,  அவர்கள் ரஞ்சனியை அழைக்கும் விதம் இவற்றை   வைத்து அவர்  கம்பீரமான, மதிப்பிற்குரிய பெண்மணியாகத்தான் அவ்வீட்டில் இருக்கிறார் என்று வாசகன் யூகிக்க முடியும். இவர்களிடமிருந்து  ‘தண்ணீரின்’ ஜமுனாவை சென்றடைவதும் சாத்தியமே.  நீலகண்டன் திருமணம் செய்து கொண்டதை அறிந்து அவரை துரோகி என்று ரஞ்சனி சொல்வதை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.”நீ நிஜமாகவே உங்க அம்மாவுக்காகவா கல்யாணம் பண்ணிண்டே? உங்க அம்மா உயிரைக் காப்பாத்திட்டியா..’ என்று ரஞ்சனி கேட்பதற்கு நீலகண்டன் எதுவும் சொல்வதில்லை,  ரஞ்சனி அதை எதிர்பார்க்கவும் இல்லை, பதில் இருவரும் உள்ளூர அறிந்ததுதான். அதனால் தான்  இந்த கேள்வியுடனேயே ‘சரி முதல்ல சாப்பிடு ..’ என்று  சொல்லி அந்த உரையாடலை ரஞ்சனியே   முடித்து விடுகிறார்.   1948ன் லட்சமி கதைசொல்லியின் -முதல் மனைவியோடு கூடிய – குடும்பத்தை தன்னுடன் வசிக்க அழைப்பது போல்  இங்கும்  ரஞ்சனி  நீலகண்டனையும் அவர் மனைவியையும் தன்னுடன் வந்து இருக்குமாறு சொல்கிறார். (இத்தகைய நுட்பமான உணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே புனைவில் ஏன் அதிகளவில்  ஏற்படுகின்றன  என்ற கேள்வியும் எழுப்பப்படக்கூடியதே ).

சுருக்கமாக இரண்டு மூன்று வரிகளில்  ஒரு அதிர்வை அளித்து  – தான்   யூகிப்பது உண்மையாக இருக்கக்கூடாது என்ற பதபதைப்பையும், ஆனால்  அதற்கான சாத்தியக்கூறே அதிகம் உள்ளது என்ற கசப்பான புரிதலையும்  – வாசகனுள் உருவாக்கி விடுகிறது ரஞ்சனியிடம் விடை பெறும் நீலகண்டன் எடுக்கும் முடிவு. வாசகனை திடுக்கிடச் செய்வது மட்டுமே இதன் நோக்கம் என்று முதற்பார்வைக்கு தோற்றமளித்தாலும் அவர் பெண் கேட்டுச் சென்றதையும், பேதமையுடன்  முப்பது நாட்கள் கழித்ததையும், அவர் இப்போது  எடுக்கும் முடிவையும்  ஒருசேரப் பார்க்கும்போது அவரது ஆளுமையோடு இந்த முடிவும் பொருந்துவது தெரிகிறது. இச்சிறுகதை தனித்தன்மையுடன்  ஒளிர்கிறது என்று சொல்வதை விட, மனித இருப்பின் பல வண்ணங்களைக் காட்டும் அ.மியின் புனைவுலகின் ஒளி மண்டலத்தில் சிறு  இழையாக இணைந்து கொள்வதாலேயே அதிகம்  மிளிர்கிறது என்றே குறிப்பிட முடியும்.

நயாகரா 2

ஸ்ரீதர் நாராயணன்

மலையத்தனை நீர்த்தாரையை
அருகணைந்து தரிசிக்க
பெரும்படகில் குழுச் சவாரி.

நனையாத நெகிழி ஆடையும்,
தருணங்களைத் தவறவிடாமலிருக்க
பதிவுக்கருவிகளுமாக,
மனிதக்கொத்துகள்.

மலையருவி புரண்டுவிழ
புகைமூட்டமென மேலெழுகிறது
சாரல் நீர்த்திரை.

ஆற்று நீர்ப்பரப்பில்
துடுப்பு நடைபோட்டபடி
கடந்து செல்கின்ற,
இறக்கையில் இருகோடுகள் கொண்ட
வளைய மூக்கு கடற்பறவை ஒன்று,
புகைத்திரையினூடே
மலைமுடியைத் தொட்டு மீள
எழும்பிப் பறக்கின்றது.

*ring billed gull – வளைய மூக்கு கடற்பறவை

இயற்கை அழைக்கிறது

எஸ் வீ. ராஜன்.

அலங்கரித்து
வண்டீர்க்கத்
தயாராய் நின்ற
பூச்செடிக்கு
பனிமுத்தமிட்டுச்
செல்லும்
ஐப்பசி
அதிகாலை.

இளம்சிவப்புச்
சூரிய வட்டத்தின்
குறுக்காக
நிழல்கோடிட்டபடி
கடந்து செல்லும்
அழகைக்கவனியெனும்
பறவைக்கூட்டபவனி.

குளக்கன்னத்தில்
குழிவிழக்
குதித்துக்களிக்கும்
தவளைக்கு
பயந்தார்ப்போல
தாமரையிலைமேல்
தவ்வியேறும்
நீர்த்திவலை.

இதையெல்லாம்
பார்ப்பதற்கே
சீக்கிரம்
எழுப்பிவிட்டதாய்
சொல்லத்தெரியாத
என்
இயற்கை அழைப்பு.

வேதம் ஓதும் சாத்தான்

ஜிஃப்ரி ஹாஸன்

இந்த இரவுகள் என்னை
அவளிடமிருந்தும் அந்நியப்படுத்தியுள்ளன
அருகருகான உறக்கத்தில்
ததும்பும் பேரின்பத்தை
எதிர்பார்த்த கண்களிலிருந்து கசியும்
ஏகாந்தம் அறை முழுதும்
வியாபகங் கொள்கிறது

ஆ.

இந்தப் பொழுதுகள்
மகிமைக்குரியன
இந்த இரவுகள் வணக்கத்துக்குரியன
இறை காதல் கொண்டு
துயிலில் அரற்றுகிறாள் அவள்.
தவம் பூண்ட சந்நியாசியாய்
படுக்கையின் ஓரங்களில்
ஆணி அடித்து அறையப்பட்டிருக்கிறது
என் உடல்
எனினும்
ஆன்மா சாத்தானின் குகைக்குள்
ஒடுங்கித் திரிகிறது

இ.

வேதத்தை ஓதி
இறை காதலனாய் ஆகவும்
அவன் மீது தீராக் காதல் கொண்டு
ஒரு சூபியாய் உரு மாறவும்
இந்த சலனமற்ற கருப்பு இரவுகளில்
என்னைப் பணிக்கிறாய் நீ
நான் சாத்தானின்
உணர்வுகள் கொண்டு
இறை காதலை எப்படி அடைவேன்?

ஈ.

புனிதப்படுத்தப்பட்ட நாட்களில்
என்னை உதறித் தள்ளியபடி
இருள் சூழ்ந்துவிட
இந்த அறை எங்கும் அவள் மவுனத் தவம்
உறைகிறது.
அலட்சியப்படுத்தப்பட்ட
என் அன்பின் ஆழமான வார்த்தைகளை
ஒரு மவுனத்தால் வென்று விட்டவள் நீ
உயிரின் ஆழம் அவாவி எழும்
என் தவிப்பை இறை காதல் கொண்டு
நிரப்புகிறாய் நீ

இந்த நாட்கள் மகிமைக்குரியன
இந்த இரவுகள் வணக்கத்துக்குரியன
நம்மைச் சூழும் இருட்டின் கருமையிலும்
பிரகாசிக்கின்றன
உன் சொற்கள்

வேதத்தின் சொற்கள்
இருட்டை விரும்புவதில்லை!